அத்தியாயம் – 29
ராஸ நடனத்திற்காகக் கிருஷ்ணரும்
கோபியரும் சந்தித்தல்
பதம் 10.29.1 : ஸ்ரீ பாதராயணி கூறினார்: எல்லா வளங்களும் நிறைந்த முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார். இருந்தும் மலர்ந்த மல்லிகை மலர்களின் நறுமணங்கமழும் சரத்கால இரவுகளைக் கண்டவுடன் காதல் லீலைகள் புரிய அவர் திருவுளங் கொண்டார். தமது எண்ணத்தினை நிறைவேற்றும் பொருட்டு அவர் தமது அகச்சக்தியினை ஏவல் கொண்டார்.

பதம் 10.29.2 : மேலைவானின் முகத்தில் தனது சுகமான கதிர்கள் என்னும் கரங்களினால் சிகப்பு வண்ணம் பூசியவாறு சந்திரன் உதித்துத் தன்னைக் காணும் அனைவரின் வேதனைகளையும் துடைத்தான். நெடுநாள் பிரிந்து சென்ற பாச மிகு கணவன் தனது பிரியமிகு மனைவியின் எழில் முகத்தை செந்நிறக் குங்குமத்தினால் அலங்கரித்ததுபோல் சந்திரன் திகழ்ந்தான்.

பதம் 10.29.3 : பகவான் கிருஷ்ணர், புதிதாக வைக்கப்பட்ட குங்குமப் பொட்டின் சிவந்த ஒளியினை எங்கும் பரப்பியவண்ணம் சிதையாத வட்ட வடிவமான முழுநிலவு வானில் எழுவதைக் கண்டார். அது மகாலட்சுமியின் திருமுகத்தைப் போன்றிருந்தது. நிலவினைக் கண்டு குமுத மலர்கள் மலர்ந்ததையும், அதன் ஒளிக் கதிர்களால் காடு முழுவதும் ஒளிமயமாகத் திகழ்ந்ததையும் அவர் கண்டார். இதன்பின் பகவான் தனது குழலிலிருந்து இனிமையான இசை எழுப்பினார். அந்த இனிய ஒலி எழில் விழிக் கோபியர்களின் மனங்களை மயங்கச் செய்தது.

பதம் 10.29.4 : கிருஷ்ணரின் குழலிசையினைக் கேட்டவுடன் விருந்தாவனத்திலுள்ள இளம்பெண்களின் இதயங்களில் காதல் உணர்ச்சிப் பொங்கிப் பிரவகித்தது. அவர்களின் மனங்கள் பகவானால் ஈர்க்கப்பட்டன. ஒருவரையொருவர் அறியாது அவர்கள் தங்கள் மனங்கவர்ந்தவர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். அவர்கள் விரைந்து சென்றதின் காரணமாக அவர்கள் செவிகளில் அணிந்திருந்த குண்டலங்கள் முன்னும் பின்னும் வேகமாக ஆடின.

பதம் 10.29.5 : கிருஷ்ணரின் குழலோசையினைக் கேட்டபொழுது சில கோபியர்கள் பசுக்களிடமிருந்து பால் கறந்துகொண்டிருந்தனர். அவர்கள் பால் கறப்பதை பாதியிலேயே விட்டுவிட்டு அவரைக் காண ஓடினர். அடுப்பில் வைத்திருந்த பாலை இறக்காமல் சிலரும், சட்டியில் சுட்டுக் கொண்டிருந்த ரொட்டியை அப்படியே விட்டுவிட்டுச் சிலரும் விரைந்து சென்றனர்.

பதங்கள் 10.29.6 – 10.29.7 : அவர்களில் சிலர் ஆடை உடுத்திக் கொண்டிருந்தனர், சிலர் தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் தமது கணவர்களுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தனர். ஆயினும் அவர்கள் தங்கள் செயல்களைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு கிருஷ்ணரைக் காண விரைந்து சென்றனர். மற்றும் சில கோபியர்கள் மாலை உணவு உட்கொண்டும், நீராடிக் கொண்டும், அலங்கரித்துக் கொண்டும், கண்களில் மைதீட்டிக் கொண்டும் இருந்தனர். எனினும் இந்த கோபியர்கள் எல்லாம் தங்கள் செயல்களை அப்படியே நிறுத்திவிட்டு, ஆடை உடுத்தும் உடுத்தாமலும், ஆபரணம் அணிந்தும் அணியாமலும் அலங்கோலமாகவும், அவசரக் கோலமாகவும் கிருஷ்ணர் இருக்கும் இடத்திற்கு விரைந்தனர்.

பதம் 10.29.8 : கோபியர்களின் கணவர்களும், தந்தையரும், சகோதரர்களும், பிற உறவினர்களும் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோதிலும் பகவானின் குழலிசையில் மனம் பறிகொடுத்த அவர்கள் திரும்பிவர மறுத்து விட்டனர்.

பதம் 10.29.9 : எனினும் வேறுசில காரணங்களினால் தமது இல்லங்களிலிருந்து வெளியே வரமுடியாத சில கோபியர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே தூய்மையான காதலுடன் தமது கண்களை மூடியபடி அவரைத் தியானித்தனர்

பதங்கள் 10.29.10 – 10.29.11 : கிருஷ்ணரைக் காணமுடியாது போன கோபியர்கள் தாங்க வொண்ணாத அவரது பிரிவுத் துயரின் காரணமாக தம்மிடமுள்ள கர்ம பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றனர். அவரைத் தியானித்ததினால் அவர்கள் அவரால் தழுவப்பட்டதை உணர்ந்தனர். அந்த ஆனந்தத்தில் அவர்கள் தமது புண்ணியபலன்கள் அனைத்தையும் அடையப்பெற்றனர். பகவான் கிருஷ்ணர் பரமாத்மாவாக இருந்த போதிலும் இப்பெண்கள் அவரைத் தமது அன்பிற்குரிய காதலராகக் கருதி மிகவும் நெருக்கமான மனநிலையில் அவருடன் தொடர்பு கொண்டனர். இதனால் அவர்தம் கர்மத்தளைகள் எல்லாம் இல்லாதொழிந்தன. அவர்கள் தமது பூத பெளதிக உடல்களைத் துறந்தனர்.

பதம் 10.29.12 : ஸ்ரீ பரீக்ஷித்து மகாராஜா கூறினார்: கோபியர்கள் கிருஷ்ணரை முழுமெய்ப்பொருளாக அன்றித் தமது காதலராக மட்டுமே அறிவர். அப்படியிருக்க ஜட இயற்கைக் குணங்களினால் பீடிக்கப்பட்ட மனங்களையுடைய இப்பெண்கள் தங்களைப் பௌதிகப் பற்றிலிருந்து எவ்வாறு விடுவித்துக் கொண்டனர்?

பதம் 10.29.13 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இதுபற்றி முன்பே உனக்கு விளக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணரை வெறுத்த சேதிநாட்டு அரசன் சிசுபாலனே சித்திபெற்றான் என்றால் பகவானுக்கு மிகவும் பிரியமான கோபியர்களைப்பற்றி என்ன சொல்ல இருக்கிறது.

பதம் 10.29.14 : ஓ, மன்னனே! பரமபுருஷ பகவான், குறையா நிறைவளமுடையவர் என்பதோடு ஜட இயல்புகளால் அவர் தீண்டப்படாதவரும் ஆவார். ஏனென்றால் அக்குணங்களின் தலைவரும் அவரே ஆவார். அவர் இப்பூமியில் அவதரித்ததானது மனித இனம் உயர்நலம் பெறுவதற்கு அருள் புரிவதற்கேயாகும்.

பதம் 10.29.15 : பகவான் ஹரியினிடத்தில் தமது காமம், குரோதம், பயம், பாசமிகு உறவு, ஐக்கியம் அல்லது நட்புறவு போன்ற உணர்வுகளைத் தொடர்ந்து செலுத்துபவர்கள் அவரது நினைவிலேயே மூழ்கிவிடுவர் என்பது உறுதியாகும்.

பதம் 10.29.16 : பிறப்பற்றவரும், யோகேஸ்வர்களின் ஈஸ்வரரும், முழுமுதற் கடவுளுமான கிருஷ்ணரை எண்ணி நீ ஆச்சரியப்படக் கூடாது. அவரால் தான் இவ்வுலகம் விடுதலை பெறுகிறது.

பதம் 10.29.17 : விரஜத்தைச் சேர்ந்த பெண்கள் வந்து சேர்ந்தது கண்டு, நாவலர்களின் நாவலரான பகவான் கிருஷ்ணர் அவர்களது மனங்களை மயங்கச் செய்யும் வார்த்தைகளினால் அவர்களுக்கு வாழ்த்துக் கூறினார்.

பதம் 10.29.18 : பகவான் கிருஷ்ணர் கூறினார்: ஓ, மகா பாக்கியசாலிகளே, உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களை மகிழ்விப்பதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? விரஜத்தில் உள்ள எல்லாம் நலந்தானே? நீங்கள் இங்கு வந்ததற்கான காரணத்தை உரைப்பீராக.

பதம் 10.29.19 : இந்த இரவோ மிகவும் பயங்கரமானதாக இருக்கின்றது. பயங்கரமான கொடிய விலங்குகள் எங்கும் அலைந்து கொண்டிருக்கின்றன. விரஜத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள் மெல்லிய இடையுடைய பெண்களே. இந்த இடம் பெண்களுக்கு ஏற்ற இடமல்ல.

பதம் 10.29.20 : உங்களைக் காணாது உங்கள் அன்னையரும், தந்தையரும், புதல்வர்களும், சகோதரர்களும் உங்களை நிச்சயம் தேடிக்கொண்டிருப்பர். உங்கள் குடும்பத்தினரின் கவலைக்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.

பதங்கள் 10.29.21 – 10.29.22 : முற்றிலும் மலர்கள் நிறைந்து பௌர்ணமி நிலவினால் ஒளி செய்யப்பட்டிருக்கும் விருந்தாவனக் காட்டினை இப்போது நீங்கள் பார்த்துவிட்டீர்கள். யமுனை நதியிலிருந்து வீசும் காற்றினால் இலைகள் ஆடிக்கொண்டிருக்கும் அழகிய மரங்களையும் நீங்கள் கண்டு விட்டீர்கள். ஆகையினால் இப்போது சிறிதும் தாமதியாது கோகுலத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். ஓ, பத்தினிப் பெண்களே! அழுது கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுங்கள், கன்றுகளை அவற்றின் தாய்ப் பசுக்களிடம் பால் அருந்தச் செய்யுங்கள்.

பதம் 10.29.23 : மாறாக என்மீது கொண்ட காதலினால் உங்கள் இதயங்கள் வயப்பட்டு அதனால் நீங்கள் இங்கே வந்திருக்கலாம். அவ்வாறெனில் நீங்கள் செய்தது பாராட்டுக்குரியதே. காரணம் எல்லா உயிரினங்களும் இயற்கையிலேயே என்மீது பிரியம் உடையவையாகும்.

பதம் 10.29.24 : தனது கணவனுக்குப் பணிவிடை செய்தலும், அவன் உறவினர்களிடத்து அன்புடன் நடத்தலும், தனது குழந்தைகளை நன்கு பராமரித்தலும் ஒரு பெண்ணின் மிகச் சிறந்த சமய தர்மமாகும்.

பதம் 10.29.25 : தனது கணவன் துர்நடத்தையுள்ளவனாகவும், துரதிர்ஷ்டமுடையவனாகவும், வயோதிகனாகவும், மதிகுறைந்தவனாகவும், நோயாளனாகவும், வறுமையாளனாகவும் இருந்த போதிலும் அவன் தனது சமய தர்மத்தினின்றும் தவறாதவனாக இருந்தானென்றால், மறுபிறப்பில் நற்கதியடைய வேண்டுமென்று விரும்பும் ஒரு பெண் ஒருபோதும் அவனைப் புறக்கணிக்கக் கூடாது.

பதம் 10.29.26 : மரியாதைமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்குத் தீயொழுக்கங்கள் எப்போதும் நிந்தனைக்குரியவையாகும். அவை அவளை சொர்க்கம் செல்ல விடாது, அவளது பெருமையினை அழிக்கும், அவளை இடருக்கும் அச்சத்திற்கும் ஆளாக்கும்.

பதம் 10.29.27 : எனது பெருமைகளைக் கேட்பதினாலும், எனது திருமூர்த்தியை வழிபடுவதினாலும், என்னைத் தியானித்து எனது கீர்த்திகளை நம்பிக்கையுடன் ஓதுவதினாலும் என்மீதான தெய்வீகக் காதல் வளர்ச்சியடைகின்றது. இந்த பலன் உடல் ரீதியாக எனது அண்மையில் இருப்பதினால் கிடைக்காது. அதனால் உங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்.

பதம் 10.29.28 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கோவிந்தன் அருளிய இனிமையற்ற மொழிகளைக் கேட்டுக் கோபியர்கள் துக்கமடைந்தனர். அவர்களது நம்பிக்கை தகர்ந்து போனது. அவர்கள் கடப்பதற்குரிய கவலையில் மூழ்கினர்.

பதம் 10.29.29 : கோபியர்கள் தலைகுனிந்து நின்றனர். அவர்களது துயரத்தின் காரணமாக வெளிப்பட்ட நீண்ட பெருமூச்சு, கோவைப் பழம் போல சிவந்திருந்த அவர்கள் அதரங்களை வறண்டுபோகச் செய்தது. தமது பாதங்களினால் அவர்கள் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தனர். அவர்களின் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர், கண்களில் தீட்டிய மையினைச் சுமந்துவந்து, அவர்கள் மார்பகங்களில் தொய்யில் எழுதிய குங்குமத் துகள்களைக் கரைத்துச் சென்றது. இவ்வாறு அவர்கள் துன்பத்தின் பாரத்தைச் சுமந்து கொண்டு அமைதியுடன் நின்று கொண்டிருந்தனர்.

பதம் 10.29.30 : கிருஷ்ணர் அவர்களுக்குப் பிரியமானவராக இருந்த போதிலும், அவருக்காக அவர்கள் எல்லாவற்றையும் துறந்து வந்த போதிலும், அவர் அவர்களிடம் மிகவும் கடுமையாகப் பேசி விட்டார். இருந்தும் அவர்மீது அவர்கள் வைத்திருந்த பற்றில் மிக்க உறுதியுடையவர்களாக இருந்தனர். அவர்கள் தமது அழுகையை நிறுத்திக் கண்களைத் துடைத்துக் கொண்டு துயர் மிகுதியினால் விம்மியபடி சீற்றத்துடன் பேசத் தொடங்கினர்.

பதம் 10.29.31 : அழகிய கோபியர்கள் கூறினர்: ஓ, சர்வ சக்தியுடையவரே, இவ்வளவு கொடுமையாக நீர் பேச வேண்டாம். உமது தாமரைத் திருவடிகளுக்குப் பக்தித் தொண்டு செய்வதற்காக எமது பௌதிக இச்சைகள் அனைத்தும் துறந்து வந்திருக்கும் எம்மை நீர் மறுதலிக்க வேண்டாம். முக்தி பெற வேண்டும் என்று முயலும் தமது பக்தர்களுக்கு ஆதி புருஷரான ஸ்ரீ நாராயணர் கைம்மாறு செய்வது போல ஓ, உறுதியுடையவரே, நீரும் எமக்குக் கைம்மாறு செய்வீராக.

பதம் 10.29.32 : எங்கள் அன்பிற்குரிய கிருஷ்ணரே! தர்மத்தில் தேர்ந்தவராக, எங்களுக்குரிய சிறந்த சுதர்மம் எங்கள் கணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிற உறவினர்களுக்கும் சிரத்தையுடன் பணிவிடை செய்வதே என்று எங்களுக்கு உபதேசித்துள்ளீர். இதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நீர் கூறிய பணிவிடைகள் அனைத்தும் உமக்கே செய்யப்பட வேண்டும். ஓ, பகவானே! உடல் பெற்ற உயிர்கட்கெல்லாம் நீரே பாசமிகு நண்பராவீர். நீரே அவர்களின் நெருங்கிய உறவினராகவும், ஏன், அவர்களின் ஆத்மாவாகவும் இருக்கின்றீர்.

பதம் 10.29.33 : தேர்ந்த உன்னதமானவர்கள் அனைவரும் தமது பாசத்தினை உங்கள் மீதே வைத்திருக்கின்றனர். ஏனென்றால் நீரே அவர்களின் ஆத்மாவாகவும், நித்திய அன்பிற்குரியவரென்றும் அவர்கள் உம்மை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு எப்போதும் துன்பம் ஒன்றினையே தரும் எமது கணவர்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களால் நாங்கள் பெறும் பயன் என்ன? ஆகையினால் ஓ, பரம ஆளுநரே, எமக்குக் கருணை காட்டுவீராக. ஓ, செந்தாமரை மலர் போன்ற விழியுடையவரே உம்மிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எங்களது நெடுநாள் விருப்பத்தை வெட்டி எறிந்து விடாதீர்.

பதம் 10.29.34 : இன்றுவரை எமது மனங்கள் இல்லறக் கடமைகளிலேயே மூழ்கியிருந்தன. ஆயினும் நீர் எளிதாக அவ்வில்லறக் கடமைகளிலிருந்து எமது மனங்களையும், கரங்களையும் திருடிவிட்டீர். இனி உமது தாமரைத் திருடிகளிலிருந்து ஓரடி கூட எங்கள் பாதங்கள் நகராது. எவ்வாறு எங்களால் விரஜத்திற்குத் திரும்பிச் செல்ல முடியும்? அங்கே நாங்கள் செய்யப் போவதென்ன?

பதம் 10.29.35 : அன்பார்ந்த கிருஷ்ணரே, உமது அதரங்களிலுள்ள அமிர்தத்தினை எங்கள் இதயங்களில் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பின்மீது ஊற்றுவீராக! இந்நெருப்பு உமது புன்னகை நிறைந்த பார்வையினாலும், உமது குழலிலிருந்து எழும் இனிய ஓசையினாலும் மூட்டப்பட்டதாகும். அவ்வாறு நீர் ஊற்றவில்லை யென்றால், ஓ, நண்பரே! விரகதாபம் என்றும் நெருப்பிற்கு எங்களது தேகங்களை நாங்கள் ஒப்படைத்து விடுவோம். அதன் மூலம் யோகிகளைப் போல நாங்களும் தியானத்தினால் உமது திருவடித் தாமரைகளை அடைவோம்.

பதம் 10.29.36 : ஓ, தாமரை விழியோனே, உமது திருவடித் தாமரைகளைத் தொடுகின்ற பாக்கியம் பெறும்போதெல்லாம் ஸ்ரீமதி இலட்சுமி தேவி ஒரு விழாக்கால உற்சாகத்தினை எய்துகின்றாள். வனத்தில் வாழ்பவர்களுக்கு நீர் மிகவும் பிரியமானவர். ஆகையினால் நாங்களும் அத்தாமரைத் திருவடிகளைத் தீண்டுவோம். அக்கணத்திலிருந்து நாங்கள் பிற ஆடவர் முன்பு நிற்பதற்கும் சக்தியில்லாதவர்கள் ஆகிவிடுவோம். ஏனெனில் உம்மால் நாங்கள் முழுத் திருப்தி பெற்று விடுவோம் அல்லவா.

பதம் 10.29.37 : தேவர்களால் நாளும் தேடப்படும் பார்வையினை உடைய இலட்சுமிதேவி தனது பகவான் நாராயணரின் திருமார்பில் எப்போதும் வீற்றிருக்கும் நிலை எய்தப் பெற்றிருக்கின்றாள். இருந்த போதிலும் அவள், துளஸீ தேவியுடனும், பகவானின் பிறபணியாளர்களுடனும் பகிர்ந்தளிக்க வேண்டியிருக்கும் அவரது திருவடித் தாமரைகளின் தூசியினையே பெரிதும் விரும்புகின்றாள். அதுபோல் நாங்களும் உமது திருவடித் தாமரையினை அடைக்கலம் பெறுவதற்காக அணுகுவோம்.

பதம் 10.29.38 : ஓ, துன்பங்கள் அனைத்தையும் வெற்றி கொள்பவரே, ஆகையினால் எங்களுக்குக் கருணை காட்டுவீராக. உமது தாமரைத் திருவடிகளை அடைவதற்காக நாங்கள் எங்கள் குடும்பங்களையும் இல்லங்களையும் துறந்து வந்திருக்கின்றோம். உமக்குப் பணி செய்வதை விட வேறு எதையும் நாங்கள் விரும்பவில்லை. உமது புன்னகை ஒளிரும் பார்வையினால் உண்டான அடக்கவொண்ணா ஆசையினால் எங்கள் இதயங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. ஓ, மனிதருள் மாணிக்கமே! எம்மை உமது பணிப் பெண்களாக ஏற்றுக் கொள்வீராக.

பதம் 10.29.39 : சுருண்ட மயிர்க் குழல்கள் அசைந்தாடும் உமது திருமுகமும், செவிக் குண்டலங்களினால் அழகு செய்யப்படும் உமது கன்னங்களும், அமிர்தம் நிறைந்த உமது அதரங்களும், உமது புன்னகையும் அச்சத்தினை அகற்றும் உமது உறுதிமிக்க இருகரங்களும், இலட்சுமி தேவியின் இன்பத்திற்கு ஆதாரமாகத் திகழும் உமது விரிந்த மார்பும் கண்டு நாங்கள் உமது பணிப்பெண்களாக வரவேண்டுமென்று உறுதியாக விரும்புகின்றோம்.

பதம் 10.29.40 : அன்பிற்குரிய கிருஷ்ணரே! இம்மூவுலகங்களிலும் உள்ள எந்தப் பெண்தான், உமது இனிமையான, எல்லோரையும் கவர்ந்திழுக்கும் குழலோசையினைக் கேட்டு சமய அறநெறிகளை மீறாதிருப்பாள்? உமது எழில் திருக்கோலத்தினைக் காணும் பசுக்களும், பறவைகளும், மரங்களும், மான்களும்கூட புளகாங்கிதமடைந்து மயிர்க்கூச்செறிகின்றன.

பதம் 10.29.41 : தேவலோகத்தை முழுமுதற் கடவுள் காத்தருள்வதுபோல், விரஜ மக்களின் துன்பத்தையும், அச்சத்தையும் அகற்றுவதற்காக நீர் இவ்வுலகில் அவதரித்திருக்கின்றீர் என்பது தெளிந்த உண்மையாகும். ஆகையினால் ஓ, துயரப்படுவோரின் நண்பரே, உமது செந்தாமரை மலர்க் கரங்களை உமது பணிப் பெண்களாகிய எனது சிரங்களின் மீதும் எரிகின்ற எமது மார்பகங்களின் மீதும் வைப்பீராக.

பதம் 10.29.42 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கோபியர்களின் நம்பிக்கையிழந்த இவ்வார்த்தைகளைக் கேட்டு யோகேஸ்வரர்களின் ஈஸ்வரனான பகவான் கிருஷ்ணர் சுயதிருப்தியுற்றவராக இருந்த போதிலும், புன்னகை புரிந்து மிகுந்த கருணையுடன் அவர்களுடன் மகிழ்ந்து களித்தார்.

பதம் 10.29.43 : கோபியர்களின் நடுவே குற்றமற்றவரான பகவான் கிருஷ்ணர், விண்மீன்களின் நடுவே இருக்கும் பூரணச் சந்திரனைப் போல் தோன்றினார். அவரது பெருந்தன்மை மிக்கச் செயல்களும், அன்புமிக்க பார்வையும் அவர்களது முகங்களை மலரச் செய்தன. மேலும் அவர் புன்னகைத்த போது, முல்லை மொட்டுக்களை போன்ற அவரது பற்கள் ஒளி வீசின.

பதம் 10.29.44 : கோபியர்கள் அவரது பெருமைகளைப் பாடிய பொழுது நூற்றுக்கணக்கான பெண்களின் தலைவரான அவரும் பதிலுக்குப் பாடினார். விருந்தாவனத்தினை அழகு செய்யும் வைஜயந்தி மலர்களினாலான மாலையினை அணிந்து கொண்டு அவர், அவர்களுடன் உறவாடினார்.

பதங்கள் 10.29.45 – 10.29.46 : ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களுடன், தாமரை மலர்களின் நறுமணத்தினைச் சுமந்துகொண்டு, நதியின் அலைகளினால் புத்துணர்ச்சி பெற்ற தென்றல்காற்று வீசிக்கொண்டிருக்கும் குளிர்ந்த மணற்பரப்பினையுடைய யமுனை நதியின் கரைக்குச் சென்றார். அங்கே அவர் தமது கரங்களினால் கோபியர்களைத் தழுவிக் கொண்டார். அவர் அவர்களின் கரங்களையும், தலைமுடியையும், தொடைகளையும், மேகலைகளையும், ஸ்தனங்களையும் தொட்டும், தமது நகங்களினால் அவர்களைக் கிள்ளியும், வேடிக்கையாகப் பேசியும், சிரித்து விளையாடியும் விரஜத்தின் அந்த அழகிய இளம் பெண்களிடம் காதல் உணர்வினைப் பெரிதும் தூண்டினார். இவ்வாறு பகவான் தமது லீலைகளில் மகிழ்ச்சியடைந்தார்.

பதம் 10.29.47 : முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் விசேஷ கவனத்தினைத் தாம் பெற்றுவிட்டமைக்காகக் கோபியர்கள் தம்மை எண்ணி மிக்க பெருமை கொண்டனர். ஒவ்வொருத்தியும் இப்பூமியில் தானே மிகச் சிறந்த பெண்ணென்று தன்னைக் கருதிக் கொண்டாள்.

பதம் 10.29.48 : தமது நற்பாக்கியத்தை எண்ணிக் கோபியர்கள் கர்வங் கொண்டதைக் கண்ட பகவான் கேசவன், அவர்களின் கர்வத்தினை நீக்கி அவர்களுக்கு அருள் புரிய வேண்டுமென்று திருவுளங் கொண்டார். அதனால் அவர் திடீரென்று அவர்களின் பார்வையினின்று மறைந்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare