அத்தியாயம் – 33
ராஸ நடனம்
பதம் 10.33.1
ஸ்ரீ-ஸுக உவாச
இத்தம் பகவதோ கோப்ய: ஸ்ருத்வா வாச: ஸு-பேஸலா:
ஜஹுர் விரஹ-ஜம் தாபம் தத்-அங்கோபசிதாஸிஷ:

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகவே கோஸ்வாமி கூறினார்; இத்தம்—இவ்வாறு; பகவத:—முழுமுதற்கடவுளின்; கோப்ய:—கோபியர்கள்; ஸ்ருத்வா—கேட்ட; வச:—வார்த்தைகள்; ஸு-பேஸலா:—மிகவும் இனிமையுடைய; ஜஹு:—அவர்கள் நீங்கினர்; விரஹ-ஜம்—பிரிவு உணர்ச்சியில் பிறந்த அவர்களின்; தாபம்—துன்பத்தினை; தத்—அவரது; அங்க—அங்கங்களை (தொடுவதினால்); உபசித—நிறைவேறியது; ஆஸிஷ:—அவர்களின் ஆசைகள்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: முழுமுதற்கடவுள் கூறிய இவ்வினிய சொற்களைக் கேட்டவுடன் ஆயர்குலப் பெண்கள், அவரைப் பிரிந்ததின் காரணமாகத் தாம் அனுபவித்த துன்பத்தினை மறந்தனர். அவரது உடலின் உன்னத அங்கங்களைத் தொட்டதின் மூலம் அவர்கள் தமது ஆசைகள் அனைத்தும் நிறைவேறியதாக உணர்ந்தனர்.

பதம் 10.33.2
தத்ராரபத கோவிந்தோ ராஸ-க்ரீடாம் அனுவ்ரதை:
ஸ்த்ரீ-ரத்னைர் அன்வித: ப்ரீதைர் அன்யோன்யாபத்த-பாஹுபி:

தத்ர—அங்கே; ஆரபத—தொடங்கினார்; கோவிந்த:—பகவான் கிருஷ்ணர்; ராஸ-க்ரீடாம்—ராஸ நடன லீலைகளை; அனுவ்ரதை:—நம்பிக்கைக்குரியவர்களால் (கோபியர்கள்); ஸ்த்ரீ—பெண்களின்; ரத்னை:—இரத்தினங்கள்; அன்வித:—இணைந்தனர்; ப்ரீதை:—திருப்தியற்றவர்களாக; அன்யோன்ய—ஒருவரோடு மற்றொருவர்; ஆபத்த—கோர்த்துக் கொண்டனர்; பாஹுபி:—தங்கள் கரங்களை.

பின்னர் யமுனை நதிக்கரையில் பகவான் கோவிந்தன், தங்கள் கரங்களை மகிழ்ச்சியுடன் கோர்த்துக் கொண்டு நின்ற, நம்பிக்கையுடையவர்களும், பெண்களின் இரத்தினங்களாகத் திகழ்ந்தவர்களுமான கோபியர்களுடன் சேர்ந்து ராஸ நடன லீலையைத் தொடங்கினார்.

பதம் 10.33.3
ராஸோத்ஸவ: ஸம்ப்ரவ்ருத்தோ கோபி-மண்டல-மண்டித:
யோகேஸ்வரேண க்ருஷ்ணேன தாஸாம் மத்யே த்வயோர் த்வயோ:
ப்ரவிஷ்டேன க்ருஹீதானாம் கண்டே ஸ்வ-நிகடம் ஸ்த்ரிய:
யம் மன்யேரன் நபஸ் தாவத் விமான-ஸத-ஸங்குலம்
திவௌகஸாம் ஸ-தாராணாம் ஔத்ஸுக்யாபஹ்ருதாத்மனாம்

ராஸ—ராஸ நடனத்தின்; உத்ஸவ:—உற்சவம்; ஸம்ப்ரவ்ருத்த:—தொடங்கியது; கோபீ-மண்டல—கோபியர்களின் வட்டத்தினால்; மண்டித:—அலங்கரிக்கப்பட்டது; யோக—யோகத்தின்; ஈஸ்வரேண—பரமநெறியாளர்; க்ருஷ்ணேன—பகவான் கிருஷ்ணர்; தாஸாம்—அவர்களின்; மத்யே—மத்தியில்; த்வயோ: த்வயோ:—ஒவ்வொரு ஜோடிக்கும் இடையில்; ப்ரவிஷ்டேனே—பிரவேசித்தார்; க்ருஹீதானாம்—பிடிக்கப்பட்டனர்; கண்டே—கழுத்துக்களில்; ஸ்வ-நிகடம்—தமக்கு அடுத்திருந்தாக; ஸ்த்ரிய:—பெண்கள்; யம்—அவரை; மன்யேரன்—கருதினர்; நப:—வானத்தில்; தாவத்—அச்சமயம்; விமான—விமானங்கள்; ஸத—நூற்றுக்கணக்கில்; ஸங்குலம்—கூடின; திவ—சொர்க்க லோகங்களில்; ஓகஸாம்—வசிப்பவர்கள்; ஸ—துணையுடன்; தாராணாம்—தங்கள் துணைவிகளுடன்; ஔத்ஸுக்ய—ஆர்வமுடன்; அபஹ்ருத—சுமந்துகொண்டு; ஆத்மானாம்—தங்கள் மனங்களை.

வட்டமிட்டு நின்றுகொண்டிருந்த கோபியர்களுடன் ராஸ நடன உற்சவம் ஆரம்பித்தது. பகவான் கிருஷ்ணர் தம்மைப் பலராக விரித்துக் கொண்டு இருகோபியர்களுக்கிடையில் நின்று கொண்டார். யோகேஸ்வரரான பகவான் தமது கரங்களை ஒவ்வொரு கோபியின் கழுத்தைச் சுற்றிப்போட்டவுடன், அவர்கள் ஒவ்வொருவரும் கிருஷ்ணர் தன்னருகில் மட்டுமே நின்று கொண்டிருக்கின்றார் என்று நினைத்தனர். ராஸ நடனத்தைக் காண வேண்டும் என்னும் பேராவலில் தேவர்கள் தங்கள் துணைவியருடன் நூற்றுக்கணக்கான புஷ்பக விமானங்களில் பறந்து வந்து வானில் குழுமினர்.

பதம் 10.33.4
ததோ துந்துப்யோ நேதுர் நிபேது: புஷ்ப-வ்ருஷ்டய:
ஜகுர் கந்தர்வ-பதய: ஸ-ஸ்த்ரீகாஸ் தத்-யஸோ ‘மலம்

தத:—பின்னர்; துந்துப்ய:—துந்துபிகள்; நேது:—ஒலித்தன; நிபேது:—வீழ்ந்தன; புஷ்ப—மலர்களின்; வ்ருஷ்டய:—மழை; ஜகு:—அவர்கள் பாடினர்; கந்தர்வ-பதய:—கந்தவர்களின் தலைவர்கள்; ஸ-ஸ்த்ரீகா:—தங்கள் துணைவியருடன்; தத்—அவரது (பகவான் கிருஷ்ணரின்); யஸ:—கீர்த்திகளை; அமலம்—குற்றமற்ற.

பின்னர் வானிலிருந்து மலர்மாரி பொழிய துந்துபிகள் முழங்கின. கந்தர்வர்களின் தலைவர்கள் தமது துணைவியருடன் சேர்ந்து பகவான் கிருஷ்ணரின் குற்றமற்ற கீர்த்திகளைப் போற்றிப்பாடினர்.

பதம் 10.33.5
வளயானாம் நூபுராணாம் கிங்கிணீனாம் ச யோஷிதாம்
ஸ-ப்ரியாணாம் அபூச் சப்தஸ் துமுலோ ராஸ-மண்டலே

வளயானாம்—கைவளைகளில்; நூபுராணாம்—கால் சலங்கைளின்; கிண்கிணீனாம்—கோபியர்கள் தங்கள் இடுப்பில் அணிந்திருந்த சலங்கைகள் உடைய மேகலை; ச—மற்றும்; யோஷிதாம்—பெண்களின்; ஸ-ப்ரியாணாம்—அவர்கள் தங்கள் பிரியமானவருடன்; அபூத்—அங்கே; ஸப்த:—ஓர் ஓசை; துமுல:—ஆரவாரம்; ராஸ-மண்டலே—ராஸ நடனத்தின் வளையத்தில்.


ராஸ நடனத்தின் வளையத்தில் கோபியர்கள் தங்கள் பிரியமான கிருஷ்ணருடன் ஆடியபொழுது அவர்களின் கை வளையல்களிலிருந்தும், கால் சலங்கைகளிலிருந்தும், இடுப்பில் அணிந்திருந்த சலங்கைகள் பொருந்திய மேகலைகளிலிருந்தும் ஆரவாரமிக்க ஓசை எழுந்தது.

பதம் 10.33.6
தத்ரதிஸுஸுபே தாபிர் பகவான் தேவகீ-ஸுத:
மத்யே மணீனாம் ஹைமானாம் மஹா-மரகதோ யதா

தத்ர—அங்கே; அதிஸுஸுபே—மிகுந்த ஒளியுடையவராகத் தோன்றினார்; தாபி:—அவர்களுடன்; பகவான்—பரமபுருஷ பகவான்; தேவகீ-ஸுத:—தேவகி மைந்தரான கிருஷ்ணர்; மத்யே—மத்தியில்; மாணினாம்—ஆபரணங்களின்; ஹைமானாம்—பொன்; மஹா—சிறந்த; மரகத:—மரகதம்; யதா—போன்று.

நடமாடும் கோபியர்களின் மத்தியில் பகவான் கிருஷ்ணர், பொன்னாபரணத்தின் நடுவே பதிக்கப்பெற்ற விலைமதிப்பற்ற மரகதக் கல்லைப் போல் ஒளியுடையவராகத் தோன்றினார்.

பதம் 10.33.7
பாத-ந்யாஸைர் புஜ-விதுதிபி: ஸ-ஸ்மிதைர் ப்ரூ-விலானஸர்
பஜ்யன் மத்யைஸ் சல-குச-படை: குண்டலைர் கண்ட-லோலை:
ஸ்வித்யன்-முக்ய: கவர-ரஸனாக்ரந்தய:
க்ருஷ்ண-வத்வோ-காயந்த்யஸ் தம் தடித இவ தா மேக-சக்ரே விரேஜு:

பாத—அவர்களின் பாதங்களின்; ந்யாஸை:—வைத்தலால்; புஜ—அவர்கள் கரங்களின்; விதுதிபி:—அபிநயங்களால்; ஸ-ஸ்மிதை:—புன்னகையுடன்; ப்ரூ—அவர்கள் புருவங்களின்; விலானஸ:—வேடிக்கையான அசைவுகளினால்; பஜ்யன்—வளைந்தன; மத்யை:—அவர்களின் இடைகள்; சல—அசைந்தன; குச—மார்பகங்களை மூடியிருந்த; படை:—ஆடைகளினால்; குண்டலை:—செவிக்குண்டலங்களினால்; கண்ட—அவர்கள் கன்னங்களின்மேல்; லோலை:—உருண்டன; ஸ்வித்யன்—வியர்வை அரும்பின; முக்ய:—அவர்கள் முகங்களில்; கவர—அவர்கள் கூந்தலின் பின்னல் சடைகள்; ரஸனா—அவர்கள் மேகலைகள்; ஆக்ரந்தய:—இறுக்கமாக முடிக்கப்பட்டிருந்தன; க்ருஷ்ண-வத்வ:—பகவான் கிருஷ்ணரின் பிரிய சகிகள்; காய்ந்த்ய:—பாடினர்; தம்—அவரைப் பற்றி; தடித:—மின்னல் கீற்றுக்களை; இவ—போன்று; தா:—அவர்கள்; மேக-சக்ரே—மேகக் கூட்டத்தில்; விரேஜு:—ஒளிர்ந்தனர்.

கோபியர்கள் கிருஷ்ணரைப் போற்றிப் பாடியபொழுது அவர்கள் பாதங்கள் நடமாடின, கைகள் அபிநயித்தன, புருவங்கள், வேடிக்கையான புன்னகையுடன் அசைந்தன. அவர்கள் பின்னல் சடைகளும், இடையிலுள்ள மேகலைகளும் இறுக்கமாக முடிக்கப் பெற்றிருந்தன. அவர்கள் முகங்களில் வியர்வை முத்துக்கள் அரும்பின, அவர்கள் காதுகளில் அணிந்திருந்த குண்டலங்கள் கன்னங்களில் ஊசலாடின. பகவான் கிருஷ்ணரின் பிரிய சகிகள் மேகக்கூட்டத்தினிடையே மின்னல் கீற்றுக்களாக ஒளிர்ந்தனர்.

பதம் 10.33.8
உச்சைர் ஜகுர் ந்ருத்யமானா ரக்த-கண்ட்யோ ரதி-ப்ரியா:
க்ருஷ்ணாபிமர்ஸ-முதிதா யத்-கீதேனேதம் ஆவ்ருதம்

உச்சை:—உரத்த குரலில்; ஜகு:—அவர்கள் பாடினர்; ந்ருத்யமானா:—ஆடும்பொழுது; ரக்த—வர்ணம் தீட்டப்பட்ட; கண்ட்ய:—அவர்களின் தொண்டைகள்; ரதி—காதல் இன்பம்; ப்ரியா:—அர்ப்பணிக்கப்பட்டு; க்ருஷ்ண-அபிமர்ஸ—பகவான் கிருஷ்ணரின் ஸ்பரிசத்தினால்; முதிதா:—மகிழ்ச்சியுடன்; யத்—அவர்களின்; கீதேன—பாடியதினால்; இதம்—இப்பிரபஞ்சம் முழுவதும்; ஆவ்ருதம்—வியாபிக்கப்பட்டது.

தமது தொண்டைகளில் பல்வேறு வண்ணங்களைத் தீட்டியிருந்த கோபியர்கள், காதலின்பத்தினை அனுபவித்து மகிழ்வதாக உரத்த குரலில் பாடிக்கொண்டு ஆடினர். கிருஷ்ணரின் ஸ்பரிசத்தினால் அவர்கள் கழிபேருவகை அடைந்தனர். அவர்கள் பாடிய பாடல்கள் இப்பிரபஞ்சம் முழுவதும் வியாபித்தது.

பதம் 10.33.9
காசித் ஸமம் முகுந்தேன ஸ்வர-ஜாதீர் அமிஸ்ரிதா:
உன்னின்யே பூஜிதா தேன ப்ரீயதா ஸாது ஸாத்வ் இதி
தத் ஏவ த்ருவம் உன்னின்யே தஸ்யை மானம் ச பஹு அதாத்

காசித்—ஒரு கோபி; ஸமம்—இணையாக; முகுந்தேன—பகவான் கிருஷ்ணருடன்; ஸ்வர-ஜாதீ:—ஸ்வரவரிசைகள்; அமிஸ்ரிதா:—கிருஷ்ணரின் பாடலைக் குழப்பாது; உன்னின்யே—அவள் ஓங்கி ஒலித்தாள்; பூஜிதா—பாராட்டப்பட்டாள்; தேன—அவரால்; ப்ரியதா—அவர் மகிழ்ச்சியுற்றார்; ஸாது ஸாது இதி—”நன்று” “நன்று” என்று கூறினார்; தத் ஏவ—அதே (ஸ்வரத்தினை); த்ருவம்—ஒரு குறிப்பிட்ட ஸ்தாயியில்; உன்னின்யே—பாடினாள் (மற்றொரு கோபி); தஸ்யை—அவளுக்கு; மானம்—சிறப்புமரியாதை; ச—மற்றும்; பஹு—அபரிமிதமாக; அதாத்—அவர் அளித்தார்.

ஒரு கோபி கிருஷ்ணருடன் சேர்ந்து பாடும்பொழுது இனிமையான ஸ்வர வரிசைகளைப் பாடினாள், அது அவருடைய பாடலுக்கு இசைவாகவும் அதே சமயம் உச்சஸ்தாயியிலும் ஒலித்தது. அவளது திறமையில் மகிழ்ச்சியுற்ற பகவான் அவளைப் பாராட்டும் வண்ணம் “நன்று! நன்று!” என்று கூறினார். அதே ஸ்வரத்தினை மற்றொரு கோபி ஒரு விசேஷ ஸ்தாயியில் பாடினாள். கிருஷ்ணர் அவளையும் பாராட்டினார்.

பதம் 10.33.10
காசித் ராஸ-பரிஸ்ராந்தா பார்ஸ்வ-ஸ்தஸ்ய கதா-ப்ருத:
ஜக்ராஹ பாஹுனா ஸ்கந்தம் ஸ்லதத்-வளய-மல்லிகா

காசித்—வேறொரு கோபி; ராஸ—ராஸ நடனத்தினால்; பரிஸ்ராந்த—களைப்புற்றாள்; பார்ஸ்வ—அவளருகில்; ஸ்தஸ்ய—நின்று கொண்டிருந்த; கதா-ப்ருத:—கையில் கோலுடன் நின்று கொண்டிருந்த கிருஷ்ணரை; ஜக்ரா:—பிடித்துக்கொண்டாள்; பாஹுனா—தனது கரத்தினால்; ஸ்கந்தம்—தோள்களை; ஸ்லதத்—நெகிழ்ந்தன; வளய—அவளுடைய வளையல்கள்; மல்லிகா—(கூந்தலிலிருந்த) மல்லிகை மலர்கள்.

ராஸ நடனமாடிக் களைப்புற்ற ஒரு கோபி, கையில் கோலுடன் தன் அருகில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணரை நோக்கித் திரும்பி தனது கைகளால் அவரது தோள்களைப் பற்றிக் கொண்டாள். அவள் ஆடிய நடனம் அவள் கைகளில் அணிந்திருந்த வளையல்களையும், கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மலர்களையும் நெகிழச் செய்தது.

பதம் 10.33.11
தத்ரைகாம்ஸ-கதம் பாஹும் க்ருஷ்ணஸ்யோத்பல-
ஸௌரபம் சந்தனாலிப்தம் ஆக்ராய ஹ்ருஷ்ட-ரோம சுசும்பஹ

தத்ர—அங்கே; ஏகா —ஒருத்தி (கோபி); அம்ஸ—தனது தோள்களின் மீது; கதம்—இட்டுக்கொண்டாள்; பாஹும்—கரத்தினை; க்ருஷ்ணஸ்ய—பகவான் கிருஷ்ணரின்; உத்பல—நீலோத்பல மலர் போன்ற; ஸௌரபம்—அதன் நறுமணத்துடன்; சந்தன—சந்தனமும்; ஆலிப்தம்—பூசப்பட்ட; ஆக்ராய—முகர்ந்தாள்; ஹ்ருஷ்ட—குத்திட்டுநின்றன; ரோம—அவள் உடலில் உள்ள ரோமங்கள்; சுசும்ப ஹ—அவள் முத்தமிட்டாள்.

நீலோத்பல மலரின் நறுமணமுடையதும், சந்தனம் பூசப்பட்டதுமான தனது திருக்கரத்தினைப் பகவான் கிருஷ்ணர் ஒரு கோபியின் தோள்களின் மீது வைத்தார். அக்கோபி அதன் இனிய நறுமணத்தினை முகர்ந்தவுடன் அவள் உடல் புளகமுற்று மகிழ்ச்சியில் ரோமங்கள் குத்திட்டு நின்றன. அவள் அவரது கரத்தினை முத்தமிட்டாள்.

பதம் 10.33.12
கஸ்யாஸ்சின் நாட்ய-விக்ஷிப்த குண்டல-த்விஷ-மண்டிதம்
கண்டம் கண்டே ஸந்ததத்யா: ப்ராதாத் தாம்பூல-சர்விதம்

கஸ்யாசித்—மற்றொரு கோபியின்; நாட்ய—நாட்டியத்தினால்; விக்ஷிப்த—ஆடியது; குண்டல—அவளது செவிக்குண்டலங்கள்; த்விஷ—பளபளப்புடன்; மண்டிதம்—அலங்கரிக்கப்பட்டு; கண்டம்—அவளுடைய கன்னம்; கண்டே—அவருடைய கன்னத்தின் மீது; ஸந்ததத்யா:—அவள் வைத்தாள்; ப்ராதாத்—கவனமுடன் கொடுத்தார்; தாம்பூல—தாம்பூலம் (வெற்றிலைப்பாக்கு); சர்விதம்—சுவைத்த.

தனது காதுகளில் அணிந்திருந்த குண்டலங்களின் ஒளியினால் அழகு செய்யப்பட்ட தனது கன்னத்தினை ஒரு கோபி கிருஷ்ணரின் கன்னத்தின் மீது வைத்தாள். அக்குண்டலங்கள் அவள் ஆடும்பொழுது பளபளப்புடன் மின்னின. பிறகு கிருஷ்ணர் மிக்க கவனமுடன் அவளுக்கு தான் சுவைத்த தாம்பூலத்தை அளித்தார்.

பதம் 10.33.13
ந்ருத்யதீ காயதி காசித் கூஜன் நூபுர-மேகலா
பார்ஸ்வ-ஸ்தாச்யுத-ஹஸ்தாப்ஜம் ஸ்ராந்தாதாத் ஸ்தனயோ: ஸிலம்

ந்ருத்யதீ—அடி; காயதீ—பாடிய; காசித்—ஒரு கோபி; கூஜன்—ஒலித்தன; நூபுர—அவள் கால் சலங்கைகள்; மேகலா—மற்றும் அவளுடைய மேகலை; பார்ஸ்வஸ்த—அவள் அருகில் நின்று கொண்டிருந்த; அச்யுத—பகவான் கிருஷ்ணரின்; ஹஸ்த-அப்ஜம்—தாமரைக் கரத்தினை; ஸ்ராந்தா—களைப்புற்று; அதாத்—இட்டாள்; ஸ்தனயோ:—அவளுடைய மார்பகங்களை; ஸிலம்—மகிழ்ச்சியுடன்.

தனது கால்களில் அணிந்திருந்த சலங்கைகளும், இடையில் அணிந்திருந்த மேகலையும் சப்திக்க ஆடிப்பாடிய ஒரு கோபி சிறிது நேரத்தில் களைப்புற்றாள். அதனால் அவள் தனது மார்பகங்களைத் தன் அருகில் நின்று கொண்டிருந்த பகவான் அச்சுதனின் சுகமளிக்கும் தாமைரைக் கரங்களில் வைத்தாள்.

பதம் 10.33.14
கோப்யோ லப்த்வாச்யுதம் காந்தம் ஸ்ரிய ஏகாந்த-
வல்லபம் க்ருஹீத-கண்ட்யஸ் தத்-தோர்ப்யாம்
காயந்த்யஸ் தம் விஜஹ்ரிரே

கோப்ய:—கோபியர்கள்; லப்த்வா—எய்தப்பெற்று; அச்யுதம்—குற்றமற்ற பகவான்; காந்தம்—தங்கள் காதலராக; ஸ்ரிய:—அதிர்ஷ்ட தேவதை இலட்சுமியின்; ஏகாந்த—அவளுக்கு மட்டுமே உரிய; வல்லபம்—காதலர்; க்ருஹீத—பற்றினார்; கண்ட்யோ:—அவர்களின் கழுத்துக்களை; தத்—அவருடைய; தோர்ப்யாம்—கரங்களினால்; காயந்த்ய:—பாடியவர்கள்; தம்—அவரைப்பற்றி; விஜஹ்ரிரே—அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமி தேவிக்கு மட்டுமே உரிய காதலரான பகவான் அச்சுதனைத் தங்கள் ஆருயிர்க் காதலராக எய்தப் பெற்றமையினால் கோபியர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் கழுத்துக்களைத் தமது திருக்கரங்களினால் தாங்கியிருக்க, அவரது கீர்த்திகளை அவர்கள் பண்களாகப் பாடினர்.

பதம் 10.33.15
கர்ணோத்பலாலாக-விடங்க-கபோல-கர்ம-
வக்த்ர-ஸ்ரியோ வளய-நூபுர-கோஷ-வாத்யை:
கோப்ய: ஸமம் பகவதா நன்ருது: ஸ்வகேஸ-
ஸ்ரஸ்த-ஸ்ரஜோ ப்ரமர-காயக-ராஸ-கோஷ்ட்யாம்

கர்ண—அவர்கள் செவிகளின்மீது; உத்பல—தாமரை மலர்களினாலும்; அளக—அவர்களின் மயிர்க்குழல்கள்; விடங்க—அலங்கரித்தன; கபோல—அவர்களின் கன்னங்களில்; கர்ம—வியர்வை முத்துக்கள்; வக்த்ர—அவர்கள் முகங்களின்; ஸ்ரிய:—அழகு; வளய—அவர்கள் கைவளைகளின்; நூபுர—கால் சலங்கைகளின்; கோஷ—ஓசை; வாத்யை:—இசையாக ஒலித்தன; கோப்ய:—கோபியர்கள்; ஸமம்—இணைந்து; பகவதா—முழுமுதற்கடவுளுடன்; நன்ருது:—ஆடினர்; ஸ்வ—அவர்களின்; கேஸ—கேசத்திலிருந்து; ஸ்ரஸ்த—சிதறின; ஸ்ரஜ:—மாலைகள்; ப்ரமர—தும்பிகள் (வண்டுகள்); காயக—பாடகர்கள்; ராஸ—ராஸ நடனத்தின்; கோஷ்ட்யாம்—கூட்டத்தில்.

கோபியர்களின் செவிகளுக்குப் பின்னாலிருந்த தாமரை மலர்களும், அவர்களின் கன்னங்களை அலங்கரித்த மயிர்க் குழல்களும், வியர்வை முத்துக்களும் கோபியர்களின் முக எழிலை மேலும் அதிகரித்தன. அவர்கள் கால் சலங்கைகளிலிருந்தும், மேகலையிலிருந்தும் எழுந்த ஓசை இன்னிசையாக ஒலித்தது. அவர்கள் தலையில் சூடிய மாலைகளிலுள்ள மலர்கள் சிதறின. இவ்வாறு கோபியர்கள் ராஸ நடனம் நடைபெற்ற இடத்தில் வண்டுகள் இணைந்து பாட பரமபுருஷ பகவானுடன் சேர்ந்து ஆடினர்.

பதம் 10.33.16
ஏவம் பரிஷ்வங்க-கராபிமர்ஸ-
ஸ்நிக்தேக்ஷணோத்தாம-விலாஸ-ஹாஸை:
ரேமே ரமேஸோ வ்ரஜ-ஸுந்தரீபிர்
யதார்பக: ஸ்வ-பிரதிபிம்ப-விப்ரம:

ஏவம்—இவ்வாறு; பரிஷ்வங்க—தழுவிக் கொண்டார்; கர—அவரது கரங்களினால்; அபிமர்ஸ—தொட்டு; ஸ்நிக்த—பிரியமுடன்; ஈக்ஷண—பாவைகளுடன்; உத்தாம—விரிந்த; விலாஸ—வேடிக்கையான; ஹாஸை:—புன்னகையுடன்; ரேமே—அவர் இன்பமடைந்தார்; ரமா—அதிர்ஷ்ட தேவதை இலட்சுமி தேவியின்; ஈஸ:—நாயகர்; வ்ரஜ-ஸுந்தரீபி:—ஆயர் குலத்தின் இளம் பெண்களுடன்; யதா—போன்று; அர்பக:—ஒரு குழந்தை; ஸ்வ—தனது; பிரதிபிம்ப—நிழலுடன்; விப்ரம:—விளையாடுதல்.

இவ்வாறு இலட்சுமி தேவியின் துணைவரான ஆதி நாராயணர் என்னும் பகவான் கிருஷ்ணர் விரஜத்தின் இளம் பெண்களைத் தழுவியும், பிடித்தும், தமது விரிந்து வேடிக்கையான பார்வைகளினால் காதல் ததும்பப் பார்த்தும் இன்பம் எய்தினார். இது ஒரு குழந்தை தனது நிழலுடன் விளையாடியதைப் போன்றிருந்தது.

பதம் 10.33.17
தத்-அங்க-ஸங்க-ப்ரமுதாகுலேந்த்ரியா:
கேஸான் துகூலம் குச-பட்டிகாம் வா
நாஞ்ஜ: ப்ரதிவ்யோடும் அலம் வ்ரஜ-ஸ்த்ரியோ
விஸ்ரஸ்த-மாலாபரணா: குரூத்வஹ

தத்—அவரது; அங்க-ஸங்க—உடல் தொடர்பின்; ப்ரமுதா—மகிழ்ச்சியினால்; ஆகுல—பொங்கியெழுந்த; இந்த்ரியா:—அவர்களின் புலன்கள்; கேஸான்—அவர்கள் கூந்தல்; துகூலம்—ஆடைகள்; குச-பட்டிகாம்—அவர்கள் மார்பகங்களை மூடியிருந்த மேலாடைகள்; வா—அல்லது; ந—இல்லை; அஞ்ஜ:—எளிதில்; ப்ரதிவ்யோடும்—ஒழுங்காக முறைப்படுவதற்கு; அலம்—திறனுடையவர்களாக வ்ரஜ-ஸ்த்ரிய:—விரஜ ஸ்த்ரிகள்; விஸ்ரஸ்த—சிதறின; மாலா—அவர்களின் மலர்மாலைகள்; ஆபரணா:—மற்றும் ஆபரணங்கள்; குரு-உத்வஹ—ஓ, குருகுலத்தில் மிகச் சிறந்தவனே.

அவரது உடல்தொடர்பின் காரணமாகப் பொங்கி எழுந்த ஆனந்தத்தினால் கோபியர்களின் புலன்கள் உணர்ச்சிவயப்பட்டிருந்தன. அதனால் அவர்கள் கூந்தலும், ஆடைகளும், மார்பகங்களை மறைத்திருந்த மேலாடைகளும் கலைவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ஓ, குரு குலத்தின் நாயகனே, அவர்களின் மாலைகளும், ஆபரணங்களும் சிதறி வீழ்ந்தன.

பதம் 10.33.18
க்ருஷ்ண-விக்ரீடிதம் வீக்ஷ்ய முழுஹு: கே-சர-ஸ்த்ரிய:
காமார்திதா: ஸஸாங்கஸ் ச ஸ-கணோ விஸ்மிதோ ‘பவத்

க்ருஷ்ண-விக்ரீடிதம்—கிருஷ்ணரின் விளையாட்டு; வீக்ஷய—கண்டு; முழுஹு:—பரவசமுற்றனர்; கே-சர—வானில் பயணித்துக் கொண்டிருந்த; ஸ்த்ரிய:—பெண்கள் (தேவமகளிர்); காம—காம இச்சையினால்; அர்திதா:—கிளர்ச்சியுற்றனர்; ஸஸாங்க:—சந்திரன் ச—மற்றும்; ஸ-கண:—அவனது கூட்டத்தினரான நட்சத்திரங்களும்; விஸ்மித:—ஆச்சிரியத்தில்; அபவத்—ஆழ்ந்தனர்.

வானத்திலிருந்து கிருஷ்ணரின் வேடிக்கை விளையாட்டுக்களைக் கவனித்துக்கொண்டிருந்த தேவமங்கையர் பரசவமுற்றுக் காம இச்சையினால் கிளர்ச்சி பெற்றனர். உண்மையில் சந்திரனும் அவனது கூட்டத்தைச் சேர்ந்த நட்சத்திரங்களும் கூட ஆச்சரியத்தில் ஆழ்ந்தன.

பதம் 10.33.19
க்ருத்வா தாவந்தம் ஆத்மானம் யாவதீர் கோப-யோஷித:
ரேமே ஸ பகவாம்ஸ் தாபிர் ஆத்மாராமோ ‘பி லீலயா

க்ருத்வா—செய்து கொண்டார்; தாவந்தம்—ஏராளமான விரிவுகளாக; ஆத்மானம்—தம்மை; யாவதீ:—எத்தனை உண்டோ அத்தனை; கோப-யோஷித:—கோபியர்கள்; ரேமே—மகிழ்ந்தார்; ஸ:—அவர்; பகவான்—பரமபுருஷ பகவான்; தாபி:—அவர்களோடு; ஆத்ம-ஆராம:—சுயதிருப்தி உடையவராக; அபி—இருந்தபோதிலும்; லீலயா—ஒரு லீலையாக.

எத்தனைக் கோபியர்கள் உண்டோ அத்தனைக் கோபியர்களுடனும் தொடர்பு கொள்ளும் பொருட்டு பரமபுருஷ பகவான் தம்மை விரித்துக் கொண்டார். மேலும் அவர் சுயதிருப்தியுடனுடயவராக இருந்தபோதிலும் அவர்களது தொடர்பினை ஒரு லீலையாக அனுபவித்து மகிழ்ந்தார்.

பதம் 10.33.20
தாஸாம் ரதி-விஹாரேண ஸ்ராந்தானாம் வதனானி ஸ:
ப்ராம்ருஜத் கருண: ப்ரேம்ணா ஸந்தமேனாங்க பாணினா

தாஸாம்—(கோபியர்கள்) அவர்களின்; ரதி—காதலின்; விஹாரேண—இன்பத்தினால்; ஸ்ராந்தானாம்—அவர்கள் களைப்புற்றனர்; வதனானி—முகங்கள்; ஸ—அவர்; ப்ராம்ருஜத்—துடைத்தார்; கருண:—கருணையுடன்; ப்ரேம்ணா—பிரேமையுடன்; ஸந்தமேன—மிக்க சுகமளிக்கும்; அங்க—அன்பிற்குரியவரே (பரீக்ஷீத்து மன்னர்); பாணினா—தமது கரத்தினால்.

காதலின்பத்தை அனுபவித்து கோபியர்கள் களைப்புற்றதைக் கண்டவுடன், அன்பிற்குரிய மன்னனே, கருணையுடையவரான கிருஷ்ணர் மிக்கப் பிரேமையுடன், சுகமளிக்கும் தமது கரத்தினால் அவர்களது முகங்களைத் துடைத்துவிட்டார்.

பதம் 10.33.21
கோப்ய: ஸ்புரத்-புரட-குண்டல-குந்தள-த்விட்-
கண்ட-ஸ்ரியா ஸுதித-ஹாஸ-நிரீக்ஷணேன
மானம் ததத்ய ருஷபஸ்ய ஜகு: க்ருதானி
புண்யானி தத்-கர-ருஹ-ஸ்பர்ஸ-ப்ரமோதா:

கோப்ய:—கோபியர்களின்; ஸ்புரத்—ஒளிர்கின்ற; புரட—பொன்னாலான; குண்டல—அவர்கள் செவிக்குண்டலங்களின்; குந்தள—அவர்கள் பின்னல் சடைகளின்; த்விட்—ஒளியின்; கண்ட—அவர்கள் கன்னங்களின்; ஸ்ரியா—எழிலினால்; ஸுதித—இனிமை செய்தது; ஹாஸ—புன்னகை; நிரீக்ஷணேன—அவர்களின் பார்வைகளினால்; மானம்—கெளரவித்தனர்; ததத்ய:—அளித்தனர்; ருஷபஸ்ய—அவர்கள் நாயகரின்; ஜகு:—அவர்கள் பாடினர்; க்ருதானி—செயல்கள்; புண்யானி—புண்ணியமான; தத்—அவருடைய; கர-ருஹ—விரல் நகங்களில்; ஸ்பர்ஸ—ஸ்பரிசத்தால்; ப்ரமோதா:—மிக்க மகிழ்ச்சியுற்று.

கோபியர்கள் தங்கள் நாயகரைத் தமது கன்னங்களின் எழிலாலும், ஒளிர்கின்ற தமது சுருண்ட கூந்தலினாலும், மின்னும் பொற் குண்டலங்களினாலும் இனிமை செய்த புன்னகைப் பார்வைகளால் கெளரவித்தனர். அவரது விரல் நகங்களின் ஸ்பரிசத்தால் பேருவகை அடைந்த அவர்கள் அவரது சர்வமங்களமுடைய உன்னத லீலைகளின் கீர்த்திகளை இசைத்தனர்.

பதம் 10.33.22
தாபிர் யுத: ஸ்ரமம் அபோஹிதும் அங்க-ஸங்க-
க்ருஷ்ட-ஸ்ரஜ: ஸ குச-குங்கும-ரஞ்ஜிதாயா:
கந்தர்வ-பாளிபிர் அனுத்ருத ஆவிஸத் வா:
ஸ்ராந்தோ கஜீபிர் இப-ராட் இவ பின்ன-ஸேது:

தாபி:—அவர்களின்; யுத:—தொடர்பினால்; ஸ்ரமம்—களைப்புற்று; அபோஹிதும்—நீக்குதற்கு; அங்க-ஸங்க—அவர்களின் காதல் தொடர்பினால்; க்ருஷ்ட—கசங்கியது; ஸ்ரஜ:—அவரது மாலை; ஸ:—அவர்; குச—அவர்கள் மார்பகங்களில் உள்ள; குங்கும—குங்குமத்தின்; ரஞ்ஜிதாயா:—வண்ணத்தினால் அது பூசப்பட்டது; கந்தர்வ-ப—தேவலோக இசைக்கலைஞர்கள் (போல்தோன்றிய); அளிபி:—வண்டுகளினால்; அனுத்ருத:—விரைவாக பின்தொடரப்பட்டு; ஆவிஸத்—அவர் இறங்கினார்; வா:—நீரினுள்; ஸ்ராந்த:—களைப்புற்ற; கஜீபி:—அவருடைய பெண்யானைக் காதலிகளுடன் சேர்ந்து; இப-ராட்—தலைவனான ஆண்யானை; இவ—போன்று; பின்ன—உடைத்துக் கொண்டு; ஸேது:—வயல்களிலுள்ள வரப்புகளை.

பகவான் கிருஷ்ணரின் மாலை, அவர் கோபியர்களுடன் ஆடிய காதல் களியாட்டத்தினால் கசங்கியதோடு, அவர்கள் மார்பகங்களில் பூசியிருந்த குங்குமத்தினால் வண்ணம் செய்யப்பட்டது. கோபியர்களின் களைப்பினைக் போக்குவதற்காக, கந்தர்வர்களைப் போன்று பாடிக்கொண்டு வண்டுகள் தம்மை விரைவாகத் தொடர்ந்து வர யமுனை நதியினுள் இறங்கினார். தனது காதலிகளுடன் சேர்ந்து ஒரு ஆண்யானை நீரினுள் இறங்கியது போன்று அவர் தோற்றமளித்தார். உண்மையில் பகவான் ஆற்றல்மிக்க ஒரு யானை வயல்களிலுள்ள வரப்புக்களை உடைத்தெறிவதுபோல் லௌகிக மற்றும் வேத நன்னெறிகள் அனைத்தையும் கடந்தவராக இருக்கின்றார்.

பதம் 10.33.23
ஸோ ‘ம்பஸி அலம் யுவதிபி: பரிஷ்ச்சியமான:
ப்ரேம்ணேக்ஷித: ப்ரஹஸதீபிர் இதஸ் ததோ ‘ங்க
வைமானிகை: குஸும-வர்ஷிபிர் ஈட்யமானோ
ரேமே ஸ்வயம் ஸ்வ-ரதிர் அத்ர கஜேந்த்ர-லீல

ஸ:—அவர்; அம்பஸி—நீரினுள்; அலம்—மிகுந்த அளவு; யுவதிபி:—யுவதிகளால்; பரிஷ்ச்சியமான:—நீரை வாரி இறைத்தனர்; ப்ரேம்ணா—பிரேமையுடன்; ஈக்ஷித:—பார்த்தனர்; ப்ரஹஸ்தீபி:—சிரித்துக் கொண்டிருந்த அவர்களால்; இத: தத:—இங்குமங்கும்; அங்க—அன்பிற்குரிய மன்னனே; வைமானிகை:—தங்கள் விமானங்களில் பயணம் செய்தவர்களால்; குஸும—மலர்கள்; வர்ஷிபி:—மாரியாகப் பொழிந்தனர்; ஈட்யமான:—வழிபட்டனர்; ரேமே—மகிழ்ந்தார்: ஸ்வயம்—சுயமாக; ஸ்வ-ரதி:—தம்முள் திருப்தியுடைய; அத்ர—இங்கே; கஜ-இந்த்ர—யானைகளின் அரசனைப் போல்; லீல:—அவரது விளையாட்டு

அன்பிற்குரிய அரசனே! நீரினுள் சிரித்துக்கொண்டு நின்ற கோபியர்களால் நாலாபுறமும் நீர் தம்மீது வாரியிறைக்கப்படுவதைக் கிருஷ்ணர் கண்டார். அவர்கள் அவரைப் பிரேமையுடன் பார்த்தனர். தேவர்கள் விமானங்களிலிருந்து அவர்மீது மலர்மாரிபொழிந்து அவரை வழிபட்டனர். சுயதிருப்தியுடையவரான பகவான் யானைகளின் அரசனைப் போல் விளையாடுவதில் மகிழ்ச்சியடைந்தார்.

பதம் 10.33.24
ததஸ் ச க்ருஷ்ணோபவனே ஜல-ஸ்தல-
ப்ரஸுன-கந்தானில-ஜஷ்ட-திக்-தடே
சசார ப்ருங்க-ப்ரமதா-காணவ்ருதோ
யதா மத-ச்யுத் த்விரத: கரேணுபி:

தத:—பிறகு; ச—மேலும்; க்ருஷ்ணா—யமுனைநதியின்; உபவனே—உபவனத்தில்; ஜல—நீரின்; ஸ்தல—மற்றும் நிலத்தின்; ப்ரஸுன—மலர்களின்; கந்த—நறுமணத்துடன் கூடிய; அனில—காற்றினால்; ஜஷ்ட—சேர்ந்து; திக்-தடே—திசைகளின் முனைகள்; சசார—அவர் கடந்தார்; ப்ருங்க—வண்டுகளின்; ப்ரமதா—பெண்கள்; கண—கூட்டங்களால்; ஆவ்ருத:—சூழப்பட்டு; யதா—போன்று; மத-ச்யுத்—உணர்வுக் கிளச்சியினால் தனது நெற்றியிருந்து மதநீர் வழிகின்ற; த்விரத:—ஓர் யானை; கரேணுபி:—தனது பெண்யானைகளுடன்.

பிறகு பகவான் யமுனை நதிக்கரையிலுள்ள ஓர் உபவனத்தில் உலவத் தொடங்கினார். அவ்வனம் முழுவதும் நிலம் மற்றும் நீரிலுள்ள அனைத்து மலர்களின் நறுமணத்தையும் சுமந்துகொண்டிருந்த காற்றினால் நிரப்பப்பட்டிருந்தது. வண்டுகளும் அழகிய இளம்பெண்களும் சூழ்ந்து வர பகவான் கிருஷ்ணர், பெண்யானைகளுடன் வரும் மதங் கொண்ட ஆண் யானையைப் போல் தோன்றினார்.

பதம் 10.33.25
ஏவம் ஸஸாங்காம்ஸு-விராஜிதா நிஸா:
ஸ ஸத்ய-காமோ ‘னுரதாபலா-கண:
ஸிஷேவ ஆத்மனி அவருத்த-ஸௌரத:
ஸர்வா: ஸரத்-காவ்ய-கதா-ரஸாஸ்ரயா:

ஏவம்—இவ்வாறு; ஸஸாங்க—நிலவின்; அம்ஸு—கதிர்களால்; விராஜிதா:—ஒளிசெய்யப்பட்ட; நிஸா:—இரவுகள்; ஸ:—அவர்; ஸத்ய-காம:—அவரது இச்சைகள் எப்போதும் நிறைவேற்றப்படுகின்றன; அனுரத—தொடர்ந்து அவர் மீது பற்றுடையவர்களாக; அபலா-கண:—அவருடைய பல பெண்நண்பர்கள்; ஸிஷேவே—அவர் பயன்படுத்தினார்; ஆத்மனி—தமக்குள்; அவருத்த—உடையவராக; ஸௌராத:—காதல் உணர்வுகள்; ஸர்வா:—எல்லா (இரவுகளிலும்); ஸரத்—சரத்காலத்தின் காவ்ய—காவிய; கதா—கதைகளின்; ரஸ—உன்னத மன இயல்புகளின்; ஆஸ்ரயா:—கொள்ளுமிடங்கள்.

எப்போதும் நிறைவேற்றப்படும் இச்சைகளையுடையவரான பகவான் கிருஷ்ணரின் மீது கோபியர்கள் உறுதியான பற்றுடையவர்களாக இருந்தபோதிலும் பகவான் எந்தவிதமான பௌதிக காம இச்சைகளாலும் தமது அகத்தில் ஒருபோதும் பாதிக்கப்பட்டதே இல்லை. இருந்தும் பகவான், உன்னத செயல்களின் காவியச் சரிதங்களை ஈர்க்கும், அனைத்து சரத்கால நிலவொளி வீசும் இரவுகளையும் தமது லீலைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்.

பதங்கள் 10.33.26 – 10.33.27
ஸ்ரீ-பரீக்ஷித் உவாச
ஸம்ஸ்தாபனாய தர்மஸ்ய ப்ரஸமாயேதரஸ்ய ச
அவதீர்ணோ ஹி பகவான் அம்ஸேன ஜகத்-ஈஸ்வர:

ஸ கதம் தர்ம-ஸேதூனாம் வக்தா கர்தாபிரக்ஷிதா
ப்ரதீபம் ஆசரத் ப்ரஹ்மன் பர-தாராபிமர்ஸனம்

ஸ்ரீ-பரீக்ஷித் உவாச—ஸ்ரீ பரீக்ஷித்து மகாராஜா கூறினார்; ஸம்ஸ்தாபனாய—நிலை நிறுத்துவதற்காக; தர்மஸ்ய—தர்ம அறநெறிகளை; ப்ரஸமாய—அடக்குவதற்காக; இதரஸ்ய—எதிரானவற்றை; ச—மற்றும்; அவதீர்ண:—அவதரித்தார் (இந்த பூமியில்); ஹி—உண்மையில்; பகவான்—முழுமுதற்கடவுள்; அம்ஸேன—அவரது அம்ஸ விரிவுடன் (ஸ்ரீ பலராமர்); ஜகத்—பிரபஞ்சத்தின்; ஈஸ்வர:—பகவான்; ஸ:—அவர்; கதம்—எவ்வாறு; தர்ம-ஸேதூனம்—நன்னடத்தைக்கான கட்டுப்பாட்டு விதிகளின்; வக்தா—உண்மையாக எடுத்துரைப்பவர்; கர்தா—நிறைவேற்றுபவர்; அபிரக்ஷிதா—பாதுகாப்பவர்; ப்ரதீபம்—மாறாக; ஆசரத்—நடந்துகொண்டார்; ப்ரஹ்மன்—ஓ, அந்தணரே; (சுகதேவ கோஸ்வாமி); பர—மற்றவர்களின்; தார—மனைவியரை; அபிமர்ஸனம்—தொட்டு.

பரீக்ஷித்து மகாராஜா கூறினார்: ஓ, அந்தணரே, ஜெகதீஸ்வரரான முழுழுதற்கடவுள் தமது அம்சாவதாரத்துடன், அதர்மங்களை அழித்து தர்மங்களை நிலைபெறச் செய்வதற்காக இப்பூமியில் அவதரித்திருக்கின்றார். உண்மையில் அவரே நன்னடத்தை விதிகளை எடுத்துரைப்பவரும், நிறைவேற்றுபவரும், பாதுகாப்பவரும் ஆவார். பிறர் மனைவியரைத் தொட்டதின் மூலம் எவ்வாறு அவற்றை அவரால் மீற முடிந்தது?

பதம் 10.33.28
ஆப்த-காமோ யது-பதி: க்ருதவான் வை ஜுகுப்ஸிதம்
கிம்-அபிப்ராய ஏதன் ந: ஸம்ஸயம் சிந்தி ஸு-வ்ரத

ஆப்த-காம:—சுயதிருப்தியுடைய; யது-பதி:—யது-குலத்தின் தலைவர்; க்ருதவான்—செய்தார்; வை—நிச்சயமாக; ஜீகுப்ஸிதம்—நிந்தனைக்குரியதை; கிம்-அபிப்ராய:—என்ன எண்ணத்தில்; ஏதத்—இதனை; ந:—எங்கள்; ஸம்ஸயம்—ஐயத்தினை; சிந்தி—நீக்குவீராக; ஸு-வ்ரத—ஓ, விரதங்களை நம்பிக்கையுடன் கடைபிடிப்பவரே.

விரதங்களை உறுதியுடன் கடைபிடிப்பவரே, யது குலத்தின் சுய திருப்தியுடையவரான பகவான், நிந்தனைக்குரியவராக நடந்து கொண்ட பொழுது அவர் மனதில் இருந்த எண்ணம் என்னவென்பதை எடுத்துரைப்பதின் மூலம் எங்கள் ஐயத்தினை அருள்கூர்ந்து நீக்குவீராக.

பதம் 10.33.29
ஸ்ரீ-ஸுக: உவாச
தர்ம-வ்யதிக்ரமோ த்ருஷ்ட ஈஸ்வராணம் ச ஸாஹஸம்
தேஜீயஸாம் ந தோஷாய வஹ்னே: ஸர்வ-புஜோ யதா

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தர்ம-வ்யதிக்ரம:—சமய தர்மங்கள் அல்லது நன்னடத்தை விதிகளை மீறுதல்; த்ருஷ்ட:—கண்டு; ஈஸ்வராணம்—ஆற்றல்மிகு நெறியாளர்களின்; ச—கூட; ஸாஹஸம்—தவறான செயலின் காரணமாக; தேஜீயஸாம்—ஆன்மீகமாக ஆற்றலுடையோர்; ந—இல்லை; தோஷாய—எந்தவிதமானத் தவறுக்கும் (இட்டுச் செல்லுதல்); வஹ்னே:—நெருப்பு; ஸர்வ—எல்லாவற்றையும்; புஜ:—விழுங்குதல்; யதா—போன்று.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஆற்றல்மிக்க நெறியாளர்களின் உயர்நிலைக்கு, நாம் அவர்களிடத்தில் காணும் அவர்களின் நன்னடத்தை விதிகளை மீறிய தவறான எந்தவொரு செயலாலும் பங்கம் நேர்வதில்லை. அவர்கள் தன்னிடம் போடப்படும் எல்லாவற்றையும் எரித்து விழுங்கிவிட்டுத் தான் மட்டும் மாறாது இருக்கும் நெருப்பைப் போன்றவர்களாவர்.

பதம் 10.33.30
நைதத் ஸமாசரேஜ் ஜாது மனஸாபி ஹி அனீஸ்வர:
வினஸ்யதி ஆசரன் மௌட்யாத் யதாருத்ரோ ‘பி-ஜம் விஷம்

ந—இல்லை; ஏதத்—இதனை; ஸமாசரேத்—செய்வது; ஜாது—எப்போதும்; மனஸா—மனதினாலும்; அபி—கூட; ஹி—நிச்சயமாக; அனீஸ்வர:—நெறியாளராக இல்லாத ஒருவன்; வினஸ்ய-தி—அழிக்கப்படுகிறான்; ஆசரன்—செயல்பட்டு; மௌட்யாத்—மூடத்தனமாக; யதா—போன்று; அருத்ர:—பகவான் ருத்திரன் அல்லாதான்; அபிஜம்—கடலில் பிறந்த; விஷம்—விஷம்.

மகா நெறியாளராக இல்லாத ஒருவன் தனது மனதினாலும் கூட ஆள்கின்ற மகான்களை ஒருபோதும் பாவனை செய்தல் கூடாது. மூடத்தனத்தின் காரணமாக ஒருவன் அதுபோன்ற நடத்தையினைப் பாவனை செய்தானென்றால் ருத்திரன் அல்லாதான் விஷக்கடலைக் குடிக்க முயன்று தன்னைத் தானே அழித்துக் கொள்வது போல் தன்னை அழித்துக் கொள்கின்றான்.

பதம் 10.33.31
ஈஸ்வராணாம் வச: ஸத்யம் ததைவாசரிதம் க்வசித்
தேஷாம் யத்-ஸ்வ-வசோ-யுக்தம் புத்திமாம்ஸ் தத் ஸமாசரேத்

ஈஸ்வராணாம்—பகவானின் அதிகாரம் பெற்ற தொண்டர்களின்; வச:—வார்த்தைகள்; ஸத்யம்—சத்தியமானவை; தத: ஏவ—கூட; ஆசரிதம்—அவர்கள் செய்வது; க்வசித்—சில சமயங்களில்; தேஷாம்—அவற்றின்; யத்—எவை; ஸ்வ-வச:—அவர்களின் சுய வார்த்தைகளை; யுக்தம்—ஒப்புக் கொள்ளும்; புத்தி-மான்—ஒருவன் புத்திமானாவான்; தத்—அதனை; ஸமாசரேத்—நிறைவேற்ற வேண்டும்.

பகவானின் அதிகாரம் பெற்ற தொண்டர்களின் சொற்கள் எப்போதும்
உண்மையானவையாகும். மேலும் அவர்கள் செய்யும் செயல்கள் அவர்களின் வார்த்தைகளோடு ஒத்துப்போகும்பொழுது அவை மேன்மையுடையவையாக இருக்கின்றன. அதனால் புத்திமானாக இருக்கும் ஒருவன் அவர்தம் உபதேசங்களை நிறைவேற்ற வேண்டும்.

பதம் 10.33.32
குசலாசரிதேனைஷாம் இஹஸ்வார்தோ ந வித்யதே
விபர்யயேண வானர்தோ நிரஹங்காரிணாம் ப்ரபோ

குஸல—புண்ணிய; ஆசரிதேன—செயலினால்; ஏஷாம்—அவர்களுக்கு; இஹ—இவ்வுலகின்; ஸ்வ-அர்த:—சுயநலம்; ந வித்யதே—உண்டாவதில்லை; விபர்யயேண—எதிரானதினால்; வா—அல்லது; அனர்த:—விரும்பத்தகாத விளைவுகள்; நிரஹங்காரிணாம்—ஆணவத்திலிருந்து விடுதலைபெற்றவர்கள்; ப்ரபோ—பிரபுவே.

அன்பார்ந்த பிரபுவே, ஆணவத்திலிருந்து விடுதலை பெற்ற இம்மகான்கள் இவ்வுலகில் புண்ணிய மூர்த்திகளாகச் செயல்பட்டாலும் அவர்களிடம் சுயநல நோக்கம் என்பது சிறிதும் கிடையாது. புண்ணிய விதிகளுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டாலும் அவர்கள் பாவங்களுக்கு ஆளாவதில்லை.

பதம் 10.33.33
கிம் உதாகில-ஸத்த்வானாம் திர்யன்-மர்த்ய-திவௌகஸாம்
ஈஸிதுஸ் சேஸிதவ்யனாம் குஸலாகுஸலான்வய:

கிம் உத—பிறகு என்ன சொல்ல; அகில—அனைத்து; ஸத்த்வனாம்—படைக்கப்பட்ட உயிர்கள்; திர்யக்—விலங்குகள்; மர்த்ய—மனிதர்கள்; திவ-ஓகஸாம்—தேவ லோகத்தைச் சேர்ந்தவர்கள்; ஈஸுது:—நெறியாள்பவருக்கு; ச—மற்றும்; ஈஸிதவ்யானாம்—நெறிப்படுத்தப்படுபவர்களின்; குஸல—புண்ணியத்துடனும்; அகுஸல—பாவத்துடனும்; அன்வய:—காரணத் தொடர்பு.

படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் விலங்குகள், மனிதர்கள் தேவர்கள் பகவானுக்கு, அவரால் படைக்கப்பட்ட உயிர்களைப் பாதிக்கும் பாவ, புண்ணியத்துடன் பிறகு எவ்வாறு தொடர்பு இருக்கக்கூடும்?

பதம் 10.33.34
யத்-பாத-பங்கஜ-பராக-நிஷேவ-த்ருப்தா
யோக-ப்ரபாவ-விதுதாகில-கர்ம-பந்தா:
ஸ்வைரம் சரந்தி முனயோ ‘பி ந நஹ்யமானாஸ்
தஸ்யேச்சயாத்த-வபுஷ: குத ஏவ பந்த:

யத்—எவருடைய; பாத-பங்கஜ—தாமரைத் திருவடிகளின்; பராக—தூசியின்; நிஷேவ—சேவையினால்; த்ருப்தா:—திருப்தியடைகிறார்; யோக-ப்ரபாவ—யோக சக்தியினால்; விதுத—நீக்கப்படுகின்றன; அகில—அனைத்து; கர்ம—பலன் தரும் செயல்களின்; பந்தா:—அவர்களின் பந்தம்; ஸ்வைரம்—விருப்பம் போல்; சரந்தி—அவர்கள் செயல்படுகின்றனர்; முனய:—அறிவுடை முனிவர்கள்; அபி—கூட; ந—இல்லை; நஹ்யமானா:—பந்தப்படுதல்; தஸ்ய—அவரின்; இச்சயா—இச்சையினால்; ஆத்த—ஏற்றுக்கொண்ட; வபுஷ:—உன்னத உடல்கள்; குத:—எங்கே; ஏவ—உண்மையில்; பந்த:—பந்தம்.

பரமபுருஷ பகவானின் தாமரைத் திருவடிகளிலுள்ள தூசுக்கு சேவை செய்வதின்மூலம் முழுத்திருப்தியடையும், அவரது பக்தர்களை உலகியற் செயல்கள் ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை. அதுபோல் யோக சக்தியால் அனைத்துக் கர்மவினைப் பலன்களின் பந்தத்திலிருந்தும் விடுதலை பெற்றுள்ள கற்றறிந்த முனிவர்களையும் உலகியற் செயல்கள் கட்டுப்படுத்துவதில்லை. ஆகையினால் தமது இனிய சுயவிருப்பத்திற்கேற்ப உன்னத வடிவங்களை மேற்கொள்ளும் பகவானுக்குப் பந்தம் உண்டா என்னும் கேள்வி எவ்வாறு எழக் கூடும்?

பதம் 10.33.35
கோபீனாம் தத்-பதீனாம் ச ஸர்வேஷாம் ஏவ தேஹினாம்
யோ ‘ந்தஸ் சரதி ஸோ ‘த்யக்ஷ: க்ரீடனேனேஹ தேஹ-பாக்

கோபினாம்—கோபியர்களின்; தத்-பதினாம்—அவர்கள் கணவர்களின்; ச—மற்றும்; ஸர்வேஷாம்—அனைவரின்; ஏவ—உண்மையில்; தேஹினாம்—உடல் பெற்ற உயிர்கள்; ய:—யார்; அந்த:—உள்ளே; சரதி—இருக்கின்றாரோ; ஸ:—அவர்; அத்யக்ஷ:—எல்லாவற்றையும் பார்க்கும் சாட்சியாக; க்ரீடனேன—விளையாடுவதற்கு; இஹ—இவ்வுலகில்; தேஹ—அவருடைய வடிவம்; பாக்—மேற்கொள்கிறார்.

கோபியர்களின் அகத்தினுள்ளும், அவர்கள் கணவர்களின் அகத்தினுள்ளும், ஏன் உடல்பெற்ற உயிர்கள் அனைத்தின் அகத்தினுள்ளும் சாட்சியாக இருப்பவர், இவ்வுலகில் உன்னத லீலைகளை அனுபவித்து மகிழ்வதற்காகப் பல்வேறு உருவங்களை மேற்கொள்கிறார்.

பதம் 10.33.36
அனுக்ரஹாய பக்தானாம் மானுஷம் தேஹம் ஆஸ்தித:
பஜதே தாத்ருஸீ: க்ரீடா யா: ஸ்ருத்வா தத்-பரோ பவேத்

அனுக்ரஹாய—கருணை செய்வதற்காக; பக்தானாம்—அவருடைய; பக்தர்களுக்கு; மானுஷம்—மனிதனைப் போல்; தேஹம்—ஓர் உடல்; ஆஸ்தித:—மேற்கொள்கிறார்; பஜதே—அவர் ஏற்றுக்கொள்கிறார்; தாத்ருஸீ:—அதுபோன்ற; க்ரீடா:—லீலைகள்; யா:—அவற்றைப்பற்றி; ஸ்ருத்வா—கேட்டு; தத்-பர:—அவருக்கு அர்ப்பணித்தவனாக; பவேத்—ஒருவன் ஆவதற்கு.

தமது பக்தர்களுக்குக் கருணை புரிவதற்காகப் பகவான் மனிதனைப் போன்ற உடலை மேற்கொள்ளும் பொழுது அவர், தமது லீலைகளைப் பற்றிக் கேட்டு, அவற்றினால் கவரப்படுபவர்கள், தம்மையே அவரிடத்தில் அர்ப்பணிக்க வேண்டுமென்பதற்காக இதுபோன்ற லீலைகளில் ஈடுபடுகிறார்.

பதம் 10.33.37
நாஸூயன் கலு க்ருஷ்ணாய
மோஹிதாஸ் தஸ்ய மாயயா
மன்யமானா: ஸ்வ-பார்ஸ்வ-ஸ்தான்
ஸ்வான் ஸ்வான் தாரான் வ்ரஜெளகஸ:

நாஸூயன்—துவேஷமடையவில்லை; கலு—கூட; க்ருஷ்ணாய—கிருஷ்ணருக்கெதிராக; மோஹிதா:—குழப்பமுற்ற; தஸ்ய—அவருடைய; மாயயா—மாயையின் ஆன்மீகச் சக்தியால்; மன்யமானா:—நினைந்து; ஸ்வ-பார்ஸ்வ—அவர்களது இடத்தில்; ஸ்தான்—இருக்கின்றனர்; ஸ்வான் ஸ்வான்—அவரவர்க்குரிய; தாரான்—மனைவியர்; வ்ரஜ-ஓகஸ—விரஜத்திலுள்ள ஆயர்கள்.

கிருஷ்ணரின் மாயா சக்தியால் குழப்பமுற்ற ஆயர்கள் தமது மனைவியர் தங்கள் இல்லங்களிலேயே இருக்கின்றனர் என்று நினைத்தனர். அதனால் அவர்கள் கிருஷ்ணருக்கு எதிராக எந்தவிதத் துவேஷமும் கொள்ளவில்லை.

பதம் 10.33.38
ப்ரஹ்ம-ராத்ர உபாவ்ருத்தே வாஸுதேவானு மோதிதா:
அனிச்சந்த்யோ யயுர் கோப்ய: ஸ்வ-க்ருஹான் பகவத்-ப்ரியா:

ப்ரஹ்ம-ராத்ரே—பிரம்ம இராத்திரி; உபாவ்ருத்தே—முடிவுற்றவுடன்; வாஸுதேவ—பகவான் கிருஷ்ணரால்; அனுமோதிதா:—அறிவுறுத்தப்பட்டு; அனிச்சந்த்ய:—விருப்பமின்றி; யயு:—சென்றனர்; கோப்ய:—கோபியர்கள்; ஸ்வ-க்ருஹான்—அவர்களின் இல்லங்களுக்கு; பகவத்—பரமபுருஷ பகவானின்; ப்ரியா:—பிரிய காதலியர்.

பிரம்மாவின் ஒரு இரவு முழுவதும் கடந்த பிறகு, கிருஷ்ணர் கோபியர்களை தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்படி அறிவுறுத்தினார். பரமபுருஷ பகவானின் பிரிய காதலியர்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றாலும், அவருடைய கட்டளைக்கு இணங்கி அவர்களின் இல்லங்களுக்கு சென்றனர்.

பதம் 10.33.39
விக்ரீடிதம் வ்ரஜ-வதூபிர் இதம் ச விஷ்ணோ:
ஸ்ரத்தான்விதோ ‘னுஸ்ருணுயாத் அத வர்ணயேத் ய:
பக்திம் பராம் பகவதி ப்ரதிலப்ய காமம்
ஹ்ருத்-ரோகம் ஆஸ்வ் அபஹினோதி அசிரேண தீர:

விக்ரீடிதம்—விளையாடியது; வ்ரஜ-வதூபி:—விருந்தாவனத்திலுள்ள இளம்பெண்களுடன்; இதம்—இந்த; ச—மற்றும்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவினால்; ஸ்ரத்தா-அன்வித:—நம்பிக்கையுடன்; அனுஸ்ருணுயாத்—கேட்பவன்; அத—அல்லது; வர்ணயேத்—கூறுபவன்; ய:—எவன்; பக்திம்—பக்தித்தொண்டினை; பராம்—உன்னதமான; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; ப்ரதிலப்ய—எய்துகின்றான்; காமம்—லௌகிக காமம்; ஹ்ருத்—இதயத்தில்; ரோகம்—பிணி; ஆஸு—விரைவில்; அபஹினோதி—அவன் நீக்குகிறான்; அசிரேன—தாமதமின்றி; தீர:—அமைதியுடையோன்.

விருந்தாவனத்தின் இளங்கோபியர்களுடன் பகவான் நிகழ்த்திய லீலைகளை எவனொருவன் நம்பிக்கையுடன் செவிமடுத்தாலும் பிறருக்கு எடுத்துரைத்தாலும் அவன் பகவானின் தூய பக்தித் தொண்டினை எய்தப் பெறுவான். அதனால் அவன் மிகவிரைவில் அமைதி பெற்று இதயத்தின் நோயான காமத்தினை வெற்றி கொள்வான்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “ராஸ நடனம்” எனும் தலைப்பைக் கொண்ட, முப்பத்துமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare