மோக்ஷத ஏகாதசி

பிரம்மாண்ட புராணத்தில் இருந்து மோக்ஷத ஏகாதசியின் வரலாறு. யுதிஷ்டிரர் சொல்கிறார்,” ஓ விஷ்ணு! மூவுலகிலும் சிறந்தவரே, இந்த அண்டத்தின் தலைவரே, இவ்வுலகை படைத்தவரே, உயிரினங்களில் சிறந்தவரே, உமக்கு எம் பணிவான வணக்கம். ஓ முழுமுதற்கடவுளே! அனைத்து உயிர்வாழிகளின் நன்மைக்காக, எனது வினாவிற்கு பதில் அளிப்பீராக. மார்க்கசீரிஷ மாதத்தில் வரும் சுக்ல பக்ஷ ஏகாதசியின் பெயர் என்ன? அன்று எந்தக் கடவுளை வணங்க வேண்டும். அதன் பயன் என்ன என்று கூறுங்கள்” என்றார்.
கிருஷ்ணர் உடனே, “ஓ யுதிஷ்டிரரே! இந்த வினா உனக்கு மிகவும் புண்ணியத்தையும் புகழையும் தரக் கூடியது. இதற்கு முன் நான் உத்பன்ன ஏகாதசி, மார்க்கசீரிஷ கிருஷ்ண பக்ஷ ஏகாதசி பற்றி கூறினேன். அன்று என் உடலிலிருந்து தோன்றி மூரா என்ற அசுரனை அழித்த ஏகாதசி தேவி போல், இதுவும் புண்ணியம் தரக் கூடியது. இது மோக்ஷத என்று ஏன் அழைக்கப் படுகிறது என்றால் இது மக்களின் பாபத்தை நீக்கி மோக்ஷத்தை தர வல்லது. அன்று தாமோதரனை, ஊதுபத்தி, நெய் தீபம், துளசி மொட்டுகள், வாச மலர்களால் பூஜை செய்ய வேண்டும்.
ஓ பற்றற்ற அரசே! நான் கூற ஏகாதசி பெருமையைக் கேட்பதால் ஒரு குதிரையை தானம் செய்த பலன் கிட்டும். இதன் புண்ணியத்தால் முன்னோர்கள், தாய், மகன், நரகத்திற்கு சென்ற முன்னோர்கள் அனைவரும் நற்கதி அடைவர்.
முன்னொரு காலத்தில் சம்பகா நகர் என்ற அழகிய, வைஷ்ணவர் நிறைந்த நகர் இருந்தது. அரசர்களில் சிறந்த வைகானச மகாராஜா தன் சொந்த மக்களை போல் நாட்டு மக்களை நினைத்து ஆட்சி புரிந்தார். அவ்வூர் பிராமணர்கள் வேதங்களில் சிறந்து விளங்கினர். அரசர் ஒரு நாள் தன் தந்தை யமராஜர் ஆளக் கூடிய நரகத்தில் துன்புறுவதாக கனவு கண்டார். தன் தந்தை மேல் இருந்த பாசத்தால் கண்ணீர் சிந்தியபடி விழித்தார். மறு நாள் பிராமணர்களை அழைத்து தன் தந்தை,” மகனே! நரகத்திலிருந்து என்னை காப்பாற்று ” என்று கதறுவதாக கூறினார். “இப்பொழுது இந்த அழகிய நாடும் எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. யானை, குதிரை, காலாட்படையும், கருவூலத்தில் இருக்கும் செல்வமும், மனைவி, மக்களும் மகிழ்ச்சி தரவில்லை. என் தந்தையை நான் எப்படி இத்துயரில் இருந்து விடுவிப்பேன்?” என்று கேட்டார். மேலும் “எந்தவிதமான விரதம், ஹோமம், தானம், பிரார்த்தனை, தியானம் செய்தால் என் தந்தை இதிலிருந்து விடுபடுவார். தன் தந்தைக்கு உதவாத மகன் வாழ்க்கை வீண் தானே?” என்று கேட்டார்.
இரு முறை பிறப்பெடுத்த பிராமணர்கள், “ஓ அரசே! இங்குள்ள கானகத்தில் பர்வத முனிவர் ஆசிரமம் உள்ளது. அவரே முக்காலமும் உணர்ந்த த்ரிகாலக்ஞானி, அவரே உங்களை இந்தத் துயரினின்று விடுவிப்பார்” என்று கூறினர்.
அரசர் உடனே வேதம் கற்றறிந்த பிராமணர்கள் வசிக்கும் பர்வத முனியின் ஆசிரமத்திற்கு விரைந்தார். அங்கு பலநூறு சம்பிரதாயங்களை சேர்ந்த அறிஞர்களிடையே பர்வத முனி, ஒரு பிரம்மரை போல் வீற்றிருப்பதை கண்டார். மகாராஜா பணிவுடன் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கி பின் அமர்ந்தார். பர்வத முனி அவரிடம் ஏழு உறுப்புகளும் எவ்வாறு உள்ளன என்றும் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனரா என்றும் வினவினார். (ஏழு உறுப்புகள் – மந்திரிகள், கருவூலம், படை, பிராமணர்கள், மக்களின் தேவை, வேள்வி, கூட்டாளிகள்). மன்னரும் தன் ஏழு உறுப்புகளும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறினார். மேலும் புதிதாக எழுந்துள்ள பிரச்சினை பற்றியும் கூறி அதற்கான தீர்வு பற்றியும் கேட்டார்.
பர்வத முனி தியானத்தில் ஆழ்ந்து, “அரசனே! உன் தந்தை நரகத்தில் உழல்கிறார்.
அரசர்,” முனிகளுள் சிறந்தவரே! என் தந்தை நரகத்தில் இருந்து மீள நான் என்ன செய்ய வேண்டும், என்ன தானம் செய்தால் அவர் நற்கதி அடைவார் என்று கூறுவீராக” என்றார்.
முனிவர், “மார்க்கசீரிஷ மாத சுக்லபட்ச ஏகாதசி விரதம் முறைப்படி இருந்தால் உன் தந்தை நற்கதி அடைவார்” என்று கூறினார்.
மன்னர் தன் நாட்டை அடைந்து, சுக்ல பக்ஷ மார்க்கசீரிஷ ஏகாதசி விரதம் தன் மனைவி, மக்கள், சுற்றத்தாருடன் இருந்து, அதன் பயனை தன் தந்தைக்கு அளித்தார். அத்தருணத்தில் வானத்தில் இருந்து பூமாரி பொழிந்தது. அரசரின் தந்தை தேவர்களால் போற்றப் பட்டு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழியின் தன் மகனைக் கண்ட அவர், மகனே இதன் எல்லா பயனும் உனக்கே உரித்தாகுக, “என்றார். இவ்வாறு சொர்க்கம் அடைந்த அவர் பகவான் விஷ்ணுவின் பாதம் பற்றி இருக்கும் பேறு பெற்றார்.
“அரசே! சிந்தாமணி போன்ற இந்த மோக்ஷதா ஏகாதசி விரதத்தை யார் முறைப்படி செய்கிறார்களோ அவர்கள் அளவிடற்கரிய பயன் எய்துவர். நரகத்தில் இருந்து சொர்க்கத்தை அடைவர். தேவ பதவி கிடைத்து மறு பிறவி இல்லா நிலை அடைவர். மார்க்கசீரிஷ மாத சுக்லபட்ச மோக்ஷதா ஏகாதசியை விட சிறந்த விரதம் வேறு இல்லை” என்றார்.
இதுவே பிரம்மாண்ட புராணத்தில் இருந்து, மார்க்கசீரிஷ மாத சுக்லபட்ச ஏகாதசி அல்லது மோக்ஷத ஏகாதசி விரதம் பற்றிய விவரம் ஆகும்.

