அத்தியாயம் – 3
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு
பதங்கள் 10.3.1—10.3.5 :அதன் பிறகு, பகவானின் தோற்றத்திற்குரிய மங்களகரமான நேரத்தில், முழு பிரபஞ்சமும் எல்லா நற்குணங்களுடனும், அழகுடனும், அமைதியுடனும் விளங்கியது, ரோகிணி நட்சத்திரக் கூட்டம் தோன்றியது, அதுபோலவே அஸ்வினி போன்ற நட்சத்திரங்களும் தோன்றின. சூரியனும், சந்திரனும், மற்ற நட்சத்திரங்கள் கிரகங்களும் அமைதியாக இருந்தன. எல்லாத் திசைகளும் இன்பமயமாகக் காட்சியளித்தன. மேகமற்ற வானில் அழகிய நட்சத்திரங்கள் பிரகாசித்தன, நகரங்கள், கிராமங்கள், கிரங்கங்கள் மற்றும் புல்வெளிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த பூமி மங்களகரமாக காணப்பட்டது. நதிகளில் தெளிந்த நீர் ஓடியது. தாமரைகளால் நிறைந்த ஏரிகளும், தடாகங்களும் அசாதாரணமான அழகுடன் விளங்கின. பசுமையான மரங்களும், செடிகளும் கண்களுக்கு இனிமையூட்டும் மலர்களாலும், இலைகளாலும் நிறைந்திருந்தன. குயில்களைப் போன்ற பறவைகளும், தேனீக் கூட்டங்களும் தேவர்களுக்காக இனிய குரல்களில் பாடத் தொடங்கின. தேகத்திற்குச் சுகமளிப்பதும், மலர்களின் நறுமணத்தைக் கொண்டதுமான தூய காற்று வீசத் தொடங்கியது. சமயச் சடங்குகளில் ஈடுபட்டிருந்த பிராமணர்கள் வேதக் கொள்கைகளுக்கேற்ப யாகத் தீயை மூட்டிய பொழுது அது காற்றினால் அலைக்கழிக்கப்படாமல் நன்றாக எரிந்தது. இவ்வாறாக பிறப்பற்ற பரமபுருஷராகிய பகவான் விஷ்ணு தோன்றப் போகும் சமயத்தில், கம்சனையும் அவனது ஆட்களையும் போன்ற அசுரர்களால் எப்பொழுதும் துன்புறுத்ததப்பட்டு வந்த முனிவர்களும், பிராமணர்களும் தங்களுடைய இதயங்களில் அமைதி உண்டாவதை உணர்ந்தனர். அதே சமயத்தில் உயர் கிரக அமைப்புக்களிலிருந்து பேரிகைகள் முழங்கின.

பதம் 10.3.6 : கின்னரர்களும், கந்தவர்களும் மங்களகரமான பாடல்களைப் பாடத்துவங்கினார். சித்தர்களும், சாரணர்களும் மங்களகரமான துதிகளைச் செய்தனர். வித்யாதரர்கள் அப்ஸரஸ்களுடன் பெரு மகிழ்ச்சியுடன் ஆடத்துவங்கினர்.

பதங்கள் 10.3.7 – 10.3.8 : தேவர்களும், முனிவர்களும் பெருமகிழ்ச்சியுடன் மலர்களைப் பொழிந்தனர். வானத்தில் திரண்ட மேகங்கள் மிகவும் மெதுவாக இடியிடித்தன. அது கடலலைகளின் ஓசையைப் போலிருந்தது. அப்பொழுது, எல்லோருடைய இதயங்களிலும் இருப்பவரும், பரமபுருஷருமான விஷ்ணு, இருள்சூழ்ந்த நடுஇரவில், தேவகியின் இதயத்திலிருந்து தோன்றினார். தேவகியும் ஸ்ரீ கிருஷ்ணருடைய அதேபிரிவினையைச் சேர்ந்தவளாக இருந்ததால், கீழ்வானத்தில் உதயமாகும் முழு நிலவு போல் பகவான் தோன்றினார்.

பதங்கள் 10.3.9 – 10.3.10 : பிறகு, மிகவும் அற்புதமான தாமரைக் கண்களை உடையவரும், நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தியவருமான புத்திளம் குழந்தையை வசுதேவர் கண்டார். அவரது மார்பில் ஸ்ரீவத்ஸம் எனும் அடையாளம் இருந்தது. கழுத்தில் பிரகாசமான கௌஸ்துப மாலை இருந்தது. மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்த அவரது உடல், அடர்ந்த மேகத்தைப் போல் கருநிறமாக இருந்தது, அவரது கேசம் நன்கு வளர்ந்து சிதறிக் கிடந்தது. மேலும் விலையுயர்ந்த வைடூரிய மணிகளுடன் கூடிய அவரது கிரீட, குண்டலங்கள் அற்புதமாக ஜொலித்தன. இவ்வாறாக, இடைக்கச்சையுடனும், கைப்பட்டைகளுடனும், காப்புகளுடனும், வேறு பல ஆபரணங்களுடனும் அலங்கரிக்கப்பட்டிருந்த அக்குழந்தை மிகவும் அற்புதமாகத் தோன்றியது.

பதம் 10.3.11 : அசாதாரணமான தம் புதல்வரைக் கண்டதும் வசுதேவரின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. உன்னத ஆனந்தம் பொங்க அவர் மனதால் பத்தாயிரம் பசுக்களைச் சேகரித்து. ஓர் உன்னத விழாவாக, அவற்றை பிராமணர்களுக்கு தானம் செய்தார்.

பதம் 10.3.12 : பரதகுலத் தோன்றலான பரீட்சித்து மகாராஜனே, இக்குழந்தை பரமபுருஷரான நாராயணர் என்பதை வசுதேவரால் புரிந்துகொள்ள முடிந்தது, சந்தேகமின்றி இதைக் தெரிந்து கொண்ட அவர் அச்சமற்றவரானார். இவ்வாறாக, தமது இயற்கையான சுயப் பிரகாசத்தினால் பிறப்பிடத்தை ஒளிமயமாக்கிய குழந்தையின் முன் தன் கவனத்தை ஒருமுகப்படுத்திய வசுதேவர், கூப்பியக் கரங்களுடன் சிரம் தாழ்த்தி குழந்தையை துதிக்கத் துவங்கினார்.

பதம் 10.3.13 : வசுதேவர் கூறினார்: எம்பெருமானே! நீங்கள் பரமபுருஷரும், பௌதிக இருப்பிற்கு அப்பாற்பட்டவரும், பரமாத்மாவுமாவீர், எதனால் நீங்கள் பரமபுருஷரென்பதைப் புரிந்துகொள்ள முடியுமோ, அந்த உன்னத அறிவினால் உங்களுடைய ரூபத்தை உணர்ந்தறிய முடியும். இப்பொழுது உங்களுடைய நிலையை நான் பூரணமாக அறிந்து கொண்டேன்.

பதம் 10.3.14 : பகவானே, உமது சுயமான புறச் சக்தியினால், துவக்கத்தில் இந்த ஜட உலகைப் படைத்தவர் நீங்களே, முக்குணங்களால் (ஸத்வம் ரஜஸ் மற்றும் தமஸ்) ஆன இவ்வுலகைப் படைத்தபின், உண்மையில் அதற்குள் புகாத நீங்கள், புகுந்ததுபோல் காணப்படுகிறீர்கள்.

பதங்கள் 10.3.15 – 10.3.17 : மொத்த பௌதிக சக்தியான மஹத்-தத்வம் பிளவுபடாததாகும். ஆனால் ஜட இயற்கைக் குணங்களின் காரணத்தால், அது மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயமாகப் பிரிக்கப்படுவது போல் காணப்படுகிறது, ஜீவ சக்தியின் (ஜீவ-பூத) காரணத்தால், பிரிக்கப்பட்ட இச்சக்திகள் இணைந்து, பிரபஞ்சத் தோற்றத்தை கண்களுக்கு புலப்படச் செய்கின்றன. ஆனால் உண்மையில், பிரபஞ்ச சிருஷ்டிக்கு முன்பே, மொத்த சக்தி இருந்து வந்துள்ளது. எனவே, மொத்த பௌதிக சக்தியானது உண்மையில் சிருஷ்டிக்குள் புகுவதேயில்லை. அதுபோலவே உங்களுடைய இருப்பின் காரணத்தால், எங்களது புலன்களால் உங்களை உணர முடிகிறது என்றாலும், உண்மையில் அப்புலன்களால் உங்களை உணர முடியாது. மனதாலும், வார்த்தைகளாலும் அவற்றை அனுபவிக்கவும் முடியாது (அவாந்-மானஸு-கோசர). நம் புலன்களால் சில பொருட்களை மட்டுமே உணர்ந்தறிய முடியும், அனைத்தையும் அல்ல; உதாரணமாக, கண்களை நாம் காண்பதற்கு உபயோகிக்கலாம், சுவைப்பதற்கல்ல. இதனால், நீங்கள் புலன் உணர்வுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறீர்கள். ஜட இயற்கைக் குணங்களுடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும், அவற்றினால் நீங்கள் பாதிக்கப்படுவதில்லை. நீங்கள் அனைத்திலும்முள்ள முக்கியக் காரணமாகவும், சர்வவியாபகம் உடையவராகவும். பிளவுபடாத பரமாத்மாவாகவும் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு உள்ளும், புறமும் இல்லை. தேவகியின கர்ப்பத்திற்குள் நீங்கள் புகவில்லை. மாறாக முன்பே அங்கு நீங்கள் இருந்திருக்கிறீர்கள்.

பதம் 10.3.18 : கண்களுக்குப் புலப்படுவதும், இயற்கையின் முக்குணங்களால் ஆனதுமான தன்னுடைய உடல், ஆத்மாவின் உதவியின்றி செயற்படுகிறதென்று கருதுபவன் வாழ்வின் அடிப்படையை அறியாதவனும், அறிவற்ற மூடனுமாவான். கற்றோர் அவனது முடிவைத் தள்ளிவிடுகின்றனர். ஏனெனில், ஆத்மாவின் இருப்பு இல்லாமல், கண்ணுக்குப் புலப்படும் உடலும், புலன்களும் இருக்க முடியாது என்பதை ஆராய்ச்சியின் மூலமாகப் புரிந்துகொள்ள முடியும். ஒரு முட்டாள் மனிதனின் முடிவு நிராகரிக்கப்பட்ட போதிலும், அதையே உண்மையென்று அவன் கருதுகிறான்.

பதம் 10.3.19 : எம்பெருமானே, ஜட இயற்கைக் குணங்களால் பாதிப்படையாதவரும், பிரயத்தனம் செய்யும் அவசியம் இல்லாதவரும், ஆன்மீக நிலையில் மாற்றமில்லாதவருமான உங்களால்தான், மொத்த பிரபஞ்சத் தோற்றத்தின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன என்று வேத வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர். பரமபுருஷரும், பரப்பிரம்மனுமான உங்களுக்குள் எவ்வித முரண்பாடும் இல்லை. சத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதால், அனைத்தும் தானாகவே நிகழ்கின்றன.

பதம் 10.3.20 : பகவானே, உங்களுடைய ரூபம் முக்குணங்களுக்கும் மேற்பட்டதாகும், இருப்பினும், மூவுலகங்களையும் காப்பதற்காக நீங்கள் சாத்வீக நிலையிலுள்ள விஷ்ணுவின் வெண்மையான நிறத்தை ஏற்கிறீர்கள்; ரஜோ குணத்தால் சூழப்பட்டுள்ள சிருஷ்டிக்காக நீங்கள் சிவந்த நிறத்தில் தோன்றுகிறீர்கள்; முடிவில், அறியாமையால் சூழப்பட்டுள்ள அழிவு தேவைப்படும்பொழுது, நீங்கள் கருமையான நிறத்தில் தோன்றுகிறீர்கள்.

பதம் 10.3.21 : எம்பெருமானே, சிருஷ்டி முழுமைக்கும் உரிமையாளரே, இவ்வுலகைப் பாதுகாக்கும் விருப்பத்துடன். நீங்கள் இப்பொழுது என் வீட்டில் தோன்றியிருக்கிறீர்கள். உண்மையில் க்ஷத்திரிய அரசர்களின் போர்வையில் அசுரர்களாக உள்ள அரசியல்வாதிகளின் தலைமையில், உலகம் முழுவதிலும் நடமாடிக்கொண்டிருக்கும் எல்லாச் சேனைகளையும் நீங்கள் கொன்று குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். குற்றமற்ற பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் கொல்லப்பட வேண்டும்.

பதம் 10.3.22 : எம்பெருமானே, தேவர்களின் இறைவனே. அசரீரி வாக்குப்படி, தாங்கள் எங்கள் வீட்டில் பிறந்து, கம்சனைக் கொன்றுவிடுவீர்கள் என்ற அசரீரியைக் கேட்டு காட்டுமிராண்டியான இந்த கம்சன், உங்களுடைய பல மூத்த சகோதரர்களைக் கொன்று விட்டான். நீங்கள் தோன்றியிருப்பதைப் பற்றி தன் சிறைக் காவலாளியிடமிருந்து கேள்விப்பட்டதும், அவன் உங்களைக் கொல்ல ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உடனே இங்கு வருவான்.

பதம் 10.3.23 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அதன் பிறகு கம்சனுக்கு மிகவும் அஞ்சிய தேவகி, தன் குழந்தையிடம் பரமபுருஷருக்குரிய எல்லா அறிகுறிகளையும் கண்டு, வழக்கத்திற்கு மாறாக ஆச்சரியமடைந்து, பகவானைத் துதிக்கத் துவங்கினார்.

பதம் 10.3.24 : ஸ்ரீ தேவகி கூறினாள்; எம்பெருமானே, வெவ்வேறு வேதங்கள் உள்ளன. அவற்றுள் சில, மனதாலும் வார்த்தைகளாலும் உங்களை அறிய முடியாதென்று விவரிக்கின்றன. இருப்பினும் முழு பிரபஞ்ச தோற்றத்திற்கும் நீங்கள்தான் மூலம் நீங்கள் அனைத்திலும் மிகச் சிறந்ததும், சூரியனைப் போல் பிரகாசம் நிறைந்ததுமான பிரம்மனாவீர். உங்களுக்கு பௌதிகக் காரணம் இல்லை. நீங்கள் மாற்றமில்லாதவர். உங்களுக்குப் பௌதிக ஆசைகள் இல்லை. இவ்வாறாக நீங்களே கருப்பொருள் என்று வேதங்கள் கூறுகின்றன. எனவே எம்பெருமானே, எல்லா வேத வாக்கியங்களுக்கும் மூலம் நீங்களே, உங்களை அறிவதால், படிப்படியாக அனைத்தையும் ஒருவன் அறிந்தவனாகிறான். நீங்கள் பிரம்ம ஜோதியிலிருந்தும், பரமாத்மாவிலிருந்தும் வேறுபட்டிருக்கிறீர்கள், அதேசமயம் வேறுபடாதவராகவும் இருக்கிறீர்கள். அனைத்தும் உங்களிடமிருந்துதான் தோன்றுகின்றன. உண்மையில், எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமாகவும், உன்னத அறிவிற்கெல்லாம் ஒளி விளக்காகவும் விளங்கும் நீங்கள் பகவான் விஷ்ணுவாவீர்.

பதம் 10.3.25 : கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, தோன்றியவை தோன்றாதவை முதலான அனைத்தும் எப்பொழுது காலத்தின் வேகத்தினால் அழிக்கப்படுகின்றனவோ, அந்த பிரபஞ்ச அழிவின் போது, ஸ்தூலமான ஜந்து மூலப்பொருட்கள் சூட்சுமமான எண்ணத்தில் (மனதில்) புகுகின்றன. தோன்றியவை தோன்றாதவற்றுள் புகுகின்றன. அச்சமயத்தில் அனந்த சேஷநாகம் எனப்படும் நீங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறீர்கள்.

பதம் 10.3.26 : ஜட சக்தியை முடுக்கி விடுபவரே, இந்த அற்புத சிருஷ்டியானது, வினாடிகளாகவும் நிமிடங்களாகவும், மணிகளாகவும், ஆண்டுகளாகவும் வகுக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த காலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகிறது, பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக விரிவடையும் காலமெனும் இந்த மூலப்பொருள், பகவான் விஷ்ணுவின் மற்றொரு வடிவமாகும். லீலைகள் புரியும் பொருட்டு, காலத்தை ஆள்பவராக நீங்கள் செயற்படுகிறீர்கள். ஆனால், நல்லதிர்ஷ்ட்டங்களுக்கெல்லாம் பிறப்பிடம் நீரே, பகவானாகிய தங்களிடம் நான் பூரண சரணாகதியடைகிறேன்.

பதம் 10.3.27 : இந்த இட உலகிலுள்ள ஒருவன் வேறு கிரகங்களுக்கு ஓட்டம் பிடிப்பதால்கூட, பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோய் ஆகியவற்றிலிருந்து விடுபட்டதில்லை. பகவானே. இப்பொழுது நீங்கள் தோன்றியிருப்பதால், மரணம் உங்களைக் கண்டு அஞ்சியோடுகிறது, உங்களுடைய கருணையால், உங்களது தாமரைப் பாதங்களைப் புகலிடம் கொண்ட ஜீவராசிகள் முழு மன அமைதியுடன் உறங்குகின்றன.

பதம் 10.3.28 : எம்பெருமானே, உங்களுடைய பக்தர்களின் பயத்தையெல்லாம் நீங்கள் அழிப்பவர் என்பதால், கம்சனிடமுள்ள கோரமான பயத்திலிருந்து எங்களைக் காத்தருள வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன். பகவான் விஷ்ணுவாக உள்ள உங்களுடைய ரூபத்தின் மகிமையை யோகிகள் தியானத்தின் மூலமாக நன்கு உணர்ந்துள்ளனர். பௌதிகத் கண்களுடன் காண்பவர்களுக்கு இந்த ரூபத்தைக் காட்டவேண்டாமென்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

பதம் 10.3.29 : ஓ மதுசூதனா, உங்களுடைய தோற்றத்தின் காரணத்தால் கம்சனிடம் உள்ள என் பயம் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே தயவுகூர்ந்து என் கர்ப்பத்தில் நீங்கள் பிறந்திருப்பதை, பாவியான அந்தக் கம்சனால் புரிந்துகொள்ள முடியாதபடி செய்து விடுங்கள்.

பதம் 10.3.30 : எம்பெருமானே, நீங்கள் எங்கும் பரவியுள்ள பரமபுருஷராவீர். சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரையை ஏந்தியுள்ள, நான்கு கரங்களுடைய உங்களது உன்னத ரூபம் இவ்வுலக இயற்கைக்கு ஒவ்வாததாகும். தயவுகூர்ந்து இந்த ரூபத்தை மறைத்துக் கொள்ளுங்கள் (இயற்கையான ஒரு மனிதக் குழந்தையைப் போல் மாறிவிடுங்கள். இதனால் உங்களை எங்காவது ஒளித்து வைத்துவிட என்னால் இயலும்).

பதம் 10.3.31 : அழிவுக்காலத்தில், அசையும், அசையாத ஜீவன்களைக் கொண்ட முழு பிரபஞ்சமும் உங்களுடைய உன்னத உடலுக்குள் புகுந்து, சிரமமின்றி அங்கேயே வைக்கப்படுகிறது. இப்பொழுது இந்த உன்னத ரூபம் என் கர்ப்பத்திலிருந்து பிறந்துள்ளது. மக்களால் இதை நம்பமுடியாது நானும் கேலிக்குரிய ஒரு பொருளாவேன்.

பதம் 10.3.32 : பரமபுருஷர் பதிலளித்தார்: கற்புக்கரசியான என்னருமைத் தாயே, உங்களுடைய முற்பிறவியில், சுயம்புவ யுகத்தில், நீங்கள் பிருஸ்னி என்று அழைக்கப்பட்டீர்கள். பெரும் புண்ணியம் செய்த பிரஜாபதியாக இருந்த வசுதேவர் சுதபா என்று அழைக்கப்பட்டார்.

பதம் 10.3.33 : வம்ச உற்பத்தியைச் செய்யும்படி பிரம்மதேவரால் உத்தரவிடப்பட்ட நீங்களிருவரும் முதலில் புலன்களை அடக்கிக் கடுந்தவங்களை மேற் கொண்டீர்கள்.

பதங்கள் 10.3.34 – 10.3.35 : எனதன்புள்ள தாய், தந்தையரே, நீங்கள் வெவ்வேறு பருவ காலங்களுக்கேற்ப, எல்லா வகையான துன்பங்களுக்கும் உள்ளாகி, மழையையும், காற்றையும், கடும் உஷ்ணத்தையும், கடுங்குளிரையும் சகித்துக் கொண்டீர்கள். யோகத்தின் வாயிலாக உடலினுள் உள்ள காற்றைக் கட்டுப்படுத்த பிராணாயாமத்தைப் பயின்றும், காற்றையும், மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகளையும் மட்டுமே உண்டும், மன அழுக்குகளையெல்லாம் நீங்கள் தூய்மைப்படுத்திக் கொண்டீர்கள்.

பதம் 10.3.36 : இவ்விதமாக என் சிந்தனையுடன் (கிருஷ்ண உணர்வுடன்). பன்னிரண்டாயிரம் தேவ ஆண்டுகளை நீங்கள் கடுந்தவத்தில் கழித்தீர்கள்.

பதங்கள் 10.3.37 – 10.3.38 : குற்றமற்ற தாய் தேவகியே, இதயத்தில் பெரும் நம்பிக்கையுடனும், பக்தியுடனும், தவத்துடனும், பன்னிரண்டாயிரம் தேவ ஆண்டுகளுக்கு என்னுடைய ஆழ்ந்த சிந்தனையில் நீங்கள் இடையறாது ஈடுபட்டிருந்தீர்கள். இதனால் உங்களிடம் நான் மிகவும் திருட்தியடைத்தேன். வரமளிப்பவருள் நான் வரதராஜன் என்பதால், விரும்பிய வரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி உங்களைக் கேட்டுக்கொள்வதற்காக, இதே உருவில் கிருஷ்ணராக நான் தோன்றினேன். நீங்களும் பிறகு, என்னைப் போலவே, ஒரு மகன் வேண்டுமென்ற உங்களது விருப்பத்தைக் கூறினீர்கள்.

பதம் 10.3.39 : கணவன், மனைவியான நீங்களிருவரும், மகனில்லாத காரணத்தால் பாலுறவு ஆசைகளால் கவரப்பட்டு, உன்னத அன்பாகிய தேவ மாயையின் உந்துதலால், என்னையே உங்கள் மகனாகப் பெற விரும்பினீர்கள். எனவே இந்த ஜட உலகிலிருந்து முக்தி பெறுவதை நீங்கள் விரும்பவில்லை

பதம் 10.3.40 : அந்த வரத்தை நீங்கள் பெற்றுக்கொண்ட பிறகு நான் மறைந்ததும். என்னைப் போன்ற ஒரு மகனைப் பெற நீங்கள் சிற்றின்பத்தில் ஈடுபட்டீர்கள். நானும் உங்களுடைய விருப்பதை நிறைவேற்றினேன்.

பதம் 10.3.41 : எளிமையிலும், பிற நற்குணங்களிலும் உங்களைப்போல் மிகவுயர்ந்த நிலையிலுள்ள வேறெவரையும் நான் காணவில்லை, எனவே பிருஸ்னிகர்பனாக, அதாவது, பிருஸ்னியிலிருந்து பிறந்தவன் என்று புகழப்படுபவனாக இவ்வுலகில் நான் தோன்றினேன்.

பதம் 10.3.42 : அடுத்த யுகத்தில், முறையில் அதிதி, கசியபர் எனும் பெயர்களுடன் என் தாய் தந்தையராகத் தோன்றிய உங்களிடமிருந்து மீண்டும் நான் தோன்றினேன். உபேந்திரன் என்றழைக்கப்பட்ட நான் குள்ளனாக இருந்ததால், வாமனன் என்றும் அறியப்பட்டேன்.

பதம் 10.3.43 : கற்புக்கரசியான தாயே. அதே நபரான நான், இப்பொழுது மூன்றாவது தடவையாக உங்களிருவருக்கும் மகனாகத் தோன்றியிருக்கிறேன். என் வார்த்தைகளை உண்மையென ஏற்றுக் கொள்ளுங்கள்.

பதம் 10.3.44 : என்னுடைய முற்பிறப்புகளை உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காகவே இந்த விஷ்ணு ரூபத்தை உங்களுக்கு நான் காட்டினேன். இல்லையெனில் நான் ஒரு சாதாரண மனிதக் குழந்தையைப் போல் தோன்றியிருந்தால், பரமபுருஷரான விஷ்ணு தோன்றியிருப்பதை நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள்.

பதம் 10.3.45 : கணவன், மனைவியான நீங்களிருவரும், என்னை உங்கள் மகனென்று இடையறாது நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் பரமபுருஷர் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அன்புடனும் பாசத்துடனும் இடையறாது என்னைப் பற்றி சிந்திப்பதால், பரமபதத்தை அடைவதெனும் மிகவுயர்ந்த பூரணத்துவத்தை நீங்கள் பெறுவீர்கள்.

பதம் 10.3.46 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார். இவ்வாறாக தம் தாய் தந்தையருக்கு உபதேசித்தபின், பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் மௌனமானார். பிறகு அவர்களது முன்னிலையிலேயே, தமது அந்தரங்க சக்தியின் மூலமாக, தம்மை ஒரு மனிதக் குழந்தையாக அவர் மாற்றிக் கொண்டார். (அதாவது, தமது சுய ரூபத்திற்கு தம்மை அவர் மாற்றிக் கொண்டார்: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம்).

பதம் 10.3.47 : அதன்பிறகு, பரமபுருஷரால் உற்சாகப்படுத்தப்பட்ட வசுதேவர். பிரசவ அறையிலிருந்து பச்சிளங் குழந்தையை எடுத்துச் செல்லத் துனிந்த போது, அதே சமயத்தில், பகவானின் ஆன்மீகச் சக்தியின் யோகமாயை நந்த மகாராஜனின் மனைவிக்கு மகளாகப் பிறந்தாள்.

பதங்கள் 10.3.48 – 10.3.49 : யோகமாயையின் வசியத்தினால் எல்லாக் காவலர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்களது புலன்கள் செயலற்றுக் கிடந்தன. வீட்டிலிருந்த மற்றவர்களும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். சூர்யன் உதிக்கும்பொழுது இருள் தானாகவே அகன்று விடுகிறது; அது போலவே, வசுதேவர் வந்தபொழுது, இரும்புச் சங்கிலிகளாக உறுதியாக பூட்டப்பட்டு மூடிக்கிடந்த கதவுகள் தானாகவே திறந்து கொண்டன. வானத்திலுள்ள மேகங்கள் இலேசாக இடிமுழக்கம் செய்து, மழையைப் பொழிந்ததால், பரமபுருஷரின் ஓர் அம்சமான அனந்த நாகம், வசுதேவரையும், தெய்வக் குழந்தையையும் பாதுகாப்பதற்காக, தன் படத்தைக் குடைபோல் விரித்தபடி கதவுக்கருகிலிருந்து வசுதேவரைப் பின் தொடர்ந்தது.

பதம் 10.3.50 : இந்திர தேவனால் அனுப்பப்பட்ட இடையறாத மழையின் காரணத்தால், ஆழமான நீரினால் நிரப்பப்பட்டிருந்த யமுனை நதியில் பயங்கரமாகச் சுழலும் அலைகளுடன் நுரை பொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இந்துமகா சமுத்திரம் முன்பு பகவான் நதியும் வசுதேவர் கடந்து செல்வதற்கு வழிவிட்டது.

பதம் 10.3.51 : நந்த மகாராஜனின் வீட்டையடைந்த வசுதேவர், இடையர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டார். இவ்வாறாக தம் சொந்த மகனை யசோதையின் படுக்கை மேல் வைத்த அவர், யசோதைக்கு யோகமாயையின் அம்சமாகப் பிறந்திருந்த அவளது மகளை எடுத்துக்கொண்டு கம்சனின் சிறைக்கூடமான தம் வசிப்பிடத்திற்குத் திரும்பினார்.

பதம் 10.3.52 : இவ்வாறாக, அப்பெண் குழந்தையை தேவகியின் படுக்கையில் வைத்த வசுதேவர், முன்போல் தம் கால்களை இரும்புச் சங்கிலிகளால் பிணைத்துக் கொண்டார்.

பதம் 10.3.53 : பிரசவ வேதனையால் மிகவும் களைப்படைந்திருந்த யசோதை சோர்வினால் உறங்கிப் போனதால், தனக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare