அத்தியாயம் – 21
கிருஷ்ணரின் குழலிசையைக் கோபியர்கள் போற்றுதல்
பதம் 10.21.1
ஸ்ரீ ஸுக உவாச
இத்தம் ஸரத்-ஸ்வச்ச-ஜலம் பத்மாகர-ஸுகந்தினா
ந்யவிஸத் வாயுனா வாதம் ஸ-கோ-கோபாலகோ ‘ச்யுத:

ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இத்தம்—இவ்வாறு; ஸரத்—சரத்காலம்; ஸ்வச்ச—தெளிந்த; ஜலம்—நீர்; பத்ம-அகர—தாமரைப்பூக்கள் நிறைந்த தடாகத்திலிருந்து; ஸுகந்தினா—இனிய நறுமணத்துடன்; ந்யவிஸத்—அவர் புகுந்தார்; வாயுனா—காற்றினால்; வாதம்—வீசிய; ஸ—உடன்; கோ—பசுக்கள்; கோபாலக:—கோபாலர்கள்; அச்யுத—குற்றமற்ற முழுமுதற்கடவுள்.

சுகதேவகோஸ்வாமி கூறினார்: இவ்வாறு விருந்தாவனக் காடு இலையுதிர் காலத்துத் தெளிந்த நீர் உடையதாகவும், தாமரைப் பூக்கள் நிரம்பிய தடாகத்திலிருந்து வீசிய இனிய நறுமணமுடைய காற்றினால் குளிர்ச்சியுடையதாகவும் விளங்கியது. குற்றமற்ற பகவான் தமது பசுக்களுடனும் ஆயர்குல நண்பர்களுடனும் விருந்தாவனக் காட்டிலும் நுழைந்தார்.

பதம் 10.21.2
குஸுமித-வனராஜி—ஸுஷ்மி-ப்ருங்க-
த்விஜ-குல-குஷ்ட-ஸர:-ஸரின்-மதீத்ரம்
மதுபதிர் அவகாஹ்ய சாரயன் கா:
ஸஹ-பஸு-பால-பலஸ் சுகூஜ வேணும்

குஸுமித—மலர்கள்; வன-ராஜி—மரக்கூட்டங்களின் மத்தியில்; ஸுஷ்மி—மயங்கிய; ப்ருங்க—கருவண்டுகளுடன்; த்விஜ—பறவைகளின்; குல—கூட்டங்கள்; குஷ்ட—ஒலித்தன; ஸர:—அதன் குளங்கள்; ஸரித்—நதிகள்; மஹீத்ரம்—மற்றும் மலைகள்; மது-பதி:—மதுவின் இறைவன்; (கிருஷ்ணர்); அவகாஹ்ய—புகுதல்; சாரயன்—மேய்க்கும் பொழுது; கா:—பசுக்கள்; ஸஹ-பஸு-பால-பல:—ஆயர்குலச் சிறுவர்களுடனும் பகவான் பலராமருடனும்; சுகூஜ—ஒலித்தது; வேணும்—அவரது புல்லாங்குழல்.

விருந்தாவன மலைகளிலும், குளங்களிலும், நதிகளிலும் நறுமணமிக்க மலர்களையுடைய மரங்களை நோக்கி விரைந்த வண்டுகள் மற்றும் பறவைக் கூட்டங்களின் ஒலியானது எதிரொலித்தது. ஆயர்குலச் சிறுவர்களுடனும், பலராமருடனும் மதுபதி (ஸ்ரீ கிருஷ்ணர்) அக்காட்டினுள் நுழைந்தார். பசுக்களை மேய்க்கும் பொழுது அவர் தமது புல்லாங்குழலிலிருந்து இனிய இசையினை ஒலிக்கத் தொடங்கினார்.

பதம் 10.21.3
தத் வர்ஜ-ஸ்த்ரிய ஆஸ்ருத்ய
வேணு-கீதம் ஸ்மரோதயம்
காஸ்சித் பரோக்ஷம் க்ருஷ்ணஸ்ய
ஸ்வ-ஸங்கீப்யோ ‘ன்வவர்ணயன்

தத்—அது; வ்ரஜ-ஸ்த்ரிய:—ஆயர்குலப் பெண்கள்; ஆஸ்ருத்ய—கேட்டு; வேணு-கீதம்—வேணு கீதத்தினை; ஸ்மர-உதயம்—மன்மதனின் பாதிப்பினை அதிகரிக்கச் செய்யும்; கஸ்சித்—சிலர்; பரோக்ஷம்—தனியே; க்ருஷ்ணஸ்ய—கிருஷ்ணரைப் பற்றி; ஸ்வ-ஸகீப்ய:—தமது தோழிகளிடம்; அன்வவர்ணயன்—விளக்கினர்.

விரஜத்திலுள்ள ஆயர்குல இளம் பெண்கள், மன்மதனின் பாதிப்பினை மேலும் அதிகரிக்கச் செய்யும் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையினைக் கேட்டவுடன் சிலர் தங்களது நெருங்கிய தோழிமார்களிடம் கிருஷ்ணரின் லீலைகளைப் பற்றித் தனியே விவரிக்கத் தொடங்கினர்.

பதம் 10.21.4
தத் வர்ணயிதும் ஆரப்தா: ஸ்மரந்த்ய: க்ருஷ்ண-சேஷ்டிதம்
நாஸகன் ஸ்மர-வேகேன விக்ஷிப்த-மனஸோ ந்ருப

தத்—அது; வர்ணயிதும்—விளக்குவதற்கு; ஆரப்தா—தொடல்; ஸ்மரந்த்ய:—நினைந்து; க்ருஷ்ண-சேஷ்டிதம்—கிருஷ்ணரின் செயல்கள்; ந அஸகன்—இயலாதவர்களாயினர்; ஸ்மர-வேகேன—மன்மதனின் வேகமான தாக்குதலினால்; விக்ஷிப்த—கிளர்ச்சியுற்ற; மனஸ:—அவர்களது மனங்கள்; ந்ருப—ஓ, பரீக்ஷித்து மன்னனே.

ஆயர்குலப் பெண்கள் கிருஷ்ணரைப் பற்றிப் பேசத் தொடங்கினர். ஆனால் அவரது லீலைகளைப் பற்றி நினைத்தவுடன் ஓ, பரீக்ஷித்து மன்னனே, மன்மதனது சக்தியானது அவர்களது மனங்களை அலைக்கழித்தது. அதனால் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை.

பதம் 10.21.5
பர்ஹாபீடம் நட-வர-வபு: கர்ணயோ: கர்ணிகாரம்
பிப்ரத் வாஸ: கனக-கபிஸம் வைஜயந்தீம் ச மாலாம்
ரந்த்ரான் வேணோர் அதர-ஸுதயாபூரயன் கோப வ்ருந்தை
வ்ருந்தாரண்யம் ஸ்வ-பத-ரமணம் ப்ராவிஸத் கீத-கீர்தி:

பர்ஹ—மயிலிறகு ஒன்று; ஆபீடம்—அவரது தலையினை அலங்கரித்திருக்கும்; நட-வர—சிறந்த நடனக் கலைஞர்களின்; வபு:—உன்னத உடல்; கர்ணயோ:—காதுகளில்; கர்ணீகாரம்—ஒரு குறிப்பிட்ட நீலோத்பல மலர்; பீப்ரத்—அணிந்து; வாஸ:—பட்டுப் பீதாம்பரம்; கனக—பொன்வண்ண; கபிஸம்—மஞ்சள் வண்ண; வைஜயந்தீம்—வைஜந்தி என்னும்; ச—மற்றும்; மாலாம்—மாலை; ரந்த்ரான்—துளைகள்; வேணோ:—அவர், புல்லாங்குழலின்; அதர—அவரது அதரங்கள்; ஸுதயா—அமிர்தத்தினால்; ஆபூரயன்— நிரப்பப்பட்டு; கோப-வ்ருந்தை:—ஆயர்க்குலச் சிறுவர்களால்; வ்ருந்தா-அரண்யம்—விருந்தா வனக்காடு; ஸ்வ-பத—அவரது தாமரைத் திருவடிகளின் தடங்களின் காரணமாக; ரமணம்—மயங்கச் செய்யும்; ப்ராவிஸத்—அவர் புகுந்தார்; கீத—இசைத்தபடி; கீர்த்தி:—அவரது கீர்த்திகளை.

தலையில் அழகிய மயிலிறகு அணி செய்ய, நீல “கர்ணிகர” மலர்கள் அவர் காதுகளை அலங்கரிக்க, பொன்னைப் போல் மின்னும் மஞ்சள் வண்ணப்பட்டுப் பீதாம்பரம் உடுத்தி வைஜந்தி மலர்மாலை அணிந்து பகவான் கிருஷ்ணர் சிறந்த நாட்டியக் கலைஞர்களைப் போன்று தமது உன்னத வடிவத்தினை வெளிப்படுத்தி விருந்தாவனக் காட்டில் நுழைந்து தமது காலடித் தடங்களினால் அதனை அழகு செய்தார். அவர் தமது புல்லாங்குழலின் துவாரங்களைத் தமது அதரங்களின் அமிர்தத்தினால் நிரப்பினார். ஆயர்குலச் சிறுவர்கள் அவரது கீர்த்திகளைப் போற்றிப் பாடினர்.

பதம் 10.21.6
இதி வேணு-ரவம் ராஜன் ஸர்வ-பூத-மனோஹரம்
ஸ்ருத்வா வ்ரஜ-ஸ்த்ரிய: ஸர்வா வர்ணயந்த்யோ ‘பிரேபிரே

இதி—இவ்வாறு; வேணு-ரவம்—புல்லாங்குழல் ஓசை; ராஜன்—ஓ, பரீக்ஷித்து மன்னனே; ஸர்வ-பூத—அனைத்து உயிர்களின்; மன:-ஹரம்—மனங்களைத் திருடியது; ஸ்ருத்வா—கேட்டு; வ்ரஜ-ஸ்த்ரிய:—விரஜத்திலுள்ள பெண்கள்; ஸர்வா:—அனைவரும்; வர்ண்யந்த்ய:—விவரிப்பதில் ஈடுபட்டனர்; அபிரேபிரே—ஒருத்தி மற்றொருத்தியைத் தழுவிக் கொண்டு.

ஓ, மன்னனே, அனைத்து உயிர்களின் மனங்களையும் கொள்ளை கொள்ளும், கிருஷ்ணரின் குழலோசனையினைக் கேட்டவுடன் விரஜத்தில் இருந்த கன்னிப் பெண்கள் ஒருத்தி மற்றொருத்தியைத் தழுவியபடி அதனைப் பற்றி விவரிக்கத் தொடங்கினர்.

பதம் 10.21.7
ஸ்ரீ கோப்ய ஊசு:
அக்ஷண்வதாம் பலம் இதம் ந பரம் விதாம
ஸக்ய: பஸுன் அனுவிவேஸயதோர் வயஸ்யை:
வக்த்ரம் வ்ரேஜஸ-ஸுதயோர் அனுவேணு-ஜுஷ்டம்
யைர் வா நிபீதம் அனுரக்த-கடாக்ஷ-மோக்ஷம்

ஸ்ரீ-கோப்ய: ஊசு:—கோபியர்கள் கூறினர்; அக்ஷண்வதாம்—கண்களைப் பெற்றவர்கள்; பலம்—பலன்; இதம்—இந்த; ந—இல்லை; பரம்—பிற; விதாம:—நாம் அறிவோம்; ஸக்ய:—ஓ, தோழிகளே; பஸுன்—பசுக்கள்; அனுவிவேஸய-தோ:—ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்குச் செல்வதற்கான காரணம்; வயஸ்யை:—அவர்களின் ஒத்த வயது நண்பர்களுடன்; வக்த்ரம்—முகங்கள்; வ்ரஜ-ஈஸ—நந்தமகாராஜாவின்; ஸுதயோ:—இரு புதல்வர்களின்; அனு-வேணு-ஜுஷ்டம்—புல்லாங்குழல்களை உடையோர்; யை:—அவற்றினால்; வா—அல்லது; நிபீதம்—ஈர்த்துக் கொண்டது; அனுரக்த—அன்பார்ந்த; கட-அக்ஷ—பார்வைகள்; மோக்ஷம்—விட்டு விடுதல்.

ஆயர்குலப் பெண்கள் கூறினர்; ஓ சகிப் பெண்களே! நந்த மகாராஜாவின் எழில் சிந்தும் திருமுகங்களைக் காணக் கொடுத்து வைத்த கண்கள் நிச்சயம் பாக்கியம் செய்தவையே ஆகும். அவர்கள் இருவரும் தங்கள் நண்பர்கள் சூழ பசுக்களை ஒட்டிக் கொண்டு காட்டிற்குள் வரும்பொழுது அவர்கள் தம்மிடமுள்ள புல்லாங்குழல்களைத் தமது இதழ்களில் வைத்து வாசித்தபடி காதல் ஒழுகும் பார்வையினால் விருந்தாவனவாசிகளைப் பார்த்தனர். கண்ணுடையவர்களுக்கு இதனை விடவும் சிறந்த காட்சி வேறொன்றிருப்பதாக நாங்கள் கருதவில்லை.

பதம் 10.21.8
சூத-ப்ராவாள-பர்ஹ-ஸ்தபகோத்பலாப்ஜ-
மாலானுப்ருக்த-பரிதான-விசித்ர-வேஸௌ
மத்யே விரேஜதுர் அலம் பஸு-பால-கோஷ்ட்யாம்
ரங்கே யதா நட-வரௌ க்வச காயமானௌ

சூத—ஒரு மாமரத்தின்; ப்ரவாள—இளந்தளிர்களுடன்; பர்ஹ—மயிலிறகுகள்; ஸ்தபக—மலர்க்கொத்துகள்; உத்பல—தாமரைகள்; அப்ஜ—அல்லிமலர்கள்; மாலா—மாலைகளுடன்; அனுப்ருக்த—தொட்டன; பரிதான—அவர்களின் ஆடைகளை; விசித்ர—சிறந்த பல்வண்ண வேறுபாடுகளுடன்; வேஸௌ—ஆடையணிந்து; மத்யே—மத்தியில்; விரேஜது:—அவர்கள் இருவரும் ஒளிர்ந்தனர்; அலம்—தாராளமாக; பஸு-பால—ஆயர்பாலர்கள்; கோஷ்ட்யாம்—கூட்டத்துடன்; ரங்கே—மேடையின்மீது; யதா—போன்று; நட-வரெள—இரண்டு தேர்ந்த கலைஞர்கள்; க்வச—சிலசமயம்; காயாமானௌ—அவர்களே பாடிக் கொண்டு.

மனதைக் கவரும் ஆடைகள் அதன்மேல் மலர்மாலைகள் அணிந்து, மயிலிறகு, தாமரை, அல்லி, மாவின் இளந்தளிர் மற்றும் மலர் மொட்டுக்களினால் தம்மை அலங்கரித்துக் கொண்டு கிருஷ்ணரும் பலராமரும் ஆயர்குலச் சிறுவர்களின் மத்தியில் ஒளிவீச நின்றனர். அவர்கள் மேடையில் தோன்றி ஆடிப்பாடும் தேர்ந்த நடனக் கலைஞர்களைப் போல் காணப்பட்டனர்.

பதம் 10.21.9
கோப்ய: கிம் ஆசரத் அயம் குஸலம் ஸ்ம வேணுர்
தாமோதராதர-ஸுதாம் அபி கோபிகானாம்
புங்க்தே ஸ்வயம் யத் அவஸிஷ்ட-ரஸம் ஹ்ரதின்யோ
ஹ்ருஷ்யத்-த்வசோ ‘ஸ்ரு முமுசுஸ் தரவோ யதார்யா:

கோப்யா:—ஓ, கோபியர்களே; கிம்—என்ன; ஆசரத்—செய்தது; அயம்—இந்த; குஸலம்—புண்ணியச் செயல்கள்; ஸ்ம—நிச்சயமாக; வேணு—புல்லாங்குழல்; தாமோதர—கிருஷ்ணரின்; அதர-ஸுதாம்—அதரங்களின் அமிர்தம்; அபி—கூட; கோபிகானாம்—கோபியர்களுக்குரியது; புங்க்தே—அனுபவிக்கிறது; ஸ்வயம்—சுயமாக; யத்—அதிலிருந்து; அவஸிஷ்ட—இருந்து கொண்டு; ரஸம்—அதன் சுவை மட்டும்; ஹ்ரதின்ய—நதிகள்; ஹ்ருஷ்யத்—ஆனந்தமடைந்தன; த்வச:—அவற்றின் உடல்களில்; அஸ்ரு—கண்ணீர்த்துளிகள்; முமுசு:—சிந்தின; தரவ:—மரங்கள்; யதா—போன்று; ஆர்யா:—முன்னோர்கள்.

தோழிப்பெண்களே, கிருஷ்ணரின் அதரங்களிலிருந்து வழியும் அமிர்தம் நமக்குரியதாகும், ஆனால் நமக்கு அதன் சுவையை மட்டும் வைத்துவிட்டு, அமிர்தம் அனைத்தையும் தான் மட்டுமே உண்பதற்கு அப்புல்லாங்குழல் என்ன தவம் செய்ததோ! புல்லாங்குழலின் முன்னோர்களான மூங்கில் மரங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன. அதன் அன்னையான நதிப் பெண்ணின் கரையில்தான் புல்லாங்குழலுக்கான மூங்கில் பிறந்து, அவள் ஆனந்தம் எய்தினாள், அதன் காரணமாக அவள் உடலில் மலர்ந்த தாமரை மலர்கள் அவள் மயிர்க் கூச்செறிந்தது போல் காணப்பட்டன.

பதம் 10.21.10
வ்ருந்தாவனம் ஸகி புவோ விதனோமி கீர்திம்
யத்தேவகீ-ஸுத-பதாம்புஜ லப்த-லக்ஷ்மி
கோவிந்த-வேணும் அனு மத்த-மயூர-ந்ருத்யம்
ப்ரேக்ஷ்யாத்ரி-ஸான்வ்-அவரதான்ய-ஸமஸ்த-ஸத்வம்

வ்ருந்தாவனம்—விருந்தாவனம்; சகி—ஓ, சகியே!; புவ:—பூமியின்; விதனோதி—பரப்புகிறது; கீர்திம்—கீர்த்திகளை; யத்—ஏனென்றால்; தேவகீ-ஸுத—தேவகியின் மைந்தனின்; பத-அம்புஜ—தாமரைத் திருவடிகளிலிருந்து; லப்த—பெற்ற; லஷ்மி—செல்வம்; கோவிந்த-வேணும்—கோவிந்தனின் குழல்; அனு—கேட்டு; மத்த—புத்திமயங்கிய; மயூர—மயில்களின்; ந்ருத்யம்—நடனம்; ப்ரேக்ஷ்ய—கண்டு; அத்ரி-ஸானு—மலை உச்சியின் மேல்; அவரத—அசையாது நின்றன; அன்ய—பிற; ஸமஸ்த—அனைத்து; ஸத்வம்—உயிரினங்கள்.

ஓ, சகிப்பெண்ணே! தேவகீ நந்தன் கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளின் செல்வம் எய்தப் பெற்றமையினால் விருந்தாவனம் பூமியின் கீர்த்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றது. கோவிந்தனின் குழலோசை கேட்டு, மயில்கள் மதிமயங்கி ஆடுகின்றன. அவற்றின் நடனத்தை மலை உச்சியில் இருந்து காணும் பிற உயிரினங்கள் எல்லாம் அசையாது அப்படியே நிற்கின்றன.

பதம் 10.21.11
தன்யா: ஸ்ம மூட-கதயோ ‘பி ஹரிண்ய ஏதா
யா நந்த-நந்தனம் உபாத்த-விசித்ர-வேஸம்
ஆகர்ண்ய வேணு-ரணிதம் ஸஹ-க்ருஷ்ண-ஸாரா:
பூஜாம் ததுர் விரசிதாம் ப்ரணயாவலோகை:

தன்யா:—பாக்கியம் செய்தன, ஆசீர்வதிக்கப்பட்டன; ஸ்ம—நிச்சயமாக; மூட-கதய:—பகுத்தறிவில்லாத விலங்கினத்தில் பிறந்த; அபி—போதிலும்; ஹரிண்ய:—பெண்மான்; ஏதா:—இவை; யா:—யார்; நந்த-நந்தனம்—நந்தமகாராஜாவின் மைந்தன்; உபாத்த-விசித்ர-வேஸம்—கவர்ச்சியுடன் உடை அணிந்து; ஆகர்ண்ய—கேட்டு; வேணு-ரணிதம்—அவரது புல்லாங்குழல் ஒலி; ஸஹ-க்ருஷ்ண-ஸாரா:—இருமான்களின் (அவற்றின் இணையான ஆண்மான்கள்), துணையுடன்; பூஜாம் தது:—அவை வழிபட்டன; விரசிதாம்—செய்யப்பட்டது; ப்ரணய-அவலோகை:—அவற்றின் பாசமிகு பார்வைகளினால்.

பகுத்தறிவில்லாத இம்மான்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டனவாகும். ஏனென்றால் அவை ஆடம்பரமாக ஆடை அணிந்து புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்த நந்த மகாராஜாவின் மைந்தன் அருகில் இருந்தன. உண்மையில் பெண்மான்களும் ஆண்மான்களும் காதலும், பாசமும் கொண்ட பார்வைகளினால் பகவானை வழிபட்டன.

பதம் 10.21.12
க்ருஷ்ணம் நிரீக்ஷ்ண வனிதோத்ஸவ-ரூப-ஸீலம்
ஸ்ருத்வா ச தத்-க்வணித-வேணு-விவிக்த-கீதம்
தேவ்யோ விமான-கதய: ஸ்மர-நுன்ன-ஸாரா
ப்ரஸ்யத்-ப்ரஸூன-கபரா முமுஹுர் வினீவ்ய:

க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; நிரீக்ஷ்ண—கண்டு; வனிதா—வனிதையர்கள்; உத்ஸவ—ஒரு விழா; ரூப—அவரது அழகு; ஸீலம்—மற்றும் குணம்; ஸ்ருத்வா—கேட்டு; ச—மற்றும்; தத்—அவரால்; க்வணித—அதிர்ந்தனர்; வேணு—புல்லாங்குழலின்; விவிக்த—தெளிவான; கீதம்—இசை; தேவ்ய:—தேவர்களின் மனைவியர்; விமான-கதய:—தமது விமானத்தில் பயணித்து; ஸ்மர—மன்மதனால்; நுன்ன—கிளர்ச்சியுற்று; ஸாரா:—அவர்களது மனங்கள்; ப்ரஸ்யத்—வீழ்ந்தன; ப்ரஸூன-கபரா:—அவர்கள் கூந்தலிலிருந்த மலர்கள்; முமுஹு:—அவர்கள் மதிமயங்கினர்; வீனீவ்ய:—அவர்களது மேகலைகள் நெகிழ்ந்தன.

கிருஷ்ணரின் அழகும், குணமும் அனைத்துப் பெண்களிடமும் ஓர் உற்சாகத்தை உண்டாக்கின. உண்மையில் தமது கணவர்களுடன் புஷ்பக விமானத்தில் பறந்துசென்ற தேவ மங்கையர் கிருஷ்ணரின் எழில் உருவத்தைக் கண்டும் அவரது குழலின் இனிய இசையினைக் கேட்டும் மன்மதனால் இதயம் கிளர்ச்சியடையப் பெற்றனர். அவர்களது மதிமயங்கியது. கூந்தலிலிருந்த மலர்கள் உதிர்ந்தன. இடையில் அணிந்திருந்த மேகலைகள் நெகிழ்ந்தன.

பதம் 10.21.13
காவஸ் ச க்ருஷ்ண-முக-நிர்கத வேணு-கீத-
பீயூஷம் உத்தபித-கர்ண-புதை: பிபந்த்ய:
ஸாவா: ஸ்நுத-ஸ்தன-பய:-கவலா: ஸ்ம தஸ்துர்
கோவிந்தம் ஆத்மனி த்ரு ஸாஸ்ரு கலா: ஸ்ப்ருஸந்த்ய:

காவ:—பசுக்கள்; ச—மற்றும்; க்ருஷ்ண-முக—பகவான் கிருஷ்ணரின் வாயிலிருந்து; நிர்கத—வந்த; வேணு—புல்லாங்குழலின்; கீத—இசையில்; பீயூஷம்—அமிர்தம்; உத்தபித—உயர்த்தின; கர்ண—தமது காதுகளை; புதை:—அவை பாத்திரங்கள் போன்றிருந்தன; பிபந்த்ய:—குடிக்கின்ற: ஸாவா:—கன்றுகள்; ஸ்நுத—கசியவிட்டன; ஸ்தன—அவற்றின் மடிகளிலிருந்து; பய:—பால; கவலா:—அவற்றின் வாய் நிறைய; ஸ்ம—உண்மையில்; தஸ்து—அசையாமல் நின்றன; கோவிந்தம்—பகவான் கிருஷ்ணர்; ஆத்மனி—அவற்றின் மனங்களில்; த்ருஸா—அவற்றின் பார்வை; அஸ்ரு-கலா:—அவற்றின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது; ஸ்ப்ரூஸந்த்ய:—ஸ்பரிசம்.

பசுக்கள் தமது குத்திட்டு நின்ற செவிகளையே பாத்திரங்களாக்கி கிருஷ்ணரின் வாயிலிருந்து வழிந்த புல்லாங்குழல் இசையின் அமிர்தத்தினைப் பருகின. கன்றுகளோ, தமது தாய் மடியில் வாய் வைத்தபடியே பாலை உறிஞ்சாமலும் வாயை எடுக்காமலும் அசைவற்று அப்படியே நின்றன. அவை கண்ணீர் பெருகும் தமது விழிகளின் மூலம் கோவிந்தனை தம்முள் வாங்கி அவரைத் தமது இதயத்தில் வைத்துத் தழுவிக் கொண்டன.

பதம் 10.21.14
ப்ராயோ பதாம்ப விஹகா முனயோ வனே ‘ஸ்மின்
க்ருஷ்ணேக்ஷிதம் தத்-உதிதம் கல-வேணு-கீதம்
ஆருஹ்ய யே த்ரும-புஜான் ருசிர-ப்ரவாளான்
ஸ்ருண்வந்தி மீலித-த்ருஸோ விகதான்ய-வாச:

ப்ராய:—பெரும்பாலும்; பத—நிச்சயமாக; அம்ப—ஓ, அன்னையே; விஹகா:—பறவைகள்; முனய:—மாமுனிவர்கள்; வனே—வனத்தில்; அஸ்மின்—இந்த; க்ருஷ்ண-ஈக்ஷிதம்—கிருஷ்ணரைத் தரிசிப்பதற்காக; தத்-உதிதம்—அவரால் படைக்கப்பட்ட; கல-வேணு-கீதம்—குழலை இசைத்ததினால் எழுந்த இனிய நாதம்; ஆருஹ்ய—எழுந்து; யே—அவை; த்ரும-புஜான்—மரங்களின் கிளைகளில்; ருசிர-ப்ரவாளான்—அழகிய மலர்மொட்டுக்களும் தளிர்களும் உடைய; ஸ்ருண்வந்தி—அவை கேட்கின்றன; மீலித-த்ருஸ:—தமது கண்களை மூடியவாறு; விகத-அன்ய-வாச:—பிற ஒலிகள் அனைத்தையும் நிறுத்தி.

ஓ, அன்னையே, இக்காட்டிலுள்ள எல்லாப் பறவைகளும் கிருஷ்ணரைக் காண்பதற்காக மரங்களின் அழகிய உயர்ந்த கிளைகளின் மீது ஏறிக்கொள்கின்றன. கண்களை மூடியவாறே அவை அவரது குழலின் இனிய இசையினை அமைதியுடன் கேட்டு மகிழ்கின்றன. அவை வேறு எந்தவிதமான ஓசையினாலும் கவரப்படுவதில்லை. நிச்சயமாக இப்பறவைகள் மாமுனிவர்களுக்கு இணையானவையாகும்.

பதம் 10.21.15
நத்யஸ் ததா தத் உபதார்ய முகுந்த-கீதம்
ஆவர்த-லக்ஷித-மனோபவ-பக்ன-வேகா:
ஆலிங்கன-ஸ்தகிதம் ஊர்மி-புஜைர் முராரேர்
க்ருஹ்ணந்தி பாத-யுகலம் கமலோபஹாரா:

நத்ய:—நதிகள்; ததா—பிறகு; தத்—அது; உபதார்ய—உணர்ந்து; முகுந்த—பகவான் கிருஷ்ணரின்; கீதம்—அவரது குழலிசையின்; ஆவர்த—அவற்றின் சுழற்சியினால்; லக்ஷித—வெளிப்படுத்துகின்றன; மன:-பவ—அவற்றின் காதல் இச்சையினால்; பக்ன—உடைந்து; வேகா:—அவற்றின் வேகம்; ஆலிங்கன—அவற்றின் அணைப்பினால்; ஸ்தகிதம்—நின்றன; ஊர்மி-புஜை:—அவற்றின் அலைக்கரங்களினால்; முராரே:—பகவான் முராரியின்; க்ருஹ்ணந்தி—அவை பற்றுகின்றன; பாதயுகலம்—இரு தாமரைத்திருவடிகள்; கமல-உபஹாரா:—தாமரை மலர்களை அர்ப்பணிக்க எடுத்துச் செல்கின்றன.

கிருஷ்ணரின் குழலிசையினைக் கேட்ட நதிகளின் மனங்கள் அவரை விரும்பத் தொடங்குகின்றன. பெருக்கெடுத்து ஓடும் அவற்றின் வேகம் தடைப்படுகின்றது. நீர் கொந்தளித்துச் சுழல்கின்றது. பிறகு தமது அலைக்கரங்களினால் முராரியின் தாமரைத் திருவடிகளைப் பற்றித் தழுவிக் கொண்டு தாமரை மலர்களை அர்ப்பணிக்கின்றன.

பதம் 10.21.16
த்ருஷ்ட்வாதபே வ்ரஜ-பஸுன் ஸஹ ராம-கோபை:
ஸஞ்சாரயந்தம் அனு வேணும் உதீரயந்தம்
ப்ரேம-ப்ரவ்ருத்த உதித குஸுமாவலீபி:
ஸக்யுர் வ்யதாத் ஸ்வ-வபுஷாம்புத ஆதபத்ரம்

த்ருஷ்ட்வா—கண்டு; ஆதபே—சுட்டெரிக்கும் சூரிய வெய்யிலில்; வ்ரஜ-பஸூன்—விரஜத்திலுள்ள வளர்ப்புப் பிராணிகள்; ஸஹ—உடன்; ராம-கோபை:—பகவான் பலராமரும் ஆயர்குலச் சிறுவர்களும்; ஸஞ்சாரயந்தம்—ஒட்டிக்கொண்டு; அனு—தொடர்ந்து; வேணும்—அவரது புல்லாங்குழல்; உதீரயந்தம்—உரக்க ஒலித்துக்கொண்டு; ப்ரேம—பிரேமையினால்; ப்ரவ்ருத்த:—விரிந்தன; உதித:—உயரே உதித்தன; குஸும-ஆவலீபி:—(நீராவித்துளிகள் அவை) மலர்க் கூட்டங்கள் (போன்றிருந்தன); ஸக்யு:—தனது நண்பனுக்கு; வ்யதாத்—உருவாக்கினான்; ஸ்வ-வபுஷா—தனது உடலினால்; அம்புத:—மேகம்; ஆதபத்ரம்—ஒரு குடை.

சூரியனின் சுட்டெரிக்கும் வெய்யிலில் கூட பகவான் கிருஷ்ணர், பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் மாடுகளை ஒட்டிக்கொண்டே தொடர்ந்து தமது குழலிலிருந்து இனிய இசையினை எழுப்பிப் கொண்டு சென்றார். இதனைக் கண்ணுற்ற வான் மேகம் அன்பின் காரணமாகத் தன்னை விரித்துக் கொண்டது. அது வானில் உயரே எழுந்து, தனது உடலின் பூப்போன்ற மென்மையான குளிந்த நீர்த்துளிகளால் தனது நண்பனுக்காக ஒரு பெரிய குடையினை உருவாக்கியது.

பதம் 10.21.17
பூர்ண: புளிந்த்ய உருகாய-பதாப்ஜ-ராக-
ஸ்ரீ-குங்குமேன தயிதா-ஸ்தன-மண்டிதேன
தத்-தர்ஷண-ஸ்மர-ருஜஸ் த்ருண-ரூஷிதேன
லிம்பந்த்ய ஆனை-குசேஷு ஜஹு தத்-ஆதிம்

பூர்ணா:—பூரணத்திருப்தியுற்று; புளிந்த்ய:—சபர எனப்படும் பழங்குடிப் பெண்கள்; உருகாய—பகவான் கிருஷ்ணரின்; பத-அப்ஜ—தாமரைத்திருவடிகளிலிருந்து; ராக—சிகப்பு வண்ண; ஸ்ரீ-குங்குமேன—உன்னத குங்குமத் துகள்; தயிதா—அவரது பெண் நண்பர்களின்; ஸ்தன—மார்பகங்கள்; மண்டிதேன—அலங்கரித்திருந்த; தத்—அது; தர்ஷண—தரிசனத்தினால்; ஸ்மர—மன்மதனின்; ருஜ:—துன்ப உணர்வு; த்ருண—புற்களின்மீது; ரூஷிதேன—இணைந்திருந்த; லிம்பந்த்ய:—பூசுதல்; ஆனை—அவர்கள் முகங்களின்மீது; குசேஷு—மற்றும் மார்பகங்களின் மீதும்; ஜஹு:—அவர்கள் விட்டொழிந்தனர்; தத்—அது; ஆதிம்—மனவேதனை.

விருந்தாவனத்தின் பழங்குடிப் பெண்கள், புற்களின்மீது சிவந்த நிறக் குங்குமக் கறையினைக் கண்டு காம இச்சையினால் துன்புற்றனர். கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளின் வண்ணத்தினைப் பெற்ற அக்குங்குமத் துகள் உண்மையில் அவரது நேசத்திற்குரிய பெண்களின் மார்பகங்களில் தொய்யில் எழுதப்பட்டவையாகும். ஆதிவாசிப் பெண்கள் அவற்றைத் தம் முகங்களிலும், மார்பகங்களிலும் பூசியவுடன் தமது துயர் நீங்கப் பெற்றனர்.

பதம் 10.21.18
ஹந்தாயம் அத்ரிர் அபலா ஹரி-தாஸ-வர்யோ
யத்-ராம-க்ருஷ்ண-சரண-ஸ்பரஸ-ப்ரமோத:
மானம் தனோதி ஸஹ-கோ-கணயோஸ் தயோர் யத்
பாணீய-ஸூயவஸ-கந்தர-கந்த மூலை:

ஹந்த—ஓ; அயம்—இந்த; அத்ரி:—மலை; அபலா:—ஓ, தோழியரே; ஹரி-தாஸ-வர்யே:—பகவானது தொண்டர்களில் மிகச் சிறந்தது; யத்—ஏனென்றால்; ராம-க்ருஷ்ண-சரண—பகவான் கிருஷ்ணர் மற்றும் பலராமரின் தாமரைத்திருவடிகளின்; ஸ்பரஸ—ஸ்பரிசத்தினால்; ப்ரமோத:—மகிழ்ச்சியடைதல்; மானம்—மரியாதை; தனோதி—அளிக்கிறது; ஸஹ—உடன்; கோ-கணயோ:—பசுக்கள், கன்றுகள் மற்றும் ஆயர்குலச் சிறுவர்கள்; தயோ:—அவர்களுக்கு (ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பலராமருக்கு); யத்—ஏனென்றால்; பாணிய—குடி தண்ணீருடன்; ஸூயவஸ—மிகவும் மென்மையான புற்கள்; கந்தர—குகைகள்; கந்த-மூலை:—கந்த-மூலங்கள் (கிழங்கு வகைகள்).

பக்தர்கள் அனைவரினும் இக் கோவர்த்தனகிரியே மிகச் சிறந்ததாகும்! ஓ, தோழிப் பெண்களே, இம்மலை கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் அவர் தம் கன்றுகளுக்கும், பசுக்களுக்கும் மற்றும் ஆயர்குலச் சிறுவர்களுக்கும் தேவையான அனைத்தையும் அளிக்கின்றது. பருகுதற்கு நீர், மென்மையான பசும்புற்கள், குகைகள், கனிகள், மலர்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பொருள்கள் இவ்வாறு இம்மலை பகவானுக்குத் தனது மரியாதையினை அளிக்கின்றது. கிருஷ்ணர் மற்றும் பலராமரின் திருவடித்தாமரைகளின் ஸபரிசம் பட்டதினால் கோவர்தனகிரி மகிழ்ச்சி மிக்கதாக விளங்குகின்றது.

பதம் 10.21.19
கா கோபகைர் அனு-வனம் நயதோர் உதார-
வேணு-ஸ்வனை: கல-பதைஸ் தனு-ப்ருத்ஸு ஸக்ய:
அஸ்பந்தனம் கதி-மதாம் புளகஸ் தரூணாம்
நிர்யோக-பாஸ-க்ருத-லக்ஷணயோர் விசித்ரம்

கா:—பசுக்கள்; கோபகை:—ஆயர்குலச் சிறுவர்களுடன்; அனு-வனம்—ஒவ்வொரு வனத்திற்கும்; நயதோ:—இட்டுச் செல்லுதல்; உதார—மிகவும் தாராளமாக; வேணு-ஸ்வனை:—பகவானது புல்லாங்குழல் ஓசையினால்; கல-பதை:—இனியநாதம் உடையது; தனு-ப்ருத்ஸு—உயிர் வாழிகளின் இடையே; ஸக்ய:—சகிப்பெண்களே; அஸ்பந்தனம்—அசைதல் இன்மை; கதி-மதாம்—அசைகின்றன உயிர்வாழிகள்; புளக—புளகாங்கிதமடைகின்றன; தரூணாம்—மாறாக அசையாத மரங்கள்; நிர்யோக-பாஸ—பசுக்களின் பின்னங்கால்களைப் பிணைத்துக் கட்டும் தாம்புக்கயிறு; க்ருத-லக்ஷணயோ:—பண்புகளினால் அவ்விருவரின் (கிருஷ்ண பலராமரின்); விசித்ரம்—விசித்திரமானவை.

தோழிப்பெண்களே, கிருஷ்ணரும் பலராமரும் ஆயர்குலச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு பசுக்களை ஓட்டிச் செல்லும் பொழுது, பால்கறக்கும் போது பசுக்களின் பின்னங்கால்களைப் பிணைத்துக் கட்டும் தாம்புக் கயிறுகளையும் எடுத்துச் செல்லுகின்றனர். கிருஷ்ணர் தமது புல்லாங்குழலை இசைக்கும் பொழுது அதிலிருந்து வரும் சுநாதத்தினால் புளகாங்கிதமடைந்து அசையும் உயிர்கள் அசைவற்று அப்படியே நிற்கின்றன. அசையாத மரங்களோ மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன. நிச்சயமாக இச்செயல்கள் அனைத்தும் விந்தை மிகுந்தவையே.

பதம் 10.21.20
ஏதம்-விதா பகவதோ யா வ்ருந்தாவன-சாரிண:
வர்ணயந்த்யோ மிதோ கோப்ய: க்ரீடாஸ் தன்-மயதாம் யயு:

ஏவம்-விதா:—இதுபோன்ற; பகவத:—முழுமுதற்கடவுளின்; யா:—இவை; வருந்தாவன-சாரிண:—விருந்தாவனக் காட்டில் அவர் திரிந்து கொண்டிருந்ததை; வர்ணயந்த்ய:—விளக்குவதில் ஈடுபட்டு; மித:—ஒருத்தி மற்றொருத்தியிடம்; கோப்ய:—கோபியர்கள்; க்ரீடா:—லீலைகள்; தத்-மயதாம்—அவர்மீது மெய்மறந்த தியானத்தில்; யயு:—எய்தப் பெற்றனர்.

முழுமுதற்கடவுள் விருந்தாவனக் காடுகளில் அலைந்து திரிந்து நடத்திய லீலா வினோதங்களை ஒருத்தி மற்றொருத்தியிடம் இவ்வாறாக விவரித்த பின்னர் கோபியர்கள் அவரது நினைவுகளில் முற்றிலும் ஆழ்ந்தனர்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “கிருஷ்ணரின் குழலிசையைக் கோபியர்கள் போற்றுதல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare