பகவத் கீதை – பாடத் தொகுப்பு, அத்யாயம் 9,
ஸ்லோகம் 11 (பொருளுரை)
குறிக்கோள்
பகவான் ஶ்ரீகிருஷ்ணர் மனித உருவில் தோன்றினாலும், அவரது உடல் தெய்வீகமானது, அறிவும் ஆனந்தமும் நிறைந்தது, பொறாமை இல்லாதவர்களால் மட்டுமே அவரை முழுமுதற் கடவுளாக உணர முடியும் என்பதைக் காட்டுதல்.
பொருளுரை
மனிதரைப் போலத் தோற்றமளித்தாலும், பரம புருஷ பகவான் சாதாரண மனிதரல்ல என்பது இவ்வத்தியாயத்தின் முந்தைய பதங்களுக்கான விளக்கங்களின் மூலம் தெளிவாக்கப்பட்டது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை நடத்தும் பரம புருஷ பகவான் சாதாரண மனிதனாக இருக்க முடியாது. இருந்தும் கிருஷ்ணர் ஒரு பலம் பொருந்திய மனிதரே, மனிதர்களுக்கு மேலானவர் அல்ல என்று கருதும் மூடர்கள் பலர் உள்ளனர். உண்மையில், பிரம்ம சம்ஹிதையில் கூறியுள்ளபடி (ஈஷ்வர: பரம: கிருஷ்ண:), அவரே ஆதி புருஷர், அவரே முழுமுதற் கடவுள்.
ஈஷ்வரர்கள் (ஆளுநர்கள்) பலர் உள்ளனர், ஒருவரைவிட மற்றவர் சிறந்தவராக உள்ளனர். ஜட உலகின் சாதாரண நிர்வாகத்தில், ஒரு அதிகாரி அல்லது இயக்குநரைப் பார்க்கிறோம்; அவருக்கு மேலாக ஒரு செயலாளர், அதற்கு மேலாக ஒரு அமைச்சர், அதற்கு மேலாக ஒரு தலைவர் இருப்பார். அவர்களில் ஒவ்வொரு வரும் ஆள்பவர்களே, இருப்பினும் ஒருவர் மற்றவரால் ஆளப்படுகிறார். கிருஷ்ணரே பரம ஆளுநர் என்று பிரம்ம சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது. ஜடவுலகிலும் ஆன்மீக உலகிலும் ஆளுநர்கள் பலர் உள்ளனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் கிருஷ்ணரே பரம ஆளுநர் (ஈஷ்வர: பரம: கிருஷ்ண:), அவரது உடல், ஜடக் கலப்பற்ற ஸச்சிதானந்தமாகும்.
முந்தைய பதங்களில் கூறப்பட்ட அற்புதமான செயல்களை ஜடவுடல்கள் செய்ய முடியாது. பகவானுடைய திருமேனி நித்தியமானதும், ஆனந்தமயமானதும், முழு அறிவால் நிறைந்ததுமாகும். அவர் சாதாரண மனிதர் அல்லாதபோதிலும், மூடர்கள் அவரை இகழ்ந்து, சாதாரண மனிதராகவே கருதுகின்றனர். அவரது உடல் இங்கு மானுஷீம் என்று கூறப்படுகிறது; ஏனெனில், அவர் ஒரு மனிதரைப் போல, அர்ஜுனனின் நண்பரைப் போல, குருக்ஷேத்திர யுத்தத்தில் கலந்து கொண்டுள்ள ஓர் அரசியல் நிபுணராகவும் செயல்படுகிறார். பலவிதங்களில் அவர் ஒரு சாதாரண மனிதரைப் போலச் செயல்படுகிறார், ஆனால் உண்மையில், அவரது திருமேனி சத்-சித்-ஆனந்த விக்ரஹம் — அதாவது நித்தியமும், முழு அறிவும், பரிபூரண ஆனந்தமும் நிறைந்த ஆத்மீக திருவுருவமாகும். வேத மொழியிலும் இஃது உறுதி செய்யப்பட்டுள்ளது. சச்-சித்- ஆனந்த-ரூபாய க்ருஷ்ணாய—“நித்தியமான அறிவுடன் ஆனந்த ரூபமாக விளங்கும் பரம புருஷ பகவான் கிருஷ்ணருக்கு எனது பணிவான வந்தனைகள்.” (கோபால-தாபனீ உபநிஷத் 1.1) வேத மொழியில் மற்றும் பல வர்ணனைகளும் உள்ளன. தம்-ஏகம் கோவிந்தம், “புலன்களுக்கும் பசுக்களுக்கும் இன்பமளிக்கும் கோவிந்தன் நீரே.” சச்-சித்-ஆனந்த-விக்ரஹம், “மேலும், உமது திருமேனி திவ்யமானது, நித்தியமானது, ஆனந்தமயமானது, பூரண அறிவுடையது.” (கோபால-தாபனீ உபநிஷத் 1.35)
பகவான் கிருஷ்ணரின் திருமேனி, பூரண ஆனந்தம், அறிவு ஆகிய திவ்யமான குணங்களுடன் உள்ளபோதிலும், பகவத் கீதைக்கு விளக்கமளிக்கும் கருத்துரையாளர்களும் பெயரளவு அறிஞர்களும் கிருஷ்ணரைச் சாதாரண மனிதராக ஏளனம் செய்கின்றனர். தனது முற்கால நற்செயல்களின் விளைவுகளால் அறிஞன் ஒருவன் அறிவுடைய மனிதனாகப் பிறந்திருக்கலாம். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய கருத்து அவனது அறிவுப் பற்றாக்குறையைக் காட்டுகின்றது. எனவே, அத்தகையவன் மூடன் என்று அழைக்கப்படுகின்றான்; ஏனெனில், முட்டாள்கள் மட்டுமே, கிருஷ்ணரைச் சாதாரண மனிதராக் கருதுவர். பரம புருஷரின் இரகசியமான செயல்களையும் அவரது பல்வேறு சக்திகளையும் அறியாத முட்டாள்கள் மட்டுமே, ஸ்ரீ கிருஷ்ணரைச் சாதாரண மனிதராகக் கருதுவர். அவரது திருமேனி பூரண அறிவும் ஆனந்தமும் நிரம்பியது என்பதையும், இருப்பவை அனைத்திற்கும் அவரே உரிமையாளர் என்பதையும், அவரால் எவருக்கும் முக்தி கொடுக்க முடியும் என்பதையும் அவர்கள் அறியார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் பற்பல திவ்யமான குணங்களின் பொக்கிஷம் என்பதை அறியாததால், அவர்கள் அவரை இழிந்துரைக்கின்றனர்.
பரம புருஷ பகவான் இந்த ஜடவுலகில் தோன்றுவது அவரது அந்தரங்க சக்தியின் தோற்றமே என்பதையும் அவர்கள் அறியார்கள். அவர் இந்த ஜட சக்தியின் எஜமானர். ஜட சக்தி மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தாலும், அது தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், தன்னிடம் சரணடையும் எவரையும் அந்த ஜட சக்தியின் பிடியிலிருந்து தன்னால் விடுவிக்கமுடியும் என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவிப்பதை நாம் பல்வேறு இடங்களில் விளக்கியுள்ளோம் (மம மாயா துரத்யயா). ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடையும் ஆத்மாவினால் ஜட சக்தியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியுமென்றால், இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய பரம புருஷர் எவ்வாறு நம்மைப் போன்ற ஜடவுடலை உடையவராக இருக்க முடியும்? எனவே, ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய அத்தகு கருத்து முழு முட்டாள்தனமாகும். சாதாரண மனிதரைப் போலத் தோன்றும் முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், மிகச்சிறிய அணுவிலிருந்து மிகவும் பிரம்மாண்டமான விராட தோற்றம் வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்பதை மூடர்களால் சிந்திக்க இயலாது. மிகப் பெரியதும் மிக நுண்ணியதும், அவர்களது சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகும், எனவே, மனிதரைப் போன்ற ஓர் உருவம், அளவற்றதையும் நுண்ணியதையும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்துவதை அவர்களால் கற்பனை செய்யவும் முடியாது. எல்லையற்றதையும், எல்லைக்குட்பட்டவற்றையும், எல்லாவற்றையும் அவர் ஆள்பவராயிருந்தாலும், இந்த தோற்றங்களிலிருந்து அவர் விலகியுள்ளார். மிகப் பெரியதையும் மிகச் சிறியதையும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்தும் போதிலும், அவர் அவற்றிலிருந்து விலகியிருக்க முடியும் — இதுவே, அவருடைய திவ்யமான அசிந்திய சக்தி, யோகம் ஐஷ்வரம் எனப்படுகிறது. மனிதனைப் போலத் தோற்றமளிக்கும் ஸ்ரீ கிருஷ்ணரால் எவ்வாறு மிகப் பெரியதையும் மிகச் சிறியதையும் கட்டுப்படுத்த முடியும் என்பதை மூடர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது; இருப்பினும், ஸ்ரீ கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதை அறிந்த தூய பக்தர்கள் இதை ஏற்கின்றனர். அவரே பகவான் என்பதால், தூய பக்தர்கள் அவரிடம் முழுமையாக சரணடைந்து, அவரது பக்தித் தொண்டில், ஸ்ரீ கிருஷ்ண உணர்வில் ஈடுபடுகின்றனர்.
மனிதரைப் போல கடவுள் தோன்றுவது குறித்து, அருவவாதிகளுக்கும் உருவவாதிகளுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், ஸ்ரீ கிருஷ்ண விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்வதற்கான அதிகார பூர்வமான நூல்களான பகவத் கீதையையும் ஸ்ரீமத் பாகவதத்தையும் அணுகினால், ஸ்ரீ கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதை நாம் அறிய முடியும். இவ்வுலகில் சாதாரண மனிதரைப் போலத் தோன்றினாலும், அவர் சாதாரண மனிதரல்ல. ஸ்ரீமத் பாகவத்தின், முதல் காண்டம், முதல் அத்தியாயத்தில் சௌனகரை தலைவராகக் கொண்ட சாதுக்கள், ஸ்ரீ கிருஷ்ணரது செயல்களைப் பற்றி வினவுகையில்,
க்ருதவான் கில கர்மாணி
ஸஹ ராமேண கேஷவ:
அதி-மர்த்யானி பகவான்
கூட: கபட-மானுஷ:
“புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், பலராமருடன் இணைந்து மனிதரைப் போல விளையாடினார். அத்தகைய வேடத்தில் மனித சக்திக்கு மீறிய செயல்கள் பலவற்றை அவர் நிகழ்த்தினார்.” (பாகவதம்1.1.20) மனிதரைப் போன்ற பகவானின் தோற்றம் மூடர்களைக் குழப்புகின்றது. இப்பூமியில் அவதரித்தபோது ஸ்ரீ கிருஷ்ணர் செய்த அற்புதமான லீலைகளை எந்த மனிதனாலும் செய்ய முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் தனது தாய் தந்தையரான தேவகி, வசுதேவரின் முன்பு தோன்றியபோது நான்கு கரங்களுடன் தோன்றினார். ஆனால், அவர்களது பிரார்த்தனைகளுக்குப் பின் தன்னை சாதாரண குழந்தையாக மாற்றிக் கொண்டார். பபூவ ப்ராக்ருத: ஷிஷு:, அவர் ஒரு சாதாரண குழந்தையாக, சாதாரண மனிதராக மாறினார் என்று பாகவத்தில் (10.3.46) கூறப்பட்டுள்ளது. சாதாரண மனிதரைப் போன்ற கடவுளின் தோற்றமும், அவரது திவ்ய உடலின் ஒரு தன்மையே என்பது இங்கு மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தில், நான்கு புயங்களையுடைய கிருஷ்ணரது உருவைக் காண அர்ஜுனன் பிரார்த்தனை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது (தேனைவ ரூபனே சதுர்-புஜேன). இந்த ரூபத்தை காட்டிய பின்னர், அர்ஜுனனின் வேண்டுகோளின்படி, கிருஷ்ணர் மீண்டும் மனிதரைப் போன்ற தனது சுய உருவிற்குத் திரும்பினார் (மானுஷம் ரூபம்). பரம புருஷரின் இத்தகு பலதரப்பட்ட தன்மைகள், நிச்சயமாக சாதாரண மனிதனுக்கு உரித்தானதல்ல.
மாயாவாத தத்துவங்களால் பாதிக்கப்பட்டு, கிருஷ்ணரை ஏளனம் செய்யும் சிலர், கிருஷ்ணர் சாதராண மனிதரே என்பதை நிரூபிக்க, ஸ்ரீமத் பாகவதத்தின் (3.29.21) பின்வரும் பதத்தை மேற்கோள் காட்டுகின்றனர். அஹம் ஸர்வேஷு பூதேஷு பூதாத்மாவஸ்தித: ஸதா: “பரம்பொருள் எல்லா ஜீவாத்மாக்களிலும் உள்ளது.” ஸ்ரீ கிருஷ்ணரை இழிந்துரைக்கும் அங்கீகாரமற்ற நபர்களின் விளக்கங்களைப் பின்பற்றாமல், ஜீவ கோஸ்வாமி, விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர் முதலிய வைஷ்ணவ ஆச்சாரியர்களிடமிருந்து இந்த குறிப்பிட்ட பதத்தை நாம் அறிந்து கொள்வது சிறந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் தனது சுய விரிவான பரமாத்மாவின் ரூபத்தில், அசையக் கூடிய மற்றும் அசையாத இனங்கள் எல்லாவற்றிலும் வீற்றுள்ளார்; எனவே, கோவிலிலுள்ள அர்ச்சா-மூர்த்தியிடம் மட்டும் கவனம் செலுத்தி, பிற உயிரினங்களுக்கு மதிப்பு கொடுக்காத ஆரம்ப நிலை பக்தர்களின் அர்ச்சா விக்ரஹ வழிபாடு பயனற்றது என்று இப்பதத்தை விளக்குகிறார் ஜீவகோஸ்வாமி. பக்தர்கள் மூன்று வகைப்படுவர். ஆரம்ப நிலையிலுள்ள பக்தர்கள், மற்ற பக்தர்களின் மீது காட்டும் கவனத்தை விட, கோவிலில் உள்ள விக்ரஹத்தின் மீது அதிக கவனம் காட்டுகின்றனர். இத்தகு மனோநிலை திருத்தப்பட்ட வேண்டுமென்று எச்சரிக்கிறார் விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர். ஸ்ரீ கிருஷ்ணர் ஒவ்வொருவரது இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றுள்ளதால், ஒரு பக்தன் ஒவ்வோர் உடலையும் பரம புருஷரின் கோவிலாகக் காண வேண்டும். அத்தகு பக்தன், பகவானின் ஆலயத்திற்குக் கொடுக்கும் அதே மதிப்பை பரமாத்மா வாழும் ஒவ்வோர் உடலுக்கும் வழங்குகின்றான். எனவே, ஒவ்வொருவருக்கும் முறையான மரியாதை வழங்கப்பட வேண்டும், எவரையும் அலட்சியம் செய்யக் கூடாது.
ஆலய வழிபாட்டை ஏளனம் செய்யும் அருவவாதிகள் பலர் உள்ளனர். பகவான் எல்லா இடத்திலும் இருப்பதால், ஆலய வழிபாட்டிற்குள் ஏன் ஒருவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், பகவான் எல்லா இடத்திலும் இருந்தால், ஆலயத்திலும் அர்ச்சா விக்ரஹத்திலும் அவர் இல்லையா? அருவவாதியும் உருவவாதியும் ஒருவரையொருவர் முடிவின்றி சண்டையிட்டுக் கொள்வர் என்றபோதிலும், ஸ்ரீ கிருஷ்ண உணர்வில் உள்ள பக்குவமான பக்தன், ஸ்ரீ கிருஷ்ணர் பரம புருஷராக உள்ளபோதிலும், பிரம்ம சம்ஹிதையில் உறுதி செய்யப்பட்டுள்ளபடி, அவர் எங்கும் பரவியுள்ளார் என்பதை நன்கறிவான். ஸ்ரீ கிருஷ்ணரது சொந்த இருப்பிடம் கோலோக விருந்தாவனம் என்றபோதிலும், அவர் எப்போதும் அங்கே வசிக்கிறார் என்றபோதிலும், தனது பல்வேறு சக்திகளின் மூலமும் தனது சுய விரிவுகளின் மூலமும், அவர் படைப்பின் (ஆன்மீகம், பௌதிகம், இரண்டின்) எல்லா இடங்களிலும் வீற்றுள்ளார்.
நோக்கங்கள்
1. ஸ்ரீ கிருஷ்ணர் மனிதனைப் போல தோன்றினாலும், அவருடைய திருமேனி தெய்வீகமானது என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
2. ஏன் சில முட்டாள்கள் (அறியாமையுள்ளவர்கள்) ஸ்ரீ கிருஷ்ணரைச் சாதாரண மனிதன் என்று எண்ணி இகழ்கிறார்கள் என்பதை அறிதல்.
3. ஸ்ரீ கிருஷ்ணர் அனைத்து கட்டுப்பாட்டாளர்களுக்கும் மேலான பரம கட்டுப்பாட்டாளர் என்பதை விளக்குதல்.
4. ஸ்ரீ கிருஷ்ணரின் திருமேனி சச்சிதானந்த விக்ரகம் – நித்தியமும், முழுமையான அறிவும், ஆனந்தமும் கொண்டது என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
5. பொறாமை கொண்ட சில பண்டிதர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை ஏன் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதை விளக்குதல்.
6. ஸ்ரீ கிருஷ்ணரின் திருவுருவமும் அவருடைய தோற்றமும் அவருடைய அந்தரங்க சக்தியின் வெளிப்பாடுகள் என்பதை அறிதல்.
7. பகவான் ஒரே நேரத்தில் எல்லையற்ற பெரியதையும் மிகவும் சிறியதையும் கட்டுப்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
8. தூய பக்தர்களே ஸ்ரீ கிருஷ்ணரை பரம உயர்ந்தவராக ஏற்றுக்கொண்டு அவரிடம் சரணாகதி அடைகின்றனர் என்பதை அறிதல்.
9. ஸ்ரீ கிருஷ்ணரை சாதாரண மனிதராகக் குறைத்து விளக்கும் மாயாவாத கருத்துகள் (நிராகார (impersonal) விளக்கங்கள்) ஏன் தவறானவை என்பதை விளக்குதல்.
முக்கிய குறிப்புகள்
ஸ்ரீ கிருஷ்ணர் மனிதனைப் போலத் தோன்றினாலும், அவரது உடல் தெய்வீகமானது, நித்தியமானது மற்றும் ஆனந்தமானது. தூய பக்தர்கள் மட்டுமே அவரை முழுமுதற் கடவுளாக உணர்கிறார்கள். அதே சமயம், பொறாமை கொண்டவர்கள் அவருடைய மனிதனைப் போன்ற லீலைகளைப் பார்த்து தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.

