அத்தியாயம் – 10
பகவான் ராமச்சந்திரரின்
திருவிளையாடல்கள்
பதம் 9.10.1
ஸ்ரீ-சுக உவாச
கட்வாங்காத் தீர்கபாஹுஸ் ச ரகுஸ் தஸ்மாத் ப்ருது-ஸ்ரவா:
அஜஸ் ததோ மஹா-ராஜஸ் தஸ்மாத் தசரதோ ‘பவத்

ஸ்ரீ-சுக:உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; கட்வாங்காத்—கட்வாங்க மகாராஜனிலிருந்து; தீர்கபாஹு:—தீர்கபாஹு என்ற மகன்; ச—மேலும்; ரகு: தஸ்மாத்—அவரிலிருந்து ரகு பிறந்தார்; ப்ருது ஸ்ரவா:—புண்ணிய புருஷம், புகழ்பெற்றவருமான; அஜ:—அஜன் என்ற மகன்; தத:—அவரிலிருந்து; மஹாராஜ:—தசரத மகாராஜன் என்ற சிறந்த அரசர்; தஸ்மாத்—அஜனிலிருந்து; தசரத:—தசரதன் என்பவர்; அபவத்—பிறந்தார்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கட்வாங்க மகாராஜனின் மகன் தீர்கபாஹு. அவரது மகன் புகழ்பெற்ற ரகு மகாராஜனாவார். ரகு மகாராஜனிலிருந்து அஜன் வந்தார். அஜனிலிருந்து மகா புருஷராகிய தசரத மகாராஜன் பிறந்தார்.

பதம் 9.10.2
தஸ்யாபி பகவான் ஏஷ ஸாக்ஷாத் ப்ரஹ்மமயோ ஹரி:
அம்சாம்சேன சதுர்தாகாத் புத்ரத்வம் ப்ரார்தித: ஸுரை: ராம-லஷ்மண-பரத-சத்ருக்னா இதி ஸம்க்ஞயா

தஸ்ய—அவருக்கு, தசரத மகாராஜவுக்கு; அபி—கூட; பகவான்—பரமபுருஷ பகவான்; ஏஷ:—அவர்கள் அனைவரும்; ஸாக்ஷாத்—நேரடியாக; ப்ரஹ்ம-மய:—பரப்பிரம்மன், பரம சத்தியம்; ஹரி:—பரமபுருஷர்; அம்ச-அம்சேன—அம்சத்தின் அம்சத்தால்; சதுர்தா—நான்கு அம்சங்களால்; அகாத்—ஏற்றார்; புத்ரத்வம்—புத்திரராகும் தன்மையை; ப்ரார்தித:—பிரார்த்திக்கப்பட்டு; ஸுரை:—தேவர்களால்; ராம—பகவான் ராமச்சந்திரர்; லக்ஷ்மண—பகவான் லக்ஷ்மணர்; பரத—பகவான் பரதர்; சத்ருக்னா:—மற்றும் பகவான் சத்ருக்னர்; இதி—இவ்வாறாக; ஸம்க்ஞயா—வெவ்வேறு பெயர்களால்.

தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டதால், பரம சத்தியமான பரமபுருஷர் தமது அம்சத்துடனும், அம்சத்தின் அம்சங்களுடனும், ராமர், லக்ஷ்மணர், பரதன் மற்றும் சத்ருக்னர் எனும் திருநாமங்களுடன் நேரடியாகத் தோன்றினார். இவ்வாறாக புகழ்பெற்ற அவதாரங்களாகிய இவர்கள் நான்கு ரூபங்களில் தசரத புத்திரர்களாகத் தோன்றினர்

பதம் 9.10.3
தஸ்யானுசரிதம் ராஜன் ரிஷிபிஸ் தத்வ-தர்சிபி:
ஸ்ருதம் ஹி வர்ணிதம் பூரி த்வயா ஸீதா-பதேர் முஹு:

தஸ்ய—அவரின், பரமபுருஷரான பகவான் ராமச்சந்திரர் மற்றும் அவரது சகோதரர்களின்; அனுசரிதம்—திவ்யமான செயல்கள்; ராஜன்—அரசே (பரீட்சித்து மகாராஜனே); ரிஷிபி:—ரிஷிகளால்; தத்வ-தர்சிபி:—பரம சத்தியத்தை அறிந்தவர்களால்; ஸ்ருதம்—கேட்டிருக்கிறீர்; ஹி—உண்மையில்; வர்ணிதம்—நன்கு வர்ணிக்கப்பட்டபடி; பூரி—பல; த்வயா—உம்மால்; ஸீதா-பதே:—சீதையின் கணவரான பகவான் ராமச்சந்திரரைப் பற்றி; முஹு:—திரும்பத்திரும்ப.

பரீட்சித்து மகாராஜனே, பகவான் ராமச்சந்திரரின் திவ்யமான செயல்கள் தத்துவமுணர்ந்த ரிஷிகளால் வர்ணிக்கப்பட்டுள்ளன. சீதையின் கணவரான பகவான் ராமச்சந்திரரைப் பற்றி நீர் அடிக்கடி கேட்டிருப்பதால், அவரது செயல்களைப் பற்றி நான் சுருக்கமாகக் கூறுகிறேன், கேளும்.

பதம் 9.10.4
குரு-அர்தே த்யக்த-ராஜ்யோ வ்யசரத் அனுவனம் பத்ம-பத்ப்யாம் ப்ரியாயா:
பாணி-ஸ்பர்சாக்ஷமாப்யாம் ம்ருஜித-பத-ருஜோ யோ ஹரீந்ரானுஜாப்யாம்
வைரூப்யாச் சூர்பணக்யா: ப்ரிய-விரஹ-ருஷாரோபித-ப்ரூ-விஜ்ரும்ப-
தாஸ்தாப்திர் பத்த-ஸேது: கல-தவ-தஹன: கோஸலேந்ரோ’ வதான் ந:

குரு-அர்தே-தம்தந்தையின் வாக்கைக் காப்பாற்றுவதற்காக; த்யக்த-ராஜ்ய:—அரச பதவியைக் கைவிட்டு; வ்யசரத்—சஞ்சரித்தார்; அனுவனம்—ஒவ்வொரு வனமாக; பத்ம-பத்ப்யாம்—தமது இரு தாமரைப் பாதங்களால்; ப்ரியாயா:—தமக்குப் பிரிய மனைவியான சீதையுடன்; பாணி-ஸ்பர்ச-அக்ஷமாப்யாம்—மிகவும் மென்மையானவையாக இருந்ததால், சீதை கையால் வருடுவதையும் பொறுக்க முடியாத; ம்ருஜித-பத-ருஜ:—வழிநடந்த அவரது களைப்புத் தீர்ந்தது; ய:—பகவான்; ஹரீந்ர-அனுஜாப்யாம்—வானர ராஜனாலும், ஹனுமானாலும் மற்றும் தம்பி லக்ஷ்மனராலும் பின்தொடரப்பட்ட; வைரூப்யாத்—அங்க சேதம் செய்யப்பட்டதால்; சூர்பணக்ய:—சூர்ப்பணகை என்ற இராட்சஸியின்; ப்ரிய-விரஹ—தமது பிரிய மனைவியின் பிரிவால் துன்பத்திற்குள்ளானதால்; ருஷா ஆரோபித-ப்ரூ-விஜ்ரும்ப—கோபங்கொண்டு நெறிந்த புருவங்களால்; த்ரஸ்த—அச்சுறுத்தி; அப்தி:—சமுத்திர ராஜனை; பத்த-ஸேது:—சமுத்திரத்தில் பாலம் கட்டியவர்; கல-தவ-தஹன:—ஒரு காட்டையே விழுங்கும் தீயைப்போல், இராவணனுக்கு ஒப்பான பகைவர்களைக் கொல்பவர்; கோஸல-இந்ர:—அயோத்யாபுரியின் அரசர்; அவதாத்—காப்பாற்றட்டும்; ந—நம்மை.

பகவான் ராமச்சந்திரர் தமது தந்தையின் வாக்கைக் காப்பாற்றுவதற்காக, உடனே அரச பதவியைக் கைவிட்டு, மனைவி சீதை கையால் வருடுவதையும் பொறுக்க முடியாத தமது மென்மையான தாமரைப் பாதங்களால் அவளுடன் ஒவ்வொரு வனமாக சஞ்சரித்தார். ஹனுமானும் (அல்லது மற்றொரு வானரமான சுக்ரீவனும்), பகவானுடைய தம்பி லக்ஷ்மணனும் அவரைப் பின்தொடர்ந்தனர். இவ்விருவரும் வனத்தில் சஞ்சரித்ததால் ஏற்பட்ட அவரது களைப்பைப் போக்கினர். சூர்ப்பணகையின் மூக்கு துண்டிக்கப்பட்டதால், பகவான் மனைவி சீதையை இழந்தார். இதனால் கோபங்கொண்டு நெறிந்த புருவத்துடன் சமுத்திரராஜனை பகவான் நடுங்கச் செய்தார். அவரும், கடலைக் கடக்கும் பொருட்டு பாலம் கட்டுவதற்கு பகவானை அனுமதித்தார். இதைத் தொடர்ந்து, காட்டையே விழுங்கி விடும் தீயைப்போல், இராவணனைக் கொல்ல அவனது இராஜ்யத்திற்குள் பகவான் புகுந்தார். அந்த பரமபுருஷராகிய பகவான் இராமச்சந்திரர் நம்மைக் காப்பாற்றட்டும்.

பதம் 9.10.5
விஸ்வாமித்ராத்வரே யேன மாரீசாத்யா நிசா-சரா:
பஸ்யதோ லக்ஷ்மணஸ்யைவ ஹதா நைர்ருத-புங்கவா:

விஸ்வாமித்ர-அத்வரே—விஸ்வாமித்திரரின் யாக அரங்கில்; யேன—யாரால் (பகவான் ராமச்சந்திரர்); மாரீச-ஆத்யா:—மாரீசன் முதலான; நிசா-சரா:—அறியாமையால் இரவில் சஞ்சரிக்கும் காட்டுமிராண்டிகள்; பஸ்யத: லக்ஷ்மணஸ்ய—லக்ஷ்மணரால் காணப்பட்டு; ஏவ—உண்மையில்; ஹதா:—கொல்லப்பட்டனர்; நைர்ருத-புங்கவா:—பெரும் இராட்சஸ தலைவர்கள்.

விஸ்வாமித்திரரின் யாக அரங்கில், இரவு நேரத்தில் அறிவில்லாமல் சஞ்சரித்த பல அசுரர்களையும், இராட்சஸர்களையும், காட்டுமிராண்டிகளையும் லக்ஷ்மணரின் முன்னிலையில் கொன்ற அயோத்தியின் அரசரான பகவான் ராமச்சந்திரர் நம்மைக் காப்பாற்றட்டும்.

பதங்கள் 9.10.6 – 9.10.7
யோ லோக-வீர-ஸமிதௌ தனுர் ஐசம் உக்ரம்
சீதா-ஸ்வயம்வர-க்ருஹே த்ரிசதோபனீதம்
ஆதாய பால-கஜ-லீல இவேக்ஷு-யஷ்டிம்
ஸஜ்யீ-க்ருதம் ந்ருப விக்ருஷ்ய பபஞ்ச மத்யே

ஜித்வானுரூப-குண-சீல-வயோ ‘ங்க-ரூபாம்
ஸீதாபிதாம் ஸ்ரியம் உரஸி அபிலப்தமானாம்
மார்கே வ்ரஜன் ப்ருகுபதேர் வ்யனயத் ப்ரரூடம்
தர்பம் மஹீம் அக்ருத யஸ் த்ரிர் அராஜ-பீஜாம்

ய:—பகவான் ராமச்சந்திரர்; லோக-வீர-ஸமிதௌ—சமூகத்தில் அல்லது பல வீரர்களின் மத்தியில்; தனு:—வில்; ஐசம்—சிவபெருமானின்; உக்ரம்—மிகவும் பயங்கரமான; ஸீதா-ஸ்வயம்வர-க்ருஹே—தன் கணவரைத் தேர்ந்தெடுப்பதற்காக சீதாதேவி நின்றிருந்த பொதுக் கூடத்தில்; த்ரிசத-உபனிதம்—முன்னூறு ஆட்களால் தூக்கப்படும் தனுசை; ஆதாய—எடுத்து (அந்த வில்லை); பால-கஜ-லீல:—கரும்புத் தோட்டத்தில் ஒரு குட்டியானை செய்வதைப் போல் செயற்பட்டு; இவ—அதுபோல்; இக்ஷு-யஷ்டிம்—ஒரு கரும்புத்துண்டை; ஸஜ்யீ-க்ருதம்—வில்லில் நாணேற்றி; ந்ருப—அரசே; விக்ருஷ்ய—வளைத்து; பபஞ்ச—அதை உடைத்தார்; மத்யே—நடுவில்; ஜித்வா—வெற்றிபெற்று; அனுரூப—அவரது அந்தஸ்திற்கும், அழகுக்கும் சற்றே பொருத்தமான; குண—குணங்கள்; சீல—நடத்தை; வய:—வயது; அங்க—உடல்; ரூபம்—அழகு; ஸீதா-அபிதாம்—சீதை என்ற பெண்ணை; ஸ்ரியம்—ஸ்ரீதேவி; உரஸி—மார்பில்; அபிலப்தமானாம்—முன்பு அவளைப் பெற்றார்; மார்கே—வழியில்; வ்ரஜன்—நடந்து செல்லும்போது; ப்ருகு பதே:—பிருகுபதியின்; வ்யனயத்—அழித்தார்; ப்ரரூடம்—ஆழமான; தர்பம்—கர்வத்தை; மஹீம்—பூமி; அக்ருத—முடித்தார்; ய:—யாரொருவர்; த்ரி:—மூன்று முறைகள் (ஏழு); அராஜ—க்ஷத்திரிய வம்சமே இல்லாமல்; பீஜாம்—வித்து.

அரசே, பகவான் ராமச்சந்திரின் லீலைகள், ஒரு குட்டி யானையின் செயல்களைப்போல் அற்புதமானவையாக இருந்தன. சீதையின் சுயம்வரச் சடங்கில், இவ்வுலக வீரர்களின் மத்தியில், சிவதனுசை அவர் உடைத்தார். இந்த தனுசு மிகவும் பாரமானது என்பதால், இதை முன்னூறு பேர் தூக்க வேண்டியிருந்தது. ஆனால் குட்டி யானையொன்று ஒரு கம்பித்துண்டை எளிதில் உடைத்து விடுவது போல், பகவான் ராமச்சந்திரரும் வில்லை வளைத்து நாணேற்றி நடுவில் அதை உடைத்தும் விட்டார். இவ்வாறாக தமக்கு இணையான வடிவம், அழகு, நடத்தை, வயது மற்றும் சுபாவம் ஆகிய உன்னதமான குணங்களைப் பெற்றிருந்த சீதையின் கரத்தை பகவான் பற்றினார். உண்மையில் அவள், எப்பொழுதும் பகவானின் மார்பில் உறையும் ஸ்ரீதேவியாவாள் சுயம்வரச் சடங்கில் சீதையின் கரம் பற்றியபின், வீடு திரும்பும் வழியில் பகவான் ராமச்சந்திரர் பரசுராமரைச் சந்தித்தார். மூவேழு தடவைகள் க்ஷத்திரிய வம்சத்தைப் பூண்டோடு அழித்த பரசுராமர் மிகவும் கர்வம் கொண்டிருந்தார். ஆயினும் ஒரு க்ஷத்திரியரைப் போல் காணப்பட்ட பகவானால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

பதம் 9.10.8
ய: ஸத்ய-பாச-பரிவீத-பிதுர் நிதேசம்
ஸ்த்ரைணஸ்ய சாபி சிரஸா ஜக்ருஹே ஸபார்ய:
ராஜ்யம் ஸ்ரியம் ப்ரணயின: ஸுஹ்ருதோ நிவாஸம்
த்யக்த்வா யயௌ வனம் அஸூன் இவ முக்த-ஸங்க:

ய:—பகவான் ராமச்சந்திரர்; ஸத்ய-பாச-பரிவீத-பிது:—சத்திய வாக்குக்கு கட்டுப்பட்டிருந்த தந்தையின்; நிதேசம்—கட்டளை; ஸ்த்ரைணஸ்ய—மனைவியிடம் மிகவும் பற்றுக்கொண்ட தந்தையின்; ச—கூட; அபி—உண்மையில்; சிரஸா—தமது தலைமீது; ஐக்ரே—ஏற்றார்; ஸ-பார்ய:—தமது மனைவியுடன்; ராஜ்யம்—இராஜ்யம்; ஸ்ரியம்—செல்வம்; ப்ரணயின:—உறவினர்கள்; ஸுஹ்ருத:—நண்பர்கள்; நிவாஸம்—வசிப்பிடம்; த்யக்த்வா—கைவிட்டு; யயௌ—சென்றார்; வனம்—வனத்திற்கு; அஸூன்—உயிர்; இவ—போல்; முக்த-ஸங்க:—முக்திபெற்ற ஓராத்மா.

மனைவிக்கு கொடுத்த வாக்கிற்குக் கட்டுப்பட்டிருந்த தந்தையின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக, பகவான் ராமச்சந்திரர் தமது இராஜ்யம், செல்வம், நண்பர்கள், உறவினர்கள், வசிப்பிடம் முதலான அனைத்தையும் துறந்து, முக்திபெற்ற ஓராத்மா உயிர் துறப்பது போல், சீதையுடன் வனம் சென்றார்.

பதம் 9.10.9
ரக்ஷ:-ஸ்வஸுர் வ்யக்ருத ரூபம் அசுத்த-புத்தேஸ்:
தஸ்யா: கர-த்ரிசிர-தூஷண-முக்ய-பந்தூன்
ஜக்னே சதுர்தச-ஸஹஸ்ரம் அபாரணீய-
கோதண்ட பாணிர் அடமான உவாஸ க்ருச்ரம்

ரக்ஷ-ஸ்வஸு:—இராட்சஸனின் (இராவணனின்) தங்கையான சூர்ப்பணகையின்; வ்யக்ருத—(பகவான் ராமர்) அங்கவீனப்படுத்தினார்; ரூபம்—உருவத்தை; அசுத்த-புத்தே:—சிற்றின்ப இச்சையால் புத்தி கெட்டவளாக இருந்ததால்; தஸ்யா:—அவளது; கர-த்ரிசிர-துஷண-முக்ய-பந்தூன்—கரன், திரிசிரன் மற்றும் தூஷணன் முதலான பல நண்பர்களை; ஜக்னே—அவர் (பகவான் ராமச்சந்திரர்) கொன்றார்; சதுர்தச-ஸஹஸ்ரம்—பதினாலாயிரம்; அபாரணீய—வெல்ல முடியாத; கோதண்ட—விற்கள் மற்றும் அம்புகள்; பாணி:—தம் கரத்தில்; அடமான:—காட்டில் சஞ்சரித்து; உவாஸ—அங்கு வாழ்ந்து வந்தார்; க்ருச்ரம்—பெருங்கஷ்டங்களுடன்.

தமது வெல்ல முடியாத வில்லையும், அம்புகளையும் கையில் ஏந்தியவாறு, பகவான் ராமச்சந்திரர் கடினமான வனவாசத்தை ஏற்று, வனத்தில் சஞ்சரித்து வந்தார். அப்போது காம இச்சையால் புத்தி கெட்டவளாக நடந்து கொண்ட இராவணனுடைய தங்கையின் மூக்கை அறுத்து அவளை பகவான் அங்கவீனப்படுத்தினார். மேலும் கரன், திரிசிரன் மற்றும் தூஷணன் முதலான அவளது பதினாலாயிரம் இராட்சஸ நண்பர்களையும் கூட அவர் கொன்றார்.

பதம் 9.10.10
ஸீதா-கதா-ஸ்ரவண-தீபித-ஹ்ருச்-சயேன
ஸ்ருஷ்டம் விலோக்ய ந்ருபதே தச—கந்தரேண
ஜக்னே ‘த்புதைண-வபுஷாஸ்ரமதோ ‘பக்ருஷ்டோ
மாரீசம் ஆசு விசிகேன யதா கம் உக்ர:

ஸீதா-கதா—சீதாதேவியைப் பற்றிய வர்ணனைகளை; ஸ்ரவண—கேட்டதால்; தீபித—சலனமடைந்தான்; ஹ்ருத்-சயேன—இராவணனின் மனதில் காம இச்சைகள்; ஸ்ருஷ்டம்—எழுந்தன; விலோக்ய—அதைக் கண்டு; ந்ருபதே—பரீட்சித்து மகாராஜனே; தச-கந்தரேண—பத்துத் தலை இராவணனால்; ஜக்னே—பகவான் கொன்றார்; அத்புத-ஏண-வபுஷா—ஒரு தங்கமானால்; ஆஸ்ரமத:—அவரது ஆசிரமத்திலிருந்து; அபக்ருஷ்ட:—கவனத்தைத் திருப்பி தூரமாக அழைத்துச் செல்ல; மாரீசம்—தங்க மானின் உருவை ஏற்ற மாரீசன்; ஆசு—உடனே; விசிகேன—ஒரு கூரிய அம்பால்; யதா—போல்; கம்—தட்சன்; உக்ர:—சிவபெருமான்.

பரீட்சித்து மகாராஜனே, சீதையின் அழகையும், கவர்ச்சியையும் பற்றி கேள்விப்பட்ட பத்துத்தலை இராவணன், காம இச்சைகளினால் தூண்டப்பட்டு அவளை அபகரித்துவரச் சென்றான். பகவான் ராமச்சந்திரரின் கவனத்தைத் திருப்பி அவரை ஆசிரமத்திலிருந்து தூர அனுப்புவதற்காக, இராவணன் மாரீசனை ஒரு தங்க மானின் உருவில் அனுப்பினான். அந்த அற்புத மானைக் கண்ட பகவான் ராமச்சந்திரர் ஆசிரமத்தை விட்டு அதைப் பின்தொடர்ந்தார். சிவபெருமான் தட்சனைக் கொன்றது போலவே, இறுதியாக ஒரு கூரிய அம்பால் அதை அவர் கொன்றார்.

பதம் 9.10.11
ரக்ஷோ- ‘தமேன வ்ருகவத் விபினே ‘ஸமக்ஷம்
வைதேஹ-ராஜ-துஹிதரி அபயாபிதாயாம்
ப்ராத்ரா வனே க்ருபணவத் ப்ரியயா வியுக்த:
ஸ்த்ரீ-ஸங்கினாம் கதிம் இதி ப்ரதயம்ஸ் சசார

ரக்ஷ-அதமேன—இராட்சஸர்களிலேயே மிகவும் தீயவனான இராவணன்; வருக-வத்—ஒரு புலியைப் போல்; விபினே—வனத்தில்; அஸமக்ஷம்—பாதுகாக்கப்படாத; வைதேஹ-ராஜ-துஹிதரி—விதேக மகாராஜனின் புத்திரியான சீதாதேவியின் இச்சூழ்நிலையால்; அபாயா பிதாயாம்—கடத்திச் செல்லப்பட்டதால்; ப்ராத்ரா—அவரது தம்பியுடன்; வனே—வனத்தில், க்ருபணவத்—மிகவும் துன்பத்திற்கு உள்ளானவரைப்போல்; ப்ரியயா—அவரது பிரியமான மனைவியால்; வியுக்த:—பிரிக்கப்பட்டார்; ஸ்த்ரீ-ஸங்கினாம்—பெண்களுடன் தொடர்பு கொண்டுள்ள அல்லது அவர்களால் கவரப்பட்டுள்ளவர்களின்; கதிம்—கதி; இதி—இவ்வாறாக; ப்ரதயன்—ஒருதாரணமாக இருந்து; சசார—சஞ்சரித்தார்.

ஆட்டிடையன் இல்லாததால் பாதுகாப்பின்றி இருக்கும் ஆட்டை ஒரு புலி இரையாக்கிக் கொள்வதைப் போல், பகவான் ராமச்சந்திரர் வனத்திற்குள் புகுந்தபோது, லக்ஷ்மணனும் அங்கு இல்லாததால், இராட்சஸர்களிலேயே மிகக் கொடியவனான இராவணன், விதேக ராஜகுமாரியான சீதாதேவியை கடத்திச் சென்றான். பிறகு தன் மனைவியின் பிரிவால் பெருந் துயருக்குள்ளானது போல், பகவான் ராமச்சந்திரர் தம் தம்பி லக்ஷ்மணருடன் வனத்தில் சஞ்சரித்து வந்தார். இவ்வாறாக தமது சொந்த உதாரணத்தின் மூலமாக பெண்களிடம் பற்றுக் கொண்டவர்களின் நிலையை அவர் காட்டினார்.

பதம் 9.10.12
தக்த்வாத்ம-க்ருத்ய-ஹத-க்ருத்யம் அஹன் கபந்தம்
ஸக்யம் விதாய கபிபிர் தயிதா-கதிம் தை:
புத்வாத வாலினி ஹதே ப்ளவகேந்ர-ஸைன்யைர்
வேலாம் அகாத் ஸ மனுஜோ ‘ஜ-பவார்சிதாங்ரி:

தக்த்வா—எரிப்பதன் மூலமாக; ஆத்ம-க்ருத்ய-ஹத-க்ருத்யம்—பகவானின் நிமித்தம் உயிரைவிட்ட ஜடாயுவின் மரணத்திற்குப்பின் செய்யவேண்டிய கிரியைகளைச் செய்த பின்; அஹன்—கொன்றார்; கபந்தம்—அசுரனான கபந்தனை; ஸக்யம்—நட்பை; விதாய—ஏற்படுத்திக் கொண்ட பின்; கபிபி:—வானரத் தலைவர்களுடன்; தயிதா-கதிம்—சீதையை மீட்பதற்கான ஏற்பாட்டை; தை:—அவர்களால்; புத்வா—அறிந்து; அத—அதன்பிறகு; வாலினி ஹதே—வாலி கொல்லப்பட்டபின்; ப்லவக-இந்ர-ஸைன்யை—வானர வீரர்களின் உதவியுடன்; வேலாம்—சமுத்திரத்தின் கரைக்கு; அகாத்—சென்றார்; ஸ—அவர், பகவான் ராமச்சந்திரர்; மனு-ஜ:—ஒரு மானிடராகத் தோன்றி; அஜ—பிரம்ம தேவரால்; பவ—மற்றும் சிவபெருமானால்; அர்சித-அங்ரி:—யாருடைய கமல பாதங்கள் வழிபடப்படுகின்றனவோ.

யாருடைய கமல பாதங்கள் பிரம்ம தேவராலும், சிவபெருமானாலும் வழிபடப்படுகின்றனவோ, அந்த பகவான் ராமச்சந்திரர் ஒரு மானிட உருவை ஏற்றுள்ளார். இவ்வாறாக அவர், இராவணனால் கொலையுண்ட ஜடாயுவின் ஈமக்கிரியைகளைச் செய்து முடித்தார். பிறகு கபந்தன் என்ற அசுரனைக் கொன்றபின், வானர தலைவர்களை நண்பர்களாக்கிக் கொண்ட பகவான், வாலியைக் கொன்றார். பிறகு சீதையை மீட்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தபின், அவர் சமுத்திரத்தின் கரைக்குச் சென்றார்.

பதம் 9.10.13
யத்-ரோஷ-விப்ரம-விவ்ருத்த-கடாக்ஷ் பாத-
ஸம்ப்ராந்த-நக்ர-மகரோ பய-கீர்ண-கோஷ:
ஸிந்து: சிரஸி அர்ஹணம் பரிக்ருஹ்ய ரூபீ
பாதரவிந்தம் உபகம்ய பபாஷ ஏதத்

யத்-ரோஷ—யாருடைய கோபம்; விப்ரம—தூண்டப்பட்டு; விவ்ருத்த—மாறின; கடாக்ஷ-பாத—பார்வையால்; ஸம்ராந்த—கிளர்ச்சியடைந்தன; நக்ர—முதலைகள்; மகர:—மற்றும் சுறாமீன்கள்; பய-கீர்ண-கோஷ:—யாருடைய உரத்த ஓசை பயந்தால் மௌனமானதோ; ஸிந்து:—சமுத்திரம்; சிரஸி—அவரது தலைமீது; அர்ஹணம்—பகவானை வழிபடுவதற்குரிய எல்லாப் பொருட்களையும்; பரிக்ருஹ்ய—எடுத்துக் கொண்டு; ரூபீ—உருவமேற்று; பாத-அரவிந்தம்—பகவானின் தாமரைப் பாதங்களை; உபகம்ய—அடைந்து; பபாஷ—கூறினார்; ஏதத்—பின்வருமாறு.

சமுத்திரத்தின் கரையை அடைந்ததும், பகவான் ராமச்சந்திரர் மூன்று நாட்கள் உபவாசமிருந்து, சமுத்திர ராஜனின் வரவுக்காகக் காத்திருந்தார். சமுத்திரராஜன் வராததைக் கண்ட பகவான் சமுத்திரத்தின் மீது தமது கோபப் பார்வையைச் செலுத்தினார். இதனால் முதலைகளும், சுறாமீன்களும் உட்பட எல்லாக் கடல்வாழ் ஜீவன்களும் பயத்தால் சலனமடைந்தன. பிறகு சமுத்திர ராஜன் வழிபாட்டுக்குரிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு பயத்துடன் பகவான் ராமச்சந்திரரை அணுகினார். பகவானின் தாமரைப் பாதங்களில் விழுந்த சமுத்திர ராஜன் பின்வருமாறு பேசலானார்.

பதம் 9.10.14
ந த்வாம் வயம் ஜட-தியோ நு விதாம பூமன்
கூட-ஸ்தம் ஆதி-புருஷம் ஜகதாம் அதீசம்
யத்-ஸத்வத: ஸுர-கணா ரஜஸ: ப்ரஜேசா
மன்யோஸ் ச பூத-பதய: ஸ பவான் குணேச

ந—இல்லை; த்வாம்—தங்களை; வயம்—நாங்கள்; ஜட-திய—மந்த புத்தியுடைய; நு—உண்மையில்; விதாம—அறிய முடியும்; பூமன்:—பரமபுருஷரே; கூட-ஸ்தம்—இதய மத்தியில்; ஆதி-புருஷம்—ஆதி புருஷர்; ஜகதாம்—தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சங்களின்; அதீசம்—பரமேசுவரர்; யத்—தங்களது வழிகாட்டலின் கீழ் முடிவு செய்து; ஸத்வத:—சத்வ குணத்தினால் (நற்குணம்) சித்தப் பிரமை அடைந்துள்ளனர்; ஸுர-கணா:—இத்தகைய தேவர்கள்; ரஜஸ:—ரஜோ குணத்தினால் (தீவிர குணம்) மதி மயக்கம் அடைந்துள்ளனர்; ப்ரஜா-ஈசா:—ப்ரஜாபதிகள்; மன்யோ:—தமோ குணத்தினால் (அறியாமை குணம்) ஆதிக்கம் செலுத்தப்பட்டு; ச—மேலும்; பூத-பதய:—பேய்களை ஆள்பவர்கள்; ஸ:—அத்தகைய ஒருவர்; பவான்—தாங்கள்; குண-ஈச:—ஜட இயற்கையின் முக்குணங்களுக்கும் எஜமானர்.

எங்கும் பரவியுள்ள பரமபுருஷரே, தாங்கள் யாரென்பதை மந்த புத்தியுடைய நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் முழு பிரபஞ்சத்திற்கும் எஜமானரும், பரமபுருஷரும், மாற்றமில்லாமல் மூல முழுமுதற் கடவுளும் தாங்களே என்பதை இப்பொழுது நாங்கள் புரிந்து கொண்டோம். தேவர்கள் நற்குணத்தாலும், பிரஜாபதிகள் தீவிர குணத்தாலும் மற்றும் பேய்களின் நாதன் அறியாமைக் குணத்தாலும் மதி மயக்கம் அடைந்துள்ளனர். ஆனால் தாங்கள் இக்குணங்களுக்கெல்லாம் எஜமானராவீர்.

பதம் 9.10.15
காமம் ப்ரயாஹி ஜஹி விஸ்ரவஸோ ‘வமேஹம்
த்ரைலோக்ய-ராவணம் அவாப்னுஹி வீர பத்னீம்
பத்னீஹி ஸேதும் இஹ தே யசஸோ விதத்யை
காயந்தி திக்-விஜயினோ யம் உபேத்ய பூபா:

காமம்—தங்கள் விருப்பப்படியே; ப்ரயாஹி—என் நீர்மீது தாங்கள் செல்லலாம்; ஜஹி—வென்று வாருங்கள்; விஸ்ரவஸ:—விஸ்ரவ முனியின்; அவமேஹம்—மூத்திரத்தைப் போல் அசுத்தமானவனான; த்ரைலோக்ய—மூவுலகங்களுக்கும்; ராவணம்—துக்கத்திற்குக் காரணமான இராவணன் என்பவனை; அவாப்னுஹி—மீட்டு வாருங்கள்; வீர—மகாவீரரே; பத்னீம்—தங்களது மனைவியை; பத்னீஹி—அமையுங்கள்; ஸேதும்—ஒரு பாலம்; இஹ—இங்கு (இந்நீரின் மீது); தே—தங்களுடைய; யசஸ:—புகழை; விதத்யை—பெருக்க; காயந்தி—புகழ்வார்கள்; திக்-விஜயின:—எல்லாத் திசைகளையும் வென்ற மாவீரர்கள்; யம்—எதை (பாலத்தை); உபேத்ய—நெருங்கி வந்து; பூபா:—சிறந்த அரசர்கள்.

எம்பெருமானே, என் நீரை விருப்பம்போல் தாங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். உண்மையில், தாங்கள் அதைக் கடந்து, மூவுலகங்களின் தொல்லைக்கும், அழுகைக்கும் பெருங் காரணமான இராவணனின் நகருக்குச் செல்ல முடியும். அவன் விஸ்ரவரின் மகன் என்றாலும், மூத்திரத்தைப் போல் வெறுக்கத் தக்கவனாவான். எனவே அங்கு சென்று, அவனைக் கொன்று, தங்களது மனைவியான சீதாதேவியை மீட்டு வாருங்கள். மகா வீரரே உங்கள் புகழைப் பரப்புவதற்காக, அதன்மீது ஒரு பாலத்தை அமைக்க வேண்டுகிறேன். தங்களுடைய அசாதாரணமான அற்புதச் செயலைக் கண்டு, பிற்காலத்தில் வரும் சிறந்த வீரர்களும், அரசர்களும் உங்களை போற்றிப் புகழ்வார்கள்.

பதம் 9.10.16
பத்வோததெள ரகு-பதிர் விவிதாத்ரி-கூடை:
ஸேதும் கபீந்ர-கர-கம்பித-பூருஹாங்கை:
ஸுக்ரீவ-நீல-ஹனுமத்-ப்ரமுகைர் அனீகைர்
லங்காம் விபீஷண-த்ருஷாவிசத் அக்ர-தக்தாம்

பத்வா—கட்டியபின்; உததெள—சமுத்திர நீரில்; ரகு-பதி:—பகவான் ராமச்சந்திரர்; விவித—பல வகைப்பட்ட; அத்ரி-கூடை:—பெரும் மலைச் சிகரங்களால்; ஸேதும்—ஒரு பாலத்தை; கபி-இந்ர—சக்திவாய்ந்த வானரங்களின்; கர-கம்பித—கரங்களால் பெயர்த்தெடுக்கப்பட்டு; பூருஹ-அங்கை:—மரம், செடி, கொடிகளுடன்; ஸுக்ரீவ—சுக்ரிவன்; நீள—நீளன்; ஹனுமத்—ஹனுமான்: ப்ரமுகை:—தலைமையிலான; அனீகை:—அத்தகைய வீரர்களுடன்; லங்காம்—இராவணனின் இராஜ்யமான இலங்கை; விபீஷண-த்ருசா—இராவணனின் தம்பியான விபீஷணரால் வழிகாட்டப்பட்டு; ஆவிசத்—புகுந்தார்; அக்ர-தக்தாம்—(வானர வீரரான ஹனுமானால்) முன்பு எரிக்கப்பட்ட.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: சக்திவாய்ந்த வானரங்களால் பெயர்த்தெடுக்கப்பட்ட, மரம் செடி கொடிகளைக் கொண்ட மலைச் சிகரங்களை சமுத்திர நீரில் எறிந்ததன் மூலம் சமுத்திரத்தில் ஒரு பாலத்தைக் கட்டிய பின், பகவான் ராமச்சந்திரர், சீதாதேவியை இராவணனிடமிருந்து சிறை மீட்பதற்காக இலங்கைக்குச் சென்றார். இராவணனின் தம்பியான விபீஷணர் வழிகாட்ட, சுக்ரீவன், நீளன் மற்றும் ஹனுமான் ஆகியோரின் தலைமையிலான வானர வீரர்களுடன், ஹனுமானால் முன்பே எரிக்கப்பட்டிருந்த, இலங்கைக்குள் பகவான் பிரவேசித்தார்.

பதம் 9.10.17
ஸா வானரேந்ர-பல-ருத்த விஹார-கோஷ்ட-
ஸ்ரீ-த்வார-கோபுர-ஸதோ-வலபீ-விடங்கா
நிர்பஜ்யமான-திஷண-த்வஜ-ஹேம-கும்ப-
ஸ்ருங்காடகா கஜ-குலைர் ஹ்ரதினீவ கூர்ணா

ஸா—இலங்கை என்ற இடத்தை; வானர-இந்ர—சிறந்த வானர தலைவர்களின்; பல—பலத்தால்; ருந்த—நிறுத்தினர், சுற்றி வளைத்துக் கொண்டனர்; விஹார—இன்ப விடுதிகள்; கோஷ்ட—பண்டக சாலைகள்; ஸ்ரீ—கஜானாக்கள்; த்வார—அரண்மனை வாயில்கள்; கோபுர—நகர வாயில்கள்; ஸத:—பொதுக் கூடங்கள்; வலபீ—பெரும் அரண்மனைகளின் முற்றங்கள்; விடங்கா—புறாக் கூண்டுகள்; நிர்பஜ்யமான—தகர்க்கப்படும் போது; திஷண—படிக்கட்டுகள்; த்வஜ—கொடிகள்; ஹேம-கும்ப—கோபுரங்களிலுள்ள தங்க நீர்க் கலசங்கள்; ஸ்ருங்காடகா—தெருச்சந்திகள்; கஜ-குலை:—யானைக் கூட்டங்களால்; ஹ்ரதினீ—ஒரு நதி; இவ—போல்; கூர்ணா—கலக்கப்பட்டது.

இலங்கைக்குள் புகுந்ததும், சுக்ரீவன், நளன் மற்றும் ஹனுமான் ஆகியோரின் தலைமையிலான வானர வீரர்கள், உல்லாச விடுதிகள், பண்டகசாலைகள், கஜானாக்கள், அரண்மனை வாயில்கள், நகர வாயில்கள், பொதுக்கூடங்கள், அரண்மனை முற்றங்கள் உட்பட புறாக் கூடுகளையும் கூட ஆக்கிரமித்துக் கொண்டனர். நகரத்தின் தெருச்சந்திகள், படிக்கட்டுகள், கொடிகள் மற்றும் கோபுரங்களின் உச்சியிலுள்ள தங்கக் கலசங்கள் ஆகிய அனைத்தும் இடித்துத் தள்ளப்பட்டதால், இலங்கை நகரம், ஒரு யானைக் கூட்டத்தினால் கலக்கப்பட்ட ஒரு நதி போல் காணப்பட்டது.

பதம் 9.10.18
ரக்ஷ: பதிஸ் தத் அவலோக்ய நிகும்ப-கும்ப-
தூம்ராக்ஷ-துர்முக-ஸுராந்தக-நராந்தகாதீன்
புத்ரம் ப்ரஹஸ்தம் அதிகாய-விகம்பனாதீன்
ஸர்வானுகான் ஸமஹினோத் அத கும்பகர்ணம்

ரக்ஷ: பதி:—இராட்சஸத் தலைவன் (இராவணன்); தத்—அத்தகைய நாசத்தை; அவலோக்ய—கண்டபின்; நிகும்ப—நிகும்பன்; கும்ப—கும்பன்; தூம்ராக்ஷ—தூம்ராட்சன்; துர்முக—துர்முகன்; ஸுராந்தக—சுராந்தகன்; நராந்தக—நாராந்தகன்; ஆதீன்—ஆகிய அனைவரையும் ஒன்றாக; புத்ரம்—அவனுடைய மகன் இந்திரஜித்; ப்ரஹஸ்தம்—பிரஹஸ்தன்; அதிகாய—அதிகாயன்; விகம்பன—விகம்பனன்; ஆதீன்—எல்லோரையும் ஒன்றாக; ஸர்வ-அனுகான்—தன்னுடைய ஆட்கள் அனைவரையும்; ஸமஹினோத்—(எதிரிகளுடன் சண்டை செய்ய) உத்தரவிட்டான்; அத—இறுதியாக; கும்பகர்ணம்—முக்கிய சகோதரனான கும்பகர்ணனை.

இராட்சஸத் தலைவனான இராவணன், வானர வீரர்களால் ஏற்படுத்தப்பட்ட நாசத்தைக் கண்டு, நிகும்பன், கும்பன், தூம்ராட்சன், துர்முகன், சுராந்தகன், நராந்தகன் ஆகியோரையும், பிற இராட்சஸர்களையும், தன் மகனான இந்திரஜித்தையும் உடனே அழைத்தான். அதன்பிறகு, பிரஹஸ்தன், அதிகாயன், விகம்பனன் மற்றும் இறுதியாக கும்பகர்ணனையும் அவன் அழைத்தான். பிறகு தனது ஆட்களையெல்லாம் எதிரிகளை எதிர்த்து போரிடத் தூண்டினான் வீரர்களால்

பதம் 9.10.19
தாம் யாதுதான-ப்ருதனாம் அஸி-சூல-சாப-
ப்ராஸர்ஷ்டி-சக்திசர-தோமர-கட்க-துர்காம்
ஸுக்ரீவ-லக்ஷ்மண-மருத்ஸுத-கந்தமாத-
நீளாங்கதர்க்ஷ-பனஸாதிபிர் அன்விதோ ‘காத்

தாம்—அவர்கள் அனைவரும்; யாதுதான-ப்ருதனாம்—இராட்சஸ வீரர்கள்; அஸி—வாள்களால்; சூல—சூலங்களால்; சாப—விற்களால்; ப்ராஸ-ருஷ்டி—பிராஸ மற்றும் ருஷ்டி ஆயுதங்கள்; சக்தி-சர—சக்தி அம்புகள்; தொமர—தொமர ஆயுதங்கள்; கட்க—ஒருவகையான வாளால்; துர்காம்—வெல்ல முடியாத; ஸுக்ரீவ—சுக்ரீவன் என்ற வானரத்தால்; லக்ஷ்மண—பகவான் ராமச்சந்திரரின் தம்பியால்; மருத்ஸுத—ஹனுமானால்; கந்தமாத—மற்றொரு வானரமான கந்தமாதனால்; நீள—நீளன் என்ற வானரத்தால்; அங்கத—அங்கதன்; ரிக்ஷ—ரிக்ஷன்; பனஸ—பனஸன்; ஆதிபி:—மற்றும் பிற வீரர்களாளும்; அன்வித:—சூழப்பட்ட பகவன் ராமச்சந்திரர்; அகாத்—(போரிட) முன் வந்தார்.

லக்ஷ்மணராலும், சுக்ரீவன், ஹனுமான், கந்தமாதன், நீளன், அங்கதன், ஜாம்பவான் மற்றும் பனஸன் ஆகிய வானர வீரர்களாலும் சூழப்பட்டபடி, பகவான் ராமச்சந்திரர் இராட்சஸ வீரர்களைத் தாக்கினார். அந்த இராட்சஸர்கள், வாள்கள், ஈட்டிகள், விற்கள், பிராஸங்கள், ரிஷ்டிகள், சக்தி அம்புகள், கட்கங்கள் மற்றும் தோமரங்கள் போன்ற வெல்ல முடியாத ஆயுதங்களை வைத்திருந்தனர்.

பதம் 9.10.20
தே ‘நீகபா ரகுபதேர் அபிபத்ய ஸர்வே
த்வந்வம் வரூதம் இப-பத்தி-ரதாஸ்வ-யோதை:
ஜக்னுர் த்ருமைர் கிரி-கதேஷீபிர் அங்கதாத்யா:
ஸீதாபிமர்ஷ-ஹத-மங்கள-ராவணேசான்

தே—அவர்களனைவரும்; அனீக-பா:—சேனாதிபதிகளான; ரகு-பதே:—பகவான் ஸ்ரீ ராமச்சந்திரரின்; அபிபத்ய—எதிரியை விரட்டி; ஸர்வே—அவர்கள் அனைவரையும்; த்வந்வம்—போரிட்டு; வரூதம்—இராவணனின் வீரர்கள்; இப—யானைகளால்; பத்தி—காலாட் படையால்; ரத—தேர்களால்; அஸ்வ—குதிரைகளால்; யோதை:—இத்தகைய வீரர்களால்; ஜக்னு:—அவர்களைக் கொன்றார்; த்ருமை:—பெரிய மரங்களை எறிவதாலும்; கிரி—மலைச் சிகரங்களால்; கதா—கதாயுதங்களால்; இஷுபி:—அம்புகளால்; அங்கத-ஆத்யா:—அங்கதன் முதலானவர்களின் தலைமையிலான, பகவான் ராமச்சந்திரரின் வீரர்கள் அனைவரும்; ஸீதா—சீதாதேவியின்; அபிமர்ஷ—கோபத்தால்; ஹத—கண்டனம் செய்யப்பட்டான்; மங்கள—யாருடைய மங்களம்; ராவண-ஈசான்—இராவணனின் ஆட்கள்.

ராமச்சந்திரரின் படையைச் சேர்ந்த அங்கதன் முதலான சேனாதிபதிகள் எதிரியின் காலாட்படையையும், யானைகளையும், குதிரைகளையும், மற்றும் தேர்களையும் எதிர்த்து, பெரிய மரங்களையும், மலைச் சிகரங்களையும், கதாயுதங்களையும் மற்றும் அம்புகளையும் வீசி எறிந்தனர். இவ்வாறாக சீதையின் கோபத்திற்கு இராவணன் இலக்கானதால் எல்லா நல்லதிர்ஷ்டங்களையும் இழந்த அவனது போர் வீரர்கள் பகவான் ராமச்சந்திரரின் போர் வீரர்களால் கொல்லப்பட்டனர்.

பதம் 9.10.21
ரக்ஷ:-பதி: ஸ்வ-பல-நஷ்டிம் அவேக்ஷ்ய ருஷ்ட
ஆருஹ்ய யானகம் அதாபிஸஸார ராமம்
ஸ்வ:-ஸ்யந்தனே த்யுமதி மாதலினோபனீதே
விப்ராஜமானம் அஹனன் நிசிதை: க்ஷுரப்ரை:

ரக்ஷ:-பதி:—இராட்சஸ தலைவனான இராவணன்; ஸ்வ-பல-நஷ்டிம்—தன் சொந்த வீரர்களின் அழிவை; அவேக்ஷ்ய—கண்ட பின்; ருஷ்ட:—மிகவும் கோபாவேஷனானான்; ஆருஹ்ய—ஏறி; யானகம்—மலர் அலங்காரத்துடன் கூடிய அவனது அழகிய விமானத்தில்; அத:—அதன்பின்; அபிஸஸார—நோக்கிச் சென்றது; ராமம்—பகவான் ராமச்சந்திரர்; ஸ்வ:-ஸ்யந்தனே—இந்திரனின் சுவர்க்கலோக இரதத்தில்; த்யுமதி—ஜொலிக்கும்; மாதலினா—இந்திரனின் தேரோட்டியான மாதலியால்; உபனீதே—கொண்டுவரப்பட்ட; விப்ராஜமானம்—பகவான் ராமச்சந்திரர், பிரகாசமாக ஜொலிப்பது போல்; அஹனத்—இராவணன் அவரைத் தாக்கினான்; நிசிதை:—கூரிய; க்ஷுரப்ரை:—அம்புகளால்.

அதன்பிறகு, தன்னுடைய வீரர்கள் மடிந்ததைக் கண்ட இராட்சஸ ராஜனான இராவணன் கடுங்கோபங்கொண்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தன் விமானத்திலேறி பகவானை நோக்கி விரைந்தான். அங்கு இந்திரனின் தேரோட்டியான மாதலியால் கொண்டு வரப்பட்ட பிரகாசமான இரதத்தில் அமர்ந்திருந்த பகவான் ராமச்சந்திரரைக் கூரிய அம்புகளால் அவன் தாக்கினான்.

பதம் 9.10.22
ராமஸ் தம் ஆஹ புருஷாத-புரீஷ யன் ந:
காந்தாஸமக்ஷம் அஸதாபஹ்ருதா ஸ்வவத் தே
த்யக்த-த்ரபஸ்ய ஃபலம் அத்ய ஜுகுப்ஸிதஸ்ய
யச்சாமி கால இவ கர்துர் அலங்க்ய-வீர்ய:

ராம:—பகவான் ராமச்சந்திரர்; தம்—அவனிடம், இராவணனிடம்; ஆஹ—கூறினார்; புருஷ-அத-புரீஷ—இராட்சஸர்களின் (நர பட்சினிகளின்) மலம் நீ; யத்—ஏனெனில்; ந:—என்; காந்தா—மனைவி; அஸமக்ஷம்—நான் அருகில் இல்லாததால் நிராதரவாக இருந்தாள்; அஸதா—பெரும் பாவியான உன்னால்; அபஹ்ருதா—அபரித்துச் செல்லப்பட்டாள்; ஸ்வ-வத்—எஜமானர் இல்லாத நேரத்தில் சமையலறையில் புகுந்து உணவை திருடிச் செல்லும் ஒரு நாயைப் போன்றவன்; தே—உனது; த்யக்த-த்ரபஸ்ய—நீ வெட்கமற்றவன் என்பதால்; ஃபலம் அத்ய—அதன் பலனை இன்று உனக்கு நான் கொடுக்கப் போகிறேன்; ஜுகுப்ஸிதஸ்ய—மிகவும் வெறுக்கத் தகுந்த உன்னை; யச்சாமி—நான் தண்டிக்கப் போகிறேன்; கால: இவ—மரணத்தைப் போல்; கர்து:—பெரும்பாவியான உன்னை; அலங்ய-வீர்ய:—ஆனால் சர்வசக்தி படைத்திருப்பதால், என் முயற்சியில் என்றுமே தோல்வியடையாத நான்.

பகவான் ராமச்சந்திரர் இராவணனிடம் கூறினார்: இராட்சஸர்களிலேயே மிகவும் வெறுக்கத்தக்கவனான நீ உண்மையில் அவர்களுடைய மலமாக இருக்கிறாய். நான் இல்லாத சமயத்தில் என் மனைவி சீதையை நீ அபகரித்துச் சென்றாய். எனவே நீ ஒரு நாய்க்குச் சமமானவன். ஏனெனில், எஜமானர் இல்லாத சமயத்தில் நாய் சமையலறைக்குள் புகுந்து, உணவு வகைகளை திருடிச் செல்கிறது. எனவே, பாவிகளை யமராஜன் தண்டிப்பதைப் போல் நானும் உன்னை தண்டிக்கப் போகிறேன். நீ மிகவும் வெறுக்கத்தக்கவனும், பாவியும், வெட்கமற்றவனுமாவாய். எனவே, யாருடைய முயற்சி தோல்வியடைவதே இல்லையோ, அந்த நாளில் இன்று உன்னை தண்டிக்கப் போகிறேன்.

பதம் 9.10.23
ஏவம் கதிபன் தனுஷி ஸந்திதம் உத்ஸஸர்ஜ
பாணம் ஸ வஜ்ரம் இவ தத்-த்ருதயம் பிபேத
ஸோ ‘ஸ்ருக் வமன் தச-முகைர் ன்யபதத் விமானாத்
தாஹேதி ஜல்பதி ஜனே ஸுக்ருதீவ ரிக்த:

ஏவம்—இவ்வாறாக; க்ஷிபன்—(இராவணனை) தண்டித்து; தனுஷி—வில்லில்; ஸந்திதம்—ஓர் அம்பைப் பொருத்தி; உத்ஸஸர்ஜ—(அவளை நோக்கி) விட்டார்; பாணம்—அம்பு; ஸ:—அந்த அம்பு; வஜ்ரம் இவ—ஒரு வஜ்ராயுதத்தைப்போல்; தத்-ஹ்ருதயம்—இராவணனின் இதயத்தை; பிபேத—துளைத்தது; ஸ:—அவன், இராவணன்; அஸ்ருக்—இரத்தம்; வமன்—கக்கிக்கொண்டு; தச-முகை:—பத்து வாய்களாலும்; ன்யபதத்—கீழே விழுந்தான்; விமானாத்—தன் விமானத்திலிருந்து; ஹஹா—ஐயோ, என்ன நடந்துவிட்டது; இதி—இவ்வாறு; ஜல்பதி—கூச்சலிட்டுக் கொண்டு; ஜனே—அங்கு கூடியிருந்தவர்கள்; ஸுக்ருதீ இவ—ஒரு புண்ணியவானைப் போல்; ரிக்த:—தன் புண்ணியச் செயல்களில் பலன்கள் முடிவுறும்போது.

இராவணனை இவ்வாறு திட்டிய பிறகு, தமது வில்லில் ஓரம்பைப் பொருத்திய பகவான் ராமச்சந்திரர், அதை இராவணனை நோக்கிவிட்டார். அது வஜ்ராயுதம் போல் இராவணனின் இதயத்தைத் துளைத்தது. இதைக் கண்ட இராவணனின் ஆட்கள், “ஐயோ! ஐயோ! என்ன நடந்து விட்டது? என்ன நடந்து விட்டது?” என்று கூச்சலிட்டனர். புண்ணியவான் ஒருவர் புண்ணியங்கள் தீர்ந்ததும் சொர்க்கத்திலிருந்து பூமியை நோக்கி விழுவதைப் போலவே, இராவணனும் தன் பத்து வாய்களாலும் இரத்தத்தைக் கக்கிக் கொண்டு விமானத்திலிருந்து கீழே விழுந்தான்.

பதம் 9.10.24
ததோ நிஷ்கீரம்ய லங்காயா யாதுதான்ய: ஸஹஸ்ரச:
மந்தோதர்யா ஸமம் தத்ர ப்ரருதந்த்ய உபாத்ரவன்

தத:—அதன்பிறகு; நிஷ்க்ரம்ய—வெளிவந்து; லங்காயா:—இலங்கையிலிருந்து; யாதுதான்ய:—இராட்சஸர்களின் மனைவிகள்; ஸஹஸ்ரச:—ஆயிரமாயிரமாக; மன்தோதர்யா—இராவணனின் மனைவியான மன்டோதரி முதலான; ஸமம்—உடன்; தத்ர—அங்கு; ப்ரருதந்த்ய:—துக்கத்தால் அழுதபடி; உபாத்ரவன்—(தங்களது இறந்த கணவன்களின் அருகே வந்தனர்.

அதன்பிறகு, யாருடைய கணவன்மார்கள் யுத்தத்தில் உயிரிழந்தனரோ, அப்பெண்கள் அனைவரும் இராவணனின் மனைவியான மண்டோதரியின் தலைமையில், இலங்கையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் இடைவிடாத அழுகுரலுடன் இராவணன் முதலான இராட்சஸர்களின் உயிரற்ற உடல்களை அணுகினர்.

பதம் 9.10.25
ஸ்வான் ஸ்வான் பந்தூன் பரிஷ்வஜ்ய லக்ஷ்மணேஷுபிர் அர்திதான்
ருருது: ஸுஸ்வரம் தீனா க்னந்த்ய ஆத்மானம் ஆத்மனா

ஸ்வான் ஸ்வான்—அவரவர் கணவன்மார்களை; பந்தூன்—நண்பர்களை; பரிஷ்வஜ்ய—தழுவிக் கொண்டு; லக்ஷ்மண-இஷுபி:—லக்ஷ்மணரின் அம்புகளால்; அர்திதான்—கொல்லப்பட்ட; ருருது:—எல்லா மனைவியரும் பரிதாபமாக அழுதனர்; ஸு-ஸ்வரம்—இது கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது; தீனா:—மிகவும் இரங்கத்தக்க; க்னந்திய:—அடித்துக் கொண்டு; ஆத்மானம்—தங்கள் மார்பகங்களை; ஆத்மனா—தாங்களாகவே.

தங்களுடைய கணவன்மார்கள் லக்ஷ்மணரின் அம்புகளால் கொல்லப்பட்டதால், துக்கத்தால் தங்களது மார்பகங்களை அடித்துக் கொண்ட அப்பெண்கள் அவரவர் கணவன்மார்களைத் தழுவிக் கொண்டு, அனைவரிடமும் முறையிடும் வகையில் பரிதாபமாக அழுதனர்.

பதம் 9.10.26
ஹா ஹதா: ஸ்ம வயம் நாத லோக-ராவண ராவண
கம் யாயாச் சரணம் லங்கா த்வத்-விஹீனா பரார்திதா

ஹா—அந்தோ; ஹதா—கொன்றீர்கள்; ஸ்ம—முன்பு; வயம்—நாங்கள் அனைவரும்; நாத—நாதனே; லோக-ராவண—பலரை அழவைத்த கணவரே; ராவண—பிறரை அழவைக்கக்கூடிய இராவணா; கம்—யாரிடம்; யாயாத்—அடையும்; சரணம்—சரணம்; லங்கா—லங்காபுரி; த்வத்-விஹீனா—நீங்களில்லாமல்; பர-அர்திதா—எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு.

நாதனே, தலைவா! பிறருக்கு நீங்கள் துன்பமிழைத்ததால், இராவணன் என்று அழைக்கப்பட்டீர். ஆனால் இப்பொழுது நீங்கள் வெல்லப்பட்டதால், நாங்களும் வெல்லப்பட்டோம். நீங்களில்லாத இந்த இலங்கை எதிரியால் வெற்றி கொள்ளப்பட்டதால், இப்பொழுது நாங்களும் தோற்றவர்களானோம். அது புகலிடம் தேடி யாரிடம் செல்லும்?

பதம் 9.10.27
ந வை வேத மஹா-பாக பவான் காம-வசம் கத:
தேஜோ ‘நுபாவம் ஸீதாயா யேன நீதோ தசாம் இமாம்

ந—இல்லை; வை—உண்மையில்; வேத—அறிய; மஹா-பாக—பேரதிர்ஷ்டசாலியே; பவான்—நீங்கள்; காம-வசம்—காம வசப்பட்டதால்; கத:—கதியை அடைந்தீர்; தேஜ:—வசியத்தினால்; அநுபாவம்—அத்தைகைய வசியத்தின் பயனாக; ஸீதாயா:—சீதா தேவியின்; யேன—எதனால்; நீத:—கொண்டுவரப்பட்டீர்; தசம்—நிலைக்கு; இமாம்—இதைப் போன்ற (அழிவு).

பெரும் அதிர்ஷ்டசாலியே, நீங்கள் காமவசப்பட்டிருந்ததால், சீதா தேவியின் செல்வாக்கை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளது சாபத்தினால், இப்பொழுது பகவான் ராமச்சந்திரரால் கொல்லப்பட்டு இந்நிலைக்கு நீங்கள் தாழ்த்தப்பட்டீர்.

பதம் 9.10.28
க்ருதைஷா விதவா லங்கா வயம் ச குல-நந்தன
தேஹ: க்ருதோ ‘ன்னம் க்ருத்ராணாம் ஆத்மா நரக-ஹேதவே

க்ருதா—உம்மால் செய்யப்பட்ட; ஏஷா—இதெல்லாம்; விதவா—விதவை; லங்கா—லங்காபுரி; வயம் ச—நாங்களும்; குல-நந்தன—இராட்சஸர்களுக்குப் பிரியமானவரே; தேஹ:—உடல்; க்ருத:—உம்மால் செய்யப்பட்டடது; அன்னம்—உணவாக; க்ருத்ராணாம்—கழுகுகளின்; ஆத்மா—மற்றும் உமது ஆத்மா; நரக-ஹேதவே—நரகம் செல்ல.

இராட்சஸ வம்சத்திற்குப் பிரியமானவரே, உங்களால் லங்காபுரி மட்டுமல்லாமல், நாங்களும் விதவைகளானோம். உமது செயல்களால், உமது உடலை கழுகுகளுக்கு இரையாகவும், உமது ஆத்மாவை நரகத்திற்கு அனுப்பவும் தகுதியுடையவையாகச் செய்து கொண்டீர்.

பதம் 9.10.29
ஸ்ரீ-சுக உவாச
ஸ்வானாம் விபீஷணஸ் சக்ரே கோஸலேந்ரானுமோதித:
பித்ரு-மேத-விதானேன யத் உக்தம் ஸாம்பராயிகம்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸ்வானாம்—அவரது சொந்த குடும்ப அங்கத்தினர்களின்; விபீஷண:—இராவணனின் தம்பியும், பகவான் ராமச்சந்திரரின் பக்தருமான விபீஷணர்; சக்ரே—நிறைவேற்றினார்; கோஸல-இந்ர-அனுமோதித:—கோசல அரசரான பகவான் ராமசந்திரரால் அனுமதிக்கப்பட்டு; பித்ரு-மேத-விதானேன—தந்தையின் அல்லது ஒரு குடும்ப அங்கத்தினரின் மரணத்திற்குப் பின் மகனால் செய்யப்படும் ஈமக்கிரியைகளால்; யத்உக்தம்—நியமிக்கப்பட்ட; ஸாம்பராயிகம்—நரகத்திற்குச் செல்வதிலிருந்து ஒருவனைக் காப்பாற்றுவதற்காக செய்யப்படும் கடமைகள்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இராவணனின் நல்ல தம்பியும், பகவான் ராமச்சந்திரரின் பக்தருமான விபீஷணர், கோசல அரசரான பகவான் ராமச்சந்திரரின் அனுமதியுடன், நரகத்திற்குச் செல்வதிலிருந்து தன் குடும்ப அங்கத்தினர்களைக் காப்பாற்றுவதற்குரிய நியமிக்கப்பட்ட ஈமக் கிரியைகளை பிறகு நிறைவேற்றினார்.

பதம் 9.10.30
ததோ ததர்ச பகவான் அசோக-வனிகாஸ்ரமே
க்ஷாமாம் ஸ்வ-விரஹ-வ்யாதிம் சிம்சபா-மூலம்-ஆஸ்ரிதாம்

தத:—அதன்பிறகு; ததர்ச—கண்டார்; பகவான்—பரமபுருஷ பகவான்; அசோக-வனிக-ஆஸ்ரமே—அசோக வனத்திலுள்ள ஒரு சிறு குடிசையில்; க்ஷாமாம்—மிகவும் மெலிந்து; ஸ்வ-விரஹ-வ்யாதிம்—பகவான் ராமச்சந்திரரின் பிரிவுத் துயரால் உண்டான நோயினால் துன்புற்று; சிம்சபா—சிம்சபா எனும் மரத்தின்; மூலம்—அடியில்; ஆஸ்ரிதாம்—புகலிடம் கொண்டு.

அதன்பிறகு, அசோக வனத்தில், சிம்சபா எனும் மரத்தடியில், ஒரு சிறிய குடிசைக்குள் சீதை அமர்ந்திருப்பதை பகவான் ராமச்சந்திரர் கண்டார். அவரது பிரிவினால் ஏற்பட்ட துயரத்தால் அவள் மிகவும் இளைத்துப் போயிருந்தாள்.

பதம் 9.10.31
ராம: ப்ரீயதமாம் பார்யாம் தீனாம் வீக்ஷ்யான்வகம்பத ஆத்ம-ஸந்தர்சனாஹ்லாத-விகஸன்-முக-பங்கஜாம்

ராம:—பகவான் ராமச்சந்திரர்; ப்ரிய-தமாம்—அவரது அன்பிற்குரியவளிடம்; பார்யாம்—மனைவி; தீனாம்—மிகவும் பரிதாபமான நிலையில் இருப்பதை; வீக்ஷ்ய—கண்டு; அன்வகம்பத—மிகவும் இரக்கம் கொண்டார்; ஆத்ம-ஸந்தர்சன்—தன் அன்பிற்குரியவளை ஒருவன் காணும் போது; ஆஹ்லாத—ஆனந்தப் பரவசத்தை; விகஸத்—காட்டும்; முக—வாய்; பங்கஜாம்—ஒரு தாமரையைப் போன்ற.

தன் மனைவியை அந்நிலையில் கண்ட பகவான் ராமச்சந்திரர் அவளிடம் மிகவும் இரக்கம் கொண்டார். பகவான் ராமச்சந்திரர் அவள் முன் வந்தபோது, தன் அன்பிற்குரியவரைக் கண்டு அவள் பெரு மகிழ்ச்யடைந்தாள். தாமரை போன்ற அவளது வாய் அவளது ஆனந்தத்தை வெளிப்படுத்தியது.

பதம் 9.10.32
ஆரோப்யாருருஹே யானம் ப்ராத்ருப்யாம் ஹனுமத்-யுத: விபீஷணாய பகவான் தத்வா ரக்ஷோ-கணேசதாம்
லங்காம் ஆயுஸ் ச கல்பாந்தம் யயௌ சீர்ண-வ்ரத: புரீம்

ஆரோப்ய—வைத்து, அல்லது நிறுத்தி; ஆருருஹே—ஏறினார்; யானம்—விமானத்தின் மீது; ப்ராத்ருப்யாம்—அவரது தம்பி லக்ஷ்மணருடனும், சேனாதிபதி சுக்ரீவனுடனும்; ஹனுமத்-யுத:—ஹனுமானால் சூழப்பட்டவராய்; விபீஷணாய—இராவணனின் தம்பியான விபீஷணரிடம்; பகவான்—பகவான்; தத்வா—பொறுப்பை ஒப்படைத்தார்; ரக்ஷ:-கண-ஈசதாம்—இலங்கையின் இராட்சஸ ஜனங்களை ஆளும் அதிகாரத்தை; லங்காம்—லங்காபுரி; ஆயு: ச—மற்றும் ஆயுளையும்; கல்ப-அந்தம்—ஒரு கல்பம் முடியும்வரை; யயெள—நகருக்குத் திரும்பினார்; சீர்ண-வ்ரத:—வனவாசத்தை முடித்துக் கொண்டு; புரீம்—அயோத்திக்கு.

ஒரு கல்ப காலத்திற்கு இலங்கையின் இராட்சஸ ஜனங்களை ஆளும் அதிகாரத்தை விபீஷணருக்குக் கொடுத்த பின், பரமபுருஷராகிய பகவான் ராமச்சந்திரர் சீதாதேவியை புஷ்பக விமானத்தில் அமர்த்தி தானும் அதில் ஏறிக்கொண்டார். தமது வனவாசகாலம் முடிவுற்றதால், ஹனுமான், சுக்ரீவன் மற்றும் தம்பி லக்ஷ்மணன் ஆகியோரால் சூழப்பட்டவராய் பகவான் அயோத்திக்குத் திரும்பினார்.

பதம் 9.10.33
அவகீர்யமாண: ஸுகுஸுமைர் லோகபாலார்பிதை:
பதி உபகீயமான-சரித: சதத்ருதி-ஆதிபிர் முதா

அவகீர்யமாண:—மூழ்கடிக்கப்பட்டதால்; ஸு-குஸுமை:—நறுமணமுள்ள அழகிய மலர்களால்; லோக-பால-அர்பிதை:—அரச வம்சத்தினரால் தூவப்பட்ட; பதி—சாலையில்; உபகீயதான-சரித:—அவரது அசாதாரணமான செயல்களுக்காக புகழப்பட்ட அவர்; சதத்ருதி-ஆதிபி:—பிரம்மாவையும், மற்ற தேவர்களையும் போன்ற புருஷர்களால்; முதா—பெரும் சந்தோஷத்துடன்.

பகவான் ராமச்சந்திரர் தமது தலைநகரான அயோத்திக்குத் திரும்பினார். அப்போது நறுமணமுள்ள அழகிய மலர்களைப் பொழிந்த அரச பரம்பரையினர் சாலையில் அவரை வரவேற்று உபசரித்தனர். பிரம்ம தேவரைப் போன்ற மகா புருஷர்களும், மற்ற தேவர்களும் பகவானின் செயல்களை பெரு மகிழ்ச்சியுடன் போற்றிப் புகழ்ந்தனர்.

பதம் 9.10.34
கோ-மூத்ர-யாவகம் ஸ்ருத்வா ப்ராதரம் வல்கலாம்பரம்
மஹா-காருணிகோ ‘தப்யஜ் ஜடிலம் ஸ்தண்டிலே-சயம்

கோ-மூத்ர-யாவகம்—பசுவின் மூத்திரத்தில் வேகவைத்த வால் கோதுமையை சாப்பிட்டு வந்தார்; ஸ்ருத்வா—என்பதைக் கேட்டு; ப்ராதரம்—அவரது தம்பி பரதன்; வல்கல-அம்பரம்—மரவுரி தரித்து; மஹா-காருணிக:—பரம கருணாமூர்த்தியான பகவான் ராமச்சந்திரர்; அதப்யத்—மிகவும் வருந்தினார்; ஜடிலம்—மயிர்ச்சடை அணிந்து; ஸ்தண்டிலே-சயம்—நாணல் புல்லின் மீது (குசாஸனம்) படுத்துறங்கி.

அயோத்தியை அடைந்ததும், தாம் இல்லாத சமயத்தில் தம்பி பரதன் பசு மூத்திரத்தில் வேகவைத்த வால் கோதுமையை சாப்பிட்டு வந்தார் என்பதையும், மரவுரி தரித்து, மயிர்ச்சடையுடன், நாணல் புல்லின் மீது படுத்துறங்கினார் என்பதையும் கேள்விப்பட்ட, பரம கருணாமூர்த்தியான பகவான் ராமச்சந்திரர் மிகவும் வருந்தினார்.

பதங்கள் 9.10.35 – 9.10.38
பரத: ப்ராப்தம் ஆகர்ண்ய பௌராமாத்ய-புரோஹிதை:
பாதுகே சிரஸி ன்யஸ்ய ராமம் ப்ரத்யுத்யதோ ‘க்ரஜம்

நந்திக்ராமாத் ஸ்வ-சிபிராத் கீத-வாதித்ர-நிஹ்ஸ்வனை:
ப்ரஹ்ம-கோஷேண ச முஹு: படத்பிர் ப்ரஹ்மவாதிபி:

ஸ்வர்ண-கக்ஷ-பதாகாபிர் ஹைமைஸ் சித்ர-த்வஜை ரதை:
ஸத்-அஸ்வை ருக்ம-ஸன்னாஹைர் படை: புரட-வர்மபி:

ஸ்ரேணீபிர் வார-முக்யாபிர் ப்ருத்யைஸ் சைவ பதானுகை: பாரமேஷ்ட்யானி உபாதாய பண்யானி உச்சாவசானி ச பாதயோர் ன்யபதத் ப்ரேம்ணா ப்ரக்லின்ன-ஹ்ருதயேக்ஷண:

பரத:—பகவான் பரதன்; ப்ராப்தம்—நகர் திரும்புவதை; ஆகர்ண்ய—கேள்விப்பட்டு; பௌர—எல்லா வகையான பிரஜைகளும்; அமாத்ய—எல்லா மந்திரிகளும்; புரோஹிதை:—எல்லாப் புரோகிதர்களாலும் சூழப்பட்டவராய்; பாதுகே—பாதுகைகளை; சிரஸி—தலை மீது; ன்யஸ்ய—வைத்து; ராமம்—பகவான் ராமச்சந்திரரை; ப்ரத்யுத்யத:—வரவேற்பதற்காக முன்நோக்கிச் சென்று; அக்ரஜம்—அவரது மூத்த சகோதரர்; நந்திக்ராமாத்—நந்திகிராமம் என்ற அவரது வசிப்பிடத்திலிருந்து; ஸ்வ-சிபிராத்—அவரது சொந்த முகாமிலிருந்து; கீத-வாதித்ர—பாடல்களும், மேள வாத்தியங்களும், மற்ற வாத்தியக் கருவிகளும்; நிஹ்ஸ்வனை:—அத்தகைய ஓசைகளால் சூழப்பட்டவராய்; ப்ரஹ்ம-கோஷேண—வேதமந்திர கோஷத்தால்; ச—மேலும்; முஹு:—எப்பொழுதும்; படத்பி:—வேத பாராயணம் செய்துகொண்டு; ப்ரஹ்மவாதிபி:—முதல்தர பிராமணர்களால்; ஸ்வர்ண-கக்ஷ-பதாகாபி:—கொடிகளாலும், தங்க ஜரிகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட; ஹைமை:—தங்க; சித்ர-த்வஜை:—அலங்கரிக்கப்பட்ட கொடிகளுடனும்; ரதை:—இரதங்களுடனும்; ஸத்-அஸ்வை:—மிகவும் அழகிய குதிரைகளைக் கொண்ட; ருக்ம—தங்கநிற; ஸன்னாஹை:—சேணங்களுடன்; படை:—வீரர்களால்; புரட-வர்மபி:—தங்கக் கவசமணிந்த; ஸ்ரேணீபி:—அத்தகைய ஓர் ஊர்வலத்தால்; வார-முக்யாபி:—நன்கு உடையணிந்த விலைமாதர்களால் சூழப்பட்டவராய்; ப்ருத்யை:—சேவகர்களால்; ச—கூட; ஏவ—உண்மையில்; பத-அநுகை:—காலாட்படைகளால்; பாரமேஷ்ட்யானி—ராஜ வரவேற்புக்குப் பொருத்தமான மற்ற பொருட்களுடன்; உபாதாய—அனைத்தையும் சேகரித்துக் கொண்டு; பண்யானி—விலையுயர்ந்த இரத்தினங்கள் முதலான; உச்ச-அவசானி—வெவ்வேறு மதிப்புக்களைக் கொண்ட; ச—தவிரவும்; பாதயோ:—பகவானின் பத்மபாதங்களில்; ன்யபதத்—விழுந்தார்; ப்ரேம்ணா—அன்புப் பரவசத்தில்; ப்ரக்லின்ன—ஈரமாகி, அமைதியடைந்து; ஹ்ருதய—இதயம்; ஈஷ்ண:—யாருடைய கண்கள்.

பகவான் ராமச்சந்திரர் அயோத்தியை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த பகவான் பரதன், உடனே பகவான் ராமச்சந்திரரின் பாதுகைகளை தம் தலைமீது சுமந்து கொண்டு நந்தி கிராமத்திலுள்ள தமது முகாமிலிருந்து வெளியேறினார். பகவான் பரதன் மந்திரிகளாலும், புரோகிதர்களாலும், மரியாதைக்குரிய மற்ற பிரஜைகளாலும், இனிய வாத்தியங்களை இசைக்கும் இசைவாணர்களாலும், வேத மந்திரங்களை உரக்க ஒதும் கற்றறிந்த பிராமணர்களாலும் சூழப்பட்டவராகச் சென்றார். அந்த ஊர்வலத்தில் தங்கக் கயிறுகளாலான சேனங்களைக் கொண்ட அழகிய குதிரைகளால் இழுக்கப்பட்ட இரதங்களும் பின் தொடர்ந்தன. இந்த இரதங்கள் தங்க ஜரிகைகளுடன் கூடிய கொடிகளுடனும், வெவ்வேறு அளவுகளையும் வடிவங்களையும் கொண்ட மற்ற கொடிகளுடனும் அலங்கரிக்கப்ட்டிருந்தன. தங்கக் கவசமணிந்த வீரர்களும், வெற்றிலைப் பாக்கை ஏந்திச் செல்லும் பணியாட்களும், மற்றும் பல பிரபலமான அழகிய விலைமாதர்களும் கூட ஊர்வலத்தில் இருந்தனர். குடை, சாமரங்கள், பல தரப்பட்ட இரத்தினங்கள், மற்றும் ராஜ வரவேற்புக்குரிய மற்ற பொருட்கள் ஆகியவற்றைக் கொண்ட பல பணியாட்கள் கால்நடையாகச் சென்றனர். இவ்வாறு பின் தொடரப்பட்ட பகவான் பரதர், பரவசத்தினால் மென்மையடைந்த இதயத்துடனும், கண்களில் கண்ணீருடனும் பகவான் ராமச்சந்திரரை அணுகி, ஆனந்தப் பரவசத்துடன் அவரது தாமரைப் பாதங்களில் விழுந்தார்.

பதங்கள் 9.10.39 – 9.10.40
பாதுகே ன்யஸ்ய புரத ப்ராஞ்சலிர் பாஷ்ப-லோசன:
தம் ஆஸ்லிஷ்ய சிரம் தோர்ப்யாம் ஸ்னாபயன் நேத்ரஜைர் ஜலை:

ராமோ லக்ஷ்மண-ஸீதாப்யாம் விப்ரேக்யோ யே ‘ர்ஹ—ஸத்தமா:
தேப்ய: ஸ்வயம் நமஸ்சக்ரே ப்ரஜாபிஸ் ச நமஸ்க்ருத:

பாதுகே—பாதுகைகளை; ன்யஸ்ய—வைத்தபின்; புரத:—பகவான் ராமச்சந்திரரின் முன்; ப்ராஞ்சலி:—கூப்பிய கரங்களுடன்; பாஷ்ப-லோசன:—கண்களில் கண்ணீருடன்; தம்—அவரை பரதனை; ஆஸ்லிஷ்ய—தழுவிக் கொண்டு; சிரம்—நீண்ட நேரமாக; தோர்ப்யாம்—அவரது இருகரங்களால்; ஸ்னாபயன்—குளிப்பாட்டி; நேத்ர-ஜை—அவரது கண்களிலிருந்து பெருகும்; ஜலை:—கண்ணீரால்; ராம—பகவான் ராமச்சந்திரர்; லக்ஷ்மண-ஸீதாப்யாம்—லக்ஷ்மணருடனும், சீதைப் பிராட்டியுடனும்; விப்ரேப்ய:—கற்றறிந்த பிராமணர்களுக்கும்; யே—மற்றவர்களுக்கும்; அர்ஹ-ஸத்தமா:—வழிபடத்தக்க; தேப்ய:—அவர்களுக்கு; ஸ்வயம்—சுயமாகவே; நம:-சக்ரே—மரியாதையாக வணக்கம் செய்தார்; ப்ரஜாபி:—பிரஜைகளால்; ச—மேலும்; நம:-க்ருத:—வணக்கம் செலுத்தப்பட்டார்.

பாதுகைகளை பகவான் ராமச்சந்திரர் முன் வைத்த பிறகு, கண்களில் கண்ணீர் மல்க, பகவான் பரதர் கூப்பிய கரங்களுடன் நின்றிருந்தார். பரதரைத் தமது இரு கரங்களால் நீண்ட நேரம் தழுவிக் கொண்ட பகவான் ராமச்சந்திரர் தமது கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினார். பிறகு சீதைப்பிராட்டியாலும், லக்ஷ்மணராலும் பின்தொடரப்பட்ட பகவான் ராமச்சந்திரர் கற்றறிந்த பிராமணர்களுக்கும், குடும்பத்திலுள்ள முதியவர்களுக்கும் தமது மரியாதைக்குரிய வணக்கங்களைச் செய்தார். மேலும் அயோத்தியின் பிரஜைகள் அனைவரும் பகவானுக்குத் தங்களது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பித்தனர்.

பதம் 9.10.41
துன்வந்த உத்தராஸங்கான் பதிம் வீக்ஷ்ய சிராகதம் உத்தரா:
கோஸலா மால்யை: கிரந்தோ நன்ருதர் முதா

துன்வந்த:—அசைத்து; உத்தர-ஆஸங்கான்—மேலாடையை; பதிம்—பகவான்; வீக்ஷ்ய—கண்டு; சிர-ஆகதம்—நாடுகடத்தப்பட்டு, பல ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்ததை; உத்தரா: கோஸலா:—அயோத்தியின் பிரஜைகள்; மால்யை: கிரந்த:—மாலைகளை அணிவித்து; நன்ருது:—ஆடத் துவங்கினர்; முதா—பேரானந்தத்துடன்.

நீண்ட நாட்களுக்குப் பின் தங்களது அரசர் திரும்பி வந்ததைக் கண்ட அயோத்தியின் பிரஜைகள் அவருக்கு மாலைகள் அணிவித்து, ஆனந்த நடனமாடினர்.

பதங்கள் 9.10.42 – 9.10.43
பாதுகே பரதோ ‘க்ருஹ்ணாச் சாமர-வ்யஜனோத்தமே
விபீஷண: ஸஸுக்ரீவ: ஸ்வேத-ச்சத்ரம் மருத்-ஸுத:

தனுர்-நிஷங்காஞ் சத்ருக்ன ஸீதா தீர்த்த-கமண்டலும்
அபிப்ரத் அங்கத: கட்கம் ஹைமம் சர்மர்க்ஷ-ராண் ந்ருப

பாதுகே—பாதுகைகளையும்; பரத:—பகவான் பரதர்; அங்ருஹ்ணாத்—ஏந்திச் சென்றார்; சாமர—சாமரத்தை; வீயஜன—விசிறி; உத்தமே—மிகச்சிறந்த; விபீஷண:—இராவணனின் தம்பி; ஸ-ஸுக்ரீவ:—சுக்ரீவனுடன்; ஸ்வேத-சத்ரம்—ஒரு வெண்குடையை; மருத்-ஸுத:—வாயு புத்திரரான ஹனுமான்; தனு:—வில்லை; நிஷங்கான்—இரு அம்பறாத் தூணிகளுடன்; சத்ருக்ன:—பகவான் ராமச்சந்திரரின் ஒரு தம்பி; ஸீதா—சீதாதேவி; தீர்த்த-கமண்டலும்—தீர்த்த கமண்டலத்தை; அபிப்ரத்—ஏந்திச் சென்றார்; அங்கத:—வானர சேனாதிபதியான அங்கதன்; கட்கம்—வாளை; ஹைமம்—தங்கத்தாலான; சர்ம—கேடயத்தை; ரிக்ஷ-ராட்—ரிக்ஷர்களின் ராஜனான ஜாம்பவான்; ந்ருப—அரசே.

அரசே, பரதர், பகவான் ராமச்சந்திரரின் பாதுகைகளை ஏந்திச் சென்றார், சுக்ரீவனும், விபீஷணரும் முறையே ஒரு வெண்சாமரத்தையும், அற்புதமான விசிறியையும் ஏந்திச் சென்றனர். ஹனுமான் ஒரு வெண்குடையையும், சத்ருக்னன் ஒரு வில்லையும் இரு அம்பறாத் தூணிகளையும், மற்றும் சீதாதேவி ஒரு தீர்த்த கமண்டலத்தையும் ஏந்திச் சென்றனர். அங்கதன் ஒரு வாளை ஏந்திச் சென்றார். ரிக்ஷ ராஜனான ஜாம்பவான் ஒரு தங்கக் கேடயத்தை ஏந்திச் சென்றார்.

பதம் 9.10.44
புஷ்பக-ஸ்தோ நுத: ஸ்த்ரீபி: ஸ்தூயமானஸ் ச வந்திபி:
விரேஜே பகவான் ராஜன் க்ரஹைஸ் சந்ர இவோதித:

புஷ்பக-ஸ்த:—புஷ்பக விமானத்தில் அமர்ந்து; நுத:—வழிபடப்பட்டு; ஸ்த்ரீபி:—பெண்களால்; ஸ்தூயமான:—பிரார்த்தனைகள் செய்யப்பட்டு; ச—மேலும்; வந்திபி:—ஓதுவார்களால்; விரேஜே—அழகுப்படுத்தியது; பகவான்—பரமபுருஷரான பகவான் ராமச்சந்திரர்; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; க்ரஹை:—கிரகங்களுக்கிடையில்; சந்ர:—சந்திரன்; இவ—போல்; உதித:—உதயமானதை.

பரீட்சித்து மகாராஜனே, பெண்கள் அவரிடம் பிரார்த்தனைகள் செய்ய, ஓதுவார்கள் அவரது சிறப்பியல்புகளைப் பற்றி வர்ணிக்க, தமது புஷ்பக விமானத்தில் அமர்ந்திருந்த பகவான், நட்சத்திரங்களுடனும், கிரகங்களுடனும் கூடிய சந்திரனைப் போல் காட்சியளித்தார்.

பதங்கள் 9.10.45 – 9.10.46
ப்ராத்ராபினந்தித: ஸோ ‘த ஸோத்ஸவாம் ப்ராவிசத் புரிம்
ப்ரவிஸ்ய ராஜ-பவனம் குரு-பத்னி: ஸ்வ-மாதரம்

குரூன் வயஸ்யாவரஜான் பூஜித: ப்ரத்யபூஜயத்
வைதேஹீ லக்ஷ்மணஸ் சைவ யதாவத் ஸமுபேயது:

ப்ராத்ரா—அவரது தம்பியால் (பரதனால்); அபினந்தித:—நன்கு வரவேற்கப்பட்டு; ஸ:—அவர், பகவான் ராமச்சந்திரர்; அத—அதன் பிறகு; ஸ-உத்ஸவாம்—திருவிழாவிற்கு நடுவில்; ப்ராவிசத்—புகுந்தார்; புரீம்—அயோத்தியில்; ப்ரவிஸ்ய—நுழைந்த பிறகு; ராஜ-பவனம்—அரச மாளிகை; குரு-பத்னீ:—கையேயிக்கும், பிற மாற்றாந்தாய்களுக்கும்; ஸ்வ-மாதரம்—அவரது சொந்த தாய்க்கும் (கௌசல்யா); குரூன்—குருமார்களுக்கும் (ஸ்ரீ வசிஷ்டரும், பிறரும்); வயஸ்ய—சமவயதுடைய நண்பர்களுக்கும்; அவர-ஜான்—மற்றும் அவருக்கு இளையவர்களுக்கும்; பூஜித:—அவர்களால் பூஜிக்கப்பட்டு; ப்ரத்யபூஜயத்—பதிலுக்கு அவரும் வணங்கினார்; வைதேஹீ—சீதா தேவி; லஷ்மண:—லக்ஷ்மணர்; ச ஏவ—மேலும்; யதா-வத்—பொருத்தமான முறையில்; ஸமுபேயது:—வரவேற்கப்பட்டு, மாளிகைக்குள் புகுந்தார்.

அதன்பிறகு, தம்பி பரதனால் வரவேற்கப்பட்ட பகவான் ராமச்சந்திரர் விழாக்கோலம் பூண்டிருந்த அயோத்தியினுள் பிரவேசித்தார். மாளிகைக்குள் பிரவேசித்த அவர் கைகேயி மற்றும் தசரத மகாராஜனின் பிற மனைவிகள் உட்பட, எல்லாத் தாய்மார்களையும் வணங்கினார். முக்கியமாக தமது சொந்த தாயான கௌசல்யா தேவியை வணங்கினார். வசிஷ்டர் போன்ற ஆன்மீக குருமார்களையும் அவர் வணங்கினார். அவருக்குச் சம வயதுடைய நண்பர்களும், இளைய நண்பர்களும் அவரை வணங்கினார். அவரும் பதிலுக்கு அவர்களை வணங்கினார். லக்ஷ்மணரும், சீதாதேவியும் கூட அவ்வாறே செய்தனர். இவ்வாறாக அவர்கள் எல்லோருமே மாளிகைக்குள் நுழைந்தனர்.

பதம் 9.10.47
புத்ரான் ஸ்வ-மாதரஸ் தாஸ் து ப்ராணாம்ஸ் தன்வ இவோத்திதா:
ஆரோப்யாங்கே ‘பிஷிஞ்சந்த்யோ பாஷ்பௌகைர் விஜஹு: கச:

புத்ரான்—புத்திரர்கள்; ஸ்வ-மாதர:—அவர்களுடைய தாய்மார்கள்; தா:—அவர்கள், கௌசல்யா மற்றும் கைகேயி முதலான; து—ஆனால்; ப்ராணான்—உயிர்; தன்வ:—உடல்கள்; இவ—போல்; உத்திதா—எழுந்தனர்; ஆரோப்ய—வைத்து; அங்கே—மடியில்; அபிஷிஞ்சந்த்ய:—(தங்களது புத்திரர்களில் உடல்களை) நனைத்து; பாஷ்ப—கண்ணீரால்; ஓகை:—பெருக்கெடுத்தோடும்; விஜஹு:—கைவிட்டனர்; சுச:—புத்திரர்களின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தை.

ராமர், லக்ஷ்மணர், பரதர் மற்றும் சத்ருக்னர் ஆகியோரைக் கண்ட அவர்களது தாய்மார்கள், உணர்விழந்த உடல்கள் உணர்வு வரப்பெற்றதைப் போல் உடனே எழுந்தனர். இவ்வாறாக தங்களது புத்திரர்களை தங்கள் மடிகளில் அமரச் செய்து, அவர்களைக் கண்ணீரால் குளிப்பாட்டி, நீண்ட பிரிவினால் ஏற்பட்ட துயரத்தைப் போக்கிக் கொண்டனர்.

பதம் 9.10.48
ஜடா நிர்முச்ய விதிவத் குல-வ்ருத்தை: ஸமம் குரு:
அப்யஷிஞ்சத் யதைவேந்ரம் சது:-ஸிந்து-ஜலாதிபி:

ஜடா:—தலையிலுள்ள மயிர்ச்சடையை; நிர்முச்ய—மழித்து; விதி-வத்—கட்டுப்பாட்டு விதிகளுக்கேற்ப; குல-வ்ருத்தை:—குடும்பத்திலுள்ள முதியவர்கள்; ஸமம்—உடன்; குரு:—குலகுருவான வசிஷ்டர்; அப்யஷிஞ்சத்—பகவான் ராமச்சந்திரரின் அபிஷேகச் சடங்கை நடத்தி வைத்தார்; யதா—அவ்வாறு; ஏவ—போல்; இந்ரம்—இந்திரனுக்கு; சது:-ஸிந்து-ஜல—நான்கு சமுத்திர நீராலும்; ஆதிபி:—வேறு அபிஷேகப் பொருட்களுடனும்.

குலகுருவான வசிஷ்டர் பகவான் ராமச்சந்திரரின் தலையிலிருந்து மயிர்ச்சடையை மழிக்கச் செய்து, அச்சுமையைப் போக்கினார். பிறகு, தேவேந்திரனுக்குச் செய்யப்பட்டது போல், நான்கு சமுத்திரங்களின் நீராலும், பிற பொருட்களாலும், வயது முதிர்ந்த குடும்ப அங்கத்தினர்களின் ஒத்துழைப்புடன் பகவான் ராமச்சந்திரரின் அபிஷேகச் சடங்கை நிறைவேற்றினார்.

பதம் 9.10.49
ஏவம் க்ருத-சிர:-ஸ்னான: ஸுவாஸா: ஸ்ரக்வி-அலங்க்ருத:
ஸ்வலங்க்ருதை: ஸுவாஸோபிர் ப்ராத்ருபிர் பார்யயா பபௌ

ஏவம்—இவ்வாறாக; க்ருத-சிர:-ஸ்னான:—தலையோடு முழு அபிஷேகம் செய்வித்து; ஸு-வாஸா:—நன்கு உடை அணிந்து; ஸ்ரக்வி-அலங்க்ருத:—மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டு; ஸு-அலங்க்ருதை:—நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தனர்; ஸு-வாஸோபி:—நன்கு உடையணிந்திருந்தனர்; ப்ரத்ருபி:—அவரது தம்பிகளுடனும்; பார்யயா—அவரது மனைவி சீதையுடனும்; பபௌ—பகவான் மிகவும் கம்பீரமாக பிரகாசித்தார்.

தலை நன்கு மழிக்கப்பட்டு, பூரண அபிஷேகம் செய்யப்பட்டிருந்த பகவான் ராமச்சந்திரர், நன்கு உடையணிந்து, மலர் மாலையாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இவ்வாறாக அவரைப் போலவே உடைகளையும், ஆபரணங்களையும் அணிந்திருந்த அவரது சகோதரர்களாலும், மனைவியாலும் சூழப்பட்டிருந்த பகவான் ராமச்சந்திரர் பிரகாசமாக ஜொலித்தார்.

பதம் 9.10.50
அக்ரஹீத் ஆஸனம் ப்ராத்ரா ப்ரணிபத்ய ப்ரஸாதித:
ப்ரஜா: ஸ்வ-தர்ம-நிரதா வர்ணாஸ்ரம-குணான்விதா:
ஜுகோப பித்ருவத் ராமோ மேனிரே பிதரம் ச தம்

அக்ரஹீத்—ஏற்றார்; ஆஸனம்—அரியாசனத்தை; ப்ராத்ரா—அவரது தம்பியால் (பரதனால்); ப்ரணிபத்ய—அவரிடம் பூரண சரணாகதி அடைந்த பின்; ப்ரஸாதித:—திருப்தியடைந்து; ப்ரஜா:—மேலும் பிரஜைகள்; ஸ்வ-தர்ம-நிரதா:—அவரவர் வர்ணாஸ்ரம கடமைகளில் பூரணமாக ஈடுபட்டனர்; வர்ணாஸ்ரம—வர்ணாசிரம முறைக்கேற்ப; குண-அன்விதா:—அதில் அவர்கள் தகுதி பெற்றவர்களாக இருந்ததால்; ஜுகோப—பகவான் அவர்களைப் பாதுகாத்தார்; பித்ரு-வத்—ஒரு தந்தையைப் போலவே; ராம:—பகவான் ராமச்சந்திரர்; மேனிரே—கருதினர்; பிதரம்—ஒரு தந்தையைப் போலவே; ச—கூட; தம்—அவரை, பகவான் ராமச்சந்திரரை.

பகவான் பரதரின் பணிவாலும், பூரண சரணாகதியாலும் திருப்தியடைந்த பகவான் ராமச்சந்திரர் பிறகு இராஜ்யத்தின் அரியாசனத்தை ஏற்றார். ஒரு தந்தையைப் போலிருந்து பிரஜைகளின் நலனை அவர் கவனித்துக் கொண்டார். தங்களுடைய வர்ணாஸ்ரம கடமைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்த பிரஜைகளும் அவரைத் தங்களது தந்தையாக ஏற்றுக் கொண்டனர்.

பதம் 9.10.51
த்ரேதாயாம் வர்தமானாயாம் கால: க்ருத-ஸமோ ‘பவத்
ராமே ராஜனி தர்ம-க்ஞே ஸர்வ-பூத-ஸுகாவஹே

த்ரேதாயாம்—திரேதா யுகத்தில்; வர்தமானாயாம்—அந்த சமயத்தில் இருந்த போதிலும்; கால:—காலத்தில்; க்ருத—சத்திய யுகத்திற்கு; ஸம:—சமமாக; அபவத்—இருந்தது; ராமே—பகவான் ராமச்சந்திரரின் இருப்பால்; ராஜனி—ஆட்சிபுரியும் அரசராக; தர்ம-க்ஞே—அவர் சிறந்த தர்மவானாக இருந்ததால்; ஸர்வ-பூத—அனைத்து ஜீவராசிகளின்; ஸுக-ஆவஹே—பூரண ஆனந்தத்தை அளிக்கும்.

பகவான் ராமச்சந்திரர் அரசரானது திரேதா யுகத்தில். ஆனால் அவரது நல்ல அரசாட்சியினால் அது சத்தியயுகம் போலிருந்தது. அனைவரும் சமய சிந்தனை உடையவர்களாகவும், பூரண மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.

பதம் 9.10.52
வனானி நத்யோ கிரயோ வர்ஷாணி த்வீப-ஸிந்தவ
ஸர்வே காம-துகா ஆஸன் ப்ரஜானாம் பரதர்ஷப

வனானி—வனங்கள்; நத்ய:—நதிகள்; கிரய:—குன்றுகள் மற்றும் மலைகள்; வர்ஷாணி—நாட்டின் வெவ்வேறு பகுதிகள் அல்லது பூமியின் வெவ்வேறு பகுதிகள்; த்வீப—தீவுகள்; ஸிந்தவ:—சமுத்திரங்களும், கடல்களும்; ஸர்வே—அவையனைத்தும்; காம-துகா:—அவையவைகளுக்குரிய செல்வங்களில் முழுமையாக; ஆஸன்—அவ்வாறு இருந்தன; ப்ரஜானாம்—எல்லா ஜீவராசிகளின்; பரத-ரிஷப—பரத வம்சத்தில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே.

பரத வம்சத்தில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே, பகவான் ராமச்சந்திரரின் ஆட்சிக் காலத்தில், வனங்கள், நதிகள், குன்றுகள் மற்றும் மலைகள், நாடுகள், ஏழு தீவுகள் மற்றும் ஏழு கடல்கள் ஆகிய அனைத்தும், அனைத்து ஜீவராசிகளின் வாழ்வுக்குத் தேவையான பொருட்களை அளிப்பதில் அனுகூலமாக இருந்தன.

பதம் 9.10.53
நாதி-வ்யாதி-ஜரா-க்லானி-துஹ்க-சோக-பய-க்லமா:
ம்ருத்யுஸ் சானிச்சதாம் நாஸீத் ராமே ராஜனி அதோக்ஷஜே

ந—இல்லை; ஆதி—அத்யாத்மிக, அதிபௌதிக மற்றும் அதிதைவிக துன்பங்கள் (உடலாலும் மற்றும் மனதாலும், சில ஜீவராசிகளாலும், இயற்கையாலும் விளைவும் துன்பங்கள்); வ்யாதி—வியாதிகள்; ஜரா—முதுமை; க்லானி—இழப்பு; துஹ்க—துக்கம்; சோக—சோகம்; பய—பயம்; க்லமா:—மற்றும் களைப்பு; ம்ருத்யு:—மரணம்; ச—தவிரவும்; அனிச்சதாம்—அதை விரும்பாதவர்களின்; ந ஆஸீத்—அங்கு இல்லை; ராமே—பகவான் ராமச்சந்திரரின் ஆட்சியில்; ராஜனி—அவர் அரசராக இருந்ததால்; அதோக்ஷஜே—இந்த ஜட உலகிற்கு மேற்பட்டவரான பரமபுருஷர்.

பரமபுருஷராகிய பகவான் ராமச்சந்திரர் இவ்வுலகின் அரசராக இருந்தபோது உடலாலும், மனதாலும் ஏற்படும் துன்பம், நோய், முதுமை, இழப்பு, சோகம், துன்பம், பயம் மற்றும் களைப்பு ஆகியவை சிறிதும் இல்லாதிருந்தின. மரணத்தை விரும்பாதவர்களுக்கும் மரணம் கூட சம்பவிக்கவில்லை.

பதம் 9.10.54
ஏக-பத்னீ-வ்ரத-தரோ ராஜர்ஷி-சரித: சுசி:
ஸ்வ-தர்மம் க்ருஹ-மேதீயம் சிக்ஷயன் ஸ்வயம் ஆசரத்

ஏக-பத்னீ-வ்ரத-தர:—ஏக பத்தினி விரதத்தை ஏற்று; ராஜ-ரிஷி—ஒரு ராஜ ரிஷியைப்போல்; சரித:—அவருடைய ஒழுக்கம்; சுசி:—தூயதாக இருந்தது; ஸ்வ-தர்மம்—ஒருவரது சொந்த வர்ணாஸ்ரம கடமை; க்ருஹ-மேதீயம்—குறிப்பாக இல்லற வாழ்வில் இருப்பவர்களின்; சிக்ஷயன்—(தமது சொந்த நடத்தையால்) போதித்து; ஸ்வயம்—சுயமாக; ஆசரத்—அவரது கடமையை நிறைவேற்றினார்.

ஏக பத்தினி விரதத்தை ஏற்ற பகவான் ராமச்சந்திரர் ஒரு ராஜ ரிஷியாக விளங்கினார். அவரது குணத்திலுள்ள அனைத்துமே நல்லதாகவும். கோபம் போன்றவைகளால் கலங்கப்படாமலும் இருந்தன. இவ்வாறாக அவர் தமது சொந்த நடவடிக்கைகளின் மூலமாக, வர்ணாஸ்ரம முறைப்படியாக நல்லொழுக்கத்தை பொது மக்களுக்கு, குறிப்பாக குடும்பஸ்தர்களுக்கு போதித்தார்.

பதம் 9.10.55
ப்ரேம்ணானுவ்ரூத்யா சீலேன ப்ரஸ்ரயாவனதா ஸதீ
பியா ஹ்ரியா ச பாவ-க்ஞா பர்து: ஸீதாஹரன் மன:

ப்ரேம்ணா அனுவ்ருத்யா—அன்புடனும், நம்பிக்கையுடனும் கணவருக்குத் தொண்டு செய்ததால்; சீலேன—அத்தகைய நல்ல குணத்தினால்; ப்ரஸ்ரய-அவனதா—எப்பொழுதும் மிகவும் அடக்கமாகவும், கணவரை திருப்திப்படுத்தத் தயாராகவும் இருந்தாள்; ஸதீ—கற்புடையவளாகவும்; பியா—அச்சப்படுவதன் மூலம்; ஹ்ரியா—வெட்கத்தால்; ச—தவிரவும்; பாவ-க்ஞா—(கணவரின்) குணத்தைப் புரிந்து கொண்டு; பர்து:—அவளது கணவரான பகவான் ராமச்சந்திரரின்; சீதா—சீதாதேவி; அஹரத்—கவர்ந்தாள்; மன:—மனதை.

சீதாதேவி மிகவும் அடக்கமாகவும், விசுவாசத்துடனும், வெட்கமுள்ளவளாகவும் மற்றும் கற்புடையவளாகவும் நடந்து கொண்டதுடன் எப்பொழுதும் தன் கணவரின் மனதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொண்டாள். இவ்வாறாக தன் குணத்தாலும், அன்பாலும், தொண்டாலும் பகவானின் மனதை அவள் பூரணமாகக் கவர்ந்தாள்.


ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “பகவான் ராமச்சந்திரரின் திருவிளையாடல்கள்” எனும் தலைப்பை கொண்ட பத்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare