அத்தியாயம் – 19
காட்டுத் தீயை விழுங்குதல் அத்தியாயம்

பதம் 10.19.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஆயர்குலச் சிறுவர்கள் தம்மை மறந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்த பொழுது அவர்கள் பசுக்கள் வெகு தூரத்திற்குச் சென்று விட்டன. தம்மை யாரும் கவனியாத போது அவை புல்லைத் தேடிக் காட்டின் அடர்ந்த பகுதிக்குள் சென்றுவிட்டன.

பதம் 10.19.2 : ஆடுகளும், பசுக்களும், எருமைகளும், ஒரு பெரிய காட்டிலிருந்து, மற்றொரு காட்டிற்குள் புகுந்து இறுதியில் மூங்கில் மரங்கள் நிறைந்த பகுதியினை அடைந்தன. அருகில் எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயின் காரணமாக அவற்றிற்கு நா வறட்சி ஏற்பட்டு அவை தாகத்தில் தவித்தன. அதனால் அவை துன்பம் தாளாது பெருங்குரலெடுத்து அழுதன.

பதம் 10.19.3 : தங்கள் கண்முன்பு பசுக்கள் இல்லாததைக் கண்ட கிருஷ்ணரும், ராமரும், அவர்களது ஆயர்குல நண்பர்களும், அவற்றைப் புறக்கணித்தமைக்காக மிக்க மன வருத்தமுற்றனர். அச்சிறுவர்கள் நாலாபுறமும் தேடினர். ஆனால் அவை எங்கு சென்றன என்பதை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

பதம் 10.19.4 : பிறகு அச்சிறுவர்கள், பசுக்கள் பாதையில் விட்டுச் சென்ற குளம்படித் தடங்களைக் கொண்டும், அவை கால்களால் மிதித்தும், பற்களால் கடித்தும் விட்டுச் சென்ற புற்களின் அடையாளத்தைக் கொண்டும் அவற்றைத் தேடத் தொடங்கினார். ஆயர்குலச் சிறுவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையினையே இழந்துவிட்டவர்களாக பெருந் துன்பத்தில் ஆழ்ந்தனர்.

பதம் 10.19.5 : இறுதியில் முஞ்ஜாவனத்தில், ஆயர்குலச் சிறுவர்கள் தமது உயிரினும் மேலான பசுக்கள், வழி தவறி வந்து அழுதுகொண்டு நிற்பதைக் கண்டனர். பிறகு அச்சிறுவர்கள் மிகுந்த களைப்புடனும், தாகத்துடனும் அப்பசுக்களை வீட்டுக்குச் செல்லும் பாதையில் ஓட்டிச் சென்றனர்.

பதம் 10.19.6 : மேகங்கள் ஒலிப்பன போன்று உரத்த குரலில் முழுமுதற் கடவுள் அவ்விலங்குகளை அழைத்தார். தமது பெயர்களைச் சொல்லி அழைப்பதைக் கேட்டவுடன் அப்பசுக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் பகவானை நோக்கி பதிலுக்கு ஒலி எழுப்பின.

பதம் 10.19.7 : அப்பொது திடீரென்று காட்டிலுள்ள எல்லா உயிர்களையும் அழித்து விடுவதுபோல் அச்சுறுத்தும் பயங்கர காட்டுத் தீ எல்லாப் பக்கங்களிலும் தோன்றியது. ஒரு ரத சாரதியைப் போல் காற்று அத்தீயை முன்னோக்கி வேகமாகச் செலுத்தியது. எரிமீனைப் போன்று தீப்பொறிகள் நாலா திசைகளிலும் சிதறின. உண்மையில் அப்பயங்கரத் தீ தனது நாக்குகளை அசையும், அசையா உயிர்கள் அனைத்தையும் நோக்கி நீட்டியது.

பதம் 10.19.8 : பசுக்களும், ஆயர்குலச் சிறுவர்களும் நாலாபக்கங்களிலும் காட்டுத் தீயால் தாம் தாக்கப்படுவது கண்டு மிகுந்த அச்சத்திற்காளாயினர். மரணத்திற்கு அஞ்சுபவர்கள் எவ்வாறு முழுமுதற் கடவுளைச் சரணடைவார்களோ அதுபோல் அச்சிறுவர்கள் கிருஷ்ணரையும், பலராமரையும் சரணடைந்தனர். அச்சிறுவர்கள் அவர்களிடம் பின்வருமாறு கூறினர்.

பதம் 10.19.9 : (ஆயர்குலச் சிறுவர்கள் கூறினர்:) ஓ, கிருஷ்ணா! கிருஷ்ணா! ஆற்றல் மிக்கவரே, தோல்வியடையாத வீரமுடைய ஓ, ராமா! காட்டுத் தீக்கு அஞ்சி உனை வந்து சரணடைந்திருக்கும் உங்கள் பக்தர்களைக் காத்தருள்வீராக.

பதம் 10.19.10 : கிருஷ்ணா! உமது உயிர் நண்பர்கள் அழிந்துவிடக்கூடாது. ஒ, எல்லா உயிர்களின் இயற்கையினையும் நன்கறிந்தவரே, உம்மை எமது தெய்வமாக நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். மேலும் உம்மைச் சரண் புகுந்திருக்கும் ஆத்மாக்கள் நாங்கள்.

பதம் 10.19.11 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மனதினை உருகச் செய்யும், தமது நண்பர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட முழுமுதற் கடவுs; அவர்களிடம் “உங்கள் கண்களை சிறிது மூடுங்கள், அஞ்ச வேண்டாம்” என்று கூறினார்.

பதம் 10.19.12 : “அப்படியே செய்கிறோம்” என்று பதிலளித்த சிறுவர்கள் உடனே தமது விழிகளை மூடிக் கொண்டனர். பிறகு யோக சக்திகளிள் நாயகரான பரமபுருஷ பகவான் தனது வாயினைத் திறந்து அப்பயங்கரக் காட்டுத்தீயை முழுவதும் விழுங்கி தமது நண்பர்களை ஆபத்திலிருந்து காத்தருளினார்.

பதம் 10.19.13 : ஆயர்குலச் சிறுவர்கள் மீண்டும் தமது விழிகளைத் திறந்து பார்த்த போது அவர்களும், பசுக்களும் பயங்கரக் காட்டுத் தீயிலிருந்து காப்பாற்றப்பட்டு பாண்டீர மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டு பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பதம் 10.19.14 : பகவானது அகச் சக்தியின் வெளிப்பாடான யோக சக்தியால் காட்டுத்தீயிலிருந்து தாம் காப்பாற்றப்பட்டதைக் கண்ட ஆயர்குலச் சிறுவர்கள் கிருஷ்ணர் நிச்சயம் ஒரு தேவராகத் தான் இருத்தல் வேண்டும் என்று கருதினர்.

பதம் 10.19.15 : மாலைக் கருக்கல் ஆனவுடன் கிருஷ்ணரும், பலராமரும் பசுக்களை ஒட்டிக்கொண்டு தமது இல்லத்திற்குப் புறப்பட்டனர். ஆயர்குலச் சிறுவர்கள் அவரது புகழ் பாடிக் கொண்டு உடன் வர, கிருஷ்ணர் தமது புல்லாங்குழலிலிருந்து இனிய கீதம் இசைத்தவாறே ஆயர்பாடியினை அடைந்தார்.

பதம் 10.19.16 : கோவிந்தன் இல்லம் திரும்பியதைக் கண்ட இளங்கோபியர்கள் பரமானந்தம் அடைந்தனர். அவரை ஒரு கணம் பிரிந்தால் கூட அது அவர்களுக்கு நூறு யுகங்கள் போன்றதாகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare