பவித்ரோபனா,புத்ரதா ஏகாதசி

யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம்,”மது என்ற அரக்கனை கொன்றவரே, தயை கூர்ந்து ஆஷாட மாதம் (July-August) சுக்ல பட்ச ஏகாதசியின் சிறப்பினைப் பற்றி கூறுங்கள்,” என்றார்.

பரமாத்மா உடனே, “அவசியம் சொல்கிறேன்.  ஏனெனில் இந்த ஏகாதசி பற்றி கேட்பவர் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு ஒரு குதிரையை தானம் செய்த பலன் அடைவர் “, என்று கூறினார்.

துவாபர யுகத் துவக்கத்தில்  மகிஷ்மதி புரியை மகிஜிதன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு வாரிசு இல்லாததால் மிகவும் துயருற்று இருந்தார். வாரிசு இல்லாத மனிதன் இப்பிறவி மட்டும் அல்லாமல் மறு பிறப்பிலும் மகிழ்ச்சி அடைய மாட்டான்.  சமஸ்கிருதத்தில் மகன் என்பதற்கு புத்ரன் என்று பெயர். “பு” என்பது   நரகத்தின் ஒரு பகுதி “த்ரா” என்றால் அளித்தல்.   எனவே புத்ரன் என்பவன் “பு” என்ற உலகத்தில் இருந்து நமக்கு விடுதலை அளிப்பவன் எனப்படும். ஒவ்வொரு மனிதனும் ஒரு மகனைப் பெற்று நல்ல முறையில் வளர்க்கும் போது இவ்வுலக நரகத்தில்  இருந்து விடுதலை அடைகிறான்.  கிருஷ்ண பக்தர்களுக்கு இது ஒப்புடையது அல்ல ஏனெனில் கிருஷ்ணரே அவர்களுக்கு தந்தை, தாய், மகன் எல்லாமாக உள்ளார்.   மேலும் சாணக்கியர், “வாய்மையே எனது தாய், அறிவே எனது தந்தை, தொழிலே எனது உடன்பிறப்பு, அன்பே எனது தோழன், அமைதியே எனது மனைவி, மன்னிப்பே எனது மகன், இவர்கள் அறுவரும் என் குடும்ப உறுப்பினர்”, என்று கூறுகிறார். பக்தனுக்கு உரிய இருபத்தாறு சிறந்த பண்புகளில் மன்னிப்பே தலைசிறந்தது. எனவே பக்தர்கள் எப்பாடு பட்டாவது அதை அடைய வேண்டும்.

சாணக்கியர், “மன்னிப்பே என் மகன்” என்கிறார்.   எனவே இந்த ஏகாதசி விரதம் இருந்து அதனை அடைய முயற்சிக்க வேண்டும். மகிஜித் அரசரும் முயன்றும் அதை அடைய இயலவில்லை.  ஒரு நாள் அவர் தன் மந்திரிகளிடம், “நான் மனசரிந்து எந்தப் பாபமும் செய்யவில்லை, என்னுடைய கருவூலத்தில் தவறாகக் சேர்த்த பொருளுமில்லை, தேவர்களுக்கும் பிராமணருக்கும் படைக்கப் பட்ட உணவை தட்டி பறித்ததில்லை.   பிற நாடுகளுடன் போருக்குச் செல்லும்போது கூட மக்களை என் சொந்தக் குழந்தைகள் போலப் பார்த்துக் கொள்வேன்.  மேலும் போர் விதிகளைத் தவறாமல் கடை பிடிப்பேன்.  விதிகளை மீறுவோர் என் சொந்தம் எனினும் அவர்களையும் தண்டிப்பேன், அதே சமயம் எதிரி பக்திமானாகவும்  அன்பானவனாகவும் இருந்தால் அவனை வரவேற்றேன். ஓ இருமுறை பிறந்தவரே, வேத முறைகளை தவறாமல் பின்பற்றியும் இன்னும் ஒரு மகனும் பிறக்கவில்லை.  அது ஏன் என்பதைக் கூறுவீர்களா?” என்று கேட்டார். 

இதனைக் கேட்ட வேத பிராமணர்கள் தங்களுக்குள் விவாதித்தார்கள். மன்னரின் தீர்வுக்காக பல முனிவர்களை சந்தித்தனர்.   இறுதியில் மிக எளிமையும் பக்தியும் தன்னடக்கம்  உடைய முழுதும் உபவாசம் இருக்கும் ஒருமுனிவரை சந்தித்தனர்.  அவர் தன் புலன்களையும் கோபத்தையும் முற்றும் துறந்தவர், தான் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பவர். அவர் தான் ரோமச ரிஷி, அவர் வேதங்களை முழுமையாக அறிந்தவர் மேலும் பிரம்ம தேவரின் ஆயுளையே நீட்டித்தவர், முக்காலத்தையும் அறிந்தவர்.   ஒவ்வொரு கல்ப முடிவிலும் அவரது ஒரு முடி கொட்டும் (ஒரு கல்பம் அல்லது பிரம்மாவின் ஒரு நாள் என்பது  4,320,000,000  வருடம்).  அரசனுடைய மந்திரிகள் தங்கள் பணிவான வணக்கங்களை மாற்றி மாற்றி அவரிடம் தெரியப் படுத்தினார்கள்.

மஹிஜித் மகாராஜாவின் மந்திரிகள் தங்கள் வணக்கத்தை தெரிய படுத்தி, “நாங்கள் செய்த பெரும் புண்ணியத்தால் தங்களைப் பார்க்க முடிந்தது” என்றனர். உடனே ரோமச ரிஷி,” என்னைப் போன்ற சாதுக்கள் மற்றவர் குறை தீர்ப்பவர்கள். என்னைப் புகழ்வதை விட்டு நீங்கள் வந்த காரணத்தைக் கூறுங்கள்” என்றார்.

பாகவதம் (5:18:12) ல் கூறியபடி கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டவர் எல்லா நற்பண்புகளையும் அடைவர்.  ஆனால் கிருஷ்ண பக்தி இல்லாதவர் ஜட உலக இன்பங்களில் மூழ்கி விஷ மனதுடன் வாழ்வர்.

ஓ மகரிஷி! தாங்கள் பிரம்ம தேவரைப் போன்றவர். மஹிஜித் மகாராஜா பிள்ளைகள் இல்லாதவராக இருந்தாலும் எங்களைப் பிள்ளைகளாக பாதுகாப்பவர். அவரது குறை தீர்க்க நாங்கள் வழி தேடி இந்தக் காட்டிற்கு வந்தோம், எங்கள் நற்பேற்றின் பயனாக தங்களைக் கண்டோம்.  எங்கள் குறை தீர்த்து அருளுங்கள்”, என்றனர். லோமஸ ரிஷி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு,” உங்கள் அரசர் முற்பிறப்பில் ஒரு வணிகனாக பொருள் சேர்க்க பல பாபங்களைச் செய்தார்.   தன் பொருட்களை விற்க பல கிராமங்களுக்கு சென்றார்.  ஒரு முறை ஜ்யேஷ்ட மாதம் (திரிவிக்ரமா மே – ஜூன்) வரக்கூடிய ஏகாதசி அன்று தன் தாகம் தீர்க்க அழகான குளத்திற்கு சென்றார்.   அப்போது ஒரு பசு தன் கன்றுடன் நீர் அருந்த வந்தது. அரசர் அவற்றை துரத்தி விட்டு தன் தாகத்தை தீர்த்துக் கொண்டார்.   அதனால் தான் இப்பிறப்பில் அவருக்கு குழந்தை இல்லை. எனினும், அவர் செய்த பல நற்காரியங்கள் காரணமாக இந்நாட்டிற்கு அரசராக உள்ளார்” என்றார். மந்திரிகள் உடனே, “ரிஷியே பாபத்தை தீர்க்க புண்ணியம் செய்யலாம் அல்லவா? எனவே புத்ரன் பிறக்க எங்கள் அரசர் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர்.  லோமச ரிஷி, “ஷ்ரவண மாதம் வரக் கூடிய புத்ரதா ஏகாதசியின் போது நீங்கள் எல்லோரும் கடுமையாக விரதம் இருந்து,  விரதத்தால் வரும் பயனை அரசருக்கு அளித்தால், அரசர் மகனை அடைவது உறுதி,” என்றார்.   அதே போல் ஷ்ரவண மாத ஏகாதசி அன்று மஹிஷ்மதி மக்கள் எல்லோரும் விரதம் இருந்தனர். துவாதசி அன்று தாங்கள் பெற்ற விரத பயனை அரசருக்கு அளித்தனர்.   இதனால் அரசி கருவுற்று மிக அழகிய குழந்தையை ஈன்றாள் “.

எனவே யுதிஷ்டிரரே ஷ்ரவண மாதம் வரக்கூடிய இந்த ஏகாதசி புத்ரதா ஏகாதசி (புத்திரனை தரக் கூடிய) என்று வழங்கப் படும். அனைவரும் இந்த ஏகாதசியில் தானியங்கள், அவரை வகைகள் இன்றி உபவாசம் இருந்து இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும்  பயன் அடைய வேண்டும்.

இப்புத்ரதா ஏகாதசியின் பெருமையைக் கேட்பவர்  பாபங்களில் இருந்து விடுபட்டு பகவானை அடைவர்.  இதுவே ஷ்ரவண சுக்ல பட்ச ஏகாதசி – புத்ரதா ஏகாதசி பற்றி பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டு் உள்ள கருத்தாகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare