புத்ரதா ஏகாதசி

யுதிஷ்டிரர்,” பகவானே! பவுஷ மாதம் (டிசம்பர் – ஜனவரி) கிருஷ்ண பட்ச ஏகாதசி, சப்லா ஏகாதசி பற்றி மிக அழகாக விளக்கினீர்கள். ரிஷிகேஷா! இப்போது பவுஷ மாத சுக்ல பட்ச ஏகாதசியின் பெருமை, எப்படி அனுசரிப்பது என்பது பற்றி கூறுவீராக”.

கிருஷ்ணர் கூறினார்,” மக்களின் நன்மைக்காக பவுஷ சுக்ல பட்ச ஏகாதசி விரதம் பற்றி கூறுகிறேன். கேட்பீராக!”

“மற்ற ஏகாதசி போல் இந்த புத்ரதா ஏகாதசியும் மிகவும் மேன்மையானது.   மேலான ஶ்ரீ நாராயணனை தொழும் பக்தர்களுக்கு, அவர் முழுமையான திருப்தியையும் மகிழ்ச்சியையும் அருளுகிறார்.  மூவுலகிலும் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் யாவற்றிலும் சிறந்த நாராயணனை வணங்குவதால், தங்கள் பாபம் நீங்கி மகிழ்ச்சியான அறிவிற்சிறந்த, புகழ் பெற்ற வாழ்க்கை வாழ்வர்.

முன்னொரு காலத்தில், பத்ராவதியை ஆண்ட சுகேதுமான் என்ற அரசர் இருந்தார். அவர் மனைவி ஷைப்யா என்பவள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே அரசர் தனக்குப் பின் நாட்டை ஆள வாரிசு இல்லையே, எங்கு சென்றால் இந்த குறை நீங்கும் என்று நினைத்து வருந்தினார். அரசரும், அரசியும் தனக்கு எப்படி புத்ரன் கிடைப்பான் என்று வருந்தி, மகிழ்ச்சியை தொலைத்து விட்டனர். முன்னோரை நினைத்து தர்பணம் செய்யும் போது, தனக்கு தர்பணம் செய்ய எவரும் இல்லையே என்று நினைத்து வருந்தும் மன்னனை, மக்கள், படை வீரர்கள் என எவராலும் தேற்ற இயலவில்லை.

 “மகன் இல்லாத திருமணம் வீண். அவனது இதயமும், வீடும் வெறுமை சூழ்ந்து இருக்கும். முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும், மக்களுக்கும் தான் பட்ட கடன் தீராது. எனவே ஒவ்வொரு மனிதனும் புத்திரனை அடைந்து, இவ்வுலகம் மட்டும் அன்றி மேலுலகிலும் மகிழ்ச்சி அடைய வேண்டும். நூறு ஜன்ம புண்ணியத்தால் ஒரு மகனை அடைந்தவர், நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும் ஏராளமான செல்வத்தையும் அடைவர். பகவான் விஷ்ணுவை வணங்குவதால்தான் ஒருவர், மகனையும், பேரனையும் அடைய இயலும். பேறுகளான மகன், செல்வம், அறிவு போன்றவை விஷ்ணுவை வணங்குவதால் கிட்டும்”.

இதை நினைத்து மன்னர் இரவும் பகலும், காலை முதல் மாலை வரை கவலை பட்டு இறுதியில் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். ஆனால் தற்கொலை என்பது நரகமாகிய மறு பிறப்புக்கு வழிகோலும் என்று அவ்வெண்ணத்தை கைவிட்டார். மந்திரிகளுக்கும், மற்ற எவருக்கும் தெரியாமல் நாட்டை விட்டு காட்டிற்கு சென்றார்.

மான்களும், பறவைகளும் நிறைந்த வனத்தில் அத்தி, வில்வம், பனை, பலா, பகுளா, சப்தபர்னா, சால், தமாளா, சரளா, தாளா, ஹிங்கோதா, அர்ஜுனா, லபேரா, பகேதா, சாலாகி, கரோண்டா, படாளா, கைரா, ஷகா மற்றும் பலாஷ மரங்களை பார்த்தார். எல்லாமே பழம் மற்றும் பூவால் நிறைந்து காணப்படுகின்றன. அது மட்டும் அன்றி, மான், புலி, காட்டுப் பன்றிகள், சிங்கம், குரங்கு, பாம்பு, ஆண் யானைகள், குட்டிகளுடன் கூடிய பெண் யானைகள், ஜோடிகளுடன் கூடிய நான்கு தந்த யானைகள், பசுக்கள், நரிகள், முயல், நீர் யானை, சிறுத்தைப் போன்றவை கூட தங்கள் குட்டிகளுடன் இருப்பதைக் கண்டு, தன் நிலையை எண்ணி வேதனையுடன் அவற்றிடையே உலவினான். அப்போது ஒரு நரி ஊளையிடுவதை கேட்டு, சுய உணர்விற்குத் திரும்பியவன் சுற்றிப் பார்த்து பயந்து இருந்தான். பசி தாகத்துடன் மதியம் வரை திரிந்தான்.

“இப்போது வறண்ட தொண்டையுடன், நீரும், உணவும் இன்றி இப்படித் திரிய, நான் என்ன பாபம் செய்தேன். ஏராளமான பூஜைகளும், யாகங்களும் செய்து தேவர்களை மகிழ்வித்தேன். தகுதியான பிராமணருக்கு இனிப்பும் பரிசும் அளித்தேன். என் மக்களையும் என் சொந்த மக்களை போல் கவனித்தேன். அறியாமல் செய்த எந்தத் தவறினால் நான் இப்போது இப்படி துயர் அடைகிறேன், என்று எண்ணி திரிந்து, இறுதியில் தான் செய்த புண்ணியத்தால் மானசரோவர் போன்ற ஒரு தாமரை குளத்தை அடைந்தார். அதில் பல முதலைகளும், மீன்களும், அல்லி, தாமரை மலர்களும் நிறைந்து இருந்தன.  தாமரைகள், சூரியனைக் கண்டு மலர்ந்து இருந்தன. வாத்து, அன்னம், கொக்குகள் நீந்தி மகிழ்ந்தன. அருகில் இருந்த ஆசிரமத்தில், மற்றவரின் விருப்பம் நிறைவேற்றும் துறவிகள் இருந்தனர். அதைக் கண்டு அரசன் ஓடி அவர்களிடம் சென்றான்.

துறவிகள் ஜபித்த படி இருந்தனர். அரசர் வணங்கிய கைகளுடன், அவர்களைப் புகழ்ந்து பேசினான். துறவிகள், அரசரிடம், அவர் அங்கு வந்த காரணம் பற்றி கேட்டனர். அரசர், துறவிகளிடம் அவர்கள் யார் என்றும் அங்கு வந்து இருக்கும் காரணத்தையும் கேட்டார்.

துறவிகள், “நாங்கள் விஸ்வதேவஸ் (விஸ்வதேவரின் புத்திரர்கள். வசு, சத்யா, க்ரது, தக்ஷா, காலா, காமா, திருத்தி, புருரவா, மாத்ரவா மற்றும் குரு) நாங்கள் குளிக்க இங்கு வந்துள்ளோம். மக மாதம், இன்னும் ஐந்து நாளில், வரவுள்ளது. இன்று புத்ரதா ஏகாதசி. புத்திரனை வேண்டுபவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்” என்று கூறினர்.

அரசர், “முனிவர்களே! நல்ல மகனைப் பெரும் வரம் தாருங்கள்” என்று வேண்டினார். முனிவர்கள்,  “இன்று புத்திரனை வேண்டி, இந்த ஏகாதசி விரதம் முறைப்படி இருப்பதால், கேசவன் தங்களுக்கு புத்திரனை அளிப்பார்” என்று கூறினார்கள்.

விஸ்வதேவாஸ் கூறியதைப் போல், அரசர் முறைப்படி விரதம் இருந்தார். துவாதசி அன்று, விரதத்தை முடித்து, முனிவர்களுக்கு மீண்டும் மீண்டும் தன் வணக்கத்தை தெரியப்படுத்தினார். தன் நாட்டிற்கு மீண்டும் திரும்பி வந்தார். அரசி கர்ப்பம் தரித்து அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். நாளடைவில், குழந்தை வளர, அவனுக்கு இளவரசன் பட்டம் அளித்தார்.

“ஓ! யுதிஷ்டிர! யாரொருவர் இந்த புத்ரதா ஏகாதசி விரதம் இருக்கிறார்களோ அவர்கள் மேன்மையான மகனைப் பெற்று இறப்பிற்கு பின் விடுதலை அடைவர். இதனைப் பற்றி கேட்பவர் ஒரு அசுவமேத யாகம் செய்த பலனை அடைவர்”.

இதுவே பவுஷ மாத சுக்ல பட்ச, புத்ரதா ஏகாதசி பற்றி வேத வியாசர் எழுதிய பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்ட செய்தி ஆகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare