அத்தியாயம் – 26
அற்புத கிருஷ்ணர்
பதம் 10.26.1
ஸ்ரீ-ஸுக உவாச
ஏவம்-விதானி கர்மாணி கோபா: க்ருஷ்ணஸ்ய வீக்ஷ்ய தே
அதத்-வீர்ய-வித: ப்ரோசு: ஸமப்யேத்ய ஸு-விஸ்மிதா:

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்-விதானி—இதுபோன்ற; கர்மாணி—செய்கைகள்; கோபா:—கோபாலர்கள்; க்ருஷ்ணஸ்ய—பகவான் கிருஷ்ணரின்; வீக்ஷ்ய—கண்டு; தே—அவர்கள்; அதத்-வீர்ய-வித:—அவரது சக்தி என்னவென்று அறிய இயலாமல்; ப்ரோசு:—அவர்கள் கூறினர்; ஸமப்யேத்ய—அணுகினர் (நந்த மகாராஜாவை); ஸு-விஸ்மிதா:—மிகவும் வியப்புடன்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கிருஷ்ணரின் கோவர்தனகிரியைத் தூக்குதல் போன்ற நம்புதற்கரிய செயல்களைக் கண்டு அவரது உன்னத சக்தி என்னவென்று அறிய இயலாத ஆயர்குலத்தினர் நந்த மகாராஜாவை அணுகி அவரிடம் பின்வருமாறு கூறினர்.

பதம் 10.26.2
பாலகஸ்ய யத் ஏதானி கர்மாணி அதி-அத்புதானி வை
கதம் அர்ஹதி அஸௌ ஜன்ம க்ராம்யேஷ்வ் ஆத்ம-ஜுகுப்ஸிதம்

பாலகஸ்ய—பாலகனின்; யத்—ஏனென்றால்; ஏதானி—இவை; கர்மாணி—செயல்கள்; அதி-அத்புதானி—அதிக அற்புதமானவை; வை—உறுதியாக; கதம்—எவ்வாறு; அர்ஹதி—பொருத்தமாகும்; அஸௌ—அவன்; ஜன்ம—பிறப்பு; க்ராம்யேஷு—சாதாரண மனிதர்களின் மத்தியில்; ஆத்ம—அவனுக்கு; ஜுகுப்ஸிதம்—வெறுத்தற்குரியது.

(ஆயர்கள் கூறினர்:) இச்சிறுவன் நம்புதற்கரிய அசாதாரணச் செயல்களைச் செய்கின்றான் ஆதலினால், இவனைப் போன்றவர்கள் கண்டு வெறுக்கும் சாதாரண மனிதர்களாகிய நம்மிடையே இவன் எப்படிப் பிறந்திருக்க முடியும்?

பதம் 10.26.3
ய: ஸப்த-ஹாயனோ பால: கரேணைகேன லீலயா
கதம் பிப்ரத் கிரி-வரம் புஷ்கரம் கஜ-ராட் இவ

ய:—இவன்; ஸப்த-ஹாயன:—ஏழுவயதுச் சிறுவன்; பால:—ஒரு பாலகன்; கரேண—ஒரு கரத்தில்; ஏகேன—ஒரு; லீலயா—விளையாட்டாக; கதம்—எவ்வாறு; பிப்ரத்—தூக்கினான்; கிரிவரம்—மலைகளிற் சிறந்த கோவர்தனம்; புஷ்கரம்—ஒரு தாமரை மலரை; கஜ-ராட்—வல்லமை மிக்க யானை; இவ—போன்று.

வல்லமை மிக்க யானை ஒன்று தனது தும்பிக்கையில் ஒரு தாமரை மலரை எளிதாகக் தூக்குவது போன்று ஏழுவயதுச் சிறுவனான இவன் மிகவும் விளையாட்டாக மலைகளிற் சிறந்த கோவர்தன கிரியை எப்படித் தூக்க முடிந்தது?

பதம் 10.26.4
தோகேனாமீலிதாக்ஷேண பூதனாயா மஹௌஜஸ:
பீதா: ஸ்தன: ஸஹ ப்ராணை: காலேனேவ வயஸ் தனோ:

தோகேன—சிறுகுழந்தையினால்; ஆ-மீலித—நன்கு திறக்காத; அக்ஷேண—கண்களை; பூதனாயா:—பூதனை என்னும் அரக்கியை; மஹா-ஓஜஸ:—அதீத சக்தியுடையவள்; பீத:—குடித்து; ஸ்தன—ஸ்தனங்கள்; ஸஹ—உடன்; ப்ராணை:—அவளது சுவாசக் காற்றையே; காலேன—கால வேகத்தினால்; இவ—போன்று; வய:—வயது; தனோ:—ஒரு பெளதிக உடலின்.

கண்களைச் சரியாகத் திறக்காத பச்சைக் குழந்தை பூதனை என்னும் அரக்கியின் முலைப்பாலினை உண்டு காலன் ஒருவனது உடலின் இளமையை எடுத்துக்கொள்வது போல் அவளது உயிரையும் எடுத்துக் கொண்டதே!

பதம் 10.26.5
ஹின்வதோ ‘த: ஸயானஸ்ய மாஸ்யஸ்ய சரணாவ் உதக்
அனோ ‘பதத் விபர்யஸ்தம் ருதத: ப்ரபதாஹதம்

ஹின்வத:—செல்லுதல்; அத:—அடியில்; ஸயனாஸ்ய—படுத்திருந்தவன்; மாஸ்யஸ்ய—சிலமாதங்களே ஆன குழந்தை; சரணௌ—தனது இருபாதங்கள்; உதக்—மேல்நோக்கி; அன:—வண்டி; அபதத்—வீழ்ந்தது; விபர்யஸ்தம்—குப்புறக் கவிழ்ந்தது; ருதத:—அழுது கொண்டிருந்தவனின்; ப்ரபத—பாத நுனியினால்; ஆஹதம்—தாக்குதல்.

ஒரு பெரிய வண்டியின் கீழ் அழுதுகொண்டு படுத்திருந்த மூன்று மாதக் குழந்தையான கிருஷ்ணர் தனது பாதங்களால் அவ்வண்டியை உதைத்தார். அவரது பாதத்தின் நுனிப்பகுதி பட்ட மாத்திரத்திலேயே அந்த வண்டி உயரே பறந்து பின்னர் குப்புறக் கவிழ்ந்து வீழ்ந்தது.

பதம் 10.26.6
ஏக-ஹாயன ஆஸீனோ ஹ்ரியமாணோ விஹாயஸா
தைத்யேன யஸ் த்ருணாவ்ர்தம் அஹன் கண்ட-க்ரஹா துரம்

ஏக-ஹாயன:—ஒரு வயதில்; ஆஸீன:—உட்கார்ந்து கொண்டிருந்து; ஹ்ரியமாண:—தூக்கிக் கொண்டு; விஹாயஸ—வானத்தில்; தைத்யேன—அசுரனால்; ய:—இவன்; த்ருணாவர்தம்—திருணாவ்ருதன் என்னும் பெயருடைய; அஹன்—கொல்லப்பட்டான்; கண்ட—அவனது கழுத்து; க்ரஹ—நெறிக்கப்பட்ட; ஆதுரம்—வேதனை.

ஒரு வயதில் இவர் அமைதியுடன் உட்கார்ந்து கொண்டிருந்த பொழுது திருணாவ்ருதர் என்னும் அசுரனால் ஆகாயத்தில் தூக்கிச் செல்லப்பட்டார். அப்போது குழந்தை கிருஷ்ணர் அவ்வசுரனின் கழுத்தை நெறித்து அவனுக்கு மிகுந்த துன்பமுண்டாக்கி அவனைக் கொன்றார்.

பதம் 10.26.7
க்வசித் ஹையங்கவ-ஸ்தைன்யே மாத்ரா பத்த உதூகலே
கச்சன்ன் அர்ஜுனயோர் மத்யே பாஹுப்யாம் தாவ் அபாதயத்

க்வசித்—ஒரு சமயம்; ஹையங்கவ—வெண்ணெய்; ஸ்தைன்யே—திருடியதினால்; மாத்ரா—இவனது அன்னையினால்; பத்த:—கட்டப்பட்டு; உதூகலே—ஒரு பெரிய உரலில்; கச்சன்—ஊர்ந்து; அர்ஜுனயோ:—இரு மருதமரங்கள்; மத்யே—நடுவில்; பாஹுப்யாம்—இவனது கரங்களினால்; தெள அபாதயத்—விழச்செய்தான்.

ஒரு சமயம் இவர் வெண்ணெய் திருடிக்கொண்டிருக்கும் பொழுது கையும் களவுமாக தனது அன்னையினால் பிடிக்கப்பட்டு ஒரு பெரிய உரலில் கட்டிவைக்கப்பட்டார். பிறகு இவர் தனது கைகளினால் தவழ்ந்து அவ்வுரலை இழுத்துக் கொண்டு இரண்டு மருதமரங்களுக்கு இடையில் புகுந்து அவற்றைக் கீழே விழச் செய்தார்.

பதம் 10.26.8
வனே ஸஞ்சாரயன் வத்ஸான் ஸ-ராமோ பாலகைர் வ்ருத:
ஹந்து-காமம் பகம் தோர்ப்யாம் முகதோ ‘ரிம் அபாடயத்

வனே—காட்டில்; ஸஞ்சாரயன்—மேய்த்துக் கொண்டிருந்த பொழுது; வத்ஸான்—பசுக்களை; ஸ ராம:—பகவான் பலராமருடன் சேர்ந்து; பாலகை:—ஆயர்குலச் சிறுவர்களால்; வ்ருத:—சூழப்பட்டு; ஹந்து-காமம்—கொல்லவிரும்பி; பகம்—பகாசுரன்; தோர்ப்யாம்—இவனது கரங்களினால்; முகத:—வாயிலிருந்து; அரிம்—பகைவன்; அபாடயத்—கிழித்து எறியப்பட்டான்.

மற்றொரு சமயம் கிருஷ்ணர் பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் சேர்ந்து கன்றுகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது பகாசுரன் என்னும் அசுரன் கிருஷ்ணரைக் கொல்ல வேண்டும் என்னும் எண்ணத்தில் அங்கு வந்தான். ஆனால் கிருஷ்ணர் தீங்குவிளைவிக்க வந்த அந்த அசுரனது வாயைக் கிழித்துக் கொன்றார்.

பதம் 10.26.9
வத்ஸேஷு வத்ஸ-ரூபேண ப்ரவிஸந்தம் ஜிகாம்ஸயா
ஹத்வா ன்யபாதயத் தேன கபித்தானி ச லீலயா

வத்ஸேஷு—கன்றுகளுக்கிடையில்; வத்ஸ-ரூபேண—மற்றொரு கன்றினைப் போல் தோன்றி; ப்ரவிஸந்தம்—அவன் புகுந்து கொண்டான்; ஜிகாம்ஸயா—கொல்லவிரும்பி; ஹத்வா—அவனைக் கொன்று; ன்யபாதயத்—கீழேவிழச் செய்தான்; தேன—அவனால்; கபித்தானி—விளாம் பழங்கள்; ச—மற்றும்; லீலயா—விளையாட்டாக.

கிருஷ்ணரைக் கொல்ல விரும்பிய வத்ஸாசுரன் தானும் ஒரு கன்றாக மாறி கன்றுகளுக்கிடையில் புகுந்து கொண்டான். ஆனால் கிருஷ்ணரே அவ்வசுரனைக் கொன்று அவனுடைய உடலை விளாமரத்தின் மீது எரிந்து விளாம்பழங்களை விழச் செய்தார்.

பதம் 10.26.10
ஹத்வா ராஸப-தைதேயம் தத்-பந்தூம்ஸ் ச பலான்வித:
சக்ரே தாள-வனம் கேஷைம் பரிபக்வ-பலான்விதம்

ஹத்வா—கொன்று; ராஸப—கழுதைவடிவில் தோன்றிய; தைதேயம்—திதியின் புதல்வர்கள்; தத்-பந்தூன்—அவ்வசுரனின் நண்பர்களை; ச—மற்றும்; பல-அன்வித:—பலராமருடன் சேர்ந்து; சக்ரே—இவன் செய்தான்; தாள-வனம்—தாளவனத்தில்; கேஷைம்—மங்களம்; பரிபக்வ—நன்கு கனிந்த; பல—பழங்களுடன்; அன்விதம்—நிறைந்த.

பகவான் பலராமருடன் சேர்ந்து கிருஷ்ணர் கழுதை அசுரனையும் அவனது நண்பர்களையும் கொன்றார். அதன் மூலம் நன்கு கனிந்த பனம்பழங்கள் நிறைந்த தாளவனத்தினை மீட்டுப் பாதுகாத்தார்.

பதம் 10.26.11
ப்ரலம்பம் காதயித்வோக்ரம் பலேன பல-ஸாலினா
அமோசயத் வ்ரஜ-பஸூன் கோபாம்ஸ் சாரண்ய-வஹ்னித:

ப்ரலம்பம்—பிரலம்பாசுரன் என்பவனை; காதயித்வா—கொல்வதற்கு ஏற்பாடு செய்து; உக்ரம்—பயங்கரமாக; பலேன—பகவான் பலராமரால்; பல—ஸாலினா—மிகவும் பலசாலியான; அமோசயத்—இவன் விடுவித்தான்; வ்ரஜ-பஸூன்—விரஜத்திலுள்ள விலங்குகளை; கோபான்—கோபாலர்களை; ச—மற்றும்; ஆரண்ய—வனத்தின்; வஹ்னித:—நெருப்பிலிருந்து.

பலம் வாய்ந்த பகவான் பலராமரைக் கொண்டு பிரலம்பாசுரனைக் கொல்வதற்கு ஏற்பாடு செய்து கிருஷ்ணர் விரஜத்தின் ஆயர்குலச் சிறுவர்களையும் அவர்களின் விலங்குகளையும் காட்டுத்தீயினின்று காத்தார்.

பதம் 10.26.12
ஆஸீ-விஷதமாஹிந்த்ரம் தமித்வா விமதம் ஹ்ரதாத்
ப்ரஸஹ்யோத்வாஸ்ய யமுனாம் சக்ரே ‘ஸௌ நிர்விஷோதகாம்

அஸீ—தனது விஷப் பற்களின்; விஷ-தம—கொடிய விஷத்தினைக் கொண்டு; அஹி—பாம்புகளின்; இந்த்ரம்—தலைவன்; தமித்வா—அடக்கினான்; விமதம்—அவனது ஆணவம் அழிக்கப்பட்டது; ஹ்ரதாத்—குளத்திலிருந்து; ப்ரஸஹ்ய—பலத்தினால்; உத்வாஸ்ய—வெளியேறச் செய்தான்; யமுனாம்—யமுனை நதி; சக்ரே—செய்தான்; அஸௌ—இவன்; நிர்விஷ—விஷத்திலிருந்து காத்தான்; உதகாம்—அதன் நீரினை.

காளிங்கன் என்னும் கொடிய விஷமுடைய பாம்பினை கிருஷ்ணர் தண்டித்தார். அவனை அடக்கிய பிறகு யமுனையின் குளத்திலிருந்து பலவந்தமாக விரட்டியடித்தார். இவ்வாறு இவர் யமுனை நதியின் நீரினை கொடிய விஷக்கலப்பிலிருந்து காத்தார்.

பதம் 10.26.13
துஸ்த்யஜஸ் சானுராகோ ‘ஸ்மின்
ஸர்வேஷாம் நோ வ்ரஜௌகஸாம்
நந்த தே தனயே ‘ஸ்மாஸு
தஸ்யாபி ஒளத்பத்திக: கதம்

துஸ்த்யஜ:—புறக்கணிப்பது இயலாதது; ச—மற்றும்; அனுராக:—அளவில்லாத பாசம்; அஸ்மின்—அவன்மீது; ஸர்வேஷாம்—அனைவரும்; ந:—நமது; வ்ரஜ-ஓகஸாம்—விரஜவாசிகள்; நந்த—நந்த மகாராஜாவே; தே—உமது; தனயே—தனயன்; அஸ்மாஸு—நாங்கள்; தஸ்ய—அவனது; அபி—கூட; ஒளத்பத்திக:—இயற்கையாக; கதம்—எவ்வாறு.

அன்பிற்குரிய நந்தமகாராஜாவே, நாங்களும் விரஜத்திலுள்ள பிறரும் உங்கள் தனயன்மீது வைத்திருக்கும் பாசத்தினை ஏன் கைவிட முடியவில்லை? எந்தவிதப் புறத்தூண்டுதலுமின்றி எங்கள் அனைவரையும் கவர்ந்து விடுகிறானே அது எப்படி?

பதம் 10.26.14
க்வ-ஸப்த-ஹாயனோ பால: க்வ மஹாத்ரி-விதாரணம்
ததோ நோ ஜாயதே ஸங்க வ்ரஜ—நாத தவாத்மஜே

க்வ—இங்கே ஒப்பிடுகையில்; ஸ்ப்த-ஹாயன:—ஏழுவயது உடைய; பால:—பாலன்; க்வ—இங்கே; மஹா-அத்ரி—பெரியமலையின்; விதாரணம்—தூக்குகின்றான்; தத:—அதனால்; ந:—எமக்கு; ஜாயதே—எழுகிறது; ஸங்கா—ஐயம்; வ்ரஜ-நாத—ஓ, விரஜத்தின் தலைவரே; தவ—உமது; ஆத்மஜே—மைந்தனைப் பொருத்தமட்டில்.

ஒரு புறம் பார்த்தால் இவன் ஏழுவயதுச் சிறுவனாவான். மறுபுறம் பார்த்தால் கோவர்தனகிரி என்னும் பெரிய மலையினைத் தூக்குகிறான். ஆதலினால் விரஜத்தின் தலைவரே! உமது மைந்தனைப் பற்றி எமக்கு ஐயம் எழுகிறது.

பதம் 10.26.15
ஸ்ரீ-நந்த உவாச
ஸ்ரூயதாம் மே வசோ கோபா வ்யேது ஸங்கா ச வோ ‘ர்பகே
ஏனம் குமாரம் உத்திஸ்ய கர்கோ மே யத் உவாச ஹ

ஸ்ரீ-நந்த: உவாச—ஸ்ரீ நந்த மகாராஜா கூறினார்; ஸ்ரூயதாம்—கேட்பீராக; மே—எனது; வச:—வார்த்தைகளை; கோபா:—ஆயர்குலத்தோரே; வ்யேது—அது நீங்கும்; ஸங்கா—ஐயம்; ச—மற்றும்; வ:—உமது; அர்பகே—என் பையனைப் பொருத்த; ஏனம்—இந்த; குமாரம்—குழந்தைக்கு: உத்திஸ்ய—குறித்த; கர்க:—கர்க முனிவர்; மே—எனக்கு; யத்—இதனை; உவாச—கூறினார்; ஹ—முன்பு.

நந்தமகாராஜா பதிலுரைத்தார்: ஓ, ஆயர்களே, எனது வார்த்தைகளைக் கேட்டீரென்றால் என் பையனைப் பற்றிய உங்கள் ஐயங்கள் அனைத்தும் நீங்கிவிடும். முன்பு கர்க முனிவர் எனது குழந்தையைப் பற்றிப் பின்வருமாறு என்னிடம் கூறினார்.

பதம் 10.26.16
வர்ணாஸ் த்ரய: கிலாஸ்யாஸன் க்ருஹ்ணதோ ‘னு-யுகம் தனூ:
ஸுக்லோ ரக்தஸ் ததா பீத இதானீம் க்ருஷ்ணதாம் கத:

வர்ண: த்ரய:—மூன்று நிறங்கள்; கில—உண்மையில்; அஸ்ய—உனது மைந்தன் கிருஷ்ணரால்; ஆஸன்—மேற்கொள்ளப்பட்டன; க்ருஹ்ணத:—ஏற்றுக்கொண்டு; அனு-யுகம் தனூ:—வெவ்வேறு யுகத்திற்கேற்ப உன்னத உடல்கள்; ஸுக்ல:—சிலசமயம் வெண்மை; ரக்த:—சிலசமயம் சிகப்பு; ததா—அதுபோல்; பீதா:—சிலசமயம் மஞ்சள்; இதானீம் க்ருஷ்ணதாம் கத:—இப்போது அவன் கருநிறமுடையவனாக இருக்கின்றான்.

(கர்க முனிவர் கூறினார்:) உனது மைந்தன் கிருஷ்ணர் ஒவ்வோர் யுகத்திலும் அவதரிக்கின்றார். முன்பு இவர்-வெண்மை, சிகப்பு, மஞ்சள் என்னும் மூன்று நிறங்களில் தோன்றினார். இப்போது கருநிறமுடையவராகத் தோன்றியுள்ளார்.

பதம் 10.26.17
ப்ராக் அயம் வஸுதேவஸ்ய க்வசிஜ் ஜாதஸ் தவாத்மஜ:
வாஸுதேவ இதி ஸ்ரீமான் அபிஜ்ஞா: ஸம்ப்ரசக்ஷதே

ப்ராக்—முன்பு; அயம்—இக்குழந்தை; வஸுதேவஸ்ய—வசுதேவரின்; க்வசித்—சில சமயம்; ஜாத:—பிறந்தான்; தவ—உனது; ஆத்மஜ:—கிருஷ்ணர்; (உனது மைந்தன்); வாஸுதேவ:—ஆகையினால் இவன் வாஸுதேவன் என்றழைக்கப்படுவான்; இதி—இவ்வாறு; ஸ்ரீமான்—மிக அழகிய; அபிஜ்ஞா:—கற்றறிந்தவர்கள்; ஸம்ப்ரசக்ஷதே—கிருஷ்ணரே, வாசுதேவர் என்று கூறுவர்.

சிலகாரணங்களுக்காக உமது மைந்தன் முன்பு வசுதேவருக்கு மைந்தனாகத் தோன்றினான். ஆகையினால் கற்றறிந்தவர்கள் இக் குழந்தையினை வாசுதேவன் என்றும் அழைப்பர்.

பதம் 10.26.18
பஹூனி ஸந்தி நாமானி ரூபாணி ச ஸுதஸ்ய தே
குண-கர்மானுரூபாணி தானி அஹம் வேத நோ ஜன:

பஹூனி—பல்வேறு; ஸந்தி—இருக்கின்றன; நாமாணி—நாமங்கள்; ரூபாணி—வடிவங்கள்; ச—மற்றும்; ஸுதஸ்ய—மைந்தனின்; தே—உனது; குண-கர்ம-அனுரூபாணி—இவனது குணங்கள் மற்றும் செயல்களுக்கேற்ப; தானி—அவற்றை; அஹம்—நான்; வேத—அறிவேன்; ந உ ஜனா:—சாதாரண மனிதர்கள் அறிவதில்லை.

உம்முடைய இந்த மகனின் உன்னதக் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப இவனுக்கு பல நாமங்களும், ரூபங்களும் உள்ளன. இவற்றை நானறிவேன். ஆனால் பாமர மக்கள் இவற்றை அறியார்கள்.

பதம் 10.26.19
ஏஷ வ: ஸ்ரேய ஆதாஸ்யத் கோப-கோகுல-நந்தன:
அனேன ஸர்வ-துர்காணி யூயம் அஞ்ஜஸ் தரிஷ்யத

ஏஷ:—இக்குழந்தை; வ:—உங்கள் எல்லோருக்கும்; ஸ்ரேய: ஆதாஸ்யத்—அனைத்து மங்களங்களுடன் செயல்படுவான்; கோப-கோகுல-நந்தன:—கோகுலத்தில் ஆயர்குலத்தில் பிறந்த ஒரு சிறுவனைப் போன்று; அனேன—இவனால்; ஸர்வ-துர்காணி—எல்லாவிதமான துன்பங்களும்; யூயம்—நீங்கள் அனைவரும்; அஞ்ஜ:—எளிதில்; தரிஷ்யத—நீங்கப் பெறுவீர்கள்.

கோகுலத்திலுள்ள ஆயர்களின் உன்னத ஆனந்தத்தினை அதிகரிப்பதற்காக இக்குழந்தை எப்போதும் மங்களகரமாக செயல்படும். இவனது கருணையினால் நீங்கள் அனைத்துத் துன்பங்களும் நீங்கப் பெறுவீர்கள்.

பதம் 10.26.20
புராணேன வ்ரஜ-பதே ஸாதவோ தஸ்யு-பீடிதா:
அராஜகே ரஷ்யமாணா ஜிக்யுர் தஸ்யூன் ஸமேதிதா:

புரா—முன்னர்; அனேன—கிருஷ்ணரால்; வ்ரஜ-பதே—ஓ, விரஜத்தின் தலைவனே; ஸாதவ:—நேர்மையுடையவர்கள்; தஸ்யு-பீடிதா:—துஷ்டர்கள் மற்றும் திருடர்களால் துன்புறுத்தப்படும் பொழுது; அராஜகே—கொடுங்கோல் ஆட்சி நடைபெறும் பொழுது; ரக்ஷ்யமானா:—பாதுகாக்க; ஜிக்யு:—வென்று; தஸ்யூன்—துஷ்டர்களும், திருடர்களும்; ஸமேதிதா:—வளம்பெறச்செய்ய.

ஒ, நந்த மகாராஜனே, கொடுங்கோல் ஆட்சி நடைபெறும் பொழுதும், இந்திரன் பதவி இழக்கும்பொழுதும், திருடர்களால், நல்லவர்கள் துன்புறுத்தப்படும் பொழுதும் துஷ்டர்களை அழித்து, நல்லவர்களைப் பாதுகாத்து அவர்களை வளம் பெறச் செய்வதற்காக இக்குழந்தை அவதரிப்பான் என்று சரித்திரத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

பதம் 10.26.21
ய ஏதஸ்மின் மஹா-பாகே ப்ரீதிம் குர்வந்தி மானவா:
நாரயோ ‘பிபவந்தி ஏதான் விஷ்ணு-பக்ஷான் இவாஸுரா:

ய—மனிதர்கள்; ஏதஸ்மின்—இக்குழந்தையிடம்; மஹா-பாகே—மிகவும் மங்களமுடைய; ப்ரீதிம்—பாசம்; குர்வந்தி—நிறைவேற்றுதல்; மானவா:—அவர்கள்; ந—இல்லை; அரய:—அவர்களின் பகைவர்கள்; அபிபவந்தி—நீங்கப்பெறுவர்; ஏதான்—கிருஷ்ணர் மீதுப் பற்றுடையவர்கள்; விஷ்ணு-பக்ஷான்—எப்போதும் பகவான் விஷ்ணுவைச் சார்ந்திருக்கும் பக்தர்கள்; இவ—போன்று; அஸுரா:—அசுரர்கள்.

எப்பொழுதும் விஷ்ணுவைத் தங்கள் பக்கத்தில் வைத்திருக்கும் தேவர்களுக்கு அரக்கர்களால் தீங்கு செய்ய முடியாது. அதேபோல, அனைத்து மங்களகரமான கிருஷ்ணருடன் இணைந்த எந்த மனிதர்களும் எதிரிகளால் தோற்கடிக்கப்பட முடியாது.

பதம் 10.26.22
தஸ்மான் நந்த குமாரோ ‘யம் நாராயண-ஸமோ குணை:
ஸ்ரியா கீர்த்யானுபாவேன தத்-கர்மஸு ந விஸ்மய:

தஸ்மாத்—ஆகையினால்; நந்த—ஓ, நந்தமகாராஜனே; குமார:—குழந்தை; அயம்—இந்த; நாராயண-ஸம:—நாராயணருக்கு இணையானவன்; குணை:—இவனது குணங்களினால்; ஸ்ரியா—செல்வத்தினால்; கீர்த்யா—குறிப்பாக இவனது நாமம் மற்றும் கீர்த்தியினால்; அனுபாவேன—செல்வாக்கினால்; தத்—இவனது; கர்மஸு—செயல்களைப் பொருத்தமட்டில்; ந—இல்லை; விஸ்மய:—ஆச்சரியம்.

ஆகையினால் நந்தமகாராஜனே, உனது இம்மைந்தன் நாராயணருக்கு இணையானவன் ஆவான். இவனது உன்னத குணம், வளம், நாமம், கீர்த்தி, செல்வாக்கு போன்றவற்றினால் இவன் நாராயணரைப் போன்றவனாவான். அதனால் இவனது செயல்களைக் கண்டு நீ ஆச்சரியமடைய வேண்டாம்.

பதம் 10.26.23
இதி அத்தா மாம் ஸமாதிஸ்ய கர்கே ச ஸ்வ-க்ருஹம் கதே
மன்யே நாராயணஸ்யாம்ஸம் க்ருஷ்ணம் அக்லிஷ்ட-காரிணம்

இதி—இவ்வாறு; அத்தா—நேரடியாக; மாம்—என்னிடம்; ஸமாதிஸ்ய—அறிவுறுத்திய; கர்கே—கர்காச்சாரியார்; ச—மற்றும்; ஸ்வ-க்ருஹம்—அவரது இல்லத்திற்கு; கதே—சென்றார்; மன்யே—நான் கருதுகிறேன்; நாராயணஸ்ய—முழுமுதற்கடவுள் நாராயணரின்; அம்ஸம்—அம்சாவதாரம்; க்ருஷ்ணம்—கிருஷ்ணர்; அக்லிஷ்ட-காரிணம்—துன்பங்களிலிருந்து நம்மைக் காப்பவன்.

(நந்தமகாராஜா தொடர்ந்து கூறினார்:) இவ்வாறு என்னிடம் கூறிய கர்கரிஷி பிறகு தன் இல்லத்திற்குத் திரும்பிச் சென்றபிறகு, நம்மைத் துன்பங்களிலிருந்து காக்கும் இக்கிருஷ்ணன் உண்மையில் பகவான் நாராயணரின் அம்சாவதாரம் ஆவான் என்று சிந்திக்கத் தொடங்கினேன்.

பதம் 10.26.24
இதி நந்த-வச: ஸ்ருத்வா கர்க-கீதம் வ்ரஜௌகஸ:
முதிதா நந்தம் ஆனர்சு: க்ருஷ்ணம் ச கத-விஸ்மயா:

இதி—இவ்வாறு; நந்த-வச:—நந்தமகாராஜாவின் வார்த்தைகள்; ஸ்ருத்வா—கேட்டு; கர்க-கீதம்—கர்க ரிஷி உரைத்தது; வ்ரஜ-ஓகஸ:—விரஜவாசிகள்; முதிதா:—உணர்ச்சிவயப்பட்டனர்; நந்தம்—நந்த மகாராஜா; ஆனர்சு:—அவர்கள் மரியாதை செய்தனர்; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; ச—மற்றும்; கத—சென்றது; விஸ்மயா:—அவர்களின் குழப்பம்.

(சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்:) கர்க முனிவரிடமிருந்து தான் கேட்டவற்றை நந்தமகாராஜா உரைக்கக் கேட்ட விருந்தாவனவாசிகள் புத்துணர்ச்சி பெற்றனர். அவர்களின் மனக்குழப்பம் நீங்கியது. அவர்கள் நந்தகோபரையும், பகவான் கிருஷ்ணரையும் மரியாதையுடன் வணங்கினர்.

பதம் 10.26.25
தேவே வர்ஷதி யஜ்ஞ-விப்லவ-ருஷா வஜ்ராஸ்ம-வர்ஷானிலை:
ஸீதத்-பால-பஸு-ஸ்த்ரி ஆத்ம-ஸரணம் த்ருஷ்ட்வானுகம்பி-உத்ஸ்மயன்
உத்பாட்யைக-கரேண னஸலம் அபலோ லீலோச்சிவீந்த்ரம் யதா
பிப்ரத் கோஷ்டம் அபான் மஹேந்த்ர-மத-பித் ப்ரியான் ந இந்த்ரோ கவாம்

தேவே—தேவேந்திரன்; வர்ஷதி—மழைக்குக் காரணமாகி; யஜ்ஞ—அவனுக்குரிய வேள்வி; விப்லவ—தடைப்பட்டதினால்; ருஷா—சினங்கொண்டு; வஜ்ர—வஜ்ராயுதங்கள்; அஸ்ம-வர்ஷ—ஆலங்கட்டி மழை; அனிலை:—காற்று; ஸீதத்—துன்புற்றனர்; பால—ஆயர்கள்; பஸு—விலங்குகள்; ஸ்த்ரி—பெண்கள்; ஆத்ம—அவரை; ஸரணம்—அவர்களது ஒரே அடைக்கலம்; த்ருஷ்ட்வா—கண்டு; அனுகம்பீ—இயற்கையிலேயே மிகுந்த கருணையுடையவர்; உத்ஸ்மயன்—புன்னகையுடன்; உத்பாட்ய—எடுத்தார்; ஏக-கரேண—ஒரே கரத்தில்; ஸைலம்—கோவர்தன கிரி; அபல:—ஒரு சிறு குழந்தை; லீலா—விளையாட்டாக; உச்சிவீந்த்ரம்—ஒரு காளான் குடையினை; யதா—போன்று; பிப்ரத்—அவர் தூக்கினார்; கோஷ்டம்—ஆயர்குலம்; அபா—அவர் பாதுகாத்தார்; மஹா-இந்த்ர—தேவேந்திரன்; மத—ஆணவத்தின்; பித்—அழித்தார்; ப்ரீயாத்—திருப்தியடைவாராக; ந:—நம்மிடம்; இந்த்ர:—பகவான்; கவாம்—பசுக்களின்.

தனக்குரிய வேள்வி தடைபட்டது கண்டு சினங்கொண்ட தேவேந்திரன் கோகுலத்தின்மீது இடியும், மின்னலுடன் கூடிய கல்மழையும் பொழியச் செய்து அங்குள்ள பசுக்களுக்கும், பிறவிலங்குகளுக்கும், பெண்களுக்கும் பெருந்துன்பம் விளைவித்தான். இயற்கையிலேயே கருணை உடையவரான பகவான் கிருஷ்ணர் அவர்களின் துன்பத்தினைக் கண்டு, அவர்களின் ஒரே அடைக்கலம் தாம் மட்டுமே என்று கருதி புன்னகையுடன், ஒரு சிறு குழந்தை காளான் குடையினை எளிதில் தூக்கிவிடுவதுபோல் ஒரு கையினால் கோவர்தன கிரியைத் தூக்கினார். இவ்வாறு அவர் ஆயர் குலத்தினைக் காத்தார். பசுக்களின் தெய்வமும், இந்திரனின் ஆணவத்தினை அழித்தவருமான பகவான் கோவிந்தன் எம்மீது மகிழ்ச்சியடைவாராக.

ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “அற்புத கிருஷ்ணர்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தாறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare