அத்தியாயம் – 33
ராஸ நடனம்
பதம் 10.33.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: முழுமுதற்கடவுள் கூறிய இவ்வினிய சொற்களைக் கேட்டவுடன் ஆயர்குலப் பெண்கள், அவரைப் பிரிந்ததின் காரணமாகத் தாம் அனுபவித்த துன்பத்தினை மறந்தனர். அவரது உடலின் உன்னத அங்கங்களைத் தொட்டதின் மூலம் அவர்கள் தமது ஆசைகள் அனைத்தும் நிறைவேறியதாக உணர்ந்தனர்.
பதம் 10.33.2 : பின்னர் யமுனை நதிக்கரையில் பகவான் கோவிந்தன், தங்கள் கரங்களை மகிழ்ச்சியுடன் கோர்த்துக் கொண்டு நின்ற, நம்பிக்கையுடையவர்களும், பெண்களின் இரத்தினங்களாகத் திகழ்ந்தவர்களுமான கோபியர்களுடன் சேர்ந்து ராஸ நடன லீலையைத் தொடங்கினார்.
பதம் 10.33.3 : வட்டமிட்டு நின்றுகொண்டிருந்த கோபியர்களுடன் ராஸ நடன உற்சவம் ஆரம்பித்தது. பகவான் கிருஷ்ணர் தம்மைப் பலராக விரித்துக் கொண்டு இருகோபியர்களுக்கிடையில் நின்று கொண்டார். யோகேஸ்வரரான பகவான் தமது கரங்களை ஒவ்வொரு கோபியின் கழுத்தைச் சுற்றிப்போட்டவுடன், அவர்கள் ஒவ்வொருவரும் கிருஷ்ணர் தன்னருகில் மட்டுமே நின்று கொண்டிருக்கின்றார் என்று நினைத்தனர். ராஸ நடனத்தைக் காண வேண்டும் என்னும் பேராவலில் தேவர்கள் தங்கள் துணைவியருடன் நூற்றுக்கணக்கான புஷ்பக விமானங்களில் பறந்து வந்து வானில் குழுமினர்.
பதம் 10.33.4 : பின்னர் வானிலிருந்து மலர்மாரி பொழிய துந்துபிகள் முழங்கின. கந்தர்வர்களின் தலைவர்கள் தமது துணைவியருடன் சேர்ந்து பகவான் கிருஷ்ணரின் குற்றமற்ற கீர்த்திகளைப் போற்றிப்பாடினர்.
பதம் 10.33.5 : ராஸ நடனத்தின் வளையத்தில் கோபியர்கள் தங்கள் பிரியமான கிருஷ்ணருடன் ஆடியபொழுது அவர்களின் கை வளையல்களிலிருந்தும், கால் சலங்கைகளிலிருந்தும், இடுப்பில் அணிந்திருந்த சலங்கைகள் பொருந்திய மேகலைகளிலிருந்தும் ஆரவாரமிக்க ஓசை எழுந்தது.
பதம் 10.33.6 : நடமாடும் கோபியர்களின் மத்தியில் பகவான் கிருஷ்ணர், பொன்னாபரணத்தின் நடுவே பதிக்கப்பெற்ற விலைமதிப்பற்ற மரகதக் கல்லைப் போல் ஒளியுடையவராகத் தோன்றினார்.
பதம் 10.33.7 : கோபியர்கள் கிருஷ்ணரைப் போற்றிப் பாடியபொழுது அவர்கள் பாதங்கள் நடமாடின, கைகள் அபிநயித்தன, புருவங்கள், வேடிக்கையான புன்னகையுடன் அசைந்தன. அவர்கள் பின்னல் சடைகளும், இடையிலுள்ள மேகலைகளும் இறுக்கமாக முடிக்கப் பெற்றிருந்தன. அவர்கள் முகங்களில் வியர்வை முத்துக்கள் அரும்பின, அவர்கள் காதுகளில் அணிந்திருந்த குண்டலங்கள் கன்னங்களில் ஊசலாடின. பகவான் கிருஷ்ணரின் பிரிய சகிகள் மேகக்கூட்டத்தினிடையே மின்னல் கீற்றுக்களாக ஒளிர்ந்தனர்.
பதம் 10.33.8 : தமது தொண்டைகளில் பல்வேறு வண்ணங்களைத் தீட்டியிருந்த கோபியர்கள், காதலின்பத்தினை அனுபவித்து மகிழ்வதாக உரத்த குரலில் பாடிக்கொண்டு ஆடினர். கிருஷ்ணரின் ஸ்பரிசத்தினால் அவர்கள் கழிபேருவகை அடைந்தனர். அவர்கள் பாடிய பாடல்கள் இப்பிரபஞ்சம் முழுவதும் வியாபித்தது.
பதம் 10.33.9 : ஒரு கோபி கிருஷ்ணருடன் சேர்ந்து பாடும்பொழுது இனிமையான ஸ்வர வரிசைகளைப் பாடினாள், அது அவருடைய பாடலுக்கு இசைவாகவும் அதே சமயம் உச்சஸ்தாயியிலும் ஒலித்தது. அவளது திறமையில் மகிழ்ச்சியுற்ற பகவான் அவளைப் பாராட்டும் வண்ணம் “நன்று! நன்று!” என்று கூறினார். அதே ஸ்வரத்தினை மற்றொரு கோபி ஒரு விசேஷ ஸ்தாயியில் பாடினாள். கிருஷ்ணர் அவளையும் பாராட்டினார்.
பதம் 10.33.10 : ராஸ நடனமாடிக் களைப்புற்ற ஒரு கோபி, கையில் கோலுடன் தன் அருகில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணரை நோக்கித் திரும்பி தனது கைகளால் அவரது தோள்களைப் பற்றிக் கொண்டாள். அவள் ஆடிய நடனம் அவள் கைகளில் அணிந்திருந்த வளையல்களையும், கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மலர்களையும் நெகிழச் செய்தது.
பதம் 10.33.11 : நீலோத்பல மலரின் நறுமணமுடையதும், சந்தனம் பூசப்பட்டதுமான தனது திருக்கரத்தினைப் பகவான் கிருஷ்ணர் ஒரு கோபியின் தோள்களின் மீது வைத்தார். அக்கோபி அதன் இனிய நறுமணத்தினை முகர்ந்தவுடன் அவள் உடல் புளகமுற்று மகிழ்ச்சியில் ரோமங்கள் குத்திட்டு நின்றன. அவள் அவரது கரத்தினை முத்தமிட்டாள்.
பதம் 10.33.12 : தனது காதுகளில் அணிந்திருந்த குண்டலங்களின் ஒளியினால் அழகு செய்யப்பட்ட தனது கன்னத்தினை ஒரு கோபி கிருஷ்ணரின் கன்னத்தின் மீது வைத்தாள். அக்குண்டலங்கள் அவள் ஆடும்பொழுது பளபளப்புடன் மின்னின. பிறகு கிருஷ்ணர் மிக்க கவனமுடன் அவளுக்கு தான் சுவைத்த தாம்பூலத்தை அளித்தார்.
பதம் 10.33.13 : தனது கால்களில் அணிந்திருந்த சலங்கைகளும், இடையில் அணிந்திருந்த மேகலையும் சப்திக்க ஆடிப்பாடிய ஒரு கோபி சிறிது நேரத்தில் களைப்புற்றாள். அதனால் அவள் தனது மார்பகங்களைத் தன் அருகில் நின்று கொண்டிருந்த பகவான் அச்சுதனின் சுகமளிக்கும் தாமைரைக் கரங்களில் வைத்தாள்.
பதம் 10.33.14 : அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமி தேவிக்கு மட்டுமே உரிய காதலரான பகவான் அச்சுதனைத் தங்கள் ஆருயிர்க் காதலராக எய்தப் பெற்றமையினால் கோபியர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் கழுத்துக்களைத் தமது திருக்கரங்களினால் தாங்கியிருக்க, அவரது கீர்த்திகளை அவர்கள் பண்களாகப் பாடினர்.
பதம் 10.33.15 : கோபியர்களின் செவிகளுக்குப் பின்னாலிருந்த தாமரை மலர்களும், அவர்களின் கன்னங்களை அலங்கரித்த மயிர்க் குழல்களும், வியர்வை முத்துக்களும் கோபியர்களின் முக எழிலை மேலும் அதிகரித்தன. அவர்கள் கால் சலங்கைகளிலிருந்தும், மேகலையிலிருந்தும் எழுந்த ஓசை இன்னிசையாக ஒலித்தது. அவர்கள் தலையில் சூடிய மாலைகளிலுள்ள மலர்கள் சிதறின. இவ்வாறு கோபியர்கள் ராஸ நடனம் நடைபெற்ற இடத்தில் வண்டுகள் இணைந்து பாட பரமபுருஷ பகவானுடன் சேர்ந்து ஆடினர்.
பதம் 10.33.16 : இவ்வாறு இலட்சுமி தேவியின் துணைவரான ஆதி நாராயணர் என்னும் பகவான் கிருஷ்ணர் விரஜத்தின் இளம் பெண்களைத் தழுவியும், பிடித்தும், தமது விரிந்து வேடிக்கையான பார்வைகளினால் காதல் ததும்பப் பார்த்தும் இன்பம் எய்தினார். இது ஒரு குழந்தை தனது நிழலுடன் விளையாடியதைப் போன்றிருந்தது.
பதம் 10.33.17 : அவரது உடல்தொடர்பின் காரணமாகப் பொங்கி எழுந்த ஆனந்தத்தினால் கோபியர்களின் புலன்கள் உணர்ச்சிவயப்பட்டிருந்தன. அதனால் அவர்கள் கூந்தலும், ஆடைகளும், மார்பகங்களை மறைத்திருந்த மேலாடைகளும் கலைவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ஓ, குரு குலத்தின் நாயகனே, அவர்களின் மாலைகளும், ஆபரணங்களும் சிதறி வீழ்ந்தன.
பதம் 10.33.18 : வானத்திலிருந்து கிருஷ்ணரின் வேடிக்கை விளையாட்டுக்களைக் கவனித்துக்கொண்டிருந்த தேவமங்கையர் பரசவமுற்றுக் காம இச்சையினால் கிளர்ச்சி பெற்றனர். உண்மையில் சந்திரனும் அவனது கூட்டத்தைச் சேர்ந்த நட்சத்திரங்களும் கூட ஆச்சரியத்தில் ஆழ்ந்தன.
பதம் 10.33.19 : எத்தனைக் கோபியர்கள் உண்டோ அத்தனைக் கோபியர்களுடனும் தொடர்பு கொள்ளும் பொருட்டு பரமபுருஷ பகவான் தம்மை விரித்துக் கொண்டார். மேலும் அவர் சுயதிருப்தியுடனுடயவராக இருந்தபோதிலும் அவர்களது தொடர்பினை ஒரு லீலையாக அனுபவித்து மகிழ்ந்தார்.
பதம் 10.33.20 : காதலின்பத்தை அனுபவித்து கோபியர்கள் களைப்புற்றதைக் கண்டவுடன், அன்பிற்குரிய மன்னனே, கருணையுடையவரான கிருஷ்ணர் மிக்கப் பிரேமையுடன், சுகமளிக்கும் தமது கரத்தினால் அவர்களது முகங்களைத் துடைத்துவிட்டார்.
பதம் 10.33.21 : கோபியர்கள் தங்கள் நாயகரைத் தமது கன்னங்களின் எழிலாலும், ஒளிர்கின்ற தமது சுருண்ட கூந்தலினாலும், மின்னும் பொற் குண்டலங்களினாலும் இனிமை செய்த புன்னகைப் பார்வைகளால் கெளரவித்தனர். அவரது விரல் நகங்களின் ஸ்பரிசத்தால் பேருவகை அடைந்த அவர்கள் அவரது சர்வமங்களமுடைய உன்னத லீலைகளின் கீர்த்திகளை இசைத்தனர்.
பதம் 10.33.22 : பகவான் கிருஷ்ணரின் மாலை, அவர் கோபியர்களுடன் ஆடிய காதல் களியாட்டத்தினால் கசங்கியதோடு, அவர்கள் மார்பகங்களில் பூசியிருந்த குங்குமத்தினால் வண்ணம் செய்யப்பட்டது. கோபியர்களின் களைப்பினைக் போக்குவதற்காக, கந்தர்வர்களைப் போன்று பாடிக்கொண்டு வண்டுகள் தம்மை விரைவாகத் தொடர்ந்து வர யமுனை நதியினுள் இறங்கினார். தனது காதலிகளுடன் சேர்ந்து ஒரு ஆண்யானை நீரினுள் இறங்கியது போன்று அவர் தோற்றமளித்தார். உண்மையில் பகவான் ஆற்றல்மிக்க ஒரு யானை வயல்களிலுள்ள வரப்புக்களை உடைத்தெறிவதுபோல் லௌகிக மற்றும் வேத நன்னெறிகள் அனைத்தையும் கடந்தவராக இருக்கின்றார்.
பதம் 10.33.23 : அன்பிற்குரிய அரசனே! நீரினுள் சிரித்துக்கொண்டு நின்ற கோபியர்களால் நாலாபுறமும் நீர் தம்மீது வாரியிறைக்கப்படுவதைக் கிருஷ்ணர் கண்டார். அவர்கள் அவரைப் பிரேமையுடன் பார்த்தனர். தேவர்கள் விமானங்களிலிருந்து அவர்மீது மலர்மாரிபொழிந்து அவரை வழிபட்டனர். சுயதிருப்தியுடையவரான பகவான் யானைகளின் அரசனைப் போல் விளையாடுவதில் மகிழ்ச்சியடைந்தார்.
பதம் 10.33.24 : பிறகு பகவான் யமுனை நதிக்கரையிலுள்ள ஓர் உபவனத்தில் உலவத் தொடங்கினார். அவ்வனம் முழுவதும் நிலம் மற்றும் நீரிலுள்ள அனைத்து மலர்களின் நறுமணத்தையும் சுமந்துகொண்டிருந்த காற்றினால் நிரப்பப்பட்டிருந்தது. வண்டுகளும் அழகிய இளம்பெண்களும் சூழ்ந்து வர பகவான் கிருஷ்ணர், பெண்யானைகளுடன் வரும் மதங் கொண்ட ஆண் யானையைப் போல் தோன்றினார்.
பதம் 10.33.25 : எப்போதும் நிறைவேற்றப்படும் இச்சைகளையுடையவரான பகவான் கிருஷ்ணரின் மீது கோபியர்கள் உறுதியான பற்றுடையவர்களாக இருந்தபோதிலும் பகவான் எந்தவிதமான பௌதிக காம இச்சைகளாலும் தமது அகத்தில் ஒருபோதும் பாதிக்கப்பட்டதே இல்லை. இருந்தும் பகவான், உன்னத செயல்களின் காவியச் சரிதங்களை ஈர்க்கும், அனைத்து சரத்கால நிலவொளி வீசும் இரவுகளையும் தமது லீலைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்.
பதங்கள் 10.33.26 – 10.33.27 : பரீக்ஷித்து மகாராஜா கூறினார்: ஓ, அந்தணரே, ஜெகதீஸ்வரரான முழுழுதற்கடவுள் தமது அம்சாவதாரத்துடன், அதர்மங்களை அழித்து தர்மங்களை நிலைபெறச் செய்வதற்காக இப்பூமியில் அவதரித்திருக்கின்றார். உண்மையில் அவரே நன்னடத்தை விதிகளை எடுத்துரைப்பவரும், நிறைவேற்றுபவரும், பாதுகாப்பவரும் ஆவார். பிறர் மனைவியரைத் தொட்டதின் மூலம் எவ்வாறு அவற்றை அவரால் மீற முடிந்தது?
பதம் 10.33.28 : விரதங்களை உறுதியுடன் கடைபிடிப்பவரே, யது குலத்தின் சுய திருப்தியுடையவரான பகவான், நிந்தனைக்குரியவராக நடந்து கொண்ட பொழுது அவர் மனதில் இருந்த எண்ணம் என்னவென்பதை எடுத்துரைப்பதின் மூலம் எங்கள் ஐயத்தினை அருள்கூர்ந்து நீக்குவீராக.
பதம் 10.33.29 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஆற்றல்மிக்க நெறியாளர்களின் உயர்நிலைக்கு, நாம் அவர்களிடத்தில் காணும் அவர்களின் நன்னடத்தை விதிகளை மீறிய தவறான எந்தவொரு செயலாலும் பங்கம் நேர்வதில்லை. அவர்கள் தன்னிடம் போடப்படும் எல்லாவற்றையும் எரித்து விழுங்கிவிட்டுத் தான் மட்டும் மாறாது இருக்கும் நெருப்பைப் போன்றவர்களாவர்.
பதம் 10.33.30 : மகா நெறியாளராக இல்லாத ஒருவன் தனது மனதினாலும் கூட ஆள்கின்ற மகான்களை ஒருபோதும் பாவனை செய்தல் கூடாது. மூடத்தனத்தின் காரணமாக ஒருவன் அதுபோன்ற நடத்தையினைப் பாவனை செய்தானென்றால் ருத்திரன் அல்லாதான் விஷக்கடலைக் குடிக்க முயன்று தன்னைத் தானே அழித்துக் கொள்வது போல் தன்னை அழித்துக் கொள்கின்றான்.
பதம் 10.33.31 : பகவானின் அதிகாரம் பெற்ற தொண்டர்களின் சொற்கள் எப்போதும் உண்மையானவையாகும். மேலும் அவர்கள் செய்யும் செயல்கள் அவர்களின் வார்த்தைகளோடு ஒத்துப்போகும்பொழுது அவை மேன்மையுடையவையாக இருக்கின்றன. அதனால் புத்திமானாக இருக்கும் ஒருவன் அவர்தம் உபதேசங்களை நிறைவேற்ற வேண்டும்.
பதம் 10.33.32 : அன்பார்ந்த பிரபுவே, ஆணவத்திலிருந்து விடுதலை பெற்ற இம்மகான்கள் இவ்வுலகில் புண்ணிய மூர்த்திகளாகச் செயல்பட்டாலும் அவர்களிடம் சுயநல நோக்கம் என்பது சிறிதும் கிடையாது. புண்ணிய விதிகளுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டாலும் அவர்கள் பாவங்களுக்கு ஆளாவதில்லை.
பதம் 10.33.33 : படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் விலங்குகள், மனிதர்கள் தேவர்கள் பகவானுக்கு, அவரால் படைக்கப்பட்ட உயிர்களைப் பாதிக்கும் பாவ, புண்ணியத்துடன் பிறகு எவ்வாறு தொடர்பு இருக்கக்கூடும்?
பதம் 10.33.34 : பரமபுருஷ பகவானின் தாமரைத் திருவடிகளிலுள்ள தூசுக்கு சேவை செய்வதின்மூலம் முழுத்திருப்தியடையும், அவரது பக்தர்களை உலகியற் செயல்கள் ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை. அதுபோல் யோக சக்தியால் அனைத்துக் கர்மவினைப் பலன்களின் பந்தத்திலிருந்தும் விடுதலை பெற்றுள்ள கற்றறிந்த முனிவர்களையும் உலகியற் செயல்கள் கட்டுப்படுத்துவதில்லை. ஆகையினால் தமது இனிய சுயவிருப்பத்திற்கேற்ப உன்னத வடிவங்களை மேற்கொள்ளும் பகவானுக்குப் பந்தம் உண்டா என்னும் கேள்வி எவ்வாறு எழக் கூடும்?
பதம் 10.33.35 : கோபியர்களின் அகத்தினுள்ளும், அவர்கள் கணவர்களின் அகத்தினுள்ளும், ஏன் உடல்பெற்ற உயிர்கள் அனைத்தின் அகத்தினுள்ளும் சாட்சியாக இருப்பவர், இவ்வுலகில் உன்னத லீலைகளை அனுபவித்து மகிழ்வதற்காகப் பல்வேறு உருவங்களை மேற்கொள்கிறார்.
பதம் 10.33.36 : தமது பக்தர்களுக்குக் கருணை புரிவதற்காகப் பகவான் மனிதனைப் போன்ற உடலை மேற்கொள்ளும் பொழுது அவர், தமது லீலைகளைப் பற்றிக் கேட்டு, அவற்றினால் கவரப்படுபவர்கள், தம்மையே அவரிடத்தில் அர்ப்பணிக்க வேண்டுமென்பதற்காக இதுபோன்ற லீலைகளில் ஈடுபடுகிறார்.
பதம் 10.33.37 : கிருஷ்ணரின் மாயா சக்தியால் குழப்பமுற்ற ஆயர்கள் தமது மனைவியர் தங்கள் இல்லங்களிலேயே இருக்கின்றனர் என்று நினைத்தனர். அதனால் அவர்கள் கிருஷ்ணருக்கு எதிராக எந்தவிதத் துவேஷமும் கொள்ளவில்லை.
பதம் 10.33.38 : பிரம்மாவின் ஒரு இரவு முழுவதும் கடந்த பிறகு, கிருஷ்ணர் கோபியர்களை தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்படி அறிவுறுத்தினார். பரமபுருஷ பகவானின் பிரிய காதலியர்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றாலும், அவருடைய கட்டளைக்கு இணங்கி அவர்களின் இல்லங்களுக்கு சென்றனர்.
பதம் 10.33.39 : விருந்தாவனத்தின் இளங்கோபியர்களுடன் பகவான் நிகழ்த்திய லீலைகளை எவனொருவன் நம்பிக்கையுடன் செவிமடுத்தாலும் பிறருக்கு எடுத்துரைத்தாலும் அவன் பகவானின் தூய பக்தித் தொண்டினை எய்தப் பெறுவான். அதனால் அவன் மிகவிரைவில் அமைதி பெற்று இதயத்தின் நோயான காமத்தினை வெற்றி கொள்வான்.

