IV. பூரியில் உள்ள புனித திருக்கோயில்கள் மற்றும் மடங்கள்
3. தேவி திருக்கோயில்கள்
a. பட்ட மங்களா திருக்கோயில்

மா பட்ட மங்களா திருக்கோவில்
நோக்கங்கள்
நோக்கம் 1: புரிக்கான ஆன்மீக நுழைவாயிலாக விளங்கும் மா பட்ட மங்களா திருக்கோவிலின் சிறப்பை அறிதல்.
நோக்கம் 2: ஸ்ரீ ஜகந்நாத தாமத்திற்கு செல்லும் வழியின் பாதுகாப்பு தெய்வமாக மா பட்ட மங்களாவின் பங்கினைப் புரிந்துகொள்ளுதல்.
நோக்கம் 3: பிரம்மதேவர் மற்றும் நவகலேபரத்துடன் தொடர்புடைய புனித பாரம்பரியங்களை அறிதல்.
நோக்கம் 4: இத்திருக்கோவிலின் கட்டிடக்கலை, பண்பாட்டு மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுதல்.
நோக்கம் 5: மா பட்ட மங்களாவின் ஆன்மிகச் சின்னங்களையும், அவருடைய வழிபாட்டு முறையையும் அறிதல்.
நோக்கம் 6: மா பட்ட மங்களா திருக்கோவிலுடன் தொடர்புடைய சாஸ்திர மற்றும் பண்பாட்டு குறிப்புகளைப் படித்து அறிதல்.
1. அறிமுகம்
நோக்கம் 1: புரிக்கான ஆன்மீக நுழைவாயிலாக விளங்கும் மா பட்ட மங்களா திருக்கோவிலின் சிறப்பை அறிதல்.
மா பட்ட மங்களா திருக்கோவில், புரியின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஜகந்நாத சடக் (Jagannath Sadak) எனப்படும் புனிதப் பாதையில் அமைந்துள்ளது. ஸ்ரீ ஜகந்நாத புரிதாமத்திற்கான ஆன்மீக நுழைவாயிலாக இத்திருத்தலம் விளங்குகிறது.
திருநாமத்தின் பொருள்
ஒடியா மொழியில் “பட்டா (Bata)” என்பது வழி அல்லது பாதை என்றும், “மங்களா (Mangala)” என்பது மங்களம் அல்லது சுபம் என்றும் பொருள்படும்.
பக்தர்கள் ஸ்ரீ ஜகந்நாத தாமத்தை நோக்கி மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணத்தில் அவர்களுக்கு வழிகாட்டி பாதுகாப்பளிப்பவர் என்பதால், அன்னை மங்களா “பட்ட மங்களா” என்று அழைக்கப்படுகிறார்.
பாரம்பரியம்
பண்டைய காலம் முதல் நிலவி வரும் பாரம்பரியத்தின்படி, புரிக்குள் நுழைவதற்கு முன் யாத்திரிகர்கள் மா பட்ட மங்களா திருக்கோவிலில் தரிசனம் செய்து, தெய்வீக அன்னையின் ஆசி, அனுமதி மற்றும் பாதுகாப்பை வேண்டிக் கொள்கின்றனர்.
எனவே, இத்திருக்கோவில் ஸ்ரீ க்ஷேத்திரத்தின் உடல் ரீதியான நுழைவாயிலாக மட்டுமல்லாமல், உலகியல் உணர்விலிருந்து பகவத் நினைவில் (பக்தி உணர்விற்கு அழைத்துச் செல்லும்) நிலைபெறும் ஆன்மீக மாற்றத்தின் நுழைவாயிலாகவும் திகழ்கிறது.
2. இத்தலத்துடன் தொடர்புடைய பக்தர்கள்
நோக்கம் 2: ஸ்ரீ ஜகந்நாத தாமத்திற்கு செல்லும் வழியின் பாதுகாப்பு தெய்வமாக மா பட்ட மங்களாவின் பங்கினைப் புரிந்துகொள்ளுதல்.
பிரம்மதேவர்:
திருக்கோவில் பாரம்பரியத்தின்படி, மா பட்ட மங்களா திருக்கோவிலின் தோற்றத்துடன் பிரம்மதேவர் தொடர்புபடுத்தப்படுகிறார். இப்புனிதத் திருத்தலத்துடன் தொடர்புடைய முதல் தெய்வீக ஆளுமைகளில் ஒருவராக அவர் நினைவுகூறப்படுகிறார்.
ஸ்ரீ ஜகந்நாத தாமத்தின் யாத்திரிகர்கள்:
பல தலைமுறைகளாக, யாத்திரிகர்கள் புரிக்கான தங்களது புனிதப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், முதலில் மா பட்ட மங்களாவை தரிசித்து பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தைத சேவகர்கள் (Daita Sevakas):
ஸ்ரீ ஜகந்நாதரின் பாரம்பரிய சேவகர்களான தைத சேவகர்கள், குறிப்பாக நவகலேபர தொடர்பான முக்கிய சடங்குகளின் போது, மா பட்ட மங்களா திருக்கோவிலுடன் சிறப்பான ஆன்மிக மற்றும் சடங்கு மரபு உறவைப் பேணுகின்றனர்.
கௌடிய வைஷ்ணவ பக்தர்கள்:
ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் அனுயாயர்களும், ஜகந்நாத தாமத்தை நோக்கிச் செல்லும் வழியில் பாரம்பரியமாக மா பட்ட மங்களா திருக்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வணங்குகின்றனர்.
3. லீலைகள்
நோக்கம் 3: பிரம்மதேவர் மற்றும் நவகலேபரத்துடன் தொடர்புடைய புனித பாரம்பரியங்களை அறிதல்.
பிரம்மதேவருக்கு மா பட்ட மங்களா வழங்கிய தெய்வீக வழிகாட்டுதல்:
திருக்கோவில் பாரம்பரியத்தின்படி, மன்னர் இந்த்ரத்யும்னர், ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர் மற்றும் ஸ்ரீமதி சுபத்ரா தேவியின் புனித மர விக்ரகங்களை பிரதிஷ்டை செய்வதற்காக பிரம்மதேவரை அழைத்தபோது, புரியைச் சூழ்ந்திருந்த அதீத தெய்வீக சக்தியின் காரணமாக பிரம்மதேவர் தமது வழியைத் தவற விட்டார்.
அப்போது, இந்தப் புனிதத் திருத்தலத்தில் மா மங்களா தோன்றி, பிரம்மதேவரை புனிதமான ஸ்ரீ ஜகந்நாத தாமத்தை நோக்கி வழிநடத்தினார். அவரது கருணைக்கு நன்றிக்கடனாக, பிரம்மதேவர் இவ்விடத்தில் மா பட்ட மங்களாவின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார்.
அன்றிலிருந்து, ஜகந்நாத தாமத்திற்குச் செல்லும் பாதையின் தெய்வீக வழிகாட்டியாகவும், நித்திய பாதுகாவலராகவும் மா பட்ட மங்களா வழிபடப்படுகிறார்.
மா பட்ட மங்களா மற்றும் நவகலேபரம்:
நவகலேபரம் என்பது, ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலபத்ரர், ஸ்ரீமதி சுபத்ரா மற்றும் சுதர்ஶனர் ஆகியோரின் பழைய மர விக்ரகங்களுக்குப் பதிலாக புதிதாகச் செதுக்கப்பட்ட மர விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படும் மிகப் புனிதமான விழாவாகும். இந்த நவகலேபர விழாவில் மா பட்ட மங்களா மிக முக்கியமான பங்கை வகிக்கிறார்.
புதிய விக்ரகங்களைச் செதுக்குவதற்குப் பயன்படும் புனித வேப்பமரங்களை (தாரு) தேடும் பணியைத் தொடங்குவதற்கு முன், தைத சேவகர்கள் முதலில் மா பட்ட மங்களா திருக்கோவிலுக்குச் சென்று, தேவியின் அருளாசியைப் பெறுகின்றனர்.
பாரம்பரியத்தின்படி, மா பட்ட மங்களா தெய்வீக அறிகுறிகள் மற்றும் ஆன்மீக உள்ளுணர்வின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட புனித தாருவை நோக்கி அவர்களுக்கு வழிகாட்டுகிறார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட புனித தாரு, இப்புனிதப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக மா பட்ட மங்களாவிடம் பிரார்த்தனை செய்த பின்னரே ஸ்ரீ க்ஷேத்திரத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படுகிறது.
4. இடம், கட்டிட அமைப்பு மற்றும் முக்கியத்துவம்
நோக்கம் 4: இத்திருக்கோவிலின் கட்டிடக்கலை, பண்பாட்டு மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுதல்.
அமைவிடம் மற்றும் முக்கியத்துவம்
மா பட்ட மங்களா திருக்கோவில், புவனேஸ்வர்–புரி தேசிய நெடுஞ்சாலை (NH–316)-யில், புரியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது, ஸ்ரீ ஜகந்நாதரின் புனித பூமியான ஸ்ரீ க்ஷேத்திரத்தின் புனித நுழைவாயிலாக விளங்குகிறது.
கட்டிடக்கலை
இத்திருக்கோவில், பாரம்பரிய கலிங்க கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:
● ரேகா தேவுல் (Rekha Deul) – கருவறையின் பிரதான கோபுரம்.
● ஜகமோகன (Jagamohana) – பக்தர்கள் ஒன்று கூடும் மண்டபம்.
● பாதுகாப்பு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய சன்னதிகள்.
இத்திருக்கோவிலின் எளிமையும் நேர்த்தியும் நிறைந்த கட்டிட அமைப்பு, ஒடிசாவின் பண்டைய கோவில் பாரம்பரியத்தை அழகாகப் பிரதிபலிக்கிறது.
ஆன்மீக முக்கியத்துவம்
யாத்திரிகர்களின் முதல் தரிசனம்:
ஜகந்நாத தாமத்தை நோக்கிச் செல்லும் பல யாத்திரிகர்கள் முதலில் தரிசிக்கும் தெய்வம் மா பட்ட மங்களா ஆவார். ஸ்ரீ க்ஷேத்திரத்தின் உண்மையான ஆன்மீக மகிமையை தங்களுக்கு உணர்த்துமாறு பக்தர்கள் அவரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
சக்த மற்றும் வைஷ்ணவ சமய நல்லிணக்கம்:
சக்தி வழிபாடும், ஸ்ரீ ஜகந்நாதரின் பக்தியும் ஒன்றிணைந்து விளங்கும் ஒடிசாவின் ஆன்மீக பாரம்பரியத்தை இத்திருக்கோவில் அழகாக வெளிப்படுத்துகிறது.
யாத்திரிகர்களின் ஆன்மீக மைல்கல்:
புனித தாமத்திற்குள் நுழைவதற்கு முன், பெளதீகப் பற்றுகளை (உலகியல் பற்றுகளை) மனதிலிருந்து நீக்கி, பக்தி உணர்வுடன் தம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் உளவியல் மற்றும் ஆன்மீக நிலைமாற்றத்தை இத்திருத்தலம் குறியீடாக எடுத்துக்காட்டுகிறது.
5. மூலவிக்ரகம்
நோக்கம் 5: மா பட்ட மங்களாவின் ஆன்மிகச் சின்னங்களையும், அவருடைய வழிபாட்டு முறையையும் அறிதல்.
மா பட்ட மங்களா, இத்திருக்கோவிலின் கருவறையில் வழிபடப்படும் பிரதான மூலவராவார்.
தேவியின் திருவுருவம்
தேவியின் திருவிக்ரகம், புனிதமான கருப்பு குளோரைட் (Chlorite) கல்லில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. அவர் பத்மாசனத்தில் (தாமரை ஆசனம்) அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். உக்கிரமான துர்கா தேவியின் திருவுருவங்களைப் போன்று அல்லாமல், மா பட்ட மங்களா சாந்தம், கருணை மற்றும் கம்பீரம் நிறைந்த தெய்வீக திருவுருவத்தில் காட்சியளிக்கிறார்.
அவருக்கு மூன்று கண்கள், நான்கு கரங்கள், பாசம் (கயிறு) மற்றும் அங்குசம் (யானையை வழிநடத்தப் பயன்படும் தெய்வீக அங்குசம்) போன்ற புனித சின்னங்கள் உள்ளன. தேவி, பக்தர்கள் தினமும் சமர்ப்பிக்கும் வண்ணமயமான பட்டுப் புடவைகள், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் புத்தம் புதிய மலர் மாலைகளால் அன்புடன் அலங்கரிக்கப்படுகிறார்.
தேவியின் அருளாசிகள்
பக்தர்கள் மா பட்ட மங்களாவிடம் பின்வரும் அருள்களை வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றனர்:
● பாதுகாப்பான பயணம்
● தெய்வீக பாதுகாப்பு
● ஆன்மீக வழிகாட்டுதல்
● ஜகந்நாத தாமத்திற்குள் நுழைவதற்கு முன் தெய்வீக அருளாசி

இத்தலத்தின் பிரதான தெய்வமான மா பட்ட மங்களா
6. சாஸ்திரக் குறிப்புகள் மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம்
நோக்கம் 6: மா பட்ட மங்களா திருக்கோவிலுடன் தொடர்புடைய சாஸ்திர மற்றும் பண்பாட்டு குறிப்புகளைப் படித்து அறிதல்.
சாஸ்திரக் குறிப்புகள்
ஸ்கந்த புராணத்தில், குறிப்பாக புருஷோத்தம க்ஷேத்ர மகாத்மியத்தில், ஸ்ரீ ஜகந்நாத புரி (சங்க க்ஷேத்திரம்) தெய்வீக ஆன்மீக சக்திகளால் பாதுகாக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மா பட்ட மங்களா, ஸ்ரீ க்ஷேத்திரத்தின் புனித எல்லைகளைப் பாதுகாத்து அதன் ஆன்மீகத் தூய்மையை நிலைநிறுத்தும் துர்கா தேவியின் அஷ்டசக்தி (எட்டு சக்தி வடிவங்கள்) ஆகியவற்றில் ஒருவராக அடையாளப்படுத்தப்படுகிறார்.
புரியின் புனிதப் பகுதி, பாரம்பரியமாக சங்கு (சங்கம்) வடிவில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. அந்தப் புனிதப் பிரதேசத்தின் தெய்வீக பாதுகாவலர்களில் ஒருவராக மா பட்ட மங்களா வழிபடப்படுகிறார்.
ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் (மத்ய லீலை – அத்தியாயம் 5) நூலின் தாத்பரியங்களில், ஸ்ரீல ஏ. சி. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர் இந்த தெய்வீக சக்தி, உலகியல் கவனச்சிதறல்களை (“பட்டா”) நீக்கி, யாத்திரிகர்கள் ஸ்ரீ க்ஷேத்திரத்தின் தூய ஆன்மீக சூழ்நிலைக்குள் நுழைய உதவுகிறது என்று விளக்குகிறார்.
ஒடிசாவின் சக்த பாரம்பரியம்
மா பட்ட மங்களா திருக்கோவில், ஒடிசாவின் வளமான சக்த பாரம்பரியத்தின் முக்கியமான அங்கமாகவும், ஸ்ரீ க்ஷேத்திரத்துடன் தொடர்புடைய போற்றத்தக்க தேவி திருக்கோவில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. திருக்கோவில் பாரம்பரியத்தின்படி, யாத்திரிகர்கள் அத்தரநாலா (வரலாற்றுச் சிறப்புமிக்க 18 வளைவுகள் கொண்ட பாலம்) கடந்து, ஸ்ரீ ஜகந்நாதரின் புனித தாமத்திற்குள் நுழைவதற்கு முன், முதலில் மா பட்ட மங்களாவை தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.

புரி நகரின் பாரம்பரிய நுழைவாயிலாக விளங்கும்
வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தரநாலா பாலம்.
7. பயண வழிகாட்டி
சாலை மார்க்கம்:
புவனேஸ்வர் – புரி தேசிய நெடுஞ்சாலை (NH–316)-யில் நேரடியாக அமைந்துள்ளது.
இரயில் மார்க்கம்:
புரி இரயில் நிலையத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆட்டோ ரிக்ஷா மூலம் சுமார் 15 நிமிடங்களில் சென்றடையலாம்.
விமான மார்க்கம்:
புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BBI) சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. டாக்ஸி மூலம் சுமார் 1½ மணி நேரத்தில் சென்றடையலாம்.
8. தரிசன நேரம் (Darshan Timings)
தினசரி தரிசன நேரம்:
காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.
திருவிழா நாட்கள்:
துர்கா பூஜை, சைத்ர மங்களா மற்றும் ரத யாத்திரை போன்ற முக்கிய திருவிழாக்களின் போது, பக்தர்களின் வசதிக்காக திருக்கோவில் நீட்டிக்கப்பட்ட நேரம் வரை திறந்திருக்கும்.

