அத்தியாயம் – 1
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தோற்றம்:
அறிமுகம்
பதம் 10.1.1
ஸ்ரீ-ராஜா உவாச
கதிதோ வம்ச-விஸ்தாரோ பவதா ஸோம-ஸூர்யயோ:
ராஜ்ஞாம் சோபய-வம்ஸ்யானாம் சரிதம் பரமாத்புதம்
ஸ்ரீராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் கூறினார்; கதித:—முன்பே விவரிக்கப்பட்டு விட்டது; வம்ச-விஸ்தார:—வம்சங்களைப் பற்றிய ஒரு விவரமான விளக்கம்; பவதா—பிரபுவான தங்களால்; ஸோம-ஸூர்யயோ:—சந்திர, சூரியர்களின்; ராஜ்ஞாம்—அரசர்களின்; ச—மேலும்; உபய—இரண்டும்; வம்ஸ்யானாம்—வம்சங்களைச் சேர்ந்த அங்கத்தினர்களின்; சரிதம்—நல்லொழுக்கம்; பரம—மிகச்சிறந்த; அத்புதம்—மற்றும் அற்புதமான.
பரீட்சித்து மகாராஜன் கூறினார்: ‘பிரபுவே, சந்திர, சூரிய வம்சங்களைப் பற்றியும், அற்புதமான உயர்ந்த நல்லொழுக்கமுடைய அவற்றின் அரசர்களைப் பற்றியும் முன்பே தாங்கள் விவரமாக விளக்கினீர்கள்.’
பதம் 10.1.2
யதோஸ் ச தர்ம-சீலஸ்ய நிதராம் முனி-ஸத்தம
தத்ராம்சேனாவதீர்ணஸ்ய விஷ்ணோர் வீர்யாணி சம்ஸ ந:
யதோ—யதுக்களின் அல்லது யது வம்சத்தின்; ச—கூட; தர்ம-சீலஸ்ய—தர்ம சீலர்களான; நிதராம்—உயர்ந்த தகுதியுள்ள; முனி-ஸத்தம—முனி சிரேஷ்டரே (சுகதேவ கோஸ்வாமி); தத்ர—அந்த வம்சத்தில்; அம்சேன—அவரது அம்சமான பலதேவருடன்; அவதீர்ணஸ்ய—ஓர் அவதாரமாகத் தோன்றி; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; வீர்யாணி—புகழுக்குரிய செயல்கள்; சம்ஸ—தயவுசெய்து விவரிக்க வேண்டுகிறேன்; ந:—எங்களுக்கு.
முனிசிரேஷ்டரே, சிறந்த புண்ணியவான்களும், தர்ம சீலர்களுமான யது-வம்சத்தினரைப் பற்றியும் தாங்கள் விவரித்தீர்கள். இப்பொழுது தாங்கள் விரும்பினால், அந்த யது-வம்சத்தில், தமது அம்சமான பல தேவருடன் தோன்றிய பகவான் விஷ்ணுவின் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைவாய்ந்த செயல்களை அன்புடன் விவரிக்க வேண்டுகிறேன்.
பதம் 10.1.3
அவதீர்ய யதோர் வம்சே பகவான் பூத-பாவன:
க்ருதவான் யானி விஸ்வாத்மா தானி நோ வத விஸ்தராத்
அவதீர்ய—அவதரித்தபின்; யதோ: வம்சே—யது வம்சத்தில்; பகவான்—பரமபுருஷர்; பூத-பாவன:—பிரபஞ்சத்தோற்றத்திற்குக் காரணமானவர்; க்ருதவால்—நிறைவேற்றினாரோ; யானி—எதையெல்லாம் (செயல்கள்); விஸ்வ-ஆத்மா—முழு பிரபஞ்சத்தின் பரமாத்மா; தானி—அவ்வெல்லா (செயல்கள்); ந—எங்களுக்கு; வத—அன்புடன் கூறியருளுங்கள்; விஸ்தராத்—விவரமாக.
பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமான பரமாத்மாவும், பரமபுருஷருமான ஸ்ரீ கிருஷ்ணர், யது—வம்சத்தில் தோன்றினார். அவரது வாழ்வின் துவக்கத்திலிருந்து முடிவுரையுள்ள அவருடைய பெருமைக்குரிய செயல்களைப் பற்றியும், குணத்தைப் பற்றியும் தயவுகூர்ந்து விவரமாக எனக்குக் கூறியருளுங்கள்.
பதம் 10.1.4
நிவ்ருத்த-தர்ஷைர் உபகீயமானாத்
பவெளஷதாச் ச்ரோத்ர-மனோ-‘பிராமாத்
க உத்தமஸ்லோக-குணானுவாதாத்
புமான் விரஜ்யேத வினா பகக்னாத்
நிவ்ருத்த—அதிலிருந்து விடுவிக்கப்பட்ட; தர்ஷை:—காமம் அல்லது பௌதிக செயல்கள்; உபகீயமானாத்—விவரிக்கப்படுவது அல்லது பாடப்படுவது; பவ-ஔஷதாத்—அதுதான் பௌதிக நோய்களுக்குரிய சரியான மருந்து; ஸ்ரோத்ர—காதால் கேட்கும் முறை; மன:—மனதால் சிந்திக்கப்படுவதற்குரிய விஷயம்; அபிராமாத்—அத்தகைய புகழ்மாலையின் இனிய ஓசையிலிருந்து; க:—யார்; உத்தமஸ்லோக—பரமபுருஷரின்; குண-அனுவாதாத்—இத்தகைய செயல்களை விவரிப்பதிலிருந்து; புமான்—ஒரு நபர்; விரஜ்யேத—விலகி நிற்கமுடியும்; வினா—தவிர; பக-க்னாத்—கசாப்புக்காரன அல்லது தனது சொந்த இருப்பையே கொல்பவன்.
பரமபுருஷரைத் துதிப்பதானது பரம்பரை முறையில் செய்யப்படுகிறது. அதாவது அது ஆன்மீக குருவால் சீடனுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. இவ்வாறு துதித்துப் போற்றும் முறையானது, ஜடப் பிரபஞ்சத்தில் பொய்யான, நிலையற்ற புகழ்ச்சி முறையைக் கைவிட்டவர்களால் சுவைத்து அனுபவிக்கப்படுகிறது. பிறவிச் சக்கரத்தில் உழன்று கொண்டிருக்கும் பந்தப்பட்ட ஆத்மாவிற்கு, பகவானைப் பற்றிய வர்ணணைதான் சரியான மருந்தாகும். எனவே, கசாப்புக்காரனைத் தவிர, அதாவது தன் ஆத்மாவையே கொல்பவனைத் தவிர வேறு யார், பகவானின் மேன்மைகளைக் கேட்பதை நிறுத்துவான்?
பதங்கள் 10.1.5 — 10.1.7
பிதாமஹா மே ஸமரே ‘மரஞ்ஜயைர்
தேவவ்ரதாத்யாதிரதைஸ் திமிங்கிலை:
துரத்யயம் கௌரவ-ஸைன்ய-ஸாகரம்
க்ருத்வாதரன் வத்ஸ-பதம் ஸ்ம யத்-ப்லவா:
த்ரௌணி-அஸ்த்ர-விப்லுஷ்டம் இதம் மத்-அங்கம்
ஸ்ந்தான-பீஜம் குரு-பாண்டவானாம்
ஜுகோப குக்ஷிம் கத ஆத்த-சக்ரோ
மாதுஸ் ச மே ய சரணம் கதாயா:
வீர்யாணி தஸ்யாகில-தேஹ-பாஜாம்
அந்தர் பஹி: பூருஷ-கால-ரூபை:
ப்ரயச்சதோ ம்ருத்யும் உதாம்ருதம் ச
மாயா-மனுஷ்யஸ்ய வதஸ்வ வித்வன்
பிதாமஹா:—என் பாட்டனார்களான பஞ்ச பாண்டவர்கள் (யுதிஷ்டிரா, பீமன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சஹாதேவன்); மே—எனது; ஸமரே—குருட்சேத்திரப் போர்களத்தில்; அமரம்-ஜயை:—போர்க்களத்தில் தேவர்களையும் வெல்லக்கூடிய வீரர்களுடன்; தேவவ்ரத-ஆத்ய—பீஷ்மதேவரும், பிறரும்; அதிரதை:—சிறந்த சேனாதிபதிகள்; திமிங்கிளை:—பெரிய சுறா மீன்களையும் சுலபமா விழுங்கிவிடும் பெரிய திமிங்கிலத்தை ஒத்த; துரத்யயம்—கடக்க மிகக்கடினமான; கௌரவ-ஸைன்ய-ஸாகரம்:—கடல்போல் திரண்டுள்ள கௌரவ வீரர்கள்; க்ருத்வா—இத்தகைய ஒரு சமுத்திரத்தை கருத்திற்கொண்டு; அதரன்—அதைக் கடந்தனர்; வத்ஸ-பதம்—ஒரு கன்றின் சிறிய குளம்படியைத் தாண்டுவது போல்; ஸ்ம—கடந்த காலத்தில்; யத்-ப்லவா:—கிருஷ்ணருடைய தாமரைப் பாதங்களாகிய படகு போன்ற புகலிடம்; த்ரௌணி—அஸ்வத்தாமனின்; அஸ்திர—பிரம்மாஸ்திரத்தால்; விப்லுஷ்டம்—தாக்தி, எரிக்கப்பட்டு; இதம்—இந்த; மத்-அங்கம்—என்னுடல்; ஸந்தான-பீஜம்—எஞ்சியிருந்த ஒரே வித்து, குடும்பத்தின் கடைசி வாரிசு; குரு-பாண்டவானாம்—(குருட்சேத்திர யுத்தத்திற்குப் பின் என்னைத் தவிர வேறொருவரும் உயிர் வாழாததால்) குருக்கள் மற்றும் பாண்டவர்களின்; ஜுகோப—பாதுகாப்பு அளித்தார்; குக்ஷிம்—கருப்பைக்குள்; கத:—வைக்கப்பட்டதால்; ஆத்த-சக்ர:—சக்கரத்தைக் கையிலேந்தியபடி; மாது:—என் தாயின்; ச—மேலும்; மே—எனது; ய:—பகவான்; சரணம்—புகலிடம்; காதாய:—ஏற்றவர்; வீர்யாணி—உன்னத இயல்புகளின் புகழை; தஸ்ய—அவரின் (பரமபுருஷரின்); அகில-தேஹ-பாஜாம்—பௌதிக உடல் பெற்ற எல்லா ஜீவராசிகளின்; அந்த: பஹி:—உள்ளும், புறமும்; பூருஷ—பரம புருஷரின்; கால-ருபை:—நித்திய காலத்தின் ரூபத்தில்; ப்ரயச்சத:—கொடுப்பவராக இருப்பவர்; ம்ருத்யும்—மரணத்தின்; உத—இது அவ்வாறு கூறப்படுகிறது; அம்ருதம் ச—மற்றும் நித்திய வாழ்வு; மாயா-மனுஷ் யஸ்ய—தமது சுய சக்தியினால் ஒரு சாதாரண மனிதனைப் போல் தோன்றிய பகவானின்; வதஸ்ய—அன்புடன் விவரிக்க வேண்டுகிறேன்; வித்வன்—கற்றறிந்த பேச்சாளரே (சுகதேவ கோஸ்வாமியே).
ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களெனும் படகை ஏற்றதால், என் பாட்டனாரான அர்ஜுனனும், மற்றவர்களும் தங்களை மிகவும் சுலபமாக விழுங்கியிருக்கக்கூடிய பெரிய திமிங்கிலங்களை ஒத்த பீஷ்மதேவர் முதலான சேனாதிபதிகள் பங்கேற்ற குருசேத்திரப் போர்க்களமெனும் சமுத்திரத்தைக் கடந்தனர். பகவானின் கருணையால் கடப்பதற்கரிய இப்பெரும் சமுத்திரத்தை என் பாட்டனார்கள், ஒரு கன்றின் குளம்படியை ஒருவர் சுலபமாகத் தாண்டிவிடுவதுபோல் எளிதில் கடந்துவிட்டனர். என் தாய் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சரணடைந்ததால், சுதர்சனச் சக்கரத்தைக் கையிலேந்திய பகவான், அவளது கருப்பைக்குள் புகுந்தார். பிறகு அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிடும் நிலையிலிருந்ததும், குருக்கள் மற்றும் பாண்டவர்களுடைய வம்சத்தில் எஞ்சியிருந்த சந்ததியின் கடைசி உடலாக இருந்ததுமான என்னுடலை அவர் காப்பாற்றினார். பகவான் நித்திய காலத்தின் வடிவில், தமது சுயசக்தியின் மூலமாக, பரமமாத்வாகவும், விராட்ரூபமாகவும், பௌதிக உடல் பெற்ற எல்லா ஜீவராசிகளின் உள்ளும், புறமும் தோன்றுகிறார். அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இரக்கமற்ற மரணத்தின் வடிவில் அல்லது வாழ்வின் வடிவில் அனைவருக்கும் முக்தியளித்தார். தயவுகூர்ந்து அவரது உன்னத இயல்புகளை எடுத்துக்கூறி அன்புடன் எனக்கு ஞானோபதேசம் செய்யுங்கள்.
பதம் 10.1.8
ரோஹிண்யாஸ் தனய: ப்ரோக்தோ ராம: ஸங்கர்ஷணஸ் த்வயா
தேவக்யா கர்ப-ஸம்பந்த: குதோ தேஹாந்தரம் வினா
ரேஹிண்யா:—பலதேவரின் தாயான ரோஹிணி தேவியின்; தனய:—புதல்வர்; ப்ரோக்த:—என்று பிரபலமானவர்; ராம:—பலராமர்; ஸங்கர்ஷண:—பலராமர், சதுரங்க மூர்த்திகளில் (சங்கர்ஷணர், அநிருத்தர், பிரதியும்னர் மற்றும் வாசுதேவர் ஆகியோரில்) முதல் மூர்த்தியாவார்; த்வயா—உங்களால் (கூறப்படுகிறது); தேவக்யா:—கிருஷ்ணரின் தாயான தேவகியின்; கர்ப-ஸம்பந்த:—கர்பத்துடன் தொடர்புடைய; குத:—எப்படி; தேஹ-அந்தரம்—உடல்களை மாற்றும்; வினா—இல்லாமல்.
அன்பிற்குரிய சுகதேவ கோஸ்வாமியே, இரண்டாவது சதுரங்கத்தைச் சேர்ந்த சங்கர்ஷணர், பலராமர் என்ற பெயருடன் ரோகிணியின் புதல்வராகத் தோன்றினார் என்று முன்பே நீங்கள் விளக்கினீர்கள். பலராமர் ஓருடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாற்றப்படவில்லை என்றால், முதலில் அவர் தேவகியின் கர்ப்பத்திலிருந்து, பிறகு ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப்பட்டது எப்படி சாத்தியமாயிற்று? தயவுகூர்ந்து இதை விளக்க வேண்டுகிறேன்
பதம் 10.1.9
கஸ்மான் முகுந்தோ பகவான் பிதுர் கேஹாத் வ்ரஜம் கத:
க்வ வாஸம் ஞாதிபி: ஸார்தம் க்ருதவான் ஸாத்வதாம் பதி:
கஸ்மாத்—ஏன்; முகுந்த:—எவருக்கும் முக்தியளிக்க கூடியவரான கிருஷ்ணர்; பகவான்—பரமபுருஷர்; பிது:—அவரது தந்தையின் (வசுதேவரின்); கேஹாத்—வீட்டிலிருந்து; வ்ரஜம்—விரஜபூமிக்கு; கத:—சென்றார்; க்வ—எங்கு; வாஸம்—வசிக்க; ஞாதிபி:—அவரது உறவினர்கள்; ஸார்தம்—உடல்; க்ருதவான்—அவ்வாறு செய்தார்; ஸாத்வதாம் பதி:—வைஷ்ணவ பக்தர்களின் பிரபு.
பரமபுருஷரான கிருஷ்ணர் ஏன் தமது தந்தையான வசுதேவரின் வீட்டிலிருந்து பிருந்தாவனத்திலுள்ள நந்த மகாராஜனின் வீட்டிற்குத் தம்மை மாற்றிக் கொண்டார்? யது வம்சத்தின் பிரபுவான பகவான் பிருந்தாவனத்தில் அவரது உறவினர்களுடன் எந்த இடத்தில் வாழ்ந்து வந்தார்?
பதம் 10.1.10
வ்ரஜே வஸன் கிம் அகரோன் மதுபுர்யாம் ச கேசவ:
ப்ராதாம் சாவதீத் கம்ஸம் மாதுர் அத்தாதத்-அர்ஹணம்
வ்ரஜே—பிருந்தாவனத்தில்; வஸன்—வாழும்பொழுது; கிம் அகரோத்—அவர் என்ன செய்தார்; மதுபுர்யாம்—மதுராபுரியில்; ச—மற்றும்; கேசவ:—கேசியைக் கொன்றவரான கிருஷ்ணர்; ப்ராதாம்—சகோதரர்; ச—மற்றும்; அவதீத்—கொன்றார்; கம்ஸம்—கம்சனை; மாது:—அவரது தாயின்; அத்தா—நேரடியாக; அ-தத்-அர்ஹணம்—சாஸ்திரங்களால் சிறிதும் அனுமதிக்கப்படாததை.
பிருந்தாவனம் மற்றும் மதுராபுரி ஆகிய இரு இடங்களிலும் வாழ்ந்துவந்த கிருஷ்ணர், அந்த இடங்களில் என்ன செய்தார்? தம் தாயின் சகோதரரான கம்சனை அவர் ஏன் கொன்றார்? இந்தகைய கொலை சாஸ்திரங்களில் சிறிதும் அனுமதிக்கப்படவில்லையே?
பதம் 10.1.11
தேஹம் மானுஷம் அஸ்ரித்ய கதி வர்ஷாணி வ்ருஷ்ணிபி:
யது-புர்யாம் ஸஹாவாத்ஸீத் பத்ன்ய: கதி அபவன் ப்ரபோ:
தேஹம்—உடலை; மானுஷம்—ஒரு மனிதனைப் போன்ற; அஸ்ரித்ய—ஏற்று; கதி வர்ஷாணி—எத்தனை ஆண்டுகள்; வ்ருஷ்ணிபி:—விருஷ்ணி வம்சத்தினரின் சகவாசத்தில்; யது-புர்யாம்—யதுக்களின் வசிப்பிடமான துவாரகையில்; ஸஹ—உடல்; அவத்ஸீத்—பகவான் வாழ்ந்தார்; பத்ன்ய:—மனைவிகள்; கதி—எத்தனை; அபவன்—இருந்தனர்; ப்ரபோ:—பகவானின்.
பரமபுருஷரான கிருஷ்ணருக்கு பௌதிக உடல் இல்லையென்றாலும், அவர் ஒரு மனிதனைப்போல் தோன்றுகிறார். விருஷ்ணி வம்சத்தினருடன் எத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்தார்? எத்தனை மனைவிகளை அவர் மணந்தார்? எத்தனை ஆண்டுகள் அவர் துவாரகையில் வாழ்ந்தார்?
பதம் 10.1.12
ஏதத் அன்யச் ச ஸர்வம் மே முனே க்ருஷ்ண-விசேஷ்டிதம்
வக்தும் அர்ஹணி ஸர்வக்ஞ ஸ்ரத்ததானாய விஸ்த்ருதம்
ஏதத்—இவ்விவரங்களையும்; அன்யத் ச—மற்றவைகளையும்; ஸர்வம்—அனைத்தையும்; மே—எனக்கு; முனே—மாமுனிவரே; க்ருஷ்ண-விசேஷ்டிதம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் செயல்கள்; வக்தும்—விவரிக்க; அர்ஹஸி—உங்களால் முடியும்; ஸர்வ-க்ஞ—நீங்கள் அனைத்தையும் அறிந்தவர் என்பதால்; ஸர்த்ததானாய—நான் அவரிடம் பொறாமை கொள்ளாமல் முழு நம்பிக்கை கொண்டிருப்பதால்; விஸ்த்ருதம்—முழு விவரத்துடன்.
கிருஷ்ணரைப் பற்றிய அனைத்தையும் அறிந்துள்ள மாமுனிவரே, நான் கேட்ட கிருஷ்ணரின் செயல்கள் மற்றும் நான் கேட்காமல் விட்ட செயல்கள் ஆகியவற்றில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவற்றைப் பற்றிக் கேட்க நான் மிகவும் ஆவல் கொண்டவனாக இருக்கிறேன். எனவே தயவுகூர்ந்து அவற்றையெல்லாம் முழுமையாக விவரிக்க வேண்டுகிறேன்.
பதம் 10.1.13
நைஷாதி துஹ்ஸஹா க்ஷுன் மாம் த்யக்தோதம் அபி பாததே
பிபந்தம் த்வன்-முகாம்போஜ-ச்யுதம் ஹரி-கதாம்ருதம்
ந—இல்லை; ஏஷா—இவையனைத்தும்; அதி-துஹ்ஸஹா—பொறுத்துக் கொள்ள மிகவும் கடினமான; க்ஷுத்—பசி; மாம்—எனக்கு; த்யக்த-உதம்—நீர் பருகுவதைக் கைவிட்ட பிறகும்; அபி—கூட; பாததே—இடையூறு செய்யவில்லை; பிபந்தம்—பருகும்பொழுது; த்வத்-முக-அம்போஜ-ச்யுதம்—உங்களுடைய தாமரை வாயிலிருந்து வெளிவரும்; ஹரி-கதா-அம்ருதம்—கிருஷ்ண கதை எனும் அமுதம்.
எனது விரதத்தின் காரணத்தால், மரணத் தருவாயில் நீர் பருகுவதையும் நான் விட்டுவிட்டேன். எனினும் பிரபுவான தங்களுடைய தாமரைத் திருவாயிலிருந்து வெளிவரும் கிருஷ்ண-கதை எனும் அமுதத்தை நான் பருகிக் கொண்டிருப்பதால், பொறுக்க இயலாத பசியும், தாகமும்கூட எனக்கு இடைஞ்சலாக இல்லை.
பதம் 10.1.14
ஸுத உவாச:
ஏவம் நிசம்ய ப்ருகு-நந்தன ஸாது-வாதம்
வையாஸகி: ஸ பகவான் அத விஷ்ணு-ராதம்
ப்ரத்யர்ச்ய க்ருஷ்ண சரிதம் கலி-கல்மஷ-க்னம்
வ்யாஹர்தும் ஆரபத பாகவத-ப்ரதான:
ஸுத: உவாச—சூத கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; நிசம்ய—கேட்டு; ப்ருகு-நந்தன—பிறகு வம்சப் புத்திரரான சௌனகரே; ஸாது-வாதம்—புண்ணியமான கேள்விகள்; வையாஸகி:—வியாச புத்திரரான சுகதேவ கோஸ்வாமி; ஸ:—அவர்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த; அத—இவ்வாறு; விஷணு-ராதம்—விஷ்ணுவால் எப்பொழுதும் பாதுகாக்கப்பட்டிருந்த பரீட்சித்து மகாராஜன்; ப்ரத்யர்ச்ய—அவருக்குப் பணிவான வணக்கங்களை அறிந்து; க்ருஷ்ண-சரிதம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய வரலாறு: கலி-கல்மஷ-க்னம்—இக்கலியுகத்தின் தொல்லைகளைக் குறைப்பதான; வ்யாஹர்தும்—விவரிக்க; ஆரபத—துவங்கினார்; பாகவத-ப்ரதான:—தூய பக்தர்களுள் தலைமையானவரான சுகதேவகோஸ்வாமி.
சூத கோஸ்வாமி கூறினார்: பிருகு புத்திரரே (சௌகை ரிஷியே), மிகவும் மரியாதைக்குரிய பக்தரும், வியாச புத்திரருமான சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து மகாராஜனின் புண்ணியமான கேள்விகளைக் கேட்டபின், மிகவும் மரியாதையுடன் அரசருக்கு நன்றி கூறினார். பிறகு இக்கலியுக துன்பங்களுக்கெல்லாம் பரிகாரமான கிருஷ்ண-கதையை அவர் கூறத் துவங்கினார்.
பதம் 10.1.15
ஸ்ரீ-சுக உவாச
ஸம்யக் வ்யவஸிதா புத்திஸ் தவ ராஜர்ஷி-ஸத்தம
வாஸுதேவ-கதாயாம் தே யஜ் ஜாதா நைஷ்டிகீ ரதி:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸம்யக்—முழுமையாக; வ்யவஸிதா—பதித்துள்ளதால்; புத்தி:—புத்தி; தவ—மாட்சிமை தங்கியவரான உங்களின்; ராஜர்ஷி-ஸத்தம—ராஜ ரிஷிகளில் சிறந்தவரே; வாஸுதேவ—கதாயாம்—வாசுதேவரின், அல்லது கிருஷ்ணரின் கதைகளைப் பற்றி கேட்பதில்; தே—உமது; யத்—என்பதால்; ஜாதா—விருத்தியடைந்துள்ளது; ஸநஷ்டிகீ—நிறுத்தும் இல்லாமல்; ரதி:—கவர்ச்சி அல்லது பரவச பக்தித்தொண்டு.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மாட்சிமை தங்கிய பேரரசே, ராஜரிஷிகளில் சிறந்தவரே, வாசுதேவரைப் பற்றிய கதைகளால் நீர் மிகவும் கவரப்பட்டிருப்பதால், உமது புத்தி ஆன்மீகப் புரிந்துணர்வில் நிலைபெற்றுள்ளது. இதுவே மனித குலத்திற்குரிய ஒரே நோக்கமாகும். உம்முடைய அக்கவர்ச்சி நிறுத்தமற்றதாக இருப்பதால், அது பரிசுத்தமானது என்பதில் ஐயமில்லை.
பதம் 10.1.16
வாஸுதேவ-கதா-ப்ரஸ்ன: புருஷாம்ஸ் த்ரீன் புனாதி ஹி
வக்தாரம் ப்ரச்சகம் ஸ்ரோத்ரூம்ஸ் தத்-பாத-ஸலிலம் யதா
வாஸுதேவ-கதா-ப்ரஸ்ன:—வாசுதேவரின், அல்லது கிருஷ்ணரின் குணங்கள் மற்றும் லீலைகளைப் பற்றிய கேள்விகள்; புருஷான்—நபர்கள்; த்ரீன்—மூன்று; புனாதி—தூய்மைப்படுத்துகின்றன; ஹி—உண்மையில்; வக்தாரம்—(சுகதேவ கோஸ்வாமியைப் போன்ற) பேச்சாளர்; ப்ரச்சகம்—(பரீட்சித்து மகாராஜனைப் போன்று) சொல்லத்தூண்டுபவர்; ஸ்ரோத்ரூன்—மற்றும் இவர்களுக்கிடையிலுள்ள கதை கேட்கும் சபையோர்; தத்-பாத-ஸலிலம் யதா—பகவான் விஷ்ணுவின் பாதத்திலிருந்து பெருகும் கங்கை நீர் உலகம் முழுவதையும் தூய்மைப்படுத்துவது போல்.
பகவான் விஷ்ணுவின் பாதத்திலிருந்து பெருகும் கங்கை. உயர்ந்த, மத்திய மற்றும் தாழ்ந்த கிரக அமைப்புக்களான மூவுலங்களையும் தூய்மைப்படுத்துகிறது. அதுபோலவே, பகவான் வாசுதேவரின் குணங்களையும், லீலைகளையும் பற்றி ஒருவர் கேள்வி கேட்கும்பொழுது, பேச்சாளர், கேள்வி கேட்பவர் மற்றும் கதை கேட்கும் பொதுமக்கள் ஆகிய இம்மூன்று வகையான மனிதர்களும் தூய்மையடைகின்றனர்.
பதம் 10.1.17
பூமிர் த்ருப்த-ந்ருப-வ்யாஜ-தைத்யானீக-சதாயுதை:
ஆக்ராந்தா பூரி-பாரேண ப்ரஹ்மாணம் சரணம் யயௌ
பூமி:—பூமிதேவி; த்ருப்த—திமிர்பிடித்த; ந்ருப-வ்யாஜ—அரசர்களைப் போல், அல்லது அரசாங்கத் தலைமை அதிகாரி போல் நடிக்கும்; தைத்ய—அசுரர்களின்; அனீக—படை அணிவகுப்புகளின்; சத-அயுதை:—பல நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், எல்லையற்றவாறு; ஆக்ராந்தா—அதிக பாரத்தால்; பூரி-பாரேண—படைபலத்தின் தேவையற்ற சுமையால்; ப்ரஹ்மாணம்—பிரம்ம தேவரை; சரணம்—சரணடைய; யயௌ—சென்றாள்.
ஒருசமயம் பூமிதேவியானவள், பெயரால் மட்டும் அரசர்களாகவும் உண்மையில் திமிர்பிடித்த அசுரக் கூட்டங்களாகவும் இருந்தவர்களின் படை பலத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதிக பாரத்தால் வருந்தி பிரம்ம தேவரைச் சரணடைந்தாள்.
பதம் 10.1.18
கௌர் பூத்வாஸ்ரு-முகீ கின்னா க்ரந்தந்தீ கருணம் விபோ: உபஸ்திதாந்திகே தஸ்மை வ்யஸனம் ஸமவோசத
கௌ:—ஒரு பசுவின் வடிவத்தை; பூத்வா—ஏற்று; அஸ்ரு-முகீ—கண்களில் கண்ணீருடன்; கீன்னா—மிகவும் துன்பத்திற்குள்ளாகி; க்ரந்தந்தி—அழுதுகொண்டு; கருணம்—பரிதாபமாக; விபோ:—பிரம்ம தேவரின்; உபஸ்திதா—தோன்றினாள்; அந்திகே—முன்னிலையில்; தஸ்மை—அவரிடம் (பிரம்ம தேவரிடம்); வ்யஸனம்—தன் விசனத்தை; ஸமவோசத—கூறினாள்.
மிகவும் துன்பத்திற்குள்ளான பூமிதேவி ஒரு பசுவின் உருவை ஏற்று கண்களில் கண்ணீருடன் பிரம்மதேவர் முன் தோன்றி, அவரிடம் தன் துரதிர்ஷடத்தைப் பற்றிக்கூறினாள்.
பதம் 10.1.19
ப்ரஹ்மா தத்-உபதார்யாத ஸஹ தேவைஸ் தயா ஸஹ
ஜகாம ஸ-த்ரி-நயனஸ் தீரம் க்ஷீர-பயோ-நிதே:
ப்ரஹ்மா—பிரம்மதேவர்; தத்-உபதார்ய—அனைத்தையும் சரியாக அறிந்தபின்; அத—அதன்பிறகு; ஸஹ—உடன்; தேவை:—தேவர்கள்; தயாஸஹ—பூமிதேவியுடன்; ஜகாம—அணுகினார்; ஸ-த்ரி-நயன:—மூன்று கண்கள் உடையவரான சிவபெருமானுடன்; தீரம்—கரையை; க்ஷீர-பய:-நிதே:—பாற்கடலின்.
அதன்பிறகு, பூமிதேவியின் துன்பதைப்பற்றிக் கேட்ட பிரம்மதேவர் அவளுடனும், சிவபெருமானுடன், மற்றெல்லாத் தேவர்களுடனும், பாற்கடலின் கரையை அணுகினர்.
பதம் 10.1.20
தத்ர கத்வா ஜகந்நாதம் தேவ-தேவம் வ்ருஷாகபிம்
புருஷம் புருஷ-ஸூக்தேன உபதஸ்தே ஸமாஹித:
தத்ர—அங்கு (பாற்கடலில் கரைக்கு); கத்வா—சென்றபின்; ஜகந்நாதம்—அகிலலோக நாயகரான, பரமபுருஷரை; தேவ-தேவம்—தேவர்களுக்கெல்லாம் இறைவனான; வ்ருஷாகபிம்—எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றுபவரும், எல்லோருடைய துன்பங்களையும் துடைப்பவரும், பரமபுருஷருமான விஷ்ணுவை; புருஷம்—பரமபுருஷரை; புருஷ-ஸுக்தேன—புருஷ-சூக்தம் எனப்படும் வேத மந்திரங்களால்; உபதஸ்தே—வழிபட்டனர்; ஸமாஹித:—முழு கவனத்துடன்.
பாற்கடலின் கரையை அடைந்த தேவர்கள், முழு பிரபஞ்சத்திற்கும் இறைவனும் எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றுபவரும், எல்லோருடைய துன்பங்களையும் துடைப்பவரும், தேவாதி தேவரும், பரமபுருஷருமான பகவான் விஷ்ணுவை வணங்கினார். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவான் விஷ்ணுவை, புருஷ-சூக்தம் என்ற வேத மந்திரங்களால், மிகவும் கவனத்துடன் அவர்கள் வழிபட்டனர்.
பதம் 10.1.21
கிரம் ஸமாதௌ ககனே ஸமீரிதாம்
நிசம்ய வேதாஸ் த்ரிதசான் உவாச ஹ
காம் பௌருஷம் மே ஸ்ருணுதாமரா: புனர்
விதீயதாம் ஆக ததைவ மா சிரம்
கிரம்—வார்த்தைகளின் ஒலியதிர்வு; ஸமாதெள—சமாதியில்; ககனே—ஆகாயத்தில்; ஸமீரிதாம்—ஒலித்த; நிசம்ய—கேட்டு; வேதா:—பிரம்மதேவர்; த்ரிதசான்—தேவர்களிடம்; உவாச—கூறினார்; ஹ—ஒகோ; காம்—உத்தரவு; பௌருஷம்—பரமபுருஷரிடமிருந்து பெற்ற; மே—என்னிடமிருந்து; ஸ்ருணுத—சற்று கேளுங்கள்; அமரா:—தேவர்களோ; புன:—மீண்டும்; விதீயாதாம்—நிறைவேற்றுங்கள்; ஆக—உடனே; ததாஏவ—அப்படியே; மா—வேண்டாம்; சிரம்—தாமதிக்க.
சமாதி நிலையிலிருந்து பிரம்மதேவர் ஆகாயத்தில் ஒலித்த பகவான் விஷ்ணுவின் அசரீரியைக் கேட்டபின், தேவர்களிடம் பின்வருமாறு கூறினார்; தேவர்களே, பரமபுருஷரான க்ஷீரோதகசாயி விஷ்ணுவின் உத்தரவை என்னிடமிருந்து கேட்டு தாமதமின்றி அதை நிறைவேற்றுங்கள்.
பதம் 10.1.22
புரைவ பும்ஸாவத்ஹ்ருதோ தரா-ஜ்வரோ
பவத்பிர் அம்சைர் ய துஷூபஜன்யதாம்
ஸ யாவத் உர்வ்யா பரம் ஈஸ்வரேஸ்வர:
ஸ்வ-கால-சக்த்யா க்ஷபயம்ஸ் சரேத் புவி
புரா—இதற்கு முன்புகூட; ஏவ—உண்மையில்; பும்ஸா—பரம புருஷரால்; அவத்ஹ்ருத:—என்பதை நிச்சயமாக அறிந்திருந்தார்; தரா-ஜ்வர:—பூமியின் துன்பத்தை; பவத்பி:—நல்லாத்மாவான உங்களால்; அம்சை:—அம்சங்களாக விரிவடைந்து; யதுஷு—யது மகாரரஜனின் குடும்பத்தில்; உபஜன்யதாம்—அங்கு நீங்கள் பிறக்க வேண்டும்; ஸ:—அவர் (பரமபுருஷர்); யாவத்—இருக்கும்வரை; உர்வ்யா:—பூமியின்; பரம்—சுமை; ஈஸ்வர-ஈஸ்வர:—ஈசுவரர்களுக்கும் ஈசுவரரான; ஸ்வ-கால-சக்த்யா—அவரது சுயக்காலச் சக்தியினால்; க்ஷபயன்—போக்கி; சரேத்—சஞ்சரிக்க வேண்டும்; புவி—பூமியில்.
பிரம்மதேவர் தேவர்களிடம் அறிவித்தார்: பகவானிடம் நான் விண்ணப்பம் செய்யும் முன்பே, பூமியின் துன்பத்தை அவர் அறிந்திருக்கிறார். இதன் விளைவாக பகவான் கால ரூபமான தமது சுய சக்தியின் மூலமாக பூபாரத்தைக் குறைப்பதற்கு இந்த பூமியில் சஞ்சரிக்கும்வரை, தேவர்களான நீங்கள் உங்களுடைய விரிவங்களின் மூலமாக யது குலத்தில் மகன்களாகவும், பேரன்களாகவும் தோன்ற வேண்டும்.
பதம் 10.1.23
வசுதேவ-க்ருஹே ஸாக்ஷாத் பகவான் புருஷ: பர:
ஜனிஷ்யதே தத்-ப்ரியார்தம் ஸம்பவந்து ஸுர-ஸ்த்ரிய:
வசுதேவ-க்ருஹே—(பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றும்பொழுது அவரது தந்தையாக இருக்கப்போகும்) வசுதேவரின் வீட்டில்; ஸாக்ஷாத்—தானே; பகவான்—முழுசக்தியுடைய பரமபுருஷர்; புருஷ:—மூலபுருஷர்: பர:—உன்னதமானாவரான; ஜனிஷ்யதே—தோன்றுவார்; தத்-ப்ரிய-அர்தம்—அவரது திருப்திக்காக; ஸம்பவந்து—பிறக்க வேண்டும்; ஸுர-ஸ்த்ரிய:—தேவர்களின் மனைவிகள் அனைவரும்.
பூரண சக்தியுடையவரும், பரமபுருஷருமான ஸ்ரீ கிருஷ்ணர், தானே வசுதேவரின் புதல்வராக தோன்றுவார். எனவே அவரை திருப்திப்படுத்த, எல்லா தேவ பத்தினிகளும்கூட தோன்ற வேண்டும்.
பதம் 10.1.24
வாஸுதேவ-கலானந்த: ஸஹஸ்ர-வதன: ஸ்வராட்
அக்ரதோ பவிதா தேவோ ஹரே: ப்ரிய-சிகீர்ஷயா
வாஸுதேவ-கலா அனந்த:—பரமபுருஷரின் எங்கும் பரவியுள்ள அவதாரமான, அனந்ததேவர் அல்லது சங்கர்ஷண அனந்தர் எனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சம்; ஸஹஸ்ர-வதன:—ஆயிரக்கணக்கான படங்கள் கொண்ட; ஸ்வராட்—முழு சுதந்திரமுள்ள; அக்ரத:—முன்பு; பவிதா—தோன்றுவார்; தேவ:—பகவான்; ஹரே:—ஸ்ரீ கிருஷ்ணரின்; ப்ரிய-சிகீர்ஷயா—இன்பத்திற்காகச் செயற்படும் விருப்பத்துடன்.
கிருஷ்ணரின் முதன்மையான தோற்றம், அனந்தர் எனப்படும் சங்கர்ஷணராவார். இந்த ஜட உலகில் தோன்றும் எல்லா அவதாரங்களுக்கும் இவர்தான் மூலம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தோற்றத்திற்கு முன், அவரது உன்னத லீலைகளில் அவரை திருப்திப்படுத்துவதற்கு, இந்த மூல சங்கர்ஷணர் பலராமராகத் தோன்றுவார்.
பதம் 10.1.25
விஷ்ணோர் மாயா பகவதீ யயா ஸம்மோஹிதம் ஜகத்
ஆதிஷ்டா ப்ரபுணாம்சேன கார்யார்தே ஸம்பவிஷ்யதி
விஷ்ணோ: மாயா—பரமபுருஷரான விஷ்ணுவின் சக்தி; பகவதீ—பகவானுக்கு இணையாக இருப்பதால் பகவதீ எனப்படும்; யயா—யாரால்; ஸம்மோஹிதம்—வசியப்படுத்தியது; ஜகத்—ஜட, ஆன்மீக உலகங்களை எல்லாம்; ஆதிஷ்டா—உத்தரவிடப்பட்டு; ப்ரபுணா—தலைவரால்; அம்சேன—அவளது வெவ்வேறு அம்சங்களுடன்; கார்ய-அர்தே—காரியத்தை நிறைவேற்றுவதற்காக; ஸம்பவிஷ்யதி—அவளும் தோன்றுவாள்.
பரமபுருஷருக்கு இணையானதான, விஷ்ணு-மாயா எனப்படும் அவரது சக்தியும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தோன்றும், வெவ்வேறு நிலைகளில் செயற்படும் இச்சக்தி, ஜட மற்றும் ஆன்மீக உலகங்களை எல்லாம் வசியப்படுத்தும். இச்சக்தி, பகவானின் செயலை நிறைவேற்றும் பொருட்டு, தன் பிரபுவின் ஆணைப்படி, தனது வெவ்வேறு சக்திகளுடன் தோன்றும்.
பதம் 10.1.26
ஸ்ரீ-சுக உவாச
இதி ஆதிஸ்யாமர-கணான் ப்ரஜாதிபதி-பதிர் விபு:
ஆஸ்வாஸ்ய ச மஹீம் கீர்பி: ஸ்வ-தாம பரமம் யயௌ
ஸ்ரீசுக: உவா—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ஆதிஸ்ய—அறிவித்தபின்; அமர-கணான்—தேவர்கள்; ப்ரஜாபதி-பதி:—பிரஜாபதிகளின் தலைவரான பிரம்மதேவர்; விபு:—சர்வசக்திவாய்ந்த; ஆஸ்வாஸ்ய—சமாதானப்படுத்தியபின்; ச—மேலும்; மஹீம்—பூமிதேவி; கீர்பி:—இனிய வார்த்தைகளால்; ஸ்வ-தாம—பிரம்மலோகம் எனும் அவரது சொந்தலோகம்; பரமம்—(பிரபஞ்சத்திலேயே) மிகச்சிறந்த; யயௌ—திரும்பிச் சென்றார்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; இவ்வாறு தேவர்களுக்கு அறிவுரை கூறி, பூமிதேவியை சமாதானப்படுத்தியபின், மிகவும் சக்திவாய்ந்தவராகவும், மற்றெல்லா பிரஜாபதிகளுக்கும் தலைவராகவும் இருப்பதால் ப்ரஜாபதி-பதி எனப்படுபவருமான பிரம்மதேவர், தமது சொந்த உலகமான பிரம்மலோகத்திற்கு திரும்பிச் சென்றார்.
பதம் 10.1.27
சூரஸேனோ யதுபதிர் மதுராம் ஆவஸன் புரீம்
மாதுராஞ் சூரஸேனாம்ஸ் ச விஷயான் புபுஜே புரா
சூரஸேன:—சூரஸேன மகாராஜன்; யது-பதி:—யது வம்சத்தில் தலைமையானவரான; மதுராம்—மதுரா என்ற இடத்தில்; ஆவஸன்—வாழச்சென்றார்; புரீம்—அந்த நகரத்தில்; மாதுரான்—மாதுர மாவட்டம் எனும் இடத்தில்; சூரஸேனான் ச—மற்றும் சூரஸேணம் என்ற இடம்; விஷயான்—இத்தகைய இராஜ்யங்களை; புபுஜே—அனுபவித்தார்; புரா—முன்பு.
முன்பு, யது வம்சத்தின் தலைவரான சூரஸேனர் வாழ்வதற்கு மதுராபுரிக்குச் சென்றார். அங்கு அவர் மாதுரம் மற்றும் சூரஸேனம் என்ற இடங்களை ஆண்டு அனுபவித்து வந்தார்.
பதம் 10.1.28
ராஜதானீ தத: ஸாபூத் ஸர்வ-யாதவ பூபுஜாம்
மதுரா பகவான் யத்ர நித்யம் ஸன்னிஹிதோ ஹரி:
ராஜதானீ—தலைநகரம்; தத:—அன்றுமுதல்; ஸ—மதுரா எனும் நாடும், நகரமும்; அபூத்—ஆயின; ஸர்வ-யாதவ-பூபுஜாம்—யது வம்சத்தில் தோன்றிய எல்லா அரசர்களின்; மதுரா—மதுரா என்ற இடம்; பகவான்—பரமபுருஷர்; யத்ர—எங்கு; நித்யம்—நித்தியமாக; ஸன்னிஹித:—நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள, நித்தியமாக வாழும்; ஹரி:—பரமபுருஷரான பகவான்.
அன்று முதல் மதுராபுரி, யதுகுல மன்னர்கள் அனைவருக்கும் தலைநகராக விளங்கியது. மதுராபுரியில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நித்தியவாசம் புரிவதால், மதுரா மாவட்டமும், மதுரா நகரமும் கிருஷ்ணருடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.
பதம் 10.1.29
தஸ்யாம் து கர்ஹிசிச் சௌரிர் வஸுதேவ: கிருதோத்வஹ:
தேவக்யா ஸுர்யய ஸார்தம் ப்ரயாணே ரதம் ஆருஹத்
தஸ்யாம்—மதுரா என்ற அந்த இடத்தில்; து—உண்மையில்; கர்ஹிசித்—சில காலத்திற்கு முன்; சௌரி:—சூரவம்சத்தைச் சேர்ந்த தேவர்; வஸுதேவ:—வசுதேவராகத் தோன்றிய; க்ருத-உத்வஹ:—திருமணம் செய்து கொண்டபின்; தேவக்யா—தேவகியை; ஸுர்யயா—புதிதாக அவர் மணந்த மனைவி; ஸார்தம்—உடல்; ப்ரயாணே—வீடு திரும்புவதற்காக; ரதம்—இரதத்தில்; ஆருஹத்—ஏறினார்.
ஒருசமயம் தேவ குடும்பத்தை (அல்லது சூர வம்சத்தை) சேர்ந்த வசுதேவர் தேவகியை மணந்தார். திருமணத்திற்குப்பின் தன் வீடு திரும்ப அவர் புதிதாக மணந்த தன் மனைவியுடன் தனது இரதத்தில் ஏறினார்.
பதம் 10.1.30
உக்ரஸேன-ஸுத: கம்ஸ்: ஸ்வஸு: ப்ரிய சிகீர்ஷயா
ரஸ்மீன் ஹயானாம் ஜக்ராஹ ரௌக்மை ரத-சதைர் வ்ருத:
உக்ரஸேன-ஸுத:—உக்ரசேனரின் மகன்; கம்ஸ்:—கம்சன் என்ற; ஸவஸு:—தன் சொந்தத் தங்கையான தேவகியின்; ப்ரிய-சிகீர்ஷயா—அவளது திருமணத்தின் போது அவளைத் திருப்திப்படுத்துவதற்காக; ரஸ்மீன்—கடிவாளங்களை; ஹயானாம்—குதிரைகளின்; ஜக்ராஹ—எடுத்தான்; ரௌக்மை:—தங்கத்தாலான; ரத-சதை:—நூற்றுக்கணக்கான இரதங்களால்; வ்ருத:—சூழப்பட்டிருந்த.
உக்ரசேனின் மகனான கம்சன், தன் தங்கையான தேவகியின் திருமணத்தின்போது அவளை மகிழ்விப்பதற்காக, நூற்றுக்கணக்கான தங்க இரதங்களால் சூழப்பட்டிருந்த அந்த இரதத்திற்குச் சாரதியாக அதில் ஏறி, குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான்.
பதங்கள் 10.1.31 — 10.1.32
சது:-சதம் பாரிபர்ஹம் கஜானாம் ஹேம-மாலினாம்
அஸ்வானாம் அயுதம் ஸார்தம் ரதானாம் ச த்ரி-ஷட்-சதம்
தஸீனாம் ஸுகுமாரீணாம் த்வே சதே ஸமலங்க்ருதே
துஹித்ரே தேவக: ப்ராதாத் யானே துஹித்ரு வத்ஸல:
சது:-சதம்—நானூறு; பாரிபர்ஹம்—சீதனம்; கஜானாம்—யானைகளின்; ஹேம-மாலினாம்—தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த; அஸ்வானாம்—குதிரைகளின்; அயுதம்—பத்தாயிரம்; ஸார்தம்—அதனுடன்; ரதானாம்—இரதங்களின்; ச—மேலும்; த்ரி-ஸட்-சதம்—மூன்று அறுநூறு (1800); தாஸீனாம்—பணிப் பெண்களின்; ஸு-குமாரீணாம்—இளமையும், அழகும் வாய்ந்த கன்னிப் பெண்கள்; த்வே—இரு; சதே—நூறு; ஸமலங்க்ருதே—ஆபரணங்களால் முழுமையாக அலங்கரிக்கப்பட்ட; துஹித்ரே—அவரது புதல்விக்கு; தேவக:—தேவக மகாராஜன்; ப்ராதாத்—பரிசாக அளித்தார்; யானே—கிளம்பிச் செல்லும்பொழுது; துஹித்-வத்ஸல:—தன் புதல்வியான தேவகியிடம் மிகவும் அன்பு கொண்டிருந்த.
தேவகியின் தந்தையான தேவக மகாராஜன், தன் புதல்வியிடம் மிகவும் அன்பு கொண்டிருந்தார். எனவே அவளும், அவனது கணவரும் வீடு திரும்பும்பொழுது, சீதனமாக தங்க மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்ட 400 யானைகளையும், 10,000 குதிரைகளையும், 18,000 இரதங்களையும், மற்றும் ஆபரணங்களால் முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருந்த 200 மிகவும் அழகான பணிப்பெண்களையும் அளித்தார்.
பதம் 10.1.33
ஸங்க-தூர்ய-ம்ருதங்காஸ் ச நேதுர் துந்துபய: ஸமம்
ப்ரயாண-ப்ரக்ரமே தாத வர-வத்வோ ஸுமங்களம்:
சங்க—சங்குகள்; தூர்ய—ஊது கொம்பு; ம்ருதங்கா:—மிருதங்கங்கள்; ச—மற்றும்; நேது:—முழங்கின; துந்துபய:—பேரிகைகள்; ஸமம்—பொருத்தமாக; ப்ரயாண-ப்ரக்ரமே—புறப்படும் வேளையில்; தாத—அன்பு மகனே; வர-வத்வோ:—மணமகன் மற்றும் மணமகளின்; ஸுமங்களம்—மங்களகரமாக அவர்கள் புறப்பட்டுச் செல்வதற்காக.
அன்பு மகனான பரீட்சித்து மகாராஜனே, மணமகனும், மணமகளும் புறப்படத் தயாராக இருந்தபொழுது, அவர்களது பயணம் மங்களகரமாக அமையும் பொருட்டு சங்குகளும், ஊது கொம்புகளும், மிருதங்கங்களும் மற்றும் பேரிகைகளும் பொருத்தமாக இசைக்கப்பட்டன.
பதம் 10.1.34
பதி ப்ரக்ரஹிணம் கம்ஸம் ஆபாஷ்யாஹாசரீர-வாக்
அஸ்யாஸ் த்வாம் அஷ்டமோ கர்போ ஹந்தா யாம் வஹஸே’புத
பதி—வழியில்; ப்ரக்ரஹிணம்—குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்திருந்த; கம்ஸம்—கம்சனை; ஆபாஷ்ய—நோக்கி; ஆஹ—கூறியது; அசரீர-வாக்—அசரீரீ (கண்ணுக்குப் புலப்படாத ஒருவரிடமிருந்து வரும் குரலோசை); அஸ்யா:—இப்பெண்ணின் (தேவகியின்); த்வாம்—நீ; அஷ்டம:—எட்டாவது; கர்ப:—கர்ப்பம்; ஹந்தா—கொல்லக்கூடிய; யாம்—யாரை; வஹஸே—நீ ஏற்றிச் செல்கிறாய்; அபுத—அறிவு கெட்டவனே.
கம்சன், குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்தபடி தேரை ஓட்டிச் சென்றபொழுது, நடுவழியில் அசரீரியொன்று அவனை நோக்கிப் பின்வருமாறு கூறிற்று: “அறிவு கெட்டவனே, நீ தேரில் ஏற்றிச் செல்லும் பெண்ணின் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லப்போகிறது.”
பதம் 10.1.35
இதி உக்த: ஸ கல: பாபோ போஜானாம் குல-பாம்ஸன:
பகினீம் ஹந்தும் ஆரப்தம் கட்க-பாணி: கசே ‘க்ரஹீத்
இதி உக்த:—இவ்வாறு கூறப்பட்டதும்; ஸ:—அவன் (கம்சன்); கல:—பொறாமை கொண்ட; பாப:—பாதகன்; போஜானாம்—போஜ வம்சத்தின்; குல-பாம்ஸன:—குலப்பெருமையை கெடுக்கக் கூடியவன்; பகினீம்—அவனது தங்கையை; ஹந்தும் ஆரப்தம்—கொல்லும் எண்ணத்துடன்; கட்க-பாணி:—தன் வாளைக்கையில் எடுத்துக்கொண்டு; கசே—முடியை; அக்ரஹீத்—கையில் பிடித்தான்.
கம்சன் துஷ்டனாகவும் பாவியாகவும் இருந்ததால், அவன் போஜ வம்சத்தைக் களங்கப்படுத்துபவனாக இருந்தான். எனவே, இந்த ஆகாசவாணியைக் கேட்டதும், தன் தங்கையின் தலைமுடியை இடது கரத்தால் பற்றிக்கொண்ட அவன், வலது கரத்தால், தன் வாளை உருவி, அவளை சிரச்சேதம் செய்யத் தயாரானான்.
பதம் 10.1.36
தம் ஜுகுப்ஸீத-கர்மாணம் ந்ருசம்ஸம் நிரபத்ரபம்
வாஸுதேவோ மஹா-பாக உவாச பரிஸாந்த்வயன்
தம்—அவனிடம் (கம்சனிடம்); ஜுகுப்ஸீத-கர்மாணம்—இத்தகைய ஒரு குற்றச்செயலைச் செய்யத் தயாராக இருந்த; ந்ருசம்ஸம்—மிகவும் கொடூரமான; நிரபத்ரபம்—வெட்கமற்ற; வஸுதேவ:—வசுதேவர்; மஹா-பாக:—வாசுதேவரின் அதிர்ஷ்டமுள்ள தந்தை; உவாச—கூறினார்; பரிஸாந்தவயன்—சமாதானப்படுத்தி.
வெட்கமில்லாமல் தன் தங்கையைக் கொல்லவும் தயாராக இருந்த கொடூரமும் பொறாமையும் மிக்க கம்சனை சமாதானப்படுத்த விரும்பி, மகாத்மாவும், கிருஷ்ணரின் தந்தையாக இருக்கப் போகின்றவருமான வசுதேவர், அவனிடம் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்.
பதம் 10.1.37
ஸ்ரீ-வஸுதேவ உவாச
ஸ்லாகனீய-குண: சூரைர் பவான் போஜ-யசஸ்கர:
ஸ கதம் பகினீம் ஹன்யாத் ஸ்த்ரியம் உத்வாஹ-பர்வணி
ஸ்ரீவஸுதேவ:-உவாச—சிறந்த மகானாகிய வசுதேவர் கூறினார்; ஸ்லாகநீய-குண:—போற்றத்தக்க குணங்களைக் கொண்ட ஒருவர்; சூரை:—சிறந்த வீரர்களால்; பவான்—நல்லாத்மாவான நீர்; போஜ-யச:-கர:—போஜ வம்சத்தின் புகழுக்குரிய நீர்; ஸ:—உம்மைப் போன்ற நல்லாத்மாவான ஒருவர்; கதம்—எப்படி; பகினீம்—உமது தங்கையை; ஹன்யாத்—கொல்ல முடியும்; ஸ்த்ரியம்—குறிப்பாக ஒரு பெண்ணை; உத்வாஹ-பர்வணி—திருமண ஊர்வலத்தின்போது.
வசுதேவர் கூறினார்: எனதன்புள்ள மைத்துனரான கம்சனே, நீர் போஜ வம்சத்தின் பெருமைக்குரியவர். சிறந்த வீரர்களும் உமது குணங்களைப் போற்றுகின்றனர். இத்தகைய தகுதிகளுடைய உம்மைப் போன்ற ஒருவரால் ஒரு பெண்ணை, அதுவும் சொந்த தங்கையை குறிப்பாக அவளது திருமண ஊர்வலத்தின்போது எப்படி கொல்ல முடியும்?
பதம் 10.1.38
ம்ருத்யு ஜன்மவதாம் வீர தேஹேன ஸஹ ஜாயதே
அத்ய வாப்த-சதாந்தே வா ம்ருத்யுர் வை ப்ரணினாம் த்ருவ:
ம்ருத்யு:—மரணம்; ஜனம் வதாம்—பிறவி எடுத்துள்ள ஜீவராசிகளின்; வீர—சிறந்த வீரரே; தேஹேன ஸஹ—உடலுடன்; ஜாயதே—பிறக்கிறான் (பிறவி எடுத்தவன் மரணமடைவது நிச்சயம்); அத்ய—இன்று; வா—அல்லது; அப்த-சத—நூற்றுக்கணக்கான ஆண்டுகளின்; அந்தே—முடிவில்; வா—அல்லது; ம்ருத்யு:—மரணம்; வை—உண்மையில்; ப்ரணினாம்—ஒவ்வொரு ஜீவராசிக்கும்; த்ருவ:—நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.
சிறந்த வீரனே, மரணம் உடலுடனேயே பிறந்துள்ளது என்பதால், பிறந்தவன் மரணமடைவது நிச்சயம். ஒருவன் இன்றோ அல்லது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகோ மரணமடையக் கூடும் ஆனால் ஒவ்வொரு ஜீவராசிக்கும் மரணம் நிச்சயம்.
பதம் 10.1.39
தேஹே பஞ்சத்வம் ஆபன்னே தேஹீ கர்மானுகோ ‘வச:
தேஹாந்தரம் அனுப்ராப்ய ப்ராக்தனம் த்யஜதே வபு:
தேஹே பஞ்சத்வம் ஆபன்னே—உடல் ஜந்து மூலப் பொருட்களாக மாறும்பொழுது; தேஹீ—உடலின் உரிமையாளரான ஜீவராசி; கர்ம-அனுக:—அவனது சொந்த கர்ம வினைகளுக்கேற்ப; அவச:—தானாகவே; தேஹ-அந்தரம்—(பௌதிக மூலப் பொருட்களாலான) மற்றொரு உடலை; அனுப்ராப்ய—பயனாகப் பெறும்; பிராக்தனம்—முந்திய; த்யஜதே—கைவிடுகிறான்; வபு:—உடலை.
தற்போயை உடல் தூசியாக மாறி, மீண்டும் ஐந்து மூலப்பொருட்களாக. (மண், நீர். நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்) உருமாற்றம் பெறும்பொழுது, உடலின் உரிமையாளனான ஜீவராசி, தன்கர்ம வினைகளுக்கேற்ப தானாகவே பௌதிக மூலப்பொருட்களாலான மற்றொரு உடலைப் பெறுகிறான். அடுத்த உடலைப் பெறும் பொழுது, தற்போதைய உடலை அவன் கைவிடுகிறான்.
பதம் 10.1.40
வ்ரஜம்ஸ் திஷ்டன் பதைகேன யதைவைகேன கச்சதி
யதா த்ருண-ஜலௌகைவம் தேஹீ கர்ம-கதிம் கத:
வ்ரஜன்—சாலையில் நடந்து செல்லும் ஒருவன்; திஷ்டன்—நிற்கும் பொழுது; பதா ஏகேன—ஒரு பாதத்தில்; யதா—போல்; ஏவ—உண்மையில்; ஏகேன—மற்றொரு பாதம்; கச்சதி—செல்கிறது; யதா—போல்; த்ருண-ஜலௌகா—ஒரு செடியிலுள்ள புழு; ஏவம்—இவ்வாறாக; தேஹீ—ஜீவராசி; கர்ம-கதிம்—கர்ம விளைவுகளுக்கு; கத:—கீழ்ப்படிகிறான்.
சாலையில் நடந்து செல்பவன் ஒரு பாதத்தைத் தரையில் வைத்த பிறகு மற்றொரு பாதத்தைத் தரையிலிருந்து அகற்றுவது போலவே, அல்லது ஒரு செடியிலுள்ள புழு ஓரிலைக்கு தன்னை மாற்றிக் கொண்ட பின் முந்திய இலையை விட்டுவிடுவது போலவே, பந்தப்பட்ட ஆத்மாவும் ஓருடலைத் தஞ்சமடைந்த பின், முன்பிறந்த உடலைக் கைவிடுகிறான்.
பதம் 10.1.41
ஸ்வப்னே யதா பஸ்யதி தேஹம் ஈத்ருசம்
மனோரதேனாபினிவிஷ்ட-சேதன:
த்ருஷ்ட-ஸ்ருதாப்யாம் மனஸானுசிந்தயன்
ப்ரபத்யதே தத் கிம் அபி ஹி அபஸ்ம்ருதி:
ஸ்வப்னே—கனவில்; யதா—போல்; பஸ்யதி—ஒருவன் காண்கிறான்; தேஹம்—ஒரு வகையான உடலை; ஈத்ருசம்—அதுபோலவே; மனோரதேன—மனக் கற்பனையால்; அபினிவிஷ்ட—முழுமையாக ஆழ்ந்துள்ளது; சேதன:—யாருடைய உணர்வு; த்ருஷ்டா—கண்களால் அனுபவிக்கப்பட்டவைகளால்; ஸ்ருதாப்யாம்—மற்றும் வேறொன்றைப் பற்றிய வர்ணணையைக் கேட்பதால்; மனஸா—மனதால்; அனுசிந்தயன்—நினைத்தல், உணர்தல் மற்றும் விரும்புதல்; ப்ரபத்யதே—சரணடைகிறான்; தத்—அச்சூழ்நிலையிடம்; கிம் அபி—பற்றி என்னவென்று சொல்வது; ஹி—உண்மையில்; அபஸ்ம்ருதி:—தற்போதைய உடலைப் பற்றிய மறதியை அனுபவித்துணரும்.
ஒன்றைக் காண்பதால் அல்லது அதைப்பற்றிக் கேட்பதால் ஒருவித சூழ்நிலையை அனுபவித்துள்ள ஒருவன், அச்சூழ்நிலையைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறான் அல்லது மனக்கோட்டை கட்டுகிறான். இவ்வாறாக தனது தற்போதைய உடலை கருத்திற்கொள்ளாமல், அதனிடம் ஒருவன் சரணடைகிறான். அதுபோலவே, இரவில் ஒருவன் தன் உண்மை நிலையை மறந்து வெவ்வேறு சூழ்நிலைகளில் வேறுபட்ட உடல்களில் தான் வாழ்வதாக கனவு காண்கிறான். இதே முறையில் தான் ஒருவன் தற்போதைய உடலைக் கைவிட்டு மற்றொரு உடலை ஏற்கிறான் (ததா தேஹாந்தா-ப்ராப்தி:).
பதம் 10.1.42
யதோ யதோ தாவதி தைவ-சோதிதம்
மனோ விகாராத்மகம் ஆப பஞ்சஸு
குணேஷு மாயா-ரசிதேஷு தேஹி அஸௌ
ப்ரபத்யமான: ஸஹ தேன ஜாயதே
யத: யத:—ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அல்லது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு; தாவதி—கற்பனை செய்கிறது; தைவ-சோதிதம்—தற்செயலான சம்பவத்தால் அல்லது நிதானமான யோசனையால் தூண்டப்பட்டு; மன:—மனது; விகார-ஆத்மகம்—ஒருவித சிந்தனை, உணர்வு மற்றும் விருப்பத்திலிருந்து மற்றொன்றிற்கு மாறுகிறான்; ஆப—முடிவில் (ஒரு மனநிலையை) அவன் அடைகிறான்; பஞ்சஸு—மரணத்தின்போது (ஜட உடல் பஞ்ச பூதங்களாக மாறும் பொழுது); குணேஷு—பௌதிக குணங்களிடம்; மாயா-ரசிதேஷு—அங்கு இதைபோன்ற ஒருடலை ஜட சக்தி உண்டாக்குகின்றது; தேஹீ—இத்தகைய ஒருடலை ஏற்றுக்கொள்ளும் ஆத்மா; அஸௌ—அவன்; ப்ரபத்யமான:—(இத்தகைய ஒரு சூழ்நிலைக்கு) சரணடைந்து; ஸஹ—உடன்; தேன—இதைப்போன்ற ஓருடல்; ஜாயதே—பிறக்கிறது.
பலன்நோக்குக் கருமங்களில் ஈடுபட்டுள்ள மனதின் எண்ணம் உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவற்றிற்கேற்ப, மரணத்தின்போது ஒருவன் ஒரு குறிப்பிட்ட உடலைப் பெறுகிறான். அதாவது, மனதின் செயல்களுக்கேற்ப உடல் விருத்தியடைகிறது. உடல் மாற்றங்கள் நிலையற்ற மனதினால் விளைகின்றன. இல்லையெனில் ஆத்மாவால் அதன் சுயமான ஆன்மீக உடலிலேயே இருக்க முடியும்.
பதம் 10.1.43
ஜ்யோதிர் யதைவோதக-பார்திவேஷு அத:
ஸமீர-வேகானுகதம் விபாவ்யதே
ஏவம் ஸ்வ-மாயா-ரசிதேஷ்வ் அஸௌ புமான்
குணேஷு ராகானுகதோ விமுஹ்யதி
ஜ்யோதி:—சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் போன்ற ஒளிரும் பொருட்கள்; யதா—போல்; ஏவ—உண்மையில்; உதக—நீரில்; பார்த்திவேஷு—அல்லது எண்ணெய் போன்ற மற்ற திரவியங்களில்; அத:—நேரடியாக; ஸமீர-வேக-அனுகதம்—காற்றின் அசைவுகளால் வற்புறுத்தப்பட்டு; விபாவ்யதே—வெவ்வேறு வடிவங்களில் தோன்றுகிறது; ஏவம்—இவ்விதமாக; ஸ்வ-மாயா-ரசிதேஷு—ஒருவனது மனக்கோட்டைகளால் உண்டாக்கப்பட்ட சூழ்நிலையில்; அஸௌ—ஜீவராசி; புமான்—நபர்; குணேஷு—இயற்கைக் குணங்களால் தோற்றுவிக்கப்படும் ஜட உலகில்; ராக-அனுகத:—அவனுடைய பற்றிற்கேற்ப; விமுஹ்யதி—அடையாளத்தால் குழப்பமடைகிறான்.
ஆகாயத்தில் ஒளிரும் பொருட்களான சந்திரன், சூரியன், மற்றும் நட்சத்திரங்கள் போன்றவை, எண்ணெய் அல்லது நீர் போன்ற திரவங்களில் பிரதிபலிக்கும்பொழுது, அவை காற்றினுடைய அசைவுகளின் காரணத்தால் வெவ்வேறு வடிவங்களில்-சிலசமயம் உருண்டையாகவும், சில சமயம் நீளமாகவும் காணப்படுகின்றன. அதுபோலவே, ஜீவராசி அல்லது ஆத்மா பௌதிக சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்பொழுது, அறியாமையின் காரணத்தால், பல்வேறு தோற்றங்களைத் தனது சுயரூபமாக ஏற்றுக் கொள்கிறான். அதாவது, ஜட இயற்கைக் குணங்களிலிருந்து வரும் சலனத்தின் காரணத்தால், ஒருவன் மனக்கற்பனைகளில் ஈடுபட்டுக் குழப்பமடைகிறான்.
பதம் 10.1.44
தஸ்மான் ந கஸ்யசித் த்ரோஹம் ஆசரேத் ஸ ததா-வித:
ஆத்மன: ஷேமம் அன்விச்சன் த்ரோக்துர் வை பரதோ பயம்
தஸ்மாத்—எனவே; ந—இல்லை; கஸ்யசித்—எவருக்கும்; த்ரோஹம்—பொறாமை; ஆசரேத்—ஒருவன் செயற்படவேண்டும்; ஸ:—ஒரு நபர் (கம்சன்); ததா-வித:—(வசுதேவரால்) இவ்வாறு அறிவுறுத்தப்பட்டவன்; ஆத்மன:—அவனது சொந்த; க்ஷேமம்—நன்மையை; அன்விச்சன்—அவன் விரும்பினால்; த்ரோக்து:—மற்றவர்களிடம் பொறாமை கொண்டவனின்; வை—உண்மையில்; பரத:—மற்றவர்களிடமிருந்து; பயம்—பயம் ஏற்படக்காரணமுண்டு.
எனவே, பொறாமை மிகுந்த பாவச் செயல்கள் அடுத்த பிறவியில் ஒருவன் உடலை வருத்துவதால், ஒருவன் ஏன் பாவச் செயல்களில் ஈடுபட வேண்டும்? தனது நன்மையைக் கருதியாவது, யாரிடமும் ஒருவன் பொறாமை கொள்ளாமல் இருக்கவேண்டும். ஏனெனில், பொறாமையுள்ள ஒருவன் இப்பிறயிலும், அடுத்ததிலும் தன் எதிரிகளின் தாக்குதலுக்கு அஞ்சியே எப்பொழுதும் வாழ வேண்டியிருக்கும்.
பதம் 10.1.45
ஏஷா தவானுஜா பாலா க்ருபணா புத்ரிகோபமா
ஹந்தும் நார்ஹஸி கல்யாணீம் இமாம் த்வம் தீன-வத்ஸல:
ஏஷா—இந்த; தவ—உமது; அனுஜா—தங்கை; பாலா—குற்றமற்ற பெண்; க்ருபணா—உம்மையே முற்றிலும் நம்பியுள்ள; புத்ரிகா-உபமா—உமது சொந்த மகளைப் போன்றவள்; ஹந்தும்—அவளைக் கொல்வது; ந—இல்லை; அர்ஹஸி—தகுந்தவர்; கல்யாணீம்—உமது பாசத்திற்கு உட்பட்ட; இமாம்—இவளை; த்வம்—நீர்; தீன-வத்ஸல:—ஆதரவற்றவர்களிடமும், குற்றமற்றவர்களிடமும் மிகவும் இரக்கம் கொண்ட.
உமது தங்கையும், குற்றமற்றவளுமான இந்த தேவகி, உமது சொந்த மகளைப் போன்றவளும், பாசத்துடன் பாதுகாக்கத் தகுந்தவளும் ஆவாள். நீர் கருணையுள்ளவர் என்பதால், இவளைக் கொன்றுவிடக்கூடாது. உண்மையில், இவள் உமது பாசத்தைப் பெறத் தகுந்தவளாவாள்.
பதம் 10.1.46
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் ஸ ஸாமபிர் பேதைர் போத்யமானோ ‘பி தாருண:
ந ன்யவர்ந்த கௌரவ்ய புருஷாதான் அனுவ்ரத:
ஸ்ரீ-சுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்விதமாக; ஸ:—அவன் (கம்சன்); ஸாமபி:—அவனை (கம்சனை) அமைதிப்படுத்தும் முயற்சிகளால்; பேதை:—பிறரிடம் இரக்கமின்றி நடந்து கொள்ளக் கூடாது என்ற நல்லுபதேசங்களால்; போத்யமானா: அபி—சமாதனப்படுத்தியும்; தாருண:—இரக்கமற்ற கொடூரமானவனை; ந ன்யவர்தத—(கொடூரமான செயலிலிருந்து) தடுக்க முடியவில்லை; கௌரவ்ய—பரீட்சித்து மகாராஜனே; புருஷ-அதான்—இராட்சஸர்கள்; அனுவ்ரத:—அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: குரு வம்சத்தில் சிறந்தவரே, மிகவும் கொடூரமான கம்சன் உண்மையில் இராட்சஸர்களைப் போன்றவனாவான். எனவே, வசுதேவரின் நல்லுபதேசங்களால் அவனைச் சாந்தப்படுத்தவோ அல்லது அச்சுறுத்தவோ முடியவில்லை. இப்பிறவியிலோ அல்லது அடுத்ததிலோ கிடைக்கப்போகும் பல விளைவுகளைப் பற்றி அவன் கவலைப்படவில்லை.
பதம் 10.1.47
நிர்பந்தம் தஸ்ய தம் க்ஞாத்வா விசிந்த்யானகதுந்துபி:
ப்ராப்தம் காலம் ப்ரதிவ்யோடும் இதம் தத்ரான்வபத்யத
நிர்பந்தம்—எதையாவது செய்ய வேண்டும் என்ற உறுதி; தஸ்ய—அவனுடைய (கம்சனுடைய); தம்—அதை (உறுதியை); க்ஞாத்வா—என்பதை அறிந்து; விசிந்த்ய—ஆழ்ந்து சிந்தித்து; ஆனகதுந்துபி:—வசுதேவர்; ப்ராப்தம்—என்ற முடிவிற்கு வந்தார்; காலம்—வரப்போகும் மரண ஆபத்து; ப்ரதிவ்யோடும்—இத்தகைய செயலிலிருந்து அவனை நிறுத்த; இதம்—இந்த; தத்ர—அதன் காரணமாக; அன்வபத்யத—வேறு வழிகளைப் பற்றி எண்ணினார்.
கம்சன் தன் தங்கையான தேவகியைக் கொல்ல உறுதி கொண்டிருப்பதைக் கண்ட வசுதேவர், ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார். வரப்போகும் மரண ஆபத்தைக் கருத்தில் கொண்ட அவர், கம்சனைத் தடுப்பதற்குரிய வேறொரு திட்டதைப் பற்றி எண்ணினார்.
பதம் 10.1.48
ம்ருத்யுர் புத்திமதாபோஹ்யோ யாவத் புத்தி-பலோதயம்
யதி அஸௌ ந நிவர்தேத நாபராதோ ‘ஸ்தி தேஹின:
ம்ருத்யுர:—மரணம்; புத்தி-மதா—ஒரு புத்திசாலியால்; அபோஹ்ய:—தவிர்க்கப்பட வேண்டும்; யாவத்—அதுவரை; புத்தி-பல-உதயம்—புத்தியும், தேகபலமும் உள்ளன; யதி—என்றால்; அஸௌ—அதை (மரணத்தை); ந நிவர்தேத—தடுக்க முடியாது; ந—இல்லை; அபாரத:—குற்றம்; அஸ்தி—இருக்கிறது; தேஹின:—மரண ஆபத்தில் உள்ளவனின்.
புத்திசாலியொருவன் தனக்குப்புத்தியும், தேகபலமும் எஞ்சியுள்ளவரை மரணத்தைத் தடுக்க முயலவேண்டும். இது, உடல்பெற்ற ஒவ்வொரு நபருக்கும் கடமையாகும். ஆனால், மரணத்தைத் தடுக்க முயன்றும் அது இயலாவிடில், மரணத்தை எதிர்நோக்குபவன் குற்றம் செய்தவனாகான்.
பதங்கள் 10.1.49 — 10.1.50
ப்ரதாய ம்ருத்யவே புத்ரான் மோசயே க்ருபணாம் இமாம்
ஸுதா மே யதி ஜாயேரன் மிருத்யுர் வா ந ம்ரியேத சேத்
விபர்யயோ வா கிம் ந ஸ்யாத் கதிர் தாதுர் துரத்யயா
உபஸ்திதோ நிவர்தேத நிவ்ருத்த: புனர் ஆபதேத்
ப்ரதாய—கொடுப்பதாக உறுதிசெய்து; ம்ருத்யவே—தேவகிக்கு மரண சொரூபமாக விளங்கிய கம்சனிடம்; புத்ரான்—என் மகன்களை; மோசயே—உடனடியாக வரப்போகும் ஆபத்திலிருந்து அவளை நான் விடுவிக்கிறேன்; க்ருபணாம்—குற்றமற்ற; இமாம்—தேவகி; ஸுதா:—மகன்கள்; மே—எனது; யதி—எவ்வகையிலும்; ஜாயேரன்—பிறக்க வேண்டும்; ம்ருத்யு:—கம்சன்; வா—அல்லது; ந—இல்லை; ம்ரியேத—மடிய வேண்டும்; சேத்—என்றால்; விபர்யய:—நேரெதிரான; வா—அல்லது; கிம்—என்ன; ந—இல்லை; ஸ்யாத்—அது நடக்கக் கூடும்; கதி:—அசைவு; தாது:—விதியின்; துரத்யயா—புரிந்து கொள்ள மிகக் கடினமான; உபஸ்தித:—தற்பொழுது அடையப்படுவதை; நிவர்தேத—நிறுத்திவிடக் கூடும்; நிவ்ருத்த:—தேவகியின் மரணத்தைத் தடுத்து; புன: ஆபதேத்—எதிர்காலத்தில் மீண்டும் அது நிகழக்கூடும் (ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்).
வசுதேவர் கருதினார்: மரண சொரூபமான கம்சனிடம் என்னுடைய மகன்களையெல்லாம் ஒப்படைப்பதாகக் கூறி தேவகியின் உயிரை நான் காப்பாற்ற வேண்டும் ஒருவேளை, என் மகன்கள் பிறப்பதற்கு முன்பே கம்சன் இறந்துவிடக்கூடும். அல்லது என் மகனின் கரங்களால் அவன் மடியவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், என் மகன்களுள் ஒருவன் அவனைக் கொன்றுவிடக் கூடும். இப்போதைக்கு என் மகன்களைக் கம்சனிடம் ஒப்படைப்பதாக நான் வாக்குறுதி செய்ய வேண்டும். இதனால் கம்சன் இந்த திடீர் ஆபத்தைக் கைவிடுவான். மேலும் தாலப்போக்கில் கம்சன் இறந்துவிடுவானாயின் நான் அஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது.
பதம் 10.1.51
அக்னோ யதா தாரு-வியோக-யோகயோர்
அத்ருஷ்டதோ ‘ன்யன் ந நிமித்தம் அஸ்தி
ஏவம் ஹி ஜந்தோர் அபி துர்விபாவ்ய:
சரீர-ஸம்யோக-வியோக-ஹேது:
அக்னே:—ஒரு காட்டுத்தீயின்; யதா—போல்; தாரு—கட்டையின்; வியோக-யோகயோ:—தப்புதல், கைப்பற்றுதல் ஆகிய இரண்டின்; அத்ருஷ்டத:—காணப்படாத விதியைத் தவிர; அன்யத்—வேறொரு காரணம் அல்லது விபத்து; ந—இல்லை; நிமித்தம்—ஒரு காரணம்; அஸ்தி—இருக்கிறது; ஏவம்—இவ்விதமாக; ஹி—சந்தேகமின்றி; ஜன்தோ:—ஜீவராசியின்; அபி—உண்மையில்; துர்விபாவ்ய—கண்டுபிடிக்க முடியாது; சரீர—உடலின்; ஸம்யோக—ஏற்பதின்; வியோக—அல்லது கைவிடுவதின்; ஹேது:—காரணம்.
புரியாத ஒரு காரணத்தினால் ஒரு நெருப்பு ஒரு கட்டையிலிருந்து அடுத்ததற்குப் பாய்ந்து அதை தீப்பற்றிக்கொள்ளச் செய்யுமானால், அதற்கு விதிதான் காரணம் அதுபோலவே ஒரு ஜீவராசி ஒருவித உடலை ஏற்று மற்றொன்றை விட்டுவிடுவதற்கு, கண்ணுக்குப் புலப்படாத விதியைத் தவிர வேறு காரணம் இல்லை.
பதம் 10.1.52
ஏவம் விம்ருஸ்ய தம் பாபம் யாவத்-ஆத்மனி-தர்சனம்
பூஜயாம் ஆஸ வை செளரிர் பஹு-மான-புரஹ்ஸரம்
ஏவம்—இவ்விதமாக; விம்ருஸ்ய—ஆழ்ந்து யோசித்த பிறகு; தம்—கம்சனிடம்; பாபம்—பெரும் பாவியான; யாவத்—இயன்றவரை; ஆத்மனி-தர்சனம்—தனக்கு சாத்தியமான புத்தியுடன்; பூஜயாம் ஆஸ—புகழ்ந்தார்; வை—உண்மையில்; சௌரி:—வசுதேவர்; பஹுமான—பூரண மரியாதை அளித்து; புரஹ்ஸரம்—அவன் முன்.
இவ்வாறு தமது அறிவிற்கு எட்டியவரை இவ்விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த பிறகு, வசுதேவர் மிகவும் மரியாதையுடன் பாவியான கம்சனிடம் தன் திட்டத்தைக் கூறினார்.
பதம் 10.1.53
ப்ரஸன்ன-வதானம் போஜோ ந்ருசம்ஸம் நிரபத்ரபம்
மனஸா தூயமானேன விஹஸன் இதம் அப்ரவீத்
ப்ரஸன்ன-வதன-அம்போஜ:—வெளிப்படையாக மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதுபோல் காட்டிக் கொண்ட வசுதேவர்; ந்ருசம்ஸம்—மிகவும் கொடூரமானவனிடம்; நிரபத்ரபம்—வெட்கமற்ற கம்சன்; மனஸா—மனதுடன்; தூயமானேன—கவலையும் துக்கமும் நிறைந்திருந்த; விஹஸன்—வெளிப்படையாக சிரித்துக் கொண்டு; இதம் அப்ரவீத்—பின்வருமாறு கூறினார்.
தன் மனைவி ஆபத்தை எதிர்நோக்கி இருந்ததால், வசுதேவரின் மனதில் கவலை நிறைந்திருந்தது. ஆனால் கொடூரமானவனும், வெட்கமற்றவனும், பாவியுமான கம்சனை மகிழ்விப்பதற்காக, வசுதேவர் வெளிப்படையாகப் புன்னகை செய்து பின்வருமாறு அவனிடம் கூறினார்.
பதம் 10.1.54
ஸ்ரீ-வஸுதேவ உவாச
ந ஹி அஸ்யாஸ் தே பயம் ஸெளம்ய யத் வை ஸாஹாசரீர-வாக்
புத்ரான் ஸமர்பயிஷ்யே ‘ஸ்யா யதஸ் தே பயம் உத்திதம்
ஸ்ரீ-வஸுதேவ: உவாச—ஸ்ரீ வசுதேவர் கூறினார்; ந—இல்லை; ஹி—உண்மையில்; அஸ்யா:—தேவகியிடமிருந்து; தே—உமக்கு; பயம்—பயம்; ஸௌம்ய—மிகவும் நிதானம் உள்ளவரே; யத்—எது; வை—உண்மையில்; ஸா—அந்த அசரீரி; ஆஹ—கூறியது; அசரீர-வாக்—அசிரீரி வாக்கு; புத்ரான்—என் மகன்களை எல்லாம்; ஸமர்பயிஷ்யே—உம்மிடம் நான் கொடுத்துவிடுகிறேன்; அஸ்யா:—அவளுடைய (தேவகியின்); யத:—யாரிடமிருந்து; தே—உமது; பயம்—பயம்; உத்திதம்–எழுந்துள்ளதே.
வசுதேவர் கூறினார்: நிதானமுள்ளவருள் சிறந்தவரே, அசரீரி கூறியதை நீர் கேட்ட போதிலும், உமது தங்கையான தேவகியிடம் நீர் அஞ்சுவதற்கு எதுவுமில்லை. அவளுடைய மகன்கள்தான் உமது மரணத்திற்குத் காரணமாக இருக்கப் போகிறார்கள். யாரிடமிருந்து உமக்கு பயம் எழுந்துள்ளதோ, அந்த மகன்களை அவள் பெற்றெடுக்கும் பொழுது, உம்மிடம் ஒப்படைப்பதாக நான் வாக்களிக்கிறேன்.
பதம் 10.1.55
ஸ்ரீ-ஸுக உவாச
ஸ்வஸுர் வதான் நிவவ்ருதே கம்ஸஸ் தத்-வாக்ய-ஸார-வித்
வஸுதேவோ `பி தம் ப்ரீத: ப்ரசஸ்ய ப்ராவிசத் க்ருஹம்
ஸ்ரீ ஸுக-உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸ்வஸு:—தன் தங்கையை (தேவகியை); வதாத்—கொல்லும் செயலிலிருந்து; நிவவ்ருதே—தற்போதைக்கு நிறுத்திக் கொண்டான்; கம்ஸ:—கம்சன்; தத்–வாக்ய—வசுதேவரின் வார்த்தைகள்; ஸாரவித்—முற்றிலும் உண்மையானவை என்பதை அறிந்து; வஸுதேவ:—வசுதேவர்; அபி—மேலும்; தம்—அவனிடம் (கம்சனிடம்); ப்ரீத:—திருப்தியடைந்து; ப்ரசஸ்ய—இன்னும் அதிகமாக சமாதானப்படுத்தி; ப்ராவிசத் க்ருஹம்—அவரது சொந்த வீட்டிற்குள் புகுந்தார்.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: வசுதேவரின் ஞான வாதத்தை கம்சன் ஒப்புக்கொண்டான். இவ்வாறு வசுதேவரின் வார்த்தைகளில் முழு நம்பிக்கைக் கொண்ட கம்சன், தன் தங்கையைக் கொல்வதை நிறுத்திக் கொண்டான். கம்சனிடம் திருப்தியடைந்த வசுதேவர், அவனை மேலும் சமாதானப்படுத்திவிட்டு தமது சொந்த வீட்டிற்குச் சென்றார்.
பதம் 10.1.56
அத கால உபாவ்ருத்தே தேவகீ ஸர்வ-தேவதா
புத்ரான் ப்ரஸுஷுவே சாஷ்டௌ கன்யாம் சைவானுவத்ஸரம்
அத—அதன்பிறகு; காலே—காலப்போக்கில்; உபாவ்ருத்தே—அது கனிந்தபொழுது; தேவகி—கிருஷ்ணருடைய தந்தையான வசுதேவரின் மனைவி, தேவகி; ஸர்வ-தேவதா—யாரிடம் பகவானும் எல்லா தேவர்களும் தோன்றினார்களோ, அந்த தேவகி; புத்ரான்—புத்திரர்களை; ப்ரஸுஷுவே—பெற்றெடுத்தாள்; ச—மேலும்; அஷ்டௌ—எட்டு; கன்யாம் ச—மற்றும் சுபத்திரை என்ற ஒரு புதல்வியையும்; ஏவ—உண்மையில்; அனுவத்ஸரம்—ஆண்டுதோறும்.
அதன்பிறகு, பகவானுக்கும் எல்லாத் தேவர்களுக்கும் தாயான தேவகி, காலப்போக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். இவ்வாறாக ஒவ்வொரு குழந்தையாக எட்டு மகன்களையும். சுபத்திரை என்ற ஒரு மகளையும் அவன் பெற்றாள்.
பதம் 10.1.57
கீர்த்திமந்தம் ப்ரதமஜம் கம்ஸாயாநகதுந்துபி:
அர்பயாம் ஆஸ க்ருச்ரேண ஸோ ‘ன்ருதாத் அதிவிஹ்வல:
கீர்த்திமந்தம்—கீர்த்திமான் என்ற பெயர் கொண்ட; ப்ரதம-ஜம்— முதலில் பிறந்த குழந்தையை; கம்ஸாய—கம்சனிடம்; ஆனகதுந்துபி:—வசுதேவர்; அர்பயாம் ஆஸ—ஒப்படைத்தார்; க்ருச்ரேண—மிகவும் வருத்தத்துடன்; ஸ:—அவர் (வசுதேவர்); அன்ருதாத்—வாக்குறுதியை மீறுவதற்கு, அல்லது பொய்யனெனும் பயத்திற்கு; அதி-விஹ்வல:—அஞ்சியதால் அமைதி இழந்தவரானார்.
வார்த்தை பொய்யாவதற்கு அஞ்சிய வசுதேவர் அமைதியை இழந்து மிகவும் வருத்தத்துடன் தமது முதல் குமாரனான கீர்த்திமான் என்பவனைக் கம்சனிடம் ஒப்படைத்தார்.
பதம் 10.1.58
கிம் துஹ்ஸஹம் நு ஸாதூனாம் விதுஷாம் கிம் அபேக்ஷிதம்
கிம் அகார்யம் கதர்யாணாம் துஸ்த்யஜம் கிம் த்ருதாத்மனாம்
கிம்—இருப்பது; துஹ்ஸஹம்—துன்பமானது; நு—உண்மையில்; ஸாதூனாம்—சாதுக்களுக்கு; விதுஷாம்—கற்றவர்களின்; கிம்-அபேக்ஷிதம்—கீழ்ப்பட்டுள்ள நிலை; கிம் அகார்யம்—தடைவிதிக்கப்பட்ட செயலாக இருப்பது; கதர்யாணாம்—மிகவும் இழிவான நிலையில் உள்ளவர்களின்; துஸ்த்யஜம்—கைவிடுவதற்கு மிகக்கடினம்; கிம்—இருப்பது; த்ருத-ஆத்மனாம்—தன்னுணர்வு பெற்றவர்களுக்கு.
உண்மையில் உறுதியாகப் பின்பற்றும் சாதுக்களுக்குத் துன்பம் தருவது எது? பரமபுருஷரே சாராம்சம் என்பதை அறிந்துள்ள தூய பக்தர்களுக்கு எப்படி சுதந்திரம் இல்லாதிருக்கக்கூடும்; மிகத் தாழ்ந்த ஒழுக்கம் உடையவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள செயல்கள் என்னென்ன? மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் முழுமையாக சரணடைந்தவர்களுக்கு கிருஷ்ணரின் பொருட்டு விட முடியாதது எது?
பதம் 10.1.59
த்ருஷ்ட்வா ஸமத்வம் தச் சௌரே: ஸத்யே சைவ வ்யவஸ்திதிம்
கம்ஸஸ் துஷ்ட-மனா ராஜன் ப்ரஹஸன் இதம் அப்ரவீத்
த்ருஷ்ட்வா—கண்டதால்; ஸமத்வம்—இன்பதுன்பங்களில் சமத்துவமாக இருப்பதை; தத்—அந்த; சௌரே:—வசுதேவரின்; ஸத்யே—சத்தியத்தில்; ச—உண்மையில்; ஏவ—நிச்சயமாக; வ்யவஸ்திதிம்—உறுதியான நிலை; கம்ஸ:—கம்சன்; துஷ்ட-மனா:—(தனது வாக்கைக் காப்பாற்றும் வகையில் தனது முதல் குழந்தையை வசுதேவர் தன்னிடம் ஒப்படைத்ததில்) மிகவும் திருப்தியடைந்த; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; ப்ரஹஸன்—புன்னகை பூத்த முகத்துடன்; இதம்—இதை; அப்ரவீத்—கூறினான்.
அன்புள்ள பரீட்சித்து மகாராஜனே, வசுதேவர் சத்தியத்தில் நிலையாக இருந்தையும், தன்னிடம் குழந்தையை ஒப்படைப்பதில் முற்றிலும் சமத்துவ நிலையில் இருந்ததையும் கண்ட கம்சன், மிகவும் மகிழ்ந்து புன்னகை பூத்த முகத்துடன் பின்வருமாறு கூறினான்.
பதம் 10.1.60
ப்ரதியாது குமாரோ ‘யம் ந ஹி அஸ்மாத் அஸ்தி மே பயம்
அஷ்டமாத் யுவயோர் கர்பான் ம்ருத்யுர் மே விஹித: கில
ப்ரதியாது—அன்புள்ள வசுதேவரே, உமது குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லும்; குமார:—புதிதாகப் பிறந்த குழந்தை; அயம்—இந்த; ந—இல்லை; ஹி—உண்மையில்; அஸ்மாத்—அவனிடமிருந்து; அஸ்தி—உள்ளது; மே—எனது; பயம்—பயம்; அஷ்டமாத்—எட்டாவதிலிருந்து; யுவயோ:—உமது மற்றும் உமது மனைவியின்; கர்பாத்—கர்ப்பத்திலிருந்து; ம்ருத்யு:—மரணம்; மே—எனது; விஹித:—உத்தரவிடப்பட்டுள்ளது; கில—உண்மையில்.
வசுதேவரே, இக்குழந்தையை எடுத்துக்கொண்டு நீர் வீடு திரும்பலாம். உம்முடைய முதல் குழந்தையிடம் எனக்கு பயம் இல்லை. உமக்கும் தேவகிக்கும் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தைதான் என் கவலைக்குக் காரணம். ஏனெனில், அக்குழந்தையால்தான் நான் கொல்லப்படுவேன் என்று விதிக்கப்பட்டுள்ளது.
பதம் 10.1.61
ததேதி ஸுதம் ஆதாய யயாவ் ஆனகதுந்துபி:
நாப்யனந்தத தத்-வாக்யம் அஸதோ ‘விஜிதாத்மன:
ததா—மிக நன்று; இதி—இவ்வாறாக; ஸுதம் ஆதாய—தம் குழந்தையை எடுத்துக்கொண்டு; யயௌ—அந்த இடத்தைவிட்டு அகன்றார்; ஆனகதுந்துபி:—வசுதேவர்; ந அப்யனந்தத—உயர்வாக மதிக்கவில்லை; தத்-வாக்யம்—(கம்சனின்) வார்த்தைகளை; அஸத:—ஒழுக்கமற்ற; அவிஜித-ஆத்மன:—மற்றும் புலனடக்கம் இல்லாத.
இதற்குச் சம்மதித்த வசுதேவர், குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். கம்சனுக்கு ஒழுக்கமும், புலனடக்கமும் இல்லையென்பதால் அவனுடைய வார்த்தைகளை நம்பமுடியாது என்பதை வசுதேவர் அறிந்திருந்தார்.
பதங்கள் 10.1.62 — 10.1.63
நந்தாத்யா யே வ்ரஜே கோபா யாஸ் சாமீஷாம் ச யோஷித:
வ்ருஷ்ணயோ வஸுதேவாத்யா தேவகி-ஆத்யா யது-ஸ்திரிய:
ஸர்வே வை தேவதா-ப்ராயா உபயோர் அபி பாரத
க்ஞாதயோ பந்து-ஸுஹ்ருதோ யே ச கம்ஸம் அனுவ்ரதா:
நந்த-ஆத்யா:—நந்த மகாராஜன் முதலான; ஏ—எவர்களுடைய; வ்ரஜே—பிருந்தாவனத்தில்; கோபா:—கோபர்கள்; யா:—எது; ச—மேலும்; அமீஷாம்—அவர்கள் அனைவரின் (பிருந்தாவன வாசிகள்); ச—அத்துடன்; யோஷித:—பெண்கள்; வ்ருஷ்ணய:—விருஷ்ணி வம்சத்தினர்; வஸுதேவ-ஆத்யா:—வசுதேவரைத் தலைமையாகக் கொண்ட; தேவகீ-ஆத்யா:—தேவகியைத் தலைமையாகக் கொண்ட; யது-ஸ்த்ரிய:—யது வம்சத்துப் பெண்கள் அனைவரும்; ஸர்வே—அவர்கள் அனைவரும்; வை—உண்மையில்; தேவதா-ப்ராயா:—சுவர்க்கலோகவாசிகளாவர்; உபயோ:—நந்த மகாராஜன் மற்றும் வசுதேவர் ஆகிய இருவரின்; அபி—உண்மையில்; பாரத—பரீட்சித்து மகாராஜனே; க்ஞாதய:—உறவினர்கள்; பந்து—நண்பர்கள்; ஸுஹ்ருத:—நலம் விரும்பிகள்; யே—அவர்கள்; ச—மேலும்; கம்ஸம் அனுவ்ரதா:—வெளித்தோற்றத்தில் கம்சனின் ஆட்களைப் போல் காணப்பட்ட போதிலும்.
பரதகுலத்தில் சிறந்த பரீட்சித்து மகாராஜனே, நந்த மகாராஜன் முதலான கோபர்கள், அவர்களது மனைவிகள் ஆகிய பிருந்தாவன வாசிகளும், வசுதேவர் முதலான விருஷ்ணி குலத்தவர்களும், யது வம்சத்தைச் சேர்ந்த தேவகி முதலான பெண்களும், தேவலோக வாசிகளேயன்றி வேறில்லை. நந்த மகாராஜன் மற்றும் வசுதேவர் ஆகியோரின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம்விரும்பிகள் ஆகியோரும், வெளித்தோற்றத்தில் கம்சனின் ஆட்களைப் போல் காணப்பட்டவர்களும் கூட தேவர்களேயாவர்.
பதம் 64
ஏத்த கம்ஸாய பகவாஞ் சசம்ஸாப்யேத்ய நாரத:
பூமோ பாராயமாணானாம் தைத்யானாம் ச வதோத்யமம்
ஏதத்—யது மற்றும் விருஷ்ணி குடும்பங்களைப் பற்றிய இவ்வார்த்தைகளை; கம்ஸாய—கம்ச மன்னனிடம்; பகவான்—பரமபுருஷரின் சக்தி வாய்ந்த பிரதிநிதி; சசம்ஸ—(சந்தேகத்திலிருந்த கம்சனிடம்) அறிவித்தார்; அப்யேத்ய—அவனை அணுகி; நாரத:—மாமுனிவரான நாரதர்; பூமே:—பூமியில்; பாராயமாணானாம்—சுமையாக இருந்தவர்களை; தைத்யானாம் ச—மற்றும் அசுரர்களை; வத-உத்யமம்—கொல்லும் முயற்சியை.
ஒருசமயம் மாமுனிவரான நாரதர் கம்சனை அணுகி, பூமிக்குப் பெரும் பாரமாக உள்ள அசுரர்கள் எப்படி கொல்லப்படப் போகிறார்கள் என்பத அவனிடம் அறிவித்தார். இவ்விதமாக கம்சன் பெரும்பயத்திற்கும், சந்தேகத்திற்கும் உள்ளானான்.
பதங்கள் 10.1.65 — 10.1.66
ரிஷேர் வினிர்கமே கம்ஸோ யதூன் மத்வா ஸுரான் இதி
தேவக்யா கர்ப-ஸம்பூதம் விஷ்ணும் ச ஸ்வ-வதம் ப்ரதி
தேவகீம் வஸுதேவம் ச நிக்ருஹ்ய நிகடைர் க்ருஹே
ஜாதம் ஜாதம் அஹன் புத்ரம் தயோர் அஜன-சங்கயா
ரிஷே:—மாமுனிவரான நாரதரின்; வினிர்கமே—(தகவல் அளித்த பிறகு) புறப்பட்டதும்; கம்ஸ:—கம்சன்; யதூன்—யது வம்சத்தினர் அனைவரும்; மத்வா—என்றெண்ணி; ஸுரான்—தேவர்கள்; இதி—இவ்வாறாக; தேவக்ய:—தேவகியின்; கர்ப-ஸம்பூதம்—கர்ப்பத்திலிருந்து பிறந்த குழந்தைகளை; விஷ்ணும்—விஷ்ணுவாக (ஏற்று); ச—மேலும்; ஸ்வ-வதம் ப்ரதி—விஷ்ணுவால் தனக்கு மரணம் சம்பவிக்கப்போகிறது என்றஞ்சி; தேவகீம்—தேவகியை; வஸுதேவம் ச—மற்றும் அவளது கணவரான வசுதேவரை; நிக்ருஹ்ய—சிறைவாசம்; நிகடைர்—இரும்பு கட்டுகளால்; க்ருஹே—வீட்டில் அடைக்கப்பட்ட; ஜாதம் ஜாதம்—ஒன்றன் பின் ஒன்றாகப் பிறந்த ஒவ்வொருவரையும்; அஹன்—கொன்றான்; புத்ரம்—மகன்களை; தயோ:—வசுதேவர் மற்றும் தேவகியின்; அஜன-சங்கயா—அவர்கள் விஷ்ணுவாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தில்.
மாமுனிவரான நாரதர் புறப்பட்டுச் சென்றபின், யது வம்சத்தின் அங்கத்தினர் அனைவரும் தேவர்களே என்றும், தேவகியின் கர்ப்பத்தில் பிறந்த எந்தவொரு குழந்தையும் விஷ்ணுவாக இருக்கக்கூடும் என்றும் கம்சன் எண்ணினான். தன் மரணத்திற்கு அஞ்சிய கம்சன் வசுதேவரையும், தேவகியையும் கைது செய்து அவர்களை விலங்கிலிட்டான். விஷ்ணு தன்னைக் கொல்வார் என்ற அசரீரியின் வாக்குப்படி, ஒவ்வொரு குழந்தையும் விஷ்ணுவாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்து, அவர்களை ஒருவர் பின் ஒருவராக கம்சன் கொன்றான்.
பதம் 10.1.67
மாதரம் பிதரம் ப்ராத்ரூன் ஸர்வாம்ஸ் ச ஸுஹ்ருதஸ் ததா
க்னந்தி ஹி அஸுத்ருபோ லுப்தா ராஜான: ப்ராயசோ புவி
மாதரம்—தாயை; பிதரம்—தந்தையை; ப்ராத்ரூன்—சகோதரர்களை; ஸர்வான் ச—வேறு யாரையும்; ஸுஹ்ருத:—நண்பர்கள்; ததா—அத்துடன்; க்னந்தி—(நடைமுறையில் காணப்படுவதுபோல்) அவர்கள் கொன்று விடுகின்றனர்; ஹி—உண்மையில்; அஸுத்ருப:—தங்களுடைய சொந்த புலன் நுகர்வுக்காக பிறரிடம் பொறாமை கொள்பவர்கள்; லுப்தா:—பேராசையுடைய; ராஜான:—இத்தகைய அரசர்கள்; ப்ராயச:—கிட்டத்தட்ட எப்பொழுதுமே; புவி—பூமியில்.
இந்த பூமியில் புலன் நுகர்வில் பேராசை கொண்டுள்ள அரசர்கள், கிட்டத்தட்ட எப்பொழுதுமே தங்களுடைய எதிரிகளைக் கண்மூடித்தனமாகக் கொலை செய்கின்றனர்; தங்களுடைய திடீர் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள, சொந்த தாய் தந்தைகள், சகோதரர்கள் அல்லது நண்பர்களைக்கூட அவர்கள் கொன்றுவிடக்கூடும்.
பதம் 10.1.68
ஆத்மானம் இஹ ஸஞ்ஜாதம் ஜானன் ப்ராக் விஷ்ணுனா ஹதம்
மஹாஸுரம் காலனேமிம் யதுபி: ஸ வ்யருத்யத
ஆத்மானம்—சுயமாக; இஹ—இவ்வுலகில்; ஸஞ்ஜாதம்—மீண்டும் பிறந்த; ஜானன்—நன்கறிந்து; ப்ராக்—முன்னர், இப்பிறப்பிற்கு முன்; விஷ்ணுனா—பகவான் விஷ்ணுவால்; ஹதம்—கொல்லப்பட்டான்; மஹா-அஸுரம்—பெரிய அசுரன்; காலனேமிம்—காலநேமி எனும் பெயர் கொண்ட; யதுபி:—யது வம்சத்தினருடன்; ஸ:—அவன் (கம்சன்); வ்யருத்யத—விரோதம் கொண்டான்.
முற்பிறவியில், காலநேமி என்ற பெரிய அசுரனாக விளங்கிய கம்சன், விஷ்ணுவால் கொல்லப்பட்டான், நாரதரிடமிருந்து இத்தகவலை அறிந்து கம்சன், யது வம்சத்துடன் சம்பந்தப்பட்டுள்ள ஒவ்வொருவரிடமும் பொறாமை கொண்டான்.
பதம் 10.1.69
உன்ரஸேனம் ச பிதரம் யது-யது போஜாந்தகாதிபம்
ஸ்வயம் நிக்ருஹ்ய புபுஜே சூரஸேனான் மஹா-பல:
உக்ரஸேனம்—உக்ரசேனரை; ச—மற்றும்; பிதரம்—அவனது சொந்த தந்தையான; யது—யது வம்சத்தின்; போஜ—போஜ வம்சத்தின்; அந்தக—அந்தக வம்சத்தின்; அதிபம்—அனுபவித்தான்; சூரஸேனான்—சூரசேனம் என்ற எல்லா நாடுகளையும்; மஹா-பல:—மிகவும் சக்திவாய்ந்த கம்சன்.
உக்ரசேனரின் மிகவும் சக்திவாய்ந்த மகனான கம்சன், யது, போஜ மற்றும் அந்தக வம்சங்களின் அரசராக இருந்த தன் சொந்தத் தந்தையைக்கூட சிறையிலடைத்து, சூரசேனம் என்ற நாடுகளைத் தானே ஆண்டு வந்தான்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தோற்றம்: அறிமுகம்” எனும் தலைப்பை கொண்ட ஒன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.