அத்தியாயம் – 13
திமி மகராஜனின் வம்சம்
பதம் 9.13.1 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார். இக்ஷ்வாகு புத்திரரான நிமி மகாராஜன், யாகங்களை ஆரம்பித்த பின், மாமுனிவர் வசிஷ்டரை தலைமைப் புரோகிதரின் பதவியை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது வசிஷ்டர் கூறினார், “அன்புள்ள நிமி மகாராஜனே, இந்திரனால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு யாகத்தில் இதே பதவியை நான் முன்பே ஒப்புக் கொண்டு விட்டேன்.

பதம் 9.13.2 : “இந்திரனின் யாகத்தை முடித்தபின் நான் திரும்பி வருவேன். அதுவரை தயவுசெய்து எனக்காகக் காத்திரும்” என்று கூறினார். நிமி மகாராஜன் மௌனமானார். வசிஷ்டரும் இந்திரனுக்காக யாகம் செய்யத் துவங்கினார்.

பதம் 9.13.3 : நிமி மகாராஜன் தன்னுணர்வு பெற்ற ஓராத்மா என்பதால், இவ்வாழ்வு நிலையற்றதென கருதினார். எனவே, வசிஷ்டருக்காக நீண்ட காலம் காத்திருப்பதற்குப் பதிலாக, வேறு புரோகிதர்களைக் கொண்டு அவர் யாகத்தைத் துவங்கினார்.

பதம் 9.13.4 : இந்திரனுக்காக யாகத்தைச் செய்து முடித்தபின் திரும்பி வந்த குரு வசிஷ்டர், தன் சீடரான நிமி மகாராஜன் தன் உபதேசத்தை மீறிவிட்டதைக் கண்டார். இதனால் வசிஷ்டர் பின்வருமாறு அவரைச் சபித்தார்: “தன்னைப் பண்டிதனென்று கருதும் நிமியின் ஜட உடல் உடனே விழட்டும்.

பதம் 9.13.5 : நிமி மகாராஜன் குற்றம் செய்யாத போதிலும், தேவையின்றி அவரைச் சபித்ததற்காக, நிமியும் தன் குருவை பதிலுக்குச் சபித்தார். அவர் கூறினார், “சுவர்க்க ராஜனின் நன்கொடையைப் பெறுவதற்காக, உமது சமயோசித புத்தியை நீர் இழந்தீர். எனவே இச்சாபத்தை நான் விடுகிறேன்: உமது உடலும் விழட்டும்”

பதம் 9.13.6 : இதைக் கூறியபின், ஆத்ம ஞானத்தில் கைதேர்ந்தவரான நிமி மகாராஜன், தம் உடலை விட்டார். முப்பாட்டனாரான வசிஷ்டரும் தன் உடலை விட்டார். ஆனால் ஊர்வசியைக் கண்டபோது மித்திரனும், வருணனும் பாய்ச்சிய விந்தின் மூலமாக அவர் மீண்டும் பிறந்தார்.

பதம் 9.13.7 : யாகம் செய்யப்படும் வேளையில், நிமி மகாராஜனால் கைவிடப்பட்ட அவரது உடல் வாசனைத் திரவியங்களால் பாதுகாக்கப்பட்டது. அந்த ஸத்ர-யாகத்தின் முடிவில், சிறந்த முனிவர்களும் பிராமணர்களும், அங்கு கூடியிருந்த தேவர்களிடம் பின்வருமாறு விண்ணப்பித்தனர்.

பதம் 9.13.8 : “இந்த யாகத்தினால் நீங்கள் திருப்தி அடைந்திருப்பீர்களானால், மேலும் உண்மையாகவே உங்களால் முடியுமானால், நிமி மகாராஜனின் இவ்வுடலை உயிர்ப்பிக்க வேண்டுகிறோம்.” தேவர்கள் இவ்வேண்டுகோளுக்கு ஆமோதித்தனர். ஆனால் நிமி மகாராஜன், “தயவு செய்து மீண்டும் என்னை ஒரு ஜட உடலில் சிறைப்படுத்த வேண்டாம் என்று கூறினார்.”

பதம் 9.13.9 : நிமி மகாராஜன் தொடர்ந்து கூறினார்: ஜட உடலை ஏற்றால், மீண்டும் அதைக் கைவிட வேண்டும் என்பதற்கு அஞ்சும் மாயாவாதிகள் பொதுவாக அதிலிருந்து விடுதலையடைய விரும்புகின்றனர். ஆனால் பகவத் தொண்டிலேயே எப்போதும் புத்தியைப் பதித்துள்ள பக்தர்கள் அதற்கு அஞ்சுவதில்லை. உண்மையில், பகவானுக்கு உன்னத அன்புத் தொண்டைச் செய்வதற்கு அவர்கள் உடலை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பதம் 9.13.10 : ஒரு ஜட உடலை ஏற்றுள்ள மீன் ஒன்று மரண பயத்தினால் எப்பொழுதும் மன விசாரத்துடன் வாழ்கிறது. எனவே, அத்தகைய ஒரு ஜட உடல் பிரபஞ்சத்தில் எல்லா வகையான துன்பங்களுக்கும், விசனங்களுக்கும், பயத்திற்கும் காரணமாக இருப்பதால், அதை ஏற்க நான் விரும்பவில்லை.

பதம் 9.13.11 : தேவர்கள் கூறினர்: நிமி மகாராஜன் ஒரு ஜட உடலைப் பெறாமலேயே வாழட்டும். பரமபுருஷரின் ஓர் அந்தரங்க சகாவாக இருந்து கொண்டு, தம் விருப்பம் போல், உடல்பெற்ற சாதாரண பெளதிக மனிதனின் கண்களுக்குப் புலப்படுவதும், புலப்படாததுமாகிய ஓர் ஆன்மீக உடலில் அவர் வாழட்டும்.

பதம் 9.13.12 : அதன்பிறகு, ஒழுங்கற்ற அரசாங்கத்தால் விளையக்கூடிய ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக, முனிவர்கள் நிமி மகாராஜனின் ஜட உடலைக் கடைந்தனர். இதன் பயனாக அவ்வுடலிலிருந்து ஒரு மகன் பிறந்தான்.

பதம் 9.13.13 : அவர் வழக்கத்திற்கு மாறாகப் பிறந்ததால் ஜனகர் என்று அழைக்கப்பட்டார். தன் தந்தையின் உயிரற்ற உடலிலிருந்து பிறந்ததால் அவர் வைதேஹர் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தையின் பெளகித உடல் கடையப்பட்டதிலிருந்து பிறந்தவர் என்பதால் அவர் மிதிலர் என்று அழைக்கப்பட்டார். மிதிலை மகாராஜனாக அவர் ஒரு நகரத்தை நிர்மாணித்தார், அந்நகரம் மிதிலை என்று அழைக்கப்பட்டது.

பதம் 9.13.14 : பரீட்சித்து மகாராஜனே, மிதிலரிலிருந்து உதாவசு என்ற மகன் வந்தார்; உதாவசுவிலிருந்து நந்தவர்தனனும், அவரிலிருந்து சுகேதுவும், சுகேதுவிலிருந்து தேவராதனும் வந்தனர்.

பதம் 9.13.15 : தேவராதனிலிருந்து பிருஹத்ரதன் என்ற மகன் வந்தார். பிருஹத்ரதனிலிருந்து மஹாவீர்யன் என்ற மகன் வந்தார். இவர் சுத்ருதியின் தந்தையானார். சுத்ருதியின் மகன் திருஷ்டகேது என்பவராவார். திருஷ்டகேதுவிலிருந்து ஹர்யஸ்வன் வந்தார். ஹர்யஸ்வனிலிருந்து மரு என்ற மகன் வந்தார்.

பதம் 9.13.16 : மருவின் மகன் பிரதீபகன். பிரதீபகனின் மகன் கிருதரதன். கிருதரதனிலிருந்து தேவமீடன் வந்தார்; தேவமீடனிலிருந்து விஸ்ருதனும்; மற்றும் விஸ்ருதனிலிருந்து மஹாத்ருதியும் வந்தனர்.

பதம் 9.13.17 : மஹாத்ருதியிலிருந்து கிருதிராதன் என்ற மகன் பிறந்தார். கிருதிராதனிலிருந்து மஹாரோமன் வந்தார். மஹாரோமனிலிருந்து சுவர்ணரோமன் என்ற மகன் வந்தார். அவரிலிருந்து ஹிரஸ்வரோமன் வந்தார்.

பதம் 9.13.18 : ஹிரஸ்வரோமனிலிருந்து (ஜனகர் என்றும் அழைக்கப்படும்) சீரதுவஜன் என்ற மகன் வந்தார். சீரதுவஜன் நிலத்தை உழும் பொழுது, கலப்பையின் (சீரம்) முன்னிருந்து சீதாதேவி என்ற மகள் தோன்றினாள். இவள் பிறகு பகவான் ராமச்சந்திரரின் மனைவியானாள். இதனால் ஜனகர் சீரதுவஜன் எனப்பட்டார்.

பதம் 9.13.19 : சீரதுவஜனின் மகன் குசதுவஜன். குசதுவஜனின் மகன் தர்மதுவஜ மகாராஜன். இவருக்கு கிருததுவஜன், மிததுவஜன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.

பதங்கள் 9.13.20 – 9.13.21 : பரீட்சித்து மகாராஜனே, கிருததுவஜனின் மகன் கேசிதுவஜன், மேலும் மிததுவஜனின் மகன் காண்டிக்யன். கிருததுவஜனின் மகன் ஆத்ம ஞானத்தில் கைதேர்ந்தவராவார். மிததுவஜனின் மகன் வேதக்கிரியைகளில் கைதேர்ந்தவராவார். காண்டிக்யன் கேசிதுவஜனுக்கு அஞ்சி ஓட்டம் பிடித்தார். கேசிதுவஜனின் மகன் பானுமான். பானுமானின் மகன் சதத்யும்னன்.

பதம் 9.13.22 : சதத்யும்னனின் மகன் சுசி. சுசியிலிருந்து சனதுவஜன் பிறந்தார். சனதுவஜனிலிருந்து ஊர்ஜகேது என்ற மகன் வந்தார். ஊர்ஜகேதுவின் மகன் அஜன். அஜனின் மகன் புருஜித்.

பதம் 9.13.23 : புருஜித்தின் மகன் அரிஷ்டனேமி. அவரது மகன் சுருதாயு. சுருதாயு சுபார்ஸ்வகன் என்ற மகனைப் பெற்றார். சுபார்ஸ்வகன் சித்ரரதனைப் பெற்றார். சித்ரரதனின் மகன் க்ஷேமாதி. இவர் மிதிலையின் அரசரானார்.

பதம் 9.13.24 : க்ஷேமாதியின் மகன் சமரதன். அவரது மகன் சத்தியரதன், சத்தியரதனின் மகன் உபகுரு. உபகுருவின் மகன் உபகுப்தன். இவர் அக்னி தேவனின் ஒரு பகுதி அவதாரமாவார்.

பதம் 9.13.25 : உபகுப்தனின் மகன் வஸ்வனந்தன். வஸ்வனந்தனின் மகன் யுயுதன். யுயுதனின் மகன் சுபாஷணன். சுபாஷணனின் மகன் சுருதன். சுருதனின் மகன் ஜயன். அவரிலிருந்து விஜயன் வந்தார். விஜயனின் மகன் ருதன்.

பதம் 9.13.26 : ருதனின் மகன் சுனகன். சுனகனின் மகன் வீதஹவ்யன், வீதஹவ்யனின் மகன் திருதி. திருதியின் மகன் பஹுலாஸ்வன். பஹுலாஸ்வனின் மகன் கிருதி. அவரது மகன் மஹாவசி.

பதம் 9.13.27 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அன்பிற்குரிய பரீட்சித்து மகாராஜனே, மிதில வம்சத்து அரசர்கள் அனைவரும் தங்கள் ஆத்ம சொரூபத்தை நன்கு அறிந்தவர்களாவர். எனவே, வீட்டிலிருந்த போதிலும், அவர்கள் ஜட வாழ்வின் இருமையிலிருந்து விடுபட்டவர்களாக இருந்தனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare