அத்தியாயம் – 8
சகர புத்திரர்கள் பகவான் கபிலரைச்
சந்தித்தல்
பதம் 9.8.1
ஸ்ரீ-சுக உவாச
ஹரிதோ ரோஹித-ஸுதஸ் சம்பஸ் தஸ்மாத் வினிர்மிதா
சம்பாபுரீ ஸுதேவோ ‘தோ விஜயோ யஸ்ய சாத்மஜ:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஹரித:—ஹரிதன் எனற் அரசர்; ரோஹித-ஸுத:—ரோஹித மகாராஜனின் மகன்; சம்ப:—சம்பன் என்ற; தஸ்மாத்—ஹரிதனிலிருந்து; வினிர்மிதா—நிர்மாணிக்கப்பட்டது; சம்பா-புரீ—சம்பாபுரி என்ற நகரம்; ஸுதேவ:—சுதேவன் என்ற; அத:—அதன்பிறகு (சம்பனிலிருந்து); விஜய:—விஜயன் என்ற; யஸ்ய—யாருடைய (சுதேவன்); ச—கூட; ஆத்ம-ஜ:—மகன்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ரோஹிதனின் மகன் ஹரிதன். ஹரிதனின் மகன் சம்பன். இவர் சம்பாபுரி என்ற நகரத்தை நிர்மாணித்தார். சம்பனின் மகன் சுதேவன். அவரது மகன் விஜயன்.

பதம் 9.8.2
பருகஸ் தத்-ஸுதஸ் தஸ்மாத் வ்ருகஸ் தஸ்யாபி பாஹுக:
ஸோ ‘ரிபிர் ஹ்ருத-பூ ராஜா ஸபார்யோ வனம் ஆவிசத்

பருக:—பருகன் என்ற; தத்-ஸுத:—விஜயனின் மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து (பருகன்); வ்ருக:—விருகன் என்ற; தஸ்ய—அவரது; அபி—கூட; பாஹுக:—பாஹுகன் என்ற; ஸ:—அவர்; அரிபி:—அவரது எதிரிகளால்; ஹ்ருத-பூ:—அவரது நிலம் பறித்துக் கொள்ளப்பட்டதால்; ராஜா—அரசர் (பாஹுகன்); ஸ-பார்ய:—அவரது மனைவியுடன்; வனம்—வனம்; ஆவிசத்—புகுந்தார்.

விஜயனின் மகன் பருகன். பருகனின் மகன் விருகன். விருகனின் மகன் பாஹுகன். பாஹுக மகாராஜன் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு, அரசிழந்ததால், வானப்பிரஸ்தம் ஏற்று மனைவிகளுடன் வனம் புகுந்தார்.

பதம் 9.8.3
வ்ருத்தம் தம் பஞ்சதாம் ப்ராப்தம் மஹிஷி அனுமரிஷ்யதீ
ஒளர்வேண ஜானதாத்மானம் ப்ரஜாவந்தம் நிவாரிதா

வ்ருத்தம்—அவர் மூப்படைந்தபோது; தம்—அவரை; பஞ்சதாம்—மரணம்; ப்ராப்தம்—அடைந்தார்; மஹிஷீ—பட்டமகிஷி; அனுமரிஷ்யதீ—உடன்கட்டையேற விரும்பிய; ஓளர்வேண—மாமுனிவரான ஒளரவரால்; ஜானதா—என்பதை அறிந்து; ஆத்மானம்—மனைவியின் உடல்; ப்ரஜ-வந்தம்—கர்ப்பத்தில் ஒரு குழந்தை இருக்கிறது; நிவாரிதா—தடுக்கப்பட்டாள்.

மூப்படைந்த பாஹுகன் மரணமடைந்ததும், அவருடைய மனைவிகளுள் ஒருத்தி உடன்கட்டை ஏற விரும்பினாள். அப்போது அவன் கர்பவதியாய் இருப்பதை அறிந்த ஒளரவ முனி அவளைத் தடுத்துவிட்டார்.

பதம் 9.8.4
ஆக்ஞாயாஸ்யை ஸபத்னீபிர் கரோ தத்தோ ‘ந்தஸா ஸஹ
ஸஹ தேனைவ ஸஞ்ஜாத: ஸகராக்யோ மஹா-யசா:
ஸகரஸ் சக்ரவர்த்தி ஆஸீத் ஸாகரோ யத்-ஸுதை: க்ருத:

ஆக்ஞாய—(இதை) அறிந்து; அஸ்யை—கர்பவதியான அவளுக்கு; ஸபத்னீபி:—சக்களத்திகளால்; கர:—விஷம்; தத்த:—கொடுக்கப்பட்டது; அந்தஸா ஸஹ—அவளது உணவுடன்; ஸஹதேன—அந்த விஷத்துடன்; ஏவ—கூட; ஸஞ்ஜாத:—பிறந்தான்; ஸகர-ஆக்ய:—சகரன் என்பவன்; மஹா-யசா:—பெரும் புகழ்வாய்ந்த; ஸகர:—சகர மகாராஜன்; சக்ரவர்த்தீ—சக்கரவர்த்தி; ஆஸீத்—ஆனார்; ஸாகர:—கங்காசாகரம் என்ற இடம்; யத்-ஸுதை:—யாருடைய மகன்களால்; க்ருத:—ஏற்படுத்தப்பட்டது.

அவள் கர்ப்பவதியாக இருப்பதையறிந்த அவளது சக்களத்திகள், உணவுடன் கலந்து அவளுக்கு விஷத்தைக் கொடுத்தனர். ஆனால் அது செயற்படாமற் போயிற்று. இதற்குப் பதிலாக, மகன் விஷத்துடன் பிறந்தான். சாகரன் பிறகு சக்கரவர்த்தியானார். கங்காசாகரம் என்ற இடம் மகன்களால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

பதங்கள் 9.8.5 – 9.8.6
யஸ் தாலஜங்கான் யவனாஞ் சகான் ஹைஹய-பர்பரான்
நாவதீத் குரு-வாக்யேன சக்ரே விக்ருத-வேஷிண:

முண்டாஞ் ச்மஸ்ரு-தரான் காம்ஸ்சின் முக்த-கேசார்த-முண்டிதான்
அனந்தர்-வாஸஸ: காம்ஸ்சித் அபஹிர்-வாஸஸோ ‘பரான்

ய:—சகர மகாராஜன்; தாலஜங்கான்—தாலஜங்கம் என்ற நாகரீகமடையாத இனம்; யவனான்—வேத இலக்கியத்திற்கு விரோதமானவர்கள்; சகான்—மற்றொரு நாஸ்திக பிரிவினர்; ஹைஹய—நாகரீகமற்ற; பர்பரான்—மற்றும் பர்பரர்கள்; ந—இல்லை; அவதீத்—கொன்றார்; குரு-வாக்யேன—அவரது ஆன்மீக குருவின் உத்தரவுப்படி; சக்ரே—அவர்களைச் செய்தார்; விக்ருத-வேஷிண:—அலங்கோலமாக உடையணிய; முண்டான்—தலையை மழிக்க; ஸ்மஸ்ரு-தரான்—மீசையுடன் இருக்க; காம்ஸ்சித்—அவர்களில் சிலரை; முக்த-கேச—தலைவிரி கோலமாக; அர்த-முண்டிதான்—தலையைப் பாதி மழிக்க; அனந்த:-வாஸஸ:—உள்ளாடை இல்லாமல்; காம்ஸ்சித்—அவர்களில் சிலரை; அபஹி:-வாஸஸ:—புற ஆடைகள் இல்லாமல்; அபரான்—மற்றவர்கள்.

சகர மகாராஜன், தன் ஆன்மீக குருவான ஒளரவரின் உத்தரவுப்படி, யவனர்களையும், சகர்களையும், ஹைஹயர்களையும் மற்றும் பர்பரர்களையும் போன்ற நாகரீகமற்ற மக்களைக் கொல்லாமல்விட்டார். அதற்குப் பதிலாக அவர்களில் சிலரை அவர் அலங்கோலமாக உடையணியச் செய்தார். அவர்களில் சிலரின் தலையை மழித்து மீசைகளை மட்டும் வைத்திருக்க அனுமதித்தார். சிலரைத் தலைவிரிகோலமாகவும், வேறு சிலரைப் பாதி தலையை மழித்தும், மற்றும் சிலரை உள்ளாடைகள் இல்லாமலும், இன்னும் சிலரைப் புற ஆடைகள் இல்லாமலும் இருக்கச் செய்தார். இவ்வாறாக, வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இவர்களைச் சகர மகாராஜன் கொல்லவில்லை என்றாலும், இவர்களை வெவ்வேறாக உடையணியச் செய்தார்.

பதம் 9.8.7
ஸோ ‘ஸ்வமேதைர் அயஜத ஸர்வ-வேத-ஸுராத்மகம்
ஒளர்வோபதிஷ்ட-யோகேன ஹரிம் ஆத்மானம் ஈஸ்வரம்
தஸ்யோத்ஸ்ருஷ்டம் பசும் யக்ஞே ஜஹாராஸ்வம் புரந்தர

ஸ:—அவர், சகர மகாராஜன்; அஸ்வமேதை:—அஸ்வமேத யாகத்தைச் செய்து; அயஜத—வழிபட்டார்; ஸர்வ-வேத—சர்வ வேதங்களுக்கும்; ஸுர—மற்றும் கற்றறிந்த எல்லா முனிவர்களுக்கும்; ஆத்மகம்—பரமாத்மா; ஒளர்வ-உபதிஷ்ட-யோகேன—ஒளரவரால் உபதேசிக்கப்பட்ட அஷ்டாங்க யோகப் பயிற்சியினால்; ஹரிம்—பரமபுருஷரான ஹரியை; ஆத்மானம்—பரமாத்மாவை; ஈஸ்வரம்—பரம ஆளுனரை; தஸ்ய—அவருடைய (சகர மகாராஜனுடைய); உத்ஸ்ருஷ்டம்—பலியிடுவதற்குரிய; பசும்—யாகப் பசுவை; யக்ஞே—யாகத்தில்; ஜஹார—திருடினார்; அஸ்வம்—குதிரையை; புரந்தர:—சுவர்க்க ராஜனான இந்தரன்.

மகா முனிவரான ஔர்வாவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சாகர மஹாராஜா அஸ்வமேத யாகங்களைச் செய்து, பரமாத்மாவைத் திருப்திப்படுத்தினார். ஆனால் சொர்க்கத்தின் அரசனான இந்திரன் யாகத்தில் செலுத்த வேண்டிய குதிரையைத் திருடினான்.

பதம் 9.8.8
ஸுமத்யாஸ் தனயா த்ருப்தா: பிதுர் ஆதேச-காரிண:
ஹயம் அன்வேஷமாணாஸ் தே ஸமந்தான் ஞகனன் மஹீம்

ஸுமத்யா: தனயா:—சுமதி மகாராணிக்குப் பிறந்த மகன்கள்; த்ருப்தா:—தங்களுடைய வீரியத்திலும், செல்வாக்கிலும் மிகவும் கர்வம் கொண்டிருந்தனர்; பிது:—தங்களது தந்தையின் (சகர மகாராஜனின்); ஆதேச-காரிண:—கட்டளைப்படி; ஹயம்—(இந்திரனால்) அபகரிக்கப்பட்ட குதிரையை; அன்வேஷமாணா:—தேடும் பொழுது; தே—அவர்களனைவரும்; ஸமந்தாத்—எல்லா இடங்களிலும்; ஞகனன்—தோண்டினர்; மஹீம்—பூமியை.

(சகர மகாராஜனுக்கு சுமதி, கேசினி என இரு மனைவிகள்). சுமதியின் மகன்கள் தங்களுடைய வீரியத்திலும், செல்வாக்கிலும் மிகவும் கர்வம் கொண்டிருந்தனர். தங்களது தந்தையின் உத்தரவுப்படி, காணாமற் போன குதிரைத் தேடினர். இப்படித் தேடும்பொழுது, பூமியை அவர்கள் மிகவும் பரவலாகத் தோண்டினர்.

பதங்கள் 9.8.9 – 9.8.10
ப்ராக்-உதீச்யாம் திசி ஹயம் தத்ருக: கபிலாந்திகே
ஏஷ வாஜி-ஹரஸ் சௌர ஆஸ்தே மீலித-லோசன:

ஹன்யதாம் ஹன்யதாம் பாப இதி ஷஷ்டி-ஸஹஸ்ரிண:
உதாயுதா அபியயுர் உன்மிமேஷ ததா முனி:

ப்ராக்-உதீச்யாம்—வட கிழக்கில்; திசி—திசை; ஹயம்—குதிரையை; தத்ருசு:—அவர்கள் கண்டனர்; கபில-அந்திகே—கபிலரின் ஆசிரமத்துக்கருகில்; ஏஷ:—இங்குதான்; வாஜி-ஹர:—குதிரைத் திருடன்; சௌர:—திருடன்; ஆஸ்தே—இருக்கிறான்; மீலித-லோசன:—கண்களை மூடிக் கொண்டு; ஹன்யதாம்-ஹன்யதாம்—அவனைக் கொல்லுங்கள், அவனைக் கொல்லுங்கள்; பாப:—பெரும் பாவியான; இதி—இவ்வாறாக; ஷஷ்டி-ஸஹஸ்ரிண:—சகரனின் அறுபதாயிரம் மகன்கள்; உதாயுதா:—தங்களுடைய ஆயுதங்களை உயர்த்தியவாறு; அபியயு:—அவர்கள் நெருங்கினர்; உன்மிமேஷ—தமது கண்களைத் திறந்தார்; ததா—அப்போது; முனி:—கபில முனிவர்.

அதன்பிறகு வடகிழக்குத் திசையில், கபில முனிவரின் ஆசிரமத்துக்கருகில் அவர்கள் குதிரையைக் கண்டனர். “இவன்தான் குதிரையைத் திருடியவன். கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். மகா பாவியான இவனைக் கொல்லுங்கள், கொல்லுங்கள்” என்று கூச்சலிட்டுக் கொண்டு. சகரனின் அறுபதாயிரம் மகன்களும் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு முனிவரை நோக்கி ஓடினார்கள். அப்போது அம்முனிவர் கண்களைத் திறந்தார்.

பதம் 9.8.11
ஸ்வ-சரீராக்னினா தாவன் மஹேந்ர-ஹ்ருத சேதஸ:
மஹத்-வ்யதிக்ரம-ஹதா பஸ்மஸாத் அபவன் க்ஷணாத்

ஸ்வ-சரீர—அக்னினா—அவர்களது சொந்த உடல்களிலிருந்து வெளிப்பட்ட தீயினால்; தாவத்—உடனடியாக; மஹேந்ர—சுவர்க்க ராஜனான இந்திரனின் தந்திரத்தால்; ஹ்ருத-சேதஸ:—அவர்களது புத்தி அபகரிக்கப்பட்டதால்; மஹத்—ஒரு மஹா புருஷரை; வ்யதிக்ரம-ஹதா:—அவமதித்த குற்றத்தினால் தோல்வியடைந்தனர்; பஸ்மஸாத்—எரிந்து சாம்பலாக; அபவன்—மாறினர்; க்ஷனாத்—உடனே.

சுவர்க்க ராஜனான இந்திரனின் மாயையால் புத்தியிழந்த சகர புத்திரர்கள், ஒரு மகாபுருஷரை அவமதித்தனர். அதன் விளைவாக, அவர்களது சொந்த உடல்களிலிருந்து கிளம்பிய தீயினால் உடனே அவர்கள் எரிந்து சாம்பலாகினர்.

பதம் 9.8.12
ந ஸாது-வாதோ முனி-கோப-பர்ஜிதா
ந்ருபேந்ர-புத்ரா இதி ஸத்வ-தாமனி
கதம் தமோ ரோஷமயம் விபாவ்யதே
ஜகத்-பவித்ராத்மனி கே ரஜோ புவ:

ந—அல்ல; ஸாது-வாத:—பண்டிதர்களின் அபிப்பிராயம்; முனி-கோப—கபில முனிவரின் கோபத்தால்; பர்ஜிதா:—எரிந்து சாம்பலாகினர்; ந்ருபேந்ர-புத்ரா:—சகர மகாராஜனின் எல்லா மகன்களும்; இதி—இவ்வாறாக; ஸத்வ-தாமனி—சத்வ குணம் மேலோங்கியுள்ள கபில முனிவரின்; கதம்—எப்படி; தம:—தமோகுணம்; ரோஷ-மயம்—கோபத்தின் வடிவில் வெளிப்பட்டது; விபாவ்யதே—வெளிப்பட முடியும்; ஜகத்-பவித்ர-ஆத்மனி—யாருடைய உடல் அகிலத்தையும் தூய்மைப்படுத்தக்கூடியதோ அவரில்; கே—ஆகாயத்தில்; ரஜ:—புழுதி; புவ:—மண்ணாலான.

கபில முனிவரின் கண்களிலிருந்து கிளம்பிய தீயினால் சகர மகாராஜனின் புத்திரர்கள் எரிந்து சாம்பலாயினர் என்று சிலசமயங்களில் விவாதிக்கப்படுகறிது. ஆனால் இக்கூற்று சிறந்த பண்டிதர்களால் ஆதரிக்கப்படவில்லை. ஏனெனில், பூமியிலிருந்து கிளம்பிய பூழுதியால் ஆகாயத்தை களங்கப்படுத்த முடியாது என்பதைப் போலவே, கபில முனிவரின் உடல் முற்றிலும் சத்வ குணத்தில் இருப்பதால், அது கோபத்தின் வடிவில் தமோ குணத்தை வெளிப்படுத்துவது சாத்தியமல்ல.

பதம் 9.8.13
யஸ்யேரிதா ஸாங்க்யமயீ த்ருதேஹ நௌர்
யயா முமுக்ஷுஸ்தரதே துரத்யயம்
பவார்ணவம் ம்ருத்யு-பதம் விபஸ்சித:
பராத்ம பூதஸ்ய கதம் ப்ருதந்-மதி:

யஸ்ய—யாரால்; ஈரிதா—விளக்கப்பட்டது; ஸாங்க்ய-மயீ—பெளதிக உலகைப் பகுத்தறியக்கூடிய தத்துவத்தின் உருக்கொண்ட (சாங்கிய தத்துவம்); த்ருடா—(ஜட உலகிலிருந்து மக்களை விடுவிப்பதற்குரிய) மிகவும் சக்தி வாய்ந்த; இஹ—இவ்வுலகில்; நௌ:—படகு; யயா—எதனால்; முமுக்ஷு:—முக்தியடைய விரும்பும் ஒருவன்; தரதே—கடக்க முடியும்; துரத்யயம்—கடப்பது மிகக் கடினம்; பவ-அர்ணவம்—அறியாமைக் கடலை; ம்ருத்யு-பதம்—பிறவிச் சக்கரத்தைக் கொண்ட பெளதிக வாழ்வு; விபஸ்சித:—ஒரு பண்டிதரின்; பராத்ம-பூதஸ்ய—உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டவர்; கதம்—எப்படி; ப்ருதக்-மதி:—(நண்பனுக்கும், பகைவனுக்கும் இடையிலுள்ள) வித்தியாச உணர்வு.

கபில முனிவர் இவ்வுலகில் சாங்கிய தத்துவத்தை எடுத்துரைத்தார். இது அறியாமையெனும் கடலைக் கடப்பதற்குரிய மிகவும் சக்திவாய்ந்த ஒரு படகாகும். உண்மையில், பௌதிக உலகெனும் கடலைக் கடக்க விரும்புவோர் இந்த தத்துவத்தை புகலிடமாகக் கொள்ளலாம். சிறந்த ஞானியும், உன்னதமான படித்தரத்தில் நிலைபெற்றவருமான இத்தகைய ஒரு மகா புருஷரில், நண்பன், பகைவன் என்ற வேறுபாடு எப்படி இருக்க முடியும்?

பதம் 9.8.14
யோ ‘ஸமஞ்ஜஸ இதி உக்த: ஸ கேசின்யா ந்ருபாத்மஜ:
தஸ்ய புத்ரோ ‘ம்சுமான் நாம பிதாமஹ-ஹிதே-ரத:

ய:—சகர குமாரர்களில் ஒருவர்; அஸமஞ்ஜஸ:—அஸமஞ்சஸன் என்ற; இதி—அப்படி; உக்த:—அறியப்பட்டார்; ஸ:—அவர்; கேசின்யா:—சகர மகாராஜனின் மற்றொரு மனைவியான கேசினியின் கருவில்; ந்ருப-ஆத்மஜ:—அரசகுமாரன்; தஸ்ய—அவரின் (அஸமஞ்சஸனின்); புத்ர:—மகன்; அம்சுமான் நாம—அம்சுமான் எனப்பட்டார்; பிதாமஹ-ஹிதே—தன் பாட்டனாரான சகர மகாராஜனுக்கு நன்மை செய்வதில்; ரத:—எப்பொழுதும் ஈடுபட்டிருந்தார்.

சகர மகாராஜனின் மகன்களுள் அஸமஞ்சஸன் என்பவர். அரசரின் இரண்டாவது மனைவியான கேசினிக்குப் பிறந்தவராவார். அஸமஞ்சஸரின் மகன் அம்சுமான் எனப்பட்டார். அவர் தன் பாட்டனாரான சகர மகாராஜனுக்கு நன்மை செய்வதில் எப்பொழுதும் ஈடுபட்டிருந்தார்.

பதங்கள் 9.8.15 – 9.8.16
அஸமஞ்ஜஸ ஆத்மானம் தர்சயன் அஸமஞ்ஜஸம்
ஜாதி-ஸ்மர: புரா ஸங்காத் யோகீ யோகாத் விசாலித:

ஆசரன் கர்ஹிதம் லோகே ஞாதீனாம் கர்ம விப்ரியம்
ஸரய்வாம் க்ரீடதோ பாலான் ப்ராஸ்யத் உத்வேஜயஞ் ஜனம்

அஸமஞ்ஜஸ:—சகர மகாராஜனின் மகன்; ஆத்மானம்—தானாகவே; தர்சயன்—வெளிப்படுத்தி; அஸமஞ்ஜஸம்—மிகவும் தொல்லை கொடுப்பவனாக; ஜாதி-ஸ்மர:—அவரது கடந்த பிறவியை நினைவுகூற முடிந்தது; புரா—முன்பு; ஸங்காத்—தீய சகவாசத்தால்; யோகீ—சிறந்த அஷ்டாங்க யோகியாக இருந்த போதிலும்: யோகாத்—அஷ்டாங்கயோகப் பாதையிலிருந்து; விசாலித:—விழுந்தார்; ஆசரன்—நடந்து கொண்டு; கர்ஹிதம்—மிகவும் மோசமாக; லோகே—சமுதாயத்தில்; ஞாதீனாம்—அவரது உறவினர்களின்; கர்ம—செயல்கள்; விப்ரியம்—அனுகூலமில்லாத; ஸரய்வாம்—சரயூ நதியில்; க்ரீடத:—விளையாடிக் கொண்டு இருக்கும்பொழுது; பாலான்—சிறுவர்களை எல்லாம்; ப்ராஸ்யத்—எறிந்துவிடுவார்; உத்வேஜயன்—தொல்லைதரும்; ஜனம்—பொது ஜனங்களுக்கு.

தன் முற்பிறவியில் அஸமஞ்சஸன் சிறந்ததொரு அஷ்டாங்க யோகியாக விளங்கினார். ஆனால் தீய உறவின் காரணத்தால் உயர்ந்த நிலையிலிருந்து விழுந்தார். இப்பிறவியில் ஓர் அரச குடும்பத்தில் பிறந்த அவர் ஜாதி-ஸ்மரராக இருந்தார்; அதாவது, தன் முற்பிறப்பை நினைவுகூறும் விசேஷ நன்மையைப் பெற்றிருந்தார். ஆயினும் தன்னை ஒரு துஷ்டனாக அவர் காட்டிக் கொள்ள விரும்பினார். எனவே உறவினர்களுக்கு பிரியமற்றவையாகவும், பிறர் கண்களுக்கு வெறுக்கத்தக்கனவாகவும் உள்ள செயல்களை அவர் செய்துவந்தார். சரயூ நதியில் விளையாடும் சிறுவர்களை நீரின் ஆழமான பகுதிகளில் விட்டெறிந்து அவர்களுக்குத் தொல்லைகளைக் கொடுத்து வந்தார்.

பதம் 9.8.17
ஏவம் வீருத்த: பரித்யக்த: பித்ரா ஸ்நேஹம் அபோஹ்ய வை
யோகைஸ்வர்யேன பாலாம்ஸ் தான் தர்சயித்வா ததோ யயௌ

ஏவம் வ்ருத்த:—(வெறுக்கத்தக்க செயல்களில்) இவ்வாறு ஈடுபட்டு; பரித்யக்த:—தண்டிக்கப்பட்டார்; பித்ரா—அவரது தந்தையால்; ஸ்நேஹம்—பாசம்; அபோஹ்ய—கைவிட்டு; வை—உண்மையில்; யோக-ஜஸ்வர்யேண—யோக சக்தியால்; பாலான் தான்—(நீருக்குள் வீசப்பட்டு கொலையுண்ட) அச்சிறுவர்கள் அனைவரையும்; தர்சயித்வா—பிறகு மீண்டும் அவர்களை அவர்களது பெற்றோர்களிடம் காட்டி; தத:-யயௌ—அவர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அஸமஞ்சஸன் இத்தகைய வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டதால், அவர் மீதிருந்த பாசத்தைத் துறந்த அவரது தந்தை அவரை நாடு கடத்தினார். பிறகு அஸமஞ்சஸன் தன் யோக சக்தியால் சிறுவர்களைப் பிழைப்பித்து அவர்களை அரசரிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் காட்டினார். அதன்பிறகு, அஸமஞ்சஸன் அயோத்தியை விட்டு வெளியேறினார்.

பதம் 9.8.18
அயோத்யா-வாஸின: ஸர்வே பாலகான் புனர் ஆகதான்
த்ருஷ்ட்வா விஸிஸ்மிரே ராஜன் ராஜா சாபி அன்வதப்யத

அயோத்யா-வாஸின:—அயோத்யா வாசிகள்; ஸர்வே—அவர்களனைவரும்; பாலகான்—அவர்களது மகன்கள்; புன:—மீண்டும்; ஆகதான்—உயிர் பிழைத்ததை; த்ருஷ்ட்வா—இதைக் கண்ட பின்; விஸிஸ்மிரே—வியப்படைந்தனர்; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; ராஜா—சகர மகாராஜன்; ச—கூட; அபி—உண்மையாகவே; அனிவதப்யத—(தன் மகனின் பிரிவை எண்ணி) மிகவும் வருந்தினார்.

பரீட்சித்து மகாராஜனே, தங்கள் குழந்தைகள் உயிர் பிழைத்ததைக் கண்ட அயோத்தியா வாசிகள் அனைவரும் வியப்படைந்தனர். சகர மகாராஜன் தன் மகனின் பிரிவை எண்ணி மிகவும் வருந்தினார்

பதம் 9.8.19
அம்சுமாம்ஸ் சோதிதோ ராஜ்ஞா துரகான்வேஷணே யயௌ
பித்ருவ்ய-காதானுபதம் பஸ்மாந்தி தத்ருசே ஹயம்

அம்சுமான்—அஸமஞ்சஸனின் மகன்; சோதித:—உத்தரவிடப்பட்டு; ராஜ்ஞா—அரசரால்; துரக—குதிரையை; அன்வேஷணே—தேடுவதற்காக; யயௌ—வெளியேறினார்; பித்ருவ்ய காத—அவரது தந்தையின் சகோதரர்களால் விவரிக்கப்பட்டபடி; அனுபதம்—அவ்வழியைப் பின்பற்றி; பஸ்ம-அந்தி—சாம்பல் குவியலுக்கருகில்; தத்ருசே—அவர் கண்டார்; ஹயம்—குதிரையை.

அதன்பிறகு, சகர மகாராஜனின் பேரனான அம்சுமான், குதிரையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி அரசரால் உத்தரவிடப்பட்டார். அவரது தந்தையின் சகோதரர்கள் சென்ற அதே வழியைப் பின்பற்றிய அம்சுமான், படிப்படியாக சாம்பல் குவியலை அடைந்து, அருகில் குதிரை நிற்பதைக் கண்டார்.

பதம் 9.8.20
தக்ராஸீனம் முனிம் வீக்ஷ்ய கபிலாக்யம் அதோக்ஷஜம்
அஸ்தௌத் ஸமாஹித-மனா: ப்ராஞ்ஜலி: ப்ரணதோ மஹான்

தத்ர—அங்கு; ஆஸீனம்—அமர்ந்திருப்பதை; முனிம்—மாமுனிவர்; வீக்ஷ்ய—கண்டு; கபில-ஆக்யம்—கபில முனிவர் என்ற; அதோக்ஷஜம்—விஷ்ணுவின் அவதாரத்தை; அஸ்தௌத்—பிரார்த்தனைகள் செய்தார்; ஸமாஹித-மனா:—மிகவும் கவனமாக; பிராஞ்ஜலி:—கூப்பிய கரங்களுடன்; ப்ரணத:—கீழே விழுந்து வணங்கினார்; மஹான்—சிறந்த மகானான அம்சுமான்.

விஷ்ணுவின் அவதாரமாக கபில மாமுனிவர் குதிரைக்கருகில் அமர்ந்திருப்பதைக் கண்ட மகானான அம்சுமான், கைகூப்பி நமஸ்கரித்து, மிகவும் கவனத்துடன், மரியாதையாக அவரைத் துதித்தார்.

பதம் 9.8.21
அம்சுமான் உவாச
ந பஸ்யதி த்வாம் பரம் ஆத்மனோ ‘ஜனோ
ந புத்யதே ‘த்யாபி ஸமாதி-யுக்திபி:
குதோ ‘பரே தஸ்ய மன:-சரீர-தீ-
விஸர்க-ஸ்ருஷ்டா வயம் அப்ரகாசா:

அம்சுமான் உவாச—அம்சுமான் கூறினார்; ந—இல்லை; பஸ்யதி—காண முடியும்; த்வாம்—தாங்கள்; பரம்—உன்னதமான; ஆத்மன:—ஜீவராசிகளான எங்களின்; அஜன:—பிரம்மதேவர்; ந—இல்லை; புத்யதே—அறிய முடியும்; அத்ய-அபி—இன்று கூட; ஸமாதி—தியானத்தால்; யுக்திபி:—அல்லது மனக் கற்பனையால்; குத:—எவ்வாறு; அபரே—பிறர்; தஸ்ய—அவரது; மன:-சரீர-தீ—உடலை அல்லது மனதை ஆத்மாவாகக் கருதும்; விஸர்க-ஸ்ருஷ்டா:—பௌதிக உலகில் படைக்கப்பட்ட ஜீவன்களான; வயம்—நாங்கள்; அப்ரகாசா:—உன்னத அறிவின்றி.

அம்சுமான் கூறினார்: எம்பெருமானே, இன்றுவரை, பிரம்ம தேவரால் கூட உங்களுடைய உன்னத நிலையைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தியானத்தினாலோ, மனக் கற்பனையாலோ இதை அவரால் புரிந்துகொள்ள முடியாது. எனவே, தேவர்களாகவும், மிருகங்களாகவும், மனிதர்களாகவும், பறவைகளாகவும் பிரம்மாவால் படைக்கப்பட்டுள்ள எங்களைப் போன்ற மற்றவர்களைப் பற்றி என்னென்று சொல்வது? நாங்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறோம். எனவே, உன்னத புருஷராகிய தங்களை எங்களால் எப்படி அறிய முடியும்?

பதம் 9.8.22
யே தேஹ-பாஜஸ் த்ரி-குண-ப்ரதானா
குணான் விபஸ்யந்தி உத வா தமஸ் ச
யன் மாயயா மோஹித-சேதஸஸ் த்வாம்
விது: ஸ்வ-ஸம்ஸ்தம் ந பஹி:-ப்ரகாஸா:

யே—அவர்கள்; தேஹ-பாஜ:—பெளதிக உடல்களை ஏற்றுள்ள; த்ரி-குண-ப்ரதானா:—ஜட இயற்கையின் முக்குணங்களால் வசியப்படுத்தப்பட்டு; குணான்—மூன்று ஜட இயற்கைக் குணங்களின் தோற்றம்; விபஸ்யந்தி—மட்டுமே காண முடியும்; உத—என்று கூறப்படுகிறது; வா—அல்லது; தம:—தமோ குணம்; ச—மேலும்; யத்-மாயயா—யாருடைய மாயா சக்தியினால்; மோஹித—தடுமாற்றம் அடைந்துள்ளனர்; சேதஸ:—யாருடைய இதயம்; த்வாம்—தங்களை; விது:—அறிவது; ஸ்வ-ஸம்ஸ்தம்—ஒருவரது சொந்த உடலில் வீற்றிருக்கும்; ந—இல்லை; பஹி:-ப்ரகாசா:—புறச்சக்தியின் விளைவுகளை மட்டுமே காணக்கூடியவர்கள்.

எம்பெருமானே, எல்லோருடைய இதயத்திலும் தாங்கள் முழுமையாக வீற்றிருக்கிறீர்கள். ஆனால் பெளதிக உடல்களால் மூடப்பட்டுள்ள ஜீவராசிகளால் உங்களைக் காண முடியாது. ஏனெனில், அவர்கள் ஜட இயற்கையின் முக்குணங்களால் நடத்தப்படும் புறச்சக்தியால் வசியப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது புத்தி சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருப்பதால், மூன்று ஜட இயற்கைக் குணங்களின் செயல்களையும், அவற்றின் விளைவுகளையும் மட்டுமே அவர்களால் காண முடியும். தமோ குணத்தினுடைய செயல், விளைவுகளின் காரணத்தால், ஜீவராசிகள் விழிப்புற்ற நிலையிலோ அல்லது உறக்க நிலையிலோ இருந்தாலும், அவர்களால் ஐட இயற்கையின் செயல்களை மட்டுமே காண முடிகிறது; தங்களை அவர்களால் காண முடிவதில்லை.

பதம் 9.8.23
தம் த்வாம் அஹம் ஞான-கனம் ஸ்வபாவ-
ப்ரத்வஸ்த-மாயா-குண-பேத-மோஹை:
ஸனந்தனாத்யைர் முன்பிர் விபாவியம்
கதம் விமூட: பரிபாவயாமி

தம்—அப்புருஷர்; த்வாம்—தங்களை; அஹம்—நான்; ஞான-கனம்—ஞான சொரூபமாக உள்ள தங்களை; ஸ்வபாவ—ஆன்மீக இயற்கையால்; ப்ரத்வஸ்த—களங்கத்திலிருந்து விடுபட்ட; மாயா-குண—ஜட இயற்கையின் முக்குணங்களால் விளைவிக்கப்பட்ட; பேத-மோஹை:— வேறுபாட்டின் திகைப்பைக் காட்சிப்படுத்துவதன் மூலம்; ஸனந்தன அத்யை:—நான்கு குமாரர்களைப் (சனக, சனாதன, சனந்தன, சனத்குமாரர்) போன்ற இத்தகைய புருஷர்களால்; முனிபி:—இத்தகைய பிறந்த முனிவர்களால்; விபாவ்யம்—வழிபட்டத்தக்க; கதம்—எப்படி; விமூட:—பௌதிக இயற்கையால் முட்டாளாக்கப்பட்டு; பரிபாவயாமி—என்னால் தங்களை நினைக்க முடியும்.

எம்பெருமானே, ஜட இயற்கையின் முக்குணங்களின் வசியத்திலிருந்து விடுபட்டுள்ள நான்கு குமாரர்களைப் (சனக, சனாதன, சனந்தன மற்றும் சனத் குமாரர்) போன்ற முனிவர்களால் ஞான சொரூபியான தங்களை நினைக்க முடிகிறது. ஆனால் என்னைப் போன்ற ஓர் அறிவிலியால் தங்களை எப்படி நினைக்க முடியும்?

பதம் 9.8.24
ப்ரசாந்த மாயா-குண-கர்ம-லிங்கம்
அனாம-ரூபம் ஸத்-அஸத்-விமுக்தம்
ஞானோபதேசாய க்ருஹீத-தேஹம்
நமாமஹே த்வாம் புருஷம் புராணம்

ப்ரசாந்த—சாந்த சொரூபியே; மாயா-குண—ஜட இயற்கைக் குணங்கள்; கர்ம-லிங்கம்—பெளதிக செயல்களால் அடையாளங்காணப்படும்; அனாம-ரூபம்—பெளதிக பெயரோ, உருவோ இல்லாதவர்; ஸத்-அஸத்-விமுக்தம்—தோன்றியும், தோன்றாமலும் உள்ள ஜட இயற்கைக் குணங்களுக்கு மேற்பட்டவர்; ஞான-உபதேசாய—(பகவத் கீதையில் உள்ளதைப் போன்ற) உன்னத ஞானத்தை அளிப்பதற்கு; க்ருஹீத-தேஹம்—பெளதிக உடலைப் போன்ற ஒருடலை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்; நமாமஹே—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; த்வாம்—தங்களுக்கு; புருஷம்—பரமபுருஷராகிய; புராணம்—ஆதி.

சாந்த சொரூபியான பகவானே, ஜட இயற்கையும், பலனை எதிர்பார்க்கும் கருமங்களும், அவற்றின் பயனாக விளையும் பௌதிகமான பெயர்களும், உருவங்களும் தங்களாலேயே படைக்கப்படுகின்றன. தாங்கள் அவற்றினால் பாதிக்கப்படுவதில்லை. எனவே, தங்களுடைய உன்னத நாமம் பெளதிக பெயர்களிலிருந்து வேறானதும், தங்களுடைய திவ்யரூபம் பெளதிக உருவங்களிலிருந்து வேறுபட்டதுமாகும். பகவத்கீதையைப் போன்ற உபதேசங்களை அருளுவதற்காகவே தாங்கள் பௌதிக உடலை ஒத்திருக்கும் ஒருடலை ஏற்றிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் தாங்கள்தான் ஆதியான பரமபுருஷராவீர். எனவே தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 9.8.25
த்வன்-மாயா-ரசிதே லோகே வஸ்து-புத்யா க்ருஹாதிஷு
ப்ரமந்தி காம-லோபேர்ஷ்யா-மோஹ-விப்ராந்த-சேதஸ:

த்வத்-மாயா—தங்களுடைய பௌதிக சக்தியின் மூலமாக; ரசிதே—படைக்கப்படும்; லோகே—இவ்வுலகில்; வஸ்து-புத்யா—உண்மையானதாக ஏற்று; க்ருஹ-ஆதிஷு—குடும்பம், வீடு போன்றவைகளில்; ப்ரமந்தி—சுற்றித் திரிகின்றனர்; காம—சிற்றின்ப ஆசைகளால்; லோப—பேராசையால்; ஈர்ஷ்யா—பொறாமையால்; மோஹ—மற்றும் மோகத்தால்; விப்ராந்த—குழப்பம் அடைந்துள்ளன; சேதஸ:—யாருடைய இதயங்கள்.

எம்பெருமானே, காமம், பேராசை, பொறாமை மற்றும் அறியாமை ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் மனக்குழப்பம் அடைந்திருப்பவர்கள். இவ்வுலகில் உங்களுடைய மாயையால் உண்டாக்கப்பட்டுள்ள பொய்யான வீடு மற்றும் குடும்பத்தில் மட்டும் விருப்பம் கொண்டுள்ளனர். வீடு, மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியவற்றில் பற்றுக் கொண்டுள்ள அவர்கள் நிரந்தரமாக இந்த ஜட உலகிலேயே சுற்றித் திரிகின்றனர்.

பதம் 9.8.26
அத்ய ந: ஸர்வ-பூதாத்மன் காம-கர்மேந்ரியாசய:
மேஹ-பாசோ த்ரடஸ் சின்னோ பகவம்ஸ் தவ தர்சனாத்

அத்ய—இன்று; ந:—எங்களுடைய; ஸர்வ-பூத-ஆத்மன்—பரமாத்மாவாகிய தாங்கள்; காம-கர்ம-இந்ரிய-ஆஸய:—காம, கருமங்களின் வசியத்திற்கு உட்பட்டிருப்பதால்; மோஹ-பாச:—அறியாமை எனும் இக்கடினமான முடிச்சு; த்ருட:—மிகவும் கடினமான; சின்ன:—அவிழ்ந்த; பகவன்—எம்பெருமானே; தவ-தர்சனாத்:—தங்களைக் கண்டதாலேயே.

அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாக இருப்பவரே, பரம புருஷரே, தங்களை தரிசித்ததால், கடக்க முடியாத மாயைக்கும், பெளதிக பந்தத்திற்கும் மூல காரணமான சிற்றின்ப ஆசைகளிலிருந்து இன்று நான் முற்றிலும் விடுபட்டவனானேன்.

பதம் 9.8.27
ஸ்ரீ-சுக உவாச
இத்தம் கீதானுபாவஸ் தம் பகவான் கபிலோ முனி:
அம்சுமந்தம் உவாசேதம் அநுக்ராஹ்ய தியா ந்ருப

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இத்தம்—இவ்விதமாக; கீத-அநுபாவ:—யாருடைய மகிமைகள் வர்ணிக்கப்படுகிறதோ; தம்—அவரை: பகவான்—பரமபுருஷரை; கபில:—கபில முனி என்ற; முனி:—மாமுனிவர்; அம்சுமந்தம்—அம்சுமானிடம்; உவாச—கூறினார்; இதம்—இதை; அநுக்ராஹ்ய—மிகவும் கருணை கொண்டு; தியா—ஞான மார்கத்தை; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே.

பரீட்சித்து மகாராஜனே, அம்சுமான் பகவானை இப்படிப் புகழ்ந்ததும், விஷ்ணுவின் சக்திவாய்ந்த அவதாரமாகிய கபில மாமுனிவர், அவரிடம் மிகவும் கருணை கொண்டு, அவருக்கு ஞான மார்க்கத்தை விளக்கினார்.

பதம் 9.8.28
ஸ்ரீ-பகவான் உவாச
அஸ்வோ ‘யம் நீயதாம் வத்ஸ பிதாமஹ-பசுஸ் தவ
இமே ச பிதரோ தக்தா கங்காம்போ ‘ர்ஹந்தி நேதரத்

ஸ்ரீ-பகவான் உவாச—மகா புருஷராகிய கபில முனி கூறினார்; அஸ்வ:—குதிரையை; அயம்—இந்த; நீயதாம்—எடுத்துக்கொள்; வத்ஸ—மகனே; பிதாமஹ—உன் பாட்டனாரின்; பசு:—இம்மிருகத்தை; தவ—உனது; இமே—இவ்வெல்லா; ச—கூட; பிதர:—முன்னோர்களின் உடல்கள்; தக்தா:—எரிந்து சாம்பலான; கங்கா-அம்ப:—கங்கை நீரால்; அர்ஹந்தி—காப்பாற்றப்பட முடியும்; ந—அல்ல; இதரத்—வேறெந்த வழியாலும்.

பரமபுருஷர் கூறினார்: என் அன்பிற்குரிய அம்சுமானே, உன் பாட்டனாரால் தேடப்படும் யாகக்குதிரை இதோ இருக்கிறது. தயவு செய்து அதை எடுத்துக் கொள். எரிந்து சாம்பலாகிப் போன உன் முன்னோர்களைப் பொறுத்தவரை, கங்கை நீரால் மட்டுமே அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும். வேறெந்த வழியாலும் அல்ல.

பதம் 9.8.29
தம் பரிக்ரம்ய சிரஸா ப்ரஸாத்ய ஹயம் ஆனயத்
ஸகரஸ் தேன பசுனா யக்ஞ-சேஷம் ஸமாபயத்

தம்—அந்த மாமுனிவரை; பரிக்ரம்ய—வலம் வந்த பின்; சிரஸா—சிரம் தாழ்த்தி வணங்கி; ப்ரஸாத்ய—அவரைப் பூரண திருப்தி அடையச் செய்து; ஹயம்—குதிரையை; அனயத்—ஓட்டிச் சென்றார்; ஸகர:—சகர மகாராஜன்; தேன-பசுனா—அம்மிருகத்தைக் கொண்டு; யக்ஞ-சேஷம்—எஞ்சியுள்ள யாகச் சடங்குகளை; ஸமாபயத்—நிறைவேற்றினார்.

அதன்பிறகு, அம்சுமான் கபில முனிவரை வலம் வந்து, சிரம் தாழ்த்தி, மரியாதையுடன் அவரை வணங்கினார். இவ்வாறு பூரணமாக அவரை திருப்திப்படுத்திய அம்சுமான், யாகக் குதிரையை ஓட்டிச் சென்றார். இக்குதிரையைக் கொண்டு, எஞ்சியுள்ள சடங்குகளையும் சகர மகாராஜன் நிறைவேற்றினார்.

பதம் 9.8.30
ராஜ்யம் அம்சுமதே ஞஸ்ய நிஹ்ஸ்ப்ருஹோ முக்த பந்தன:
ஒளர்வோபதிஷ்ட-மார்கேண லேபே கதிம் அநுத்தமாம்

ராஜ்யம்—தன் இராஜ்யத்தை; அம்சுமதே—அம்சுமானிடம்; ஞஸ்ய—ஒப்படைத்த பின்; நிஹ்ஸ்ப்ருஹ:—வேறு பெளதிக ஆசைகளின்றி; முக்த-பந்தன:—பெளதிக பந்தத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு; ஒளர்வ-உபதிஷ்ட—ஒளரவ முனிவரால் உபதேசிக்கப்பட்ட; மார்கேண—அந்த மார்க்கத்தைப் பின்பற்றி; லேபே—அடைந்தார்; கதிம்—கதியை; அநுத்தமாம்—பரம.

இராஜ்யப் பொறுப்பை அம்சுமானிடம் ஒப்படைத்த பின், பெளதிக ஆசைகளிலிருந்தும், பெளதிக பந்தத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்ட சகர மகாராஜன், ஒளரவ முனிவரால் உபதேசிக்கப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றி, பரமகதி அடைந்தார்.


ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “சகர புத்திரர்கள் பகவான் கபிலரைச் சந்தித்தல்” எனும் தலைப்பை கொண்ட எட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare