பகவத் கீதை – பாடத் தொகுப்பு, அத்யாயம் 9,
ஸ்லோகம் 12 (பொருளுரை)
குறிக்கோள்
ஸ்ரீ கிருஷ்ணரை அறியாமையினால் ஏளனம் செய்வதும், அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதும், முக்தி, அறிவு அல்லது பௌதிக ஆதாயத்திற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் எவ்வாறு இறுதியில் தோல்வியிலேயே முடிவடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
பொருளுரை
தங்களை பக்தித் தொண்டிலும் கிருஷ்ண உணர்விலும் இருப்பவர்களாக எண்ணிக் கொண்டு, இதயத்தில் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை பூரண சத்தியமாக இன்னும் ஏற்றுக்கொள்ளாத பக்தர்கள் பலர் உண்டு. முழுமுதற் கடவுளிடம் திரும்பிச் செல்லுதல் என்னும் பழத்தை அவர்கள் என்றும் சுவைக்க முடியாது. அதுபோல, பலன்களை எதிர்நோக்கி புண்ணிய செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களும், இந்த பௌதிக பந்தத்திலிருந்து முக்தியடைய விரும்புபவர்களும், ஒருபோதும் வெற்றியடையமாட்டார்கள்; ஏனெனில், அவர்கள் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணரை இழிந்துரைக்கின்றனர். வேறுவிதமாகக் கூறினால், ஸ்ரீ கிருஷ்ணரை ஏளனம் செய்பவர்கள், அசுரர்களாகவும் நாத்திகர்களாகவும் கருதப்படுகின்றனர். பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தில் கூறியுள்ளபடி, துஷ்டர்களான இத்தகு அசுரர்கள், ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒருபோதும் சரணடைவதில்லை. எனவே, பூரண சத்தியத்தை அடைவதற்கான அவர்களது மன அனுமானங்கள், சாதாரண ஜீவாத்மாவும் ஸ்ரீ கிருஷ்ணரும் ஒன்றே என்னும் தவறான முடிவிற்கு அவர்களைக் கொண்டு வருகின்றது. இத்தகு தவறான நம்பிக்கையால், மனிதனின் உடல் தற்போது ஜட இயற்கையால் வெறுமே மூடப்பட்டிருப்பதாகவும், இந்த ஜடவுடலிலிருந்து விடுபட்டவுடனே அவனுக்கும் பகவானுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும் எண்ணுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணருடன் ஒன்றாகி விடுவதற்கான இம்முயற்சி, மயக்கத்தின் காரணத்தால் தோல்வியையே தரும். நாத்திகமும் அசுர கலாசாரமும் கொண்ட இத்தகு ஆன்மீக அறிவு என்றும் பயனற்றது. இதுவே இந்த ஸ்லோகத்தின் உட்பொருள், வேதாந்த சூத்திரம், உபநிஷத் முதலிய வேத சாஸ்திரங்களின் மூலம் இத்தகைய நபர்களால் வளர்க்கப்படும் அறிவு, எப்போதும் தோல்வியிலேயே முடியும்.
எனவே, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரை சாதாரண மனிதராகக் கருதுவது மிகப்பெரிய குற்றம். அவ்வாறு கருதுபவர்கள், நிச்சயமாகக் குழப்பத்திலேயே இருப்பர்; ஏனெனில், அவர்களால் ஸ்ரீ கிருஷ்ணருடைய நித்தியமான ரூபத்தை புரிந்துகொள்ள முடியாது. ப்ருஹத்-விஷ்ணு-ஸ்ம்ருதியில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:
யோ வேத்தி பௌதிகம்’ தேஹம்’ க்ரு’ஷ்ணஸ்ய பரமாத்மன:
ஸ ஸர்வஸ்மாத், பஹிஷ்-கார்ய: ஷ்ரௌத-ஸ்மார்த-விதானத: முகம்’
தஸ்யாவலோக்யாபி ஸ-சேலம்’ ஸ்னானம் ஆசரேத்
“ஸ்ரீ கிருஷ்ணரது திருமேனியை பௌதிகமாகக் கருதுபவன், ஸ்ருதி, ஸ்ம்ருதியின் சடங்குகள் மற்றும் செயல்களிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். யாரேனும் அத்தகையவனது முகத்தை தற்செயலாகக் காண நேரிட்டால், அப்பாதிப்பிலிருந்து தடுத்துக் கொள்வதற்காக உடனே அவன் கங்கையில் நீராட வேண்டும்.” புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் உள்ள பொறாமையின் காரணத்தால், மக்கள் அவரை கேலி செய்கின்றனர். அத்தகையவர்களின் வருங்காலம், நாத்திகத் தன்மையும், அசுர குணமும் கொண்ட இனங்களில் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதே. அவர்களது உண்மையறிவு என்றென்றும் மயக்கத்திலேயே இருக்கும். படிப்படியாக அவர்கள் படைப்பின் இருண்ட பகுதிகளுக்கு இழிவடைவார்கள்.
நோக்கங்கள்
1. குழப்பமடைந்த நபர்கள் ஏன் அசுர மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது.
2. அகங்காரமும் மாயாசக்தியும் மக்களை ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து எவ்வாறு விலக்கி தவறாக வழிநடத்துகின்றன என்பதை அடையாளம் காணுதல்.
3. அத்தகைய நபர்களின் முக்தி, அறிவு மற்றும் பௌதிக முன்னேற்றத்திற்கான முயற்சிகள் அனைத்தும் ஏன் தோல்வியடைகின்றன என்பதை விளக்குதல்.
4. முழுமுதற் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது ஏன் மனிதனின் அனைத்து முயற்சிகளையும் பயனற்றதாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது.
5. ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைவது மட்டுமே உண்மையான வெற்றிக்கும் முக்திக்கும் வழிவகுக்கும் என்பதை உணர்தல்.
முக்கிய குறிப்புகள்
1. அகங்காரத்தால் ஏற்படும் மயக்கத்தினால், மக்கள் நாத்திகர்களாக மாறி தங்களது அனைத்து முயற்சிகளிலும் தோல்வியடைகின்றனர்.
2. ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைவதன் மூலமே உண்மையான அறிவும் வெற்றியும் கிடைக்கின்றன.
3. பக்தி இல்லாமல், மிக உயர்ந்த முயற்சிகள் கூட இறுதியில் தோல்வியிலேயே முடிகின்றன; ஆனால் கிருஷ்ண உணர்வுடன் செயல்படும்போது ஒவ்வொரு செயலும் பூரணமடைகிறது.

