அத்தியாயம் – 23
அந்தணர்கள் மனைவியர் ஆசீர்வதிக்கப்படுதல்
பதம் 10.23.1
ஸ்ரீ-கோபா ஊசு:
ராம ராம மஹா-பாஹோ க்ருஷ்ண துஷ்ட நிபர்ஹண
ஏஷா வை பாததே க்ஷுன் நஸ் தச்-சாந்திம் கர்தும் அர்ஹத:

ஸ்ரீ-கோபா: ஊசு:—ஆயர்குலச் சிறுவர்கள் கூறினர்; ராம ராம—ஓ, பகவான் ராமா, ஓ, பகவான் ராமா; மஹா-பாஹோ—ஓ, வல்லமை மிக்கவரே; க்ருஷ்ண—ஓ, பகவான் கிருஷ்ணா; துஷ்ட—துஷ்டர்களின்; நிபர்ஹண—ஓ, அழிப்பவரே; ஏஷா—இந்த; வை—உண்மையில்; பாததே—வருந்தச் செய்கிறது; க்ஷுத்—பசி; ந:—எமக்கு; தத்-ஸாந்திம்—இதற்குப் பரிகாரம்; கர்தும் அர்ஹத:—தாங்கள் செய்ய வேண்டும்.

ஆயர்குலச் சிறுவர்கள் கூறினர்: ஓ, ராமா, ஓ, ராமா, வல்லமை மிக்கவரே! ஓ, கிருஷ்ணா, துஷ்டர்களை அழிப்பவரே! பசியினால் நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். அதனைத் தீர்ப்பதற்கு நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும்.

பதம் 10.23.2
ஸ்ரீ ஸுக உவாச
இதி விஜ்ஞாபிதோ கோபைர் பகவான் தேவகீ ஸுத:
பக்தாயா விப்ர பார்யாயா: ப்ரஸீதன்ன் இதம் அப்ரவீத்

ஸ்ரீ-ஸுக:உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; விஜ்ஞாபித:—தெரிவித்தல்; கோபை:—ஆயர்குலச் சிறுவர்களால்; பகவான்—பரம புருஷ பகவான்; தேவகீ-ஸுத:—தேவகீ மைந்தன்: பக்தாயா:—அவரது பக்தர்கள்; விப்ர-பார்யாயா:—அந்தணர்களின் மனைவியர்; ப்ரஸீதன்—திருப்தி செய்ய விரும்பி; இதம்—இதனை; அப்ரவீத்—கூறுலுற்றார்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஆயர்குலச் சிறுவர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டவுடன் தேவகீ மைந்தரான முழுமுதற்கடவுள் தமது பக்தைகளான அந்தணர்களின் மனைவியர்க்கு அருள்புரிய விரும்பி பின்வருமாறு கூறினார்.

பதம் 10.23.3
ப்ரயாத தேவ யஜனம் ப்ராஹ்மணா ப்ரஹ்ம வாதின:
ஸத்ரம் ஆங்கிரஸம் நாம ஹி ஆஸதே ஸ்வர்க காம்யயா

ப்ரயாத—செல்வீராக; தேவ யஜனம்—யாக சாலைக்கு; ப்ராஹ்மணா:—அந்தணர்கள்; ப்ரஹ்ம-வாதின:—வேத நெறிகளைப் பின்பற்றுவோர்: ஸத்ரம்—ஒரு யாகம்; ஆங்கிரஸம் நாம—ஆங்கிரஸம் எனப்படும்; ஹி—உண்மையில்; ஆஸதே—இப்போது செய்து கொண்டிருக்கின்றனர்; ஸ்வர்க-காம்யயா:—சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமென்றும் நோக்கத்தில்.

(பகவான் கிருஷ்ணர் கூறினார்:) உடனே யாக சாலைக்குச் செல்வீராக. அங்கே வேதநெறிகளைப் பின்பற்றும் அந்தணர்கள் சொர்க்கம் செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தில் இப்போது ஆங்கிரஸ யாகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

பதம் 10.23.4
தத்ர கத்வௌதனம் கோபா யாசதாஸ்மத் விஸர்ஜிதா:
கீர்தயந்தோ பகவத ஆர்யஸ்ய மம சாபிதாம்

தத்ர—அங்கே; கத்வா—சென்று; அதனம்—உணவு; கோபா:—ஆயர் குலச் சிறுவர்களே; யாசத—யாசிக்கவும்; அஸ்மத்—எங்களால்; விஸர்ஜிதா:—அனுப்பப்பட்டதாக; கீர்தயந்த:—அறிவிக்கவும்; பகவத:—பரமபுருஷ பகவானின்; ஆர்யஸ்ய—மூத்தவர்; மம—எனது; ச—மற்றும்; அபிதாம்—நாமம்.

அன்பிற்குரிய ஆயர்குலச் சிறுவர்களே நீங்கள் அங்கு சென்று சிறிது உணவு வேண்டுமென்று யாசிக்கவும். அவர்களிடம் நீங்கள் பரம புருஷ பகவான் பலராமர் மற்றும் என்னால் அனுப்பப்பட்டவர்கள் என்று கூறவும்.

பதம் 10.23.5
இதி அதிஷ்டா பகவதா கத்வா யாசந்த தே ததா
க்ருதாஞ்ஜலி புடா விப்ரான் தண்ட வத் பதிதா புவி

இதி—இவ்வாறு; அதிஷ்டா:—ஆணையிடப்பட்டு; பகவதா—பரமபுருஷ பகவான் கிருஷ்ணரால்; கத்வா—சென்று; அயாசந்த—யாசித்தனர்; தே—அவர்கள்; ததா—இவ்வாறாக; க்ருத்-அஞ்ஜலி-புடா:—அவர்கள் தங்கள் கைகளைக் குவித்து வணங்கியபடி; விப்ரான்—அந்தணர்களுக்கு; தண்ட-வத்—நெடுஞ்சாண்கிடையாக; பதிதா:—வீழ்ந்து; புவி—நிலத்தின் மீது.

முழுமுதற்கடவுளால் இவ்வாறு கட்டளையிடப்பட்டவுடன் அந்த ஆயர்குலச் சிறுவர்கள் அங்கே சென்று வேண்டி நின்றனர். அவர்கள் அந்தணர்களின் முன்பு தமது கரங்களைக் குவித்து வணங்கி நின்று, பிறகு நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் வீழ்ந்து அவர்களுக்கு மரியாதை செய்தனர்.

பதம் 10.23.6
ஹே பூமி தேவா: ஸ்ருணுத க்ருஷ்ணஸ்யாதேஸ காரிண:
ப்ராப்தான் ஜானித பத்ரம் வோ கோபான் நோ ராம சோதிதான்

ஹே பூமி-தேவா:—ஓ, பூமி தேவர்களே; ஸ்ருணுத—கேட்டருள்வீராக; க்ருஷ்ணஸ்ய-ஆதேஸ—கிருஷ்ணரின் ஆணையின்பேரில்; காரிண:—காரியம் செய்வோர்; ப்ராப்தான்—வந்துள்ளோம்; ஜானீத—அங்கீகரிப்பீராக; பர்தம்—எல்லா நலன்களும்; வ:—உமக்கு; கோபான்—கோபாலர்கள்: ந:—எம்மை; ராம-சோதிதான்—பலராமரால் அனுப்பப்பட்டவர்கள்.

(ஆயர்குலச்சிறுவர்கள் கூறினர்) ஓ, பூமி தேவர்களே! நாங்கள் கூறுவதைக் கேட்பீராக. ஆயர்குலச் சிறுவர்களாகிய நாங்கள் கிருஷ்ணரின் ஆணைப்படி நடப்பவர்கள் ஆவோம். நாங்கள் பலராமரால் இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம். உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாவதாக. எங்கள் வருகையினை அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்வீராக.

பதம் 10.23.7
காஸ் சாரயந்தாவ் அவிதூர ஓதனம்
ராமாச்யுதௌ வோ லஷதோ புபுக்ஷிதௌ
தயோர் த்விஜா ஓதனம் அர்தினோர் யதி
ஸ்ரத்தா ச வோ யச்சத தர்ம வித்தமா:

கா:—அவர்களது பசுக்களை; சாரயந்தெள—மேய்த்தல்; அவிதூரே—வெகு துரம் இல்லை; ஓதனம்—உணவு; ராம-அச்யுதெள—பகவான் ராமர் மற்றும் பகவான் அச்சுதன்; வ:—உங்களிடமிருந்து; லஷத:—விரும்புகின்றனர்; புபுக்ஷிதௌ—பசியோடிருக்கின்றனர்; தயோ:—அவர்களுக்கு; த்விஜா:—ஓ, அந்தணர்களே; ஓதனம்—உணவு; அர்தினோ:—இரத்தல்; யதி—உண்டென்றால்; ஸ்ரத்தா—ஏதேனும் நம்பிக்கை; ச—மற்றும்; வ:—உங்கள் பக்கம்; யச்சத—அளிப்பீராக; தர்ம-வித்தமா:—ஓ, தர்ம நெறிகளை நன்குணர்ந்தோரே.

பகவான் ராமரும் பகவான் அச்சுதனும் தங்கள் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் இடம் இங்கிருந்து வெகு தூரத்தில் இல்லை. அவர்கள் பசியுடனிருக்கின்றனர். ஒ, அந்தணர்களே, ஓ, தர்ம அறநெறிகளை நன் குணர்ந்தோரே, உங்களுக்கு நம்பிக்கை உண்டென்றால் அவர்களுக்கு சிறிது உணவளிப்பீராக.

பதம் 10.23.8
தீக்ஷாயா: பஸு ஸம்ஸ்தாயா: ஸெளத்ராமண்யாஸ் ச ஸத்தம:
அன்யத்ர தீக்ஷிதஸ்யாபி நான்னம் அஸ்னன் ஹி துஷ்யதி

தீக்ஷாயா:—யாகம் செய்வற்கான ஆரம்பநிலை; பஸு ஸம்ஸ்தாயா:—விலங்கினைப் பலியிடும் வரை; ஸௌத்ராமண்யா:—ஸௌத்ராமணி என்னும் யாகத்திற்குப் புறம்பாக; ச—மற்றும்; ஸத்-தமா:—ஓ, தூயவர்களே; அன்யத்ர—பிறவற்றில்; தீக்ஷிதஸ்ய—யாகம் செய்பவர்; அபி—கூட; ந—இல்லை; அன்னம்—உணவு; அஸ்னன்—உண்பது; ஹி—உண்மையில்; துஷ்யதி—குற்றமாவது.

ஒரு யாகத்தின் ஆரம்ப நிலையிலிருந்து விலங்கினைப் பலியிடுவது வரை உள்ள இடைப்பட்ட காலத்தினைத் தவிர்த்து ஓ, தூய அந்தணர்களே “ஸௌத்ராமணி” என்னும் யாகத்தைத் தவிர பிற யாகங்களில் யாகத்தினைச் செய்வோன் உணவு உட்கொள்வது ஒன்றும் குற்றமாகாது.

பதம் 10.23.9
இதி தே பகவத் யாச்ஞாம் ஸ்ருண்வந்தோ ‘பி ந ஸுஸ்ருவு:
க்ஷுத்ராஸா பூரி கர்மாணோ பாலிஷா வ்ருத் மானின:

இதி—இவ்வாறு; தே—அவர்கள், அந்தணர்கள்; பகவத்—முழுமுதற்கடவுள்; யாச்ஞாம்—பணிவான வேண்டுகோள்; ஸ்ருண்வந்த:—கேட்டு; அபி—இருந்தபோதிலும்; ந ஸுஸ்ருவு:—அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை; க்ஷுத்ரா-ஆஸா:—அற்ப ஆசைகள் கொண்டு; பூரி-கர்மாண:—சமயச் சடங்குகள் செய்வதிலேயே பெரும்பாலும் ஈடுபட்டு; பாலிஷா— அனுபவமில்லாத முட்டாள்கள்; வ்ருத்த-மானின:—தம்மை எல்லாம் அறிந்தவர்களாக நினைக்கின்றனர்.

முழுமுதற் கடவுளின் பணிவான வேண்டுகோளினைக் கேட்டும், அந்தணர்கள் அதனைத் தம் கருத்திற் கொள்ளவில்லை. உண்மையில் அவர்கள் அற்ப ஆசைகள் நிறைந்தவர்களாகவும் சமயச் சடங்குகளில் பெரும் ஈடுபாடு உடையவர்களாகவும் விளங்கினர். வேதக்கல்வியில் தாம் பெரியவர்கள் என்று அவர்கள் எண்ணிய போதிலும் அவர்கள் உண்மையில் அனுபவமில்லாத மூடர்களேயாவர்.

பதங்கள் 10.23.10 – 10.23.11
தேஸ்: கால: ப்ருதக் த்ரவ்யம் மந்த்ர தந்த்ரர்த்விஜோ ‘க்னயை:
தேவதா யஜமானஸ் ச க்ரதுர் தர்மஸ் ச யன் மய:

தம் ப்ரஹ்ம பரமம் ஸாக்ஷாத் பகவந்தம் அதோக்ஷஜம்
மனுஷ்ய த்ருஷ்ட்யா துஷ்ப்ரஜ்ஞா மர்த்யாத்மானோ ந மேநிரே

தேஸ:—இடம்; கால:—காலம்; பருதக் த்ரவ்யம்—குறிப்பிட்ட பூஜைப் பொருட்கள்; மந்தர—வேத மந்திரங்கள்; தந்த்ர—குறிப்பிட்ட சடங்குகள்; ருத்விஜ:—புரோகிதர்கள்; அக்னயை:—யாக அக்னிகள்; தேவதா—தலைமை தாங்கும் தேவதைகள்; யஜமான:—யாகம் செய்பவர்; ச—மற்றும்; க்ரது:—அர்பணிப்பு; தர்ம:—பலன்களின் புலனாகாகச் சக்தி; ச—மற்றும்; யத்—அவர் தம்; மய:—உருவாக்குகின்ற; தம்—அவரது; ப்ரஹ்ம பரமம்—பரம முழுமெய்ப் பொருள்; ஸாக்ஷாத்—நேரடியாக வெளிப்படுதல்; பகவந்தம்—முழுமுதற் கடவுள்; அதோக்ஷஜம்—பௌதிகப் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்; மனுஷ்ய-த்ருஷ்ட்யா—அவரைச் சாதாரண மனிதனாகக் காண்பது; துஷ்ப்ரஜ்ஞா:—அவர்கள் புத்தியின் முரண்பாடு; மர்த்ய-ஆத்மான:—பெளதிக உடலுடன் தம்மைத் தவறாக அடையாளம் காண்கின்றனர்; ந மேநிரே—அவர்கள் முறையாக மரியாதை அளிப்பதில்லை.

யாகம் செய்வதற்குத் தேவையான இடம், காலம், குறிப்பிட்ட பூஜைப் பொருட்கள், மந்திரங்கள், புரோகிதர்கள், அக்கினிகள், தேவர்கள், செய்பவன், அர்ப்பணிப்பு மற்றும் புலனாகாத நற்பலன்கள் போன்றவையெல்லாம் அவரது வைபவங்களாக இருந்த போதிலும் அந்தணர்கள் பகவான் கிருஷ்ணரை ஒரு சாதாரண மனிதனாகவே பார்த்தனர். இதற்குக் காரணம் அவர்களது முரண்பட்ட புத்தியேயாகும். அவரே முழுமெய்ப் பொருளென்றும், அவரே நேரடியாக வெளிப்பட்ட முழுமுதற்கடவுளென்றும், பௌதிகப் புலன்களால் அவரை எளிதில் உணர முடியாது என்பதையும் அவர்கள் அறியவில்லை. இவ்வாறு அழிகின்ற உடலுடன் கொண்ட தவறான அடையாளத்தினால் அவர்கள் குழப்பமடைந்திருந்ததினால் அவர்கள் அவருக்கு உரிய மரியாதையினை அளிக்கவில்லை.

பதம் 10.23.12
ந தே யத் ஓம் இதி ப்ரோசுர் ந நேதி ச பரந்தப
கோபா நிராஸா: ப்ரத்யேத்ய ததோசு: க்ருஷ்ண ராமயோ:

ந—இல்லை; தே—அவர்கள்; யத்—அப்பொழுது; ஓம்—’ஆம்’; இதி—இவ்வாறு; ப்ரோசு:—கூற; ந—இல்லை; ந—இல்லை; இதி—இவ்வாறு; ச—கூட; பரந்தப:—ஓ, பகைவரைத் தண்டிக்கும் பரீக்ஷித்து மகாராஜாவே; கோபா:—ஆயர்குலச் சிறுவர்கள்; நிரஸா:—நிராசையுடன்; ப்ரத்யேத்ய—திரும்பினர்; ததா—பின்னர்; ஊசு:—விளக்கிக் கூறினர்; க்ருஷ்ண-ராமயோ:—பகவான் கிருஷ்ணர் மற்றும் பகவான் பலராமரிடம்.

“ஆம்” அல்லது “இல்லை” என்று கூட அந்தணர்கள் பதில் கூறாததைக் கண்டவுடன், ஓ, பகைவரைச் சுடுவோனே (பரீக்ஷித்துவே) ஆயர்குலச் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிவந்து கிருஷ்ணரிடமும் ராமரிடமும் நடந்ததைக் கூறினர்.

பதம் 10.23.13
தத் உபாகர்ண்ய பகவான் ப்ரஹஸ்ய ஜகத் ஈஸ்வர:
வ்யாஜஹார புனர் கோபான் தர்ஸயன் லௌகிகீம் கதிம்

தத்—அது; உபாகர்ண்ய—கேட்டு; பகவான்—முழுமுதற் கடவுள்; ப்ரஹஸ்ய—புன்னைகத்து; ஜகத்-ஈஸ்வர:—ஜகதீஸ்வரர்; வ்யாஜஹார—கூறினார்; புன:—மீண்டும்; கோபான்—கோபாலர்கள்; தர்ஸயன்—பார்த்து; லௌகிகீம்—லௌகிக உலகில்; கதிம்—பாதையினை.

நடைபெற்றதைக் கேட்டவுடன் ஜகதீஸ்வரரான முழுமுதற்கடவுள் புன்னகை செய்தார். பிறகு அவர் மீண்டும் ஆயர்குலச் சிறுவர்களிடம் லௌக உலகில் மனிதர்கள் செல்லும் பாதையினைப் பற்றி விளக்கிக் கூறினார்.

பதம் 10.23.14
மாம் ஜ்ஞாபயத பத்னீப்ய: ஸ ஸங்கர்ஷணம் ஆகதம்
தாஸ்யந்தி காமம் அன்னம் வ: ஸ்நிக்தா மய்ய் உஷிதா தியா

மாம்—என்ன; ஜ்ஞாபயத—அறிவிப்பீராக; பத்னீப்ய:—மனைவியரிடத்து; ஸ-ஸங்கர்ஷணம்—பகவான் பலராமருடன் சேர்ந்து; ஆகதம்—வந்திருக்கிறேன்; தாஸ்யந்தி—அவர்கள் அளிப்பர்; காமம்—நீங்கள் விரும்பும் வண்ணம்; அன்னம்—உணவு; வ:—உமக்கு; ஸ்நிக்தா:—பாசத்துடன்; மயி—என்னிடத்தில்; உஷிதா:—வாழ்கின்றனர்; தியா—தமது புத்தியுடன்.

(பகவான் கிருஷ்ணர் கூறினார்:) நான் இங்கே பகவான் சங்கர்ஷணருடன் வந்திருப்பதாகக் கூறுங்கள். அவர்கள் என்னிடம் மிகுந்த அன்புடையவர்களாகவும், தமது மனதினால் என்னில் மட்டுமே வாழ்பவர்களாகவும் இருப்பதினால், அவர்கள் நிச்சயம் நீங்கள் வேண்டும் உணவினை அளிப்பார்கள்.

பதம் 10.23.15
கத்வாத பத்னீ ஸாலாயாம் த்ருஷ்ட்வாஸீனா: ஸ்வ் அலங்க்ருதோ
நத்வா த்விஜ ஸதீர் கோபா: ப்ரஸ்ரிதா இதம் அப்ருவன்

கத்வா—சென்று; அத—பிறகு; பத்னீ-ஸாலாயாம்—அந்தணர்களின் மனைவியர் வாழும் வீட்டிற்கு; த்ருஷ்ட்வா—அவர்களைக்கண்டு; ஆஸீனா:—அமர்ந்திருந்தனர்; ஸீ-அலங்க்ருதா:—நன்கு அலங்கரிக்கப்பட்டு; நத்வா—தலைவணங்கி நமஸ்கரித்து; த்விஜ-ஸதீ:—அந்தணர்களின் கற்புடை மனைவியர்; கோபா:—கோபாலர்கள்; ப்ரஸ்ரிதா:—பணிவுடன்; இதம்—இவ்வாறு; அப்ருவன்—கூறினர்.

அதன்பிறகு ஆயர்குலச் சிறுவர்கள் அந்தணர்களின் மனைவியர் வாழும் இல்லத்திற்குச் சென்றனர். அங்கே, கற்புக்கரசிகளான அப்பெண்கள் நன்கு அலங்கரிக்கப்பட்டு அமர்ந்திருப்பதை அச்சிறுவர்கள் கண்டனர். அவர்களை வணங்கி ஆயர்குலச் சிறுவர்கள் மிக்க பணிவுடன் கூறினர்.

பதம் 10.23.16
நமோ வோ விப்ர பத்னீப்யோ நிபோதத வசாம்ஸி ந:
இதோ ‘வி தூரே சரதா க்ருஷ்ணேனேஹேஷிதா வயம்

நம:—வந்தனங்கள்; வ:—உங்களுக்கு; விப்ர-பத்னீப்ய:—அந்தணர்களின் பத்தினியரே; நிபோதத—கேட்பீராக; வசாம்ஸி—வார்த்தைகளை; ந:—எமது; இத:—இங்கிருந்து; அவி தூரே—தூரத்தில் இல்லை; சரதா—அவர் சென்று கெண்டிருப்பது; க்ருஷ்ணேன—பகவான் கிருஷ்ணரால்; இஹ—இங்கே; இஷிதா:—அனுப்பப்பட்டிருக்கிறோம்; வயம்—நாங்கள்.

(ஆயர்குலச் சிறுவர்கள் கூறினர்): ஒ, கற்றறிந்த அந்தணர்களின் மனைவியரே! உங்களுக்கு எங்கள் வணக்கங்கள். இங்கிருந்து சிறிது தூரத்தில் சென்றுகொண்டிருக்கும் பகவான் கிருஷ்ணரால் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.

பதம் 10.23.17
காஸ் சாரயன் ஸ கோபாலை: ஸ ராமோ தூரம் ஆகத:
புபுக்ஷிதஸ்ய தஸ்யான்னம் ஸானுகஸ்ய ப்ரதீயதாம்

கா:—பசுக்கள்; சாரயன்—மேய்த்துக் கொண்டு; ஸ:—அவர்; கோபாலை:—ஆயர்குலச் சிறுவர்களுடன் சேர்ந்து; ஸ-ராம:—பகவான் பலராமருடன் இணைந்து; தூரம்—வெகுதூரத்திலிருந்து; ஆகத:—வந்திருக்கின்றார்; புபுக்ஷிதஸ்ய—அவர் பசியுடனிருக்கிறார்; தஸ்ய—அவருக்கு; அன்னம்—உணவு; ஸ-அனுகஸ்ய—அவரது நண்பர்களுக்கும் சேர்த்து; ப்ரதீயதாம்—அளிக்க வேண்டும்.

அவர் ஆயர்குலச் சிறுவர்களுடனும், பகவான் பலராமருடனும் சேர்ந்து பசுக்களை மேய்த்துக் கொண்டு வெகு தூரத்திலிருந்து வந்திருக்கின்றார். அவர் மிகுந்த பசியுடன் இருக்கின்றார். அதனால் அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் சேர்த்து சிறிது உணவு அளிக்க வேண்டும்.

பதம் 10.23.18
ஸ்ருத்வாச்யுதம் உபாயாதம் நித்யம் தத் தர்ஸனோ தஸீகா:
தத் கதாக்ஷிப்த மனஸோ பபூவுர் ஜாத ஸம்ப்ரமா:

ஸ்ருத்வா—கேட்டு; அச்யுதம்—பகவான் கிருஷ்ணர்; உபாயாதம்—அருகில் இருக்கிறார்; நித்யம்—தொடர்ந்து; தத்-தர்ஸன—அவரது தரிசனத்திற்காக; உத்தஸீகா:—ஆர்வமுடன்; தத்-கதா—அவரது சரிதங்களால்; ஆக்ஷிப்த—ஈர்க்கப்பட்ட; மனஸ:—அவர்களது மனம்; பபூவு:—ஆயினும்; ஜாத-ஸம்ப்ரமா:—பரபரப்படைந்தனர்.

பகவான் சரிதங்களைக் கேட்டு அவர்தம் மனங்கள் அவற்றினால் ஈர்க்கப்பட்டதினால் அந்தணர்களின் மனைவியர்கள் கிருஷ்ணரைக் காண பெரும் ஆவலுடையவர்களாக இருந்தனர். அதனால் அவர் வந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் அவர்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர்.

பதம் 10.23.19
சதுர் விதம் பஹீ குணம் அன்னம் ஆதூய பாஜனை:
அபிஸஸ்ரு: ப்ரியம் ஸர்வா: ஸமுத்ரம் இவ நிமன்கா:

சதுர்-விதம்—நான்கு வகையான; (மெல்லக் கூடியது, விழுங்கக் கூடியது, நக்கக்கூடியது, உறிஞ்சக்கூடியது); பஹீ-குணம்—அருமையான சுவையும், மணமும் உடைய; அன்னம்—உணவு; ஆதாய—கொண்டு வந்தனர்; பாஜனை:—பெரிய பாத்திரங்களில்; அபிஸஸ்ரு:—அவர்கள் முன்னே சென்றனர்; ப்ரியம்—தங்கள் பிரியமானவருக்கு; ஸர்வா:—அனைவரும்; ஸமுத்ரம்—சமுத்திரத்திற்கு; இவ—போன்று; நிம்ன-கா:—நதிகள்.

அறுசுவையும், நறுமணமும் உடைய நான்கு வகையான உணவுகளைப் பெரிய பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு அந்தணர்களின் மனைவியர் நதிகள் கடலை நோக்கிப் பாய்ந்தோடுவது போன்று தங்கள் பிரியமானவரைச் சந்திக்க விரைந்து சென்றனர்.

பதங்கள் 10.23.20 – 10.23.21
நிஷித்யமானா: பதிபிர் ப்ராத்ருபிர் பந்துபி: ஸீதை:
பகவதி உத்தம-ஸ்லோகே தீர்க-ஸ்ருத-த்ருதாஸயா:

யமுனோபவனே ‘ஸோக-நவ-பல்லவ-மண்டிதே
விசரந்தம் வ்ருதம் கோபை: ஸாக்ரஜம் தத்ருஸீ: ஸ்த்ரிய:

நிஷித்யமானா:—தடுக்கப்பட்டும்; பதிபி:—அவர்கள் கணவன்மாரால்; ப்ராத்ருபி:—சகோதரர்களால்; பந்துபி:—பிற உறவினர்களால்; ஸீதை:—புத்திரர்களால்; பகவதி—முழுமுதற்கடவுளை நோக்கிச் சென்ற; உத்தம-ஸ்லோகே—தெய்வீகப் பண்களால் போற்றப்படுபவர்; தீர்க—நீண்ட காலமாக; ஸ்ருத—கேட்ட காரணத்தினால்; த்ருத—பெற்ற; ஆஸயா:—அவர்களது எதிர்பார்ப்புகள்; யமுனா-உபவனே—யமுனை நதியின் அருகிலோர் உபவனத்தில்; அஸோக-நவ-பல்லவ—அசோக மரங்களின் மொட்டுக்களால்; மண்டிதே—அலங்கரிக்கப்பட்டு; விசரந்தம்—அலைந்து கொண்டிருந்த; வ்ருதம்—சூழப்பட்டு; கோபை:—ஆயர்குலச் சிறுவர்களால்; ஸ-அக்ரஜம்—அவரது மூத்த சகோதரருடன்; தத்ருஸீ:—அவர்கள் கண்டனர்; ஸ்த்ரிய:—அப்பெண்கள்.

அங்கிருந்து அவர்கள் செல்வதை அவர்களின் கணவர்களும், மைந்தர்களும், உறவினர்களும் தடுத்தபோதிலும் கிருஷ்ணரின் உன்னதக் குணங்களைக் கேட்டு அவரைக் காண வேண்டுமென்று அவர்கள் கொண்டிருந்த ஆவல் இறுதியில் வெற்றிபெற்றது. யமுனை நதியின் அருகில், அசோகமரங்களின் மலர் மொட்டுக்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஓர் உபவனத்தில் கிருஷ்ணர் தமது மூத்த சகோதரர் பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர்.

பதம் 10.23.22
ஸ்யாமம் ஹிரண்ய-பரிதிம் வனமால்ய-பர்ஹ-
தாது-ப்ரவாள-நட-வேஷம் அனுவ்ரதாம்ஸே
வின்யஸ்த-ஹஸ்தம் இதரேண துனானம் அப்ஜம்
கர்ணோத்பலாலக-கபோல-முகாப்ஜ-ஹாஸம்

ஸ்யாமம்—கருநீல உடல்வண்ணம்; ஹிரண்ய—பொன்னிற; பரிதிம்—ஆடைகள்; வன-மால்ய—காட்டுமலர்களால் கட்டப்பட்ட மாலையணிந்து; பர்ஹ—மயிலிறகு; தாது—வண்ண மணிகள்; ப்ரவாள—மற்றும் அரும்புகளுடன்; நட—நடனக் கலைஞனைப் போல்; வேஷம்—வேடம் பூண்டு; அனுவ்ரத—ஒரு நண்பனின்; அம்ஸே—தோள்களின்மீது; வின்யஸ்த—இட்டு; ஹஸ்தம்—கரத்தினை; இதரேண—மற்றொன்றில்; துனானம்—சுழற்றுதல்; அப்ஜம்—ஒரு தாமரை மலரினை; கர்ண—அவரது செவிகளில்; உத்பல—அல்லி மலர்கள்; அலக-கபோல—அவரது மயிர்க்குழல்கள் அவரது கன்னங்களின்மீது புரண்டு கொண்டிருந்தன; முக-அப்ஜ—தாமரை போன்ற முகத்தின் மீது; ஹாஸம்—புன்னகை தவழ்ந்தது.

அவரது உடல் வண்ணம் கருநீலமாகவும் ஆடைகள் பொன் நிறமாகவும் இருந்தன. அவர் மயிலிறகு, வண்ண மணிகள், இளம் மொட்டுக்கள், காட்டுமலர்கள் கொண்டு கட்டப்பட்ட மாலை மற்றும் இலைகளையும் அணிந்திருந்தார். அவர் ஒரு நடனக் கலைஞன் போல் ஆடை அணிந்திருந்தார், அவர் தமது ஒரு கரத்தினைத் தமது நண்பனின் தோள்களின் மீது வைத்திருந்தார், மற்றொரு கரத்தில் ஒரு தாமரைப் பூவினைச் சுழற்றிக் கொண்டிருந்தார். அல்லிமலர்கள் அவரது செவிகளை அலங்கரித்தன. தலையிலுள்ள மயிர்க்குழல்கள் அவர் கன்னங்களில் புரண்டன. அவரது செந்தாமரை மலர் போன்ற முகத்தில் மெலிதான புன்னகை தவழ்ந்திருந்தது.

பதம் 10.23.23
ப்ராய:-ஸ்ருத-ப்ரியதமோதய-கர்ண-பூரைர்
யஸ்மின் நிமக்ன-மனஸஸ் தம் அதாக்ஷி-ரந்த்ரை:
அந்த ப்ரவேஸ்ய ஸீ-சிரம் பரிரப்ய தாபம்
ப்ராஜ்ஞம் யதாபிமதயோ விஜஹீர் நரேந்த்ர

ப்ராய:—தொடர்ந்து; ஸ்ருத—கேட்டும்; ப்ரிய-தம—அவர்களின் இனிய; உதய—கீர்த்திகள்; கர்ண-பூரை:—அவை அவர்களின் செவிகளுக்கு அணிகலன்களாயின; யஸ்மின்—அவரிடத்தில்; நிமக்ன—இணைந்து; மனஸ:—அவர்களின் மனங்கள்; தம்—அவரை; அத—பிறகு; அக்ஷி-ரந்தரை:—அவர்களின் விழித்துளைகளின் வழியே; அந்த—உள்ளே; ப்ரவேஸ்ய—புகும்படிச் செய்து; ஸீ-சிரம்—நீண்ட காலமாக; பரிரப்ய—தழுவிக் கொண்டு; தாபம்—தமது துன்பங்களை; ப்ரஜ்ஞம்—உள்ளுணர்வு; யதா—போன்று; அபிமதய:—ஆணவத்தின் செயல்கள்; விஜஹீ:—அவர்கள் துறந்தனர்; நர-இந்த்ர—நரேந்திரனே.

ஓ, நரேந்திரனே! நீண்ட காலமாக அந்த அந்தணர்களின் மனைவியர் தங்கள் பிரியமான கிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரது கீர்த்திகளைத் தொடர்ந்து தமது செவிகளில் அணிகலன்களாக அணிந்திருந்தனர். உண்மையில் அவர்களின் மனங்கள் எப்போதும் அவரது நினைவிலேயே ஆழ்ந்திருந்தன. இப்போது அவர்கள் தமது விழித்துளைகளின் வழியே பலவந்தமாக அவரைத் தமது மனங்களில் புகுத்தியுள்ளதோடு, நெடுங்காலமாக அவரை அவர்கள் தழுவிக் கொண்டும் உள்ளனர். இவ்வாறு அவர்கள் முனிவர்கள் தமது ஆணவக் கவலைகளை, அகத்திலுள்ள உணர்வினைத் தழுவிக்கொண்டதின் மூலம் துறப்பதுபோல், அவரைப்பிரிந்து அனுபவிக்கும் விரகதாபத்தினை இறுதியில் அவர்கள் துறந்தனர்.

பதம் 10.23.24
தாஸ் ததா த்யக்த-ஸர்வாஸா: ப்ராப்தா ஆத்ம-தித்ருக்ஷயா
விஜ்ஞாகில-த்ருக்-த்ரஷ்டா ப்ராஹ ப்ரஹஸிதானை:

தா:—அப்பெண்கள்; ததா—இந்நிலையில்; த்யக்த-ஸர்வ-ஆஸா:—பெளதிக ஆசைகள் அனைத்தையும் துறந்து; ப்ராப்தா—வந்துள்ளனர்; ஆத்ம-தித்ருக்ஷயா—அவரைக் காணும் ஆவலில்; விஜ்ஞாய—புரிந்துகொண்டு; அகில-த்ருக்—எல்லா உயிர்களின் பார்வையின்; த்ரஷ்டா—காண்பவர்; ப்ராஹ—அவர் கூறினார்; ப்ரஹஸித-ஆனை:—புன்னகை தவழும் முகத்துடன்.

எல்லா உயிர்களின் எண்ண ஓட்டங்களையும் பார்த்துக் கொண்டிருப்பவரான பகவான் கிருஷ்ணர், அப்பெண்கள் எவ்வாறு உலக இச்சைகளை எல்லாம் துறந்து தம்மைக் காணவந்துள்ளனர் என்பதைப் புரிந்து கொண்டார். புன்னகை தவழும் முகத்துடன் அவர் அவர்களிடம் பின்வருமாறு பேசினார்.

பதம் 10.23.25
ஸ்வாகதம் வோ மஹா-பாகா ஆஸ்யதாம் கரவாம கிம்
யன் நோ தித்ருக்ஷயா ப்ராப்தா உபபன்னம் இதம் ஹி வ:

ஸீ-ஆகதம்—நல்வரவாகுக; வ:—உங்களுக்கு; மஹா-பாகா:—ஓ. பாக்கியம் செய்த பெண்களே; ஆஸ்யதாம்—வந்து அமருங்கள்; கரவாம—நான் செய்யக் கூடியது; கிம்—என்ன; யத்—ஏனென்றால்; தித்ருக்ஷயா—காணும் ஆவலுடன்; ப்ராப்தா:—நீங்கள் வந்துள்ளீர்கள்; உபபன்னம்—பொருத்தமானது; இதம்—இது; ஹி—நிச்சயமாக; வ:—உங்களுக்கு.

(பகவான் கிருஷ்ணர் கூறினார்) பாக்கியம் செய்த பெண்களே உங்கள் வரவு நல்வரவாகுக. இங்கே வந்து வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் இங்கு என்னைக் காண வந்தது மிகவும் பொருத்தமுடையதேயாகும்.

பதம் 10.23.26
நன்வ் அத்தா மயி குர்வந்தி குஸலா: ஸ்வார்த-தர்ஸின:
அஹைதுகி அவ்யவஹிதாம் பக்திம் ஆத்ம-ப்ரியே யதா

தனு—உறுதியாக; அத்தா—நேரடியாக; மயி—எனக்கு; குர்வந்தி—அவர்கள் செய்கின்றனர்; குஸலா:—தேர்ச்சி பெற்றவர்கள்; ஸ்வ-அர்த—தங்கள் உண்மையான நன்மைக்காக; தர்ஸின:—அவர்கள் உணர்கின்றனர்; அஹைதுகீ—உள்நோக்கமற்ற; அவ்யவஹிதாம்—தடைப்படாத; பக்திம்—பக்தித் தொண்டு; ஆத்ம—ஆத்மாவிற்கு; ப்ரியே—நான் மிகவும் பிரியமானவன்; யதா—முறையாக.

தங்கள் உண்மை நலனைக் காண்பதில் தேர்ச்சி பெற்றவர்கள் நிச்சயமாக உள்நோக்கமற்ற, தடைப்படாத பக்தித் தொண்டினை எனக்குப் புரிகின்றனர். காரணம், நானே ஆத்மாவிற்கு மிகவும் பிரியமானவனாக இருக்கின்றேன்.

பதம் 10.23.27
ப்ராண-புத்தி-மன:-ஸ்வாத்ம தாராபத்ய-தனாதய:
யத்-ஸம்பர்காத் ப்ரியா ஆஸம்ஸ் தத: கோ ந்வ் அபர: ப்ரிய:

ப்ராண—உயிர்ச்சக்தி; புத்தி—புத்தி; மன:—மனம்; ஸ்வ—உறவினர்கள்; ஆத்ம—உடல்; தார—தாரம்; அபத்ய—குழந்தைகள்; தன—செல்வம்; ஆதய:—போன்றவை; யத்—அதனுடன் (ஆத்மா); ஸம்பர்காத்—தொடர்பின் காரணமாக; ப்ரியா:—பிரியத்திற்குரியனவாக; ஆஸன்—ஆகின்றன; தத:—அதனைவிட; க:—என்ன; நு—உண்மையில்; அபர:—பிற; ப்ரிய:—பிரியமானது.

ஒருவன் தனது ஆத்மாவுடன் தொடர்புகொள்வதினாலேயெ அவனது உயிர்மூச்சு, புத்தி, மனம், நண்பர், உடல், மனைவி, மக்கள், செல்வம் போன்றவை அவனுக்குப் பிரியமானவையாக இருக்கின்றன. அதனால் ஒருவனது ஆத்மாவைவிட அவனுக்குப் பிரியமான பொருள் வேறென்ன இருத்தல் கூடும்?

பதம் 10.23.28
தத் யாத தேவ-யஜனம் பதயோ வோ த்விஜாதய:
ஸ்வ-ஸத்ரம் பாரயிஷ்யந்தி யுஷ்மாபிர் க்ருஹ-மேதின:

தத்—ஆகையினால்; யாத—செல்வீராக; தேவ-யஜனம்—யாக சாலைக்கு; பதய:—கணவர்கள்; வ:—உங்கள்; த்வி-ஜாதய:—அந்தணர்கள்; ஸ்வ-ஸத்ரம்—அவர்களது யாகங்கள்; பாரயிஷ்யந்தி—நிறைவு செய்வதற்கு இயல்வதாக; யுஷ்மாபி:—உங்களுடன் இணைந்து; க்ருஹ-மேதின:—இல்லறவாசிகள்.

உடனே யாக சாலைக்கு நீங்கள் திரும்பிச் செல்வீராக. ஏனென்றால் கற்றறிந்த அந்தணர்களான உங்கள் கணவன்மார் இல்லறத்தார் ஆவர். அதனால் அவர்கள் செய்யும் யாகங்களை நிறைவு செய்வதற்கு உங்கள் துணை தேவைப்படும்.

பதம் 10.23.29
ஸ்ரீ பத்னிய ஊசு:
மைவம் விபோ ‘ர்ஹதி பவான் கதிதும் நீரு-ஸம்ஸம்
ஸத்யம் குருஷ்வ நிகமம் தவ பாத-மூலம்
ப்ராப்தா வயம் துளஸி-தாம பதாவஸ்ருஷ்டம்
கேஸைர் நிவோடும் அதிலங்க்ய ஸமஸ்த-பந்தூன்

ஸ்ரீ-பத்ன்ய: ஊசு:—அந்தணர்களின் மனைவியர் கூறினர்; மா—இல்லை; ஏவம்—இவ்வாறு; விபோ—ஓ, எல்லாம் வல்ல பகவானே; அர்ஹதி—வேண்டும்; பவான்—நீர்; கதிதும்—கூறுவது; ந்ரு-ஸம்ஸம்—கடுமையாக; ஸத்யம்—உண்மை; குருஷ்வ—செய்வீராக; நிகமம்—வேதத்தில் உரைக்கப்பட்ட சத்தியம்; தவ—உமது; பாத-மூலம்—திருவடித் தாமரைகளின் ஆதாரம்; ப்ராப்தா:—எய்தப் பெற்று; வயம்—நாங்கள்; துளஸி-தாம—துளசிமாலை; பாத—உமது பாதங்களினால்; அவஸ்ருஷ்டம்—உதைத்துப் புறக்கணித்தல்; கேஸை:—எங்கள் தலையின்மீது; நிவோடும்—தாங்குவதற்கு; அதிலங்க்ய—மறுதலித்தல்; ஸம்ஸ்த—எல்லா; பந்தூன்—உறவுகளையும்.

அந்தணர்களின் மனைவியர் கூறினர்: ஓ, எல்லாம் வல்லவரே, இது போன்ற கொடிய வார்த்தைகளைக் கூறாதீர். நீர் எப்போதும் அன்புடன் உமது பக்தர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பீர் என்னும் உமது சத்திய வாக்கினை நிறைவேற்றுவீராக. இப்போது நாங்கள் உமது தாமரைத் திருவடிகளை எய்தப் பெற்றிருக்கிறோம். அவற்றில் அணியப்பட்டுள்ள துளசிமாலைகளை எங்கள் தலைகளில் தாங்கிக் கொண்டு இக்காட்டில் இருக்கலாம் என்று விரும்பினோம். ஆனால் நீரோ உமது தாமரைத் திருவடிகளினால் எங்களை எட்டி உதைக்கின்றீர். நாங்கள் எங்கள் உலகியல் உறவுகள் அனைத்தையும் துறப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.

பதம் 10.23.30
க்ருஹ்ணந்தி நோ ந பதய: பிதரௌ ஸீதா வா
ந ப்ராத்ரு-பந்து-ஸீஹ்ருத: குத ஏவ சான்யே
தஸ்மாத் பவத்-ப்ரபதயோ: பதிதாத்மனாம் நோ
நான்யா பவேத் கதிர் அரிந்தம தத் விதேஹி

க்ருஹ்ணந்தி—அவர்கள் ஒத்துக் கொள்வர்; ந:—எம்மை; ந:—இல்லை; பதய:—எங்கள் கணவர்கள்; பிதரௌ—தந்தையர்; ஸீதா:—மைந்தர்கள்; வா—அல்லது; ந—இல்லை; ப்ராத்ரு—சகோதரர்கள்; பந்து—பிற உறவினர்கள்; ஸீஹ்ருத:—மற்றும் நண்பர்கள்; குத:—பிறகு எவ்வாறு; ஏவ—உண்மையில்; ச—மற்றும்; அன்யே—பிறர்; தஸ்மாத்—ஆகையினால்; பவத்—உமது; ப்ரபதயோ:—தாமரைத் திருவடிகளினிடத்தில்; பதித—வீழ்ந்து; ஆத்மனாம்—அவர்தம் உடல்கள்; ந:—எமக்கு; ந—இல்லை; அன்யா—பிறர்; பவேத்—இருத்தல் கூடும்; கதி:—இலக்கிடம்; அரிம்-தம—ஓ, பகைவரைச் சுடுவோனே; தத்—அது; விதேஹி—அன்புடன் அருள் புரிவீராக.

எங்கள் கணவர்களும், தந்தையரும், புதல்வர்களும், சகோதரர்களும் இன்னபிற உறவினர்களும், நண்பர்களும் நீண்டகாலம் எங்களை வைத்திருக்கமாட்டார்கள், மேலும் யார் எங்களுக்கு மனமுவந்து அடைக்கலம் தர முன்வருவர்? நாங்கள் ஏற்கெனவே உமது தாமரைத் திருவடிகளில் வீழ்ந்திருப்பதினாலும், எங்களுக்கு வேறு கதி இல்லை ஆதலினாலும், ஓ, பகைவரைச் சுடுவோனே எங்கள் விருப்பத்தினை நிறைவேற்றுவீராக.

பதம் 10.23.31
ஸ்ரீ-பகவான் உவாச
பதயோ நாப்யஸீயேரன் பித்ரு-ப்ராத்ரு-ஸீதாதய:
லோகாஸ் ச வோ மயோபேதா தேவா அபி அனுமன்வதே

ஸ்ரீ-பகவான் உவாச—முழுமுதற்கடவுள் கூறினார்; பதய:—உங்கள் கணவன்மார்; ந அப்யஸீயேரன்—பகைமை பாராட்டமாட்டார்கள்; பித்ரு-ப்ராத்ரு-ஸீத-ஆதய:—உங்கள் தந்தையர், சகோதரர், புதல்வர், மற்றும் பிறர்; லோகா:—பொதுமக்கள்; ச—மற்றும்; வ:—உங்களிடத்தில்; மயா—என்னால்; உபேதா:—உபதேசிக்கப்படுவர்; தேவா:—தேவர்கள்; அபி—கூட; அனுமன்வதே—அனுக்கிரகிப்பர்.

முழுமுதற்கடவுள் கூறினர்: உங்கள் கணவன்மார் இனிமேல் உங்களிடம் பகைமை பாராட்டமாட்டார்கள். அதுபோல் உங்கள் தந்தையர், சகோதரர், புதல்வர், உறவினர் மற்றும் பொதுமக்கள் யாவரும் இனிமேல் உங்களிடம் பகை கொள்ள மாட்டார்கள் என்று நான் உறுதியளிக்கின்றேன். நான் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்துவேன். உண்மையில் தேவர்கள் கூட அவர்களுக்கு அனுக்கிரகம் செய்வர்.

பதம் 10.23.32
ந ப்ரீதயே ‘னுராகாய ஹி அங்க-ஸங்கோ ந்ருணாம் இஹ
தன் மனோ மயி யுஞ்ஜானா அசிரான் மாம் அவாப்ஸ்யத

ந—இல்லை; ப்ரீதயே—திருப்திக்காக; அனுராகாய—காதல் கவர்ச்சிக்கு; ஹி—நிச்சயம்; அங்க-ஸங்க:—உடல் தொடர்பு; ந்ருணாம்—மக்களுக்கு; இஹ—இவ்வுலகில்; தத்—ஆகையினால்; மன:—உங்கள் மனங்களில்; மயி—என்னை; யுஞ்ஜானா:—நிலைநிறுத்தினால்; அசிராத்—அதிவிரைவில்; மாம்—என்னை; அவாப்ஸ்யத—எய்தப் பெறுவீர்.

உடல் தொடர்பின் மூலம் நீங்கள் என்னுடன் இருந்தீர்களென்றால் அது இவ்வுலகிலுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியளிக்காது என்பதோடு, என்மீதுள்ள அன்பினை அதிகரிப்பதற்கு அது சிறந்த வழியும் ஆகாது. மாறாக உங்கள் மனங்களை என் மீது நிலைநிறுத்துவீர்களானால் மிக விரைவில் நீங்கள் என்னை அடைவீர்கள்.

பதம் 10.23.33
ஸ்ரவணாத் தர்ஸனாத் த்யானான் மயி பாவோ ‘னுகீர்தனாத்
ந ததா ஸன்னிகர்ஷேண ப்ரதியாத ததோ க்ருஹான்

ஸ்ரவணாத்—கேட்பதினால்; தர்ஸனாத்—திருமூர்த்த வடிவத்தினைத் தரிசிப்பதனால்; த்யானாத்—தியானிப்பதால்; மயி—என்னை; பாவ:—அன்பு; அனுகீர்தனாத்—எனது நாமங்களையும், குணங்களையும் ஓதுவதினால்; ந—இல்லை; ததா—அதே போன்று; ஸன்னிகர்ஷேண—உடல்ரீதியாக அருகில் இருப்பது; ப்ரதியாத—திரும்பச் செல்வீர்; தத:—ஆதலினால்; க்ருஹான்—உமது இல்லங்களுக்கு.

என்னைப் பற்றிக் கேட்பதினாலும், எனது திருமூர்த்த வடிவத்தினைத் தரிசிப்பதினாலும், என்னைத் தியானிப்பதினாலும், எனது நாமங்களையும், கீர்த்திகளையும் ஓதுவதினாலும் என்மீது கொண்ட அன்பு வளருமேயல்லாது, உடல்ரீதியாக எனது அருகாமையில் இருப்பதினால் வளர்ச்சி பெறாது. ஆதலினால் உங்கள் இல்லங்களுக்கு நீங்கள் திரும்பிச் செல்வீராக.

பதம் 10.23.34
ஸ்ரீ-ஸீக உவாச
இதி உக்தா த்விஜ-பத்ன்யஸ் தா யஜ்ஞ-வாடம் புனர் கதா:
தே சானஸூயவஸ் தாபி: ஸ்த்ரீபி: ஸத்ரம் அபாரயன்

ஸ்ரீ-ஸீக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வார்த்தைகளுடன்; உக்தா:—கூறியவுடன்; த்விஜ-பத்ன்ய:—அந்தணர்களின் மனைவியர்; தா:—அவர்கள்; யஜ்ஞ-வாடம்—யாக சாலைக்கு; புன:—மீண்டும்; கதா:—சென்றனர்; தே—அவர்தம் கணவர்கள்; ச—மற்றும்; அனஸூயவ:—பகைமையின்றி; தாபி:—அவர்களோடு இணைந்து; ஸ்த்ரீபி:—அவர்கள் மனைவியர்; ஸத்ரம்—யாகம் செய்வது; அபாரயன்—அவர்கள் நிறைவு செய்தனர்.

ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு உபதேசிக்கப்பட்டவுடன் அந்தணர்களின் மனைவியர்கள் யாகசாலைக்குத் திரும்பிச் சென்றனர். அந்தணர்களும் அவர்கள் மனைவியரிடம் எந்தவிதமான குற்றமும் காணவில்லை. இருபாலரும் இணைந்து யாகத்தினை நிறைவேற்றினர்.

பதம் 10.23.35
தத்ரைகா வித்ருதா பர்த்ரா பகவந்தம் யதா-ஸ்ருதம்
ஹ்ருதோபகுஹ்ய விஜஹௌ தேஹம் கர்மானுபந்தனம்

தத்ர—அங்கே; ஏகா—அவர்களில் ஒருவர்; வித்ருதா—பலவந்தமாக நிறுத்தப்பட்டாள்; பர்த்ரா—அவளது கணவனால்; பகவந்தம்—பரமபுருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; யதா-ஸ்ருதம்—அவள் பிறரிடமிருந்து அவளைப் பற்றிக் கேள்விப்பட்டு; ஹ்ருதா—தனது இதயத்தினுள்; உபகுஹ்ய—தழுவிக்கொண்டு; விஜஹௌ—அவள் துறந்தாள்; தேஹம்—தனது தேகத்தினை; கர்ம-அனுபந்தனம்—அது பெளதிகச் செயலுக்குப் பந்தப்படுவதின் அடிப்படையாக விளங்குகிறது.

அப்பெண்களுள் ஒருத்தி தனது கணவனால் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தப்பட்டாள். அவள் பிறரிடமிருந்து பரமபுருஷ பகவான் கிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் மனதினுள் வரித்து உலகியல் கட்டுப்பாட்டுக்கு அடிப்படையாக விளங்கும் தனது பெளதிக உடலைத் துறந்தாள்.

பதம் 10.23.36
பகவான் அபி கோவிந்தஸ் தேனைவான்னேன கோபகான்
சதுர்-விதேனாஸயித்வா ஸ்வயம் ச புபுஜே ப்ரபு:

பகவான்—முழுமுதற்கடவுள்; அபி—கூட; கோவிந்த:—பகவான் கோவிந்தன்; தேன—அதனுடன்; ஏவ—அதே; அன்னேன—உணவினை; கோபகான்—ஆயர்குலச்சிறுவர்கள்; சது:-விதேன—நான்கு வகைகளின்; அஸயித்வா—உண்ணச் செய்து; ஸ்வயம்—தானும்; ச—மற்றும்; புபுஜே—எடுத்துக்கொண்டார்; ப்ரபு:—எல்லாம்வல்ல பகவான்.

முழுமுதற் கடவுளான கோவிந்தன், அந்த நால்வகை உணவுகளையும் ஆயர்குலச் சிறுவர்கள் உண்ணுமாறு செய்தார். பிறகு எல்லாம் வல்ல பகவான் தானும் அவற்றில் சிறிது உண்டார்.

பதம் 10.23.37
ஏவம் லீலா-நர-வபுர் ந்ரு-லோகம் அனுஸீலயன்
ரேமே கோ-கோப-கோபீனாம் ரமயன் ரூப-வாக்-க்ருதை:

ஏவம்—இவ்வாறு; லீலா—லீலைகளுக்காக; நர—மனிதவடிவில் தோன்றிய; வபு:—அவரது உன்னத உடல்; ந்ரு-லோகம்—மனித சமுதாயம்; அனுஸீலயன்—பாவித்து; ரேமே—அவர் இன்பமெய்தினார்; கோ—பசுக்கள்; கோப—கோபாலர்கள்; கோபீனாம்—கோபியர்கள்; ரமயன்—மகிழ்வித்தார்; ரூப—அவரது எழில்; வாக்—வாக்கு; க்ருதை:—மற்றும் செயல்களினால்.

தமது லீலைகளை நிகழ்த்துவதற்காக மனிதனாகத் தோன்றிய பரமபுருஷ பகவான் இவ்வாறு மனித சமுதாயத்தின் இயல்புகளைப் பாவனை செய்தார். அவர் தமது பசுக்களையும், ஆயர்குல நண்பர்களையும், கோபியர்களையும் தமது எழில், வாக்கு, மற்றும் செயல்களினால் மகிழ்விப்பதில் இன்பமெய்தினார்.

பதம் 10.23.38
அதானுஸ்ம்ருத்ய விப்ராஸ் தே அன்வதப்யன் க்ருதாகஸ:
யத் விஸ்வவேஸ்வரயோர் யாச்ஞாம் அஹன்ம ந்ரு-விடம்பயோ:

அத—அதன்பிறகு; அனுஸ்ம்ருத்ய—தங்கள் உணர்விற்கு வந்தனர். (தெளிவு பெற்றனர்); விப்ரா:—அந்தணர்கள்; தே—அவர்கள்; அனுவதப்யன்—மிகுந்த மனவருத்தமுற்றனர்; க்ருத-அகஸ:—பாவம் செய்தமைக்காக; யத்—ஏனென்றால்; விஸ்வ-ஈஸ்வரயோ:—பிரபஞ்சத்தின் இரு தெய்வங்களான கிருஷ்ணர் மற்றும் பலராமர்; யாச்ஞாம்—பணிவான வேண்டுகோளினை; அஹன்ம—நாம் மீறிவிட்டோம்; ந்ரு-விடம்பயோ:—அவர்கள் தந்திரமாக மனிதர்களைப் போன்று அவதரித்திருக்கின்றனர்.

பிறகு தங்கள் அறிவிலே தெளிவுபெற்ற அந்தணர்கள் மிகவும் வருந்தலாயினர். அவர்கள் “மனிதர்களைப் போல் தந்திரமாக அவதரித்துள்ள இப்பிரபஞ்சத்தின் இரு தெய்வங்களின் வேண்டுகோளையும் மறுதலித்ததின்மூலம் நாம் பாவம் செய்து விட்டோம்.” என்று நினைத்தனர்.

பதம் 10.23.39
த்ருஷ்ட்வா ஸ்த்ரீணாம் பகவதி க்ருஷ்ணே பக்திம் அலௌகிகீம்
ஆத்மானம் ச தயா ஹீனம் அனுதப்தா வ்யகர்ஹயன்

த்ருஷ்ட்வா—கண்டு; ஸ்த்ரீணாம்—தமது மனைவியரின்; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; க்ருஷ்ணே—ஸ்ரீ கிருஷ்ணர்; பக்திம்—தூயபக்தி; அலௌகிகீம்—இவ்வுலகிற்கும் மேலான; ஆத்மானம்—தம்மை; ச—மற்றும்; தயா—அதன்; ஹீனம்—இன்மை; அனுதப்தா:—அனுதாபம் கொண்டனர்; வ்யகர்ஹயன்—தம்மை நிந்தித்துக் கொண்டனர்.

முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர்மீது தமது மனைவியர் வைத்திருக்கும் தூய உன்னத பக்தியினைக் கண்டு அதுபோன்ற பக்தி தம்மிடத்தில் இல்லையே என்று அறிந்த அந்தணர்கள் பெரிதும் துக்கித்துத் தாமே நிந்திக்கத் தொடங்கினர்.

பதம் 10.23.40
திக் ஜன்ம நஸ் த்ரி-வ்ருத் யத் தத் திக் வ்ரதம் திக் பஹீ-ஜ்ஞதாம்
திக் குலம் திக் க்ரியா-தாக்ஷ்யம் விமுகா யே த்வ் அதோக்ஷஜே

திக்—பாழாக; ஜன்ம—பிறப்பு: ந:—எமது; த்ரி-வ்ருத்—மூன்று வகையான (முதலில் பெற்றோர்க்குப் பிறப்பது, அடுத்து அந்தண தீட்சை பெறுவது, மூன்றாவது வேள்விகள் செய்வதற்கான தீட்சை பெறுவது); யத் தத்—எதுவாயினும்; திக்—பாழாய்ப்போக; வ்ரதம்—எமது விரதம் (பிரம்மச்சரியம்); திக்—பாழாய்ப்போக; பஹீ-ஜ்ஞதாம்—எமது பரந்த அறிவு; திக்—பாழாய்ப்போக; குலம்—எங்கள் உயர்குலம்; திக்—பாழாய்ப் போக; க்ரியா-தாக்ஷ்யம்—வேள்விச் சடங்குகளில் உள்ள திறமை; விமுகா:—பகைமை; யே—யார்; து—எனினும்; அதோக்ஷஜே—உன்னத முழுமுதற் கடவுளுக்கு.

(அந்தணர்கள் கூறினர்:) எமது மூன்றுவகைப் பிறப்பும். பிரம்மச்சரிய விரதமும், உயர்கல்வியும் பாழாய்ப் போகவும்! எமது உயர் குலப்பின்னணியும், வேதச் சடங்குகளில் உள்ள தேர்ந்த ஞானமும் பாழாய்ப் போகவும்! இவையனைத்தும் நிந்தனைக்குரியதே! ஏனென்றால் நாங்கள் முழுதற்கடவுளை விரோதித்துக் கொண்டோம்.

பதம் 10.23.41
நூனம் பகவதோ மாயா யோகினாம் அபி மோஹினீ
யத் வயம் குரவோ ந்ரூணாம் ஸ்வார்தே முஹ்யமாஹே த்விஜா:

நூனம்—உண்மையில்; பகவத:—பரமபுருஷ பகவானின்; மாயா—மாயாசக்தி; யோகினாம்—பெரிய யோகிகளுக்கு; அபி—கூட; மோஹினீ—மதிமயக்கும்; யத்—இருந்தும்; வயம்—நாங்கள்; குரவ:—ஆன்மீகக்குருக்கள்; ந்ருணாம்—பொதுவாகக் சமுதாயத்தின்; ஸ்வ-அர்தே—எங்கள் உண்மை நலன் பற்றி; முஹ்யாமஹே—மதிமயக்கத்திற்காளாகி விட்டோம்; த்விஜா:—அந்தணர்கள்.

பரமபுருஷ பகவானின் மாயா சக்தி மகாயோகிகளையே மதி மயங்கச் செய்துவிடும். அப்படியிருக்க நாங்கள் எம்மாத்திரம்? அந்தணர்களாதலினால் நாங்கள் மனித சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினர்க்கும் ஆன்மீகக் குருக்களாக இருக்கின்றோம். இருந்தும் எங்களது உண்மையான நலன் என்ன என்பதில் நாங்களும் குழப்பமடைந்துவிட்டோம்.

பதம் 10.23.42
அஹே பஸ்யத நாரீணம் அபி க்ருஷ்ணே ஜகத் குரௌ
துரந்த-பாவம் யோ ’வித்யன் ம்ருத்யு-பாஸான் க்ருஹாபிதான்

அஹோ பஸ்யத—சற்றுப்பாருங்கள்; நாரீணாம்—இப்பெண்களின்; அபி—கூட; க்ருஷ்ணே—பகவான் கிருஷ்ணருக்கு; ஜகத்-குரெள—ஜகத் குரு; துரந்த—அளவற்ற; பாவ—பக்தி; ய:—இது; அவித்யத்—நொறுங்கிவிட்டது; ம்ருத்யு—மரணத்தின்; பாஸான்—கட்டுக்களை; க்ருஹ-அபிதான்—இல்லறவாழ்க்கை எனப்படும்.

ஜகத்குருவான பகவான் கிருஷ்ணரின்மீது இப்பெண்கள் வைத்திருக்கும் அளவில்லாத அன்பினைச் சிறிது பாருங்கள்! அவர்களின் அந்த அன்பு இல்லற வாழ்வின் மீது உள்ள பற்று என்னும் அவர்களின் மரண பந்தங்களை உடைத்து நொறுக்கிவிட்டது.

பதங்கள் 10.23.43 – 10.23.44
நாஸாம் த்விஜாதி-ஸம்ஸ்காரோ ந நிவாஸோ குராவ் அபி
ந தபோ நாத்ம-மீமாம்ஸா ந ஸௌசம் ந க்ரியா: ஸீபா:

ததாபி ஹி உத்தம:-ஸ்லோகே க்ருஷ்ணே யோகேஸ்வரேஸ்வரே
பக்திர் த்ருடா ந சாஸ்மாகம் ஸம்ஸ்காராதிமதாம் அபி

ந—இல்லை; ஆஸாம்—அவர்களிடத்தில்; த்விஜாதி-ஸம்ஸ்கார:—இருபிறப்பாளர் சமுதாயத்திற்குரியதான தூய்மை செய்யும் சடங்குகள்; ந—இல்லை; நிவாஸ:—இருப்பிடம்; குரௌ—ஆன்மீகக் குருவின் ஆஸ்ரமத்தில் (அதாவது பிரம்மச்சரிய வாழ்க்கை); அபி—கூட; ந—இல்லை; தப:—தவங்கள் செய்தல்; ந—இல்லை; ஆத்ம-மீமாம்ஸா—ஆத்மாவின் உண்மைநிலை பற்றிய தத்துவ விசாரணை; ந—இல்லை; ஸௌசம்—தூய்மைச் சடங்குகள்; ந—இல்லை; க்ரியா:—சடங்குச் செயல்கள்; ஸீபா:—புனிதம்; ததா அபி—இருந்தபோதிலும்; ஹி—உண்மையில்; உத்தம-ஸ்லோகே—வேதங்களின் மேன்மையான மந்திரங்களால் அவரது கீர்த்திகள் ஓதப்படுகின்றன; க்ருஷ்ணே—பகவான் கிருஷ்ணருக்கு; யோக-ஈஸ்வர-ஈஸ்வரே—யோகஸித்திகளின் தலைவர்களுக்கெல்லாம் தலைவர்; பக்தி:—தூய பக்தித் தொண்டு; த்ருடா—உறுதியான; ந—இல்லை; ச—இதற்கு மாறாக; அஸ்மாகம்—நாம்; ஸம்ஸ்கார-ஆதி-மதாம்—தூய்மை போன்றவை உடையவர்கள்; அபி—இருந்தபோதிலும்.

இப்பெண்கள் இருபிறப்பாளருக்குரிய தூய்மை செய்யும் சடங்குகளை மேற்கொண்டதில்லை. ஆன்மிகக் குருவின் ஆஸ்ரமத்தில் பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்ந்ததில்லை. தவங்கள் எதுவும் செய்ததில்லை. ஆத்மாவின் உண்மை நிலைபற்றிய தத்துவ விசாரணை செய்ததில்லை, தூய்மை செய்யும் சடங்குகளையோ அல்லது புனிதச்சடங்குகளையோ செய்ததில்லை. இருந்தபோதிலும் இவர்கள் வேதமந்திரங்களினால் ஓதப்படும் கீர்த்திகளையுடையவரும், யோக ஸித்திகளின் தலைவர்களுக்கெல்லாம் தலைவராகவும் விளங்கும் பகவான் கிருஷ்ணரின் மீது உறுதியான பக்தியுடையவர்களாக இருக்கின்றனர். இதற்கு மாறாக நாம் மேலே கூறப்பட்டுள்ள முறைகள் அனைத்தையும் மேற்கொண்ட போதிலும் நம்மிடம் பகவான்மீது அதுபோன்ற உறுதியான பக்தி இல்லை.

பதம் 10.23.45
நனு ஸ்வார்த-விமூடானாம் ப்ரமத்தானாம் க்ருஹேஹயா
அஹோ ந: ஸ்மாரயாம் ஆஸ கோப வாக்யை: ஸதாம் கதி:

நனு—உண்மையில்; ஸ்வ-அர்த—அவர்களது உண்மையான நன்மையினைப் பற்றி; விமூடானாம்—குழப்பமடைந்திருந்தனர்; ப்ரமத்தானாம்—மதிமயக்கமடைந்திருந்தனர்; க்ருஹ-ஈஹயா—தமது இல்லறக் கடமைகளுடன்; அஹோ—அந்தோ; ந:—நாம்; ஸ்மாரயாம் ஆஸ—அவர் நிறைவுறுத்தினார்; கோப-வாக்யை:—ஆயர்குலச் சிறுவர்களின் வார்த்தைகளினால்; ஸதாம்—உன்னத ஆத்மாக்களின்; கதி:—இறுதி இலக்காக.

உண்மையில் இல்லறக் கடமைகளில் நாம் பற்றுடையவர்களாக இருந்ததினால், நமது வாழ்வின் உண்மை இலட்சியத்திலிருந்து நாம் முற்றிலும் விலகிவிட்டோம். ஆனால் இப்போது பாருங்கள்; சாதாரண ஆயர்குலச் சிறுவர்களின் வார்த்தைகளின் மூலம் உண்மையான யோகிகள் அனைவரின் இறுதி இலக்கு எது என்பதைப் பகவான் நமக்கு எவ்வாறு நினைவுறுத்தியிருக்கிறார் என்று.

பதம் 10.23.46
அன்யதா பூர்ண-காமஸ்ய கைவல்யாதி-ஆஸிஷாம் பதே:
ஈஸிதவ்யை: கிம் அஸ்மாபிர் ஈஸஸ்யைதத் விடம்பனம்

அன்யதா—இல்லையேல்; பூர்ண-காமஸ்ய—எல்லா விருப்பங்களும் பூர்த்தி செய்யப்பட்ட அவரின்; கைவல்ய—முக்தியின்; ஆதி—மற்றும் பிற; ஆஸிஷாம்—ஆசிகள்; பதே:—தலைவர்; ஈஸிதவ்யை:—கட்டுப்படுத்துவதற்கு உரியவர்களுடன்; கிம்—என்ன; அஸ்மாபி:—நம்மிடம்; ஈஸஸ்ய—பரம கட்டுப்பாட்டாளரான அவரின்; ஏதத்—இது; விடம்பனம்—பாசாங்கு.

இல்லையேல் பரம நெறியாளரான பகவான் அவரது அனைத்து விருப்பங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது, அவரே முக்திக்கும், உன்னத ஆசிகள் அனைத்திற்கும் தலைவராவார். அவரது கட்டுப்பாட்டில் எப்போதும் இருக்கும் நம்மிடம் ஏன் பாசாங்கு செய்ய வேண்டும்?

பதம் 10.23.47
ஹித்வான்யான் பஜதே யம் ஸ்ரீ: பாத-ஸ்பர்ஸாஸயாஸக்ருத்
ஸ்வாத்ம-தோஷாபவர்கேன தத்-யாச்ஞா ஜன-மோஹினீ

ஹித்வா—துறந்து; அன்யான்—பிற; பஜதே—வழிபடுகிறான்; யம்—பகவானை; ஸ்ரீ:—மகாலட்சுமி; பாத-ஸ்பர்ஸ—அவரது திருவடித் தாமரைகளின் ஸ்பரிசத்திற்காக; ஆஸயா—ஆசையுடன்; அஸக்ருத்—தொடர்ந்து; ஸ்வ-ஆத்ம—அவளின்; தோஷ—குற்றங்கள்; (நிலையாமை மற்றும் பெருமை); அபவர்கேன—தவிர்த்து; தத்—அவரது; யாச்ஞா—இரத்தல்; ஜன—சாதாரண மனிதர்கள்; மோஹினீ—மதிமயங்கச் செய்தல்.

அவரது தாமரைத் திருவடிகளின் ஸ்பரிசத்திற்காக, அதிர்ஷ்ட தேவதையான மகாலட்சுமி எல்லாவற்றையும் துறந்து, தனது பெருமை மற்றும் நிலையாமை என்னும் குற்றங்களையும் தவிர்த்துத் தொடர்ந்து அவரை வழிபடுகிறாள். அவர் தானம் கேட்டதானது நிச்சயம் எல்லோரையும் குழப்பும் ஒரு செயலாகும்.

பதஙகள் 10.23.48 – 10.23.49
தேஸ: கால: ப்ருதக் த்ரவ்யம் மந்த்ர-தந்த்ரத்விஜோ ‘க்ஞயை:
தேவதா யஜமானஸ் ச க்ரதுர் தர்மஸ் ச யன்-மய:

ஸ ஏவ பகவான் ஸாக்ஷாத் விஷ்ணுர் யோகேஸ்வரேஸ்வர:
ஜாதோ யதுஷ்வ் இதி ஆஷ்ருண்ம ஹி அபி மூடா ந வித்மஹே

தேஸ:—இடம்; கால:—காலம்; ப்ருதக்-த்ரவ்யம்—சில குறிப்பிட்ட பொருட்கள்; மந்த்ர—வேதமந்திரங்கள்; தந்த்ர—குறிப்பிட்ட சடங்குகள்; ருத்விஜ:—புரோகிதர்கள்; அக்ஞயை:—யாகாக்னிகள்; தேவதா—ஆதிபத்தியத் தேவர்கள்; யஜமான:—செய்பவர்; ச—மற்றும்; க்ரது:—அர்ப்பணிப்பு; தர்ம:—புண்ணியப் பலன்கள்; ச—மற்றும்; யத்—அவரது; மய:—உருவாக்குகின்ற; ஸ:—அவர்; ஏவ—உண்மையில்; பகவான்—முழுமுதற் கடவுள்; ஸாக்ஷாத்—நேரடியாக; விஷ்ணு:—பகவான் விஷ்ணு; யோக-ஈஸ்வர-ஈஸ்வர:—யோகேஸ்வரர்களின் ஈஸ்வரர்; ஜாத:—பிறப்பெடுத்து; யதுஷு:—யதுகுலத்தில்; இதி—இவ்வாறு; ஆஸ்ருண்ம—நாம் கேள்விப்பட்டிருந்தும்; ஹி—உறுதியாக; அபி—இருந்தபோதிலும்; மூடா:—மூடர்கள்; ந வித்மஹே—நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

யாகம் செய்வதற்குத் தேவையான-தூய்மையான இடம், காலம், பல்வேறு பூஜைப் பொருட்கள், வேதமந்திரங்கள், குறிப்பிட்ட சடங்குகள், புரோகிதர்கள் மற்றும் யாக அக்னிகள், தேவர்கள், யாகத்தின் தலைவன், புனித அர்ப்பணிப்புக்கள், மற்றும் அதனால் பெறும் புண்ணிய பலன்கள்-போன்ற அனைத்தும் அவரது வளங்களின் வெளிப்பாடேயாகும். முழுமுதற்கடவுளும், யோக ஸித்திகளின் தலைவர்கட்கெல்லாம் தலைவராக விளங்குபவருமான பகவான் விஷ்ணு யதுகுலத்தில் அவதரித்திருக்கின்றார் என்று கேள்விப்பட்டும், அவர்தான் ஸ்ரீல கிருஷ்ணர் என்பதை அறிந்து கொள்ளாத நாம் மூடர்களாவோம்.

பதம் 10.23.50
தஸ்மை நமோ பகவதே க்ருஷ்ணாயாகுண்ட-மேதஸே
யன்-மாயா-மோஹித-தியோ ப்ரமாம: கர்ம-வர்த்மஸீ

தஸ்மை—அவருக்கு; நம:—வந்தனங்கள்; பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; க்ருஷ்ணாய—பகவான் கிருஷ்ணர்; அகுண்ட மேதஸே—அவரது புத்திக் கூர்மை வரையறைக்கு உட்பட்டதல்ல; யத்-மாயா—அவரது மாயா சக்தியால்; மோஹித—குழப்பமுற்று; திய:—அவர்களின் மனங்கள்; ப்ரமாம:—நாம் அலைந்து கொண்டிருக்கின்றோம்; கர்ம-வர்தமஸீ—பலன் தரும் செயல் பாதையில்.

முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணரை நாம் வணங்குவோம். அவரது புத்தி குழப்பத்திற்காளாவதில்லை, மாறாக அவரது மாயா சக்தியால் சூழப்பட்டிருக்கும் நாமோ பலன்தரும் செயலின் பாதையில் அலைந்து கொண்டிருக்கின்றோம்.

பதம் 10.23.51
ஸ வை ந ஆத்ய: புருஷ: ஸ்வ-மாயா-மோஹிதாத்மனாம்
அவிஜ்ஞாதானுபாவானாம் க்ஷந்தும் அர்ஹதி அதிக்ரமம்

ஸ:—அவர்; வை—உண்மையில்; ந:—நமது; ஆத்ய:—ஆதிபகவான் ஆன; புருஷ:—முழுமுதற்கடவுள் ஆவார்; ஸ்வ—மாயா-மோஹித-ஆத்மனாம்—அவரது மாயா சக்தியால் குழப்பப்பட்ட மனதினை உடையவர்களின்; அவிஜ்ஞாத—புரிந்து கொள்ளவில்லை; அனுபாவானாம்—அவரது செல்வாக்கினை; க்ஷந்தும்—மன்னித்தல்; அர்ஹதி—வேண்டும்; அதிக்ரமம்—குற்றம்.

பகவான் கிருஷ்ணரின் மாயா சக்தியினால் குழப்பமுற்றதின் காரணமாக முழுமுதற் கடவுளான அவரது செல்வாக்கினை நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. நமது குற்றத்தினை அவர் அன்புடன் மன்னித்தருள்வார் என்று இப்போது நாங்கள் நம்புகின்றோம்.

பதம் 10.23.52
இதி ஸ்வாகம் அனுஸ்ம்ருத்ய க்ருஷ்ணே தே க்ருத-ஹேலனா:
திக்ருக்ஷவோ வ்ரஜம் அத கம்ஸாத் பீதா ந சாசலன்

இதி—இவ்வாறு; ஸ்வ-அகம்—அவர்களின் குற்றத்தினை; அனுஸ்ம்ருத்ய—நினைத்துப் பார்த்து; க்ருஷ்ணே—பகவான் கிருஷ்ணருக்கு எதிரான; தே—அவர்கள்; க்ருதஹேலனா:—அவமதித்தல்; தித்ருக்ஷவ:—காணவிரும்பினர்; வ்ரஜம்—நந்தமகாராஜாவின் கிராமமான விரஜத்திற்கு; அத—பிறகு; கம்ஸாத்—கம்சனின்; பீதா:—அஞ்சி; ந—இல்லை; ச—மற்றும்; அசலன்—செல்ல.

பகவான் கிருஷ்ணரைப் புறக்கணித்ததினால் தாம் செய்த பாவத்தினை எண்ணி வருந்திய அந்தணர்கள் அவரைத் தரிசிக்க வேண்டுமென்று பெரும் ஆவல் கொண்டனர். ஆயினும் கம்சனுக்கு அஞ்சி அவர்கள் விரஜத்திற்குச் செல்லவில்லை.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “அந்தணர்கள் மனைவியர் ஆசிர்வதிக்கப்படுதல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்து மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare