அத்தியாயம் – 29
ராஸ நடனத்திற்காகக் கிருஷ்ணரும்
கோபியரும் சந்தித்தல்
பதம் 10.29.1
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
பகவான் அபி தா ராத்ரீ: ஸாரதோத்புல்ல-மல்லிகா:
விக்ஷ்ய ரந்தும் மனஸ் சக்ரே யோக-மாயாம் உபாஸ்ரித:

ஸ்ரீ-பாதராயணி: உவாச:—ஸ்ரீல பாதராயண வேதவியாசரின் மைந்தர் ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பகவான்—முழுமுதற் கடவுளான கிருஷ்ணர்; அபி—இருந்தாலும்; தா:—அந்த; ராத்ரீ:—இரவுகள்; ஸாரத—சரத்-காலத்தின்; உத்புல்ல—மலர்ந்த; மல்லிகா:—மல்லிகை மலர்கள்; வீக்ஷ்ய—கண்டு; ரந்தும்—காதலை அனுபவிக்க; மன:-சக்ரே—அவர் திருவுளங்கொண்டார்; யோக-மாயாம்—அரியதை எளியதாக்கும் அவரது ஆன்மீக சக்தி; உபாஸ்ரித—ஏவல்கொண்டார்.

ஸ்ரீ பாதராயணி கூறினார்: எல்லா வளங்களும் நிறைந்த முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார். இருந்தும் மலர்ந்த மல்லிகை மலர்களின் நறுமணங்கமழும் சரத்கால இரவுகளைக் கண்டவுடன் காதல் லீலைகள் புரிய அவர் திருவுளங் கொண்டார். தமது எண்ணத்தினை நிறைவேற்றும் பொருட்டு அவர் தமது அகச்சக்தியினை ஏவல் கொண்டார்.

பதம் 10.29.2
ததோடுராஜ: கருப: கரைரர் முகம்
ப்ராச்யா விலிம்பன்ன் அருணேன ஸந்தமை:
ஸ சர்ஷணீனாம் உதகாச் சுசோ ம்ருஜன்
ப்ரிய: ப்ரியாயா இவ தீர்க-தர்ஸன:

ததா—அச்சமயம்: உடு-ராஜ:—உடுக்களின் நாயகனான சந்திரன்; கருப:—அடிவானில்; கரை:—தனது கரங்களினால் (கதிர்கள்); முகம்—முகம்; ப்ராச்யா:—மேற்பகுதி; விலிம்பன்—பூசியது; அருணேன—சிகப்புநிறம்; ஸம்-தமை:—(தனது கதிர்கள்) அவை பெரும் சுகம் அளித்தன; ஸ:—அவன்; சர்ஷணீனாம்—காணும் அனைவரின்; உதகாத்—உதித்த; ஸீச:—துக்கத்தினை; ம்ருஜன்—துடைத்தான்; ப்ரிய—பாசமிகு கணவன்; ப்ரியாயா:—அவனது பிரிய மனைவியின்; இவ—போன்று; தீர்க—நெடுநாட்களுக்குப் பின்னர்; தர்ஷன:—மீண்டும் கண்டவுடன்.

மேலைவானின் முகத்தில் தனது சுகமான கதிர்கள் என்னும் கரங்களினால் சிகப்பு வண்ணம் பூசியவாறு சந்திரன் உதித்துத் தன்னைக் காணும் அனைவரின் வேதனைகளையும் துடைத்தான். நெடுநாள் பிரிந்து சென்ற பாச மிகு கணவன் தனது பிரியமிகு மனைவியின் எழில் முகத்தை செந்நிறக் குங்குமத்தினால் அலங்கரித்ததுபோல் சந்திரன் திகழ்ந்தான்.

பதம் 10.29.3
த்ருஷ்ட்வர் குமுத்வந்தம் அகண்ட-மண்டலம்
ரமானனாபம் நவ-குங்குமாருணம்
வனம் ச தத்-கோமள-கோபீ ரஜ்ஜிதம்
ஜகெள கலம் வாம-த்ருஸாம் மனோஹரம்

த்ருஷ்ட்வா—கண்டு; குமுத்-வந்தம்—இரவில் மலரும் அல்லி மலர்கள் மலர்வதற்குக் காரணமாகி; அகண்ட—உடையாத; மண்டலம்—அதன்வட்ட முகம்; ரமா—மகாலட்சுமி; ஆனன—(ஒத்த தன்மையுடைய) முகம்; ஆபம்—அதன் ஒளி; நவ—புதிய; குங்கும—குங்குமம்; அருணம்—சிவந்த; வனம்—காடு; ச—மற்றும்; தத்—அந்த நிலவின்; கோமள—மேன்மையான; கோபி:—கதிர்களால்; ரஜ்ஜிதம்—வண்ணம்; ஜகௌ—அவர் தனது குழலினை இசைத்தார்; கலம்—இனிமையான; வாம-த்ருஸாம்—எழில்மிகு விழிகளையுடைய பெண்களுக்கு; மன:-ஹாரம்—மயக்கும்.

பகவான் கிருஷ்ணர், புதிதாக வைக்கப்பட்ட குங்குமப் பொட்டின் சிவந்த ஒளியினை எங்கும் பரப்பியவண்ணம் சிதையாத வட்ட வடிவமான முழுநிலவு வானில் எழுவதைக் கண்டார். அது மகாலட்சுமியின் திருமுகத்தைப் போன்றிருந்தது. நிலவினைக் கண்டு குமுத மலர்கள் மலர்ந்ததையும், அதன் ஒளிக் கதிர்களால் காடு முழுவதும் ஒளிமயமாகத் திகழ்ந்ததையும் அவர் கண்டார். இதன்பின் பகவான் தனது குழலிலிருந்து இனிமையான இசை எழுப்பினார். அந்த இனிய ஒலி எழில் விழிக் கோபியர்களின் மனங்களை மயங்கச் செய்தது.

பதம் 10.29.4
நிஸம்ய கீதம் தத் அனங்க-வர்தனம்
வ்ரஜு-ஸ்த்ரிய: க்ருஷ்ண-க்ருஹீத-மானஸ:
ஆஜக்முர் அன்யோன்யம் அலக்ஷிதோத்யமா:
ஸ யத்ர காந்தோ ஜவ-லோல குண்டலா:

நிஸம்ய—கேட்டு; கீதம்—கீதத்தை; தத்—அது; அனங்க—மன்மதன்; வர்தனம்—உற்சாகப்படுத்தியது; வ்ரஜஸ்த்ரிய:—விரஜத்தின் மங்கையரை; க்ருஷ்ண—கிருஷ்ணரால்; க்ருஹீத—பறிக்கப்பட்ட; மானஸா:—அவர்தம் மனங்கள்; ஆஜக்மு:—அவர்கள் சென்றனர்; அன்யோன்யம்—ஒருவரை மற்றொருவர்; அலக்ஷித—அறியாது; உத்யமா:—அவர்கள் முன்னேறிச் சென்றனர்; ஸ:—அவர்; யத்ர—எங்கே; காந்த:—தங்கள் காந்தன் (மனதிற்கினியவர்); ஜவ—விரைவின் காரணமாக; லோல—ஆடியது; குண்டலா:—செவிக் குண்டலங்கள்.

கிருஷ்ணரின் குழலிசையினைக் கேட்டவுடன் விருந்தாவனத்திலுள்ள இளம்பெண்களின் இதயங்களில் காதல் உணர்ச்சிப் பொங்கிப் பிரவகித்தது. அவர்களின் மனங்கள் பகவானால் ஈர்க்கப்பட்டன. ஒருவரையொருவர் அறியாது அவர்கள் தங்கள் மனங்கவர்ந்தவர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். அவர்கள் விரைந்து சென்றதின் காரணமாக அவர்கள் செவிகளில் அணிந்திருந்த குண்டலங்கள் முன்னும் பின்னும் வேகமாக ஆடின.

பதம் 10.29.5
துஹந்த்யோ ‘பியயு: காஸ்சித் தோஹம் ஹித்வா ஸமுதுஸ்கா:
பயோ ‘திஸ்ரித்ய ஸம்யாவம் அனுத்வாஸ்யாபரா யயு:

துஹந்த்ய:—பசுக்களிடம் பால் கறந்து கொண்டிருக்கும் போது; அபியயு:—சென்றனர்; காஸ்சித்—அவர்களில் சிலர்; தோஹம்—பால் கறந்தது; ஹித்வா—புறக்கணித்து; ஸமுதுஸ்கா:—பேரார்வத்துடன்; பய:—பால்; அதிஸ்ரித்ய—அடுப்பில் வைத்திருந்த பாலை; ஸம்யாவம்—மாவினால் செய்த ரொட்டிகளை; அனுத்வாஸ்ய—சட்டியிலிருந்து எடுக்காமலேயே; அபரா:—பிறர்; யயு:—சென்றனர்.

கிருஷ்ணரின் குழலோசையினைக் கேட்டபொழுது சில கோபியர்கள் பசுக்களிடமிருந்து பால் கறந்துகொண்டிருந்தனர். அவர்கள் பால் கறப்பதை பாதியிலேயே விட்டுவிட்டு அவரைக் காண ஓடினர். அடுப்பில் வைத்திருந்த பாலை இறக்காமல் சிலரும், சட்டியில் சுட்டுக் கொண்டிருந்த ரொட்டியை அப்படியே விட்டுவிட்டுச் சிலரும் விரைந்து சென்றனர்.

பதங்கள் 10.29.6 – 10.29.7
பரிவேஷயந்த்யஸ் தத் தித்வா பாயயந்த்ய: ஸிஸீன் பய:
ஸீஸ்ரூஸந்த்ய: பதீன் காஸ்சித் அஸ்னந்த்யோ ‘பாஸ்ய போஜனம்

லிம்பந்த்ய: ப்ரம்ருஜந்த்யோ ‘ன்யா அஞ்ஜந்த்ய: காஸ்ச லோசனே
வ்யத்யஸ்த வஸ்த்ராபரணா காஸ்சித் க்ருஷ்ணாந்திகம் யயு:

பரிவேஷயந்த்ய:—ஆடை உடுத்துக் கொண்டிருந்தவர்கள்; தத்—அது; ஹித்வா—அப்படியே போட்டுவிட்டு; பாயயந்த்ய:—பாலைக் குடிப்பதற்காகத்; ஸிஸீன்—தமது குழந்தைகளுக்கு; பய:—பால்; ஸீஸ்ரூஷந்த்ய:—சிசுருதைகள் செய்துகொண்டிருந்தோர்; பதீன்—தமது கணவர்களுக்கு; கஸ்சித்—சிலர்; அஸ்னந்த்ய:—உணவு உண்டுகொண்டிருந்தோர்; அபாஸ்ய—பாதியிலேயே விட்டுவிட்டு; போஜனம்—தமது உணவினை; லிம்பந்த்ய:—அலங்கரித்துக் கொண்டிருந்தோர்; ப்ரம்ருஜந்த்ய:—தமக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தோர்; அன்யா:—மற்றவர்கள்; அஞ்ஜந்த்ய:—மைதீட்டிக் கொண்டிருந்தோர்; காஸ்ச—சிலர்; லோசனே—தமது கண்களில்; வ்யத்யஸ்த—அலங்கோலமாக; வஸ்த்ர—தங்கள் ஆடைகள்; ஆபரணா:—ஆபரணங்கள்; காஸ்சித்—சிலர்; க்ருஷ்ண-அந்திகம்—பகவான் கிருஷ்ணரின் அருகே; யயு:—சென்றனர்.

அவர்களில் சிலர் ஆடை உடுத்திக் கொண்டிருந்தனர், சிலர் தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் தமது கணவர்களுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தனர். ஆயினும் அவர்கள் தங்கள் செயல்களைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு கிருஷ்ணரைக் காண விரைந்து சென்றனர். மற்றும் சில கோபியர்கள் மாலை உணவு உட்கொண்டும், நீராடிக் கொண்டும், அலங்கரித்துக் கொண்டும், கண்களில் மைதீட்டிக் கொண்டும் இருந்தனர். எனினும் இந்த கோபியர்கள் எல்லாம் தங்கள் செயல்களை அப்படியே நிறுத்திவிட்டு, ஆடை உடுத்தும் உடுத்தாமலும், ஆபரணம் அணிந்தும் அணியாமலும் அலங்கோலமாகவும், அவசரக் கோலமாகவும் கிருஷ்ணர் இருக்கும் இடத்திற்கு விரைந்தனர்.

பதம் 10.29.8
தா வார்யமாணா: பதிபி: பித்ருபிர் ப்ராத்ரு-பந்துபி:
கோவிந்தபஹ்ருதாத் மானோ ந ந்யவர்தந்த மோஹிதா:

தா:—அவர்கள்; வார்யமாணா:—தடுத்து நிறுத்தப்பட்டனர்; பதிபி:—அவர்கள் கணவர்களால்; பித்ருபி:—அவர்கள் தந்தையரால்; ப்ராத்ரு:— அவர்கள் சகோதரர்களால்; பந்துபி:—மற்றும் உறவினர்களால்; கோவிந்த—பகவான் கிருஷ்ணரால்; அபஹ்ருத—திருடப்பட்ட; ஆத்மானோ:—அவர்களின் ஆத்மாக்கள்; ந ந்யவர்தந்த—அவர்கள் திரும்பி வரவில்லை; மோஹிதா:—மோகத்தினால்.

கோபியர்களின் கணவர்களும், தந்தையரும், சகோதரர்களும், பிற உறவினர்களும் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோதிலும் பகவானின் குழலிசையில் மனம் பறிகொடுத்த அவர்கள் திரும்பிவர மறுத்து விட்டனர்.

பதம் 10.29.9
அந்தர்-க்ருஹ-கதா: கஸ்சித் கோப்யோ ‘லப்த-விநிர்கமா:
க்ருஷ்ணம் தத்-பாவனா-யுக்தா தத்யுர் மீலித-லோசனா:

அந்த:-க்ருஹ—தங்கள் வீட்டினுள்; கதா:—இருந்து; காஸ்சித்—சில; கோப்ய:—கோபியர்கள்; அலப்த—முடியாதவர்கள்; விநிர்கமா:—வெளியேவர; க்ருஷணம்—ஸ்ரீ கிருஷ்ணரை; தத்-பாவனா—அவர்மீது தம்மை மறந்த காதலுடன்; யுக்தா:—நிரம்பப் பெற்றவர்களாக; தத்யு:—அவர்கள் தியானித்தனர்; மீலித—மூடிக் கொண்டு; லோசனா:—தங்கள் விழிகளை.

எனினும் வேறுசில காரணங்களினால் தமது இல்லங்களிலிருந்து வெளியே வரமுடியாத சில கோபியர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே தூய்மையான காதலுடன் தமது கண்களை மூடியபடி அவரைத் தியானித்தனர்

பதங்கள் 10.29.10 – 10.29.11
து: ஸஹ-ப்ரேஷ்ட-விரஹ தீவ்ர-தாப-துதாஸீபா:
த்யான ப்ராப்தாச்யுதாஸ் லேஷ-நிர்வ்ருத்யா க்ருஷ்ண-மங்களா:

தம் ஏவ பரமாத்மானம் ஜார-புத்யாபி ஸங்கதா:
ஜஹீர் குண-மயம் தேஹம் ஸத்ய: ப்ரக்ஷீண-பந்தனா:

து: ஸஹ—தாங்கவொண்ணா; ப்ரேஷ்ட—தங்கள் அன்பிற்குரியவரை; விரஹ—பிரிந்ததினால்; தீவ்ர—தீவிரமான; தாப—தாபத்தினால்; துத—நீங்கப்பெற்றர்; அஸீபா:—தங்கள் இதயங்களிலிருந்து எல்லா அழுக்குகளும்; த்யான—தியானத்தினால்; ப்ராப்த—எய்தப் பெற்றனர்; அச்யுத—குற்றமற்ற பகவான் ஸ்ரீகிருஷ்ணரின்; ஆஸ்லேஷ—தழுவலின் காரணமாக; நிர்வ்ருத்யா—மகிழ்ச்சியினால்; க்ருஷ்ண—ஒன்றுமற்றதாக ஆனது; மங்களா:—அவர்கள் புண்ணியச் செயல்களின் பலன்கள்; தம்—அவரை; ஏவ—இருந்தபோதிலும்; பரம-ஆத்மானம்—பரமாத்மா; ஜார—பரபுருஷர்; புத்த்யா—அவரை அவ்வாறு நினைத்து; அபி—இருந்தும்; ஸங்கதா:—அவரது நேரடித் தொடர்பினைப் பெற்று; ஜஹீ:—அவர்கள் துறந்தனர்; குண-மயம்—ஜட இயற்கைக் குணங்களினாலான; தேஹம்—தங்கள் உடல்களை; ஸத்ய:—உடனடியாக; ப்ரக்ஷீண—முற்றிலும் எதிர்ச் செயல்கள் செய்து; பந்தனா:—கர்மத்தளைகள் அனைத்தும்.

கிருஷ்ணரைக் காணமுடியாது போன கோபியர்கள் தாங்க வொண்ணாத அவரது பிரிவுத் துயரின் காரணமாக தம்மிடமுள்ள கர்ம பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றனர். அவரைத் தியானித்ததினால் அவர்கள் அவரால் தழுவப்பட்டதை உணர்ந்தனர். அந்த ஆனந்தத்தில் அவர்கள் தமது புண்ணியபலன்கள் அனைத்தையும் அடையப்பெற்றனர். பகவான் கிருஷ்ணர் பரமாத்மாவாக இருந்த போதிலும் இப்பெண்கள் அவரைத் தமது அன்பிற்குரிய காதலராகக் கருதி மிகவும் நெருக்கமான மனநிலையில் அவருடன் தொடர்பு கொண்டனர். இதனால் அவர்தம் கர்மத்தளைகள் எல்லாம் இல்லாதொழிந்தன. அவர்கள் தமது பூத பெளதிக உடல்களைத் துறந்தனர்.

பதம் 10.29.12
ஸ்ரீ-பரீக்ஷித் உவாச
க்ருஷ்ணம் விது: பரம் காந்தம் ந து ப்ரஹ்மதயா முனே
குண-ப்ரவாஹோபரமஸ் தாஸாம் குண-தியாம் கதம்

ஸ்ரீ-பரீக்ஷித் உவாச—ஸ்ரீ பரீக்ஷித்து கூறினார்; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; விது:—அவர்கள் அறிவர்; பரம்—மட்டும்; காந்தம்—அவர்கள் அன்பிற்குரியவர்; ந—இல்லை; து—ஆனால்; ப்ரஹ்மதயா—முழுமெய்ப்பொருளாக; முனே—ஓ, சுகதேவ முனிவரே; குண—ஜட இயற்கை முக்குணங்களின்; ப்ரவாஹ—பிரவாகத்தின்; உபரம:—தடுத்து நிறுத்துதல்; தாஸாம்—அவர்களுக்கு; குண-தியாம்—அவர்களின் மனம் இக்குணங்களினால் பீடிக்கப்பட்டிருக்கிறது; கதம்—எவ்வாறு.

ஸ்ரீ பரீக்ஷித்து மகாராஜா கூறினார்: கோபியர்கள் கிருஷ்ணரை முழுமெய்ப்பொருளாக அன்றித் தமது காதலராக மட்டுமே அறிவர். அப்படியிருக்க ஜட இயற்கைக் குணங்களினால் பீடிக்கப்பட்ட மனங்களையுடைய இப்பெண்கள் தங்களைப் பௌதிகப் பற்றிலிருந்து எவ்வாறு விடுவித்துக் கொண்டனர்?

பதம் 10.29.13
ஸ்ரீ-ஸீக உவாச
உக்தம் புரஸ்தாத் ஏதத் தே சைத்ய: ஸித்திம் யதா கத:
த்விஷன்ன் அபி ஹ்ருஷீகேஸம் கிம் உதாதோக்ஷஜ-ப்ரியா:

ஸ்ரீ-ஸீக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; உக்தம்—உரைக்கப்பட்டது; புரஸ்தாத்—முன்னரே; ஏதத்—இது; தே—உனக்கு; சைத்ய:—சேதி நாட்டு அரசன், சிசுபாலன்; ஸித்திம்—ஸித்திபெற்றது; யதா—போன்று; கத:—அடைந்தான்; த்விஷன்—வெறுத்தான்; அபி—கூட; ஹ்ருஷீகேஸம்—பரமபுருஷ பகவான் ரிஷிகேஸர்; கிம் உத—என்ன சொல்ல இருக்கிறது; அதோக்ஷஜ—சாதாரணப் புலன்களுக்கு அப்பாற்பட்டவரான பகவான்; ப்ரியா:—தமக்குப் பிரியமுடைய பக்தர்களின்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இதுபற்றி முன்பே உனக்கு விளக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணரை வெறுத்த சேதிநாட்டு அரசன் சிசுபாலனே சித்திபெற்றான் என்றால் பகவானுக்கு மிகவும் பிரியமான கோபியர்களைப்பற்றி என்ன சொல்ல இருக்கிறது.

பதம் 10.29.14
ந்ருணாம் நி: ஸ்ரேயஸார்தாய வ்யக்திர் பகவதோ ந்ருப
அவ்யயஸ்யாப்ரமேயஸ்ய நிர்குணஸ்ய குணாத்மன:

ந்ருணாம்—மனித இனத்தின்; நி: ஸ்ரேயஸ—மிகவுயர்ந்த நலனுக்காக; அர்தாய—நோக்கத்திற்காக; வ்யக்தி:—தனிப்பட்ட தோற்றம்; பகவத:—பரமபுருஷ பகவானின்; ந்ருப—ஓ, அரசனே; அவ்யயஸ்ய—குறையா நிறை வளமுடைய அவரது; அப்ரமேயஸ்ய—அளவிடற்கரிய; நிர்குணஸ்ய—பௌதிகக் குணங்களினால் தீண்டப்படாதவர்; குண ஆத்மன:—ஜட குணங்களை நெறிப்படுத்துபவர்.

ஓ, மன்னனே! பரமபுருஷ பகவான், குறையா நிறைவளமுடையவர் என்பதோடு ஜட இயல்புகளால் அவர் தீண்டப்படாதவரும் ஆவார். ஏனென்றால் அக்குணங்களின் தலைவரும் அவரே ஆவார். அவர் இப்பூமியில் அவதரித்ததானது மனித இனம் உயர்நலம் பெறுவதற்கு அருள் புரிவதற்கேயாகும்.

பதம் 10.29.15
காமம் க்ரோதம் பயம் ஸ்நேஹம் ஐக்யம் ஸௌஹ்ருதம் ஏவ ச
நித்யம் ஹரௌ விதததோ யாந்தி தன்-மயதாம் ஹிதே

காமம்—காமம்; க்ரோதம்—குரோதம்; பயம்—பயம்; ஸ்நேஹம்—பாசமிகு உறவு; ஐக்யம்—ஐக்கியம்; ஸௌஹ்ருதம்—நட்பு; ஏவ ச—மேலும்; நித்யம்—எப்போதும்; ஹரௌ—பகவான் ஹரியிடத்து; விததத:—வெளிப்படுத்தினால்; யாந்தி—அவர்கள் எய்துவர்; தத்-மயதாம்—அவரிடத்தில் ஆழ்ந்து; ஹி—உண்மையில்; தே—அவர்கள்.

பகவான் ஹரியினிடத்தில் தமது காமம், குரோதம், பயம், பாசமிகு உறவு, ஐக்கியம் அல்லது நட்புறவு போன்ற உணர்வுகளைத் தொடர்ந்து செலுத்துபவர்கள் அவரது நினைவிலேயே மூழ்கிவிடுவர் என்பது உறுதியாகும்.

பதம் 10.29.16
ந சைவம் விஸ்மய: கார்யோ பவதா பகவதி அஜே
யோகேஸ்வரேஸ்வர க்ருஷ்ணே யத ஏதத் விமுச்யதே

ந ச—இல்லை; ஏவம்—இது போன்று; விஸ்மய:—ஆச்சரியம்; கார்ய:—கொள்வது; பவதா—உன்னால்; பகவதி—முழுமுதற் கடவுளைப் பொருத்தமட்டில்; அஜே—பிறப்பற்றவர்; யோக ஈஸ்வர—யோகேஸ்வரர்களின்; ஈஸ்வரே—ஈஸ்வரர்; க்ருஷ்ணே—பகவான் கிருஷ்ணர்; யத:—அவரால்; ஏதத்—இந்த (உலகம்); விமுச்யதே—இவ்வுலகம் விடுதலை பெற்றது.

பிறப்பற்றவரும், யோகேஸ்வர்களின் ஈஸ்வரரும், முழுமுதற் கடவுளுமான கிருஷ்ணரை எண்ணி நீ ஆச்சரியப்படக் கூடாது. அவரால் தான் இவ்வுலகம் விடுதலை பெறுகிறது.

பதம் 10.29.17
தா த்ருஷ்ட்வாந்திகம் ஆயாதா பகவான் வ்ரஜ-யோஷித:
அவதத் வததாம் ஸ்ரேஷ்டோ வாச: பேஸைர் விமோஹயன்

தா:—அவர்களை; த்ருஷ்ட்வா—கண்டு; அந்திகம்—அருகில்; ஆயாதா:—வந்து சேர்ந்தவர்கள்; பகவான்—பரமபுருஷ பகவான்; வ்ரஜ-யோஷித:—விரஜப் பெண்கள்; அவதத்—அவர் கூறினார்; வததாம்—நாவலர்களின்; ஸ்ரேஷ்ட:—மிகச் சிறந்த; வாச:—மொழியின்; பேஸை:—அலங்காரங்களுடன்; விமோஹயன்—மயங்கச் செய்யும்.

விரஜத்தைச் சேர்ந்த பெண்கள் வந்து சேர்ந்தது கண்டு, நாவலர்களின் நாவலரான பகவான் கிருஷ்ணர் அவர்களது மனங்களை மயங்கச் செய்யும் வார்த்தைகளினால் அவர்களுக்கு வாழ்த்துக் கூறினார்.

பதம் 10.29.18
ஸ்ரீ-பகவான் உவாச
ஸ்வாகதம் வோ மஹா-பாகா: ப்ரியம் கிம் கரவாணி வ:
வ்ரஜஸ்யானாமயம் கச்சித் ப்ரூதாகமன-காரணம்

ஸ்ரீ-பகவான் உவாச—முழுமுதற் கடவுள் கூறினார்; ஸு-ஆகதம்—நல்வரவாகுக; வ:—உமக்கு; மஹா-பாகா:—ஓ, மகா பாக்கியசாலிகளே; ப்ரியம்—பிரியமான; கிம்—என்ன; கரவாணி—நான் செய்வது; வ:—உமக்கு; வ்ரஜஸ்ய—விரஜத்தின்; அனாமயம்—நன்றாயிருப்பவர்கள்; கச்சித்—அல்லவா; ப்ரூத—உரைப்பீராக; ஆகமன—நீங்கள் இங்கு வந்ததற்கு; காரணம்—காரணம்.

பகவான் கிருஷ்ணர் கூறினார்: ஓ, மகா பாக்கியசாலிகளே, உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களை மகிழ்விப்பதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? விரஜத்தில் உள்ள எல்லாம் நலந்தானே? நீங்கள் இங்கு வந்ததற்கான காரணத்தை உரைப்பீராக.

பதம் 10.29.19
ரஜனி ஏஷா கோர-ரூபா கோர-ஸத்த்வ-நிஷேவிதா
ப்ரதியாத வ்ரஜம் நேஹ ஸ்தேயம் ஸ்த்ரீபி: ஸீ-மத்யமா:

ரஜனி—இரவு; ஏஷா—இது; கோர-ரூபா—பயங்கரத் தோற்றமுடைய; கோர-ஸத்த்வ—பயங்கரமான விலங்குகளால்; நிஷேவிதா—நிறைந்துள்ள; ப்ரதியாத—திரும்பிச் செல்வீராக; வ்ரஜம்—ஆயர்களின் விரஜ கிராமத்திற்கு; ந—இல்லை; இஹ—இங்கே; ஸ்தேயம்—தங்குவது; ஸ்த்ரீபி:—பெண்கள்; ஸீ-மத்யமா:—ஓ, மெல்லிடைப் பெண்களே.

இந்த இரவோ மிகவும் பயங்கரமானதாக இருக்கின்றது. பயங்கரமான கொடிய விலங்குகள் எங்கும் அலைந்து கொண்டிருக்கின்றன. விரஜத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள் மெல்லிய இடையுடைய பெண்களே. இந்த இடம் பெண்களுக்கு ஏற்ற இடமல்ல.

பதம் 10.29.20
மாதர: பிதர: புத்ரா ப்ராதர: பதயஸ் ச வ:
விசின்வந்தி ஹி அபஸ்யந்தோ மா க்ருட்வம் பந்து-ஸாத்வஸம்

மாதர:—அன்னையர்; பிதர:—தந்தையர்; புத்ரா:—புதல்வர்கள்; ப்ராதர:—சகோதரர்கள்; பதய:—கணவர்கள்; ச—மற்றும்; வ:—உங்கள்; வின்சின்வந்தி—தேடிக்கொண்டிருப்பர்; ஹி—உறுதியாக; அபஸ்யந்த:—காணாது; மா க்ருட்வம்—கொள்ள வேண்டாம்; பந்து—உங்கள் உறவினர்களுக்கு; ஸாத்வஸம்—கவலை.

உங்களைக் காணாது உங்கள் அன்னையரும், தந்தையரும், புதல்வர்களும், சகோதரர்களும் உங்களை நிச்சயம் தேடிக்கொண்டிருப்பர். உங்கள் குடும்பத்தினரின் கவலைக்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.

பதங்கள் 10.29.21 – 10.29.22
த்ருஷ்டம் வனம் குஸீமிதம் ராகேஸ-கர-ரஞ்ஜிதம்
யமுனானில-லீலைஜத் தரு-பல்லவ-ஸோபிதம்

தத் யாத மா சிரம் கோஷ்டம் ஸீஸ்ரூஷத்வம் பதீன் ஸதீ:
க்ரந்தந்தி வத்ஸா பாலாஸ் ச தன் பாயயத துஹ்யத

த்ருஷ்டம்—கண்டுவிட்டீர்கள்; வனம்—வனத்தினை; குஸீமிதம்—மலர்கள் நிறைந்த; ராக-ஈஸ—பெளர்ணமியின் ஆதிபத்தியத் தேவதையான சந்திரன்; கர—கரத்தினால்; ரஞ்ஜிதம்—ஒளிசெய்கின்றான்; யமுனா—யமுனை நதியிலிருந்து வரும்; அனில—காற்றினால்; லீலா—விளையாட்டினால்; ஏஜத்—நடுங்குகின்றன; தரு—மரங்களின்; பல்லவ—இலைகளுடன்; ஸோபிதம்—எழில் செய்யப்பட்டது; தத்—ஆகையினால்; யாத—திரும்பிச் செல்வீர்; மா சிரம்—தாமதமின்றி; கோஷ்டம்—கோகுலத்திற்கு; ஸீஸ்ரூஷத்வம்—நீங்கள் பணிவிடை செய்தல் வேண்டும்; பதீன்—உங்கள் கணவர்களுக்கு; ஸதீ:—ஓ, பத்தினிப் பெண்களே; க்ரந்தந்தி—அழுதுகொண்டிருக்கின்றன; வத்ஸா:—கன்றுகள்; பாலா—குழந்தைகள்; ச—மற்றும்; தான்—அவர்களை; பாயயத—தாய்ப்பால்; துஹ்யத—பசும்பாலைக் கொடுங்கள்.

முற்றிலும் மலர்கள் நிறைந்து பௌர்ணமி நிலவினால் ஒளி செய்யப்பட்டிருக்கும் விருந்தாவனக் காட்டினை இப்போது நீங்கள் பார்த்துவிட்டீர்கள். யமுனை நதியிலிருந்து வீசும் காற்றினால் இலைகள் ஆடிக்கொண்டிருக்கும் அழகிய மரங்களையும் நீங்கள் கண்டு விட்டீர்கள். ஆகையினால் இப்போது சிறிதும் தாமதியாது கோகுலத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். ஓ, பத்தினிப் பெண்களே! அழுது கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுங்கள், கன்றுகளை அவற்றின் தாய்ப் பசுக்களிடம் பால் அருந்தச் செய்யுங்கள்.

பதம் 10.29.23
அத வா மத்-அபிஸ்நேஹாத் பவத்யோ யந்த்ரிதாஸயா:
ஆகதா ஹி உபபன்னம் வ: ப்ரீயந்தே மயி ஜந்தவ:

அத வா—அல்லது; மத்-அபிஸ்நேஹாத்—என்மீது கொண்ட காதலினால்; பவத்-ய:—நீவீர்; யந்த்ரித—வசப்படுத்தப்பட்டு; ஆஸயா:—உங்கள் இதயங்கள்; ஆகதா:—வந்திருக்கின்றீர்கள்; ஹி—உண்மையில்; உபபன்னம்—பொருத்தமானது; வ:—உங்களுக்கு; ப்ரீயந்தே—பிரியம் வைத்திருத்தல்; மயி—எனக்கு; ஜந்தவ:—எல்லா உயிரினங்களும்.

மாறாக என்மீது கொண்ட காதலினால் உங்கள் இதயங்கள் வயப்பட்டு அதனால் நீங்கள் இங்கே வந்திருக்கலாம். அவ்வாறெனில் நீங்கள் செய்தது பாராட்டுக்குரியதே. காரணம் எல்லா உயிரினங்களும் இயற்கையிலேயே என்மீது பிரியம் உடையவையாகும்.

பதம் 10.29.24
பர்து: ஸீஸ்ரூஷணம் ஸ்த்ரீணாம் பரோ தர்மோ ஹி அமாயயா
தத்-பந்தூனாம் ச கல்யாண: ப்ரஜானாம் சானுபோஷணம்

பர்து:—தனது கணவரின்; ஸீஸ்ரூஷணம்—நம்பிக்கைக்குரிய தொண்டு; ஸ்த்ரீணாம்—பெண்களுக்கு; பர:—உயர்ந்தது; தர்ம:—சமய தர்மம்; ஹி—உண்மையில்; அமாயயா—பொய்மையின்றி; தத்-பந்தூனாம்—தங்கள் கணவர்களின் உறவினர்களுக்கு; ச—மற்றும்; கல்யாண:—நன்மை செய்தல்; ப்ரஜானாம்—அவர்களின் குழந்தைகளுக்கு; ச—மற்றும்; அனுபோஷணம்—கவனித்தல்.

தனது கணவனுக்குப் பணிவிடை செய்தலும், அவன் உறவினர்களிடத்து அன்புடன் நடத்தலும், தனது குழந்தைகளை நன்கு பராமரித்தலும் ஒரு பெண்ணின் மிகச் சிறந்த சமய தர்மமாகும்.

பதம் 10.29.25
து: ஸீலோ துர்பகோ வ்ருத்தோ ஜடோ ரோகி அதனோ ‘பி வா
பதி: ஸ்த்ரீபிர் ந ஹாதவ்யோ லோகேப்ஸீபிர் அபாதகீ

து: ஸீல:—துர்நடத்தை; துர்பக:—துர்பாக்கியம்; வ்ருத்த:—முதுமை; ஜட:—ஜடமாக இருத்தல்; ரோகீ—பிணியாளன்; அதன:—வறுமை; அபி வா—இருந்தபோதிலும்; பதி:—கணவன்; ஸ்த்ரீபி:—பெண்களால்; ந ஹாதவ்ய:—புறக்கணிக்கக் கூடாது; லோக—மறுபிறப்பில் நற்கதியடைய; ஈப்ஸீபி:—விரும்புவோர்; அபாதகீ—வீழ்ச்சியடையாது (இருந்தானென்றால்).

தனது கணவன் துர்நடத்தையுள்ளவனாகவும், துரதிர்ஷ்டமுடையவனாகவும், வயோதிகனாகவும், மதிகுறைந்தவனாகவும், நோயாளனாகவும், வறுமையாளனாகவும் இருந்த போதிலும் அவன் தனது சமய தர்மத்தினின்றும் தவறாதவனாக இருந்தானென்றால், மறுபிறப்பில் நற்கதியடைய வேண்டுமென்று விரும்பும் ஒரு பெண் ஒருபோதும் அவனைப் புறக்கணிக்கக் கூடாது.

பதம் 10.29.26
அஸ்வர்க்யம் அயஸஸ்யம் ச பல்கு க்ருச்ரம் பயாவஹம் ஜீகுப்ஸிதம் ச ஸர்வத்ர ஹி ஒளபபத்யம் குல-ஸ்த்ரிய:

அஸ்வர்க்யம்—சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லாது; அயஸஸ்யம்—நற்பெருமைக்குக் களங்கமாகும்; ச—மற்றும்; பல்கு—முக்கியத்துவமற்ற; க்ருச்ச்ரம்—இடர்; பய-ஆவஹம்—அச்சந்தரும்; ஜீகுப்ஸிதம்—நிந்தனைக்குரியது; ச—மற்றும்; ஸர்வத்ர—எல்லா நிகழ்வுகளிலும்; ஹி—உண்மையில்; ஒளபபத்யம்—ஒழுக்கங்கெட்ட செயல்கள்; குல-ஸ்த்ரிய:—மரியாதை மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு.

மரியாதைமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்குத் தீயொழுக்கங்கள் எப்போதும் நிந்தனைக்குரியவையாகும். அவை அவளை சொர்க்கம் செல்ல விடாது, அவளது பெருமையினை அழிக்கும், அவளை இடருக்கும் அச்சத்திற்கும் ஆளாக்கும்.

பதம் 10.29.27
ஸ்ரவணாத் தர்ஸனாத் த்யானான் மயி பாவோ ‘னு கீர்தனாத்
ந ததா ஸன்னிகர்ஷேண ப்ரதியாத ததோ க்ருஹான்

ஸ்ரவணாத்—(எனது பெருமைகளை) கேட்பதினால்; தர்ஸனாத்—கோவிலிலுள்ள எனது திருமூர்த்தத்தை தரிசிப்பதினால்; த்யானாத்—தியானத்தினால்; மயி—எனக்கு; பாவ:—நேசம்; அனுகீர்தனாத்—அதனைத் தொடர்ந்து ஓதுவதினால்; ந—இல்லை; ததா—அதே போன்று; ஸன்னிகர்ஷேண—உடல்ரீதியான அண்மையில் இருப்பதினால்; ப்ரதியாத—திரும்பிச் செல்வீர்; தத:—ஆகையினால்; க்ருஹான்—உங்கள் இல்லங்களுக்கு.

எனது பெருமைகளைக் கேட்பதினாலும், எனது திருமூர்த்தியை வழிபடுவதினாலும், என்னைத் தியானித்து எனது கீர்த்திகளை நம்பிக்கையுடன் ஓதுவதினாலும் என்மீதான தெய்வீகக் காதல் வளர்ச்சியடைகின்றது. இந்த பலன் உடல் ரீதியாக எனது அண்மையில் இருப்பதினால் கிடைக்காது. அதனால் உங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்.

பதம் 10.29.28
ஸ்ரீ-ஸீக உவாச
இதி விப்ரியம் ஆகர்ண்ய கோப்யோ கோவிந்த-பாஷிதம்
விஷண்ணா பக்ன-ஸங்கல்பாஸ் சிந்தம் ஆபுர் துரத்யயாம்

ஸ்ரீ-ஸீக உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; விப்ரியம்—மகிழ்ச்சியற்ற; ஆகர்ண்ய—கேட்டு; கோப்ய:—கோபியர்கள்; கோவிந்த-பாஷிதம்—கோவிந்தன் அருளிய மொழிகள்; விஷண்ணா:—துக்கமடைந்தனர்; பக்ன—நிலைகுலைந்தனர்; ஸங்கல்பா:—அவர்களது பெருவிருப்பங்கள்; சிந்தம்—கவலை; ஆபு:—அவர்கள் அனுபவித்தனர்; துரத்யயாம்—கடப்பதற்கரிய.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கோவிந்தன் அருளிய இனிமையற்ற மொழிகளைக் கேட்டுக் கோபியர்கள் துக்கமடைந்தனர். அவர்களது நம்பிக்கை தகர்ந்து போனது. அவர்கள் கடப்பதற்குரிய கவலையில் மூழ்கினர்.

பதம் 10.29.29
க்ருத்வா முகானி அவ ஸீச: ஸ்வஸனேன ஸீஷ்யத்
பிம்பாதராணி சரணேன புவ: விகந்த்ய:
அஸ்ரைர் உபாத்த-மஸிபி: குச-குங்குமானி
தஸ்துர் ம்ருஜந்த்ய உரு-து:க-பரா: ஸ்ம தூஷ்ணீம்

க்ருத்வா—இட்டு; முகானி—அவர்களின் முகங்கள்; அவ—கீழ் நோக்கி; ஸீச:—துயரத்தினால்; ஸ்வஸனேன—பெருமூச்சினால்; ஸீஷ்யத்—வறண்டுபோனது; பிம்ப—கோவைப்பழம் (போல் தோன்றின); அதராணி—அவர் தம் இதழ்கள்; சரணேன—தங்கள் பாதங்களினால்; புவ:—நிலத்தை; விகந்த்ய:—கீறினர்; அஸ்ரை:—அவர்களின் கண்ணீர்; உபாத்த—சுமந்து சென்றது; மஸிபி:—அவர்கள் கண்களில் உள்ள மையினை; குச—மார்பகங்களின் மேல்; குங்குமானி—குங்குமத்தூள்; தஸ்து:—நின்றுகொண்டிருந்தனர்; ம்ருஜந்த்ய:—கழுவிச் சென்றது; உரு—அதிகமான; து:க—துக்கத்தின்; பரா:—பாரத்தினால்; ஸ்ம—உண்மையில்; தூஷ்ணீம்—அமைதியாக.

கோபியர்கள் தலைகுனிந்து நின்றனர். அவர்களது துயரத்தின் காரணமாக வெளிப்பட்ட நீண்ட பெருமூச்சு, கோவைப் பழம் போல சிவந்திருந்த அவர்கள் அதரங்களை வறண்டுபோகச் செய்தது. தமது பாதங்களினால் அவர்கள் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தனர். அவர்களின் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர், கண்களில் தீட்டிய மையினைச் சுமந்துவந்து, அவர்கள் மார்பகங்களில் தொய்யில் எழுதிய குங்குமத் துகள்களைக் கரைத்துச் சென்றது. இவ்வாறு அவர்கள் துன்பத்தின் பாரத்தைச் சுமந்து கொண்டு அமைதியுடன் நின்று கொண்டிருந்தனர்.

பதம் 10.29.30
ப்ரேஷ்டம் ப்ரியேதரம் இவ ப்ரதிபாஷமாணம்
க்ருஷ்ணம் தத்-அர்த-விநிவர்தித-ஸர்வ-காமா:
நேத்ரே விம்ருஜ்ய ருதிதோபஹதே ஸ்ம கிஞ்சித்
ஸம்ரம்ப-கத்கத-கிரோ ‘ப்ருவதானுரக்தா:

ப்ரேஷ்டம்—அவர்கள் பிரியத்திற்குரிய; ப்ரிய-இதரம்—நேசிப்பிற்குரியவர்களுக்கு எதிராக; இவ—போன்று; ப்ரதிபாஷமாணம்—அவர்களிடம் கூறியது; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; தத்-அர்த—அவருக்காக; விநிவர்தித—துறந்தனர்; ஸர்வ—அனைத்தையும்; காமா:—அவர்களின் பெளதிக இச்சைகள்; நேத்ரே—அவர்களது விழிகள்; விம்ருஜ்ய—துடைத்து; ருதித—அவர்களின் அழுகையினை; உபஹதே—நின்றது; ஸ்ம—பிறகு; கிஞ்சித்—சில; ஸம்ரம்ப—சீற்றத்துடன்; கத்கத—விம்மிய படி; கிர:—அவர்களது குரல் ஒலி; அப்ருவத—அவர்கள் கூறினர்; அனுரக்தா:—உறுதியான பற்றுடன்.

கிருஷ்ணர் அவர்களுக்குப் பிரியமானவராக இருந்த போதிலும், அவருக்காக அவர்கள் எல்லாவற்றையும் துறந்து வந்த போதிலும், அவர் அவர்களிடம் மிகவும் கடுமையாகப் பேசி விட்டார். இருந்தும் அவர்மீது அவர்கள் வைத்திருந்த பற்றில் மிக்க உறுதியுடையவர்களாக இருந்தனர். அவர்கள் தமது அழுகையை நிறுத்திக் கண்களைத் துடைத்துக் கொண்டு துயர் மிகுதியினால் விம்மியபடி சீற்றத்துடன் பேசத் தொடங்கினர்.

பதம் 10.29.31
ஸ்ரீ-கோப்ய ஊசு:
மைவம் விபோ ‘ர்ஹதி பவான் கதிதும் ந்ரு-ஸம்ஸம்
ஸந்த்யஜ்ய ஸர்வ-விஷயாம்ஸ் தவ பாத-மூலம்
பக்தா பஜஸ்வ துரவக்ரஹ மா த்யஜாஸ்மான்
தேவோ யதாதி-புருஷோ பஜதே முமுக்ஷூன்

ஸ்ரீ-கோப்ய ஊசு:—அழகிய கோபியர்கள் கூறினர்; மா—இல்லை; ஏவம்—இவ்வாறு; விபோ—ஓ, சர்வ சக்தியுடையவரே; அர்ஹதி—வேண்டும்; பவான்—நீங்கள்; கதிதும்—கூறியது; நிரு-ஸம்ஸம்—கடுமையாக; ஸந்த்யஜ்ய—முற்றிலும் துறந்து; ஸர்வ—அனைத்தையும்; விஷயான்—புலன் நுகர்ச்சி விஷயங்களையும்; தவ—உமது; பாத-மூலம்—பாதமூலம்; பக்தா:—வழிபடுகின்றோம்; பஜஸ்வ—எமக்குக் கைம்மாறு செய்வீராக; துரவக்ர:—ஓ, உறுதி மிக்கவரே; மா த்யஜ—புறக்கணிக்க வேண்டாம்; அஸ்மான்—எம்மை; தேவா:—முழுமுதற் கடவுள்; யதா—போன்று; ஆதி-புருஷ:—ஆதிபுருஷர் நாராயணர்; பஜதே—கைம்மாறு விரும்புவோர்க்கு; முமுக்ஷுன்—முக்தியடைய செய்கிறார்.

அழகிய கோபியர்கள் கூறினர்: ஓ, சர்வ சக்தியுடையவரே, இவ்வளவு கொடுமையாக நீர் பேச வேண்டாம். உமது தாமரைத் திருவடிகளுக்குப் பக்தித் தொண்டு செய்வதற்காக எமது பௌதிக இச்சைகள் அனைத்தும் துறந்து வந்திருக்கும் எம்மை நீர் மறுதலிக்க வேண்டாம். முக்தி பெற வேண்டும் என்று முயலும் தமது பக்தர்களுக்கு ஆதி புருஷரான ஸ்ரீ நாராயணர் கைம்மாறு செய்வது போல ஓ, உறுதியுடையவரே, நீரும் எமக்குக் கைம்மாறு செய்வீராக.

பதம் 10.29.32
யத் பதி-அபத்ய-ஸுஹ்ருதாம் அனுவ்ருத்திர் அங்க
ஸ்த்ரீணாம் ஸ்வ-தர்ம இதி தர்ம-விதா த்வயோக்தம்
அஸ்த்வ் ஏவம் ஏதத் உபதேஸ-பதே த்வயீஸே
ப்ரரேஷ்டோ பவாம்ஸ் தனு-ப்ருதாம் கில பந்துர் ஆத்மா

யத்—இது; பதி—கணவர்களின்; அபத்ய—குழந்தைகள்; ஸுஹ்ருதாம்—நலம் விரும்பும் உறவினர்களும், நண்பர்களும்; அனுவ்ருத்தி:—பின்பற்றுதல்; அங்க—எங்கள் அன்பு கிருஷ்ணரே; ஸ்த்ரீணாம்—பெண்களின்; ஸ்வ-தர்ம:—சுயதர்மம்; இதி—இவ்வாறு; தர்ம-விதா—தர்மம் அறிந்தவரால்; த்வயா—நீர்; உக்தம்—கூறியது; அஸ்து—ஆகட்டும்; ஏவம்—அதைப் போல்; ஏதத்—இந்த; உபதேஸ—உபதேசம்; பதே—உண்மைப் பொருளுக்கு; த்வயி—நீர்; ஈஸே—ஓ, பகவானே; ப்ரேஷ்ட:—மிகவும் பிரியமான; பவான்—நீர்; தனு-ப்ருதாம்—உடல் பெற்ற உயிர்கள் அனைத்திற்கும்; கில—நிச்சயமாக; பந்து:—நெருங்கிய உறவினர்; ஆத்மா—ஆத்மாவும்.

எங்கள் அன்பிற்குரிய கிருஷ்ணரே! தர்மத்தில் தேர்ந்தவராக, எங்களுக்குரிய சிறந்த சுதர்மம் எங்கள் கணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிற உறவினர்களுக்கும் சிரத்தையுடன் பணிவிடை செய்வதே என்று எங்களுக்கு உபதேசித்துள்ளீர். இதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நீர் கூறிய பணிவிடைகள் அனைத்தும் உமக்கே செய்யப்பட வேண்டும். ஓ, பகவானே! உடல் பெற்ற உயிர்கட்கெல்லாம் நீரே பாசமிகு நண்பராவீர். நீரே அவர்களின் நெருங்கிய உறவினராகவும், ஏன், அவர்களின் ஆத்மாவாகவும் இருக்கின்றீர்.

பதம் 10.29.33
குர்வந்தி ஹி த்வயி ரதிம் குஸலா: ஸ்வ ஆத்மன்
நித்ய-ப்ரியே பதி-ஸுதாபிர் ஆர்தி-தை: கிம்
தன் ந: ப்ரஸீத பரமேஸ்வர மா ஸ்ம சிந்த்யா
ஆஸாம் த்ருதாம் த்வயி சிராத் அரவிந்த-நேத்ர

குர்வந்தி—அவர்கள் காட்டுகின்றனர்; ஹி—உண்மையில் த்வயி—உமக்கு; ரதிம்—கவர்ச்சி; குஸலா:—தேர்ந்தவர்கள்; ஸ்வே—அவர்களுக்குரிய; ஆத்மன்—ஆத்மா; நித்ய—நித்தியமாக; ப்ரியே—பிரியமானவர்; பதி—எங்கள் கணவர்களுடன்; ஸுத—புதல்வர்கள்; ஆதிபி—பிற உறவினர்கள்; ஆர்தி-தை:—அவர்கள் துன்பம் மட்டுமே அளிக்கின்றனர்; கிம்—என்ன; தத்—ஆகையினால்; ந:—எங்களுக்கு; ப்ரஸீத—கருணை காட்டுவீராக; பரம-ஈஸ்வர—ஓ, பரம நெறியாளரே; மாஸ்ம-சிந்த்யா:—துண்டித்துவிட வேண்டாம்; ஆஸாம்—எமது நம்பிக்கைகள்; த்ருதாம்—தாங்கப்பட்ட; த்வயி—உமக்காக; சிராத்—நெடுங்காலமாக; அரவிந்த-நேத்ர—ஓ, செந்தாமரை மலர் போன்ற விழியுடையவரே.

தேர்ந்த உன்னதமானவர்கள் அனைவரும் தமது பாசத்தினை உங்கள் மீதே வைத்திருக்கின்றனர். ஏனென்றால் நீரே அவர்களின் ஆத்மாவாகவும், நித்திய அன்பிற்குரியவரென்றும் அவர்கள் உம்மை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு எப்போதும் துன்பம் ஒன்றினையே தரும் எமது கணவர்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களால் நாங்கள் பெறும் பயன் என்ன? ஆகையினால் ஓ, பரம ஆளுநரே, எமக்குக் கருணை காட்டுவீராக. ஓ, செந்தாமரை மலர் போன்ற விழியுடையவரே உம்மிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எங்களது நெடுநாள் விருப்பத்தை வெட்டி எறிந்து விடாதீர்.

பதம் 10.29.34
சித்தம் ஸுகேன பவதாபஹ்ருதம் க்ருஹேஷு
யன் நிர்விஸதி உத கராவ் அபி க்ருஹ்ய-க்ருத்யே
பதெள பதம் ந சலதஸ் தவ பாத-மூலாத்
யாம: கதம் வ்ரஜம் அதோ கரவாம கிம் வா

சித்தம்—எமது மனங்கள்; ஸுகேன—எளிதாக; பவதா—உம்மால்; அபஹ்ருதம்—திருடப்பட்டுவிட்டன; க்ருஹேஷு—எமது இல்லறக் கடமைகள்; யத்—எது; நிர்விஸதி—ஆழ்ந்திருந்த; உத—மேலும்; கரௌ—எமது கரங்கள்; அபி—இருந்த போதிம்; க்ருஹ்ய-க்ருத்யே—இல்லறப் பணியில்; பாதௌ—எங்கள்பாதங்கள்; பதம்—ஓர்அடி; நசலத:—அசையாமல் இருக்கின்றன; தவ—உமது; பாத-மூலாத்—பாதங்களினின்று வெளியே; யாம:—நாங்கள் செல்வது; கதம்—எவ்வாறு; வ்ரஜம்—விரஜத்திற்குத் திரும்பிச் செல்வது; அதோ—அதன் பிறகு; கரவாம—நாங்கள் செய்வது; கிம்—என்ன; வா—மேலும்.

இன்றுவரை எமது மனங்கள் இல்லறக் கடமைகளிலேயே மூழ்கியிருந்தன. ஆயினும் நீர் எளிதாக அவ்வில்லறக் கடமைகளிலிருந்து எமது மனங்களையும், கரங்களையும் திருடிவிட்டீர். இனி உமது தாமரைத் திருடிகளிலிருந்து ஓரடி கூட எங்கள் பாதங்கள் நகராது. எவ்வாறு எங்களால் விரஜத்திற்குத் திரும்பிச் செல்ல முடியும்? அங்கே நாங்கள் செய்யப் போவதென்ன?

பதம் 10.29.35
சிந்சாங்க மஸ் த்வத்-அதராம்ருத-பூரகேண
ஹாஸாவலோக-கல-கீத-ஜ-ஹ்ருச்-சயாக்னிம்
நோ சேத்வயம் விரஹஜாக்னி-உபயுக்த-தேஹா
த்யானேன யாம பதயோ: பதவீம் ஸகே தே

ஸிந்ச—தெளிப்பீராக; அங்க—எங்கள் அன்புக் கிருஷ்ணரே; ந:—எமது; த்வத்—உம்முடைய; அதர—அதரங்களின்; அம்ருத—அமிர்தத்தின்; பூரகேண—வெள்ளத்துடன்; ஹாஸ—புன்னகை; அவலோக—உமது பார்வைகளினால்; கல—இனிமை வாய்ந்த; கீத—மற்றும் கீதத்தின் (உமது புல்லாங்குழலின்); ஜ—உண்டான; ஹ்ருத்-ஸய—எங்கள் இதயங்களிலுள்ள; அக்னிம்—நெருப்பு; ந உ சேத்—இல்லையேல்; வயம்—நாங்கள்; விரஹ—பிரிவுத்துயரினால்; ஜ—பிறந்த; அக்னி—நெருப்பினுள்; உபயுக்த—இட்டு; தேஹா:—எங்கள் தேகங்களை; த்யானேன—தியானத்தினால்; யாம—நாங்கள் செல்வோம்; பதயோ:—பாதங்களின்; பதவீம்—இடத்திற்கு; ஸகே—ஓ, நண்பரே; தே—உமது.

அன்பார்ந்த கிருஷ்ணரே, உமது அதரங்களிலுள்ள அமிர்தத்தினை எங்கள் இதயங்களில் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பின்மீது ஊற்றுவீராக! இந்நெருப்பு உமது புன்னகை நிறைந்த பார்வையினாலும், உமது குழலிலிருந்து எழும் இனிய ஓசையினாலும் மூட்டப்பட்டதாகும். அவ்வாறு நீர் ஊற்றவில்லை யென்றால், ஓ, நண்பரே! விரகதாபம் என்றும் நெருப்பிற்கு எங்களது தேகங்களை நாங்கள் ஒப்படைத்து விடுவோம். அதன் மூலம் யோகிகளைப் போல நாங்களும் தியானத்தினால் உமது திருவடித் தாமரைகளை அடைவோம்.

பதம் 10.29.36
யர்ஹி அம்புஜாக்ஷ தவ பாத-தளம் ரமாயா
தத்த-க்ஷணம் க்வசித் அரண்ய-ஜன-ப்ரியஸ்ய
அஸ்ப்ராக்ஷ்ம தத்-ப்ரப்ருதி நான்ய-ஸமக்ஷம் அஞ்ஜ
ஸ்தா தும்ஸ் த்வயாபிரமிதா பத பாரயாம:

யர்ஹி—அப்பொழுது; அம்புஜ—தாமரை மலர்கள் போன்ற; அக்ஷ—ஓ, விழிகளை உடையவரே; தவ—உமது; பாத—பாதங்களின்; தளம்—அடியில்; ரமாயா:—அதிர்ஷ்ட தேவதையான ஸ்ரீமதி லக்ஷ்மி தேவிக்கு; தத்த—அளிக்கின்றது; க்ஷணம்—ஒரு விழா; க்வசித்—சிலசமயம்; அரண்ய—வனத்தில் வாழ்வோர்; ஜன—மக்கள்; ப்ரியஸ்ய—பிரியமான; அஸ்ப்ராக்ஷ்ம—நாங்கள் தொடுவோம்; தத்-ப்ரப்ருதி—அந்தக் கணத்திலிருந்து; ந—இல்லை; அன்ய—எந்தவொரு ஆடவனின்; ஸமக்ஷம்—முன்பும்; அஞ்ஜ:—நேரடியாக; ஸ்தா தும்—நிற்பதற்கு; த்வயா—உம்மால்; அபிரமிதா:—மகிழ்ச்சி நிறைந்து; பத—நிச்சயமாக; பாரயாம:—நாங்கள் திறன் பெறுவோம்.

ஓ, தாமரை விழியோனே, உமது திருவடித் தாமரைகளைத் தொடுகின்ற பாக்கியம் பெறும்போதெல்லாம் ஸ்ரீமதி இலட்சுமி தேவி ஒரு விழாக்கால உற்சாகத்தினை எய்துகின்றாள். வனத்தில் வாழ்பவர்களுக்கு நீர் மிகவும் பிரியமானவர். ஆகையினால் நாங்களும் அத்தாமரைத் திருவடிகளைத் தீண்டுவோம். அக்கணத்திலிருந்து நாங்கள் பிற ஆடவர் முன்பு நிற்பதற்கும் சக்தியில்லாதவர்கள் ஆகிவிடுவோம். ஏனெனில் உம்மால் நாங்கள் முழுத் திருப்தி பெற்று விடுவோம் அல்லவா.

பதம் 10.29.37
ஸ்ரீர் யத் பாதம்புஜ-ரஜஸ் சகமே துளஸ்யா
லபத்வாபி வக்ஷஸி பதம் கில ப்ருத்ய-ஜீஸ்டம்
யஸ்யா: ஸ்வ-வீக்ஷண உதான்ய-ஸுர ப்ரயாஸஸ்
தத்வத் வயம் ச தவ பாத-ரஜ: ப்ரபன்னா:

ஸ்ரீ—பகவான் நாராயணரின் துணைவியான இலட்சுமி தேவி; யத்—போன்று; பாத-அம்புஜ—தாமரைத் திருவடிகளின்; ரஜ:—தூசு; சகமே—விரும்பினாள்; துளஸ்யா—துளஸீ தேவியுடன்; லப்த்வா—எய்தப்பெற்றும்; அபி—கூட; வக்ஷஸி—அவரது மார்பின் மீது; பதம்—அவள் இடம்பெற்றும்; கில—உண்மையில்; ப்ருத்ய—பணியாளர்களால்; ஜீஷ்டம்—பணி செய்யப்படும்; யஸ்யா:—அவளது (இலட்சுமி தேவியின்); ஸ்வ—தம்மீது; வீக்ஷணே—பார்வைக்காக; உத—மாறாக; அன்ய—பிற; ஸுர—தேவர்கள்; ப்ரயாஸ:—பிரயாசை; தத்வத்—அதே வழியில்; வயம்—நாங்கள்; ச—கூட; தவ—உமது; பாத—பாதங்களின்; ரஜ:—தூசி; ப்ரபன்னா:—அடைக்கலத்திற்காக அணுகுவோம்.

தேவர்களால் நாளும் தேடப்படும் பார்வையினை உடைய இலட்சுமிதேவி தனது பகவான் நாராயணரின் திருமார்பில் எப்போதும் வீற்றிருக்கும் நிலை எய்தப் பெற்றிருக்கின்றாள். இருந்த போதிலும் அவள், துளஸீ தேவியுடனும், பகவானின் பிறபணியாளர்களுடனும் பகிர்ந்தளிக்க வேண்டியிருக்கும் அவரது திருவடித் தாமரைகளின் தூசியினையே பெரிதும் விரும்புகின்றாள். அதுபோல் நாங்களும் உமது திருவடித் தாமரையினை அடைக்கலம் பெறுவதற்காக அணுகுவோம்.

பதம் 10.29.38
தன் ந: ப்ரஸீத வ்ருஜினார்தன தே ‘ங்க்ரி-மூலம்
ப்ராப்தா விஸ்ருஜ்ய வஜதீஸ் த்வத்-உபாஸனாஸா:
த்வத்-ஸுந்தர-ஸ்மித-நிரீக்ஷண-தீவ்ர-காம-
தப் தாத்மனாம் புருஷ-பூஷண தேஹி தாஸ்யம்

தத்—ஆகையினால்; ந:—எமக்கு; ப்ரஸீத—கருணை காட்டுவீராக; வ்ருஜின—அனைத்துத் துன்பங்களையும்; அர்தன—வெற்றி கொள்பவரே; தே—உமது; அங்க்ரி-மூலம்—பாதமூலங்கள்; ப்ராப்தா:—நாங்கள் அணுகியிருக்கின்றோம்; விஸ்ருஜ்ய—துறந்து; வஜதீ:—எங்கள் இல்லங்களை; த்வத்-உபாஜனா—உமது வழிபாடு; ஆஸா:—நம்பிக்கை கொண்டு; த்வத்—உமது; ஸுந்தர—அழகிய; ஸ்மித—புன்னகை; நிரீக்ஷண—பார்வையின் காரணமாக; தீவ்ர—தீவிரமான; காம—காமத்தினால்; தப்த—எரிக்கப்பட்டு; ஆத்மனாம்—அவர்களின் இதயங்கள்; புருஷ—அனைத்து ஆடவர்களின்; பூஷண—ஓ, அணிகலனே; தேஹி—எங்களுக்கு அனுமதியளிப்பீராக; தாஸ்யம்—பணிப்பெண்களாக.

ஓ, துன்பங்கள் அனைத்தையும் வெற்றி கொள்பவரே, ஆகையினால் எங்களுக்குக் கருணை காட்டுவீராக. உமது தாமரைத் திருவடிகளை அடைவதற்காக நாங்கள் எங்கள் குடும்பங்களையும் இல்லங்களையும் துறந்து வந்திருக்கின்றோம். உமக்குப் பணி செய்வதை விட வேறு எதையும் நாங்கள் விரும்பவில்லை. உமது புன்னகை ஒளிரும் பார்வையினால் உண்டான அடக்கவொண்ணா ஆசையினால் எங்கள் இதயங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. ஓ, மனிதருள் மாணிக்கமே! எம்மை உமது பணிப் பெண்களாக ஏற்றுக் கொள்வீராக.

பதம் 10.29.39
வீக்ஷ்யாலகாவ்ருத-முகம் தவ குண்டல-ஸ்ரீ-
கண்ட-ஸ்தலாதர-ஸுதம் ஹஸிதாவ லோகம்
தத்தாபயம் ச புஜ-தண்ட-யுகம் விலோக்ய
வக்ஷ: ஸ்ரியைக-ரமணம் ச பவாம தாஸ்ய:

வீக்ஷ்ய—கண்டு; அலக—உமது தலைமுடியினால்; ஆவ்ருத—மூடப்பட்ட; முகம்—திருமுகம்; தவ—உமது; குண்டல—உமது செவிக்குண்டலங்கள்; ஸ்ரீ—எழிலுடன்; கண்ட-ஸ்தல—கன்னங்களை உடையவர்; அதர—அதரங்கள்; ஸுதம்—அமிர்தம்; ஹஸித—புன்னகை; அவலோகம்—பார்வையுடன்; தத்த—அளிக்கின்றது; அபயம்—அச்சமற்ற தன்மை; ச—மற்றும்; புஜ-தண்ட—உமது உறுதிமிக்கக் கரங்கள்; யுகம்—இரண்டும்; விலோக்ய—கண்டு; வக்ஷ:—உமது மார்பு; ஸ்ரீ—இலட்சுமிதேவி; ஏக—மட்டும்; ரமணம்—இன்பத்தின் ஆதாரம்; ச—மற்றும்; பவாம—நாங்கள் ஆக வேண்டும்; தாஸ்ய:—உமது அடிமைகளாக.

சுருண்ட மயிர்க் குழல்கள் அசைந்தாடும் உமது திருமுகமும், செவிக் குண்டலங்களினால் அழகு செய்யப்படும் உமது கன்னங்களும், அமிர்தம் நிறைந்த உமது அதரங்களும், உமது புன்னகையும் அச்சத்தினை அகற்றும் உமது உறுதிமிக்க இருகரங்களும், இலட்சுமி தேவியின் இன்பத்திற்கு ஆதாரமாகத் திகழும் உமது விரிந்த மார்பும் கண்டு நாங்கள் உமது பணிப்பெண்களாக வரவேண்டுமென்று உறுதியாக விரும்புகின்றோம்.

பதம் 10.29.40
கா ஸ்த்ரி அங்க தே கல-பாதயத-வேணு-கீத-
ஸம்மோஹிதார்ய-சரிதான் ந சலேத் த்ரி-லோக்யாம்
த்ரைலோக்ய-ஸௌபகம் இதம் ச நிரீக்ஷ்ய ரூபம்
யத் கோ-த்விஜ-த்ரும-ம்ருகா: புளகானி அபிப்ரன்

கா—எந்த; ஸ்த்ரீ—பெண்; அங்க—அன்பிற்குரிய கிருஷ்ணரே; தே—உமது; கல—இனிய ஒலி; பத—பக்திகளையுடைய; ஆயத—கவர்ந்திழுக்கும்; வேணு—உமது புல்லாங்குழலின்; கீத—கீதத்தினால்; ஸம்மோஹிதா—முற்றிலும் மயக்கப்பட்டு; ஆர்ய—நாகரிக மக்களின்; சரிதாத்—முறையான நடத்தையிலிருந்து; ந சலேத்—மாறுவதில்லை; த்ரி-லோக்யாம்—மூவுலகங்களிலும்; த்ரை-லோக்ய—மூவுலகங்கள் எல்லாவற்றின்; ஸௌபகம்—மங்களத்திற்குக் காரணம்; இதம்—இந்த; ச—மற்றும்; நிரீக்ஷ்ய—கண்டு; ரூபம்—எழில் ரூபம்; யத்—அதன் காரணமாக; கோ—பசுக்கள்; த்விஜ—பறவைகள்; த்ரும—மரங்கள்; ம்ருகா:—மற்றும் மான்கள்; புளகானி—புளகத்தினை; அபிப்ரன்—அவை எய்துகின்றன.

அன்பிற்குரிய கிருஷ்ணரே! இம்மூவுலகங்களிலும் உள்ள எந்தப் பெண்தான், உமது இனிமையான, எல்லோரையும் கவர்ந்திழுக்கும் குழலோசையினைக் கேட்டு சமய அறநெறிகளை மீறாதிருப்பாள்? உமது எழில் திருக்கோலத்தினைக் காணும் பசுக்களும், பறவைகளும், மரங்களும், மான்களும்கூட புளகாங்கிதமடைந்து மயிர்க்கூச்செறிகின்றன.

பதம் 10.29.41
வ்யக்தம் பவான் வ்ரஜ-பயார்தி-ஹரோ ‘பிஜாதோ
தேவோ யதாதி-புருஷ: ஸுர-லோக-கோப்தா
தன் நோ நிதேஹி கர-பங்கஜம் ஆர்த-பந்தோ
தப்த-ஸ்தனேஷு ச ஸிரக்ஷு ச கிங்கரீணாம்

வ்யக்தம்—வெளிப்படையாக; பவான்—நீர்; வ்ரஜ—விரஜ மக்களின்; பய—பயத்தின்; ஆர்தி—மற்றும் துன்பம்; ஹர:—நீக்குபவர்; அபிஜாத:—அவதரித்திருக்கின்றீர்; தேவ:—முழுமுதற் கடவுள்; யதா—போன்று; ஆதி-புருஷ:—ஆதிபகவான்; ஸுர-லோக—தேவலோகத்தின்; கோப்தா—பாதுகாப்பவர்; தத்—ஆகையினால்; ந:—எமது; நிதேஹி—அன்புடன் வைப்பீராக; கர—உமது கரம்; பங்கஜம்—தாமரை போன்ற; ஆர்த— துயரப்படுவோரின்; பந்தோ—நண்பரே; தப்த—எரியும்; ஸ்தனேஷு—மார்பகங்களின் மீது; ச—மற்றும்; ஸிர: ஸு—சிரங்களின் மீதும்; ச—கூட; கிங்கரீணாம்—உமது பணிப் பெண்களின்.

தேவலோகத்தை முழுமுதற் கடவுள் காத்தருள்வதுபோல், விரஜ மக்களின் துன்பத்தையும், அச்சத்தையும் அகற்றுவதற்காக நீர் இவ்வுலகில் அவதரித்திருக்கின்றீர் என்பது தெளிந்த உண்மையாகும். ஆகையினால் ஓ, துயரப்படுவோரின் நண்பரே, உமது செந்தாமரை மலர்க் கரங்களை உமது பணிப் பெண்களாகிய எனது சிரங்களின் மீதும் எரிகின்ற எமது மார்பகங்களின் மீதும் வைப்பீராக.

பதம் 10.29.42
ஸ்ரீ-ஸுக உவாச
இதி விக்லகிதம் தாஸாம் ஸ்ருத்வா யோகேஸ்வரேஸ்வர:
ப்ரஹஸ்ய ஸ-தயம் கோபீர் ஆத்மாராமோ ‘பி அரீரமத்

ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வார்த்தைகளில்; விக்ல-விதம்—நம்பிக்கை இழந்த தன்மை; தாஸாம்—அவர்களின்; ஸ்ருத்வா—கேட்டு; யோக-ஈஸ்வர-ஈஸ்வர:—யோகேஸ்வரர்களின் ஈஸ்வரர்; ப்ரஹஸ்ய—புன்னகைத்து; ஸ-தயம்—கருணையுடன்; கோபீ:—கோபியர்கள்; ஆத்ம-ஆராம:—சுயதிருப்தியுற்றவராக; அபி—இருந்தபோதிலும்; அரீரமத்—அவர் திருப்தியடைந்தார்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கோபியர்களின் நம்பிக்கையிழந்த இவ்வார்த்தைகளைக் கேட்டு யோகேஸ்வரர்களின் ஈஸ்வரனான பகவான் கிருஷ்ணர் சுயதிருப்தியுற்றவராக இருந்த போதிலும், புன்னகை புரிந்து மிகுந்த கருணையுடன் அவர்களுடன் மகிழ்ந்து களித்தார்.

பதம் 10.29.43
தாபி: ஸமேதாபிர் உதார-சேஷ்டித:
ப்ரியேக்ஷணோத்புல்ல-மூகீபிர் அச்யுத:
உதார-ஹாஸ-த்விஜ-குந்த-தீததிர்
வ்யோரசதைணாங்க இவோடுபிர் வ்ருத:

தாபி:—அவர்களுடன்; ஸமேதாபி—அவர்கள் அனைவரும் இணைந்து; உதார—பெருந்தன்மையுடன்; சேஷ்டித:—அவரது செயல்கள்; ப்ரிய—பிரியம்; ஈக்ஷண—அவரது பார்வையினால்; உத்புல்ல—மலர்ந்த; மூகீபி:—அவர்களின் முகங்கள்; அச்யுத:—குற்றமற்ற பகவான்; உதார—பெருந்தன்மையுடன்; ஹாஸ—புன்னகை; த்விஜ—அவரது பற்களின்; குந்த—முல்லை மலர்கள் (போன்ற); தீத-தி:—ஒளியினைக் காட்டி; வ்யோரசத—அவர் ஒளிமிக்குத் தோன்றினார்; ஏண-அங்க:—கருநிற மானைப் போன்ற அடையாளத்தினைத் தனது உடலில் கொண்ட சந்திரன்; இவ—போன்று; உடுபி:—விண்மீன்களினால்; வ்ருத:—சூழப்பட்டு.

கோபியர்களின் நடுவே குற்றமற்றவரான பகவான் கிருஷ்ணர், விண்மீன்களின் நடுவே இருக்கும் பூரணச் சந்திரனைப் போல் தோன்றினார். அவரது பெருந்தன்மை மிக்கச் செயல்களும், அன்புமிக்க பார்வையும் அவர்களது முகங்களை மலரச் செய்தன. மேலும் அவர் புன்னகைத்த போது, முல்லை மொட்டுக்களை போன்ற அவரது பற்கள் ஒளி வீசின.

பதம் 10.29.44
உபகீயமான உத்காயன் வனிதா-ஸத-யூதப:
மாலாம் பிப்ரத் வைஜயந்தீம் வ்யசரன் மண்டயன் வனம்

உபகீயமான:—பாடப் பெற்றும்; உத்காயன்—தானும் உரக்கப் பாடிக் கொண்டு; வனிதா—பெண்களின்; ஸத—நூற்றுக்கணக்கான; யூதப:—தலைவர்; மாலாம்—மாலை; பிப்ரத்—அணிந்தவர்; வைஜயந்தீம்—வைஜயந்தீ எனப்படும்; (ஐந்து வகையான வண்ணங்களையுடைய மலர்களினால் ஆனது); வ்யசரன்—சென்றார்; மண்டயன்—அழகு செய்யும்; வனம்—வனம்.

கோபியர்கள் அவரது பெருமைகளைப் பாடிய பொழுது நூற்றுக்கணக்கான பெண்களின் தலைவரான அவரும் பதிலுக்குப் பாடினார். விருந்தாவனத்தினை அழகு செய்யும் வைஜயந்தி மலர்களினாலான மாலையினை அணிந்து கொண்டு அவர், அவர்களுடன் உறவாடினார்.

பதங்கள் 10.29.45 – 10.29.46
நத்யா: புளினம் ஆவிஸ்ய கோபீபிர் ஹிம-வாலுகம்
ஜுஷ்டம் தத்-தரளானந்தி குமுதாமோத-வாயுனா

பாஹு-ப்ரஸார-பரிரம்ப-கராலகோரு-
நீவீ-ஸ்தனாலபன-நர்ம-நகாக்ர-பாதை:
க்ஷ்வேல்யாவலோக-ஹஸிதைர் வ்ரஜ-ஸுந்தரீணாம்
உத்தம்பயன் ரதி-பதிம் ரமயாம் சகார

நத்யா:—நதியின்; புளினம்—கரை; ஆவிஸ்ய—அடைந்து; கோபீபி:—கோபியர்களுடன் சேர்ந்து; ஹிம—குளிர்ந்த; வாலுகம்—அதன் மணலினால்; ஜுஷ்டம்—அளித்தது; தத்—அதன்; தரள—அலைகளினால்; ஆனந்தி—ஆனந்தம் அளித்தது; குமுத—தாமரை மலர்களின்; ஆமோத—நறுமணத்தை (சுமந்து கொண்டு); வாயுனா—காற்றினால்; பாஹு—அவரது கரங்களின்; ப்ரஸார—போட்டபடி; பரிரம்ப—தழுவல்களுடன்; கர—அவர்களின் கரங்களின்; அலக—தலைமுடி; உரு—தொடைகள்; நீவீ—மேகலைகள்; ஸ்தனா—மற்றும் மார்பகங்கள்; ஆலபன—ஸ்பரிசத்துடன்; நர்ம—விளையாடியபடி; நக—நகங்களின்; அக்ர-பாதை:—கீறல்களுடன்; க்ஷ்வேல்யா—வேடிக்கையாகப் பேசிக் கொண்டு; அவலோக—பார்த்துக் கொண்டும்; ஹஸிதை:—சிரித்துக் கொண்டும்; வ்ரஜ-ஸுந்தரீணாம்—விரஜத்தின் எழில்மிக்க இளம் பெண்களுடன்; உத்தம்பயன்—எழுப்பினார்; ரதி-பதிம்—மன்மதன்; ரமயாம்-சகார—அவர் இன்பமடைந்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களுடன், தாமரை மலர்களின் நறுமணத்தினைச் சுமந்துகொண்டு, நதியின் அலைகளினால் புத்துணர்ச்சி பெற்ற தென்றல்காற்று வீசிக்கொண்டிருக்கும் குளிர்ந்த மணற்பரப்பினையுடைய யமுனை நதியின் கரைக்குச் சென்றார். அங்கே அவர் தமது கரங்களினால் கோபியர்களைத் தழுவிக் கொண்டார். அவர் அவர்களின் கரங்களையும், தலைமுடியையும், தொடைகளையும், மேகலைகளையும், ஸ்தனங்களையும் தொட்டும், தமது நகங்களினால் அவர்களைக் கிள்ளியும், வேடிக்கையாகப் பேசியும், சிரித்து விளையாடியும் விரஜத்தின் அந்த அழகிய இளம் பெண்களிடம் காதல் உணர்வினைப் பெரிதும் தூண்டினார். இவ்வாறு பகவான் தமது லீலைகளில் மகிழ்ச்சியடைந்தார்.

பதம் 10.29.47
ஏவம் பகவத: க்ருஷ்ணால் லப்த-மானா மஹாத்மன:
ஆத்மானம் மேநிரே ஸ்த்ரீணாம் மானின்யோ ஹி அதிகம் புவி

ஏவம்—இவ்வாறு; பகவத:—முழுமுதற் கடவுளிடமிருந்து; க்ருஷ்ணாத்—பகவான் கிருஷ்ணர்; லப்த—பெற்று; மானா:—சிறப்பு மரியாதை; மஹா-ஆத்மன:—பரமாத்மாவிடமிருந்து; ஆத்மானம்—தம்மை; மேநிரே—அவர்கள் கருதினர்; ஸ்த்ரீணாம்—எல்லாப் பெண்களும்; மானின்ய:—பெருமை கொண்டனர்; ஹி—உண்மையில்; அதிகம்—மிகச் சிறந்த; புவி—புவியில்.

முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் விசேஷ கவனத்தினைத் தாம் பெற்றுவிட்டமைக்காகக் கோபியர்கள் தம்மை எண்ணி மிக்க பெருமை கொண்டனர். ஒவ்வொருத்தியும் இப்பூமியில் தானே மிகச் சிறந்த பெண்ணென்று தன்னைக் கருதிக் கொண்டாள்.

பதம் 10.29.48
தாஸாம் தத்-ஸௌபக மதம் வீக்ஷ்ய மானம் ச கேஸவ:
ப்ரஸமாய ப்ரஸாதாய தத்ரைவான்தரதீயத

தாஸாம்—அவர்களின்; தத்—அந்த; ஸெளபக—நற்பாக்கியத்தின் காரணமாக; மதம்—மதிமயங்கிய நிலை; வீக்ஷ்ய—கண்டு; மானம்—கர்வம்; ச—மற்றும்; கேஸவ:—பகவான் கிருஷ்ணர்; ப்ரஸமாய—அதனைக் குறைக்க வேண்டி; ப்ரஸாதாய—அவர்களுக்குக் கருணை காட்டுவதற்காக; தத்ர ஏவ—அங்கிருந்து; அந்தரதீயத—அவர் மறைந்தார்.

தமது நற்பாக்கியத்தை எண்ணிக் கோபியர்கள் கர்வங் கொண்டதைக் கண்ட பகவான் கேசவன், அவர்களின் கர்வத்தினை நீக்கி அவர்களுக்கு அருள் புரிய வேண்டுமென்று திருவுளங் கொண்டார். அதனால் அவர் திடீரென்று அவர்களின் பார்வையினின்று மறைந்தார்.

ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “ராஸ நடனத்திற்காகக் கிருஷ்ணரும் கோபியரும் சந்தித்தல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தொன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare