IV. பூரியில் உள்ள புனித திருக்கோயில்கள் மற்றும் மடங்கள்
5. மடங்கள்
b. இராமானுஜ கோட்டா மடம்

ராமானுஜ கோட்டா மடம்/எமார் மடம் (இன்று)

ராமானுஜ கோட்டா மடம் / எமார் மடம் (முன்பு)
நோக்கங்கள்
1. ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் புரிக்கு மேற்கொண்ட யாத்திரையின் போது நிறுவிய ராமானுஜ கோட்டா மடம் (எமார் மடம்) உருவான வரலாற்றையும் அதன் தோற்றத்தையும் புரிந்துகொள்ளுதல்.
2. ஒடிசா வரலாற்றில் ராமானுஜ கோட்டா மடம் ஆற்றிய தன்னலமற்ற தானதர்மம் மற்றும் சமூக சேவையின் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தல்.
3. ஸ்ரீ ஜகந்நாதர் வழிபாட்டுடன் தொடர்புடைய பல நூற்றாண்டுகள் பழமையான கோயில் மரபுகளையும் சடங்குகளையும் பாதுகாப்பதில் ராமானுஜ கோட்டா மடம் தொடர்ந்து ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டுதல்.
4. இந்த தெய்வீக நிகழ்வை நினைவுகூறும் அர்ப்பணிப்பாக வழங்கப்படும் பால போகத்தின் ஆன்மிக முக்கியத்துவத்தை உணருதல்.
5. ஸ்ரீ ராமானுஜாச்சாரியர் அறிமுகப்படுத்திய கோயில் சீர்திருத்தங்களான ஸ்ரீ மகாலக்ஷ்மி சன்னதி, உற்சவர் விக்ரகங்கள், கருட ஸ்தம்பம், மட அமைப்பு, மேலும் தோலோத்ஸவம், சந்தன யாத்திரை, ராச உத்ஸவம் போன்ற திருவிழாக்களின் அமைப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை ஆராய்தல்.
6. ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய உபய நாயகிகளுடன் இணைந்து வழிபடப்படும் பகவான் ஜகந்நாதரின் உற்சவர் விக்ரகங்களின் சிறப்பை புரிந்துகொள்ளுதல்.
7. புரி ஸ்ரீ ஜகந்நாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ராமானுஜ கோட்டா மடத்தின் புவியியல் அமைவிடத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ளுதல்.
அறிமுகம்
நோக்கம் 1 : ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் புரிக்கு மேற்கொண்ட யாத்திரையின் போது நிறுவிய ராமானுஜ கோட்டா மடம் (எமார் மடம்) உருவான வரலாற்றையும் அதன் தோற்றத்தையும் புரிந்துகொள்ளுதல்.
ராமானுஜ கோட்டா மடம், எமார் மடம் என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இது ஒடிசா மாநிலம், புரியில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதரின் சிங்கத்வாரம் (சிங்க வாசல்) எதிரில், தென்கிழக்கு (அக்னேய கோணம்) பகுதியில், கோயிலின் வெளிப்பிரகாரத்திற்கு வெளியே காளிகாதேவி சாஹி அருகில் அமைந்துள்ள, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 800 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க மடமாகும்.
இந்த மடம், மகத்தான வைணவ ஆச்சார்யரான ஸ்ரீ ராமானுஜாச்சாரியரால், அவர் ஒடிசாவிற்கு 12-ஆம் நூற்றாண்டில் மேற்கொண்ட யாத்திரையின் போது நேரடியாக நிறுவப்பட்டது. பின்னர், அவர் இந்த மடத்தை தனது உறவினரும் அர்ப்பணிப்புமிக்க சீடருமான கோவிந்தருக்கு அளித்தார். கோவிந்தர் தமிழில் எம்பார் என்று அழைக்கப்பட்டதால், அதிலிருந்தே “எமார்” என்ற பெயர் உருவானது.
ஒரு காலத்தில், இது புரியில் இருந்த மிகப் பெரிய மற்றும் முக்கியமான மடங்களில் ஒன்றாக விளங்கியது.
அண்மைக் காலங்களில், ஒடிசா அரசின் அழகுபடுத்தும் திட்டங்களும் தொல்லியல் அகழாய்வு பணிகளும் காரணமாக மடத்தின் சில பகுதிகள் விரிவாக மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த மடமும் அதன் வரலாற்றுப் பாரம்பரியமும் இன்றளவும் அருகிலுள்ள ஸ்ரீ மந்திர் (ஜகந்நாதர் கோவில்) தினசரி வழிபாட்டு மரபுகளுடன் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளது.
இந்த மடம், ஒடிசா மாநிலத்தில் ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்தின் முக்கிய ஆன்மிக மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.
சிறப்புகள்
நோக்கம் 2 : ஒடிசா வரலாற்றில் ராமானுஜ கோட்டா மடம் ஆற்றிய தன்னலமற்ற தானதர்மம் மற்றும் சமூக சேவையின் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தல்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தானதர்மம்
1866-ஆம் ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட பேரழிவான பஞ்சம் “நா அங்க துர்பிக்ஷ்யா” (Na Anka Durbhikshya) என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இந்தக் கடுமையான வறட்சி மற்றும் பஞ்சத்தின் போது, ராமானுஜ கோட்டா மடம் தனது நிரம்பிய தானியக் களஞ்சியங்களைத் திறந்து, ஏழை மற்றும் பட்டினியால் வாடிய மக்களுக்கு தாராளமாக உணவு வழங்கியது. இந்த கருணைமிக்க சேவையால், இந்த மடம் ஒடிசா வரலாற்றில் தன்னலமற்ற தர்மப் பணிக்காக என்றும் நினைவுகூறப்படுகிறது.
நோக்கம் 3 : ஸ்ரீ ஜகந்நாதர் வழிபாட்டுடன் தொடர்புடைய பல நூற்றாண்டுகள் பழமையான கோயில் மரபுகளையும் சடங்குகளையும் பாதுகாப்பதில் ராமானுஜ கோட்டா மடம் தொடர்ந்து ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டுதல்.
பகவான் ஜகந்நாதருக்கான சேவைகள்
இந்த மடம், பகவான் ஜகந்நாதர், பகவான் பலபத்ரர், தேவி சுபத்ரா மற்றும் ஸ்ரீ மந்திரின் பிற விக்ரகங்களுக்கு பின்வரும் சேவைகளை செய்து வருகிறது.

சந்திரிகை மற்றும் சௌசரா அலங்காரத்துடன்
பகவான் ஜகந்நாதர்
1. பதசிங்கார வேஷத்திற்கான சந்திரிகை மற்றும் சௌசரா
பகவான் ஜகந்நாதர், பகவான் பலபத்ரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோர் இரவில் அணியும் பதசிங்கார வேஷத்தின் போது, கைவினைத் திறனுடன் தயாரிக்கப்படும் மலர் அலங்காரங்களான சந்திரிகை மற்றும் சௌசரா அணிவிக்கப்படுகின்றன.
● சௌசரா (Chausara): துளசி இலைகளுடன் கோர்க்கப்பட்ட பல அடுக்குகள் கொண்ட மலர் மாலை. இது விக்ரஹங்களின் கரங்களுக்குக் கீழே அழகாக தொங்கும்.
● சந்திரிகை (Chandrika): விக்ரஹங்களின் நெற்றிக்கு மேல் அணிவிக்கப்படும் மலரால் செய்யப்பட்ட கிரீடம் அல்லது நெற்றி அலங்காரம்.
இந்த இரு மலர் அலங்காரங்களையும் ராமானுஜ கோட்டா மடம் தினமும் தயாரித்து சமர்ப்பிக்கிறது.
2. நபாங்க (பூலா மேலனா) சடங்கிற்கான மாலை மற்றும் சூளா
மகர சங்கரந்தியின் போது நடைபெறும் நபாங்க சடங்கு (அல்லது பூலா மேலனா) நிகழ்விற்காக, இந்த மடம் மாலை மற்றும் சூளா ஆகியவற்றை சமர்ப்பிக்கிறது.
● மாலை (Mala): சாமந்திப்பூ போன்ற வண்ணமயமான மலர்களால் செய்யப்பட்ட பெரிய மலர் மாலைகள். இம்மாலைகள் விக்ரஹங்களுக்கு அணிவிப்பதற்கு முன், ரத்னசிம்மாசனத்தையும் முழு ஸ்ரீ மந்திரையும் சுற்றி நான்கரை முறை (4½ முறை) பிரதக்ஷிணம் செய்து பின்னர் சமர்ப்பிக்கப்படுகின்றன.
● சூளா (Chula): விக்ரஹங்களின் தலையில் அணிவிக்கப்படும் கூம்பு வடிவத் தலை அலங்காரம். இது புதிய சாமந்திப்பூக்கள், துளசி இலைகள் மற்றும் பிற பாரம்பரிய மலர்களால் மிகுந்த நுணுக்கத்துடன் கையால் தயாரிக்கப்படுகிறது.
3. சந்தன யாத்திரையின் போது பான போகம் அளிக்கப்படுகிறது
சந்தன யாத்திரை திருவிழாவின் போது, இந்த மடம் பான போகத்தை பகவான் ஜகந்நாதருக்கு சமர்ப்பிக்கிறது.
பான போகம் என்பது கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் இனிப்பான பானமாகும். இது சந்தன யாத்திரை விழாவின் போது பகவான் ஜகந்நாதருக்கு பக்தியுடன் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும் ஒரு புனிதப் படையலாகும்.
4. ‘அனசார’ காலத்தில் சக்கட்டா போகம்
அனசாரம் எனப்படும் 15 நாட்கள் நடைபெறும் ஓய்வு (தனிமை) காலத்தில், ராமானுஜ கோட்டா மடம் சக்கட்டா போகத்தை பகவான் ஜகந்நாதர், பகவான் பலபத்ரர் மற்றும் தேவி சுபத்ராவுக்கு சமர்ப்பிக்கிறது.
சக்கட்டா போகம் என்பது சமைக்கப்படாத, மூலிகைகள் மற்றும் பழங்களால் தயாரிக்கப்படும் சிறப்பு நைவேத்தியமாகும். இது முளைகட்டிய பச்சைப்பயறு (முகா), முளைகட்டிய கொண்டைக்கடலை (சனா), நன்றாகப் பழுத்த வாழைப்பழம், மாம்பழம் மற்றும் பலாப்பழம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
5. கார்த்திகை மாதத்தில் பால போகம்
கார்த்திகை மாதத்தில், ராமானுஜ கோட்டா மடம் பால போகத்தை பகவான் ஜகந்நாதருக்கு சமர்ப்பிக்கிறது.
இந்த சிறப்பு நைவேத்தியம் கௌடியா காய் (Koudiya Khai) என்று அழைக்கப்படுகிறது. இது அவல், வறுத்த கோதுமை, ஆளி விதைகள், பட்டாணி, மெல்லிய தேங்காய் துண்டுகள், சுக்கு பொடி, சிறிதளவு கற்பூரம் மற்றும் மிளகு சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இந்த நைவேத்தியம் பொதுவாக ஆஸ்வின (ஆஸ்வயுஜ சுக்ல ஏகாதசி) முதல் ஆரம்பித்து, கார்த்திகை பௌர்ணமி வரை தினமும் பகவானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
நோக்கம் 4 : இந்த தெய்வீக நிகழ்வை நினைவுகூறும் அர்ப்பணிப்பாக வழங்கப்படும் பால போகத்தின் ஆன்மிக முக்கியத்துவத்தை உணருதல்.
பால போகத்தின் பின்னணி கதை
கார்த்திகை மாதத்தில், பகவான் ஜகந்நாதருக்கு பால போகம் என்ற சிறப்பு நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படுகிறது. இங்கு “பால” என்பது முடி என்பதைக் குறிக்கிறது.
புராணக் கதையின்படி, ஒரு நாள் புரியின் கஜபதி மகாராஜா பகவான் ஜகந்நாதருக்கு அணிவிக்கப்பட்டிருந்த மலர் மாலையில் ஒரு முடியை கண்டார். அதைக் கண்டு ஆச்சரியமடைந்த மன்னர், அந்த மாலையை அணிவிக்கும் பொறுப்பில் இருந்த தலிச்ச மகாபாத்ரர் என்பவரிடம், அந்த முடி எப்படி மாலையில் வந்தது என்று கேட்டார்.
அதற்கு அந்த சேவகர், சிறிது தயக்கத்துடன், “அந்த முடி பகவான் ஜகந்நாதருடையது” என்று பதிலளித்தார்.
இந்த பதிலைக் கேட்ட மன்னர் அதை நம்பாமல், பகவானின் திருமேனியில் உண்மையாகவே முடி இருக்கிறதா என்று பார்க்க முனைந்தார். பகவானின் தலையில் சில முடிகளைப் பார்த்த அவர், அவை உண்மையானதா என்பதை அறிய அவற்றை இழுத்துப் பார்த்தார்.
அப்போது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பகவானின் தலையிலிருந்து இரத்தத் துளிகள் சொட்டத் தொடங்கின.
இதைக் கண்ட கஜபதி மகாராஜா தனது தவறை உணர்ந்து மிகவும் மனம் வருந்தினார். உடனே பகவான் ஜகந்நாதரிடமும், தலிச்ச மகாபாத்ரரிடமும் தாம் செய்த பெரும் தவறிற்காக மன்னிப்பு கேட்டார்.
இந்த தெய்வீக நிகழ்வை நினைவுகூறும் வகையில், கார்த்திகை மாதத்தில் பகவான் ஜகந்நாதருக்கு பால போகம் சமர்ப்பிக்கும் மரபு இன்றளவும் தொடர்கிறது.
நோக்கம் 5 : ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் அறிமுகப்படுத்திய கோயில் சீர்திருத்தங்களான ஸ்ரீ மகாலக்ஷ்மி சன்னதி, உற்சவர் விக்ரகங்கள், கருட ஸ்தம்பம், மட அமைப்பு, மேலும் தோலோத்ஸவம், சந்தன யாத்திரை, ராச உத்ஸவம் போன்ற திருவிழாக்களின் அமைப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை ஆராய்தல்.
மடம் உருவான வரலாறு
புருஷோத்தம க்ஷேத்ரமான புரியில் ராமானுஜர்
ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமியின் திருவுளப்படி, ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் பல்வேறு கோயில்களில் பாஞ்சராத்திர ஆகமத்தின் அடிப்படையில் வழிபாட்டு முறைகளையும் கோவில் சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி வந்தார். அந்த நோக்கத்துடன் அவர் புருஷோத்தம க்ஷேத்திரமான ஜகந்நாத புரிக்கு வந்தார்.
புரியில் தங்கியிருந்த காலத்தில், அவர் ராமானுஜ கோட்டாவில் தங்கியிருந்து ஜகந்நாதர் கோவிலின் வழிபாட்டு மரபுகளை ஆய்வு செய்தார். அவரது ஆன்மிக செல்வாக்கால் ஈர்க்கப்பட்ட அக்கால சோடகங்க தேவ மன்னர், ஜகந்நாதர் கோயிலுக்கு எதிரே மடம் அமைப்பதற்காக நிலத்தை வழங்கினார்.
அங்கு ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் சில காலம் தங்கி, தனது சீடர்களுக்கு உபதேசம் வழங்கினார். அவருடைய முக்கிய சீடர்களில் ஒருவரான எம்பார் (எம்பெருமானார்) அவர்களின் பெயரால், அவர் அங்கு எம்பார் மடம் (எமார் மடம்) நிறுவினார்.
மேலும், ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் ஜகந்நாதர் கோயில் வளாகத்தின் உள்ளே ஸ்ரீ மகாலக்ஷ்மி சன்னதியையும் நிறுவியதாக பாரம்பரிய மரபுகள் கூறுகின்றன. அவரது வருகையும் சீர்திருத்தங்களும் ஜகந்நாதர் கோயிலின் வழிபாட்டு முறைகள் மற்றும் வைணவ மரபுகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

உற்சவர் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் – ஸ்ரீ மந்திர், புரி

உற்சவர் – டோல கோவிந்தர் – ஸ்ரீ மந்திர், புரி.
டோல கோவிந்தர் பகவான் ஜகந்நாதரின் இரண்டு உற்சவர் விக்ரகங்களில் ஒருவராக விளங்குகிறார். மற்றொரு உற்சவர் மதன மோகனர் ஆவார்.

உற்சவர் மதன மோகனர் – ஸ்ரீ மந்திர், புரி.
ஸ்ரீ ராமானுஜாச்சாரியர், பகவான் ஜகந்நாதர், பலதேவர், சுபத்ரா ஆகிய மூல விக்ரகங்களின் வழிபாடு வைணவ ஆகமங்களின்படி நடைபெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அக்காலத்தில் புரி பீட சங்கராசார்யரின் மேற்பார்வையில் சாக்த ஆகம முறையிலான வழிபாடே நடைமுறையில் இருந்தது. அந்த வழிபாட்டு முறை இன்றளவும் தொடர்கிறது.
மூல விக்ரகங்களுக்கு சேவை செய்து வந்த அர்ச்சகர்கள், இந்த மாற்றத்தை ஏற்க மறுத்தனர். ஏனெனில், வைணவ ஆகம வழிபாடு அறிமுகமானால், வைணவ அர்ச்சகர்கள் கோயில் சேவையில் இணைவார்கள்; இதனால் ஜகந்நாதரின் வழிபாட்டை நடத்தும் தங்களது தனிப்பட்ட உரிமை குறையும் என்று அவர்கள் எண்ணினர்.
இதனால், ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் அவர்களை மறுநாள் காலை சாஸ்திர விவாதத்திற்கு அழைத்தார்.
அந்த சமயத்தில், அந்நாட்டு மன்னரும் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாருக்கு ஆதரவாக இருந்தார். இதைக் கண்டு கவலையடைந்த அர்ச்சகர்கள், பகவான் ஜகந்நாதரின் திருவடிகளில் முழுமையான சரணாகதி அடைந்து, தங்களைக் காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்தனர்.
அப்போது, பகவான் ஜகந்நாதர் கருடாழ்வாருக்கு ஆணையிட்டு, உறக்கத்தில் இருந்த ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் திருத்தலத்திற்கு அழைத்துச் செல்லச் செய்தார் என்று பாரம்பரியக் கதை கூறுகிறது.
விழித்தெழுந்த ஸ்ரீ ராமானுஜாச்சாரியர், இதனை பகவானின் திருவுளம் என்று ஏற்றுக்கொண்டு, ஸ்ரீகூர்மம் திருத்தலத்தில் வைணவ பூஜை முறையை நிறுவினார்.
கருட ஸ்தம்பம்

கருட ஸ்தம்பம்
கருட ஸ்தம்பம் என்பது ஆகம மரபின்படி கட்டப்பட்ட கோவில்களின் தனிச்சிறப்பான ஒரு அம்சமாகும். வட இந்தியக் கோயில்களில் இத்தகைய கருட ஸ்தம்பங்களை பொதுவாகக் காண முடியாது. ஜகந்நாதர் கோயிலில் கருட ஸ்தம்பம் அமைந்திருப்பது, ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின் செல்வாக்கும், அவர் அறிமுகப்படுத்திய ஆகம மரபின் தாக்கமும் என்று பாரம்பரியமாகக் கருதப்படுகிறது.
நோக்கம் 6 : ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய உபய நாயகிகளுடன் இணைந்து வழிபடப்படும் பகவான் ஜகந்நாதரின் உற்சவர் விக்ரகங்களின் சிறப்பை புரிந்துகொள்ளுதல்.

உபய நாயகிகளுடன் பகவான் ஜகந்நாதரின்
உற்சவர் விக்ரகங்கள்
பகவான் ஜகந்நாதரின் உற்சவர் விக்ரகங்கள், உபய நாயகிகளான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் இணைந்து எழுந்தருளியிருப்பது, மேலும் அவை ஸ்ரீவைணவ ஊர்த்த்வ புண்டரம் அணிந்திருப்பதும், கோயிலில் நடைபெறும் பல்வேறு உற்சவங்களும், ஜகந்நாதர் கோயிலில் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் செல்வாக்கை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
இந்த உற்சவர் விக்ரகங்கள், வசந்தோத்ஸவம், தோலோத்ஸவம், கல்யாணோத்ஸவம் போன்ற பல்வேறு உற்சவங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
பகவான் ஜகந்நாதரின் இரண்டு உற்சவர் விக்ரகங்களும், உபய நாயகிகளான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் இணைந்து எழுந்தருளி, கோயிலில் நடைபெறும் பல்வேறு உற்சவங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன.

விழா உற்சவங்களின் போது ஸ்ரீதேவி (வலப்புறம்) மற்றும் பூதேவி (இடப்புறம்)
உடன் மதனமோகனர் உற்சவர்

விழா உற்சவத்தின் போது ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் டோல கோவிந்தர் உற்சவர்
அமைவிடம்
நோக்கம் 7 : புரி ஸ்ரீ ஜகந்நாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ராமானுஜ கோட்டா மடத்தின் புவியியல் அமைவிடத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ளுதல்.
இந்த மடம், ஒடிசா மாநிலம், புரியில் உள்ள பாலிசாஹி பகுதியில், ஸ்வர்கத்வார் சாலையில், ஸ்ரீ ஜகந்நாதர் கோவிலிலிருந்து சில அடிகள் தொலைவில் அமைந்துள்ளது.

