அத்தியாயம் – 23
தேவர்கள் சுவர்க்க லோகங்களை
திரும்பப் பெறுதல்
பதம் 8.23.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரமனும், புராதனமானவரும், நித்தியமானவருமான முழுமுதற் கடவுள் பலி மகாராஜனிடம் இவ்வாறு பேசியபோது, பகவானின் தூய பக்தரென பிரபஞ்சம் முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவரும், இதனால் ஒரு மகாத்மாவென்று போற்றப்பட்டவருமான பலி மகாராஜன், தமது கண்களில் கண்ணீர் மல்க, பக்திப் பரவசத்தில் அவரது குரல் தழுதழுக்க, கூப்பிய கரங்களுடன் பின்வருமாறு பதிலளித்தார்.

பதம் 8.23.2 : பலி மகாராஜன் கூறினார்: தங்களுக்கு பணிவான வணக்கங்களை செலுத்த முயல்வதில் கூட என்ன அற்புதமான பயன் உள்ளது! தங்களுக்கு வணக்கங்களைச் செலுத்த மட்டுமே நான் முயன்றேன், ஆயினும் என் முயற்சி தூய பக்தர்களுடையதைப் போல் வெற்றி அளிப்பதாயிற்று. இழிவடைந்த ஓரசுரனாகிய என்னிடம் தாங்கள் காட்டிய அகாரணமான கருணை, தேவர்களாலோ அல்லது பல்வேறு கிரகங்களின் தலைவர்களாலோ கூட ஒருபோதும் அடையப்படாததாகும்.

பதம் 8.23.3 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறு பேசிய பின், பலி மகாராஜன் முதலில் பரமபுருஷ பகவான் ஹரிக்கும், அதன் பிறகு பிரம்ம தேவர் மற்றும் சிவபெருமானுக்கும் அவரது வணக்கங்களைச் சமர்ப்பித்தார். இப்படியாக நாக-பாசத்தின் (வருணனின் கயிறுகளின்) பந்தத்திலிருந்து விடுபட்டு, முழு திருப்தியுடன் சுதளம் எனப்படும் கிரகத்தினுள் நுழைந்தார்.

பதம் 8.23.4 : சுவர்க்க லோகங்களின் ஆட்சியை இந்திரனிடம் ஒப்படைத்து, தேவர்களின் தாயான அதிதியின் ஆசையை நிறைவேற்றிய பரமபுருஷர் பிரபஞ்ச விவகாரங்களை இவ்வாறு நிர்ணயித்தார்.

பதம் 8.23.5 : தமது வம்சத்தவரும், பேரனுமான பலி மகாராஜன் பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, பகவானின் ஆசியைப் பெற்றார் என்பதைக் கேட்ட பிரகலாத மகாராஜன், பெரும் பக்திப் பரவசமான குரலில் பின்வருமாறு பேசலானார்.

பதம் 8.23.6 : பிரகலாத மகாராஜன் கூறினார்: பரமபுருஷ பகவானே, தாங்கள் பிரபஞ்சம் முழுவதிலும் வழிபடப்படுகிறீர்கள்; பிரம்ம தேவரும், சிவபெருமானும் கூட தங்களது தாமரைப் பாதங்களை வழிபடுகின்றனர். தாங்கள் இத்தகைய ஒரு மகா புருஷராக இருந்தபோதிலும், அசுரர்களான எங்களைக் காப்பதாக அன்புடன் வாக்களித்திருக்கிறீர்கள். இத்தகைய அன்பு பிரம்மதேவராலோ, சிவபெருமானாலோ அல்லது ஸ்ரீதேவியான லக்ஷ்மியாலோ கூட ஒருபோதும் அடையப்படுவில்லை என்று நான் நினைக்கிறேன். மற்ற தேவர்களையோ அல்லது சாதாரண மக்களையோ பற்றி என்னவென்று சொல்வது.

பதம் 8.23.7 : அனைவருக்கும் பரம புகலிடமாக இருப்பவரே, தங்களது தாமரைப் பாதங்களில் செய்யப்படும் தொண்டு எனும் தேனைச் சுவைப்பதாலேயே பிரம்மாவைப் போன்ற மகா புருஷர்கள் அவர்களது பூரணத்துவத்தை அனுபவிக்கின்றனர். ஆனால் பொறாமை மிக்க அசுர குடும்பத்தில் பிறந்த அயோக்கியர்களும், சிற்றின்ப வெறியர்களுமான எங்களைப் பொறுத்தவரை, தங்களது கருணையை நாங்கள் எப்படிப் பெற்றோம்? தங்களது கருணை காரணமற்றது என்ற ஒரே காரணத்தால்தான் இது சாத்தியமாகியுள்ளது.

பதம் 8.23.8 : எம்பெருமானே, தங்களுடைய திருவிளையாடல்கள் அனைத்தும் தங்களது ஆன்மீக சக்தியினால் அற்புதமாக நிகழ்த்தப்படுகின்றன; மேலும் அச்சக்தியின் தீய பிரதிபலிப்பான ஜட சக்தியின் மூலமாக எல்லாப் பிரபஞ்சங்களையும் தாங்கள் படைத்திருக்கிறீர்கள். அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாகையால், தாங்கள் அனைத்தையும் அறிந்திருக்கிறீர்கள். ஆகவே அனைவரிடமும் தாங்கள் சமமானவராக இருப்பதில் சந்தேகமில்லை. ஆயினும் தங்களுடைய பக்தர்களுக்குத் தாங்கள் ஆதரவு காட்டுகிறீர்கள். இருந்தாலும், இது பாரபட்சமல்ல. ஏனெனில், தங்களது சுபாவம், ஒருவரது விருப்பத்திற்கேற்ப அனைத்தையும் அளிக்கக்கூடிய ஒரு கற்பக விருட்சத்தைப் போன்றதாகும்.

பதம் 8.23.9 : பரமபுருஷ பகவான் கூறினார்: எனதன்பு மகனாகிய பிரகலாதரே, உமக்கு சர்வ மங்களம் உண்டாகட்டும். இப்போதைக்கு, தயவுசெய்து சுதளம் எனும் இடத்திற்குச் சென்று, அங்கு உமது பேரனுடனும், மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் சுகத்தை அனுபவிப்பீராக.

பதம் 8.23.10 : பரமபுருஷ பகவான் பிரகலாத மகாராஜனுக்கு உறுதியளித்தார்: சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றைக் கரத்திலேந்தியுள்ள எனது வழக்கமான தோற்றத்தில் உம்மால் என்னை அங்கு காணமுடியும். எப்பொழுதும் என்னை நேரடியாகக் காண்பதால் ஏற்படும் உமது தெய்வீக ஆனந்தத்தினால், பலன் கருதும் செயல்களிடம் உமக்கு இனிமேலும் பந்தம் ஏற்படாது.

பதங்கள் 8.23.11 – 8.23.12 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார்: எனதருமை பரீட்சித்து மகாராஜனே, எல்லா அசுரத் தலைவர்களுக்கும் எஜமானராகிய பிரகலாத மகாராஜன், பலி மகாராஜனால் பின்தொடரப்பட்டவராய் பரம புருஷரின் ஆணையைக் கூப்பிய கரங்களுடன் சிரமேற்கொண்டார். பகவானிடம் சரி என்று கூறி, அவரை வலம் வந்து, அவருக்கு வணக்கம் செலுத்தியபின், சுதளம் எனப்படும் கீழான கிரக அமைப்பினுள் அவர் பிரவேசித்தார்.

பதம் 8.23.13 : அதன்பிறகு பரமபுருஷ பகவானாகிய, நாராயணர், (ப்ரஹ்ம, ஹோதா, உத்காதா மற்றும் அத்வர்யு ஆகிய) புரோகிதர்களுடன் அருகே அக்கூட்டத்தின் மத்தியில் அமர்ந்திருந்த சுக்ராசார்யரைப் பார்த்து பேசலானார். பரீட்சித்து மகாராஜனே, இப்புரோகிதர்கள் அனைவரும் யாகம் செய்வதற்காக ஏற்பட்ட வேதக் கொள்கைகளைப் பின்பற்றும் பிரம்ம-வாதிகளாவர்.

பதம் 8.23.14 : பிராமண சிரேஷ்டரான சுக்ராசார்யரே, யாகங்களைச் செய்வதில் ஈடுபட்ட உமது சீடரான பலி மகாராஜனின் குற்றத்தை அல்லது முரண்பாட்டை தயவுசெய்து விளக்கிக் கூறுவீராக. தகுதியுள்ள பிராமணர்களின் முன்னிலையில் தீர்மானிக்கப்படும் பொழுது இக்குற்றம் செல்லாததாகிவிடும்.

பதம் 8.23.15 : சுக்ராசார்யர் கூறினார்: எம்பெருமானே, தாங்கள் எல்லா யாகங்களையும் அனுபவிப்பவரும், அவற்றுக்கான விதிகளை அளிப்பவருமாவீர். யாருக்கு எல்லா யாகங்களும் அர்ப்பணிக்கப்படுகின்றனவோ அந்த யக்ஞ-புருஷரும் தாங்கள்தான். ஒருவர் தங்களை முழுமையாக திருப்திப்படுத்தியிருந்தால், அவர் நிறைவேற்றிய யாகத்தில் முரண்பாடுகளோ அல்லது குறைகளோ இருப்பதற்கு வாய்ப்பேது?

பதம் 8.23.16 : மந்திரங்களை உச்சரிப்பதிலும், கட்டுப்பாட்டு விதிகளை அனுஷ்டிப்பதிலும் முரண்பாடுகள் இருக்கக்கூடும். மேலும் காலம், தேசம், நபர் மற்றும் உபபொருட்கள் ஆகியவற்றின் விஷயத்திலும் கூட முரண்பாடுகள் இருக்கக்கூடும். ஆனால் பெருமானாகிய தங்களது புனித நாமத்தைப் பாடும்போது, அனைத்தும் குறையற்றவையாக மாறிவிடுகின்றன.

பதம் 8.23.17 : பகவான் விஷ்ணுவே, நான் தங்களது கட்டளைப்படிதான் நடக்கவேண்டும். ஏனெனில், தங்களது கட்டளைக்குக் கீழ்ப்படிவதென்பது மிகவும் மங்களகரமானதும், எல்லோருடைய முதற்கடமையுமாகும்.

பதம் 8.23.18 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக, மிகவும் சக்திவாய்ந்தவரான சுக்ராசார்யர் பரமபுருஷ பகவானின் கட்டளையைப் பூரண மரியாதையுடன் ஏற்றுக் கொண்டார். மிகச்சிறந்த பிராமணர்களுடன் அவர் பலி மகாராஜனால் இயற்றப்பட்ட யாகத்தில் விளைந்த குறைகளுக்கு ஈடுசெய்ய ஆரம்பித்தார்.

பதம் 8.23.19 : பரீட்சித்து மகாராஜனே, இவ்வாறு பலி மகாராஜனின் எல்லா நிலத்தையும் யாசித்துப் பெற்ற முழுமுதற் கடவுளாகிய பகவான் வாமனதேவர், இந்திரனின் எதிரியால் அபகரிக்கப்பட்ட நிலத்தைத் தமது சகோதரரான இந்திரனிடம் ஒப்படைத்தார்.

பதங்கள் 8.23.20 – 8.23.21 : அனைத்து தேவர்கள், சிறந்த ரிஷிகள், பித்ருலோக வாசிகள், மனுக்கள், முனிவர்கள், மற்றும் தட்சன், பிருகு, அங்கிரர் போன்ற தலைவர்கள், அத்துடன் கார்த்திகேயன் மற்றும் சிவபெருமான் ஆகியோரால் பின்தொடரப்பட்டவரான பிரம்ம தேவர் (தட்ச ராஜனுக்கும், மற்றெல்லா பிரஜாபதிகளுக்கும் தலைவர்), பகவான் வாமனதேவரை எல்லோரையும் காத்து இரட்சிப்பவராக ஏற்றுக்கொண்டார். கஸ்யப முனிவர் மற்றும் அவரது மனைவியான அதிதி ஆகியோரின் மகிழ்ச்சிக்காகவும், அனைத்து பிரபஞ்ச வாசிகள் மற்றும் அவர்களின் பல்வேறு தலைவர்கள் ஆகியோரின் நன்மைக்காக பிரம்மா இதைச் செய்தார்.

பதங்கள் 8.23.22 – 8.23.23 : பரீட்சித்து மகாராஜனே, இந்திரன் பிரபஞ்சம் முழுவதற்கும் ராஜனாக கருதப்பட்டார். ஆனால் பிரம்ம தேவரை தலைமையாகக் கொண்டிருந்த தேவர்கள், உபேந்திரரான, பகவான் வாமனதேவரை வேதங்களின் தலைவராகவும், மதக்கொள்கைகள், புகழ், செல்வம், மங்களம், விரதங்கள், உயர்கிரக அமைப்புக்கு ஏற்றம் பெறுதல், மற்றும் முக்தி ஆகியவற்றிற்கு காவலராகவும் பெற விரும்பினர். இவ்வாறாக பகவான் வாமனதேவரை அனைத்திற்கும் மிகவுயர்ந்த தலைவராக அவர்கள் ஏற்றனர். இம்முடிவு அனைத்து ஜீவராசிகளையும் மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.

பதம் 8.23.24 : அதன்பிறகு, சுவர்க்க ராஜனான இந்திரன், பிரம்மதேவரின் அனுமதியுடன், ஒரு தேவலோக விமானத்தில் பகவான் வாமனதேவரை தன் முன் இருத்தி, சுவர்க்க லோகங்களின் எல்லாத் தலைவர்களுடனும் அவரை சுவர்க்க லோகத்திற்கு அழைத்துச் சென்றார்.

பதம் 8.23.25 : இவ்வாறாக, பரமபுரஷ பகவானாகிய வாமனதேவரின் கரங்களால் பாதுகாக்கப்பட்டு, சுவர்க்கராஜனான இந்திரன் தனது மூவுலகங்களின் ஆட்சியை திரும்பப் பெற்றார். பழைய பதவியில் மறுபடியும் வைக்கப்பட்ட அவர் செல்வச் செழிப்புடன் விளங்கியதுடன், பயமில்லாதவராகவும், முழு திருப்தியுடையவராகவும் ஆனார்.

பதங்கள் 8.23.26 – 8.23.27 : பிரம்ம தேவர், சிவபெருமான், கார்த்திக்கேயர், மாமுனிவரான பிருகு, மற்ற முனிவர்கள், பித்ருலோக வாசிகள், மற்றும் சித்தலோக வாசிகள், விமானத்தினால் வானவெளியில் பிரயாணம் செய்யக் கூடிய ஜீவராசிகள் உட்பட, அங்கு கூடியிருந்த மற்றெல்லா ஜீவராசிகளும், பகவான் வாமனதேவரின் அசாதாரணமான செயல்களைப் புகழ்ந்தனர். ராஜனே, அவர்கள் பகவானைப் பற்றி பாடிக்கொண்டும், அவரைப் புகழ்ந்தவாறும், அவரவருடைய சுவர்க்க லோகங்களுக்கு திரும்பிச் சென்றனர். அதிதியின் நிலையையும் அவர்கள் புகழ்ந்தனர்.

பதம் 8.23.28 : உமது வம்சத்திற்கே பெருமை சேர்க்கும் பரீட்சித்து மகாராஜனே, பரமபுருஷ பகவானாகிய வாமனதேவரின் அற்புதமான செயல்களை பற்றிய அனைத்தையும் உமக்கு நான் இப்போது விவரித்தேன். இதைப் பற்றி கேள்விப்படுபவர்கள் எல்லாப் பாவ விளைவுகளில் இருந்தும் நிச்சயமாக விடுபடுவார்கள்.

பதம் 8.23.29 : மரணத்திற்கு உட்பட்டவர்களால் பூமி முழுவதிலுமுள்ள அணுக்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது. அதைப் போலவே, திரி விக்ரமர் எனப்படும் பரமபுருஷ பகவானாகிய விஷ்ணுவின் பெருமைகளையும் அவர்களால் அளவிட முடியாது. ஏற்கனவே பிறந்துவிட்டவர்களாலோ அல்லது இனி பிறக்கப் போகின்றவர்களாலோ இதைச் செய்யமுடியாது. இது மாமுனிவரான வஸிஷ்டரால் பாடப்பட்டு உள்ளது.

பதம் 8.23.30 : பரமபுருஷ பகவான் தமது பல்வேறு அவதாரங்களில் நிகழ்த்தும் அசாதாரணமான செயல்களைப் பற்றி ஒருவர் கேட்பாரானால், நிச்சயமாக அவர் உயர்கிரக அமைப்பிற்கு உயர்த்தப்படுவோர் அல்லது வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.

பதம் 8.23.31 : எப்போதெல்லாம் ஒரு வேதச் சடங்கின் போது வாமனதேவரின் செயல்கள் விவரிக்கப்படுகின்றனவோ, அச்சடங்கு தேவர்களை திருப்திப்படுத்துவதற்காகவோ, பித்ருலோகத்திலுள்ள ஒருவரது முன்னோர்களை திருப்திபடுத்துவதற்காகவோ அல்லது திருமணத்தைப் போன்ற ஒரு சமூக நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்காகவோ செய்யப்படுவதாக இருந்தாலும், அச்சடங்கு மிகவும் மங்களகரமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare