அத்தியாயம் – 19
பகவான் வாமனதேவர்
பலி மகாராஜனிடம் யாசித்தல்
பதம் 8.19.1
ஸ்ரீ-சுக உவாச
இதி வைரோசனேர் வாக்யம் தர்ம-யுக்தம் ஸ ஸூன்ருதம்
நிசம்ய பகவான் ப்ரீத: ப்ரதினந்யேதம் அப்ரவீத்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; வைரோசனே:—வைரோசனருடைய புதல்வரின்; வாக்யம்—வார்த்தைகளை; தர்ம-யுக்தம்—மதக் கொள்கைகளுக்கேற்புடைய; ஸ:—அவர்; ஸூ-ந்ருதம்—மிகவும் திருப்தியான; நிசம்ய—கேட்டு; பகவான்—பரமபுருஷ பகவான்; ப்ரீத:—முற்றிலும் திருப்தியடைந்து; ப்ரதினந்ய—அவரைப் பாராட்டி; இதம்—பின்வரும் வார்த்தைகளை; அப்ரவீத்—கூறினார்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பலி மகாராஜன் இன்பமூட்டும் வகையில் பேசுவதைக் கேட்ட முழுமுதற் கடவுளாகிய வாமனதேவர் மிகவும் திருப்தியடைந்தார். அவரது பேச்சு மதக் கொள்கைகளுக்கேற்ப இருந்ததுவே இதற்குக் காரணமாகும். இவ்வாறாக பகவான் அவரை புகழத் துவங்கினார்.

பதம் 8.19.2
ஸ்ரீ-பகவான் உவாச
வசஸ் தவைதஜ் ஜன-தேவ ஸூன்ருதம்
குலோசிதம் தர்ம-யுதம் யசஸ்-கரம்
யஸ்ய ப்ரமாணம் ப்ருகவ: ஸாம்பராயே
பதாமஹ: குல-வ்ருத்த: ப்ரசாந்த:

ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷ பகவான் கூறினார்; வச:—வார்த்கைள்; தவ—உனது; ஏதத்—இத்தகைய; ஜன-தேவ—ஜனங்களின் ராஜனே; ஸூ-ந்ருதம்—மிகவும் உண்மையான; குல-உசிதம்—உனது வம்சத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும்; தர்ம-யுதம்—மதக் கொள்கைகளுக்கு முற்றிலும் இணங்கியுள்ள; யச: கரம்—உன் புகழைப் பரப்பும் தகுதியுடையது; யஸ்ய—யாருடைய; ப்ரமாணம்—ஆதாரம்; ப்ருகவ:—பிருகு வம்ச பிராமணர்கள்; ஸாம்பராயே—அடுத்த உலகில்; பிதாமஹ:—உனது பாட்டனார்; குல-வ்ருத்த:—குடும்பத்திலேயே மிகவும் வயதானவரான; ப்ரசாந்த:—மிகவும் அமைதியானவருமான (பிரகலாத மகாராஜன்).

பரமபுருஷ பகவான் கூறினார்: ராஜனே, நீர் உண்மையாகவே உயர்ந்தவராவீர். ஏனெனில், தற்போதுள்ள உமது ஆலோசகர்கள் பிருகுவின் வம்சத்தைச் சேர்ந்த பிராமணர்கள் என்பதுடன், உமது எதிர்கால போதகராக, அமைதியே சொரூபமானவரும், வணக்கத்திற்குரியவரும், உமது பாட்டனாருமாகிய பிரகலாத மகாராஜன் இருக்கப் போகிறார். உமது கூற்றுகள் உண்மையானவையாகவும், மதக்கோட்பாடுகளுக்கு முற்றிலும் ஏற்புடையவையாகவும் உள்ளன. அவை உமது குடும்ப ஒழுக்கத்தைக் காப்பவையாக இருக்கின்றன. மேலும் உமது கீர்த்தியையும் அதிகரிக்கின்றன.

பதம் 8.19.3
ந ஹி ஏதஸ்மின் குலே கஸ்சின் நிஹ்ஸத்வ: க்ருபண: புமான்
ப்ரத்யாக்யாத ப்ரதிஸ்ருத்ய யோ வாதாதா த்விஜாதயே

ந—இல்லை; ஹி—உண்மையில்; ஏதஸ்மின்—இதில்; குலே—வம்சத்தில்; கஸ்சித்—எவரும்; நிஹ்ஸத்வ:—ஏழை மனம் கொண்டவர்; க்ருபண:—கருமி; புமான்—எவரும்; ப்ரத்யாக்யாதா—மறுத்தது; ப்ரதிஸ்ருத்ய—கொடுப்பதாக வாக்களித்த பின்; ய: வா—அல்லது; அதாதா—தானம் செய்யாதவராக; த்விஜாதயே—பிராமணர்களுக்கு.

இன்றுவரை, உமது வம்சத்தில் பிறந்த எவரும் ஏழை மனம் கொண்டவராகவோ, கருமியாகவோ இருந்ததில்லை என்பதை நானறிவேன். ஒருவரும் பிராமணர்களுக்கு தானம் கொடுக்க மறுத்ததில்லை. அல்லது தானம் கொடுப்பதாக வாக்களித்து அதை நிறைவேற்றாமல் விட்டதுமில்லை.

பதம் 8.19.4
ந ஸந்தி தீர்த்தே யுதி சார்த்தினார்த்திதா:
பராண்முகா யே து அமனஸ்வினோ ந்ருப
யுஷ்மத்-குலே யத் யசஸாமலேன
ப்ரஹ்ராத உத்பாதி யதோடுப: கே

ந—இல்லை; ஸந்தி—உள்ளனர்; தீர்த்தே—(தானம் கொடுக்கப்படும்) புண்ணிய இடங்களில்; யுதி—போர்க்களத்தில்; ச—கூட; அர்த்தினா—பிராமணர் அல்லது க்ஷத்திரியர் ஒருவரால்; அர்த்திதா:—கேட்கப்பட்டவர்; பராண்முகா:—அவர்களது வேண்டுகோளை மறுத்தவர்; யே—அத்தகையவர்கள்; து—உண்மையில்; அமனஸ்வின:—அத்தகைய ஏழை மனம் படைத்த, இழிவான அரசர்கள்; ந்ருப—ராஜனே (பலி மகாராஜன்); யுஷ்மத்-குலே—உமது வம்சத்தில்; யத்—இவ்விஷயத்தில்; யசஸா அமலேன—மாசற்ற கீர்த்தியால்; ப்ரஹ்ராத:—பிரகலாத மகாராஜன்; உத்பாதி—உதிக்கிறார்; யதா—போல்; உடுப:—சந்திரன்; கே—வானில்.

பலிச் சக்கரவர்த்தியே, புண்ணிய தீர்த்தங்களில் பிராமணர்களாலும், போர்க்களத்தில் க்ஷத்திரியர்களாலும் யாசிக்கப்பட்டதை, தானமாகக் கொடுக்க மறுத்த ஏழை மனம் கொண்ட ஓரரசன் ஒரு போதும் உனது வம்சத்தில் பிறந்ததில்லை. மேலும், வானில் பிரகாசிக்கும் அழகிய நிலவைப் போன்றவரான பிரகலாத மகாராஜனின் இருப்பால் உமது வம்சம் இன்னும் அதிக பெருமையடைகிறது.

பதம் 8.19.5
யதோ ஜாதோ ஹிரண்யாக்ஷஸ் சரன் ஏக இமாம் மஹீம்
ப்ரதிவீரம் திக்-விஜயே நாவிந்தத கதாயுத:

யத:—எந்த வம்சத்தில்; ஜாத:—பிறந்தான்; ஹிரண்யாக்ஷ:—இரண்யாக்ஷன் எனும் அரசன்; சரன்—திரிந்து; ஏக:—தனியாக; இமாம்—இந்த; மஹீம்—பூமி மீது; ப்ரதிவீரம்—இணையற்ற வீரன்; திக்-விஜயே—எல்லாத் திசைகளையும் வெற்றி கொள்வதற்காக; ந அவிந்தத—பெற முடியவில்லை; கதா-ஆயுத:—அவனது சொந்த கதாயுதத்தை ஏந்தியவாறு.

இரண்யாக்ஷன் பிறந்ததும் உமது வம்சத்தில்தான், அவன் தனது சொந்த கதையை மட்டுமே ஏந்தியவாறு, எல்லாத் திசைகளையும் வெற்றி கொள்வதற்காக, உதவியின்றி தனியாக பூமிமீது சுற்றித்திரிந்தான். அவன் சந்தித்த எந்த வீரனாலும் அவனுடன் போட்டியிட முடியவில்லை.

பதம் 8.19.6
யம் வினிர்ஜித்ய க்ருச்ரேண விஷ்ணு: க்ஷ்மோத்தார ஆகதம்
ஆத்மானம் ஜயினம் மேனே தத்-வீர்யம் பூரி அனுஸ்மரன்

யம்—யாரை; வினிர்ஜித்ய—வென்றபின்; க்ருச்ரேண—கஷ்டப்பட்டு; விஷ்ணு:—பகவான் விஷ்ணு தமது பன்றி அவதாரத்தில்; க்ஷ்மா-உத்தாரே—பூமி விடுவிக்கப்பட்ட சமயத்தில்; ஆகதம்—அவர் முன் தோன்றினான்; ஆத்மானம்:—அவர் தாமாகவே; ஜயினம்—வெற்றி; மேனே—கருதினார்; தத்-வீர்யம்—பெற்றதாக இரண்யாக்ஷனின் வீரியத்தை; பூரி—எப்பொழுதும், அல்லது மேலும் அதிகமாக; அனுஸ்மரன்—பற்றி சிந்தித்து.

கர்போதக கடலிலிருந்து பூமியை விடுவிக்கும்போது, ஒரு பன்றியாக அவதரித்த பகவான் விஷ்ணு, தம்முன் தோன்றிய இரண்யாக்ஷனைக் கொன்றார். போர் கடுமையாக இருந்தது. பெருங்கஷ்டத்துடன் பகவான் இரண்யாக்ஷனைக் கொன்றார். பின்னர், இரண்யாக்ஷனின் அசாதாரணமான வீரத்தைப் பற்றி பகவான் எண்ணிப் பார்த்தபோது, தாம் உண்மையாகவே வெற்றி பெற்றதாக உணர்ந்தார்.

பதம் 8.19.7
நிசம்ய தத்-வதம் ப்ராதா ஹிரண்யகசிபு: புரா
ஹந்தும் ப்ராத்ரு-ஹணம் க்ருத்தோ ஜகாம நிலயம் ஹரே:

நிசம்ய—கேள்விப்பட்டபின்; தத்-வதம்—இரண்யாக்ஷனின் வதத்தை; ப்ராதா—சகோதரன்; ஹிரண்யகசிபு:—இரண்யகசிபு; புரா—முன்பு; ஹந்தும்—கொல்வதற்காகவே; ப்ராத்ரு-ஹணம்—தனது சகோதரனைக் கொன்றவரை; க்ருத்த:—பெருங்கோபத்துடன்; ஜகாம—சென்றான்; நிலயம்—வசிப்பிடத்திற்கு; ஹரே:—முழுமுதற் கடவுளின்.

தனது சகோதரன் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட இரண்யகசிபு, தனது சகோதரனைக் கொன்றவரான பகவான் விஷ்ணுவைக் கொல்ல விரும்பி, அவரது வசிப்பிடத்தை நோக்கி பெருங்கோபத்துடன் சென்றான்.

பதம் 8.19.8
தம் ஆயாந்தம் ஸமாலோக்ய சூல-பாணிம் க்ருதாந்தவத்
சிந்தயாம் ஆஸ கால-க்ஞோ விஷ்ணுர் மாயாவினாம் வர:

தம்—அவனை (ஹிரண்யகசிபு); ஆயாந்தம்—முன்னேறிவரும்; ஸமாலோக்ய—உற்று நோக்கி; சூல-பாணிம்—அவனது கரத்தில் ஒரு சூலத்துடன்; க்ருதாந்த-வத்—மரணசொரூபியைப் போலவே; சிந்தயாம் ஆஸ—எண்ணினார்; கால-க்ஞ:—காலத்தின் முன்னேற்றத்தை அறிந்தவரான; விஷ்ணு:—பகவான் விஷ்ணு; மாயாவினாம்—எல்லா வகையான மாயாவிகளிலும்; வர:—தலைமையானவரான.

மாயாவிகளுக்கெல்லாம் மிகச் சிறந்தவரும், காலத்தின் முன்னேற்றத்தை அறிந்தவருமான பகவான் விஷ்ணு, கையில் ஒரு சூலத்தை ஏந்தியவாறு, மரண சொரூபியைப் போல் இரண்யகசிபு தம்மை நோக்கி வருவதைக் கண்டு பின்வருமாறு எண்ணினார்.

பதம் 8.19.9
யதோ யதோ ‘ஹம் தத்ராஸௌ ம்ருத்யு: ப்ராண- ப்ருதாம் இவ
அதோ ‘ஹம் அஸ்ய ஹ்ருதயம் ப்ரவேக்ஷ்யாமி பராக்-த்ருச:

யத: யத:—எங்கெல்லாம்; அஹம்—நான்; தத்ர—அங்கு உண்மையாகவே; அஸௌ—இந்த இரண்யகசிபு; ம்ருத்யு:—மரணம்; ப்ராண-ப்ருதாம்—எல்லா ஜீவராசிகளின்; இவ—போலவே; அத:—ஆகவே; அஹம்—நான்; அஸ்ய—அவனது; ஹ்ருதயம்—இதயத்தினுள்; ப்ரவேக்ஷ்யாமி—நுழைந்து விடுவேன்; பராக்-த்ருச:—புறப்பார்வையை மட்டும் கொண்ட ஒருவனின்.

எல்லா ஜீவராசிகளையும் மரணம் பின்தொடர்வதைப் போலவே, நான் எங்கு சென்றாலும் இரண்யகசிபு என்னைப் பின்தொடர்வான். ஆகவே அவனது இதயத்தினுள் புகுந்துவிடுவதுதான் எனக்கு நல்லது. இதனால், வெளியில் மட்டுமே காணும் சக்தியைக் கொண்ட அவனால் என்னைக் காண முடியாது.

பதம் 8.19.10
ஏவம் ஸ நிஸ்சித்ய ரிபோ: சரீரம்
ஆதாவதோ நிர்விவிசே ‘ஸுரேந்ர
ஸ்வாஸானிலாந்தர்ஹித-ஸூக்ஷ்ம-தேஹஸ்
தத்-ப்ராண-ரந்ரேண விவிக்ன-சேதா:

ஏவம்—இவ்விதமாக; ஸ:—அவர் (பகவான் விஷ்ணு); நிஸ்சித்ய—முடிவு செய்து; ரிபோ:—எதிரியின்; சரீரம்—உடலில்; ஆதாவத:—பெரும் ஆவேசத்துடன் அவரைப் பின்தொடர்ந்து ஓடிய அவனது; நிர்விவிசே—புகுந்தார்; அஸுர-இந்ர—அசுர ராஜனே (பலி மகாராஜன்); ஸ்வாஸ-அனில—சுவாசத்தின் மூலமாக; அந்தர்ஹித—கண்ணுக்குப் புலப்படாத; ஸூக்ஷ்ம-தேஹ:—அவரது சூட்சும சரீரத்துடன்; தத்-ப்ராண-ரந்ரேண—நாசித் துவாரத்தின் வழியாக; விவிக்ன-சேதா:—மிகவும் கவலை கொண்டு.

பகவான் வாமனதேவர் தொடர்ந்து கூறினார்: அசுர ராஜனே, இந்த முடிவை எடுத்தபின் பகவான் விஷ்ணு, பெரும் ஆவேசத்துடன் தம்மை துரத்திக் கொண்டு வரும், தமது எதிரியான இரண்யகசிபுவின் உடலுக்குள் புகுந்தார். பெருங் கவலையுடனிருந்த பகவான் விஷ்ணு, இரண்யகசிபுவின் கற்பனைக்கெட்டாத ஒரு சூட்சும உடலுடன், அவனது சுவாசத்தோடு, அவனது நாசித் துவாரத்தினுள் புகுந்தார்.

பதம் 8.19.11
ஸ தன்-நிகேதம் பரிம்ருஸ்ய சூன்யம்
அபஸ்யமான: குபிதோ நனாத
க்ஷமாம் த்யாம் திச: கம் விவரான் ஸமுத்ரான்
விஷ்ணும் விசின்வன் ந ததர்ச வீர:

ஸ:—அந்த இரண்யகசிபு; தத்-நிகேதம்—பகவான் விஷ்ணுவின் வசிப்பிடத்தை; பரிம்ருஸ்ய—தேடி; சூன்யம்—காலியாக; அபஸ்யமான:—பகவான் விஷ்ணுவைக் காணாமல்; குபித:—மிகவும் கோபம் கொண்டு; நனாத—உரக்கக் கூவினான்; க்ஷ்மாம்—பூமியின் மீது; த்யாம்—வானவெளியில்; திச:—எல்லாத் திசைகளிலும்; கம்—ஆகாயத்தில்; விவரான்—எல்லாக் குகைகளிலும்; ஸமுத்ரான்—எல்லா சமுத்திரங்களிலும்; விஷ்ணும்—பகவான் விஷ்ணு; விசின்வன்—தேடியும்; ந—இல்லை; ததர்ச—கண்டான்; வீர:—அவன் மிகவும் சக்தி வாய்ந்தவனாக இருந்த போதிலும்.

பகவான் விஷ்ணுவின் வசிப்பிடம் காலியாக இருப்பதைக் கண்ட இரண்யகசிபு அவரை எல்லா இடங்களிலும் தேட ஆரம்பித்தான். அவரைக் காணாததால் கோபம் கொண்ட இரண்யகசிபு உரக்கக் கூவினான். அவன் பூமியின் மேற்பரப்பு, உயர்கிரக அமைப்புகள், அனைத்து திசைகள், குகைகள் மற்றும் சமுத்திரங்கள் ஆகியவை உட்பட பிரபஞ்சம் முழுவதையுமே தேடினான். ஆனால் மிகச் சிறந்த வீரனான இரண்யகசிபுவால் விஷ்ணுவை எங்கும் காணமுடியவில்லை.

பதம் 8.19.12
அபஸ்யன் இதி ஹோவாச மயான்விஷ்டம் இதம் ஜகத்
ப்ராத்ரு-ஹா மே கதோ நூனம் யதோ நாவர்ததே புமான்

அபஸ்யன்—அவரைக் காணாமல்; இதி—இவ்வாறு; ஹ உவாச—கூறினான்; மயா—என்னால்; அன்விஷ்டம்—தேடப்பட்டார்; இதம்—முழு; ஜகத்—பிரபஞ்சத்திலும்; ப்ராத்ரு-ஹா—சகோதரனைக் கொன்றவரான பகவான் விஷ்ணு; மே—எனது; கத:—சென்றிருக்க வேண்டும்; நூனம்—உண்மையில்; யத:—எங்கிருந்து; ந—இல்லையோ; ஆவர்ததே—திரும்பி வருவது; புமான்—ஒருவன்.

அவரைக் காண இயலாமல், இரண்யகசிபு கூறினான், “நான் பிரபஞ்சம் முழுவதும் தேடிவிட்டேன், ஆனால் என் சகோதரனைக் கொன்றவரான விஷ்ணுவை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, ஒருவரும் திரும்பி வராத அந்த இடத்திற்கு அவர் சென்றிருக்க வேண்டும். (அதாவது, அவர் இப்போது மடிந்து போயிருக்க வேண்டும்.)

பதம் 8.19.13
வைரானுபந்த ஏதாவான் ஆம்ருத்யோர் இஹ தேஹினாம்
அஞ்ஞான-ப்ரபவோ மன்யுர் அஹம்-மானோபப்ரும்ஹித:

வைர-அனுபந்த:—விரோதம்; ஏதாவான்—மிகப் பெரிய; ஆம்ருத்யோ:—மரணம் வரைக்கும்; இஹ—இதில்; தேஹினாம்—தேகாபிமானத்தில் அளவுக்கதிகமாக ஈடுபட்டு இருப்பவர்களின்; அஞ்ஞான-ப்ரபவ:—அறியாமையின் பெரும் ஆதிக்கத்தினால்; மன்யு:—கோபம்; அஹம்-மான—அகங்காரத்தினால்; உபப்ரும்ஹித:—விரிவடைந்த.

பகவான் விஷ்ணுவின் மீதான இரண்யகசிபுவின் கோபம் அவனது மரணம் வரைக்கும் விடாப்பிடியாக இருந்தது. தேகாபிமானத்திலுள்ள மற்றவர்கள் பொய் அகங்காரத்தினாலும், அறியாமையின் பெரும் ஆதிக்கத்தினாலும் மட்டுமே கோபத்தைக் காப்பாற்றி வருகின்றனர்.

பதம் 8.19.14
பிதா ப்ரஹ்ராத-புத்ரஸ் தே தத்-வித்வான் த்விஜ- வத்ஸல:
ஸ்வம் ஆயுர் த்விஜ-லிங்கேப்யோ தேவேப்யோ ‘தாத் ஸ யாசித:

பிதா—தந்தை; ப்ரஹ்ராத-புத்ர:—பிரகலாத மகாராஜனின் புத்திரர்; தே—உமது; தத்-வித்வான்—அவருக்கு அது தெரிந்திருந்த போதிலும்; த்விஜ-வத்ஸல:—இருப்பினும் பிராமணர்களிடம் அவருக்கிருந்த அன்பினால்; ஸ்வம்—அவரது சொந்த; ஆயு:—ஆயுளை; த்விஜ-லிங்கேப்ய:—பிராமணர்களைப் போல் உடை அணிந்திருந்த; தேவேப்ய—தேவர்களிடம்; அதாத்—கொடுத்தார்; ஸ:—அவர்; யாசித:—அவ்வாறு வேண்டிக் கொள்ளப்பட்டதால்.

பிரகலாத மகாராஜனின் புத்திரரும், உமது தந்தையுமான விரோசனர் பிராமணர்களிடம் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிராமணர்களின் உடையில் தன்னிடம் வந்திருப்பவர்கள் தேவர்கள் தான் என்பதை நன்கு அறிந்திருந்த போதிலும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க தனது ஆயுளையே அவர்களுக்கு அவர் கொடுத்துவிட்டார்.

பதம் 8.19.15
பவான் ஆசரிதான் தர்மான் ஆஸ்திதோ க்ருஹமேதிபி:
ப்ராஹ்மணை: பூர்வஜை: சூரைர் அன்யைஸ் சோத்தாம-கீர்த்திபி:

பவான்—நீர்; ஆசரிதான்—நிறைவேற்றினீர்; தர்மான்—மதக் கொள்கைகளை; ஆஸ்தித:—அமைந்திருப்பதால்; க்ருஹமேதிபி:—இல்லற வாழ்வில் உள்ளவர்களால்; ப்ராஹ்மணை:—பிராமணர்களால்; பூர்வ-ஜை:—உமது முன்னோர்களால்; சூரை:—சிறந்த வீரர்களால்; அன்யை: ச—மேலும் மற்றவர்களும் கூட; உத்தாம-கீர்த்திபி:—மிகவும் உயர்ந்தது, புகழ்பெற்ற.

பிராமண குடும்பஸ்தர்களாகிய மிகச்சிறந்த புருஷர்கள், உமது முன்னோர்கள் மற்றும் தங்களது உயரந்த செயல்களினால் பெரும் புகழ் பெற்றவர்களான மிகச்சிறந்த வீரர்கள் ஆகியோரால் பின்பற்றப்பட்ட கொள்கைகளை நீரும் பின்பற்றியிருக்கிறீர்.

பதம் 8.19.16
தஸ்மாத் த்வத்தோ மஹீம் ஈஷத் வ்ருணே ‘ஹம் வரதர்ஷபாத்
பதானி த்ரீணி தைத்யேந்ர ஸம்மிதானி பதா மம

தஸ்மாத்—அத்தகைய ஒருவரிடமிருந்து; த்வத்த:—மகாராஜனாகிய உம்மிடமிருந்து; மஹீம்—நிலத்தை; ஈஷத்—மிகக் குறைவான; வ்ருணே—நான் யாசிக்கிறேன்; அஹம்—நான்; வரத-ரிஷபாத்—தாராளமாக தானம் கொடுக்கக் கூடிய நபரிடமிருந்து; பதானி—அடிகள்; த்ரீணி—மூன்று; தைத்ய-இந்ர—தைத்ய ராஜனே; ஸம்மிதானி—அளவுக்கேற்ப; பதா—ஒரு பாதத்தின்; மம—எனது.

தைத்ய ராஜனே, தாராளமாக தானம் கொடுக்கக் கூடிய, அத்தகையதொரு உயர் குடும்பத்திலிருந்து வருபவரான உம்மிடமிருந்து, எனது அடிகளின் அளவுக்கேற்ப, மூன்றடி நிலத்தை மட்டுமே நான் கேட்கிறேன்.

பதம் 8.19.17
நான்யத் தே காமயே ராஜன் வதான்யாஜ் ஜகத்-ஈஸ்வராத்
நைன: ப்ராப்னோதி வை வித்வான் யாவத்-அர்த்த ப்ரதிக்ரஹ:

ந—இல்லை; அன்யத்—வேறொன்றும்; தே—உம்மிடமிருந்து; காமயே—நான் யாசிக்கிறேன்; ராஜன்—ராஜனே; வதான்யாத்—கொடை வள்ளலாகிய; ஜகத்-ஈஸ்வராத்—அகில லோகங்களுக்கும் சக்ரவர்த்தியான; ந—இல்லை; ஏன:—துன்பம்; ப்ராப்னோதி—பெறுகிறார்; வை—உண்மையில்; வித்வான்—கற்றறிந்த ஒருவர்; யாவத்-அர்த்த—ஒருவருக்குத் தேவையான அளவு; ப்ரதிக்ரஹ:—பிறரிடமிருந்து தானம் பெறுபவர்.

ராஜனே, பிரபஞ்சம் முழுவதையும் ஆள்பவராகிய நீர், எனக்கு எவ்வளவு நிலம் தேவைப்பட்டாலும் அதைக் கொடுக்கக் கூடிய கொடை வள்ளலாக இருப்பினும், தேவைக்கதிகமான எதையும் உம்மிடமிருந்து நான் பெற விரும்பவில்லை. கற்றறிந்த பிராமணரொருவர் தனது தேவைக்கேற்ப மட்டுமே பிறரிடமிருந்து தானங்களைப் பெறுவாரானால், பாவ விளைவுகளில் அவர் சிக்கிக் கொள்ள மாட்டார்.

பதம் 8.19.18
ஸ்ரீ-பலிர் உவாச
அஹோ ப்ராஹ்மண-தாயாத வாசஸ் தே வ்ருத்த-ஸம்மதா
த்வம் பாலோ பாலிச-மதி: ஸ்வார்தம் ப்ரதி அபுதோ யதா

ஸ்ரீ-பலி: உவாச—பலி மகாராஜன் கூறினார்; அஹோ—ஐயோ பாவம்; ப்ராஹ்மண-தாயாத—ஒரு பிராமண புத்திரரே; வாச:—வார்த்தைகள்; தே—உமது; வ்ருத்த-ஸம்மதா:—கற்றோருக்கும், முதியோருக்கும் நிச்சயமாக சம்மதமானவைதான்; த்வம்—நீர்; பால:—ஒரு சிறுவன்; பாலிச-மதி:—போதுமான அறிவு இல்லாத; வை-அர்த்தம்—சுயநலம்; ப்ரதி—அதில்; அபுத:—போதுமான அளவுக்கு அறிந்திராத; யதா—இருந்திருக்க வேண்டியவாறு.

பலி மகாராஜன் கூறினார்: பிராமண புத்திரரே, உமது உபதேசங்கள் கற்றறிந்த முதியோரின் உபதேசங்களுக்குச் சமமானவையாக உள்ளன. ஆயினும் நீர் சிறுவனாக இருப்பதுடன், உமது அறிவும் பற்றாக்குறையாகவே உள்ளது. ஆகவே உமது சொந்த நலத்தைப் பொறுத்த விஷயத்தில் நீர் அவ்வளவு முன் யோசனை உள்ளவராகத் தெரியவில்லை.

பதம் 8.19.19
மாம் வசோபி: ஸமாராத்ய லோகானாம் ஏகம் ஈஸ்வரம்
பத-த்ரயம் வ்ருணீதே யோ ‘புத்திமான் த்வீப-தாக்ஷம்

மாம்—என்னை; வசோபி:—இனிய வார்த்தைகளால்; ஸமாராத்ய—போதுமான அளவுக்கு திருப்திப்படுத்திய பின்; லோகானாம்—இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா கிரகங்களின்; ஏகம்—ஒரே ஒரு; ஈஸ்வரம்—எஜமானனாகிய; பத-த்ரயம்—மூன்றடி; வ்ருணீதே—கேட்கும்; ய:—யாரொருவர்; அபுத்திமான்—மிகவும் புத்திசாலியல்ல; த்வீப-தாக்ஷம்—ஏனெனில் ஒரு முழு தீவையும் உமக்கு என்னால் வழங்க முடியும்.

பிரபஞ்சத்தின் மூன்று பிரிவுகளுக்கும் நானே உரிமையாளனாக இருப்பதால், ஒரு முழு தீவையும் உமக்கு என்னால் அளிக்க முடியும். என்னிடமிருந்து எதையோ பெற்றுச் செல்வதற்காக நீர் வந்திருக்கிறீர். மேலும் இனிய வார்த்தைகளால் என்னை நீர் திருப்திபடுத்தியிருக்கிறீர். ஆனால் மூன்றடி நிலத்தை மட்டுமே நீர் யாசிக்கிறீர். ஆகவே நீர் அவ்வளவு புத்திசாலியல்ல.

பதம் 8.19.20
ந புமான் மாம் உபவ்ரஜ்ய பூயே யாசிதும் அர்ஹதி
தஸ்மாத் வ்ருத்திகரீம் பூமிம் வடோ காமம் ப்ரதீச்ச மே

ந—இல்லை; புமான்—எந்த நபரும்; மாம்—என்னை; உபவ்ரஜ்ய—அணுகியபின்; பூய:—மீண்டும்; யாசிதும்—யாசிக்க; அர்ஹதி—தகுதியுள்ளவர்; தஸ்மாத்—ஆகவே; வருத்தி-கரீம்—உம்மை காப்பாற்றிக் கொள்வதற்குப் போதுமான; பூமிம்—அத்தகைய நிலத்தை; வடோ—சிறிது பிரம்மச்சாரியே; காமம்—வாழ்வின் தேவைகளுக்கு ஏற்ப; ப்ரதீச்ச—எடுத்துக்கொள்ளும்; மே—என்னிடமிருந்து.

சிறுவனே, என்னிடம் யாசிக்க வந்தவருக்கு வேறெதையும், எங்கும் யாசிக்க வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது. ஆகவே, நீர் விரும்பினால், உமது தேவைக்கேற்ப, உம்மைப் பராமரிப்பதற்குத் தேவையான எவ்வளவு நிலத்தை வேண்டுமானாலும் என்னிடமிருந்து கேட்கலாம்.

பதம் 8.19.21
ஸ்ரீ-பகவான் உவாச
யாவந்தோ விஷயா: ப்ரேஷ்டாஸ் த்ரி-லோக்யாம் அஜிதேந்ரியம்
ந சக்னுவந்தி தே ஸர்வே ப்ரதிபூரயிதும் ந்ருப

ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷ பகவான் கூறினார்; யாவந்த:—இயன்றளவு; விஷயா:—புலனின்பப் பொருட்கள்; ப்ரேஷ்டா:—யாருக்கும் திருப்தியளிக்கும்; த்ரி-லோக்யாம்—இம்மூவுலகினுள்; அஜித-இந்ரியம்—புலனடக்கம் இல்லாதவன்; ந சக்னுவந்தி—இயலாது; தே—அவர்கள் எல்லோரும்; ஸர்வே—ஒன்றாக சேர்ந்து; ப்ரதிபூரயிதும்—திருப்திபடுத்த; ந்ருப—ராஜனே.

பரமபுருஷ பகவான் கூறினார்: எனதருமை ராஜனே, மூவுலகங்களிலும் இருக்கக்கூடிய அனைத்தையும், கட்டுப்படாத புலன்களை உடையவனுக்குக் கொடுத்தாலும், அது அவனுடைய புலன்களை திருப்திப்படுத்தாது.

பதம் 8.19.22
த்ரிபி: க்ரமைர் அஸந்துஷ்டோ த்வீபேனாபி ந பூர்யதே
நவ-வர்ஷ-ஸமேதேன ஸப்த-த்வீப-வரேச்சயா

த்ரிபி:—மூன்று; க்ரமை:—அடிகளால்; அஸந்துஷ்ட:—திருப்தியடையாதவன்; த்வீபேன—முழுமையான ஒரு தீவால்; அபி—என்றாலும்; ந பூர்யதே—திருப்தியடைய முடியாது; நவ வர்ஷ ஸமேதேன—ஒன்பது தீவுகளையும் பெற்றாலும்; ஸப்த-த்வீப-வர-இச்சயா—ஏழு தீவுகளை அடையும் ஆசையால்.

மூன்றடி நிலத்துடன் நான் திருப்தியடையவில்லை என்றால், ஒன்பது வர்ஷங்களைக் கொண்ட ஏழு தீவுகளில் ஒன்று எனக்குக் கிடைத்தாலும் அதனால் நிச்சயமாக நான் திருப்தியடைய மாட்டேன். ஒரு தீவை நான் பெற்றிருந்தாலும், மற்றவைகளையும் பெற விரும்புவேன்.

பதம் 8.19.23
ஸப்த-த்வீபாதிபதயோ ந்ருபா வைண்ய-கயாதய:
அர்த்தை: காமைர் கதா நாந்தம் த்ருஷ்ணாய இதி ந: ஸ்ருதம்

ஸப்த-த்வீப-அதிபதய:—ஏழு தீவுகளுக்கும் அதிபதிகளாக இருக்கும்; ந்ருபா:—அத்தகைய மன்னர்கள்; வைண்ய-கய-ஆதய:—பிரிது மகாராஜன் மற்றும் கய மகாராஜன் முதலான; அர்த்தை:—நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக; காமை:—ஒருவருடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக; கதா:-ந—அடைய முடியவில்லை; அந்தம்—முடிவை; த்ருஷ்ணாயா:—அவர்களது பேராவல்களின்; இதி—இவ்வாறு; ந:—எங்களால்; ஸ்ருதம்—கேள்விப்படப்பட்டுள்ளது.

பிரிது மகாராஜனையும், கய மகாராஜனையும் போன்ற சக்தி வாய்ந்த மன்னர்கள் ஏழு தீவுகளையும் பெற்றவர்களாக இருந்த போதிலும், அவர்களால் திருப்தியையோ அல்லது தங்களது பேராவல்களின் முடிவையோ அடைய இயலவில்லை என்பதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பதம் 8.19.24
யத்ருச்சயோப்பன்னேன ஸந்துஷ்டோ வர்ததே ஸுகம்
நாஸந்துஷ்டஸ் த்ரிபிர் லோகர் அஜிதாத்மோபஸாதிதை:

யத்ருச்சயா—ஒருவரது கருமங்களுக்கேற்ப பரம அதிகாரியால் அளிக்கப்பட்டவாறு; உபபன்னேன—பெறப்பட்ட எதனாலும்; ஸந்துஷ்ட:—ஒருவன் திருப்தி அடையவேண்டும்; வர்ததே—உள்ளது; ஸுகம்—மகிழ்ச்சி; ந—இல்லை; அஸந்துஷ்ட:—திருப்தி அடையாதவன்; த்ரிபி:-லோகை:—மூவுலகங்களையும் பெறுவதாலும்; அஜித-ஆத்மா—புலனடக்கம் இல்லாதவன்; உபஸாதிதை:—அடைந்த போதிலும்.

விதிப் பயனாக தான் அடைவதில் ஒருவன் திருப்தியடைய வேண்டும். ஏனெனில் அதிருப்தி ஒருபோதும் மகிழ்ச்சியைக் கொண்டு வராது. மூவுலகங்களையும் அடைந்தாலும் புலனடக்கம் இல்லாதவன் மகிழ்ச்சியடைய மாட்டான்.

பதம் 8.19.25
பும்ஸோ ‘யம் ஸம்ஸ்ருதேர் ஹேதுர் அஸந்தோஷோ ‘ர்த-காமயோ:
யத்ருச்சயோபபன்னேன ஸந்தோஷோ முக்தயே ஸ்ம்ருத:

பும்ஸ:—ஜீவராசியின்; அயம்—இதுவே; ஸம்ஸ்ருதே:—ஜட வாழ்வின் தொடர்ச்சியின்; ஹேது:—காரணம்; அஸந்தோஷ:—தனக்கு விதிப்பயனாய் கிடைத்ததில் அதிருப்தி; அர்த-காமயோ:—சிற்றின்ப ஆசைக்காகவும், இன்னும் அதிகமான பணத்தைப் பெறுவதற்காகவும்; யத்ருச்சயா—விதியின் பரிசாக; உபபன்னேன—அடையப்பட்டிருப்பதில்; ஸந்தோஷ:—திருப்தி; முக்தயே—முக்திக்கு; ஸ்ம்ருத:—தகுதியுடையவராக கருதப்படுகிறார்.

ஒருவனுடைய சிற்றின்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும், இன்னும் அதிகமான பணத்தை அடைவதிலும், பெளதிக வாழ்வு அவனுக்கு அதிருப்தியை விளைவிக்கிறது. இதுவே பிறப்பு இறப்புக்களின் தொடர்ச்சியால் நிரப்பப்பட்டுள்ள ஜட வாழ்வின் தொடர்ச்சிக்குக் காரணமாகும். ஆனால் விதிப் பயனாய் அடையப்படுவதில் திருப்தியடைபவன் ஜட வாழ்விலிருந்து முக்தியடைவதற்குத் தகுதியுடையவனாவான்.

பதம் 8.19.26
யத்ருச்சா-லாப-துஷ்டஸ்ய தேஜோ விப்ரஸ்ய வர்ததே
தத் ப்ரசாம்யதி அஸந்தோஷாத் அம்பஸேவாசுசுக்ஷணி:

யத்ருச்சா-லாப-துஷ்டஸ்ய—இறையருளால் அடையப்பட்ட பொருட்களில் திருப்தியடைபவன்; தேஜ:—பிரகாசமான ஒளி; விப்ரஸ்ய—ஒரு பிராமணரின்; வர்ததே—அதிகரிக்கிறது; தத்—அது (பிரகாசம்); ப்ரசாம்யதி—குறைந்து போகிறது; அஸந்தோஷாத்—அதிருப்தியினால்; அம்பஸா—நீரூற்றுவதன் மூலமாக; இவ—போல்; ஆசுசுக்ஷணி:—நெருப்பு.

இறையருளால் அடையப்பட்டுள்ள பொருட்களில் திருப்தியடையும் பிராமணர் ஒருவர், ஆன்மீக சக்தியால் அதிகமான ஞான ஒளி பெறுகிறார். ஆனால் நெருப்பில் நீரைத் தெளிக்கும்போது அதன் ஆற்றல் குறைந்து விடுவதைப் போலவே, அதிருப்தியடைந்த பிராமணரின் ஆன்மீக சக்தியும் குறைந்து போகிறது.

பதம் 8.19.27
தஸ்மாத் த்ரீணி பதானி ஏவ வ்ருணே த்வத் வரதர்ஷபாத்
ஏதாவதைவ ஸித்தோ ‘ஹம் வித்தம் யாவத் ப்ரயோஜனம்

தஸ்மாத்—சுலபமாக அடையப்படும் பொருட்களால் திருப்தியடையும் காரணத்தால்; த்ரீணி—மூன்று; பதானி—அடிகள்; ஏவ—உண்மையில்; வ்ருணே—நான் யாசிக்கிறேன்; த்வத்—உம்மிடமிருந்து; வரத-ரிஷபாத்—கொடை வள்ளலாகிய; ஏதாவதா ஏவ—அத்தகையதொரு நன்கொடையளிக்கும் செயலாலேயே; ஸித்த: அஹம்—நான் முழு திருப்தியடைவேன்; வித்தம்—அடையப்பட்டது; யாவத்—அதுவரையில்; ப்ரயோஜனம்—தேவைப்படுகிறது.

ஆகவே, ராஜனே, தானம் கொடுப்பவர்களில் மிகச் சிறந்தவரான உம்மிடமிருந்து மூன்றடி நிலத்தை மட்டுமே நான் யாசிக்கிறேன். அத்தியாவசிய தேவையாக இருப்பதில் பூரண திருப்தியடைவதே மகிழ்ச்சிக்கான வழி என்பதால், இத்தகையதொரு வெகுமதியால் நான் மிகவும் திருப்தியடைவேன்.

பதம் 8.19.28
ஸ்ரீ-சுக உவாச
இதி உக்த: ஸ ஹஸன் ஆஹ வாஞ்சாத: ப்ரதிக்ருஹ்யதாம்
வாமனாய மஹீம் தாதும் ஜக்ராஹ ஜல-பாஜனம்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி உக்த:—இவ்வாறு பேசப்பட்டது; ஸ:—அவர் (பலி மகாராஜன்); ஹஸன்—புன்னகையுடன்; ஆஹ—கூறினார்; வாஞ்சாத:—உமது விருப்பம் போல்; ப்ரதிக்ருஹ்யதாம்—இப்போது என்னிடமிருந்து எடுத்துக் கொள்வீராக; வாமனாய—பகவான் வாமனதேவருக்கு; மஹீம்—நிலத்தை; தாதும்—அளிப்பதற்கு; ஜக்ராஹ—எடுத்தார்; ஜல-பாஜனன்—கமண்டலத்தை.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரமபுருஷ பகவான் பலி மகாராஜனிடம் இவ்வாறு கூறியதும், பலி புன்னகை செய்து, “சரி, தங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார். வாமனதேவர் விரும்பிய நிலத்தைக் கொடுப்பதெனும் தனது வாக்கை உறுதி செய்வதற்காக, அவர் தனது கமண்டலத்தைக் கையிலெடுத்தார்.

பதம் 8.19.29
விஷ்ணவே க்ஷமாம் ப்ரதாஸ்யந்தம் உசனா அஸுரேஸ்வரம்
ஜானம்ஸ் சிகீர்ஷிதம் விஷ்ணோ: சிஷ்யம் ப்ராஹ விதாம் வர:

விஷ்ணவே—பகவான் விஷ்ணுவிற்கு (வாமனதேவருக்கு); க்ஷமாம்—நிலத்தை; ப்ரதாஸ்யந்தம்—அளிக்கத் தயாராக இருந்த; உசனா:—சுக்ராசாரியர்; அஸுர-ஈஸ்வரம்—அசுரராஜனிடம் (பலி மகாராஜனிடம்); ஜானன்—நன்கறிந்து; சிகீர்ஷிதம்—திட்டத்தை; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; சிஷ்யம்—தனது சீடனிடம்; ப்ராஹ—கூறினார்; விதாம் வர:—அனைத்தையும் அறிபவர்களில் மிகச் சிறந்தவரான.

கற்றறிந்தவர்களில் மிகச் சிறந்தவரான சுக்ராசார்யர், பகவான் விஷ்ணுவின் நோக்கத்தை அறிந்து, பகவான் வாமனதேவருக்கு அனைத்தையும் கொடுத்துவிடத் தயாராக இருந்த தனது சீடனிடம் உடனே பின்வருமாறு பேசினார்.

பதம் 8.19.30
ஸ்ரீ-சுக்ர உவாச
ஏஷ வைரோசனே ஸாக்ஷாத் பகவான் விஷ்ணுர் அவ்யய:
கஸ்யபாத் அதிதேர் ஜாதோ தேவானாம் கார்ய-ஸாதக:

ஸ்ரீ-சுக்ர: உவாச—சுக்ராசார்யர் கூறினார்; ஏஷ:—இந்த (குள்ள ரூபத்திலுள்ள சிறுவன்); வைரோசனே—வைரோசனரின் மகனே; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவான்—பரமபுருஷ பகவானாவார்; விஷ்ணு:—பகவான் விஷ்ணு; அவ்யய:—சீரழிவு இல்லாமல்; கஸ்யபாத்—அவரது தந்தையான கஸ்யபருக்கு; அதிதே:—அவரது தாயான அதிதியின் கருவில்; ஜாத—பிறந்தார்; தேவானாம்—தேவர்களின்; கார்ய-ஸாதக—நன்மைக்காக செயற்படுகிறார்.

சுக்ராசார்யர் கூறினார்: வைரோசன புத்திரனே, குள்ள வடிவிலுள்ள இந்த பிரம்மச்சாரி அழிவற்றவரான பரமபுருஷ பகவான் விஷ்ணுவேயாவார். கஸ்யப முனிவரைத் தமது தந்தையாகவும், அதிதியைத் தமது தாயாகவும் ஏற்றுக்கொண்ட இவர், இப்போது தேவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகத் தோன்றியுள்ளார்.

பதம் 8.19.31
ப்ரதிஸ்ருதம் த்வயைதஸ்மை யத் அனர்த்தம் அஜானதா
ந ஸாது மன்யே தைத்யானாம் மஹான் உபகதோ ‘நய:

பிரதிஸ்ருதம்—வாக்களிக்கப்பட்டுள்ளது; த்வயா—உன்னால்; ஏதஸ்மை—அவருக்கு; யத் அனர்த்தம்—மன விசனத்தை விளைவிப்பது; அஜானதா—அதை அறியாத உன்னால்; ந—இல்லையென்று; ஸாது—மிகவும் நல்லது; மன்யே—நான் நினைக்கிறேன்; தைத்யானாம்—அசுரர்களின்; மஹான்—பெரும்; உபகத:—அடையப்பட்டது; அனய:—அமங்களம்.

அவருக்கு நிலத்தைக் கொடுப்பதாக வாக்களித்ததன் மூலமாக, எத்தகைய ஆபத்தான ஒரு நிலையை நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாய் என்பதை நீ அறியவில்லை. அந்த வாக்குறுதி உனக்கு நன்மையளிக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது அசுரர்களுக்குப் பெரும் தீங்கையே கொண்டு வரும்.

பதம் 8.19.32
ஏஷ தே ஸ்தானம் ஐஸ்வர்யம் ஸ்ரியம் தேஜோ யச: ஸ்ருதம்
தாஸ்யதி ஆச்சித்ய சக்ராய மாயா-மாணவகோ ஹரி:

ஏஷ:—பிரம்மச்சாரியின் வேடத்தில் தோன்றியுள்ள இவர்; தே—உனது; ஸ்தானம்—உடைமையிலுள்ள நிலத்தையும்; ஐஸ்வர்யம்—செல்வங்களையும்; ஸ்ரீயம்—பெளதிக அழகையும்; தேஜ:—ஜட சக்தி; யச:—கீர்த்தி; ஸ்ருதம்—கல்வி; தாஸ்யதி—கொடுத்துவிடுவார்; ஆச்சித்ய—உன்னிடமிருந்து பறித்து; சக்ராய—உனது எதிரியான இந்திர தேவனுக்கு; மாயா—பொய் வேடத்தில் தோன்றி; மாணவக:—ஒரு ஜீவராசியின் பிரம்மச்சாரி மகனாக; ஹரி:—அவர் உண்மையில் பரமபுருஷ பகவானாகிய ஹரியாவார்.

ஒரு பிரம்மச்சாரியாக பொய் வேடம் தரித்துள்ள இவர் உண்மையில் பரமபுருஷ பகவானாகிய ஹரியாவார். உன்னுடைய நிலம், செல்வம், அழகு, சக்தி, புகழ் மற்றும் கல்வி ஆகிய அனைத்தையும் பறித்துக் கொள்ளவே இந்த ரூபத்தில் அவர் வந்திருக்கின்றார். அனைத்தையும் உன்னிடமிருந்து பறித்துக் கொண்ட பின், அதை உனது எதிரியான இந்திரனிடம் ஒப்படைத்துவிடுவார்.

பதம் 8.19.33
த்ரிபி: க்ரமைர் இமால் லோகான் விஸ்வ-காய: க்ரமிஷ்யதி
ஸர்வஸ்வம் விஷ்ணவே தத்வா மூட வர்திஷ்யஸே கதம்

த்ரிபி:—மூன்று; க்ரமை:—அடிகளால்; இமான்—இவ்வெல்லா; லோகான்—மூன்று கிரக அமைப்புக்களையும்; விஸ்வ-காய:—விஸ்வரூபமாக; க்ரமிஷ்யதி—படிப்படியாக அவர் விரிவடைவார்; ஸர்வஸ்யம்—அனைத்தையும்; விஷ்ணவே—பகவான் விஷ்ணுவிடம்; தத்வா—தானம் கொடுத்த பின்; மூட—மூடனே; வர்திஷ்யஸே—உனது ஜீவனத்தை நீ நடத்துவாய்; கதம்—எப்படி.

மூன்றடி நிலத்தை அவருக்கு தானமாகக் கொடுப்பதாக நீ வாக்களித்து விட்டாய். ஆனால் அதை நீ கொடுக்கும்போது, மூவுலகங்களையும் அவர் ஆக்கிரமித்துக் கொள்வார். நீ ஒரு மூடன்! எவ்வளவு பெரிய தவற்றை நீ செய்துவிட்டாய் என்பது உனக்குத் தெரியவில்லை. பகவான் விஷ்ணுவிடம் அனைத்தையும் கொடுத்தபின், வாழ்வை நடத்துவதற்கு உனக்கு வழியிருக்காது. பிறகு வாழ்வை எப்படி நீ நடத்தப் போகிறாய்?

பதம் 8.19.34
க்ரமதோ காம் பதையே த்விதீயேன திவம் விபோ:
கம் ச காயேன மஹதா தார்தீயஸ்ய குதோ கதி:

க்ரமத:—படிப்படியாக; காம்—நிலப்பரப்பை; பதா ஏகேன—ஓரடியால்; தீவிதியேன—இரண்டாவது அடியால்; திவம்—புறவெளி முழுவதையும்; விபோ:—விஸ்வரூபத்தின்; கம் ச—ஆகாயத்தையும் கூட; காயேன—அவரது தெய்வீக உடலின் விரிவினால்; மஹதா—விஸ்வரூபத்தால்; தார்தீயஸ்ய—மூன்றாவது அடியைப் பொறுத்தவரை; குத:—எங்கிருக்கிறது; கதி:—அவரது அடியை வைப்பதற்கு.

வாமனதேவர் முதலாவதாக மூன்று லோகங்களையும் ஓரடியால் ஆக்ரமித்துக் கொள்வார். பிறகு இரண்டாவது அடியால் புறவெளியிலுள்ள அனைத்தையும் ஆக்ரமித்துக் கொள்வார். அதன்பிறகு அவர் அனைத்தையும் ஆக்ரமித்துக் கொள்ள தமது விஸ்வரூபத்தை விரிவடையச் செய்வார். மூன்றாவது அடிக்கான இடத்தை நீ அவருக்கு எங்கே கொடுப்பாய்?

பதம் 8.19.35
நிஷ்டாம் தே நரகே மன்யே ஹி அப்ரதாது: ப்ரதிஸ்ருதம்
ப்ரதிஸ்ருதஸ்ய யோ ‘நீச: ப்ரதிபாதயிதும் பவான்

நிஷ்டாம்—நிரந்தரமான வசிப்பிடம்; தே—உனது; நரகே—நரகத்தில்; மன்யே—நான் நினைக்கிறேன்; ஹி—உண்மையில்; அப்ரதாது:—நிறைவேற்ற முடியாதவரின்; ப்ரதிஸ்ருதம்—வாக்களிக்கப்பட்டதை; ப்ரதிஸ்ருதஸ்ய—ஒருவர் செய்துள்ள வாக்குறுதியை; ய அனீச:—இயலாத ஒருவர்; ப்ரதிபாதயிதும்—சரியாக நிறைவேற்ற; பவான்—நீயே அவன்.

உன்னால் நிச்சயமாக அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாது. இந்த இயலாமையின் காரணத்தால், உனக்கு கிடைக்கப்போவது நிரந்தரமான நரக வாசம்தான் என்று நான் நினைக்கிறேன்.

பதம் 8.19.36
ந தத் தானம் ப்ரசம்ஸந்தி யேன வ்ருத்திர் விபத்யதே
தானம் யக்ஞஸ் தப: கர்ம லோகே வ்ருத்திமதோ யத:

ந—இல்லை; தத்—அந்த; தானம்—தானம்; ப்ரசம்ஸந்தி—அறிஞர்கள் போற்றுவர்; யேன—எதனால்; வ்ருத்தி:—ஒருவரின் ஜீவனோபாயம்; விபத்யதே—அபாயத்திற்கு உள்ளாகிறது; தானம்—தானம்; யக்ஞ—யாகம்; தப:—தவம்; கர்ம—பலன் நோக்குச் செயல்கள்; லோகே—இவ்வுலகில்; வ்ருத்திமத:—ஒருவரின் ஜீவனோபாயத்திற்கான வழிக்கேற்ப; யத:—உள்ளவாறு அப்படியே.

ஒருவரது சொந்த ஜீவனோபாயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் தானத்தை அறிஞர்கள் போற்றுவதில்லை. தனது ஜீவனோபாயத்தை முறையாக சம்பாதிக்கும் தகுதியுள்ள ஒருவனுக்குத்தான் தானம், யாகம், தவம் மற்றும் பலன்நோக்குக் கருமம் ஆகியவற்றைச் செய்வது சாத்தியமாகும். (தன்னை பராமரிக்க முடியாதவனுக்கு அவை சாத்தியமல்ல.)

பதம் 8.19.37
தர்மாய யசஸே ‘ர்தாய காமாய ஸ்வ-ஜனாய ச
பஞ்சதா விபஜன் வித்தம் இஹாமுத்ர ச மோததே

தர்மாய—தர்மத்திற்காகவும்; யசஸே—ஒருவரது கீர்த்திக்காகவும்; அர்தாய—ஒருவரது செல்வத்தை அதிகரிக்கவும்; காமாய—புலன் நுகர்வை அதிகரிக்கவும்; ஸ்வ-ஜனாய ச—மற்றும் அவரது குடும்ப அங்கத்தினரை பராமரிக்கவும்; பஞ்சதா—இந்த ஐந்து வேறுபட்ட நோக்கங்களுக்காக; விபஜன்—வகுத்து; வித்தம்—சேமிக்கப்பட்ட அவனது செல்வத்தை; இஹ—இவ்வுலகில்; அமுத்ர—அடுத்த உலகில்; ச—மேலும்; மோததே—அவன் அனுபவிக்கிறான்.

ஆகவே முழு அறிவு நிலையிலுள்ள ஒருவன் தன்னால் சேமிக்கப்பட்ட செல்வத்தைச் சமயம், கீர்த்தி, தானம், புலன் நுகர்வு மற்றும் அவனுடைய குடும்ப அங்கத்தினரின் பராமரிப்பு ஆகியவற்றிற்காக ஐந்து பாகங்களாகப் பிரித்துவிட வேண்டும். அத்தகைய ஒருவன் இவ்வுலகிலும் அடுத்ததிலும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

பதம் 8.19.38
அத்ராபி பஹ்வ்ருசைர் கீதம் ஸ்ருணு மே ‘ஸுர-ஸத்தம
ஸத்யம் ஓம் இதி யத் ப்ரோக்தம் யன் நேதி ஆஹான்ருதம் ஹி தத்

அத்ர அபி—இவ்விஷயத்திலும் கூட (எது உண்மை, எது பொய் என்பதை முடிவு செய்வதில்); பஹு-ரூசை:—பஹ்வ்ரு-ஸ்ருதி எனப்படும் வேத ஆதாரங்களாகிய சுருதி மந்திரங்களால்; கீதம்—பேசப்பட்டது; ஸ்ருணு—கேள்; மே—என்னிடமிருந்து; அஸுர-ஸத்தம—அசுரரில் சிறந்தவனே; ஸத்யம்—உண்மை என்னவெனில்; ஓம் இதி—ஓம் எனும் சொல்லால் ஆரம்பமாகும்; யத்—ஒன்று; ப்ரோக்தம்—பேசப்பட்டது; யத்—ஒன்று; ந—ஓம் எனும் சொல்லால் ஆரம்பமாகாதது; இதி—இவ்வாறாக; ஆஹ—கூறப்படுகிறது; அன்ருதம்—பொய்; ஹி—உண்மையில்; தத்—அது.

நீ ஏற்கனவே வாக்களித்து விட்டதால், அதை நீ எப்படி மறுக்கலாம் என்று ஒருவர் விவாதிக்கக் கூடும். ஓம் எனும் சொல்லிலிருந்து துவங்கும் ஒரு வாக்குறுதி உண்மையானது இல்லையெனில் அது பொய் என்று பஹ்வ்ருச-சுருதி கூறுகின்றது. அசுரரில் சிறந்தவனே, இந்த ஆதாரத்தை நீ என்னிடமிருந்து எடுத்துக் கொள்.

பதம் 8.19.39
ஸத்யம் புஷ்ப-ஃபலம் வித்யாத் ஆத்ம-வ்ருக்ஷஸ்ய கீயதே
வ்ருக்ஷே ‘ஜீவதி தன் ந ஸ்யாத் அன்ருதம் மூலம் ஆத்மன:

ஸத்யம்—நிஜமான உண்மை; புஷ்ப-ஃபலம்—பூவும், பழமும்; வித்யாத்—ஒருவன் அறியவேண்டும்; ஆத்ம-வ்ருக்ஷஸ்ய—உடலெனும் மரத்தின்; கீயதே—வேதங்களில் விவரிக்கப்படுவது போல்; வ்ருக்ஷே அஜீவதி—மரத்திற்கு உயிர் இல்லையெனில்; தத்—அந்த (பூவும், பழமும்); ந—இல்லை; ஸ்யாத்—சாத்தியம்; அன்ருதம்—பொய்; மூலம்—வேர்; ஆத்மன:—உடலின்.

உடலெனும் மரத்தின் உண்மையான பலன், அதிலிருந்து பெறப்படும் நல்ல பழங்களும், மலர்களுமேயாகும் என்று வேதங்கள் கூறுகின்றன. ஆனால் உடலெனும் மரமே இல்லையென்றால், உண்மையான பழங்களும், மலர்களும் கிடைப்பதற்குச் சாத்தியமில்லை. உடல் பொய் என்றாலும் மரத்துக்கொப்பான அந்த பொய்யான உடலின் உதவியின்றி உண்மையான பழங்களையும், மலர்களையும் பெற முடியாது.

பதம் 8.19.40
தத் யதா வ்ருக்ஷ உன்மூல: கஷ்யதி உத்வர்ததே ‘சிராத்
ஏவம் நஷ்டான்ருத: ஸத்ய ஆத்மா சுஷ்யேன் ந ஸம்சய:

தத்—ஆகவே; யதா—அதுபோல்; வ்ருக்ஷ:—ஒரு மரம்; உன்மூல:—வேரோடு பிடுங்கப்படும்; கஷ்யதி—உலர்ந்து போகிறது; உத்வர்ததே—கீழே விழுந்து விடுகிறது; அசிராத்—மிக விரைவில்; ஏவம்—இவ்விதமாக; நஷ்ட—நஷ்டம்; அன்ருத:—தற்காலிகமான உடல்; ஸத்ய:—உடனடியாக; ஆத்மா—உடலும்; சுஷ்யேத்—உலர்ந்து விடுகிறது; ந—இல்லை; ஸம்சய:—எந்த சந்தேகமும்.

வேருடன் பிடுங்கப்பட்ட மரமொன்று உடனடியாக கீழே சாய்ந்து உலரத் துவங்குகிறது. அதைப்போலவே, பொய்யென்று ஒப்புக் கொள்ளப்பட்ட உடலை ஒருவன் பராமரிக்கவில்லை என்றால் அதாவது, பொய் பிடுங்கி எறியப்படுமானால் உடல் உலர்ந்து விடுவது நிச்சயம்.

பதம் 8.19.41
பராக் ரிக்கம் அபூர்ணம் வா அக்ஷரம் யத் தத் ஓம் இதி
யத் கிஞ்சித் ஓம் இதி ப்ரூயாத் தேன ரிச்யேத வை புமான்
பிக்ஷவே ஸர்வம் ஓம் குர்வன் நாலம் காமேன சாத்மனே

பராக்—பிரிவை ஏற்படுத்துவது; ரிக்தம்—பற்றிலிருந்து ஒருவனை விடுவிப்பது; ஆபூர்ணம்—பற்றாக்குறையாக இருப்பது; வா—அல்லது; அக்ஷரம்—இந்த அட்சரம்; யத்—அது; தத்—எது; ஓம்—ஓம்காரம்; இதி—இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது; யத்—எது; கிஞ்சித்—எதெல்லாம்; ஓம்—ஓம் எனும் இச்சொல்; இதி—இவ்வாறாக; ப்ரூயாத்—நீ கூறினால்; தேன—அத்தகையதோர் உச்சரிப்பால்; ரிச்யேத—ஒருவன் விடுபடுகிறான்; வை—உண்மையில்; புமான்—ஒருவன்; பிக்ஷவே—ஒரு பிச்சைக்காரனுக்கு; ஸர்வம்—அனைத்தையும்; ஓம் குர்வன்—ஓம் எனும் சொல்லை உச்சரித்து தானம் அளித்தல்; ந—இல்லை; அலம்—போதிய அளவு; காமேன—புலன் நுகர்வுக்காக; ச—மேலும்; ஆத்மனே—சுய தன்னுணர்வுக்காக.

“ஓம்” எனும் சொல்லை உச்சரிப்பதானது, பணம் சம்பந்தப்பட்ட ஆஸ்தியிலிருந்து ஒருவன் பிரிவதைக் குறிக்கின்றது. அதாவது, இச்சொல்லை உச்சரிப்பதால் ஒருவனுடைய பணம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டுவிடுகிறது. ஆகவே பணத்தின் மீதுள்ள பற்றிலிருந்து அவன் விடுபடுகிறான். பணம் இல்லாமல் இருப்பதென்பது மிகவும் திருப்தியளிக்கக் கூடியது அல்ல. ஏனெனில் அந்நிலையில் ஒருவனால் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அதாவது, “ஓம்” எனும் சொல்லை உபயோகிப்பதால் ஒருவன் மிகவும் ஏழ்மையானவனாக ஆகிவிடுகிறான். குறிப்பாக ஒருவன் ஒரு ஏழைக்கோ அல்லது பிச்சைக்காரனுக்கோ தானம் அளிக்கும்போது, அவன் அடையவேண்டிய சுயத் தன்னுணர்வும், புலன் நுகர்வும் நிறைவேறாமல் நின்றுவிடுகின்றன.

பதம் 8.19.42
அதைதத் பூர்ணம்அ அப்யாத்மம் யச் ச நேதி அன்ருதம் வச:
ஸர்வம் நேதி அன்ருதம் ப்ரூயாத் ஸ துஷ்கீர்தி: ஸ்வஸன் ம்ருத:

அத—ஆகவே; ஏதத்—அது; பூர்ணம்—முழுமையாக; அப்யாத்மம்—தன்னை மிகவும் ஏழ்மையானவனாக எப்பொழுதும் காட்டிக் கொள்வதன் மூலமாக மற்றவர்களின் இரக்கத்தை கவர்கின்றனர்; யத்—அது; ச—மேலும்; ந—இல்லை; இதி—இவ்வாறாக; அன்ருதம்—கபடத்தனம்; வச:—வார்த்தைகள்; ஸர்வம்—முழுமையாக; ந—இல்லை; இதி—இவ்வாறாக; அன்ருதம்—கபடத்தனம்; ப்ரூயாத்—கூற வேண்டியவர்; ஸ:—அத்தகைய ஒருவன்; துஷ்கீர்த்தி:—அபகீர்த்தி; ஸ்வஸன்—சுவாசிக்கும் போதே அல்லது உயிர் வாழும் போதே; ம்ருத:—இறந்து விட்டவனாவான் அல்லது கொல்லப்பட வேண்டியவனாவான்.

ஆகவே, இல்லை என்று கூறுவதுதான் பாதுகாப்பான வழியாகும். அது ஒரு கபடத்தனம் என்றாலும், அது ஒருவனை முழுமையாக பாதுகாக்கிறது. பிறரது இரக்கத்தை அது தன்னை நோக்கி ஈர்க்கின்றது. மேலும் தனக்காக மற்றவர்களிடமிருந்து பணம் சேகரிப்பதற்கு அது முழு வசதியை அளிக்கிறது. ஆயினும், எப்பொழுது பார்த்தாலும் தன்னிடம் ஒன்றுமே இல்லை என்று கெஞ்சிக் கேட்பவன் நிந்திக்கப்படுகிறான். ஏனெனில், அவன் வாழ்ந்து கொண்டே நடமாடும் ஒரு பிணமாவான். அல்லது அவன் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கும்போதே அவனைக் கொன்று விட வேண்டும்.

பதம் 8.19.43
ஸ்த்ரீஷு நர்ம-விவாஹே ச வ்ருத்தி-அர்தே ப்ராண-ஸங்கடே
கோ-ப்ரஹ்மணார்தே ஹிம்ஸாயாம் நான்ருதம் ஸ்யாஜ் ஜுகுப்ஸிதம்

ஸ்த்ரீஷூ—ஒரு பெண்ணை உற்சாகப்படுத்துவதற்கும், அவளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கும்; நர்ம-விவாஹே—தமாஷ் செய்வதில் அல்லது விவாக சடங்கில்; ச—மேலும்; வ்ருத்தி-அர்தே—வியாபாரத்தில் உள்ளதைப் போல் ஒருவனின் வாழ்க்கைத் தேவையை சம்பாதிப்பதற்காக; ப்ராண-ஸங்கடே—அல்லது ஆபத்தான சமயத்தில்; கோ-ப்ராஹ்மண-அர்தே—பசு பராமரிப்பு மற்றும் பிராமண பண்பாடு பராமரிப்பு ஆகியவற்றுக்காக; ஹிம்ஸாயம்—பகையின் காரணத்தால் கொல்லப்படப் போகும் எந்த நபருக்காகவும்; ந—இல்லை; அன்ருதம்—கபடத்தனம்; ஸ்யாத்—ஆகிறான்; ஜூகுப்ஸிதம்—வெறுக்கத்தக்க.

ஒரு பெண்ணைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு, அவளை முகத்துதி செய்வதிலும், தமாஷ் செய்வதிலும், ஒரு விவாகச் சடங்கிலும், ஒருவனின் வாழ்க்கைத் தேவைகளைச் சம்பாதிப்பதிலும், ஒருவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போதும், பசுக்கள் மற்றும் பிராமண பண்பாடு ஆகியவற்றைக் காப்பதிலும், அல்லது ஒரு எதிரியின் கையிலிருந்து ஒருவனைக் காப்பாற்றுவதிலும் கையாளப்படும் கபடத்தனம் ஒருபோதும் நிந்திக்கப்படவில்லை.


ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பகவான் வாமனதேவர் பலி மகாராஜனிடம் யாசித்தல்” எனும் தலைப்பை கொண்ட பத்தொன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare