அத்தியாயம் – 39
அக்ரூரர் கண்ட காட்சி
பதம் 10.39.1
ஸ்ரீ-ஸுக உவாச
ஸுகோபவிஷ்ட: பர்யங்கே ராம-க்ருஷ்ணோரு-மானித:
லேபே மனோரதான் ஸர்வான் பதி யான் ஸ சகார ஹ

ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸுக—சுகமாக; உபவிஷ்ட:—அமர்ந்தார்; பர்யங்கே—மஞ்சத்தின்மீது; ராம-க்ருஸ்ண—பகவான் பலராமர் மற்றும் பகவான் கிருஷ்ணரால்; உரு—மிகவும்; மானித:—மரியாதை அளிக்கப்பட்டு; லேபே—அவர் அடைந்தார்; மன:-ரதான்—அவரது விருப்பங்கள்; ஸர்வான்—எல்லாம்; பதி—வரும் வழியில்; யான்—எவை; ஸ:—அவர்; சகார ஹ—உருவான.

சுகதேவகோஸ்வாமி கூறினார்: பகவான் பலராமராலும், பகவான் கிருஷ்ணராலும் வெகுவாகக் கௌரவிக்கப்பட்டபின், அக்ரூரர் ஒரு மஞ்சத்தில் அமர்ந்து கொண்டு, வரும் வழியில் தனது மனதில் உருவான அனைத்து ஆசைகளும் இப்பொழுது நிறைவேறிவிட்டனவென்று நினைத்தார்.

பதம் 10.39.2
கிம் அலப்யம் பகவதி ப்ரஸன்னே ஸ்ரீ-நிகேதனே
ததாபி தத் பரா ராஜன் ந ஹி வாஞ்சந்தி கிஞ்சன

கிம்—என்ன; அலப்யம்—அடைய முடியாதது; பகவதி—பரமபுருஷ பகவான்; ப்ரஸன்னே—திருப்தியடைகின்றார் எனில்; ஸ்ரீ-அதிர்ஷ்ட—தேவதையின்; நிகேதனே—உறைவிடம்; ததா அபி—இருந்தும்; தத்-பரா:—அவரிடம் பக்தியுடையவர்கள்; ராஜன்—ஓ, ராஜனே (பரீக்ஷித்து); ந—வேண்டுவது இல்லை; ஹி—உண்மையில்; வாஞ்சந்தி—விருப்பம்; கிஞ்சன—எதையும்.

அன்பிற்குரிய மன்னனே, அதிர்ஷ்டதேவதை உறையுமிடமான முழு முதற்கடவுளைத் திருப்திப்படுத்தியவனுக்கு அடையமுடியாததென்று என்ன இருக்கிறது? இருந்தும் பகவானின் பக்தித் தொண்டிற்குத் தம்மை அர்ப்பணித்தவர்கள் அவரிடமிருந்து எதையும் எப்போதும் விரும்பி வேண்டுவதில்லை.

பதம் 10.39.3
ஸாயந்தனாஸனம் க்ருத்வா பகவான் தேவகீ-ஸுத:
ஸுஹ்ருத்ஸு வ்ருத்தம் கம்ஸஸ்ய பப்ரச்சான்யச் சிகீர்ஷிதம்

ஸாயந்தன—மாலையில்; அஸனம்—உணவினை; க்ருத்வா—உண்டு முடித்தவுடன்; பகவான்—பரமபுருஷபகவான்; தேவகீ-ஸுத:—தேவகியின் மைந்தன்; ஸுஹ்ருத்ஸு—தமது நலன் விரும்பும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்து; வ்ருத்தம்—நடத்தை பற்றி; கம்ஸஸ்ய—கம்சனின்; பப்ரச்ச—அவர் வினவினார்; அன்யத்—பிற; சிகீர்ஷிதம்—எண்ணங்கள்.

மாலை உணவு முடிந்த பின்னர், தேவகியின் மைந்தரான பகவான் கிருஷ்ணர் அக்ரூரரிடம், கம்சன் தமது அன்பான உறவினர்கள் மற்றும் நண்பர்களை எவ்வாறு நடத்துகிறானென்றும் அரசன் என்ன செய்ய எண்ணியுள்ளான் என்றும் வினவினார்.

பதம் 10.39.4
ஸ்ரீ-பகவான் உவாச
தாத ஸௌம்யாகத: கச்சித் ஸ்வ்-ஆகதம் பத்ரம் அஸ்து வ:
அபி ஸ்வ-ஜ்ஞாதி-பந்தூனாம் அனமீவம் அனாமயம்

ஸ்ரீ-பகவான் உவாச—முழுமுதற்கடவுள் கூறினார்; தாத—ஓ, மாமா; ஸௌம்ய—ஓ, மேன்மை மிக்கவரே; ஆகத:—அடைந்தது; கச்சித்—எப்படி; ஸு-ஆகதம்—நல்வரவு; பத்ரம்—எல்லா நன்மைகளும்; அஸ்து—உண்டாகட்டும்; வ:—உங்களுக்கு; அபி—எவ்வாறு; ஸ்வ—உங்கள் நலன் விரும்பும் நண்பர்கள்; ஜ்ஞாதி—நெருங்கிய உறவினர்கள் பந்தூனாம் மற்றும் சுற்றத்தினர்; அனமீவம்—துக்கத்திலிருந்து விடுதலை பெறுதல்; அனாமயம்—பிணியிலிருந்து விடுதலைபெறுதல்.

பரமபுருஷ பகவான் கூறினார்: எனதன்பிற்கும், மரியாதைக்குரிய மாமா அக்ரூரர் அவர்களே, உங்கள் பயணம் சுகமாக இருந்ததா? உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகட்டும். உங்கள் நலன் விரும்பும் நண்பர்களும் நெருங்கிய, தூரத்து உறவினர்களும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியமுடனும் இருக்கின்றனரா?

பதம் 10.39.5
கிம் நு ந: குஸலம் ப்ருச்சே ஏதமானே குலாமயே
கம்ஸே மாதுல-நாம்னாங்க ஸ்வானாம் நஸ் தத்-ப்ரஜாஸு ச

கிம்—என்ன; நு—எவ்வாறு; ந:—எங்கள்; குஸலம்—நலத்தினைப் பற்றி; ப்ருச்சே—நான் கேட்க முடியும்; ஏதமானே—அவன் வளமுடனிருக்கையில்; குல—குலத்தின்; ஆமயே—நோய்; கம்ஸே—கம்ச மன்னன்; மாதுல-நாம்னா—”தாய் மாமன்” என்றும் பெயரில்; அங்க—அன்பிற்குரிய; ஸ்வானாம்—உறவினர்களின்; ந:—எங்கள்; தத்—அவனுடைய; ப்ரஜாஸு—குடிமக்களின்; ச—மற்றும்.

ஆனால், எனது அன்பிற்குரிய அக்ரூரரே! “தாய்மாமன்” என்னும் பெயரில் எங்கள் குடும்பத்தின் நோயாக இருக்கும் மன்னன் கம்சன் இன்னும் வளமுடனிருக்கையில், எனது குடும்பத்தின் நலனையும், அவனது பிற குடிமக்களின் நலனையும் பற்றி நான் ஏன் கேட்க வேண்டும்?

பதம் 10.39.6
அஹோ அஸ்மத் அபூத் பூரி பித்ரோர் வ்ருஜினம் ஆர்யயோ:
யத்-ஹேதோ: புத்ர-மரணம் யத்-ஹேதோர் பந்தனம் தயோ:

அஹோ—அந்தோ; அஸ்மத்—என்னால்; அபூத்—நேரிட்டது; பூரி—பெரிய; பித்ரோ:—எனது பெற்றோர்க்கு; வ்ருஜினம்—துன்பம்; ஆர்யயோ:—குற்றமற்றவர்களுக்கு; யத்-ஹேதோ:—எவரின் காரணமாக; புத்ர—அவர்தம் புத்தரர்களுக்கு; மரணம்—மரணம்; யத்-ஹேதோ:—எவரின் காரணமாக; பந்தனம்—கட்டப்பட்டனர்; தயோ:—அவர்கள்.

எனது குற்றமற்ற பெற்றோரின் துன்பத்திற்கு நான் எவ்வாறு காரணமாகிவிட்டேன் என்பதைப் பாருங்கள்! என் பொருட்டே அவர்தம் மைந்தர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் சிறைப்பட்டனர்.

பதம் 10.39.7
திஷ்ட்யாத்ய தர்ஸனம் ஸ்வானாம் மஹ்யம் வ: ஸௌம்ய காங்க்ஷிதம்
ஸஞ்ஜாதம் வர்ண்யதாம் தாத தவாகமன-காரணம்

திஷ்ட்யா—நல்லதிர்ஷ்டத்தினால்; அத்ய—இன்று; தர்ஸனம்—தரிசனம்; ஸ்வானாம்—எனது நெருங்கிய உறவினரின்; மஹ்யம்—எனக்கு; வ:—உங்கள்; ஸௌம்ய—ஓ, மேன்மைமிக்கவரே; காங்க்ஷிதம்—விரும்பிய; ஸஞ்ஜாதம்—வருகை பற்றி; வர்ண்யதாம்—விளக்குவீராக; தாத—ஓ, மாமனே; தவ—உமது; ஆகமான—வருகைக்கு; காரணம்—காரணம்.

எங்கள் நல்லதிர்ஷ்டத்தினால், எங்கள் நெருங்கிய உறவினரான உங்களைக் காணும் எங்கள் ஆவல் இன்று நிறைவேறியது. ஓ, மேன்மை மிக்க மாமாவே, நீங்கள் ஏன் இங்கு வந்திருக்கின்றீர்கள் என்று எங்களுக்கு அருள் கூர்ந்து உரைப்பீராக.

பதம் 10.39.8
ஸ்ரீ-ஸுக உவாச
ப்ருஷ்டோ பகவதா ஸர்வம் வர்ணயாம் ஆஸ மாதவ:
வைரானுபந்தம் யதுஷு வஸுதேவ-வதோத்யமம்

ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்சாமி கூறினார்; ப்ருஷ்ட:—வேண்டப்படுதல்; பகவதா—பரமபுருஷ பகவானால்; ஸர்வம்—எல்லாவற்றையும்; வர்ணயம்-ஆஸ—விவரித்தார்; மாதவ:—தமது குலத்தைச் சேர்ந்த அக்ரூரர்; வைர-அனுபந்தம்—பகைமை மனப்பான்மை; யதுஷு—யதுக்களுக்கு; வஸுதேவ—வசுதேவரை; வத—கொலை செய்யும்; உத்யமம்—முயற்சி.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பரமபுருஷ பகவானின் வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட யதுகுலத்தைச் சேர்ந்த அக்ரூரர், யதுக்களிடம் கம்சன் பகைமை பாராட்டுவது, வசுதேவரைக் கொல்ல முயன்றது உள்ளிட்ட எல்லாவற்றையும் விளக்கிக் கூறினார்.

பதம் 10.39.9
யத்-ஸந்தேஸோ யத்-அர்த்தம் வா தூத: ஸம்ப்ரேஷித: ஸ்வயம்
யத் உக்தம் நாரதேனாஸ்ய ஸ்வ-ஜன்மானகதுந்துபே:

யத்—எந்த; ஸந்தேஸ:—செய்தி; யத்—எந்த; அர்த்தம்—நோக்கத்தில்; வா—மற்றும்; தூத:—தூதனாக; ஸம்ப்ரேஷித:—அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்; ஸ்வயம்—தன்னை (அக்ரூரர்); யத்—என்ன; உக்தம்—கூறப்பட்டது; நாரதேன—நாரதரால்; அஸ்ய—அவனுக்கு (கம்சன்); ஸ்வ—அவருடைய (கிருஷ்ணருடைய); ஜன்ம—பிறப்பு; ஆனகதுந்துபே:—வசுதேவரிடமிருந்து.

தான் கொண்டு வந்த செய்தியினை அக்ரூரர் தெரிவித்தார். கம்சனின் உண்மை எண்ணம் என்ன என்பதையும், கிருஷ்ணர் வசுதேவருக்குப் பிறந்த புதல்வர் என்பதை நாரதர் கம்சனுக்குத் தெரியப்படுத்தியதையும் கூட அவர் விளக்கிக் கூறினார்.

பதம் 10.39.10
ஸ்ருத்வாக்ரூர-வச: க்ருஷ்ணோ பலஸ் ச பர-வீர-ஹா
ப்ரஹஸ்ய நந்தம் பிதரம் ராஜ்ஞா திஷ்டம் விஜஜ்ஞது:

ஸ்ருத்வா—கேட்டு; அக்ரூர-வச:—அக்ரூரரின் வார்த்தைகளை; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; பல:—பகவான் பலராமர்; ச—மற்றும்; பர-வீர—எதிர்க்கும் வீரர்களை; ஹா—அழிப்பவர்கள்; ப்ரஹஸ்ய—சிரித்தனர்; நந்தம்—நந்த மகாராஜாவிடம்; பிதரம்—அவர்கள் தந்தையான; ராஜ்ஞா—அரவனால்; திஷ்டம்—அளிக்கப்பட்ட ஆணையினை; விஜஜ்ஞது:—அவர்கள் தெரிவித்தனர்.

அக்ரூரர் கூறியதைக் கேட்டவுடன் எதிர்க்கும் வீரர்களை அழிக்கும் பகவான் கிருஷ்ணரும், பகவான் பலராமரும் நகைத்தனர். பின்னர் பகவான்கள் இருவரும் தங்கள் தந்தை நந்தமகாராஜாவிடம் மன்னன் கம்சனின் ஆணையினைத் தெரிவித்தனர்.

பதங்கள் 10.39.11 – 10.39.12
கோபான் ஸமாதிஸத் ஸோ ‘பி க்ருஹ்யதாம் ஸர்வ-கோ-ரஸ:
ஊபாயனானி க்ருஹ்ணீத்வம் யுஜ்யந்தாம் ஸகடானி ச

யாஸ்யாம: ஸ்வோ மது-புரீம் தாஸ்யாமோ ந்ருபதே ரஸான்
த்ரக்ஷ்யாம: ஸு-மஹத் பர்வ யாந்தி ஜானபதா: கில
ஏவம் ஆகோஷயத் க்ஷத்ரா நந்த-கோப: ஸ்வ கோகுலே

கோபான்—கோபாலர்கள்; ஸமாமிஸத்—ஆணையிட்டார்; ஸ:—அவர் (நந்தமகாராஜா); அபி—கூட; க்ருஹ்யதாம்—சேகரிக்குமாறு; ஸர்வ—அனைத்துவகையான; கோ-ரஸ:—பாலில் தயாரிக்கும் பொருட்கள்; உபாயனானி—நேர்த்திமிகு பரிசுகள்; க்ருஹ்ணீத்வம்—எடுத்துக்கொண்டு; யுஜ்யந்தாம்—கட்டிக்கொண்டு; ஸகடானி—வண்டிகளை; ச—மற்றும்; யாஸ்யாம:—நாம் செல்வோம்; ஸ்வ:—நாளைக்கு; மது-புரீம்—மதுராபுரிக்கு; தாஸ்யம:—நாம் அளிப்போம்; ந்ருபதே:—மன்னருக்கு; ரஸான்—நமது பால் பொருட்களை; த்ரக்ஷ்யாம:—நாம் காண்போம்; ஸு-மஹத்—மிகச் சிறந்த; பர்வ—விழாவினை; யாந்தி—போகின்றோம்; ஜானபதா:—சுற்றுவட்டத்திலுள்ளவர்களும்; கில—உண்மையில்; ஏவம்—இவ்வாறு; ஆகோஷயத்—அவர் அறிவித்தார்; க்ஷத்ரா—ஊர்க்காவலன் மூலம்; நந்தகோப—நந்தமகாராஜா; ஸ்வ-கோகுலே—தனது கோகுலவாசிகளுக்கு.

பின்னர் நந்த மகாராஜா, ஊர்க்காவலன் மூலம் தனது ஆட்சிக்குட்பட்ட விரஜத்திலுள்ள ஆயர்கள் அனைவருக்கும் பின்வரும் கட்டளையினை அறிவித்தார்: “கிடைக்கக்கூடிய எல்லாப் பால்பொருட்களையும் சேகரித்துக் கொள்ளவும். மதிப்புமிகு பரிசுப் பொருட்கள் எடுத்துக் கொண்டு உங்கள் வண்டிகளைக் கட்டிக் கொள்ளவும். நாளை நாம் மதுராவிற்குச் சென்று நமது பால் பொருட்களை மன்னருக்கு அளித்து ஒரு பெரிய விழாவினைக் காண்போம். சுற்று வட்டத்திலுள்ள அனைவருமே போகின்றோம்”.

பதம் 10.39.13
கோப்யஸ் தாஸ் தத் உபஸ்ருத்ய பபூஷர் வ்யதிதா ப்ருஸம்
ராம-க்ருஷ்ணெள புரீம் நேதும் அக்ரூரம் வ்ரஜம் ஆகதம்

கோப்ய:—கோபியர்கள்; தா:—அவர்கள்; தத்—பின்னர்; உபஸ்ருத்ய—கேட்டு; பபூஷ:—ஆயினர்; வ்யதிதா:—துன்பத்திற்கு; ப்ருஸம்—மிகுந்த; ராம-க்ருஷ்ணௌ—பலராமர் மற்றும் கிருஷ்ணர்; புரீம்—நகரத்திற்கு; நேதும்—அழைத்துக் கொண்டு; அக்ரூரம்—அக்ரூரர்; வ்ரஜம்—விரஜத்திற்கு; ஆகதம்—வந்திருக்கிறார்.

அக்ரூரர், கிருஷ்ணரையும், பலராமரையும் நகரத்திற்கு அழைத்துச் செல்வதற்காக விரஜத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் இளங்கோபியர்கள் அனைவரும் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர்.

பதம் 10.39.14
காஸ்சித் தத்-க்ருத-ஹ்ருத்-தாப-ஸ்வாஸ-ம்லான-முக-ஸ்ரிய:
ஸ்ரம்ஸத்-துகூல-வளய-கேஸ-க்ரந்த்யஸ் ச காஸ்சன

காஸ்சித்—அவர்களுள் சிலர்; தத்—அதனால் (கேட்டு); க்ருத—உண்டானது; ஹ்ருத்—அவர்கள் மனங்களில்; தாப—தாபம் கொண்டனர்; ஸ்வாச—பெருமூச்சினால்; ம்லான—வெளிறியது; முக—அவர்களின் முகங்கள்; ஸ்ரிய:—ஒளி; ஸ்ரம்ஸத்—நெகிழ்ந்தன; துகூல—அவர்களின் ஆடைகள்; வளய—வளையல்கள்; கேஸ—அவர்கள் தலையிலுள்ள; க்ரந்த்ய:—சடைப்பின்னல்கள்; ச—மற்றும்; காஸ்சன—பிறர்.

சில கோபியர்களின் உள்ளம் வேதனையால் துடித்தது. நீண்ட பெருமூச்சினால் அவர்களின் முகங்கள் வெளிறின. பெருந்துயருற்ற பிற கோபியர்களின் ஆடைகளும், கைவளைகளும், சடைப் பின்னல்களும் நெகிழ்ந்தன.

பதம் 10.39.15
அன்யாஸ் ச தத்-அனுத்யான-நிவ்ருத்தாஸேஷ-வ்ருத்தய:
நாப்யஜானன்ன் இமம் லோகம் ஆத்ம-லோகம் கதா இவ

அன்யா:—பிறர்; ச—மற்றும்; தத்—அவரை; அனுத்யான—உறுதியான தியானத்தினால்; ந்வருத்த—நின்றன; அஸேஷ—அனைத்து; வ்ருத்தய:—அவர்களின் உணர்வுச் செயல்கள்; ந அப்யஜானன்—அவர்கள் அறியவில்லை; இமம்—இந்த; லோகம்—உலகினை; ஆத்ம—ஆத்ம உணர்வின்; லோகம்—மண்டலம்; கதா:—எய்தியிருப்பவர்கள்; இவ—போன்று.

பிற கோபியர்களின் உணர்வுச் செயல்கள் முற்றும் நின்றுபோய் அவர்கள் கிருஷ்ணரைப்பற்றிய தியானத்தில் நிலைத்து நின்றனர். ஆத்ம உணர்வு நிலையினை எய்தியவர்கள் போல் அவர்கள் புறவுலக உணர்வுகள் அனைத்தையும் இழந்துவிட்டனர்.

பதம் 10.39.16
ஸ்மரந்த்யஸ் சாபரா: ஸௌரேர் அனுராக-ஸ்மிதேரிதா:
ஹ்ருதி-ஸ்ப்ருஸஸ் சித்ர-பதா கிர: ஸம்முமுஹு: ஸ்த்ரிய:

ஸ்மரந்த்ய:—நினைந்து; ச—மற்றும்; அபரா:—பிறர்; ஸௌரே:—கிருஷ்ணரின்; அனுராக—நேசிப்பிற்குரிய; ஸ்மித்—அவரது புன்னகையினால்; ஈரிதா:—அடைந்தனர்; ஹ்ருதி—இதயம்; ஸ்ப்ருஸ:—தொடும்; சித்ர—விந்தை மிகு; பதா:—வார்த்தைகள் நிறைந்த; கிர:—உரை; ஸம்முமுஹு:—மயக்கமடைந்தனர்; ஸ்த்ரிய:—பெண்கள்.

மேலும் சில பெண்கள் பகவான் ஸௌரியின் (கிருஷ்ணரின்) வார்த்தைகளை நினைத்து மயக்கமுற்றனர். விந்தைமிகு அணி அலங்காரச் சொற்களும், நேசமிகு புன்னகையுடன் அவை உரைக்கப்பட்ட விதமும் இளங்கன்னியர்களின் இதயங்களை ஊடுருவிச் செல்வதாகும்.

பதங்கள் 10.39.17 – 10.39.18
கதிம் ஸு-லலிதாம் சேஷ்டாம் ஸ்நிக்த-ஹாஸாவலோகனம்
ஸோகாபஹானி நர்மாணி ப்ரோத்தாம-சரிதானி ச

சிந்தயந்த்யோ முகுந்தஸ்ய பீதா விரஹ-காதரா:
ஸமேதா: ஸங்கஸ: ப்ரோகர் அஸ்ரு-முக்யோ ‘ச்யுதாஸ்யா:

கதிம்—நடந்து செல்லுதல்; ஸு-லலிதாம்—மிகவும் கவர்ச்சிகரமானதாயிருக்கும்; சேஷ்டாம்—செயல்கள்; ஸ்நிக்த—நேசமிகு; ஹாஸ—புன்னகை; அவலோகனம்—பார்வைகள்; ஸோக—சோகம்; அபாஹானி—அது நீக்கும்; நர்மாணி—கேலிப்பேச்சுக்கள்; ப்ரோத்தாம—வீரதீரச்; சரிதானி—செயல்கள்; ச—மற்றும்; சிந்த்யந்த்ய:—நினைந்து; முகுந்தஸ்ய—பகவான் க்ருஷ்ணரின்; பீதா:—அஞ்சினர்; விரஹ—பிரிவின் காரணமாக; காதரா:—மிகுந்த துன்பத்திற்காளாயினர்; ஸமேதா:—ஒன்றாகக் கூடி; ஸங்கஸ:—கூட்டமாக; ப்ரோக:—அவர்கள் பேசினர்; அஸ்ரு—கண்ணீருடன்; முக்ய:—அவர்களின் முகங்கள்; அச்யுத-ஆஸயா:—பகவான் அச்சுதனிடம் அவர்களின் மனங்கள் ஆழ்ந்திருந்தன.

பகவான் முகுந்தனின் நீண்ட பிரிவினை நினைக்கும்பொழுதே அச்சத்தால் நடுக்கமுற்றனர். அவரது கவர்ச்சிமிகு நடையழகு, லீலைகள், நேசமும், புன்னகையும் நிறைந்த பார்வைகள், வீரதீரச் செயல்கள், தங்கள் துன்பத்தினை நீக்கும் அவருடைய கேலிப் பேச்சுக்கள் போன்றவற்றினை நினைந்தும், அவரது நீண்டப் பிரிவினை எண்ணியும் கோபியர்கள் மிகுந்த துக்கத்திற்காளாயினர். அவர்கள் கூட்டமாகக் கூடி ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர். அவர்களின் முகங்கள் கண்ணீரினால் நனைந்தன. அவர்களின் மனங்களோ முற்றிலும் அச்சுதனிடம் ஆழ்ந்திருந்தன.

பதம் 10.39.19
ஸ்ரீ-கோப்ய ஊசு:
அஹோ விதாதஸ் தவ ந க்வசித் தயா
ஸம்யோஜ்ய மைத்ருயா ப்ரணயேன தேஹின:
தாம்ஸ் சாக்ருதார்தான் வியுநங்க்ஷி அபார்தகம்
விக்ரீடிதம் தே ‘ர்பக-சேஷ்டிதம் யதா

ஸ்ரீ-கோப்ய: ஊசு:—கோபியர்கள் கூறினர்; அஹோ—அந்தோ; விதாத:—விதியே; தவ—உனது; ந—இல்லை; க்வசித்—எங்கும்; தயா—கருணை; ஸம்யோஜ்ய—ஒன்றாக இணையச் செய்கிறாய்; மைத்ருயா—நட்புடன்; ப்ரணயேன—அன்புடனும்; தேஹின:—உடல் பெற்ற உயிர்களை; தான்—அவர்களை; ச—மற்றும்; அக்ருத—நிறைவேறாது; அர்தான்—அவர்களது நோக்கங்கள்; வியுநங்க்ஷி—நீ பிரிக்கின்றாய்; அபார்தகம்—பயனற்ற; விக்ரீடிதம்—விளையாட்டு; தே—உனது; அர்பக—குழந்தையின்; சேஷ்டிதம்—செயல்; யதா—போன்றது.

கோபியர்கள் கூறினர்: அந்தோ விதியே, கருணை என்பது உன்னிடம் சிறிதும் கிடையாது! உடல்பெற்ற உயிர்களை நீ, நட்பிலும், அன்பிலும் ஒன்று சேர்க்கின்றாய். பிறகு அவர்கள் தங்கள் இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முன் அறிவிப்பின்றி அவர்களைப் பிரிக்கின்றாய். தன்னிச்சையான உனது இந்த விளையாட்டானது சிறு குழந்தையின் விளையாட்டைப் போன்றதாகும்.

பதம் 10.39.20
யஸ் த்வம் ப்ரதர்ஸ்யாஸித-குந்தலாவ்ருதம்
முகுந்த-வக்த்ரம் ஸு-கபோலம் உன்-நஸம்
ஸோகாபனோத-ஸ்மித-லேஸ-ஸுந்தரம்
கரோஷி பாரோக்ஷ்யம் அஸாது தே க்ருதம்

ய:—எவர்; த்வம்—நீ; ப்ரதர்ஸ்ய—காட்டினாய்; அஸித—கரிய; குந்தல—குழல் முடிகள்; ஆவ்ருதம்—மூடிய; முகுந்த—கிருஷ்ணரின்; வக்த்ரம்—முகம்; ஸு-கபோலம்—அழகிய கன்னங்களினாலும்; உன்-நஸம்—சீரிய நாசியினாலும்; ஸோக—சோகத்தை; அபனோத—நீக்குகின்றன; ஸ்மித—அவரது புன்னகையினால்; லேஸ—மெல்லிய; ஸுந்தரம்—அழகிய; கரோஸி—நீ செய்கின்றாய்; பாரோக்ஷ்யம்—காணாமல்; அஸாது—நல்லதில்லை; தே—உன்னால்; க்ருதம்—செய்யப்பட்டது.

சுருண்ட மயிர்க்குழல்களினால் மறைக்கப்பட்டதும், அழகிய கன்னங்களினாலும், எடுப்பான சீரிய நாசியினாலும், எல்லாத் துன்பங்களையும் நீக்கும் மெல்லிய புன்னகையினாலும் அழகு செய்யப்பட்டதுமான பகவான் முகுந்தனின் திருமுகத்தினைக் எங்களுக்குக் காட்டி, இப்போது அம்முகத்தினைக் காண முடியாமற் செய்கின்றாய். உனது இந்நடத்தை ஒரு சிறிதும் நல்லதன்று.

பதம் 10.39.21
க்ரூரஸ் த்வம் அக்ரூர-ஸமாக்யயா ஸ்ம நஸ்
சக்ஷுர் ஹி தத்தம் ஹரஸே பதாஜ்ஞ-வத்
யேனைக-தேஸே ‘கில-ஸர்க-ஸௌஷ்டவம்
த்வதீயம் அத்ராக்ஷ்ம வயம் மது-த்விஷ:

க்ரூர:—கொடியவன்; தவம்—நீ; அக்ரூர-ஸமாக்யயா—அக்ரூரர் என்னும் பெயரில் (இதன்பொருள் “கொடியவரில்லை”); ஸ்ம—நிச்சயம்; ந:—எங்கள்; சக்ஷு:—கண்கள்; ஹி—உண்மையில்; தத்தம்—அளிக்கப்பட்டதை; ஹரஸே—எடுத்துக்கொள்கின்றாய்; பத:—அந்தோ; அஜ்ஞ—ஒரு மூடன்; வத்—போன்று; யேன—எவற்றுடன், (கண்கள்); ஏக—ஓர்; தேஸே—இடத்தில்; அகில—அனைத்து; ஸர்க—படைப்பு; ஸௌஷ்டவம்—நிறைவு; த்வதீயம்—உனது; அத்ராக்ஷ்ம—பார்க்கப்பட்ட; வயம்—நாங்கள்; மதுத்விஷ:—மது என்னும் அசுரனின் பகைவரான கிருஷ்ணரின்.

ஓ, விதியே, அக்ரூரர் என்னும் பெயரில் நீ இங்கே வருகின்ற போதிலும் நீ உண்மையில் குரூரமானவனே ஆவாய். நீ எங்களுக்கு அளித்த எந்தக் கண்களினால், உனது படைப்பு முழுவதின் நிறைவினை பகவான் மதுத்விஷனின் வடிவத்தின் ஒரு பகுதியில் பார்த்துக்கொண்டிருக்கின்றோமே அந்தக் கண்களை ஒரு மூடனைப் போல் நீ பறித்துக் கொள்கின்றாய்.

பதம் 10.39.22
ந நந்த-ஸுனு: க்ஷண-பங்க-ஸௌஹ்ருத:
ஸமீக்ஷதே ந: ஸ்வ-க்ருதாதுரா பத
விஹாய கேஹான் ஸ்வ-ஜனான் ஸுதான் பதீம்ஸ்
தத்-தாஸ்யம் அத்தோபகதா நவ-ப்ரிய:

ந—இல்லை; நந்த-ஸுனு:—நந்த மகாராஜாவின் புதல்வன்; க்ஷண—கணப்பொழுதில்; பங்க—உடைத்துக் கொள்வார்; ஸௌஹ்ருத:—அவரது நட்பினை; ஸமீஷதே—பார்ப்பது; ந:—எங்களை; ஸ்வ—அவனால்; க்ருதா—செய்த; ஆதுரா—அவனது கட்டுப்பாட்டில்; பத—ஐயோ; விஹாய—விட்டுக்கொடுத்தல்; கேஹான்—எங்கள் வீடுகள்; ஸ்வ-ஜனான்—உறவினர்கள்; ஸுதான்—குழந்தைகள்; பதீன்—கணவர்களை; தத்—அவருக்கு; தாஸ்யம்—அடிமைநிலை; அத்தா—நேரடியாக; உபகதா:—எடுத்துக் கொள்கின்றார்; நவ—எப்பொழுதும் புதிய; ப்ரிய:—அவருடைய காதலிகளை.

அந்தோ, கணப்பொழுதில் காதல் உறவினை முறித்துக் கொள்ளும் நந்த மகாராஜாவின் மைந்தன் இனிமேல் எங்களை நேரடியாகப் பார்க்கக் கூட மாட்டார். பலவந்தமாக அவரது கட்டுப்பாட்டின் கீழ் எங்களைக் கொண்டு வந்ததினால் நாங்கள் அவருக்குப் பணி செய்வதற்காக, எங்கள் இல்லங்களையும், உறவினர்களையும், குழந்தைகளையும், கணவர்களையும் துறந்தோம். ஆனால் அவரோ எப்பொழுதும் புதிய காதலிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றார்.

பதம் 10.39.23
ஸுகம் ப்ரபாதா ரஜனீயம் ஆஸிஷ:
ஸத்யா பபூவு: புர-யோஹிதாம் த்ருவம்
யா: ஸம்ப்ரவிஷ்டஸ்ய முகம் வ்ரஜஸ்-பதே:
பாஸ்யந்தி அபாங்கோத்கலித-ஸ்மிதாஸவம்

ஸுகம்—மகிழ்ச்சி; ப்ரபாதா—விடியல்; ரஜனீ—இரவு; இயம்—இது; ஆஸிஸ:—நம்பிக்கைகள்; ஸத்யா:—உண்மையாக; பபூவு:—போகின்றன; புர—நகரத்திலுள்ள; யோஷிதாம்—பெண்களின்; த்ருவம்—நிச்சயம்; யா:—எவர்; ஸம்ப்ரவிஸ்டஸ்ய—(மதுராவினுள்) நுழைகின்ற அவரின்; முகம்—முகம்; வ்ரஜ:-பதே:—விரஜத்தின் தலைவரின்; பாஸ்யந்தி—அவர்கள் பருகுவர்; அபாங்க—அவரது விழிகளின் ஓரத்தில்; உத்கலித—விரிந்த; ஸ்மித—புன்னகை; ஆஸவம்—அமிர்தம்.

இன்றைய இரவினைத் தொடர்ந்து வரும் விடியல் மதுராபுரியில் உள்ளப் பெண்களுக்கு நிச்சயம் மங்களகரமானதாகும். அவர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் இப்போது நிறைவேறப் போகின்றன. விரஜத்தின் தலைவர் அவர்களது நகருக்குள் நுழையும் பொழுது அவரது விழிகளின் ஓரத்திலிருந்து பிறக்கும் புன்னகை அமிர்தத்தினை அவரது திருமுகத்திலிருந்து அவர்களால் பருக இயலும்.

பதம் 10.39.24
தாஸாம் முகுந்தோ மது-மஞ்ஜு-பாஷிதைர்
க்ருஹீத-சித்த: பர-வான் மனஸ்வி அபி
கதம் புனர் ந: ப்ரதியாஸ்யதே ‘பலா
க்ராம்யா: ஸலஜ்ஜ-ஸ்மித-விப்ரமைர் ப்ரமன்

தாஸாம்—அவர்களின்; முகுந்த:—கிருஷ்ணர்; மது—தேனைப்போல்; மஞ்ஜு—இனிமையான; பாஷிதை:—வார்த்தைகளினால்; க்ருஹீத—பிரிக்கப்பட்ட; சித்த:—அவரது மனம்; பரவான்—அதிக மரியாதை உடையவர்; மனஸ்வீ—கூர்த்த மதியுடையவர்; அபி—இருந்த போதிலும்; கதம்—எவ்வாறு; புன:—மீண்டும்; ந:—எங்களிடம்; ப்ரதியாஸ் யதே—திரும்பி வருவார்; அபலா:—ஓ, பெண்களே; க்ராம்யா:—கிராமத்தினர்; ஸ-லஜ்ஜ—நாணம்கலந்த; ஸ்மித—புன்னகை; விப்ரமை:—அவர்களின் கவர்ச்சிகரமான; ப்ரமன்—குழப்பத்திற்காளானவர்.

ஓ, கோபியர்களே, நமது முகுந்தன் புத்திமானாகவும், பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிந்தவராகவும் இருந்த போதிலும் மதுராபுரிப் பெண்களின் தேனைப் போல் இனிக்கும் வார்த்தைகளுக்கு வசப்பட்டும், அவர்களின் கவர்ச்சிகரமான நாணம் கலந்த புன்னகையினால் மதிமயங்கியும்விட்டாரென்றால், பிறகு அவர் நாகரிகமற்ற கிராமத்துப் பெண்களாக நம்மிடம் எவ்வாறு திரும்பி வருவார்?

பதம் 10.39.25
அத்ய த்ருவம் தத்ர த்ருஸோ பவிஷ்யதே
தாஸார்ஹ-போஜாந்தக-வ்ருஷ்ணி-ஸாத்வதாம்
மஹோத்ஸவ: ஸ்ரீரமணம் குணாஸ்பதம்
த்ரக்ஷ்யந்தி யே சாத்வனி தேவகீ-ஸுதம்

அத்ய—இன்று; த்ருவம்—நிச்சயமாக; தத்ர—அங்கே; த்ருஸ:—விழிகளுக்கு; பவிஷ்யதே—இருக்கும்; தாஸார்ஹ-போஜ-அந்தக-வ்ருஷ்ணி-ஸாத்வதாம்—தாஸார்ஹ, போஜ, அந்தக, விருஷ்ணி மற்றும் ஸாத்வதாம் குலத்தினரின்; மஹா-உத்ஸவ:—ஒரு பெரிய விழா மகிழ்ச்சியை; ஸ்ரீ—அதிர்ஷ்ட தேவதையின்; ரமணம்—அன்பிற்குரியவர்; குண—உன்னதகுணங்கள் அனைத்தின்; ஆஸ்பதம்—உறைவிடம்; த்ரக்ஷ்யந்தி—அவர்கள் காண்பர்; யே—எவரை; ச—மற்றும்; அத்வனி—பாதையில்; தேவகீ-ஸுதம்—தேவகியின் புதல்வரான கிருஷ்ணர்.

தாஸர்களும், போஜர்களும், விருஷ்ணிக்களும், சாத்வதர்களும், மதுராவிலுள்ள தேவகியின் மைந்தர், மதுராவிற்குச் செல்லும் வழியில் அவரைக் காணும்பொழுது நிச்சயம் விழாக்கால மகிழ்ச்சியை அனுபவிப்பர். அவரே அதிர்ஷ்டதேவதையின் அன்பிற்குரியவராகவும் உன்னத குணங்கள் அனைத்தின் உறைவிடமாகவும் விளங்குகின்றார்.

பதம் 10.39.26
மைதத் விதஸ்யாகருணஸ்ய நாம பூத்
அக்ரூர இதி ஏதத் அதீவ தாருண:
யோ ‘ஸாவ் அனாஸ்வாஸ்ய ஸு-து: கிதம் ஜனம்
ப்ரியாத் ப்ரியம் நேஷ்யதி பாரம் அத்வன:

மா—கூடாது; ஏதத்-விதஸ்ய—இதுபோன்ற; அகருணஸ்ய—இரக்கமற்ற ஒருவன்; நாம—பெயரில்; பூத்—இருப்பவர்; அக்ரூர: இதி—”அக்ரூரர்”; ஏதத்—இந்த; அதீவ—அதீதமான; தாருண:—கொடிய; ய:—எவர்; அஸௌ—அவர்; அனாஸ்வாஸ்ய—சமாதானப்படுத்தாது; ஸு து:கிதம்—துக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களை; ஜனம்—ஜனங்களை; ப்ரியாத்—மிகவும் பிரியமானதை விட; ப்ரியம்—பிரியமான (கிருஷ்ணர்); நேஷ்யதி—அழைத்துச் செல்வார்; பாரம்-அத்வன:—நமது பார்வைக்கு எட்டாத தூரத்திற்கு.

இரக்கமற்ற இக்கொடிய செயலைச் செய்பவர் அக்ரூரர் என்று அழைக்கப்படுதல் கூடாது. துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் விரஜவாசிகளை சமாதானப்படுத்தாத அளவிற்கு அவர் மிகக் கொடியவராவார். அவர் நமது உயிரைக் காட்டிலும் பிரியமான கிருஷ்ணரை இங்கிருந்து அழைத்துச் செல்கின்றார்.

பதம் 10.39.27
அனார்த்ர-தீர் ஏஷ ஸமாஸ்திதோ ரதம்
தம் அன்வ் அமீ ச த்வரயந்தி துர்மதா:
கோபா அனோபி: ஸ்தவிரைர் உபேக்ஷிதம்
தைவம் ச நோ ‘த்ய ப்ரதிகூலம் ஈஹதே

அனார்த்ர-தீ:—கல்மனமுடைய; ஏஷ:—இவர் (கிருஷ்ணர்); ஸமாஸ் தித:—ஏற்றிக்கொண்டு; ரதம்—இரதத்தில்; தம்—அவரை; அனு—பின்தொடர்ந்து; அமீ—இவர்கள்; ச—மற்றும்; த்வரயந்தி—விரைந்து; துர்மதா:—துர்மதியுடைய; கோபா:—ஆயர்கள்; அனோபி:—தங்கள் மாட்டுவண்டிகளில்; ஸ்தவிரை:—பெரியவர்களால்; உபேக்ஷி தம்—அசட்டைப்படுத்துகின்றது; தைவம்—விதி; ச—மற்றும்; ந:—நம்மிடம்; அத்ய—இன்று; ப்ரதிகூலம்—பாதகமான; ஈஹதே—செயல்படுகின்றது.

கல்மனதுடைய கிருஷ்ணர் ஏற்கெனவே இரதத்தில் ஏறிவிட்டார். துர்மதியுடைய ஆயர்களோ தங்கள் மாட்டு வண்டிகளில் அவர் பின்னால் விரைந்து செல்கின்றனர். அவரைத் தடுத்து நிறுத்துவதற்குப் பெரியவர்கள் கூட ஒன்றும் சொல்லவில்லை. இன்று விதி நமக்கு எதிராக விளையாடுகின்றது.

பதம் 10.39.28
நிவாரயாம: ஸமுபேத்ய மாதவம்
கிம் நோ ‘கரிஷ்யன் குல-வ்ருத்த-பாந்தவா:
முகுந்த-ஸங்கான் நிமிஷார்த-துஸ்த்யஜாத்
தைவேன வித்வம்ஸித-தீன-சேதஸாம்

நிவாராயம:—நாம் தடுத்துநிறுத்த; ஸமுபேத்ய—அவரிடம் சென்றார்; மாதவம்—கிருஷ்ணரை; கிம்—என்ன; ந:—நமக்கு; அகரிஷ்யன்—செய்வர்; குல—குடும்பத்தின்; வ்ருத்த—பெரியவர்கள்; பாந்தவா:—மற்றும் நமது உறவினர்கள்; முகுந்த-ஸங்காத்—பகவான் முகுந்தனின் உறவினனை; நிமிஷ—கண்இமைக்கும் நேரத்தில்; அர்த—அரைப்பகுதி; துஸ்த்யஜாத்—துறப்பதற்கு அரிதாகும்; தைவேன—விதியினால்; வித்வம்ஸித—பறிக்கப்பட்டு; தீன—துயரமிகுந்த; சேதஸாம்—அவர்களின் இதயங்கள்.

நாம் நோரடியாகச் சென்று மாதவனைச் செல்லவிடாது தடுத்து நிறுத்தினோமென்றால் நமது குடும்பத்திலுள்ள பெரியவர்களும், உறவினர்களும் நம்மை என்ன செய்வர்? இப்போது விதி, முகுந்தனிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றது. அரைவிநாடி கூட அவரது தொடர்பின்றி எங்களால் இருக்க முடியாது, ஆதலினால் ஏற்கெனவே எங்கள் இதயம் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது.

பதம் 10.39.29
யஸ்யானுராக-லலித-ஸ்மித-வல்கு-மந்த்ர-
லீலாவலோக-பரிரம்பண-ராஸ-கோஷ்டம்
நீதா: ஸ்ம ந: க்ஷணம் இவ க்ஷணதா விநா தம்
கோப்ய: கதம் ந்வ் அதிதரேம தமோ துரந்தம்

யஸ்ய—எவருடைய; அனுராக—அன்புமிகுகாதலுடன்; லலித—மனதினை மயக்கும்; ஸ்மித—(அங்கேபுரிந்த) புன்னகைகள்; வல்கு—கவர்ச்சிகரமான; மந்த்ர—நெருக்கமான உரையாடல்கள்; லீலா—விளையாட்டு; அவலோக—பார்வைகள்; பரிரம்பண—மற்றும் தழுவல்கள்; ராஸ—’ராஸ’ நடனத்தின்; கோஷ்டாம்—கூட்டத்திற்கு; நீத: ஸ்ம—அவர் அழைத்து வந்தார்; ந:—நமக்கு; க்ஷணம்—ஒரு கணம்; இவ—போன்று; க்ஷணதா:—இரவுகள்; விநா—இன்றி; தம்—அவரை; கோப்ய:—ஓ, கோபியரே; கதம்—எவ்வாறு; நு—உண்மையில்; அதிதரேம—நாம் கடப்போம்; தம:—இருளினை; துரந்தம்—கடத்தற்கரிய.

‘ராஸ’ நடனக் கூட்டத்திற்கு அவர் நம்மை அழைத்து வந்தபொழுது அங்கே நாம் அவரது காதல்மிகு மனங்கவரும் புன்னகை, அவரது கவர்ச்சிமிகு இரகசிய உரையாடல்கள், அவரது வேடிக்கைப் பார்வைகள் மற்றும் அவரது தழுவல்கள் போன்றவற்றினை அனுபவித்து மகிழ்ந்து பல இரவுகளை ஒரு கணமாகக் கழித்தோம். ஓ, கோபியரே, அவரின்றி கடப்பதற்குரிய இருளினை நாம் எவ்வாறு கடத்தல் கூடும்?

பதம் 10.39.30
யோ ஹ்ன: க்ஷயே வ்ரஜம் அனந்த்-ஸக: பரீதோ
கோபைர் விஸன் குர-ரஜஸ்-சுரிதாலக-ஸ்ரக்
வேணும் க்வணன் ஸ்மித-கடாக்ஷ-நிரீக்ஷணேன
சித்தம் க்ஷிணோதி அமும் ருதே நு கதம் பவேம

ய:—எவர்; அஹ்ன:—பகற்பொழுதில்; க்ஷயே—மறைதல்; வ்ரஜம்—விரஜ கிராமம்; அனந்த—அனந்தனின் (பலராமர்); ஸக:—நண்பர் (கிருஷ்ணர்); பரீத:—எல்லாப் பக்கங்களிலும் உடன் வர; கோபை:—ஆயர்குலச் சிறுவர்களால்; விஸன்—புகுவார்; குர—காலடிக் குளம்புகளின் (பசுக்களின்); ரஜ:—தூசியினால்; சுரித—பூசப்பட்ட; அலக—அவருடைய சுருண்ட குழல்முடிகள்; ஸ்ரக்—அவருடைய மாலைகள்; வேணும்—அவருடைய புல்லாங்குழல்; க்வணன்—இசைத்து; ஸ்மித—புன்னகையுடன் கூடிய; கட-அக்ஷ—அவரது விழிகளின் ஓரத்திலிருந்து; நிரீக்ஷணேன—பார்வைகளினால்; சித்தம்—நமது மனங்களை; க்ஷிணோதி—அழிக்கின்றார்; அமும்—அவரை; ருதே—இன்றி; நு—உண்மையில்; கதம்—எவ்வாறு; பவேம—நாங்கள் உயிர் வாழ்வோம்.

மாலைப்பொழுதில் விரஜத்திற்கு, ஆயர்குலச்சிறுவர்களுடன், பசுக்களின் காலடிக்குளம்புகளினால் எழுந்த தூசி படிந்திருக்கும். தலைமுடியும், மாலையும் உடைய, அனந்தனின் நண்பரான கிருஷ்ணர் வருவார். அவர் இன்றி நாங்கள் எங்ஙனம் உயிர்வாழ்தல் கூடும்? அவர் புல்லாங்குழலினை இசைக்கும்பொழுது தமது புன்னகை நிறைந்த ஓரவிழிப்பார்வையினால் எங்கள் மனங்களைக் கொள்ளை கொள்வார்.

பதம் 10.39.31
ஸ்ரீ-ஸுக உவாச
ஏவம் ப்ருவாணா விரஹாதுரா ப்ருஸம்
வ்ரஜ-ஸ்த்ரிய: க்ருஷ்ண-விஷக்த மானஸா:
விஸ்ருஜ்ய லஜ்ஜாம் ருருது: ஸ்ம ஸு-ஸ்வரம்
கோவிந்த தாமேதர மாதவேதி

ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவகோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; ப்ருவாணா:—கூறிய; விரஹ—பிரிவுத்துயரினால்; ஆதுரா:—பாதிக்கப்பட்ட; ப்ருஸம்—முற்றிலும்; வ்ரஜ-ஸ்த்ரிய:—விரஜத்தின் பெண்கள்; க்ருஷண—கிருஷ்ணரிடம்; விஷக்த—பற்றுக்கொண்டு; மானஸா:—அவர்களின் மனங்கள்; விஸ்ருஜ்ய—புறக்கணித்து; லஜ்ஜாம்—வெட்கம்; ருருது: ஸ்ம—அவர்கள் கூவினர்; ஸு-ஸ்வரம்—உரக்க; கோவிந்த தாமோ தர மாதவ இதி—ஓ, கோவிந்தா, ஒ, தாமோதரா, ஒ, மாதவா.

சுகதேவகோஸ்வாமி கூறினார்: “இவ்வாறு கூறிய பின்னர் கிருஷ்ணர் மீதுப் பற்றுடைய விரஜத்திலுள்ளப் பெண்கள், அவரது உடனடிப் பிரிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நாணம் என்பதை அடியோடு மறந்து “ஒ, கோவிந்தா! ஓ, தாமோதரா! ஓ, மாதவா!” என்று பெருங்குரலெடுத்துக் கூவினர்.”

பதம் 10.39.32
ஸ்த்ரீணாம் ஏவம் ருதந்தீனாம் உதிதே ஸவிதரி அத
அக்ரூரஸ் சோதயாம் ஆஸ க்ருத-மைத்ராதிகோ ரதம்

ஸ்த்ரீணாம்—பெண்கள்; ஏவம்—இவ்வாறு; ருதந்தீனாம்—அழுது கொண்டிருக்கும் பொழுது; உதிதே—உதயத்தில்; ஸவிதரி—சூரியன்; அத—பின்னர்; அக்ரூர:—அக்ரூரர்; சோதயாம் ஆஸ—புறப்பட்டார்; க்ருத—செய்து முடித்து; மைத்ர-ஆதிக:—அவரது காலை வழிபாடு மற்றும் நியம நிஷ்டைகளை; ரதம்—இரதம்.

கோபியர்கள் இவ்வாறு அழுது புலம்பிக் கொண்டிருக்க சூரிய உதயத்தில் தனது காலை வழிபாடு மற்றும் காலைக் கடன்களை முடித்த அக்ரூரர் இரதத்தினைச் செலுத்தத் தொடங்கினார்.

பதம் 10.39.33
கோபாஸ் தம் அன்வஸஜ்ஜந்த நந்தாத்யா: ஸகதைஸ் தத:
ஆதாயோபாயனம் பூரி கும்பான் கோ-ரஸ-ஸம்ப்ருதான்

கோபா:—கோபாலர்கள்; தம்—அவரை; அன்வஸஜ்ஜந்த—பின் தொடர்ந்தனர்; நந்த-ஆத்யா:—நந்தகோபரின் தலைமையில்; ஸகதை:—தங்கள் வண்டிகளில்; தத:—பின்னர்; ஆதாய—எடுத்துக் கொண்டு; உபாயனம்—பரிசுகள்; பூரி—ஏராளமாக; கும்பான்—மண்பானைகளில்; கோ-ரஸ—பால் பொருட்களை; ஸம்ப்ருதான்—நிரப்பிக் கொண்டு.

நந்த மகாராஜாவின் தலைமையில் ஆயர்கள் தங்கள் வண்டிகளில் பகவான் கிருஷ்ணரைப் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் நெய் மற்றும் பால்பொருட்கள் நிரம்பிய பானைகளுடன் ஏராளமான பரிசுப் பொருட்களை மன்னருக்கு அளிப்பதற்காகத் தங்களுடன் எடுத்துச் சென்றனர்.

பதம் 10.39.34
கோப்யஸ் ச தயிதம் க்ருஷ்ணம் அனுவ்ரஜ்யானுரஞ்ஜிதா:
ப்ரத்யாதேஸம் பகவத: காங்க்ஷந்த்யஸ் சாவதஸ்திரே

கோப்ய:—கோபியர்கள்; ச—மேலும்; தயிதம்—தங்கள் பிரியமான; க்ருஷ்ணம்—கிருஷ்ணரை: அனுவ்ரஜ்ய—பின்தொடர்ந்து; அனுரஞ்ஜிதா:—திருப்திப்படுத்தினார்; ப்ரத்யா-தேஸம்—பதிலுக்கு சில உபதேசங்கள்; பகவத:—பகவானிடமிருந்து; காங்க்ஷந்த்யஸ்—நம்பிக்கையுடன்; ச—மேலும்; அவதஸ்திரே—அவர்கள் அப்படியே நின்றனர்.

(தமது பார்வைகளினால்) பகவான் கிருஷ்ணர், கோபியர்களைச் சமாதானப்படுத்தினார். அவர்களும் அவரை சிறிது தூரத்திற்குப் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் அவர் தங்களுக்கு சில உபதேசங்கள் அருள்வார் என்றும் நம்பிக்கையில் அவர்கள் அப்படியே நின்றனர்.

பதம் 10.39.35
தாஸ் ததா தப்யதீர் வீக்ஷ்ய ஸ்வ-ப்ரஸ்தானே யதூத்தம:
ஸாந்த்வயாம் ஆஸ ஸ-ப்ரேமைர் ஆயாஸ்ய இதி தௌத்யகை:

தா:—அவர்களை (கோபியர்கள்); ததா—இவ்வாறு; தப்யதீ:—அழுது புலம்பிக் கொண்டிருக்கும்; வீக்ஷ்ய—கண்டு; ஸ்வ-ப்ரஸ்தானே—அவர் பிரிந்துசெல்வதினால்; யது-உத்தம:—யதுக்களில் சிறந்தவர்; ஸாத்வாயாம் ஆஸ—அவர் அவர்களை சாந்தப்படுத்தினார்; ஸ-ப்ரேமை:—அன்புடன் கூடிய; ஆயஸ்யே இதி—”நான் திரும்பி வருவேன்”; தௌத்யகை:—ஒரு தூதன்மூலம் அனுப்பப்பட்ட இவ்வார்த்தைகளினால்.

யதுகுலத்தில் சிறந்தவரான அவர் புறப்பட்டுச் சென்ற பொழுது கோபியர்கள் எங்ஙனம் அழுது புலம்புகின்றனர் என்பதைக் கண்டார். அதனால் அவர் ஒரு தூதனிடம் “நான் திரும்பிவருவேன்” என்னும் காதல் மயமான உறுதிமொழியினைச் சொல்லி அனுப்பி அவர்களைச் சாந்தப்படுத்தினார்.

பதம் 10.39.36
யாவத் ஆலக்ஷயதே கேதுர் யாவத் ரேணூ ரதஸ்ய ச
அனுப்ரஸ்தாபிதாத்மானோ லேக்யானீவோபலக்ஷிதா:

யாவத்—எதுவரை; ஆலக்ஷயதே—காண முடிந்ததோ; கேது:—கொடியினை; யாவத்—எதுவரை; ரேணு:—தூசு; ரதஸ்ய—இரதத்தின்; ச—மற்றும்; அனுப்ரஸ்தாபித—பின்சென்ற; ஆத்மான:—தங்கள் மனங்கள்; லேக்யானி—சித்திரத்தில் வரைந்த உருவங்கள்; இவ—போன்ற; உபலக்ஷிதா:—அவர்கள் தோன்றினர்.

தங்கள் மனங்களைக் கிருஷ்ணரின் பின்னால் அனுப்பிவிட்டுக் கோபியர்கள் சித்திரத்தில் வரையப்பட்ட உருவங்கள் போல் அப்படியே அசைவற்று நின்றனர். இரதத்தின் உச்சியில் கட்டப்பட்ட கொடி தமது கண்களுக்குப் புலனாகும் வரையிலும், இரதத்தின் சக்கரங்களினால் எழுந்த தூசு தங்கள் பார்வையிலிருந்து மறையும் வரையிலும் அவர்கள் அங்கேயே நின்றனர்.

பதம் 10.39.37
தா நிராஸா நிவவ்ருதுர் கோவிந்த-விநிவர்தனே
விஸோகா அஹனீ நின்யுர் காயந்த்ய: ப்ரிய-சேஷ்டிதம்

தா:—அவர்கள்; நிராஸா:—நிராசையுடன்; நிவவ்ருது:—திரும்பிச் சென்றனர்; கோவிந்த-விநிவர்தனே—கோவிந்தன் திரும்பிவருதல்; விஸோகா:—மிகுந்த துயரத்துடன்; அஹனீ—பகல் மற்றும் இரவுகளை; நின்யு:—அவர்கள் கழித்தனர்; காயந்த்ய:—பாடினர்; ப்ரிய—தங்கள் பிரியமானவரின்; சேஷ்டிதம்—செயல்களைப் பற்றி.

பின்னர், கோவிந்தன் தம்மிடம் திரும்பிவருவார் என்றும் நம்பிக்கையின்றிக் கோபியர்கள் திரும்பிச் சென்றனர். மிக்க துயரத்துடன் தங்கள் பிரியமானவரின் லீலைகளைப் பற்றிப் பாடுவதின் மூலம் பகல் மற்றும் இரவுகளை அவர்கள் கழிக்கத் தொடங்கினர்.

பதம் 10.39.38
பகவான் அபி ஸம்ப்ராப்தோ ராமாக்ரூர-யுதோ ந்ருப
ரதேன வாயு-வேகேன காளிந்தீம் அக-நாஸினீம்

பகவான்—பரமபுருஷ பகவான்; அபி—மேலும்; ஸம்ப்ராப்த:—அடைந்தார்; ராம-அக்ரூர-யுத:—பலராமர் மற்றும் அக்ரூரருடன் சேர்ந்து; ந்ருப—ஓ, மன்னனே (பரீக்ஷித்து); ரதேன—இரதத்தின் மூலம்; வாயு—காற்றினைப் போல்; வேகேன—வேகமாக; காளிந்தீம்—காளிந்தி நதியினை (யமுனை); அக—பாவங்களை; நாஸினீம்—அது அழிக்கின்றது.

அன்பிற்குரிய அரசனே, பரமபுருஷபகவானான கிருஷ்ணர், பகவான் பலராமருடனும், அக்ரூரருடனும் அந்த இரதத்தில் காற்றினைப் போல் வேகமாகப் பயணம் செய்து, பாவங்கள் அனைத்தையும் அழிக்கின்ற காளிந்தி நதியினை அடைந்தார்.

பதம் 10.39.39
தத்ரோபஸ்ப்ருஸ்ய பானீயம் பீத்வா ம்ருஷ்டம் மணி-ப்ரபம்
வ்ருக்ஷ-ஷண்டம் உபவ்ரஜ்ய ஸ-ராமோ ரதம் ஆவிஸத்

தத்ர—அங்கே; உபஸ்ப்ருஸ்ய—நீரினைத் தொட்டு; பாணீயம்—தமது கரத்தில்; பீத்வா—பருகினார்; ம்ருஷ்டம்—இனிய; மணி—இரத்தினம் போல்; ப்ரபம்—ஒளிவீசும்; வ்ருக்ஷ—மரங்களின்; ஷண்டம்—ஒருசோலை; உபவ்ரஜ்ய—சென்று; ஸ-ராம:—பலராமருடன்; ரதம்—இரதத்தில்; ஆவிஸத்—அவர் ஏறினார்.

அந்நதியின் இன்சுவைநீர் மரகதமணியைவிட ஒளியுடையதாக விளங்கியது. தூய்மை செய்வதற்காக அதனைத் தொட்ட பகவான், தமது கரத்தில் சிறிதளவு நீரினை எடுத்துப் பருகினார். பிறகு அவர் மரங்களடர்ந்த சோலையில் நிறுத்தப்பட்டிருந்த இரதத்தில் பலராமருடன் சேர்ந்து ஏறி அமர்ந்தார்.

பதம் 10.39.40
அக்ரூரஸ் தாவ் உபாமந்த்ரய நிவேஸ்ய ச ரதோபரி
காளிந்த்யா ஹ்ரதம் ஆகத்ய ஸ்நானம் விதி-வத் ஆசரத்

அக்ரூர:—அக்ரூரர்; தௌ—அவர்கள் இருவரிடமும்; உபாமந்த்ரய—அனுமதிபெற்று; நிவேஸ்ய—அவர்களை அமரச் செய்து; ச—மற்றும்; ரத-உபரி—இரதத்தில்; காளிந்த்ய:—யமுனையின்; ஹ்ரதம்—ஒரு குளத்திற்கு; ஆகத்ய—சென்று; ஸ்நானம்—நீராடினார்; விதி-வத்—சாத்திர நெறிமுறைகளுக்கேற்ப; ஆசரத்—அவர் செய்தார்.

அக்ரூரர் பகவான்கள் இருவரையும் இரதத்தின் இருக்கையில் அமரும்படி வேண்டிக் கொண்டார். பின்னர் அவர் அவர்களிடம் அனுமதி பெற்று, யமுனை நதியின் ஒரு குளத்தில் நீராடச் சென்றார். அங்கு அவர் சாத்திர நெறி முறைகளுக்கேற்ப நீராடினார்.

பதம் 10.39.41
நிமஜ்ஜ்ய தஸ்மின் ஸலிலே ஜபன் ப்ரஹ்ம ஸநாதனம்
தாவ் ஏவ தத்ருஸே ‘க்ரூரோ ராம-க்ருஷ்ணௌ ஸமன்விதௌ

நிமஜ்ஜ்ய—அவர்மூழ்கும் பொழுது; தஸ்மின்—அதனுள்; ஸலிலே—நீர்; ஜபன்—ஓதினார்; ப்ரஹ்ம—வேதமந்திரங்களை; ஸநாதனம்—நித்தியமான; தெள—அவர்களை; ஏவ—உண்மையில்; தத்ருஸே—கண்டார்; அக்ரூர:—அக்ரூரர்; ராம-க்ருஷ்ணௌ—பலராமரையும், கிருஷ்ணரையும்; ஸமன்விதெள—சேர்ந்து.

நித்தியமான வேத மந்திரங்களை ஓதிக் கொண்டு, நீரினுள் மூழ்கும் பொழுது அக்ரூரர் பலராமரையும், கிருஷ்ணரையும் தன் முன் கண்டார்.

பதங்கள் 10.39.42 – 10.39.43
தௌ ரத-ஸ்தௌ கதம் இஹ ஸுதாவ் ஆனகதுந்துபே:
தர்ஹி ஸ்வித் ஸ்யந்தனே ந ஸ்த இதி உன்மஜ்ஜ்ய வ்யசஷ்ட ஸ:

தத்ராபி ச யதா-பூர்வம் ஆஸுனௌ புனர் ஏவ ஸ:
ந்யமஜ்ஜ்த் தர்ஸனம் யன் மே ம்ருஷா கிம் ஸலிலே தயோ:

தெள—அவர்கள்; ரத-ஸ்தௌ—இரதத்தில் அமர்ந்திருக்கும்; கதம்—எவ்வாறு; இஹ—இங்கே; ஸுதெள—இரு புதல்வர்களும்; ஆனகதுந்துபே:—வசுதேவரின்; தர்ஹி—பின்னர்; ஸ்வித்—அவ்வாறெனில்; ஸ்யந்தனே—இரதத்தில்; ந ஸ்த:—அவர்கள் இல்லையா; இதி—இவ்வாறு எண்ணி; உன்மஜ்ஜ்ய—நீரினின்று எழுந்தார்; வ்யசஷ்ட—கண்டார்; ஸ:—அவர்; தத்ர அபி—அதே இடத்தில்; ச—மேலும்; யதா—போன்று; பூர்வம்—முன்பிருந்து; ஆஸுனௌ—அமர்ந்திருக்க; புன:—மீண்டும்; ஏவ—உண்மையில்; ஸ:—அவர்; ந்யமஜ்ஜ்த்—நீரினுள் மூழ்கினார்; தர்ஸனம்—தரிசனம்; யத்—அவ்வாறிருக்குமோ; மே—எனது; ம்ருஷா—பொய்ம்மையாக; கிம்—ஒருவேளை; ஸலிலே—நீரினுள்; தயோ:—அவர்களின்.

அக்ரூரர் எண்ணினார், “இரதத்தில் அமர்ந்திருக்கும் ஆனகதுந்துபியின் மைந்தர்கள் இருவரும் எவ்வாறு இங்கே நீரினுள் நின்று கொண்டிருக்க முடியும்? அவர்கள் இரதத்திலிருந்து இறங்கி வந்திருக்க வேண்டும்” என்று அவர் நீரினின்று வெளியே வந்து பார்த்தபோது அவர்களிருவரும் முன்புபோலவே இரதத்தில் அமர்ந்திருக்கக் கண்டார். அவர் தனக்குள் ”நீரினுள் நான் பார்த்த அவர்களின் தோற்றம் பொய்யானதா?” என்று கேட்டுக் கொண்டார். அக்ரூரர் மீண்டும் குளத்தில் இறங்கினார்.

பதங்கள் 10.39.44 – 10.39.45
பூயஸ் தத்ராபி ஸோ ‘த்ராக்ஷீத் ஸ்தூயமானம் அஹீஸ்வரம்
ஸித்த-சாரண-கந்தர்வைர் அஸுரைர் நத-கந்தரை:

ஸஹஸ்ர-ஸிரஸம் தேவம் ஸஹஸ்ர-பண-மெளலினம்
நீலாம்பரம் விஸ-ஸ்வேதம் ஸ்ருங்கை: ஸ்வேதம் இவ ஸ்திதம்

பூய:—மிண்டும்; தத்ர அபி—அதே இடத்தில்; ஸ:—அவர்; அத்ராக்ஷீத்—கண்டார்; ஸ்தூயமானம்—போற்றப்படுவதை; அஹி-ஈஸ்வரம்—நாகங்களின் தலைவர் (பகவான் பலராமரின் அம்சவிரிவான அனந்தசேஷன், விஷ்ணுவிற்குப் படுக்கையாகத் தொண்டாற்றுகின்றார்); ஸித்த-சாரண-கந்தர்வை:—சித்தர்கள்; சாரணர்கள் மற்றும் கந்தர்வர்களால்; அஸுரை:—மற்றும் அசுரர்களினாலும்; நத—தலை வணங்கி; கந்தரை:—அவர்களின் கழுத்துக்கள்; ஸஹஸ்ர—ஆயிரங்கள்; ஸிரஸம்—தலைகள்; தேவம்—முழுமுதற்கடவுள்; ஸஹஸ்ர—ஆயிரங்கள்; பண—படங்கள் உடைய; மௌலினம்—மணிமுடிகள்; நீல—நீலவண்ண; அம்பரம்—அவருடைய ஆடை; விஸ—தாமரைக் கொடியின் தண்டிலுள்ள நூலிழைகள் போல்; ஸ்வேதம்—வெண்மை நிறமான; ஸ்ருங்கை:—அதன் சிகரங்களுடன்; ஸ்வேதம்—கயிலாய மலை; இவ—போன்று; ஸ்திதம்—அமைந்திருக்க.

அங்கே அக்ரூரர் நாகங்களின் தலைவரான அனந்தசேஷன், சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், மற்றும் அசுரர்கள் போன்றவர்களால் தலைவணங்கிப் போற்றப்படுவதைக் கண்டார். அக்ரூரர் பார்த்த முழுமுதற்கடவுளுக்கு ஆயிரக்கணக்கான தலைகளும், ஆயிரக்கணக்கான படங்களும், ஆயிரக்கணக்கான மணி மகுடங்களும் இருந்தன. அவருடைய நீல வண்ண ஆடைகளும், தாமரைத் தண்டின் இழைகளைப்போன்ற அவரது வெண்மைநிறமும் அவரைப் பல சிகரங்களையுடைய வெள்ளிக் கயிலயங்கிரியைப் போல் தோன்றக் செய்தன.

பதங்கள் 10.39.46 – 10.39.48
தஸ்யோத்ஸங்கே கன-ஸ்யாமம் பீத கௌஸேய-வாஸஸம்
புருஷம் சதுர்-புஜம் ஸாந்தம் பத்ம-பத்ராருணேக்ஷணம்

சாரு-ப்ருஸன்ன-வதனம் சாரு-ஹாஸ-நிரீக்ஷணம்
ஸு-ப்ருன்னஸம் சாரு-கர்ணம் ஸு-கபோலாருணாதரம்

ப்ரலம்ப-பீவர-புஜம் துங்காம்ஸோர:-ஸ்தல-ஸ்ரியம்
கம்ப-கண்டம் நிம்ன-நாபிம் வலிமத்-பல்லவோதரம்

தஸ்ய—அவருடைய (அனந்த சேஷனின்); உத்ஸங்கே—மடியின் மீது; கன—கார்மேகம் போன்று; ஸ்யாமம்—கருநீலவண்ண; பீத—மஞ்சள் நிற; கெளஸேய—பட்டு; வாஸஸம்—அவருடைய ஆடை; புருஷம்—பரமபுருஷபகவான்; சது:-புஜம்—சதுர்ப்புஜங்களுடன்; ஸாந்தம்—சாந்தமுடன்; பத்ம—தாமரை மலரின்; பத்ர—இதழ்களைப் போன்று; அருண—சிவந்த; ஈக்ஷணம்—அவருடைய விழிகள்; சாரு—கவர்ச்சிகரமான; ப்ரஸன்ன—மகிழ்ச்சிமிகு; வதனம்—அவரது திருமுகம்; சாரு—கவர்ச்சிகரமான; ஹாஸ—புன்னகையுடன்; நிரீக்ஷணம்—அவருடைய பார்வை; ஸு—அழகிய; ப்ரு—அவருடையப் புருவங்கள்; உத்—எடுப்பான; நஸம்—அவரது நாசி; சாரு—கவர்ச்சிகரமான; கர்ணம்—அவருடைய செவிகள்; ஸு—அழகிய; கபோல—அவருடைய கன்னங்கள்; அருண—சிவந்த; அதரம்—அவரது அதரங்கள்; ப்ரலம்ப—விரிந்த; பீவர—உறுதியான; புஜம்—அவரது புஜங்கள்; துங்க—உயர்ந்த; அம்ஸ—அவருடைய தோள்கள்; உர:-ஸ்தல—மற்றும் மார்பு; ஸ்ரியம்—அழகு செய்யப்பட்ட; கம்ப—ஒரு சங்கிளைப் போன்று; கண்டம்—அவருடைய கழுத்து; நிம்ன—ஆழமான; நாபிம்—அவருடைய உந்திச்சுழி; வலி—வரிகள்; மத்—கொண்டு; பல்லவ—ஓர் இலையினைப் போன்ற; உதரம்—அவருடைய வயிறு.

பின்னர் அக்ரூரர், முழுமுதற்கடவுள், அமைதியுடன் பகவான் அனந்தசேஷனின் மடியில் துயில்வதைக் கண்டார். பரமபுருஷரின் மேனி நிறம் கருநீல வண்ணமேகத்தைப்போல் இருந்தது. அவர் மஞ்சள் வண்ணப் பாட்டாடை உடுத்திருந்தார். அவருக்கு நான்கு கரங்கள் இருந்தன. செந்தாமரை இதழ்களைப் போல் சிவந்த விழிகள் உடையவராக இருந்தார். அவருடைய திருமுகம், கவர்ச்சிகரமான புன்னகையினாலும், மனதினை மயக்கும் பார்வையினாலும், எழில்மிகு புருவங்களினாலும், எடுப்பான நாசியினாலும், அழகுற அமைந்த செவிகளினாலும், அழகிய கன்னங்களினாலும், சிவந்த அதரங்களினாலும் காண்பதற்குக் கவர்ச்சிகரமாக விளங்கியது. பகவானின் விரிந்த தோள்களும், பரந்த மார்பும் எழில்மிக்கவையான இருந்தன. அவரது கரங்கள் நீண்டும், உறுதியாகவும் விளங்கின. அவருடைய கழுத்து வெண்சங்கினை ஒத்திருந்தது. அவருடைய உந்திச் சுழி ஆழமாக இருந்தது. அவருடைய அடிவயிற்றில் ஆலிலையில் உள்ளது போன்ற வரிகள் காணப்பட்டன.

பதங்கள் 10.39.49 – 10.39.50
ப்ருஹத்-கடி-தட-ஸ்ரோணி கரபோரு-த்வாயன்விதம்
சாரு-ஜானு-யுகம் சாரு-ஜங்கா-யுகல-ஸம்யுதம்

துங்க-குல்பாருண-நக-வ்ராத-தீதிதிபிர் வ்ருதம்
நவாங்குலி-அங்குஷ்ட-தலைர் விலஸத்-பாத பங்கஜம்

ப்ருஹத்—அகன்ற; கடி-தட—அவருடைய பிருஸ்டங்கள்; ஸ்ரோணி—மற்றும் இடுப்பு; கரப—ஒரு யானையின் துதிக்கை போன்று; ஊரு—தொடைகளின்; த்வய—இரண்டும்; அன்விதம்—பெற்றிருந்தார்; சாரு—கவர்ச்சிமிகு; ஜானு-யுகம்—அவருடைய இரண்டு முழங்கால் மூட்டுகளும்; சாரு—கவர்ச்சிகரமான; ஜங்கா—முழங்கால்களும்; யுகல—இரண்டு; ஸம்யுதம்—பெற்றிருந்தார்; துங்க—உயர்ந்த; குல்ப—அவருடைய கணுக்கால்களும்; அருண—சிவந்த; நக-வ்ராத—அவருடைய கால்விரல் நகங்களிலிருந்து; தீதிதிபி:—ஒளிக்கதிர்களினால்; வ்ருதம்—சூழப்பட்டிருந்தன; நவ—மென்மையான; அங்குலி-அங்குஷ்ட—கால்களிலுள்ள இரு பெருவிரல்களும்; தலை:—மலரின் இதழ்களைப் போல்; விலஸத்—மின்னின; பாத-பங்கஜம்—அவருடைய தாமரைத்திருவடிகள்.

அவருக்கு விரிந்த பிருஸ்டங்களும், இடையும் இருந்தன. அவருடைய தொடைகள் யானையின் துதிக்கையைப் போன்றிருந்தன. அவருக்கு நன்கமைந்த முழுங்கால் மூட்டுகளும், முழங்கால்களும் இருந்தன. அவருடைய உயர்ந்த கணுக்கால் பகுதி, அவருடைய தாமரைத் திருவடிகள் அழகு செய்த மலரிதழ்களைப் போல் மென்மையாக இருந்த கால் விரல்களில் நகங்களிலிருந்து உண்டான ஒளி பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

பதங்கள் 10.39.51 – 10.39.52
ஸு-மஹார்ஹ-மணி-வ்ராத-கிரீட-கடகாங்கதை:
கடி-ஸூத்ர-ப்ரஹ்ம-ஸூத்ர-ஹார-நூபுர-குண்டலை:

ப்ராஜமானம் பத்ம-கரம் ஸங்க-சக்ர-கதா-தரம்
ஸ்ரீ வத்ஸ-வக்ஷஸம் ப்ராஜத்-கௌஸ்துபம் வன-மாலினம்

ஸு-மஹா—சிறந்த; அர்ஹ—விலைமதிப்பற்ற; மணி-வ்ராத—பல இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற; கிரீட—மணிமகுடம்; கடகா— கடகங்கள்; அங்கதை:—கைவளைகள்; கடி-ஸுத்ர—மேகலையும்; ப்ரஹ்ம-ஸூத்ர—புனித முப்புரிநூலும்; ஹார—கழுத்தணிகளும்; நூபுர—காற்சலங்கைகளும்; குண்டலை:—செவிக்குண்டலங்களும்; ப்ராஜமானம்—ஒளிபொருந்திய; பத்ம—தாமரை மலரினை ஏந்தியிருந்தார்; கரம்—அவருடைய கரத்தில்; ஸங்க—சங்கு; சக்ர—சக்கரம்; கதா—கதாயுதம்; தரம்—கொண்டிருந்தார்; ஸ்ரீவத்ஸ—ஸ்ரீவத்ச அடையாளம் பெற்றிருந்தார்; வக்ஷஸம்—அவருடைய மார்பில்; ப்ராஜத்—ஒளிவீசும்; கௌஸ்துபம்—கௌத்துபமணியுடன்; வன-மாலினம்—ஒரு மலர் மாலையுடன்.

விலைமதிப்பற்ற இரத்தினக் கற்கள் பதிக்கப்பெற்றிருந்த மணிமகுடம், கடகங்கள், கைவளைகள், மேகலை, முப்புரிநூல், கழுத்தணிகள், காற்சலங்கைகள், செவிக்குண்டலங்கள் அணிந்து பகவான் ஒளி மிக்கவராகத் திகழ்ந்தார். ஒரு கரத்தில் தாமரை மலரும், பிறகரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம் போன்றவற்றை ஏந்தியிருந்தார். அவருடைய மார்பினை ஸ்ரீவத்ச அடையாளமும், ஒளிபொருந்திய கௌஸ்துபமணியும், மலர்மாலையும் அழகு செய்தன.

பதங்கள் 10.39.53 – 10.39.55
ஸுநந்த-நந்த-ப்ரமுகை: பர்ஷதை ஸநகாதிபி:
ஸுரேஸைர் ப்ரஹ்ம-ருத்ராத்யைர் நவபிஸ் ச த்விஜோத்தமை:

ப்ரஹ்ராத-நாரத-வஸு-ப்ரமுகைர் பாகவதோத்தமை:
ஸ்தூயமானம் ப்ருதக்-பாவைர் வசோபிர் அமலாத்மபி:

ஸ்ரியா புஷ்ட்யா கிரா காந்த்யா கீர்த்யா துஷ்ட்யேலயோர்ஜயா
வித்யயவித்யயா ஸக்த்யா மாயயா ச நிஷேவிதம்

ஸுநந்த-நந்த-ப்ரமுகை:—சுநந்தர் மற்றும் நந்தரின் தலைமையில்; பர்ஷதை:—அவருடைய தனிப்பட்ட உதவியாளர்கள்; ஸநக-ஆதிபி:—சனககுமாரர் மற்றும் அவருடைய சகோதரர்களினால்; ஸுர-ஈஸை:—தேவர் தலைவர்களால்; ப்ரஹ்ம-ருத்ர-ஆத்யை:—பிரம்ம தேவன், ருத்திரன் தலைமையில்; நவபி:—ஒன்பது; ச—மற்றும்; த்விஜ-உத்தமை:—(மரீஷீயின் தலைமையில்) உயர்ந்த அந்தணர்களினால்; ப்ரஹ்ராத-நாரத-வஸு-ப்ரமுகை:—பிரகலாதன், நாரதர், மற்றும் உபரிசர வசுவின் தலைமையில்; பாகவத-உத்தமை:—மிகச் சிறந்த பக்தர்களினால்; ஸ்தூயமானம்—போற்றப்பட்டு; ப்ருதக்-பாவை:—ஒவ்வொருவரும், வெவ்வேறு அன்புமனப்பான்மையினால்; வசோபி:—வார்த்தைகளினால்; அமல-ஆத்மபி—புனிதமான; ஸ்ரியா புஷ்ட்யா கிராகாந்த்யா கீர்த்யா துஷ்ட்யா இலயா ஊர்ஜயா—அவருடைய அகச்சக்திகளான ஸ்ரீ, புஷ்டி, கீர், காந்தி, கீர்த்தி, துஷ்டி, இலா, மற்றும் ஊர்ஜா போன்றவர்களினால்; வித்யயா அவித்யயா—அவருடைய, அறிவு மற்றும் அறியாமைசக்திகளால்; ஸக்த்யா—அவருடைய அக இனிமைச்சக்தியால்; மாயயா—அவருடையப் பெளதிகப் படைப்புச் சக்தியால்; ச—மற்றும்; நிஷேவிதம்—பணி செய்யப்படுகிறார்.

பகவானைச் சுற்றி நின்றுகொண்டு வழிபட்டனர் நந்தர், சுநந்தர் மற்றும் அவரது தனி உதவியாளர்கள், சனகர் மற்றும் பிற குமாரர்கள், பிரம்மதேவன், ருத்திரன் மற்றும் பிற தேவர்கள்; ஒன்பது தலைமை அந்தணர்கள்; மற்றும் பிரகலாதன், நாரதர், உபரிசர வசுவின் தலைமையின் கீழ் சிறந்த தெய்வீக பக்தர்கள். மகான்களான ஒவ்வொருவரும் தமது சிறந்த மனநிலையுடன் புனிதமான வார்த்தைகளை ஒதுவதின் மூலம் பகவானை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கே பகவானை அவரது தலைமைச் சக்திகளான ஸ்ரீ, புஷ்டி, கீர், காந்தி, கீர்த்தி, துஷ்டி, இலா, ஊர்ஜா போன்றவர்களும் அவரது பெளதிகச் சக்திகளான வித்யா, அவித்யா, மாயா மற்றும் அவரது அகவின்ப சக்தியான ‘சக்தியும்’ வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

பதங்கள் 10.39.56 – 10.39.57
விலோக்ய ஸு-ப்ருஸம் ப்ரீதோ பக்த்யா பரமயா யுத:
ஹ்ருஷ்யத்-தனூருஹோ பாவ-பரிக்லின்னாத்ம-லோசன:

கிரா கத்கதயாஸ்தௌஷீத் ஸத்த்வம் ஆலம்ப்ய ஸாத்வத:
ப்ரணம்ய மூர்த்னாவஹித: கீருதாஞ்ஜலி-புத: ஸனை:

விலோக்ய—கண்ட (அக்ரூரர்); ஸு-ப்ருஸம்—மிகவும்; பீரீத:—மகிழ்ச்சியடைந்தார்; பக்த்யா—பக்தியுடன்; பரமயா—பரம; யுத:—பேரார்வத்தினால்; ஹ்ருஷ்யத்—குத்திட்டு நின்றன; தனூ-ருஹ:—அவர் உடலிலுள்ள ரோமங்கள்; பாவ—மெய்மறந்த காதல் ஆனந்தத்தினால்; பரிக்லின்ன—நனைந்தது; ஆத்ம—அவருடைய உடல்; லோசான:—மற்றும் விழிகள்; கிரா—வார்த்தைகளினால்; கத்கதயா—கம்மிய; அஸ்தௌஷீத்—அவர் அஞ்சலி செய்தார்; ஸத்த்வம்—அமைதியுடன்; ஆலம்ப்ய—தாங்கிக் கொண்டு; ஸாத்வத:—அச்சிறந்த பக்தர்; ப்ரணம்ய—வீழ்ந்து வணங்கினார்; நூர்த்னா—தனது தலையினால்; அவஹித:—தாங்கிக்கொண்டு; ஸாத்வத:—அச்சிறந்த பக்தர்; ப்ரணம்ய—வீழ்ந்து வணங்கினார்; மூர்த்னா—தனது தலையினால்; அவஹித:—முழுஈடுபாட்டுடன்; க்ருத-அஞ்ஜலி-புத:—தனது கரங்களைக் குவித்துப் பணிவுடன்; ஸனை:—மெதுவாக.

இவற்றையெல்லாம் கண்ட மிகச் சிறந்த பக்தரான அக்ரூரர் பெருமகிழ்ச்சியுற்று, உன்னத பக்தியில் தன்னை மறந்தார். அவரது மெய்மறந்த ஆழ்ந்த ஆனந்தத்தினால் உடல் புளகமுற்று மயிர்க்கூச்செறிந்தார். அவரது கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி அவர் உடல் முழுவதையும் நனைத்தது. ஒருவாறு தன்னிலை பெற்ற அக்ரூரர் நிலத்தில் வீழ்ந்து தனது தலையினால் வணங்கினார். பிறகு அவர் தனது இருகரங்களையும் பணிவுடன் குவித்து கம்மிய குரலில் மெதுவாக, பயபக்தியுடன் வழிபடலானார்.

ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “அக்ரூரர் கண்ட காட்சி” எனும் தலைப்பை கொண்ட முப்பத்தொன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare