இந்திர ஏகாதசி
(முன்னோர்களை நரகத்திலிருந்து விடுவிப்பதற்கு)

யுதிஷ்டிரர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம், “ஓ மதுசூதனா! மது என்ற அரக்கனைக் அழித்தவரே! அஸ்வின மாதத்தில் (செப் – அக்டோபர்) கிருஷ்ண பட்சம் வரும் ஏகாதசியின் பெயர் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி கூறுங்கள்” என்று கேட்டார்.
கிருஷ்ணர் “இந்த ஏகாதசியின் பெயர் இந்திர ஏகாதசி”. இந்த விரதம் நரகத்தில் இருக்கும் முன்னோர்களுடைய பாபங்களை நீக்கும் சிறப்பு உடையது. மேலும் இதைக் கேட்பவர்களின் பாவங்கள் நீங்கி குதிரையைத் தானம் செய்த பலன் அடைவர்.
சத்ய யுகத்தில் இந்திர சேனர் எனும் வல்லமை படைத்த ஒரு அரசர் மகிஷ்மதிபுரியில் இருந்தார். சிறந்த அந்த அரசர் தன் பிரஜைகளை நன்றாகக் கவனித்துக் கொண்டார். அவர் நாட்டில் தானியங்களும், குழந்தை மற்றும் பேரக் குழந்தையும் நிரம்பப் பெற்றிருந்தார். என்னுடைய கோவிந்த நாமத்தை எப்போதும் உச்சரிப்பார். உண்மைப் பொருளைக் கண்டறியும் ஆன்மீகப் பயணத்தை அவர் தொடர்ந்தார். ஒருமுறை அரசவையில் இருக்கும் போது, நாரத முனி வெண்சங்கினை ஒத்த பளீரென்ற ஒளியுடன், நிலவின் ஒளியைப் போல், மின்னலைப் போல், ஒரு மல்லிகையைப் போல் ஒளியுடன், செந்நிற ஜடாமுடியுடன் வந்து இறங்கினார்.
தேவர்களில் சிறந்த துறவியை அரசர் வணங்கி அவரை அமரச் செய்து, பாத பூஜை செய்து இனிமையான சொற்களால் வரவேற்றார். நாரத முனி இந்திர சேனரிடம், “உன் தேசத்தில் ஏழு பிரிவுகளும் நன்கு செயல் படுகிறதா ?” எனக் கேட்டார். ஏழு பிரிவுகள் என்பது அரசரின் நலம், மந்திரிகள் நலம், அவரது கருவூலம், படை மற்றும் கூட்டாளிகள், பிராமணர், தான தருமங்கள், மக்களின் தேவைகள் என்பன. உன் மனம் திறமையாக ஆள்வதில் ஈடுபடுகிறதா, மேலும் பகவான் விஷ்ணுவை தியானிக்கிறதா?” என்று கேட்டார். அரசர், “மகாமுனியே எல்லாமே நன்றாக உள்ளது. தங்களது வருகையால் எங்கள் தியாகங்கள் எல்லாம் நற்கதி அடைந்தன. என் மேல் இரக்கம் கொண்டு தாங்கள் வந்த காரணத்தைக் கூறுவீராக” என்றார்.
நாரதர், “சிங்கம் போன்ற அரசே! நான் பிரம்ம லோகத்தில் இருந்து யமலோகத்திற்கு வந்த போது, யமராஜர் மகிழ்ந்து எனக்கு ஆசனம் அளித்தார். அவரது பணிவிடைகளில் மகிழ்ந்து இருக்கும் போது, உன் தந்தையைப் பார்த்தேன். அவர் ஒரு ஏகாதசி விரதம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே முடித்திருந்தார் எனவே யமலோகம் செல்ல வேண்டி வந்தது. அவர் என்னிடம் “மகிஷ்மதி புரியில் இந்திரசேனன் என்ற அரசர் உள்ளார். அவரிடம் என் பாபங்களால் நான் யமலோகத்தில் இருப்பதைக் கூறுங்கள். மேலும் வரக்கூடிய இந்திர ஏகாதசி அன்று விரதம் இருந்து ஏராளமான தானம் செய்து எனக்கு சத்யலோகம் செல்ல வழி செய்யும் படி கூறுங்கள்,” என்றார்.
தத்துவ ரீதியாக ஒவ்வொரு ஜட உயிரியும், தனக்கு உரிய கிருஷ்ண ஜெபத்தை செய்து பகவானை அடைய வேண்டும். கருட புராணத்தில் கூறியுள்ளபடி, நரகத்தில் உழல்பவன் மன அமைதியுடன் கிருஷ்ண ஜபம் செய்ய இயலாது. அவருடைய உறவினர் அவர் பெயரில் தானம் செய்யும் போது சொர்க்கத்தை அடையலாம். ஆனால் பிரம்ம வைவர்த்த புராணத்தில் கூறிய படி முன்னோர்களுக்கு வேண்டி, ஒருவர் ஏகாதசி விரதம் இருப்பதால் முன்னோர் நேராக ஆன்மீக உலகம் அடைவர். இதைப் பற்றி கூறவே நான் இங்கு வந்தேன். . நீ இந்திர ஏகாதசி விரதம் இருந்து உன் தந்தை பகவானை அடைய உதவுவாயாக”, என்று கூறி மறைந்தார்.
இந்திரசேனர் சுற்றத்தாருடன் இந்த விரதம் இருந்து, துவாதசி விரதம் முடிக்கும் போது வானத்தில் இருந்து பூ சொரிந்தது. மேலும் கருட வாகனத்தில் தன் தந்தை யமலோகம் விட்டு பகவானை அடைவதை கண்ணால் பார்க்க முடிந்தது. இந்திர சேனனும் தடையின்றி ஆண்டு தன் மகனிடம் ஆட்சியை ஒப்படைத்து விண்ணுலகம் அடைந்தார்.
ஓ யுதிஷ்டிர! இதுவே அஸ்வின மாத கிருஷ்ண பட்ச ஏகாதசியின் சிறப்பாகும். இதை கேட்பவரும் பாவங்கள் நீங்கப் பெற்று நிலையான பகவானுடைய பாதங்களை சென்று அடைவர்.
இதுவே பிரம்ம வைவர்த்த புராணத்தில் கூறப்பட்ட அஸ்வின மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி அல்லது இந்திர ஏகாதசியின் சிறப்பாகும்.

