II. ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் லீலைத் தலங்கள்
14. சடக பர்வதம்
கோவர்த்தன மலை - ஜகந்நாத,புரி
நோக்கங்கள்:
நோக்கம் 1: புரியில் அமைந்துள்ள சடக பர்வதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.
நோக்கம் 2: இத்தலத்தைப் பற்றியும், ஸ்ரீசைதன்ய மகாபிரபுவுடன் இதற்குள்ள தொடர்பைப் பற்றியும் அறிதல்.
நோக்கம் 3: ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் பரவசமான கிருஷ்ண பிரேமையின் அறிகுறிகளை புரிந்துகொள்ளுதல்.
நோக்கம் 4: ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் திவ்ய தரிசனத்தை மகிமைப்படுத்துதல்.
நோக்கம் 5: இத்தலத்திற்கும் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் மற்றும் ஸ்ரீல பிரபுபாதர் ஆகியோருக்கும் உள்ள தொடர்பை அறிதல்.
இருப்பிடம் மற்றும் தோற்றம்
நோக்கம் 1: புரியில் அமைந்துள்ள சடக பர்வதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்
சடக பர்வதம், ஜகந்நாத புரியின் கௌரபடசாஹி (Gaurabatsahi) பகுதியில், தோட்டா கோபிநாதர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு மணல் மேடாகும்.
கௌடிய வைஷ்ணவர்கள், இந்தசடக பர்வதத்தை, விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய லீலைகளால் புகழ்பெற்ற கிரி கோவர்த்தன மலையிலிருந்து வேறுபாடற்றதாக (அபின்னமாக) கருதுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதரின் பஜன குடீரின் நுழைவாயிலில் உள்ளபெயர்ப்பலகையில்: “ஸ்ரீகோவர்த்தன மலையுடன் ஒன்றானது” (Identical with Sri Govardhan) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது, கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சடக பர்வதம், ஸ்ரீ கோவர்த்தன மலையின் திவ்ய ஸ்வரூபமாக போற்றப்படுவதைக் காட்டுகிறது.

பகவான் மணல் மேட்டை கோவர்த்தன மலையாகக் கருதினார்.
நோக்கம் 2: இத்தலத்தின் சிறப்பையும், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவுடன் இதற்குள்ள தொடர்பையும் அறிதல்
சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, சந்நியாசத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், வங்காளத்திலிருந்து ஜகந்நாத புரிக்கு வந்தார்.
ஒருநாள், கடலில் நீராடச் செல்லும் வழியில், அங்கிருந்த ஒரு மணல் மேட்டை கண்டார். கிருஷ்ணபிரேமையில் முழுமையாக ஆழ்ந்திருந்த மஹாபிரபு, அந்த மணல் மேட்டைஸ்ரீகோவர்த்தன மலையாகவே எண்ணினார்.
பகவானின் மீது எழுந்த பரவசமான பிரேமையால் ஆட்கொள்ளப்பட்ட மஹாபிரபு, விருந்தாவனத்தின் கோபியர்கள் கோவர்த் தன மலையைப் போற்றி பாடிய ஸ்ரீமத் பாகவதத்தின் இந்த ஸ்லோகத்தை உரக்கப் பாடியபடியே, அந்த மணல் மேட்டை நோக்கி வேகமாக ஓடினார். அவருடைய அன்பு தோழர்களும் அவரைப் பின்தொடர்ந்து விரைந்தனர்.
ஹந்தாயம் அத்ரிர் அபலாஹரி-தாச-வர்யோ
யத் ராம-கிருஷ்ண-சரண-ஸ்பரஷ-பிரமோத
மானம் தனோதி சஹ-கோ-கணயோஸ் தயோர் யத்
பாணீய-சூயாவாஸ-கண்டர-கண்டமூலைஹ்
(ஸ்ரீமத் பாகவதம் 10.21.18)
ஸ்லோகத்தின் பொருள்
விருந்தாவனத்தின் கோபியர்கள் இவ்வாறு கூறினர்:
“பகவானின் அனைத்து சேவகர்களிலும் கோவர்த்தன மலை உயர்ந்த சேவகன் ஆகும். ஏனெனில், அது ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பலராமர், அவர்களுடைய பசுக்கள் மற்றும் கோபர்களுக்கு குடிப்பதற்கான தூய நீரையும், மென்மையான புல்லையும், குகைகளையும், பழங்களையும், மலர்களையும், கிழங்குகளையும் அன்புடன் வழங்குகிறது. மேலும், பகவானின் தாமரைத் திருவடிகள் தன்னைத் தொடுவதால் பேரானந்தம் அடைந்தது. இவை அனைத்தையும் அன்பான சேவையாக சமர்ப்பிக்கிறது.”
திவ்ய பரவசத்தின் அறிகுறிகள்
நோக்கம் 3: ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் திவ்ய பரவசத்தின் அறிகுறிகளைப் புரிந்துகொள்ளுதல்
பகவானின் திவ்ய பரவச நிலையைக் கண்ட பக்தர்கள், அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பாதுகாப்பதற்காக உடனடியாக அவரைப் பின்தொடர்ந்து ஓடினர். அவர்களுள் ஸ்வரூப தாமோதரர், ஜகதானந்த பண்டிதர், கதாதர பண்டிதர், ராமாய், நந்தாய், சங்கர பண்டிதர், பரமானந்த புரி, பிரம்மானந்த பாரதி, பகவான் ஆச்சாரியர் மற்றும் கோவிந்தர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
அந்த நேரத்தில், ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் திருமேனியில் திவ்ய பரவசத்தின் அற்புதமான அறிகுறிகள் வெளிப்பட்டன. அவருடைய உடலின் ஒவ்வொரு ரோமக்கூப்பும் பருக்களைப் போல புடைத்தெழுந்தது; திருமேனியின் ரோமங்கள் அனைத்தும் சிலிர்த்து நிமிர்ந்தன.
அவரது திருமேனியிலிருந்து இரத்தமும் வியர்வையும் இடைவிடாமல் பெருகின. பேரானந்தப் பரவசத்தில் ஆழ்ந்திருந்ததால், அவரால் தெளிவாகப் பேச முடியாமல், தொண்டை அடைத்த மெல்லிய ஒலிகளை மட்டுமே எழுப்ப முடிந்தது.
அவரது திருக்கண்களிலிருந்து கண்ணீர் இடைவிடாது பெருகியது. அவருடைய திருமேனி சங்குபோல் வெண்மையாக மாறியது.
பகவானின் பிரேம பரவசத்தால் நடுங்கியபடி, மஹாபிரபு தரையில் விழுந்தார். அப்போது கோவிந்தர் முன்வந்து, அவர்மீது தண்ணீர் தெளித்து, அவரை மீண்டும் புறவுணர்வுக்கு கொண்டு வந்தார்.

தோட்டா கோபிநாதர் கோவிலை ஒட்டியுள்ள
சடக பர்வத மணல் மேடு.
ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளின் திவ்ய தரிசனம்
நோக்கம் 4: ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் திவ்ய தரிசனத்தை மகிமைப்படுத்துதல்
மெல்ல மெல்ல புறவுணர்வை அடைந்த ஸ்ரீசைதன்ய மஹாபிரபு, தாம் கண்ட திவ்ய தரிசனத்தை பக்தர்களிடம் விவரித்தார்.
அவர், ஸ்ரீகோவர்த்தன மலையில், பகவான்ஸ்ரீகிருஷ்ணர் தனது புல்லாங்குழலை இசைத்தபடி பசுக்களை மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
மேலும், ஸ்ரீமதி ராதாராணியின் தலைமையில், கோபியர்கள் அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைச் சந்திக்க வருவதையும் அவர் தரிசித்தார்.
பின்னர், ஸ்ரீகிருஷ்ணரும் ஸ்ரீமதி ராதாராணியும் ஒரு குகைக்குள் சென்றபோது, கோபியர்கள் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவிடம், “எங்களுக்காக மலர்களைப் பறித்துக் கொண்டு வாருங்கள்” என்று கூறினர்.
அந்த நேரத்திலேயே, பெரும் பரபரப்புடன் அங்கு வந்த பக்தர்கள், மஹாபிரபுவை சடக பர்வதத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்த திவ்ய தரிசனத்தை நினைவுகூர்ந்து கூறியபோது, ஸ்ரீசைதன்ய மஹாபிரபு, ஸ்ரீகிருஷ்ணரின் விரகத்தால் (பிரிவுத் துயரால்) ஆழமாக உருகி, இடைவிடாது அழுதார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் முழுமையாக புறவுணர்வை அடைந்தார். பின்னர் கடலில் நீராடி, அங்கு கூடியிருந்த பக்தர்களுடன் சேர்ந்து மதிய பிரசாதத்தை எடுத்து கொண்டார்.
ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் மற்றும் புருஷோத்தம கௌடிய மடம்
நோக்கம் 5: இத்தலத்திற்கும் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தகூர் மற்றும் ஸ்ரீல பிரபுபாதருக்கும் உள்ள தொடர்பை அறிதல்
பிற்காலங்களில், உலகம் முழுவதும் கௌடிய மடங்களை நிறுவியஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், சடக பர்வதத்தில் தியானத்தில் பல காலம் கழித்தார். அங்கு அவர், ஸ்ரீகிருஷ்ணரின் மற்றும் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் திவ்ய லீலைகளில் முழுமையாக மனதை ஒன்றிணைத்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
கி.பி. 1922-ஆம் ஆண்டு, இந்தப் புனிதத் தலத்தில் அவர் புருஷோத்தம கௌடிய மடத்தை நிறுவி, ஸ்ரீகௌர-கதாதரர் மற்றும் ஸ்ரீவிநோத மாதவ ஜியு ஆகியோரின் விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்தார்.
அதே கோவிலில், ஸ்ரீவியாசதேவர் மற்றும் ஸ்ரீபாத மத்வாச்சாரியர் ஆகியோரின் ஆராதனையையும் அவர் நிறுவினார்.
ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூருடன் தொடர்புடைய பஜன குடீர், இன்றும் சடக பர்வதத்தின் உச்சியில் அமைந்துள்ளது.
மேலும், ஸ்ரீல ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரும், தமது ஆன்மீக வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் இத்தலத்தில் தங்கி பக்தி சாதனையில் ஈடுபட்டதாக நினைவுகூறப்படுகிறார்.
இன்றும் சடக பர்வதம், ஸ்ரீகோவர்த்தன மலையிலிருந்து வேறுபாடற்ற புனிதத் தலமாக, உலகம் முழுவதிலிருந்தும் வரும் யாத்திரீகர்களால் தரிசிக்கப்படுகிறது. ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் பிரேமக் கண்ணீராலும், ஸ்ரீ கிருஷ்ணரை அடைய ஏற்பட்ட ஆழ்ந்த விரகத்தாலும் புனிதப்படுத்தப்பட்ட இத்தலம், கௌடிய வைஷ்ணவர்களுக்கு மிக உயர்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

இடம்:
சடக பர்வதம், ஜகந்நாத புரியின் கௌரபட்சாஹி (Gaurabatsahi) பகுதியில், தோட்டா கோபிநாதர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
QRW7+Q9G, சந்தஜாகா, புரி, ஒடிசா – 752001

