காமதா ஏகாதசி

ஸ்ரீ சூத கோஸ்வாமி, “ஓ முனிவர்களே, தேவகி வாசுதேவரின் மகனான பகவான் கிருஷ்ணரை பக்தியுடன் வணங்குகிறேன்.  நம் சகல பாவங்களிலிருந்து  நம்மை விடுவிக்கக்கூடிய சக்திமிக்க இருபத்தி நான்கு ஏகாதசிகளின் மகிமைகளைப் பற்றி மிகச் சிறந்த பக்தனான யுதிஷ்டிரருக்கு பகவான் கிருஷ்ணரே அருளியுள்ளார்.  பகவானின் அனுகிரஹத்தால் அதில் ஒன்றைப் பற்றி இப்பொழுது விவரிக்கிறேன்.” பண்டிதர்களும் மகான்களும் இந்த இருபத்தி நான்கு ஏகாதசிகளைப் பற்றி பதினெட்டு  புராணங்களிலிருந்து தொகுத்துள்ளார்கள்.

ஒரு முறை யுதிஷ்டிர மகாராஜா, “ஓ பகவான் கிருஷ்ணரே, தயவுசெய்து என் பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொண்டு, ஒளி மிகுந்த சைத்ரா மாதத்தில் [மார்ச்-ஏப்ரல்] வரும் ஏகாதசியைப் பற்றி எனக்கு விளக்குவீராக. அதன் பெயர் என்ன, அதன் மகிமைகள் என்ன?” என்று கேட்டார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், “ஓ யுதிஷ்டிரரே, இந்தப் புனிதமான ஏகாதசியின் பண்டைய வரலாற்றை நான் விவரிக்கிறேன்.  கவனமாக கேட்பீராக.  இந்த வரலாறு ஒருமுறை பகவான் ஸ்ரீ ராமச்சந்திரரின் கொள்ளு தாத்தாவான திலிபா மன்னருக்கு வசிஷ்ட முனிவரால் கூறப்பட்டது.

மன்னர் திலிபா மஹாமுனிவர் வசிஷ்டரிடம், “ஓ பண்டிதரான பிராமணரே, ஒளி மிகுந்தசைத்ரா மாதத்தின் போது வரும் ஏகாதசியைப் பற்றி கேட்க விரும்புகிறேன். தயவுசெய்து அதை எனக்கு விவரிப்பீராக” என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த வசிஷ்ட முனிவர், “ஓ ராஜா, உங்கள் கேள்வி மிகவும் அருமையானது. நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதை நான் மகிழ்ச்சியுடன் உங்களுக்குச் விவரிக்கிறேன். ஒளி மிகுந்த சைத்ரா மாதத்தின் போது வரும் ஏகாதசி காமதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.  எப்படி  ஒரு காட்டுத்தீ உலர்ந்த மரங்களை முழுமையாக விழுங்கி பஸ்மமாக்கி விடுமோ, அது போல நம் சகல பாவங்களையும் இந்த ஏகாதசி விரதம் அழித்து நிறைவான புண்ணிய பலன்களைத் தர வல்லது.” என்று விளக்கத் தொடங்கினார்.

“ஓ ராஜா, இப்போது ஒரு பழங்கால வரலாற்றைக் கேளுங்கள், இது மிகவும் சிறப்பானது, இதைக் கேட்டாலே ஒருவரின் அனைத்து பாவங்களும் நீங்கிவிடும். முன்பு ஒரு காலத்தில், ரத்னபுரா என்ற ஒரு நகரம் இருந்தது. அது, செல்வ செழிப்புடன், எங்கும் பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  அந்த நகரில், கொடிய பாம்பு கூட, விஷத்தன்மை மறந்து வாழ்ந்தது.

இந்த மிக அழகான ராஜ்யத்தை,  புண்டரிகா மன்னர் ஆண்டு வந்தார்.  அங்கு பல கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் அப்ஸரசுகள் வாழ்ந்து வந்தனர். கந்தர்வர்களில், லலித் மற்றும் அவரது மனைவி லலிதா, ஆகியோர், மிகவும் அழகான நடனக் கலைஞராக இருந்தனர்.   இந்த இருவரும், மிகுந்த காதலுடன், தீவிரமாக ஈர்க்கப்பட்டு, மிகவும் ஆனந்தமாக, செல்வமும் சிறந்த உணவும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.  லலிதா, தனது கணவரை, மிகவும் நேசித்தாள். அதேபோல், லலித், தனது இதயத்திற்குள், தொடர்ந்து அவளைப் பற்றி நினைத்தான்.

ஒருமுறை, புண்டரிகா மன்னரின் அரசவையில், பல கந்தர்வர்கள் நடனமாடிக்  கொண்டிருந்தனர். லலித், தனது மனைவி இல்லாமல், தனியாக பாடிக் கொண்டிருந்தார். அவர் பாடியபோது, அவர் மனைவி லலிதாவைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.  இந்த கவனச்சிதறலால், அவர், பாடலை ராகம் பிறழ, பிழையாகப் பாடினார்.  இதை கவனித்த நாகம் ஒன்று, ராஜாவிடம், லலித்தின் தவறை சுட்டிக் காட்டியது.  இதைக் கேட்ட ராஜா கோபமடைந்தார்.  அவருடைய கண்கள் ஆத்திரத்துடன் சிவந்தன.  அரசவையை  அவமதித்து, தன் மனைவியின் நினைவில், பிழையாக பாடிய லலித்தை சபித்தார்.

புண்டரிகா மன்னர் சினத்தில், “ஓ முட்டாளே, அரசவைக் கடமைகளைச் செய்யும்போது, உங்கள் ராஜாவை நினைப்பதற்குப் பதிலாக, ஒரு பெண்ணைப் பற்றி காமமாக நினைத்துக் கொண்டிருந்தீர்கள்.  ஆதலால், நீங்கள் ஒரு நரமாமிச அரக்கனாக உருமாற உங்களை சபிக்கிறேன்!” என்றார்.  லலித், உடனடியாக, ஒரு பயங்கர நரமாமிச அரக்கனாக மாறினார்.  அவன் தோற்றம், அனைவரையும் பயமுறுத்தியது. அவரது கைகள், எட்டு மைல் நீளமாகவும், அவரது வாய், ஒரு பெரிய குகை போல பெரியதாகவும், அவரது கண்கள், சூரியன் மற்றும் சந்திரனைப் போல பெரியதாகவும் இருந்தன. அவரது நாசி, பூமியில் பெரிய குழிகளைப் போல இருந்தது. அவரது கழுத்து, ஒரு மைல், அவரது இடுப்பு நான்கு மைல் அகலம், மற்றும் அவரது பிரம்மாண்டமான முழு உடல்  அறுபத்து நான்கு மைல் நீளமாக இருந்தது.  இப்படியாக,  அழகான கந்தர்வப் பாடகராக இருந்த லலித், புண்டரிகா மன்னருக்கு எதிராக செய்த குற்றத்தின் விளைவாக இப்படி ஒரு சாபத்திற்கு ஆளானார்.

கணவர் ஒரு பயங்கரமான நரமாமிச அரக்கனாக உருமாறி கஷ்டப்படுவதைப் பார்த்த லலிதா, துக்கத்தில் மூழ்கினாள். அவள், ‘இப்போது என் அன்பான கணவன் ராஜாவின் சாபத்தின் விளைவுகளை அனுபவித்து வருகிறான்.  நான் என்ன செய்ய வேண்டும்? நான் எங்கு செல்ல வேண்டும்? ‘எப்படி என் கணவனை இந்த சாபத்திலிருந்து விடுவிப்பது” என்று கவலையுடன் இரவும் பகலும் துக்கமடைந்தாள்.

கந்தர்வ புருஷனின் மனைவியாக, இன்பமயமான வாழ்க்கையை அனுபவிப்பதற்குப் பதிலாக, ராஜாவின் சாபத்தின் விளைவாக முற்றிலுமாக அரக்கனாக உருமாறி, கொடூரமான பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்த தனது கணவருடன், அடர்ந்த காட்டில், அவன் செல்லும் எல்லா இடங்களிலும் அவளும் அலைந்து திரிந்தாள்.

ஒரு காலத்தில் அழகான கந்தர்வராக இருந்த தன் அன்பான கணவர், இப்படி ராஜாவின் சாபத்தின் விளைவா,க நரமாமிசம் உண்ணும் கொடூரமான செயல்களை செய்து, தனது பயங்கரமான நிலையில் மிகவும் கஷ்டப்படுவதைக் கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான லலிதா, அழுது கொண்டே அவரைப் பின் தொடர்ந்தாள்.

நல்ல வேளையாக, ஒரு நாள் ஸ்ரிங்கி முனிவரைத் தற்செயலாக சந்தித்தாள். அவர், பிரபலமான விந்திய மலையின் உச்சியில், தவக் கோலத்தில் அமர்ந்திருந்தார். அவரை நெருங்கி, உடனே, சந்நியாசிகளுக்குரிய மரியாதையான வணக்கங்களை தெரிவித்தாள்.  முனிவர், அவர் முன் கவலையுடன் வணங்கிய லலிதாவைப் பார்த்து, “மிக அழகானவளே, நீ யார்?, நீ யாருடைய மகள், ஏன் இங்கு வந்தீர்கள்? எல்லா உண்மையையும் கூறுவாயாக” என்றார்.

அதற்கு லலிதா, “முனிவரே, நான் விராதன்வா என்ற புகழ் பெற்ற கந்தர்வரின் மகள், என் பெயர் லலிதா. நான், என் அன்பான கணவனுடன், காடுகளிலும் சமவெளிகளிலும் சுற்றித் திரிகிறேன். புண்டரிகா மன்னன், மனிதனை உண்ணும் அரக்கனாக, மாற சபித்தான். ஓ பிராமணரே , அவருடைய கொடூரமான வடிவத்தையும், மோசமான பாவச் செயல்களையும் கண்டு, நான் மிகவும் வேதனை அடைகிறேன். தயவுசெய்து, என் கணவரை, இந்த அரக்க வடிவத்திலிருந்து விடுவிக்க, நான் என்ன புனிதமான செயலைச் செய்ய முடியும், என்று வழிக்காட்டுங்கள்” என்று கெஞ்சினாள்.

அவரை முனிவர், “ஓ பரலோக கன்னியே, சைத்ரா மாதத்தின் ஒளிமிகுந்த பதினைந்து நாட்களில் நிகழும், காமதா ஏகாதசி விரைவில் வருகிறது. இந்த நாளில், யார் விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.  இந்த ஏகாதசி விரதத்தை சாஸ்திரப்படி கடைப்பிடித்து, அதன் புண்ணிய பலனை உன் கணவருக்குக் கொடுத்தால், அவர் சாபத்திலிருந்து உடனே விடுவிக்கப்படுவார்” என்று வழி கூறினார்.

முனிவரிடமிருந்து, இந்த வார்த்தைகளைக் கேட்டு, லலிதா, மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஸ்ரிங்கி முனிவரின் அறிவுறுத்தல்களின்படி, லலிதா, காமதா ஏகாதாசி விரதத்தைப் பக்தியுடன் கடைபிடித்தார். மறுநாள், துவாதசியன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முன் நின்று, “நான் காமதா ஏகாதசி விரதத்தைப் பக்தியுடன் கடைபிடித்தேன்.  அதன் புண்ணிய பலனைக் கொண்டு, என் கணவரின் சாபத்தைப் போக்கி, அவரை துன்பத்திலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று பிரார்த்தித்தாள்.

லலிதாவின் பிரார்த்தனையை ஏற்று, அருகில் நின்றிருந்த அவரது கணவர், ராஜாவின் சாபத்திலிருந்து உடனே விடுவிக்கப்பட்டார். பல அழகான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட, ஒரு அழகான பாடகர், கந்தர்வ லலித்தாக, அவர் உடனடியாக தனது பழைய உண்மையான வடிவத்தை மீண்டும் பெற்றார்.   அதன் பின்னர், ​​அவரது மனைவி லலிதாவுடன், அவர் முன்பை விட அதிக செழுமையுடன்  இன்பமாக வாழ்ந்தார்.   கடைசியில், கந்தர்வா தம்பதியினர், ஒரு புஷ்பகவிமானத்தில் ஏறி சொர்க்கம் சென்றனர்.  இவை அனைத்தும், காமதா ஏகாதசியின், சக்தியாலும் மகிமையினாலும் நிறைவேற்றப்பட்டன.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்தார், “ஓ யுதிஷ்டிரா, இந்த அற்புதமான கதையைக் கேட்கும் எல்லோரும், நிச்சயமாக, புனிதமான காமதா ஏகாதசியைத், தங்களால் முடிந்தவரை கடைபிடிக்க வேண்டும். இந்த விரதம் நம் பாவங்கள் எல்லாவற்றையும் போக்கி, நம் வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றும் மகிமை கொண்டது.  எனவேதான், மனிதகுலத்தின் நலனுக்காக, அதன் மகிமைகளை உங்களுக்கு நான் விவரித்தேன்.

ஏகாதசிகளில், காமதா ஏகாதசி, மிகச்சிறந்ததாகும்.  இது அனைத்துப் பாவங்களையும் நீக்கக்கூடும்.  மேலும் இது பூதங்களின் சாபங்களை அழித்து நம் மனதை சுத்தப்படுத்துகிறது. மூவுலகத்திலும் இதைவிட சிறந்த நாள் இல்லை.” என்று கூறினார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare