II. ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் லீலைத் தலங்கள்

1. ஸ்ரீ சைதன்ய மகாபிரபு மற்றும் ஸ்ரீ க்ஷேத்திரம்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

நோக்கங்கள்

நோக்கம் 1: ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீமதி ராதாராணியின் மனநிலையையும் பொன்னிறத் திருமேனியையும் ஏற்று அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணர் என்பதைப் புரிந்துகொள்வது.

நோக்கம் 2: ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஜகந்நாத பூரியில் தங்கியிருந்த 24 ஆண்டுகளின் மூன்று முக்கிய காலகட்டங்களை அறிந்துகொள்வது.

நோக்கம் 3: ஜகந்நாத பூரியில் வாழ்ந்தபோது ஸ்ரீ சைதன்ய மகாபிரபு கடைப்பிடித்த தினசரி பக்தி சாதனைகளையும் ஆன்மிக வாழ்க்கை முறையையும் புரிந்துகொள்வது.

நோக்கம் 4: தண்ட-பங்க (தண்டத்தை உடைத்த) லீலையின் மூலம் வெளிப்படும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவிற்கும் ஸ்ரீ நித்யானந்த பிரபுவிற்கும் இடையிலான அன்புமிக்க தெய்வீக உறவைப் போற்றுவது.

நோக்கம் 5: ஜகந்நாத பூரியின் நுழைவாயிலாக விளங்கும் அதர்நலாவின் வரலாற்று மற்றும் பக்தி முக்கியத்துவத்தையும், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவுடன் அதற்குள்ள தொடர்பையும் அறிந்துகொள்வது.

நோக்கம் 6: அஹுலா மடம் மற்றும் கம்பீரா ஆகியவை ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் தொடர்புடைய முக்கியமான புனிதத் தலங்கள் என்பதை அறிந்துகொள்வது.

நோக்கம் 7: ரதயாத்திரையின்போது ஸ்ரீ சைதன்ய மகாபிரபு வெளிப்படுத்திய லீலைகள், பிரேம-பக்தியின் உன்னத போதனைகளையும் கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆழ்ந்த இரகசிய பாவத்தையும் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதைப் போற்றுவது.

நோக்கம் 8: குண்டிச்சா திருவிழாவின் போது ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் லீலைகளில் இந்திரத்யும்ன சரோவரத்தின் ஆன்மிக முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.

நோக்கம் 9: இந்தப் புனிதத் தலங்கள் அனைத்தும் இணைந்து கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் அடிப்படைக் கொள்கைகளான குரு பக்தி, வைஷ்ணவ சேவை, நாம சங்கீர்த்தனம், ஸ்ரீமத் பாகவதம், அர்ச்சாவிக்ரஹ வழிபாடு மற்றும் கிருஷ்ணபிரேமை ஆகியவற்றை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதைப் போற்றுவது.

நோக்கம் 1: ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீமதி ராதாராணியின் மனநிலையையும் பொன்னிறத் திருமேனியையும் ஏற்று அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணர் என்பதைப் புரிந்துகொள்வது.

அறிமுகம்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். கலியுகத்தில் இந்த யுகத்திற்கான யுக தர்மமான ஹரிநாம சங்கீர்த்தனத்தை (பகவானின் திருநாமங்களை அனைவரும் ஒன்றுகூடி பாடும் வழிபாட்டை) உலகிற்கு வழங்குவதற்காக அவர் அவதரித்தார்.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு கி.பி. 1486-ஆம் ஆண்டு, பால்குணி பௌர்ணமி மாலை வேளையில், வங்காளத்தில் உள்ள நவத்வீபத்தின் ஸ்ரீதாம் மாயாபூரில் அவதரித்தார்.

அவர், ஸ்ரீமதி ராதாராணியின் மனநிலையையும் பொன்னிறத் திருமேனியையும் ஏற்றுக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணரின் கருணைமிகு அவதாரமாகப் போற்றப்படுகிறார். அதனால், அவர் பகவானின் மிகவும் கருணைமிக்க அவதாரமாகக் கருதப்படுகிறார்.

ஸ்ரீமத் பாகவதம் 11.5.32 –

கிருஷ்ண-வர்ணம் த்விஷாகிருஷ்ணம்
ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்
யஜ்ஞைஃ சங்கீர்த்தன-ப்ராயைர்
யஜந்தி ஹி ஸு-மேதஸ:

இந்த ஸ்லோகம், கலியுகத்தில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவதரித்து, சங்கீர்த்தன யஜ்ஞத்தை நிலைநாட்டுவார் என்பதை முன்னறிவிக்கிறது.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, தனது பொன்னிறத் திருமேனியால் கௌராங்கர் அல்லது கௌரர் என்றும் அழைக்கப்படுகிறார். வேப்பமரத்தின் (நீம் மரம்) கீழ் பிறந்ததால், நிமாய் என்ற பெயராலும் அறியப்படுகிறார்.

தாயாரின் விருப்பம்

கி.பி. 1510-ஆம் ஆண்டு கட்டுவாவில் சந்நியாசம் ஏற்ற பிறகு, அவருடைய தாயார் ஸ்ரீசச்சிதேவி, ஜகந்நாத புரியையே தமது இருப்பிடமாக வைத்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.

ஏனெனில், ஜகந்நாத புரி இந்தியாவின் முக்கியமான புனித யாத்திரைத் தலமாக இருந்ததால், அங்கு தொடர்ந்து பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள்மூலம் மகாபிரபுவின் நலனைப் பற்றிய செய்திகளை தாம் எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்று சச்சிதேவி எண்ணினார்.

நோக்கம் 2: ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஜகந்நாத பூரியில் தங்கியிருந்த 24 ஆண்டுகளின் மூன்று முக்கிய காலகட்டங்களை அறிந்துகொள்வது.

புரியில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் வாழ்க்கை

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தனது வாழ்க்கையின் முதல் 24 ஆண்டுகளை நவத்வீபத்திலும், அடுத்த 24 ஆண்டுகளை புரியிலும் கழித்தார். புரியில் அவர் தங்கியிருந்த காலம் மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

முதல் 6 ஆண்டுகள் (சுமார் கி.பி. 1510–1516)

சந்நியாசம் ஏற்ற பிறகு, மகாபிரபு தென்னிந்தியா, வங்காளம் மற்றும் பிருந்தாவனம் ஆகிய இடங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். புரி அவரது முக்கிய இருப்பிடமாக இருந்தாலும், அவர் எப்போதும் பயணம் செய்து, அனைவருக்கும் ஶ்ரீகிருஷ்ணபிரேமையை வழங்கினார். இந்தக் காலத்தில், புகழ்பெற்ற பண்டிதரான சார்வபௌம பட்டாச்சாரியருக்கு ஆன்மிக ஞானத்தை அளித்து, அவரை தூய பக்தராக மாற்றினார்.

இடைப்பட்ட 6 ஆண்டுகள் (சுமார் கி.பி. 1516–1522)

விருந்தாவன யாத்திரைக்குப் பிறகு, மகாபிரபு தனது வாழ்நாளின் மீதமுள்ள காலத்தை புரியிலேயே கழிக்க முடிவு செய்தார். இந்தக் காலத்தில், ஹரிநாம சங்கீர்த்தனம், பக்தர்களுடன் ஆடிப் பாடுதல் மற்றும் பக்தி மார்க்கத்தை தனது வாழ்க்கை மூலம் உலகிற்கு போதித்தல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினார்.

இறுதி 12 ஆண்டுகள் (சுமார் கி.பி. 1522–1534)

இது அந்த்ய லீலை என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலத்தில், மகாபிரபு பெரும்பாலும் கம்பீராவில் தங்கி, ஸ்ரீமதி ராதாராணியின் கிருஷ்ண பிரிவுத் துயரமான விரக-பாவத்தையும் (விப்ரலம்ப சேவை), மகாபாவத்தையும் அனுபவித்தார். பகலும் இரவும் விருந்தாவன கோபியர்களின் தூய பிரேம பாவத்தில் மூழ்கி, ஶ்ரீகிருஷ்ணரின் பிரிவை ஆழமாக உணர்ந்து வாழ்ந்தார்.

நோக்கம் 3: ஜகந்நாத புரியில் வாழ்ந்தபோது ஸ்ரீ சைதன்ய மகாபிரபு கடைப்பிடித்த தினசரி பக்தி சாதனைகளையும் ஆன்மிக வாழ்க்கை முறையையும் புரிந்துகொள்வது.

புரியில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் தினசரி வாழ்க்கை

புரியில் வாழ்ந்த காலத்தில், பகல் நேரங்களில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஹரிநாம சங்கீர்த்தனம் செய்து, பக்தர்களுடன் ஆடிப் பாடி, தினமும் ஸ்ரீ ஜகந்நாதரை தரிசித்தார். இரவு நேரங்களில், ஸ்வரூப தாமோதரர், ராமானந்த ராயர் போன்ற நெருங்கிய பக்தர்களுடன் சேர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய லீலைகளின் ஆன்மிக ரஸத்தை அனுபவித்தார்.

ஶ்ரீகிருஷ்ணரின் பிரிவை எப்போதும் உணர்ந்ததால், அவரது உடலில் பல தெய்வீக பரவச அறிகுறிகள் வெளிப்பட்டன. சில நேரங்களில் கவலை, பரவசம், அழுகை மற்றும் உலகப் பார்வையில் பைத்தியக்காரரைப் போலப் பேசுதல் போன்ற மஹாபாவத்தின் அறிகுறிகள் அவரிடம் காணப்பட்டன. இவை அனைத்தும் சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள தெய்வீக அறிகுறிகளே.

காலை வழக்கம்

ஒவ்வொரு காலையும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஸ்ரீ ஜகந்நாதரை தரிசிக்கக் கோவிலுக்குச் செல்வார். கருட ஸ்தம்பம் அருகில் நின்று, ஜகந்நாதருக்கு நமஸ்காரம் செய்து, பிரார்த்தனை செய்து, ஆடிப் பாடி, ஹரிநாம சங்கீர்த்தனம் செய்வார். பின்னர் உபல போகம் சமர்ப்பிக்கப்படுவதை தரிசிக்கக் காத்திருப்பார்.

உபல போகம் என்பது கருட ஸ்தம்பத்தின் பின்னால் உள்ள கல் பலகை (உபல) மீது பொதுமக்கள் தரிசிக்கும்படி சமர்ப்பிக்கப்படும் ஒரு சிறப்பு நைவேத்தியமாகும். மற்ற நைவேத்தியங்கள் கருவறைக்குள் சமர்ப்பிக்கப்படும்; ஆனால் உபல போகம் பக்தர்கள் காணும் வகையில் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த நைவேத்தியம் நடைபெறும் வரை மகாபிரபு கோவிலுக்கு வெளியே காத்திருந்து தரிசனம் செய்தார்.

சில சமயங்களில், ஜகந்நாதரை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது, ஶ்ரீகிருஷ்ண பிரேமையில் முழுமையாக மூழ்கிய நிலையில் தரையில் அமர்ந்து, தனது நகங்களால் மண்ணில் கோடுகள் வரைவார். அப்போது மிகுந்த விரகத்துடன்,
“ஆஹோ! பிருந்தாவனம் எங்கே? கோபர்களின் அரசனின் மகனாகிய கிருஷ்ணர் எங்கே? புல்லாங்குழல் வாசிக்கும் அந்தக் கிருஷ்ணர் எங்கே?” என்று கதறி அழுவார்.

சித்த பகுலா தரிசனம்

ஜகந்நாதர் கோவிலிலிருந்து வெளியே வந்த பிறகு, மகாபிரபு சித்த பகுலாவிற்குச் சென்று ஸ்ரீ ஹரிதாஸ் தாக்கூர் அவர்களைத் தரிசிப்பார். அங்கு ஸ்ரீ ரூப கோஸ்வாமி மற்றும் ஸ்ரீ சனாதன கோஸ்வாமி ஆகியோரையும் சந்தித்து, கிருஷ்ண பக்தி மற்றும் பகவத் விஷயங்களைப் பற்றி கலந்துரையாடுவார். இது அவரது தினசரி வழக்கமாக இருந்தது.

அதன்பிறகு, மதிய நேர அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்காக கடற்கரைக்குச் செல்வார்.

நோக்கம் 4: தண்ட-பங்க (தண்டத்தை உடைத்த) லீலையின் மூலம் வெளிப்படும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவிற்கும் ஸ்ரீ நித்யானந்த பிரபுவிற்கும் இடையிலான அன்புமிக்க தெய்வீக உறவைப் போற்றுவது.

புரி லீலைகள்

தண்ட-பங்க லீலை

புரி யாத்திரையின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ள சந்தன்பூர் என்ற இடத்தில் தண்ட-பங்க லீலை நடைபெற்றது. ஒரு நாள், மகாபிரபு அருகிலிருந்த கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, ஸ்ரீ நித்யானந்த பிரபு, மகாபிரபுவின் சந்நியாச தண்டத்தை எடுத்து மூன்று துண்டுகளாக உடைத்து, அருகிலிருந்த ஆற்றில் விட்டார்.

இந்த லீலையின் மூலம், மகாபிரபு வெளிப்புற சந்நியாச அடையாளங்களைக் காட்டிலும், ஸ்ரீ கிருஷ்ணரையே முழுமையாகச் சார்ந்திருக்கும் பரம சரணாகதி நிலையை வெளிப்படுத்தினார். இந்த தெய்வீக லீலையை ஸ்ரீ கதாதர பண்டிதர், முகுந்தர், கோவிந்தர், ஜகதானந்தர் மற்றும் பிரம்மானந்தர் போன்ற மகாபிரபுவின் நெருங்கிய பக்தர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

நோக்கம் 5: ஜகந்நாத பூரியின் நுழைவாயிலாக விளங்கும் அத்தர்நலாவின் வரலாற்று மற்றும் பக்தி முக்கியத்துவத்தையும், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவுடன் அதற்குள்ள தொடர்பையும் அறிந்துகொள்வது.

அத்தரநாலா

அத்தரநாலாவின் சிறப்பு

“அத்தர” என்றால் பதினெட்டு. புரி நகரின் நுழைவாயிலில் உள்ள 18 வளைவுகளைக் கொண்ட பாலம் அதரநாலா என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியக் கதையின்படி, மன்னர் இந்திரத்யும்னர் இந்தப் பாலத்தைக் கட்ட முயன்றார். பலமுறை முயன்றும் வெற்றி பெறவில்லை. இறுதியில், பகவானின் ஆணைப்படி தனது 18 மகன்களை ஆற்றில் அர்ப்பணித்த பிறகே பாலம் கட்டி முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மகாபிரபுவின் வருகை

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு முதன்முறையாக புரிக்கு வந்தபோது இந்த அத்தரநாலா பாலம் வழியாகவே வந்தார். பாலத்தைக் கடப்பதற்கு முன் அவர் ஓய்வெடுத்த இடத்தில் இன்று ஒரு சிறிய கோவில் உள்ளது. அங்கு ஸ்ரீ கௌராங்க மகாபிரபுவின் திருவடிச் சுவடுகளும் காணப்படுகின்றன.

பக்தர்களின் சந்திப்பு

ஒவ்வொரு ஆண்டும் வங்காளத்திலிருந்து சதுர்மாஸ்ய காலத்தில் பக்தர்கள் புரிக்கு வந்து மகாபிரபுவுடன் தங்குவார்கள். அவர்கள் முதலில் அதரநாலாவை அடைவார்கள். பல சமயங்களில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவே நேரில் அதரநாலாவிற்கு வந்து அவர்களை வரவேற்பார். அந்தச் சந்திப்பு பேரானந்தம், கீர்த்தனம் மற்றும் பக்திப் பரவசம் நிறைந்ததாக இருக்கும்.

வைஷ்ணவ சங்கத்தின் மகிமை

அதரநாலா என்பது வைஷ்ணவர்கள் மீண்டும் ஒன்று சேரும் புனித இடமாகக் கருதப்படுகிறது. தாழ்மையுடனும், பகவானின் திருநாமத்தை உண்மையுடன் ஜபிப்பதன் மூலமும், இதயத்தில் பக்தி மலர்கிறது. அதுவே மனித வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்பதை இந்த இடம் நினைவூட்டுகிறது.

வந்த பக்தர்கள்

அத்தரநாலாவில் மகாபிரபுவைச் சந்திக்க வந்த முக்கிய பக்தர்களில் சிலர்:

  • ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர்
  • ஸ்ரீ நித்யானந்த பிரபு
  • ஸ்ரீவாச பண்டிதர்
  • சிவானந்த சேன்
  • புண்டரீக வித்யாநிதி
  • ஸ்ரீமான் பண்டிதர்
  • ஸ்ரீராம பண்டிதர்
  • ஸ்ரீநிதி
  • கோலாவேசஸ்ரீதரர்
  • புத்திமந்த கான்
  • முராரி குப்தர்
  • ஆச்சார்ய ரத்னர் (சந்திரசேகர்)

பிரிவின் வேதனை

கார்த்திகை மாதம் முடிந்தபின் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் மீண்டும் வங்காளத்திற்கு நடந்து செல்வார்கள். அந்தப் பயணம் சுமார் ஒரு மாதம் நீடிக்கும். ரதயாத்திரை சமயத்தில் மீண்டும் நடந்து புரிக்கு வருவார்கள். பக்தர்களைப் பிரிவது மகாபிரபுவிற்கு மிகவும் துயரமானதாக இருந்தது. அவர்களை மீண்டும் சந்திக்க அவர் ஆவலுடன் காத்திருப்பார்.

மகாபிரபுவின் அன்பு

பக்தர்களிடம் மகாபிரபு கூறுவார்: “என்னைக் காண நீங்கள் உங்கள் வீடுகளையும், வசதிகளையும் விட்டு, பல கஷ்டங்களைத் தாங்கி இவ்வளவு தூரம் வருகிறீர்கள். உங்கள் அன்பிற்கு நான் கடன்பட்டவன். என் வாழ்க்கையே உங்களுக்குச் சொந்தமானது.” இந்த வார்த்தைகள், பக்தர்கள்மீது மகாபிரபு கொண்டிருந்த எல்லையற்ற அன்பை வெளிப்படுத்துகின்றன.

பக்தர்களுக்கு செய்த சேவை

அத்தரநாலாவில் மகாபிரபு ஒவ்வொரு பக்தருக்கும் தன் கையால் மாலை அணிவித்து, சந்தனம் பூசி, அவர்களுக்கே வணக்கம் செலுத்துவார். பின்னர் அனைவரும் நரேந்திர சரோவரில் சந்திக்கும்போது, பெரியவர்–சிறியவர் என்ற வேறுபாடின்றி, ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் தண்டவணக்கம் செலுத்துவார்கள். அந்த நேரத்தில் திருநாம சங்கீர்த்தனம் முழங்க, மகாபிரபு ஆனந்த நடனம் ஆடுவார். அந்தத் திருநாம ஓசை உலகமெங்கும் ஒலித்தது என்று பக்தர்கள் வர்ணிக்கின்றனர்.

மகாபிரபுவின் – திருவடிச் சுவடுகள் அத்தரநாலா

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாக்கூர், அதரநாலாவின் புனிதத்தைக் நினைவுகூரும் வகையில், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் திருவடிச் சுவடுகளை இங்கு பிரதிஷ்டை செய்தார். தண்ட-பங்க லீலைக்குப் பிறகு, அதரநாலாவில் மகாபிரபு, “என்னுடைய சந்நியாச தண்டம் எங்கே?” என்று ஸ்ரீ நித்யானந்த பிரபுவிடம் கேட்டார். அப்போது நித்யானந்த பிரபு தாழ்மையுடன் கூறினார்: “பிரபுவே! கமலாபூரில் ஜகந்நாதர் கோவிலின் சிகரத்தைப் பார்த்தவுடன் நீங்கள் பேரானந்தத்தில் ஆடி பாடி மயங்கி விழுந்தீர்கள். உங்களைத் தாங்க நான் ஓடினேன். அப்போது நாங்கள் இருவரும் தண்டத்தின் மீது விழுந்ததால் அது மூன்று துண்டுகளாக உடைந்து விட்டது. அது எங்கே போனது எனக்குத் தெரியவில்லை.”

இதைக் கேட்ட மகாபிரபு, “நான் தனியாகவே புரிக்குச் செல்வேன். நீங்கள் என்னுடன் வர வேண்டாம். வேண்டுமானால் எனக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ வாருங்கள்.”என்று கூறினார். அதற்கு ஸ்ரீ நித்யானந்த பிரபு, “நான் தவறு செய்தவன். நீங்கள் விரும்பும் தண்டனையை எனக்குக் கொடுங்கள்.” என்று மிகுந்த பணிவுடன் பதிலளித்தார்.

அப்போது முகுந்த தத்தர், மகாபிரபுவிடம், “பிரபுவே! நீங்கள் முன்னால் செல்லுங்கள். நாங்கள் அனைவரும் உங்களைப் பின்தொடர்கிறோம்.” என்று வேண்டிக்கொண்டார். இவ்வாறு, ஜகந்நாதரைக் காணும் பேரன்பும் பரவசமும் நிறைந்த மனநிலையுடன், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அதரநாலாவிலிருந்து தனது புகழ்பெற்ற ஜகந்நாதர் தரிசனப் பயணத்தைத் தொடங்கினார்.

நோக்கம் 6: அஹுலா மடம் மற்றும் கம்பீரா ஆகியவை ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் தொடர்புடைய முக்கியமான புனிதத் தலங்கள் என்பதை அறிந்துகொள்வது.

அஹுலா மடம்

அஹுலா மடம், புரியில் ஹேராகோஹிரி சாஹி (காவல் நிலையம் அருகில்) அமைந்துள்ள மிகவும் பழமையான மடமாகும். ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர் இங்கு தங்கியிருந்தார். அவருடைய அழைப்பை ஏற்று, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு இந்த மடத்திற்கு வந்து பிரசாதம் அருளிச் செய்தார். இங்கு ஒரு கம்பீரா அறையும் உள்ளது. அதில் ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர் வழிபட்ட திருவிக்ரகங்கள் உள்ளன:

  • ஸ்ரீ சைதன்ய மகாபிரபு
  • ஸ்ரீ நித்யானந்த பிரபு
  • ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர்
  • ஸ்ரீ சீதா தேவி

அஹுலா மட விக்ரகங்கள்

கம்பீரா

கம்பீரா, ஜகந்நாதர் கோவிலின் தென்கிழக்குப் பகுதியில், பாலி சாஹியில், ஸ்வர்கத்வாரத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இது காசி மிஸ்ரரின் இல்லம் அல்லது ராதாகாந்த மடம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்நியாசம் ஏற்ற பிறகு மகாபிரபு முதலில் சர்வபௌம பட்டாச்சாரியரின் இல்லத்தில் தங்கினார். பின்னர் தென்னிந்தியப் பயணத்தை முடித்து புரிக்கு திரும்பியபோது, காசி மிஸ்ரரின் இல்லத்தில் தங்கினார்.

காசி மிஸ்ரர், மன்னர் பிரதாபருத்ரரின் ராஜகுரு ஆவார். மன்னர் பிரதாபருத்ரர் மகாபிரபுவின் பெரிய பக்தர். அவருடைய விருப்பத்தின்படி, மகாபிரபு காசி மிஸ்ரரின் இல்லத்தில் தங்கினார். அந்த இல்லத்தில் இருந்த சிறிய அறை “கம்பீரா” என்று அழைக்கப்படுகிறது. மகாபிரபு தனது வெளிப்பட்ட லீலையின் இறுதி பன்னிரண்டு ஆண்டுகள் இந்த அறையிலேயே தங்கியிருந்து, ஸ்ரீ கிருஷ்ணரின் பிரிவால் ஏற்பட்ட பரம பிரேம பரவசத்தை வெளிப்படுத்தினார்.

இன்றும் அந்த அறையில் மகாபிரபு பயன்படுத்தியதாகக் கருதப்படும்:

  • கமண்டலம்
  • பாதுகைகள்
  • போர்வை (கம்பளி)

ஆகிய புனித நினைவுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

கம்பீரா அறை

நோக்கம் 7: ரதயாத்திரையின்போது ஸ்ரீ சைதன்ய மகாபிரபு வெளிப்படுத்திய லீலைகள், பிரேம-பக்தியின் உன்னத போதனைகளையும் கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆழ்ந்த இரகசிய பாவத்தையும் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதைப் போற்றுவது.

ரதயாத்திரையில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

குண்டிச்சா கோவில் சுத்தம் (குண்டிச்சா மார்ஜனம்)

ரதயாத்திரை நெருங்கியபோது, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு திருவிழா ஏற்பாடுகளில் நேரடியாகப் பங்கேற்றார். ஜகந்நாதர் கோவிலிலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் குண்டிச்சா கோவில் அமைந்துள்ளது. ரதயாத்திரையின் போது ஜகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி இங்கு வந்து ஏழு நாட்கள் தங்குவார்கள். மற்ற நாட்களில் இந்தக் கோவில் காலியாக இருக்கும். ஒரு வருடம் முழுவதும் கோவிலில் தூசி, மணல், வைக்கோல் போன்றவை சேர்ந்து விடும். அவற்றைச் சுத்தம் செய்வது சாதாரண வேலை என்று கருதப்பட்டது.

ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் துடைப்பங்களையும், தண்ணீர் குடங்களையும் எடுத்துக்கொண்டு, ஜகந்நாதரின் வருகைக்காக குண்டிச்சா கோவிலைத் தாமே சுத்தம் செய்தார். மகாபிரபு இடைவிடாமல் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை பாடிக்கொண்டே, தரை, சுவர்கள், மேற்கூரை என கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் சுத்தம் செய்தார். பக்தர்களும் அவருடன் சேர்ந்து துடைத்து, திருநாமம் பாடினர்.

அவர் மிகவும் உற்சாகமாகச் சேவை செய்ததால், அவரது உடல் முழுவதும் தூசியால் மூடப்பட்டது. சில நேரங்களில் கிருஷ்ணபிரேமையால் அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. அந்தக் கண்ணீரே கோவிலைப் புனிதப்படுத்தியது. அனைத்து குப்பைகளையும் ஒன்று சேர்த்து வெளியே எடுத்துச் சென்றார். மற்ற பக்தர்களும் அதையே செய்தனர். மகாபிரபு சேகரித்த குப்பைக் குவியலே மிகப் பெரியதாக இருந்தது. இது அவர் செய்த சேவையின் முழுமையையும் காட்டியது.

இரண்டாவது சுத்தம்

அதன்பின், கோவிலில் சிறிதளவு தூசுகூட எஞ்சாதபடி மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்தனர். பின்னர் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தண்ணீர் கொண்டு வந்து, மகாபிரபு தரை, சுவர்கள், மேற்கூரை ஆகிய அனைத்தையும் நன்றாகக் கழுவினார். அருகிலிருந்த குளம் மற்றும் கிணற்றிலிருந்து பக்தர்கள் தொடர்ந்து தண்ணீர் எடுத்துவந்தனர்.

இறுதியாக, மகாபிரபு தமது சொந்த ஆடையால் ஜகந்நாதரின் சிம்மாசனத்தைத் துடைத்து மெருகூட்டினார். அப்போது குண்டிச்சா கோவில் மிகவும் தூய்மையாக, குளிர்ச்சியாக, ஒளிவீசும் நிலையில் மாறியது. மகாபிரபுவின் தூய இதயத்தைப் போலவே அந்தக் கோவிலும் ஜகந்நாதரை வரவேற்கத் தயாரானது.

ரதயாத்திரை ஆரம்பம்

இரண்டு நாட்களுக்குப் பிறகு, மூன்று பிரமாண்டமான ரதங்கள் ஜகந்நாதர் கோவிலின் முன் தயாராக நிலையில் நின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டிருந்தனர். ஜகந்நாதர் தமது சிம்மாசனத்திலிருந்து ரதத்திற்குச் செல்லும்போது, பலமான சேவகர்கள் பெரிய திண்டுகளின் மீது அவரை மெதுவாகத் தூக்கிச் சென்றனர். சில சமயங்களில் அந்தத் திண்டுகள் உடைந்து, பஞ்சு காற்றில் பறந்தது.

அந்த நேரத்தில், மகாபிரபு பேரன்புடன்: “மணிமா! மணிமா!” (என் பிரபுவே! என் பிரபுவே!) என்று உரக்க அழைத்தார். ஆனால் மங்கள வாத்தியங்களின் முழக்கம் அவரது குரலை மறைத்தது.

மன்னர் பிரதாபருத்ரரின் பணிவு

அப்போது மகாபிரபு, ஒடிசாவின் மன்னர் பிரதாபருத்ரரை கண்டார். மன்னர் தங்கக் கைப்பிடியுள்ள துடைப்பத்தால், ஜகந்நாதரின் ரதம் செல்லும் பாதையை மிகுந்த தாழ்மையுடன் பெருக்கிக் கொண்டிருந்தார். இதுவே சேரா பஹாரா என்ற புனித சேவையாகும்.

மன்னர் பலமுறை மகாபிரபுவைச் சந்திக்க விரும்பியிருந்தார். ஆனால் சந்நியாசியாக இருந்ததால், மகாபிரபு அவரை நேரில் சந்திக்க மறுத்திருந்தார். ஆனால், ஜகந்நாதருக்காக மன்னர் இவ்வளவு தாழ்மையுடன் சேவை செய்வதைப் பார்த்த மகாபிரபு மிகவும் மகிழ்ந்தார். இந்த மன்னருக்கு தனது சிறப்பான கருணையை வழங்க வேண்டும் என்று அப்போது மனதில் உறுதி செய்தார்.

ரதயாத்திரையில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் பரவச நடனம்

சங்கீர்த்தன ஏற்பாடு

ஜகந்நாதர் குண்டிச்சா கோவிலுக்குப் புறப்படத் தயாரானபோது, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தனது நெருங்கிய பக்தர்களை ஏழு சங்கீர்த்தனக் குழுக்களாக அமைத்தார். ஒவ்வொரு குழுவிலும்:

  • 2 மிருதங்க வாசிப்போர்
  • 1 நடனமாடுபவர்
  • 1 முதன்மைப் பாடகர்
  • 5 பதிலாகப் பாடும் பக்தர்கள் இருந்தனர்.

மகாபிரபு, ரதத்தின் முன் பாக நான்கு குழுக்களையும், இருபுறங்களிலும் தலா ஒரு குழுவையும், பின்னால் ஒரு குழுவையும் நிறுத்தினார்.

ரதயாத்திரை ஆரம்பம்

பக்தர்கள் பேரானந்த முழக்கத்துடன் ரதத்தை இழுக்கத் தொடங்கினர். பெரிய சக்கரங்கள் மெதுவாகச் சுழல ஆரம்பித்தன. ரதங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் சூரிய ஒளியில் மின்னின. பட்டுத் திரைகள் காற்றில் அசைந்தன. வெண்சாமரங்கள் அழகாக அசைந்தன. மணிகளும் இசைக்கருவிகளும் முழங்கின. ஒவ்வொரு ரதமும் நகரும் கோவிலைப் போல கம்பீரமாக முன்னேறியது.

மகாபிரபுவின் பரவச நடனம்

ஜகந்நாதரின் ரதம் நகரத் தொடங்கியதும், மிருதங்கங்கள் முழங்கின. மகாபிரபு ஜகந்நாதரின் முன் பாக பரவசமாக நடனமாடி,“ஜய ஜகந்நாத! ஜய ஜகந்நாத!”என்று உரக்கப் பாடினார். அவரது பார்வை முழுவதும் ரதத்தில் எழுந்தருளியிருந்த ஜகந்நாதரின் திருவுருவத்தின் மீதே நிலைத்திருந்தது.

கோபியர் நடத்திய ரத யாத்திரை மற்றும்
புரி ரத யாத்திரையில் சைதன்ய மகாபிரபு

கோபியர் நடத்திய ரத யாத்திரை மற்றும் புரி ரத யாத்திரையில் சைதன்ய மகாபிரபு

ராதாராணியின் பாவம்

ரதயாத்திரை முன்னேறியபோது, மகாபிரபு மேலும் மேலும் ஸ்ரீமதி ராதாராணியின் பிரேம பாவத்தில் மூழ்கினார். குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரைச் சந்தித்த ராதாராணியின் மனநிலையை அவர் தமது நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினார். ராதாராணியின் ஏக்கம் ஒன்றே:“கிருஷ்ணர் மீண்டும் பிருந்தாவனத்திற்கு திரும்ப வேண்டும்.”இந்த உன்னதமான பிரேம பாவமே ரதயாத்திரையின் உள்ளார்ந்த அர்த்தமாகும்.

மன்னர் பிரதாபருத்ரரின் தரிசனம்

மன்னர் பிரதாபருத்ரரும், சர்வபௌம பட்டாச்சாரியரும் மகாபிரபுவின் நடனத்தை ஆழ்ந்த கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மன்னருக்கு ஒரு தெய்வீக அனுபவம் கிடைத்தது. நடனமாடும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவும், அந்த நடனத்தை ரசிக்கும் ஜகந்நாதரும் ஒரே பரம்பொருள் என்பதை அவர் நேரடியாக உணர்ந்தார்.

ஏழு இடங்களில் மகாபிரபு

மகாபிரபு ஒவ்வொரு சங்கீர்த்தனக் குழுவிற்கும் மாறி மாறி சென்று நடனமாடினார். ஆனால் மன்னரும் சர்வபௌம பட்டாச்சாரியரும் ஒரு அதிசயத்தைப் பார்த்தனர். மகாபிரபு ஒரே நேரத்தில் ஏழு சங்கீர்த்தனக் குழுக்களின் நடுவிலும் இருப்பது போலக் காட்சியளித்தார். ஒவ்வொரு குழுவினரும், “இன்று மகாபிரபு எங்கள் குழுவில்தான் நடனமாடுகிறார்.” என்று நினைத்தனர். இது மகாபிரபுவின் தெய்வீக சக்தியின் வெளிப்பாடாகும்.

பேரானந்தத்தின் உச்சம்

சில நேரங்களில் அனைத்து சங்கீர்த்தனக் குழுக்களும் ஒன்றாகச் சேர்ந்து, மகாபிரபுவைச் சுற்றி வட்டமாக நின்று கீர்த்தனம் செய்தனர். மகாபிரபு இடி முழக்கம் போல கர்ஜித்து, உயரமாகக் குதித்து, வேகமாகச் சுழன்று நடனமாடினார். அவரது நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஜகந்நாதரின் ரதம்கூட நின்றுவிட்டது. மகாபிரபுவின் பரவச நடனத்தை ஜகந்நாதர் ஆனந்தத்துடன் ரசித்தார்.

பரம பிரேமையின் அறிகுறிகள்

  • அந்த நேரத்தில் மகாபிரபுவின் உடலில் அற்புதமான பரவச அறிகுறிகள் தோன்றின.
  • உடல் முழுவதும் ரோமஞ்சம் ஏற்பட்டது.
  • கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது.
  • உடல் முழுவதும் வியர்வை பொங்கியது.
  • “ஜகந்நாதா!” என்று சொல்ல முயன்றபோது, பரவசத்தால் வார்த்தைகள் தெளிவாக வரவில்லை.
  • சில நேரங்களில் மயங்கி தரையில் விழுந்தார்.
  • பின்னர் மீண்டும் எழுந்து பேரானந்தத்துடன் நடனமாடினார்.

ஸ்வரூப தாமோதரரின் கீர்த்தனம்

மகாபிரபுவின் மன நிலையை உடனே உணர்ந்த ஸ்வரூப தாமோதரர், ராதாராணி குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரிடம் வெளிப்படுத்திய ஏக்கத்தைப் பாடும் ஒரு ஸ்லோகத்தை மீண்டும் மீண்டும் பாடினார். அந்தப் பாடல், “கிருஷ்ணரே! நீங்கள் மீண்டும் ” பிருந்தாவனத்திற்கு வாருங்கள் என்ற ராதாராணியின் ஆழ்ந்த விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.

பிருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்லும் ராதாராணி

அந்தப் பாவத்தில் முழுமையாக மூழ்கிய மகாபிரபு, ஜகந்நாதரின் ரதத்திற்கு முன்னால் நடனமாடிக் கொண்டே சென்றார். அவரது நடனம், ராதாராணி கிருஷ்ணரை மீண்டும் பிருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்வதை வெளிப்படுத்தியது. மகாபிரபு முன்னேறியபோது, ஜகந்நாதரின் ரதமும் மெதுவாக அவரைப் பின்தொடர்ந்து நகர்ந்தது.

ரத யாத்திரையில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

இவ்வாறு, ரதயாத்திரை என்பது ஜகந்நாதரை (கிருஷ்ணரை) துவாரகையிலிருந்து மீண்டும் பிருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்லும் ராதாராணியின் பரம பிரேமையின் திவ்ய லீலையாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு உலகிற்கு வெளிப்படுத்தினார்.

ரத யாத்திரையின் போது ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் தெய்வீக பாவனை

சில நேரங்களில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ரதத்தின் பின்புறம் சென்று நிற்பார். அதன்மூலம், கிருஷ்ணர் விருந்தாவன வாசிகளையும், தமது இளமைப் பருவ அன்பையும், ஸ்ரீமதி ராதாராணியையும் மற்ற கோபியரையும் மறந்து விட்டார் என்ற பாவனையை வெளிப்படுத்தினார்.

மகாபிரபு ரதத்தின் பின்னால் சென்றவுடன், ரதம் உடனே நின்றுவிடும். இதன்மூலம் ஸ்ரீ ஜகந்நாதர் (கிருஷ்ணர்), “நான் அவர்களை மறக்கவில்லை. ஸ்ரீமதி ராதாராணியும், முழு பிருந்தாவனமும் எனக்கு எல்லாவற்றையும் விட மிகவும் பிரியமானவர்கள் என்று” பதிலளிப்பதைப் போல இருந்தது. ரதம் அசையாமல் நின்றுகொண்டே இருக்கும். மகாபிரபு மீண்டும் ரதத்தின் முன்புறம் வந்து பேரானந்தத்துடன் நடனமாடத் தொடங்கிய பிறகே, ஜகந்நாதரின் ரதம் மீண்டும் மெதுவாக நகரும்.

இவ்வாறு, ராதாராணி இல்லாமல் தம்மால் வாழ முடியாது; பிருந்தாவனத்திற்கு வெளியே தமக்கு உண்மையான திருப்தி இல்லை என்பதை கிருஷ்ணர் வெளிப்படுத்தினார். அந்தப் பாவனையிலேயே ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ ஜகந்நாதரை குண்டிச்சா ஆலயத்திற்கு அழைத்துச் சென்று, அவரை முழுமையாக மகிழ்வித்தார். ரத யாத்திரையின்போது ஸ்ரீ ஜகந்நாதருடன் மகாபிரபு நிகழ்த்திய இந்த அற்புதமான லீலைகள், பகவானின் மிகவும் ரகசியமான தெய்வீக பரவசங்களையும், பிரேம பக்தியின் உச்ச நிலையையும் உலகிற்கு வெளிப்படுத்தின.

இந்த உலகில் மக்கள், உயிரற்ற பொருட்களில் சிறிதளவு இன்பத்தைத் தேடி வாழ்க்கையை வீணாக்குகின்றனர். ஆனால் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, கிருஷ்ணரின் இந்த மிக உன்னதமான அந்தரங்க லீலைகளை வெளிப்படுத்தி, இந்த உலகில் கிடைக்கும் எந்த இன்பத்திற்கும் ஒப்பிட முடியாத ஆன்மீக ஆனந்தம் கிருஷ்ணபிரேமையிலே உள்ளது என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

நோக்கம் 8: குண்டிச்சா திருவிழாவின் போது ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் லீலைகளில் இந்திரத்யும்ன சரோவரத்தின் ஆன்மிக முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.

இந்திரத்யும்ன சரோவரம்

இந்திரத்யும்ன சரோவரம், குண்டிச்சா ஆலயத்திலிருந்து சுமார் கால் மைல் தொலைவில் அமைந்துள்ளது.

இந்திரத்யும்ன சரோவரம்

குண்டிச்சா ஆலயத்தைச் சுத்தம் செய்தல்

ஒவ்வொரு ஆண்டும் குண்டிச்சா ஆலயத்தைச் சுத்தம் செய்யும் போது, ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவும் பக்தர்களும் இந்த சரோவரத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் குடங்களில் தண்ணீர் எடுத்துச் சென்றனர். காலியான குடங்களை மற்றவர்கள் மீண்டும் நிரப்பிக் கொண்டு வந்தனர். பக்தர்கள் அதிகமாக இருந்ததால், சரோவரக் கரையில் நிற்பதற்கே இடமில்லை. ஒருவருடன் ஒருவர் மோதியதால் பல மண் குடங்கள் உடைந்தன.

தண்ணீர் விளையாட்டு

ஆலயத்தைச் சுத்தம் செய்த பிறகு, ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவும் பக்தர்களும் இந்திரத்யும்ன சரோவரத்தில் இறங்கி மகிழ்ச்சியுடன் தண்ணீர் விளையாடினர்.
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் தெளித்தனர். வட்டமாக நின்று கரதாளம் இசைத்து, தவளைகள் கத்துவது போல மகிழ்ச்சியுடன் விளையாடினர். ஸ்வரூப தாமோதரர்–வித்யாநிதி, முராரி குப்தர்–வாசுதேவ தத்தர் போன்ற பக்தர்கள் இருவர் இருவராகப் பிரிந்து தண்ணீரில் நட்பான போட்டியில் ஈடுபட்டனர்.

நித்யானந்த பிரபுவிடம் தோற்ற அத்வைத ஆச்சாரியர், அன்போடு நகைச்சுவையாக அவரைத் திட்டினார். சர்வபௌம பட்டாச்சாரியரும் ராமானந்த ராயரும் தங்கள் பெரிய அறிஞர் தன்மையை மறந்து, சிறு குழந்தைகளைப் போல தண்ணீரில் விளையாடுவதைப் பார்த்து மகாபிரபு மிகவும் மகிழ்ந்தார். அப்போது மகாபிரபு நகைச்சுவையாக கோபிநாத ஆச்சாரியரிடம்,
“இவர்கள் இருவரும் பெரிய அறிஞர்களும் மிகவும் கம்பீரமானவர்களும் ஆவர். இப்போது சிறு பிள்ளைகளைப் போல விளையாடுகிறார்கள். இவர்களிடம் விளையாட்டை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று கூறினார்.

சேஷசாயி விஷ்ணு லீலை

பின்னர் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு லீலையை வெளிப்படுத்தினார்.

அத்வைத ஆச்சாரியரின் உடலின் மீது படுத்துக் கொண்டு, சரோவரத்தில் மிதந்தார். இதன் மூலம், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் சேஷசாயி விஷ்ணுவின் திவ்ய லீலையை வெளிப்படுத்தினார். இந்த அற்புதமான தரிசனத்தைக் கண்டு அனைத்து பக்தர்களும் பேரானந்தத்தில் “ஸ்ரீ இந்திரத்யும்ன சரோவரம் கி ஜய்!” என்று முழக்கமிட்டனர்.

அயி தோட்டத்தில் பிரசாதம்

இந்திரத்யும்ன சரோவரத்தில் ஆனந்தமான லீலைகளை நிறைவு செய்த பிறகு, ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவும் பக்தர்களும் குண்டிச்சா ஆலயத்திற்கு அருகிலுள்ள அயி தோட்டம் என்ற தோட்டத்திற்குச் சென்று, அங்கு அனைவரும் சேர்ந்து பிரசாதம் ஏற்றுக் கொண்டனர்.

ஸ்ரீ கௌராங்க மகாபிரபு கி ஜய்!

நோக்கம் 9: இந்தப் புனிதத் தலங்கள் அனைத்தும் இணைந்து கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் அடிப்படைக் கொள்கைகளான குரு பக்தி, வைஷ்ணவ சேவை, நாம சங்கீர்த்தனம், ஸ்ரீமத் பாகவதம், அர்ச்சாவிக்ரஹ வழிபாடு மற்றும் கிருஷ்ணபிரேமை ஆகியவற்றை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதைப் போற்றுவது.

மகாபிரபு விஸ்ராம ஸ்தானம்

நரசிம்மதேவர் ஆலயத்திலிருந்து இந்திரத்யும்ன சரோவரத்தை நோக்கிச் செல்லும் வழியில், வலது பக்கத்தில் மகாபிரபு விஸ்ராம ஸ்தானம் அமைந்துள்ளது. குண்டிச்சா ஆலயத்தைச் சுத்தம் செய்த (குண்டிச்சா மார்ஜனம்) பிறகு, ஸ்ரீ கௌராங்க மகாபிரபு இவ்விடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பரமானந்த பூரி கிணறு

ஸ்ரீல பரமானந்தபுரி, ஸ்ரீல மாதவேந்திர புரியின் சீடரும், ஸ்ரீ ஈஸ்வர புரியின் குருபந்துவும் ஆவார். ஆகையால், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவரை எப்போதும் தமது குரு வர்க்கமாகக் கருதி மிகுந்த மரியாதை செய்தார். பரமானந்த புரி, ஜகந்நாதர் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சிறிய மடத்தையும், அதற்கு அருகில் ஒரு கிணற்றையும் அமைத்தார். ஆனால் அந்தக் கிணற்றின் தண்ணீர் உப்புச் சுவையுடன் இருந்தது.

இதைக் கண்டு மகாபிரபு, “கங்கை நதி இந்தக் கிணற்றில் வந்து கலக்க வேண்டும்” என்று ஜகந்நாதரிடம் பிரார்த்தனை செய்தார். பகவான் அந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அந்தக் கிணற்றின் நீர் இனிமையானது. மகாபிரபு பக்தர்களிடம், “இந்தக் கிணற்றின் நீர் கங்கை நீருக்கு சமமானது. இதைப் பருகுபவரும், இதில் நீராடுபவரும் கங்கையில் நீராடிய பலனைப் பெறுவார்கள். மேலும், அவர்களுக்கு கிருஷ்ணரிடம் தூய பிரேமை உண்டாகும்” என்று கூறினார்.

சர்வபௌம பட்டாச்சாரியரின் வீடு

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு முதன்முதலாக ஜகந்நாத புரிக்கு வந்தபோது, ஜகந்நாதரை தரிசித்தவுடன் பரவசமடைந்து மயங்கி விழுந்தார். அப்போது சர்வபௌம பட்டாச்சாரியர் அவரைத் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று பராமரித்தார். பல நாட்கள் அவர் மகாபிரபுவுக்கு நிர்விசேஷ (மாயாவாத) தத்துவத்தை விளக்க முயன்றார். இறுதியில் மகாபிரபு அவரது கருத்துக்களை மறுத்து, தமது காரணமற்ற கருணையால் ஷட்புஜ (ஆறு கரங்கள் கொண்ட) திருவுருவத்தை அவருக்குக் காட்டினார்.

அந்தத் திருவுருவத்தில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஆகிய மூவரின் தெய்வீக வடிவங்கள் ஒன்றாக வெளிப்பட்டன. இந்த வீட்டில் இருந்து கடலுக்கும், ஜகந்நாதர் ஆலயத்திற்கும் செல்லும் இரகசிய சுரங்கப் பாதை இருந்ததாக பாரம்பரியமாகக் கூறப்படுகிறது.

சித்த பகுளா

சித்த பகுளா, காசி மிஸ்ரரின் வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ளது. நாமாச்சாரியர் ஸ்ரீல ஹரிதாஸ தாகூர் தங்குவதற்காக இந்த இடத்தை ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவே ஏற்பாடு செய்தார். இங்கேயே ஹரிதாஸ தாகூர் தினமும் மூன்று லட்சம் ஹரே கிருஷ்ண மகாமந்திர நாமங்களை ஜபம் செய்தார்.

மகாபிரபு அவரிடம், “இங்கேயே தங்கி ஹரே கிருஷ்ண மகாமந்திரத்தை ஜபியுங்கள். நான் தினமும் உங்களைச் சந்திக்க வருவேன். ஜகந்நாதர் ஆலயத்தின் நீலசக்கரத்தை தரிசித்து வணங்குங்கள். உங்களுக்கு பிரசாதத்தை நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினார்.

ஹரிதாஸ தாகூருக்கு நிழல் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மகாபிரபு ஜகந்நாதரின் பயன்படுத்திய பல் குச்சியை அங்கு நட்டார். அது உடனே வளர்ந்து பெரிய பகுள மரமாக மாறி நல்ல நிழலை அளித்தது. அந்த மரத்தின் கீழ் ரூப கோஸ்வாமி, லலிதா மாதவம் மற்றும் விதக்த மாதவம் என்ற நாடகங்களை மகாபிரபுவிடம் வாசித்துக் காட்டினார். சனாதன கோஸ்வாமியும் இங்கே ஹரிதாஸ தாகூருடன் தங்கியிருந்தார். ஹரிதாஸ தாகூர் இவ்விடத்திலேயே திருவுடலை விட்டார். மகாபிரபு பேரானந்தத்தில் அவரது திருமேனியைத் தூக்கிச் சென்று நடனமாடினார்.

பின்னர் ஜகந்நாதரின் ரதம் செய்வதற்காக அந்த மரத்தை வெட்ட மன்னரின் அதிகாரிகள் வந்தனர். ஆனால் ஸ்ரீல ஜகந்நாத கோஸ்வாமி, அது மகாபிரபு நட்ட புனித மரம் என்று கூறி தடுத்தார். அவர்கள் மறுநாள் வெட்ட முடிவு செய்தனர். ஆனால் மறுநாள் காலை வந்தபோது, மரத்தின் உள்ளே முழுவதும் காலியாகி இருந்தது. அதனால் அந்த மரத்தை வெட்டாமல் திரும்பிச் சென்றனர்.

தோட்ட கோபிநாதர் (தோட்டா கோபிநாதர்)

தோட்டா கோபிநாதரின் திருக்கோவில்

கதாதர பண்டிதர் தினமும் ஸ்ரீமத் பாகவதத்தை ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவுக்கு வாசித்துக் காட்டுவார். ஒருநாள் ஜகந்நாதரை தரிசித்துவிட்டு இங்கு வந்த மகாபிரபு, ஷ்யாமசுந்தரராக விளங்கும் கிருஷ்ணரை தரிசித்து, பிருந்தாவனத்தில் இருப்பதைப் போன்ற ஆழ்ந்த பிரிவுத் துயரத்தில் மூழ்கினார். அவருக்கு சடக பர்வதம் கோவர்த்தன மலையாகவும், கடல் யமுனையாகவும், ஆலமரம் வம்சிவடமாகவும் தோன்றியது. ஒருநாள் அதே பரவச நிலையில் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தபோது, ஒரு விக்ரஹத்தின் மேற்பகுதி தென்பட்டது. மகாபிரபு, கதாதர பண்டிதரிடம், “மிகவும் அரிய பொக்கிஷம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கூறினார்.

இருவரும் சேர்ந்து மணலை அகற்றியபோது, அழகிய ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரஹம் வெளிப்பட்டது. மகாபிரபு அந்த விக்ரஹத்திற்கு கோபிநாதர் என்று பெயரிட்டார். அந்த விக்ரஹம் ஒரு தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டதால், ஒடியா மொழியில் “தோட்டா” (தோட்டம்) என்று அழைக்கப்பட்டு, பின்னர் தோட்டா கோபிநாதர் என்ற பெயர் பெற்றது.

தோட்டா கோபிநாதரும் சைதன்ய மகாபிரபுவும்

அந்த விக்ரஹத்தின் சேவையை மகாபிரபு தமது அன்பு பக்தரான கதாதர பண்டிதரிடம் ஒப்படைத்தார். கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் படி, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தமது வெளிப்படையான லீலைகளை முடித்துக் கொண்டு கோலோக பிருந்தாவனத்திற்கு சென்ற போது, தோட்டா கோபிநாதரின் முழங்காலுக்குள் பிரவேசித்து இவ்வுலக லீலையை நிறைவு செய்தார் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இன்றும் தோட்டா கோபிநாதரின் முழங்காலில் காணப்படும் சிறிய பிளவு, அந்தத் தெய்வீக லீலையின் நினைவாகக் கருதப்படுகிறது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare