அத்தியாயம் – 26
அற்புத கிருஷ்ணர்
பதம் 10.26.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கிருஷ்ணரின் கோவர்தனகிரியைத் தூக்குதல் போன்ற நம்புதற்கரிய செயல்களைக் கண்டு அவரது உன்னத சக்தி என்னவென்று அறிய இயலாத ஆயர்குலத்தினர் நந்த மகாராஜாவை அணுகி அவரிடம் பின்வருமாறு கூறினர்.
பதம் 10.26.2 : (ஆயர்கள் கூறினர்:) இச்சிறுவன் நம்புதற்கரிய அசாதாரணச் செயல்களைச் செய்கின்றான் ஆதலினால், இவனைப் போன்றவர்கள் கண்டு வெறுக்கும் சாதாரண மனிதர்களாகிய நம்மிடையே இவன் எப்படிப் பிறந்திருக்க முடியும்?
பதம் 10.26.3 : வல்லமை மிக்க யானை ஒன்று தனது தும்பிக்கையில் ஒரு தாமரை மலரை எளிதாகக் தூக்குவது போன்று ஏழுவயதுச் சிறுவனான இவன் மிகவும் விளையாட்டாக மலைகளிற் சிறந்த கோவர்தன கிரியை எப்படித் தூக்க முடிந்தது?
பதம் 10.26.4 : கண்களைச் சரியாகத் திறக்காத பச்சைக் குழந்தை பூதனை என்னும் அரக்கியின் முலைப்பாலினை உண்டு காலன் ஒருவனது உடலின் இளமையை எடுத்துக்கொள்வது போல் அவளது உயிரையும் எடுத்துக் கொண்டதே!
பதம் 10.26.5 : ஒரு பெரிய வண்டியின் கீழ் அழுதுகொண்டு படுத்திருந்த மூன்று மாதக் குழந்தையான கிருஷ்ணர் தனது பாதங்களால் அவ்வண்டியை உதைத்தார். அவரது பாதத்தின் நுனிப்பகுதி பட்ட மாத்திரத்திலேயே அந்த வண்டி உயரே பறந்து பின்னர் குப்புறக் கவிழ்ந்து வீழ்ந்தது.
பதம் 10.26.6 : ஒரு வயதில் இவர் அமைதியுடன் உட்கார்ந்து கொண்டிருந்த பொழுது திருணாவ்ருதர் என்னும் அசுரனால் ஆகாயத்தில் தூக்கிச் செல்லப்பட்டார். அப்போது குழந்தை கிருஷ்ணர் அவ்வசுரனின் கழுத்தை நெறித்து அவனுக்கு மிகுந்த துன்பமுண்டாக்கி அவனைக் கொன்றார்.
பதம் 10.26.7 : ஒரு சமயம் இவர் வெண்ணெய் திருடிக்கொண்டிருக்கும் பொழுது கையும் களவுமாக தனது அன்னையினால் பிடிக்கப்பட்டு ஒரு பெரிய உரலில் கட்டிவைக்கப்பட்டார். பிறகு இவர் தனது கைகளினால் தவழ்ந்து அவ்வுரலை இழுத்துக் கொண்டு இரண்டு மருதமரங்களுக்கு இடையில் புகுந்து அவற்றைக் கீழே விழச் செய்தார்.
பதம் 10.26.8 : மற்றொரு சமயம் கிருஷ்ணர் பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் சேர்ந்து கன்றுகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது பகாசுரன் என்னும் அசுரன் கிருஷ்ணரைக் கொல்ல வேண்டும் என்னும் எண்ணத்தில் அங்கு வந்தான். ஆனால் கிருஷ்ணர் தீங்குவிளைவிக்க வந்த அந்த அசுரனது வாயைக் கிழித்துக் கொன்றார்.
பதம் 10.26.9 : கிருஷ்ணரைக் கொல்ல விரும்பிய வத்ஸாசுரன் தானும் ஒரு கன்றாக மாறி கன்றுகளுக்கிடையில் புகுந்து கொண்டான். ஆனால் கிருஷ்ணரே அவ்வசுரனைக் கொன்று அவனுடைய உடலை விளாமரத்தின் மீது எரிந்து விளாம்பழங்களை விழச் செய்தார்.
பதம் 10.26.10 : பகவான் பலராமருடன் சேர்ந்து கிருஷ்ணர் கழுதை அசுரனையும் அவனது நண்பர்களையும் கொன்றார். அதன் மூலம் நன்கு கனிந்த பனம்பழங்கள் நிறைந்த தாளவனத்தினை மீட்டுப் பாதுகாத்தார்.
பதம் 10.26.11 : பலம் வாய்ந்த பகவான் பலராமரைக் கொண்டு பிரலம்பாசுரனைக் கொல்வதற்கு ஏற்பாடு செய்து கிருஷ்ணர் விரஜத்தின் ஆயர்குலச் சிறுவர்களையும் அவர்களின் விலங்குகளையும் காட்டுத்தீயினின்று காத்தார்.
பதம் 10.26.12 : காளிங்கன் என்னும் கொடிய விஷமுடைய பாம்பினை கிருஷ்ணர் தண்டித்தார். அவனை அடக்கிய பிறகு யமுனையின் குளத்திலிருந்து பலவந்தமாக விரட்டியடித்தார். இவ்வாறு இவர் யமுனை நதியின் நீரினை கொடிய விஷக்கலப்பிலிருந்து காத்தார்.
பதம் 10.26.13 : அன்பிற்குரிய நந்தமகாராஜாவே, நாங்களும் விரஜத்திலுள்ள பிறரும் உங்கள் தனயன்மீது வைத்திருக்கும் பாசத்தினை ஏன் கைவிட முடியவில்லை? எந்தவிதப் புறத்தூண்டுதலுமின்றி எங்கள் அனைவரையும் கவர்ந்து விடுகிறானே அது எப்படி?
பதம் 10.26.14 : ஒரு புறம் பார்த்தால் இவன் ஏழுவயதுச் சிறுவனாவான். மறுபுறம் பார்த்தால் கோவர்தனகிரி என்னும் பெரிய மலையினைத் தூக்குகிறான். ஆதலினால் விரஜத்தின் தலைவரே! உமது மைந்தனைப் பற்றி எமக்கு ஐயம் எழுகிறது.
பதம் 10.26.15 : நந்தமகாராஜா பதிலுரைத்தார்: ஓ, ஆயர்களே, எனது வார்த்தைகளைக் கேட்டீரென்றால் என் பையனைப் பற்றிய உங்கள் ஐயங்கள் அனைத்தும் நீங்கிவிடும். முன்பு கர்க முனிவர் எனது குழந்தையைப் பற்றிப் பின்வருமாறு என்னிடம் கூறினார்.
பதம் 10.26.16 : (கர்க முனிவர் கூறினார்:) உனது மைந்தன் கிருஷ்ணர் ஒவ்வோர் யுகத்திலும் அவதரிக்கின்றார். முன்பு இவர்-வெண்மை, சிகப்பு, மஞ்சள் என்னும் மூன்று நிறங்களில் தோன்றினார். இப்போது கருநிறமுடையவராகத் தோன்றியுள்ளார்.
பதம் 10.26.17 : சிலகாரணங்களுக்காக உமது மைந்தன் முன்பு வசுதேவருக்கு மைந்தனாகத் தோன்றினான். ஆகையினால் கற்றறிந்தவர்கள் இக் குழந்தையினை வாசுதேவன் என்றும் அழைப்பர்.
பதம் 10.26.18 : உம்முடைய இந்த மகனின் உன்னதக் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப இவனுக்கு பல நாமங்களும், ரூபங்களும் உள்ளன. இவற்றை நானறிவேன். ஆனால் பாமர மக்கள் இவற்றை அறியார்கள்.
பதம் 10.26.19 : கோகுலத்திலுள்ள ஆயர்களின் உன்னத ஆனந்தத்தினை அதிகரிப்பதற்காக இக்குழந்தை எப்போதும் மங்களகரமாக செயல்படும். இவனது கருணையினால் நீங்கள் அனைத்துத் துன்பங்களும் நீங்கப் பெறுவீர்கள்.
பதம் 10.26.20 : ஒ, நந்த மகாராஜனே, கொடுங்கோல் ஆட்சி நடைபெறும் பொழுதும், இந்திரன் பதவி இழக்கும்பொழுதும், திருடர்களால், நல்லவர்கள் துன்புறுத்தப்படும் பொழுதும் துஷ்டர்களை அழித்து, நல்லவர்களைப் பாதுகாத்து அவர்களை வளம் பெறச் செய்வதற்காக இக்குழந்தை அவதரிப்பான் என்று சரித்திரத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
பதம் 10.26.21 : எப்பொழுதும் விஷ்ணுவைத் தங்கள் பக்கத்தில் வைத்திருக்கும் தேவர்களுக்கு அரக்கர்களால் தீங்கு செய்ய முடியாது. அதேபோல, அனைத்து மங்களகரமான கிருஷ்ணருடன் இணைந்த எந்த மனிதர்களும் எதிரிகளால் தோற்கடிக்கப்பட முடியாது.
பதம் 10.26.22 : ஆகையினால் நந்தமகாராஜனே, உனது இம்மைந்தன் நாராயணருக்கு இணையானவன் ஆவான். இவனது உன்னத குணம், வளம், நாமம், கீர்த்தி, செல்வாக்கு போன்றவற்றினால் இவன் நாராயணரைப் போன்றவனாவான். அதனால் இவனது செயல்களைக் கண்டு நீ ஆச்சரியமடைய வேண்டாம்.
பதம் 10.26.23 : (நந்தமகாராஜா தொடர்ந்து கூறினார்:) இவ்வாறு என்னிடம் கூறிய கர்கரிஷி பிறகு தன் இல்லத்திற்குத் திரும்பிச் சென்றபிறகு, நம்மைத் துன்பங்களிலிருந்து காக்கும் இக்கிருஷ்ணன் உண்மையில் பகவான் நாராயணரின் அம்சாவதாரம் ஆவான் என்று சிந்திக்கத் தொடங்கினேன்.
பதம் 10.26.24 : (சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்:) கர்க முனிவரிடமிருந்து தான் கேட்டவற்றை நந்தமகாராஜா உரைக்கக் கேட்ட விருந்தாவனவாசிகள் புத்துணர்ச்சி பெற்றனர். அவர்களின் மனக்குழப்பம் நீங்கியது. அவர்கள் நந்தகோபரையும், பகவான் கிருஷ்ணரையும் மரியாதையுடன் வணங்கினர்.
பதம் 10.26.25 : தனக்குரிய வேள்வி தடைபட்டது கண்டு சினங்கொண்ட தேவேந்திரன் கோகுலத்தின்மீது இடியும், மின்னலுடன் கூடிய கல்மழையும் பொழியச் செய்து அங்குள்ள பசுக்களுக்கும், பிறவிலங்குகளுக்கும், பெண்களுக்கும் பெருந்துன்பம் விளைவித்தான். இயற்கையிலேயே கருணை உடையவரான பகவான் கிருஷ்ணர் அவர்களின் துன்பத்தினைக் கண்டு, அவர்களின் ஒரே அடைக்கலம் தாம் மட்டுமே என்று கருதி புன்னகையுடன், ஒரு சிறு குழந்தை காளான் குடையினை எளிதில் தூக்கிவிடுவதுபோல் ஒரு கையினால் கோவர்தன கிரியைத் தூக்கினார். இவ்வாறு அவர் ஆயர் குலத்தினைக் காத்தார். பசுக்களின் தெய்வமும், இந்திரனின் ஆணவத்தினை அழித்தவருமான பகவான் கோவிந்தன் எம்மீது மகிழ்ச்சியடைவாராக.

