அத்தியாயம் – 20
பிருந்தாவனத்தில் மழைக் காலமும்
இலையுதிர் காலமும்
பதம் 10.20.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: விருந்தாவனத்தில் இருந்த பெண்களிடம் ஆயர்குலச் சிறுவர்கள், காட்டுத் தீயிலிருந்து தம்மைக் காத்தும், பிரலம்பாசுரனை வதம் செய்தும் கிருஷ்ணரும் பலராமரும் ஆற்றிய அற்புதச் செயல்களை முழுவதும் எடுத்துரைத்தனர்.

பதம் 10.20.2 : இதனைக் கேட்ட ஆயர்குலப் பெரியவர்களும், பெண்டிரும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், கிருஷ்ணரும், பலராமரும் விருந்தாவனத்தில் அவதரித்திருக்கும் வானுலகைச் சேர்ந்த தேவர்களாகத்தான் இருத்தல் வேண்டும் என்று முடிவு செய்தனர்.

பதம் 10.20.3 : பிறகு உயிர்க்குலங்கள் அனைத்திற்கும் உயிராகவும், வாழ்வின் ஆதாரமாகவும் திகழும் மழைக்காலம் தொடங்கியது. வானம் இடியினால் அதிரத் தொடங்கியது. அடிவானத்தில் மின்னல் அடிக்கடி மின்னி ஒளிசெய்தது.

பதம் 10.20.4 : இடியுடனும், மின்னலுடனும் கூடிய நீல நிற மேகங்களால் வானப்பரப்பு மூடப்பட்டது. இவ்வாறு வானமும் அதன் இயற்கை ஒளியும் மூடப்பட்டது போல், ஜீவாத்மாவும் ஜட இயற்கையின் முக்குணங்களினால் மூடப்படுகிறான்.

பதம் 10.20.5 : தனது கதிர்களால் சூரியன் பூமியின் செல்வமான நீரினை எட்டு மாதங்கள் உறிஞ்சிக் கொள்கிறான். இப்போது உரிய காலம் வந்துவிட்டது. அதனால் அவன் தன்னிடம் சேர்த்துக் கொண்ட நீரினை இப்போது விடுவிக்கத் தொடங்குகிறான்.

பதம் 10.20.6 : உக்கிரமான காற்றினால் பெரும் மேகக் கூட்டங்கள் அதிர்ந்து மின்னலாக மின்னுகின்றன. கருணை மிக்கப் பெரியவர்களைப் போல மேகங்கள் இவ்வுலகின் மகிழ்ச்சிக்காகத் தமது உயிரைக் தருகின்றன.

பதம் 10.20.7 : பூமியானவள் கோடை வெம்மையினால் வறண்டு போகிறாள், ஆயினும் அவள் வருண தேவனால் கருணை மழை பொழியப்படும் பொழுது மீண்டும் வளம் பெறுகிறாள். இவ்வாறு பூமியானது பௌதிக நோக்கங்களுக்காகத் தவம் செய்யும் ஒருவனது இளைத்துப் போன உடலைப் போன்றிருக்கிறது. ஆயினும் அவன் தான் செய்த தவங்களின் பலன்களை அடையும் பொழுது மீண்டும் முற்றிலும் புத்துணர்ச்சியும், புது சக்தியும் பெறுகிறான்.

பதம் 10.20.8 : மழைக்காலத்தின் மாலைக் கருக்கலில், மேகங்கள் மூடியிருப்பதினால் வானில் நட்சத்திரங்கள் தென்படுவதில்லை. மாறாக அந்த இருளில் மின்மினிப் பூச்சிகள் ஒளிர்விடுகின்றன. இது எதனைப் போன்றதென்றால் கலியுகத்தில் பாவச் செயல்களின் ஆக்கிரமிப்பினால் உண்மையான வேத அறிவு மறைக்கப்பட்டு நாத்திகக் கருத்துக்கள் வளர்வது போன்றதாகும்.

பதம் 10.20.9 : மழைமேகங்கள் ஒன்றோடொன்று மோதி இடியோசை செய்யும் பொழுது அதுவரை அமைதியுடனிருந்த தவளைகள் திடீரென்று கத்தத் தொடங்குகின்றன. அதுபோல் தமது காலைக் கடன்களை அமைதியுடன் முடித்த அந்தண மாணவர்கள் தமது ஆசிரியரால் அழைக்கப்படும் பொழுது தமது பாடல்களை ஓதத் தொடங்கினர்.

பதம் 10.20.10 : மழைக்காலம் தொடங்கியவுடன் வறண்டுபோன முக்கித்துவமற்ற நதிகள் கூட, தனது புலன்களின் தேவைகளினால் கட்டுப்படுத்தப்படும் ஒருவனது உடல், சொத்து, பொருள் போன்று தமக்குரிய பாதைகளில் பொங்கிப் பிரவகித்து ஓடுகின்றன.

பதம் 10.20.11 : புதிதாக முளைத்த புற்கள் பூமிக்குப் பச்சை வண்ணம் அளித்தன. “இந்த்ரகோப” பூச்சிகள் அதற்கு சிகப்பு வண்ணம் அளித்தன. வெண்மை நிறக் காளான்கள் அதற்கு மற்றொரு நிறம் மற்றும் வட்ட வடிவமான நிழலையும் அளித்தன. இதன் காரணமாக பூமி புதுப் பணக்காரனைப் போன்று வளமுடன் காட்சியளித்தது.

பதம் 10.20.12 : தமது தானியச் செல்வங்களினால் வயல்கள் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. ஆயினும் அதே வயல்கள் விவசாயத்தில் வீண்கர்வமுடையவர்களாகவும், எல்லா பரமபுருஷ பகவானின் கட்டுப்பாட்டின் கீழ் எவ்வாறு இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள முடியாவதவர்களாகவும் இருப்பவர்களின் இதயத்தில் அனுதாபத்தினை உண்டாக்குகின்றன.

பதம் 10.20.13 : புதிதாகப் பெய்த மழையினைப் பயன்படுத்திக் கொள்வதினால் எல்லா உயிர்களுக்கும் நீர் நிலைகளும் பரமபுருஷ பகவானுக்குப் பக்தித்தொண்டு செய்வதின் மூலம் ஒரு பக்தன் அழகு பெறுவது போன்று கவர்ச்சியும், இனிமையும் பெறுகின்றன.

பதம் 10.20.14 : நதிகள் கடலில் சங்கமமாகும் இடத்தில் கடல், கொந்தளித்து, காற்றினால் அதன் மீது அலைகள் எழுவதானது, அறிவு முதிர்ச்சியடையாத யோகியின் மனம் ஆசையின் கறை படிந்திருப்பதினாலும், புலனுகர்ச்சிப் பொருட்களின்மீது கொண்ட பற்றினாலும் கொந்தளிப்பது போன்றதாகும்.

பதம் 10.20.15 : எல்லா வகையான ஆபத்துகளினால் பாதிக்கப்பட்ட போதிலும் கூட முழுமுதற் கடவுளிடத்தில் ஈடுபட்டுள்ள மனதினையுடைய பக்தர்கள் அமைதியுடன் இருத்தலைப் போன்று மழை மேகங்களினால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட போதிலும் கூட மலைகள் எந்தவிதமான அதிர்வுமின்றி அமைதியுடன் இருக்கின்றன.

பதம் 10.20.16 : மழைக்காலத்தின் தூய்மையற்ற சாலைகள், புல்பூண்டுகளும், குப்பைகளும் சேர்ந்து நடந்துசெல்வதற்கு கரடுமுரடாகின்றன. இச்சாலைகள் அந்தணர்களால் நீண்ட நாள் கற்கப்படாத சுருதிகள் போன்றவையாகும். அவைகளும் காலத்தின் மாற்றத்தினால் மூடப்பட்டுக் கெட்டுப் போகின்றன.

பதம் 10.20.17 : அனைத்து உயிர்களின் நலன் விரும்பும் நண்பர்களாக மேகங்கள் இருந்த போதிலும், நிலைமாறும் குணமுடைய மின்னலானது ஒரு மேகக் கூட்டத்தினின்று மற்றொரு மேகக் கூட்டத்திற்குச் செல்கிறது. இது எதனைப் போன்றதென்றால் ஆண்மைமிக்க ஆண்களுக்கு காம இச்சையுடைய பெண்கள் நம்பிக்கைத் துரோகம் செய்வது போன்றதாகும்.

பதம் 10.20.18 : தேவேந்திரனின் வளைந்த வில்லானது (வானவில்) வானத்தில் தோன்றும்பொழுது (வானத்திற்கு இடி ஓசைபோன்ற குணம் உண்டு) அது சாதாரண வில்லாகக் காணப்படுவதில்லை ஏனென்றால் அதற்கு நாண் கிடையாது, அதுபோல் பரமபுருஷ பகவான் ஜடக் குணங்களின் வினைத் தொடர்புடைய இவ்வுலகில் அவதரிக்கும் பொழுது அவர் சாதாரண மனிதனைப் போல் காணப்படுவதில்லை. காரணம் அவர் ஜடக் குணங்கள் அனைத்தினின்றும் விடுதலை பெற்றவராகவும், அனைத்துப் பெளதிக நிலைகளிலிருந்தும் சுதந்திரம் உடையவராகவும் இருக்கின்றார்.

பதம் 10.20.19 : மழைக்காலத்தில், சந்திரனால் ஒளிபெறும் மேகங்கள் மறைக்கப்படுவதனால், சந்திரனின் தோற்றம் தடுக்கப்படுகிறது. அதுபோல் தூய ஆத்மாவினால் ஒளி பெறும் உயிர் ஆணவத்தினால் மூடப்படுவதினால் உலக வாழ்க்கையில் உள்ள அதன் நேரடித் தோற்றமும் தடுக்கப்படுகிறது.

பதம் 10.20.20 : வானில் மேகங்கள் திரளக் கண்டால் மயில்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி ஆனந்தக் கூத்தாடுகின்றன. இது இல்லற வாழ்க்கையில் துன்புறுவோர், குற்றமற்ற முழுமுதற் கடவுளின் தூய பக்தர்கள் தமது இல்லங்களுக்கு வருகை தரும் பொழுது அடைகின்ற மகிழ்ச்சியைப் போன்றதாகும்.

பதம் 10.20.21 : மரங்கள் வாடியும் காய்ந்தும் இருந்தன. ஆயினும் அவை தமது வேர்கள் என்னும் பாதங்களினால் புதிதாகப் பெய்த மழை நீரைப் பருகியவுடன் அவற்றின் மேனியில் பசுமைபடர்ந்தது. அதுபோல் கடுமையான தவத்தினால் மெலிவும், சோர்வுமுற்ற ஒருவனது உடல் அவன் விரும்பிய பொருளைத் தனது தவத்தின் மூலம் அடையப் பெற்றவுடன் மீண்டும் தேஜஸும், ஆரோக்கியமும் உடைய தன்மைகளை வெளிப்படுத்துகிறது.

பதம் 10.20.22 : மாசற்ற மனங்களையுடைய லோகாயத மனிதர்கள் தமது இல்லங்களில் எத்துணை இடர்ப்பாடுகள் நேர்ந்த போதிலும் அங்கேயே தொடர்ந்து இருப்பது போன்று மழைக்காலத்தில் குளக்கரைகள் இடர்ப்பாடிலும் கூட நாரைகள் தொடர்ந்து அங்கேயே வசிக்கின்றன.

பதம் 10.20.23 : கலியுகத்தில் வேதமார்க்கத்தின் எல்லைகள் நாத்திகர்களின் தவறான கொள்கைகளினால் உடைந்து போவது போல், இந்திரன் மழை பெய்வித்த பொழுது வயல்களில் அருகேயுள்ள கால்வாய்கள், பெருக்கெடுத்துவரும் வெள்ளத்தினால் உடைந்து போயின.

பதம் 10.20.24 : காற்றினால் உந்தப்பட்ட மேகங்கள் எல்லா உயிர்களின் நன்மைக்காவும் தமது அமிர்த நீரினைப் பொழிந்ததானது அந்தணர்களால் உபதேசிக்கப்பட்ட மன்னர்கள் காலாகாலத்திற்கும் தமது குடிமக்களுக்குத் தானங்கள் வழங்குவதற்கு ஒப்பாகும்.

பதம் 10.20.25 : இவ்வாறு விருந்தாவனக் காடு பேரீச்சம் பழங்களும், நாவல் பழங்களும் நிறைந்து செழிப்புடனும், வளமுடனும் திகழ்ந்த பொழுது பகவான் கிருஷ்ணர், ஸ்ரீ பலராமருடன் சேர்ந்து கொண்டு, பசுக்களும், ஆயர்குலச் சிறுவர்களும் உடன்வர விளையாடி மகிழ்வதற்காக அக்காட்டினுள் பிரவேசித்தார்.

பதம் 10.20.26 : பருத்த பால் மடிகளின் பாரம் தாங்காது பசுக்கள் எல்லாம் மிகவும் மெதுவாக நடந்து செல்லும். ஆயினும் முழுமுதற் கடவுள் அழைத்தாரென்றால் அவர்மீது கொண்ட சிறந்த அன்பின் காரணமாக அப்பசுக்கள் எல்லாம் அவர் இருக்கும் இடம் நோக்கி விரைந்து ஓடும். அப்போது அப்பசுக்களின் பால்மடிகள் நனைந்து ஈரமாகக் காணப்படும்

பதம் 10.20.27 : வனங்களில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்களின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிவதைப் பகவான் கண்டார். மரங்களிலிருந்து இனிய மது வழிந்தது. மலையுச்சியிலிருந்து வீழ்ந்த அருவியின் ஓசை அருகில் குகைகள் இருப்பதை உணர்த்தின.

பதம் 10.20.28 : மழைபெய்யும் பொழுது விளையாடுவதற்காகவும் கிழங்குகள், பழங்கள் போன்றவற்றை உண்பதற்காகவும் பகவான் குகைகளிலோ அல்லது மரத்தின் பெரிய பொந்துகளிலோ புகுந்து கொள்வார்.

பதம் 10.20.29 : பகவான் கிருஷ்ணர் தனது இல்லத்திலிருந்து அனுப்பப்பட்ட தயிர்சாதத்தை பகவான் சங்கர்ஷணருடனும் சேர்ந்து தன்னோடு வழக்கமாக உணவு உண்ணும் கோபாலர்களுடன் உண்பார். நீர் நிலை அருகேயுள்ள ஒரு பெரிய பாறையில் அமர்ந்து கொண்டு அவர்கள் உணவு உண்பர்.

பதங்கள் 10.20.30 – 10.20.31 : பசும்புல் தரையின் மீது படுத்துக் கொண்டு தமது கண்களை மூடியவாறு திருப்தியுடன், பசுக்களும், எருதுகளும், கன்றுக் குட்டிகளும் அசைபோட்டுக் கொண்டிருப்பதையும், பசுக்கள் பால் நிரம்பிய தமது மடிகளின் கனம் தாங்காது சிரமப்படுவதையும் பகவான் கிருஷ்ணர் கண்டார். அளவில்லா ஆனந்தத்தின் ஆதாரமான, விருந்தாவனத்தின் எழிலும், வளமும்மிக்க மழைக்காலத்தினைக் கண்டு பகவான் தமது அகச்சக்தியிலிருந்து விரிவடைந்து அம்மழைக்காலத்திற்கு எல்லாவிதமான மரியாதைகளையும் அளித்தார்.

பதம் 10.20.32 : பகவான் ராமரும், பகவான் கேசவரும் விருந்தாவனத்தில் இவ்வாறு இருக்கின்ற காலத்தில் சரத்காலம் என்னும் இலையுதிர் காலம் வந்தது. இக்காலத்தில் வானம் மேகமின்றித் தெளிவாகவும், நீர்நிலைகள் தெளிவாகவும் காணப்படும். காற்றும் இதமாக வீசும்.

பதம் 10.20.33 : தாமரை மலர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சரத் காலம் என்னும் இலையுதிர் காலம், வழி தவறி வீழ்ச்சியுற்ற யோகிகள் மீண்டும் பக்தித் தொண்டினை மேற்கொள்ளும்பொழுது அது அவர்களது மனங்களைத் தூய்மை செய்வதுபோல், நீர் நிலைகள் அனைத்தையும் அவற்றின் தெளிந்த இயற்கை நிலையினை அடையச் செய்தது.

பதம் 10.20.34 : இலையுதிர்காலம் மேகங்களை நீக்கி வானைத் தெளிவடையச் செய்கிறது. கூட்டமாகவும், நெருக்கமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் விலங்குகளுக்கு விடுதலையளித்து அவற்றை வெளிவரச் செய்கிறது. மண்ணால் மூடப்பட்ட பூமியினைச் சுத்தம் செய்கிறது. நீரிலுள்ள அழுக்குகளை நீக்கி நீர்நிலைகளைத் தெளிவடையச் செய்கிறது. இது போன்றே பகவான் கிருஷ்ணருக்குச் செய்யும் பக்தித் தொண்டும் நான்கு பிரிவினருக்கும். அவர்களுக்குரிய துன்பங்களிலிருந்து விடுதலையளிக்கிறது.

பதம் 10.20.35 : மேகங்கள் தான் வைத்திருந்த அனைத்தையும் துறந்த தூய ஒளியுடன் மிளிர்வதானது பெளதிக இச்சைகள் அனைத்தையும் துறந்து அதன் காரணமாகத் தீய எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்று அமைதியுடன் வாழும் முனிவர்களைப் பேன்றதாகும்.

பதம் 10.20.36 : இப்பருவ காலத்தில் மலைகள் சிலசமயம் தமது தூய நீரை வெளியேற்றும் அல்லது சிலசமயம் வெளியேற்றுவதில்லை. இது எதனைப் போன்றதென்றால் உன்னத விஞ்ஞானத்தில் தேர்ந்தவர்கள் உன்னத ஞானாமிர்தத்தினை சிலசமயம் வழங்குவதும், சிலசமயம் வழங்காதிருப்பதும் போன்றதாகும்.

பதம் 10.20.37 : நாள் ஒன்று கழியும்போது தனது வாழ்நாளில் ஒன்று குறைகிறது என்பதை அறியாத மூட இல்லறத்தானைப் போன்று ஆழமற்ற இடத்தில் நீந்திக்கொண்டிருக்கும் மீன் தான் வசிக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது என்பதை அறிவதில்லை.

பதம் 10.20.38 : ஏழையும், கஞ்சனுமாகி இல்லறவாழ்வில் அளவுகடந்த பற்றுடையவனாக இருப்பவன் துன்பத்திற்காளாவது போன்று ஆழமில்லாத இடத்தில் வசிக்கும் மீன், இலையுதிர்காலச் சூரியனின் வெம்மையினால் துன்புறுகிறது.

பதம் 10.20.39 : படிப்படியாக நிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சேறு நீங்கப்பெற்று தாவரங்கள் தமது இளந்தளிர்ப் பருவத்தைக் கடக்கின்றன. அதுபோல் தெளிவுபெற்ற முனிவர்கள் தமது ஆணவம் மற்றம் சுயநலத்தினைக் கைவிடுகின்றனர். இக்குணங்கள் உண்மையான ஆத்மாவிலிருந்து வேறுபட்ட பெளதிக உடல் மற்றும் அதன் துணைப் பொருட்களின் அடிப்படையில் அமைந்தவையாகும்.

பதம் 10.20.40 : இலையுதிர்காலம் வந்தவுடன் கடலிலும், நீர்நிலைகளும் நிச்சலனமாக அமைதியுடன் இருப்பதானது உலகியற் செயல்களை மட்டுமல்லாது வேதாகமங்களையும் துறந்த ஒரு முனிவனைப் போன்றதாகும்.

பதம் 10.20.41 : யோகத்தினைப் பயிற்சி செய்வோர் தமது உணர்வுகள் கொந்தளிக்கும் புலன்களின் வழியே வெளிப்படாமல் இருப்பதற்காகத் தமது புலன்களை கடுமையான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவது போன்று நெல் வயல்களில் பாய்ச்சிய நீர் பெருக்கி வெளியே வடிந்துவிடாமல் இருப்பதற்காக விவசாயிகள் வலிமையான மண்கரைகளை உயர்த்திக் கட்டுகின்றனர்.

பதம் 10.20.42 : சூரியனின் சுடுகதிர்களின் காரணமாகத் துன்புற்ற அனைத்து உயிர்களையும் இலையுதிர்காலம் அத்துன்பத்திலிருந்து விடுவித்த செயல் தனது உடலுடன் தன்னை அடையானம் கண்டவனின் துன்பத்தை ஞானம் விடுவித்தது போன்றும், தனது பிரிவினால் வாடிய விருந்தாவன மங்கையரின் வாட்டத்திலிருந்து பகவான் முகுந்தன் அவர்களை விடுவித்தது போன்றதுமாகும்.

பதம் 10.20.43 : மேகங்கள் இன்றி தெளிவாகவும், நட்சத்திரங்களுடனும் காணப்பட்ட இலையுதிர்காலத்து வானம் ஒளி நிறைந்து விளங்கிய காட்சி வேதங்களின் மறைபொருளை நன்குணர்ந்த ஒருவனின் ஆன்மீக உணர்வினைப் போன்றதாக இருந்தது.

பதம் 10.20.44 : யதுகுல நாயகரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்புவியில் விருஷ்ணீக்கள் அனைவராலும் சூழப்பட்டு ஒளிவீச இருந்ததைப் போன்று நட்சத்திரங்களால் சூழப்பட்ட முழுநிலவு வானத்தில் ஒளிவீசியது.

பதம் 10.20.45 : பகவான் கிருஷ்ணரிடம் இதயங்களைப் பறி கொடுத்த கோபியர்களைத் தவிர பிறர் நறுமணமலர்க்காட்டிலிருந்து வரும் தென்றல் காற்றைத் தழுவி மக்கள் தங்கள் துன்பங்களை மறக்க முடியும். இந்த காற்று அதிக வெப்பமுமின்றி மிதமாக இருந்தது.

பதம் 10.20.46 : இலையுதிர் காலத்தின் பாதிப்பினால் பசுக்களும், பெண்மான்களும், பேடைப்பறவைகளும் உரிய பருவம் அடைந்து, பாலுறவு இன்பம் வேண்டி ஆண் துணைவர்களால் தேடப்படுவது என்பது முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டில் செய்யப்படும் செயல்களை அவற்றின் நற்பலன்கள் தாமே தேடி வருவன போன்றதாகும்.

பதம் 10.20.47 : ஒ, பரீக்ஷித்து மன்னனே! இலையுதிர்காலச் சூரியன் கீழ்வானில் எழும்பொழுது, இரவில் மலரும் குமுத மலர்களைத் தவிர, தாமரை மலர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் மலர்வதானது வலிமைமிக்க அரசனின் ஆட்சியில் திருடர்களைத் தவிர குடிமக்கள் அனைவரும் அச்சமின்றி இருப்பது போன்றதாகும்.

பதம் 10.20.48 : எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் அறுவடைநாள் (பொங்கல்) மற்றும் அதனுடன் சேர்ந்து கொண்டாடப்படும் சில விழாக்கள் (போகி, மாட்டுப்பொங்கல்) போன்றவற்றை வேதங்கள் கூறுமாறு அக்கினி வேள்விகள் செய்து கொண்டாடுகின்றனர்: இதன் காரணமாக பூமி புதிதாக வந்த தானியங்களினால் பொலிவுற்றது. அதிலும் சிறப்பாக பரமபுருஷ பகவானின் அம்சமான கிருஷ்ணர் மற்றும் பலராமர் இருந்ததினால் பூமி எழிலுடையதாகத் திகழ்ந்தது.

பதம் 10.20.49 : மழையினால் தடுக்கப்பட்ட வணிகர்கள், முனிவர்கள், மன்னர்கள், பிரம்மச்சாரிகள் மாணவர்கள், அனைவரும் வெளியே சென்று தாங்கள் விரும்பிய பொருள்களை அடைந்ததானது இவ்வாழ்க்கையில் ஸித்தி கைவரப் பெற்றவர்கள் உரியகாலம் வரும் பொழுது தமது பெளதிக உடல்களை விட்டுத் தமக்குரிய வடிவங்களைப் பெறுவது போன்றதாகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare