அத்தியாயம் – 7
விதுரரின் தொடர்ந்த விசாரணைகள்
பதம் 3.7.1
ஸ்ரீ-சுகஉவாச
ஏவம் ப்ருவாணம் மைத்ரேயம் த்வைபாயன-ஸுதோ புத:
ப்ரீணயன் இவ பாரத்யா விதுர: ப்ரத்யபாஷத

ஸ்ரீ – சுக: உவாச – ஸ்ரீசுகதேவகோஸ்வாமி கூறினார்; ஏவம்- இவ்வாறாக; ப்ருவாணம் – பேசிக்கொண்டிருக்கும்பொழுது; மைத்ரேயம் -மைத்ரேயமுனிவரிடம்; த்வைபாயன- ஸுத: துவைபாயனரின் புத்திரர்; புத:-சுற்றறிந்த; ப்ரீணயன்—இனிமையானமுறையில்; இவ-அது இருந்ததுபோல்; பாரத்யா -ஒரு வேண்டுகோளின் வடிவில்;விதுர:-விதுரர்; ப்ரத்யபாஷத —வெளியிட்டார்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, மாமுனிவரான மைத்ரேயர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்பொழுது, துவைபாயனரின் கற்றறிந்த புதல்வரான விதுரர், இக்கேள்வியைக் கேட்பதன் மூலமாக இனிமையான முறையில் ஒரு விண்ணப்பத்தை வெளியிட்டார்.

பதம் 3.7.2
விதுரஉவாச
ப்ரஹ்மன் கதம் பகவதஸ் சின்-மாத்ரஸ் யாவிகாரிண:
லீலயா சாபி யுஜ்யேரன் நிர்குணஸ்ய குணா: க்ரியா:

விதுர :-உவாச-விதுரர் கூறினார்; ப்ரஹ்மன்-பிராமணரே; கதம்- எப்படி: பகவத:-பரமபுருஷரின்; சித்-மாத்ரஸ்ய-பூரண ஆன்மீக முழுமையின்; அவிபாரிண:-மாற்றமற்றவரின்; லீலயா—அவரது லீலைகளால்; ச-அல்லது; அபி—அதுஅவ்வாறுஇருப்பினும்; யுஜ்யேரன் -நிகழ்கின்றன; நிர்குணஸ்ய-இயற்கைக் குணங்கள் இல்லாதவர்; குணா:—இயற்கைக்குணங்கள்; க்ரியா:-செயல்கள்.

ஸ்ரீவிதுரர் கூறினார்: சிறந்த பிராமணரே, பரமபுருஷர், பரம ஆன்மீக முழுமையாகவும், மாற்றமற்றவராகவும் இருப்பதால், ஜடஇயற்கைக் குணங்களுடனும், அவற்றின் செயல்களுடனும் அவர் எப்படி தொடர்பு கொண்டிருக்கிறார்? இது அவருடைய லீலை என்றால் மாற்றமற்றவரான அவரது செயல்கள் எப்படி இயற்கைக் குணங்களின் கலப்படமில்லாமல் வெளிப்படுகின்றன?

பதம் 3.7.3
க்ரீடாயாம் உத்யமோ ‘ர்பஸ்ய காமஸ் சிக்ரீடிஷான்யத:
ஸ்வதஸ்-த்ருப்தஸ்ய ச கதம் நிவ்ருத்தஸ்ய ஸதான்யத:

க்ரீடாயாம்—விளையாடும்விஷயத்தில்; உத்யம:-உற்சாகம்; அர்பஸ்ய —சிறுவர்களின்; காம:-ஆசை; சிக்ரீடிஷா-விளையாடும்விருப்பம்; அன்யத:-மற்றசிறுவர்களுடன்; ஸ்வத:-த்ருப்தஸ்ய – சுயதிருப்தியுடையஒருவருக்கு: ச-மேலும்; சுதம்-எதற்கு: நிவ்கருத்தஸ்ய- பற்றில்லாதவர்; ஸதா-எப்பொழுதும்; அன்யத:—இல்லையெனில்.

சிறுவர்கள் மற்ற சிறுவர்களுடன் விளையாடுவதிலும், பலவித பொழுது போக்குகளில் ஈடுபடுவதிலும் உற்சாகம் கொண்டுள்ளனர். ஆசையால் அவர்கள் தூண்டப்படுவதுதான் இதற்குக்காரணம். ஆனால் பகவானுக்கு இத்தகைய ஆசை உண்டாவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், எப்பொழுதும் அவர் சுயதிருப்தியுடையவராகவும், அனைத்திலும் பற்றற்றவராகவும் இருக்கிறார்.

பதம் 3.7.4
அஸ்ராக்ஷித் பகவான் விஸ்வம் குண-மய்யாத்ம-மாயயா
தயா ஸம்ஸ்தாபயதி ஏதத் பூய: ப்ரத்யபிதாஸ்யதி

அஸ்ராக்ஷித்-சிருஷ்டிக்கச்செய்தார்: பகவான்- பரமபுருஷர்: விஸ்வம்-பிரபஞ்சம்: குண—மய்யா-மூன்றுஜடஇயற்கைக்குணங்களைக்கொண்ட; ஆத்ம-ஆத்மா: மாயயா—சக்தியால்: தயா—அவளால்; ஸ்ம்ஸ்தாபயதி -பராமரிக்கிறார்; எதத் -இவையனைத்தையும்; பூய-பிறகுமீண்டும்; ப்ரதியபிதாஸ்பதி— அதைஅழித்துவிடவும்செய்கிறார்;

மூன்று ஜட இயற்கைக் குணங்களைக் கொண்டு, பகவான் இப்பிரபஞ்ச சிருஷ்டியை ஏற்படுத்தியுள்ளார். அக்குணங்களினால் அவர் சிருஷ்டியைப் பராமரித்து, பிறகு மீண்டும் மீண்டும் அதை அழிக்கிறார்.

பதம் 3.7.5
தேசத: காலதோ யோ ‘ஸாவ் அவஸ்தாத: ஸ்வதோ ‘ன்யத:
அவிலுப்தாவபோதாத்ம ஸ யுஜ்யேதாஜயா கதம்

தேசத:-சந்தர்ப்பச்சூழ்நிலை: காலத:-காலத்தின்ஆதிக்கத்தினால்; ய:-யாரொருவர்; அஸௌ-ஜீவராசி; அவஸ்தாத:-சூழ்நிலையால்; ஸ்வத:-கனவால்; அன்யத:–மற்றவைகளால்; அவிலுப்த-அற்றுப்போதல்: அவபோத -உணர்வு: ஆத்மா-தூயஆத்மா; ஸ;-அவன்;யுஜ்யேத – ஈடுபட்டது; அஜயா- அறியாமையுடன்: கதம்—அதெப்படிசாத்தியமாகும்.

தூய ஆத்மா தூய உணர்வாவான். அவன் சூழ்நிலைகளாலோ, காலத்தாலோ, சந்தர்ப்பங்களாலோ, கனவுகளாலோ அல்லது மற்ற காரணங்களாலோ தன் உணர்வை இழப்பதே இல்லை. அப்படியானால் அவன் எப்படி அறியாமையில் ஈடுபட்டான்?

பதம் 3.7.6
பகவான் ஏக ஏவைஷ ஸர்வ-க்ஷேத்ரேஷ்வ் அவஸ்தித:
அமுஷ்ய துர்பகத்வம் வா க்லேசோ வா கர்மபி: குத:

பகவான்—பரமபுருஷர்; ஏக:-மட்டுமே; ஏவஏஷ:-இவ்வெல்லா; ஸர்வ—அனைத்தும்; க்ஷேத்ரேஷு—ஜீவராசிகளில்;அவஸ்தித-அமைந்துள்ள; அமுஷ்ய-ஜீவராசிகளின்; துர்பகத்வம்- துரதிர்ஷ்டம்; வா- அல்லது; க்லேச:-துன்பங்கள்; வா – அல்லது; கர்மபி: செயல்களால்; குத:-எதற்காக.

பகவான் பரமாத்மாவாக ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறார். பிறகு ஏன் ஜீவராசியின் செயல்கள் துரதிர்ஷ்டத்திலும், துன்பத்திலும் முடிவுறுகின்றன?

பதம் 3.7.7
ஏதஸ்மின் மே மனோ வித்வன் கித்யதே ‘ஞ்ஞான-ஸங்கடே
தன் ந: பராணுத விபோ கஸ்மலம் மானஸம் மஹத்

ஏதஸ்மின் – இதில்; மே-எனது; மன:-மனது; வித்வன்— கற்றறிந்தவரே; கித்யதே – தொல்லைப்படுத்துகிறது; அஞ்ஞான -அறியாமை; ஸங்கடே- துன்பத்தில்; தன்- எனவே; ந:- எனது; பராணுத-தெளிவுபடுத்துங்கள்; விபோ- மிகச்சிறந்தவரே; கஸ்மலம் – மாயையை ; மானஸம்-மனதைச்சார்ந்த; மஹத்-பெரிய.

பண்டித சிரேஷ்டரே, இந்த அறியாமையினால் சங்கடத்தினால் என் புத்தி மிகவும் பேதலித்துப்போய் இருக்கிறது. எனவே அதைத் தெளிவுபடுத்தும்படி நான் வேண்டுகிறேன்.

பதம் 3.7.8
ஸ்ரீ-சுகஉவாச
ஸ இத்தம் சோதித க்ஷத்ரா தத்வ-ஜிக்ஞாஸுனா முனி
ப்ரத்யாஹ பகவச்-சித்த ஸ்மயன் இவ கத-ஸ்மய

ஸ்ரீ- சுக: உவாச-ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸ:-அவர் (மைத்ரேயமுனி); இத்தம்-இவ்விதமாக; சோதித-குழப்பமடைந்து; க்ஷத்ரா—விதுரரால்; தத்வ-ஜிக்ஞாஸுனா—உண்மையைக் கேட்டறிவதில் ஆவல் கொண்டவரால்; முனி:-மாமுனிவர்; ப்ரத்யாஹ -பதிலளித்தார்; பகவத் -சித்த -பகவத் உணர்வுடன் இருந்தார்; ஸ்மயன்—திகைப்படைந்தார்; இவ -என்பதுபோல்; கத-ஸ்மய -தயக்கமில்லாமல்.

ஸ்ரீசுகதேவகோஸ்வாமி கூறினார்: அரசே, விதுரரின் கேள்வியால் இவ்வாறு திகைப்படைந்தது போல் முதலில் காணப்பட்ட மைத்ரேயர், முழுமையான இறையுணர்வுபெற்றவர் என்பதால், பிறகு தயக்கமில்லாமல் பதிலளித்தார்.

பதம் 3.7.9
மைத்ரேயஉவாச
ஸேயம் பகவதோ மாயா யன் நயேன விருத்யதே
ஈஸ்வரஸ்ய விமுக்தஸ்ய கார்பண்யம் உத பந்தனம்

மைத்ரேய: உவாச-மைத்ரேயர்கூறினார்; ஸாஇயம்- இத்தகையஒருகூற்று: பகவத: -பரமபுருஷரின்; மாயா- மாயை; யன்- அது :நயேன-நியாயவாதத்தால்; விருத்யதே- முரணானதாக உள்ளது; ஈஸ்வரஸ்ய-பரமபுருஷபகவானின்; விமுக்தஸ்ய-நித்யமுக்தரின்; கார்பண்யம்- குறைபாடு; உத—அதுபோலவே,என்னவென்றுசொல்வது; பந்தனம்- பந்தம்.

ஸ்ரீமைத்ரேயர் கூறினார்:பரப்பிரம்மன், அல்லது பரமபுருஷர் மாயையினால் கவரப்பட்டவராகவும், அதேசமயம் பந்தப்படாதவராகவும் இருக்கிறார் என்ற கோட்பாட்டை சில பந்தப்பட்ட ஆத்மாக்கள் முன்வைக்கின்றனர். இது நியாயவாதத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.

பதம் 3.7.10
யத் அர்தேன வினாமுஷ்ய பும்ஸ ஆத்ம-விபர்யய:
ப்ரதீயத உபத்ரஷ்டு: ஸ்வ-சிரஸ் சேதனாதிக:

யத்—இவ்வாறாக; அர்தேன— ஒருநோக்கம் அல்லது அர்த்தம்;வினா— இல்லாமல்; அமுஷ்ய-இத்தகைய ஒன்றின்; பும்ஸ:-ஜீவராசியின்; ஆத்ம-விபர்யய:-சுயசொரூபத்தைப் (அடையாளத்தைப்) பற்றி நிலைகுலைந்துள்ள: ப்ரதீயதே-போல் காணப்படுகிறது; உபத்ரஷ்டு-மேலோட்டமாகப் பார்க்கும் பார்வையாளரின்; ஸ்வ-சிர:-சொந்ததலை ; சேதன— ஆதிக: -சிரச்சேதம்.

தனது சுய அடையாளத்தைக் குறித்து ஜீவராசி துக்கப்படுகிறான். தன் தலை துண்டிக்கப்பட்டதாகக் கனவு காணும் ஒரு மனிதனைப் போல், அவனுக்குத் தன் உண்மையான நிலை புலப்படவில்லை.

பதம் 3.7.11
யதா ஜலே சந்திரமஸ: கம்பாதிஸ் தத்-க்ருதோ குண:
த்ருஸ்யதே ‘ஸன்அபி த்ரஷ்டுர் ஆத்மனோ ‘னாத்மனோ குண:

யதா -போல்; ஜலே-நீரில்;சந்திரமஸ- சந்திரனின்: கம்ப-ஆதி: நடுக்கம் போன்றவை: தத்- க்ருத: -நீரினால் விளைந்தது; குண:-குணம்;த்ருஸ்யதே -அது அவ்வாறு காணப்படுகிறது; அஸன்அபி – இருப்புஇல்லாமல்; த்ரஷ்டு:-காண்பவரின்; ஆத்மன:-ஆத்மாவின்; அனாத்மன:- ஆத்மாவிலிருந்து வேறுபட்டதின்; குண:-குணம்.

நீரில் பிரதிபலிக்கும் சந்திரன், நீரின் தன்மையுடன் உறவு கொண்டதால், பார்ப்பவருக்கு நடுங்குவது போல் காணப்படுகிறது. அதுபோலவே ஜடத்துடன் தொடர்பு கொண்ட ஆத்மாவும் ஜடத்தின் தன்மையைக் கொண்டிருப்பதாகக் காணப்படுகிறது.

பதம் 3.7.12
ஸ வை நிவ்ருத்தி-தர்மேண வாஸுதேவானுகம்பயா
பகவத்-பக்தி-யோகேன திரோதத்தே சனைர் இஹ

ஸ: அது; வை- கூட;நிவ்ருத்தி—பற்றின்மை; தர்மேண—ஈடுபாட்டால்; வாஸுதேவ- பரமபுருஷர்; அனுகம்பயா—அவரதுகருணையால்; பகவத்-பரமபுருஷருடனானசம்பந்தத்தில்: பக்தி -யோகேன – இணைப்பதன்மூலம்; திரோதத்தே -குறைகிறது; சனை—படிப்படியாக; இஹ-இந்தவாழ்க்கையில்.

ஆனால் பரமபுருஷரான வாசுதேவனின் கருணையால், பற்றில்லாமல் பகவானுக்கு பக்தித் தொண்டைச் செய்யும் முறையின்மூலம், சுயசொரூபத்தைப் பற்றிய அந்த தப்பபிப்பிராயத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ளமுடியும்.

பதம் 3.7.13
யதேந்திரியோபராமோ ‘த த்ரஷ்ட்ராத்மனி பரே ஹரேௗ
விலீயந்தே ததாக்லேசா: ஸம்ஸுப்தஸ்யேவ க்ருத்ஸ்னச:

யதா — எப்பொழுது; இந்திரிய-புலன்கள்; உபராம:-திருப்தியடைகின்றனஅத-இவ்வாறாக; த்ரஷ்ட்ரு—ஆத்மனி-தீர்க்கதரிசியானபரமாத்மாவிடம்; பரே-பரமபுருஷரில்; ஹரௌ – பரமபுருஷரிடம்; விலீயந்தே-கலந்துவிடுகின்றன; ததா -அப்பொழுது; க்லேசா: -துன்பங்கள்; ஸம்ஸுப்தஸ்ய-ஆழ்ந்தஉறக்கத்தைஅனுபவித்தவன்; இவ—போல்; க்ருத்ஸ்னச:-முற்றிலும்

பரமாத்மாவான பரமபுருஷரில் புலன்கள் திருப்தியடைந்து, அவருடன் கலந்துவிடும்பொழுது, ஆழ்ந்த உறக்கத்திற்குப்பின் கிடைக்கும் திருப்தியைப் போல், எல்லாத் துன்பங்களும் முற்றிலும் அழிந்துவிடுகின்றன.

பதம் 3.7.14
அசேஷ-ஸங்க்லேச-சமம்விதத்தே குணானுவாத-ஸ்ரவணம் முராரே:
கிம் வா புனஸ்தச்- சரணாரவிந்த- பராக-ஸேவா-ரதிர்ஆத்ம-லப்தா

அசேஷ-எல்லையற்ற; ஸங்க்லேச- துன்பமானசூழ்நிலைகள்; சமம் – நிறுத்தம்: விதத்தே-செய்யமுடியும்; குண—அனுவாத—உன்னதமானநாமம், உருவம், குணங்கள், லீலைகள், பரிவாரம் மற்றும் உபகரணங்கள் முதலியவைகளின்; ஸ்ரவணம்-கேட்டல், பாடுதல்; முராரே.-பரமபுருஷரான முராரியின்(ஸ்ரீகிருஷ்ணரின்); கிம்வா—பற்றிஎன்னென்றுசொல்வது; புன: மீண்டும்; தச்—அவரது; சரண—அரவிந்த-தாமரைப்பாதங்கள்;பராக-ஸேவா-நறுமணச் சுவையுள்ள புழுதியின் சேவையில்; ரதி:-கவர்ச்சி; ஆத்ம—லப்தா—இத்தகைய சுயசாதனையை அடைந்தவர்கள்.

பரமபுருஷரான ஸ்ரீகிருஷ்ணரின் உன்னதமான நாமம், உருவம் முதலியவைகளைப் பற்றி கேட்பதாலும், பாடுவதாலுமே, எல்லையற்ற துன்பச் சூழ்நிலைகளை ஒருவரால் களைந்துவிடமுடியும். எனவே பகவானின் தாமரைப் பாதங்களுடைய புழுதியின் நறுமணச்சுவையால் கவரப்பட்டுள்ளவர்களைப் பற்றி என்னென்று சொல்வது?

பதம் 3.7.15
விதுரஉவாச
ஸஞ்சின்ன: ஸம்சயோ மஹ்யம் தவ ஸுக்தாஸினா விபோ
உபயத்ராபி பகவன் மனோ மே ஸம்ப்ரதாவதி

விதுர: உவாச-விதுரர்கூறினார்; ஸஞ்சின்ன: துண்டிக்கப்பட்டன; ஸம்சய:-சந்தேகங்கள்; மஹ்யம்-என்னிடம்; தவ-உங்களுடைய; ஸுக்த –அஸினா – நம்பச்செய்யும்வார்த்தைகளெனும்ஆயுதத்தால்; விபோ-தலைவரே; உபயத்ரஅபி- பகவானிலும், ஜீவராசியிலும்: பகவன்—சக்திவாய்ந்தவரே: மன:-மனம்; மே-எனது; ஸம்ப்ரதாவதி-பூரணமாகநுழைகிறது.

விதுரர் கூறினார்: சக்தி வாய்ந்த முனிவரே, தலைவரே, பரமபுருஷரையும், ஜீவராசிகளையும் பற்றிய என்னுடைய எல்லாச் சந்தேகங்களும் தங்களுடைய நம்பகமான வார்த்தைகளால் இப்பொழுது தீர்ந்தன. என் மனம் இப்பொழுது பூரணமாக அவற்றினுள் ஆழ்ந்து கொண்டிருக்கிறது.

பதம் 3.7.16
ஸாது ஏதத் வ்யாஹ்ருதம் வித்வன் நாத்ம – மாயாயனம் ஹரே:
ஆபாதி அபார்தம் நிர்மூலம் விஸ்வ-மூலம் ந யத்பஹி

ஸாது—உள்ளபடி மிகவும் நன்றாக உள்ளன; ஏதத்-இந்த விளக்கங்கள் எல்லாம்; வ்யாஹ்ருதம் -இவ்வாறு பேசப்பட்ட; வித்வன்—கற்றறிந்தவரே; ந-இல்லை; ஆத்ம—ஆத்மா; மாயா—சக்தி; அயனம்—அசைவு:ஹரே:–பரமபுருஷரின்; ஆபாதி காணப்படுகிறது; அபார்தம்—அர்த்தமில்லாமல்; நிர்மூலம்—அடிப்படை இல்லாமல்; விஸ்வ—மூலம்-பகவான் தான் இதற்குமூலம்; ந- இல்லை; யத்–எது; பஹி:-வெளியில்.

கற்றறிந்த முனிவரே, உங்களுடைய விளக்கங்கள் உள்ளபடி மிகவும் சிறப்பாக உள்ளன. பந்தப்பட்ட ஆத்மாவின் தொல்லைகளுக்கு பகவானின் புறச்சக்தியின் அசைவைத்தவிர வேறு காரணமில்லை.

பதம் 3.7.17
யஸ் ச மூடதமோலோகே யஸ் ச புத்தே: பரம்கத:
தாவ் உபௌ ஸுகம் ஏதேதே க்லிஸ்யதி அந்தரிதோ ஜன

ய: – உள்ள ஒருவன்; ச–கூட; மூட – தம:-மூடர்களிலேயே கடைப்பட்டவன்; லோகே-உலகில்; ய: ச-மற்றும் ஒருவன்; புத்தே;-புத்தியின்; பரம- உன்னத நிலையில் இருப்பவர்; கத: சென்ற; தெள—அவர்களின்; உபௌ-இரண்டும்; ஸுகம்-மகிழ்ச்சி; ஏதேதே – இன்புறுகின்றனர்; க்லிஸ்யதி—துன்புறுகின்றனர்; அந்தரித: -நடுவிலுள்ள ; ஜன: -ஜனங்கள்.

கடைத்தரமான மூடர்கள் மற்றும் புத்திக்கு மேற்பட்ட நிலையில் உள்ளவர்கள் ஆகிய இருவருமே இன்பம் அனுபவிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இடைப்பட்டவர்கள் பௌதிகத் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

பதம் 3.7.18
அர்தாபாவம் வினிஸ்சித்ய ப்ரதீதஸ்யாபி நாத்மன:
தாம் சாபி யுஷ்மச்-சரண-ஸேவயாஹம் பராணுதே

அர்த—அபாவம்- சாராம்சம் இல்லாமல்; வினிஸ்சித்ய-விசாரித்து அறிந்து கொண்டதால்; ப்ரதீதஸ்ய-தெளிவாகக் காணப்படும் மதிப்புகளின்; அபி-மேலும்; ந-ஒரு போதுமில்லை; ஆத்மன- ஆத்மாவின்; தாம்-அதை: ச-கூட: அபி-இவ்வாறாக; யுஷ்மச்- உங்களுடைய; சரண-பாத: ஸேவயா-சேவையால்; அஹம்-நான்; பராணுதே-கைவிட முடியும்.

ஆனால், அன்பிற்குரியவரே, பௌதிகத் தோற்றம் உண்மையானதாகக் காணப்பட்டபோதிலும், அதில் சாராம்சம் இல்லை என்பதை என்னால் இப்பொழுது புரிந்து கொள்ள முடிகிறது என்பதால், தங்களுக்கு நான் கடமைப் பட்டவனாக இருக்கிறேன். தங்களுடைய பாதங்களுக்குத் தொண்டு செய்வதனால், எனது பொய்யான கருத்தை விட்டொழிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

பதம் 3.7.19
யத்-ஸேவயா பகவத: கூட-ஸ்தஸ்ய மது- த்விஷ:
ரதி-ராஸோ பவேத் தீவ்ர: பாதயோர் வ்யஸனார்தன:

யத்-யாருக்கு: ஸேவயா-சேவையால்; பகவத: -பரமபுருஷரின்: கூட – ஸ்தஸ்ய-மாற்ற மற்றவரின்;மது – த்விஷ – மது என்ற அரக்கனின் எதிரி: ரதி -ராஸ: வெவ்வேறு உறவு முறைகளில் உள்ள பற்றை; பவேத்-விருத்தி செய்து கொள்கிறார்; தீவ்ர:மிகவும் பரவசமான;பாதயோ:-பாதங்களின்; வ்யஸன-துன்பங்கள்; அர்தன-அழித்து.

ஆன்மீக குருவின் பாதங்களுக்குத் தொண்டு செய்வதன் மூலமாக, மது என்ற அரக்கனின் மாற்றமற்ற எதிரியும், தமக்கு செய்யப்படும் சேவையின் காரணத்தால், பௌதிகத் துன்பங்களை அழித்து விடுபவருமான அப்பரமபுருஷரின் தொண்டில், உன்னத பரவசத்தை ஒருவரால் வளர்த்துக் கொள்ள முடியும்.

பதம் 3.7.20
துராபா ஹி அல்ப-தபஸ: ஸேவா வைகுண்ட-வர்த்மஸு
யத்ரோபகீயதே நித்யம் தேவ-தேவோ ஜனார்தன:

துராபா-அரிதாக அடையப்படும்; ஹி – நிச்சயமாக; அல்ப- தபஸ:-மிகக்குறைவான தவம் செய்தவரின்; ஸேவா-சேவை; வைகுண்ட—உன்னதமான பகவானின் இராஜ்யம்; வர்த்மஸு -அவ்வழியில்; யத்ர-எங்கு: உபகீயதே-புகழப்படுகிறார்; நித்யம்-எப்பொழுதும்; தேவ-தேவர்களின்; தேவ:-இறைவன்: ஜன – அர்தன: -ஜீவராசிகளைஆள்பவர்.

மிகக் குறைந்த தவம் செய்தவர்களால், பகவானின் இராஜ்யமான வைகுண்ட லோகங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் தூய பக்தர்களின் தொண்டைப் பெறுவது மிகக் கடினம். தேவர்களின் இறைவனும், ஜீவராசிகளை ஆள்பவருமான பரமபுருஷரைப் போற்றிப் புகழ்வதில் தூயபக்தர்கள் நூறு சதவீதம் ஈடுபடுகின்றனர்.

பதம் 3.7.21
ஸ்ருஷ்ட்வாக்ரே மஹத்-ஆதீனி ஸ-விகாராணி அனுக்ரமாத்
தேப்யோ விராஜம் உத்ருத்ய தம் அனு ப்ராவிசத் விபு:

ஸ்ருஷ்ட்வா -படைத்தபின்; அக்ரே-ஆரம்பத்தில்; மஹத் -ஆதீனி- மொத்த பௌதிக சக்தி; ஸ – விகாராணி—புலன் உறுப்புக்களுடன்; அனுக்ரமாத்-மாறு பாடுகளைக் காட்டும் படிப்படியான முறையினால்; தேப்ய-அதற்கு வெளியில்; விராஜம் – பிரம்மாண்டமான பிரபஞ்ச-ரூபம்; உத்ருத்ய-தோற்றுவிக்கும்; தம்- அதற்குள்; அனு-பிறகு; ப்ராவிசத்-புகுந்தார்; விபு:-பரமபுருஷர்.

மொத்த பௌதிக சக்தியான மஹத்-தத்வத்தைப் படைத்து, புலன்களையும், புலனுறுப்புக்களையும் கொண்ட பிரம்மாண்டமான பிரபஞ்சரூபத்தையும் படைத்த பிறகு, பரமபுருஷர் அதற்குள் பிரவேசித்தார்.

பதம் 3.7.22
யம் ஆஹுர் ஆத்யம் புருஷம் ஸஹஸ்ராங்ரி-ஊரு-பாஹுகம்
யத்ர விஸ்வ இமே லோகா: ஸ-விகாசம் த ஆஸதே

யம்-யார்; ஆஹு-என்று அழைக்கப்படுகிறார்;ஆத்யம்- ஆதியான: புருஷம்-பிரபஞ்ச சிருஷ்டிக்குரிய அவதாரம்; ஸஹஸ்ர -ஆயிரம்; அங்ரி—கால்கள்; ஊரு-தொடைகள்; பாஹுகம்-கரங்கள்;யத்ர—அதனில்; விஸ்வ-பிரயஞ்சம்;இமே-இவ்வெல்லா; லோகா-கிரகங்கள்; ஸ-விகாசம்- முறையான வளர்ச்சிகளுடன்; த-அவர்களனைவரும்; ஆஸதே—வாழும்.

காரணக்கடலில் பள்ளி கொண்டுள்ள புருஷ அவதாரம், பௌதிக சிருஷ்டிகளிலுள்ள ஆதி புருஷர் என்று அழைக்கப்படுகிறார். யாருக்குள் எல்லாக்கிரகங்களும், அவற்றின் வாசிகளும் வாழ்கின்றனவோ, அந்த விராட்-ரூபத்தில், பகவானுக்குப் பல ஆயிரக்கணக்கான கால்களும், கரங்களும் உள்ளன.

பதம் 3.7.23
யஸ்மின் தச-வித: ப்ராண: ஸேந்திரியார்தேந்திரியஸ் த்ரி-வ்ருத்
த்வயேரிதோ யதோ வர்ணாஸ் தத்-விபூதீர் வதஸ்வ ந:

யஸ்மின்- எதில்; தச- வித-பத்துவகையான; ப்ராண:-உயிர்க் காற்று; ஸ-உடன்; இந்திரிய-புலன்கள்; அர்த -விருப்பம்; இந்திரிய:- புலன்களின்; த்ரி -வ்ருத் –மூவகை உயிர்ச்சக்திகள்; த்வயா-உங்களால்; ஈரித:- விளக்கப்பட்டது; : யத:-எங்கிருந்து; வர்ணா:-நான்கு குறிப்பிட்ட பிரிவுகள்; தத்-விபூதி:-சக்தி ; வ்தஸ்வ- தயவு கூர்ந்து விளக்குங்கள்; ந:-எனக்கு.

சிறந்த பிராமணரே, பகவானின் விராட்-ரூபமும் புலன்களும், புலன் பொருட்களும் மேலும் பத்து வகையான உயிர்க் காற்றுகளும், மூவகையான உயிர்ச் சக்திகளுடன் இருக்கின்றன என்று தாங்கள் கூறினீர்கள். இப்பொழுது நீங்கள் விரும்பினால், குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த வெவ்வேறு சக்திகளைப் பற்றி விளக்கியருளுங்கள்.

பதம் 3.7.24
யத்ர புத்ரைஸ் ச பௌத்ரைஸ் ச நப்த்ருபி: ஸஹ கோத்ரஜை:-
ப்ரஜா விசித்ராக்ருதய ஆஸன் யாபிர் இதம் ததம்

யத்ர – எதில்; புத்ரை-மகன்களுடன்; ச-மேலும்; பௌத்ரை: -பேரன்களுடன்; ச-கூட; நப்த்ருபி- புதல்விகளிலிருந்து வரும் பேரன்களுடன்; ஸஹ-உடன்; கோத்ர-ஜை-அதே குடும்பத்தின்; ப்ரஜா—சந்ததிகள்; விசித்ர-வெவ்வேறு வகைகளைக் கொண்ட; ஆக்ருதய-அவ்வாறு செய்யப்பட்ட; ஆஸன்—இருக்கின்றனர்; யாபி: -யாரால் ;இதம்- இவ்வெல்லா கிரகங்களும்; ததம் – பரவியுள்ளன.

பிரபுவே, மகன்கள், பேரன்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் உருவங்களில் தோன்றியுள்ள சக்தி, பல வகையான உயிரினங்களுக்கிடையில் பிரபஞ்சம் முழுவதிலும் பரவியுள்ளதென்று நான் நினைக்கிறேன்.

பதம் 3.7.25
ப்ரஜாபதீனாம் ஸ பதிஸ் சக்ளுபே கான் ப்ரஜாபதீன்
ஸர்காம்க்ஷ் சைவானுஸர்காம்ஸ் ச மனூன் மன்வந்தராதிபான்

ப்ரஜா-பதீனாம்-பிரம்மாவையும், மற்றவர்களையும் போன்ற தேவர்கள்; ஸ:-அவர்; பதி:- தலைவரான; சக்ளுபே-முடிவு செய்தார்; கான்-யாரையெல்லாம்; ப்ரஜாபதீன்-ஜீவராசிகளில் தந்தைகள்;ஸர்கான்-சந்ததியினர்; ச-கூட: ஏவ-நிச்சயமாக; அனுஸர்கான்—பிற்காலத்து சந்ததியினர்; ச-மற்றும்; மனும்-மனுக்கள்; மன்வந்தர- அதிபான்—மேலும் அவர்களது மாற்றங்களின்.

கற்றறிந்த பிராமணரே, தேவர்களின் தலைவரும், பிரஜாபதியுமான பிரம்மா எப்படி யுகங்களின் தலைவர்களான பல்வேறு மனுக்களை ஏற்படுத்த முடிவு செய்தார் என்பதை தயவு செய்து விவரிக்க வேண்டுகிறேன். மனுக்களையும், அவர்களுடைய வம்சத்தையும் கூட விளக்கியருள வேண்டுகிறேன்.

பதம் 3.7.26
உபரி அதஸ் ச யே லோகா பூமேர் மித்ராத்மஜாஸதே
தேஷாம் ஸம்ஸ்தாம் பரமாணம் ச பூர்-லோகஸ்ய ச வர்ணய

உபரி- தலையில்; அத:-அடியில்; ச -கூட; யே-எது; லோகா:- கிரகங்கள்; பூமே:-பூமியின்; மித்ர-ஆத்மஜ-மித்திரரின் புதல்வரே (மைத்ரேயமுனி); ஆஸதே-இருக்கின்றன; தேஷாம்—அவற்றின்; ஸம்ஸ்தாம் – நிலை; ப்ரமாணம்ச—அவற்றின் அளவையும்; பூ: -லோகஸ்ய- மண்ணுலகங்களின்; ச-கூட; வர்ணய—தயவுசெய்துவிளக்குங்கள்.

மித்திரரின் புதல்வரே,பூமிக்கு மேலும், கீழும் உள்ள கிரகங்கள் எப்படி அமைந்துள்ளன என்பதையும், அவற்றின் அளவையும், மற்றும் மண்ணுலகங்களின் அளவையும் கூட அன்புடன் விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 3.7.27
திர்யங்-மானுஷ-தேவானாம் ஸரீஸ்ருப-பதத்ரிணாம்
வத ந: ஸர்க-ஸம்வ்யூஹம் கார்ப-ஸ்வேத-த்விஜோத்பிதாம்

திர்யங்-கீழ்ப்பட்ட மனித இனம்; மானுஷ-மனிதர்கள்; தேவானாம் -தேவர்களின்; ஸரீஸ்ருப-ஊர்வன; பதத்ரிணாம்—பறவைகளின்; வத—தயவு செய்து விளக்குங்கள்; ந:-எனக்கு; ஸர்க-உற்பத்தி: ஸம்வ்யூஹம் – குறிப்பிட்ட பிரிவுகள்; கார்ப-கர்பத்தில் பிறப்பவை; ஸ்வேத-வியர்வை; த்விஜ-இருமுறை பிறப்பவை; உத்பிதாம்—கிரகங்கள் முதலியவைகளின்.

மேலும், கீழ்ப்பட்ட மனித இனம், மனிதர்கள், கருவிலிருந்து பிறப்பவை, வியர்வையிலிருந்து பிறப்பவை, இருமுறை பிறப்பவை (பறவைகள்) மற்றும் தாவரங்கள் மற்றும் காய்கறிகள் என வெவ்வேறு பிரிவுகளிலுள்ள ஜீவராசிகளைப் பற்றியும், அவற்றின் உற்பத்திகளையும், உபபிரிவுகளையும் கூட அன்புடன் விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 3.7.28
குணாவதாரைர் விஸ்வஸ்ய ஸ்ர்க-ஸ்திதி-அப்யயாஸ்ரயம்
ஸ்ருஜத:ஸ்ரீனிவாஸஸ்ய வ்யாசக்ஷ்வோதார-விக்ரமம்

குண-ஜட இயற்கைக் குணங்கள்; அவராரை: -அவதாரங்களின்; விஸ்வஸ்ய-பிரபஞ்சத்தின்: ஸர்க-படைத்தல்; ஸ்திதி-காத்தல்; அப்யய -அழித்தல்: ஆஸ்ரயம்–முடிவான ஓய்வு: ஸ்ருஜத;- படைப்பவரின்: ஸ்ரீனிவாஸஸ்ய-பரமபுருஷரின்: வ்யாசக்ஷ்வ – தயவு செய்து விவரியுங்கள்; உதார-பெருந்தன்மையான;விக்ரமம் – குறிப்பிட்ட செயல்கள்.

ஜட இயற்கைக் குணங்களின் அவதாரங்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் ஆகியோரைப் பற்றியும், பரமபுருஷரின் அவதாரங்களைப் பற்றியும் அவரது பெருந்தன்மையான செயல்களைப் பற்றியும் கூட தயவு செய்து விளக்கியருளுங்கள்.

பதம் 3.7.29
வர்ணாஸ்ரம-விபாகாம்ஸ் ச ரூப-சீல-ஸ்வபாவத:
ருஷீணாம் ஜன்ம-கர்மாணி வேதஸ்ய ச விகர்ஷணம்

வர்ண—ஆஸ்ரம–நான்கு சமூகப் பிரிவுகளும், நான்கு ஆன்மீகப் பிரிவுகளும்;விபாகான் -முறைப்படியான பிரிவுகள்; ச-கூட; ரூப -சுயஅம்சங்கள்; சீல-ஸ்வபாவத-சொந்த சுபாவம்; ருஷீணாம் – முனிவர்களின்; ஜன்ம-பிறப்பு: கர்மாணி-செயல்கள்: வேதஸ்ய – வேதங்களின்; ச-மற்றும்; விகர்ஷணம்—திட்டமானவகுப்பு.

மாமுனிவரே, மனித சமூகத்தின் சமூக மற்றும் ஆன்மீகப் பிரிவுகளை, அவற்றின் அறிகுறிகள் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றிற் கேற்பவும், சமமான மனநிலை மற்றும் புலனடக்கம் ஆகியவற்றின் தனிப்பட்ட குணங்களுக்கேற்பவும் விவரிக்க வேண்டுகிறேன். மேலும் சிறந்த முனிவர்களின் பிறப்புகளையும், வேதங்களின் பிரிவுகளையும் கூட தயவுகூர்ந்து விளக்கியருளுங்கள்.

பதம் 3.7.30
யக்ஞஸ்ய ச விதானானி யோகஸ்ய ச பத: ப்ரபோ
நைஷ்கர்ம்யஸ்ய ச ஸாங்க்யஸ்ய தந்த்ரம் வா பகவத்-ஸ்ம்ருதம்

யக்ஞஸ்ய-யாகங்களின்;ச-கூட; விதானானி -விரிவுகள்; யோகஸ்ய—யோக சக்திகளின்; ச -மேலும்; பத: -வழிகள்; ப்ரபோ-பிரபுவே; நைஷ்கர்ம்யஸ்ய-அறிவின்; ச -மற்றும்; ஸாங்க்யஸ்ய–ஆராய்ச்சிக் கல்விகளின்; தந்திரம்-பக்தி மார்க்கம்; வா-அத்துடன்; பகவத் -பரமபுருஷருடனான தொடர்பில்; ஸ்மிருதம்:-கட்டுப்பாட்டு விதிகள்.

வெவ்வேறு யாகங்கள், யோக மார்க்கங்கள், பகுத்தறிவுக் கல்வி மற்றும் பக்தித் தொண்டு ஆகியவற்றின் விரிவுகளையும் கூட, அவற்றின் கட்டுப்பாட்டு விதிகளுடன் விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 3.7.31
பாஷண்ட-பத-வைஷம்யம் ப்ரதிலோம-நிவேசனம்
ஜீவஸ்ய கதயோ யாஸ் ச யாவதீர் குண-கர்மஜா:

பாஷண்ட-பத-நாஸ்திகர்களின் மார்க்கம்; வைஷம்யம்-குறைகள் மற்றும் முரண்பாடுகள்; ப்ரதிலோம-இனக்கலப்பு: நிவேசனம்– நிலை;ஜீவஸ்ய-ஜீவராசிகளின்; கதய:-அசைவுகள்; யா:-உள்ளபடி: ச -கூட; யாவதீ:-பற்பல; குண—ஜட இயற்கைக்குணங்கள்; கர்ம–ஜா:-வெவ்வேறு செயலால் உண்டாக்கப்படும்.

நாஸ்திகர்களின் குறைகள் மற்றும் முரண்பாடுகள், இனக்கலப்பின் நிலை, மேலும் பல்வேறு உயிரினங்களிலுள்ள ஜீவராசிகளின் குறிப்பிட்ட இயற்கைக் குணங்கள் மற்றும் செயல் ஆகியவற்றிற்கேற்ப உள்ள அவற்றின் அசைவுகள் ஆகியவற்றையும் கூட தயவு செய்து விளக்கியருளுங்கள்.

பதம் 3.7.32
தர்மார்த-காம-மோக்ஷாணாம் நிமித்தானி அவிரோதத:
வார்தாயா தண்ட-நீதேஸ் ச ஸ்ருதஸ்ய ச விதிம் ப்ருதக்

தர்ம-மத அனுஷ்டானம்; அர்த- பொருளாதார முன்னேற்றம்: காம-புலன் நுகர்வு: மோக்ஷாணாம் – மோட்சம்: நிமித்தானி – காரணங்கள்; அவிரோதத – முரண்பாடில்லாமல்; வார்தாயா: – ஜீவனோபாயக் கொள்கைகளின் மீது; தண்ட-நீதே:-நீதி, நெறிகளின்; ச–கூட;ஸ்ருதஸ்ய:–சாஸ்திர விதிகளின்; ச-மேலும்; விதிம்- விதிகள்;ப்ருதக்- வெவ்வேறு.

மத அனுஷ்டானம், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு மற்றும் மோட்சம் ஆகியவற்றைப் பற்றியும், வெவ்வேறு ஜீவனோபாய மார்க்கங்களையும், மற்றும் வெவ்வேறு நீதி, நெறிகளையும் கூட வேத நூல்களில் கூறப்பட்டுள்ள தற்கேற்ப விவரிக்க வேண்டும்.

பதம் 3.7.33
ஸ்ராத்தஸ்ய ச விதிம் ப்ரஹ்மன் பித்ரூணாம் ஸர்கம் ஏவ ச
க்ரஹ-நக்ஷத்ர-தாராணாம் காலாவயவ-ஸம்ஸ்திதிம்

ஸ்ராத்தஸ்ய-குறிப்பிட்ட காலங்களில் அளிக்கப்படும் மரியாதைகளின் ;ச-கூட; விதிம்-விதிமுறைகள்; ப்ரஹ்மன்- பிராமணரே: பித்ரூணாம் – முன்னோர்களின்; ஸர்கம்-படைப்பு : ஏவ-போன்று; ச -கூட; கிரஹ- க்ரஹ:–அமைப்பு: நக்ஷத்ர-நட்சத்திரங்கள்; தாராணாம்—ஒளிரும் பொருட்கள்; கால – காலம்;அவயவ-ஆயுள்; ஸம்ஸ்திதிம் – நிலைகள்.

முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்குரிய விதி முறைகளையும், பித்ருலோக சிருஷ்டியையும், கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் ஒளிரும் பொருட்களிலுள்ள கால அட்டவணையையும், அவற்றின் சூழ்நிலைகளைப் பற்றியும் கூட தயவு செய்து விளக்கியருளுங்கள்.

பதம் 3.7.34
தானஸ்ய தபஸோ வாபி யச் சேஷ்டா-பூர்தயோ: ஃபலம்
ப்ரவாஸ-ஸ்தஸ்ய யோ தர்மோ யஸ் ச பும்ஸ் உதாபதி

தானஸ்ய-தானத்தின்; தபஸ:-தவத்தின்; வாபி -ஏரி: யத்—அது; ச-மற்றும்; இஷ்டா -முயற்சி; பூர்தயோ:-நீர்த் தேக்கங்களின்; ஃபலம்-பலன்; ப்ரவாஸ-ஸ்தஸ்ய -வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ள ஒருவர்; ய:-அது; தர்ம:-கடமை; ய: ச-மற்றும் எது; பும்ஸ:- மனிதனின்; உத:–விளக்கிக் கூறுங்கள்; ஆபதி—ஆபத்தில்.

தானம், தவம் மற்றும் நீர்த்தேக்கங்கள் தோண்டுதல் ஆகியவற்றின் பலன்களையும் விளக்குங்கள். மேலும் வீட்டை விட்டுப் பிரிந்து சென்றவர்களின் நிலையையும், ஆபத்தான நிலையிலுள்ள ஒரு மனிதனின் கடமையையும் கூட தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.

பதம் 3.7.35
யேன வா பகவாம்ஸ் துஷ்யேத் தர்ம-யோனிர் ஜனார்தன:
ஸம்ப்ரஸீததி வா யேஷாம் ஏதத் ஆக்யாஹி மே ‘நக

யேன-எதனால்; வா-அல்லது: பகவான்-பரமபுருஷர்; துஷ்யேத்-திருப்தியடைகிறார்; தர்ம-யோனி:-எல்லா மதங்களுக்கும் தந்தை; ஜனார்தன:-எல்லா ஜீவராசிகளையும் ஆள்பவர்: ஸம்ப்ரஸீததி – முற்றிலும் திருப்தியடைவார்; வா:-அல்லது: யேஷாம்—அவர்களின்; ஏதத் – இவற்றையெல்லாம்: ஆக்யாஹி-தயவு செய்து விளக்குங்கள்; மே – எனக்கு; அநக-பாவமற்றவரே.

பாவமற்றவரே, அனைத்து ஜீவராசிகளையும் ஆள்பவரான பரம புருஷர், எல்லா மதங்களுக்கும், மதக் கடமைகளில் ஈடுபடும் எல்லா மாணவர்களுக்கும் தந்தையென்பதால், அவரை முழுமையாக திருப்திப்படுத்தும் வழியை தயவு செய்து விளக்க வேண்டும்.

பதம் 3.7.36
அனுவ்ரதானாம் சிஷ்யாணாம் புத்ராணாம் ச த்விஜோத்தம
அனாப்ருஷ்டம் அபி ப்ரூயுர் குரவோ தீன- வத்ஸலா:

அனுவ்ரதானாம்-பின்பற்றுபவர்கள்: சிஷ்யாணாம்-சீடர்களின்: புத்ராணாம்- மகன்களின்; ச- கூட; த்விஜ: -உத்தம-பிராமண சிரேஷ்டரே ;அனாப்ருஷ்டம்: – கேட்கப்படாதது; அபி:—என்ற போதிலும்; ப்ரூயு:-தயவு செய்து விளக்குங்கள்; குரவ:-ஆன்மீக குருமார்கள்; தீன – வத்ஸலா:-வறியவர்களிடம் மிகவும் அன்புடையவர்கள்.

பிராமண சிரேஷ்டரே, ஆன்மீக குருமார்களாக இருப்பவர்கள் வறியவர்களிடம் மிகவும் அன்புடையவர்களாக உள்ளனர். அவர்கள் தங்களுடைய ஆதரவாளர்களாலும், சீடர்களாலும் மற்றும் மகன்களாலும் கேட்கப்படாமலேயே அவர்களிடம் எப்பொழுதும் அன்பு கொண்டுள்ளனர். மேலும் அறிவு எனப்படும் அனைத்தையும் அவர்கள் விவரிக்கின்றனர்.

பதம் 3.7.37
தத்வானாம் பகவம்ஸ் தேஷாம் கதிதா ப்ரதிஸங்க்ரம:
தத்ரேமம் க உபாஸுரன் க உ ஸ்வித் அனுசேரதே

தத்வானாம் இயற்கையின் மூலப் பொருட்களில்; பகவன் – மாமுனிவரே: தேஷாம்—அவர்களின்; கதிதா -எத்தனை; ப்ரதிஸங்க்ரம:–அழிவுகள்; தத்ர-அதன் பிறகு: இமம்-பரம புருஷருக்கு; கே -அவர்கள் யார்; உபாஸீரன்-காப்பாற்றப்பட்டு; கே-அவர்கள் யார்; உ-யார்; ஸ்வித்-கூடும் ;அனுசேரதே-பசுவான் உறங்கும் பொழுது அவருக்குச் சேவை செய்பவர்கள்.

ஜட இயற்கையின் மூலப்பொருட்களுக்கு எத்தனை அழிவுகள் உள்ளன என்பதையும், அழிவுக்குப் பிறகு, உறங்கும் பகவானுக்குத் தொண்டு செய்ய பிழைத்திருப்பவர் யார் என்பதையும் தயவு கூர்ந்து விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 3.7.38
புருஷஸ்ய ச ஸம்ஸ்தானம் ஸ்வரூபம் வா பரஸ்ய ச
ஞானம் ச நைகமம் யத் தத் குரு-சிஷ்ய-ப்ரயோஜனம்

புருஷஸ்ய-ஜீவராசிகளின்: ச – கூட; ஸ்ம்ஸ்தானம்-இருப்பு: ஸ்வரூபம் -சொரூபம்; வா-அல்லது; பரஸ்ய-பரம புருஷரின்; ச -மேலும்; ஞானம் – அறிவு; ச – கூட; நைகமம்- உபதிஷதங்களின் விஷயத்தில்: யத்-அந்த ; தத் – அதே; குரு-ஆன்மீக குரு; சிஷ்ய – சீடன்; ப்ரயோஜனம்-அவசியம்.

ஜீவராசிகளையும், பரம புருஷரையும் பற்றிய உண்மைகள் என்னென்ன? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்னென்ன? வேத ஞானத்தின் விசேஷ மதிப்பென்ன? மேலும் ஆன்மீக குருவிற்கும், அவரது சீடர்களுக்கும் என்ன அவசியம் உள்ளது.

பதம் 3.7.39
நிமித்தானி ச தஸ்யேஹ ப்ரோக்தானி அனக- ஸூரிபி:
ஸ்வதோ ஞானம் குத:பும்ஸாம் பக்திர் வைராக்யம் ஏவ வா

நிமித்தானி – அறிவின் மூலம்; ச- மற்றும்; தஸ்ய – இத்தகைய அறிவின்; இஹ – இவ்வுலகில்: ப்ரோக்தானி –குறிப்பிட்டுள்ளனர்; அனக—களங்கமற்ற; ஸூரிபி- பக்தர்களால்; ஸ்வத – புறத்தேவையற்ற; ஞானம்—அறிவு : குத- எப்படி;பும்ஸாம் -ஜீவராசியின், பக்தி:–பக்தித் தொண்டு; வைராக்யம்- துறவு; ஏவ – நிச்சயமாக; வா-கூட.

இத்தகைய அறிவின் மூலத்தை களங்கமற்ற பகவத் பக்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய பக்தர்களின் உதவியின்றி, பக்தித் தொண்டு மற்றும் துறவு ஆகியவற்றின் அறிவை ஒருவரால் எப்படிப் பெற இயலும்?

பதம் 3.7.40
ஏதான் மே ப்ருச்சத: ப்ரஸ்னான் ஹரே: கர்ம-விவித்ஸயா
ப்ரூஹி மே ‘க்ஞஸ்ய மித்ரத்வாத் அஜயா நஷ்ட-சஷுஷ:

ஏதான்—இவ்வெல்லா; மே-எனது; ப்ருச்சத: கேள்வி கேட்பவரின்; ப்ரஸ்னான்—கேள்விகளையும்; ஹரே:-பரம புருஷரின்; கர்ம -லீலைகளை; விவித்ஸயா- அறியும் விருப்பத்துடன்; ப்ரூஹி- தயவு செய்து விளக்குங்கள்; மே-எனக்கு; அக்ஞஸ்ய-அறியாமையில் உள்ளவரின்; மித்ரத்வாத்-நட்பின் காரணத்தால்; அஜயா-புறச்சக்தியால்; நஷ்ட-சஷுஷ::–தங்களது பார்வையை இழந்தவர்கள்.

அன்பிற்குரிய முனிவரே, பரம புருஷரான ஹரியின் லீலைகளை அறியும் நோக்கத்துடன் தான் இக்கேள்விகளை எல்லாம் தங்களிடம் நான் கேட்டேன். நீங்கள் அனைவருக்கும் நண்பரென்பதால், தங்களுடைய பார்வையை இழத்தவர்களுக்காக அவற்றை அன்புடன் விளக்கியருள வேண்டுகிறேன்.

பதம் 3.7.41
ஸர்வே வேதாஸ் ச யக்ஞாஸ் த தபோ தானானி சானக
ஜீவாபய-ப்ரதானஸ்ய ந குர்வீரன் கலாம் அபி

ஸர்வே-எல்லா வகையான; வேதா:-வேதங்களின் பிரிவுகள்; ச-மேலும்; யக்ஞா:-யாகங்கள்: ச-மேலும்; தப: தவங்கள்: தானானி -தானங்கள்: ச -மேலும்; ஆனக – களங்கமற்றவரே; ஜீவ – ஜீவராசி;அபய-பௌதிக துன்பங்களிலிருந்து பாதுகாப்பு: ப்ரதானஸ்ய-இத்தகைய உறுதியை அளிப்பவரின்; ந-இல்லை; குர்வீரன்-சமமாக்கி விட முடியும்; கலாம்- ஒரு பகுதியையாவது; அபி – நிச்சயமாக.

களங்கமற்றவரே, இக்கேள்விகளுக்குத் தாங்கள் அளித்த பதில்கள் எல்லா பௌதிகத் துன்பங்களையும் தடுத்து விடும். இத்தகைய அறிவு தானமானது, வேத தானங்கள், யாகங்கள், தவங்கள் முதலான அனைத்தையும் விட உயர்ந்ததாகும்.

பதம் 3.7.42
ஸ்ரீ-சுகஉவாச
ஸ இத்தம் ஆப்ருஷ்ட-புராண-கல்ப:
குரு-ப்ரதானேன முனி-ப்ரதான:
ப்ரவ்ருத்த-ஹர்ஷோ பகவத்-கதாயாம்
ஸஞ்சோதிதஸ் தம் ப்ரஹஸன் இவாஹ

ஶ்ரீ – சுக உவாச- ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்;ஸ:-அவர்; இத்தம் – இவ்வாறாக; ஆப்ருஷ்ட-கேள்வி கேட்கப் பட்டு; புராண—கல்ப:-புராணங்களை விவரிக்கத் தெரிந்தவர்; குரு -ப்ரதானேன-குருக்களில் தலைமையானவரால்; முனி- ப்ரதான: -முனிவர்களுள் முக்கியமானவர்; ப்ரவ்ருத்த-போதுமான அளவிற்கு வளப்படுத்தப்பட்டு; ஹர்ஷ: -திருப்தி; பகவத்-பரம புருஷர்; கதாயாம்-என்ற விஷயங்களில்; ஸஞ்சோதித- இவ்வாறு ஊக்கமளிக்கப் பட்டு; தம்-விதுரரிடம்; ப்ரஹஸன்—புன்னகையுடன்; இவ—அது போல்; ஆஹ-பதிலளித்தார்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறக பரம புருஷரைப் பற்றிய விஷயங்களை விவரிப்பதில் எப்பொழுதும் உற்சாகம் கொள்பவரான முனி கிரேஷ்டர்,விதுரரால் ஊக்கமளிக்கப்பட்டு, புராணங்களிலுள்ள விவரமான வர்ணணைகளை கூறத் துவங்கினார். பகவானின் உன்னத செயல்களைப் பற்றி பேசியதால் அவர் மிகவும் உற்சாகமடைந்தார்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “விதுரரின் தொடர்ந்த விசாரணைகள்” எனும் தலைப்பைக் கொண்ட ஏழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare