அத்தியாயம் – 38
அக்ரூரர் விருந்தாவனம் வருதல்
பதம் 10.38.1
ஸ்ரீ-ஸுக உவாச
அக்ரூரோ ‘பி ச தாம் ராத்ரிம் மது-புர்யாம் மஹா-மதி:
உஷித்வா ரதம் ஆஸ்தாய ப்ரயயெள நந்த-கோகுலம்

ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவகோஸ்வாமி கூறினார்; அக்ரூர:—அக்ரூரர்; அபி ச—மற்றும்; தாம்—அந்த; ராத்ரிம்—இரவு; மது-புர்யாம்—மதுராபுரியில்; மஹா-மதி:—உயர்ந்த மனமுடைய; உஷித்வா—இருந்தார்; ரதம்—அவருடைய இரதம்; ஆஸ்தாய—ஏறிக் கொண்டு; ப்ரயயெள—புறப்பட்டார்; நந்த-கோகுலம்—நந்த மகாராஜாவின் கோகுலத்திற்கு.

சுகதேவகோஸ்வாமி கூறினார்: அன்றைய இரவினை மதுராபுரியில் கழித்த உயர்மனமுடைய அக்ரூரர், மறுநாள் காலை தனது இரதத்தில் ஏறிக் கொண்டு நந்த மகாராஜாவின் கோகுலத்திற்குப் புறப்பட்டார்.

பதம் 10.38.2
கச்சன் பதி மஹா-பாகோ பகவதி அம்புஜேக்ஷணே
பக்திம் பராம் உபகத ஏவம் ஏதத் அசிந்தயத்

கச்சன்—பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது; பதி—பாதையில்; மஹா-பாக:—மகா பாக்கியசாலி; பகவதி—முழுமுதற் கடவுளிடம்; அம்புஜ-ஈக்ஷணே—செந்தாமரை விழியுடைய பகவான்; பக்திம்—பக்தி; பராம்—மிகமேலான நிலையினை; உபகத:—அவர் உணர்ந்தார்; ஏவம்—இவ்வாறு; ஏதத்—இது (பின்வருவன); அசிந்தயத்—அவர் நினைத்தார்.

தனது பாதையில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது மகாத்மா அக்ரூரர் செந்தாமரைக் கண்ணனான முழுமுதற் கடவுளிடத்து அதீதப் பக்தியினை உணர்ந்தார். அதனால் அவர் பின்வருமாறு கருதத் தொடங்கினார்.

பதம் 10.38.3
கிம் மயா ரிதம் பத்ரம் கிம் தப்தம் பரமம் தப:
கிம் வாதாபி அர்ஹதே தத்தம் யத் த்ரக்ஷ்யாமி அத்ய கேஸவம்

கிம்—என்ன; மயா—என்னால்; ஆசரிதம்—செய்யப்பட்டது; பத்ரம்—நற்செயல்கள்; கிம்—என்ன; தப்தம்—துன்பப்பட்டேன்; பரமம்—கடுமையான; தப:—தவம்; கிம்—என்ன; வா—அல்லது; அத-அபி—மாறாக; அர்ஹதே—வழிபாடு செய்யப்பட்டது; தத்தம்—தானம் அளிக்கப்பட்டது; யத்—என்னால்; த்ரக்ஷ்யாமி—நான் காணப்போகின்றேன்; அத்ய—இன்று; கேஸவம்—பகவான் கிருஷ்ணர்.

(ஸ்ரீ அக்ரூரர் நினைத்தார்:) பகவான் கேசவனை இன்று நான் காணப்போவதற்கு என்ன புண்ணியச் செயல்கள் செய்தேன்? கடுமையான தவங்கள் என்ன செய்தேன்? என்ன வழிபாட்டினைச் செய்தேன்? அல்லது எதைத் தானம் கொடுத்தேன்?

பதம் 10.38.4
மமைதத் துர்லபம் மன்ய உத்தம:-ஸ்லோக-தர்ஸனம்
விஷயாத்மனோ யதா ப்ரஹ்ம-கீர்த்த்தனம் ஸுத்ர-ஜன்மன:

மம—என்னுடைய; ஏதத்—இந்த; துர்லபம்—எய்துதற்கரிய; மன்யே—நான் கருதுகிறேன்; உத்தம:-ஸ்லோக—மிகச் சிறந்த பாடலில் போற்றப்படுபவரான பரமபுருஷ பகவானின்; தர்ஸனம்—தரிசனம்; விஷய-ஆத்மன:—புலனுகர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் ஒருவனுக்கு; யதா—போன்று; ப்ரஹ்ம—வேதங்களின்; கீர்த்தனம்—ஓதுதல்; ஸுத்ர—இழிந்த ஜாதி மனிதன்; ஜன்மன:—பிறப்பெடுத்த ஒருவன்.

புலனுகர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் லோகாயதவாதியாக நான் இருக்கின்ற காரணத்தினால் உத்தம சுலோகரான பகவானைத் தரிசிக்கும் பாக்கியம் நான் பெற்றது சூத்திர குலத்தில் பிறந்த ஒருவன் வேதம் மந்திரங்களை ஒதுவதற்கு அனுமதிக்கப்படுவது போல் எனக்கு மிகவும் அரியதாகும் என்று நான் கருதுகின்றேன்.

பதம் 10.38.5
மைவம் மமாதமஸ்யாபி ஸ்யாத் ஏவாச்யுத-தர்ஸனம்
ஹ்ரியமாண: கால-நத்யா க்வசித் தரதி கஸ்சன

ம ஏவம்—நான் இவ்வாறு கருதக் கூடாது; மம—என்னுடைய; அதமஸ்ய—மிக கிழிந்தவனாக; அபி—இருந்தபோதிலும்; ஸ்யாத்—இப்படியும் இருக்கலாம்; ஏவ—நிச்சயமாக; அச்யுத—குற்றமற்ற பகவானின்; தர்ஸனம்—தரிசனம்; ஹ்ரியமாண:—இழுத்துச் செல்லப்படுகின்ற; கால—காலத்தின்; நத்யா—நதியினால்; க்வசித்—சிலசமயம்; தரதி—கரை ஏறுதல்; கஸ்சன—யாரே ஒருவன்.

போதும் இதுபோன்ற நினைவுகள்! சாதாரண இழிந்த ஆத்மாவான என்னைப் போன்றவனுக்கே குற்றமற்ற பகவானின் தரிசனத்திற்கான பாக்கியம் கிட்டும் என்றால், காலம் என்னும் நதியில் இழுத்துச் செல்லப்படும் பந்தப்பட்ட ஆத்மாக்களில் யாரோ ஒருவன் சில சமயம் கரையினை அடையலாம்.

பதம் 10.38.6
மமாத்யாமங்களம் நஷ்டம் பலவாம்ஸ் சைவ மே பவ:
யன் நமஸ்யே பகவதோ யோகி-த்யேயாங்க்ரி-பங்கஜம்

மம—எனது; அத்ய—இன்று; அமங்களம்—அமங்களமான பாவப் பலன்கள்; நஷ்டம்—நீக்கப்படும்; பல-வாம்—பயனடையும்; ச—மற்றும்; ஏவ—உண்மையில்; மே—எனது; பவ:—பிறப்பு; யத்—என்பதினால்; நமஸ்யே—நான் எனது வந்தனங்களை அளிக்கப் போகின்றேன்; பகவத:—பரமபுருஷ பகவானின்; யோகி-த்யேய—யோகியரால் தியானிக்கப்படும்; அங்க்ரி—பாதங்களுக்கு; பங்கஜம்—தாமரைமலர் போன்ற.

யோகிகளால் தியானிக்கப்படும் பரமபுருஷ பகவானின் தாமரைத் திருவடிகளுக்கு நான் எனது வந்தனங்களை அர்ப்பணிக்கப் போவதினால் இன்று எனது அனைத்துப் பாவங்களின் பலன்களும் நீங்கப் பெற்றன. எனது பிறப்பு பயனுடையதாயிற்று.

பதம் 10.38.7
கம்ஸோ பதாத்யாக்ருத மே ‘தி-அனுக்ரஹம்
த்ரக்ஷ்யே ‘ங்க்ரி-பத்மம் ப்ரஹிதே ‘முனா ஹரே:
க்ருதாவதாரஸ்ய துரத்யயம் தம:
பூர்வே ‘தரன் யன்-நக-மண்டல-த்விஷா

கம்ஸ்:—மன்னன் கம்சன்; பத—உண்மையில்; அத்ய—இன்று; அக்ருத—செய்திருக்கிறான்; மே—எனக்கு; அதி-அனுக்ரஹம்—அதீத அன்பின் காரணமான ஒரு செயல்; த்ரக்ஷ்யே—நான் காண; அங்க்ரி-பத்மம்—தாமரைத்திருவடிகள்; ப்ரஹித:—அனுப்பப்பட்டேன்; அமுனா—அவனால்; ஹரே:—முழுமுதற் கடவுளின்; க்ருத—அவர் செய்திருக்கிறார்; அவதாரஸ்ய—இவ்வுலகில் அவர் அவதாரம்; துரத்யயம்—கடப்பதற்கரிய; தம:—பௌதிக வாழ்வின் தமோகுணம்; பூர்வே—முன்னர் இருந்தவர்கள்; அதரன்—கடந்திருக்கின்றனர்; யத்—எவருடைய; நக-மண்டல—கால்விரல்களின் நகவரிசைகளின்; த்விஷா—ஒளியினால்.

இவ்வுலகில் இப்போது அவதரித்திருக்கும் பகவான் ஹரியின் தாமரைத் திருவடிகளைத் தரிசிப்பதற்காக மன்னன் கம்சன் என்னை அனுப்பியதின்மூலம் இன்று அவன் எனக்குப் பெருங்கருணை காட்டியுள்ளான். அவர் கால் விரல்களின் நகங்களின் ஒளியினால் ஏராளமான ஆத்மாக்கள் முன்னர் கடப்பதற்கரிய பெளதிக வாழ்வின் இருளினைக் கடந்து விடுதலை பெற்றிருக்கின்றனர்.

பதம் 10.38.8
யத் அர்ச்சிதம் ப்ரஹ்ம-பவாதிபி: ஸுரை:
ஸ்ரியா ச தேவ்யா முனிபி: ஸ-ஸாத்வதை:
கோ-சாரணாயானுசரைஸ் சரத் வனே
யத் கோபிகானாம் குச-குங்குமாங்கிதம்

யத்—எது (தாமரைத் திருவடிகள்); அர்ச்சிதம்—வழிபடப்படுகின்றன; ப்ரஹ்ம-பவ—பிரம்மதேவனாலும், சிவபெருமானாலும்; ஆதிபி:—மற்றும் பிற; ஸுரை:—தேவர்களாலும்; ஸ்ரியா—ஸ்ரீ தேவியாலும்; ச—மேலும்; தேவ்யா—அதிர்ஷ்ட தேவதை; முனிபி:—முனிவர்களால்; ஸ-ஸாத்வதை:—பக்தர்களுடன்; கோ—பசுக்கள்; சாரணாய—மேய்த்துக் கொண்டு; அனுசரை:—அவரது துணைவர்களுடன்; சரத்—செல்கின்றார்; வனே—வனத்தில்; யத்—எது; கோபிகானம்—கோபிகைகள்; குச—மார்பகங்களிலிருந்து; குங்கும்—குங்குமத்துகள்களினால்; அங்கிதம்—அடையாளமுடையன.

அத்தாமரைத் திருவடிகள் பிரம்ம தேவனாலும், சிவபெருமானாலும், அனைத்துத் தேவர்களாலும், ஸ்ரீ தேவியாலும், மாமுனிவர்களாலும், வைணவர்களாலும் வழிபடப்படுகின்றன. அத்தாமரைத் திருவடிகளினால் பகவான் தமது நண்பர்களுடன் பசுக்களை மேய்க்கும் பொழுது வனத்தில் நடந்துசெல்கின்றார். அத்தாமரைத் திருவடிகளில் கோபியர்களின் மார்பகங்களிலுள்ள குங்குமத்துக்கள்கள் படிந்திருக்கின்றன.

பதம் 10.38.9
த்ரக்ஷ்யாமி நூனம் ஸு-கபோல-நாஸிகம்
ஸ்மிதாவலோகாருண-கஞ்ஜ-லோசனம்
முகம் முகுந்தஸ்ய குடாலகாவ்ருதம்
ப்ரதக்ஷிணம் மே ப்ரசரந்தி வை ம்ருகா:

த்ரக்ஷ்யாமி—நான் காணச் சென்றுகொண்டிருக்கின்றேன்; நூனம்—நிச்சயமாக; ஸு—எழில்மிக்க; கபோல—அவருடைய கன்னங்கள்; நாஸிகம்—மற்றும் நாசி; ஸ்மித—புன்னகை; அவலோக—பார்வைகளுடன்; அருண—சிவந்த; கஞ்ஜ—தாமரை மலர் போன்ற; லோசனம்—விழிகள்; முகம்—முகம்; முகுந்தஸ்ய—பகவான் கிருஷ்ணரின்; குட—சுருண்ட; அலக—தலைமுடியினால்; ஆவ்ருதம்—மூடப்பட்ட; ப்ரதக்ஷிணம்—வலம்வருதல்; மே—என்னை; ப்ரசரந்தி—செய்கின்றன; வை—உண்மையில்; ம்ருகா:—மான்கள்.

மான்கள் என்னை வலப்புறமாகக் கடந்து செல்வதினால் நான் நிச்சயம் பகவான் முகுந்தனின் திருமுகத்தைத் தரிசிப்பேன். சுருண்ட மயிர்க்குழல்களினால் மறைக்கப்பட்டிருக்கும் அவரது திருமுகம், அவரது எழில்மிக்க கன்னங்கள், எடுப்பான நாசி, அவரது புன்னகை ததும்பும் பார்வைகள் மற்றும் அவரது சிவந்த செந்தாமரை விழிகளினால் அழகு செய்யப்படுகின்றது.

பதம் 10.38.10
அபி அத்ய விஷ்ணோர் மனுஜத்வம் ஈயுஷோ
பாராவதாராய புவோ நிஜேச்சயா
லாவண்ய-தாம்னோ பவிதோபலம்பனம்
மஹ்யம் ந ந ஸ்யாத் பலம் அஞ்ஜஸா த்ருஸ:

அபி—மேலும்; அத்ய—இன்று; விஷ்ணோ:—பரமபுருஷ பகவான் விஷ்ணுவின்; மனுஜத்வம்—மனிதவடிவம்; ஈயுஷ:—அவர் மேற்கொண்டிருக்கின்றார்; பார—பாரத்தினை; அவதாராய—குறைப்பதற்காக; புவ:—பூமியின்; நிஜ—அவரது சுய; இச்சயா—விருப்பத்தினால்; லாவாண்ய—எழிலின்; தாம்ன:—உறைவிடத்தின்; பவிதா—இருக்கும்; உபலம்பனம்—உணர்கின்றது; மஹ்யம்—எனக்கு; ந—அவ்வாறில்லை; ந ஸ்யாத்—அது நிகழப்போவதில்லை; பலம்—பலன்; அஞ்ஜஸா—நேரடியான; த்ருஸ:—பார்வையின்.

பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காகத் தமது இனிய விருப்பத்தின் பேரில் மனித வடிவம் மேற்கொண்டவரும், எழில் நலம் அனைத்தின் உறைவிடமாகத் திகழ்பவருமான பரமபுருஷ பகவான் விஷ்ணுவைத் தரிசிக்கப் போகின்றேன். அதனால் எனது விழிகள் தமது தோற்றத்தின் பரிபூரணத்துவத்தை எய்தப்போவதில் எந்தவிதமான மாறுபாடும் இல்லை.

பதம் 10.38.11
ய ஈக்ஷிதாஹம்-ரஹிதோ ‘பி அஸத்-ஸதோ:
ஸ்வ-தேஜஸாபாஸ்த-தமோ-பிதா-ப்ரம:
ஸ்வ-மாயயாத்மன் ரசிதைஸ் தத்-ஈக்ஷயா
ப்ராணாக்ஷ-தீபி: ஸதனேஷ்வ் அபீயதே

ய:—எவர்; ஈக்ஷித—சாட்சி; அஹம்—ஆணவம்; ரஹித:—அற்றவர்; அபி—இருந்தும்; அஸத்-ஸதோ:—பெளதிகக் காரணங்கள் மற்றும் விளைவுகளின்; ஸ்வ-தேஜஸா—அவரது சுய சக்தியினால்; அபாஸ்த—நீக்குகின்றார்; தம:—அறியாமை இருளை; பிதா—பிரிந்திருக்கும் எண்ணம்; ப்ரம:—குழப்பம்; ஸ்வ-மாயயா—அவரது பெளதிகப் படைப்புச் சக்தியினால்; ஆத்மன்—தமக்குள்; ரசிதை:—படைக்கப்பட்டவர்களினால் (உயிர்வாழிகள்); தத்-ஈக்ஷயா—மாயையினைப் பார்க்கும் அவரது பார்வையினால்; ப்ராண—உயிர் மூச்சுக்காற்றினால்; அக்ஷ—பலன்கள்; தீபி:—மற்றும் புத்தி; ஸதனேஷீ—உயிர்களின் உடலினுள்; அபீயதே—அவரது இருப்பு உணரப்படுகிறது.

பௌதிகக் காரணம் மற்றும் விளைவிற்குச் சாட்சியாக அவரே விளங்குகின்றார். இருந்தும் அவற்றுடனான தவறான அடையாளத்திலிருந்து அவர் எப்போதும் விலகியே இருக்கின்றார். அவருடைய சுய சக்தியால் பிரிதல் மற்றும் குழப்பத்தின் இருளினை நீக்குகின்றார். தமது உலகியல் படைப்புச் சக்தியினை அவர் பார்ப்பதினால் உண்டாகும் இவ்வுலகிலுள்ள தனிப்பட்ட ஆத்மாக்கள் தங்கள் பிராணன், புலன்கள் மற்றும் புத்தியின் செயல்களினால் அவரை மறைமுகமாக உணர்கின்றனர்.

பதம் 10.38.12
யஸ்யாகிலாமீவ-ஹபி: ஸு-மங்களை:
வாசோ விமிஸ்ரா குண-கர்ம-ஜன்மபி:
ப்ராணந்தி ஸும்பந்தி புனந்தி வை ஜகத்
யாஸ் தத்-விரக்தா: ஸவ-ஸோபனா மதா:

யஸ்ய—எவருடைய; அகில—அனைத்து; அமீவ—பாவங்களையும்; ஹபி:—அது அழிக்கின்றது; ஸு-மங்களை:—மிகவும் மங்களகரமான; வாச:—வார்த்தைகள்; விமிஸ்ரா:—இணைந்த; குண—குணங்கள்; கர்ம—செயல்கள்; ஜன்மபி:—மற்றும் அவதாரங்களினால்; ப்ராணந்தி—உயிர் கொடுக்கின்றன; ஸும்பந்தி—அழகுபெறச் செய்கின்றன; புனந்தி—தூய்மை செய்கின்றன; வை—உண்மையில்; ஜகத்—இப்பிரபஞ்சம் முழுவதையும்; யா:—எந்த (வார்த்தைகள்); தத்—அவை; விரக்தா:—இல்லாதவை; ஸவ—பிணத்திற்கு; ஸோபனா:—அழகு செய்வது (போன்று); மதா:—கருதப்படுகிறது.

பரமபுருஷ பகவானின் குணங்கள், செயல்கள் மற்றும் தோற்றங்களினால் எல்லாப் பாவங்களும் அழிக்கப்பட்டு, எல்லா நன்மைகளும் உண்டாக்கப்படுகின்றன. இம்மூன்றினைப் பற்றியும் விவரிக்கும் வார்த்தைகள் இவ்வுலகிற்கு உயிரும், எழிலும் அளிப்பதோடு, அதனைத் தூய்மையும் செய்கின்றன. இதற்கு மாறாக அவரது கீர்த்திகளைப் புகழாத வார்த்தைகள் உயிரற்ற பிணத்திற்கு அழகு செய்வது போன்றவையாகும்.

பதம் 10.38.13
ஸ சாவதீர்ண: கில ஸாத்வதான்வயே
ஸ்வ-ஸேது-பாலாமர-வர்ய-ஸர்ம-க்ருத்
யஸோ விதன்வன் வ்ரஜ ஆஸ்த ஈஸ்வரோ
காயந்தி தேவா யத் அஸேஷ-மங்களம்

ஸ:—அவர்; ச—மேலும்; அவதீர்ண:—அவதரித்திருக்கின்றார்; கில—உண்மையில்; ஸாத்வத—சாத்வதர்களின்; அன்வயே—குலத்தில்; ஸ்வ—அவரது; ஸேது—தர்மவிதி முறைகளை; பால—பேணிப்பாதுகாக்கும்; அமர-வர்ய—தலைமைத் தேவர்களின்; ஸர்ம—மகிழ்ச்சி; க்ருத்—உண்டாக்குகின்றார்; யஸ:—அவருடைய புகழ்; விதன்வன்—பரப்புகின்றார்; வ்ரஜே—விரஜத்தில்; ஆஸ்தே—இருக்கின்றார்; ஈஸ்வர:—பரமபுருஷ பகவான்; காயந்தி—பாடுகின்றனர்; தேவா:—தேவர்கள்; யத்—எது (புகழ்); அஸேஷ-மங்களம்—சர்வமங்களங்களும்.

அப்பரமபுருஷ பகவான் அவர் உருவாக்கிய அறநெறிகளைப் பேணுகின்ற உயர்ந்த தேவர்களை மகிழ்விப்பதற்காக சாத்வத குலத்தில் அவதரித்திருக்கின்றார். தேவர்கள் பாடல்களின் மூலம் போற்றி, சர்வமங்களங்களும் அளிக்கின்ற அவரது புகழினை விருந்தாவனத்தில் இருந்து அவரே பரப்புகின்றார்.

பதம் 10.38.14
தம் த்வ் அத்ய நூனம் மஹதாம் கதிம் குரும்
த்ரைலோக்ய-காந்தம் த்ருஸிமன்-மஹோத்ஸவம்
ரூபம் ததானம் ஸ்ரியா ஈப்ஸிதாஸ்பதம்
த்ரக்ஷ்யே மமாஸன்ன் உஷஸ: ஸு-தர்ஸனா:

தம்—அவரை; து—இருப்பினும்; அத்ய—இன்று; நூனம்—நிச்சயமாக; மஹதாம்—மகாத்மாக்களின்; கதிம்—கதியாகவும்; குரும்—ஆன்மீக குருவாகவும் இருப்பவர்; த்ரை-லோக்ய—மூவுலகங்களிலும்; காந்தம்—உண்மை அழகு உடையவர்; த்ருஸி-மத்—கண் படைத்த அனைவர்க்கும்; மஹா-உத்ஸவம்—மகா உற்சவம்; ரூபம்—அவரது வடிவம்; ததானம்—வெளிப்படுத்துகின்றது; ஸ்ரிய:—அதிர்ஷ்ட தேவதையின்; ஈப்ஸித—விருப்பப்படும்; ஆஸ்பதம்—அடைக்கலம்; த்ரக்ஷ்யே—நான் காண்பேன்; மம—என்னுடைய; ஆஸன்—இருக்கின்றன; உஷஸ:—விடியல்கள்; ஸு-தர்ஸனா:—காண்பதற்கு மங்களமுடையதாக.

மகாத்மாக்களின் கதியாகவும், ஆன்மீக குருவாகவும் விளங்கும் அவரை இன்று நான் நிச்சயம் காண்பேன். இப்பிரபஞ்சத்தின் அழகே உருவாக விளங்கும் அவரைக் காண்பது விழி பெற்ற அனைவர்க்கும் விழாக்கால மகிழ்ச்சியினை அளிக்கும். உண்மையில் அவரது வடிவமே, அதிர்ஷ்ட தேவதை விரும்பும் புகலிடமாகும். இப்பொழுது எனது வாழ்வின் விடி வெள்ளி மங்களமுடையதாகின்றது.

பதம் 10.38.15
அதாவரூட ஸபதீஸ்யோ ரதாத்
ப்ரதான-பும்ஸோஸ் சரணம் ஸ்வ-லப்தயே
தியா த்ருதம் யோகிபிர் அபி அஹம் த்ருவம்
நமஸ்ய ஆப்யாம் ச ஸகீன் வனெளகஸ:

அத—பின்னர்; அவரூட:—கீழறங்கி: ஸபதி—உடனே; ஈனயோ—இருபகவான்களின்; ரதாத்—எனது இரதத்திலிருந்து; பிரதான-பும்ஸோ:—முழுமுதற்கடவுள்களின்; சரணம்—திருவடிகளுக்கு; ஸ்வ-லப்தயே—தன்னுணர்வு பெறுவதற்காக; தியா—தமது புத்தியில்; த்ருதம்—கொண்டிருக்கும்; யோகிபி:—யோகிகளினால்; அபி—கூட; அஹம்—நான்; த்ருவம்—உறுதியாக; நமஸ்யே—வீழ்ந்து வணங்குவேன்; ஆப்யாம்—அவர்களை; ச—மற்றும்; ஸகீன்—அவர் நண்பர்களையும்; வன-ஓகஸ:—வனத்தில் வசிப்பவர்களையும்.

பின்னர் நான் உடனடியாக எனது இரதத்திலிருந்து இறங்கி முழுமுதற் கடவுள்களான கிருஷ்ண, பலராமரின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்குவேன். அவர்களின் அத்தாமரைத் திருவடிகளையே தன்னுணர்வு பெறுவதற்காகப் பெருமுயற்சிசெய்யும் யோகிகள் தங்கள் மனங்களில் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் நான் பகவானின் ஆயர்குல நண்பர்களையும், விருந்தாவனத்தில் வாழும் அனைவரையும் கூட வணங்குவேன்.

பதம் 10.38.16
அபி அங்க்ரி-மூலே பதிதஸ்ய மே விபு:
ஸிரஸி அதாஸ்யன் நிஜ-ஹஸ்த-பங்கஜம்
தத்தாபயம் கால-புஜாங்க-ரம்ஹஸா
ப்ரோத்வேஜிதானாம் ஸரணைஷிணாம் ந்ருணாம்

அபி—மேலும்; அங்க்ரி—அவருடைய பாதங்களின்; மூலே—அடியில்; பதிதஸ்ய—வீழும்; மே—எனது; விபு:—எல்லாம்வல்ல பகவான்; ஸிரஸி—தலையின்மீது; அதாஸ்யத்—வைப்பார்; நிஜ—தமது; ஹஸ்த—கரத்தினை; பங்கஜம்—தாமரைமலர் போன்ற; தத்த—அது அளிக்கின்றது; அபயம்—அபயம்; கால—காலம்; புஜ-அங்க—சர்ப்பத்தின்; ரம்ஹஸா—வேகமான சக்தியினால், ப்ரோத்வேஜிதானாம்—மிகவும் துன்புறுத்தப்படுபவர்கள்; ஸரண—அடைக்கலம்; ஏஷீணாம்—தேடிக்கொண்டிருக்கும்; ந்ருணாம்—மனிதர்களுக்கு

மேலும் நான் அவரது திருவடிகளில் வீழும்பொழுது எல்லாம்வல்ல பகவான் தமது தாமரை மலர்க்கரத்தினை எனது தலையின் மீது வைப்பார். ஆற்றல்மிக்க காலம் என்னும் சர்ப்பத்தினால் பெரிதும் வருந்தி அவரது அடைக்கலம் நாடுபவர்களின் அனைத்துப் பயங்களையும் அவரது மலர்க்கரம் நீக்குகின்றது.

பதம் 10.38.17
ஸமர்ஹணம் யத்ர நிதாய கௌஸிகஸ்
ததா பலிஸ் சாப ஜகத்-த்ரயேந்த்ரதாம்
யத் வா விஹாரே வ்ரஜ-யோஷிதாம் ஸ்ரமம்
ஸ்பர்ஸேன ஸௌகந்திக-கந்தி அபானுதத்

ஸமர்ஹணம்—மரியாதைக்குரிய அர்ப்பணிப்பு; யத்ர—எங்கே; நிதாய—இட்டதினால்; கெளஸிக:—புரந்தரன்; ததா—அதுபோல்; பலி:—பலிமகாராஜா; ச—கூட; ஆப—எய்தினர்; ஜகத்—உலகங்களின்; த்ரய—மூன்று; இந்த்ரதாம்—பதவி (தேவலோகத்தின் அரசபதவி, இந்திரனாக); யத்—எது; (பகவானின் தாமரைக் கரம்); வா—மற்றும்; விஹாரே—லீலைகளின்போது (ராஸ நடன); வ்ரஜ-யோஷிதாம்—விரஜத்திள் உள்ளப் பெண்களின்; ஸ்ரமம்—களைப்பினை; ஸ்பர்ஸேன—அவற்றின் ஸ்பரிசத்தினால்; ஸௌகந்திக—நறுமணமுடைய ஒரு மலரைப் போன்று; கந்தி—நறுமணம்; அபானுதத்—நீக்கியது.

அத்தாமரைக் கரங்களுக்கு தானமளித்ததினால் புரந்தரனும் பலிச் சக்கரவர்த்தியும் தேவலோகத்தின் அரசபதவியான இந்திர பதவியை அடைந்தனர். ‘ராஸ’ நடனத்தின்போது பகவான் கோபியர்களின் முகத்திலுள்ள வியர்வை முத்துக்களைத் தமது கரத்தினால் துடைத்து அவர்களின் களைப்பினைப் போக்குவார். அப்போது அவர்களின் முக ஸ்பரிசம், இனிய நறுமணமிக்க மலரைப் போல் அவரது கரத்தினை நறுமணம் கமழச் செய்யும்.

பதம் 10.38.18
ந மய்ய் உனபஷ்யதி அரி-புத்திம் அச்யுத:
கம்ஸஸ்ய தூத: ப்ரஹிதோ ‘பி விஸ்வ-த்ருக்
யோ ‘ந்தர் பஹிஸ் சேதஸ ஏதத் ஈஹிதம்
க்ஷேத்ர-ஜ்ஞ ஈக்ஷதி அமலேன சக்ஷுஷா

ந—இல்லை; மயி—என்னிடம்; உனபஷ்யதி—வளர்த்துக் கொள்வாரா; அரி—ஒரு பகைவனின்; புத்திம்—மனப்பான்மை; அச்யுத:—குற்றமற்ற பகவான்; கம்ஸஸ்ய—கம்சனின்; தூத:—தூதனாக; ப்ரஹித:—அனுப்பப்பட்ட; அபி—போதிலும்; விஸ்வ—எல்லாவற்றையும்; த்ருக்—காண்பவர்; ய:—எவர்; அந்த:—உள்ளேயும்; பஹி:—வெளியேயும்; சேத:—இதயத்தின்; ஈஹிதம்—எது செய்யப்படினும்; க்ஷேத்ர—களத்தின் (பெளதிக உடலின்); ஜ்ஞ:—அறிந்தவர்; ஈக்ஷதி—அவர் பார்க்கிறார்; அமலேன—நிறைவான; சக்ஷுஷா—பார்வை.

கம்சன் தனது தூதனாக என்னை இங்கே அனுப்பியுள்ள போதிலும் குற்றமற்ற பகவான் என்னைத் தமது பகைவனாகக் கருதமாட்டார். எல்லாம் அறியவல்ல பகவானே இப்பெளதிக உடல் களத்தினை உண்மையில் அறிபவர் ஆவார். அவருடைய நிறைவான பார்வையினால் அவர் பந்தப்பட்ட ஆத்மாவின் இதயத்தில் உள்ளும் புறமும் நடைபெறும் எல்லாச் செயல்களையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

பதம் 10.38.19
அபி அங்க்ரி-மூலே ‘வஹிதம் க்ருதாஞ்ஜலிம்
மாம் ஈக்ஷிதா ஸ-ஸ்மிதம் ஆர்த்ரயா த்ருஸா
ஸபதி அபத்வஸ்த-ஸமஸ்த-கில்பிஷோ
வோடா முதம் வீத-விஸங்க ஊர்ஜிதாம்

அபி—மேலும்; அங்க்ரி—அவரது திருவடிகளின்; மூல—அடியில்; அவஹிதம்—நிலைநிற்றல்; க்ருத-அஞ்ஜலிம்—குவித்த கரங்களுடன்; மாம்—என்னை; ஈக்ஷிதா—பார்ப்பார்; ஸ-ஸ்மிதம்—புன்னகையுடன்; ஆர்த்ரயா—பாசமிகு; த்ருஸா—பார்வையினால்; ஸபதி—உடனே; அபத்வஸ்த—நீக்கப்படும்; ஸமஸ்த—அணைத்து; கில்பிஷ:—மாசுக்களும்; வோடா—நான் அடைவேன்; முதம்—மகிழ்ச்சி; வீத—விடுதலை பெறுவேன்; விஸங்க:—ஐயத்திலிருந்து; ஊர்ஜிதாம்—மேன்மையான.

குவித்த கரங்களுடன் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கும் என்னை அவர் புன்னகையுடனும், பாசமிகு பார்வையுடனும் நோக்குவார். பின்னர் எனது மாசுக்கள் அனைத்தும் உடனே நீங்கப் பெறும். எனது ஐயங்கள் அனைத்தையும் ஒழித்து நான் மிகவுயர்ந்த இன்பம் எய்துவேன்.

பதம் 10.38.20
ஸுஹ்ருத்தமம் ஜ்ஞாதிம் அனன்ய-தைவதம்
தோர்ப்யாம் ப்ருஹத்ப்யாம் பரிரப்ஸ்யதே ‘த மாம்
ஆத்மா ஹி தீர்த்தீ க்ரியதே ததைவ மே
பந்தஸ் ச கர்மாத்மக உச்ச்வஸிதி அத:

ஸுஹ்ருத்-தமம்—நண்பர்களிற் சிறந்தவர்; ஜ்ஞாதீம்—உறவினர்; அனன்ய—சிறப்பிற்குரிய; தைவதம்—நான் வழிபடும் பொருளாக (அவரை அடைந்தது); தோர்ப்பயாம்—அவரது இரு கரங்களினால்; ப்ருஹத்ப்யாம்—நீண்ட; பரிரப்ஸ்யதே—அவர் தழுவிக் கொள்வார்; அத—அதன்பிறகு; மாம்—என்னை; ஆத்மா—உடல்; ஹி—உண்மையில்; தீர்த்தீ—புனிதப்படுத்துவார்; க்ரியதே—ஆகும்; ததா-ஏவ—பின்னர் உண்மையில்; மே—எனது; பந்த:—பந்தம்; ச—மற்றும்; கர்ம-ஆத்மக:—கர்ம வினையின் காரணமாக; உச்ச்வஸிதி குறைக்கப்படும்; அத:—இதன் விளைவாக.

என்னைத் தமது நெருங்கிய நண்பனாகவும், உறவினனாகவும் கருதி, கிருஷ்ணர் தமது உறுதிமிக்கக் கரங்களினால் தழுவிக் கொள்வார். அதன்மூலம் எனது உடலினைப் புனிதப்படுத்தி, பலன் தரும் செயல்களின் காரணமாக விளைந்த எனது தளைகள் அனைத்தையும் இல்லா தொழிப்பார்.

பதம் 10.38.21
லப்த்வாங்க-ஸங்கம் ப்ரணதம் க்ருதாஞ்ஜலிம்
மாம் வக்ஷ்யதே ‘க்ரூர ததேதி உருஸ்ரவா:
ததா வயம் ஜன்ம-ப்ருதோ மஹீயஸா
நைவாத்ருதோ யோ திக் அமுஷ்ய ஜன்மதத்

லப்த்வா—எய்தப்பெற்றவுடன்; அங்க-ஸங்கம்—உடல் தொடர்பு; ப்ரணதம்—தலைவணங்கி நிற்கும் என்னை; க்ருத-அஞ்ஜலிம்—இரு கரங்களையும் சேர்த்துக்குவித்த நிலையில்; மாம்—என்னை; வக்ஷ்யதே—அவர் கூறுவார்; அக்ரூர—ஓ, அக்ரூரா; ததா—என் அன்பான உறவினரே; இதி—இது போன்ற வார்த்தைகளினால்; உருஸ்ரவா:—பரந்த புகழுடைய பகவான் கிருஷ்ணர்; ததா—பின்னர்; வயம்—எமது; ஜன்ம-ப்ருத:—பிறப்பு வெற்றிபெறும்; மஹீயஸா—அனைவரினும் சிறந்தவரால்; ந—இல்லை; ஏவ—உண்மையில்; ஆத்ருத:—கெளரவிக்கப்படுகிறது; ய:—எவர்; திக்—இரக்கத்திற்குரியது; அமுஷ்ய—அவனுடைய; ஜன்ம—பிறப்பு; தத்—அது.

அனைத்துக் கீர்த்திகளுமிக்க பகவான் கிருஷ்ணரால் தழுவப்பெற்றவுடன், நான் அவர் முன்பு வணங்கிய தலையுடனும், குவித்த கரங்களுடனும் பணிவுடன் நிற்பேன். அப்போது அவர் என்னை “அன்பிற்குரிய அக்ரூரா” என்று அழைப்பார். அக்கணம் எனது வாழ்க்கை லட்சியம் நிறைவு பெறும். உண்மையில் முழுமுதற் கடவுளினால் அங்கீகரிக்கப்படாத எவனுடைய வாழ்க்கையும் இரங்கத்தக்கதேயாகும்.

பதம் 10.38.22
ந தஸ்ய கஸ்சித் தயித: ஸுஹ்ருத்தமோ
ந சாப்ரியோ த்வேஷ்ய உபக்ஷ்ய ஏவ்வா
ததாபி பக்தான் பஜதே யதா ததா
ஸுர த்ரமோ யத்வத் உபாஸ்ரிதோ ‘ர்த்த-த:

ந தஸ்ய—அவரிடத்து இல்லை; கஸ்சித்—எவரும்; தயித:—பிரியமான; ஸுஹ்ருத்தம:—உயிர்நண்பன்; ந ச—இல்லை; அப்ரிய—பிரியமற்றவர்; த்வேஷ்ய:—துவேஷத்திற்குரியவர்கள்: உபேக்ஷ்ய:—புறக்கணிக்கப்பட்டவர்கள்; ஏவ—உண்மையில்; வா—அல்லது; ததா அபி—இன்னும்; பக்தான்—தம் பக்தர்களுடன்; பஜதே—அவர் அன்புடன் கைம்மாறு செய்கின்றார்; யதா—அவர்கள் போன்று: ததா—அதற்கேற்றவாறு; ஸுர-த்ரம:—தேவலோகத்துக் கற்பக மரம்; யத்வத்—போன்று; உபாஸ்ரித:—அடைக்கலம் பெற்றவர்களின்; அர்த்த—விரும்பிய நன்மைகளை; த:—அளிக்கின்றார்.

முழுமுதற்கடவுளுக்கு, உயிரினும் இனிய, நெருங்கிய நண்பர் என்று எவருமிலர், அதுபோல் அவர் எவரையும் விரும்பத்தகாதவராகவோ, வெறுக்கத்தக்கவராகவோ அல்லது புறக்கணிக்கக் கூடியவராகவோ கருதுவதுமில்லை. தேவலோகத்திலுள்ள கற்பக விருட்சம் அதனை நாடிச் செல்பவர்களின் விருப்பங்களைத் தீர்த்து வைப்பதுபோல் அவர் எல்லோரிடத்தும் சமமாக, நம்மைத் தமது பக்தர்கள் எந்த முறையில் வழிபட்டாலும் அவர் அன்புடன் அவர்களுக்குக் கைம்மாறு செய்கின்றார்.

பதம் 10.38.23
கிம் சாக்ரஜோ மாவனதம் யதூத்தம:
ஸ்மயன் பரிஷ்வஜ்ய க்ருஹீதம் அஞ்ஜலௌ
க்ருஹம் ப்ரவேஷ்யாப்த-ஸமஸ்த-ஸத்க்ருதம்
ஸம்ப்ரக்ஷ்யதே கம்ஸ-க்ருதம் ஸ்வ-பந்துஷு

கிம் ச—மேலும்; அக்ர-ஜ:—அவருடைய மூத்த சகோதரர் (பகவான் பலராமர்); மா—என்னை; அவனதம்—தலைவணங்கி நிற்கின்ற; யது-உத்தம:—யதுக்களில் சிறந்த; ஸ்மயன்—புன்னகையுடன்; பரிஷ்வஜ்ய—தழுவிக் கொண்டு; க்ருஹீதம்—எடுத்துக் கொள்வார்; அஞ்ஜலௌ—எனது குவித்த கரங்களை; க்ருஹ்ம்—அவருடைய இல்லத்திற்கு; ப்ரவேஸ்ய—அழைத்துக் கொண்டு; ஆப்த—வரவேற்பார்; ஸமஸ்த—அனைத்து; ஸத்-க்ருதம்—மரியாதைகளுடன்; ஸம்ப்ரக்ஷ்யதே—அவர் வினவுவார்; கம்ச—கம்சனால்; க்ருதம்—என்ன செய்யப்பட்டது; ஸ்வ-பந்துஷூ—தமது உறவினர்களுக்கு.

பின்னர் யதுகுலத்தில் சிறந்தவரும், பகவான் கிருஷ்ணரின் மூத்த சகோதரருமான பகவான் பலராமர் நான் தலைவணங்கியபடி நிற்கும் பொழுது எனது குவித்த கரங்களைத் தமது கரங்களினால் பற்றி என்னை மார்புடன் தழுவிக் கொள்வார். பிறகு என்னை அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கே அவர் சகலவிதமான மரியாதைகளுடன் என்னை வரவேற்றுக் கெளரவப்படுத்துவார். அதன்பின் கம்சன் தமது உறவினர்களை எவ்வாறு நடத்துகின்றான் என்று என்னிடம் வினவுவார்.

பதம் 10.38.24
ஸ்ரீ-ஸுக: உவாச
இதி ஸஞ்சிந்தயன் க்ருஷ்ணம் ஸ்வப்லக-தனயோ ‘த்வனி
ரதேன கோகுலம் ப்ராப்த: ஸுர்யஸ் சாஸ்த-கிரிம் ந்ருப

ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவகோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ஸஞ்சிந்தயன்—ஆழ்ந்து நினைந்து; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணரை; ஸ்வப்லக-தனய:—சுவபல்கரின் மைந்தர் அக்ரூரர்; அத்வனி—வழியெங்கும்; ரதேன—அவரது இரதத்தின் மூலம்; கோகுலம்—கோகுலத்தினை; ப்ராப்த:—அடைந்தார்; ஸுர்ய:—சூரியன்; ச—மேலும்; அஸ்த-கிரிம்—சூரியன் அஸ்தமிக்கும் வேளை; ந்ருப—ஓ, மன்னனே (பரீக்ஷித்து).

சுகதேவகோஸ்வாமி கூறினார்: அன்பிற்குரிய அரசனே! சுவபல்கரின் மைந்தரான அக்ரூரர் வழியெங்கும் இவ்வாறு கிருஷ்ணரைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டு சூரியன் மறையும் வேளையில் கோகுலத்தினை அடைந்தார்.

பதம் 10.38.25
பதானி தஸ்யாகில-லோக-பால-
கிரீட ஜுஷ்டாமல-பாத-ரேணோ:
ததர்ஸ கோஷ்டே க்ஷிதி-கௌது கானி
விலக்ஷிதானி அப்ஜ-யவாங்குஸாத்யை:

பதானி—காலடிக் சுவடுகள்; தஸ்ய—அவர்களுடைய; அகில—எல்லா; லோக—உலகங்களில் உள்ள; பால—ஆளுநர்களினால்; கிரீட—தங்கள் கிரீடங்களின் மேல்; ஜூஷ்ட—இடப்பட்டிருக்கின்றன; அமல—தூய்மையான; பாத—அவருடைய திருவடிகளின்; ரேணோ:—தூசு; ததர்ஸ—அவர் (அக்ரூரர்) கண்டார்; கோஷ்டே—கோகுலத்தில்; க்ஷிதி—நிலத்தினை; கௌதுகானி—நேர்த்தியாக அலங்கரித்திருப்பதை; விலக்ஷிதானி—சிறப்புடையன்; அப்ஜ—தாமரைமலர்; யவ—தானியம்; அங்குஸ—அங்குசம்; ஆத்யை:—போன்ற குறிகளினால்.

எவருடைய தாமரைத் திருவடிகளிலுள்ளத் தூசியினை இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உலகங்களின் ஆளுநர்களும் தங்கள் கிரீடங்களின் மீது தாங்கிக் கொண்டிருக்கின்றனரோ, அவர்களின் காலடிச் சுவடுகளை அக்ரூரர் கண்டார். பகவானின் அக்காலடிச் சுவடுகள் தாமரை, தானியம், மற்றும் அங்குசம் போன்ற அடையாளங்களினால் சிறப்புடையதாக விளங்கின. மேலும் அக்காலடிச்சுவடுகள் நிலத்தினை எழில் பெறச் செய்தன.

பதம் 10.38.26
தத்-தர்ஸனாஹ்லாத-விவ்ருத்த-ஸம்ப்ரம:
ப்ரேம்ணோர்த்வ-ரோமாஸ்ரு-கலாகுலேக்ஷண:
ரதாத் அவஸ்கந்த்ய ஸ தேஷ்வ் அசேஷ்டத
ப்ரபோர் அமுனி அங்க்ரி ரஜாம்ஸி அஹோ இதி

தத்-பகவான் கிருஷ்ணரின் காலடிச்சுவடுகளின்; தர்ஸன—தரிசனம்; ஆஹ்லாத—ஆனந்தத்தினால்; விவ்ருத்த—பெரிதும் அதிகரித்தது; ஸம்ப்ரம:—அவருடைய கிளர்ச்சி; ப்ரேம்ணா—தூய அன்பினால்; உர்த்வ—குத்திட்டு நின்றன; ரோம—அவர் உடலிலுள்ள ரோமங்கள்; அஸ்ரு-கலா—கண்ணீர்த்துளிகளினால்; ஆகுல—நிரப்பப்பட்டன; ஆக்ஷண:—அவருடைய விழிகள்; ரதாத்—இரதத்திலிருந்து; அவஸ்கந்த்ய—கீழே இறங்கி; ஸ:—அவர், அக்ரூரர்; தேஷீ—அவற்றின் (காலடிச் சுவடுகளின்) மத்தியில்; அசேஷ்டத—உருண்டு புரண்டார்; ப்ரபோ:—எந்தன் பிரபுவின்; அமூனி—இவை; அங்க்ரி—திருவடிகளிலிருந்து; ரஜாம்ஸி—தூசியின் சிறு கூறுகள்; அஹோ—ஆ; இதி—இவ்வார்த்தைகளினால்.

பகவானின் காலடிச் சுவடுகளைக் கண்ட ஆனந்த மெய்மறத்தலினால் அவர் அதிகமாகக் கிளர்ச்சியடைந்தார். அவருடைய தூய காதலினால் அவர் உடலிலுள்ள ரோமங்கள் குத்திட்டு நின்றன. அவருடைய கண்கள் கண்ணீரினால் நிரப்பப்பட்டன. தனது இரதத்திலிருந்து கீழே குதித்த அக்ரூரர் நிலத்தில் வீழ்ந்து அக்காலடிச் சுவடுகளின் மீது புரண்டவாறே “ஆ, எனது பிரபுவின் திருவடிகளிலுள்ள தூசி இதுவேயாகும்” என்று வியந்து கூவினார்.

பதம் 10.38.27
தேஹம்-ப்ருதாம் இயான் அர்தோ ஹித்வா தம்பம் பியம் ஸுசம் ஸந்தேஸாத் யோ ஹரேர் லிங்க-தர்ஸன-ஸ்ரவணாதிபி:

தேஹம்-ப்ருதாம்—உடல்பெற்ற உயிர்களின்; இயான்—இதுவே; அர்த:—வாழ்க்கை இலட்சியம்; ஹித்வா—கைவிடுதல்; தம்பம்—ஆணவம்; பியம்—அச்சம்; ஸுசம்—மற்றும் துக்கம்; ஸந்தேஸாத்—(கம்சனால்) அவருக்குக் கட்டளையிடப்பட்டதில் தொடங்கி; ய:—எது; ஹரே:—பகவான் கிருஷ்ணரின்; லிங்க—அடையாளங்கள்; தர்ஸன—பார்த்தல்; ஸ்ரவண—கேட்டல்; ஆதிபி:—போன்றவற்றினால்.

கம்சனின் கட்டளையினைப் பெற்றவுடன் அக்ரூரர் தனது ஆணவம், அச்சம், துக்கம் எல்லாவற்றையும் துறந்து பகவான் கிருஷ்ணரை நினைவுறுத்தும் அடையாளங்களைப் பார்த்தல், அவற்றைப் பற்றிக் கேட்டல், பிறர்க்கு எடுத்துரைத்தல் போன்றவற்றில் தன்னை மறந்து எய்திய இந்தப் பெரியதோர் ஆனந்தம்தான் உடல்பெற்ற உயிர்கள் அனைத்தின் வாழ்க்கை இலட்சியமாக இருக்கின்றது.

பதங்கள் 10.38.28 – 10.38-33
ததர்ஸ க்ருஷ்ணம் ராமம் ச வ்ரஜே கோ-தோஹனம் கதௌ
பீத-நீலாம்பர-தரௌ ஸரத்-அம்புருஹேக்ஷணௌ

கிஸோரௌ ஸ்யாமள-ஸ்வேதௌ ஸ்ரீ-நிகேதெள ப்ருஹத்-புஜௌ
ஸு-முகவ் ஸுந்தர-வரௌ பல-த்விரத-விக்ரமௌ

த்வஜ-வஜ்ராங்குஸாம் போஜைஸ் சிஹ்னிதைர் அங்க்ரிபிர் வ்ரஜம் ஸோபயந்தெள மஹாத்மானெள ஸானுக்ரோஸ-ஸ்மிதேக்ஷணெள

உதார-ருசிர-க்ரீடௌ ஸ்ரக்விநௌ வன-மாலினௌ
புண்-கந்தானுலிப்தாங்கௌ ஸ்நாதௌ விரஜ-வாஸஸௌ

ப்ரதான-புருஷௌ ஆத்யௌ ஜகத்-தேதூ ஜகத்-பதீ
அவதீர்ணௌ ஜகதி-அர்தே ஸ்வாம்ஸேன பல-கேஸவௌ

திஸோ விதிமிரா ராஜன் குர்வாணௌ ப்ரபயா ஸ்வயா
யதா மாரகத: ஸைலோ ரௌப்யஸ் ச கனகாசிதௌ

ததர்ஸ—அவர் கண்டார்; க்ருஷ்ணம் ராமம் ச—பகவான் கிருஷ்ணரையும் பகவான் பலராமரையும்; வ்ரஜே—விரஜ கிராமத்தில்; கோ—பசுக்கள்; தோஹனம்—பால்கறக்கும் இடத்திற்கு; கதெள—சென்றதை; பீத-நீல—மஞ்சள் மற்றும் நீல நிற; ஆம்பர—ஆடைகள்; தரௌ—அணிந்து கொண்டு; ஸரத்—சரத்காலம்; அம்புருஹ—தாமரை மலர்கள் போன்ற; ஈக்ஷணௌ—அவர்களின் விழிகள்; கிஸோரௌ—அவ்விரு இளைஞர்களும்; ஸ்யாமள-ஸ்வேதெள—கருநீலம் மற்றும் வெண்மை நிறம்; ஸ்ரீ-நிகேதெள—அதிர்ஷ்டதேவதையின் அடைக்கலங்கள்; ப்ருஹத்—வலிமையுடைய; புஜௌ—அவர்களின் புஜங்கள்; ஸு-முகௌ—எழில்மிக்க முகங்களுடன்; ஸுந்தர-வரெள—மிகவும் அழகிய; பல—இளம்; த்விரத—யானையைப் போன்று; விக்ரமௌ—அவர்கள் நடந்து செல்வது; த்வஜ—கொடியினால்; வஜ்ர—வஜ்ராயுதம்; அங்குஸ—அங்குசம்; அம் போஜை:—மற்றும் தாமரை மலர்; சிஹ்னிதை:—அடையாளங்களுடன்; அங்க்ரிபி:—அவர்கள் பாதங்களுடன்; வ்ரஜம்—விரஜம்; ஸோபயந்தௌ—அழகு செய்து; மஹா-ஆத்மனௌ—மகாத்மாக்கள்; ஸ-அனுக்ரோஸ—கருணையும்; ஸ்மித—மற்றும் புன்னகையும்; ஈக்ஷணௌ—அவர்களின் பார்வைகள்; உதார—பெருந்தன்மை; ருசிர—மனதினை ஈர்க்கும்; க்ரீடௌ—அவர்களின் லீலைகள்; ஸ்ரக்-விநௌ—மணிமாலைகள் அணிந்திருந்தனர்; வன-மாலினெள—மற்றும் மலர்மாலைகளும் அணிந்திருந்தனர்; புண்—புண்ணியமிக்க; கந்த—நறுமணமுடைய திரவியங்களுடன்; அனுலிப்த—பூசியிருந்தனர்; அங்கௌ—அவர்களின் அங்கங்கள்; ஸ்நாதௌ—அப்போதுதான் நீராடி; விரஜ—கறையில்லாத; வாஸஸௌ—அவர்களின் ஆடைகள்; ப்ரதான—மிகவும் மேன்மையான; புருஷௌ—இருபுருஷர்களும்; ஆத்யௌ—ஆதி; ஜகத்-தேதூ—பிரபஞ்சக்காரணர்கள்; ஜகத்-பதீ—பிரபஞ்சத்தின் தலைவர்கள்; அவதீர்ணௌ—அவதரித்திருக்கின்றனர்; ஜகதி-அர்தே—பிரபஞ்ச நன்மைக்காக; ஸ்வ-அம்ஸேன—அவர்களின் சிறப்பான வடிவங்களில்; பல-கேஸவெள—பலராமர் மற்றும் கேசவர்; திஸ:—எல்லாத் திசைகளிலுமுள்ள; விதிமிரா:—இருளினை நீக்குகின்ற; ராஜன்—அரசே; குர்வாணௌ—செய்தல்; ப்ரபயா—பிரகாசத்துடன்; ஸ்வயா—அவர்களின்; யதா—போன்று; மாரகத:—மரகதத்தினாலான; ஸைல:—ஒரு மலை; ரௌப்ய:—வெள்ளியினாலான ஒன்று; ச—மற்றும்; கனக—பொன்னால்; அசிதௌ—இருவரும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் அக்ரூரர், விரஜ கிராமத்தில் கிருஷ்ணரும், பலராமரும் பசுக்களிடம் பால் கறக்கச் சென்றுகொண்டிருப்பதைக் கண்டார். கிருஷ்ணர் மஞ்சள் வண்ணப் பட்டாடையும், பலராமர் நீல வண்ணப் பட்டாடையும் அணிந்திருந்தனர். அவர்கள் இருவரின் விழிகளும் சரத்காலத் தாமரை மலர்களை ஒத்திருந்தன. வலிமைமிக்க கரங்களை உடையவர்களாகவும் அதிர்ஷ்ட தேவதையின் அடைக்கலங்களுமான அவ்விரு இளைஞர்களில் ஒருவர் கருநீல நிறமுடையவராகவும், மற்றொருவர் வெண்மை நிறம் உடையவராகவும் விளங்கினார். நேர்த்தியான முக அமைப்புடன் அவர்களிருவரும் எல்லோரையும் விட எழில்மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். இளமைமிக்க இரண்டு யானைகள் போல் அவர்கள் நடந்து சென்றனர். கருணையும் புன்னகையும் நிறைந்த பார்வையுடைவர்களாக இருந்தனர். தமது காலடிச் சுவடுகளினால் அம்மேன்மைமிக்க இருவரும் ஆயர்பாடியை அழகுபடுத்தினர். அவர்கள் பாதங்களில் கொடி, வஜ்ராயுதம், அங்குசம் மற்றும் தாமரை அடையாளங்கள் இருந்தன. பெருந்தன்மை மிக்கதும், மனதினை ஈர்ப்பதுமான லீலைகளைச் செய்யும் அவ்விரு பகவான்களும் நவ இரத்தினங்களினாலான கழுத்தணிகளும், மலர் மாலைகளும் அணிந்திருந்தனர். அப்போது தான் குளித்து முடித்து தங்கள் அங்கங்களில், புனித வாசனையுடைய திரவியங்கள் பூசி, கறையற்ற சுத்தமான ஆடைகள் அணிந்திருந்தனர். அவர்கள் ஆதி புருஷர்கள், பிரபஞ்சங்களின் மூல காரணர்கள் மற்றும் தலைவர்கள் பூமியின் நன்மைக்காக அவர்கள் கேசவர் மற்றும் பலராமர் என்னும் தங்கள் சிறப்புமிகு வடிவங்களில் அவதரித்திருக்கின்றனர். ஒ, பரீக்ஷித்து மன்னனே, அவர்கள் இருவரில் ஒருவர் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட பச்சை மரகதமலை போன்றும் மற்றொருவர் வெள்ளிமலை போன்றும் விளங்கினர். தங்கள் ஒளியினால் அவர்கள் வானத்து இருளை எல்லாத் திசைகளிலும் நீக்கினர்

பதம் 10.38.34
ரதாத் தூர்ணம் அவப்லுத்ய ஸோ ‘க்ரூர: ஸ்நெஹ-விஹ்வல:
பபாத சரணோபாந்தே தண்ட வத் ராம-க்ருஷ்ணயோ:

ரதாத்—அவருடைய இரதத்திலிருந்து; தூர்ணம்—விரைந்து; அவலுப்த்ய—கீழே குதித்து; ஸ:—அவர்; அக்ரூர:—அக்ரூரர்; ஸ்நேஹ—பாசத்தினால்; விஹ்வல:—உணர்ச்சிவயப்பட்டவராக; பபாத—வீழ்ந்தார்; சரண-உபாந்தே—திருவடிகளில்; தண்ட-வத்—ஒரு தண்டத்தைப் போன்று நெடுஞ்சாண்கிடையாக; ராம-க்ருஷ்ணயோ:—பலராமர் மற்றும் கிருஷ்ணரின்.

பாசத்தினால் உணர்ச்சிவயப்பட்டவராக, அக்ரூரர் தனது இரதத்திலிருந்து வேகமாகக் கீழே குதித்து கிருஷ்ணர் மற்றும் பலராமரின் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக ஒரு தண்டத்தைப் போல் வீழ்ந்தார்.

பதம் 10.38.35
பகவத்-தர்ஸனாஹ்லாத-பாஷ்ப-பர்யாகுலேக்ஷண:
புளகாசிதாங்க ஒளத்கண்ட்யாத் ஸ்வாக்யானே நாஸகன் நருப

பகவத்—முழுமுதற்கடவுள்; தர்ஸன—தரிசனத்தினால்; ஆஹ்லாத—மகிழ்ச்சியின் காரணமாக; பாஷ்ப—கண்ணீருடன்; பர்யாகுல—பெருகி ஓடியது; ஈக்ஷண:—அவருடைய விழிகள்; புளக—புளகத்தின்; ஆசித—அடையாளம்; அங்க:—கொண்டன அவர் அங்கங்கள்; ஒளக்கண்ட்யாத்—ஆர்வத்தினால்; ஸ்வ-ஆக்யானே—தன்னை யாரென்று கூறவும்; ந அஸகத்—அவரால் இயலவில்லை; ந்ருப—ஓ, மன்னனே.

ஓ! மன்னனே. பரமபுருஷ பகவானைக் கண்டதினால் அவருடைய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருகி வழிந்தது. புளகாங்கிதத்தினால் அவர் உடலெங்கும் மயிர்க்கூச்செறிந்தார். ஆர்வத்தினால் உணர்ச்சிவயப்பட்டு அவர் தன்னை அறிமுகப்படுத்தவும் வார்த்தை வாராது திணறினார்.

பதம் 10.38.36
பகவாம்ஸ் தம் அபிப்ரேத்ய ரதாங்காங்கித-பாணினா
பரிரேபே ‘ப்யுபாக்ருஷ்ய ப்ரீத: ப்ரணத-வத்ஸல:

பகவான்—பரமபுருஷ பகவான்; தம்—அவரை; அக்ரூரரை; அபிப்ரேத்ய——அறிந்து கொண்டு; ரத-அங்க—இரதத்தின் சக்கர; அங்கித—அடையாளமுடைய; பாணினா—அவரது கரத்தினால்; பரிரேபே—தழுவிக் கொண்டார்; அப்யுபாக்ருஷ்ய—அருகே இழுத்து; ப்ரீத:—மகிழ்ந்தார்; ப்ரணத—தம்மைச் சரணடைந்தவர்களிடம்; வத்ஸல:—பிரியமுடன் நடப்பவர்.

அக்ரூரரை அடையாளம் கண்டுகொண்ட பகவான் கிருஷ்ணர் இரதத்தின் சக்கரக் குறியுடைய தமது கரத்தினால் அவரைத் தூக்கித் தமது மார்புறத் தழுவிக் கொண்டார். தம்மைச் சரண் புகுந்த பக்தர்களிடம் மிகவும் பிரியமுடன் நடப்பவராதலினால் கிருஷ்ணர் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

பதங்கள் 10.38.37 – 10.38-38
ஸங்கர்ஷணஸ் ச ப்ரணதம் உபகுஹ்ய மஹா-மனா:
க்ருஹீத்வா பாணினா பாணி அனயத் ஸானுஜோ க்ருஹம்

ப்ருஷ்ட்வாத ஸ்வ்-ஆகதம் தஸ்மை நிவேத்ய ச வராஸனம் ப்ரக்ஷல்ய
விதி-வத் பாதௌ மது-பர்கார்ஹணம் ஆஹரத்

ஸங்கர்ஷண:—பகவான் பலராமர்; ச—மற்றும்; ப்ரணதம்—தலைவணங்கி நின்றுகொண்டிருந்த அவரை; உபகுஹ்ய—தழுவிக் கொண்டார்; மஹா-மனா:—பெருந்தன்மையுடன்; க்ருஹீத்வா—பற்றிக் கொண்டார்; பாணினா—அவரது கரத்தினால்; பாணீ—அவர் கரங்களை; அனயத்—அவர் அழைத்துச் சென்றார்; ஸ-அனுஜ:—தமது இளைய சகோதருடன் (பகவான் கிருஷ்ணர்); க்ருஹம்—தமது இல்லத்திற்கு; ப்ருஷ்ட்வா—வினவினார்; அத—பிறகு; ஸு-ஆகதம்—அவரது பயணத்தின் சௌகரியம் குறித்து; தஸ்மை—அவருக்கு; நிவேத்ய—அளித்தார்; ச—மற்றும்; வர—அருமையான; ஆஸனம்—ஓர் இருக்கை; ப்ரக்ஷல்ய—கழுவினார்; விதி-வத்—சாத்திர நெறிக்கேற்ப; பாதெள—அவரது பாதங்களை; மது-பர்க—பாலுடன் தேன் கலந்து; ஆர்ஹணம்—மரியாதைக்குரிய நிவேதனமாக; ஆஹரத்—அவர் கொண்டு வந்தார்.

தலைவணங்கி நின்ற அக்ரூரரின் குவித்த கரங்களை பகவான் சங்கர்ஷணர் (பலராமர்) தமது கரங்களினால் பற்றிக் கொண்டார்; பின்னர் பலராமர், கிருஷ்ணருடன் சேர்ந்து அக்ரூரரைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அக்ரூரரிடம் அவரது பயணமெல்லாம் சௌகரியமாக இருந்ததா என்று வினவிய பின்னர் பலராமர் அவருக்கு உயர்ரக இருக்கை அளித்து, அவரது பாதங்களைச் சாத்திர நெறிமுறைக்கேற்ப நீராட்டி மரியாதையுடன் அவருக்குத் தேன்கலந்த பாலினைப் பருகுவதற்கு அளித்தார்.

பதம் 10.38.39
நிவேத்ய காம் சாதிதயே ஸம்வாஹ்ய ஸ்ராந்தம் ஆத்ருத:
அன்னம் பஹீ-குணம் மேத்யாம் ஸ்ரத்தயோபாஹரத் விபு:

நிவேத்ய—தானமாக அளித்தார்; காம்—ஒரு பசுமாட்டினை; ச—மேலும்; அதிதயே—விருந்தினருக்கு; ஸம்வாஹ்ய—கைகளினால் தடவிக் கொடுத்தார்; ஸ்ராந்தம்—களைப்புற்றிருந்த அவரை; ஆத்ருத:—மிக்க மரியாதையுடன்; அன்னம்—உணவு; பஹீ-குணம்—பல்வேறு சுவையுடைய; மேத்யாம்—அளிப்பதற்குப் பொருத்தமான; ஸ்ரத்தயா—சிரத்தையுடன்; உபாஹரத்—அளித்தார்; விபு:—எல்லாம் வல்ல பகவான்.

எல்லாம் வல்ல பகவானான பலராமர் அக்ரூரருக்கு ஒரு பசுமாட்டினைப் பரிசாக அளித்து, அவரது பாதங்களைத் தமது கரத்தினால் பிடித்துவிட்டு அவரது களைப்பினைப் போக்கி, மிக்க மரியாதையுடனும், சிரத்தையுடனும் அவருக்குப் பல்வேறு சுவையுடைய உணவுகளை அளித்து உண்ணச் செய்தார்.

பதம் 10.38.40
தஸ்மை புக்தவதே ப்ரீத்யா ராம: பரம-தர்ம-வித்
முக-வாஸைர் கந்த-மால்யை: பராம் ப்ரீதிம் வ்யதாத் புன:

தஸ்மை—அவருக்கு; புக்தவதே—உணவுண்டு முடித்தவர்; ப்ரீத்யா—பாசத்துடன்; ராம:—பகவான் பலராமர்; பரம—பரமர்; தர்மவித்—தர்மம் அறிந்தவர்; முக-வாஸை:—அவரது வாய்க்கு இனிமையளிக்கக் கூடிய வாசனாதி மூலிகைகளை; கந்த—நறுமணமுடைய; மால்யை:—மலர் மாலைகளும்; பராம்—பரம; ப்ரீதிம்—திருப்திக்கு: வ்யதாத்—செய்தார்; புன:—மீண்டும்.

அக்ரூரர் மிக்க திருப்தியுடன் உணவு உண்டு முடித்த பின்னர், தர்ம நெறிகளை நன்கறிந்த பரமரான பகவான் பலராமர் அவரது வாய்க்கு இனிய சுவையளிக்கும் வாசானாதி மூலிகைகளை அவருக்கு அளித்தார். மேலும் அவருக்கு நறுமணமிக்க மலர் மாலையினையும் அளித்தார். அதனால் அக்ரூரர் மீண்டும் ஒருமுறை உயர் இன்பத்தினை அனுபவித்தார்.

பதம் 10.38.41
பப்ரச்ச ஸத்-க்ருதம் நந்த கதம் ஸ்த நிரனுக்ரஹே
கம்ஸே ஜீவதி தாஸார்ஹ ஸௌன-பாலா இவாவய:

பப்ரச்ச—வினவினார்; ஸத்-க்ருதம்—மரியாதை செய்யப்பட்ட அவரிடம்; நந்த:—நந்த மகாராஜா; கதம்—எவ்வாறு; ஸ்த—நீங்கள் இருக்கின்றீர்கள்; நிரனுக்ரஹே—கருணையற்ற; கம்ஸே—கம்சன்; ஜீவதி—உயிருடன் இருக்கையில்; தாஸார்ஹ—ஓ, தாஸார்ஹ குலத்தில் பிறந்தவரே; ஸௌன—கசாப்புப் கடைக்காரன்; பாலா:—அதன் பாதுகாவலனாக; இவ—போன்று; அவய:—ஆட்டிற்கு.

நந்த மகாராஜா அக்ரூரரிடம் வினவினார்: ஒ, தாஸார் ஹ குலத்தைச் சேர்ந்தவரே, இரக்கமற்ற பாவியான கம்சன் இன்னும் உயிருடனிருக்கையில் நீங்கள் எல்லாம் எவ்வாறு உங்களைக் காத்து கொள்கின்றீர்கள்? ஒரு கசாப்புக் கடைக்காரனின் பாதுகாப்பில் இருக்கும் ஆடு போன்றவர் நீங்கள்.

பதம் 10.38.42
யோ ‘வதீத் ஸ்வ-ஸ்வஸுஸ் தோகான்
க்ரோஸந்த்யா அஸு-த்ருப் கல:
கிம் நு ஸ்வித் தத்-ப்ரஜானாம்
வ குஸலம் விம்ருஸாமஹே

யா—எவன்; அவதீத்—கொன்றான்; ஸ்வ—தனது; ஸ்வஸு:—தங்கை; தோகான்—குழந்தைகளை; க்ரோஸந்த்யா:—அழுது கொண்டிருக்க; அஸு-த்ருப்—சுயநலமுடைய; கல:—கொடியவன்; கிம் நு—பிறகு என்ன; ஸ்வித்—உண்மையில்; தத்—அவனுடைய; ப்ரஜானாம்—குடிமக்கள்; வ:—உமது; குஸலம்—நலத்தினை; விம்ருஸாமஹே—நாங்கள் கேட்டு அறிவது.

அக்கொடிய சுயநலக்காரனான கம்சன் தனது தங்கையின் முன்னால் அவள் கதறிக்கதறி அழ, அவளது பச்சிளங்குழந்தைகளைக் கொன்றான். அதனால் அவனது குடிமக்களாகிய உங்களின் நலத்தைப் பற்றி நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?

பதம் 10.38.43
இத்தம் ஸுன்ருதயா வாசா நந்தேன ஸு-ஸபாஜித:
அக்ரூர: பரிப்ருஷ்டேன ஜஹாவ் அத்வ-பரிஸ்ரமம்

இத்தம்—இவ்வாறு; ஸு-ந்ருதயா—உண்மையுடனும், இனிமையுடனும்; வாசா—வார்த்தைகளுடன்; நந்தேன—நந்த மகாராஜாவினால்; ஸு—நன்கு; ஸபாஜித:—உபசரிக்கப்பட்டு; அக்ரூர:—அக்ரூரர்; பரிப்ருஷ்டேன—கேட்டதினால்; ஜஹௌ—நீங்கினார்; அத்வ—வழிப்பயணத்தின்; பரிஸ்ரமம்—அவரது களைப்பினை.

உண்மையும், இனிமையும் நிறைந்த நந்த மகாராஜாவின் வார்த்தைகளினால் உபசரிக்கப்பட்டவுடன் அக்ரூரர் தனது பயணக் களைப்பினை மறந்தார்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “அக்ரூரர் விருந்தாவனம் வருதல்” எனும் தலைப்பை கொண்ட முப்பத்தெட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare