அத்தியாயம் – 35
காட்டிற்குச் சென்ற கிருஷ்ணரை எண்ணிக்
கோபியர்கள் பாடியது
பதம் 10.35.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கிருஷ்ணர் எப்போதெல்லாம் காட்டிற்குச் செல்கின்றாரோ அப்போது கோபியர்களின் மனங்களும் அவர் பின்னால் ஓடும். அதனால் அந்த இளம் பெண்கள் அவரது லீலைகளைப் பற்றிப் பாடி தமது நாட்களைத் துயரத்துடன் கழிக்கின்றனர்.

பதங்கள் 10.35.2 – 10.35.3 : கோபியர்கள் கூறினர்: “முகுந்தன் தமது குழலை இசைக்கும் பொழுது தமது அதரங்களின் மீது அதனை வைத்துக் கொள்கின்றார், தமது இடது கன்னத்தினை, இடது தோளின்மீது சாய்த்துக் கொள்கிறார். தமது புருவங்களை அசைத்து ஆடச் செய்கிறார். அச்சமயம் விமானங்களில், தமது கணவர்களுடன் பயணம் செய்யும் சித்தர்களின் தேவியர்கள் ஆச்சரியத்திற்காளாகின்றனர். இனிய ஒலியினைக் கேட்டுத் தமது மனங்களில் காம இச்சை எழுவதைக் கண்டு அப்பெண்கள் நாணுகின்றனர். துயரத்தினால் தங்கள் இடைகளில் அணிந்திருந்த மேகலைகள் நெகிழ்வதையும் அவர்கள் அறியவில்லை.

பதங்கள் 10.35.4 – 10.35.5 : ஒ, பெண்களே! துன்புறுவோர்க்கு இன்பமளிக்கும் நந்த கோபனின் மைந்தன் தமது மார்பின் மீது நிலையான மின்னலை உடையவராகவும் ஒளிரும் வைர அட்டிகை போன்ற புன்னகை உடையவராகவும், இருக்கின்றார். இப்போது சில அற்புத நிகழ்வுகளைக் கேட்பீராக! அவர் தமது புல்லாங்குழலினை இசைக்கும்பொழுது வெகு தொலைவில் கூட்டம்கூட்டமாக நிற்கும் விரஜகத்திலுள்ள காளைகளும், மான்களும், பசுக்களும், அவ்வொலியினால் ஈர்க்கப்பட்டுத் தமது வாயில் வைத்திருக்கும் புல்லைத் தின்னாமல், செவிமடல்களை நேராக நிமிர்த்திக் கொண்டு நிற்கும். அவையனைத்தும் அசைவற்று நிற்பது. உறங்குவது போலும் அல்லது சித்திரத்தில் வரைந்த உருவங்கள் போலும் தோற்றமளிக்கும்.

பதங்கள் 10.35.6 – 10.35.7 : அன்பார்ந்த கோபியே! சிலசமயம் பகவான் முகுந்தன், இலைகளையும் மயிலிறகுகளையும், வண்ணத் தாதுப் பொருட்களையும் அணிந்து கொண்டு வரும்பொழுது ஒரு மல்யுத்த வீரனின் தோற்றத்தினைப் பாவனை செய்வது போன்றிருக்கும் அவரது தோற்றம். பிறகு பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் சேர்ந்து கொண்டு தமது புல்லாங்குழலை இசைத்துப் பசுக்களை அழைப்பார். அச்சமயம் நதிகள் தமது ஒட்டத்தினை நிறுத்திவிடும். அவரது தமாரைத் திருவடிகளிலிருந்து தூசியினைக் கொண்டுவரும் காற்றிற்காக ஆர்வமுடன் காத்திருக்கும் நினைப்பில் தம்மை மறந்து அவற்றிலுள்ள நீர் அசைவற்று நிற்கும். ஆயினும் நம்மைப் போல் ஆறுகளும் அத்தனைப் புண்ணியம் செய்தவை அல்ல, அதனால் அவை காதலினால் தமது கரங்கள் நடுங்கக் காத்துக் கொண்டு நிற்கும்.

பதங்கள் 10.35.8 – 10.35.11 : கிருஷ்ணர், அவரது நண்பர்கள் அவரது வீரச் செயல்களின் கீர்த்திகளை விரிவாகப் பாடிக்கொண்டு உடன் வர காட்டிற்குச் செல்கிறார். இவ்வாறு அவர், குறையாத வளங்களை வெளிப்படுத்தும் முழுமுதற் கடவுளைப் போல் தோன்றுகின்றார். பசுக்கள் மலைப்பகுதிகளின் திரிந்து கொண்டிருக்கும்பொழுது கிருஷ்ணர் தமது புல்லாங்குழலின் ஒலியினால் அவற்றை அழைக்கின்றார். அப்பொழுது அவ்வொலியைக் கேட்ட மரங்களும், கொடிகளும் ஏராளமான பழங்களையும், புஷ்பங்களையும் வெளிப்படுத்தித் தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றன. அப்போது அவை பகவான் மகாவிஷ்ணுவைத் தமது மனங்களில் வெளிப்படுத்துவன போன்று காணப்படுகின்றன. பாரம் தாங்காது அவற்றின் கிளைகள் நிலத்தை நோக்கிக் குனியும் பொழுது அவற்றின் அடிமரத்தின் நரம்புகளும், அவற்றின்மீது படர்ந்துள்ள கொடிகளும் கடவுள் மீதான அன்பில் தம்மை மறந்து மயிர்க் கூச்செறிகின்றன. மரங்களும், கொடிகளும் இனிய மதுவினைப் பொழிகின்றன. கிருஷ்ணர் அணிந்துள்ள மாலையிலுள்ள துளசிப் பூக்களின் திவ்ய நறுமணம் மற்றும் இனிமையான மதுவினால் மதிமயங்கித் தும்பிகள் அவருக்காக ஒசையுடன் ரீங்காரமிடும், எல்லோரையும் விட எழில் மிக்கவரான பகவான் புல்லாங்குழலைத் தமது இதழ்களில் வைத்து இனிமையான இசையெழுப்புவதின் மூலம் தும்பிகளின் பாடலை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறார். புல்லாங்குழலின் இனிய இசை பின்னர் நாரைகள், அன்னங்கள் மற்றும் நீர்வாழ்ப் பறவைகளின் உள்ளங்களையும் கொள்ளை கொள்கின்றது. உண்மையில் அவை கிருஷ்ணரை அணுகி, தமது விழிகளை மூடிக்கொண்டு, கடுமையாக மௌனம் காத்து ஆழ்ந்த தியானத்தில் தமது உணர்வினை அவர் மீது நிலைநிறுத்தி அவரை வழிபடுகின்றன.

பதங்கள் 10.35.12 – 10.35.13 : ஒ, விரஜ தேவியரே! பகவான் கிருஷ்ணர் தமது தலையில் ஒரு மலர் மாலையை வேடிக்கையாக அணிந்து கொண்டு பலராமருடன் சேர்ந்து மலைப் பகுதிகளில் மகிழ்ந்திருக்கும் பொழுது தமது புல்லாங்குழலின் இனிய ஒலியினால் அவர் எல்லா உயிர்களையும் மகிழ்ச்சிப்படுத்துகிறார். இவ்வாறு அவர் உலகம் முழுவதையும் இன்பமடையச் செய்கின்றார். அச்சமயம் அருகிலுள்ள மேகம் மகத்தான ஒருவருக்கு எதிராகக் குற்றமிழைத்து விடுவோமோ என்னும் அச்சத்தின் காரணமான அவரது குழலிசைக்கு ஏற்ப இடியோசையினை மிகவும் நேர்த்தியாக இழையச் செய்கிறது. மேகம் தனது உயிர்நண்பரான கிருஷ்ணர் மீது மழையாகப் பெய்வித்து, சூரியனின் சுடுகதிர்கள் அவர்மீது படவிடாது ஒரு குடையினைப் போல் அவருக்கு நிழல் அளிக்கின்றது.

பதங்கள் 10.35.14 – 10.35.15 : ஓ, புண்ணியவதி தாயான யசோதை அன்னையே பசுக்களை மேய்ப்பதின் அனைத்துக் கலைகளிலும் தேர்ந்துள்ள உனது மைந்தர் புல்லாங்குழலை இசைப்பதில் பல புதிய யுக்திகளைக் கண்டுபிடித்துள்ளார். அவரது சிவந்த கோவைப்பழ அதரங்களில் அவர் தமது புல்லாங்குழலை வைத்துப் பல்வேறு ஸ்வர வரிசைகளைக் கீழ் மத்திய உச்சஸ்தாயிகளில் இசை எழுப்பும் பொழுது அதன் ஒலியைக் கேட்டு பிரம்மதேவர், சிவபெருமான், இந்திரன் மற்றும் பிற தேவர் தலைவர்கள் அனைவரும் குழப்பமடைகின்றனர். இவர்கள் அனைவரும் சிறந்த கற்றறிந்த அறிஞர்களாக இருந்தபோதிலும் அந்த இசையின் சாரத்தினை என்னவென்று அவர்களால் உறுதிபடுத்த முடியவில்லை. அதனால் அவர்கள் தமது தலைகளையும், இதயங்களையும் தாழ்த்தி வணங்கினர்.

பதங்கள் 10.35.16 – 10.35.17 : கிருஷ்ணர் தமது செந்தாமரை இதழ் போன்ற மென்மையான பாதங்களினால் விரஜம் முழுவதும் நடந்து அதன் நிலப்பகுதியில், தமது பாதங்களிலுள்ள கொடி வஜ்ராயுதம், தாமரை மலர் மற்றும் அங்குசக் குறிகளைப் பதிக்கும்பொழுது, பசுக்களின் காலடிக் குளம்புகள் பட்டு வருந்தும் நிலத்தின் வேதனையிலிருந்து அதற்கு விடுதலையளிக்கின்றார். அவர் தமது புல்லாங்குழலை இசைக்கும் பொழுது அவரது உடல் ஓர் யானையைப் போன்று கவர்ச்சிகரமாக அசைகிறது. கிருஷ்ணர் நம்மை வேடிக்கையாகப் பார்க்கும் பொழுது மன்மதனால் கிளர்ச்சிக்கு ஆளாக்கப்படும் கோபியர்களாகிய நாம் நமது கூந்தலும், ஆடையும் குலைவதைக் கூட அறியாது மரங்களைப் போல் அசைவற்று நிற்கின்றோம்.

பதங்கள் 10.35.18 – 10.35.19 : கிருஷ்ணர் இப்போது எங்கோ ஓரிடத்தில் நின்று நூலிழையில் கோர்க்கப்பட்ட மணிகளைக் கொண்டு தமது பசுக்களை எண்ணிக்கொண்டிருப்பார். அவர் தமக்கு மிகவும் பிரியமான நறுமணமுடைய துளசிமலர்களினாலான மாலையினை அணிந்திருப்பார். அவரது அன்பிற்குரிய ஆயர்குலச் சிறுவனின் தோளின் மீது தமது கரத்தினைப் போட்டிருப்பார். கிருஷ்ணர் தமது புல்லாங்குழலினை இசைத்துக் கொண்டு பாடும்பொழுது உன்னதக் குணங்களின் கடலான அவரை அணுகிய கருநிற மான்களின் துணையான பெண்மான்கள் அவர் அருகில் சென்று அமரும். கோபியர்களான நம்மைப் போல் அம்மான்களும் இல்லற வாழ்வின் இன்பத்தின் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் துறந்திருக்கும்.

பதங்கள் 10.35.20 – 10.35.21 : ஓ, பாவமற்ற யசோதையே! நந்த மகாராஜாவின் மைந்தரான தங்கள் பாசமிகு குழந்தை ஒரு மல்லிகை மாலையினால் தம்மை நன்றாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார். அவர் இப்பொழுது யமுனையின் அருகில் பசுக்களும், ஆயர்குலச்சிறுவர்களும் சூழ்ந்திருக்க இசை எழுப்பிக் கொண்டுத் தமது நண்பர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றார். மந்தமாருதம் சந்தனத்தின் நறுமணத்தினைச் சுமந்து வந்து அவரை கௌரவிக்கின்றது. வாழ்த்திசை முழங்குபவர்களைப் போன்று பல்வேறு உபதேவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் நின்றுகொண்டு தமது இசையினையும், பாடங்களையும், பரிசுப் பொருட்களையும் அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர்.

பதங்கள் 10.35.22 – 10.35.23 : விரஜத்திலுள்ள பசுக்களின் மீது கொண்ட அளவற்ற பாசத்திலேயே கிருஷ்ணர் கோவர்தன கிரியைத் தூக்கியவரானார். பகற்பொழுதின் இறுதியில் அவருடைய எல்லாப் பசுக்களும் சூழ்ந்துவர அவர் தமது புல்லாங்குழலில் இசை எழுப்புவார், அவர் வரும் பாதையில் நின்று கொண்டு தேவர்கள் அவரது தாமரைத் திருவடிகளை வணங்குவர், அவரது நண்பர்களான ஆயர்குலச்சிறுவர்களோ அவருடைய கீர்த்திகளைப் பாடிக் கொண்டு உடன் வருவர். அவர் அணிந்திருக்கும் மாலை, பசுக்களின் காலடிக் குளம்புகளினால் எழும் தூசு நிறைந்திருக்கும். களைப்பினால் அதிகரிக்கும் அவருடைய எழில் அனைவரின் கண்களுக்கும் ஆனந்த உற்சவத்தினை உருவாக்கும். தமது நண்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆர்வத்தில் கிருஷ்ணர், அன்னை யசோதையின் கருப்பையிருந்து எழுந்து வந்த நிலவு ஆவார்.

பதங்கள் 10.35.24 – 10.35.25 : கிருஷ்ணர் மரியாதையுடன் தமது நலம் விரும்பும் நண்பர்களை வாழ்த்தும் பொழுது அவருடைய விழிகள் மயக்கம் கொண்டன போன்று மெதுவாகச் சுழலும். அவர் வனத்திலுள்ள மலர்களினால் கட்டப்பட்ட மாலையினை அணிந்திருக்கின்றார். அவருடைய மென்மையான கன்னங்களின் எழிலினை பொன்னால் செய்யப்பட்ட அவரது செவிக்குண்டலங்களின் ஒளியும் வெண்ணிலந்தைப் பழம் போன்ற அவருடைய திருமுகத்தின் வெண்ணிறமும் அதிகரிக்கச் செய்கின்றன. இரவின் நாயகனான சந்திரனை ஒத்த மகிழ்ச்சி மிக்க முகத்துடன் யது குலத் தலைவரான அவர் ஒரு ராஜ யானையைப் போல நடக்கின்றார். இவ்வாறு பகலின் துன்பம் செய்யும் வெப்பத்திலிருந்து விரஜத்தின் பசுக்களை மீட்டுக் கொண்டு மாலையில் அவர் விரஜத்திற்குத் திரும்புகின்றார்.

பதம் 10.35.26 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: “ஓ மன்னனே, இவ்வாறு பகற்பொழுதில் விரஜத்திலுள்ளப் பெண்கள் தொடர்ந்து கிருஷ்ணருடைய லீலைகளைப் பாடி மகிழ்கின்றனர். மேலும் அவரிடத்து ஆழ்ந்திருக்கும் சித்தமும், மனமும் உடைய பெண்கள் விழாக்கால மகிழ்ச்சியால் நிரப்பப்படுகின்றனர்.”

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare