அத்தியாயம் – 20
பலி மகாராஜன் பிரபஞ்சத்தை
ஒப்படைத்தல்
பதம் 8.20.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, தமது ஆன்மீக குருவும், குடும்பப் புரோகிதருமான சுக்ராசார்யரால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்ட போது, பலி மகாராஜன் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அதன்பிறகு, நிதானமான ஆழ்ந்த யோசனைக்குப் பின், தமது ஆன்மீக குருவிடம் அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

பதம் 8.20.2 : பலி மகாராஜன் கூறினார்: தாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஒருவரது பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு, புகழ் மற்றும் வாழ்க்கைத் தேவை ஆகியவற்றிற்கு இடையூறு செய்யாத மதக் கொள்கையே குடும்பஸ்தனின் உண்மையான உத்தியோகக் கடமையாகும். நானும் இந்த மதக் கொள்கைகள் சரியானவைதான் என்று நினைக்கிறேன்.

பதம் 8.20.3 : பிரகலாத மகாராஜனின் பேரன் நான். நிலத்தைக் கொடுப்பதாக ஏற்கனவே நான் வாக்களித்து விட்டேன். பணத்தின் மீதுள்ள பேராசையால், அளித்த வாக்குறுதியிலிருந்து நான் எப்படி பின் வாங்க முடியும்? குறிப்பாக ஒரு பிராமணரிடம், ஒரு சாதாரண வஞ்சகனைப் போல் என்னால் எப்படி நடந்துகொள்ள முடியும்?

பதம் 8.20.4 : பொய்யை விட அதிக பாவமுள்ளது வேறொன்றுமில்லை. இதனால் பூமித்தாய் ஒருமுறை கூறினாள், “பொய் பேசும் ஒருவனைத் தவிர வேறெந்த சுமையையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியும்.”

பதம் 8.20.5 : நான் நரகத்திற்கோ, ஏழ்மைக்கோ, கடலளவு துன்பத்திற்கோ, என் நிலையிலிருந்து சரிவதற்கோ அல்லது மரணத்திற்கோ கூட அஞ்சவில்லை. ஆனால் ஒரு பிராமணரை ஏமாற்றுவதற்கு நான் மிகவும் அஞ்சுகிறேன்.

பதம் 8.20.6 : என் தலைவரே, மரணத்தின்போது, இவ்வுலகிலுள்ள எல்லா பெளதிகச் செல்வங்களும், அவற்றை வைத்திருப்பவரிடமிருந்து நிச்சயமாக பிரிக்கப்பட்டு விடுகின்றன என்பதைத் தங்களாலும் காண முடியும். ஆகவே, ஒருவர் அளித்துள்ள வெகுமானங்களால் பிராமணரான வாமன தேவர் திருப்தியடையவில்லை என்றால், எப்படியும் மரணத்தின் போது ஒருவன் இழந்துவிடப் போகும் செல்வங்களால் அவரை ஏன் திருப்திப்படுத்தக்கூடாது?

பதம் 8.20.7 : ததீசி, சிபி மற்றும் பல்வேறு பெருமைக்குரிய நபர்கள் பொது மக்களின் நலனுக்காக தங்களது வாழ்வையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர். இது சரித்திர ஆதாரமாகும். எனவே அற்பமான இந்த நிலத்தை ஏன் கைவிடக் கூடாது? இதைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது?

பதம் 8.20.8 : பிராமணர்களில் சிறந்தவரே, போரிடத் தயங்காதவர்களான பெரும் அசுர மன்னர்கள் இவ்வுலகை நிச்சயமாக அனுபவிக்கத்தான் செய்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்களுடைய புகழைத் தவிர மற்ற அனைத்தும் பறிக்கப்பட்டன. இப்புகழால் அவர்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். அதாவது, மற்ற விஷயங்களுக்குப் பதிலாக நற்புகழை ஒருவன் அடைய முயலவேண்டும்.

பதம் 8.20.9 : பிராமணர்களில் சிறந்தவரே, போரில் அச்சம் கொள்ளாமல், பல பேர் போர்க்களத்தில் தங்களது உயிரைத் துறந்துள்ளனர். ஆனால் புனித தீர்த்தங்களை உண்டாக்குபவரான புண்ணிய புருஷர் ஒருவருக்கு, தனது திரட்டப்பட்ட செல்வத்தை விசுவாசத்துடன் கொடுக்கும் வாய்ப்பு அவர்களில் ஒருவருக்குக் கூட கிடைக்கவில்லை.

பதம் 8.20.10 : உதார குணமும், கருணையும் கொண்ட ஒருவர், தானம் அளிப்பதன் வாயிலாக, குறிப்பாக தங்களைப் போன்ற நல்லவர் ஒருவருக்குத் தானம் கொடுப்பதன் வாயிலாக, சந்தேகமின்றி இன்னும் அதிக மங்களம் வாய்ந்தவராக ஆகிறார். இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், இச்சிறிய பிரம்மச்சாரி எதை விரும்பினாலும் அதை நான் கொடுக்கத் தான் வேண்டும்.

பதம் 8.20.11 : மாமுனிவரே, தங்களைப் போன்ற சிறந்த புண்ணிய புருஷர்கள், சமயச் சடங்குகளையும், யக்ஞங்களையும் இயற்றுவதற்குரிய வேதக் கொள்கைகளை நன்கு அறிந்திருப்பதால், எல்லாச் சூழ்நிலைகளிலும் பகவான் விஷ்ணுவை வழிபடுகின்றனர். ஆகவே, அதே பகவான் விஷ்ணு வரமளிப்பதற்காகவோ, அல்லது எதிரியாகக் கருதி என்னைத் தண்டிப்பதற்காகவோ இங்கு வந்திருந்தாலும், அவர் கேட்ட நிலப்பரப்பை தயக்கமின்றி அளித்து, அவரது கட்டளையை நான் நிறைவேற்ற வேண்டும்.

பதம் 8.20.12 : அவர் விஷ்ணுதான் என்றாலும், என்னிடம் வந்து யாசிப்பதற்கு பயந்து, ஒரு பிராமணரின் உருவில் தம்மை அவர் மறைத்துக் கொண்டுள்ளார். அவர் ஒரு பிராமணரின் உருவை ஏற்றிருப்பதால், தர்மத்திற்கு விரோதமாக அவர் என்னைக் கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ கூட, அவர் எனது விரோதி என்ற போதிலும், அவரை நான் பழி வாங்கமாட்டேன்.

பதம் 8.20.13 : இந்த பிராமணர், வேத மந்திரங்களால் வணங்கப்படுபவரான பகவான் விஷ்ணுதான் என்றால், அவர் என்னால் கொல்லப்பட்டுக் கீழே விழுந்து கிடந்தாலோ, அல்லது போரில் அவர் என்னைக் கொன்றாலோ, விஸ்தாரமாகப் பரவியுள்ள அவரது புகழை அவர் ஒருபோதும் இழக்கமாட்டார்.

பதம் 8.20.14 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அதன்பிறகு, பரமபுருஷரால் தூண்டப்பட்ட சுக்ராசார்யர் அவரது மேன்மைமிக்க சீடரான பலி மகாராஜனை சபித்தார். மிகவும் பெருந்தன்மை கொண்டவரும், சத்தியத்தில் உறுதியாக இருந்தவருமான பலி மகாராஜன், அவருடைய ஆன்மீக குருவின் கட்டளைகளை மதிப்பதற்கு பதிலாக, அவற்றை மீற விரும்பினார்.

பதம் 8.20.15 : நீ அறிவற்றவனாக இருப்பினும், பெயரளவேயான ஒரு பண்டிதனைப் போல் ஆகிவிட்டாய். ஆகவே என்னுடைய கட்டளையை மீறும் அளவுக்குத் திமிராக வீரம் பேசுகிறாய். என்னுடைய உத்தரவை மீறியதால், மிக விரைவில் உன்னுடைய ஐசுவரியங்கள் அனைத்தையும் நீ இழந்துவிடுவாய்.

பதம் 8.20.16 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தமது சொந்த ஆன்மீக குருவால் இவ்வாறு சபிக்கப்பட்ட பிறகும் கூட, பலி மகாராஜன் தமது தீர்மானத்திலிருந்து ஒருபோதும் விலகவில்லை. ஆகவே, வழக்கப்படி, வாமனதேவருக்கு நீர் வழங்கியபின் அவர் வாக்களித்திருந்த நிலத்தை அவருக்கு தானமாகக் கொடுத்தார்.

பதம் 8.20.17 : ஒரு முத்து மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த, விந்யாவளி எனப்படும் பலி மகாராஜனின் மனைவி உடனே அங்கு வந்து, தங்கத்தாலான ஒரு பெரிய நீர்க்கலசத்தை அங்கு கொண்டு வரச் செய்தாள். அது பகவானது பாதங்களைக் கழுவி அவரை வழிபடுவதற்குரிய நீரால் நிரப்பப்பட்டிருந்தது.

பதம் 8.20.18 : பகவான் வாமனதேவரை வழிபடுபவரான பலி மகாராஜன், பகவானின் தாமரைப் பாதங்களை சந்தோஷத்துடன் கழுவினார். அந்நீர் முழு பிரபஞ்சத்திற்கும் முக்தியை அளிக்கக்கூடியது என்பதால், அதை அவர் தமது தலைமீது தரித்துக் கொண்டார்.

பதம் 8.20.19 : அப்போது, உயர் கிரக அமைப்பின் வாசிகளான தேவர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் ஆகியோர் பலி மகாராஜனின் எளிமையான, வஞ்சனையற்ற செயலில் மிகவும் திருப்தியடைந்து, அவரது குணங்களைப் போற்றி, கோடிக்கணக்கான மலர்களை அவர் மீது பொழிந்தனர்.

பதம் 8.20.20 : கந்தர்வர்கள், கிம்புருஷர்கள் மற்றும் கின்னரர்கள் ஆகியோர் ஆயிரமாயிரம் கொம்புகளையும், பேரிகைகளையும் மீண்டும் மீண்டும் ஒலித்தனர். அவர்கள் மிகவும் சந்தோஷமாக பாடிக்கொண்டு, “பலி மகாராஜன் எவ்வளவு உயர்ந்த மனிதர், எவ்வளவு கடினமான காரியத்தை அவர் செய்திருக்கிறார்! பகவான் விஷ்ணு எதிரிகளின் பக்கம் இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்த போதிலும், மூவுலகங்களையும் முழுமையாக அவர் பகவானுக்கு தானமாகக் கொடுத்து விட்டார்” என்று அறிவித்தனர்.

பதம் 8.20.21 : வாமன ரூபத்தை ஏற்றுள்ள, வரம்பற்றவரான பரமபுருஷ பகவான், பிறகு பெளதிக சக்தியின் அடிப்படையில் செயற்பட்டு தமது உருவத்தை வளரச் செய்தார். பூமி, கிரக அமைப்புக்கள், ஆகாயம, திசைகள், அநேக பிரபஞ்சத் துவாரங்கள், கடல்கள், சமுத்திரங்கள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள், தேவர்கள் மற்றும் சிறந்த புண்ணிய புருஷர்கள் ஆகியவை உட்பட, பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அவரது உடலுக்குள் அடங்கும்வரை அவர் வளர்ந்து கொண்டே போனார்.

பதம் 8.20.22 : ஆறு ஐசுவரியங்களால் நிரம்பப்பெற்றதான பரமபுருஷ பகவானின் விஸ்வரூபத்தை, புரோகிதர்கள், ஆசார்யர்கள் மற்றும் சபையினர் ஆகியோருடன் பலி மகாராஜனும் கண்டார். பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் அவ்வுடல் கொண்டிருந்தது, அவற்றுள் ஸ்தூலமான பௌதிக மூலப்பொருட்கள், புலன்கள், புலன் பொருட்கள், மனம், புத்தி மற்றும் பொய் அகங்காரம், பல்வேறு வகையான ஜீவராசிகள், மற்றும் மூன்று ஜட இயற்கைக் குணங்களில் செயல்கள் மற்றும் பிரதிபலன்கள் ஆகியவையும் அடங்கும்.

பதம் 8.20.23 : அதன்பிறகு, தேவேந்திரனின் ஆசனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பலி மகாராஜனால், பகவானுடைய விஸ்வரூபத்தின் உள்ளங்கால்களில் இருக்கும் ரஸாதளம் போன்ற கீழ் கிரக அமைப்புக்களைக் காண முடிந்தது. பகவானுடைய பாதங்களில் பூமியின் மேற்பரப்பையும், அவரது கெண்டைக்கால்களின் வெளிப்பரப்பில் எல்லா மலைகளையும், அவரது முழங்கால்களில் பல்வேறு பறவைகளையும், அவரது தொடைகளில் பலவகைப்பட்ட காற்றுகளையும் அவர் கண்டார்.

பதம் 8.20.24 : அற்புதமாக செயற்படும் பகவானுடைய ஆடைகளுக்கடியில், பலி மகாராஜன் மாலை சந்தி வேளையைக் கண்டார். பகவானுடைய அந்தரங்க உறுப்புகளில் பிரஜாபதிகளையும், இடையின் வட்டப் பகுதியில் தாம் தமது அந்தரங்க சகாக்களுடன் இருப்பதையும் அவர் கண்டார். பகவானுடைய நாபியில் ஆகாயமும், அவரது இடையில் ஏழு சமுத்திரங்களும், அவரது மார்பில் அனைத்து நட்சத்திரக் கூட்டங்களும் இருப்பதை அவர் கண்டார்.

பதங்கள் 8.20.25 – 8.20.29 : எனதருமை ராஜனே, பகவான் முராரியின் இதயத்தில் அவர் மதத்தைக் கண்டார்; நெஞ்சில் இனிய சொற்கள் மற்றும் சத்தியம் ஆகியவற்றையும்; மனதில் சந்திரனையும்; மார்பில் தாமரை மலரைக் கையில் பிடித்த வண்ணமுள்ள ஸ்ரீதேவியையும்; கழுத்தில் அனைத்து வேதங்களையும், ஒலி அலைகளையும்; கரங்களில் தேவேந்திரனை தலைமையாகக் கொண்ட எல்லா தேவர்களையும்; இரு செவிகளில் எல்லாத் திசைகளையும்; தலையில் உயர் கிரக அமைப்புக்களையும்; கூந்தலில் மேகங்களையும்; நாசித்துவாரங்களில் காற்றையும்; கண்களில் சூரியனையும்; வாயில் நெருப்பையும் அவர் கண்டார். அவரது வார்த்தைகளிலிருந்து எல்லா வேத மந்திரங்களும் வந்தன. அவரது நாவில் நீர்க் கடவுளான வருணதேவனையும், அவரது புருவங்களில் கட்டுப்பாட்டு விதிகளையும், அவரது கண் இமைகளில் பகலையும், இரவையும் அவர் கண்டார். (அவரது கண்கள் திறந்திருந்த வேளையில் பகல் நேரமாகவும், கண்கள் மூடியிருந்த வேளையில் இரவு நேரமாகவும் இருந்தன.) அவரது நெற்றியில் கோபமும், அவரது உதடுகளில் பேராசையும் இருந்தன. ராஜனே, அவரது ஸ்பரிசத்தில் காம இச்சைகளும், அவரது விந்துவில் எல்லா நீர்நிலைகளும், அவரது முதுகில் அதர்மமும், அவரது அற்புதச் செயல்களில் அல்லது அடிகளில் யாகத்தீயும் இருந்தன. அவரது நிழலில் மரணமும், அவரது புன்னகையில் மாயா சக்தியும், அவரது உடலின் மீதுள்ள உரோமங்களில் மருந்து சாமான்களும், மூலிகைகளும் இருந்தன. அவரது நாடிகளில் எல்லா நதிகளும், அவரது நகங்களில் எல்லாவித கற்களும், அவரது புத்தியில் பிரம்ம தேவர். தேவர்கள் மற்றும் சிறந்த புண்ணிய புருஷர்கள் ஆகியோரும், மேலும் அவரது புலன்கள் மற்றும் முழு உடல் ஆகியவற்றில் அசையும், அசையாத ஜீவராசிகளும் இருந்தன. இவ்வாறாக, பகவானின் பிரம்மாண்டமான உடலில் பலி மகாராஜன் அனைத்தையும் கண்டார்.

பதம் 8.20.30 : அனைத்தையும் தமது உடலுக்குள் அடக்கிக் கொண்டிருந்த முழுமுதற் கடவுளின் விஸ்வ-ரூபத்தை பலி மகாராஜனின் ஆதரவாளர்களான அசுரர்கள் அனைவரும் கண்டனர். பொறுக்க முடியாத உஷ்ணத்தை உற்பத்தி செய்யும் சுதர்சன சக்கரம் பகவானின் கையிலிருப்பதையும் அவர்கள் கண்டனர். மேலும் அவரது வில்லின் பேரோசையையும் அவர்கள் கேட்டனர். இவையனைத்தும் அவர்களது இதயங்களில் வருத்தத்தை விளைவித்தன.

பதம் 8.20.31 : மேகத்தைப் போன்ற ஓசையெழுப்பிய, பாஞ்சஜன்யம் எனப்படும் பகவானின் சங்கு; கௌமோதகீ எனப்படும் மிகவும் சக்தி வாய்ந்த கதாயுதம்; நூற்றுக்கணக்கான சந்திரன்களைப் போன்ற புள்ளிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கேடயத்துடன் கூடிய, வித்யாதரம் எனப்படும் உடைவாள்; மற்றும் அம்பறாத்தூணிகளில் மிகச்சிறந்ததாகிய அக்ஷயஸாயகம் ஆகிய இவையனைத்தும் பகவானைத் துதிப்பதற்காக ஒன்றாகத் தோன்றின.

பதங்கள் 8.20.32 – 8.20.33 : பகவான் ஒரு பிரகாசமான கிரீடத்தையும், காப்புகளையும், மற்றும் மீனைப் போலிருந்த மின்னும் குண்டலங்களையும் அணிந்திருந்தார். பகவானுடைய மார்பின் மீது ஸ்ரீவத்ஸம் எனப்படும் மயிர்க் குஞ்சமும், தெய்வீகமான கௌஸ்துப மணியும் இருந்தன. ஓர் இடைக் கச்சையால் கட்டப்பட்ட மஞ்சள் நிற ஆடையை அவர் அணிந்திருந்தார். மேலும் தேனீக்களால் சூழப்பட்டிருந்த ஒரு மலர் மாலையால் அவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். ராஜனே, அற்புதச் செயல்களைக் கொண்டவரான பரமபுருஷ பகவான் தம்மை இவ்வாறு தோன்றச் செய்து, ஓரடியால் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் அளந்துவிட்டார். பிறகு தமது உடலால் ஆகாயத்தையும், தமது கரங்களால் எல்லாத் திசைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டார்.

பதம் 8.20.34 : பகவான் தமது இரண்டாவது அடியை வைத்து சுவர்க்க லோகங்களையும் அளந்து விட்டார். பகவானுடைய பாதம் உயர உயர விரிவடைந்து மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம் மற்றும் சத்தியலோகம் ஆகிய உலகங்களுக்கு அப்பாலும் சென்றுவிட்டதால், அவருடைய மூன்றாவது அடிக்கு அணுவளவு நிலம் கூட மீதமிருக்கவில்லை.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare