பத்மினி ஏகாதசி
ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார், “யுதிஷ்டிர மகாராஜர் கேட்டார்: ஓ ஜனார்த்தனா, கூடுதல் மாதத்தின் (அதிக மாதம்/லீப் வருடம்) வளர்பிறையில் வரும் ஏகாதசியின் பெயர் என்ன? அதை முறைப்படி கடைபிடிப்பது எப்படி? தயவுசெய்து இதை எனக்கு விவரிக்கவும்.”
முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளித்தார், “ஓ பாண்டவா, அதிக மாதத்தின் வளர்பிறையில் வரும் புண்ணிய ஏகாதசி ‘பத்மினி’ என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் மங்கலகரமானது. மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இதைக் கடைபிடிக்கும் பாக்கியசாலி எனது இருப்பிடத்தை அடைவான். இந்த ஏகாதசி பாவங்களை நீக்குவதில் எனக்கு நிகரான வல்லமை கொண்டது. நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மாவால் கூட இதன் பெருமையை முழுமையாகப் புகழ முடியாது. முன்னொரு காலத்தில் பிரம்மா நாரதருக்கு, விடுவிக்கும் மற்றும் பாவங்களை நீக்கும் ஏகாதசியைப் பற்றி கூறினார்.”
யுதிஷ்டிரரின் கேள்வியால் மகிழ்ந்த கிருஷ்ணர் மேலும் கூறினார்: “மன்னனே, பெரும் முனிவர்களால் கூட அரிதாகச் செய்யப்படும் பத்மினி ஏகாதசி விரத முறையைக் கவனமாகக் கேள்.
வரலாற்றுப் பின்னணி (கார்த்தவீர்ய அர்ஜுனன் கதை)முன்னொரு காலத்தில் ராவணனைச் சிறைப்பிடித்த கார்த்தவீர்ய அர்ஜுனனின் வலிமையைப் பற்றி நாரதர் புலஸ்திய முனிவரிடம் கேட்டார். அதற்கு அவர் பின்வரும் கதையைக் கூறினார்:
திரேதா யுகத்தில் ஹைஹய வம்சத்தில் பிறந்த கார்த்தவீர்யனுக்கு ஆயிரம் ராணிகள் இருந்தும் ஒரு முனிவரின் சாபத்தால் புத்திர பாக்கியம் இல்லை.. இதனால் வருந்திய மன்னன், தனது ராஜ்ஜியத்தை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு கந்தமாதன பர்வதம் (மலைக்குத்) தவம் செய்யச் சென்றான். அவனது மனைவி பத்மினி (ஹரிச்சந்திரனின் மகள்) அவனுடன் சென்றாள்.
பத்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்தும் பலன் கிடைக்காதபோது, பத்மினி அனசூயா தேவியிடம் ஆலோசனை கேட்டாள். அனசூயா தேவி, அதிக மாதத்தில் வரும் பத்மினி ஏகாதசி விரதத்தைக் கடைபிடிக்கச் சொன்னாள். பத்மினி மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை மேற்கொண்டாள்.
இதன் பலனாக , அவளது பக்தியால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த கேசவப் பெருமாள், மகா கருடனின் முதுகில் ஏறி அவளுக்குக் காட்சியளித்தார்.
பகவான் அவளிடம், “அழகானவளே, புருஷோத்தம என்ற கூடுதல் மாதத்தில் வரும் இந்த விசேஷமான ஏகாதசியில் விரதமிருந்து என்னை நீ பெரிதும் மகிழ்வித்தாய். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று கூறினார்.
அகில உலகையும் காக்கும் பரம்பொருளின் இந்த உன்னதமான வார்த்தைகளைக் கேட்ட பத்மினி, அந்த பகவானுக்குத் தன் பக்திப்பூர்வமான பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்து, தன் கணவர் விரும்பிய வரத்தைக் கேட்டாள்.
உலகின் துன்பங்களை நீக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றி, கார்த்தவீர்ய மன்னனை நோக்கி, “மன்னனே உன் அன்பான மனைவி என்னிடம் பக்தியுடன் விரதம் இருந்து என்னை மகிழ்வித்தாள் . என்ன வரம் வேண்டுமோ கேள்”, என்று கூறினார்.
“அகில உலகங்களின் அதிபதியே, மது என்ற அரக்கனை அழித்தவரே! தேவர்கள், மனிதர்கள், பாம்புகள் (நாகர்கள்), அசுரர்கள் அல்லது பூத கணங்களால் ஒருபோதும் வெல்ல முடியாத, ஆனால் உம்மால் மட்டுமே வெல்லக்கூடிய ஒரு மகனை எனக்குத் தயவுசெய்து தந்தருளுங்கள்.”
அவர்கள் விரும்பியபடி எவராலும் வெல்ல முடியாத ஒரு மகன் பிறக்க வரமளித்தார். அதன்படி பிறந்தவனே கார்த்தவீர்ய அர்ஜுனன். தனது தாயின் ஏகாதசி விரதப் பலத்தாலேயே அவனால் ராவணனை எளிதில் தோற்கடிக்க முடிந்தது.
ஸ்ரீ கிருஷ்ணர் இறுதியாக கூறினார், “யுதிஷ்டிரா, இந்த ஏகாதசி மற்ற அனைத்து ஏகாதசிகளுக்கும் இணையான பலனைத் தரும். இதைக் கடைபிடிப்பவர்கள் நிச்சயமாக என் இருப்பிடத்தை அடைவார்கள்.”
சூத கோஸ்வாமி கூறினார், “இந்த ஏகாதசியின் பெருமையைக் கேட்பவர் அல்லது படிப்பவர் கூட பெரும் புண்ணியத்தைப் பெற்று இறுதியில் ஸ்ரீ ஹரியின் திருநாட்டை அடைவார்கள்.”

