அத்தியாயம் – 18
பலராமர் பிரலம்பாசுரனை அழித்தல்
பதம் 10.18.1
ஸ்ரீ-ஸுக-உவாச
அத க்ருஷ்ண: பரிவ்ருதோ ஜ்ஞாதிபிர் முதிதாத்மபி:
அனுகீயமானோ ந்யவிஸத் வ்ரஜம் கோகுல-மண்டிதம்

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அத—அதன்பிறகு; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; பரிவ்ருத:—சூழப்பட்டு; ஜ்ஞாதிபி:—அவரது நண்பர்களினால்; முதிதா-ஆத்மபி:—இயல்பிலேயே மகிழ்ச்சியாக இருந்தவர்கள்; அனுகீயமான:—அவரது பெருமைகள் இசைக்கப்பட்டு; ந்யவிஸத்—புகுந்தனர்; வ்ரஜம்—விரஜத்தினுள்; கோ-குல—கோகுலத்தினுள்; மண்டிதம்—அணி செய்யப்பட்டது.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தமது இனிமையான நண்பர்கள் அவரது புகழைப் பாடிக் கொண்டே உடன்வர ஸ்ரீ கிருஷ்ணர், பசுக்கூட்டங்களினால் அழகு செய்யப்பட்டிருக்கும் விரஜ கிராமத்தினுள் புகுந்தார்.

பதம் 10.18.2
வ்ரஜே விக்ரீடதோர் ஏவம் கோபாலச்-சத்ம-மாயயா
க்ரீஷ்மோ நாமர்துர் அபவன் நாதி-ப்ரேயாஞ் சரீரிணாம்

வ்ரஜே—விருந்தாவனத்தில்; விக்ரீடதோ:—இருவரும் விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கையில்; ஏவம்—இவ்வாறு; கோபால—கோபாலர்கள்; சத்ம—மறைத்துக் கொண்டு; மாயயா—மாயையினால்; க்ரீஷ்ம:—கோடைக்காலம்; நாம—பெயரில்; ருது:—பருவகாலம்; அபவத்—வந்தது; ந—இல்லை; அதிப்ரேயான்—மிகுந்த பிரியத்திற்கு; ஸரீரிணாம்—உடல் பெற்றவர்களால்.

கிருஷ்ணரும், பலராமரும், ஆயர்குலச் சிறுவர்கள் என்னும் போர்வையில் தம்மை மறைத்துக்கொண்டு விருந்தாவனத்தில் மகிழ்ச்சியுடன் இருந்த போது கோடைக்காலம் வந்தது. இப்பருவமானது உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அத்துணை மகிழ்ச்சியளிக்கக் கூடியதல்ல.

பதம் 10.18.3
ஸ ச வ்ருந்தாவன-குணைர் வஸந்த இவ லக்ஷித:
யத்ராஸ்தே பகவான்ன் ஸாக்ஷாத் ராமேண ஸஹ கேஸவ:

ஸ—இந்த (கோடைகாலம்); ச—இருந்தும்; வ்ருந்தாவன—ஸ்ரீ விருந்தாவனத்தில்; குணை:—உன்னதக் குணங்களினால்; வஸந்த—வசந்த காலம்; இவ—போன்று; லக்ஷித:—தன்மை உடையதாக; யத்ர—இங்கு (விருந்தாவனத்தில்); ஆஸ்தே—இருந்ததினால்; பகவான்—முழுமுதற் கடவுள்; ஸாக்ஷாத்—தனிப்பட்டமுறையில்; ராமேண-ஸஹ—பகவான் பலராமருடன் இணைந்து; கேஸவ:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

ஆயினும் விருந்தாவனத்தில் முழுமுதற் கடவுள் தனிப்பட்ட முறையில் பலராமருடன் சேர்ந்து இருந்த காரணத்தினால் கோடைக்காலம் கூட வசந்தகாலத்தின் தன்மைகளைக் கொண்டு சுகமளிப்பதாக இருந்தது. இவைதான் விருந்தாவனத்தின் விசேஷத் தன்மைகளாகும்.

பதம் 10.18.4
யத்ர நிர்ஜர-நிர்ஹ்ராத-நிவ்ருத்த-ஸ்வன-ஜில்லிகம்
ஸஸ்வத்த தச்-சீகரர்ஜீஷ-த்ரும-மண்டல-மண்டிதம்

யத்ர—இங்கே (விருந்தாவனத்ததில்); நிர்ஜர—அருவி; நிர்ஹ்ராத—எதிரொலி; நிவ்ருத்த—நின்றது; ஸ்வன—ஒலி; ஜில்லிகம்—சின்ன வண்டுகளின்; ஸஸ்வத்—தொடர்ந்து; தத்—அதன் (அருவியின்); ஸீகர—நீர்த்துளிகளினால்; ருஜீஷ—நனைத்தன; த்ரும—மரங்களின்; மண்டல—கூட்டங்கள்; மண்டிதம்—அணிசெய்தன.

விருந்தாவனத்தில் அருவிகளிலிருந்து எழும் பேரோசையானது, சின்னவண்டுகளின் ஒசையினை மறையச் செய்யும். அருவிகளிலிருந்து தெறிந்து விழும் நீர்த்துளிகள் அங்குள்ள மரங்களை நனைத்து அவற்றின் பசுமையினை அதிகரிப்பதின் மூலம் அந்த இடத்திற்கே ஓர் அழகு செய்யும்.

பதம் 10.18.5
ஸரித்-ஸர: ப்ரஸ்ரவணோர்மி-வாயுனா
கஹ்லார-கஞ்ஜோத்பல-ரேணு-ஹாரிணா
ந வித்யதே யத்ர வனௌகஸாம் தவோ
நிதாக-வஹ்ணி-அர்க்க-பவோ ‘தி-ஸாத்வலே

ஸரித்—நதிகளின்; ஸர:—குளங்கள்; ப்ரஸ்ரவன—வேகமாகப் பெருக்கெடுத்து ஓடுவது (இதனுடன் தொடர்பு கொண்டு); உர்மி—அலைகள்; வாயுனா—காற்றினால்; கஹ்லார-கஞ்ஜ-உத்பல—கஸ்லாரம், கஞ்சம், உத்பலம் என்னும் தாமரை மலர்கள்; ரேணு—மகரந்தம்; ஹாரிணா—அது சுமந்து கொண்டு; ந வித்யதே—அங்கு இல்லை; யத்ர—இங்கே; வன-ஒகஸாம்—வனத்தில் வாழ்பவர்கள்; தவ:—சுட்டெரிக்கும் வெம்மை; நிதாக—கோடைகாலம்; வஹ்னி—காட்டுத் தீயினால்; அர்க்க—சூரியன்; பவ:—உண்டான; அதி-ஸாத்வலே—பசும்புற்கள் அங்கே ஏராளமாக இருக்கும்.

வீசும் காற்று அங்குள்ள குளங்களில் அலைகளை எழுப்பும். பாய்ந்து ஓடும் நீரில் பல்வகைத் தாமரை மற்றும் அல்லி மலர்களின் மகரந்தத்தூள் கலந்திருக்கும். அந்நதி விருந்தாவனத்தினை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். அதனால் அங்குள்ளவர்கள், சுட்டெரிக்கும் கோடை சூரியனின் வெம்மையாலோ, காடுகளில் பற்றி எரியும் நெருப்பினாலோ துன்புறுவதில்லை. உண்மையில் விருந்தாவனத்தில் எங்கும் பசும்புல் படர்ந்து நிறைந்திருக்கும்.

பதம் 10.18.6
அகாத-தோய-ஹ்ரதினீ-தடோர்மிபிர்
த்ரவத்-புரீஷ்யா: புளினை: ஸமந்தத:
ந யத்ர சண்டாம்ஸு-கரா விஷோல்பணா
புவோ ரஸம் ஸாத்வலிதம் ச க்ருஹ்ணதே

அகாத—மிகவும் ஆழமான; தோய—அதன் நீர்; ஹ்ரதினீ—நதிகளின்; தட—கரைகளில்; ஊர்மிபி—அலைகளினால்; த்ரவத்—நனைந்து; புரீஷ்யா:—அதன் சேறு; புளினை:—மணல் மிகுந்த கரைகளினால்; ஸமந்தத:—எல்லாப் பக்கங்களிலும்; ந—இல்லை; யத்ர—இங்கு; சண்ட—சூரியனின்; அம்ஸு-கரா:—கதிர்கள்; விஷ—விஷத்தைப் போன்று; உல்பணா:—கடுமையான; புவ—பூமியின்; ரஸம்—ரஸம்; ஸாத்வலிதம்—பசுமை; ச—மற்றும்; க்ருஹ்ணதே—எடுத்துக் கொள்வது.

ஆழமான நதிகளிலிருந்து உருண்டோடி வரும் அலைகள் கரைகளில் பாய்ந்து அங்குள்ள மணற்பகுதியினை நனைத்துச் சேறாக்கும். அதனால் கொடிய விஷத்திற்கு ஒப்பான சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்களால் அங்குள்ள நிலத்தின் ஈரத் தன்மையினை உலரச் செய்யவோ அல்லது பசும் புற்களை வாடச் செய்யவோ முடியாது.

பதம் 10.18.7
வனம் குஸுமிதம் ஸ்ரீமன் நதச்-சித்ர-ம்ருக-த்விஜம்
காயன் மயூர-ப்ரமரம் கூஜத்-கோகில-ஸாரஸம்

வனம்—வனம்; குஸுமிதம்—மலர்கள் நிறைந்து; ஸ்ரீமத்—மிகவும் அழகிய; நதச்—ஒலியினைச் செய்யும்; சித்ர—பல்வனை; ம்ருக—மிருகங்கள்; த்விஜம்—மற்றும் பறவைகள்; காயன்—பாடும்; மயூர—மயில்கள்; ப்ரமரம்—வண்டுகள்; கூஜத்—கூவும்; கோகில—குயில்கள்; ஸாரஸம்—நாரைகள்.

விருந்தாவனத்தில் உள்ள காடுகளில் பல்வண்ண மலர்கள் நிறைந்து அவற்றிற்கு எழிலூட்டும் மற்றும் அக்காடுகளில் உள்ள பல்வேறு மிருகங்களும், பறவைகளும் வெவ்வேறு விதமான ஒலிகளைச் செய்யும். அங்கு மயில்கள் ஆடும், வண்டுகள் ரீங்காரமிடும், குயில்கள் பாடும், நாரைகள் ஒலி எழுப்பும்.

பதம் 10.18.8
க்ரீடி-ஷ்யமாணஸ் தத் க்ருஷ்ணோ பகவான் பல-ஸம்யுத:
வேணும் விரணயன் கோபைர் கோ-தனை: ஸம்வ்ருதோ ‘விஸத்

க்ரீடிஷ்யமாண:—விளையாடும் எண்ணத்தில்; தத்—அது; (விருந்தாவனக் காடு); க்ருஷ்ண:—கிருஷ்ணர்; பகவான்—முழுமுதற் கடவுள்; பல-ஸம்யுத:—பலராமருடன் சேர்ந்து; வேணும்—அவரது புல்லாங்குழல்; விரணயன்—ஒலிசெய்து; கோபை:—கோபாலர்களினால்; கோ-தனை:—அவர்களின் செல்வமான பசுக்கள்; ஸம்வ்ருத:—சூழ்ந்துவர; அவிஸத்—அவர் சென்றார்.

விளையாட வேண்டும் என்னும் விருப்பத்தில் முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர், பலராமருடன் சேர்ந்துகொண்டு ஆயர்குலச் சிறுவர்களும், பசுக்களும் உடன் வர, தமது புல்லாங்குழலிலிருந்து இனிய கீதம் இசைத்தவாறே விருந்தாவனக் காட்டினுள் சென்றார்.

பதம் 10.18.9
ப்ரவான-பர்ஹ-ஸ்தபக-ஸ்ரக்-தாது-க்ருத-பஷணா:
ராம-க்ருஷ்ணாதயோ கோபா நன்ருதுர் யுயுதுர் ஜகு:

ப்ரவான—புதிதாக துளிர்த்த இலைகள்; பர்ஹ—மயில் இறகுகள்; ஸ்தபக—சிறு மலர்க் கொத்துக்கள்; ஸ்ரக்—மாலைகள்; தாது—வண்ண தாதுக்கள்; க்ருத-பஷணா:—தமது அணிகலன்களாக அணிந்து கொண்டு; ராம-க்ருஷ்ண-ஆதய:—பகவான் பலராமர் மற்றும் பகவான் கிருஷ்ணரின் தலைமையின் கீழ்; கோபா—கோபாலர்கள்; நன்ருதுர்:—ஆடினர்; யுயுது:—யுத்தம் செய்வர்; ஜகு:—பாடினர்.

பசிய இலைகள், மயிலிறகுகள், மாலைகள், மலர்க்கொத்துக்கள், மற்றும் தாதுக்கள் போன்றவற்றை ஆபரணங்களாக அணிந்து கொண்ட பலராமரும், கிருஷ்ணரும் தமது ஆயர்குல நண்பர்களுடன் சேர்ந்து ஆடினர், பாடினர் மற்றும் கட்டிப்பிடித்து சண்டைப் போட்டனர்.

பதம் 10.18.10
க்ருஷ்ணஸ்ய ந்ருத்யத: கேசிஜ் ஜகு: கேசித் அவாதயன்
வேணு-பாணிதலை: ஸ்ருங்கை: ப்ரஸஸம்ஸுர் அதாபரே

க்ருஷ்ணஸ்யந்ருத்யத:—கிருஷ்ணர் ஆடும்பொழுது; கேசித்—சிலர்; ஜகு:—பாடினர்; கேசித்—சிலர்; அவாத்யன்—இசைக்கருவிகளை இசைத்தனர்; வேணு—புல்லாங்குழல்களுடன்; பாணி-தலை:—சிலர் தாளம் போட்டனர்; ஸ்ருங்கை:—மாட்டுக் கொம்புகளினாலான ஊது குழல்கள்; ப்ரஸஸம்ஸு:—போற்றினர்; அத—மற்றும்; அபரே—பிறர்.

கிருஷ்ணர் ஆடிய போது, அவரது ஆட்டத்திற்கேற்ப சிலர் பாடினர், சிலர் புல்லாங்குழல், தாளம் ஊது கொம்புகளிலிருந்து இனிய இசை எழுப்பினர், மற்றும் சிலர் அவரது ஆட்டத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

பதம் 10.18.11
கோப-ஜாதி-ப்ரதிச்சன்னா தேவா கோபால்-ரூபிணௌ
ஈதிரே க்ருஷ்ண-ராமௌ ச நடா இவ நடம் ந்ருப

கோப-ஜாதி—ஆயர்குலத்தைப் சேர்ந்தவர்கள்; ப்ரதிச்-சன்னா:—மறைத்துக் கொண்டு; தேவா:—தேவர்கள்; கோபால-ரூபிணௌ—ஆயர்குலச் சிறுவர்கள் வடிவம் மேற்கொண்டனர்; ஈதிரே—அவர்கள் வழிபட்டனர்; க்ருஷ்ண-ராமௌ—பகவான் கிருஷ்ணரையும் பகவான் பலராமரையும்; ச—மற்றும்; நடா:—தேர்ந்த நடனக் கலைஞர்கள்; இவ—போன்று; நடம்—மற்றொரு நடனக் கலைஞனை; ந்ருப—ஓ, மன்னனே.

ஓ, மன்னனே, தேவர்கள் தம்மை மறைத்துக் கொண்டு ஆயர்குலச் சிறுவர்களாக உருவெடுத்தனர். தேர்ந்த நடனக் கலைஞர் மற்றொரு நடனக் கலைஞனைப் பாராட்டுவது போல் அவர்கள் கிருஷ்ணரையும், பலராமரையும் வழிபட்டனர். அவர்கள் இருவரும் கூட ஆயர்குலச் சிறுவர்களாகத்தான் தோன்றியுள்ளனர்.

பதம் 10.18.12
ப்ரமணைர் லங்கனை: க்ஷேபைர் ஆஸ்போடன-விகர்ஷணை:
சிக்ரீடதுர் நியுத்தேன காக-பக்ஷ-தரௌ க்வசித்

ப்ரமணை:—சுழன்றாடுதல்; லங்கனை:—குதித்தல்; க்ஷேபை:—எறிதல்; ஆஸ்போடன—அடித்தல்; விகர்-ஷணை:—இழுத்தல்; சிக்ரீடது:—அவர்கள் (கிருஷ்ணரும், பலராமரும்) விளையாடினர்; நியுத்தேன—சண்டை செய்தல்; காகபக்ஷ—அவர்கள் தலையிலுள்ள சடைமுடி; தரௌ—பிடித்து இழுப்பர்; க்வசித்—சிலசமயம்.

கிருஷ்ணரும் பலராமரும் தங்கள் ஆயர்குல நண்பர்களுடன் தட்டாமாலை சுற்றுதல், தாண்டிக்குதித்தல், ஒருவரோடொருவர் மல்யுத்தம் செய்தல், ஒருவரை ஒருவர் அடித்தல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவர். சிலசமயம் கிருஷ்ணரும், பலராமரும் சிறுவர்களின் சடை முடியினைப் பற்றி இழுத்து விளையாடுவர்.

பதம் 10.18.13
க்வசின் ந்ருத்யத்ஸு சான்யேஷு காயகெள வாதகெள ஸ்வயம்
ஸஸம்ஸதுர் மஹா-ராஜ ஸாது ஸாத்வ் இதி வாதினௌ

க்வசித்—சிலசமயம்; ந்ருத்யத்ஸு—அவர்கள் ஆடும்பொழுது; ச—மற்றும்; அன்யேஷு—பிறர்; காயகௌ—அவர்கள் இருவரும் (கிருஷ்ணரும், பலராமரும்) பாடுவர்; வாதகௌ—அவர்கள் இருவரும் இசைக் கருவிகளை மீட்டுவர்; ஸ்வயம்—அவர்களை; ஸஸம்ஸது:—அவர்கள் போற்றினர்; மஹா ராஜ—ஓ, மாமன்னனே; ஸாது ஸாது இதி—”மிக நன்று, மிக நன்று”; வாதினௌ—கூறுவர்.

பிற சிறுவர்கள் ஆடும்பொழுது, ஓ, மன்னனே! கிருஷ்ணரும், பலராமரும், சிலசமயம் அவர்கள் ஆட்டத்திற்கு ஏற்பப் பாடுவர், இசைக்கருவிகளை மீட்டுவர், சிலசமயம் இரு பகவான்களும் அச்சிறுவர்களின் ஆட்டத்தைப் பார்த்து “மிக நன்று! மிக நன்று!’ என்று புகழ்ந்து பேசுவர்.

பதம் 10.18.14
க்வசித் பில்வை: க்வசித் கும்பை: க்வசாமலக-முஷ்டிபி:
அஸ்ப்ருஸ்ய-நேத்ர-பந்தாத்யை: க்வசின் ம்ருக-பகேஹயா

க்வசித்—சிலநேரம்; பில்வை:—வில்வபழம்; க்வசித்—சிலநேரம்; கும்பை:—கும்பபழம்; க்வச—மற்றும் சிலநேரம்; ஆமலக-முஷ்டிபி:—கைநிறைய நெல்லிக்காய்கள்; அஸ்ப்ருஸ்ய—ஒருவரை ஒருவர் தொட்டு விளையாடுவது போன்ற விளையாட்டுக்கள்; நேத்ர-பந்த—கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடுவது; ஆத்யை:—போன்ற; க்வசித்—சிலநேரம்; ம்ருக—விலங்குகளைப் போன்று பாவனை செய்யும்; பக—பறவைகள்; ஹயா—நடிப்பர்.

சிலசமயம் ஆயர்குலச் சிறுவர்கள் வில்வகனிகள் அல்லது கும்பக்கனிகளை வைத்தும், சிலசமயம் கை நிறைய நெல்லிக் காய்களை வைத்தும் விளையாடுவர். சிலசமயம் அவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுப் பிடித்து விளையாடுவர், சிலசமயம் அவர்கள் மிருகங்களைப் போன்றும் பறவைகளைப் போன்றும் பாவனை செய்து விளையாடுவர்.

பதம் 10.18.15
க்வசிச் ச தர்துர-ப்லாவைர் விவிதைர் உபஹாஸகை:
கதாசித் ஸ்யந்தோலிகயா கர்ஹிசின் ந்ருப-சேஷ்டயா

க்வசித்—சில நேரங்களில்; ச—மற்றும்; தர்துர—தவளைகளைப் போல்; ப்லாவை:—தாவிக்குதிப்பர்; விவிதை:—பல்வேறு; உபஹாஸகை:—நகைச்சுவைப் பேச்சுக்கள்; கதாசித்—சிலசமயம்; ஸ்யந்தோலிகயா—ஊஞ்சலாடுதல்; கர்ஹிசித்—சிலசமயம்; ந்ருப-சேஷ்டயா—அரசர்களைப் போல் நடிப்பர்.

சிலசமயம் அவர்கள் தவளைகளைப் போல் தாவிக் குதித்து விளையாடுவர், சிலசமயம் வயிறு குலுங்க சிரிக்கச் செய்யும் நகைச் சுவைப் பேச்சுக்கள் பேசுவர். சிலசமயம் அரசர்களைப் போல் பாவனை செய்து நடித்து விளையாடுவர்.

பதம் 10.18.16
ஏவம் தெள லோக-ஸித்தாபி: க்ரீடாபிஸ் சேரதுர் வனே
நதி-அத்ரி-த்ரோணி-குஞ்ஜேஷு கானனேஷு ஸர: ஸு ச

ஏவம்—இவ்வாறு; தெள—கிருஷ்ணர் பலராமர் இருவரும்; லோக-ஸித்தாபி:—மனித சமுதாயம் நன்கறிந்திருந்த; க்ரீடாபி:—விளையாட்டுக்களுடன்; சேரது:—அவர்கள் சுற்றித்திரிவர்; வனே—வனத்தில்; நதீ—நதிகள்; அத்ரி—மலைகள்; த்ரோணி—பள்ளத்தாக்குகள்; குஞ்ஜேஷு—சோலைகள்; கானனேஷு—சிறு வனங்களில்; ஸர: ஸு—குளங்களில்; ச—மற்றும்.

இவ்வாறு கிருஷ்ணரும், பலராமரும், மனித சமுதாயம் நன்கு அறிந்திருந்த விளையாட்டுக்களில் எல்லாம் ஈடுபட்டு, நதிகள், மலைகள், பள்ளத்தாக்குகள், சோலைகள், சிறுகாடுகள், குளங்கள் என்று விருந்தாவனத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.

பதம் 10.18.17
பஸூம்ஸ் சாரயதோர் கோபைஸ் தத்-வனே ராம-க்ருஷ்ணயயோ:
கோப-ரூபீ ப்ரலம்போ ‘காத் அஸுரஸ் தஜ்-ஜிஹீர்ஷயா

பஸூன்—விலங்குகள்; சாரயதோ:—அவர்கள் இருவரும் மேய்த்துக் கொண்டிருந்த பொழுது; கோபை:—கோபாலர்கள்; தத்-வனே—விருந்தாவனக் காட்டில்; ராம-க்ருஷ்ண-யோ:—பகவான் ராமர் மற்றும் பகவான் கிருஷ்ணர்; கோப-ரூபி—ஆயர்குலச் சிறுவனாகத்தோன்றி; ப்ரலம்ப:—பிரலம்பன்; அகாத்—வந்தான்; அஸுர:—அசுரன்; தத்—அவர்களை; ஜிஹீர்ஷயா—கடத்திச் செல்லும் நோக்கத்தில்.

பலராமரும், கிருஷ்ணரும் விருந்தாவனக் காட்டில் தமது ஆயர்குல நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது பிரலம்பன் என்னும் அசுரன் அவர்களிடையே புகுந்து கொண்டான். அவன் கிருஷ்ணரையும் பலராமரையும் கடத்திச் செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தில் ஓர் ஆயர்குலச் சிறுவனைப் போல் உருவமெடுத்து அங்கு வந்திருந்தான்.

பதம் 10.18.18
தம் வித்வான் அபி தாஸார்ஹோ பகவான் ஸர்வ-தர்ஸன:
அன்வமோதத தத்-ஸக்யம் வதம் தஸ்ய விசிந்தயன்

தம்—அவனை, பிரலம்பனை; வித்வான்—நன்று அறிந்து கொண்ட; அபி—போதிலும்; தாஸார்ஹ:—தாஸார்ஹ குலத்தைச் சேர்ந்த; பகவான்—முழுமுதற்கடவுள்; ஸர்வ-தர்ஸன:—எல்லாம் அறியவல்ல; அன்வமோதத—ஏற்றுக்கொண்டார்; தத்—அவனுடன்; ஸக்யம்—நட்புறவு; வதம்—கொல்வதற்கு; தஸ்ய—அவனை; விசிந்தயன்—சிந்தித்தார்.

தாஸார்ஹ குலத்தில் பிறந்தவரும், எல்லாம் அறிய வல்லவருமான பரமபுருஷ பகவான் கிருஷ்ணர் அவ்வசுரன் யார் என்பதை நன்கு அறிந்து கொண்டார். அவ்வசுரனைத் தனது நண்பனாக ஏற்றுக் கொண்டதைப்போல் நடித்த பகவான் அதே சமயம் அவனை எவ்வாறு கொல்வது என்றும் தீவிரமாகச் சிந்தித்தார்.

பதம் 10.18.19
தத்ரோபாஹூய கோபாலான் க்ருஷ்ண: ப்ராஹ விஹார-வித்
ஹே கோபா விஹரிஷ்யாமோ த்வந்த்வீ-பூய யதா-யதம்

தத்ர—அதன்பிறகு; உபாஹூய—அழைத்தார்; கோபாலான்—கோபாலர்களை; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; ப்ராஹ—கூறினார்; விஹார-வித்—எல்லா விளையாட்டுக்களையும் நன்கறிந்தவர்; ஹே கோபா:—ஓ, கோபாலர்களே; விஹரிஷ்யாம:—நாம் விளையாடுவோம்; த்வந்த்வீ-பூய—இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து; யதா-யதம்—பொருத்தமாக.

எல்லா விளையாட்டுக்களையும் நன்கறிந்தவரான கிருஷ்ணர் பிறகு ஆயர்குலச் சிறுவர்கள் அனைவரையும் தன்னருகே வரச் செய்து பின்வருமாறு கூறினார்: ”ஏ, ஆயர்குலச் சிறுவர்களே! நாம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, இப்போது விளையாடுவோம்” என்று.

பதம் 10.18.20
தத்ர சக்ரு: பரிவ்ருடௌ கோபா ராம-ஜனார்தனெள
க்ருஷ்ண-ஸங்கட்டின: கேசித் ஆஸன் ராமஸ்ய சாபரே

தத்ர—அவ்விளையாட்டில்; சக்ரு:—அவர்கள் செய்தனர்; பரிவ்ருடௌ—இரண்டு தலைவர்கள்; கோபா:—கோபாலர்கள்; ராம-ஜனார்தனௌ—பகவான் பலராமர் மற்றும் கிருஷ்ணர்; க்ருஷ்ண-ஸங்கட்டின:—கிருஷ்ணரது கட்சியைச் சேர்ந்தவர்கள்; கேசித்—சிலர்; ஆஸன்—ஆயினர்; ராமஸ்ய—பகவான் பலராமரின்; ச—மற்றும்; அபரே—பிறர்.

ஆயர்குலச் சிறுவர்கள் இரு பிரிவுகளின் தலைவர்களாக கிருஷ்ணரையும், பலராமரையும் தேர்ந்தெடுத்தனர். சிலர் கிருஷ்ணரின் பிரிவில் சேர்ந்தனர். வேறு சில சிறுவர்கள் பலராமரின் பிரிவில் சேர்ந்தனர்.

பதம் 10.18.21
ஆசேருர் விவிதா: க்ரீடா வாஹ்ய-வாஹக-லக்ஷணா:
யத்ரா ரோஹந்தி ஜேதாரோ வஹந்தி ச பராஜிதா:

ஆசேரு:—அவர்கள் ஆடினர்; விவிதா:—பல்வேறு; க்ரீடா:—விளையாட்டுக்கள்; வாஹ்ய—சுமக்கப்படுபவர்களால்; வாஹக—வாகனம்; லக்ஷணா:—இலட்சணம்; யத்ர—இதில்; ஆரோஹந்தி—ஏறுதல்; ஜேதார:—வெற்றிபெறுவர்கள்; வஹந்தி—சுமப்பர்; ச—மற்றும்; பராஜிதா:—தோற்கடிக்கப்பட்டோர்.

அச்சிறுவர்கள் பயணிகளும், வாகனங்களும் என்னும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களை விளையாடினர். இவ்விளையாட்டுக்களில் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தமது முதுகில் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

பதம் 10.18.22
வஹந்தோ வாஹ்யமானஸ் ச சாரயந்தஸ் ச கோ-தனம்
பாண்டீரகம் நாம வடம் ஜக்மு: க்ருஷ்ண-புரோகமா:

வஹந்த:—சுமந்து கொண்ட; வாஹ்யமானா:—சுமக்கப்பட்டு; ச—மற்றும்; சாரயந்த:—மேய்த்தல்; ச—மற்றும்; கோ-தனம்—பசுக்கள்; பாண்டீரகம் நாம—பாண்டீரகம் என்றும் பெயருடைய; வடம்—ஆலமரத்திற்கு; ஜக்மு:—அவர்கள் சென்றனர்; க்ருஷ்ண-புரா:-கமா:—பகவான் கிருஷ்ணரின் தலைமையில்.

ஒருவரை ஒருவர் சுமந்து கொண்டு, அதே சமயம் பசுக்களை மேய்த்துக் கொண்டு அவர்கள் பாண்டீரகம் என்னும் ஆலமரத்திற்கு கிருஷ்ணரைப் பின் தொடர்ந்து சென்றனர்.

பதம் 10.18.23
ராம-ஸங்கட்டினோ யர்ஹி ஸ்ரீ தாம-வ்ருஷபாதய:
க்ரீடாயாம் ஜயினஸ் தாம்ஸ் தான் உஹு: க்ருஷ்ணாதயோ ந்ருப

ராம-ஸங்கட்டின:—பகவான் பலராமர் பிரிவைச் சேர்ந்தவர்கள்; யர்ஹி—அப்பொழுது; ஸ்ரீ தாம-வ்ருஷப—ஆதய:—ஸ்ரீ தாமன், விருஷபன், மற்றும் பிறர் (சுபலன் போன்றோர்); க்ரீடாயாம்—விளையாட்டில்; ஜயின:—வெற்றி பெற்றனர்; தான் தான்—அவர்கள் ஒவ்வொருவரும்; உஹு:—சுமந்தனர்; க்ருஷ்ண-ஆதய:—கிருஷ்ணரும் அவரது பிரிவைச் சேர்ந்தவர்களும்; ந்ருப—ஓ, மன்னனே.

அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே! பகவான் பலராமரின் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீதாமன், விருஷபன், மற்றும் சிலர் விளையாட்டில் வெற்றி பெற்றவுடன், கிருஷ்ணரும் அவரது பிரிவைச் சேர்ந்தவர்களும் அவர்களைத் தூக்கிச் சென்றனர்.

பதம் 10.18.24
உவாஹ க்ருஷ்ணோ பகவான் ஸ்ரீ தாமானம் பராஜித:
வ்ருஷபம் பத்ரஸேனஸ் து ப்ரலம்போ ரோஹிணீ-ஸுதம்

உவாஹ—சுமந்தனர்; க்ருஷ்ண:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; பகவான்—முழுமுதற் கடவுள்; ஸ்ரீ தாமானம்—அவரது பக்தனும் நண்பனுமான ஸ்ரீ தாமன்; பராஜித:—தோற்கடிக்கப்பட்டவுடன்; வ்ருஷபம்—விருஷபன்; பத்ரஸேன:—பத்ரசேனன்; து—மற்றும்; ப்ரலம்ப:—பிரலம்பன்; ரோஹிணீ-ஸுதம்—ரோகிணியின் மைந்தர்.

தோற்கடிக்கப்பட்டவுடன், பரமபுருஷ பகவான் கிருஷ்ணர் ஸ்ரீ தாமனை தூக்கிச் சென்றான். பத்ரசேனன் விருஷமனைத் தூக்கிச் சென்றான், பிரலம்பனோ, ரோகிணியின் மைந்தனான பகவான் பலராமனைத் தூக்கிச் சென்றான்.

பதம் 10.18.25
அவிஷஹ்யம் மன்யமான: க்ருஷ்ணம் தானவ-புங்கவ:
வஹன் த்ருததரம் ப்ராகாத் அவரோஹணத: பரம்

அவிஷஹ்யம்—புலனாகாததை; மன்யமான:—கருதி; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; தானவ-புங்கவ:—அசுரர்களிற் சிறந்த; வஹன்—சுமந்து கொண்டு; த்ருத-தரம்—மிக விரைவாக; ப்ராகாத்—அவன் சென்றான்; அவரோஹணத: பரம்—பாரத்தைக்கீழே இறக்கிவிடும் இடத்திற்கும் அப்பால்.

பகவான் கிருஷ்ணரின் பார்வையில் படாமல் அசுரர்களிற் சிறந்த பிரலம்பன் பலராமரைத் தூக்கிக் கொண்டு மிகவும் விரைவாக, அவரை இறக்கிவிட வேண்டிய எல்லைக்கும் அப்பால் சென்றான்.

பதம் 10.18.26
தம் உத்வஹன் தரணி-தரேந்த்ர கெளரவம்
மஹாஸுரோ விகத-ரயோ நிஜம் வபு:
ஸ ஆஸ்தித: புரட-பரிச்சதோ பபௌ
தடித்-த்யுமான் உடுபதி-வாட் இவாம்புத:

தம்—அவரை, பலராமரை; உத்வஹன்—உயரே தூக்கிக் கொண்டு; தரணி-தர-இந்த்ர—மலைகளின் அரசனான சுமேருவைப் போன்று; கௌரவம்—அவர் பாரம்; மஹா-அஸு-ர:—மகா அசுரன்; விகத-ரய:—தனது வேகத்தினை இழந்தான்; நிஜம்—அவனது உண்மையான; வபு:—உடல்; ஸ:—அவன்; ஆஸ்தித:—இருப்பவனானான்; புரட—பொன்; பரிச்சத:—ஆபரணங்கள் அணிந்தவனாக; பபெள—அவன் மிளிர்ந்தான்; தடித்—மின்னலைப் போன்று; த்யு-மான்—ஒலியுடன்; உடு-பதி—சந்திரன்; வாட்—சுமந்து கொண்டு; இவ—போன்று; அம்பு-த:—ஒரு மோகம்.

அம்மகா அசுரன் பலராமரைத் தூக்கிக்கொண்டு சென்றபோது பகவான் சுமேரு மலையைப் போல் கனமுடையவராக இருந்தார். அதனால் பிரலம்பனின் வேகம் தடைபட்டது. பிறகு அவன் தனது உண்மை வடிவத்தினை மேற்கொண்டான். பொன்னாபரணங்கள் அணிந்து ஒளிவீசும் அவன் உடலானது மின்னலடிக்கும் மேகம் சந்திரனைச் சுமந்து செல்வது போன்றிருந்தது.

பதம் 10.18.27
நிரீக்ஷ்ய தத்-வபுர் அலம் அம்பரே சரத்
ப்ரதீப்த-த்ருக் ப்ரு-குடி-தடோக்ர-தம்ஷ்ட்ரகம்
ஜ்வலச்-சிகம் கடக-கிரீட-குண்டல
த்விஷாத்புதம் ஹலதர ஈஸத் அத்ரஸத்

நிரீக்ஷ்ய—கண்டு; தத்—பிரலம்பாசுரனின்; வபு:—உடல்; அலம்—விரைந்து; அம்பரே—வானத்தில்; சரத்—செல்வது; ப்ரதீப்த—ஒளிவீசி; த்ருக்—அவனது கண்கள்; ப்ரு-குடி—புருவங்களை நெரித்தல்; தட—முனையின் மேல்; உக்ர—உக்கிரமான; தம்ஷ்ட்ரகம்—அவனது பற்கள்; ஜ்வலத்—நெருப்பு உமிழ்கின்ற; ஸிகம்—தலைமுடி; கடக—கைகளில் உள்ள கடகங்கள்; கிரீட—கிரீடம்; குண்டல—செவிக் குண்டலங்கள்; த்விஷா—ஒளியினால்; அத்புதம்—வியந்த; ஹல-தர:—ஏர் கலப்பையினை ஆயுதமாக உடைய பகவான் பலராமர்; ஈஷத்—சிறிது; அத்ரஷத்—அச்சத்திற்காளானர்.

அனல் கக்கும் கண்களும், நெருப்பைப் போன்ற தலைமுடியும், புருவத்தைத் தொடுவது போல் வளைந்திருந்த அவனது பயங்கரமான பற்களும், அவனது கைகளில் உள்ள கடகங்கள், கிரீடம், செவிக் குண்டலங்கள் போன்றவற்றிலிருந்து வீசிய வினோதமான ஒளியும் கண்டு ஏர்க் கலப்பையினை ஆயுதமாக உடைய பலராமர் சிறிது அச்சத்திற்கு ஆளானார்.

பதம் 10.18.28
அதாகத-ஸ்மிருதிர் அபயோ ரிபும் பலோ
விஹாய ஸார்தம் இவ ஹரந்தம் ஆத்மன:
ருஷாஹனச் சிரஸி த்ருடேன முஷ்டினா
ஸுராதிபோ கிரிம் இவ வஜ்ர-ரம்ஹஸா

அத—அதன்பிறகு; ஆகத-ஸ்ம்ருதி:—தன்னை உணர்ந்து; அபய:—அச்சமின்றி; ரிபும்—அவரது எதிரியை; பல:—பகவான் பலராமர்; விஹாய—தனியே பிரித்து; ஸார்தம்—கூட்டத்தினை; இவ—உண்மையில்; ஹரந்தம்—கடத்திக்கொண்டு; ஆத்மன:—தம்மை; ருஷா—சினமிக்கவராக; அஹனத்—அவர் தாக்கினார்; ஸிரஸி—தலையில் தாக்கினார்; த்ருடேன—கடுமையாக; முஷ்டினா—முஷ்டியால்; ஸுர-அதிப:—தேவர்களின் தலைவனான இந்திரன்; கிரிம்—ஒரு மலை; இவ—போன்று; வஜ்ர—அவனது வஜ்ராயுதத்தால்; ரம்ஹஸா—வேகமாக.

உண்மை நிலையினை உணர்ந்து கொண்டவுடன், அச்சமற்றவராக பலராமர், தன்னைத் தனது நண்பர்களிடமிருந்து பிரித்து, அவ்வசுரன் கடத்திக் கொண்டு போகிறான் என்பதை அறிந்துகொண்டார். பிறகு பகவான் பலராமர், மிகுந்த சினத்துடன் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது வஜ்ராயுதத்தால், ஒரு மலையைத் தாக்குவது போல், தனது முஷ்டியினால் அவ்வசுரனின் தலையில் தாக்கினார்.

பதம் 10.18.29
ஸ ஆஹத: ஸபதி விஸீர்ண-மஸ்தகோ
முகாத் வமன் ருதிரம் அபஸ்ம்ருதோ ‘ஸுர:
மஹா-ரவம் வ்யஸுர் அபதத் ஸமீரயன்
கிரிர் யதா மகவத ஆயுதாஹத:

ஸ:—அவன், பிரலம்பாசுரன்; ஆஹத:—தாக்குதலினால்; ஸபதி—உடனே; விஸீர்ண—பிளந்து; மஸ்தக:—அவனது தலை; முகாத்—வாயிலிருந்து; வமன்—கக்கினான்; ருதிரம்—இரத்தம்; அபஸ்ம்ருத:—உணர்ச்சியற்று; அஸுர:—அவ்வசுரன்; மஹாரவம்—பெருத்த ஓசையுடன்; வ்யஸு:—உயிரற்று; அபதத்—கீழே வீழ்ந்தான்; ஸமீரயன்—ஒலியுடன்; கிரி:—ஒரு மலை; யதா—போன்று; மகவத:—தேவேந்திரனின்; ஆயுத—ஆயுதத்தினால்; ஆஹத:—தாக்கப்பட்டு.

பலராமரது முஷ்டியால் தாக்கப்பட்டவுடன் பிரலம்பாசுரனின் தலை இரண்டாகப் பிளந்தது. அவ்வசுரன் இரத்தம் கக்கி உணர்ச்சி இழந்து, இந்திரனால் தாக்கப்பட்ட மலையினைப் போல் பெருத்த ஓசையுடன் உயிரற்று நிலத்தில் வீழ்ந்தான்.

பதம் 10.18.30
த்ருஷ்ட்வா ப்ரலம்பம் நிஹதம் பலேன பல-ஸாலினா
கோபா: ஸு-விஸ்மிதா ஆஸன் ஸாது ஸாத்வ் இதி வாதின:

த்ருஷ்ட்வா—கண்டு; ப்ரலம்பம்—பிரலம்பாசுரன்; நிஹதம்—கொல்லப்பட்டான்; பலேன—பகவான் பலராமரால்; பல-ஸாலினா—இயற்கையிலேயே அவர் பலமிக்கவராவார்; கோபா:—கோபாலர்கள்; ஸு-விஸ்மிதா:—மிகுந்த வியப்பெய்தினர்; ஆஸன்—ஆயினர்; ஸாது ஸாது—”நன்று” “நன்று”; இதி—இவ்வார்த்தைகள்; பாதின:—கூறினர்.

பிரலம்பாசுரனை ஆற்றல் மிக்க பகவான் பலராமர் கொன்றதைக் கண்டு ஆயர்குலச் சிறுவர்கள் அனைவரும் மிக்க வியப்பெய்தினர். அவர்கள் ஆச்சரியத்துடன் “மிக நன்று, மிக நன்று” என்று கூவினர்.

பதம் 10.18.31
ஆஸிஷோ ‘பிக்ருணந்தஸ் தம் ப்ரஸஸம்ஸுஸ் தத்-அர்ஹணம்
ப்ரேயாகதம் இவாலிங்க்ய ப்ரேம-விஹ்வல-சேதஸ:

அஸிஷ:—ஆசிகள்; அபிக்ருணந்த:—வழங்கினர்; தம்—அவருக்கு; ப்ரஸஸம்ஸு:—அவரைப் போற்றினர்; தத்-அர்ஹணம்—அவர் அவற்றிற்கு தகுதி உடையவராவார்; ப்ரேதய—மரணத்திலிருந்து; ஆகதம்—மீண்டும் வந்தார்; இவ—போன்று; ஆலிங்க்ய—தழுவிக் கொண்டனர்; ப்ரேம—அன்பு மீதூர; விஹ்வல—உணர்ச்சிவயப்பட்டு; சேதஸ:—அவர்களது மனம்.

அவர்கள் அனைவரும் பலராமருக்கு ஆசிகள் வழங்கி அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். அப்போற்றுதலுக்கு அவர் முற்றிலும் தகுதி உடையவரே ஆவார். அவர்களது மனங்களில் அவர் மீதான அன்பு ததும்பி வழிந்தது. மரணத்திலிருந்து மீண்டும் வந்தவராக எண்ணி அவர்கள் அவரை ஆசையுடன் தழுவிக் கொண்டனர்.

பதம் 10.18.32
பாபே ப்ரலம்பே நிஹதே தேவா: பரம-நிர்வ்ருதா:
அப்யவர்ஷன் பலம் மால்யை: ஸஸம்ஸு: ஸாது ஸாத்வ் இதி

பாபே—பாபியான; ப்ரலம்பே—பிரலம்பாசுரன்; நிஹதே—கொல்லப்பட்டது கண்டு; தேவா:—தேவர்கள்; பரம—அதீத; நிர்வ்ருதா:—மகிழ்ச்சியடைந்தனர்; அப்யவர்ஷன்—பொழிந்தனர்; பலம்—பகவான் பலராமர்; மால்யை:—மலர்மாலைகள்; ஸஸம்ஸு:—அவர்கள் பிரார்த்தித்தனர்; ஸாது ஸாது இதி—”நன்று” “நன்று” என்று குரலெழுப்பினர்.

பாவமிக்க பிரலம்பாசுரன் கொல்லப்பட்டது கண்டு தேவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் பகவான் பலராமர் மீது மலர் மாரி பொழிந்து, அவரது செயற்கரிய செயலைப் போற்றிப் புகழ்ந்தனர்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “பகவான் பலராமர் பிரலம்பாசுரனை அழித்தல்” எனும் தலைப்பை கொண்ட பதினெட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare