I. ஜகந்நாத புரி திருக்கோயில்
ஜகந்நாதர் கோவில் (ஸ்ரீ மந்திர்) மற்றும்
ரத யாத்திரை புரி (ஸ்ரீ க்ஷேத்திரம்)

ஸ்ரீ க்ஷேத்திரத்தில் (புரி) உள்ள ஸ்ரீ மந்திர்
நோக்கங்கள்
தாமம் (ஸ்ரீ க்ஷேத்திரம்)
நோக்கம் 1: தாமம் என்றால் என்ன, அது ஏன் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் பகவானின் புனித தாமங்களில் ஸ்ரீ ஜகந்நாத புரி ஏன் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்பதைப் புரிந்துகொள்வது.
நோக்கம் 2: புரி தாமத்தின் பல்வேறு புனிதப் பெயர்களை அறிந்துகொள்வது.
நோக்கம் 3: புரி தாமத்தின் மகிமைகளை அறிந்துகொள்வது.
திவ்ய விக்ரங்கள் மற்றும் திருக்கோவில் (ஸ்ரீ மந்திர்)
நோக்கம் 4: ஸ்ரீ ஜகந்நாதர், பலபத்ரர், சுபத்ரா தேவி மற்றும் சுதர்சனரின் திவ்யத் தோற்றத்தையும், பகவானின் தாரு விக்ரஹத் திருவுருவம் வெளிப்படுவதில் மன்னர் இந்திரத்யும்னரின் நீல மாதவரைத் தேடிய நிகழ்வின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வது.
நோக்கம் 5: ஸ்ரீ ஜகந்நாதரின் தனித்துவமான திருவுருவம் துவாரகையில் மகாபாவத்தின் வெளிப்பாடாக முதன்முதலில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதையும், அதன் ஆன்மிக முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வது.
நோக்கம் 6: ஸ்ரீ ஜகந்நாதர் திருக்கோவிலின் (ஸ்ரீ மந்திர்) வரலாறு, கட்டிடக்கலை, கட்டுமானம் மற்றும் அதன் தனித்துவமான அம்சங்களை விவரிப்பது.
ஸ்ரீ மந்திரில் திவ்ய விக்ரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்
நோக்கம் 7: ஸ்ரீ ஜகந்நாதர், தனித்துவமான மர விக்ரங்கள் (தாரு விக்ரங்கள்) மற்றும் ஸ்ரீ மந்திரில் (புரி ஸ்ரீ ஜகந்நாதர் திருக்கோவில்) நடைபெறும் புனித நவகலேவர விழாவின் ஆன்மிக முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.
நோக்கம் 8: பகவானுக்குச் செய்யப்படும் தினசரி வழிபாட்டு முறைகள் (நீதிகள்) பற்றிய விரிவான புரிதலைப் பெற்று, அவற்றில் வெளிப்படும் ஒழுக்கம், பாரம்பரியம் மற்றும் பக்திமயமான சேவையை அறிந்துகொள்வது.
நோக்கம் 9: ஸ்ரீ ஜகந்நாதர் சேவகர்களின் பாரம்பரிய அமைப்பையும், ஸ்ரீ ஜகந்நாதரின் வழிபாட்டில் அவர்களின் இன்றியமையாத பங்கையும் புரிந்துகொள்வது.
நோக்கம் 10: ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரின் விக்ரக்ங்களுக்கு செய்யப்படும் தினசரி மற்றும் சிறப்பு அலங்காரங்களை (வேஷங்கள்) அறிந்து, அவற்றின் ஆன்மிக முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.
நோக்கம் 11: திருவிழாக்களை முன்னிட்டு விக்ரங்களுக்கு அணிவிக்கப்படும் சிறப்பு வேஷங்களின் (அலங்காரங்களின்) முக்கியத்துவத்தையும், அவை ஸ்ரீ கிருஷ்ணர்/ஜகந்நாதரின் பல்வேறு திவ்ய லீலைகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதையும் எடுத்துரைப்பது.
ரத யாத்திரை (தேர் திருவிழா)
நோக்கம் 12: ஸ்ரீ க்ஷேத்திரமான பூரியில் நடைபெறும் ஸ்ரீ ஜகந்நாதரின் ரதயாத்திரையின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் ஆன்மிக அர்த்தத்தை அறிந்துகொள்வது.
நோக்கம் 13: பத்ம புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் பிற வேத சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ரத யாத்திரையின் தோற்றம் மற்றும் சாஸ்திர ஆதாரங்களை ஆராய்வது.
நோக்கம் 14: ரத யாத்திரை திருவிழாவின் போது ஸ்ரீ ஜகந்நாதர் ஏன் குண்டிச்சா கோவிலில் ஏழு நாட்கள் தங்கியருள்கிறார் என்பதை விளக்குவது.
நோக்கம் 15: மூன்று தேர்களின் பாரம்பரிய கட்டுமான முறையையும், இந்தப் புனித மரபைப் பாதுகாத்து வரும் பரம்பரை கைவினைக் கலைஞர்களின் சேவையையும் பாராட்டிப் புரிந்துகொள்வது.
நோக்கம் 16: ‘பஹாண்டி விஜயா’ என்ற பெயரின் வரலாற்றுத் தோற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரியக் குறிப்புகளை விளக்குவது.
நோக்கம் 17: ரத யாத்திரை ஊர்வலம் தொடங்குவதற்கு முன் நடைபெறும் சடங்குகளை அறிந்துகொள்வது.
நோக்கம் 18: ஸ்ரீ மகாலட்சுமி தேவி ஏன் குண்டிச்சா கோவிலுக்குச் செல்கிறார் என்பதையும், அவருடைய கோபம் மற்றும் மீண்டும் ஸ்ரீ மந்திருக்கு திரும்புதல் ஆகியவற்றின் குறியீட்டு ஆன்மிக அர்த்தத்தை அறிந்துகொள்வது.
நோக்கம் 19: ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி ஸ்ரீ மந்திருக்கு திரும்பி வருவதைக் குறிக்கும் பாஹுடா ரத யாத்திரையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.
நோக்கம் 20: கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் பார்வையில், ரத யாத்திரை என்பது ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலிருந்து விருந்தாவனத்திற்குத் திரும்புவதைக் குறிக்கும் திவ்ய நிகழ்வாகவும், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் உள்மனப் பாவத்தையும், ஸ்ரீல பிரபுபாதரின் விளக்கத்தையும் புரிந்துகொள்வது.
நோக்கம் 21: ஜகந்நாத புரியின் இருப்பிடத்தை அறிந்து, உலகின் மிகப் புனிதமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாக அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.

தாமம் (ஸ்ரீ க்ஷேத்திரம்) – ஸ்ரீ ஜகந்நாதர் திருக்கோவில், புரி
நோக்கம் 1: தாமம் என்றால் என்ன, அது ஏன் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் பகவானின் புனித தாமங்களில் ஸ்ரீ ஜகந்நாத புரி ஏன் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்பதைப் புரிந்துகொள்வது.
1. தாமம் (ஸ்ரீ க்ஷேத்திரம்)
தாமம் – அறிமுகம்
தாமம் என்பது பரமபுருஷரான பகவானின் நித்திய இருப்பிடமாகும். ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீமத் பாகவதம் 4.8.42-இன் உரையில் இவ்வாறு விளக்குகிறார்:
“தாமம் என்பது, ஒருவர் உடனடியாக பரமபுருஷருடன் தொடர்பு கொள்ளக்கூடிய இடமாகும்.”
தாமம் என்பது பகவானின் புனித நாமம், திருவுருவம், திவ்ய குணங்கள் மற்றும் திவ்ய லீலைகள் எப்போதும் கேட்கப்பட்டு, போற்றப்பட்டு, மகிமைப்படுத்தப்படும் புனித இடமாகும். வைஷ்ணவ ஆச்சார்யர்களும், தூய பக்தரின் இதயமே ஒரு தாமம் என்று விளக்குகின்றனர். ஏனெனில், அங்கே ஸ்ரீ கோவிந்தர் நித்தியமாக வாசம் செய்கிறார்.
தோமார ஹ்ருதயே ஸதா கோவிந்த விஸ்ராம
பொருள்
“கோவிந்தர் ஆனந்தமாகவும் அமைதியாகவும் உங்கள் இதயத்தில் நித்தியமாக வாசம் செய்கிறார்.”
பகவானை அவருடைய புனித நாமம், திருவுருவம், திவ்ய குணங்கள், திவ்ய லீலைகள் மற்றும் தாமம் ஆகியவற்றின் மூலம் அறிய முடியும். எனவே, பத்ம புராணத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாரதரிடம் இவ்வாறு கூறுகிறார்:
நாஹம் திஷ்டாமி வைகுண்டே
யோகிநாம் ஹ்ருதயேஷு வா
யத்ர காயந்தி மத்-பக்தாஃ
தத்ர திஷ்டாமி நாரத
பொருள்
“நாரதா! நான் வைகுண்டத்தில் மட்டும் வசிப்பதில்லை; யோகிகளின் இதயங்களிலும் மட்டும் இருப்பதில்லை. என் பக்தர்கள் என் மகிமைகளைப் பாடி என்னைப் போற்றும் இடமெல்லாம் நான் அங்கேயே வாசம் செய்கிறேன்.” எனவே, பகவானின் பக்தர்கள் எங்கு மனப்பூர்வமாக அவரை மகிமைப்படுத்துகிறார்களோ, அங்கே பகவான் தாமே நேரில் எழுந்தருளுகிறார்.
ஜகந்நாத புரி – பரம தாமம்
அனைத்து புனித தாமங்களிலும் ஜகந்நாத புரி, ஸ்ரீ புருஷோத்தம க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படும் இத்தலம், தனித்துவமான உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இது பரமபுருஷருடன் நித்தியமாக ஒன்றுபட்ட புனித தாமமாகும்.
இந்தத் தலத்தின் மிக உயர்ந்த மகிமை என்னவென்றால், பரமபுருஷரான பகவான் தாரு பிரம்மன் (மர விக்ரஹம்) என்ற திவ்ய வடிவில் ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர், சுபத்ரா தேவி மற்றும் ஸ்ரீ சுதர்சனர் ஆகிய திருவுருவங்களில் எழுந்தருளி, தெய்வீக அன்பின் உச்ச பரவசத்தையும், பிரிவின் பரம ஆனந்த பாவத்தையும் உலகிற்கு வெளிப்படுத்துகிறார். ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:
தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம்
பொருள்
“தர்மம் என்பது பகவானால் நேரடியாக நிறுவப்பட்டதாகும்.”
ஸ்ரீ ஜகந்நாதர் சனாதன தர்மத்தின் ஆதி நிறுவனர் ஆவார். தமது பக்தர்களுக்கு பேரானந்தம் அளிப்பதற்காக அவர் இவ்வுலகில் அவதரித்து, எண்ணற்ற அதிசயமான மற்றும் தெய்வீகமான லீலைகளை நிகழ்த்தினார்.
நோக்கம் 2: புரி தாமத்தின் பல்வேறு புனிதப் பெயர்களை அறிந்துகொள்வது.
2. புரி தாமத்தின் புனிதப் பெயர்கள்
ஸ்ரீ ஜகந்நாத புரி பல்வேறு புனிதப் பெயர்களால் போற்றப்படுகிறது. அவற்றில் சில:
- ஸ்ரீ க்ஷேத்திரம்
- புருஷோத்தம க்ஷேத்திரம்
- நீலாசல தாமம்
- ஜகந்நாத தாமம்
- சமனிக் தீர்த்தம்
- உட்டியான பீடம்
- மர்த்திய வைகுண்டம்
- நீலகிரி
- நீலாத்ரி
- சங்க க்ஷேத்திரம்
- பூஸ்வர்க்கம்
- நரசிம்ஹ க்ஷேத்திரம்
ஸ்ரீ (மகாலட்சுமி தேவி) பகவானின் ஸ்வரூப சக்தி என்பதால், அவருடைய திவ்ய சக்தியால் புனிதமடைந்த இந்த நிலம் ஸ்ரீ க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ க்ஷேத்திரம், பூமியிலேயே வெளிப்பட்ட ஆன்மிக உலகமான மர்த்திய வைகுண்டம் என்று போற்றப்படுகிறது.

புனித சங்கு வடிவப் பகுதி
சங்க க்ஷேத்திரம் – புனித சங்கு வடிவத் தலம்
ஜகந்நாத புரி சங்க க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், முழு தாமமும் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் நித்திய சின்னங்களில் ஒன்றான சங்கு வடிவில் அமைந்துள்ளது.
இந்தப் புனித சங்கு வடிவத் தலத்தின் மையப்பகுதியில் நீலகிரி (நீல மலை) எனப்படும் உயர்ந்த பகுதி அமைந்துள்ளது. அதன் உச்சியில் ஸ்ரீ ஜகந்நாதரின் மாட்சிமைமிக்க திருக்கோவில் விளங்குகிறது.
நோக்கம் 3: புரி தாமத்தின் மகிமைகளை அறிந்துகொள்வது.
3. ஸ்ரீ ஜகந்நாத புரி தாமத்தின் மகிமைகள்
அளவற்ற கருணை
புரியில் ஸ்ரீ ஜகந்நாதரை தரிசிக்கும் எவரும், அவர்களின் பிறப்பு, பின்னணி அல்லது தகுதி எதுவாக இருந்தாலும், பகவானின் எல்லையற்ற கருணையையும் உயர்ந்த முக்தியையும் பெறுகின்றனர்.
மகாபிரசாதம்
ஸ்ரீ மகாலட்சுமி தேவி தாமே ஸ்ரீ ஜகந்நாதருக்காக சமையல் செய்கிறார். அவருக்கு நிவேதனம் செய்யப்பட்ட மகாபிரசாதம், தேவர்களாலும் விரும்பப்படும் புனித பிரசாதமாகும். அதை பக்தியுடன் ஏற்றுக்கொள்வதால் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
ரத யாத்திரை
ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை, விருந்தாவன வாசிகள் ஸ்ரீ கிருஷ்ணரையும் ஸ்ரீ பலராமரையும் துவாரகையிலிருந்து மீண்டும் விருந்தாவனத்திற்குக் கொண்டு வர விரும்பிய பரம அன்பை வெளிப்படுத்துகிறது.
புரி தாமத்தின் திவ்ய மகிமை
பிரம்மதேவர், புரி (ஸ்ரீ க்ஷேத்திரம்) சாதாரண இடமல்ல; அது பகவானின் உள்ஆன்மிக சக்தியால் வெளிப்பட்ட திவ்ய தாமம் என்று விளக்குகிறார். மேலும், ஸ்ரீ ஜகந்நாதர் திருக்கோவிலின் கொடியை தரிசித்து வணங்குவதாலேயே முக்தி கிடைக்கும் என்றும் அவர் அறிவிக்கிறார்.
புனித கடல்
இந்தப் புனித தாமத்துடன் தொடர்புடையதால், ஜகந்நாத புரியின் கடல் தீர்த்தராஜா — அனைத்து புனித தீர்த்தங்களுக்கும் அரசன் — என்று போற்றப்படுகிறது. இந்தப் புனிதக் கடலில் நீராடுபவர்கள் தங்களுடைய முந்தைய பாவங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீ மந்திர் – திவ்ய விக்ரங்கள் மற்றும் திருக்கோவில்

நோக்கம் 4: ஸ்ரீ ஜகந்நாதர், பலபத்ரர், சுபத்ரா தேவி மற்றும் சுதர்சனரின் திவ்யத் தோற்றத்தையும், மன்னர் இந்திரத்யும்னர் நீல மாதவரைத் தேடிய நிகழ்வு எவ்வாறு பகவானின் தாரு விக்ரஹத் திருவுருவம் வெளிப்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும் புரிந்துகொள்வது.
4. ஸ்ரீ ஜகந்நாதர் மற்றும் பிற விக்ரங்களின் திவ்யத் தோற்றம்
ஜகந்நாதர் என்ற பெயர் இரண்டு சமஸ்கிருதச் சொற்களால் ஆனது:
- ஜகத் – உலகம்
- நாத – அதிபதி, காப்பவர்
எனவே, ஜகந்நாதர் என்பதற்கு “உலகின் அதிபதி” அல்லது “உலகின் நாயகன்” என்று பொருள்.
சத்ய யுகத்தில், ஆயிரம் அஸ்வமேத யாகங்களை நிறைவு செய்த மகாபக்தரான மன்னர் இந்திரத்யும்னர், புருஷோத்தம க்ஷேத்திரத்திற்கு வருவார் என்று ஸ்ரீ மகாலட்சுமி தேவி முன்னறிவித்தார். அந்த யாகங்கள் நிறைவடைந்த பின், பரமபுருஷரான பகவான், எண்ணற்ற உயிர்களுக்கு அருள் புரிவதற்காக தாரு விக்ரஹம் (மர விக்ரங்கள்) என்ற திவ்ய வடிவில் உலகிற்கு எழுந்தருளுவார் என்றும் அவர் அருளிச்செய்தார்.
பகவானைத் தரிசிக்க மன்னர் இந்திரத்யும்னரின் ஆவல்
மன்னர் இந்திரத்யும்னர், ஸ்ரீ விஷ்ணு பகவானின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். பகவானை நேரில் தரிசிக்க வேண்டும் என்பது அவரது மிகப் பெரிய ஆசையாக இருந்தது.
ஒருநாள், இறைவனின் ஏற்பாட்டின்படி ஒரு பக்தர் மன்னரின் அரண்மனைக்கு வந்தார். அவர், நீல மாதவர் என்ற மறைவான திருவுருவத்தில் பகவான் விஷ்ணு எழுந்தருளியிருப்பதைப் பற்றி கூறினார்.
இதைக் கேட்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, நீல மாதவரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டார். உடனே, பல அறிவு நிறைந்த பிராமணர்களை பல திசைகளுக்கு அனுப்பி, நீல மாதவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார்.
ஆனால், அவர்கள் அனைவரும் தேடி வந்தும் நீல மாதவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வித்யாபதி என்ற ஒரு பிராமணர் மட்டும் தனது தேடலைத் தொடர்ந்து சென்றார். அவரது பயணமே, உலகிற்கு நீல மாதவரின் மறைந்திருந்த திருவுருவம் வெளிப்படுவதற்கான முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
நீல மாதவரைக் கண்டறிதல்
பல இடங்களில் தேடிய பிறகு, வித்யாபதி சபரர் இன மக்கள் வாழ்ந்த பகுதிக்கு வந்தார். அங்கு அவர்களது தலைவரான விஸ்வாவசு அவரை அன்புடன் வரவேற்றார். பின்னர், வித்யாபதி விஸ்வாவசுவின் மகள் லலிதாவை திருமணம் செய்து கொண்டார்.
வித்யாபதி, விஸ்வாவசு தினமும் எங்கோ சென்று திரும்பும்போது அவரது உடலில் இருந்து இனிய தெய்வீக நறுமணம் வீசுவதை கவனித்தார். அதற்கான காரணத்தை லலிதாவிடம் கேட்டபோது, தனது தந்தை ரகசியமாக ஸ்ரீ நீல மாதவரை வழிபட்டு வருவதாக அவர் கூறினார்.
வித்யாபதி நீல மாதவரை தரிசிக்க விரும்பியபோது, விஸ்வாவசு அதற்கு சம்மதித்தார். ஆனால், திருத்தலத்தின் இடம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதால், அவரது கண்களைக் கட்டிக்கொண்டு அழைத்துச் சென்றார்.
அப்போது, லலிதா புத்திசாலித்தனமாக வித்யாபதியின் ஆடையில் கடுகு விதைகளை கட்டி வைத்தார். வழியில் அவை விழுந்ததால், அந்தப் பாதையை பின்னர் கண்டறிய முடிந்தது.
நீல மாதவரை தரிசித்த வித்யாபதி பேரானந்தத்தில் மூழ்கினார். பகவான், தமது பக்தர்களின் அன்பான சேவையை ஏற்றுக்கொள்வதற்காக அர்ச்சா விக்ரஹமாக எழுந்தருளுகிறார் என்பதை உணர்ந்து, மனமார்ந்த பிரார்த்தனைகளைச் செய்தார்.
முக்தியை அருளிய அதிசயம்
நீல மாதவரின் அருகிலிருந்த புனிதத் தீர்த்தத்தில் ஒரு காகம் தவறி விழுந்தது. உடனே அது நான்கு கரங்களுடன் தெய்வீக வடிவத்தைப் பெற்று, ஆன்மிக உலகிற்குச் சென்றது.
இதைக் கண்ட வித்யாபதி, தானும் அந்தத் தீர்த்தத்தில் இறங்கி முக்தி பெற விரும்பினார். அப்போது, வானத்திலிருந்து ஒரு தெய்வீக குரல் ஒலித்தது. அது, “மன்னர் இந்திரத்யும்னரிடம் இந்தச் செய்தியைச் சென்று தெரிவி” என்று அவருக்குக் கட்டளையிட்டது.
இந்த அதிசயம், அந்தப் புனிதத் தலத்தின் மகிமையையும், பகவான் தமது பக்தர்களுக்கு முக்தியை அருளும் எல்லையற்ற கருணையையும் வெளிப்படுத்தியது.
அரச வழிபாட்டை ஏற்றுக்கொள்ள பகவானின் விருப்பம்

ஒருநாள், விஸ்வாவசு நீல மாதவரை வழிபட்டுக் கொண்டிருந்தபோது, பகவான் அவரிடம் பேசினார். “காட்டில் எளிமையாக நடைபெறும் இந்த வழிபாட்டை மட்டுமல்ல, மன்னர் இந்திரத்யும்னரின் மூலம் பிரம்மாண்டமான அரச வழிபாட்டையும் நான் ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று அருளினார்.
இதைக் கேட்ட விஸ்வாவசு மிகவும் வருந்தினார். பகவானுக்குச் செய்யும் தனது தனிப்பட்ட சேவை முடிவடையுமோ என்று கவலைப்பட்டார். அதனால், சிறிது காலம் வித்யாபதியை வெளியே செல்ல விடாமல் தடுத்து வைத்தார். பின்னர் மனம் மாறி அவரை விடுவித்தார்.
வித்யாபதி மன்னர் இந்திரத்யும்னரிடம் திரும்பிச் சென்று நடந்த அனைத்தையும் கூறினார். இதைக் கேட்ட மன்னர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, அமைச்சர்கள், படைவீரர்கள் மற்றும் பக்தர்களுடன் நீல மாதவரை தரிசிக்கப் புறப்பட்டார்.
நீல மாதவரின் மறைவும் பகவானின் தெய்வீக ஆணையும்
வித்யாபதி முன்பு போட்டிருந்த கடுகு விதைகளிலிருந்து முளைத்திருந்த செடிகளைப் பின்தொடர்ந்து, மன்னர் நீல மாதவர் இருந்த இடத்தை அடைந்தார்.
ஆனால், அங்கு நீல மாதவரின் விக்ரகம் காணப்படவில்லை. இதனால் மன்னர் மிகவும் வருந்தி, விஸ்வாவசுவைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
அப்போது வானத்திலிருந்து ஒரு தெய்வீக குரல் ஒலித்தது. “விஸ்வாவசுவை விடுதலை செய். அவர் என் உண்மையான பக்தர்” என்று பகவான் கட்டளையிட்டார்.
மேலும், நீலாசல மலையில் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும். அங்கு நான் தாரு பிரம்மன் (மரத்தால் வெளிப்படும் பரம்பொருள்) என்ற திருவுருவத்தில் தோன்றுவேன் என்றும் பகவான் அருளினார்.
இருப்பினும், பகவானை நேரில் தரிசிக்க முடியாததால் மன்னர் மிகவும் மனவேதனை அடைந்தார். இறுதியில், உண்ணாவிரதம் இருந்து உயிரைத் துறக்க முடிவு செய்தார்.
தாரு பிரம்மனின் திருவெளிப்பாடு
அன்று இரவு, மன்னரின் கனவில் பகவான் தோன்றி, “பாங்கிமுகம் என்ற கடற்கரையில் ஒரு புனித மரக்கட்டை கடலில் மிதந்து வரும். அதுவே என் தெய்வீக திருவுருவம்” என்று கூறினார்.
மறுநாள் மன்னர் அங்கு சென்று, சங்கு, சக்கரம் போன்ற தெய்வீக அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருந்த அந்தப் புனித மரக்கட்டையைக் கண்டார்.
அதை நகர்த்த பல வீரர்களும் யானைகளும் முயன்றும், அதை அசைக்க முடியவில்லை.
பின்னர் பகவான் மீண்டும் கனவில் தோன்றி, “விஸ்வாவசுவையும் வித்யாபதியையும் அழைத்து வா. மரக்கட்டையின் முன் ஒரு பொன் தேரை நிறுத்தி, பக்தியுடன் நாமசங்கீர்த்தனம் செய்யுங்கள்” என்று அருளினார்.
அவ்வாறு செய்தவுடன், இதுவரை அசையாத அந்த மரக்கட்டை மிகவும் எளிதாக நகர்ந்தது. இதன் மூலம், பகவானுக்கான சேவை பலத்தால் அல்ல, பக்தியால் நிறைவேறும் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.
விக்ரகங்களின் திருவுருவம்
பல சிறந்த சிற்பிகள் அந்தப் புனித மரத்திலிருந்து விக்ரகங்களைச் செதுக்க முயன்றனர். ஆனால், அவர்களுடைய கருவிகள் அனைத்தும் உடைந்து போயின. யாராலும் அந்த வேலையைச் செய்ய முடியவில்லை.
அப்போது, வயதான ஒரு சிற்பியின் உருவத்தில் பகவான் தாமே வந்து, “21 நாட்கள் யாரும் கதவைத் திறக்காமல் இருந்தால், நான் விக்ரகங்களை உருவாக்குகிறேன்” என்ற நிபந்தனையை வைத்தார்.
மன்னர் அதற்கு சம்மதித்தார்.
ஆனால், 14 நாட்கள் கடந்தும் உள்ளே எந்தச் சத்தமும் கேட்காததால், மன்னர் கவலையடைந்தார். அனைவரின் அறிவுரையையும் மீறி கதவைத் திறந்தார்.
உள்ளே சென்றபோது, அந்த முதிய சிற்பியைக் காணவில்லை. அங்கு ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர், ஸ்ரீ சுபத்ரா தேவி மற்றும் ஸ்ரீ சுதர்சனர் ஆகியோரின் திவ்ய விக்ரகங்கள் தோன்றியிருந்தன. ஆனால், அவர்களின் கைகளும் கால்களும் முழுமையாக உருவாகவில்லை.
அப்போது அமைச்சர், அந்த முதிய சிற்பி வேறு யாருமல்ல, பகவான் தாமே என்று கூறினார். மன்னர் தன் வாக்குறுதியை முழுமையாகக் காப்பாற்றாததால், பகவான் இந்த தனித்துவமான, முழுமையடையாத திருவுருவத்தில் எழுந்தருளினார் என்று விளக்கினார்.
திருவிக்ரகத்தின் ஆன்மிக முக்கியத்துவம்
மன்னர் இந்திரத்யும்னர், திருவிக்ரகங்கள் முழுமையான கைகளும் கால்களும் இல்லாமல் இருப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார். மீண்டும் உண்ணாவிரதம் இருந்து உயிரை விடத் தீர்மானித்தார்.
அப்போது பகவான் அவரது கனவில் தோன்றி, “இந்தத் திருவிக்ரகம் நான் விரும்பியே ஏற்றுக்கொண்ட திவ்ய வடிவம். இது எந்தக் குறையும் அல்ல” என்று அருளினார்.
பகவான் மேலும் கூறினார்:
- எனக்கு முழுமையான கைகளும் கால்களும் இல்லாதது போல் தோன்றினாலும், நான் என் பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்கிறேன்.
- அவர்களின் பிரார்த்தனைகளைக் கேட்கிறேன்.
- அனைவருக்கும் என் அருளை வழங்குகிறேன்.
- நான் பெளதிக வரம்புகளுக்கு அப்பாற்பட்ட பரம்பொருள் என்பதை இந்தத் திருவிக்ரகம் எடுத்துக்காட்டுகிறது.
மேலும், தூய பக்தியுடன் என்னை வழிபடும் பக்தர்கள், என் இயற்கையான அழகிய திவ்ய வடிவத்தையும் உணர முடியும் என்று பகவான் உறுதியளித்தார்.
திருவிக்ரகங்களின் தோற்றம்
பூரி ஸ்ரீ ஜகந்நாதர் திருக்கோவிலின் கருவறையில், நான்கு திவ்ய திருவிக்ரகங்கள் எழுந்தருளியுள்ளன.
ஸ்ரீ ஜகந்நாதர்
- கருநிறத் திருமேனி கொண்டவர்.
- ஸ்ரீ கிருஷ்ணரின் திருவுருவமாக விளங்குகிறார்.
- பெரிய வட்டமான கண்கள், புன்முறுவல் நிறைந்த முகம் மற்றும் தனித்துவமான திருவுருவம் கொண்டவர்.
- சுமார் 6 அடி உயரம் உடையவர்.
ஸ்ரீ பலபத்ரர்
- ஸ்ரீ ஜகந்நாதரின் மூத்த சகோதரர்.
- வெண்மையான திருமேனி கொண்டவர்.
- நீளமான பெரிய கண்களுடன் காட்சியளிக்கிறார்.
- ஜகந்நாதரை விட சற்று குறைந்த உயரம் உடையவர்.
ஸ்ரீ சுபத்ரா தேவி
- ஜகந்நாதருக்கும் பலபத்ரருக்கும் நடுவில் எழுந்தருளியுள்ளார்.
- பொன்னிறத் திருமேனி மற்றும் பெரிய கண்களுடன் காட்சியளிக்கிறார்.
ஸ்ரீ சுதர்சனர்
- ஜகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியுடன் இணைந்து கருவறையில் எழுந்தருளியுள்ளார்.
- பகவானின் திவ்ய சக்கர சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இந்த தனித்துவமான திவ்ய திருவிக்ரகங்கள் உலகம் முழுவதும் பக்தர்களால் அளவற்ற அழகின் வடிவமாகப் போற்றப்படுகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை திருவிழாவில், ஸ்ரீ ஜகந்நாதர், பலபத்ரர், சுபத்ரா தேவி மற்றும் சுதர்சனர் திருக்கோவிலிலிருந்து வெளியே வந்து, பிரம்மாண்டமான தேர்களில் பக்தர்களுக்கு அருள் தரிசனம் அளிக்கின்றனர்.
நோக்கம் 5: ஸ்ரீ ஜகந்நாதரின் தனித்துவமான திருவுருவம் துவாரகையில் மகாபாவத்தின் வெளிப்பாடாக முதன்முதலில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதையும், அதன் ஆன்மிக முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வது.

5. துவாரகையில் பகவான் ஜகந்நாதரின் தனித்துவமான திருவுருவம்
பெரிய, வட்டமான கண்களும், கைகள் மற்றும் கால்கள் சுருங்கியதுபோல் தோன்றும் பகவான் ஜகந்நாதரின் தனித்துவமான திருவுருவம் முதலில் பூரியில் அல்ல, துவாரகையில்தான் வெளிப்பட்டது. இந்தத் திருவுருவம் “மகாபாவ பிரகாஷம்” என்று அழைக்கப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவியின் உச்சமான தெய்வீக பரவசத்தை வெளிப்படுத்துகிறது.
வைஷ்ணவ சாஸ்திரங்களில் கூறப்படும் நிகழ்வு:
- ரோஹிணி தேவியின் கதை: துவாரகையில், ரோஹிணி தேவி பகவான் கிருஷ்ணரின் பிருந்தாவன லீலைகளை அவரது மகிஷிகளுக்கு கூறிக் கொண்டிருந்தார்.
- தெய்வீக பரவசம்: ரோஹிணி தேவி எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசுவதற்காக, கிருஷ்ணர், பலராமர் மற்றும் அவர்களின் சகோதரி சுபத்ரா தேவி மறைந்து நின்று அந்தக் கதைகளைக் கேட்டனர். பிருந்தாவனத்தின் அன்பும், பரம பக்தியும் நிறைந்த லீலைகளைக் கேட்ட அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கினர். அவர்களின் கண்கள் பெரிதாக விரிந்தன; கைகள், கால்கள் உடலுக்குள் சுருங்கியதுபோல் தோன்றின.
- ஜகந்நாதரின் திருவுருவம் வெளிப்பட்டது: அந்த அதிசயமான பரவசத் திருக்காட்சியை நாரத முனிவர் கண்டார். உலகிலுள்ள அனைவரும் இந்த அரிய திருவுருவத்தை தரிசித்து வழிபட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்தார். பகவான் கிருஷ்ணர் அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். அதன் பலனாக, பின்னர் பூரியில் பகவான் ஜகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி இதே திவ்யமான திருவுருவத்தில் அருள்பாலித்தனர்.
இந்த துவாரகை நிகழ்வே, பின்னர் பூரியில் பகவான் ஜகந்நாதரின் தாரு விக்ரஹத் திருவுருவம் வெளிப்படுவதற்கான அடிப்படை காரணமாகக் கருதப்படுகிறது. இந்த மகாபாவ பிரகாஷத்தை நினைவுகூரும் வகையில் ஸ்நான யாத்திரை போன்ற திருவிழாக்களில் பகவான் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படுகிறார்.
நோக்கம் 6: ஸ்ரீ ஜகந்நாதர் திருக்கோவிலின் (ஸ்ரீ மந்திர்) வரலாறு, கட்டிடக்கலை, கட்டுமானம் மற்றும் அதன் தனித்துவமான அம்சங்களை விவரிப்பது.

ஸ்ரீ மந்திர்
6. ஸ்ரீ மந்திர் (ஜகந்நாதர் திருக்கோவில்)
ஜகந்நாதர் என்றால் “உலகின் நாதன்” அல்லது “உலகத்தின் இறைவன்” என்று பொருள்.
இன்றுள்ள ஜகந்நாதர் திருக்கோவில் கி.பி. 1078–1150 காலத்தில் மன்னர் சோடகங்க தேவனால் கட்டத் தொடங்கப்பட்டது. பின்னர் அவரது வம்சாவளியைச் சேர்ந்த அனங்கபீம தேவன் (கி.பி. 1170–1194) ஆட்சிக் காலத்தில் அது நிறைவுபெற்றது.
கங்க வம்சம் கி.பி. 1078 முதல் 1434 வரை ஒடிசாவை ஆட்சி செய்து, பூரியில் வைஷ்ணவ சமயத்தை வளர்த்தது. இந்தக் காலத்தில் பல மகான்களும் ஆச்சாரியர்களும் பூரிக்கு வந்து பகவான் ஜகந்நாதரை தரிசித்தனர். அவர்களில்:
- ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் (விசிஷ்டாத்வைத தத்துவத்தைப் பரப்பியவர்)
- ஸ்ரீ நிம்பார்காச்சாரியார்
- ஸ்ரீ விஷ்ணு ஸ்வாமி
- ஸ்ரீ மத்வாச்சாரியார்
ஆகியோர் பூரிக்கு வந்து தங்கள் மடங்களை நிறுவினர்.
12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒடிசாவின் மகாகவி ஸ்ரீ ஜயதேவ கோஸ்வாமி, பகவான் கிருஷ்ணர் (ஜகந்நாதர்) மீது பக்தியுடன் கீத கோவிந்தம் என்ற புகழ்பெற்ற நூலை இயற்றினார்.
ஜகந்நாதர் கோவிலின் முக்கிய விமானம் 65 மீட்டர் (214 அடி) உயரம் கொண்டது. உயரமான இடத்தில் அமைந்துள்ளதால், அது இன்னும் பிரம்மாண்டமாகத் தோன்றுகிறது. முழு கோவில் வளாகம் சுமார் 10.7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதைச் சுற்றி இரண்டு செவ்வக வடிவ மதில்கள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

மேகநாத பிராசீரம் (ஸ்ரீ மந்திரின் வெளிப்புற மதில்)
ஸ்ரீ மந்திரைச் சுற்றியுள்ள வெளிப்புற மதில் மேகநாத பிராசீரம் என்று அழைக்கப்படுகிறது.
- இதன் அளவு 665 × 640 அடி.
- இந்த மதிலின் உயரம் சுமார் 6 மீட்டர் (20 அடி).
வெளிப்புற மதிலுக்குள் அமைந்துள்ள உட்புற மதில் கூர்மபேதம் என்று அழைக்கப்படுகிறது.
- இதன் அளவு 420 × 315 அடி.
இந்த இரண்டு மதில்களும் 15-ஆம் அல்லது 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவை ஸ்ரீ மந்திரின் பாதுகாப்பிற்கும், புனித எல்லையை வரையறுப்பதற்கும் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ மந்திரின் சமையலறை
(பகவான் ஜகந்நாதர் திருக்கோவில், பூரி)
ஸ்ரீ மந்திரில் உள்ள சமையலறை உலகிலேயே மிகப்பெரிய திருக்கோவில் சமையலறை என்று அறியப்படுகிறது.
- தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகாபிரசாதம் தயாரிக்கப்படுகிறது.
- வழக்கமாக 1,00,000 பக்தர்களுக்குத் தேவையான மகாபிரசாதம் சமைக்கப்படுகிறது.
- ரதயாத்திரை போன்ற திருவிழா நாட்களில் 2,50,000 பக்தர்களுக்குக் கூட மகாபிரசாதம் தயாரிக்கும் திறன் இந்த சமையலறைக்கு உள்ளது.
- பகவானுக்கு பரம்பரை வழியாக சேவை செய்யும் 36 பாரம்பரிய சேவகர் பிரிவுகள் (சத்தீச நியோகம்) உள்ளன.
- மேலும், கோவிலில் சுமார் 6,000 அர்ச்சகர்கள் (பண்டாக்கள்) சேவை செய்து வருகின்றனர்.
நோக்கம் 7: ஸ்ரீ ஜகந்நாதர், தனித்துவமான மர விக்ரங்கள் (தாரு விக்ரங்கள்) மற்றும் ஸ்ரீ மந்திரில் (புரி ஸ்ரீ ஜகந்நாதர் திருக்கோவில்) நடைபெறும் புனித நவகலேவர விழாவின் ஆன்மிக முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.
7. ஸ்ரீ மந்திரில் உள்ள திவ்ய விக்ரகங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்

ஸ்ரீ பலபத்ரர், சுபத்ரா தேவி மற்றும் ஸ்ரீ ஜகந்நாதர்
ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தின் கருவறையில், ஸ்ரீ ஜகந்நாதர் தனது அண்ணனான ஸ்ரீ பலபத்ரர், தங்கை சுபத்ரா தேவி, சுதர்சனர், மாதவர், ஸ்ரீதேவி, மற்றும் பூதேவி ஆகியோருடன் சேர்ந்து அருள்பாலிக்கிறார். இவர்கள் அனைவரும் ரத்ன சிம்மாசனம் (ரத்ன பேடி) எனப்படும் புனித இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றனர்.
ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர், சுபத்ரா தேவி, மற்றும் சுதர்சனர் ஆகியோரின் திருவுருவங்கள் புனித வேப்பமரக் கட்டையால் (தாரு) உருவாக்கப்பட்டவை. இந்த மர விக்ரகங்கள் நிரந்தரமானவை அல்ல. சாஸ்திர விதிப்படி, அதிக ஆஷாட மாதம் வரும்போது (சுமார் 12 முதல் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை), நவகலேபரம் என்ற புனித விழா நடைபெறும்.
நவகலேபரம் என்ற சொல்லுக்கு “புதிய திருமேனி” என்று பொருள்.
- நவ = புதிய
- கலேபரம் = உடல் அல்லது திருமேனி
இந்த விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட புனித வேப்பமரங்களிலிருந்து புதிய விக்ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. பின்னர், பழைய விக்ரகங்களில் உள்ள பிரம்ம பதார்த்தம் மிகுந்த இரகசியமான முறையில் புதிய விக்ரகங்களுக்கு மாற்றப்படுகிறது. இந்தப் புனித நிகழ்ச்சி சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்று, ரதயாத்திரைக்கு முன் நிறைவடைகிறது.
நவகலேபரம் என்ற சொல்லை இரண்டு வகையாகப் புரிந்துகொள்கிறார்கள்:
- புதிய மர விக்ரகங்களை உருவாக்கி, அவற்றில் பிரம்ம பதார்த்தத்தை பிரதிஷ்டை செய்வது.
- முழு நவகலேபரம் நடைபெறாத ஆண்டுகளில், இருக்கும் விக்ரகங்களுக்கு புதிய பாதுகாப்புப் பூச்சும் வண்ண அலங்காரமும் செய்து புதுப்பிப்பது.
கருவறையில், வெள்ளை நிறத்தில் ஸ்ரீ பலபத்ரர், மஞ்சள் நிறத்தில் சுபத்ரா தேவி, மற்றும் கருப்பு நிறத்தில் ஸ்ரீ ஜகந்நாதர் ரத்ன சிம்மாசனத்தில் அருள்பாலிக்கின்றனர். பொதுவாக, காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை, அன்றைய ஆலய நிதி (பூஜை) முறைகளுக்கு ஏற்ப, பக்தர்கள் கருவறையைச் சுற்றி பிரதக்ஷிணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
நோக்கம் 8: பகவானுக்குச் செய்யப்படும் தினசரி வழிபாட்டு முறைகள் (நீதிகள்) பற்றிய விரிவான புரிதலைப் பெற்று, அவற்றில் வெளிப்படும் ஒழுக்கம், பாரம்பரியம் மற்றும் பக்திமயமான சேவையை அறிந்துகொள்வது.
ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தின் (ஸ்ரீ மந்திர்) தினசரி வழிபாட்டு முறைகள்
1. அதிகாலை வழிபாடுகள் (காலை 5.00 – 6.30)
ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் தினசரி வழிபாடு (நீதி) அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை ஒழுங்காக நடைபெறுகிறது. ஒவ்வொரு சேவையும் பரம்பரையாக வரும் சேவகர்களால் (சேவாயத்) சாஸ்திர முறையின்படி செய்யப்படுகிறது.
காலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை, துவாரபிதா (ஆலயக் கதவுகள் திறத்தல்) நடைபெறுகிறது. ஆலய முத்திரை சரிபார்க்கப்பட்ட பின், குறிப்பிட்ட சேவாயத்துகள் முன்னிலையில் கருவறை திறக்கப்படுகிறது. அதன் பின் மங்கள ஆரத்தி நடைபெறுகிறது. புஷ்பாலக சேவகர்கள், முந்தைய இரவில் அணிவிக்கப்பட்ட ஆடைகள், மலர்கள் மற்றும் துளசியை அகற்றி, தடபா மற்றும் உத்தரீயம் எனப்படும் புதிய பருத்தி ஆடைகளை அணிவிக்கிறார்கள். இந்த ஆடைகள் பாரம்பரியமாக தோபா சேவகர் (சலவை சேவகர்) மூலம் துவைக்கப்படுகின்றன.
சுமார் 6.00 மணிக்கு, மைலம் நடைபெறுகிறது. இதில் பழைய அலங்காரங்கள் அகற்றப்படுகின்றன. அதன்பின் அபகாஷம் நடைபெறுகிறது. இதில் பகவானுக்குப் பல் துலக்குதல், ஸ்நானம் போன்ற சுத்திகரிப்பு சேவைகள் குறியீட்டு முறையில் செய்யப்படுகின்றன. இந்த நேரத்தில், ஆலய ஜோதிடர் அன்றைய திதி, திருவிழாக்கள் மற்றும் பூஜை அட்டவணையை அறிவிக்கிறார்.
2. காலை தரிசனம் மற்றும் அலங்காரம் (காலை 6.45 – 8.30)
6.45 மணிக்கு, இரண்டாவது மைலம் நடைபெறுகிறது. இதில் பகவானுக்கு மீண்டும் புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.அதே நேரத்தில், அகண்ட பைதா எனப்படும் புனித விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கு நாள் முழுவதும் அணையாமல் எரிகிறது.
காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை, சஹனமேளா நடைபெறுகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் எந்தக் கட்டணமும் இல்லாமல் அருகில் சென்று பகவானை தரிசிக்கலாம். 8.00 மணிக்கு, பேஷலாகி அலங்காரம் நடைபெறுகிறது. இதில் பகவானுக்கு அழகிய ஆடைகள், தங்க ஆபரணங்கள் மற்றும் பல்வேறு அலங்காரங்கள் அணிவிக்கப்படுகின்றன. இதனுடன் சேர்ந்து பல முக்கிய சேவைகளும் நடைபெறுகின்றன:
- ஆலய சமையலறையில் ரோஷ ஹோமம்.
- அருகிலுள்ள சூரிய பகவான் சன்னதியில் சூரிய பூஜை.
- ஆலய வாயில் காவலர்களான ஜயர் மற்றும் விஜயர் வழிபாடு.
3. நைவேத்தியங்கள் மற்றும் வழிபாடுகள் (காலை 9.00 – மதியம் 1.30)
காலை 9.00 மணிக்கு, கோபால வல்லப பூஜை நடைபெறுகிறது. இது பகவானின் காலை சிற்றுண்டி நைவேத்தியமாகும். இதில்:
- பழங்கள்
- இனிப்புகள்
- தயிர்
- தேங்காய்
ஆகியவை சமர்ப்பிக்கப்படுகின்றன.
10.00 மணிக்கு, சகல தூபம் நடைபெறுகிறது. இது பகவானுக்கான முக்கிய காலை ராஜபோக நைவேத்தியமாகும். இதில் 16 உபசாரங்களுடன் அரிசி, கிச்சடி மற்றும் பல பாரம்பரிய உணவுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதன்பின் மீண்டும் மைலம் நடைபெற்று, பகவானுக்கு புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.
பின்னர் போக மண்டபத்தில், ஏராளமான நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த மகாபிரசாதம் பக்தர்களுக்கும் பல மடங்களுக்கும் வழங்கப்படுகிறது.
காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, மத்யான தூபம் நடைபெறுகிறது. இதில் மேலும் சிறப்பான நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பக்தர்கள் கருவறைக்கு அருகில் சென்று சிறப்பு தரிசனமும் செய்யலாம். இறுதியாக, மதியம் 1.00 மணி முதல் 1.30 மணி வரை, மத்யான பஹுடா நடைபெறுகிறது. அன்றைய பூஜை அட்டவணைக்கு ஏற்ப, இந்த நேரத்தில் பகவான் சிறிது நேரம் திருப்பள்ளியெழுச்சிக்குப் பின் ஓய்வு எடுக்கிறார்.
4. மாலை வழிபாடுகள் (மதியம் 1.30 மணி – இரவு 8.00 மணி)
மதியம் 1.30 மணிக்குப் பிறகு, மாலை வழிபாடுகள் தொடங்குகின்றன. முதலில் சந்தியா ஆரத்தி நடைபெறுகிறது. ஏகாதசி போன்ற சிறப்பு நாட்களில், இந்த ஆரத்திக்குப் பிறகு பகவானுக்கு புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.
மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை, சந்தியா தூபம் நடைபெறுகிறது. இதில் மாலை நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படுகிறது. காலை நைவேத்தியத்தை விட இதில் குறைவான உணவு வகைகள் இடம்பெறும். அதன் பின் ஜய மங்கள ஆரத்தி நடைபெறுகிறது.
இரவு 8.00 மணிக்குப் பிறகு, மீண்டும் மைலம் நடைபெறுகிறது. பின்னர் சந்தன லாகி சேவையில், பகவானின் திருமேனியில் கற்பூரம் கலந்த சந்தனப் பூச்சு பூசப்படுகிறது. அதன்பின், பகவான் அன்று முழுவதிலும் மிகவும் அழகிய அலங்காரமான படசிங்கார வேஷத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த அலங்காரத்தில்:
- அழகிய பட்டாடைகள்
- மணமிக்க மலர் அலங்காரங்கள்
- ஆலய மடங்களால் சமர்ப்பிக்கப்படும் மலர் மாலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இரவு 11.00 மணியளவில், படசிங்கார போகம் சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் பகாளா (தண்ணீர் கலந்த அரிசி) மற்றும் இனிப்புகள் போன்ற இலகுவான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன.
5. இரவு வழிபாடுகள் மற்றும் திருப்பள்ளியறை சேவை (இரவு 8.00 மணி – நள்ளிரவு)
நள்ளிரவில் நடைபெறும் இறுதி சேவைகள் கட்டா சேஜா லாகி மற்றும் பஹுடா என அழைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில்:
- பகவானின் திருப்பள்ளியறை (படுக்கை) தயார் செய்யப்படுகிறது.
- தேங்காய் மற்றும் வெற்றிலை போன்ற இறுதி நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
பின்னர், பகவான் திருப்பள்ளியறை சேவைக்கு எழுந்தருளிய பின், குறிப்பிட்ட சேவாயத் ஆலயக் கதவுகளை முத்திரையிட்டு மூடுகிறார்.
தினசரி வழிபாட்டின் சிறப்பு
ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தில் தினமும் நடைபெறும் அனைத்து வழிபாடுகளும், பகவானை உயிருடன் வாழும் அரசராகக் கருதி செய்யப்படுகின்றன. அதனால் தினமும்:
- திருநீராட்டு (ஸ்நானம்)
- ஆடை மாற்றுதல்
- அலங்காரம்
- பல நேரங்களில் நைவேத்தியம்
- ஓய்வு
- இரவு திருப்பள்ளியறை
என ஒவ்வொரு சேவையும் அன்புடனும், சாஸ்திர முறையிலும் நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்காக பொதுவான நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அன்றைய பூஜை முறைகள் (நீதி) மற்றும் திருவிழாக்களைப் பொறுத்து நேரங்களில் மாற்றம் ஏற்படலாம்.
நோக்கம் 9: ஸ்ரீ ஜகந்நாதர் சேவகர்களின் பாரம்பரிய அமைப்பையும், ஸ்ரீ ஜகந்நாதரின் வழிபாட்டில் அவர்களின் இன்றியமையாத பங்கையும் புரிந்துகொள்வது.
ஸ்ரீ ஜகந்நாதரின் சேவகர்களும் அவர்களின் சேவைகளும்
பூரி ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளும், ஜகந்நாத சேவகர்கள் (சேவாயத்) எனப்படும் அர்ப்பணிப்புள்ள ஆலயச் சேவகர்களால் நடத்தப்படுகின்றன. அவர்கள் மனம், வாக்கு, உடல் மூன்றாலும் பகவானுக்கு சேவை செய்து, அதனை வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய புனிதக் கடமையாகக் கருதுகின்றனர். இந்த ஆலய சேவை முறை மடலா பஞ்சிகா என்னும் ஆலய வரலாற்று நூலில், குறிப்பாக கர்மாங்கி பிரகரணம் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக, ஆலயத்தில் 36 முக்கிய சேவைக் குழுக்கள் உள்ளன. இவை சத்தீச நியோகா (36 சேவைக் குழுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன.
பெரும்பாலான சேவைகள் பரம்பரை வழியாக குடும்பத்திலிருந்து குடும்பத்திற்கு தொடர்கின்றன. ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சேவையையே செய்து வருகிறது. காலப்போக்கில் சேவைகளின் எண்ணிக்கை மாறியுள்ளது.
- மன்னர் அனங்க பீமதேவர் காலத்தில் 36 முக்கிய சேவைக் குழுக்கள் இருந்தன.
- 16-ஆம் நூற்றாண்டில் மன்னர் ராமச்சந்திர தேவர் காலத்தில் சுமார் 97 வகையான சேவைகள் இருந்தன.
- பின்னர் சில சேவைகள் ஒன்றிணைக்கப்பட்டன அல்லது நிறுத்தப்பட்டன. இருப்பினும், பாரம்பரிய சேவை முறை இன்றளவும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
சேவகர்கள் பல்வேறு சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். அனைவரும் பிராமணர்கள் அல்ல. ஆனால், அனைவரும் தூய வைஷ்ணவ வாழ்க்கையைப் பின்பற்றி பகவானுக்குச் சேவை செய்கிறார்கள்.
ஆலய சேவைகள் பொதுவாக நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
1. ராஜ சேவை
இவை மன்னரின் சார்பாக செய்யப்படும் சேவைகள். உதாரணமாக:
- ரதயாத்திரையின் போது பகவானின் தேருக்கு முன் சாலையைத் துடைத்தல் (சேரா பஹாரா சேவை).
- சந்தன யாத்திரையின் போது பகவானுக்கு சந்தனம் பூசுதல்.
- மன்னரின் பிரதிநிதியாக சிறப்பு சேவைகள் செய்தல்.
2. ஆலயப் பொது சேவைகள்
இவை ஆலயத்தின் தினசரி நிர்வாகம் மற்றும் வழிபாடுகளுடன் தொடர்புடைய சேவைகள்.
சுமார் 110 வகையான சேவைகள் பல்வேறு நியோகா (சேவைக் குழுக்கள்) மூலம் செய்யப்படுகின்றன.
3. பகவானுக்கு நேரடி சேவைகள்
இவை நேரடியாக ஸ்ரீ ஜகந்நாதருக்குச் செய்யப்படும் சேவைகள். இந்தப் பிரிவில் தேவதாசிகள் இரண்டு வகையாக இருந்தனர்.
பிராமணர் அல்லாத குடும்பங்களில் பிறந்த தேவதாசிகள்
- கருட ஸ்தம்பம் அருகில் பகவானின் மகிழ்ச்சிக்காக பாடி ஆடுவார்கள்.
பிராமணக் குடும்பங்களில் பிறந்த தேவதாசிகள்
- கருவறை முன்பும்,
- பகவானின் திருப்பள்ளியறை அருகிலும் பாடுவார்கள்.
- சந்தன யாத்திரையின் போது, பகவானின் படகில் பக்திப் பாடல்கள் பாடுவார்கள்.
4. மடங்களின் சேவைகள்
ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்துடன் தொடர்புடைய பல மடங்கள் பாரம்பரிய சேவைகளைச் செய்கின்றன. அவற்றில் சில:
- ஆலயம் மற்றும் குண்டிச்சா ஆலயத்தைச் சுத்தம் செய்தல்.
- கீதம் மற்றும் கீர்த்தனம் பாடுதல்.
- நைவேத்தியம் தயாரித்தல்.
- சாமரம் வீசுதல்.
- சிறப்பு வேஷங்களில் பகவானை அலங்கரித்தல்.
- புனித விளக்குகளை பராமரித்தல்.
- ஸ்தோத்திரங்கள் ஓதுதல்.
- ஆலய நிதி (வழிபாட்டு முறை) தொடர்பான வழிகாட்டுதல் வழங்குதல்.
இவை அனைத்தும் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் புனித சேவைகளாகும்.
சிறப்பு
ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தின் சேவை முறை, ஒவ்வொரு சேவகரும் தனித்தனி பொறுப்பை ஏற்று, வாழ்நாள் முழுவதும் பகவானுக்குச் செய்யும் அர்ப்பணிப்பு சேவையை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு சேவையும் பகவானின் தினசரி வழிபாட்டில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது.
ஜகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் வேஷங்கள் (அலங்காரங்கள்)
நோக்கம் 10: ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரின் விக்ரங்களுக்கு செய்யப்படும் தினசரி மற்றும் சிறப்பு அலங்காரங்களை (வேஷங்கள்) அறிந்து, அவற்றின் ஆன்மிக முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.
1. சேமேடி வேஷம்
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நடைபெறும் மங்கள ஆரத்தி நேரத்தில், ஸ்ரீ ஜகந்நாதருக்கு பருத்தியால் செய்யப்பட்ட சேலை அணிவிக்கப்படுகிறது.
இந்த அலங்காரம் சேமேடி வேஷம் என்று அழைக்கப்படுகிறது.
2. தடபா வேஷம்
காலை திருநீராட்டின் (ஸ்நானம்) போது, ஸ்ரீ ஜகந்நாதருக்கு 16 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறப் பருத்தித் துணி அணிவிக்கப்படுகிறது. இந்த அலங்காரம் தடபா வேஷம் என்று அழைக்கப்படுகிறது.
3. உத்தரீய வேஷம்
உத்தரீயம் என்பது மேலாடை அல்லது போர்வையைக் குறிக்கிறது. காலை தரிசனத்திற்குப் பிறகு, ஸ்ரீ ஜகந்நாதருக்கு 24 அடி நீளமுள்ள பட்டுத் துணி மேலாடையாக அணிவிக்கப்படுகிறது. இந்த அலங்காரம் உத்தரீய வேஷம் என்று அழைக்கப்படுகிறது.
கீத கோவிந்தம் பாடும் பாரம்பரியம்
ஒரு காலத்தில் பத்மா என்ற பக்தை, மலர்கள் விற்பவரின் மகளாக இருந்தார். அவர் வயலில் வேலை செய்துகொண்டே, ஸ்ரீ ஜயதேவ கோஸ்வாமியின் கீத கோவிந்தத்தை மிகுந்த பக்தியுடன் பாடுவார். அவரது இனிமையான பக்திப் பாடலில் ஈர்க்கப்பட்ட ஸ்ரீ ஜகந்நாதர், தமது சிம்மாசனத்தை விட்டு வெளியே வந்து, பத்மாவைப் பின்தொடர்ந்து அந்தப் பாடலைக் கேட்கச் சென்றார்.
அவ்வளவு ஆழமாக அந்தப் பாடலில் மூழ்கியதால், கத்தரிக்காய் செடிகளின் முட்களில் பகவானின் ஆடைகள் கிழிந்தன. அவருடைய மேலாடையும் வயலில் விழுந்தது. மறுநாள் காலை, அர்ச்சகர்கள் பகவானின் ஆடைகள் கிழிந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அன்று இரவு, ஸ்ரீ ஜகந்நாதர் மன்னர் சோடகங்க தேவரின் கனவில் தோன்றி, தாம் பத்மாவின் கீத கோவிந்தப் பாடலைக் கேட்கச் சென்றதாகக் கூறினார். இதைக் கேட்ட மன்னர், பத்மாவை ஆலயத்திற்கு அழைத்து வந்து, ஒவ்வொரு இரவும் பகவான் திருப்பள்ளியறை செல்லும் முன் கீத கோவிந்தம் பாடும் வழக்கை ஏற்படுத்தினார்.
இதுவே ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தில் தினமும் கீத கோவிந்தம் பாடும் பாரம்பரியத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது. பாரம்பரியத்தின்படி, தேவதாசிகள் கீத கோவிந்தம் பாடும் மரபும் இதன் மூலம் ஆரம்பமானது என்று நம்பப்படுகிறது.
மன்னர் பிரதாபருத்ரரின் ஆணை
ஜய-விஜயர் வாசலின் இடது பக்கத்தில் மன்னர் பிரதாபருத்ரர் பொறித்த கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:
- படசிங்கார வேஷம் முடியும் வரை கீதமும் நடனமும் தொடர வேண்டும்.
- கீத கோவிந்தம் தவிர வேறு எந்தப் பாடலும் பாடக்கூடாது.
- இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை ஆலய நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
- இதை மீறுவது ஸ்ரீ ஜகந்நாதருக்கு செய்யப்படும் அபசாரமாகக் கருதப்படும்.
இவ்வாறு, கீத கோவிந்தம் ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தின் தினசரி வழிபாட்டில் இன்றும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

படசிங்கார வேஷம்
4. படசிங்கார வேஷம்
ஒவ்வொரு நாளும் இரவு சுமார் 10.00 மணியளவில், ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி திருப்பள்ளியறை செல்லும் முன், அன்றைய நாளின் மிகச் சிறப்பான அலங்காரமான படசிங்கார வேஷம் அணிவிக்கப்படுகிறது.
“பட” என்பது மிகப் பெரிய அல்லது உன்னதமான என்று பொருள்.
“சிங்காரம்” என்பது ஸ்ரீ கிருஷ்ணரின் மீது ஸ்ரீமதி ராதாராணியும் கோபியர்களும் கொண்டுள்ள தூய தெய்வீக அன்பை (பிரேமை) குறிக்கிறது.
ஆலய அர்ச்சகர்களின் பாரம்பரிய நம்பிக்கையின்படி, இந்த நேரத்தில் ஸ்ரீமதி ராதாராணியும் கோபியர்களும் ஸ்ரீ ஜகந்நாதரை தரிசிக்க வருகிறார்கள் என்று கருதப்படுகிறது. இந்த படசிங்கார வேஷத்தில் பகவான்:
- கீத கோவிந்த கண்டுவா (ஜயதேவ கோஸ்வாமியின் கீத கோவிந்தம் தொடர்புடைய புனித பட்டாடை) அணிவிக்கப்படுகிறார்.
- மேலும் எட்டு வகையான மலர் ஆபரணங்களால் அழகாக அலங்கரிக்கப்படுகிறார்.
இந்த அலங்காரம், பகவானின் அழகையும், ஸ்ரீமதி ராதாராணி மற்றும் கோபியர்களின் உயர்ந்த பக்தி-பிரேமையையும் நினைவூட்டும் மிகப் புனிதமான தினசரி வேஷமாகக் கருதப்படுகிறது.


கீத கோவிந்த கண்டுவா அலங்காரத்தில் ஸ்ரீ ஜகந்நாதர்
படசிங்கார வேஷத்தின் போது, ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவிக்கு கீத கோவிந்த கண்டுவா என்ற புனித பட்டாடை அணிவிக்கப்படுகிறது. இந்த கண்டுவா சுமார் 12 அடி நீளமுள்ள சிவப்பு நிறப் பட்டுத் துணி ஆகும். இது பகவானின் தலையில் சுற்றி அணிவிக்கப்படுகிறது. இந்தப் பட்டாடையில் ஸ்ரீ ஜயதேவ கோஸ்வாமியின் “கீத கோவிந்தம்” நூலில் உள்ள புனித பாடல்கள் நெய்யப்பட்டிருக்கும்.
கீத கோவிந்தம் ஸ்ரீ ஜகந்நாதருக்கு மிகவும் பிரியமானது. எனவே, ஒவ்வொரு இரவும் பகவான் திருப்பள்ளியறை செல்லும் முன் கீத கோவிந்தம் பாடப்பட்டு, இந்த கீத கோவிந்த கண்டுவா அணிவிக்கப்படுகிறது.
படசிங்கார வேஷத்தின் எட்டு மலர் அலங்காரங்கள்
1. சந்திரிகா மற்றும் அலகபந்தி
- மலர்களால் செய்யப்பட்ட நெற்றி அலங்காரம்.
2. புஷ்ப திலகம்
- பகவானின் நெற்றியில் அணிவிக்கப்படும் மலர் திலகம்.
3. கரபல்லவம்
- மணமிக்க இலைகள் மற்றும் பலவகை மலர்களால் செய்யப்பட்ட, பகவானின் கைகள் மற்றும் ஐந்து விரல்களைக் குறிக்கும் அலங்காரம்.
4. மகர குண்டலம்
- மகர (சுறா மீன்) வடிவில் செய்யப்பட்ட மலர் காதணிகள்.
5. பதகம்
- வட்டம் அல்லது இதய வடிவில், சுமார் 18 அங்குல அளவில் செய்யப்பட்ட மலர் அலங்காரம். இது பகவானின் மார்புப் பகுதியில் அணிவிக்கப்படுகிறது.
6. குணா மற்றும் ஜும்பா
- மலர்களால் செய்யப்பட்ட மூக்கு அலங்காரம்.
7. புஷ்ப மாலை
- சுமார் 12 அடி நீளமுள்ள பல மலர் மாலைகள் பகவானுக்கு அணிவிக்கப்படுகின்றன. அவை ஒரு கையிலிருந்து மறுகை வரை நீளமாக இருக்கும்.
8. துளசி மாலை
- மூங்கிலில் சுற்றி கட்டப்பட்ட துளசி மாலைகளால் செய்யப்பட்ட அழகிய கிரீடம் பகவானுக்கு அணிவிக்கப்படுகிறது.
வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கான ஆடை நிறங்கள்
பாஞ்சராத்திர பிரதீபம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பாரம்பரியத்தின்படி, வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் பகவானுக்கு தனித்தனி நிற ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.
- ஞாயிறு – சிவப்பு நிற ஆடை.
- திங்கள் – வெள்ளை நிற ஆடை.
- செவ்வாய் – சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடை.
- புதன் – பச்சை நிற ஆடை.
- வியாழன் – மஞ்சள் அல்லது பொன்னிற ஆடை.
- வெள்ளி – வெள்ளை நிற ஆடை.
- சனி – கருப்பு நிற ஆடை.
இந்த ஆடை நிறங்கள் வார நாட்களின் பாரம்பரிய வழக்கத்தைப் பின்பற்றி அணிவிக்கப்படுகின்றன.
மகமாலா வேஷம்
படசிங்கார வேஷத்திற்குப் பிறகு, பகவான் திருப்பள்ளியறை செல்லும் (சயன லீலை) நேரத்தில், அவருக்கு வெள்ளை நிற சிறப்பு ஆடை அணிவிக்கப்படுகிறது. இந்த இறுதி இரவு அலங்காரம் மகமாலா வேஷம் என்று அழைக்கப்படுகிறது.
நோக்கம் 11: திருவிழாக்களை முன்னிட்டு விக்ரங்களுக்கு அணிவிக்கப்படும் சிறப்பு வேஷங்களின் (அலங்காரங்களின்) முக்கியத்துவத்தையும், அவை ஸ்ரீ கிருஷ்ணர்/ஜகந்நாதரின் பல்வேறு திவ்ய லீலைகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதையும் எடுத்துரைப்பது.
திருவிழாக்களின் போது அணிவிக்கப்படும் சிறப்பு வேஷங்கள் (அலங்காரங்கள்)
ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவிக்கு ஆண்டின் பல்வேறு மாதங்களிலும் திருவிழாக்களிலும் சிறப்பு வேஷங்கள் அணிவிக்கப்படுகின்றன. இந்த அலங்காரங்கள் பகவானின் திவ்ய லீலைகளையும் ஆன்மிகப் போதனைகளையும் நினைவூட்டுகின்றன.
1. சந்தன வேஷம் (வைசாகம் – ஏப்ரல் / மே)
அக்ஷய திருதியை முதல் 42 நாட்கள் சந்தன யாத்திரை நடைபெறும். இது இரண்டு பகுதிகளாக நடைபெறுகிறது:
- வெளி சந்தன யாத்திரை
- உள் சந்தன யாத்திரை
இந்த நாட்களில் பகவானுக்கு சந்தனமும் நறுமண எண்ணெயும் பூசப்படுகிறது. கோடை வெப்பத்தைத் தணிக்கும் இந்த சேவையின் போது, நரேந்திர சரோவரில் ஸ்ரீ மதனமோகனரின் படகு உற்சவமும் நடைபெறுகிறது.
2. ருக்மிணி ஹரண வேஷம் (ஜ்யேஷ்டம் – மே / ஜூன்)
சுக்ல ஏகாதசி நாளில், ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மிணி தேவியைத் திருமணம் செய்துகொண்ட லீலையை நினைவுகூரும் வகையில் இந்த வேஷம் அணிவிக்கப்படுகிறது. இந்த அலங்காரத்தில் பகவான் அரசரின் தோற்றத்தில் காட்சி தருகிறார்.
3. ஹாதி வேஷம் (யானை வேஷம்)

ஹாதி வேஷம்
ஸ்நான யாத்திரை நாளில், பகவானுக்கு 108 கலச புனித நீரால் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அதன்பின், யானையின் முகத்தைப் போன்ற சிறப்பு அலங்காரம் அணிவிக்கப்படுகிறது. இது ஸ்ரீ விநாயகரின் திருவுருவத்தை நினைவூட்டுகிறது.
4. சுனா வேஷம் (பொன் அலங்காரம்) – ஆஷாடம் (ஜூன் / ஜூலை)
ரதயாத்திரையின் பஹுடா யாத்திரை (திரும்பும் பயணம்) முடிந்த பின் வரும் ஏகாதசி நாளில், சுனா வேஷம் நடைபெறுகிறது.இந்த நாளில் பகவானுக்கு:
- தங்கக் கிரீடம்
- தங்கக் கைகள்
- தங்கக் கால்கள்
- ஏராளமான தங்க ஆபரணங்கள்
அணிவிக்கப்படுகின்றன. இந்த அலங்காரம் பகவானின் தெய்வீக மகிமையையும் பேரரசரான பெருமையையும் வெளிப்படுத்துகிறது.
5. சிதா லாகி வேஷம் (ஸ்ராவணம் – ஜூலை / ஆகஸ்ட்)
இந்த வேஷத்தில், பகவானின் நெற்றியில் உள்ள பொன் நெற்றி அலங்காரம் மீண்டும் அணிவிக்கப்படுகிறது.
6. ராகுரேகா லாகி வேஷம்
இந்த நாளில், பகவானின் காது ஆபரணங்கள் மீண்டும் அணிவிக்கப்படுகின்றன.
7. வனபோஜன வேஷம் (பாத்ரபதம் – ஆகஸ்ட் / செப்டம்பர்)
இந்த அலங்காரத்தில், பகவான் விருந்தாவனத்தில் கோபால சிறுவனாக காட்சி தருகிறார். பிருந்தாவனத்தின் காட்டு சூழல் உருவாக்கப்பட்டு, பகவானின் பால்ய லீலை நினைவுகூரப்படுகிறது.
8. காலிய தமன வேஷம்
இந்த வேஷம், காளிய நாகத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அடக்கிய லீலையை நினைவூட்டுகிறது. சுமார் 30 அடி நீளமுள்ள நாக வடிவ அலங்காரம் பயன்படுத்தப்படுகிறது.
9. பிரலம்பாசுர வேஷம்
இந்த அலங்காரம், ஸ்ரீ பலபத்ரர் பிரலம்பாசுரனை வதம் செய்த லீலையை நினைவூட்டுகிறது.
சிறப்பு
இந்த வேஷங்கள்:
- பகவானின் பல்வேறு திவ்ய லீலைகளை நினைவூட்டுகின்றன.
- ஒவ்வொரு மாதத் திருவிழாவுக்கும் தனித்துவமான ஆன்மிக அர்த்தத்தை அளிக்கின்றன.
- பக்தர்களுக்கு அரிதாகக் கிடைக்கும் சிறப்பு தரிசன வாய்ப்பை வழங்குகின்றன.
- ஸ்ரீ கிருஷ்ணரின் கருணை, வீரியம், அழகு மற்றும் பக்தர்கள்மீது உள்ள அன்பை எடுத்துக்காட்டுகின்றன.
ரதயாத்திரை காலத்திலும் ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த திருவிழா, பகவான் தமது பக்தர்களை அருளால் தரிசிக்க வெளியே வருவதை நினைவூட்டும் உலகப் புகழ்பெற்ற புனித விழாவாகும்.
ரதயாத்திரை (தேர் திருவிழா)
நோக்கம் 12: ஸ்ரீ க்ஷேத்திரமான பூரியில் நடைபெறும் ஸ்ரீ ஜகந்நாதரின் ரதயாத்திரையின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் ஆன்மிக அர்த்தத்தை அறிந்துகொள்வது.

ஜகந்நாத ரதயாத்திரை, பூரி ரதயாத்திரை, குண்டிச்சா யாத்திரை, நவதின யாத்திரை அல்லது தேர் திருவிழா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது ஒடிசா மாநிலத்தின் பூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற புனித திருவிழாவாகும். இந்தத் திருவிழாவில், ஸ்ரீ ஜகந்நாதர், அவரது அண்ணனான ஸ்ரீ பலபத்ரர், தங்கையான சுபத்ரா தேவி ஆகியோர், ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டிச்சா ஆலயத்திற்கு தேர்களில் எழுந்தருளிச் செல்கிறார்கள்.
இந்த திருவிழாவின் போது, பகவான்கள் முதன்முறையாக கருவறையிலிருந்து வெளியே வந்து, தனித்தனியாக அமைக்கப்பட்ட மூன்று பெரிய மரத் தேர்களில் எழுந்தருளுகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தடித்த கயிறுகளைப் பயன்படுத்தி இந்தத் தேர்களை இழுக்கிறார்கள். பக்தியுடன் தேரை இழுப்பது மனதைத் தூய்மைப்படுத்தி, பகவானின் அருளைப் பெறச் செய்கிறது என்று நம்பப்படுகிறது.
ஜகந்நாத ரதயாத்திரை, உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய தேர் திருவிழாக்களில் ஒன்றாகும். இதன் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.
இந்தத் திருவிழாவின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால், பக்தர்கள் பகவானை தரிசிக்க ஆலயத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, பகவானே தமது பக்தர்களை தரிசிக்க வெளியே வருகிறார். அதனால், ரதயாத்திரை என்பது பகவானின் எல்லையற்ற கருணை, சமத்துவம் மற்றும் அனைவரையும் அரவணைக்கும் அன்பின் அடையாளமாக போற்றப்படுகிறது.

ரதயாத்திரை திருவிழாவின் காலம்
ஸ்ரீ ஜகந்நாதரின் ரதயாத்திரை திருவிழா பொதுவாக 9 அல்லது 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்தத் திருவிழா, இந்து நாட்காட்டியின்படி ஆஷாட மாதம், வளர்பிறை (சுக்ல பக்ஷம்), துவிதியை திதியில் தொடங்குகிறது. ஆங்கில நாட்காட்டியின்படி இது பொதுவாக ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வருகிறது. ரதயாத்திரையின் போது, ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி, ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்திலிருந்து குண்டிச்சா ஆலயத்திற்குச் சென்று அங்கு சில நாட்கள் எழுந்தருளி இருப்பார்கள்.
திரும்பும் பஹுடா யாத்திரை முடிந்த பிறகும், பகவான்கள் மூன்று நாட்கள் தேரிலேயே எழுந்தருளி இருந்து, அதன்பின் ஆலயத்தின் கருவறைக்குத் திரும்புகின்றனர். இந்த திருவிழா, அதே ஆஷாட மாதத்தின் திரயோதசி திதியில், நீலாத்ரி விஜயா என்னும் புனித நிகழ்வுடன் நிறைவடைகிறது. அன்றைய தினம், ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி மீண்டும் தங்கள் புனித கருவறையில் எழுந்தருளுகின்றனர்.
நோக்கம் 13: பத்ம புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் பிற வேத சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ரத யாத்திரையின் தோற்றம் மற்றும் சாஸ்திர ஆதாரங்களை ஆராய்வது.
ரதயாத்திரையின் தோற்றம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம்
ரதயாத்திரை திருவிழாவை, மன்னர் இந்திரத்யும்னர், பகவானின் நேரடி ஆணைப்படி தொடங்கினார். பகவான் மன்னரிடம், “ஆஷாட மாத வளர்பிறை துவிதியை நாளில் எங்கள் ரதயாத்திரையை நடத்துங்கள். என்னையும், ஸ்ரீ பலபத்ரரையும், சுபத்ரா தேவியையும் எங்கள் அவதார ஸ்தலமான குண்டிச்சா ஆலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.” என்று அருள்கூறினார். பகவானின் இந்த ஆணையின்படி, இன்றளவும் ரதயாத்திரை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது:
- நவயாத்திரை
- குண்டிச்சா யாத்திரை
- மகாவேதி யாத்திரை
- கோஷ யாத்திரை
- பதிதபாவன யாத்திரை
- தக்ஷிணாபிமுகி யாத்திரை
- அடாபா யாத்திரை
- நந்திகோஷ யாத்திரை
- தசாவதார யாத்திரை
ஆறு தேர்களிலிருந்து மூன்று தேர்கள் வரை

மடலா பஞ்சிகை கூறுவதன்படி, ஒரு காலத்தில் மாலினி என்ற நதி, ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்திற்கும் குண்டிச்சா ஆலயத்திற்கும் இடையில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் ஆறு தேர்கள் பயன்படுத்தப்பட்டன.
- முதலில், ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி மூன்று தேர்களில் நதிக்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- பின்னர் படகில் நதியைக் கடந்து,
- மறுகரையில் காத்திருந்த மற்ற மூன்று தேர்களில் எழுந்தருளி குண்டிச்சா ஆலயத்திற்குச் சென்றனர்.
பின்னர் வீர நரசிம்மதேவர் (கி.பி. 1238–1264) ஆட்சிக் காலத்தில், மாலினி நதி மணலால் நிரப்பப்பட்டு, நேரான சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு, இன்றுள்ளபடி மூன்று தேர்களில் மட்டும் ரதயாத்திரை நடைபெறும் வழக்கம் உருவானது.
ரதயாத்திரையின் ஆன்மிக அர்த்தம்
ரதயாத்திரை திருவிழா, ஸ்ரீ ஜகந்நாதருக்கு மிகவும் பிரியமானது. வைஷ்ணவ ஆச்சாரியர்கள், ரதமும் பகவானும் வேறுபட்டவை அல்ல என்று விளக்குகின்றனர். பகவத் கீதை (6.43) விளக்கத்தில், ஸ்ரீல பிரபுபாதர், கடோபநிஷத் (1.3.3–4)-ல் உள்ள இந்த மந்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்.
ஆத்மானம் ரதினம் வித்தி
சரீரம் ரதமேவ ச ।
புத்திம் து சாரதிம் வித்தி
மன: ப்ரக்ரஹமேவ ச ॥
இந்த்ரியாணி ஹயானாஹு:
விஷயாம்ஸ் தேஷு கோசரான் ।
ஆத்மேந்த்ரிய மனோயுக்தம்
போக்தேத்யாஹுர் மனீஷிண: ॥
இந்த மந்திரம் நமது வாழ்க்கையை ஒரு தேருடன் ஒப்பிட்டுச் சொல்கிறது.
- ஆன்மா – தேரில் அமர்ந்து பயணம் செய்பவர்.
- உடல் – தேர்.
- புத்தி – தேரை ஓட்டும் சாரதி.
- மனம் – குதிரைகளை வழிநடத்தும் கடிவாளம்.
- ஐம்புலன்கள் – தேரை இழுக்கும் குதிரைகள்.
- புலன்களின் பொருள்கள் – குதிரைகள் செல்லும் பாதை.
மனம் மற்றும் புலன்களை புத்தி சரியாக வழிநடத்தினால், ஆன்மா தனது உண்மையான இலக்கான பகவானை அடையும். ஆனால் மனமும் புலன்களும் கட்டுப்பாடின்றி ஓடினால், வாழ்க்கைப் பயணம் தவறான பாதையில் செல்லும்.
ரதயாத்திரையுடன் நமது தொடர்பு
ரதயாத்திரை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது. எப்படிப் பகவான் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்க வருகிறாரோ, அதுபோல நாமும் நமது உடல் என்ற தேரை, புத்தி என்ற சாரதியால், மனம் என்ற கடிவாளத்தால், புலன்கள் என்ற குதிரைகளை கட்டுப்படுத்தி, பகவானை நோக்கிச் செலுத்த வேண்டும். இதுவே ரதயாத்திரையின் ஆழமான ஆன்மிகப் பொருளாகும்.
பத்ம புராணத்தில் ரதயாத்திரை
பத்ம புராணம் ரதயாத்திரையின் மகிமையைப் புகழ்கிறது. அதில் கூறப்படுவது:
ஆஷாடஸ்ய த்விதியாயாம்
ரதம் குர்யாத் விஷேஷத: ।
ஆஷாட ஶுக்லைகாதஶ்யாம்
ஜப ஹோம மஹோத்ஸவம் ॥
ரதஸ்திதம் வ்ரஜந்தம் தம்
மஹாவேதி மஹோத்ஸவே ।
யே பஶ்யந்தி முதா பக்த்யா
வசஸ் தேஷாம் ஹரே: பதே ॥
ஸத்யம் ஸத்யம் புன: ஸத்யம்
பிரதிஜ்ஞாதம் த்விஜோத்தம ।
நாத: ஶ்ரேய: பிரதோ விஷ்ணோர்
உத்ஸவ: ஶாஸ்த்ரஸம்மத: ॥
அதாவது
- ஆஷாட மாத வளர்பிறை துவிதியை நாளில் ரதயாத்திரையை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
- பகவானின் திருநாமங்களை ஜபிக்க வேண்டும்.
- யாகம் மற்றும் பக்தி வழிபாடுகளைச் செய்ய வேண்டும்.
- பக்தியுடன் ரதத்தில் எழுந்தருளும் ஸ்ரீ ஜகந்நாதரை தரிசிப்பவர்கள், பகவானின் பரமபதத்தை அடையும் அருளைப் பெறுவார்கள்.
இந்த உலகில் ஸ்ரீ கிருஷ்ணரின் திருப்திக்காக நடைபெறும் திருவிழாக்களில், ரதயாத்திரையைவிட உயர்ந்தது எதுவுமில்லை என்று சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
ஸ்கந்த புராணத்தில் ரதயாத்திரை
ஸ்கந்த புராணம் கூறுகிறது: ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி தேரில் எழுந்தருளி மகாவேதியை நோக்கிச் செல்லும் தரிசனத்தைப் பெறுபவர், கோடி பிறவிகளில் செய்த பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார். மேலும் புராணங்களில்,
“ரதே து வாமனம் த்ருஷ்ட்வா, புனர்ஜன்ம ந வித்யதே”br>
என்று கூறப்படுகிறது. அதாவது,
“தேரில் எழுந்தருளும் பகவானை தரிசிப்பவர், பிறப்பு–இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகிறார்.”
பகவானின் கருணை
ஆலயத்தில் பகவான் அனைவருக்கும் அருள் புரிகிறார். ஆனால் ரதத்தில் எழுந்தருளும் போது, தாமே வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து, தமது சிறப்பான கருணையை அனைவர்மீதும் பொழிகிறார். இதனை ஸ்ரீ சைதன்ய சரிதாமிர்தம் (மத்ய லீலை 13.24) இவ்வாறு கூறுகிறது:
“மகாலக்ஷ்மியின் அனுமதியைப் பெற்று, பக்தர்களுக்கு ஆனந்தம் அளிக்கவும், தமது திவ்ய லீலைகளை வெளிப்படுத்தவும், பகவான் ரதத்தில் எழுந்தருளி வெளியே வந்தார்.”
சிறப்பு
ரதயாத்திரை என்பது ஒரு தேர் திருவிழா மட்டுமல்ல. அது பகவானே தமது பக்தர்களைத் தேடி வந்து அருள் புரியும் கருணையின் திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவை பக்தியுடன் தரிசிப்பதும், பங்கேற்பதும் மிகப் பெரிய ஆன்மிகப் பாக்கியமாகக் கருதப்படுகிறது.
நோக்கம் 14: ரத யாத்திரை திருவிழாவின் போது ஸ்ரீ ஜகந்நாதர் ஏன் குண்டிச்சா கோவிலில் ஏழு நாட்கள் தங்கியருள்கிறார் என்பதை விளக்குவது.

குண்டிச்சா கோவில்
மன்னர் இந்திரத்யும்னர் கேட்ட மூன்று வரங்களும் குண்டிச்சா யாத்திரையின் ஆன்மிகப் பொருளும்
ஸ்கந்த புராணத்தில் கூறப்படுவதாவது, ஸ்ரீ ஜகந்நாதர், பலபத்ரர், சுபத்ரா தேவி ஆகியோரின் விக்ரகப் பிரதிஷ்டை முடிந்தபின், மன்னர் இந்திரத்யும்னர் பகவானிடம் மூன்று வரங்களை வேண்டினார்.
- எனக்கு சந்ததி (பிள்ளைகள்) வேண்டாம்.
- நீங்கள் நாள் முழுவதும் பக்தர்களின் படையலை ஏற்றுக்கொண்டு உணவருந்த வேண்டும்.
- நீங்கள் தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே ஓய்வெடுத்து, மீதமுள்ள நேரமெல்லாம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து, பந்தப்பட்ட உயிர்களுக்கு அருள் செய்ய வேண்டும்.
இதைக் கேட்ட ஸ்ரீ ஜகந்நாதர் புன்னகைத்து, “அப்படியே ஆகட்டும்” என்று அருளினார். மன்னர் மிகவும் மகிழ்ந்தார். ஆனால் அரசி குண்டிச்சா தேவி மிகவும் வருந்தினார். ஏனெனில், ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை பெற வேண்டும் என்ற இயல்பான ஆசை உண்டு.
அவருடைய மனவேதனையை அறிந்த ஸ்ரீ ஜகந்நாதர், “குண்டிச்சா தேவி! கவலைப்படாதே. ஆண்டுதோறும் நான் ஏழு நாட்கள் உன்னுடன் தங்குவேன்” என்று வாக்குறுதி அளித்தார். அதனால்தான், ரதயாத்திரையின் போது ஸ்ரீ ஜகந்நாதர் குண்டிச்சா கோவிலில் ஏழு நாட்கள் எழுந்தருளி தங்குகிறார்.
பகவான் ஸ்ரீ ஜகந்நாதர் ரதத்தில் எழுந்தருளி வெளியே வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக, ஸ்ரீமந்திர் (ஜகந்நாதர் கோவில்) என்பது துவாரகையை குறிக்கிறது. துவாரகை என்பது ஐஸ்வர்யம் (பகவானின் ராஜ கம்பீரம்) அதிகமாக வெளிப்படும் தலம். ஆனால் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் தொண்டர்கள் இதனை இன்னும் ஆழமான ஆன்மிகக் கண்ணோட்டத்தில் விளக்குகின்றனர். அவர்களின் கருத்துப் படி,
- ஸ்ரீமந்திர் = துவாரகை
- குண்டிச்சா கோவில் = பிருந்தாவனம் (சுந்தராசலம்)
துவாரகையில் ராஜபெருமையுடன் இருந்தாலும், ஸ்ரீ ஜகந்நாதரின் மனம் விருந்தாவனத்தின் இனிமையான (மாதுர்ய) அன்பை நோக்கியே ஈர்க்கப்படுகிறது. எனவே ஆண்டுக்கு ஒருமுறை அவர் துவாரகையிலிருந்து பிருந்தாவனத்திற்கு செல்லும் பாவனையில் ரதயாத்திரை நடைபெறுகிறது.
ஸ்ரீ சைதன்ய சரிதாமிர்தத்தின் விளக்கம்
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, குண்டிச்சா கோவிலைச் சுற்றியுள்ள தோட்டங்களைக் காட்டி,
“இந்தத் தோட்டங்கள் அனைத்தும் பிருந்தாவனத்தைப் போலவே உள்ளன. அதனால் ஸ்ரீ ஜகந்நாதர் அவற்றைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறார்.”(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்.மத்ய (14.117-120)) என்று கூறினார்.
வெளிப்படையாகப் பார்த்தால், ரதயாத்திரையில் பங்கேற்கவே பகவான் செல்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில், துவாரகையிலிருந்து பிருந்தாவனமான சுந்தராசலத்திற்கு (குண்டிச்சா கோவிலுக்கு) சென்று, அங்குள்ள தூய அன்பை அனுபவிக்கவே அவர் விரும்புகிறார். இதுவே கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ரதயாத்திரையின் மிக உயர்ந்த ஆன்மிகப் பொருளாகக் கருதப்படுகிறது.
நோக்கம் 15: மூன்று தேர்களின் பாரம்பரிய கட்டுமான முறையையும், இந்தப் புனித மரபைப் பாதுகாத்து வரும் பரம்பரை கைவினைக் கலைஞர்களின் சேவையையும் பாராட்டிப் புரிந்துகொள்வது.
ரதங்களின் கட்டுமானம்
ரதயாத்திரைக்கான தயாரிப்புகள் வசந்த பஞ்சமி நாளிலேயே தொடங்குகின்றன. இது ரதயாத்திரைக்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெறும்.
வசந்த பஞ்சமி அன்று, ஒடிசாவின் தசபல்லா மாவட்டத்தில் உள்ள ரணபூர் காடுகளில் இருந்து ரதம் கட்டுவதற்கான புனித மரங்கள் கொண்டு வரப்படுகின்றன. அக்ஷய திருதியை அன்று, பூரியின் படா டாண்டா (Grand Road) பகுதியில் ரதங்களின் கட்டுமானப் பணி முறையாக ஆரம்பமாகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று புதிய ரதங்கள் புதிதாக கட்டப்படுகின்றன. ஆனால் குதிரைகள், சாரதிகள் மற்றும் சில மரச் சிற்பங்கள் மட்டும் நவகலேபர ஆண்டு வரும் போது புதிதாக உருவாக்கப்படுகின்றன. ரதங்களை உருவாக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தச்சர்கள், தொழிலாளர்கள், ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் ஈடுபடுகின்றனர். இந்த அரிய கலை, தலைமுறை தலைமுறையாக பரம்பரை வழியாகக் கற்றுக் கொடுக்கப்பட்டு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஒரு ரதத்தின் 34 முக்கிய பகுதிகள்
ஒவ்வொரு ரதமும் 34 முக்கிய பாகங்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் ரதத்தின் உறுதி, சமநிலை, அழகு மற்றும் பாரம்பரிய வடிவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சக்கரங்கள், தண்டியா, ஆரங்கள், ரங்கி, ஹம்ஸபடா, கனி ஆகியவை ரதத்தின் அடிப்படை அமைப்பையும், சக்கரங்களின் வலிமையையும் உறுதிப்படுத்தும் பகுதிகளாகும்.
சங்கத் துவாரம், ஜாலி, கயபடா, சிம்மாசனம், கனகபுண்டை, பூமி ஆகியவை ரதத்தின் மேற்பகுதி, நுழைவாயில் மற்றும் பகவான் எழுந்தருளும் ஆசன அமைப்புடன் தொடர்புடைய பகுதிகளாகும்.
சோலனஹாகா, மகரதண்டா, வசந்தம், துவார குதிரை, சாரதி பீடம், கும்பபதி ஆகியவை ரதத்தின் முன்பகுதி, அலங்காரம் மற்றும் சாரதியுடன் தொடர்புடைய முக்கிய அமைப்புகளாகும்.
ரகுபதி, அத்நஹாகா, பாங்கா, பீடம், ரிஷிபடா, தண்டா ஆகியவை ரதத்தின் மேல்தளம் மற்றும் அதன் உறுதித்தன்மையை வலுப்படுத்தும் பகுதிகளாக விளங்குகின்றன.
பராபாடி, கபுரி, பாதம், ஒலட் குவா, ததிநௌதி, கலசம், கண்டம், தண்டம், சக்கரம், கேதனம் ஆகியவை ரதத்தின் உச்சிப்பகுதி, கலசம், கொடி மற்றும் இறுதி அலங்கார அமைப்புகளை நிறைவு செய்யும் பகுதிகளாகும்.
இந்த 34 பகுதிகளும் ஒன்றிணைந்து, ஆண்டுதோறும் பகவான் ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் ஸ்ரீ சுபத்ரா தேவிக்காக உருவாக்கப்படும் திவ்ய ரதங்களை முழுமையாக்குகின்றன.
/p>
மூன்று ரதங்களின் விவரங்கள்
| அம்சம் | ஸ்ரீ ஜகந்நாதர் நந்திகோஷம் | சுபத்ரா தேவி தேவதலனம் / தர்ப்பதலனம் | ஸ்ரீ பலதேவர் தாளத்வஜம் |
| மூல தெய்வம் | ஸ்ரீ ஜகந்நாதர் | சுபத்ரா தேவி | ஸ்ரீ பலதேவர் |
| உற்சவ மூர்த்தி | ராம-கிருஷ்ணர் | சுதர்சனர் | மதனமோகனர் |
| ரதத்தின் பெயர் | நந்திகோஷம் | தேவதலனம் (தர்ப்பதலனம்) | தாளத்வஜம் |
| சக்கரங்களின் எண்ணிக்கை | 16 | 12 | 14 |
| உச்சியில் உள்ள சின்னம் | சக்கரம், கருடன் | தாமரை | பனைமரம் |
| ரதத்தின் நிறங்கள் | சிவப்பு – மஞ்சள் | சிவப்பு – கருப்பு | சிவப்பு – பச்சை |
| கொடியின் சின்னம் | கருடத்வஜம் | பத்மத்வஜம் | லாங்குலத்வஜம் |
| உயரம் | 23 கைகள் | 21 கைகள் | 22 கைகள் |
| ரதத்தை இழுக்கும் கயிறு | சங்கசூடா | ஸ்வர்ணசூடா | வாசுகி |
| சக்கரத்தின் சுற்றளவு | 5 கைகள் | 4 கைகள் | 4 கைகள் |
| சாரதி | தாருகன் (அல்லது மாதலி) | தேவதத்தன் (அல்லது அர்ஜுனன்) | சுத்யும்னன் |
| சாரதியின் காவல் தெய்வம் | நரசிம்மர் | வனதுர்கா | அனந்தன் |
| குதிரைகளின் பெயர்கள் | சுக்ஷ்மா, ரேசிகா, மோசிகா, அம்ருதா | அதர்மா, அஜ்ஞானா, அபராஜிதா, ஜ்யோதினி | ஸ்திரா, சித்தா, த்ருதி, ஸ்திதி |
| குதிரைகளின் நிறம் | வெள்ளை | மஞ்சள் | கருப்பு |
| ரதத்தில் எழுந்தருளும் தெய்வங்கள் | வராஹதேவர், கோவர்த்தன கிருஷ்ணர், கோபி கிருஷ்ணர், நரசிம்மர், ராமர், நாராயணர், திரிவிக்ரமர், அனுமன், ருத்ரர் | சண்டி, சாமுண்டா, உக்ரதாரா, வனதுர்கா, ஷோடச துர்கா, வாராஹி | கணேசர், கார்த்திகேயர், சர்வமங்களா, பிரலம்பாக்னர், ஹலாயுதர், மிருத்யுஞ்ஜயர், நாடாம்பரர், மகேஸ்வரர், சேஷன் |
| வாயிலருகே உள்ள தெய்வங்கள் | இந்திரன், பிரம்மா, சப்தரிஷிகள் | ஸ்ரீதேவி, பூதேவி, அஷ்ட பைரவர்கள் | ருத்ரர், சாத்யகி, அஷ்ட வசுக்கள் |
| பொது அலங்காரம் | சக்கரங்களைத் தவிர முழு ரதமும் பல்வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்படுகிறது. | சக்கரங்களைத் தவிர முழு ரதமும் பல்வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்படுகிறது. | சக்கரங்களைத் தவிர முழு ரதமும் பல்வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப் படுகிறது. |
| முன்புற அலங்காரம் | முன்புறத்தில் மரத்தால் செய்யப்பட்ட குதிரைகள் மற்றும் சாரதி; உச்சியில் வண்ணமயமான கொடிகள் அலங்கரிக்கப்படுகின்றன. | முன்புறத்தில் மரத்தால் செய்யப்பட்ட குதிரைகள் மற்றும் சாரதி; உச்சியில் வண்ணமயமான கொடிகள் அலங்கரிக்கப்படுகின்றன. | முன்புறத்தில் மரத்தால் செய்யப்பட்ட குதிரைகள் மற்றும் சாரதி; உச்சியில் வண்ணமயமான கொடிகள் அலங்கரிக்கப் படுகின்றன. |
நோக்கம் 16: ‘பஹாண்டி விஜயா’ என்ற பெயரின் வரலாற்றுத் தோற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரியக் குறிப்புகளை விளக்குவது.

ஸ்ரீ ஜகந்நாதரின் பஹாண்டி விஜயம்
பஹாண்டி விஜயம் – பகவானை ரதத்திற்கு அழைத்து வருதல்
ரதயாத்திரை விழாவின் சடங்குகள், முந்தைய இரவில் கிச்சடி போகம் சமர்ப்பிப்பதுடன் தொடங்குகின்றன. அதன்பின் பஹாண்டி விஜயம் என்ற புனித ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர், சுபத்ரா தேவி மற்றும் சுதர்சனர் கோவிலிலிருந்து பக்தர்களின் மகிழ்ச்சியான கோஷங்களுக்கிடையில் அவரவர் ரதங்களுக்கு எழுந்தருளச் செய்யப்படுகின்றனர்.பஹாண்டி விஜயம் எனப்படும் இந்தப் புனிதச் சடங்கு பொதுவாக சுமார் 3 மணி நேரம் நடைபெறும்.
ஒரு மரபின்படி, இந்த ஊர்வலம் முதலில் பாண்ட்யா விஜயம் என்று அழைக்கப்பட்டது. இது மலையாசல பாண்டா காஞ்சன மாலா என்பவரின் பெயரால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் அந்தப் பெயர் பஹாண்டி விஜயம் என்று மாறியது. ரதங்களை இழுக்கும் புனிதக் கயிறும் காஞ்சன மாலா என்று அழைக்கப்படுகிறது.
மற்றொரு மரபின்படி, கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த தென்னிந்திய மன்னர் பாண்ட்ய விஜயர், தனது குருவான தேவேஸ்வரரின் வழிகாட்டுதலின்படி சனாதன தர்மத்தை நிலைநாட்டி, ரதயாத்திரை மரபை மீண்டும் சிறப்பாக நடத்தினார். அதன் நினைவாக, திருவுருவங்களை கோவிலிலிருந்து ரதங்களுக்கு எழுந்தருளச் செய்யும் இந்த புனித ஊர்வலம் பஹாண்டி விஜயம் என்று அழைக்கப்படத் தொடங்கியது.

தேவி சுபத்ரா வின் பஹாண்டி விஜயம்.
பஹாண்டி விஜயத்தின் வரிசை
விக்ரகங்கள் ரதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வரிசையில் எழுந்தருளுகின்றன.
- முதலில் சுதர்சனர்( கம்ப வடிவ விக்ரகம்) வெளியே கொண்டு வரப்படுகிறார். அவர் மூன்று ரதங்களையும் வலம் வந்து, சுபத்ரா தேவியின் தேவதலனம் ரதத்தில் எழுந்தருளுகிறார்.
- அடுத்ததாக ஸ்ரீ பலபத்ரர், தமது தாலத்வஜ ரதத்தில் எழுந்தருளுகிறார்.
- இறுதியாக ஸ்ரீ ஜகந்நாதர், நந்திகோஷ ரதத்தில் எழுந்தருளுகிறார்.
சுபத்ரா தேவி இளைய சகோதரி என்பதால், முதலில் சுதர்சனரை அவரது ரதத்தில் எழுந்தருளச் செய்வது ஸ்ரீ ஜகந்நாதரின் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது என்று மரபில் கூறப்படுகிறது.
ஸ்ரீ ஜகந்நாதரின் பஹாண்டி
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த புனிதக் காட்சியைக் காண திரளுகின்றனர். ஸ்ரீ ஜகந்நாதரை அவரது சேவகர்கள் மெதுவாக முன்பும் பின்னும் ஆட்டி, ஆடிப்போவதைப் போல சுமந்து வருகிறார்கள். இதைக் காண மிகவும் ஆனந்தமாக இருக்கும். வைஷ்ணவ ஆச்சாரியர்கள், இந்த ஆட்டம் பிருந்தாவனத்தை மீண்டும் அடைய வேண்டும் என்ற பகவானின் ஆழ்ந்த ஏக்கத்தையும் பிரேமையையும் வெளிப்படுத்துவதாக விளக்குகின்றனர்.
முக்கிய திருவுருவங்கள் ரதங்களில் எழுந்தருளிய பின், மதனமோகனர் மற்றும் ராம-கிருஷ்ணர் உற்சவத் திருவுருவங்களும் ஸ்ரீ ஜகந்நாதரின் ரதத்தில் எழுந்தருளுகின்றனர்.
குண்டிச்சா கோவிலில் ஏழு நாட்கள் தங்குவதற்குத் தேவையான திருவஸ்திரங்கள் மற்றும் திருவாபரணங்கள் அடங்கிய பெரிய பெட்டியும் ரதத்தில் ஏற்றப்படுகிறது. இறுதியாக, ஸ்ரீ ஜகந்நாதரின் திருநெற்றியில் பொன்னாலான திலகம் அணிவிக்கப்படுகிறது.
நோக்கம் 17: ரத யாத்திரை ஊர்வலம் தொடங்குவதற்கு முன் நடைபெறும் சடங்குகளை அறிந்துகொள்வது.
சேரா பஹன்ரா – ரதப் பயணத்தின் தொடக்கம்
கஜபதி மன்னர் பரம்பரை
கஜபதி மன்னர் என்பது ஒடிசாவின் அரச வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களின் பட்டமாகும். இன்றும் ஸ்ரீ ஜகந்நாதர் கோவிலின் மரபுப்படி, தற்போதைய கஜபதி மன்னர் அரச அலங்காரப் பல்லக்கில் வந்து சேருகிறார். அவர் சேரா பஹன்ரா என்ற புனிதச் சடங்கைச் செய்கிறார்.
இந்தச் சடங்கில், தங்கத்தால் செய்யப்பட்ட துடைப்பத்தை கொண்டு ரதங்களின் முன்புள்ள பாதையைப் பெருக்குகிறார். இதன் மூலம், பகவானின் முன்னிலையில் அனைவரும் சமம்; மன்னர்கூட பகவானின் பணிவான சேவகரே என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறார்.
இந்தச் சடங்கு நிறைவடைந்த பிறகு, பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ரதங்களை இழுக்கத் தொடங்குகின்றனர்.

சேரா பஹன்ரா செய்யும் தற்போதைய கஜபதி மன்னர்.
ரதங்கள் புறப்படும் புனித நிகழ்வு
ரதங்கள் புறப்படுவதற்கு முன், அவற்றிற்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது. பின்னர் சந்தன நீர் தெளிக்கப்படுகிறது. சாமரம் (யாக் வால் விசிறி) கொண்டு பகவானுக்கு சேவை செய்யப்படுகிறது. அதன் பிறகு, சாரதிகள் தங்கள் இடங்களில் அமர்கிறார்கள். குதிரைகள் ரதங்களில் பூட்டப்பட்டு, ரதங்கள் பயணத்திற்குத் தயாராகின்றன.
ரதங்கள் பின்வரும் வரிசையில் புறப்படுகின்றன:
- ஸ்ரீ பலபத்ரரின் தாலத்வஜ ரதம்
- சுபத்ரா தேவியின் தேவதளன ரதம்
- ஸ்ரீ ஜகந்நாதரின் நந்திகோஷ ரதம்
மரபின்படி, ஸ்ரீ ஜகந்நாதரின் ரதம் நகரத் தொடங்கும் நேரத்தில் இந்திரன் மழை பொழிவார் என்று நம்பப்படுகிறது.
மேளதாளம், சங்கு முழக்கம், ஹரிநாம சங்கீர்த்தனம் ஆகியவற்றின் மத்தியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஹரே கிருஷ்ணா” எனப் புனித நாமங்களைப் பாடிக்கொண்டு ரதங்களை இழுத்து குண்டிச்சா கோவிலை நோக்கிச் செல்கின்றனர்.
குண்டிச்சா கோவிலுக்கான பயணம்
குண்டிச்சா கோவிலுக்கு (சுந்தராசலம்) செல்லும் வழியில், ஸ்ரீ ஜகந்நாதர் பல இடங்களில் பக்தர்கள் சமர்ப்பிக்கும் போகங்களை கருணையுடன் ஏற்றுக்கொள்கிறார்.
பொதுவாக மாலைக்குள் ரதங்கள் குண்டிச்சா கோவிலை அடைகின்றன. சில சமயங்களில் பயணம் முழுமையடையவில்லை என்றால், மறுநாள் காலை தொடர்கிறது.
குண்டிச்சா கோவிலை அடைந்த பிறகு, மூன்று ரதங்களும் கோவிலின் முன்பாக நிறுத்தப்படுகின்றன. அன்று இரவு ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர், சுபத்ரா தேவி மற்றும் சுதர்சனர் ரதங்களிலேயே எழுந்தருளியிருப்பார்கள்.
மறுநாள் காலை, பஹாண்டி முறையில் பகவான்கள் ரதங்களிலிருந்து குண்டிச்சா கோவிலுக்குள் எழுந்தருளச் செய்யப்படுகின்றனர். அங்கு அவர்கள் ஏழு நாட்கள் தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இந்தக் காலத்தில் தினமும் சிறப்பு ஆரத்தி, போகம், அலங்காரம், கீர்த்தனம் மற்றும் பிற வைணவ திருவிழா சேவைகள் நடைபெறுகின்றன. இந்தியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டிச்சா கோவிலில் பகவானின் தரிசனத்தைப் பெற்று ஆனந்தம் அடைகின்றனர்.

குண்டிச்சா கோவிலில் ரதங்கள்
நோக்கம் 18: ஸ்ரீ மகாலட்சுமி தேவி ஏன் குண்டிச்சா கோவிலுக்குச் செல்கிறார் என்பதையும், அவருடைய கோபம் மற்றும் மீண்டும் ஸ்ரீ மந்திருக்கு திரும்புதல் ஆகியவற்றின் குறியீட்டு ஆன்மிக அர்த்தத்தை அறிந்துகொள்வது.
ஹேரா பஞ்சமி
ரதயாத்திரையின் நான்காவது நாளில், ஹேரா பஞ்சமி என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.
ரதயாத்திரைக்கு புறப்படும் முன், ஸ்ரீ ஜகந்நாதர், இரண்டு நாட்களுக்குள் திரும்பி வருவேன் என்று மகாலட்சுமி தேவியிடம் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் இன்னும் திரும்பி வராததால், மகாலட்சுமி தேவி கோபம் கொள்கிறார். அவர் அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் குண்டிச்சா கோவிலுக்கு எழுந்தருளுகிறார். அங்கு, பகவானின் சேவகர்களைக் கண்டித்து, ஸ்ரீ ஜகந்நாதரின் ரதத்தின் ஒரு சிறிய பகுதியை அடையாளமாக சேதப்படுத்துகிறார். பின்னர், மீண்டும் ஸ்ரீ மந்திருக்கு திரும்பிச் செல்கிறார். இந்த நிகழ்வு, பகவானுக்கும் மகாலட்சுமி தேவிக்கும் இடையிலான தெய்வீக அன்பையும் இனிய லீலையையும் நினைவுபடுத்துகிறது.
சந்தியா தரிசனம்
ரதயாத்திரையின் ஏழாவது நாளில், குண்டிச்சா கோவிலில் சந்தியா தரிசனம் நடைபெறுகிறது. அன்று மாலை, பக்தர்கள் ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர், சுபத்ரா தேவி மற்றும் சுதர்சனர் ஆகியோரின் சிறப்பு மாலை தரிசனத்தைப் பெற்று பேரானந்தம் அடைகின்றனர்.
நோக்கம் 19: ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி ஸ்ரீ மந்திருக்கு திரும்பி வருவதைக் குறிக்கும் பாஹுடா ரத யாத்திரையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.
பாகுடா ரதயாத்திரை (திரும்பும் ரதப் பயணம்)
ரதயாத்திரையின் ஒன்பதாவது நாளில், பாகுடா ரதயாத்திரை (திரும்பும் ரதப் பயணம்) தொடங்குகிறது. பகவான்கள் மீண்டும் ஸ்ரீ மந்திரை நோக்கிப் புறப்படுகின்றனர். ரதங்கள் புறப்பட்டபோதுள்ள அதே வரிசையில் திரும்புகின்றன:
- ஸ்ரீ பலபத்ரரின் தாலத்வஜ ரதம்
- சுபத்ரா தேவியின் தேவதளன ரதம்
- ஸ்ரீ ஜகந்நாதரின் நந்திகோஷ ரதம்
திரும்பும் ரதயாத்திரையில் பக்தர்களின் கூட்டம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், பக்தர்கள் ரதங்களுக்கு அருகில் சென்று தரிசனம் செய்யவும், ரதங்களை இழுக்கும் பாக்கியத்தைப் பெறவும் அதிக வாய்ப்பு கிடைக்கிறது.
மௌசி மா கோவிலில் போட பீதா சமர்ப்பிப்பு
திரும்பும் வழியில், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி நேராக ஸ்ரீ ஜகந்நாதர் கோவிலின் சிம்மத்வாரத்தை அடைகின்றனர். ஆனால் ஸ்ரீ ஜகந்நாதரின் நந்திகோஷ ரதம், முதலில் மௌசி மா (அர்தசனி) கோவிலில் நிற்கிறது. அங்கு பகவானுக்கு மிகவும் பிரியமான போட பீதா என்ற பாரம்பரிய இனிப்பு சமர்ப்பிக்கப்படுகிறது.
லட்சுமி–நாராயணர் சந்திப்பு (சஹானி மிலனம்)
பின்னர், ஸ்ரீ ஜகந்நாதரின் ரதம் கஜபதி மன்னரின் அரண்மனை அருகில் நிற்கிறது.
அப்போது மகாலட்சுமி தேவி, பல்லக்கில் சஹானி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு ஸ்ரீ ஜகந்நாதரும் மகாலட்சுமி தேவியும் ஒருவரை ஒருவர் அன்புடன் தரிசிக்கும் புனித நிகழ்வு நடைபெறுகிறது. இது லட்சுமி–நாராயணர் பேட்டா அல்லது சஹானி மிலனம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில், ஸ்ரீ ஜகந்நாதர் தமது மலரை மகாலட்சுமி தேவிக்கு அளிக்கிறார். பின்னர் மகாலட்சுமி தேவி ரதத்தை வலம் வந்து மீண்டும் ஸ்ரீ மந்திருக்குத் திரும்பிச் செல்கிறார்.
சிம்மத்வாரத்தில் பக்தர்களுக்கு தரிசனம்
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, நந்திகோஷ ரதம் ஸ்ரீ மந்திரின் சிம்மத்வாரத்தை அடைகிறது. அங்கு தசமி முதல் திரயோதசி வரை, ஸ்ரீ ஜகந்நாதர் தமது ரதத்திலேயே எழுந்தருளி, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்மிகு தரிசனம் அளிக்கிறார்.

சுனா வேஷத்தில் (தங்க அலங்காரம்) பகவான்கள்
சுனா வேஷம் (தங்க அலங்காரம்)
பாகுடா ரதயாத்திரைக்குப் பிறகு, ஏகாதசி நாளில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் சுனா வேஷம் நடைபெறுகிறது.
அன்று ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி தங்க ஆபரணங்களால் அற்புதமாக அலங்கரிக்கப்படுகின்றனர். இந்தத் தங்க ஆபரணங்களின் மொத்த எடை சுமார் 208 கிலோகிராம் ஆகும்.
இந்த அபூர்வமான தங்க அலங்கார தரிசனம் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அரிய தரிசனத்தைப் பெற பூரிக்கு வருகை தருகின்றனர். பகவானின் இந்த ஒளிமிகு திவ்ய அலங்காரம் சுனா வேஷம் என்று அழைக்கப்படுகிறது.

அதரபானம்

அதரபானம்
ரதயாத்திரையின் துவாதசி நாளில், அதரபானம் என்ற புனிதச் சடங்கு நடைபெறுகிறது.
இந்தச் சடங்கில், ஒன்பது மண் பானைகளில் இனிப்பும் நறுமணப் பொருட்களும் கலந்த சிறப்பு பானம் நிரப்பப்பட்டு, ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோருக்கு அவர்களின் ரதங்களிலேயே சமர்ப்பிக்கப்படுகிறது.
படையல் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அந்த மண் பானைகள் உடைக்கப்படுகின்றன.
இந்தச் சடங்கு பணிவு, அகந்தையைத் துறத்தல் மற்றும் பகவானின் அருள் அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த ஆன்மீகப் பொருளை எடுத்துரைக்கிறது. மரபின்படி, இந்தப் பானம் ரதங்களில் தங்கியிருக்கும் தெய்வீக சக்திகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது.
நீலாத்ரி விஜயம் (விஜய உத்ஸவம்)
திரயோதசி நாளில், நீலாத்ரி விஜயம் (விஜய உத்ஸவம்) என்ற புனிதத் திருவிழா நடைபெறுகிறது. இதன் மூலம் ரதயாத்திரை விழா இனிதே நிறைவடைகிறது. முதலில் சுதர்சனர், பின்னர் ஸ்ரீ பலபத்ரர், சுபத்ரா தேவி ஆகியோர் கோவிலுக்குள் எழுந்தருளுகின்றனர். இறுதியாக ஸ்ரீ ஜகந்நாதர் கோவிலுக்குள் எழுந்தருள வருகிறார்.
அப்போது, ஒரு இனிய தெய்வீக லீலையாக, மகாலட்சுமி தேவியின் சேவகர்கள் ஸ்ரீ ஜகந்நாதரை உடனே கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. இதற்குக் காரணம், பகவான் நீண்ட நாட்கள் குண்டிச்சா கோவிலில் தங்கி, தாம் அளித்த வாக்குறுதியின்படி விரைவில் திரும்பி வராதது ஆகும்.பின்னர், மகாலட்சுமி தேவியின் சேவகர்களுக்கும் ஸ்ரீ ஜகந்நாதரின் சேவகர்களுக்கும் இடையே நகைச்சுவை நிறைந்த உரையாடல் நடைபெறுகிறது.
இறுதியில், ஸ்ரீ ஜகந்நாதர் மகாலட்சுமி தேவிக்கு ரசகுல்லா, மலர் மாலைகள் மற்றும் பரிசுப் பொருட்களை சமர்ப்பித்து அவரை மகிழ்விக்கிறார். அவற்றை ஏற்றுக்கொண்ட மகாலட்சுமி தேவி, ஸ்ரீ ஜகந்நாதரை மீண்டும் ஸ்ரீ மந்திருக்குள் எழுந்தருள அனுமதிக்கிறார். இவ்வாறு, நீலாத்ரி விஜயம் திருவிழாவுடன் அந்த ஆண்டின் ரதயாத்திரை விழா ஆனந்தமாக நிறைவடைகிறது.
நோக்கம் 20: கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் பார்வையில், ரத யாத்திரை என்பது ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலிருந்து விருந்தாவனத்திற்குத் திரும்புவதைக் குறிக்கும் திவ்ய நிகழ்வாகவும், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் உள்மனப் பாவத்தையும், ஸ்ரீல பிரபுபாதரின் விளக்கத்தையும் புரிந்துகொள்வது.
கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் பார்வை—பிருந்தாவனத்துடன் ரதயாத்திரையின் தொடர்பு
கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி, ரதயாத்திரை என்பது ஸ்ரீ கிருஷ்ணரை மீண்டும் பிருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பக்தர்களின் ஆழ்ந்த ஏக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் திருவிழாவாகும்.
ஸ்ரீ கிருஷ்ணர் பிருந்தாவனத்தை விட்டு துவாரகைக்குச் சென்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு, குருக்ஷேத்திரத்தில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்கு கூடினர். அந்த நேரத்தில், பிருந்தாவனத்தின் கோபியர்களும் கிருஷ்ணரை மீண்டும் சந்தித்தனர்.
நீண்ட காலப் பிரிவிற்குப் பிறகு கிருஷ்ணரைப் பார்த்ததில் அவர்கள் பேரானந்தம் அடைந்தாலும், அவர்களின் மனம் முழுமையாகத் திருப்தியடையவில்லை. ஏனெனில், அரச ஆடையில் ராஜாவாக இருந்த கிருஷ்ணரை அல்ல, பசுக்களை மேய்க்கும் எளிய கோபாலனாக, பிருந்தாவனத்தில் இருந்த அதே அன்பு நிறைந்த கிருஷ்ணரையே அவர்கள் காண விரும்பினர்.
தங்கள் அளவற்ற அன்பின் காரணமாக, கிருஷ்ணரை மீண்டும் பிருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோபியர்கள் ஏங்கினர். இதையே அடையாளமாகக் காட்டும் வகையில், பகவானை ரதத்தில் அமர வைத்து, தங்கள் அன்பின் வலிமையால் ரதத்தை இழுத்தனர் என்று கூறப்படுகிறது.
எனவே, ரதயாத்திரை என்பது குருக்ஷேத்திரத்திலிருந்து பிருந்தாவனத்திற்கு கிருஷ்ணரை மீண்டும் அழைத்துச் செல்லும் பக்தர்களின் அன்பு நிறைந்த விருப்பத்தை குறிக்கிறது.

கோபியர் நடத்திய ரத யாத்திரை மற்றும்
புரி ரத யாத்திரையில் சைதன்ய மகாபிரபு
ரதயாத்திரையின் ஆன்மீகத் தத்துவம்
1. கிருஷ்ணரை பிருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்வது
கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில், ரதயாத்திரை என்பது ஸ்ரீமதி ராதாராணியும் கோபியர்களும், துவாரகையில் அரச கோலத்தில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை (ஸ்ரீ ஜகந்நாதரை) மீண்டும் அவரது இயல்பான இருப்பிடமான பிருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அன்பு நிறைந்த ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது.
2. தூய பிரேமையின் உணர்வு
பிருந்தாவன வாசிகள், அரச அலங்காரத்தில் இருக்கும் கிருஷ்ணரை அல்ல, கோபாலனாக இருக்கும் இயல்பான கிருஷ்ணரையே காண விரும்பினர். அவர்களுடைய தூய்மையான, சுயநலமற்ற பிரேமை தான் ரதயாத்திரையின் மையக் கருத்தாகும்.
3. ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் போதனை
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ ஜகந்நாதரின் ரதத்தை இழுத்தபோது, கிருஷ்ணரை மீண்டும் பிருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்லும் கோபியர்களின் மனநிலையிலேயே இருந்தார். ஸ்ரீல பிரபுபாதர் போதித்ததாவது, ரதயாத்திரையைக் கொண்டாடுவதன் உண்மையான நோக்கம் ஸ்ரீ கிருஷ்ணரை நமது இதயமாகிய பிருந்தாவனத்தில் மீண்டும் எழுந்தருளச் செய்வதே என்பதாகும்.
ரதயாத்திரையை தரிசிப்பதன் மகிமை
ஸ்ரீல பிரபுபாதர் விளக்குவதாவது, ஸ்ரீ ஜகந்நாதரின் ரதயாத்திரையை தரிசிப்பதால் பாவங்கள் நீங்கி, முக்திக்கான பாதை திறக்கப்படுகிறது. இந்த அருளை முழுமையாகப் பெற, பாவச் செயல்களைத் தவிர்த்து, பக்தி சேவையில் நிலைத்திருக்க வேண்டும்.
ரதயாத்திரை என்பது பகவானின் கருணை பொழியும் திருவிழாவாகும். ஸ்ரீ ஜகந்நாதர் கோவிலுக்குள் வெளிநாட்டினரும் இந்து சமயத்தைச் சாராதவர்களும் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, ஸ்ரீ ஜகந்நாதர் தாமே கோவிலிலிருந்து வெளியே வந்து அனைவருக்கும் தரிசனம் அளிக்கிறார்.
பகவான் ரதத்தில் எழுந்தருளி வரும்போது, அவரது திருமேனியைத் தொட்ட காற்று, அவரது கருணை நிறைந்த திருப்பார்வை, ரதம் நகரும்போது எழும் புனிதத் தூசி ஆகியவை பக்தர்களை உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துகின்றன. மேலும், பல பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவுகளிலிருந்தும் விடுபட அருள் புரிகின்றன என்று சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
ஸ்ரீ ஜகந்நாதர் ரதத்தில் எழுந்தருளுவது, தமது பக்தர்களுக்கு தரிசன பாக்கியத்தையும் பேரானந்தத்தையும் வழங்குவதற்காகவே. அவரது ரதயாத்திரை, எல்லா மக்கள்மீதும் அவர் கொண்டுள்ள எல்லையற்ற கருணையின் வெளிப்பாடாகும்.
நோக்கம் 21: ஜகந்நாத புரியின் இருப்பிடத்தை அறிந்து, உலகின் மிகப் புனிதமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாக அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.
ஜகந்நாத புரி – அமைவிடம்
ஸ்ரீ ஜகந்நாத புரி, கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா (முன்பு ஒரிசா) மாநிலத்தில், வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. இது கொல்கத்தாவிற்கு தெற்கே சுமார் 310 மைல்கள் (500 கி.மீ.) தொலைவில் உள்ளது.
ஒடிசா மாநிலம் பண்டைய காலத்தில் உத்கலம் மற்றும் உத்ரதேசம் என்ற பெயர்களால் அறியப்பட்டது.ஸ்ரீ ஜகந்நாத புரி, பல நூற்றாண்டுகளாக உலகின் மிகவும் புனிதமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாக பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.

