அத்தியாயம் – 18
பகவான் பலராமர் பிரலம்பாசுரனை அழித்தல்
பதம் 10.18.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தமது இனிமையான நண்பர்கள் அவரது புகழைப் பாடிக் கொண்டே உடன்வர ஸ்ரீ கிருஷ்ணர், பசுக்கூட்டங்களினால் அழகு செய்யப்பட்டிருக்கும் விரஜ கிராமத்தினுள் புகுந்தார்.

பதம் 10.18.2 : கிருஷ்ணரும், பலராமரும், ஆயர்குலச் சிறுவர்கள் என்னும் போர்வையில் தம்மை மறைத்துக்கொண்டு விருந்தாவனத்தில் மகிழ்ச்சியுடன் இருந்த போது கோடைக்காலம் வந்தது. இப்பருவமானது உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அத்துணை மகிழ்ச்சியளிக்கக் கூடியதல்ல.

பதம் 10.18.3 : ஆயினும் விருந்தாவனத்தில் முழுமுதற் கடவுள் தனிப்பட்ட முறையில் பலராமருடன் சேர்ந்து இருந்த காரணத்தினால் கோடைக்காலம் கூட வசந்தகாலத்தின் தன்மைகளைக் கொண்டு சுகமளிப்பதாக இருந்தது. இவைதான் விருந்தாவனத்தின் விசேஷத் தன்மைகளாகும்.

பதம் 10.18.4 : விருந்தாவனத்தில் அருவிகளிலிருந்து எழும் பேரோசையானது, சின்னவண்டுகளின் ஒசையினை மறையச் செய்யும். அருவிகளிலிருந்து தெறிந்து விழும் நீர்த்துளிகள் அங்குள்ள மரங்களை நனைத்து அவற்றின் பசுமையினை அதிகரிப்பதின் மூலம் அந்த இடத்திற்கே ஓர் அழகு செய்யும்.

பதம் 10.18.5 : வீசும் காற்று அங்குள்ள குளங்களில் அலைகளை எழுப்பும். பாய்ந்து ஓடும் நீரில் பல்வகைத் தாமரை மற்றும் அல்லி மலர்களின் மகரந்தத்தூள் கலந்திருக்கும். அந்நதி விருந்தாவனத்தினை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். அதனால் அங்குள்ளவர்கள், சுட்டெரிக்கும் கோடை சூரியனின் வெம்மையாலோ, காடுகளில் பற்றி எரியும் நெருப்பினாலோ துன்புறுவதில்லை. உண்மையில் விருந்தாவனத்தில் எங்கும் பசும்புல் படர்ந்து நிறைந்திருக்கும்.

பதம் 10.18.6 : ஆழமான நதிகளிலிருந்து உருண்டோடி வரும் அலைகள் கரைகளில் பாய்ந்து அங்குள்ள மணற்பகுதியினை நனைத்துச் சேறாக்கும். அதனால் கொடிய விஷத்திற்கு ஒப்பான சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்களால் அங்குள்ள நிலத்தின் ஈரத் தன்மையினை உலரச் செய்யவோ அல்லது பசும் புற்களை வாடச் செய்யவோ முடியாது.

பதம் 10.18.7 : விருந்தாவனத்தில் உள்ள காடுகளில் பல்வண்ண மலர்கள் நிறைந்து அவற்றிற்கு எழிலூட்டும் மற்றும் அக்காடுகளில் உள்ள பல்வேறு மிருகங்களும், பறவைகளும் வெவ்வேறு விதமான ஒலிகளைச் செய்யும். அங்கு மயில்கள் ஆடும், வண்டுகள் ரீங்காரமிடும், குயில்கள் பாடும், நாரைகள் ஒலி எழுப்பும்.

பதம் 10.18.8 : விளையாட வேண்டும் என்னும் விருப்பத்தில் முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர், பலராமருடன் சேர்ந்துகொண்டு ஆயர்குலச் சிறுவர்களும், பசுக்களும் உடன் வர, தமது புல்லாங்குழலிலிருந்து இனிய கீதம் இசைத்தவாறே விருந்தாவனக் காட்டினுள் சென்றார்.

பதம் 10.18.9 : பசிய இலைகள், மயிலிறகுகள், மாலைகள், மலர்க்கொத்துக்கள், மற்றும் தாதுக்கள் போன்றவற்றை ஆபரணங்களாக அணிந்து கொண்ட பலராமரும், கிருஷ்ணரும் தமது ஆயர்குல நண்பர்களுடன் சேர்ந்து ஆடினர், பாடினர் மற்றும் கட்டிப்பிடித்து சண்டைப் போட்டனர்.

பதம் 10.18.10 : கிருஷ்ணர் ஆடிய போது, அவரது ஆட்டத்திற்கேற்ப சிலர் பாடினர், சிலர் புல்லாங்குழல், தாளம் ஊது கொம்புகளிலிருந்து இனிய இசை எழுப்பினர், மற்றும் சிலர் அவரது ஆட்டத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

பதம் 10.18.11 : ஓ, மன்னனே, தேவர்கள் தம்மை மறைத்துக் கொண்டு ஆயர்குலச் சிறுவர்களாக உருவெடுத்தனர். தேர்ந்த நடனக் கலைஞர் மற்றொரு நடனக் கலைஞனைப் பாராட்டுவது போல் அவர்கள் கிருஷ்ணரையும், பலராமரையும் வழிபட்டனர். அவர்கள் இருவரும் கூட ஆயர்குலச் சிறுவர்களாகத்தான் தோன்றியுள்ளனர்.

பதம் 10.18.12 : கிருஷ்ணரும் பலராமரும் தங்கள் ஆயர்குல நண்பர்களுடன் தட்டாமாலை சுற்றுதல், தாண்டிக்குதித்தல், ஒருவரோடொருவர் மல்யுத்தம் செய்தல், ஒருவரை ஒருவர் அடித்தல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவர். சிலசமயம் கிருஷ்ணரும், பலராமரும் சிறுவர்களின் சடை முடியினைப் பற்றி இழுத்து விளையாடுவர்.

பதம் 10.18.13 : பிற சிறுவர்கள் ஆடும்பொழுது, ஓ, மன்னனே! கிருஷ்ணரும், பலராமரும், சிலசமயம் அவர்கள் ஆட்டத்திற்கு ஏற்பப் பாடுவர், இசைக்கருவிகளை மீட்டுவர், சிலசமயம் இரு பகவான்களும் அச்சிறுவர்களின் ஆட்டத்தைப் பார்த்து “மிக நன்று! மிக நன்று!’ என்று புகழ்ந்து பேசுவர்.

பதம் 10.18.14 : சிலசமயம் ஆயர்குலச் சிறுவர்கள் வில்வகனிகள் அல்லது கும்பக்கனிகளை வைத்தும், சிலசமயம் கை நிறைய நெல்லிக் காய்களை வைத்தும் விளையாடுவர். சிலசமயம் அவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுப் பிடித்து விளையாடுவர், சிலசமயம் அவர்கள் மிருகங்களைப் போன்றும் பறவைகளைப் போன்றும் பாவனை செய்து விளையாடுவர்.

பதம் 10.18.15 : சிலசமயம் அவர்கள் தவளைகளைப் போல் தாவிக் குதித்து விளையாடுவர், சிலசமயம் வயிறு குலுங்க சிரிக்கச் செய்யும் நகைச் சுவைப் பேச்சுக்கள் பேசுவர். சிலசமயம் அரசர்களைப் போல் பாவனை செய்து நடித்து விளையாடுவர்.

பதம் 10.18.16 : இவ்வாறு கிருஷ்ணரும், பலராமரும், மனித சமுதாயம் நன்கு அறிந்திருந்த விளையாட்டுக்களில் எல்லாம் ஈடுபட்டு, நதிகள், மலைகள், பள்ளத்தாக்குகள், சோலைகள், சிறுகாடுகள், குளங்கள் என்று விருந்தாவனத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.

பதம் 10.18.17 : பலராமரும், கிருஷ்ணரும் விருந்தாவனக் காட்டில் தமது ஆயர்குல நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது பிரலம்பன் என்னும் அசுரன் அவர்களிடையே புகுந்து கொண்டான். அவன் கிருஷ்ணரையும் பலராமரையும் கடத்திச் செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தில் ஓர் ஆயர்குலச் சிறுவனைப் போல் உருவமெடுத்து அங்கு வந்திருந்தான்.

பதம் 10.18.18 : தாஸார்ஹ குலத்தில் பிறந்தவரும், எல்லாம் அறிய வல்லவருமான பரமபுருஷ பகவான் கிருஷ்ணர் அவ்வசுரன் யார் என்பதை நன்கு அறிந்து கொண்டார். அவ்வசுரனைத் தனது நண்பனாக ஏற்றுக் கொண்டதைப்போல் நடித்த பகவான் அதே சமயம் அவனை எவ்வாறு கொல்வது என்றும் தீவிரமாகச் சிந்தித்தார்.

பதம் 10.18.19 : எல்லா விளையாட்டுக்களையும் நன்கறிந்தவரான கிருஷ்ணர் பிறகு ஆயர்குலச் சிறுவர்கள் அனைவரையும் தன்னருகே வரச் செய்து பின்வருமாறு கூறினார்: ”ஏ, ஆயர்குலச் சிறுவர்களே! நாம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, இப்போது விளையாடுவோம்” என்று.

பதம் 10.18.20 : ஆயர்குலச் சிறுவர்கள் இரு பிரிவுகளின் தலைவர்களாக கிருஷ்ணரையும், பலராமரையும் தேர்ந்தெடுத்தனர். சிலர் கிருஷ்ணரின் பிரிவில் சேர்ந்தனர். வேறு சில சிறுவர்கள் பலராமரின் பிரிவில் சேர்ந்தனர்.

பதம் 10.18.21 : அச்சிறுவர்கள் பயணிகளும், வாகனங்களும் என்னும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களை விளையாடினர். இவ்விளையாட்டுக்களில் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தமது முதுகில் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

பதம் 10.18.22 : ஒருவரை ஒருவர் சுமந்து கொண்டு, அதே சமயம் பசுக்களை மேய்த்துக் கொண்டு அவர்கள் பாண்டீரகம் என்னும் ஆலமரத்திற்கு கிருஷ்ணரைப் பின் தொடர்ந்து சென்றனர்.

பதம் 10.18.23 : அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே! பகவான் பலராமரின் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீதாமன், விருஷபன், மற்றும் சிலர் விளையாட்டில் வெற்றி பெற்றவுடன், கிருஷ்ணரும் அவரது பிரிவைச் சேர்ந்தவர்களும் அவர்களைத் தூக்கிச் சென்றனர்.

பதம் 10.18.24 : தோற்கடிக்கப்பட்டவுடன், பரமபுருஷ பகவான் கிருஷ்ணர் ஸ்ரீ தாமனை தூக்கிச் சென்றான். பத்ரசேனன் விருஷமனைத் தூக்கிச் சென்றான், பிரலம்பனோ, ரோகிணியின் மைந்தனான பகவான் பலராமனைத் தூக்கிச் சென்றான்.

பதம் 10.18.25 : பகவான் கிருஷ்ணரின் பார்வையில் படாமல் அசுரர்களிற் சிறந்த பிரலம்பன் பலராமரைத் தூக்கிக் கொண்டு மிகவும் விரைவாக, அவரை இறக்கிவிட வேண்டிய எல்லைக்கும் அப்பால் சென்றான்.

பதம் 10.18.26 : அம்மகா அசுரன் பலராமரைத் தூக்கிக்கொண்டு சென்றபோது பகவான் சுமேரு மலையைப் போல் கனமுடையவராக இருந்தார். அதனால் பிரலம்பனின் வேகம் தடைபட்டது. பிறகு அவன் தனது உண்மை வடிவத்தினை மேற்கொண்டான். பொன்னாபரணங்கள் அணிந்து ஒளிவீசும் அவன் உடலானது மின்னலடிக்கும் மேகம் சந்திரனைச் சுமந்து செல்வது போன்றிருந்தது.

பதம் 10.18.27 : அனல் கக்கும் கண்களும், நெருப்பைப் போன்ற தலைமுடியும், புருவத்தைத் தொடுவது போல் வளைந்திருந்த அவனது பயங்கரமான பற்களும், அவனது கைகளில் உள்ள கடகங்கள், கிரீடம், செவிக் குண்டலங்கள் போன்றவற்றிலிருந்து வீசிய வினோதமான ஒளியும் கண்டு ஏர்க் கலப்பையினை ஆயுதமாக உடைய பலராமர் சிறிது அச்சத்திற்கு ஆளானார்.

பதம் 10.18.28 : உண்மை நிலையினை உணர்ந்து கொண்டவுடன், அச்சமற்றவராக பலராமர், தன்னைத் தனது நண்பர்களிடமிருந்து பிரித்து, அவ்வசுரன் கடத்திக் கொண்டு போகிறான் என்பதை அறிந்துகொண்டார். பிறகு பகவான் பலராமர், மிகுந்த சினத்துடன் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது வஜ்ராயுதத்தால், ஒரு மலையைத் தாக்குவது போல், தனது முஷ்டியினால் அவ்வசுரனின் தலையில் தாக்கினார்.

பதம் 10.18.29 : பலராமரது முஷ்டியால் தாக்கப்பட்டவுடன் பிரலம்பாசுரனின் தலை இரண்டாகப் பிளந்தது. அவ்வசுரன் இரத்தம் கக்கி உணர்ச்சி இழந்து, இந்திரனால் தாக்கப்பட்ட மலையினைப் போல் பெருத்த ஓசையுடன் உயிரற்று நிலத்தில் வீழ்ந்தான்.

பதம் 10.18.30 : பிரலம்பாசுரனை ஆற்றல் மிக்க பகவான் பலராமர் கொன்றதைக் கண்டு ஆயர்குலச் சிறுவர்கள் அனைவரும் மிக்க வியப்பெய்தினர். அவர்கள் ஆச்சரியத்துடன் “மிக நன்று, மிக நன்று” என்று கூவினர்.

பதம் 10.18.31 : அவர்கள் அனைவரும் பலராமருக்கு ஆசிகள் வழங்கி அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். அப்போற்றுதலுக்கு அவர் முற்றிலும் தகுதி உடையவரே ஆவார். அவர்களது மனங்களில் அவர் மீதான அன்பு ததும்பி வழிந்தது. மரணத்திலிருந்து மீண்டும் வந்தவராக எண்ணி அவர்கள் அவரை ஆசையுடன் தழுவிக் கொண்டனர்.

பதம் 10.18.32 : பாவமிக்க பிரலம்பாசுரன் கொல்லப்பட்டது கண்டு தேவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் பகவான் பலராமர் மீது மலர் மாரி பொழிந்து, அவரது செயற்கரிய செயலைப் போற்றிப் புகழ்ந்தனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare