அத்தியாயம் – 12
மோஹினி:மூர்த்தியால்
சிவபெருமான் பிரமை அடைதல்
பதங்கள் 8.12.1 – 8.12.2
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
வ்ருஷ-த்வஜோ நிசம்யேதம் யோஷித்-ரூபேண தானவான்
மோஹயித்வா ஸுர-கணான் ஹரி: ஸோமம் அபாயயத்

வ்ருஷம் ஆருஹ்ய கிரிச: ஸர்வ-பூத-கணைர் வ்ருத:
ஸஹ தேவ்யா யயௌ த்ரஷ்டும் யத்ராஸ்தே மதுஸூதன:

ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; வ்ருஷ-த்வஜ:—ஓர் எருதின் மேல் ஏறிச்செல்பவரான சிவபெருமான்; நிசம்ய—கேள்விப்பட்டு; இதம்—இதை (செய்தியை); யோஷித்-ரூபேண—ஒரு பெண்ணின் உருவை ஏற்று; தானவான்—அசுரர்களை; மோஹயித்வா—வசியப்படுத்திய; ஸுர-கணான்—தேவர்களை; ஹரி:—பரமபுருஷ பகவான்; ஸோமம்—அமிர்தம்; அபாயயத்—பருகச் செய்தார்; வ்ருஷம்—எருதின்; ஆருஹ்ய—மீது ஏறி; கிரிச:—சிவபெருமான்; ஸர்வ—எல்லா; பூத-கணை:—பூதகணங்களால்; வ்ருத:—சூழப்பட்டவராய்; ஸஹ-தேவ்யா—உமாவுடன்; யயௌ—சென்றார்; த்ரஷ்டும்—காண; யத்ர—எங்கு; ஆஸ்தே—இருக்கும்; மதுஸூதன:—பகவான் விஷ்ணுவை.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஒரு பெண்ணின் உருவிலிருந்த, முழுமுதற் கடவுளாகிய ஹரி, அசுரர்களை வசியப்படுத்தி, அமிர்தத்தை தேவர்கள் பருகும்படி செய்தார். இத்திருவிளையாடல்களைப் பற்றி கேள்விப்பட்டபின், ஓர் எருதால் தூக்கிச் செல்லப்படுபவரான சிவபெருமான், பகவானாகிய மதுசூதனர் வசிக்கும் இடத்திற்குச் சென்றார். தமது மனைவி உமாவுடன், அவரது சகாக்களான பூதகணங்களால் சூழப்பட்டவராய், பெண்ணாகத் தோன்றிய பகவானின் அந்த உருவத்தை அவர் காணச்சென்றார்.

பதம் 8.12.3
ஸபாஜிதோ பகவதா ஸாதரம் ஸோமயா பவ:
ஸூபவிஷ்ட உவாசேதம் ப்ரதிபூஜ்ய ஸ்மயம் ஹரிம்

ஸபாஜித:—நன்கு வரவேற்கப்பட்டார்; பகவதா—பரமபுருஷ பகவானான விஷ்ணுவால்; ஸ-ஆதரம்—பெரும் மரியாதையுடன் (சிவபெருமானுக்குப் பொருத்தமான); ஸ-உமயா—உமாவுடன்; பவ:—சம்பு (சிவபெருமான்); ஸு-உபவிஷ்ட:—ஓய்வாக அமர்ந்து; உவாச—கூறினார்; இதம்—இதை; ப்ரதிபூஜ்ய—மரியாதை வழங்கி; ஸ்மயன்—புன்னகையுடன்; ஹரிம்—பகவானிடம்.

பரமபுருஷ பகவான் சிவபெருமானையும், உமாவையும் மிகவும் மரியாதையுடன் வரவேற்றார். பிறகு வசதியாக அமர்ந்த பின், சிவபெருமான் பகவானை முறையாக வழிபட்டு, புன்னகையுடன் பின்வருமாறு பேசினார்.

பதம் 8.12.4
ஸ்ரீ-மஹாதேவ உவாச
தேவ-தேவ ஜகத்-வியாபிஞ் ஜகத்-ஈச ஜகன்-மய
ஸர்வேஷாம் அபி பாவானாம் த்வம் ஆத்மா ஹேதுர் ஈஸ்வர:

ஸ்ரீ-மஹாதேவ: உவாச—சிவபெருமான் (மகாதேவர்) கூறினார்; தேவ-தேவ—தேவர்களுக்கெல்லாம் மிகச்சிறந்த தேவரே; ஜகத்-வ்யாபின்—எங்கும் பரவியுள்ள இறைவனே; ஜகத்-ஈச—பிரபஞ்சத்தின் எஜமானரே; ஜகத்-மய—உமது சக்தியினால் இந்த சிருஷ்டியாகமாறியுள்ள எம்பெருமானே; ஸர்வேஷாம் அபி—எல்லா வகையான; பாவானாம்—சூழ்நிலைகளையும்; த்வம்—நீர்; ஆத்மா—இயக்கும் சக்தி; ஹேது:—என்பதனால்; ஈஸ்வர:—பரமபுருஷராகிய, பரமேஸ்வரராவீர்.

மகாதேவன் கூறினார்: தேவர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த தேவரே எங்கும் பரவியுள்ள இறைவனே, பிரபஞ்சத்தின் எஜமானரே, உமது சக்தியால் நீர் சிருஷ்டியாக விரிவடைந்திருக்கிறீர். அனைத்திற்கும் வேராகவும், சாமர்த்தியமுள்ள காரணமாகவும் இருப்பவர் நீரே. நீர் பெளதிகமானவரல்லர். உண்மையில், நீரே அனைத்திலும் உள்ள பரமாத்மா அல்லது பரம உயிர்ச் சக்தியாவீர். ஆகவே, நீரே எல்லா ஆளுனர்களுக்கும் பரம ஆளுனரான பரமேஸ்வரராவீர்.

பதம் 8.12.5
ஆதி-அந்தாவ் அஸ்ய யன் மத்யம் இதம் அன்யத் அஹம் பஹி:
யதோ ‘வ்யயஸ்ய நைதானி தத் ஸத்யம் ப்ரஹ்ம சித் பவான்

ஆதி—ஆரம்பமும்; அன்தௌ—முடிவும்; அஸ்ய—தோன்றியுள்ள இப்பிரபஞ்சத்தின் அல்லது பௌதிகமான, காணப்படக்கூடிய அனைத்தின்; யத்—எது ஒன்று; மத்யம்—ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் நடுவிலிருப்பதான பராமரிப்பு; இதம்—இப்பிரபஞ்ச தோற்றம்; அன்யத்—உம்மைத் தவிர மற்ற எதுவும்; அஹம் அஹம்—தப்பான மனக்கருத்து; பஹிஹ்—உமக்கு வெளியில்; யத:—என்பதால்; அவ்யயஸ்ய—முடிவற்றவர்; ந—இல்லை; ஏதானி—இவ்வெல்லா வேறுபாடுகளும்; தத்—அந்த; ஸத்யம்—பரம சத்தியம்; ப்ரஹ்ம—பரமன்; சித்—ஆன்மீகமான; பவான்—பெருமானாகிய நீரே.

பரமபுருஷராகிய உம்மிடமிருந்தே, தோன்றியது, தோன்றாதது, பொய் அகங்காரம், இப்பிரபஞ்ச தோற்றத்தின் ஆரம்பம், பராமரிப்பு மற்றும் அழிவு ஆகிய அனைத்தும் வருகின்றன. ஆனால் நீரே பரம சத்தியமும், பரம பூரணமான ஜீவாத்மாவும், பரப்பிரம்மனுமாக இருப்பதால், பிறப்பு, இறப்பு மற்றும் பராமரிப்பு ஆகிய இம்மாற்றங்கள் உம்மிடம் காணப்படுவதில்லை.

பதம் 8.12.6
தவைவ சரணாம்பொஜம் ஸ்ரேயஸ்-காமா நிரோசிஷ:
விஸ்ருஜ்யோபயத: ஸங்கம் முனய: ஸமுபாஸதே

தவ—உமது; ஏவ—உண்மையாகவே; சரண-அம்போஜம்—தாமரைப் பாதங்களில்; ஸ்ரேய:-காமா:—வாழ்வின் இறுதியான நோக்கத்தையும், முடிவான மங்களத்தையும் விரும்புபவர்கள்; நிராசிஷ:—பௌதிக ஆசைகள் இல்லாமல்; விஸ்ருஜ்ய—கைவிட்டு; உபயத:—இப்பிறவியிலும், அடுத்ததிலும்; ஸங்கம்—பற்று; முனய:—பெரும் முனிவர்கள்; ஸமுபாஸதே—வழிபடுகின்றனர்.

வாழ்வின் மிகவுயர்ந்த இலக்கை அடைய விரும்புபவர்களும், புலன்நுகர்வுக்கான பெளதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களுமான தூய பக்தர்கள் அல்லது சிறந்த புண்ணிய புருஷர்கள் உமது தாமரைப் பாதங்களின் தெய்வீகத் தொண்டில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ளனர்.

பதம் 8.12.7
த்வம் ப்ரஹ்ம பூர்ணம் அம்ருதம் விகுணம் விசோகம்
ஆனந்த-மாத்ரம் அவிகாரம் அனன்யத் அன்யத்
விஸ்வஸ்ய ஹேதுர் உதய-ஸ்திதி-ஸம்யமாணாம்
ஆத்மேஸ்வரஸ் ச தத்-அபேக்ஷதயானபேக்ஷ:

த்வம்—பெருமானாகிய நீர்; ப்ரஹ்ம—எங்கும் பரவி இருப்பவரான பரம சத்தியம்; பூர்ணம்—முற்றிலும் பூர்ணமானவர்; அம்ருதம்—ஒருபோதும் அழிக்கப்பட முடியாதவர்; விகுணம்—ஜட இயற்கைக் குணங்களிலிருந்து விடுபட்டு, தெய்வீக நிலையில் இருப்பவர்; விசோகம்—சோகம் இல்லாதவர்; ஆனந்த-மாத்ரம்—எப்பொழுதும் தெய்வீக ஆனந்தத்தில் இருப்பவர்; அவிகாரம்—மாற்றமற்றவர்; அனன்யத்—அனைத்திலிருந்தும் பிரிந்திருப்பவர்; அன்யத்—இருப்பினும் நீரே அனைத்துமாக இருக்கிறீர்; விஸ்வஸ்ய—பிரபஞ்ச தோற்றத்தின்; ஹேது:—காரணமாவீர்; உதய—துவக்கத்தின்; ஸதிதி—பராமரிப்பு; ஸம்யமானாம்—மேலும் பிரபஞ்ச தோற்றத்தின் பல்வேறு பிரிவுகளை ஆட்சிபுரியும் எல்லா ஆளுனர்களிலும்; ஆத்ம-ஈஸ்வர:—அனைவருக்கும் வழிகாட்டும் பரமாத்மா; ச—மேலும்; தத்-அபேக்ஷதயா—எல்லோரும் உம்மையே நம்பியுள்ளனர்; அனபேக்ஷ:—எப்பொழுதும் பூரண சுதந்திரம் உள்ளவர்.

எம்பெருமானே, நீரே அனைத்திலும் பூரணமான பரப்பிரம்மனாவீர் முற்றிலும் ஆன்மீகமானவராக இருப்பதால், நீரே நித்தியமானவரும், ஜட இயற்கைக் குணங்களிலிருந்து விடுபட்டவரும், முழுமையான தெய்வீக ஆனந்தம் கொண்டவருமாவீர். உண்மையில், உம்மிடம் துக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீரே எல்லாக் காரணங்களுக்கும் பரம காரணமாக இருப்பதால், நீர் இல்லையெனில் எதனாலும் நிலைத்திருக்க முடியாது. இருப்பினும், காரண விளைவு எனும் ஓர் உறவுமுறையில் உம்மிடமிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் ஆவோம். ஒருவிதத்தில் காரணமும், விளைவும் வெவ்வேறானவை என்பதே இதற்குக் காரணமாகும். படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலின் மூல காரணமும் நீரே. மேலும் எல்லா ஜீவராசிகளுக்கும் வரங்கள் அளிப்பவரும் நீரே. அனைவரும் தங்களுடைய செயல்களின் பலன்களுக்காக உம்மையே நம்பியுள்ளனர். ஆனால் நீர் எப்பொழுதும் சுதந்திரமானவராகவே இருக்கிறீர்.

பதம் 8.12.8
ஏகஸ் த்வம் ஏவ ஸத் அஸத் த்வயம் அத்வயம் ச
ஸ்வர்ணம் க்ருதாக்ருதம் இவேஹ ந வஸ்து-பேத:
அஞ்ஞானதஸ் த்வயி ஜனைர் விஹிதோ விகல்போ
யஸ்மாத் குண-வ்யதிகரோ நிருபாதிகஸ்ய

ஏக:—ஒருவரே; த்வம்—பெருமானாகிய நீர்; ஏவ—உண்மையில்; ஸத்—விளைவு எனும் உருவில் இருப்பது; அஸத்—காரணம் என்ற உருவில் இல்லாதிருப்பது; த்வயம்—இவ்விரண்டுமே; அத்வயம்—இருமை இல்லாமல்; ச—மேலும்; ஸவர்ணம்—தங்கம்; க்ருத—வேறுபட்ட வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள; ஆக்ருதம்—தங்கத்தின் ஆதி மூலம் (தங்கச் சுரங்கம்); இவ—போல்; இஹ—இவ்வுலகில்; ந—இல்லை; வஸ்து-பேத:—பொருளில் உள்ள வேறுபாடு; அக்ஞானத:—அறியாமையின் காரணத்தால் மட்டுமே; த்வயி—உமக்கு; ஜனை:—பாமர மக்களால்; விஹித:—அது செய்யப்பட வேண்டும்; விகல்ப:—வேறுபாடுகளின்; யஸ்மாத்—காரணத்தினால்; குண-வ்யதிகர:—ஜட இயற்கைக் குணங்களால் உண்டாக்கப்பட்ட வேறுபாடுகளிலிருந்து விடுபட்ட; நிருபாதிகஸ்ய—எவ்வித பௌதிக நோக்கமும் இல்லாமல்.

எம்பெருமானே, நீர் ஒருவரே காரணமும், விளைவுமாக இருக்கிறீர். ஆகவே, இரண்டாக நீர் காணப்பட்டாலும், நீரே இரண்டற்ற ஒன்றாவீர். ஒரு தங்க ஆபரணத்திலுள்ள தங்கத்திற்கும், சுரங்கத்திலுள்ள தங்கத்திற்கும் வேறுபாடு இல்லை என்பதைப் போலவே, காரணத்திற்கும் விளைவிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அவை இரண்டும் ஒன்றேதான். அறியாமையின் காரணத்தால்தான் மக்கள் வேறுபாடுகளையும், இருமைகளையும் கற்பிக்கின்றனர். ஜடக் களங்கத்திலிருந்து நீர் விடுபட்டவராவீர். மேலும் பிரபஞ்சம் முழுவதும் உம்மாலேயே விளைவிக்கப்பட்டுள்ளது. உம்மையன்றி அதனால் ஜீவித்திருக்க முடியாது. அது உமது உன்னதமான குணங்களின் ஒரு விளைவாகும். இவ்வாறாக “பிரம்மமே சத்தியம் (மெய்), உலகம் பொய்” என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

பதம் 8.12.9
த்வாம் ப்ரஹ்ம கேசித் அவயந்தி உத தர்மம் ஏகே
ஏகே பரம் ஸத்-அஸதோ: புருஷம் பரேசம்
அன்யே ‘வயந்தி நவ-சக்தி-யுதம் பரம் த்வாம்
கேசின் மஹா-புருஷம் அவ்யயம் ஆத்ம-தந்த்ரம்

த்வாம்—உம்மை; ப்ரஹ்ம—உயர்ந்த உண்மை, பரம சத்தியம், பிரம்மம்; கேசித்—சிலர், வேதாந்திகள் எனப்படும் மாயாவாதி பிரிவைச் சேர்ந்தவர்கள்; அவயந்தி—கருதுகின்றனர்; உத—நிச்சயமாக; தர்மம்—மதமாக; ஏகே—மற்றும் சிலர்; ஏகே—மற்றும் சிலர்; பரம்—உன்னதமான; ஸத்-அஸதோ:—காரண, விளைவு ஆகிய இரண்டிற்கும்; புருஷம்—பரமபுருஷரை; பரேசம்—பரம ஆளுனராக; அன்யே—மற்றவர்கள்; அவயந்தி—விவரிக்கின்றனர்; நவ-சக்தி-யுதம்—ஒன்பது வகையான சக்திகளைக் கொண்டிருப்பதால்; பரம்—உன்னதமான; த்வம்—உம்மை; கேசித்—சிலர்; மஹா-புருஷம்—பரமபுருஷ பகவான்; அவ்யயம்—சக்தியில் இழப்பு ஏற்படாத; ஆத்ம-தந்த்ரம்—பரம சுதந்திரம் வாய்ந்தவராக.

அருவவாத வேதாந்திகள் எனப்படுபவர்கள் உம்மை அருவ பிரம்மமாகக் கருதுகின்றனர். மீமாம்ஸக தத்துவவாதிகள் எனப்படும் மற்றவர்கள் உம்மை மதமாக மதிக்கின்றனர். ஸாங்க்ய தத்துவவாதிகள் உம்மை பிரகிருதிக்கும், புருஷருக்கும் அப்பாற்பட்டவரும், தேவர்களையும்கூட ஆளும் தெய்வீக புருஷருமாகப் போற்றுகின்றனர். பஞ்சராத்ரங்கள் எனப்படும் பக்தித் தொண்டின் விதிகளைப் பின்பற்றுபவர்கள், உம்மை ஒன்பது வகையான வெவ்வேறு சக்திகளைக் கொண்டவராக போற்றுகின்றனர். மேலும் பதஞ்சலி முனிவரைப் பின்பற்றுபவர்களான பதஞ்ஜல தத்துவவாதிகள், உம்மை ஒப்புயர்வற்ற, பூரண சுதந்திரமுள்ள முழுமுதற் கடவுளாகக் கருதுகின்றனர்.

பதம் 8.12.10
நாஹம் பராயுர் ரிஷயோ ந மரீசி-முக்யா
ஜானந்தி யத்-விரசிதம் கலு ஸத்வ-ஸர்கா:
யன்-மாயயா முஷித-சேதஸ ஈச தைத்ய-
மர்த்யாதய: கிம் உத சஸ்வத்-அபத்ர-வ்ருத்தா:

ந—எவருமில்லை; அஹம்—நான்; பர-ஆயு:—லட்சக்கணக்கான ஆண்டுகள் வாழ்பவரான அந்நபர் (பிரம்ம தேவர்); ரிஷய:—ஏழு கிரகங்களின் ஏழு ரிஷிகள்; நா—அல்லது; மரீசி-முக்யா:—மரீசி முதலான; ஜானந்தி—அறிய; யத்—எவரால் (பரமபுருஷர்); விரசிதம்—படைக்கப்பட்டதான இப்பிரபஞ்சம்; கலு—உண்மையில்; ஸத்வ-ஸர்கா:—பெளதிகமான நற்குணத்தில் பிறந்ததாக இருப்பினும்; யத்-மாயயா—யாருடைய சக்தியின் ஆதிக்கத்தால்; முஷித-சேதஸ:—அவர்களின் இதயங்கள் குழப்பமடைந்துள்ளன; ஈச—எம்பெருமானே; தைத்ய—அசுரர்களையும்; மர்த்ய-ஆதய:—மனிதர்களையும், மற்றவர்களையும்; கிம் உத—என்னவென்று சொல்வது; சஸ்வத்—எப்பொழுதும்; அபத்ர-வ்ருத்தா:—ஜட இயற்கையின் கீழான குணங்களால் வசீகரிக்கப்பட்ட.

எம்பெருமானே, தேவர்களில் மிகச்சிறந்தவனாகக் கருதப்படும் நான், பிரம்மதேவர் மற்றும் மரீச்சி முதலான பெரும் ரிஷிகள் ஆகியோர் நற்குணத்தில் பிறந்தவர்களாவோம். ஆயினும், நாங்கள் உமது மாயா சக்தியினால் தடுமாற்றமடைந்து, இந்த சிருஷ்டி எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறோம். நாங்கள் ஒருபுறம் இருக்க, ஜட இயற்கையின் கீழான குணங்களில் (தீவிர குணம் மற்றும் அறியாமைக் குணம்) இருக்கும் அசுரர்களையும், மனிதர்களையும் போன்ற மற்றவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது? அவர்கள் உம்மை எப்படி அறிவார்கள்?

பதம் 8.12.11
ஸ த்வம் ஸமீஹிதம் அத: ஸ்திதி-ஜன்ம-நாசம்
பூதேஹிதம் ச ஜகதோ பவ-பந்த-மோக்ஷெள
வாயுர் யதா விசதி கம் ச சராசராக்யம்
ஸர்வம் தத்-ஆத்மகதயாவகமோ ‘வருந்த்ஸே

ஸ—சிவபெருமானாகிய நீர்; த்வம்—பரமபுருஷ பகவானாவீர்; ஸமீஹிதம்—(உம்மால்) படைக்கப்பட்டுள்ளதான; அத:—இந்த ஜடப் பிரபஞ்ச தோற்றத்தின்; ஸ்திதி-ஜன்ம-நாசம்—படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல்; பூத—ஜீவராசிகளின்; ஈஹிதம் ச—மற்றும் வேறுபட்ட செயல்கள் அல்லது முயற்சிகள்; ஜகத:—முழு உலகின்; பவ-பந்த-மோக்ஷெள—ஜட சிக்கல்களிலிருந்து விடுபடுவதும், அதனால் பந்திக்கப்படுவதும்; வாயு—காற்று; யதா—போன்று; விசதி—புகுவதை; கம்—பரந்த ஆகாயத்தில்; ச—மேலும்; சர-அசர-ஆக்யம்—மற்றும் அசைவன, அசையாதன ஆகிய அனைத்தும்; ஸர்வம்—அனைத்தும்; தத்—அந்த; ஆத்மகதயா—உமது இருப்பின் காரணத்தால்; அவகம:—அனைத்தும் நீர் அறிந்ததே; அவருந்த்ஸே—நீர் எங்கும் பரவியிருப்பதால் அனைத்தையும் அறிந்தவராவீர்.

எம்பெருமானே, நீர் பரம அறிவின் சொரூபமாவீர். நீர் இப்படைப்பின் துவக்கம், பராமரிப்பு மற்றும் அழிவு ஆகியவற்றைப் பற்றிய அனைத்தையும் அறிவீர், ஜீவராசிகளின் அனைத்து முயற்சிகளையும் கூட நீர் அறிவீர். இம்முயற்சிகளால்தான் ஜீவராசிகளுக்கு இவ்வுலகில் பந்தமோ அல்லது இவ்வுலகிலிருந்து விடுதலையோ கிடைக்கிறது. காற்றானது, பரந்த ஆகாயத்திலும், அசையும், அசையாத ஜீவன்களின் உடல்களிலும் நுழைவதைப் போலவே, நீர் எங்கும் பரவியிருக்கிறீர். ஆகவே, நீரே எல்லோரையும் அறிபவர் ஆவீர்.

பதம் 8.12.12
அவதாரா மயா த்ருஷ்டா ரமமாணஸ்ய தே குணைய:
சோ ‘ஹம் தத் த்ரஷ்டும் இச்சாமி யத் தே யோஷித்-வபுர் த்ருதம்

அவதாரா:—அவதாரங்களை; மயா—என்னால்; த்ருஷ்டா:—காணப்பட்டது; ரமமாணஸ்ய—உமது அநேக திருவிளையாடல்களை நீர் செய்து காட்டும் போது; தே—உமது; குணைய:—தெய்வீக குணங்களின் தோற்றங்களால்; ஸ:—சிவபெருமான்; அஹம்—நான்; தத்—அந்த அவதாரத்தையும்; த்ரஷ்டும் இச்சாமி—காண விரும்புகிறேன்; யத்—எந்த; தே—உமது; யோஷித்-வபு:—ஒரு பெண்ணின் உடல்; த்ருதம்—ஏற்றுக் கொள்ளப்பட்ட.

எம்பெருமானே, உமது தெய்வீக குணங்களால் நீர் மேற்கொண்ட எல்லாவகையான அவதாரங்களையும் நான் கண்டிருக்கிறேன். இப்போது நீர் ஒரு அழகிய இளம் மங்கையாக தோன்றியிருக்கிறீர். உமது அந்த உருவை நான் காண விரும்புகிறேன்.

பதம் 8.12.13
யேன ஸம்மோஹிதா தைத்யா: பாயிதாஸ் சாம்ருதம் ஸுரா:
தத் தித்ருக்ஷவ ஆயாதா: பரம் கௌதூஹலம் ஹி ந:

யேன—அத்தகையதோர் அவதாரத்தால்; ஸம்மோஹிதா:—வசியம் செய்யப்பட்டனர்; தைத்யா:—அசுரர்கள்; பாயிதா:—பருகும்படி செய்யப்பட்டனர்; ச—கூட; அம்ருதம்—அமிர்தத்தை; ஸுரா:—தேவர்கள்; தத்—அந்த உருவத்தை; தித்ருக்ஷவ:—காண விரும்பி; ஆயாதா:—நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்; பரம்—மிகவும்; கௌதூஹலம்—பெரும் ஆவலுடன்; ஹி—உண்மையில்; ந:—எங்களுடைய.

எம்பெருமானே, அசுரர்களை முற்றிலும் வசியப்படுத்தி, அமிர்தத்தை தேவர்கள் மட்டும் பருகச் செய்வதற்காக ஒரு ரூபத்தை நீர் மேற்கொண்டீர். அந்த ரூபத்தைக் காணும் ஆவலுடன்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். அந்த ரூபத்தைக் காண நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்.

பதம் 8.12.14
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் அப்யர்திதோ விஷ்ணுர் பகவான் சூல-பாணினா
ப்ரஹஸ்ய பாவ-கம்பீரம் கிரிசம் ப்ரத்யபாஷத

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்விதமாக; அப்யர்தித:—கேட்டுக் கொள்ளப்பட்டதால்; விஷ்ணு:-பகவான்—முழுமுதற் கடவுளாகிய பகவான் விஷ்ணு; சூல-பாணினா—கையில் ஒரு திரிசூலத்தை ஏந்தியிருக்கும் சிவபெருமானால்; ப்ரஹஸ்ய—புன்னகை செய்து; பாவ-கம்பீரம்—கம்பீரமான பாவத்துடன்; கிரிசம்—சிவபெருமானிடம்; ப்ரத்யபாஷத—பதில் கூறினார்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கையில் ஒரு திரிசூலத்தை வைத்திருப்பவரான சிவபெருமான் பகவான் விஷ்ணுவை இவ்வாறு வேண்டிக்கொண்டபோது, அவரும் கம்பீரமாக புன்னகை செய்து, சிவபெருமானிடம் பின்வருமாறு பதில் கூறினார்.

பதம் 8.12.15
ஸ்ரீ-பகவான் உவாச
கௌதூஹலாய தைத்யானாம் யோஷித்-வேஷோ மயா த்ருத:
பஸ்யதா-ஸுர-கார்யாணி கதே பியூஷ-பாஜனே

ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷ பகவான் கூறினார்; கௌதூஹலாய—குழப்புவதற்காக; தைத்யாணாம்—அசுரர்களின்; யோஷித்-வேஷ:—ஓர் அழகிய பெண்ணின் உருவம்; மயா—என்னால்; த்ருத:—ஏற்கப்பட்டது; பஸ்யதா—எனக்கு அது அவசியமாக இருந்ததைக் கண்டு; ஸுர-கார்யாணி—தேவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு; கதே—அபகரிக்கப்பட்டு; பீயூஷ-பாஜனே—அமிர்த கலசம்.

பரமபுருஷ பகவான் கூறினார்: அமிர்த கலசத்தை அசுரர்கள் அபகரித்துச் சென்றபோது, அவர்களை ஏமாற்றிக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக ஓர் அழகிய பெண்ணின் உருவத்தை நான் ஏற்றேன். இவ்வாறாக அது தேவர்களின் விருப்பத்திற்கு உடன்பாடான செயலாயிற்று.

பதம் 8.12.16
தத் தே ‘ஹம் தர்சயிஷ்யாமி தித்ருக்ஷோ: ஸுர-ஸத்தம
காமினாம் பஹு மந்தவ்யம் ஸங்கல்ப-ப்ரபவோதயம்

தத்—அதை; தே—உமக்கு; அஹம்—நான்; தர்சயிஷ்யாமி—காட்டப்போகிறேன் தித்ருக்ஷோ:—காண விரும்புவதால்; ஸுர-ஸத்தம—தேவர்களில் சிறந்தவரே; காமினாம்—அதிக காம இச்சை கொண்டவர்களின்; பஹு—அதிகமான; மந்தவ்யம்—மதிக்கத்தக்க ஒரு பொருள்; ஸங்கல்ப—காம இச்சைகள்; ப்ரபவ-உதயம்—பலமாக எழச் செய்யும்.

தேவர்களில் சிறந்தவரே, காம இச்சை கொண்டவர்களால் பெரிதும் போற்றப்படும் என்னுடைய அந்த உருவத்தை இப்போது உமக்குக் காட்டுகிறேன். நீர் அந்த உருவத்தைக் காண விரும்புவதால், உமக்கு முன்னிலையில் அதை நான் வெளிப்படுத்துகிறேன்.

பதம் 8.12.17
ஸ்ரீ-சுக உவாச
இதி ப்ருவாணோ பகவாம்ஸ் தத்ரைவாந்தரதீயத
ஸர்வதஸ் சார்யம்ஸ் சக்ஷீர் பவ ஆஸ்தே ஸஹோமயா

ஸ்ரீ சுக: உவாச:—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ப்ருவாண:—பேசிக் கொண்டிருக்கும் பொழுது; பகவான்—முழுமுதற் கடவுளாகிய பகவான் விஷ்ணு; தத்ர—அங்கு; ஏவ—உடனே; அந்தரதீயத—சிவபெருமான் மற்றும் அவரது சகாக்களின் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார்; ஸர்வத:—எல்லா இடங்களிலும்; சாரயன்—அசையும்; சக்ஷு:—கண்கள்; பவ:—சிவபெருமான்; ஆஸ்தே—வீற்றிருந்தார்; ஸஹ-உமயா—அவரது மனைவியான உமாவுடன்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறு பேசியபின், பரமபுருஷ பகவானாகிய விஷ்ணு, உடனே மறைந்துவிட்டார். அவரைத் தேடி, அசையும் கண்களுடன் சுற்றிலும் பார்த்தவாறு, சிவபெருமான் உமையுடன் அங்கேயே வீற்றிருந்தார்.

பதம் 8.12.18
ததோ ததர்சோபவனே வர-ஸ்த்ரியம்
விசித்ர-புஷ்பாருண பல்லவ-த்ருமே
விக்ரீடதீம் கந்துக-லீலயா லஸத்-
துகூல-பர்யஸ்த-நிதம்ப-மேகலாம்

தத:—அதன்பிறகு; ததர்ச—சிவபெருமான் கண்டார்; உபவனே—ஓர் அழகிய வனத்தில்; வர-ஸத்ரியம்—மிகவும் அழகான ஒரு பெண்ணை; விசித்ர—பல வகைப்பட்ட; புஷ்ப—புஷ்பங்கள்; அருண—இளஞ்சிவப்பு; பல்லவ—இலைகள்; த்ருமே—மரங்களுக்கு நடுவே; விக்ரீடதீம்—விளையாடிக் கொண்டிருந்தாள்; கந்துக—ஒரு பந்துடன்; லீலயா—விளையாடும் லீலைகளால்; லஸத்—மின்னும்; துகூல—சேலையால்; பர்யஸ்த—மறைக்கப்பட்ட; நிதம்ப—அவளது இடுப்பின் மீது; மேகலாம்—ஒரு கச்சையை அணிந்தவாறு.

அதன்பிறகு, இளஞ்சிவப்பு இலைகளையும், பலவகையான புஷ்பங்களையும் கொண்ட மரங்களடர்ந்த, அருகிலுள்ள ஓர் அழகிய வனத்தில் ஓர் அழகிய மங்கை ஒரு பந்துடன் விளையாடிக் கொண்டிருப்பதை சிவபெருமான் கண்டார். அவளது இடுப்பு மினுமினுப்பான சேலையால் மறைக்கப்பட்டு, ஒரு கச்சையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பதம் 8.12.19
ஆவர்தனோத்வர்தன-கம்பித-ஸ்தன-
ப்ரக்ருஷ்ட-ஹாரோரு-பரை: பதே பதே
ப்ரபஜ்யமானாம் இவ மத்யதஸ் சலத்-
பத-ப்ரவாலம் நயதீம் ததஸ் தத:

ஆவர்தன—கீழே விழும்; உத்வர்தன—பிறகு மேலே எழும்பும்; கம்பித—நடுங்கும்; ஸ்தன—இரு மார்பகங்களின்; ப்ரக்ருஷ்ட—அழகிய; ஹார—மற்றும் மாலைகளின்; உரு-பரை:—பாரத்தின் காரணத்தால்; பதே பதே—ஒவ்வொரு அடியிலும்; ப்ரபஜ்யமானாம் இவ—உடைந்துவிடுமோ என்பது போல; மத்யத:—உடலின் நடுப்பாகத்தில்; சலத்—அவ்வாறு அசையும்; பத-ப்ரவாலம்—பவளத்தைப் போன்ற சிவந்த பாதங்கள்; நயதீம்—அசையும்; தத: தத—இங்குமங்கும்.

பந்து கீழே விழுந்தும், மேலே எழும்பியவாறும் இருந்ததால், அதனுடன் விளையாடிக் கொண்டிருந்த அவளது மார்பகங்கள் அசைந்தாடின. பவளத்தைப் போல் சிவந்திருந்த அவளது இரு மென்மையான பாதங்கள் இங்குமங்கும் அசைந்தபோது, அவளது அந்த மார்பகங்களின் பாரத்தாலும், மலர் மாலைகளின் பாரத்தாலும், ஒவ்வொரு அடியிலும் அவளது இடுப்பு உடைந்து விடுமோ என்பது போல் தோன்றியது.

பதம் 8.12.20
திக்ஷு ப்ரமத்-கந்துக-சாபலைர் ப்ருசம்
ப்ரோத்விக்ன-தாராயத-லோல-லோசனாம்
ஸ்வ-கர்ண-விப்ராஜித-குண்டலோல்லஸத்-
கபோல-நீலாலக-மண்டிதானனாம்

திக்ஷு—எல்லாத் திசைகளிலும்; ப்ரமத்—அசையும்; கந்துக—பந்தின்; சாபரை:—அமைதியற்ற தன்மை; ப்ருசம்—அடிக்கடி; ப்ரோத்விக்ன—ஆவல் நிரம்பிய; தார—கண்கள்; ஆயத—அகலமான; லோல—அமைதியற்ற; லோசனாம்—அத்தகைய கண்களுடன்; ஸ்வ-கர்ண—அவளது சொந்த இரு செவிகளில்; விப்ராஜித—பிரகாசிக்கும்; குண்டல—தோடுகள்; உள்ளஸத்—ஒளி வீசும்; கபோல—கன்னங்கள்; நீல—நீலம் தோய்ந்த; அலக—கூந்தலுடன்; மண்டித—அலங்கரிக்கப்பட்டிருந்தது; ஆனனாம்—முகம்.

அப்பெண்ணின் முகம் அகலமான, அழகிய, அமைதியற்ற கண்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவளது கரத்திலிருந்து பந்து இங்குமங்குமாக குதித்து ஓடுவதற்கேற்ப அவளுடைய கண்களும் அமைந்தன. அவளது செவிகளிலிருந்த பிரகாசமான இரு தோடுகள், நீலநிற பிரதிபலிப்புகளைப் போல் ஒளிவீசும் அவளது கன்னங்களை அலங்கரித்தன. மேலும் அவளது முகத்தின் மீது படர்ந்திருந்த கூந்தல் அவளை இன்னும் அழகுடையவளாகச் செய்தது.

பதம் 8.12.21
ஸ்லகத் துகூலம் கபரீம் ச விச்யுதாம்
ஸன்னஹ்யதீம் வாம-கரேண வல்குணா
வினிக்னதீம் அன்ய-கரேண கந்துகம்
விமோஹயந்தீம் ஜகத்-ஆத்ம-மாயயா

ஸ்லக்த்—நழுவும் அல்லது தளரும்; துகூலம்—சேலை; கபரீம் ச—மற்றும் தலை மீதீருந்த கூந்தல்; விச்யுதாம்—அவிழ்ந்து, சிதறியதால்; ஸன்னஹ்யதீம்—முடிச்சிட முயன்று; வாம-கரேண—இடது கரத்தால்; வல்குனா— மிகவும் அழகுடன் கூடிய கவர்ச்சி; வினிக்னதீம்—அடிக்கும்; அன்ய-கரேண—வலது கரத்தால்; கந்துகம்—பந்தை; விமோஹயந்தீம்—இவ்விதமாக அனைவரையும் வசியப்படுத்தி; ஜகத்—முழு உலகையும்; ஆத்ம-மாயயா—ஆன்மீக ஆற்றலாகிய, அந்தரங்க சக்தியால்.

பந்துடன் அவள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, அவளது உடலை மறைத்திருந்த சேலை தளர்ந்ததுடன், அவளது கூந்தலும் சிதறியது. கூந்தலை அவள் தமது அழகிய இடது கரத்தால் முடிச்சிட முயன்றாள். அதே சமயத்தில் தமது வலது கரத்தால் பந்தை அடித்து அதனுடன் விளையாடவும் தலைப்பட்டாள். இது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இவ்விதமாக பரமபுருஷர் தமது அந்தரங்க சக்தியின் மூலமாக அனைவரையும் வசியப்படுத்தினார்.

பதம் 8.12.22
தாம் வீக்ஷ்ய தேவ இதி கந்துக-லீலயேஷத்
வ்ரீடாஸ்புட-ஸ்மித-விஸ்ருஷ்ட-கடாக்ஷ-முஷ்ட:-
ஸ்த்ரீ-ப்ரேக்ஷண-ப்ரதிஸமீக்ஷண-விஹ்வலாத்மா
நாத்மானம் அந்திக உமாம் ஸ்வ-கணாம்ஸ் ச வேத

தாம்—அவளை; வீக்ஷ்ய—கவனித்த பின்; தேவ:—சிவபெருமான் (சம்பு); இதி—இவ்விதமாக; கந்துக-லீலயா—பந்துடன் விளையாடுவதன் மூலமாக; ஈஷத்—சிறிது; வ்ரீடா-நாணத்தால்; அஸ்புட—அவ்வளவு தெளிவாக இல்லாத; ஸ்மித—புன்னகையுடன்; விஸ்ருஷ்ட—அனுப்பப்பட்ட; கடாக்ஷ-முஷ்ட:—பார்வையால் வெல்லப்பட்ட; ஸத்ரீ-ப்ரேக்ஷண—அழகிய அம்மங்கையைக் காண்பதன் மூலமாக; ப்ரதிஸமீக்ஷண—அவளால் அடிக்கடி பார்க்கப்பட்டதால்; விஹ்வல-ஆத்மா—அவரது மனம் குழப்பம் அடைந்தது; ந—இல்லை; ஆத்மானம்—அவராகவே; அந்திகே—அருகில் (உள்ள); உமாம்—அவரது மனைவியான, தாய் உமாவையும்; ஸ்வ-கணான் ச—அவரது சகாக்களையும்; வேத—சிவபெருமானால் புரிந்து கொள்ள முடிந்தது.

பந்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த அழகிய மங்கையை சிவபெருமான் கவனித்துக் கொண்டிருக்கும் போது, அவளும் அவ்வப்போது அவரைப் பார்த்து நாணத்தால் இலேசாக புன்னகை செய்தாள். இவர் அழகிய அம்மங்கையை நோக்க, அவளும் இவரை நோக்க, இவர் தம்மையே மறந்ததுடன், தமது மிகவும் அழகிய மனைவியான உமாவையும், அருகிலுள்ள அவரது சகாக்களையும் கூட மறந்து போனார்.

பதம் 8.12.23
தஸ்யா: கராக்ரத் ஸ து கந்துகோ யதா
கதோ விதூரம் தம் அனுவ்ரஜத்-ஸ்த்ரியா:
வாஸ: ஸஸூத்ரம் லகு மாருதோ ‘ஹரத்
பவஸ்ய தேவஸ்ய கிலானுபஸ்யத:

தஸ்யா:—அழகிய பெண்ணின்; கர-அக்ராத்—கரத்திலிருந்து; ஸ:—அந்த; து—ஆனால்; கந்துக:—பந்து; யதா—எப்போது; கத:—சென்றுவிட்ட; விதூரம்—தூரத்தில்; தம்—அப்பந்தை; அனுவ்ரஜத்—பின்தொடர ஆரம்பித்தாள்; ஸ்த்ரியா:—அம்மங்கையின்; வாஸ:—மேலாடை; ஸ-ஸூத்ரம்—கச்சையுடன்; லகு—மிகவும் மெல்லியதாக இருந்த காரணத்தால்; மாருத:—இளங்காற்று; அஹரத்—தூரமாக ஊதித் தள்ளியது; பவஸ்ய—அச்சமயம் சிவபெருமான்; தேவஸ்ய—தேவர்களின் தலைவரான; கில—உண்மையில்; அனுபஸ்யத:—எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருந்தார்.

பந்து அவளது கையிலிருந்து குதித்துச் சென்று தூரத்தில் விழுந்த போது, அப்பெண் அதைப் பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். ஆனால் இச்செயல்களை சிவபெருமான் கவனித்துக் கொண்டு இருக்கும்போது, அவளை மறைத்திருந்த மெல்லிய உடையையும், கச்சையும் இளங்காற்று ஒன்று தீடீரென்று தூரமாக ஊதித் தள்ளியது.

பதம் 8.12.24
ஏவம் தாம் ருசி ராபாங்கீம் தர்சனீயாம் மனோரமாம்
த்ருஷ்ட்வா தஸ்யாம் மனஸ் சக்ரே விஷஜ்ஜந்த்யாம் பவ: கில

ஏவம்—இவ்வாறாக; தாம்—அவளை; ருசிர-அபாங்கீம்—எல்லா கவர்ச்சியான அம்சங்களையும் கொண்ட; தர்சனீயாம்—காண்பதற்கு இன்பமளிக்கும்; மனோரமாம்—அழகாக வடிவமைக்கப்பட்ட; த்ருஷ்ட்வா—கண்டு; தஸ்யாம்—அவள் மீது; மன-சக்ரே—எண்ணினார்; விஷஜ்ஜந்த்யாம்—அவரால் கவரப்பட்டதாக; பவ:—சிவபெருமான்; கில—உண்மையில்.

அப்பெண்ணின் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக சிவபெருமான் அப்பெண்ணை நோக்க, அழகிய அப்பெண்ணும் அவரை நோக்கினாள். ஆகவே, தன்னால் அவள் கவரப்பட்டிருக்கிறாள் என்றெண்ணி, சிவபெருமான் அவளால் மிகவும் கவரப்பட்டவரானார்.

பதம் 8.12.25
தயாபஹ்ருத-விக்ஞானஸ் தத்-க்ருத-ஸ்மர-விஹ்வல:
பவான்யா அபி பஸ்யந்த்யா கத-ஹ்ரீஸ் தத்-பதம் யயௌ

தயா—அவளால்; அபஹ்ருத—பறிக்கப்பட்டது; விக்ஞான:—நல்லறிவு; தத்-க்ருத—அவளால் செய்யப்பட்டது; ஸ்மர—புன்னகையால்; விஹ்வல:—அவளிடம் பித்துக் கொண்டவரால்; பவான்யா:—சிவபெருமானின் மனைவியான பவானி; அபி—என்ற போதிலும்; பஸ்யந்த்யா:—இச்சம்பவங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்; கத-ஹ்ரீ:—சிறிதும் வெட்கமில்லாமல்; தத்-பதம்—அவளிருந்த இடத்தை நோக்கி; யயௌ—சென்றார்.

அவளுடன் சுகம் அனுபவிக்க வேண்டும் எனும் காம இச்சைகளினால் தீவிர பித்துப் பிடித்தவராக சிவபெருமான், அப்பெண்ணிடம் தமது நற்புத்தியைப் பறிகொடுத்தார். இவ்வாறாக பவானியின் முன்னிலையிலேயே அவளை நெருங்கவும் அவர் தயங்கவில்லை.

பதம் 8.12.26
ஸா தம் ஆயாந்தம் ஆலோக்ய விவஸ்த்ரா வ்ரீடிதா ப்ருசம்
நிலீயமானா வ்ருக்ஷேக்ஷு ஹஸந்தீ நான்வதிஷ்டத

ஸா—அப்பெண்; தம்—சிவபெருமானை; ஆயாந்தம்—அருகில் வந்து கொண்டிருந்தவரான; ஆலோக்ய—கண்டு; விவஸ்த்ரா—அவள் நிர்வாணமாக இருந்தாள்; வ்ரீடிதா—மிகவும் வெட்கத்துடன்; ப்ருசம்—மிகவும்; நிலீயமானா—ஒளிந்து கொண்டாள்; வ்ருக்ஷேக்ஷு—மரங்களுக்கிடையில்; ஹஸந்தீ—புன்னகையுடன்; ந அன்வதிஷ்டத—ஓரிடத்தில் இருக்கவில்லை.

அழகிய அப்பெண் அவர் முன்பே நிர்வாணமாக இருந்தாள். மேலும் தம்மை நோக்கி சிவபெருமான் வருவதைக் கண்ட அவள், மிகவும் கூச்சமடைந்தாள். இவ்வாறாக தொடர்ந்து புன்னகை செய்தவாறு இருந்த அவள், மரங்களுக்கிடையில் தம்மை ஒளித்துக் கொண்டதுடன், ஒரே இடத்தில் நிற்கவும் இல்லை.

பதம் 8.12.27
தாம் அன்வகச்சத் பகவான் பவ: ப்ரமுஷிதேந்ரிய:
காமஸ்ய ச வசம் நீத: கரேணும் இவ யூதப:

தாம்—அவளை; அன்வகச்சத்—பின் தொடர்ந்தார்; பகவான்—சிவபெருமான்; பவ:—பவ எனப்படும்; ப்ரமுஷித-இந்ரிய:—அவரது இந்திரியங்கள் சலனமடைந்து; காமஸ்ய—காம இச்சைகளின்; ச—மேலும்; வசம்—வசப்பட்ட; நீத:—அவ்வாறாகி; கரேணும்—பெண் யானையொன்று; இவ—போலவே; யூதப:—ஆண் யானையொன்று.

காமத்துக்கு வசியமான யானையொன்று ஒரு பெண் யானையைப் பின் தொடர்ந்து செல்வதைப் போலவே, புலன்கள் சலனம் அடையப்பெற்ற சிவபெருமான், காம இச்சைகளின் வசப்பட்டவராய், அவளைப் பின்தொடர ஆரம்பித்தார்.

பதம் 8.12.28
ஸோ ‘நுவ்ரஜ்யாதிவேகேன க்ருஹீத்வானிச்சதீம் ஸ்த்ரியம்
கேச-பந்த உபானீய பாஹுப்யாம் பரிஷஸ்வஜே

ஸ:—சிவபெருமான்; அனுவ்ரஜ்ய—அவளைப் பின்தொடர்ந்து சென்று; அதி-வேகேன—மிகவும் வேகமாக; க்ருஹீத்வா—பற்றி; அனிச்சதீம்—கைப்பற்றப்படுவதை அவள் விரும்பவில்லை என்ற போதிலும்; ஸ்த்ரியம்—அப்பெண்; கேச-பந்தே—கூந்தலின் முடிச்சியால்; உபானீய—அவளை அருகில் இழுத்து; பாஹுப்யாம்—அவரது கரங்களால்; பரிஷஸ்வஜே—அவளை கட்டித் தழுவினார்.

மிகவும் வேகமாக அவளைப் பின் தொடர்ந்து சென்ற சிவபெருமான், பின்னப்பட்டிருந்த அவளது கூந்தலைப் பற்றி தமக்கருகில் இழுத்தார். அவள் அதை விரும்பவில்லை என்ற போதிலும், அவர் தமது கரங்களால் அவளை கட்டித் தழுவினார்.

பதங்கள் 8.12.29 – 8.12.30
ஸோபகூடா பகவதா கரிணா கரிணீ யதா
இதஸ் தத: ப்ரஸர்பந்தீ விப்ரகீர்ண-சிரோருஹா

ஆத்மானம் மோசயித்வாங்க ஸுரர்ஷப-புஜாந்தராத்
ப்ராத்ரவத் ஸா ப்ருது-ஸ்ரோணீ மாயா தேவ-வினிர்மிதா

ஸா—அப்பெண்; உபகூடா—கைப்பற்றி, தழுவிக் கொள்ளப்பட்ட; பகவதா—சிவபெருமானால்; கரிணா—ஓர் ஆண் யானையால்; கரிணீ—ஒரு பெண் யானை; யதா—போல்; இத: தத:—இங்குமங்குமாக; ப்ரஸர்பந்தீ—ஒரு பாம்பைப்போல் சுழலும்; விப்ரகீர்ண—சிதறிய; சிரோருஹா—அவளது தலையிலுள்ள கூந்தல் அனைத்தும்; ஆத்மானம்—அவளாகவே; மோசயித்வா—விடுவித்துக் கொண்டு; அங்க—ராஜனே; ஸுர-ரிஷப—தேவர்களில் சிறந்தவரின் (சிவபெருமான்); புஜ-அந்தராத்—கரங்களின் அணைப்பிலிருந்து; ப்ராத்ரவத்—மிகவும் வேகமாக ஒடத்துவங்கினாள்; ஸா—அவள்; ப்ருது-ஸ்ரோணீ—மிகப் பெரிய இடுப்புகளுடன்; மாயா—யோக மாயா (அந்தரங்க சக்தி); தேவ-வினிர்மிதா—பரமபுருஷ பகவானால் வெளிப்படுத்தப்பட்ட.

பெண் யானையொன்று ஓர் ஆண் யானையால் தழுவப்படுவதைப் போலவே, சிவபெருமானால் அப்பெண் தழுவிக் கொள்ளப்பட்டாள். இதனால் இங்கு மங்குமாக சிதறிக் கிடந்த அவளது கூந்தல் ஒரு பாம்பைப் போல் சுழன்றது. ராஜனே, மிகப்பெரிய, உயர்ந்த இடுப்புகளைக் கொண்ட அவள் யோக மாயையினாலான ஒரு பெண்ணாவாள். அவள் முழுமுதற் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டவள் ஆவாள். எப்படியோ அவள் தன்னை சிவபெருமானின் அன்பான அணைப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு விலகி ஒடினாள்.

பதம் 8.12.31
தஸ்யாஸௌ பதவீம் ருத்ரோ விஷ்ணோர் அத்புத-கர்மண:
ப்ரத்யபத்யத காமேன வைரிணேவ வினிர்ஜித:

தஸ்ய—பரமபுருஷராகிய; அஸௌ—சிவபெருமான்; பதவீம்—இடம்; ருத்ர:—சிவபெருமான்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; அத்புத-கர்மண:—மிகவும் அற்புதமாக செயற்படுபவரான அவரது; ப்ரத்யபத்யத—பின்தொடர ஆரம்பித்தார்; காமேன—காம இச்சைகளினால்; வைரிணா இவ-வினிர்ஜித:—ஓர் எதிரியால் அலைக்கழிக்கப்பட்டது போல்.

காம இச்சைகளின் வடிவிலுள்ள ஓர் எதிரியால் அலைக்கழிக்கப்பட்டதுபோல், சிவபெருமான், மிகவும் அற்புதமாகச் செயற்படுபவரும், மோஹினி ரூபத்தை ஏற்றவருமான பகவான் விஷ்ணுவின் வழியைப் பின்தொடர்ந்து சென்றார்.

பதம் 8.12.32
தஸ்யானுதாவதோ ரேதஸ் சஸ்கந்தாமோக-ரேதஸ:
கஷ்மிணோ யூதபஸ்யேவ வாஸிதாம் அனுதாவத:

தஸ்ய—அவரது (சிவபெருமானின்); அனுதாவத:—பின்தொடர்ந்து சென்ற; ரேத:—விந்து; சஸ்கந்த—வெளிப்பட்டது; அமோக-ரேதஸ:—யாரொருவர் பாய்ச்சிய விந்து ஒரு போதும் வீணாவதில்லையோ அந்த நபரின்; கஷ்மிண:—வெறிபிடித்த; யூதபஸ்ய—ஓர் ஆண் யானையை; இவ—போல்; வாஸிதாம்—கருதரிக்கச் செய்யக்கூடிய ஒரு பெண் யானையை; அனுதாவத:—பின்தொடர்ந்து

கருதரிக்கச் செய்யக்கூடிய ஒரு பெண் யானையை காம வெறிபிடித்த ஆண் யானையொன்று பின் தொடர்வதைப்போலவே, அழகிய அப்பெண்ணை சிவபெருமான் பின் தொடர்ந்து சென்றார். அவரது விந்து ஒருபோதும் வீணாவதில்லை என்றாலும், அவரது விந்து வெளிப்பட்டது.

பதம் 8.12.33
யத்ர யத்ராபதன் மஹ்யாம் ரேதஸ் தஸ்ய மஹாத்மன:
தானி ரூப்யஸ்ய ஹேம்னஸ் ச க்ஷேத்ராணி ஆஸன் மஹீ-பதே

யத்ர—எங்கெல்லாம்; யத்ர—மற்றும் எங்கெல்லாம்; அபதத்—விழுந்ததோ; மஹ்யாம்—பூமியின் மீது; ரேத:—விந்து; தஸ்ய—அவரது; மஹா-ஆத்மன:—சிறந்த புருஷரின் (சிவபெருமானின்); தானி—அவ்விடங்கள் அனைத்தும்; ரூபயஸ்ய—வெள்ளியின்; ஹேம்ன:—தங்கத்தின்; ச—மேலும்; க்ஷேத்ரானி—சுரங்கங்கள்; ஆஸன்—ஆயின; மஹீ-பதே—ராஜனே.

ராஜனே, சிறந்த புருஷரான சிவபெருமானின் விந்து பூமிமீது எங்கெல்லாம் விழுந்ததோ, அங்கெல்லாம் பிறகு வெள்ளி மற்றும் தங்கச் சுரங்கங்கள் தோன்றின.

பதம் 8.12.34
ஸரித்-ஸரஹ்ஸு சைலேஷு வனேஷூபவனேஷு ச
யத்ர க்வ சாஸன் ரிஷயஸ் தத்ர ஸன்னிஹிதோ ஹர:

ஸரித்—நதிக்கரைகளுக்கு அருகில்; ஸரஹ்ஸு—மற்றும் ஏரிகளுக்கருகிலும்; சைலேஷு—மலைகளுக்கருகில்; வனேஷு—காடுகளில்; உபவனேஷு—வனங்களில்; ச—கூட; யத்ர—எங்கெல்லாம்; கவ—எங்கெல்லாம்; ச—கூட; ஆஸன்—இருந்தனரோ; ரிஷய:—பெரும் முனிவர்கள்; தத்ர—அங்கு; ஸன்னி-ஹித:—இருந்ததோ; ஹா:—சிவபெருமான்.

மோஹினியைப் பின்தொடர்ந்து சிவபெருமான் எல்லா இடங்களுக்கும் சென்றார்-நதி மற்றும் ஏரிக்கரைகளுக்கருகில், மலைகளுக்கருகில், தோட்டங்களுக்கருகில், காடுகளுக்கருகில் மற்றும் எங்கெல்லாம் பெரும் முனிவர்கள் வாழ்ந்தனரோ அந்த இடங்களுக்கருகிலும் அவர் சென்றார்.

பதம் 8.12.35
ஸ்கன்னே ரேதஸி ஸோ ‘பஸ்யத் ஆத்மானம் தேவ-மாயயா
ஜடீக்ருதம் ந்ருப-ஸ்ரேஷ்ட ஸன்யவர்தத கஸ்மலாத்

ஸ்கன்னே—முழுமையாகப் பாய்ச்சியதும்; ரேதஸி—விந்துவை; ஸ:—சிவபெருமான்; அபஸ்யத்—கண்டார்; ஆத்மானம்—அவரே; தேவ-மாயயா—பரமபுருஷ பகவானின் மாயையால்; ஜடீக்ருதம்—ஒரு முட்டாளைப் போல் வஞ்சிக்கப்பட்டதை; ந்ருப-ஸ்ரேஷ்ட—அரசரில் சிறந்தவரே (பரீட்சித்து மகாராஜன்); ஸன்யவர்தத—தம்மை மேலும் கட்டுப்படுத்திக் கொண்டார்; கஸ்மலாத்—மாயையிலிருந்து.

அரசர்களில் சிறந்த பரீட்சித்து மகாராஜனே, சிவபெருமான் விந்துவை முழுமையாகப் பாய்ச்சியபின், பரமபுருஷ பகவானால் உண்டாக்கப்பட்ட மாயையினால் எப்படி அவரே வஞ்சிக்கப்பட்டார் என்பதை அவரால் காண முடிந்தது. இவ்வாறாக மேலும் தொடரக் கூடிய மாயையிலிருந்து தம்மை அவர் கட்டுப்படுத்திக் கொண்டார்.

பதம் 8.12.36
அதாவகத-மஹாத்மிய ஆத்மனோ ஜகத்-ஆத்மன:
அபரிக்ஞேய-விர்யஸ்ய ந மேனே தத் உ ஹாத்புதம்

அத—இவ்வாறாக; அவகத—அதில் முழு நம்பிக்கைக் கொண்டு; மாஹாத்மிய:—பெருமையில்; ஆத்மன:—தன்னைப் பற்றியும்; ஜகத்-ஆத்மன:—பரமபுருஷ பகவானைப் பற்றியும்; அபரிக்ஞேய-வீர்யஸ்ய—எல்லையற்ற ஆற்றல் கொண்டவரான; ந—இல்லை; மேனே—எண்ணிப் பார்த்தார்; தத்—அவரை வசியம் செய்வதற்கு பரமபுருஷ பகவான் மேற்கொண்ட அற்புதச் செயல்களை; உ ஹ—நிச்சயமாக; அத்புதம்—அற்புதமாக.

இவ்வாறாக சிவபெருமானால் தமது நிலையையும், எல்லையற்ற சக்திகளைக் கொண்டவரான பரமபுருஷ பகவானின் நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது. இத்தகைய புரிந்துணர்வுக்கு வந்த அவர், பகவான் விஷ்ணு தம்மிடம் நடந்து கொண்ட அற்புதமான விதத்தைக் கண்டு சிறிதும் ஆச்சரியப்படவில்லை.

பதம் 8.12.37
தம் அவிக்லவம் அவ்ரீடம் ஆலக்ஷ்ய மதுஸூதன:
உவாச பரம-ப்ரீதோ பிப்ரத் ஸ்வாம் பெளருஷீம் தனும்

தம்—அவரை (சிவபெருமான்); அவிக்லவம்—நிகழ்ந்த சம்பவத்தினால் சலனம் அடையாமல்; அவ்ரீடம்—வெட்கப்படாமல்; அலக்ஷ்ய—கண்டு; மது-ஸூதன:—மதுஸூதனர் அல்லது மது என்னும் அரக்கனைக் கொன்றவனர் எனப்படுபவரான பரமபுருஷ பகவான்; உவாச—கூறினார்; பரம-ப்ரீத:—மிகவும் திருப்தியடைந்து; பிப்ரத்—ஏற்று; ஸ்வாம்—அவரது சுயமான; பௌருஷீம்—மூல; தனும்—உருவை.

சிவபெருமான் சலனம் அடையாமலும், வெட்கப்படாமலும் இருப்பதைக் கண்ட பகவான் விஷ்ணு (மதுசூதனர்) மிகவும் திருப்தி அடைந்தார். இவ்வாறாக அவர் தமது சுய உருவத்தை மீண்டும் ஏற்று பின்வருமாறு பேசினார்.

பதம் 8.12.38
ஸ்ரீ-பகவான் உவாச
திஷ்ட்யா த்வம் விபுத-ஸ்ரேஷ்ட
ஸ்வாம் நிஷ்டாம் ஆத்மனா ஸ்தித:
யன் மே ஸ்த்ரீ-ரூபயா ஸ்வைரம்
மோஹிதோ ‘பி அங்க மாயயா

ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷ பகவான் கூறினார்; திஷ்டியா—ஸர்வ மங்களம்; த்வம்—உமக்கு; விபுத-ஸ்ரேஷ்ட—தேவர்களுக்கெல்லாம் சிறந்தவரே; ஸ்வாம்—உமது சுய; நிஷ்டாம்—உறுதியான நிலையில்; ஆத்மனா—உமது சுயமான; ஸ்தித:—நீர் இருக்கிறீர்; யத்—அவ்வாறு; மே—என்னுடைய; ஸ்த்ரீ-ரூபயா—பெண்ணைப் போன்ற ஒரு தோற்றம்; ஸ்வைரம்—பெரும் அளவில்; மோஹித:—மயக்கப்பட்ட; அபி—போதிலும்; அங்க—சிவபெருமானே; மாயயா—எனது சக்தியால்.

பரமபுருஷ பகவான் கூறினார்: தேவர்களில் சிறந்தவரே ஒரு பெண்ணின் உருவை ஏற்றதிலுள்ள எனது சக்தியின் காரணத்தினால் நீர் மிகவும் அலைக்கழிக்கப்பட்டிருந்த போதிலும், உமது நிலையில் நீர் உறுதியாகவே இருக்கிறீர். எனவே உமக்குச் சகல நன்மையும் உண்டாகட்டும்.

பதம் 8.12.39
கோ நு மே ‘திதரேன் மாயாம் விஷக்தஸ் த்வத்-ருதே புமான்
தாம்ஸ் தான் விஸ்ருஜதீம் பாவான் துஸ்தராம் அக்ருதாத்மாபி:

க:—எந்த; நு—உண்மையில்; மே—எனது; அதிரதேத்—வெல்ல முடியும்; மாயாம்—மாயச்சக்தியை; விஷக்த:—பௌதிக புலன் இன்பத்தில் பற்றுக் கொண்டுள்ள; த்வத்-ருதே—உம்மைத்தவிர; புமான்—நபர்; தான்—எத்தகைய சூழ்நிலைகளிலும்; தான்—பௌதிகமென பற்று கொண்டவர்களுக்கு; விஸ்ருஜதீம்—வெல்லுவதில்; பாவான்—ஜடச் செயல்களின் பிரதிபலன்களை; துஸ்தராம்—வெல்லுவதற்கு மிகவும் கடினமாகும்; அக்ருத-ஆத்மபி:—தங்கள் புலன்களை கட்டுப்படுத்த முடியாதவர்களால்.

எனதருமை சிவபெருமானே (சம்பு) உம்மைத்தவிர இவ்வுலகில் வேறு எவரால் எனது மாயா சக்தியை வெல்ல முடியும்? மக்கள் பொதுவாக புலன் இன்பத்தில் பற்றுக்கொண்டு, அதன் ஆதிக்கத்தினால் வெற்றி கொள்ளப்படுகின்றனர். உண்மையில் ஜட இயற்கையின் ஆதிக்கத்தை வெல்லுவது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமானதாகும்.

பதம் 8.12.40
ஸேயம் குண-மயீ மாயா ந த்வாம் அபிபவிஷ்யதி
மயா ஸமேதா காலேன கால-ரூபேண பாகச:

ஸா—வெல்லுவதற்கரிய அந்த; இயம்—இந்த; குண-மயீ—ஜட இயற்கையின் முக்குணங்களைக் கொண்ட; மாயா—மாயசக்தி; ந—இல்லை; த்வம்—உம்மை; அபிபவிஷ்யதி—எதிர்காலத்தில் சலனப்படுத்தக்கூடியது; மயா—என்னுடன்; ஸமேதா—சேர்ந்து; காலேன—நித்தியகாலம்; காலரூபேன—காலத்தின் வடிவில்; பாகச:—அவளது வேறுபட்ட பாகங்களுடன்.

படைப்பில் என்னுடன் ஒத்துழைப்பதும், இயற்கையின் முக்குணங்களில் தோன்றியிருப்பதுமான ஜட அல்லது புறச்சக்தியால் (மாயா) இனிமேல் உம்மை சலனப்படுத்த முடியாது.

பதம் 8.12.41
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் பகவதா ராஜன் ஸ்ரீவத்ஸாங்கேன ஸத்-க்ருத:
ஆமந்த்ரிய தம் பரிக்ரம்ய ஸகன: ஸ்வாலயம் யயௌ

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; பகவதா—பரமபுருஷ பகவானால்; ராஜன்—ராஜனே; ஸ்ரீவத்ஸ-அங்கேன—ஸ்ரீவத்ஸமெனும் குறியை எப்பொழுதும் தமது மார்பின் மீது ஏந்தியிருப்பவர்; ஸத்-க்ருத:—மிகவும் புகழப்பட்டு; ஆமந்த்ரிய—அவரிடம் அனுமதி பெற்று; தம்—அவரை; பரிக்ரம்ய—வலம் வந்து; ஸ-கண:—அவரது சகாக்களுடன்; ஸ்வ-ஆலயம்—அவரது சொந்த வசிப்பிடத்திற்கு; யயௌ—திரும்பிச் சென்றார்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, இவ்வாறு தமது மார்பின் மீது ஸ்ரீவத்ஸமெனும் குறியைத் தாங்கியிருப்பவரான முழுமுதற் கடவுளால் புகழப்பட்ட சிவபெருமான் பகவானை வலம் வந்தார். பிறகு, அவரிடம் அனுமதி பெற்றபின், தமது வசிப்பிடமான கைலாயத்திற்குத் தமது சகாக்களுடன் திரும்பிச் சென்றார்.

பதம் 8.12.42
ஆத்மாம்ச-பூதாம் தாம் மாயாம் பவானீம் பகவான் பவ:
ஸம்மதாம் ரிஷி-முக்யானாம் ப்ரீத்யாசஷ்டாத பாரத

ஆத்ம-அம்ச-பூதாம்—பரமாத்மாவின் ஒரு சக்தியாக; தாம்—அவரிடம்; மாயாம்—மாயா சக்தி; பவானீம்—சிவபெருமானின் மனைவியான; பகவான்—சக்திவாய்ந்த; பவ:—சிவபெருமான்; ஸம்மதாம்—ஏற்றுக் கொள்ளப்பட்டாள்; ருஷி-முக்யானாம்—பெரும் முனிவர்களால்; ப்ரீத்யா—மிகவும் சந்தோஷத்துடன்; ஆசஷ்ட—பேசத்துவங்கினார்; அத—பிறகு; பாரத—பரத வம்சத்தில் தோன்றிய பரீட்சித்து மகாராஜனே.

பரத வம்சத்தில் தோன்றிய பரீட்சித்து மகாராஜனே, சிவபெருமான் பிறகு மிகவும் சந்தோஷத்துடன் தமது மனைவியான பவானியைப் பார்த்துக் கூறினார். பவானியை பகவான் விஷ்ணுவின் சக்தியாக எல்லா அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பதம் 8.12.43
அயி வ்யபஸ்யஸ் த்வம் அஜஸ்ய மாயாம்
பரஸ்ய பும்ஸ: பர-தேவதாயா:
அஹம் கலானாம் ரிஷபோ ‘பி முஹ்யே
யயாவசோ ‘ன்யே கிம் உதாஸ்வதந்த்ரா:

அயி—ஓ; வ்யபஸ்ய:—கண்டாய்; த்வம்—நீ; அஜஸ்ய—பிறப்பற்றவரின்; மாயாம்—மாய சக்தியை; பரஸ்ய பும்ஸ:—பரமபுருஷரின்; பர-தேவதாயா:—பரம சத்தியமானவர்; அஹம்—நான்; கலானாம்—அம்சங்களில்; ரிஷப:—முக்கியமானவன்; அபி—ஆயினும்; முஹ்யே—குழப்பமடைந்தேன்; யயா—அவளால்; அவச:—புலப்படாமல்; அன்யே—மற்றவர்கள்; கிம் உத—பற்றி என்னவென்று சொல்வது; அஸ்வதந்த்ரா:—முற்றிலும் மாயையை நம்பியுள்ள.

சிவபெருமான் கூறினார்: ஓ தேவி, பிறப்பற்றவரும், அனைவருக்கும் எஜமானருமான பரமபுருஷ பகவானின் மாயா சக்தியை இப்போது நீ கண்டாய். பகவானுடைய முக்கியமான விரிவாக்கங்களில் நானும் ஒருவன் என்றபோதிலும், நான் கூட அவரது சக்தியால் ஏமாற்றப்பட்டேன். மாயையை முழுமையாக நம்பியிருக்கும் மற்றவர்களைப் பற்றி என்னவென்று கூறுவது?

பதம் 8.12.44
யம் மாம் அப்ருச்சஸ் த்வம் உபேத்ய யோகாத்
ஸமா-ஸஹஸ்ராந்த உபாரதம் வை
ஸ ஏஷ ஸாக்ஷாத் புருஷ: புராணோ
ந யத்ர காலோ விசதே ந வேத:

யம்—யாரைப்பற்றி; மாம்—என்னிடமிருந்து; அப்ருச்ச:—வினவினாயோ; த்வம்—நீ; உபேத்ய—என்னருகே வந்து; யோகாத்—தியான யோகத்தைச் செய்வதிலிருந்து; ஸமா—ஆண்டுகள்; ஸஹஸ்ர-அந்தே—ஆயிரத்தின் முடிவில்; உபாரதம்—முடித்து; வை—உண்மையில்; ஸ:—அவர்; ஏஷ:—இதோ இருக்கிறார்; ஸாக்ஷாத்—நேரடியாக; புருஷ:—பரமபுருஷர்; புராண:—ஆதியான; ந—இல்லை; யத்ர—எங்கு; கால:—நித்திய காலம்; விசதே—புகமுடியும்; ந—அல்லது; வேத:—வேதங்களால்.

நான் ஓராயிரம் ஆண்டுகள் தியான யோகத்தைச் செய்து முடித்த போது, யாரை நான் தியானம் செய்தேனென்று நீ கேட்டாய். இப்போது இதோ இருக்கிறார் அப்பரமபுருஷர் அவரைக் காலத்தால் நெருங்க முடியாது, புரிந்து கொள்ளவும் முடியாது.

பதம் 8.12.45
ஸ்ரீ-சுக உவாச
இதி தே ‘பிஹிதஸ் தாத விக்ரம: சார்ங்க-தன்வன:
ஸிந்தோர் நிர்மதனே யேன த்ருத: ப்ருஷ்டே மஹாசல:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; தே—உம்மிடம்; அபிஹித—விளக்கினேன்; தாத—எனதருமை ராஜனே; விக்ரம:—தீரத்தை; ஸார்ங்க-தன்வன:—சாரங்கபாணியான அல்லது சாரங்க வில்லை ஏந்திச் செல்பவரான பரமபுருஷ பகவானின்; ஸிந்தோ:—பாற்கடலின்; நிர்மதனே—கடைந்ததில்; யேன—எவரால்; த்ருத:—தாங்கிக் கொள்ளப்பட்டதோ; ப்ருஷ்டே—முதுகின் மேல்; மஹா-அசல:—மிகப் பெரிய மலை.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: எனதருமை ராஜனே, பாற்கடலைக் கடைவதற்காக மிகப்பெரிய மலையைத் தமது முதுகின் மேல் தாங்கிக் கொண்டவர், சாரங்கதன்வர் (சாரங்கபாணி) எனப்படும் அதே பரமபுருஷ பகவானாவார். அவரது தீரத்தைப் பற்றி இப்போது உமக்கு நான் விவரித்தேன்.

பதம் 8.12.46
ஏதன் முஹு: கீர்தயதோ ‘நுஸ்ருண்வதோ
ந ரிஷ்யதே ஜாது ஸமுத்யம: க்வசித்
யத் உத்தமஸ்லோக-குணானுவர்ணனம்
ஸமஸ்த-ஸம்ஸார-பரிஸ்ரமாபஹம்

ஏதத்—இவ்வரலாற்றை; முஹு:—இடைவிடாமல்; கீர்த்தயத—பாடும் ஒருவரின்; அனுஸ்ருண்வத:—அத்துடன் கேட்பவரின்; ந—இல்லை; ரிஷ்யதே—அழிக்கப்பட்டது; ஜாது—எச்சமயத்திலும்; ஸமுத்யம:—முயற்சி; க்வசித்—எச்சமயத்திலும்; யத்—ஏனெனில்; உத்தமஸ்லோக—பரமபுருஷ பகவானின்; குண-அனுவர்ணனம்—தெய்வீக குணங்களை விவரிக்கும்; ஸம்ஸ்த—எல்லா; ஸம்ஸார—ஜட வாழ்வின்; பரிஸ்ரம—துன்பங்களும்; அபஹம்—முடிந்துவிடும்.

பாற்கடலைக் கடைந்த இவ்வரலாற்றை அடிக்கடி கேட்பவரின் அல்லது விவரிப்பவரின் முயற்சி ஒருபோதும் பலனளிக்காமல் போகாது. உண்மையில், பரமபுருஷ பகவானுடைய பெருமைகளைப் பாடுவதுதான் இந்த ஜட உலகிலுள்ள அனைத்து துன்பங்களையும் அழிப்பதற்கான ஒரே வழியாகும்.

பதம் 8.12.47
அஸத்-அவிஷயம் அங்ரிம் பாவ-கம்யம் பிரபன்னான்
அம்ருதம் அமர-வர்யான் ஆசயத் ஸிந்து-மத்யம்
கபட-யுவதி-வேஷோ மோஹயன் ய: ஸுராரீம்ஸ்
தம் அஹம் உபஸ்ருதானாம் காம-பூரம் நதோ ‘ஸ்மி

அஸத்-அவிஷயம்—நாத்திகர்களால் புரிந்து கொள்ள முடியாத; அங்ரிம்—பரமபுருஷ பகவானின் தாமரைப் பாதங்களுக்கு; பாவ-கம்யம்—பக்தர்களால் புரிந்து கொள்ளப்பட்டது; ப்ரபன்னான்—பூரணமாக சரணாகதி அடைந்துள்ள; அம்ருதம்—அமிர்தத்தை; அமர-வர்யான்—தேவர்களுக்கு மட்டுமே; ஆசயத்—பருவதற்குக் கொடுத்த; ஸிந்து-மத்யம்—பாற்கடலிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட; கபட-யுவதி-வேஷ:—கபடமான ஓர் இளம் பெண்ணாகத் தோன்றி; மோஹயன்—வசியப்படுத்தும்; ய:—அவர்; ஸுர-அரீன்—தேவர்களின் எதிரிகளை; தம்—அவருக்கு; அஹம்—நான்; உபஸ்ருதானாம்—பக்தர்களின்; காம-பூரம்—எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுபவரான; நத: அஸ்மி—எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

ஓர் இளமங்கையின் உருவை ஏற்று அசுரர்களை வசியம் செய்த பரம்புருஷ பகவான், தமது பக்தர்களான தேவர்களுக்குப் பாற்கடலிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட அமிர்தத்தைப் பகிர்ந்தளித்தார். தமது பக்தர்களின் விருப்பங்களை எப்பொழுதும் நிறைவேற்றுபவரான அந்த பரமபுருஷ பகவானுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.


ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “மோஹினி-மூர்த்தியால் சிவபெருமான் பிரமை அடைதல்” எனும் தலைப்பை கொண்ட பன்னிரெண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare