அத்தியாயம் – 32
பிரிந்தவர் கூடினர்
பதம் 10.32.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார். ஓ, மன்னனே, இவ்வாறு கோபியர்கள் பாடிக் கொண்டும், பல்வேறு மனங்கவரும் வழிகளில் தங்கள் மனதிலுள்ளவற்றைப் பேசிக்கொண்டும் கூக்குரலிட்டு அழத்தொடங்கினர். பகவான் கிருஷ்ணரைக் காணவேண்டுமென்று அவர்கள் பேரார்வங்கொண்டிருந்தனர்.

பதம் 10.32.2 : பின்னர் பகவான் கிருஷ்ணர் புன்னகை பூத்த செந்தாமரை மலர் முகத்துடன் மஞ்சள் வண்ணப் பட்டுப் பீதாம்பரமும், மலர் மாலையும் அணிந்தவராக சாதாரண மனிதர்களின் மனங்களை மோகமுறச் செய்யும் மன்மதனின் மனதினையே மோகமுறச் செய்யக் கூடியவராகக் கோபியர்களின் முன்னே நேரில் தோன்றினார்.

பதம் 10.32.3 : தங்கள் உயிரினும் மேலான கிருஷ்ணர் திரும்பிவந்ததைக் கண்டவுடன் கோபியர்கள் அனைவரும் உடனே எழுந்து நின்றனர். அவர் மீது கொண்ட அளவிலா அன்பினால் அவர்களின் விழிகள் அகலமாக விரிந்தன. இது, அவர்களின் உடலினுள் உயிர்க்காற்று மீண்டும் புகுந்தது போல் இருந்தது.

பதம் 10.32.4 : ஒரு கோபி மிக்க மகிழ்ச்சியுடன் குவித்து தனது இந் கரங்களுக்கிடையே கிருஷ்ணரின் கரத்தினைப் பற்றிக் கொண்டாள். மற்றொருத்தி சந்தனம் பூசிய அவரது திருக்கரத்தினை எடுத்துத் தனது தோள்களின் மீது வைத்துக் கொண்டாள்.

பதம் 10.32.5 : மெல்லிய உடல் கொண்ட ஒரு கோபி, மிக்க மரியாதையுடன் அவர் தரித்த தாம்பூலத்தின் (வெற்றிலை பாக்கின்) மிச்சத்தைத் தனது இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டாள். மற்றொரு கோபி சுட்டெரிக்கும் ஆசையினால் அவரது தாமரைத் திருவடியை எடுத்து தனது மார்பகங்களின் மீது வைத்துக் கொண்டாள்.

பதம் 10.32.6 : ஒரு கோபி காதலினால் எழுந்த சினத்தின் வசப்பட்டு, பற்களினால் தனது இதழ்களைக் கடித்தபடி நெரித்த புருவங்களுடன், அவரைத் தனது கடுமையான பார்வைகளினால் காயப்படுத்துவது போன்று வெறித்துப் பார்த்தாள்.

பதம் 10.32.7 : மற்றொரு கோபி கண் இமைக்காது அவரது தாமரைத் திருமுகத்தினை உற்று நோக்கினாள், அதன் இனிமையை முற்றிலும் சுவைத்த பின்னரும், யோக சித்தர்கள் பகவானின் திருவடிகளைத் தியானிக்கும் பொழுது ஒருபோதும் திருப்தியடையாதிருப்பது போல் அவளும் திருப்தியடையாதிருந்தாள்.

பதம் 10.32.8 : ஒரு கோபி, அவளது விழிகளிலுள்ள ஒளி ஊடுருவிச் செல்லும் துளைகளின் வழியே பகவானை எடுத்துத் தனது இதயத்தில் இருத்திக் கொண்டாள். பிறகு அவள் தனது கண்களை மூடிக்கொண்டு, மயிர்க் கூச்செரிந்தவளாக, அவரைத் தனது இதயத்தினுள்ளே தொடர்ந்து தழுவினாள். இவ்வாறு உன்னத ஆனந்தத்தில் மூழ்கியிருந்த அவள், பகவானைத் தியானிக்கும் ஒரு யோகியைப் போன்றிருந்தாள்.

பதம் 10.32.9 : தங்கள் பிரியத்திற்குரிய கேசவனை மீண்டும் கண்டவுடன் கோபியர்கள் அனைவரும் விழாக்கால ஆனந்தத்தில் மகிழ்ந்தனர். ஆன்மீக ஞானியின் தொடர்பினைப் பெற்றவுடன் சாதாரண மனிதர்கள் தங்கள் துன்பங்களை மறப்பது போன்று, கோபியர்களும் தங்கள் பிரிவுத் துயர் நீங்கினார்.

பதம் 10.32.10 : தமது துன்பங்கள் அனைத்தும் இப்போது நீங்கப் பெற்றக் கோபியர்களால் சூழப்பட்ட முழுமுதற் கடவுளான பகவான் அச்சுதன் கண்ணைப் பறிக்கும் ஒளியுடையவராக விளங்கினார். அன்பார்ந்த மன்னனே! கிருஷ்ணர் இவ்வாறு, தமது ஆன்மீகச் சக்திகளால் சூழப்பட்டிருக்கும் பரமாத்மா போல் தோன்றினார்.

பதங்கள் 10.32.11 – 10.32.12 : பிறகு எல்லாம் வல்ல பகவான் கோபியர்களை அழைத்துக் கொண்டு தனது அலைக்கரங்களால் பூமணலைக் குவித்திருக்கும் காளிந்தி நதியின் கரைக்குச் சென்றார். அப்புனித இடத்தில் தும்பிகளை மயக்கும், அப்போது மலர்ந்த மல்லிகை மற்றும் மந்தார மலர்களின் நறுமணத்தைச் சுமந்து கொண்டு தென்றல் காற்று வீசிக் கொண்டிருந்தது. சரத்காலச் சந்திரனின் ஏராளமான ஒளிக்கதிர்கள் இரவின் இருளை நீக்கிக் கொண்டிருந்தன.

பதம் 10.32.13 : கிருஷ்ணரைக் கண்ட ஆனந்தத்தினால் அவர்களின் மனவேதனை நீங்கியது. முன்பிருந்த வேதவடிவங்களைப் போல் கோபியர்கள் தங்கள் இச்சைகள் முற்றிலும் நிறைவேறக் கண்டனர். அவர்கள் தமது ஆருயிர் நண்பர் கிருஷ்ணருக்காக, அவர்களின் மார்பகங்களில் பூசிய குங்குமத்தினால் கறைபடிந்திருந்த அவர்களது மேலாடைகளைக் கொண்டு ஓர் இருக்கை தயார் செய்தனர்.

பதம் 10.32.14 : யோகஸித்திகளின் தலைவர்களான சித்தர்கள் முழுழுதற் கடவுளான பகவான் கிருஷ்ணருக்குத் தங்கள் இதயங்களில் சிம்மாசனம் அமைத்துள்ளனர். ஆனால் அவரோ கோபியர்களின் கூட்டத்தில் அமர்ந்து கொண்டார். மூவுலங்களிலுமுள்ள அழகிற்கும் செல்வங்களுக்கும் உறைவிடமாகத் திகழும் அவரது உன்னத உடல், கோபியர்கள் அவரை வழிபட்டபொழுது தகதகவென்று ஒளிவீசியது.

பதம் 10.32.15 : ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களிடம், காம இச்சையினைக் கிளர்ந்தெழச் செய்தார். அதனால் அவர்கள் அவரை, வேடிக்கையான புன்னகையுடன் பார்த்தும், தமது புருவங்களின் அசைவினால் தமது காதல் உணர்வினை ஜாடையாக உணர்த்தியும், தங்கள் மடிகளில் அவரது திருவடிகளையும், திருக்கரங்களையும் எடுத்துவைத்து அவற்றைப் பிடித்துவிட்டும் கெளரவித்தனர், அவர்கள் அவரை இவ்வாறு வழிபட்ட போதிலும், அவரிடத்துச் சிறிதளவு சினமும் கொண்டிருந்தனர், அதனால் அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்.

பதம் 10.32.16 : கோபியர்கள் கூறினர்: “சிலர், தங்கள் மீது அன்புடையவர்களுக்கு தங்கள் அன்பினைத் திருப்பித் தருகின்றனர். மற்றுஞ் சிலரோ தங்கள் மீது உறவோ, பகையோ இல்லாதவர்களாக இருந்தாலும் அல்லது பகைவர்களாக இருந்தபோதிலும் அவர்களுக்குத் தங்கள் அன்பினைத் தருகின்றனர். வேறு சிலரோ எவரிடத்தும் அன்புவைப்பதில்லை. அன்பார்ந்த கிருஷ்ணரே இது ஏன் என்று அருள்கூர்ந்து எமக்கு விளக்குவீராக.”

பதம் 10.32.17 : ஒருவர்மீது மற்றொருவர் செலுத்தும் பரஸ்பர அன்பு அவர்களுக்கு மட்டுமே பயனளிக்கக் கூடியதாக இருந்தால் உண்மையில் அது சுயநலமுடையதாகும். அவர்களிடம் உண்மையான நட்பும் இல்லை. அவர்கள் உண்மையான சமய தர்மங்களைப் பின்பற்றுபவர்களும் அல்லர். உண்மையில் அவர்கள் தமக்கு எந்தவிதமான பயனையும் எதிர்பார்க்காதவர்களாக இருந்தால் அவர்கள் பரஸ்பரம் அன்பினைப் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள்.

பதம் 10.32.18 : அன்பார்ந்த மெல்லிடைக் கோபியர்களே! சிலர் இயற்கையிலேயே கருணையுடையவர்களாக அல்லது பெற்றோர்களைப்போல் இயற்கையிலேயே பாசமுடையவர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தம் மீது பதிலுக்கு அன்பு செலுத்தத் தவறியவர்களுக்கும் பக்தியுடன் தொண்டு புரிகின்றனர். இவர்களே உண்மையான குற்றமற்ற சமயதர்மத்தினைப் பின்பற்றுகின்றனர். மேலும் இவர்களே உண்மையான நலம் விரும்பிகளாகவும் இருக்கின்றனர்.

பதம் 10.32.19 : பிறகு, பௌதிக திருப்தியும், ஆன்மீகத் தன்னிறைவும் உள்ள அல்லது இயற்கையாகவே நன்றி கெட்டவர்களாக அல்லது உயர்ந்தவர்களிடம் விரோதம் கொண்டவர்களாக உள்ளவர்களும் இருக்கின்றனர். இத்தகைய மனிதர்கள் தங்களை நேசிப்பவர்களைக்கூட நேசிப்பதில்லை. அவர்களிடம் விரோதம் கொண்டவர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

பதம் 10.32.20 : ஓ, கோபியர்களே! என்னைப் பக்தியுடன் வழிபடும் உயிர்கள்மீது கூட நான் உடனே பதிலுக்கு அன்பு செலுத்துவதில்லை, காரணம், அவர்களின் அன்பு கலந்த பக்தியை மேலும் தீவிரப்படுத்துவதற்கு நான் விரும்புகின்றேன் என்பதுவேயாகும். பிறகு அவர்கள், வறுமையில் வாடும் ஏழை ஒருவன் செல்வத்தைப் பெற்று, உடனே அதை இழந்துவிட்டானென்றால் வேறு எதையும் நினைக்காது தொலைந்து போன தன் செல்வத்தைப் பற்றியே ஆழ்ந்து நினைப்பது போல் ஆகிவிடுகின்றனர்.

பதம் 10.32.21 : என் பொருட்டு நீங்கள் உலகின் கருத்துக்களையும், வேதங்களின் கருத்துக்களையும், உங்கள் உறவினர்களின் கருத்துக்களையும் புறக்கணித்து வந்துள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொண்டே நான் உங்களது பற்றினை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறு நடந்து கொண்டேன். திடீரென்று மறைந்து, உங்கள் பார்வையிலிருந்து என்னை நான் விலக்கிக் கொண்ட போதிலும் உங்கள் மீது அன்பு செலுத்துவதை நான் ஒருபோதும் நிறுத்தியதில்லை. ஆகையினால் எனதன்புக் கோபியர்களே! உங்கள் பிரியமான என்னைப் பற்றித் தவறான கருத்துக்களுக்கு இடங்கொடுத்துவிடாதீர்.

பதம் 10.32.22 : பிரம்மதேவனின் ஆயுட்காலம் முழுவதிலும்கூட உங்கள் குற்றமற்ற தொண்டிற்கான எனது கடனை என்னால் திருப்பித்தர இயலாது. என்னோடு நீங்கள் கொண்டுள்ள உறவு அப்பழுக்கற்றது. உடைத்து எறிவதற்கு அரிய இல்லறச்சங்கிலிகள் அனைத்தையும் துண்டித்த நீங்கள் என்னை வழிபட்டிருக்கின்றீர்கள். ஆகையினால் உங்களது கீர்த்திமிகு செயல்கள், உங்களுக்குரியதாகுக.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare