அத்தியாயம் – 31
பிரிவுத் துயரில் கோபியர்களின் பாடல்கள்
பதம் 10.31.1
கோப்ய ஊசு:
ஜயதி தே ‘திகம் ஜன்மனா வ்ரஜ
ஸ்ரயத இந்திரா ஸஸ்வத் அத்ர ஹி
தயித த்ருஸ்யதாம் திக்ஷு தவாகாஸ்
த்வயி த்ருதாஸவஸ் த்வாம் விசின்வதே

கோப்ய: ஊசு:—கோபியர்கள் கூறினார்; ஜயதி—புகழப்படுகிறது; தே—உமது; அதிகம்—அதிகமாக; ஜன்மனா—பிறப்பினால்; வ்ரஜ—விரஜம் என்னும் பகுதி; ஸ்ரயதே—வசிக்கின்றாள்; இந்திரா—அதிர்ஷ்ட தேவதையான லஷ்மி; ஸஸ்வத்—எப்போதும்; அத்ர—இங்கே; ஹி—உண்மையில்; தயித—ஓ, அன்பிற்குரியவரே; த்ருஸ்யதாம்—(நீர்) காணப்படலாம்; திக்ஷு—எல்லாத் திசைகளிலும்; தாவகா:—உம்முடைய (பக்தர்கள்); த்வயி—உமக்காக; த்ருத—தாங்கிக் கொண்டிருக்கிறனர்; அஸவ—தமது பிராணனை; த்வாம்—உம்மை; விசின்வதே—அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

கோபியர்கள் கூறினர்: அன்பிற்குரியவரே! விரஜத்தில் பிறந்ததினால், உமது பிறப்பு அதன் புகழை அதிகரித்திருக்கின்றது. அதனால் அதிர்ஷ்ட தேவதையான இந்திரா எப்போதும் இங்கே வசிக்கின்றாள். உமக்காகவே உமது பக்தியுள்ள பணிப்பெண்களாகிய நாங்கள் எங்கள் எல்லாவிடங்களிலும் தேடிக் கொண்டிருக்கின்றோம், அருள் கூர்ந்து உம்மைக் காணும் மகிழ்வை எங்களுக்குத் தந்தருள்வீராக.

பதம் 10.31.2
ஸரத்-உதாஸயே ஸாது-ஜாத-ஸத்-
ஸரஸிஜோதர-ஸ்ரீ-முஷா த்ருஸா
ஸுரத-நாத தே ‘ஸுல்க-தாஸிகா
வர-த நிக்னதோ நேஹ கிம் வத:

ஸரத்—சரத்காலத்தின்; உத-ஆஸயே—நீர் நிறைகுளத்தில்; ஸாது—நன்றாக; ஜாத—வளர்ந்துள்ள; ஸத்—சிறந்த; ஸரஸி-ஜ—தாமரை மலர்களின்; உதர—நடுவில்; ஸ்ரீ—அழகினை; முஷா—விஞ்சுகின்றது; த்ருஸா—உமது பார்வை; ஸுரத-நாத—ஓ, காதல் தேவனே; தே—உமது; அஸுல்க—கூலி இன்றி அமர்த்தப்பட்ட; தாஸிகா:—பணிப் பெண்கள்; வர-த—ஒ, வரம் அளிப்பவரே; நிக்னதை:—நீர் கொல்வது; ந—இல்லை; இஹ—இவ்வுலகில்; கிம்—ஏன்; வத:—கொலை.

ஓ, காதல் தேவனே! அழகில், உமது பார்வை சரத் காலத் தாமரைத் தடாகங்களில் மலர்ந்திருக்கும் எழில்மிகு தாமரை மலர்களின் சீரிய இதழ்களையும் விஞ்சுகின்றது. ஓ, நல்வரம் அருள்பவரே! எந்தவிதக் கூலியும் பெறாது தம்மையே உம்மிடம் அர்ப்பணித்திருக்கும் உமது பணிப்பெண்களை நீர் கொல்கின்றீர். இது கொலை இல்லையா?

பதம் 10.31.3
விஷ-ஜலாப்யயாத் வ்யால-ராக்ஷஸாத்
வர்ஷ-மாருதாத் வைத்யு தான லாத்
வ்ருஷ-மயாத்மஜாத் விஸ்வதோ பயாத்
ருஷப தே வயம் ரக்ஷிதா முஹு:

விஷ—விஷமுடைய; ஜல—நீரினால் (காளிங்கனின் விஷத்தினால் மாசுற்ற யமுனை நதியின்); அப்யயாத்—அழிவிலிருந்து; வ்யால—அஞ்சத்தக்க; ராக்ஷஸாத்—அசுரனிடமிருந்தும் (அகாசுரன்); வர்ஷ—மழையிலிருந்து (இந்திரனால் அனுப்பப்பட்டது); மாருதாத்—சூறைக்காற்றிலிருந்தும் (த்ருணாவர்த்தனால் உருவாக்கப்பட்டது): வைத்யுத-அனலாத்—வஜ்ராயுதத்திலிருந்தும் (இந்திரனின்); வ்ருஷ—அரிஷ்டாசுரன் என்னும் காளையிடமிருந்தும்; மய-ஆத்மஜாத்—மயனின் மைந்தனிடமிருந்தும் (வ்யோமாசுரன்); விஸ்வத:—எல்லா விதமான; பயாத்—அச்சங்களிலிருந்தும்; ருஷப—ஓ, அனைவரிலும் சிறந்தவரே; தே—உம்மால்; வயம்—நாங்கள்; ரக்ஷிதா—பாதுகாக்கப்பட்டோம்; முஹு:—தொடர்ந்து.

ஒ, அனைவரினும் சிறந்தவரே, நீர் எங்களைத் தொடந்து – விஷம் நிறைந்த நீரிலிருந்தும், நரமாமிசம் தின்னும் அகாசுரனிடமிருந்தும், நாசகார மழையிலிருந்தும், சூறைக்காற்று அசுரனிடமிருந்தும், இந்திரனின் அனல்கக்கும் வஜ்ராயுதத்திடமிருந்தும், காளை அசுரனிடமிருந்தும், மயனின் மைந்தனிடமிருந்தும் வந்த எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளியிருக்கின்றீர்.

பதம் 10.31.4
ந காலு கோபிகா-நந்தனோ பவான்
அகில-தேஹினாம் அந்தராத்ம-த்ருக்
விகனஸார்திதோ விஸ்வ-குப்தயே
ஸக உதேயிவான் ஸாத்வதாம் குலே

ந—இல்லை; காலு—உண்மையில்; கோபிகா—கோபியின் (யசோதையின்); நந்தன:—மைந்தன்; பவான்—தாங்கள்; அகில—அனைத்து: தேஹினாம்—உடல்பெற்ற உயிர்களின்; அந்த: ஆத்ம—அக உணர்வின்; த்ருக்—காண்பவர்; விகனஸா—பிரம்மதேவரால்; அர்தித:—பிரார்த்திக்கப்பட்டு; விஸ்வ—பிரபஞ்சத்தினை; குப்தயே—காப்பதற்காக; ஸகே—ஓ, நண்பரே; உதேயிவான்—நீர் எழுந்தருளியுள்ளீர்; ஸாத்வதாம்—சாத்வதர்களின்; குலே—குலத்தில்.

ஓ, நண்பரே, உண்மையில் நீர் கோபி யசோதையின் மைந்தன் இல்லை. மாறாக நீர் உடல் பெற்ற ஆத்மாக்களின் இதயங்களினுள்ளே சாட்சியாக வீற்றிருப்பவர் ஆவீர். பிரம்மதேவர், இப்பிரபஞ்சத்தினைக் காப்பதற்காக நீர் எழுந்தருள வேண்டுமென்று உம்மிடம் வேண்டினார், அதனால் இப்போது நீர் சாத்வத குலத்தில் தோன்றியிருக்கின்றீர்.

பதம் 10.31.5
விரசிதாபயம் வ்ருஷ்ணி-தூர்யதே
கரணம் ஈயுஷாம் ஸம்ஸ்ருதேர் பயாத்
கர-ஸரோருஹம் காந்த காம-தம்
ஸிரஸி தேஹி ந: ஸ்ரீ-கர-க்ரஹம்

விரசித—உண்டாக்கியது; அபயம்—அச்சமின்மையினை; வ்ருஷ்ணி—விருஷ்ணி குலத்தின்; தூர்ய—ஓ, சிறந்தவரே; தே—உமது; கரணம்—பாதங்கள்; ஈயுஷாம்—அணுகுபவர்களின்; ஸம்ஸ்ருதே:—பௌதிக வாழ்வின்; பயாத்—பயத்தினால்; கர—உமது கரம்; ஸர:-ருஹம்—தாமரை மலர்போன்ற; காந்த—ஓ, அன்பரே; காம—விருப்பங்கள்; தம்—நிறைவேறுவதற்காக; ஸிரஸி—தலைகளின் மீது; தேஹி—வைப்பீராக; ந:—எமது; ஸ்ரீ—அதிர்ஷ்ட தேவதை லக்ஷ்மி தேவியின்; கர—கரத்தினை; க்ரஹம்—பிடித்துக் கொண்டிருப்பவர்.

ஓ, விருஷ்ணிகளிற் சிறந்தவரே, அதிர்ஷ்ட தேவதையின் கரத்தினைப் பற்றிக் கொண்டிருக்கும் தாமரை மலர்போன்ற உமது கரம், பெளதிக வாழ்வின் அச்சத்தின் காரணமாக உமது திருவடிகளை அணுகுபவர்களுக்கு அச்சமின்மையினை அருள்கின்றது. ஓ, அன்பரே, விருப்பத்தினை நிறைவேற்றும் உமது தாமரை மலர்க் கரத்தினை எங்கள் தலைகளின் மீது வைத்தருளவேண்டும்.

பதம் 10.31.6
வ்ரஜ-ஜனார்தி-ஹன் வீர யோஷிதாம்
நிஜ-ஜன-ஸ்மய-த்வம்ஸன-ஸ்மித
பஜ ஸகே பவத்-கிங்கரீ: ஸ்ம நோ
ஜலருஹானனம் சாரு தர்ஸய

வ்ரஜ-ஜன—விரஜ மக்களின்; ஆர்தி—துன்பத்தினை; ஹன்—ஓ, நீக்குபவரே; வீர—ஓ, வீரரே; யோஷிதாம்—பெண்களின்; நிஜ—நமது சொந்த; ஜன—ஜனங்களின்; ஸ்மய—கர்வம்; த்வம்ஸன—அழிக்கின்ற; ஸ்மித—அவரது புன்னகை; பஜ—அருள்கூர்ந்து ஏற்றுக் கொள்வீராக; ஸகே—ஓ நண்பரே; பவத்—உம்முடைய; கிங்கரீ:—பணிப் பெண்களாக; ஸ்ம—உண்மையில்; ந:—எம்மை; ஜல-ருஹா—தாமரை; ஆனனம்—உனது முகத்தினை; சாரு—எழில் மிகு; தர்ஸய—காட்டியருள்வீராக.

ஓ, விரஜ மக்களின் துன்பத்தை நீக்குபவரே, ஓ, பெண்கள் அனைவரின் நாயகரே, உமது புன்னகை உமது பக்தர்களின் வீண் கர்வத்தினை அழிக்கின்றது. அன்பு நண்பரே, அருள்கூர்ந்து எம்மை உமது பணிப் பெண்களாக ஏற்றுக் கொண்டு, உமது எழில்மிகு செந்தாமரை மலர் முகத்தினை எமக்குக் காட்டுவீராக

பதம் 10.31.7
ப்ரணத-தேஹினாம் பாப-கர்ஷணம்
த்ருண-சரானுகம் ஸ்ரீ-நிகேதனம்
பணி-பணார்பிதம் தே பதாம்புஜம்
க்ருணு குசேஷு ந: க்ருந்தி ஹ்ருச்-சயம்

ப்ரணத—உம்மைச் சரணடைகின்ற; தேஹினாம்—உடல் பெற்ற ஆத்மாக்களின்; பாப—பாவங்களை; கர்ஷணம்—அவை நீக்குகின்றன; த்ருண—புல்லை; சர—மேயும் (பசுக்களை); அனுகம்—தொடர்ந்து; ஸ்ரீ—அதிர்ஷ்ட-தேவதையின்; நிகேதனம்—உறைவிடம்; பணி—பாம்பின் (காளிங்கனின்); பணா—தலைகளின் மீது; அர்பிதம்—வைத்து; தே—உமது; பத-அம்புஜம்—தாமரைத் திருவடிகள்; க்ருணு—அருள்கூர்ந்து வைப்பீராக; குசேஷு—மார்பகங்களின்மேல்; ந:—எமது; க்ருந்தி—வெட்டி எறிவீராக; ஹ்ருத்-ஸயம்—எமது மனங்களிலுள்ள காமத்தினை.

உம்மைச் சரணடைகின்ற உடல்பெற்ற ஆத்மாக்களின் முன்னைய பாவங்களை உமது தாமரைத் திருவடிகள் அழிக்கின்றன. அத்திருவடிகள் மேய்ச்சல் நிலங்களில் பசுக்களைப் பின்தொடர்ந்து செல்கின்றன. மேலும் அதிர்ஷ்ட தேவதையின் நித்திய உறைவிடமாகவும் அவை இருக்கின்றன. அஞ்சவரும் காளிங்க நாகத்தின் தலைகளின் மீது ஒரு முறை நீர் அத்திருவடிகளை வைத்திருக்கின்றீர். ஆதலினால் அவற்றை எமது மார்பகங்களின் மீது அருள்கூர்ந்து வைத்து எமது மனத்திலுள்ள காமத்தினை வெட்டி எறிவீராக.

பதம் 10.31.8
மதுரயா கிரா வல்கு-வாக்யயா
புத-மனோஜ்ஞயா புஷ்கரேக்ஷண
விதி-கரீர் இமா வீர முஹ்யதீர்
அதர-ஸீதுநாப்யா யயஸ்வ ந:

மதுரயா—இனிமையான; கிரா—உமது குரலினால்; வல்கு—கவர்ச்சிமிக்க; வாக்யயா—வார்த்தைகளினால்; புத—புத்திமான்களுக்கு; மனோ-ஜ்ஞயா—கவர்ச்சியளிக்கும்; புஷ்கர—தாமரை; ஈக்ஷண—உமது விழிகள்; விதி-கரீ:—பணிப்பெண்கள்; இமா:—இவர்களின்; வீர—ஓ, வீரரே; முஹ்யதீத்:—குழப்பமுற்றிருக்கும்; அதர—உமது அதரங்களின்; ஸீதுனா—அமிர்தத்தினால்; ஆப்யா யயஸ்வ—அருள் கூர்ந்து உயிர் பெறச் செய்வீராக; ந:—எம்மை.

ஒ, செந்தாமரை மலர் போன்ற விழியுடையவரே, புத்திமான்களின் மனதினை ஈர்க்கும் உமது இனிய குரல் ஒலியும் கவர்ச்சிமிகு வார்த்தைகளும் எம்மை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. எங்கள் அன்பிற்குரிய வீரரே, உமது அதரங்களில் உள்ள அமிர்தத்தினால் உமது பணிப் பெண்களுக்கு அருள்கூர்ந்து புத்துயிர் அளிப்பீராக.

பதம் 10.31.9
தவ காதம்ருதம் தப்த-ஜீவனம்
கவிபிர் ஈடிதம் கல்மஷாபஹம்
ஸ்ரவண-மங்களம் ஸ்ரீமத் ஆததம்
புவி க்ருணந்தி யே பூரி-தா ஜனா:

தவ—உமது; கதா-அம்ருதம்—அமிர்தவார்த்தைகள்; தப்த-ஜீவனம்—பௌதிக உலகில் துன்புறுவோருக்கு வாழ்வளிக்கும்; கவிபி:—சிறந்த சிந்தனையாளர்களால்; ஈடிதம்—விளக்கப்படுகின்ற; கல்மஷ-அபஹம்—பாவ பலன்களை அது விரட்டியடிக்கும்; ஸ்ரவண-மங்களம்—கேட்கும்பொழுது ஆன்மீக நலன் அளிக்கும்; ஸ்ரீமத்—ஆன்மீகச் சக்தியால் நிரப்பப்பட்டது; ஆததம்—உலகெங்கிலும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது; புவி—பௌதிக உலகில்; க்ருணந்தி—ஓதுகின்ற பரப்புகின்ற; யே—இவர்கள்; பூரி-தா:—மிகுந்த நலன் செய்யும்; ஜனா:—மனிதர்களாவர்.

உமது வார்த்தைகளின் அமிர்தமும், உமது செயல்களின் சரிதமும் இப்பௌதிக உலகில் துன்புறுவோர்க்கு ஜீவனும் ஆன்மாவும் ஆகும். கற்றறிந்த முனிவர்களால் பரப்பப்படும் இச்சரிதங்கள், ஒருவனது பாவங்களின் பலன்களை நீக்குவதோடு, அவற்றைக் கேட்பவர்களுக்கு, சர்வ மங்களங்களும் அளிக்கின்றன. இச்சரிதங்கள் உலகமெங்கனும் பரப்பப்படுகின்றன. அவை ஆன்மீக சக்தியுடையவையாக இருக்கின்றன. முழுமுதற்கடவுளின் மேதகு தகவல்களைப் பரப்புகின்றவர்கள், ஞான தான வள்ளல்களாவர்.

பதம் 10.31.10
ப்ரஹஸிதம் ப்ரிய-ப்ரேம-வீக்ஷணம்
விஹரணம் ச தே த்யான-மங்களம்
வஹஸி ஸம்விதோ யா ஹ்ருதி ஸ்ப்ரூஸ:
குஹக நோ மன: க்ஷோபயந்தி ஹி

ப்ரஹஸிதம்—புன்னகை; ப்ரிய—பிரியமான; ப்ரேம—பிரேமையுடைய; வீக்ஷணம்—பார்வைகள்; விஹரணம்—நெருக்கமான லீலைகள்; ச—மற்றும்; தே—உமது; த்யான—தியானத்தினால்; மங்களம்—மங்களமுடையன; வஹஸி—தனிமையான இடங்களில்; ஸம்வித—கலந்துரையாடல்கள்; யா:—இவை; ஹ்ருதி—இதயத்தினை; ஸ்ப்ருஸ:—தொட்டு; குஹக—ஓ, ஏமாற்றுக்காரரே; ந:—எமது; மன:—மனங்களை; க்ஷோபயந்தி—கிளர்ச்சியுறச் செய்கின்றன; ஹி—உண்மையில்.

உமது புன்னகை, இனிமையான காதல் மிகு பார்வைகள், உம்முடன் நாங்கள் அனுபவித்து மகிழ்ந்த நெருக்கமான லீலைகள் மற்றும் இரகசியப் பேச்சுகள் இவையனைத்தும் தியானிப்பதற்கு மங்களமுடையன என்பதோடு, அவை எமது உள்ளங்களையும் தொடுகின்றன. ஆனாலும் ஒ, ஏமாற்றுக்காரரே அவை எங்கள் மனங்களைப் பெரிதும் கிளர்ச்சியுறச் செய்கின்றன.

பதம் 10.31.11
சலஸி யத் வ்ரஜாச் சாரயன் பஸூன்
நளின-ஸுந்தரம் நாத தே பதம்
ஸில-த்ருணாங்குரை: ஸீததீதி ந:
கலிலதாம் மன: காந்த கச்சதி

சலஸி—நீர் செல்லும்; யத்—பொழுது; வ்ரஜாத்—விரஜத்திலிருந்து; சாரயன்—மேய்த்துக்கொண்டு; பஸூன்—விலங்குகளை; நளின—தாமரை மலரைக் காட்டிலும்; ஸுந்தரம்—எழில்மிக்க; நாத—ஓ, நாதனே; தே—உமது; பதம்—பாதங்கள்; ஸில—தானியங்களின் கூர்மையான நுனிகளினால்; த்ருண—புற்கள்; அங்குரை:—மற்றும் முளைவிடும் செடிகள்; ஸீததி—வேதனைப்படுகின்றன; இதி—இவ்வாறு நினைத்து; ந:—நாங்கள்; கலிலதாம்—கவலை; மன:—எங்கள் மனங்களில்; காந்த—ஓ, காதலரே; கச்சதி—அடைகின்றோம்.

அன்பிற்குரிய நாதரே, அன்புக் காதலரே, பசுக்களை மேய்ப்பதற்காக நீர் விரஜத்தைவிட்டுச் செல்லும்பொழுது, தாமரை மலரினும் எழில் மிகு உமது பாதங்களில் தானியக்கதிர்களின் கூர்முனைகளும், முரட்டுப் புற்களும், செடிகளும் குத்துமே என்று நினைத்து எங்கள் மனங்கள் துன்புறுகின்றன.

பதம் 10.31.12
தின-பரிக்ஷயே நீல-குந்தலைர்
வனருஹானனம் பிப்ரத் ஆவ்ருதம்
கன-ரஜஸ்வலம் தர்ஸயன் முஹுர்
மனஸி ந: ஸ்மரம் வீர யச்சஸி

தின—பகற்பொழுதின்; பரிக்ஷயே—முடிவில்; நீல—கருநீல; குந்தலை:—மயிர்க் குழல்களுடன்; வன-ருஹ—தாமரை; ஆனனம்—முகம்; பிப்ரத்—காட்சியளிக்கும்; ஆவ்ருதம்—மறைத்துள்ள; கன—அடர்த்தியான; ரஜ:-வலம்—தூசுபடிந்த; தர்ஸயன்—காண்பித்து; முஹு:—தொடர்ந்து; மனஸி—மனங்களில்; ந:—எமது; ஸ்மரம்—மன்மதன்; வீர—ஓ, வீரரே; யச்சஸி—நீர் இருக்கின்றீர்.

பகற்பொழுதின் முடிவில் நீர் அடிக்கடி, கருநீல மயிர்க் குழல்களால் மூடப்பட்டு அடர்த்தியாகத் தூசு படிந்திருக்கும் உமது தாமரைக் திருமுகத்தினை எமக்குக் காட்டுகின்றீர். இவ்வாறு ஓ, வீரரே, நீர் எங்கள் மனங்களில் காம இச்சையினை எழுப்புகின்றீர்.

பதம் 10.31.13
ப்ரணத-காம-தம் பத்மஜார்சிதம்
தரணி-மண்டனம் த்யேயம் ஆபதி
சரண-பங்கஜம் ஸந்தமம் சதே
ரமண ந: ஸ்தனேஷ்வ் அர்பயாதி-ஹன்

ப்ரணத—அடிபணிந்து வணங்குபவர்களின்; காம—விருப்பங்களை; தம்—நிறைவேற்றுகின்றன; பத்ம-ஜ—பிரம்மதேவரால்; அர்சிதம்—வழிபடப்படுகின்றன; தரணி—இப்பூமியின்; மண்டனம்—ஆபரணமாகும்; த்யேயம்—தியானத்திற்கு உரிய பொருள்; ஆபதி—துன்ப வேளையில்; சரண-பங்கஜம்—தாமரைத் திருவடிகள்; ஸம்-தமம்—உயர் திருப்தியை அளிக்கின்றன; ச—மற்றும்; தே—உமது; ரமண—ஓ, அன்பரே; ந:—எமது; ஸ்தனேஷு—மார்பகங்களின் மீது; அர்பய—வைப்பீராக; ஆதி-ஹன்—மனதிலுள்ள கவலைகளை அழிப்பவரே.

பிரம்மதேவரால் வழிபடப்படும் உமது தாமரைத் திருவடிகள், அவற்றை அடிபணிந்து வணங்குவோர் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுகின்றன. அவை பூமியின் அணிகலன்களாகும். அவை உயர் திருப்தியை அளிக்கின்றன. ஆபத்துக் காலங்களில் அவையே தியானத்திற்கு உரிய பொருளாகவும் இருக்கின்றன. ஓ, அன்பரே, ஓ, கவலைகளை அழிப்பவரே, அருள் கூர்ந்து அத்தாமரைத் திருவடிகளை எமது மார்பகங்களின் மீது வைப்பீராக.

பதம் 10.31.14
ஸுரத-வர்தனம் ஸோக-நாஸனம்
ஸ்வரித-வேணுனா ஸுஷ்டு சும்பிதம்
இதர-ராக-விஸ்மாரணம் ந்ருணாம்
விதர வீர நஸ் தே ‘தராம்ருதம்

ஸுரத—காதல் இன்பம்; வர்தனம்—அது அதிகரிக்கச் செய்கின்றன; ஸோக—சோகத்தினை; நாஸனம்—அது அழிக்கின்றது; ஸ்வரித—ஒலித்த; வேணுனா—புல்லாங்குழலால்; ஸுஷ்டு—ஏராளமாக; சும்பிதம்—முத்தமிடப்பட்டு; இதர—பிற; ராக—பற்றுக்களை; விஸ்மாரணம்—மறப்பதற்குக் காரணமாகின்றன; ந்ருணாம்—மனிதர்கள்; விதர—பரவச் செய்வீராக; வீர—ஓ, வீரரே; ந:—எங்கள் மீது; தே—உமது; அதர—அதரங்களின்; அம்ருதம்—அமிர்தத்தினை.

ஓ, வீரரே! துன்பத்தினை நீக்கிக் காதல் இன்பத்தினை அதிகரிக்கச் செய்யும் உமது அதரங்களிலுள்ள அமிர்தத்தினை அன்புடன் எங்களுக்கு வழங்குவீராக. அந்த அமிர்தமானது இனிமையாக ஒலிக்கும் உமது புல்லாங்குழலால் சுவைக்கப்படுவதோடு மக்களின் பிற பற்றுதலையும் மறக்கச் செய்கின்றது.

பதம் 10.31.15
அடதி யத் பவான் அஹ்னி கானனம்
த்ருதி யுகாயதே த்வாம் அபஸ்யதாம்
குடில-குந்தளம் ஸ்ரீ-முகம் ச தே
ஜட உதீக்ஷதாம் பக்ஷ்ம-க்ருத் த்ருஸாம்

அடதி—செல்லும்; யத்—பொழுது; பவான்—நீர்; அஹ்னி—பகற்பொழுதில்; கானனம்—காட்டிற்கு; த்ருதி—ஒரு நொடியில் 1/1700 பகுதி; யுகாயதே—ஓர் யுகத்தைப் போன்றிருக்கின்றது; த்வாம்—நீர்; அபஸ்யதாம்—காண முடியாதவர்களுக்கு; குடில—சுருண்ட; குந்தளம்—குழல் முடிகளுடன்; ஸ்ரீ—எழில்மிகு; முகம்—முகம்; ச—மற்றும்; தே—உமது; ஜட:—மூட; உதீக்ஷதாம்—ஆர்வமுடன் பார்ப்பவர்களின்; பக்ஷ்ம—இமைகளின்; க்ருத்—படைப்பவன்; த்ருஸம்—விழிகளின்.

பகற்பொழுதில் நீர் காட்டிற்குச் செல்லும் வேளையில் உம்மைக் காணமுடியாத காரணத்தினால் ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பகுதி நேரம் கூட எங்களுக்கு ஓர்யுகம் போல் தோன்றுகின்றது. சுருண்ட குழல் முடிகள் தொங்கும் உமது எழில் முகத்தை நாங்கள் காதலுடன் நோக்குங்கால், படைப்பவன் என்னும் மூடனால் வடிவமைக்கப்பட்டிருக்கும் எங்கள் கண் இமைகள் எங்கள் இன்பத்திற்குத் தடையாக இருக்கின்றன.

பதம் 10.31.16
பதி-ஸுதான்வய-ப்ராத்ரு-பாந்தவான்
அதிவிலங்க்ய தே (ஆ)ந்தி அச்யுதாகத:
கதி-விதஸ் தவோத்கீத-மோஹிதா:
கிதவ யோஷித: கஸ் த்யஜேன் நிஸி

பதி—கணவன்மார்கள்; ஸுத—குழந்தைகள்; அன்வய—பெரியவர்கள்; ப்ராத்ரு—சகோதரர்கள்; பாந்தவான்—மற்றும் பிற உறவினர்கள்; அதிவிலங்க்ய—முற்றிலும் புறக்கணித்து; தே—உமது; அந்தி—உடன் இருப்பதற்காக; அச்யுத—ஓ, குற்றமற்றவரே; ஆகதா:—வந்திருக்கின்ற; கதி—எங்கள் செயல்களின்; வித:—நோக்கத்தினைப் புரிந்துகொண்டவர்; தவ—உமது; உத்கீத—ஓசைமிகு இசையினால் புல்லாங்குழலின்); மோஹிதா:—மோகமுற்று; கிதவ—ஓ, ஏமாற்றுக்காரரே; யோஷித:—பெண்களை; க:—யார்; த்யஜேத்—நிராகரிப்பர்; நிஸி—நடுநிசியில்.

அன்பிற்குரிய அச்சுதரே, நாங்கள் ஏன் இங்கே வந்திருக்கின்றோம் என்பதை நீர் நன்கறிவீர். உமது புல்லாங்குழலின் இனிய இசையினால் மோகமுற்று உம்மைக் காண்பதற்காக நடு நிசியில் வந்திருக்கும் இளம் பெண்களை உம்மைப் போன்ற ஏமாற்றுக்காரரைத் தவிர வேறு யார் நிராகரிப்பர்? உம்மைக் காண்பதற்காக நாங்கள் எங்கள் கணவர்களையும் குழந்தைகளையும், பெரியோர்களையும், பிற உறவினர்களையும் முற்றிலும் புறக்கணித்திருக்கின்றோம்.

பதம் 10.31.17
ரஹஸி ஸம்விதம் ஹ்ருச்-சயோதயம்
ப்ரஹஸிதானனம் ப்ரேம-வீக்ஷணம்
ப்ருஹத்-உர: ஸ்ரியோ வீக்ஷ்ய தாம தே
முஹுர் அதி-ஸ்ப்ருஹா முஹ்யதே மன:

ரஹஸி—தனிமையில்; ஸம்விதம்—இரகசிய உரையாடல்கள்; ஹ்ருத்-ஸய—மனதிலுள்ள காமத்தினை; உதயம்—எழுப்புகின்றது; ப்ரஹஸித—புன்னகை பூத்த; ஆனனம்—முகம்; ப்ரேம—காதல்கனியும்; வீக்ஷணம்—பார்வைகள்; ப்ருஹத்—அகன்ற; உர:—மார்பு: ஸ்ரிய:—அதிர்ஷ்ட தேவதையின்; வீக்ஷ்ய—கண்டு; தாம—உறைவிடம்; தே—உமது; முஹு:—மீண்டும் மீண்டும்; அதி—அதிக; ஸ்ப்ருஹா—நாட்டங் கொண்டு; முஹ்யதே—மோகமுறுகிறது; மன:—மனம்.

உம்மோடு இரகசியமாக நாங்கள் நடத்திய உரையாடல்களை எண்ணும்பொழுதும், உமது புன்னகை பூத்த முகத்தினையும், காதல் கனியும் பார்வைகளையும், அதிர்ஷ்ட தேவதையின் உறைவிடமான உமது அகன்ற மார்பையும் நினைத்து எங்கள் உள்ளங்களில் காம இச்சை எழும்பொழுதும் எங்கள் மனம் மீண்டும் மீண்டும் மோகத்திற்காளாகிறது. அதனால் உம்மீதான எங்கள் நாட்டம் அதிதீவிரமாவதை நாங்கள் உணர்கின்றோம்.

பதம் 10.31.18
வ்ரஜ வனௌகஸாம் வ்யக்திர் அங்க தே
வ்ருஜின-ஹந்த்ரி அலம் விஸ்வ-மங்களம்
த்யஜ மனாக் ச நஸ் த்வத்-ஸ்ப்ருஹாத்மனாம்
ஸ்வ-ஜன-ஹ்ருத்-ருஜாம் யன் நிஷூதனம்

வ்ரஜ-வன—விரஜத்தின் காடுகளில்; ஓகஸாம்—வசிப்பவர்களுக்கு; வ்யக்தி:—தோற்றம்; அங்க—அன்பிற்குரியது; தே—உமது; வ்ருஜின—அழிக்கின்றது; ஹந்த்ரி—அழிவின் முகவர்; அலம்—முற்றிலும்; விஸ்வ-மங்களம்—சர்வமங்களமுடையது; த்யஜ—அருள்கூர்ந்து அளிப்பீராக; மனாக்—ஒரு துளி அளவு; ச—மற்றும்; ந:—எமக்கு; த்வத்—உம்மீது; ஸ்ப்ருஹா—நாட்டத்தினால்; ஆத்மனாம்—நிரப்பப்பட்டிருக்கும் மனமுடைய; ஸ்வ—உமது; ஜன—பக்தர்கள்; ஹ்ருத்—இதயங்களிலுள்ள; ருஜாம்—நோய்களை; யத்—எது; நிஷூதனம்—எதிர்செயல் புரிகின்றது.

ஓ, அன்பரே! சர்வ மங்களமுடைய உமது தோற்றம் விரஜத்தின் காடுகளில் வசிப்போரின் துன்பங்களை நீக்குகின்றது. உமது உறவினை எண்ணி எங்கள் மனம் ஏங்குகின்றது. உங்கள் பக்தர்களின் உள்ளங்களிலுள்ள நோயினை நீக்கும் அந்த மருந்தில் துளியளவாவது அருள் கூர்ந்து எனக்கு அளிப்பீராக.

பதம் 10.31.19
யத்தே ஸுஜாத-சரணாம்புருஹம் ஸ்தனேஷு
பீதா: ஸனை: ப்ரிய ததீமஹி கர்கஸேஷு
தேனாடவீம் அடஸி தத் வ்யததே ந கிம் ஸ்வித்
கூர்பாதிபிர் ப்ரமதி தீர் பவத்-ஆயுஷாம் ந:

யத்—எது; தே—உமது; ஸு-ஜாத—மிக நேர்த்தியான; சரண அம்பு-ருஹம்—தாமரைத் திருவடிகள்; ஸ்தனேஷு—மார்பகங்களின் மீது; பீதா:—அஞ்சுகின்றோம்; ஸனை:—மெல்ல; ப்ரிய—ஓ, பிரியமானவரே; ததீமஹி—நாங்கள் இடுகின்றோம்; கர்கஸேஷு—கடினமான; தேன—அவற்றினால்; அடவீம்—காட்டில்; அடஸி—நீர் திரிகின்றீர்; தத்—அவை; வ்யததே—துன்புறுகின்றன; ந—இல்லை; கிம்-ஸ்வித்—நாங்கள் ஆச்சரியப்படுகின்றோம்; கூர்ப-ஆதிபி:—சிறு சிறு பருக்கைக் கற்கள் மற்றும் பிற; ப்ரமதி—கலக்கமுறச் செய்கிறது; தீ:—மனதினை; பவத்-ஆயுஷாம்—உம்மைத் தமது உயிராக எண்ணுபவர்களின்; ந:—நம்மில்.

ஓ, அன்பரே, உமது மென்மையான திருவடித்தாமரைகள் எங்கே காயம்பட்டு விடுமோ என்று அஞ்சிக்கொண்டேதான் நாங்கள் அவற்றை மெதுவாக எங்கள் மார்பகங்களின்மீது வைக்கின்றோம். எங்கள் உயிர் உம்மைச் சார்ந்து மட்டுமே இருக்கின்றது. ஆகையினால், நீர் காட்டுப்பாதையில் நடந்துசெல்கையில் கூரான கற்களினால் உமது மென்மையான பாதங்கள் காயப்பட்டுவிடுமோ என்ற கவலை எங்கள் மனங்களில் நிரம்பியிருக்கின்றது.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “பிரிவுத் துயரில் கோபியர்களின் பாடல்கள்” எனும் தலைப்பைக் கொண்ட, முப்பத்தொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare