அத்தியாயம் – 34
நந்த மகாராஜாவைக் காத்து சங்கசூடனை அழித்தல்
பதம் 10.34.1
ஸ்ரீ-ஸுக உவசா
ஏகதா தேவ-யாத்ராயாம் கோபாலா ஜாத-கௌ துகா:
அனோபிர் அநடுத்-யுக்தை: ப்ரயயுஸ் தே ‘ம்பிகா-வனம்

ஸ்ரீ-ஸுக: உவசா—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏகதா—ஒரு சமயம்; தேவ—தேவரான பகவான் சிவபெருமானை (வழிபடுவதற்கு); யாத்ராயம்—யாத்திரை; கோபாலா:—ஆயர்கள்; ஜாத-கௌ துகா:—ஆர்வமுடன்; அனோபி:—வண்டிகளுடன்; அநடுத்—காளைகள்; யுக்தை:—பூட்டிய; ப்ரயயு:—சென்றனர்: தே—அவர்கள்: அம்பிகா-வனம்—அம்பிகா வனத்திற்கு.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஒருசமயம் ஆயர்கள் பகவான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்று ஆர்வங்கொண்டு மாட்டு வண்டிகளில் அம்பிகா வனத்திற்குப் பயணம் சென்றனர்.

பதம் 10.34.2
தத்ர ஸ்நாத்வா ஸரஸ்வத்யாம் தேவம் பஸு-பதிம் விபும்
அனார்சுர் அர்ஹணைர் பக்த்யா தேவீம் ச ந்ருபதே ‘ம்பிகாம்

தத்ர—அங்கே; ஸ்நாத்வா—நீராடி; ஸரஸ்வத்யாம்—சரஸ்வதி நதியில்; தேவம்—தேவர்; பஸு-பதிம்—சிவபெருமான்; விபும்—சக்திமிக்க; அனார்சு:—அவர்கள் வழிபட்டனர்; அர்ஹணை:—பூஜைப் பொருட்களுடன்; பக்தயா—பக்தியுடன்; தேவீம்—தேவி; ச—மற்றும்; ந்ரு-பதே—ஓ, மன்னனே; அம்பிகாம்—அம்பிகையை.

ஓ, மன்னனே! அவர்கள் அங்கே சென்று சரஸ்வதி நதியில் நீராடி பல்வேறு பூஜைப் பொருட்களைக் கொண்டு ஆற்றல்மிக்க பகவான் பசுபதியையும் அவரது துணைவியான தேவி அம்பிகையையும் பக்தியுடன் வழிபட்டனர்.

பதம் 10.34.3
காவோ ஹிரண்யம் வாஸாம்ஸி மது மத்வ்-அன்னம் ஆத்ருதா:
ப்ராஹ்மணேப்யோ தது: ஸர்வே தேவோ ந: ப்ரீயதாம் இதி

காவ:—பசுக்கள்; ஹிரண்யம்—பொன்; வாஸாம்ஸி—ஆடைகள்; மது—இனிமையான; மது—தேனுடன் கலந்த; அன்னம்—சாதம்; ஆத்ருதா:—மரியாதையுடன்; ப்ராஹ்மணேப்யோ—அந்தணர்களுக்கு; தது:—அவர்கள் அளித்தனர்; ஸர்வே—அவை அனைத்தும்; தேவ:—தேவர்; ந:—எம்மீது; ப்ரீயதாம்—பிரியமுடையவராக இருப்பாராக; இதி—இவ்வாறு பிரார்த்தித்தனர்.

ஆயர்கள் அந்தணர்களுக்குப் பசுக்களையும், பொன்களையும், ஆடைகளையும் தேன் கலந்த சாதத்தையும் தானமாக அளித்தனர். பிறகு அவர்கள் “தேவர் நம்மீது பிரியம் வைப்பாராக” என்று அவரை வழிபட்டனர்.

பதம் 10.34.4
ஊஷு: ஸரஸ்வதீ-தீரே ஜலம் ப்ராஸ்ய-யத-வ்ரதா:
ரஜனீம் தாம் மஹா-பாகா நந்த-ஸு நந்தகாதய:

ஊஷு:—அவர்கள் தங்கினர்; ஸரஸ்வதீ-தீரே—சரஸ்வதி நதியின் கரையில்; ஜலம்—நீர்; ப்ராஸ்ய—உண்டு; யத-வ்ரதா:—கடுமையான விரதங்கள் மேற்கொண்டு: ரஜனீம்—இரவு; தாம்—அந்த; மஹா-பாகா:—மகாபாக்கியசாலிகள்; நந்த-ஸு நந்த-ஆதய:—நந்தன், சுநந்தன் மற்றும் பிறர்.

நந்தன், சுநந்தன் மற்றும் பாக்கியசாலிகளான பிற ஆயர்கள் அன்றைய இரவுப் பொழுதை மிகவும் கடுமையான விரதம் மேற்கொண்டு சரஸ்வதி நதியின் கரையில் கழித்தனர். அவர்கள் வெறும் நீரை மட்டுமே பருகி விரதம் இருந்தனர்.

பதம் 10.34.5
கஸ்சின் மஹான் அஹிஸ் தஸ்மின் விபினே ‘தி-புபுக்ஷித:
யத்ருச்சயாகதோ நந்தம் ஸயானம் உர-கோ ‘க்ரஸீத்

கஸ்சித்—ஒரு குறிப்பிட்ட; மஹான்—பெரிய; அஹி:—பாம்பு; தஸ்மின்—அந்த; விபினே—காட்டுப்பகுதியில்; அதி-புபுக்ஷித—பயங்கரப் பசியுடன்: யத்ருச்சயா—திடீரென்று; ஆகத:—அங்கே வந்தது; நந்தம்—நந்த மகாராஜா; ஸயானம்—நித்திரை செய்து கொண்டிருந்த; உர-க:—அவனது வயிற்றினால் ஊர்ந்து; அக்ரஸீத்—விழுங்கியது.

அந்த இரவில் பயங்கரப் பசிகொண்ட ஒரு பெரிய பாம்பு புதரிலிருந்து தோன்றியது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்த நந்தமகாராஜாவை நோக்கித் தனது வயிற்றினால் ஊர்ந்து வந்த அப்பாம்பு அவரை விழுங்கத் தொடங்கியது.

பதம் 10.34.6
ஸ சுக்ரோஸாஹினா க்ரஸ்த: க்ருஷ்ண க்ருஷ்ண மஹான் அயம்
ஸர்போ மாம் க்ரஸதே தாத ப்ரபன்னம் பரிமோசய

ஸ:—அவர், நந்தமகாராஜா; சுக்ரோஸ—கூக்குரவிட்டார்; அஹினா—பாம்பினால்; க்ரஸ்த:—பற்றப்பட்ட; க்ருஷ்ண க்ருஷ்ண—ஓ, கிருஷ்ணா, கிருஷ்ணா; மஹான்—பெரிய; அயம்—இந்த; ஸர்ப:—பாம்பு; மாம்—என்னை; க்ரஸதே—விழுங்குகின்றது; தாத—என் அன்பு மைந்தனே; ப்ரபன்னம்—சரணடைந்த; பரிமோசய—மீட்பாயாக.

பாம்பின் பிடியில் சிக்கிக்கொண்ட நந்தமகாராஜா “கிருஷ்ணா, கிருஷ்ணா! என் அன்பு மைந்தனே! இப்பெரிய பாம்பு என்னை விழுங்கிக் கொண்டிருக்கின்றது! உன்னைச் சரணடைந்துள்ள என்னைக் காத்தருள்வாயாக!” என்று கூக்குரலிட்டுக் கதறினார்.

பதம் 10.34.7
தஸ்ய சாக்ரந்திதம் ஸ்ருத்வா கோபாலா: ஸஹஸோத்திதா:
க்ரேஸ்தம் ச த்ருஷ்ட்வா விப்ராந்தா: ஸர்பம் விவ்யதுர் உல்முகை:

தஸ்ய—அவருடைய; ச—மற்றும்; ஆக்ரந்திதம்—அழுகுரல்; ஸ்ருத்வா—கேட்டு; கோபாலா:—ஆயர்கள்; ஸஹஸா—உடனே; உத்திதா—எழுந்து; க்ரஸ்தம்—பற்றப்பட்டது; ச—மற்றும்; த்ருஷ்ட்வா—கண்டு; விப்ராந்தா:—துன்புற்று; ஸர்பம்—பாம்பை; விவ்யது:—அடித்தனர்; உல்முகை:—எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்களினால்.

நந்தமகாராஜாவின் கூக்குரலைக் கேட்ட ஆயர்கள் உடனே விழித்தெழுந்து, அவர் பாம்பினால் விழுங்கப்படுவதைக் கண்டனர். அதிர்ச்சியுற்ற அவர்கள், எரிந்துகொண்டிருந்த தீப்பந்தங்களினால் அப்பாம்பைத் தாக்கினர்.

பதம் 10.34.8
அலாதைர் தஹ்யமானோ ‘பி நாமுஞ்சத் தம் உரங்கம:
தம் அஸ்ப்ருஸத் பதாப்யேத்ய பகவான் ஸாத்வதாம் பதி:

அலாதை:—தீப்பந்தங்களினால்; தஹ்யமான:—சுட்ட; அபி—போதிலும்; ந அமுஞ்சத்—விடுவிக்கவில்லை; தம்—அவரை; உரங்கம:—பாம்பு; தம்—அப்பாம்பினை; அஸ்ப்ருஸத்—தொட்டார்; பதா—தமது பாதத்தினால்; அப்யேத்ய—வந்து; பகவான்—பரமபுருஷ பகவான்; ஸாத்வதாம்—பக்தர்களின்; பதி:—தலைவர்.

தீப்பந்தங்கள் அதனைச் சுட்டும் அப்பாம்பு நந்த மகாராஜாவை விடுவிக்கவில்லை. பின்னர் பக்தர்களின் தலைவரான பரமபுருஷ பகவான் அந்த இடத்திற்கு வந்து தமது பாதத்தினால் அப்பாம்பினைத் தொட்டார்.

பதம் 10.34.9
ஸ வை பகவத: ஸ்ரீமத்-பாத-ஸ்பர்ஸ-ஹதாஸுப:
பேஜே ஸர்ப-வபுர் ஹித்வா ரூபம் வித்யாதரார்சிதம்

ஸ:—அவன்; வை—உண்மையில்: பகவத:—முழுமுதற்கடவுளின்; ஸ்ரீ-மத்—தெய்வீக; பாத—பாதத்தின்; ஸ்பர்ஸ—ஸ்பரிசத்தால்; ஹத—அழிந்து; அஸுப:—எல்லாவித அசுபங்களும்; பேஜே—மேற்கொண்ட; ஸர்ப-வபு:—அவனது பாம்பு உடலை; ஹித்வா—நீங்கி; ரூபம்—ஒரு வடிவம்; வித்யாதர—வித்யாதரன்; அர்சிதம்—வணங்கத்தக்க.

பரமபுருஷ பகவானின் தெய்வீகப் பாதம் பட்டவுடனே அப்பாம்பின் பாவங்கள் எல்லாம் அழிந்தொழிந்தன. அதனால் அவன் தனது பாம்பு உடல் நீங்கப் பெற்று வணங்கத்தக்க வித்யாதரனாகத் தோன்றினான்.

பதம் 10.34.10
தம் அப்ருச்சத் த்ருஷீகேஸ: ப்ரணதம் ஸமவஸ்திதம்
தீப்யமானேன வபுஷா புருஷம் ஹேம-மாலினம்

தம்—அவனை; அப்ருச்சத்—வினவினார்; ஹ்ருஷீகேஸ:—பரமபுருஷ பகவான் ரிஷிகேசர்; ப்ரணதம்—வணங்கிக் கொண்டிருந்தவன்; ஸமவஸ்திதம்—அவரது முன்னால் நின்று கொண்டு; தீப்யமானேன—ஒளி வீசிக் கொண்டிருந்தது; வபுஷா—அவனது உடல்; புருஷம்—அப்புருஷன்; ஹேம—பொன்; மாலினம்—கழுத்தணிகள் அணிந்திருந்தான்.

பரமபுருஷ பகவான் ரிஷிகேசர், பொன்னாலான கழுத்தணிகள் அணிந்து ஒளி வீசிக் கொண்டிருந்த உடலுடன் தம் முன்னே மிக்க பணிவுடன் வணங்கியபடி நின்றுகொண்டிருந்த அப்புருஷனை அவன் யாரென்று வினவினார்.

பதம் 10.34.11
கோ பவான் பரயா லக்ஷ்ம்யா ரோசதே ‘த்புத-தர்ஸன:
கதம் ஜுகுப்ஸிதம் ஏதாம் கதிம் வா ப்ராபிதோ ‘வஸ:

க:—யார்; பவான்—தாங்கள்; பரயா—பேர்; லக்ஷ்ம்யா—எழிலுடன்; ரோசதே—ஒளிரும்; அத்புத—அற்புதமான; தர்ஸன:—பார்ப்பதற்கு; கதம்—ஏன்; ஜுகுப்ஸிதாம்—பயங்கரமான; ஏதாம்—இந்த; கதிம்—கதியை; வா—அல்லது; ப்ராபித:—மேற்கொண்டது; அவஸ:—உம்மையும் மீறி.

(பகவான் கிருஷ்ணர் கூறினார்:) அன்பரே! தாங்கள் மிக்க எழிலுடன் மிகவும் அற்புதமாகத் தோன்றுகின்றீர். தாங்கள் யார்? யாருடைய பலவந்தத்தினால் நீர் இப்பாம்பு வடிவம் பெற்றீர்?

பதங்கள் 10.34.12 – 10.34.13
ஸர்ப உவாச
அஹம் வித்யாதர: கஸ்சித் ஸுதர்சன இதி ஸ்ருத:
ஸ்ரியா ஸ்வரூப-ஸம்பத்த்யா விமானேனாசரன் திஸ:

ருஷீன் விரூபாங்கிரஸ: ப்ரஹாஸம் ரூப-தர்பித:
தைர் இமாம் ப்ராபிதோ யோனிம் ப்ரலப்தை: ஸ்வேன பாப்மனா

ஸர்ப: உவாச—பாம்பு கூறியது; அஹம்—நான்; வித்யாதர:—ஒரு வித்யாதரன்; கஸ்சித்—குறிப்பிட்ட; ஸுதர்ஸன:—சுதர்ஸனன்; இதி—இவ்வாறு; ஸ்ருத:—நன்கறியப்பட்ட; ஸ்ரியா—செல்வத்தினாலும்; ஸ்வருப—எனது வடிவத்தினாலும்; ஸம்பத்யா—ஆஸ்தியினாலும்; விமானேன—எனது விமானத்தில்; ஆசரன்—திரிந்து கொண்டிருந்தேன்; திஸ:—திசைகளில்; ருஷீன்—முனிவர்கள்; விரூப—அருவருப்பான வடிவமுடைய; ஆங்கிரஸ:—முனிவரின் சீட பரம்பரையில் வந்த; ப்ராஹஸம்—நான் கேலி செய்தேன்; ரூப—அழகின் காரணமாக; தர்பித:—இறுமாப்பு மிகுந்தவனாக; தை—அவர்களால்; இமாம்—இந்த; ப்ராபித:—மேற்கொள்ள வேண்டியவனானேன்; யோனிம்—பிறப்பு; ப்ரலப்தை:—கேலி செய்யப்பட்டவர்கள்; ஸ்வேன—எனது; பாப்மனா—பாவச் செயல்.

பாம்பு பதில் கூறியது: நானே நன்கறியப்பட்ட சுதர்ஸனன் என்னும் பெயருடைய வித்யாதரன் ஆவேன். நான் வளமிக்கவனாகவும், எழில்மிக்கவனாகவும் இருந்தேன். நான் எல்லாத் திசைகளிலும், எனது விருப்பம் போல் என்னுடைய விமானத்தில் பறந்து திரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒருமுறை ஆங்கிரஸ முனிவரின் சீடபரம்பரையில் வந்த சில முனிவர்களைப் பார்த்தேன். எனது அழகினால் கர்வம்கொண்டு நான் அவர்களை ஏளனம் செய்தேன். நான் செய்த பாவத்தினால் அவர்கள் இந்த இழிவடிவினைப் பெறுமாறு செய்தனர்.

பதம் 10.34.14
ஸாபோ மே ‘னுக்ரஹாயைவ க்ருதஸ் தை: கருணாத்மபி:
யத் அஹம் லோக-குருணா பதா ஸ்ப்ருஷ்டோ ஹதாஸுப:

ஸாப:—சாபம்; மே—எனது; அனுக்ரஹாய—அனுக்கிரகத்திற்காக; ஏவ—நிச்சயமாக; க்ருத:—செய்யப்பட்டது; தை:—அவர்களால்; கருண-ஆத்மபி:—இயற்கையிலேயே கருணையுடையவர்கள்; யத்—எது; அஹம்—நான்; லோக—அனைத்து உலகங்களின்; குருணா—ஆன்மீகக் குருவால்; பதா—அவரது பாதத்தின்; ஸ்ப்ருஷ்ட:—ஸ்பரிசத்தால்; ஹத—அழிக்கப்பட்டன; அஸுப:—எல்லாப் பாவங்களும்.

உண்மையில் எனது நன்மைக்காகவே என்னை அக்கருணை மிகு முனிவர்கள் சபித்துள்ளனர். ஏனென்றால் இப்போது அனைத்து உலகங்களின் தலைவராகிய பரமகுருவின் பாதம் என் மீது பட்டு, அதன் காரணமாக எனது அனைத்துப் பாவங்களும் நீங்கிவிட்டன.

பதம் 10.34.15
தம் த்வாஹம் பவ-பீதானாம் ப்ரபன்னானாம் பயாபஹம்
ஆப்ருச்சே ஸாப-நிர்முக்த: பாத-ஸ்பர்ஸாத் அமீவ ஹன்

தம்—அதே நபர்; த்வா—நீர்; அஹம்—நான்; பவ—பௌதிகத் தோற்றத்தின்; பீதானாம்—அஞ்சுகின்றவர்களுக்கு; ப்ரபன்னானாம்—சரணடைந்தவர்கள்; பய—பயத்தினை; அபஹம்—நீங்கச் செய்பவர்; ஆப்ருச்சே—நான் அனுமதி வேண்டுகிறேன்; ஸாப—சாபத்திலிருந்து; நிர்முக்த:—விமோசனம் அளித்தீர்; பாத-ஸ்பர்ஸாத்—உமது பாத ஸ்பரிசத்தால்; அமீவ—எல்லாத்துன்பங்களையும்; ஹன்—அழிப்பவரே.

எம்பெருமானே, பெளதிக உலகிற்கு அஞ்சி உம்மைச் சரண் புகுந்தவர்களின் அனைத்துப்பயங்களையும் நீர் அழிக்கின்றீர். உமது பாதம் தொட்டதால் நான் இப்போது முனிவர்களின் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றுள்ளேன். ஓ, துன்பங்களை அழிப்பவரே, எனது உலகிற்கு என்னைத் திரும்பிச் செல்ல அருள்கூர்ந்து அனுமதிப்பீராக.

பதம் 10.34.16
ப்ரபன்னோ ‘ஸ்மி மஹா-யோகின் மஹா-புருஷ ஸத்-பதே
அனுஜானீஹி மாம் தேவ ஸர்வ-லோகேஸ்வரேஸ்வர

ப்ரபன்ன:—சரண்புகுந்த; அஸ்மி—(நான்) இருக்கின்றேன்; மஹா-யோகின்—ஓ, மகாயோகியே; மஹா-புருஷ—ஓ, மகாபுருஷரே; ஸத்-பதே—ஓ, பக்தர்களின் தலைவரே; அனுஜானீஹி—கட்டளையிடுவீராக; மாம்—எனக்கு; தேவ—ஓ, இறைவனே; ஸர்வ—அனைத்து; லோக—லோகங்களின்; ஈஸ்வர—நெறியாளர்களின்; ஈஸ்வர—ஓ, பரம நெறியாளரே.

ஓ, மகாயோகியே, மகாபுருஷரே, பக்தர்களின் தலைவரே, நான் உம்மைச் சரண் புகுந்தேன். உமது விருப்பம் போல் எனக்குக் கட்டைளையிடுவீராக. ஓ, பிரபஞ்சத்தை ஆள்பவர்களின் பகவானான பரமபுருஷ பகவானே.

பதம் 10.34.17
ப்ரஹ்ம-தண்டாத் விமுக்தோ ‘ஹம்
ஸத்யஸ் தே ‘ச்யுத தர்ஸனாத்
யன்-நாம க்ருணன்ன் அகிலான்
ஸ்ரோத்ரூன் ஆத்மானம் ஏவ ச
ஸத்ய: புனாதி கிம் பூயஸ்
தஸ்ய ஸ்ப்ருஷ்ட: பதா ஹி தே

ப்ரஹ்ம—அந்தணர்களின்; தண்டாத்—தண்டனையிலிருந்து; விமுக்த:—விடுதலை பெற்றுள்ளேன்; அஹம்—நான்; ஸத்ய:—உடனடியாக; தே—நீர்; அச்யுத—ஓ, குற்றமற்ற பகவானே; தர்ஸனாத்—தரிசனத்தினால்; யத்—எவருடைய; நாம—நாமம்; க்ருஹ்ணன்—ஒதுகின்றதை; அகிலான்—அனைவரின்; ஸ்ரோத்ரூன்—கேட்கின்ற; ஆத்மானாம்—ஒருவனை; ஏவ—உண்மையில்; ச—மற்றும்; ஸத்ய:—உடனடியாக; புனாதி—தூய்மையாக்குகிறது; கிம்-பூய:—அதைவிட என்ன; தஸ்ய—அவருடைய; ஸ்ப்ருஷ்ட:—ஸ்பரிசத்தால்; பதா—பாதத்தினால்; ஹி—உண்மையில்; தே—உம்முடைய.

ஓ, குற்றமற்றவரே! உமது தரிசனத்தால் அந்தணர்களின் தண்டனையிலிருந்து உடனே நான் விடுதலை பெற்றுவிட்டேன். உமது பெயரானது அதனை ஓதுகின்றவரையும், அவ்வோதுதலைக் கேட்கின்றவர்களையும் தூய்மை செய்கின்றது. அவ்வாறிருக்க உமது தாமரைத் திருவடிகளின் ஸ்பரிசம் எத்தனை அதிகம் நன்மை செய்வதாகும்?

பதம் 10.34.18
இதி அனுஜ்ஞாப்ய தாஸார்ஹம் பரிக்ரம்யாபிவந்த்ய ச
ஸுதர்ஸனோ திவம் யாத: க்ருச்ரான் நந்தஸ் ச மோசித:

இதி—இவ்வாறு; அனுஜ்ஞாப்ய—அனுமதி பெற்று; தாஸார்ஹம்—பகவான் கிருஷ்ணரிடமிருந்து; பரிக்ரம்ய—சுற்றி வலம்வந்து; அபிவந்த்ய—வந்தனம் செய்து; ச—மற்றும்; ஸுதர்ஸன:—சுதர்ஸனன்; திவம்—லோகத்திற்கு; யாத:—சென்றான்; க்ருச்ச்ராத்—அவரது துன்பத்திலிருந்து; நந்த:—நந்தமகாராஜாவும்; ச—கூட; மோசித:—மீட்கப்பட்டார்.

பகவான் கிருஷ்ணரிடமிருந்து இவ்வாறு அனுமதி பெற்ற தேவனான சுதர்ஸனன் அவரைச் சுற்றி வலம் வந்து, வீழ்ந்து வணங்கித் தனது தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான். நந்தமகாராஜாவும் கூட அவரது துன்பத்திலிருந்து இவ்வாறு மீட்கப்பட்டார்.

பதம் 10.34.19
நிஸாம்ய க்ருஷ்ணஸ்ய தத் ஆத்ம-வைபவம்
வ்ரஜெளகஸோ விஸ்மித-சேதஸஸ் தத:
ஸமாப்ய தஸ்மின் நியமம் புனர் வ்ரஜம்
ந்ருபாயயுஸ் தத் கதயந்த ஆத்ருதா:

நிஸம்ய—கண்டு; க்ருஷ்ணஸ்ய—பகவான் கிருஷ்ணரின்; தத்—அந்த; ஆத்ம—தனிப்பட்ட அவரது; வைபவம்—ஆற்றலின் வளமிக்க வெளிப்பாடு; வ்ரஜ-ஓகஸ:—விரஜத்தைச் சேர்ந்தவர்கள்; விஸ்மித—ஆச்சரியமுற்றனர்; சேதஸ:—தமது மனங்களில்; தத:—பிறகு; ஸமாப்ய—முடித்து; தஸ்மின்—அந்த இடத்தில்; நியமம்—அவர்களது விரதத்தினை; புன:—மீண்டும்; வ்ரஜம்—விரஜத்திற்கு; ந்ருப—ஓ, அரசனே; ஆயயு:—திரும்பிவந்தனர்; தத்—அந்த நிகழ்ச்சியை; கதயந்த:—விளக்கியபடி; ஆத்ருத:—புனிதமுடன்.

ஸ்ரீ கிருஷ்ணரின் மேலான ஆற்றலைக் கண்டு விரஜத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆச்சரியத்திற்காளாயினர். அன்பிற்குரிய மன்னனே, பிறகு அவர்கள் பகவான் சிவபெருமானை வழிபட்டு, கிருஷ்ணரின் ஆற்றல் மிகு செயல்களை வழியெங்கும் மரியாதையுடன் விவரித்தபடியே விரஜத்திற்குத் திரும்பி வந்தனர்.

பதம் 10.34.20
கதாசித் அத கோவிந்தோ ராமஸ் சாத்புத-விக்ரம:
விஜஹ்ர துர் வனே ராத்ரயாம் மத்ய-கௌ வ்ரஜ-யோஷிதாம்

கதாசித்—ஒரு சமயம்; அத—பின்னர்; கோவிந்த:—பகவான் கிருஷ்ணர்; ராம:—பகவான் பலராமர்; ச—மற்றும்; அத்புத—அற்புதமான; விக்ரம:—அவர்களின் வீரச் செயல்கள்; விஜஹ்ர து:—அவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்; வனே—வனத்தில்; ராத்ரயாம்—இரவில்; மத்ய-கெள—மத்தியில்; வ்ரஜ-யோஷிதாம்—விரஜத்திலுள்ள கோபியர்களுடன்.

ஒரு சமயம் அற்புதச் செயல்களைச் செய்யும் பகவனான கோவிந்தனும் பகவான் பலராமரும், இரவு வேளையில் வனத்தில் விரஜத்தைச் சேர்ந்த கோபியர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பதம் 10.34.21
உபகீயமானெள லலிதம் ஸ்த்ரீ-
ஜனைர் பந்த-ஸௌஹ்ருதை:
ஸ்வ்-அலங்க்ருதானுலிப்தாங்கௌ
ஸ்ரக்விநௌ விரஜோ- ‘ம்பரௌ

உபகீயமானெள—அவர்களின் கீர்த்திகள் பாடப்படுகின்றன; லலிதம்—மனதினை ஈர்க்கும் வண்ணம்; ஸ்த்ரீ-ஜனை:—பெண்களினால்; பந்த—கட்டுண்டவர்கள்; ஸௌஹ்ருதை:—அவர்கள் மீதுள்ள பாசத்தினால்; ஸு-அலங்க்ருத—நன்றாக அலங்கரிக்கப்பட்டு; அனுலிப்த—(சந்தனம்) பூசப்பட்டு; அங்கௌ—அவர்களின் அங்கங்கள்; ஸ்ரக்-விநௌ-விரஜ:—அழுக்கற்ற; அம்பரௌ—அவர்களின் ஆடைகள்.

கிருஷ்ணரும், பலராமரும், மலர்மாலைகளும், அழுக்கற்ற தூய ஆடைகளும் அணிந்திருந்தனர். அவர்களின் அங்கங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு, நறுமணச் சந்தனம் பூசப்பட்டிருந்தன. கோபியர்கள் அவர்கள் மீதான பாசத்தினால் கட்டுண்டு அவர்களது கீர்த்திகளை மனதினை ஈர்க்கும் வண்ணம் பாடிக்கொண்டிருந்தனர்.

பதம் 10.34.22
நிஸா-முகம் மானயந்தெள உத்தோடுப-தாரகம்
மல்லிகா-கந்த-மத்தாளி-ஜுஷ்டம் குமுத-வாயுனா

நிஸா-முகம்—இரவின் ஆரம்பத்தினை; மானயந்தெள—அவர்களிருவரும் கெளரவித்தனர்; உதித—உதித்தெழுந்த; உடுப—நிலவு; தாரகம்—தாரகைகள்; மல்லிகா—மல்லிகை மலர்களின்; கந்த—நறுமணத்தினால்; மத்த—மதிமயங்கிய; அளி—தும்பிகளினால்; ஜுஷ்டம்—விரும்பப்பட்ட; குமுத—குமுத மலர்களிலிருந்து; வாயுனா—மெல்லிய காற்றுடன்.

நிலவு உதித்தெழுதல், விண்மீன்கள் தோன்றுதல், குமுத மலர்களின் நறுமணம் கலந்த காற்று வீசுதல், மல்லிகை மலர்களின் நறுமணத்தினால் மதிமயங்கிய தும்பிகளின் பாடல் போன்ற அடையாளங்களினால் சுட்டப்படும் இரவின் ஆரம்பத்தினை இரு பகவான்களும் போற்றினர்.

பதம் 10.34.23
ஜகது: ஸர்வ-பூதானாம் மன:-ஸ்ரவன-மங்களம்
தௌ கல்பயந்தெள யுகபத் ஸ்வர-மண்டல-மூர்ச்சிதம்

ஜகது:—அவர்கள் பாடினர்; ஸர்வ-பூதானாம்—அனைத்து உயிர்களின்; மன:—மனதிற்கும்; ஸ்ரவன—செவிகளுக்கும்; மங்களம்—மகிழ்ச்சியினை; தெள—அவர்களிருவரும்; கல்பயந்தௌ—உண்டு பண்ணியது; யுகபத்—ஒரே சமயத்தில்; ஸ்வர—ஸ்வரங்களின்; மண்டல—மண்டலங்களினால்; மூர்ச்சிதம்—முறைப்படி.

கிருஷ்ணரும் பலராமரும் இணைந்து பாடியது ஒரே சமயத்தில் ஸ்வர வரிசைகளின் முழு ஸ்தாயினையும் முறைப்படி வெளிப்படுத்தியது. அவர்களின் பாடல் அனைத்து உயிர்களின் மனதிற்கும் செவிகளுக்கும் இன்பமளித்தன.

பதம் 10.34.24
கோப்யஸ் தத்-கீதம் ஆகர்ண்ய மூர்ச்சிதா நாவிதன் ந்ருப
ஸ்ரம்ஸத்-துகூலம் ஆத்மானம் ஸ்ரஸ்த-கேஸ-ஸ்ரஜம் தத:

கோப்ய:—கோபியர்கள்; தத்—அவர்களின்; கீதம்—பாடலினை; ஆகர்ண்ய—கேட்டு; மூர்ச்சிதா:—அசைவற்று இருந்தனர்; ந அவிதன்—அவர்கள் அறியவில்லை; ந்ருப—அன்பிற்குரிய அரசனே; ஸ்ரம்ஸத்—நழுவியது; துகூலம்—அவர்களின் நேர்த்தியான ஆடைகள்; ஆத்மானம்—அவர்கள் தம்மை; ஸ்ரஸ்த—கலைந்தது; கேஸ—அவர்களின் கேசம்; ஸ்ரஜம்—மாலைகள்; தத:—அதிலிருந்து.

அவர்களின் பாடலைக் கேட்ட கோபியர்கள் அப்படியே அசைவற்று இருந்தனர். “ஓ, மன்னனே, அவர்கள் தம்மையே மறந்திருந்ததினால் அவர்களின் நேர்த்தியான ஆடைகள் நெகிழ்ந்ததையோ, அவர்களின் கூந்தலும், அணிந்திருந்த மாலையும் குலைந்ததையோ அவர்கள் அறியவில்லை.”

பதம் 10.34.25
ஏவம் விக்ரீடதோ: ஸ்வைரம் காயதோ: ஸம்ப்ரமத்த-வத்
ஸங்கசூட இதி க்யாதோ தனதானுசரோ ‘ப்யகாத்

ஏவம்—இவ்வாறு; விக்ரீடதோ:—அவர்களிருவரும் விளையாடிக் கொண்டிருக்கையில்; ஸ்வைரம்—அவர்கள் விரும்பியபடி; காயதோ:—பாடினர்; ஸம்ப்ரமத்த—கள்வெறிகொள்ளும் அளவிற்கு; வத்—போன்று; ஸங்கசூட:—சங்கசூடன்; இதி—இவ்வாறு; க்யாத:—பெயரினன்; தன-த—தேவர்களின் பொருளாளரான குபேரனின்; அனுசர:—ஒரு வேலைக்காரன்; அப்யகாத்—வந்தான்.

பகவான் கிருஷ்ணரும், பகவான் பலராமரும் அவர்களின் விருப்பப்படி கேட்போர் கள்வெறிகொள்ளும் அளவிற்குப் பாடிக் கொண்டிருந்த பொழுது குபேரனின் சங்கசூடன் என்னும் பெயரினன் அங்கு வந்தான்.

பதம் 10.34.26
தயோர் நிரீக்ஷதோ ராஜம்ஸ் தன்-நாதம் ப்ரமதா-ஜனம்
க்ரோஸந்தம் காலயாம் ஆஸ திஸி உதீச்யாம் அஸங்கித:

தயோ:—அவர்கள் இருவரும்; நிரீக்ஷதோ:—பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே; ராஜன்—ஓ, மன்னனே; தத்-நாதம்:—அவர்களைத் தங்கள் நாதர்களாக ஏற்றுக் கொண்ட; ப்ரமதா—ஜனம்—குழுமியிருந்த பெண்கள்; க்ரோஸந்தம்—அலறிக்கொண்டு; காலயாம் ஆஸ—அவன் துரத்தினான்; திஸி—திசையில்; உதீச்யாம்—வடக்கு; அஸங்கித:—அச்சமின்றி.

ஓ, மன்னனே! பகவான் இருவரும் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே சங்கசூடன் அங்கிருந்த பெண்களை மிக்க ஆணவத்தோடு வடதிசையினை நோக்கி விரட்டத் தொடங்கினான். கிருஷ்ணரையும், பலராமரையும் தமது தலைவர்களாக ஏற்றுக்கொண்ட அப்பெண்கள் பெருங்குரலில் அலறத் தொடங்கினர்.

பதம் 10.34.27
க்ரோஸந்தம் க்ருஷ்ண ராமேதி விலோக்ய ஸ்வ-பரிக்ரஹம்
யதா கா தஸ்யுனா க்ரஸ்தா ப்ராதராவ் அன்வதாவதாம்:

க்ரோஸந்தம்—அலறியது; க்ருஷ்ண ராம இதி—கிருஷ்ணா, ராமாவென்று; விலோக்ய—கண்டு; ஸ்வ-பரிக்ரஹம்—அவர்களின் பக்தர்கள்; யதா—போன்று; கா:—பசுக்கள்; தஸ்யுனா—ஒரு திருடனால்; க்ரஸ்தா:—பிடித்துக்கொண்டு; ப்ராதரௌ—இரு சகோதரர்களும்; அன்வதாவதாம்—பின்னால் ஓடினர்.

“கிருஷ்ணா! ராமாவென்று” தமது பக்தர்கள் அலறியதைக் கேட்டும், ஒரு திருடனால் திருடப்படும் பசுக்களைப் போல் அவர்கள் விரட்டப்படுவதையும் கண்டு, கிருஷ்ணரும், பலராமரும் அந்த அசுரனின் பின்னே ஒடினர்.

பதம் 10.34.28
மா பைஷ்டேதி அபயாராவௌ ஸால-ஹஸ்தௌ தரஸ்வினௌ
ஆஸேததுஸ் தம் தரஸா த்வரிதம் குஹ்யகாதமம்

மா பைஷ்ட—அஞ்ச வேண்டாம்; இதி—இவ்வாறு கூறிக்கொண்டு; அபய—அபயமளித்து; ஆராவெள—அவர்களின் வார்த்தைகள்; ஸால—கற்கள்; ஹஸ்தெள—தமது கைகளில்; தரஸ்வினௌ—விரைந்து ஓடி; ஆஸேதது:—அவர்கள் நெருங்கினர்; தம்—அந்த அசுரனை; தரஸா—வேகத்தோடு; த்வரிதம்—அவன் விரைந்து ஓடினான்; குஹ்யக—யக்ஷர்களின்; அதமம்—இழிந்தவன்.

பகவான்கள் இருவரும் “அஞ்ச வேண்டாம்” என்று அவர்களை நோக்கிக் கூறினர். பிறகு அவர்கள் இருவரும் பருத்தும், நெடிதும் வளர்ந்திருந்த ஸால மரத்தின் உறுதியான கம்புகளை எடுத்துக் கொண்டு விரைந்து ஓடிக்கொண்டிருந்த குஹ்யகர்களின் மிக இழிந்தவனைப் பின்தொடர்ந்து ஓடினர்.

பதம் 10.34.29
ஸ வீக்ஷ்ய தாவ் அனுப்ராப்தௌ கால ம்ருத்யூ இவோத்விஜன் விஸ்ருஜ்ய ஸ்த்ரீ-ஜனம் மூட: ப்ராத்ரவஜ் ஜீவி தேச்சயா

ஸ—அவன், சங்கசூடன்; வீக்ஷ்ய—கண்டு; தெள—அவர்கள் இருவரும்; அனுப்ராப்தௌ—பின்தொடர்ந்து வருவதை; கால-ம்ருத்யூ—காலமும், மரணமும்; இவ—போன்று; உத்விஜன்—கவலை கொண்டான்; விஸ்ருஜ்ய—விட்டு விட்டு; ஸ்த்ரீ-ஜனம்—பெண்களை; மூட:—குழப்பமுற்று; ப்ராத்ரவத்—ஓடினான்; ஜீவித—அவனது உயிரை; இச்சயா—காத்துக் கொள்ளும் ஆசையில்.

சங்கசூடன், அவர்கள் இருவரும் காலம் மற்றும் மரணத்தின் வடிவங்களாகத் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டவுடன் அவன் மிகுந்த கவலைக்கு ஆளானான். குழப்பமுற்ற அவன், அப்பெண்களை விட்டு விட்டுத் தனது உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஓடினான்.

பதம் 10.34.30
தம்-அன்வதாவத் கோவிந்தோ யத்ர ஸ தாவதி
ஜிஹீர்ஷுஸ் தச்-சிரோ-ரத்னம் தஸ்தௌ ரக்ஷன் ஸ்த்ரியோ பல:

தம்—அவன் பின்னால்; அன்வதாவத்—ஓடினார்; கோவிந்த—பகவான் கிருஷ்ணர்; யத்ர-யத்ர—எங்கெங்கும்; ஸ:—அவன்; தாவதி—ஓடிக்கொண்டிருந்தான்; ஜிஹீர்ஷு:—எடுத்துக் கொள்ளும் ஆவலில்; தத்—அவனுடைய; ஸிர:—சிரத்தின் மேலுள்ள; ரத்னம்—இரத்தினத்தை; தஸ்தெள—நின்றுகொண்டார்; ரக்ஷன்—பாதுகாத்துக்கொண்டு; ஸ்த்ரிய:—பெண்கள்; பல:—பகவான் பலராமர்.

பகவான் கோவிந்தன் அவ்வசுரனின் தலைமீதிருந்த இரத்தினக்கல்லை எடுக்க வேண்டும் என்னும் ஆர்வத்தில் அவன் எங்கெங்கு ஓடிய போதிலும் அவனைப் பின்தொடர்ந்து ஓடினார். இதற்கிடையில் பகவான் பலராமர் அப்பெண்களைக் காக்கும் பொருட்டு அவர்களுடன் நின்று கொண்டார்.

பதம் 10.34.31
அவிதூர இவாப்யேத்ய ஸிரஸ் தஸ்ய துராத்மன:
ஜஹார முஷ்டினைவாங்க ஸஹ-சூடாமணிம் விபு:

அவிதூர—அருகில்; இவ—இருப்பதைப்போன்று; அப்யேத்ய—நோக்கி வந்து; ஸிர:—தலை; தஸ்ய—அவனுடைய; துராத்மன:—துராத்மாவாகிய அவன்; ஜஹார—எடுத்தார்; முஷ்டினா—தமது முஷ்டியினால்; ஏவ—எளிதாக; அங்க—அன்பார்ந்த அரசனே; ஸஹ—இணைந்திருந்த; சூடா-மணிம்—அவன் தலையில் இருந்த சூடாமணியை; விபு:—எல்லாம் வல்ல பகவான்.

அன்பார்ந்த மன்னனே, வெகு தொலைவில் ஓடிக்கொண்டிருந்த சங்கசூடனைப் பகவான் ஏதோ அருகில் ஓடுபவனைப் போல முந்திச் சென்றார். பிறகு பகவான் தமது முஷ்டியினால் துராத்மாவான அந்த அசுரனின் தலையை அதில் அணியப் பெற்றிருந்த சூடாமணியுடன் சேர்த்து தனியே துண்டித்தார்.

பதம் 10.34.32
ஸங்கசூடம் நிஹத்யைவம் மணிம் ஆதாய பாஸ்வரம்
அக்ரஜாயாததாத் ப்ரீத்யா பஸ்யந்தீனாம் ச யோஷிதாம்

ஸங்கசூடம்—அசுரன் சங்கசூடனை; நிஹத்ய—கொன்று; ஏவம்—இவ்வாறு; மணிம்—இரத்தினத்தை; ஆதாய—எடுத்துக்கொண்டு; பாஸ்வரம்—ஒளிவீசும்; அக்ர-ஜாய—தமது மூத்த சகோதரருக்கு (பகவான் பலராமர்); அததாத்—கொடுத்தார்; ப்ரீத்யா—திருப்தியுடன்; பஸ்யந்தீனாம்—அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க; ச—மற்றும்; யோஷிதாம்—பெண்கள்.

இவ்வாறு அசுரன் சங்கசூடனைக் கொன்று அவன் தனது தலையில் அணிந்திருந்த ஒளிவீசும் இரத்தினத்தை எடுத்துக் கொண்டுவந்து பகவான் கிருஷ்ணர் அதனைக் கோபியர்கள் பார்த்துக் கொண்டிருக்க மிக்க திருப்தியுடன் தமது மூத்த சகோதரருக்கு அளித்தார்.

ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “நந்தமகாராஜாவைக் காத்து சங்கசூடனை அழித்தல்” எனும் தலைப்பைக் கொண்ட, முப்பத்துநான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare