அத்தியாயம் – 3
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு
பதங்கள் 10.3.1—10.3.5
ஸ்ரீ-சுக உவாச
அத ஸர்வ-குணோபேத: கால: பரம-சோபன:
யர்ஹி ஏவாஜன-ஜனமர்க்ஷம் சாந்தர்க்ஷ-க்ரஹ-தாரகம்
திச: ப்ரஸேதுர் ககனம் நிர்மலோடு-கணோதயம்
மஹீ மங்கள்-பூயிஷ்ட-புர-க்ராம-வ்ரஜாகரா
நத்ய: ப்ரஸன்ன-ஸலிலா ஹ்ரதா ஜலருஹ-ஸ்ரிய
த்விஜலி-குல ஸன்னாத ஸ்தவகா வன ராஜய:
வவௌ வாயு: ஸுக-ஸ்பர்ச புண்ய-கந்தவஹ: சுசி:
அக்னயஸ் ச த்விஜாதீனாம் சாந்தாஸ் தத்ர ஸமிந்தத
மனாம்ஸி ஆஸன் ப்ரஸன்னானி ஸாதூனாம் அஸுர-த்ருஹாம்
ஜாயமானே ‘ஜனே தஸ்மின் நேதுர் துந்துபய: ஸமம்
ஸ்ரீசுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அத—பகவான் தோன்றிய மங்களகரமான சமயத்தில்; சர்வ—அனைத்தும்; குண-உபதே:—பௌதிகக் குணங்களுடன் அல்லது வசதிகளுடன் செழிப்புற்று விளங்கின; கால:—அனுகூலமான ஒரு நேரம்; பரம-சோபன:—எல்லா வகையிலும் மங்களமாகவும், மிகவும் அனுகூலமாகவும் விளங்கின; யர்ஹி—அப்பொழுது; ஏவ—நிச்சயமாக; அஜன-ஜன்ம-ருக்ஷம்—ரோகிணி எனும் நட்சத்திரக் கூட்டம்; சாந்த-ருக்ஷ—நட்சத்திரக் கூட்டங்களில் எதுவும் கொடூரமாக இல்லை (அவையனைத்தும் அமைதியுடன் காணப்பட்டன); க்ரஹ-தாரகம்—மேலும் கிரகங்களும், அஸ்வினி போன்ற நட்சத்திரங்களும்; திச:—எல்லாத் திசைகளிலும்; ப்ரஸேது:—மங்களகரமாகவும், சாந்தமாகவும் தோன்றின; ககனம்—விண்வெளி முழுவதும்; நிர்மல-உடு-கண-உதயம்—அதில் (பிரபஞ்சத்தின் மேல் படலத்தில்) எல்லா மங்களகரமான நட்சத்திரங்களும் காணப்பட்டன; மஹி—பூமி; மங்கள்-பூயிஷ்ட-புர-க்ராம-வ்ரஜ-ஆகரா:—அதன் பல நகரங்களும், கிராமங்களும், மேய்ப்பு நிலங்களும் மற்றும் சுரங்கங்களும் மங்களகரமாகவும், மிகவும் சுத்தமாகவும் காணப்பட்டன; நத்ய:—நதிகள்; ப்ரஸன்ன-ஸலிலா:—நீர் நிலைகள் தெளிவடைந்தன; ஹர்தர:—ஏரிகள் அல்லது பெரிய நீர்த்தேக்கங்கள்; ஜலருஹ-ஸ்ரிய:—மலரும் தாமரைக் கூட்டங்களால் மிக அழகாக காணப்பட்டன; த்விஜ-அலிகுல-ஸன்னாத-ஸ்தவகா:—பறவைகள், குறிப்பாக குயில்களும், தேன் கூட்டங்களும் பரம புருஷரிடம் பிராத்தனை செய்வது போல் இனிய குரல்களில் பாடத்துவங்கின; வன-ராஜய:—பசுமையான மரங்களும் செடிகளும் கூட காண்பதற்கு இனிமையாக இருந்தன; வவௌ—வீசியது; வாயு:—காற்று; ஸுக-ஸ்பர்ஸ:—இனிமையான ஸ்பரிசத்துடன்; புண்ய-கந்த-வஹ:—நறுமணம் நிறைந்ததாக இருந்த; சுசி:—தூசுபடியாமல் சுத்தமாக; அக்னய: ச—மற்றும் (யாகத்) தீகளும்; த்விஜாதீனாம்—பிராமணர்களின்; சாந்தா:—தடுமாற்றம் இல்லாமல் அமைதியாகவும் ஒரே சீராகவும் இருந்தன; தத்ர—அங்கு; சமிந்தத்—கொழுந்து விட்டு எரிந்தன; மனாம்ஸி—(கம்சனால் எப்பொழுதும் அச்சத்திற்குள்ளாகி இருந்த) பிராமணர்களின் மனங்கள்; ஆஸன்—ஆயின; ப்ரஸன்னானி—முழு திருப்தியுடையவையாகவும், தொல்லைகளிலிருந்து விடுபட்டவையாகவும்; ஸாதூனாம்—வைஷ்ணவ பக்தர்களான பிராமணர்களின்; அஸுர-த்ருஹாம்—கம்சனாலும் மற்ற அசுரர்களாலும் மதச் சடங்குகளை நிறைவேற்றுவதில் தொல்லை கொடுத்துத் துன்புறுத்தப்பட்டவர்கள்; ஜாயமானே—தோற்றத்தினால்; அஜனே—பிறப்பற்றவரான பகவான் விஷ்ணுவின்; தஸ்மின்—அச்சூழ்நிலையில்; நேது:—ஒலித்தன; துந்துபய:—பேரிகைகள்; ஸமம்—அதே சமயத்தில் (உயர்கிரகங்களிலிருந்து).
அதன் பிறகு, பகவானின் தோற்றத்திற்குரிய மங்களகரமான நேரத்தில், முழு பிரபஞ்சமும் எல்லா நற்குணங்களுடனும், அழகுடனும், அமைதியுடனும் விளங்கியது, ரோகிணி நட்சத்திரக் கூட்டம் தோன்றியது, அதுபோலவே அஸ்வினி போன்ற நட்சத்திரங்களும் தோன்றின. சூரியனும், சந்திரனும், மற்ற நட்சத்திரங்கள் கிரகங்களும் அமைதியாக இருந்தன. எல்லாத் திசைகளும் இன்பமயமாகக் காட்சியளித்தன. மேகமற்ற வானில் அழகிய நட்சத்திரங்கள் பிரகாசித்தன, நகரங்கள், கிராமங்கள், கிரங்கங்கள் மற்றும் புல்வெளிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த பூமி மங்களகரமாக காணப்பட்டது. நதிகளில் தெளிந்த நீர் ஓடியது. தாமரைகளால் நிறைந்த ஏரிகளும், தடாகங்களும் அசாதாரணமான அழகுடன் விளங்கின. பசுமையான மரங்களும், செடிகளும் கண்களுக்கு இனிமையூட்டும் மலர்களாலும், இலைகளாலும் நிறைந்திருந்தன. குயில்களைப் போன்ற பறவைகளும், தேனீக் கூட்டங்களும் தேவர்களுக்காக இனிய குரல்களில் பாடத் தொடங்கின. தேகத்திற்குச் சுகமளிப்பதும், மலர்களின் நறுமணத்தைக் கொண்டதுமான தூய காற்று வீசத் தொடங்கியது. சமயச் சடங்குகளில் ஈடுபட்டிருந்த பிராமணர்கள் வேதக் கொள்கைகளுக்கேற்ப யாகத் தீயை மூட்டிய பொழுது அது காற்றினால் அலைக்கழிக்கப்படாமல் நன்றாக எரிந்தது. இவ்வாறாக பிறப்பற்ற பரமபுருஷராகிய பகவான் விஷ்ணு தோன்றப் போகும் சமயத்தில், கம்சனையும் அவனது ஆட்களையும் போன்ற அசுரர்களால் எப்பொழுதும் துன்புறுத்ததப்பட்டு வந்த முனிவர்களும், பிராமணர்களும் தங்களுடைய இதயங்களில் அமைதி உண்டாவதை உணர்ந்தனர். அதே சமயத்தில் உயர் கிரக அமைப்புக்களிலிருந்து பேரிகைகள் முழங்கின.
பதம் 10.3.6
ஜகு: கின்னர-கந்தர்வாஸ்-துஷ்டுவு:ஸித்த சாரணா:
வித்யாதர்யஸ் ச நன்ருதுர் அப்ஸரோபி: ஸமம் முதா
ஜகு:—மங்களகரமான பாடல்களைப் பாடினர்; கின்னர-கந்தர்வா:—வெவ்வேறு சுவர்க்க லோகங்களின் வாசிகளான கின்னரர்களும், கந்தர்வர்களும்; துஷ்டுவு:—அவரவர் பிரார்த்தனைகளைச் செய்தனர்; ஸித்த-சாரணா:—மற்ற சுவர்க்கலோக வாசிகளான சித்தர்களும், சாரணர்களும்; வித்யாதர்ய: ச—மேலும் மற்றொரு பிரிவைச் சேர்ந்த சுவர்க்கலோகவாசிகளான வித்யாதரர்கள்; நன்ருது:—உன்னத ஆனந்தத்துடன் ஆடினர்; அப்ஸரோபி:—சுவர்க்க லோகங்களின் அழகிய நடனப் பெண்களான அப்ஸரஸ்கள்; ஸமம்—உடன்; முதா—பெரு மகிழ்ச்சியுடன்.
கின்னரர்களும், கந்தவர்களும் மங்களகரமான பாடல்களைப் பாடத்துவங்கினார். சித்தர்களும், சாரணர்களும் மங்களகரமான துதிகளைச் செய்தனர். வித்யாதரர்கள் அப்ஸரஸ்களுடன் பெரு மகிழ்ச்சியுடன் ஆடத்துவங்கினர்.
பதங்கள் 10.3.7 – 10.3.8
முமுகர் முனயோ தேவா: ஸுமனாம்ஸி முதான்விதா:
மந்தம் மந்தம் ஜலதரா ஜகர்ஜுர் அனுஸாகரம்
நிசீதே தம-உத்பூதே ஜாயமானே ஜனார்தனே
தேவக்யாம் தேவ-ரூபிண்யாம் விஷ்ணு: ஸர்வ-குஹா-சய:
ஆவிராஸித் யதா ப்ராச்யாம் திசீந்துர் இவ புஷ்கல:
முமுக:—பொழிந்தனர்; முனய:—மாமுனிவர்களும், சாதுக்களும்; தேவா:—மற்றும் தேவர்களும்; ஸுமனாம்ஸி—நறுமணமுள்ள அழகிய மலர்களை; முதா அன்விதா:—மகிழ்ச்சியுடன் இருந்ததால்; மந்தம் மந்தம்—மிகவும் மெதுவாக; ஜல-தரா—மேகங்கள்; ஜகர்ஜு—அதிர்ந்தன; அனுஸாகரம்—கடலலைகளின் ஓசையைப் போல்; நிசீதே—நடுஇரவில்; தம:-உத்பூதே—மையிருட்டாக இருந்தபொழுது; ஜாயமானே—அவரது தோற்றத்தினால்; ஜனார்தனே—பரமபுருஷரான விஷ்ணு; தேவக்யாம்—தேவகியின் கர்ப்பத்தில்; தேவ-ரூபிண்யாம்—பரமபுருஷருடைய அதே பிரிவைச் சேர்ந்த (ஆனந்த-சின்மய-ரஸ-ப்ரதிபாவிதாபி:) விஷ்ணு:—பரமபுருஷரான பகவான் விஷ்ணு; ஸர்வ-குஹா-சய:—அனைவருடைய இதய மத்தியிலும் இருப்பவர்; ஆவிராஸீத்—தோன்றினார்; யதா—போல்; ப்ராச்யாம் திசி—கிழக்கில்; இந்து: இவ—முழு நிலவைப் போல்; புஷ்கல:—எல்லா வகையிலும் பூரணமான.
தேவர்களும், முனிவர்களும் பெருமகிழ்ச்சியுடன் மலர்களைப் பொழிந்தனர். வானத்தில் திரண்ட மேகங்கள் மிகவும் மெதுவாக இடியிடித்தன. அது கடலலைகளின் ஓசையைப் போலிருந்தது. அப்பொழுது, எல்லோருடைய இதயங்களிலும் இருப்பவரும், பரமபுருஷருமான விஷ்ணு, இருள்சூழ்ந்த நடுஇரவில், தேவகியின் இதயத்திலிருந்து தோன்றினார். தேவகியும் ஸ்ரீ கிருஷ்ணருடைய அதேபிரிவினையைச் சேர்ந்தவளாக இருந்ததால், கீழ்வானத்தில் உதயமாகும் முழு நிலவு போல் பகவான் தோன்றினார்.
பதங்கள் 10.3.9 – 10.3.10
தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்
சதுர்-புஜம் சங்க-கதாதி-உதாயுதம்
ஸ்ரீவத்ஸ-லக்ஷ்மம் கல-சோபி-கௌஸ்துபம்
பீதாம்பரம் ஸாந்ர-பயோத-சௌபகம்
மஹார்ஹ-வை தூர்ய-கிரீட்-குண்டல-
த்விஷா பரிஷ்வக்த-ஸஹஸ்ர-குந்தலம்
உத்தாம-காஞ்சி-அங்கத-கங்கணாதிபிர்
விரோசமானம் வஸுதேவ ஐக்ஷத
தம்—அந்த; அத்புதம்—அற்புதமான; பாலகம்—குழந்தை; அம்புஜ-ஈக்ஷணம்—தாமரைகளை ஒத்த கண்களுடன்; சது:-புஜம்—நான்கு கரங்களுடன்; ஸங்க-கதா-ஆதி—(அந்த நான்கு கரங்களில்) சங்கு, கதை, சக்கரம் மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி; உதாயுதம்—வெவ்வேறு ஆயுதங்கள்; ஸ்ரீவத்ஸ-லக்ஷ்மம்—பரமபுருஷரின் மார்பில் மட்டுமே காணப்படுவதும், ஸ்ரீவத்ஸம் என்று அழைக்கப்படுவதுமான ஒருவித முடியால் அலங்கரிக்கப்பட்டிருந்த; கல-சோபி-கௌஸ்துயம்—அவரது கழுத்தில், வைகுண்டத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய கௌஸ்துப மாலை இருந்தது; பீத-அம்பரம்—அவரது ஆடை மஞ்சள் நிறமாக இருந்தது; ஸாந்ர-பயோத-ஸௌபகம்—கருமைநிற மேகங்களின் வர்ணத்துடன் இருந்ததால் மிகவும் அழகாக இருந்தார்; மஹா-அர்ஹ-வை-தூர்ய-கிரீட-குண்டல—விலையுயர்ந்த வைடூரிய மணிகளால் பதிக்கப்பட்டிருந்த அவரது கீரீட, குண்டலங்களின்; த்விஷா—அழகால்; பரிஷ்வக்த-ஸஹஸ்ர குத்தலம்—நீண்டு வளர்ந்து சிதறிக் கிடந்த கூந்தலால் ஒளியூட்டப்பட்ட; உத்தாம-காஞ்சி-அங்கத-கங்கண-ஆதிபி:—ஒரு பிரகாசமான இடைக்கச்சை, கரங்களில் வார்ப்பட்டைகள், மற்றும் மணிக்கட்டுகளில் காப்புகள் போன்றவைகளுடன்; விரோசமானம்—மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்ததை; வாசுதேவ:—கிருஷ்ணரின் தந்தையான வசுதேவர்; ஐக்ஷத—கண்டார்.
பிறகு, மிகவும் அற்புதமான தாமரைக் கண்களை உடையவரும், நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தியவருமான புத்திளம் குழந்தையை வசுதேவர் கண்டார். அவரது மார்பில் ஸ்ரீவத்ஸம் எனும் அடையாளம் இருந்தது. கழுத்தில் பிரகாசமான கௌஸ்துப மாலை இருந்தது. மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்த அவரது உடல், அடர்ந்த மேகத்தைப் போல் கருநிறமாக இருந்தது, அவரது கேசம் நன்கு வளர்ந்து சிதறிக் கிடந்தது. மேலும் விலையுயர்ந்த வைடூரிய மணிகளுடன் கூடிய அவரது கிரீட, குண்டலங்கள் அற்புதமாக ஜொலித்தன. இவ்வாறாக, இடைக்கச்சையுடனும், கைப்பட்டைகளுடனும், காப்புகளுடனும், வேறு பல ஆபரணங்களுடனும் அலங்கரிக்கப்பட்டிருந்த அக்குழந்தை மிகவும் அற்புதமாகத் தோன்றியது.
பதம் 10.3.11
ஸ விஸ்மயோ த்ஃபுல்ல-விலோசனோ ஹரிம்
ஸுதம் விலோக்யானக துந்துபிஸ் ததா
க்ருஷ்ணாவதாரோத்ஸவ-ஸம்ப்ரமோ ‘ஸ்ப்ருசன்
முதா த்விஜேப்யோ ‘யுதம் ஆப்லுதோ கவாம்
ஸ:—அவர் (ஆனகதுந்துபி என்றும் அறியப்படும் வசுதேவர்); விஸ்மய-உத்ஃபுல்ல-விலோசன:—பரமபுருஷரின் அழகிய தோற்றத்தைக்கண்டு அவரது கண்கள் ஆச்சரியத்தில் லயித்துப் போனதால்; ஹரிம்—பரமபுருஷரான பகவான் ஸ்ரீ ஹரியை; ஸுதம்—அவரது மகனாக; விலோக்ய—கண்டு; ஆனகதுந்துபி:—வசுதேவர்; ததா—அப்பொழுது; க்ருஷ்ண-அவதார-உத்ஸவ—கிருஷ்ணரின் தோற்றத்தைக் குறித்துக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விழாவிற்கு; ஸம்ப்ரம:—பெரும் மரியாதையுடன் பகவானை வரவேற்க விரும்பி; அஸ்ப்ருசத்—விநியோகிப்பதன் மூலம் பயன்படுத்திக் கொண்டார்; முதா—பெருமகிழ்ச்சியுடன்; த்விஜேப்ய—பிராமணர்களுக்கு; அயுதம்—பத்தாயிரம்; ஆப்லுத:—பூரிப்படைந்து; கவாம்—பசுக்களை.
அசாதாரணமான தம் புதல்வரைக் கண்டதும் வசுதேவரின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. உன்னத ஆனந்தம் பொங்க அவர் மனதால் பத்தாயிரம் பசுக்களைச் சேகரித்து. ஓர் உன்னத விழாவாக, அவற்றை பிராமணர்களுக்கு தானம் செய்தார்.
பதம் 10.3.12
அதைனம் அஸ்தௌத் அவதார்ய பூருஷம்
பரம் நதாங்க: க்ருத-தீ: க்ருதாஞ்ஜலி:
ஸ்வ-ரோசிஷா பாரத ஸூதிகா-க்ருஹம்
விரோசயந்தம் கத-பீ: ப்ரபாவ-வித்
அத—அதன்பிறகு; ஏனம்—குழந்தையிடம்; அஸ்தௌத்—பிராத்தனைகள் செய்தார்; அவதார்ய—குழந்தை பரமபுருஷர்தான் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டதும்; பூருஷம்—பரமபுருஷர்; பரம்—உன்னதமான; நத-அங்க:—கீழே விழுந்து; க்ருத-தீ:—மிகவும் கவனத்துடன்; க்ருத-அஞ்சலி:—கூப்பிய கரங்களுடன்; ஸ்வ-ரோசிஷா—அவரது அழகிய தேகத்தின் பிரகாசத்தால்; பாரத—பரதகுலத் தோன்றலான பரீட்சித்து மகாராஜனே; ஸூதிகா-க்ருஹம்—பகவான் பிறந்த இடம்; விரோசயந்தம்—சுற்றுப்புறத்தைப் பிரகாசப்படுத்திக் கொண்டு; கத-பீ:—அவரது பயம் முற்றிலும் மறைந்தது; ப்ரபாவ-வித்—(பரமபுருஷரின்) செல்வாக்கை இப்பொழுது அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
பரதகுலத் தோன்றலான பரீட்சித்து மகாராஜனே, இக்குழந்தை பரமபுருஷரான நாராயணர் என்பதை வசுதேவரால் புரிந்துகொள்ள முடிந்தது, சந்தேகமின்றி இதைக் தெரிந்து கொண்ட அவர் அச்சமற்றவரானார். இவ்வாறாக, தமது இயற்கையான சுயப் பிரகாசத்தினால் பிறப்பிடத்தை ஒளிமயமாக்கிய குழந்தையின் முன் தன் கவனத்தை ஒருமுகப்படுத்திய வசுதேவர், கூப்பியக் கரங்களுடன் சிரம் தாழ்த்தி குழந்தையை துதிக்கத் துவங்கினார்.
பதம் 10.3.13
ஸ்ரீ-வஸுதேவ உவாச
விதிதோ ‘ஸி பகவான் ஸாக்ஷாத் புருஷ: ப்ரக்ருதே: பர:
கேவலானுபவானந்த-ஸ்வரூப: ஸர்வபுத்தி-த்ருக்
ஸ்ரீ-வஸுதேவ: உவாச—ஸ்ரீ வசுதேவர் பிரார்த்தித்தார்; விதித: அஸி—இப்பொழுது நான் உங்களை முழுமையாக உணர்ந்திருக்கிறேன்; பகவான்—பகவானாகிய நீங்கள்; ஸாக்ஷாத்—நேரடியாக; புருஷ:—பரமபுருஷராவீர்; ப்ரக்ருதே:—ஜட இயற்கைக்கும்; பர:—பௌதிகமான அனைத்திற்கும் அப்பாற்பட்ட உன்னத புருஷர்; கேவல-அனுபவ-ஆனந்த-ஸ்வரூப:—உங்களுடைய சொரூபம், சச் சித்-ஆனந்த-விக்ரஹம் ஆகும், உங்களைக் காண்பவர் உன்னத ஆனந்தமடைவார்; ஸர்வ-புத்தி-த்ருக்—உன்னத பார்வையாளரும், பரமாத்மாவும், அனைவரிலும் உள்ள புத்தியுமாவீர்.
வசுதேவர் கூறினார்: எம்பெருமானே! நீங்கள் பரமபுருஷரும், பௌதிக இருப்பிற்கு அப்பாற்பட்டவரும், பரமாத்மாவுமாவீர், எதனால் நீங்கள் பரமபுருஷரென்பதைப் புரிந்துகொள்ள முடியுமோ, அந்த உன்னத அறிவினால் உங்களுடைய ரூபத்தை உணர்ந்தறிய முடியும். இப்பொழுது உங்களுடைய நிலையை நான் பூரணமாக அறிந்து கொண்டேன்.
பதம் 10.3.14
ஸ ஏவ ஸ்வப்ரக்ருத்யேதம் ஸ்ருஷ்ட்வாக்ரே த்ரி-குணாத்மகம்
தத் அனு த்வம் ஹி அப்ரவிஷ்ட: ப்ரவிஷ்ட இவ பாவ்யஸே
ஸ:—அவர் (பரமபுருஷர்); ஏவ—உண்மையில்; ஸ்வ-ப்ரக்ருத்யா—உங்களது சுய சக்தியினால் (மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸ-சராசரம்); இதம்—இந்த ஜட உலகை; ஸ்ருஷ்ட்வா—படைத்தபின்; அக்ரே—துவக்கத்தில்; த்ரி-குண-ஆத்மகம்—முக்குண (ஸத்வ-ரஜஸ்-தமோ-குண) சக்திகளால்; தத் அனு—அதன்பிறகு; த்வம்—பகவானாகிய நீங்கள்; ஹி—உண்மையில்; அப்ரவிஷ்ட:—நீங்கள் புகவில்லை என்ற போதிலும்; ப்ரவிஷ்ட: இவ—புகுந்திருப்பது போல் காணப்படுகிறீர்கள்; பாவ்யஸே—என்று அறியப்படுகிறீர்கள்.
பகவானே, உமது சுயமான புறச் சக்தியினால், துவக்கத்தில் இந்த ஜட உலகைப் படைத்தவர் நீங்களே, முக்குணங்களால் (ஸத்வம் ரஜஸ் மற்றும் தமஸ்) ஆன இவ்வுலகைப் படைத்தபின், உண்மையில் அதற்குள் புகாத நீங்கள், புகுந்ததுபோல் காணப்படுகிறீர்கள்.
பதங்கள் 10.3.15 – 10.3.17
யதேமே ‘விக்ருதா பாவாஸ் ததா தே விக்ருதை: ஸஹ
நானா-வீர்யா: ப்ருதக்-பூதா விராஜம் ஜனயந்தி ஹி
ஸன்னிபத்ய ஸமுத்பாத்ய த்ருஸ்யந்தே ‘னுகதா இவ
ப்ராக் ஏவ வித்யமானத்வான் ந தேஷாம் இஹ ஸம்பவ:
ஏவம் பவான் புத்தி-அனுமேய-லக்ஷணைர்
க்ராஹ்யைர் குணை: ஸன் அபி தத்-குணாக்ரஹ:
அனாவ்ருதத்வாத் பஹிர் அந்தரம் ந தே
ஸர்வஸ்ய ஸர்வாத்மன ஆத்ம-வஸ்துன:
யதா—அவ்வாறு; இமே—ஜட சக்தியாலான இந்த பௌதிக சிருஷ்டிகள்; அவிக்ருதா:—உண்மையில் பல பாகங்களாகப் பிரிவதில்லை; பாவா:—இத்தகையை ஒரு எண்ணத்துடன்; ததா—அது போலவே; தே—அவை; விக்ருதை; ஸஹ—மொத்த பௌதிக சக்தியிலிருந்து வரும் இந்த வெவ்வேறு மூலப் பொருட்களுடனான சகவாசம்; நானா-வீர்யா:—ஒவ்வொரு மூலப்பொருளும் வெவ்வேறு சக்திகளால் நிறைந்துள்ளது; ப்ருதக்—பிரிக்கப்பட்டதாக; பூதா:—ஆகும்; விராஜம்—பிரபஞ்ச தோற்றம் முழுவதையும்; ஜனயந்தி—உண்டாக்குகிறது; ஹி—உண்மையில்; ஸன்னி பத்ய—ஆன்மீக சக்தியுடனான தொடர்பின் காரணத்தால்; ஸமுத்பாத்ய—படைக்கப்பட்டபின்; த்ருஸ்யந்தே—அவை தோன்றுகின்றன; அனுகாத:—அதற்குள் புகுந்து; இவ—என்பதுபோல்; ப்ராக்—இப்பிரபஞ்ச தோற்றம் படைக்கப்படுவதற்கு முன்பே, துவக்கத்திலிருந்தே; ஏவ—உண்மையில்; வித்யமானத்வாத்—பரமபுருஷருடைய இருப்பின் காரணத்தால்; ந—இல்லை; தேஷாம்—இந்த பௌதிக மூலப்பொருட்களின்; இஹ—படைப்பின் இவ்விஷயத்தில்; ஸம்பவ:—நுழைவது சாத்தியமாகி இருக்கக்கூடும்; ஏவம்—இவ்வாறாக; பவான்—எம்பெருமானே; புத்தி-அனுமேய-லக்ஷணை:—உண்மையான புத்தியாலும், இத்தகைய அறிகுறிகளாலும்; க்ராஹ்யை:—புலன் பொருட்களுடன்; குணை:—ஜட இயற்கைக் குணங்களுடன்; ஸன் அபி—தொடர்பு கொண்டிருந்த போதிலும்; தத்-குண-அக்ரஹ:—பௌதிகக் குணங்களால் தொடப்படாதவராவீர்; அனாவ்ருதத்வாத்—எல்லா இடங்களிலும் இருப்பதால்; பஹி: அந்தரம்—அகத்திற்கும்; புறத்திற்கும் உள்ளே; ந தே—உங்களுக்கு அப்படி எதுவும் கிடையாது; ஸர்வஸ்ய—அனைத்தின்; ஸர்வ-ஆத்மன:—நீங்கள் தான் அனைத்திற்கும் வேர்; ஆத்ம-வஸ்துன:—அனைத்தும் உங்களுக்குச் சொந்தமானதே என்றாலும், அனைத்திற்கும் உள்ளும், புறமும் நீங்கள் இருக்கிறீர்கள்.
மொத்த பௌதிக சக்தியான மஹத்-தத்வம் பிளவுபடாததாகும். ஆனால் ஜட இயற்கைக் குணங்களின் காரணத்தால், அது மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயமாகப் பிரிக்கப்படுவது போல் காணப்படுகிறது, ஜீவ சக்தியின் (ஜீவ-பூத) காரணத்தால், பிரிக்கப்பட்ட இச்சக்திகள் இணைந்து, பிரபஞ்சத் தோற்றத்தை கண்களுக்கு புலப்படச் செய்கின்றன. ஆனால் உண்மையில், பிரபஞ்ச சிருஷ்டிக்கு முன்பே, மொத்த சக்தி இருந்து வந்துள்ளது. எனவே, மொத்த பௌதிக சக்தியானது உண்மையில் சிருஷ்டிக்குள் புகுவதேயில்லை. அதுபோலவே உங்களுடைய இருப்பின் காரணத்தால், எங்களது புலன்களால் உங்களை உணர முடிகிறது என்றாலும், உண்மையில் அப்புலன்களால் உங்களை உணர முடியாது. மனதாலும், வார்த்தைகளாலும் அவற்றை அனுபவிக்கவும் முடியாது (அவாந்-மானஸு-கோசர). நம் புலன்களால் சில பொருட்களை மட்டுமே உணர்ந்தறிய முடியும், அனைத்தையும் அல்ல; உதாரணமாக, கண்களை நாம் காண்பதற்கு உபயோகிக்கலாம், சுவைப்பதற்கல்ல. இதனால், நீங்கள் புலன் உணர்வுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறீர்கள். ஜட இயற்கைக் குணங்களுடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும், அவற்றினால் நீங்கள் பாதிக்கப்படுவதில்லை. நீங்கள் அனைத்திலும்முள்ள முக்கியக் காரணமாகவும், சர்வவியாபகம் உடையவராகவும். பிளவுபடாத பரமாத்மாவாகவும் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு உள்ளும், புறமும் இல்லை. தேவகியின கர்ப்பத்திற்குள் நீங்கள் புகவில்லை. மாறாக முன்பே அங்கு நீங்கள் இருந்திருக்கிறீர்கள்.
பதம் 10.3.18
ய ஆத்மனோ த்ருஸ்ய-குணேஷு ஸன் இதி
வ்யவஸ்யதே ஸ்வ-வ்யதிரேகதோ ‘புத:
வினானுவாதம் ந ச தன் மனீஷிதம்
ஸம்யக் யதஸ் த்யக்தம் உபாததத் புமான்
ய—எவனொருவன்; ஆத்மன:—அவனது சுய சொருபத்தின் (ஆத்மாவின்); த்ருஸ்ய-குணேஷு—உடல் முதலான, கண்களால் பார்க்கக்கூடிய பொருட்களுக்கிடையில்; ஸன்—அந்நிலையில் இருப்பதால்; இதி—இவ்வாறாக; வ்யவஸ்யதே—தொடர்ந்து செயற்படுகின்றான்; ஸ்வ-வ்யதிரேகத:—உடல் ஆத்மாவிலிருந்து சுதந்திரமானது என்பது போல்; அபுத:—ஓர் அயோக்கியன்; வினா அனுவாதம்—முறையான பகுத்தறிவுக் கல்வி இல்லாமல்; ந—இல்லை; ச—மேலும்; தத்—உடலும், கண்ணுக்குப் புலப்படும் மற்ற பொருட்களும்; மனீஷிதம்—இத்தகைய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு; ஸம்யக்—முழுமையாக; யத:—அவன் ஒரு முட்டாள் என்பதால்; த்யக்தம்—விலக்கப்படுகின்றன; உபாததத்—இவ்வுடலை உண்மையென ஏற்றுக் கொள்கிறான்; புமான்—ஒருவன்.
கண்களுக்குப் புலப்படுவதும், இயற்கையின் முக்குணங்களால் ஆனதுமான தன்னுடைய உடல், ஆத்மாவின் உதவியின்றி செயற்படுகிறதென்று கருதுபவன் வாழ்வின் அடிப்படையை அறியாதவனும், அறிவற்ற மூடனுமாவான். கற்றோர் அவனது முடிவைத் தள்ளிவிடுகின்றனர். ஏனெனில், ஆத்மாவின் இருப்பு இல்லாமல், கண்ணுக்குப் புலப்படும் உடலும், புலன்களும் இருக்க முடியாது என்பதை ஆராய்ச்சியின் மூலமாகப் புரிந்துகொள்ள முடியும். ஒரு முட்டாள் மனிதனின் முடிவு நிராகரிக்கப்பட்ட போதிலும், அதையே உண்மையென்று அவன் கருதுகிறான்.
பதம் 10.3.19
த்வத்தோ ‘ஸ்ய ஜன்ம-ஸ்திதி-ஸம்யமான் விபோ
வதந்தி அனீஹாத் அகுணாத் அவிக்ரியாத்
த்வயீஸ்வரே ப்ரஹ்மணி நோ விருத்யதே
த்வத்-ஆஸ்ரயத்வாத் உபசர்யதே குணை:
த்வத்த:—ஆகியவை பகவானாகிய உங்களிடமிருந்து; அஸ்ய—மொத்த பிரபஞ்சத் தோற்றத்தின்; ஜன்ம—படைப்பு; ஸ்திதி—பராமரிப்பு; ஸம்யமான்—மற்றும் அழிவு; விபோ—எம்பெருமானே; வதந்தி—என்று வேத வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர்; அனீஹாத்—பிரயத்தனம் செய்யும் அவசியமில்லாதவர்; அகுணாத்—ஜட இயற்கைக் குணங்களால் பாதிக்கப்படாதவர்; அவிக்ரியாத்—ஆன்மீக நிலையிலிருந்து மாறாதவர்; த்வயி—உங்களுக்குள்; ஈஸ்வரே—பரமபுருஷர்; ப்ரஹ்மணி—பரப்பிரம்மனான; ந—இல்லை; விருத்யதே—ஒரு முரண்பாடுள்ளது; த்சத்-ஆஸ்ரயத்வாத்—உங்களால் ஆளப்படுவதால்; உபசர்யதே—அனைத்தும் தானாகவே நடைபெறுகின்றன; குணை:—பௌதிக குணங்களின் நடவடிக்கையால்.
எம்பெருமானே, ஜட இயற்கைக் குணங்களால் பாதிப்படையாதவரும், பிரயத்தனம் செய்யும் அவசியம் இல்லாதவரும், ஆன்மீக நிலையில் மாற்றமில்லாதவருமான உங்களால்தான், மொத்த பிரபஞ்சத் தோற்றத்தின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன என்று வேத வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர். பரமபுருஷரும், பரப்பிரம்மனுமான உங்களுக்குள் எவ்வித முரண்பாடும் இல்லை. சத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதால், அனைத்தும் தானாகவே நிகழ்கின்றன.
பதம் 10.3.20
ஸ த்வம் த்ரி-லோக-ஸ்திதயே ஸ்வ-மாயயா
பிபர்ஷி சுக்லம் கலு வர்ணம் ஆத்மன:
ஸர்காய ரக்தம் ரஜஸோபப்ரும்ஹிதம்
க்ருஷ்ணம் ச வர்ணம் தமஸா ஜனாத்யயே
ஸ: த்வம்—அதே உன்னத புருஷரான தாங்கள்; த்ரி-லோக-ஸ்திதயே—உயர், மத்திய மற்றும் கீழ் எனும் மூன்று கிரக அமைப்புக்களைப் பராமரிப்பதற்காக; ஸ்வ-மாயயா—உங்களுடைய சுய சக்தியினால் (ஆத்ம-மாயயா;) பிபர்ஷி—ஏற்கிறீர்கள்; சுக்லம்—சத்வ குணத்திலுள்ள விஷ்ணுவின் வெண்ணிற உருவத்தை; கலு—அத்துடன்; வர்ணம்—நிறம்; ஆத்மன:—உங்களுடையதைப் போன்ற அதே பிரிவின் (விஷ்ணு-தத்வத்தின்); ஸர்காய—மொத்த உலகின் சிருஷ்டிக்காக; ரக்தம்—ரஜோ குணத்திற்குரிய சிவப்பு வர்ணத்தை; ரஜஸா—ரஜோ குணத்துடன்; உபப்ரும் ஹிதம்—ஒப்படைக்கப்பட்டு; க்ருஷ்ணம் ச—மற்றும் இருளடர்ந்த குணம்; வர்ணம்—வர்ணம்; தமஸா—அறியாமையால் சூழப்பட்டிருப்பது; ஜன-அத்யயே—மொத்த சிருஷ்டியின் முடிவான அழிவுக்காக.
பகவானே, உங்களுடைய ரூபம் முக்குணங்களுக்கும் மேற்பட்டதாகும், இருப்பினும், மூவுலகங்களையும் காப்பதற்காக நீங்கள் சாத்வீக நிலையிலுள்ள விஷ்ணுவின் வெண்மையான நிறத்தை ஏற்கிறீர்கள்; ரஜோ குணத்தால் சூழப்பட்டுள்ள சிருஷ்டிக்காக நீங்கள் சிவந்த நிறத்தில் தோன்றுகிறீர்கள்; முடிவில், அறியாமையால் சூழப்பட்டுள்ள அழிவு தேவைப்படும்பொழுது, நீங்கள் கருமையான நிறத்தில் தோன்றுகிறீர்கள்.
பதம் 10.3.21
த்வம் அஸ்ய லோகஸ்ய விபோ ரிரக்ஷிஷுர்
க்ருஹே ‘வதீர்ணோ ‘ஸி மமாகிலோஸ்வர
ராஜன்ய-ஸம்க்ஞானஸுர-கோடி-யூதபைர்
நிர்வ்யூஹ்யமானா நிஹனிஷ்யஸே சமூ:
த்வம்—பகவானாகிய நீங்கள்; அஸ்ய—இவ்வுலகின்; லோகஸ்ய—குறிப்பாக மத்திய லோகமான இந்த மண்ணுலகின்; விபோ—பரமபுருஷரே; ரிரக்ஷிஷு:—(அசுரர்களின்-தொல்லைகளிலிருந்து) பாதுகாப்பைவிரும்பி; க்ருஹே—இவ்வீட்டில்; அவதீர்ண: அஸி—இப்பொழுது தோன்றியிருக்கிறீர்கள்; மம—எனது; அகில-ஈஸ்வர—முழு பிரபஞ்சத்திற்கும் நீங்கள் உரிமையாளர் என்ற போதிலும்; ராஜன்ய-ஸம்க்ஞ-அஸுர-கோடி-யூத-பை:—அரசியல்வாதிகள் மற்றும் அரசர்களின் பதவிகளை ஏற்றுள்ள இலட்சக்கணக்கான அசுரர்கள் மற்றும் அவர்களது ஆதாரவாளர்களுடன்; நிர்வ்யூஹ்யமானா:—உலகம் முழுவதிலும் நடமாடிக் கொண்டிருக்கும்; நிஹனிஷ்யஸே—கொன்று விடுவீர்கள்; சமூ:—சேனைகளையும், உபகரணங்களையும், வீரர்களையும் மற்றும் பரிவாரங்களையும்.
எம்பெருமானே, சிருஷ்டி முழுமைக்கும் உரிமையாளரே, இவ்வுலகைப் பாதுகாக்கும் விருப்பத்துடன். நீங்கள் இப்பொழுது என் வீட்டில் தோன்றியிருக்கிறீர்கள். உண்மையில் க்ஷத்திரிய அரசர்களின் போர்வையில் அசுரர்களாக உள்ள அரசியல்வாதிகளின் தலைமையில், உலகம் முழுவதிலும் நடமாடிக்கொண்டிருக்கும் எல்லாச் சேனைகளையும் நீங்கள் கொன்று குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். குற்றமற்ற பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் கொல்லப்பட வேண்டும்.
பதம் 10.3.22
அயம் து த்வஸப்யஸ் தவ ஜன்ம நௌ க்ருஹே
ஸ்ருத்வாக்ரஜாம்ஸ தே ன்யவதீத் ஸுரேஸ்வர
ஸ தே ‘வதாரம் புருஷை: ஸமர்பிதம்
ஸ்ருத்வா துநைவாபிஸரதி உதாயுத:
அயம்—இந்த (அயோக்கியன்); து—ஆனால்; அஸ்ப்ய:—சிறிதும் நாகரிகமற்றவன் (அஸுர என்றால் “நாகரிகமற்றவன்” என்றும், ஸுர என்றால் “நாகரிகமுள்ளவன்” என்றும் பொருள்படும்); தவ—பகவானாகிய உங்களின்; ஜன்ம—பிறப்பை; நௌ—எங்களுடைய; க்ருஹே—வீட்டில்; ஸ்ருத்வா—கேள்விப்பட்டதும்; அக்ரஜான் தே—உங்களுக்கு முன்பிறந்த சகோதர்கள் அனைவரையும்; ன்யவதீத்—கொன்றான்; ஸுர-ஈஸ்வர—நாகரிமுள்ளவர்களான ஸுரர்களின் இறைவனே; ஸ:—அவன் (நாகரிகமற்ற அந்த கம்சன்); தே—உங்களுடைய; அவதாரம்—அவதாரத்தை; புருஷை:—அவனது சிறைக் காவலாளிகளால்; ஸமர்பிதம்—அறிவிக்கப்பட்டு; ஸ்ருத்வா—கேட்டபின்; அதுனா—இப்பொழுது; ஏவ—உண்மையில்; அபிஸரதி—உடனே வருவான்; உதா யுத:—ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு.
எம்பெருமானே, தேவர்களின் இறைவனே. அசரீரி வாக்குப்படி, தாங்கள் எங்கள் வீட்டில் பிறந்து, கம்சனைக் கொன்றுவிடுவீர்கள் என்ற அசரீரியைக் கேட்டு காட்டுமிராண்டியான இந்த கம்சன், உங்களுடைய பல மூத்த சகோதரர்களைக் கொன்று விட்டான். நீங்கள் தோன்றியிருப்பதைப் பற்றி தன் சிறைக் காவலாளியிடமிருந்து கேள்விப்பட்டதும், அவன் உங்களைக் கொல்ல ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உடனே இங்கு வருவான்.
பதம் 10.3.23
ஸ்ரீ-சுக உவாச
அதைனம் ஆத்மஜம் வீக்ஷ்ய மஹா-புருஷ-லக்ஷணம்
தேவகீ தம் உபாதாவத் கம்ஸாத் பீதா ஸுவிஸ்மிதா
ஸ்ரீ-சுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அத—வசுதேவரால் இவ்வாறு பிரார்த்தனை செய்யப்பட்டபின்; ஏனம்—இந்த கிருஷ்ணர்; ஆத்மஜம்—அவர்களது மகனான; வீக்ஷ்ய—கண்டு; மஹா-புருஷ-லக்ஷணம்—பரமபுருஷரான விஷ்ணுவிற்குரிய எல்லா அறிகுறிகளுடன்; தேவகீ—கிருஷ்ணரின் தாய்; தம்—அவரிடம் (கிருஷ்ணரிடம்); உபாதாவத்—பிரார்த்தித்தார்; கம்ஸாத்—கம்சனிடம்; பீதா—அஞ்சி; ஸு-விஸ்மிதா—மேலும் இத்தகைய ஒரு அற்புதக் குழந்தையைக் கண்டு ஆச்சரியம் அடைந்ததாலும்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அதன் பிறகு கம்சனுக்கு மிகவும் அஞ்சிய தேவகி, தன் குழந்தையிடம் பரமபுருஷருக்குரிய எல்லா அறிகுறிகளையும் கண்டு, வழக்கத்திற்கு மாறாக ஆச்சரியமடைந்து, பகவானைத் துதிக்கத் துவங்கினார்.
பதம் 10.3.24
ஸ்ரீ-தேவகி உவாச
ரூபம் யத் தத் ப்ராஹுர் அவ்யக்தம் ஆத்யம்
ப்ரஹ்ம ஜ்யோதிர் நிர்குணம் நிர்விகாரம்
ஸத்தா-மாத்ரம் நிர்விசேஷம் நிரீஹம்
த்வம் ஸாக்ஷாத் விஸ்ணுர் அத்யாத்ம தீப:
ஸ்ரீ-தேவகி உவாச—ஸ்ரீ தேவகி கூறினாள்; ரூபம்—ருபம் அல்லது கருப்பொருள்; யத் தத்—நீங்கள் அதே கருப்பொருளாக இருக்கிறீர்கள் என்பதால்; ப்ராஹு:—என்ற சிலசமயங்களில் நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்; அவ்யக்தம்:—பௌதீக புலன்களால் அறிய முடியாதவர்; (அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்ரியை:); ஆத்யம்—நீங்களே மூலகாரணம்; ப்ரஹ்ம—நீங்கள் பிரம்மன் எனப்படுகிறீர்கள்; ஜ்யோதி:—ஜோதி; நிர்குணம்—பௌதிக குணங்களற்ற; நிர்விகாரம்—மாற்றமில்லாத அதே விஷ்ணு ரூபம்; ஸத்தா-மாத்ரம்—மூல கருப்பொருளான, அனைத்திற்கும் காரணமான; நிர்விசேஷம்—நீங்கள் பரமாத்மாவாக எல்லா இடங்களிலும் இருக்கிறீர்கள் (மனித இதயத்திலும், மிருக இதயத்திலும் அருகே கருப்பொருள்தான் இருக்கிறது); நிரீஹம்—பௌதிக ஆசைகள் இல்லாத; ஸ:—அப்பரமபுருஷர்; த்வம்—பகவானாகிய நீங்கள்; ஸாக்ஷாத்—நேரடியாக; விஷ்ணு:—பகவான் விஷ்ணுவாவீர்; அத்யாத்ம-தீப:—உன்னத அறிவுக்கெல்லாம் ஒளி விளக்காவீர் (உங்களை அறிவதால், ஒருவன் அனைத்தையும் அறிகிறான்; பஸ்மின் விக்ஞாதே ஸர்வம் ஏவம் விக்ஞாதம் பவதி).
ஸ்ரீ தேவகி கூறினாள்; எம்பெருமானே, வெவ்வேறு வேதங்கள் உள்ளன. அவற்றுள் சில, மனதாலும் வார்த்தைகளாலும் உங்களை அறிய முடியாதென்று விவரிக்கின்றன. இருப்பினும் முழு பிரபஞ்ச தோற்றத்திற்கும் நீங்கள்தான் மூலம் நீங்கள் அனைத்திலும் மிகச் சிறந்ததும், சூரியனைப் போல் பிரகாசம் நிறைந்ததுமான பிரம்மனாவீர். உங்களுக்கு பௌதிகக் காரணம் இல்லை. நீங்கள் மாற்றமில்லாதவர். உங்களுக்குப் பௌதிக ஆசைகள் இல்லை. இவ்வாறாக நீங்களே கருப்பொருள் என்று வேதங்கள் கூறுகின்றன. எனவே எம்பெருமானே, எல்லா வேத வாக்கியங்களுக்கும் மூலம் நீங்களே, உங்களை அறிவதால், படிப்படியாக அனைத்தையும் ஒருவன் அறிந்தவனாகிறான். நீங்கள் பிரம்ம ஜோதியிலிருந்தும், பரமாத்மாவிலிருந்தும் வேறுபட்டிருக்கிறீர்கள், அதேசமயம் வேறுபடாதவராகவும் இருக்கிறீர்கள். அனைத்தும் உங்களிடமிருந்துதான் தோன்றுகின்றன. உண்மையில், எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமாகவும், உன்னத அறிவிற்கெல்லாம் ஒளி விளக்காகவும் விளங்கும் நீங்கள் பகவான் விஷ்ணுவாவீர்.
பதம் 10.3.25
நஷ்டே லோகே த்வி-பரார்தாவஸானே
மஹா-பூதேஷ்வ் ஆதி-பூதம் கதேஷு
வ்யக்தே ‘வ்யக்தம் கால-வேகேன யாதே
பவான் ஏக: சிஷ்யதே ‘சேஷ ஸம்க்ஞ:
நஷ்டே—அழிவுக்குப் பிறகு; லோகே—பிரபஞ்சத் தோற்றத்தின்; த்விபரார்த-அவஸானே—கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் (பிரம்மாவின் வாழ்நாளுக்குப்) பிறகு; மஹா-பூதேஷு—எப்பொழுது ஐந்து மூலப் பொருட்கள் (மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்); ஆதி-பூதம் கதேஷு—புலன் உணர்விற்குரிய சூட்சுமப் பொருட்களுக்குள் புகுகின்றன; வ்யக்தே—அனைத்தும் தோற்றுவிக்கப்படும் பொழுது; அவ்யக்தம்—தோன்றாதவற்றிற்குள்; கால-வேகேன—காலத்தின் வேகத்தினால்; யாதே—புகுகின்றது; பவான்—பகவானாகிய நீங்கள்; ஏக:—ஒருவர் மட்டுமே; சிஷ்யதே—எஞ்சியிருக்கிறீர்கள்; அசேஷ-ஸம்க்ஞ:—வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒருவர்.
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, தோன்றியவை தோன்றாதவை முதலான அனைத்தும் எப்பொழுது காலத்தின் வேகத்தினால் அழிக்கப்படுகின்றனவோ, அந்த பிரபஞ்ச அழிவின் போது, ஸ்தூலமான ஜந்து மூலப்பொருட்கள் சூட்சுமமான எண்ணத்தில் (மனதில்) புகுகின்றன. தோன்றியவை தோன்றாதவற்றுள் புகுகின்றன. அச்சமயத்தில் அனந்த சேஷநாகம் எனப்படும் நீங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறீர்கள்.
பதம் 10.3.26
யோ ‘யம் காலஸ் தஸ்ய தே ‘வ்யக்த-பந்தோ
சேஷ்டாம் ஆஹுஸ் சேஷ்டதே யேன விஸ்வம்
நிமேஷாதிர் வத்ஸராந்தோ மஹீயாம்ஸ்
தம் த்வேசானம் க்ஷேம-தாம ப்ரபத்யதே
ய:—அது; அயம்—இந்த; கால:—காலம் (வினாடிகள், நிமிடங்கள், மணிகள்); தஸ்ய—அவரின்; தே—உங்களின்; அவ்யக்த-பந்தோ—எம்பெருமானே, நீங்கள் தோன்றாத வஸ்துவை (மூல மஹத்-தத்வம் அல்லது ப்ரக்ருதி) முடுக்கி விடுகிறீர்கள்; சேஷ்டாம்—முயற்சி அல்லது லீலைகள்; அஹு:—என்று கூறப்படுகிறது; சேஷ்டதே—செயற்படுகிறது; யேன—எதனால்; விஸ்வம்—மொத்த படைப்பும்; நிமேஷ-ஆதி:—காலத்தின் மிகச் சிறிய பகுதிகளிலிருந்து துவங்கும்; வத்ஸர-அந்த:—ஒருவருடம் வரை; மஹியான்—சக்திவாய்ந்த; தம்—பகவானாகிய உங்களிடம்; த்வா-ஈசானம்—பரம ஆளுனரான உங்களிடம்; க்ஷேம-தாம—சர்வ மங்களத்திற்கும் உறைவிடமாகிய; ப்ரபத்யே—நான் முழு சரணயடைகிறேன்.
ஜட சக்தியை முடுக்கி விடுபவரே, இந்த அற்புத சிருஷ்டியானது, வினாடிகளாகவும் நிமிடங்களாகவும், மணிகளாகவும், ஆண்டுகளாகவும் வகுக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த காலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகிறது, பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக விரிவடையும் காலமெனும் இந்த மூலப்பொருள், பகவான் விஷ்ணுவின் மற்றொரு வடிவமாகும். லீலைகள் புரியும் பொருட்டு, காலத்தை ஆள்பவராக நீங்கள் செயற்படுகிறீர்கள். ஆனால், நல்லதிர்ஷ்ட்டங்களுக்கெல்லாம் பிறப்பிடம் நீரே, பகவானாகிய தங்களிடம் நான் பூரண சரணாகதியடைகிறேன்.
பதம் 10.3.27
மர்த்யோ ம்ருத்யு-வ்யால-பீத: பலாயன்
லோகான் ஸர்வான் நிர்பயம் நாத்யகச்சத்
த்வத்-பாதாப்ஜம் ப்ராப்ய யத்ருச்சயாத்ய
ஸுஸ்த: சேதே ம்ருத்யுர் அஸ்மாத் அபைதி
மர்த்ய:—நிச்சயமாக இறக்கப்போகும் ஜீவராசிகள்; ம்ருத்யு-வ்யால-பீத:—மரணமெனும் பாம்பைக் கண்டு அஞ்சும்; பலாயன்—ஓடுகின்றனர் (ஒரு பாம்பைக் கண்டதும், உடனடியான மரணத்திற்கஞ்சி அனைவரும் தூர ஓடுகின்னர்); லோகான்—வெவ்வேறு கிரகங்களுக்கு; ஸர்வான்—எல்லா; நிர்பயம்—அச்சமில்லை; ந அத்ய கச்சத்—அடையவில்லை; த்வத்-பாத-அப்ஜம்—உங்களுடைய தாமரைப்பாதங்களின்; ப்ராப்ய—புகலிடத்தைப் பெற்று; யத்ருச்சயா—அதிர்ஷ்டவசத்தால், பகவானாகிய உங்களுடைய கருணையாலும், உங்களது பிரதிநிதியான ஆன்மீக குருவின் கருணையாலும் (குரு-க்ருபா, க்ருஷ்ண-க்ருபா); அத்ய—தற்பொழுது; ஸு-ஸ்த:—தொல்லையில்லாமலும், மன அமைதியுடனும் இருப்பதால்; சேதே—உறங்குகின்றனர்; ம்ருத்யு—மரணம்; அஸ்மாத்—அவர்களிடமிருந்து; அபைதி—ஓடுகிறது.
இந்த இட உலகிலுள்ள ஒருவன் வேறு கிரகங்களுக்கு ஓட்டம் பிடிப்பதால்கூட, பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோய் ஆகியவற்றிலிருந்து விடுபட்டதில்லை. பகவானே. இப்பொழுது நீங்கள் தோன்றியிருப்பதால், மரணம் உங்களைக் கண்டு அஞ்சியோடுகிறது, உங்களுடைய கருணையால், உங்களது தாமரைப் பாதங்களைப் புகலிடம் கொண்ட ஜீவராசிகள் முழு மன அமைதியுடன் உறங்குகின்றன.
பதம் 10.3.28
ஸ த்வம் கோராத் உக்ரஸேனாத்மஜான் நஸ்
த்ராஹி த்ரஸ்தான் ப்ருத்ய-வித்ராஸ-ஹாஸி
ரூபம் சேதம் பௌருஷம் த்யான-திஷ்ண்யம்
மா ப்ரத்யக்ஷம் மாம்ஸ-த்ருசாம் க்ருஷீஷ்டா:
ஸ:——பகவானாகிய நீங்கள்; த்வம்—நீங்கள்; கோராத்—மிகக் கொடூரமான; உக்ரஸேன-ஆத்மஜாத்—உக்ரசேனரின் மகனிடமிருந்து; ந:—எங்களை; த்ராஹி—காப்பாற்றி அருளுங்கள்; த்ரஸ்தான்—(அவனிடம்) மிகவும் அச்சம் கொண்டுள்ள; ப்ருத்ய-வித்ராஸ-ஹா அஸி—நீங்கள் இயல்பாகவே உங்களது தொண்டர்களின் பயத்தை அழிப்பவர்; ரூபம்—உங்களுடைய விஷ்ணு ரூபத்தில்; ச—மேலும்; இதம்—இந்த; பௌருஷம்—பரமபுருஷராக; த்யான-திஷ்ணயம்—தியானத்தில் மதிப்பை உணர்ந்து போற்றப்படுபவர்; மா—வேண்டாம்; ப்ரத்யக்ஷம்—நேரடியாகக் காட்சியளிக்க; மாம்ஸ-த்ருசாம்—பெளதிக கண்களுடன் காண்பவர்களுக்கு; க்ருஷீஷ்டா:—தயவுகூர்ந்து.
எம்பெருமானே, உங்களுடைய பக்தர்களின் பயத்தையெல்லாம் நீங்கள் அழிப்பவர் என்பதால், கம்சனிடமுள்ள கோரமான பயத்திலிருந்து எங்களைக் காத்தருள வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன். பகவான் விஷ்ணுவாக உள்ள உங்களுடைய ரூபத்தின் மகிமையை யோகிகள் தியானத்தின் மூலமாக நன்கு உணர்ந்துள்ளனர். பௌதிகத் கண்களுடன் காண்பவர்களுக்கு இந்த ரூபத்தைக் காட்டவேண்டாமென்று நான் வேண்டிக் கொள்கிறேன்.
பதம் 10.3.29
ஜன்ம தே மய் அஸௌ பாபோ மா வித்யான் மதுஸூதன
ஸமுத்விஜே பவத்-தேதோ: கம்ஸாத் அஹம் அதீர-தீ:
ஜன்ம—பிறப்பு; தே—பகவானாகிய உங்களின்; மயி—என்னுடைய (கர்ப்பத்தில்); அஸௌ—அந்த கம்சன்; பாப:—பெரும் பாவியான; மா வித்யாத்—அறிய முடியாதபடி; மதுஸூதன—ஓ மதுசூதனா; ஸமுத்விஜே—நான் கவலையில் முழ்கியிருக்கிறேன்; பவத்-ஹேதோ:—உங்களது தோற்றத்தின் காரணத்தால்; கம்ஸாத்—யாரிடம் எனக்குக் கெட்ட அனுபவம் ஏற்பட்டதோ, அந்த கம்சனின் காரணத்தால்; அஹம்—நான்; அதீர-தீ:—அதிக கவலைக்கு இடமாகியுள்ளேன்.
ஓ மதுசூதனா, உங்களுடைய தோற்றத்தின் காரணத்தால் கம்சனிடம் உள்ள என் பயம் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே தயவுகூர்ந்து என் கர்ப்பத்தில் நீங்கள் பிறந்திருப்பதை, பாவியான அந்தக் கம்சனால் புரிந்துகொள்ள முடியாதபடி செய்து விடுங்கள்.
பதம் 10.3.30
உபஸம்ஹர விஸ்வாத்மன் அதோ ரூபம் அலௌகிகம்
சங்க-சக்ர-கதா-பத்ம-ஸ்ரியா ஜுஷ்டம் சதுர்-புஜம்
உபஸம்ஹர—மறைத்துவிடுங்கள்; விஸ்வாத்மன்—எங்கும் பரவியுள்ள பரமபுருஷரே; அதே:—அந்த; ரூபம்—உருவம்; அலௌகிகம்—இவ்வுலக இயற்கைக்குப் புறம்பான; சங்க-சக்ர-கதா-பத்ம—சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரையின்; ஸ்ரியா—இந்த ஐஸ்வரியங்களுடன்; ஜுஷ்டம்—அலங்கரிக்கப்பட்டுள்ள; சது:-புஜம்—நான்கு கரங்கள்.
எம்பெருமானே, நீங்கள் எங்கும் பரவியுள்ள பரமபுருஷராவீர். சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரையை ஏந்தியுள்ள, நான்கு கரங்களுடைய உங்களது உன்னத ரூபம் இவ்வுலக இயற்கைக்கு ஒவ்வாததாகும். தயவுகூர்ந்து இந்த ரூபத்தை மறைத்துக் கொள்ளுங்கள் (இயற்கையான ஒரு மனிதக் குழந்தையைப் போல் மாறிவிடுங்கள். இதனால் உங்களை எங்காவது ஒளித்து வைத்துவிட என்னால் இயலும்).
பதம் 10.3.31
விஸ்வம் யத் ஏதத் ஸ்வ-தனெள நிசாந்தே
யதாவகாசம் புருஷ: பரோ பவான்
பிபர்தி ஸோ ‘யம் மம கர்பகோ ‘பூத்
அஹோ ந்ரு-லோகஸ்ய விடம்பனம் ஹி தத்
விஸ்வம்—முழு பிரபஞ்சத் தோற்றமும்; யத் ஏதத்—அசையும் அசையாத படைப்புகளையெல்லாம் கொண்ட; ஸவ-தனெள—உங்களுடைய உடலுக்குள்; நிசா-அந்தே—அழிவு காலத்தில்; யதா-அவகாசம்—சிரமமின்றி உங்களுடைய உடலில் புகலிடம்; புருஷ:—பரமபுருஷர்; பர:—உன்னத; பவான்—நீங்கள்; பிபர்தி—வைத்து; ஸ:—அந்த (பரமபுருஷர்); அயம்—இந்த ரூபம்; மம—எனது; கர்ப-க:—என் கர்ப்பத்தினுள் வந்தீர்கள்; அபூத்—அது அப்படி ஆயிற்று; அஹோ—அந்தோ; ந்ரு-லோகஸ்ய—ஜீவ ராசிகளைக் கொண்ட இந்த ஜட உலகினுள்; விடம்பனம்—என்று நினைப்பது அசாத்தியம்; ஹி—உண்மையில்; தத்—அந்த (வகையான எண்ணம்).
அழிவுக்காலத்தில், அசையும், அசையாத ஜீவன்களைக் கொண்ட முழு பிரபஞ்சமும் உங்களுடைய உன்னத உடலுக்குள் புகுந்து, சிரமமின்றி அங்கேயே வைக்கப்படுகிறது. இப்பொழுது இந்த உன்னத ரூபம் என் கர்ப்பத்திலிருந்து பிறந்துள்ளது. மக்களால் இதை நம்பமுடியாது நானும் கேலிக்குரிய ஒரு பொருளாவேன்.
பதம் 10.3.32
ஸ்ரீ-பகவான் உவாச
த்வம் ஏவ பூர்வ-ஸர்கே ‘பூ: ப்ருஸ்னி: ஸ்வாயம்புவே ஸதி
ததாயம் ஸுதபா நாம ப்ரஜாபதிர் அகல்மஷ:
ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷர் தேவகியிடம் கூறினார்; த்வம்—நீங்கள்; ஏவ—உண்மையில்; பூர்வ-ஸர்கே—முன்னொரு யுகத்தில்; அபூ:—ஆனீர்கள்; ப்ருஸ்னி:—பிருஸ்னி என்ற பெயரால்; ஸ்வாயம்புவே—சுயம்புவ மனுவின் யுகம்; ஸதி—கற்புக்கரசியே; ததா—அப்பொழுது; அயம்—வசுதேவர்; ஸுதபா—சுதபா; நாம—என்ற பெயருடைய; ப்ரஜாபதி:—ஒரு பிரஜாபதி; அகல்மஷ:—களங்கமற்ற புண்ணியவான்.
பரமபுருஷர் பதிலளித்தார்: கற்புக்கரசியான என்னருமைத் தாயே, உங்களுடைய முற்பிறவியில், சுயம்புவ யுகத்தில், நீங்கள் பிருஸ்னி என்று அழைக்கப்பட்டீர்கள். பெரும் புண்ணியம் செய்த பிரஜாபதியாக இருந்த வசுதேவர் சுதபா என்று அழைக்கப்பட்டார்.
பதம் 10.3.33
யுவாம் வை ப்ரஹ்மணாதிஷ்டௌ ப்ரஜா-ஸர்கே யதா தத: ஸன்னியம்யேந்ரிய-க்ராமம் தேபாதே பரமம் தப:
யுவாம்—நீங்கள் இருவரும் (பிருஸ்னி மற்றும் சுதபா); வை—உண்மையில்; ப்ரஹ்மணா ஆதிஷ்டௌ—(பிரஜாபதிகளின் தந்தையென்பதால், பிதாமஹர் எனப்படும்) பிரம்ம தேவரால் உத்தரவிடப்பட்டு; ப்ரஜா-ஸர்கே—வம்ச உற்பத்தியில்; யதா—அப்பொழுது; தத:—அதன் பிறகு; ஸன்னியம்ய—முழு கட்டுப்பாட்டில் வைத்து; இந்ரிய-க்ராமம்—புலன்கள்; தேபாதே—மேற்கொண்டீர்கள்; பரமம்—கடுமையான; தப:—தவத்தை.
வம்ச உற்பத்தியைச் செய்யும்படி பிரம்மதேவரால் உத்தரவிடப்பட்ட நீங்களிருவரும் முதலில் புலன்களை அடக்கிக் கடுந்தவங்களை மேற் கொண்டீர்கள்.
பதங்கள் 10.3.34 – 10.3.35
வர்ஷ-வாதாதப-ஹிம-கர்ம-கால-குணான் அனு
ஸஹமானெள ஸ்வாஸ-ரோத-வினிர் தூத-மனோ-மலௌ
சீர்ண-பர்ணானிலாஹாராவ் உபசாந்தேன சேதஸா
மத்த: காமான் அபீப்ஸந்தௌ மத்-ஆராதனம் ஈஹது:
வர்ஷ—மழை; வாத—வேகமான காற்று; ஆதப—கடுமையான சூரியஒளி; ஹிம—கடுங்குளிர்; கர்ம—வெப்பம்; கால-குணான் அனு—பருவகாலங்களின் மாற்றங்களுக்கேற்ப; ஸஹமானௌ—சகித்துக் கொண்டு; ஸ்வாஸ-ரோத—சுவாசத்தைக் கட்டுப்படுத்தி யோகம் பயில்வதன் மூலம்; வினிர்தூத—மனதிலுள்ள அழுக்குகள் முற்றியும் கழுவப்பட்டு விட்டன; மன:-மலௌ—மனம் பௌதிக களங்கத்திலிருந்து விடுபட்டு தூய்மையடைந்தது; சீர்ண—ஒதுக்கப்பட்ட, உலர்ந்த; பர்ண—மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகள்; அனில—மற்றும் காற்று; ஆஹாரௌ—உண்டு; உபசாந்தேன—அமைதியான; சேதஸா—முற்றியும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மனதுடன்; மத்த:—என்னிடமிருந்து; காமான் அபீப்ஸந்தௌ—ஏதோ ஒரு வரத்தை யாசிக்க விரும்பி; மத்—எனது; ஆராதனம்—வழிபாட்டை; ஈஹது:—நீங்களிருவரும் நிறைவேற்றினீர்கள்.
எனதன்புள்ள தாய், தந்தையரே, நீங்கள் வெவ்வேறு பருவ காலங்களுக்கேற்ப, எல்லா வகையான துன்பங்களுக்கும் உள்ளாகி, மழையையும், காற்றையும், கடும் உஷ்ணத்தையும், கடுங்குளிரையும் சகித்துக் கொண்டீர்கள். யோகத்தின் வாயிலாக உடலினுள் உள்ள காற்றைக் கட்டுப்படுத்த பிராணாயாமத்தைப் பயின்றும், காற்றையும், மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகளையும் மட்டுமே உண்டும், மன அழுக்குகளையெல்லாம் நீங்கள் தூய்மைப்படுத்திக் கொண்டீர்கள்.
பதம் 10.3.36
ஏவம் வாம் தப்யதோஸ் தீவ்ரம் தப: பரம-துஷ்கரம்
திவ்ய-வர்ஷ-ஸஹஸ்ராணி த்வாதசேயுர் மத்-ஆத்மனோ:
ஏவம்—இவ்விதமாக; வாம்—நீங்களிருவரும்; தப்யதோ:—தவங்களை நிறைவேற்றி; தீவ்ரம்—கடுமையான; தப:—தவம்; பரம-துஷ்கரம்—நிறைவேற்றுவதற்கு மிகக் கடினமான; திவ்ய-வர்ஷ—தேவஆண்டுகள்; ஸஹஸ்ராணி—ஆயிரம்; த்வாதச—பன்னிரண்டு; ஈயு—கடந்தன; மத்-ஆத்மனோ:—என் சிந்தனையில் ஈடுபட்டு.
இவ்விதமாக என் சிந்தனையுடன் (கிருஷ்ண உணர்வுடன்). பன்னிரண்டாயிரம் தேவ ஆண்டுகளை நீங்கள் கடுந்தவத்தில் கழித்தீர்கள்.
பதங்கள் 10.3.37 – 10.3.38
ததா வாம் பரிதுஷ்டோ ‘ஹம் அமுனா வபுஷானகே
தபஸா ஸ்ரத்தயா நித்யம் பக்தயா ச ஹ்ருதி பாவித:
ப்ராது ராஸம் வரத-ராட் யுவயோ: காம-தித்ஸயா
வ்ரியதாம் வர இதி உக்தே மாத்ருசோ வாம் வ்ருத: ஸுத:
ததா—பிறகு (பன்னிரண்டாயிரம் தேவ ஆண்டுகள் முடிந்ததும்); வாம்—உங்கள் இருவருடன்; பரிதுஷ்ட: அஹம்—நான் மிகவும் திருப்தியடைந்தேன்; அமுனா—இதனால்; வபுஷா—இந்த கிருஷ்ண உருவில்; அனகே—குற்றமற்ற அன்புத் தாயே; தபஸா—தவத்தால்; ஸ்ரத்தயா—நம்பிக்கையால்; நித்யம்—இடையறாது (ஈடுபட்டு); பக்த்யா—பக்தித் தொண்டால்; ச—அத்துடன்; ஹ்ருதி—இதய மத்தியில்; பாவித:—நோக்கத்தில் உறுதியுடன்; ப்ரதுராஸம்—(இதே முறையில் உங்கள் முன் தோன்றினேன்; வர-த-ராட்—வரமளிப்பவர்களிலேயே மிகச் சிறந்தவரான வரதராஜர்; யுவயோ:—உங்களிருவரின்; காம-தித்ஸயா—ஆசையை நிறைவேற்ற விரும்பி; வ்ரியதாம்—உங்களுடைய மனங்களைத் திறந்து காட்டும்படி கேட்டேன்; வர:—ஒரு வரத்திற்காக; இதி உக்தே—நீங்கள் இவ்வாறு; கேட்டுக்கொள்ளப்பட்ட பொழுது; மாத்ருச:—என்னைப் போலவே; வாம்—உங்களிருவரின்; வ்ருத:—கேட்டுக்கொள்ளப்பட்டேன்; ஸுத:—உங்கள் மகனாக என்னைப் போலவே ஒரு மகனை நீங்கள் அடைய விரும்பினீர்கள்.
குற்றமற்ற தாய் தேவகியே, இதயத்தில் பெரும் நம்பிக்கையுடனும், பக்தியுடனும், தவத்துடனும், பன்னிரண்டாயிரம் தேவ ஆண்டுகளுக்கு என்னுடைய ஆழ்ந்த சிந்தனையில் நீங்கள் இடையறாது ஈடுபட்டிருந்தீர்கள். இதனால் உங்களிடம் நான் மிகவும் திருட்தியடைத்தேன். வரமளிப்பவருள் நான் வரதராஜன் என்பதால், விரும்பிய வரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி உங்களைக் கேட்டுக்கொள்வதற்காக, இதே உருவில் கிருஷ்ணராக நான் தோன்றினேன். நீங்களும் பிறகு, என்னைப் போலவே, ஒரு மகன் வேண்டுமென்ற உங்களது விருப்பத்தைக் கூறினீர்கள்.
பதம் 10.3.39
அஜுஷ்ட-கிராம்ய விஷயாவ் அனபத்யௌ ச தம்-பதீ
ந வவ்ராதே ‘பவர்கம் மே மோஹிதௌ தேவ-மாயயா
அஜுஷ்ட-கிராம்ய-விஷயௌ—பாலுறவு வாழ்வுக்காகவும், என்னைப் போன்ற ஒரு குழந்தையைப் பெறுவதற்காகவும்; அன்பத்யௌ—மகனில்லாத காரணத்தால்; ச—தவிரவும்; தம்-பதீ—கணவன் மனைவி இருவரும்; ந—ஒருபோதும் இல்லை; வவ்ராதே—கேட்டீர்கள் (வேறெந்த வரத்தையும்); அபவர்கம்—இவ்வுலகிலிருந்து முக்தி பெறுவதை; மே—என்னிடமிருந்து; மோஹிதௌ—மிகவும் கவரப்பட்டு; தேவ-மாயயா—என்னிடமுள்ள உன்னத அன்பினால் (என்னையே உங்களது அன்பு மகனாகப் பெற விரும்பி).
கணவன், மனைவியான நீங்களிருவரும், மகனில்லாத காரணத்தால் பாலுறவு ஆசைகளால் கவரப்பட்டு, உன்னத அன்பாகிய தேவ மாயையின் உந்துதலால், என்னையே உங்கள் மகனாகப் பெற விரும்பினீர்கள். எனவே இந்த ஜட உலகிலிருந்து முக்தி பெறுவதை நீங்கள் விரும்பவில்லை
பதம் 10.3.40
கதே மயி யுவாம் லப்த்வா வரம் மத்-ஸத்ருசம் ஸுதம்
க்ராம்யான் போகான் அபுஞ்ஜாதாம் யுவாம் ப்ராப்த-மனோரதௌ
கதே மயி—நான் சென்ற பின்; யுவாம்—நீங்களிருவரும்; லப்த்வா—பெற்றபின்; வரம்—(ஒரு மகனைப் பெறும்) வரத்தை; மத்-ஸத்ருசம்—என்னைப் போன்ற; ஸுதம்—ஓ மகன்; க்ராம்யான் போகான்—சிற்றின்ப ஈடுபாடு; அபுஞ்ஜாதாம்—அனுபவித்தீர்கள்; யுவாம்—நீங்களிருவரும்; ப்ராப்த—அடைந்ததால்; மனோரதௌ—உங்களுடைய விருப்பத்தின் பலனை.
அந்த வரத்தை நீங்கள் பெற்றுக்கொண்ட பிறகு நான் மறைந்ததும். என்னைப் போன்ற ஒரு மகனைப் பெற நீங்கள் சிற்றின்பத்தில் ஈடுபட்டீர்கள். நானும் உங்களுடைய விருப்பதை நிறைவேற்றினேன்.
பதம் 10.3.41
அத்ருஷ்ட்வான்யதமம் லோகே சீலௌதார்ய-குணை: ஸமம்
அஹம் ஸுதோ வாம் அபவம் ப்ருஸ்னிகர்ப இதி ஸ்ருத:
அத்ருஷ்ட்வா—காணாமல்; அன்யதமம்—வேரெவரையும்; லோகே—இவ்வுலகில்; சீல-ஔதார்ய—குணை:—நற்குணமும், தாராள மனமும் கொண்ட உன்னதக் குணங்களுடன்; ஸமம்—உங்களுக்குச் சமமான; அஹம்—நான்; ஸுத—மகன்; வாம்—உங்களிருவரின்; அபவம்—ஆனேன்; ப்ருஸ்னி-கர்ப:—பின்ஷ்ணியிலிருந்து பிறந்தவரென்று போற்றப்படும்; இதி—இவ்வாறு; ஸ்ருத:—நான் அறியப்படுகிறேன்.
எளிமையிலும், பிற நற்குணங்களிலும் உங்களைப்போல் மிகவுயர்ந்த நிலையிலுள்ள வேறெவரையும் நான் காணவில்லை, எனவே பிருஸ்னிகர்பனாக, அதாவது, பிருஸ்னியிலிருந்து பிறந்தவன் என்று புகழப்படுபவனாக இவ்வுலகில் நான் தோன்றினேன்.
பதம் 10.3.42
தயோர் வாம் புனர் ஏவாஹம் அதித்யாம் ஆஸ கஸ்யபாத்
உபேந்ர இதி விக்யாதோ வாமனத்வாச ச வாமன:
தயோ:—கணவன் மனைவியான உங்களிருவரின்; வாம்—உங்களிருவரில்; புன:-ஏவ—மீண்டும்; அஹம்—நானே; அதித்யாம்—அதிதியின் கர்ப்பத்தில்; ஆஸ—தோன்றினேன்; கஸ்யபாத்—கசியப் முனியின் விந்தின் மூலமாக; உபேந்ர:—உபேந்திரன் என்ற பெயருடன்; இதி—இவ்வாறு; விக்யாத:—புகழப்பட்டேன்; வாமனத்வாத் ச—மேலும் குள்ளனாக ருந்ததால்; வாமன:—நான் வாமனன் என்று அறியப்பட்டேன்.
அடுத்த யுகத்தில், முறையில் அதிதி, கசியபர் எனும் பெயர்களுடன் என் தாய் தந்தையராகத் தோன்றிய உங்களிடமிருந்து மீண்டும் நான் தோன்றினேன். உபேந்திரன் என்றழைக்கப்பட்ட நான் குள்ளனாக இருந்ததால், வாமனன் என்றும் அறியப்பட்டேன்.
பதம் 10.3.43
த்ருதீய ‘ஸ்மின் பவே ‘ஹம் வை தேனைவ வபுஷாத வாம்
ஜாதோ பூயஸ் தயோர் ஏவ ஸத்யம் மே வ்யாஹ்ருதம் ஸதி
த்ருதீயே—மூன்றாவது தடவையாக; அஸ்மின் பவே—இத்தோற்றத்தில் (கிருஷ்ணராக); அஹம்—நானாகவே; வை—உண்மையில்; தேன—அதே நபர்; ஏவ—இவ்விதமாக; வபுஷ—ரூபத்தால்; அத—போன்று; வாம்—உங்கள் இருவரிலிருந்து; ஜாத:—பிறந்திருக்கிறேன்; பூய:—மீண்டும்; தயோ:—உங்களிருவரின்; ஏவ—உண்மையில்; ஸத்யம்—உண்மையென்று ஏற்றுக் கொள்ளுங்கள்; மே—எனது; வ்யாஹ்ருதம்—வார்த்தைகளை; ஸதி—கற்புக்கரசியே.
கற்புக்கரசியான தாயே. அதே நபரான நான், இப்பொழுது மூன்றாவது தடவையாக உங்களிருவருக்கும் மகனாகத் தோன்றியிருக்கிறேன். என் வார்த்தைகளை உண்மையென ஏற்றுக் கொள்ளுங்கள்.
பதம் 10.3.44
ஏதத் வாம் தர்சிதம் ரூபம் ப்ராக்-ஜன்ம-ஸ்மரணாய மே
நான்யதா மத்-பவம் ஞானம் மர்த்ய-லிங்கேன ஜாயதே
ஏதத்—இந்த விஷ்ணுரூபம்; வாம்—உங்கள் இருவருக்கும்; தர்சிதம்—காட்டப்பட்டது; ரூபம்—நான்கு கரங்கள் கொண்ட எனது பரமபுருஷ ரூபம்; ப்ராக்-ஜன்ம—எனது முந்திய தோற்றங்களின்; ஸ்மரணாய—உங்களுக்கு நினைவுபடுத்தியே; மே—எனது; ந—இல்லை; அன்யதா—இல்லையெனில்; மத்-பவம்—விஷ்ணுவின் தோற்றம்; ஞானம்—இந்த உன்னத அறிவு; மர்த்ய-லிங்கேன—ஒரு மனிதக் குழந்தையைப் போல் பிறப்பதால்; ஜாயதே—எழுகின்றது.
என்னுடைய முற்பிறப்புகளை உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காகவே இந்த விஷ்ணு ரூபத்தை உங்களுக்கு நான் காட்டினேன். இல்லையெனில் நான் ஒரு சாதாரண மனிதக் குழந்தையைப் போல் தோன்றியிருந்தால், பரமபுருஷரான விஷ்ணு தோன்றியிருப்பதை நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள்.
பதம் 10.3.45
யுவாம் மாம் புத்ர-பாவேன ப்ரஹ்ம பாவேன சாஸக்ருத்
சிந்தயந்தௌ க்ருத-ஸ்னேஹென யாஸ்யேதே மத்-கதிம் பராம்
யுவாம்—(கணவன், மனைவியாகிய) நீங்களிருவரும்; மாம்—என்னிடம்; புத்ர-பாவேன:—உங்கள் மகனாக; ப்ரஹ்ம–பாவேன:—நான் பாமபுருஷர் என்பதை அறிந்து; ச—மேலும், அஸக்ருத்:—இடைவிடாமல்; சிந்தயந்தெள—அவ்வாறெண்ணி; க்ருத-ஸ்னேஹௌ—அன்புடனும், பாசத்துடனும் நடந்து கொண்டு; யாஸ்யேதே—இருவரும் அடைவீர்கள்; மத்-கதிம்—எனது ஆன்மீக உலகை; பராம்—இந்த ஜட உலகிற்கு அப்பாற்பட்ட, உன்னதமான.
கணவன், மனைவியான நீங்களிருவரும், என்னை உங்கள் மகனென்று இடையறாது நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் பரமபுருஷர் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அன்புடனும் பாசத்துடனும் இடையறாது என்னைப் பற்றி சிந்திப்பதால், பரமபதத்தை அடைவதெனும் மிகவுயர்ந்த பூரணத்துவத்தை நீங்கள் பெறுவீர்கள்.
பதம் 10.3.46
ஸ்ரீ-சுக உவாச
இதி உக்த்வாஸீத் தரிஸ் தூஷ்ணீம் பகவான் ஆத்ம-மாயயா
பித்ரோ: ஸம்பஸ்யதோ: ஸத்யோ பபூவ ப்ராக்ருத: சிக:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி உக்த்வா—இவ்வாறு உபதேசித்தபின்; ஆஸீத்—இருந்தார்; ஹரி—பரமபுருஷர்; தூஷ்ணீம்—மௌனமாக; பகவான்—பகவான் விஷ்ணு; ஆத்ம-மாயயா—தமது சொந்த ஆன்மீக சக்தியின் மூலமாக; பித்ரோ-ஸம்பஸ்யதோ:—அவரது தாய் தந்தையர் உண்மையாகவே அவரைப் பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுது; ஸத்ய:—உடனே; பபூவ—அவர் ஆனார்; ப்ராக்ருத-சிக:—ஒரு சாதாரண மனிதக் குழந்தைபோல்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார். இவ்வாறாக தம் தாய் தந்தையருக்கு உபதேசித்தபின், பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் மௌனமானார். பிறகு அவர்களது முன்னிலையிலேயே, தமது அந்தரங்க சக்தியின் மூலமாக, தம்மை ஒரு மனிதக் குழந்தையாக அவர் மாற்றிக் கொண்டார். (அதாவது, தமது சுய ரூபத்திற்கு தம்மை அவர் மாற்றிக் கொண்டார்: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம்).
பதம் 10.3.47
ததஸ் ச சௌர்ர் பகவத்-ப்ரசோதித:
ஸுதம் ஸமாதாய ஸ ஸூதிகா-க்ருஹாத்
யதா பஹிர் கந்தும் இயேஷ தர்ஹி அஜா
யா யோகமாயாஜனி நந்த-ஜாயயா
தத:—அதன்பிறகு; ச—உண்மையில்; சௌரி:—வசுதேவர்; பகவத்-ப்ரசோதித:—பரமபுருஷரால் உபதேசிக்கப்பட்டு; ஸுதம்—அவரது மகனை; ஸமாதாய—கவனமாகக் கையிலெடுத்த; ஸ—அவர்; ஸூதிகா-க்ருஹாத்—பிரசவ அறையிலிருந்து; யதா—அப்பொழுது; பஹி: கந்தும்—வெளியில் செல்ல; இயேஷ—விரும்பினார்; தர்ஹி—அதே சமயத்தில்; அஜா—பிறப்பற்றதான உன்னத சக்தியும்; யா—யார்; யோகமாயா—யோகமாயா எனப்படும்; அஜனி—பிறந்தாள்; நந்த-ஜாயயா—நந்த மகாராஜனின் மனைவிக்கு.
அதன்பிறகு, பரமபுருஷரால் உற்சாகப்படுத்தப்பட்ட வசுதேவர். பிரசவ அறையிலிருந்து பச்சிளங் குழந்தையை எடுத்துச் செல்லத் துனிந்த போது, அதே சமயத்தில், பகவானின் ஆன்மீகச் சக்தியின் யோகமாயை நந்த மகாராஜனின் மனைவிக்கு மகளாகப் பிறந்தாள்.
பதங்கள் 10.3.48 – 10.3.49
தயா ஹ்ருத-ப்ரத்யய-ஸர்வ-வ்ருத்திஷு
த்வா:-ஸ்தேஷு பௌரேஷ்வ் அபி சாயிதேஷ்வ் அத
த்வாரஸ் ச ஸர்வா: பிஹிதா துரத்யயா
ப்ருஹத்-கபாடாயஸ-கீல-ஸ்ருங்கலை:
தா: க்ருஷ்ண-வாஹே வஸுதேவ ஆகதே
ஸ்வயம் வ்யவர்யந்த யதா தமோ ரவே:
வவர்ஷ பர்ஜன்ய உபாம்க-கர்ஜித:
சேஷோ ‘ன்வகாத் வாரி நிவாரயன் ஃபணை:
தயா—யோகமாயையின் வசியத்தினால்; ஹ்ருத-ப்ரத்யய—எல்லா உணர்வுகளையும் இழந்தனர்; ஸர்வ-வ்ருத்திஷு—அவர்களுடைய எல்லாப் புலன்களையும்; த்வா:-ஸ்தேஷு—காவலாளிகள் அனைவரும்; பௌரேஷு அபி—மேலும் வீட்டிலுள்ள மற்ற அங்கத்தினரும்; ஸாயிதேஷு—ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்; அத—சிறைவாசத்திலிருந்த வசுதேவர் தமது தெய்வீக புதல்வரை வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற பொழுது; த்வார: ச—கதவுகளும் கூட; ஸர்வா:—அனைத்தும்; பிஹிதா:—அமைக்கப்பட்டிருந்த; துரத்யயா—மிகக் கடினமாகவும்; உறுதியாகவும்; ப்ருஹத்-கபாட—மேலும் பிரம்மாண்டமான கதவுகளில்; ஆயஸ-கீல-ஸ்ருங்கலை:—இரும்புக் கம்பிகளுடன் உறுதியாக அமைக்கப்பட்டு, இரும்புச் சங்கலிகளால் மூடப்பட்டிருந்த; தா:—அவையனைத்தும்; க்ருஷ்ண-வாஹே—கிருஷ்ணரை ஏந்தியபடி; வஸுதேவ ஆகதே—வசுதேவர் தோன்றியபொழுது; ஸ்வயம்—தானாகவே; வ்யவர்யந்த—அகலத் திறந்தன; யதா—போல்; தம:—இருள்; ரவே:—சூரியன் உதித்ததும்; வவர்ஷ—மழை பெய்தது; பர்ஜன்ய—ஆகாயத்திலுள்ள மேகங்கள்; உபாம்க-கர்ஜித:—மிகவும் மெதுவாக இடிமுழக்கம் செய்து இலேசாக மழை பொழிந்தது; சேஷ:—அனந்த நாகம்; அன்வகாத்—தொடர்ந்து; வாரி—மழை பொழிவதை; நிவாரயன்—தடுத்து: ஃபணை—அவரது படத்தை விரித்து.
யோகமாயையின் வசியத்தினால் எல்லாக் காவலர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்களது புலன்கள் செயலற்றுக் கிடந்தன. வீட்டிலிருந்த மற்றவர்களும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். சூர்யன் உதிக்கும்பொழுது இருள் தானாகவே அகன்று விடுகிறது; அது போலவே, வசுதேவர் வந்தபொழுது, இரும்புச் சங்கிலிகளாக உறுதியாக பூட்டப்பட்டு மூடிக்கிடந்த கதவுகள் தானாகவே திறந்து கொண்டன. வானத்திலுள்ள மேகங்கள் இலேசாக இடிமுழக்கம் செய்து, மழையைப் பொழிந்ததால், பரமபுருஷரின் ஓர் அம்சமான அனந்த நாகம், வசுதேவரையும், தெய்வக் குழந்தையையும் பாதுகாப்பதற்காக, தன் படத்தைக் குடைபோல் விரித்தபடி கதவுக்கருகிலிருந்து வசுதேவரைப் பின் தொடர்ந்தது.
பதம் 10.3.50
மகோனி வர்ஷதி அஸக்ருத் யமானுஜா
கம்பீர-தோயெளக-ஜவோர்மி-ஃபேனிலா
பயானகாவர்த-சதாகுலா நதீ
மார்கம் ததௌ ஸிந்துர் இவ ஸ்ரிய: பதே:
மகோனி வர்ஷ—இந்திர தேவனால் அனுப்பப்பட்ட மழையின் காரணத்தால்; அஸக்ருத்—இடையறாத; யம்-அனுஜா—யமராஜரின் தங்கையாகக் கருதப்படும் யமுனா நதி; கம்பீர-தோய-ஒக—மிகவும் ஆழமான நீரின்; ஜவ—வேகத்தால்; ஊர்மி—அலைகளால்; ஃபேனிலா—நுரைகள் நிரம்பிய; பயானக—பயங்கரமான; ஆவர்த-சத—சுழலும் அலைகளால்; ஆகுலா—அலைக்கழிக்கப்பட்ட; நதீ—நதி; மார்கம்—வழி; ததௌ—விட்டது; ஸிந்து: இவ—சமுத்திரத்தைப் போல்; ஸ்ரிய: பதே:—சீதையின் கணவரான பகவான் ராமச்சந்திரருக்கு.
இந்திர தேவனால் அனுப்பப்பட்ட இடையறாத மழையின் காரணத்தால், ஆழமான நீரினால் நிரப்பப்பட்டிருந்த யமுனை நதியில் பயங்கரமாகச் சுழலும் அலைகளுடன் நுரை பொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இந்துமகா சமுத்திரம் முன்பு பகவான் நதியும் வசுதேவர் கடந்து செல்வதற்கு வழிவிட்டது.
பதம் 10.3.51
நந்-வ்ரஜம் சௌரிர் உபேத்ய தத்ர தான்
கோபான் ப்ரஸுப்தான் உபலப்ய நித்ரயா
ஸுதம் யசோதா-சயனே நிதாய தத்-
ஸுதாம் உபாதாய புனர் க்ருஹான் அகாத்
நந்த-வ்ரஜம்—நந்த மகாராஜனின் கிராமம் அல்லது வீடு; சௌரி:—வசுதேவர்; உபேத்ய—அடைந்தபொழுது; தத்ர—அங்கு; தான்—எல்லா அங்கத்தினர்களும்; கோபான்—இடையர்களும்; ப்ரஸுப்தான்—ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்; உபலப்ய—என்பதையறிந்து; நித்ரயா—ஆழ்ந்த உறக்கத்தில்; ஸுதம்—மகன் (வசுதேவரின் மகன்); யசோதா-சயனே—தாய் யசோதை உறங்கிக் கொண்டிருந்த படுக்கை மேல்; நிதாய—வைத்து; தத்-ஸுதாம்—அவளது மகளை; உபாதாய—எடுத்துக் கொண்டு; புன:—மீண்டும்; க்ருஹான்—அவரது சொந்த வீட்டிற்கு; அகாத்—திரும்பினார்.
நந்த மகாராஜனின் வீட்டையடைந்த வசுதேவர், இடையர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டார். இவ்வாறாக தம் சொந்த மகனை யசோதையின் படுக்கை மேல் வைத்த அவர், யசோதைக்கு யோகமாயையின் அம்சமாகப் பிறந்திருந்த அவளது மகளை எடுத்துக்கொண்டு கம்சனின் சிறைக்கூடமான தம் வசிப்பிடத்திற்குத் திரும்பினார்.
பதம் 10.3.52
தேவக்யா: சயனே ன்யஸ்ய வஸுதேவோ ‘த தாரிகாம்
ப்ரதிமுச்ய பதோர் லோஹம் ஆஸ்தே பூர்வவத் ஆவ்ருத:
தேவக்யா:—தேவகியின்; சயனே—படுக்கையின் மேல்; ன்யஸ்ய—வைத்து; வஸுதேவ:—வசுதேவர்; அத—இவ்வாறு; தாரிகாம்—பெண் குழந்தையை; ப்ரதிமுச்ய—தன்னை மீண்டும் பிணைத்துக் கொண்டு; பதோ: லோஹம்—இரு கால்களிலும் இரும்புத் தளைகளைப் பிணைத்துக்கொண்டு; ஆஸ்தே—இருந்தார்; பூர்வ-வத்:—முன்பு போல்; ஆவ்ருத:—கட்டுப்பட்டிருந்தார்.
இவ்வாறாக, அப்பெண் குழந்தையை தேவகியின் படுக்கையில் வைத்த வசுதேவர், முன்போல் தம் கால்களை இரும்புச் சங்கிலிகளால் பிணைத்துக் கொண்டார்.
பதம் 10.3.53
யசோத நந்த-பத்னீ ச ஜாதம் பரம் அபுத்யத
ந தல்-லிங்கம் பரிஸ்ராந்தா நித்ரயாபகத-ஸ்ம்ருதி:
யசோத—கோகுலத்தில் கிருஷ்ணரின் தாயான யசோதை; நந்த-பத்னீ—நந்த மகாராஜனின் மனைவி; ச—தவிரவும்; ஜாதம்—ஒரு குழந்தை பிறந்தது; பரம்—பரமபுருஷர்; அபுத்யத—புரிந்து கொள்ள முடிந்தது; ந—இல்லை; தத்-லிங்கம்—பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என்பதை; பரிஸ்ராந்தா—பிரசவ வேதனையின் காரணத்தால்; நித்ரய—உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட பொழுது; அபகத-ஸ்ம்ருதி:—சுய உணர்வை இழந்து.
பிரசவ வேதனையால் மிகவும் களைப்படைந்திருந்த யசோதை சோர்வினால் உறங்கிப் போனதால், தனக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு” எனும் தலைப்பை கொண்ட மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.