அத்தியாயம் – 3
கஜேந்திரனின் சரணாகதி பிரார்த்தனை
பதம் 8.3.1
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
ஏவம் வ்யவஸிதோ புத்யா ஸமாதாய மனோ ஹ்ருதி
ஜஜாப பரமம் ஜாப்யம் ப்ராக்-ஜன்மனி அனுசிக்ஷிதம்

ஸ்ரீ பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; வ்யவஸித:—பதியச் செய்தது; புத்யா—புத்தியால்; ஸமாதாய—ஒருமுனைப்படுத்துவதற்காக; மன:—மனதை; ஹ்ருதி—உணர்வில் அல்லது இதயத்தில்; ஜஜாப—அது உச்சரித்தது; பரமம்—உயர்ந்ததொரு; ஜாப்யம்—சிறந்த பக்தர்களிடமிருந்து அது கற்றுக் கொண்ட மந்திரத்தை; ப்ராக்-ஜன்மனி—அதன் முற்பிறவியில்; அனுசிக்ஷிதம்—பயின்ற.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அதன்பிறகு, யானைகளின் அரசனான கஜேந்திரன், அதன் மனத்தைப் பூரணமான அறிவுடன் தன் இதயத்தில் பதியச் செய்தது. பிறகு ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையால் ஞாபகத்திற்கு வந்த ஒரு மந்திரத்தை அது உச்சரித்தது. இம்மந்திரம், முற்பிறவியில் இது இந்திரத்யும்னனாக இருந்தபோது கற்றதாகும்.

பதம் 8.3.2
ஸ்ரீ-கஜேந்ர உவாச
ஓம் நமோ பகவதே தஸ்மை யத ஏதச் சித்-ஆத்மகம்
புருஷாயாதி-பீஜாய பரேசாயாபிதீமஹி

ஸ்ரீ கஜேந்ர: உவாச—யானைகளின் அரசனான கஜேந்திரன் கூறியது; ஓம்—எம்பெருமானே; நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன்; பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; தஸ்மை—அவருக்கு; யத்:—யாரிடமிருந்து; ஏதத்—இவ்வுடலும், ஜடத்தோற்றமும்; சித்-ஆத்மகம்—உணர்வின் (ஆத்மாவின்) காரணத்தால் அசைகின்றது; புருஷாய—பரம புருஷருக்கு; ஆதி-பீஜாய—அனைத்திற்கும் ஆதி மூலமாகிய; பர-ஈசாய—பரமனும், உன்னதமானவரும், பிரம்மா மற்றும் சிவனைப் போன்ற மேன்மைக்குரியவர்களாலும் வணங்கப்படுபவரான; அபிதீமஹி—அவரை நான் தியானிக்கிறேன்.

யானைகளின் அரசனான கஜேந்திரன் கூறியது: பரம புருஷரான வாசுதேவனுக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன் (ஓம் நமோ பகவதே வாஸுதேவாய). அவரால்தான், ஆத்மாவின் இருப்பால் இந்த ஜட உடல் செயற்படுகிறது. எனவே அனைத்திற்கும் அவரே மூல காரணமாவார். பிரம்மா மற்றும் சிவனைப் போன்ற மேன்மையானவர்களாலும் அவர் வழிபடத்தக்கவராவார். மேலும் ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திற்குள்ளும் அவர் புகுந்துள்ளார். அவரை நான் தியானிக்கிறேன்.

பதம் 8.3.3
யஸ்மின் இதம் யதஸ் சேதம் யேனேதம் ய இதம் ஸ்வயம்
யோ ‘ஸ்மாத் பரஸ்மாச் ச பரஸ் தம் ப்ரபத்யே ஸ்வயம்புவம்

யஸ்மின்—தார பீடமாகவுள்ள அதன்மீது; இதம்—பிரபஞ்சம் இருக்கிறது; யத:—மூலப் பொருட்களில் இருந்து; ச—மேலும்; இதம்—பிரபஞ்ச தோற்றம் உண்டாக்கப்பட்டுள்ளது; யேன—எவரால்; இதம்—இப்பிரபஞ்ச தோற்றம் படைக்கப்பட்டு, காக்கப்படுகிறதோ; ய:—யாரொருவர்; இதம்—இந்த ஜட உலகம்; ஸ்வயம்—அவரே; ய:—யாரொருவர்; அஸ்மாத்—விளைவிலிருந்து (இந்த ஜட உலகம்); பரஸ்மாத்—காரணத்திலிருந்து; ச—மேலும்; பர:—உன்னதமான அல்லது வேறான; தம்—அவருக்கு; ப்ரபத்யே—நான் சரணடைகிறேன்; ஸ்வயம்புவம்—சுய தேவை பூர்த்தியடைய பரமனிடம்.

பரமபுருஷர், அனைத்தையும் தாங்கிக் கொண்டுள்ள பரம பீடமாவார். எதிலிருந்து அனைத்தும் உண்டாக்கப்பட்டுள்ளதோ அந்த மூலப்பொருளும் அவரேயாவார். மேலும் இப்பிரபஞ்ச தோற்றத்தின் சிருஷ்டிக்கர்த்தாவும், அதற்குரிய ஒரே காரணமும் அவரேயாவார். ஆயினும், அவர் காரண விளைவிலிருந்து வேறுபட்டவராவார். அனைத்திலும் சுய தேவை பூர்த்தி கொண்டவரான அந்த முழுமுதற் கடவுளிடம் நான் சரணடைகிறேன்.

பதம் 8.3.4
ய: ஸ்வாத்மனீதம் நிஜ-மாயயார்பிதம்
க்வசித் விபாதம் க்வ ச தத் திரோஹிஹதம்
அவித்த-த்ருக் ஸாக்ஷி உபயம் தத் ஈக்ஷதே
ஸ ஆத்ம-மூலோ ‘வது மாம் பராத்-பர:

ய:—அந்த முழுமுதற் கடவுள்; ஸ்வ-ஆத்மனி—அவரில்; இதம்—இப்பிரபஞ்ச தோற்றம்; நிஜ-மாயயா—அவரது சுய சக்தியினால்; அர்பிதம்—முதலீடு செய்யப்பட்ட; க்வசித்—சிலசமயங்களில், கல்ப ஆரம்பத்தில்; விபாதம்—அது தோற்றுவிக்கப்படுகிறது; க்வ-ச—சில சமயங்களில், அழிவின் போது; தத்—அது (தோற்றம்); திரோஹிதம்—காணப்படுவதில்லை; அவித்த-த்ருக்—அனைத்தையும் அவர் பார்க்கிறார் (இவ்வெல்லா சூழ்நிலைகளிலும்); ஸாக்ஷி—சாட்சி; உபயம்—இரண்டும் (தோற்றம் மற்றும் அழிவு); தத்-ஈக்ஷதே—பார்வையை இழந்துவிடாமல் அனைத்தையும் பார்க்கிறார்; ஸ:—அந்த முழுமுதற் கடவுள்; ஆத்ம-மூல:—வேறு காரணம் இல்லாததால், சுய தேவை பூர்த்தி கொண்ட; அவது—தயவுசெய்து காப்பாற்ற வேண்டும்; மாம்—என்னிடம்; பராத்-பர:—அவர் உன்னதத்திற்கும் உன்னதமானவர், அல்லது எல்லா உன்னதங்களுக்கும் மேலானவர்.

முழுமுதற் கடவுள், தமது சுய சக்தியை விரிவடையச் செய்வதன் மூலமாக, இப்பிரபஞ்ச தோற்றத்தை சில சமயங்களில் கண்ணுக்குப் புலப்படும் வகையிலும், மேலும் சில சமயங்களில் புலப்படாதவாறும் வைத்திருக்கின்றார். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவரே பரம காரணம் மற்றும் விளைவாகவும், பார்வையாளர் மற்றும் சாட்சியாகவும் இருக்கிறார். இவ்வாறாக அவர் அனைத்திற்கும் மேலானவராவார். அந்த முழுமுதற் கடவுள் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக.

பதம் 8.3.5
காலேன பஞ்சத்வம் இதேஷு க்ருத்ஸ்னசோ
லோகேஷு பாலேஷு ச ஸர்வ-ஹேதுஷு
தமஸ் ததாஸீத் கஹனம் கபீரம்
யஸ் தஸ்ய பாரே ‘பிவிராஜதே விபு:

காலேன—காலப்போக்கில் (லட்சக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்); பஞ்சத்வம்—மாயையான அனைத்தும் அழிக்கப்படும் போது; இதேஷு—எல்லா உருமாற்றங்களும்; க்ருத்ஸ்னச:—இப்பிரபஞ்ச தோற்றத்தினுள் உள்ள அனைத்துடனும்; லோகேஷு—எல்லா கிரகங்களும், அல்லது இருப்பவை அனைத்தும்; பாலேஷு—பிரம்ம தேவரைப் போன்ற நிர்வாகிகள்; ச—கூட; ஸர்வ-ஹேதுஷு—காரண பூதமாயுள்ள அனைத்து இருப்புக்களும்; தம:—காரிருள்; ததா—பின்; ஆஸீத்—இருந்தது; கஹனம்—மிகவும் அடர்த்தியான; கபீரம்—மிகவும் ஆழமான; ய:—அந்த முழுமுதற் கடவுள்; தஸ்ய—இருளடர்ந்த இச்சூழ்நிலை; பாரே—மேலாக; அபிவிராஜதே—இருக்கிறார் அல்லது பிரகாசிக்கிறார்; விபு:—பரமன்.

காலப்போக்கில், கிரகங்களும் அவற்றின் நிர்வாகிகளும், காவலர்களும் உட்பட, பிரபஞ்சத்தின் எல்லாக் காரணத் தோற்றங்களும், விளைவுத் தோற்றங்களும் அழிக்கப்படும்போது, காரிருள் சூழ்ந்த ஒரு நிலை ஏற்படுகின்றது. ஆயினும், இவ்விருளுக்கும் மேலாக முழுமுதற்கடவுள் இருக்கிறார். அவரது தாமரைப் பாதங்களில் நான் புகலிடம் கொள்கிறேன்.

பதம் 8.3.6
ந யஸ்ய தேவா ரிஷய: பதம் விதுர்
ஜந்து: புன: கோ ‘ர்ஹதி கந்தும் ஈரிதும்
யதா நடஸ்யாக்ருதிபிர் விசேஷ்டதோ
துரத்யயானுக்ரமண: ஸ மாவது

ந—இல்லை; யஸ்ய—யாரொருவரை; தேவா:—தேவர்கள்; ரிஷய:—மாமுனிவர்கள்; பதம்—நிலையை; விது:—புரிந்துகொள்ள முடியும்; ஜந்து:—மிருகங்களைப் போன்ற புத்தியற்ற ஜீவராசிகள்; புன:—மீண்டும்; க:-அர்ஹதி—யாரால் இயலும்; கந்தும்—அறிவினுள் நுழைய; ஈரிதும்—அல்லது வார்த்தைகளால் விவரிக்க; யதா—அவ்வாறு; நடஸ்ய—நடிகரின்; ஆக்ருதிபி:—தேக அம்சங்களால்; விசேஷ்டத:—வெவ்வேறு முறைகளில் நடனமாடும்; துரத்யய—மிகவும் கஷ்டம்; அனுக்ரமண:—அவரது அசைவுகள்; ஸ:—அந்த முழுமுதற் கடவுள்; மா—எனக்கு; அவது—அபயம் அளிப்பாராக.

நாடக மேடையிலுள்ள நடிகரொருவர், கவர்ச்சியான உடைகளால் மூடப்பட்டு, பல விதமான அசைவுகளுடன் நடனமாடுவதால், அவரை சபையோர் புரிந்து கொள்வதில்லை; அதைப்போலவே, பரம நடிகரின் செயல்களையும், அம்சங்களையும் தேவர்களால் அல்லது மகா முனிவர்களால் கூட புரிந்துகொள்ள முடியாது. அப்படியிருக்க, மிருகங்களைப் போன்ற புத்தியற்றவர்களால் நிச்சயமாக அது முடியாது. தேவர்கள் மற்றும் முனிவர்களாலோ அல்லது புத்தியற்றவர்களாலோ பகவானின் அம்சங்களைப் புரிந்து கொள்ளவோ, அல்லது அவரது உண்மை நிலையை வார்த்தைகளால் வர்ணிக்கவோ முடியாது. அத்தகைய முழுமுதற் கடவுள் எனக்கு அபயமளிப்பாராக.

பதம் 8.3.7
தித்ருக்ஷவோ யஸ்ய பதம் ஸுமங்களம்
விமுக்த-ஸங்கா முனய: ஸுஸாதவய:
சரந்தி அலோக-வ்ரதம் அவ்ரணம் வனே
பூதாத்ம-பூத: ஸுஹ்ருத: ஸ மே கதி:

திக்ருக்ஷவ:—(முழுமுதற் கடவுளை) காண விரும்புபவர்கள்; யஸ்ய—அவரது; பதம்—தாமரை பாதங்களை; ஸு-மங்களம்—சர்வ மங்களகரமான; விமுக்த-ஸங்கா:—பெளதிகச் சூழ்நிலையெனும் நோயிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்கள்; முனய:—பெரும் முனிவர்கள்; ஸு-ஸாதவ:—ஆன்மீக உணர்வில் மிகவும் உயர்ந்துள்ளவர்கள்; சரந்தி—பயிற்சி செய்பவர்கள்; அலோக-வ்ரதம்—பிரம்மச்சரிய, வானப்பிரஸ்த அல்லது ஸந்நியாஸ விரதங்களை; அவ்ரணம்—எவ்வித குறையும் இல்லாமல்; வனே—வனத்தில்; பூத-ஆத்ம-பூதா:—அனைத்து ஜீவராசிகளிடமும் சமமாக இருப்பவர்கள்; ஸுஹ்ருத:—அனைவரிடமும் சினேகமாய் இருப்பவர்கள்; ஸ:—அதே முழுமுதற் கடவுள்; மே—எனது; கதி:—இலக்கு.

எல்லா ஜீவராசிகளையும் சமமாகக் காண்பவர்களும், எல்லோரிடமும் சினேகமாய் இருப்பவர்களும், காட்டில் பிரம்மச்சரிய, வானப்பிரஸ்த மற்றும் சந்நியாஸ விரதங்களை குறையற்றவாறு பயிற்சி செய்பவர்களுமான துறவிகளும், பெரும் முனிவர்களும், சர்வ மங்களமளிக்கும் முழுமுதற் கடவுளின் தாமரைப் பாதங்களைத் தரிசிக்க விரும்புகின்றனர். அதே முழுமுதற் கடவுளே என்னுடைய இலக்காகவும் இருப்பாராக.

பதங்கள் 8.3.8 – 8.3.9
ந வித்யதே யஸ்ய ச ஜன்ம கர்ம வா
ந நாம-ரூபே குண-தோஷ ஏவ வா
ததாபி லோகாப்யய-ஸம்பவாய ய:
ஸ்வ-மாயயா தானி அனுகாலம் ருச்சதி

தஸ்மை நம: பரேசாய ப்ரஹ்மணே ‘னந்த-சக்தயே
அரூபாயோரு-ரூபாய நம ஆஸ்சர்ய-கர்மணே

ந—இல்லை; வித்யதே—இருக்கிறது; யஸ்ய—யாருடைய (முழுமுதற்கடவுள்); ச—கூட; ஜன்ம—பிறப்பு; கர்ம—செயல்கள்; வா—அல்லது; ந—அதுவுமில்லை; நாம-ரூபே—எவ்விதமான பௌதிக நாமமோ அல்லது பெளதிக ரூபமோ; குண—குணங்களோ; தோஷ:—குற்றமோ; ஏவ—நிச்சயமாக; வா—ஏதேனுமொன்று; ததாபி—இருப்பினும்; லோக—இப்பிரபஞ்ச தோற்றத்தின்; அப்பய—அழிவாக இருப்பவர்; ஸம்பவாய—மற்றும் படைப்பாக; ய:—யாரொருவர்; ஸ்வ-மாயயா—அவரது சுய சக்தியால்; தானி—செயல்கள்; அனுகாலம்—நித்தியமாக; ருச்சதி—ஏற்கிறார்; தஸ்மை—அவருக்கு; நம:—எனது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்; பர—உன்னதமான; ஈசாய—பரம ஆளுனராக இருக்கும்; ப்ரஹ்மணே—பரப்பிரம்மனரான; அனந்த-சக்தயே—எல்லையற்ற சக்தியுடன்; அரூபாய—பெளதிக ரூபத்தைப் பெற்றிருக்காத; உரு-ரூபாய—பல்வேறு ரூபங்களை அவதாரங்களைக் கொண்டிருக்கும்; நம:—எனது வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; ஆஸ்சர்ய-கர்மணே—அற்புத செயல்களைக் கொண்ட.

முழுமுதற் கடவுளுக்கு பெளதிகமான பிறப்போ, செயல்களோ, நாமமோ, உருவமோ, குணங்களோ அல்லது குறைகளோ கிடையாது. எதற்காக இந்த ஜட உலகம் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றதோ, அந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அவர் நமது ஆதியான அந்தரங்க சக்தியின் மூலமாக, பகவான் ஸ்ரீ ராமராகவோ அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணராகவோ ஒரு மனித உருவில் வருகின்றார். அவருக்கு அளவற்ற சக்தியுண்டு. மேலும் பெளதிக களங்கத்திலிருந்து விடுபட்டுள்ள அநேக ரூபங்களில் அவர் அற்புதமாக செயற்படுகின்றார். எனவே அவரே பரபிரம்மமாவார். அவருக்கு என் வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.3.10
நம ஆத்ம-ப்ரதீபாய ஸாக்ஷிணே பரமாத்மணே
நமோ கிராம் விதூராய மனஸஸ் சேதஸாம் அபி

நம:—எனது மரியாதை கலந்த வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; ஆத்ம-ப்ரதீபாய—சுயப் பிரகாசம் உடையவரான அல்லது ஜீவராசிகளுக்கு ஆத்மஞானம் அளிப்பவரான அவருக்கு; ஸாக்ஷிணே—ஒரு சாட்சியாக எல்லோருடைய இதயங்களிலும் வீற்றிருப்பவர்; பரம-ஆத்மனே—பரமாத்மாவிடம்; நம:—எனது மரியாதை கலந்த வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன்; கிராம்—சொற்களால்; விதூராய—அடைவதற்கு சாத்தியமற்றவரான; மனஸ:—மனத்தால்; சேதஸாம்—அல்லது உணர்வின் மூலமாய்; அபி—கூட.

முழுமுதற் கடவுள், எல்லோருடைய இதயங்களிலும் சாட்சியாக இருக்கும் சுயப்பிரகாசம் கொண்ட பரமாத்மாவாக இருக்கிறார். தனிப்பட்ட ஆத்மாவிற்கு அவர் ஞான உபதேசம் அளிக்கிறார். மேலும் அவர் மனம், சொல் அல்லது உணர்வு ஆகியவற்றின் பயிற்சியால் அடையப்படாதவராவார். அத்தகைய முழுமுதற் கடவுளுக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.3.11
ஸத்வேண ப்ரதிலப்யாய நைஷ்கர்மயேண விபஸ்சிதா
நம: கைவல்ய-நாதாய நிர்வாண-ஸுக-ஸம்விதே

ஸத்வேண—தூய பக்தித்தொண்டால்; ப்ரதி-லப்யாய—அத்தகைய பக்தித்தொண்டால் அடையப்படுபவரான, முழுமுதற் கடவுளுக்கு; நைஷ்கர்மயேண—உன்னதமான செயல்களால்; விபஸ்சிதா—போதுமான அளவிற்கு கற்றறிந்தவர்களால்; நம:—எனது மரியாதை கலந்த வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; கைவல்ய-நாதாய—உன்னத உலகின் எஜமானருக்கு; நிர்வாண—ஜடச் செயல்களில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ள ஒருவருக்கு; ஸுக—மகிழ்ச்சியை; ஸம்விதே—அளிப்பவரான.

உன்னத பக்தியோக முறையில் செயலாற்றுபவர்களான தூய பக்தர்களால் முழுமுதற் கடவுள் உணரப்படுகிறார். அவரே களங்கமற்ற மகிழ்ச்சியை அளிப்பவரும், உன்னத உலகின் எஜமானருமாவார். ஆகவே எனது மரியாதையை நான் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.3.12
நம: சாந்தாய கோராய மூடாய குண-தர்மிணே
நிர்விசேஷாய ஸாம்யாய நமோ ஞான-கனாய ச

நம:—எல்லா வணக்கங்களையும்; சாந்தாய—எல்லா பெளதிக குணங்களுக்கும் மேற்பட்டவராகவும், முழு அமைதியுடையவருமான அவருக்கு, அல்லது ஒவ்வொரு ஜீவராசியிலும் பரமாத்மாவாக இருக்கும் வாசுதேவருக்கு; கோராய—ஜாமதக்னிய மற்றும் நரஸிம்ஹதேவர் போன்ற பகவானின் பயங்கர ரூபங்களுக்கு; மூடாய—பன்றியைப் போல் ஒரு மிருகமாகத் தோன்றிய பகவானின் ரூபம்; குண-தர்மிணே—ஜட உலகில் வேறுபட்ட குணங்களை ஏற்பவர்; நிர்விசேஷாய—முற்றிலும் ஆன்மீகமானவராய் இருப்பதால் பெளதிக குணங்களைப் பெற்றிருக்காதவர்; ஸம்யாய—பெளதிக குணங்கள் நின்றுவிடும் இடமாகிய நிர்வாண ரூபம் கொண்ட, புத்த பகவான்; நம:—எனது மரியாதை கலந்த வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; ஞான-கணாய—அறிவாக அல்லது அருவ பிரம்மமாக இருப்பவர்; ச—கூட.

எங்கும் பரவியிருப்பவரான பகவான் வாசுதேவரிடமும், பரம புருஷரின் பயங்கர ரூபமாகிய பகவான் நரசிம்ஹ தேவரிடமும், ஒரு மிருகமாகத் (பகவான் வராஹதேவர்) தோன்றிய பகவான் ரூபத்திற்கும். அருவவாதத்தைப் பிரச்சாரம் செய்த பகவான் தத்தாதிரேயருக்கும், பகவான் புத்தருக்கும், மற்றெல்லா அவதாரங்களுக்கும் எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். பௌதிக குணங்களற்றவரும், ஆனால் இவ்வுலகினுள் நற்குணம், தீவிர குணம் மற்றும் அறியாமைக் குணம் ஆகிய முக்குணங்களை ஏற்பவரான பகவானுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். மேலும் அருவமான பிரம்ம ஜோதிக்கும் எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.3.13
க்ஷேத்ர-க்ஞாய நமஸ் துப்யம் ஸர்வாத்யக்ஷாய ஸாக்ஷிணே
புருஷாயாத்ம-மூலாய மூல-ப்ரக்ருதயே நம:

க்ஷேத்ர-க்ஞாய—புறஉடலைப் பற்றிய அனைத்தையும் அறிந்திருப்பவருக்கு; நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; துப்யம்—உங்களுக்கு; ஸர்வ—அனைத்தும்; அத்யக்ஷாய—கண்காணித்து, நிர்வகிப்பவரான; ஸாக்ஷிணே—சாட்சியாக இருக்கும் பரமாத்மா, அல்ல அந்தர்யாமீ; புருஷாய—பரம புருஷர்; ஆத்ம-மூலாய—அனைத்திற்கும் ஆதிமூலமாக இருப்பவர்; மூல-ப்ரக்ருதயே—ப்ரக்ருதி மற்றும் ப்ரதானம் ஆகியவற்றிற்கு ஆதாரமாகிய புருஷ-அவதாரத்திற்கு; நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பரமாத்மாவும், அனைத்திற்கும் கண்காணிப்பாளரும், நிகழ்பவை அனைத்திற்கும், சாட்சியுமாகிய உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். நீரே பரமபுருஷரும், ஜட இயற்கை மற்றும் மொத்த ஜட சக்தி ஆகியவற்றின் மூலமும் ஆவீர். ஜட உலகின் உரிமையாளராக இருப்பவரும் நீரே. ஆகவே, நீரே பூரண முழுமையாவீர். உமக்கு நான் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.3.14
ஸர்வேந்ரிய-குண-த்ரஷ்ட்ரே ஸர்வ-ப்ரத்யய-ஹேதவே
அஸதா ச்சாயயோக்தாய ஸத்-ஆபாஸாய தே நம:

ஸர்வ-இந்ரிய—குண த்ரஷ்ட்ரே—புலன்களால் மேற்கொள்ளப்படும் எல்லா நோக்கங்களையும் காண்பவருக்கு; ஸர்வ-ப்ரத்யய-ஹேதவே—எல்லா சந்தேகங்களுக்கும் விடையாக இருப்பவர் (மேலும்) அவரது உதவியின்றி எல்லா சந்தேகங்களுக்கும், இயலாமைகளுக்கும் ஒருவரால் தீர்வு காண முடியாது); அஸதா—பொய்யான அல்லது மாயையான தோற்றத்துடன்; சாயயா—தோற்றத்தில் ஒத்திருப்பதால்; உக்தாய—அழைக்கப்படும்; ஸத்—உண்மையின்; ஆபாஸாய—பிரதிபலிப்பிற்கும்; தே—உமக்கு; நம:—எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

எம்பெருமானே, நீரே புலன்களின் எல்லா நோக்கங்களையும் கவனிப்பவராவீர். உமது கருணையின்றி, சந்தேகங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமல்ல. ஜட உலகம் உம்மை ஒத்திருக்கும் ஒரு நிழலைப்போன்றதாகும். உண்மையில், இந்த உலகை ஒருவன் உண்மையானதென ஏற்கின்றான். ஏனெனில், உமது இருப்பைப் பற்றிய ஒரு காட்சியை இது அளிக்கிறது.

பதம் 8.3.15
நமோ நமஸ் தே ‘கில-காரணாய
நிஷ்காரணாயாத்புத-காரணாய
ஸர்வாகமாம்னாய-மஹார்ணவாய
நமோ ‘பவர்காய பராயணாய

நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; நம:—மீண்டும் எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; தே—உமக்கு; அகில-காரணாய—அனைத்திற்கும் பரம காரணமாய் இருப்பவருக்கு; நிஷ்காரணாய—காரணமற்றவரான உமக்கு; அத்புத-காரணாய—அனைத்திற்கும் அற்புத காரணமாக இருக்கும்; ஸர்வ—எல்லா; ஆகம-ஆம்னாய—வேத அறிவின் பரம்பரா முறைக்கு பிறப்பிடமாக இருப்பவருக்கு; மஹா-அர்ணவாய—அறிவுப் பெருங்கடல், அல்லது அறிவெனும் நதிகளனைத்தும் சங்கமிக்கும் இடமாகிய பெருங்கடல்; நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; அபவர்காய—விடுதலையை அல்லது முக்தியை அளிக்கக்கூடியவரான உமக்கு; பர-அயணாய—எல்லா ஆன்மீகிகளுக்கும் புகலிடமான.

எம்பெருமானே, நீரே சர்வ காரணங்களுக்கும் காரணம், ஆனால் உமக்கு எந்த காரணமும் இல்லை. ஆகவே நீரே அனைத்திற்கும் அற்புத காரணமாவீர். பஞ்சராத்ரங்களும், வேதாந்த சூத்திரமும் உம்மைப் பிரதிநிதிப்பவையாகும். இத்தகைய சாஸ்திரங்களில் அடங்கியுள்ள வேத அறிவிற்கு நீரே புகலிடமாவீர். மேலும் நீரே பரம்பரா முறையின் பிறப்பிடமாகவும் இருக்கிறீர். உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். உம்மால் மட்டுமே சக்தியை அளிக்க முடியும் என்பதால், எல்லா ஆன்மீகிகளுக்கும் ஒரே புகலிடமாக இருப்பவரும் நீரே. எனது பணிவான வணக்கங்களை நான் உமக்கு சமர்ப்பிப்பேனாக.

பதம் 8.3.16
குணாரணி-ச்சன்ன-சித்-உஷ்மபாய
தத்-க்ஷோப-விஸ்பூர்ஜித-மானஸாய
நைஷ்கர்ம்ய-பாவேன விவர்ஜிதாகம
ஸ்வயம்-ப்ரகாசாய நமஸ் கரோமி

குண—ஜட இயற்கையின் முக்குணங்களால் (ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ்); அரணி—அரணி கட்டையால்; சன்ன—மறைக்கப்பட்ட; சித்—அறிவின்; உஷ்மபாய—நெருப்பையுடைய அவருக்கு; தத்-க்ஷோப—ஜட இயற்கைக் குணங்களுடைய கிளர்ச்சியின்; விஸ்பூர் ஜித—வெளிப்புறம்; மானஸாய—எனும் மன நிலையைக் கொண்ட அவருக்கு; நைஷ்கர்ம்ய-பாவேன—ஆன்மீகப் புரிந்துணர்வு நிலையின் காரணத்தால்; விவர்ஜித—துறந்து விடுபவர்களில்; ஆகம—வேத நியமங்கள்; ஸ்வயம்—சுயமாக; ப்ரகாசாய—தோன்றியுள்ள அவருக்கு; நம: கரோமி—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

எம்பெருமானே, அரணி கட்டையினுள் நெருப்பு மறைந்திருப்பதைப் போலவே, நீரும், எல்லையற்ற உமது அறியும் ஜட இயற்கைக் குணங்களால் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள். இருந்தாலும், உமது மனம், ஜட இயற்கைக் குணங்களிடம் கவனம் கொண்டிருக்கவில்லை. ஆன்மீக அறிவில் முன்னேறியவர்கள், வேத இலக்கியங்களில் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்களல்ல. அத்தகைய முன்னேற்றமடைந்த ஆத்மாக்கள் உன்னத நிலையில் இருப்பதால், அவர்களின் தூய மனங்களில் நீரே சுயமாகத் தோன்றுகிறீர். ஆகவே எனது பணிவான வணக்கங்களை நான் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.3.17
மாத்ருக் ப்ரபன்ன-பசு-பாச-விமோக்ஷணாய
முக்காய பூரி-கருணாய நமோ ‘லயாய
ஸ்வாம்சேன ஸர்வ-தனு-ப்ருன்-மனஸி-ப்ரதீத-
ப்ரத்யக்-த்ருசே பகவதே ப்ருஹதே நமஸ் தே

மாத்ருக்—என்னைப் போன்ற; ப்ரபன்ன—சரணடைந்த; பசு—ஒரு மிருகம்; பாச—சிக்கலிலிருந்து; விமோக்ஷணாய—விடுவிப்பவரான அவருக்கு; முக்தாய—ஜட இயற்கையின் களங்கத்தால் தொடப்படாதவரான பரமனுக்கு; பூரி-கருணாய—எல்லையற்ற கருணையுடைய; நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; அலயாய—(என்னை விடுவிப்பதில்) ஒருபோதும் கவனக்குறைவாகவோ அல்லது சோம்பியோ இருக்காதவர்; ஸ்வ-அம்சேன—பரமாத்மாவெனும் உமது அம்சத்தால்; ஸர்வ—அனைத்திலும்; தனு-ப்ருத்—ஜட இயற்கையில் உடலை ஏற்றுள்ள ஜீவராசிகள்; மனஸி—மனதில்; ப்ரதீத—அங்கீகரிக்கப்பட்ட; ப்ரத்யக்-த்ருசே—(எல்லாச் செயல்களுக்கும்) நேரான பார்வையாளராக; பகவதே—பரமபுருஷ பகவானுக்கு; ப்ருஹதே—எல்லையற்றவரான; நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; தே:—உமக்கு.

பரம முக்தி நிலையில் இருப்பவரான உம்மிடம் என்னைப் போன்ற ஒரு மிருகம் சரணாகதி அடைந்திருப்பதால், இந்த ஆபத்தான நிலையிலிருந்து நிச்சயமாக நீர் என்னை விடுவிப்பீர். உண்மையில், நீர் பரம கருணா மூர்த்தியாக இருப்பதால், இடைவிடாமல் என்னை நீர் காப்பாற்ற முயல்கிறீர். உமது விரிவங்கமாகிய பரமாத்ம அம்சத்தில், எல்லா உடல்பெற்ற ஜீவன்களின் இதயங்களிலும் நீர் இருக்கின்றீர். நீர் நேரடியான உன்னத அறிவென்று புகழப்படுகின்றீர். மேலும் நீர் எல்லையற்றவராவீர். முழுமுதற் கடவுளாகிய உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.3.18
ஆத்மாத்ம-ஜாப்த-க்ருஹ-வித்த-ஜனேஷு ஸக்தைர்
துஷ்ப்ராப்பணாய குண-ஸங்க-விவர்ஜிதாய
முக்தாத்மபி: ஸ்வ-ஹ்ருதயே பரிபாவிதாய
ஜ்ஞானாத்மனே பகவதே நம ஈஸ்வராய

ஆத்ம—மனமும், உடலும்; ஆத்ம-ஜ—புதல்வர்கள் மற்றும் புதல்விகள்; ஆப்த—நண்பர்கள் மற்றும் உறவினர்கள்; க்ருஹ—வீடு, இனம், சமூகம் மற்றும் தேசம்; வித்த—செல்வம்; ஜனேஷு—பல தொண்டர்களிடமும், உதவியாளர்களிடமும்; ஸக்தை:—மிகவும் அதிகமான பற்று வைத்திருப்பவர்களால்; துஷ்ப்ராபணாய—அடைவதற்கு மிகவும் கஷ்டமானவரான உமக்கு; குண-ஸங்க—ஜட இயற்கையின் முக்குணங்களால்; விவர்ஜிதாய—களங்கப்படாதவரான; முக்த-ஆத்மபி:—ஏற்கனவே முக்தியடைந்துவிட்டவர்களால்; ஸ்வ-ஹ்ருதயே—இதயமத்தியில்; பரிபாவிதாய—எப்பொழுதும் தியானிக்கப்படுபவரான உமக்கு; ஞான-ஆத்மனே—ஆத்ம ஞானம் முழுவதற்கும் களஞ்சியமான; பகவதே—பரமபுருஷ பகவானுக்கு; நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; ஈஸ்வராய—பரம ஆளுனருக்கு.

எம்பெருமானே, ஜடக் களங்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டிருப்பவர்கள் உம்மை எப்போதும் தங்களுடைய இதயத்தில் தியானிக்கின்றனர். மனக்கற்பனை, வீடு, உறவினர்கள், நண்பர்கள், செல்வம், தொண்டர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியவற்றில் நான் அளவுக்கதிகமாக பற்றுக் கொண்டிருக்கிறேன். என்னைப் போன்றோருக்கு உம்மை அடைவதென்பது மிகமிக கஷ்டமாகும். நீர், இயற்கைக் குணங்களால் களங்கப்படாதவரான முழுமுதற் கடவுளாவீர். ஆத்ம ஞானம் முழுவதற்கும் களஞ்சியமாக இருப்பவரும், பரம ஆளுனராக இருப்பவரும் நீரே. எனவே எனது பணிவான வணக்கங்களை நான் உமக்கு சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.3.19
யம் தர்ம-காமார்த்த-விமுக்தி-காமா
பஜந்த இஷ்டாம் கதிம் ஆப்னுவந்தி
கிம் சாசிஷோ ராதி அபி தேஹம் அவ்யயம்
கரோது மே ‘தப்ர-தயோ விமோக்ஷணம்

யம்—அந்த முழுமுதற் கடவுள்; தர்ம-காம-அர்த்த-விமுக்தி-காமா:—மதம், பொருளாதார முன்னேற்றம், புலன் இன்பம் மற்றும் முக்தி ஆகிய நான்கு கொள்கைகளை விரும்புபவர்கள்; பஜந்த:—வழிபடுவதன் மூலமாக; இஷ்டாம்—நோக்கத்தை; கதிம்—கதியை; ஆப்னுவந்தி—அடைய இயலும்; கிம்—பற்றி கூற என்ன இருக்கிறது; ச—தவிரவும்; ஆசிஷ:—மற்ற வரங்களை; ராதி—அவர் அளிக்கிறார்; அபி—கூட; தேஹம்—ஒருடலை; அவ்யயம்—ஆன்மீகமான; கரோது—அவர் வரம் அளிப்பாராக; மே—எனக்கு; அதப்ர-தய:—பரம கருணாமூர்த்தியான முழுமுதற் கடவுள்; விமோக்ஷணம்—இப்பொழுது நேரிட்டுள்ள அபாயத்திலிருந்தும், ஜட உலகிலிருந்தும் முக்தியை.

முழுமுதற் கடவுளை வழிபட்டபின், மதம், பொருளாதார முன்னேற்றம், புலனின்பம் மற்றும் முக்தி ஆகிய நான்கு கொள்கைகளில் ஆர்வம் உள்ளவர்கள், தாங்கள் விரும்பியதை அவரிடமிருந்து பெறுகின்றனர். எனவே மற்ற வரங்களைப் பற்றி கூற என்ன இருக்கிறது? உண்மையில், இத்தகைய பேராசைகளை நோக்கமாகக் கொண்டு வழிபடுபவர்களுக்கு பகவான் சிலசமயங்களில் ஓர் ஆன்மீக உடலை வழங்குகிறார். பரம கருணாமூர்த்தியான அந்த முழுமுதற் கடவுள், இப்பொழுது நேரிட்டுள்ள அபாயத்திலிருந்தும், பெளதிகமான வாழ்க்கைமுறையிலிருந்தும், முக்தி எனும் வரத்தை எனக்கு அளிப்பாராக.

பதங்கள் 8.3.20 – 8.3.21
ஏகாந்தினோ யஸ்ய ந காஞ்சனார்தம்
வாஞ்சந்தி யே வை பகவத்-ப்ரபன்னா:
அதி-அத்புதம் தச்-சரிதம் ஸுமங்களம்
காயந்த ஆனந்த-ஸமுத்ர-மக்னா:

தம் அக்ஷரம் ப்ரஹ்ம பரம் பரேசம்
அவ்யக்தம் ஆத்யாத்மிக-யோக-கம்யம்
அதீந்ரியம் ஸூக்ஷ்மம் இவாதிதூரம்
அனந்தம் ஆத்யம் பரிபூர்ணம் ஈடே

ஏகாந்தின:—கலப்பற்ற பக்தர்கள் (கிருஷ்ண உணர்வையன்றி வேறு ஆசை இல்லாதவர்கள்); யஸ்ய—பகவானின்; ந—இல்லை; காஞ்சன—சில; அர்த்தம்—வரம்; வாஞ்சந்தி—ஆசை: யே—அந்த பக்தர்கள்; வை—உண்மையில்; பகவத்-ப்ரபன்னா:—பகவானின் தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதி அடைந்துள்ள; அதி-அத்புதம்—அதியற்புதமான; தத்-சரிதம்—பகவானின் செயல்கள்; ஸு-மங்களம்—மேலும் (செவியுறுவதற்கு) மிகவும் மங்களகரமான; காயந்த:—பாடுவதாலும்; கேட்பதாலும்; ஆனந்த—உன்னத ஆனந்தத்தின்; ஸமுத்ர—சமுத்திரத்தில்; மக்னா:—மூழ்கியவர்கள்; தம்—அவருக்கு; அக்ஷரம்—நித்தியமாக இருக்கும்; ப்ரஹ்ம—பரமன்; பரம்—உன்னதமான; பர-ஈசம்—உயர்ந்த புருஷர்களின் இறைவன்; அவ்யக்தம்—கண்ணுக்குத் தெரியாத அல்லது மனதாலும், புலன்களாலும் உணர முடியாத; அத்யாத்மிக—உன்னதமான; யோக—பக்தியோகம் அல்லது பக்தித் தொண்டால்; கம்யம்—அடையப்படக்கூடிய (பக்த்யா மாம் அபிஜானாதி); அதி-இந்ரியம்—ஜடப் புலன்களின் உணர்வுக்கு அப்பால்; ஸூக்ஷ்மம்—மிகச்சிறிய; இவ—போன்ற; அதி-தூரம்—அதிதூரத்தில்; அனந்தம்—எல்லையற்ற; ஆத்யம்—அனைத்திற்கும் மூல காரணமாகிய; பரிபூர்ணம்—பரிபூரணமாக; ஈடே—எனது வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பகவானுக்குத் தொண்டு செய்வதைத்தவிர வேறு விருப்பம் இல்லாதவர்களான கலப்பற்ற பக்தர்கள், பூரண சரணாகதியில் அவரை வழிபடுவதுடன், அதிஅற்புதமானவையும், மிகவும் மங்களகரமானவையுமான அவரது செயல்களைப் பற்றி எப்பொழுதும் கேட்டுக் கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கின்றனர். இவ்வாறாக அவர்கள் எப்பொழுதும் ஓர் உன்னதமான ஆனந்தக் கடலில் மூழ்கியுள்ளனர். இத்தகைய பக்தர்கள் பகவானிடமிருந்து எந்த வரத்தையும் கேட்பதில்லை. இருந்தாலும், நான் ஆபத்தான நிலையில் இருக்கிறேன். இதனால் நான் அந்த முழுமுதற் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அவர் நித்தியமாக இருப்பவரும், கண்ணுக்குத் தெரியாதவரும், பிரம்மாவைப் போன்ற மகாபுருஷர்கள் அனைவருக்கும் இறைவனும், உன்னதமான பக்தி-யோகத்தால் மட்டுமே கிடைக்கக்கூடியவருமாவார். அவர் மிகமிக சூட்சுமமானவராக இருப்பதால், அவர் என் புலன்களால் அடையப்படமுடியாதவராகவும், எல்லாப் புற உணர்வுகளுக்கும் மேற்பட்டவராகவும் இருக்கிறார். அவர் எல்லையற்றவரும், காரண மூலமும், அனைத்திலும் பூரண நிறைவுமாவார். எனது வணக்கங்களை நான் அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்.

பதங்கள் 8.3.22 – 8.3.24
யஸ்ய ப்ரஹ்மாதயோ தேவா வேதா லோகாஸ் சராசரா:
நாம-ரூப-விபேதேன ஃபல்குயா ச கலயா க்ருதா:

யதார்சிஷோ ‘கனே: ஸவிதுர் கபஸ்தயோ
நிர்யாந்தி ஸம்யாந்தி அஸக்ருத் ஸ்வ-ரோசிஷ:
ததா யதோ ‘யம் குண-ஸம்ப்ரவாஹோ
புத்திர் மன: கானி சரீர-ஸர்கா:

ஸ வை ந தேவாஸுர-மர்த்ய-தீர்யந்
ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான் ந ஜன்து:
நாயம் குண: கர்ம ந ஸன் ந சாஸன்
நிஷேத-சேஷோ ஜயதாத் அசேஷ:

யஸ்ய—அந்த பரமபுருஷ பகவானின்; ப்ரஹ்ம-ஆதய:—பிரம்மதேவர் முதலான தேவர்கள்; தேவா:—முதலா மற்றும் பிற தேவர்களும்; வேத:—வேத அறிவு; லோகா:—வேறுபட்ட நபர்கள்; சர-அசரா:—அசைவன, அசையாதன (மரங்களையும், தாவரங்களையும் போன்றவை); நாம-ரூப—வேறுபட்ட பெயர்கள் மற்றும் உருவங்கள் ஆகியவற்றின்; விபேதேன—அத்தகைய பிரிவுகளால்; ஃபல்குயா—முக்கியமற்றவர்கள்; ச—தவிரவும்; கலயா—அங்கங்களால்; க்ருதா:—படைக்கப்பட்ட; யதா—அவ்வாறு; அர்சிஷ:—பொறிகள்; அக்னே:—தீயின்; ஸவிது:—சூரியனில் இருந்து; கபஸ்தய:—பிரகாசிக்கும் துணுக்குகள்; நிர்யாந்தி—இருந்து வெளிப்படும்; ஸம்-யாந்தி—உட்புகும்; அஸக்ருத்—மீண்டும், மீண்டும்; ஸ்வ-ரோசிஷ:—பின்னப்பகுதிகளாக; ததா—அதைப்போலவே; யத:—முழுமுதற் கடவுளிடம் இருந்து; அயம்—இந்த; குண-ஸம்ப்ரவாஹ:—வேறுபட்ட இயற்கைக் குணங்களின் தொடர்ச்சியான தோற்றம்; புத்தி:-மன:—புத்தியும், மனதும்; கானி—புலன்கள்; சரீர—(ஸ்தூல மற்றும் சூட்சும) உடலின்; ஸர்கா:—பிரிவுகள்; ஸ:—அந்த முழுமுதற் கடவுள்; வை—உண்மையில்; ந—இல்லை; தேவ—தேவர்; அஸுர—அசுரன்; மர்த்ய—மனிதன்; திர்யக்—பறவை அல்லது மிருகம்; ந—இல்லை; ஸ்த்ரீ—பெண்; ந—அதுவுமில்லை; ஷண்ட:—ஆண் பெண் என்று பகுக்க முடியாத; ந—இல்லை; புமான்—மனிதன்; ந—அதுவுமில்லை; ஜந்து:—ஜீவராசி அல்லது மிருகம்; ந-அயம்—அல்லது அவரோ; குண:—பெளதிக குணம்; கர்ம—பலன் நோக்குக் கருமம்; ந—இல்லை; ஸத்—தோற்றம்; ந—அதுவுமில்லை; ச—கூட; அஸத்—தோற்றமற்றது; நிஷேத—நேதி நேதி (“இதல்ல, இதல்ல”) என்று வித்தியாசம் காண்பதன்; சேஷ:—அவரே முடிவாவார்; ஜயதாத்—அவருக்கு சர்வ மங்களம் உண்டாக்கட்டும்; அசேஷ—எல்லையற்றவரான.

முழுமுதற் கடவுள் அவரது அற்பமான பின்னப்பகுதிகளாகிய ஜீவ தத்துவத்தைப் படைக்கிறார் பிரம்மதேவர் முதற்கொண்டு, தேவர்கள், மற்றும் வேத அறிவின் விரிவுகள் (ஸாம, ரிக், யஜுர் மற்றும் அதர்வ), வெவ்வேறு பெயர்கள் மற்றும் தனிப்பட்ட குணங்கள் ஆகியவற்றுடன் கூடிய அசைவன, அசையாதன ஆகிய மற்றெல்லா ஜீவராசிகளையும் அவர் படைக்கிறார். ஒரு தீயின் பொறிகள் அல்லது சூரியனின் பிரகாசமான கதிர்கள் அவற்றின் பிறப்பிடத்திலிருந்து வெளிப்பட்டு பின் மீண்டும் மீண்டும் அதற்குள்ளேயே கலந்துவிடுகின்றன. அதைப்போலவே, மனம், புத்தி, புலன்கள், சூட்சுமமான ஜட உடல்கள், வெவ்வேறு இயற்கைக் குணங்களின் தொடர்ந்த உருமாற்றங்கள் ஆகிய அனைத்தும் பகவானிடமிருந்து வெளியாகி மீண்டும் அவருக்குள்ளேயே கலந்துவிடுகின்றன. அவர் தேவருமல்ல, அசுரனுமல்ல, மனிதனுமல்ல, பறவையோ அல்லது மிருகமும் அல்ல. அவர் பெண்ணோ, ஆணோ அல்லது ஆண் பெண் என்று பகுக்க முடியாதவரோ அல்ல. அவர் ஒரு மிருகமும் அல்ல. அவர் ஒரு பௌதிக குணமோ, ஒரு பலன் நோக்குக் கருமமோ, தோன்றுபவரோ அல்லது தோன்றாதவரோ அல்ல. அவர் “இதல்ல, இதல்ல” எனும் பகுத்தறிவின் கடைசிச் சொல்லாவார். அவர் எல்லையற்றவராவார். அந்த முழுமுதற் கடவுளுக்கு சர்வ மங்களம்!

பதம் 8.3.25
ஜிஜீவிஷே நாஹம் இஹாமுயா கிம்
அந்தர் பஹிஸ் சாவ்ருதயேப-யோன்யா
இச்சாமி காலேன ந யஸ்ய விப்லவஸ்
தஸ்யாத்ம-லோகாவரணஸ்ய மோக்ஷம்

ஜிஜீவிஷே—நீண்ட காலம் வாழ விரும்புகிறேன்; ந—இல்லை; அஹம்—நான்; இஹ—இப்பிறவியில்; அமுயா—அல்லது அடுத்த பிறவியில் (ஆபத்தான இந்நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டபின் தொடர்ந்து உயிர்வாழ நான் விரும்பவில்லை); கிம்—என்ன பயன்; அந்த:—உள்ளும்; பஹி:—புறமும்; ச—மேலும்; ஆவ்ருதயா—அறியாமையால் மறைக்கப்பட்ட; இபயோன்யா—இப்பிறவியில் ஒரு யானையாக; இச்சாமி—நான் விரும்புகிறேன்; காலேன—காலத்தினுடைய ஆதிக்கத்தின் காரணத்தால்; ந—அங்கு இல்லை; யஸ்ய—எதிலிருந்து; விப்லவ:—அழிவு; தஸ்ய—அந்த; ஆத்ம-லோக-ஆவரணஸ்ய—தன்னுணர்வுத் திரையிலிருந்து; மோக்ஷம்—மோட்சம்.

நான் முதலையின் தாக்குதலிலிருந்து விடுவிக்கப்பட்டபின் தொடர்ந்து உயிர்வாழ விரும்பவில்லை. உள்ளும், புறமும் அறியாமையால் மறைக்கப்பட்டுள்ள ஒரு யானையின் உடலால் என்ன பயன்? நான் அறியாமைத் திரையிலிருந்து நித்தியமான மோட்சத்தை மட்டுமே விரும்புகிறேன். அத்திரை காலத்தின் ஆதிக்கத்தால் அழிக்கப்படுவதில்லை.

பதம் 8.3.26
ஸோ ‘ஹம் விஸ்வ-ஸ்ருஜம் விஸ்வம்
அவிஸ்வம் விஸ்வ-வேதஸம்
விஸ்வாத்மானம் அஜம் ப்ரஹ்ம
ப்ரணதோ ‘ஸ்மி பரம் பதம்

ஸ:—அந்த; அஹம்—ஜட வாழ்விலிருந்து விடுபட விரும்பும் நான்; விஸ்வ-ஸ்ருஜம்—இப்பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்தவருக்கு; விஸ்வம்—தாமே மொத்த பிரபஞ்ச தோற்றமாகவும் இருக்கும்; அவிஸ்வம்—அவர் பிரபஞ்ச தோற்றத்திற்கு மேற்பட்டவராக இருப்பினும்; விஸ்வ-வேதஸம்—இப்பிரபஞ்ச தோற்றத்தின் மூலப்பொருளாக அல்லது அதை அறிபவராக இருப்பவர்; விஸ்வ-ஆத்மானம்—பிரபஞ்ச ஆத்மா; அஜம்—பிறப்பற்றவரும், நித்தியமாக வாழ்பவரும்; ப்ரஹ்ம—பரமன்; ப்ரணத:-அஸ்மி—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; பரம்—உன்னதமானவரான; பதம்—புகலிடம்.

இப்பொழுது ஜட வாழ்விலிருந்து முழுமையாக விடுபட விருப்பங்கொண்டு, எனது பணிவான வணக்கங்களை நான் அந்த பரம புருஷருக்குச் சமர்ப்பிக்கிறேன். அவரே பிரபஞ்சத்தைப் படைத்தவரும், பிரபஞ்ச ரூபமாக இருப்பவரும், அதேசமயம் இப்பிரபஞ்ச தோற்றத்திற்கு மேற்பட்டவராக இருப்பவருமாவார். அவரே இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நன்கு அறிந்தவராகவும், பிரபஞ்சத்தின் பரமாத்மாவாகவும் இருக்கின்றார். அவர் பிறப்பற்றவரும், உன்னத நிலையிலுள்ள இறைவனுமாவார். எனது பணிவான வணக்கங்களை நான் அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.3.27
யோக-ரந்தித-கர்மாணோ ஹ்ருதி யோக-விபாவிதே
யோகினோ யம் ப்ரபஸ்யந்தி யோககேசம் தம் நதோ ‘ஸ்மி அஹம்

யோக-ரந்தித-கர்மாண:—பக்தி யோகத்தினால் தங்களது கருமங்களின் விளைவுகளை எரித்துவிட்டவர்கள்; ஹ்ருதி—இதய மத்தியில்; யோக-விபாவிதே—முற்றிலும் தூய்மையடைந்து; யோகின:—தகுதி படைத்த யோகிகள்; யம்—அந்த முழுமுதற் கடவுளுக்கு; ப்ரபஸ்யந்தி—நேரடியாகக் காணும்; யோக-ஈசம்—எல்லா யோகங்களுக்கும் எஜமானராகிய அந்த முழுமுதற் கடவுளுக்கு; தத்—அவருக்கு; நத:-அஸ்மி—வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்; அஹம்—நான்.

பரமாத்மாவும், எல்லா யோக சித்திகளுக்கும் எஜமானரும், பக்தியோகத்தைப் பயில்வதனால், பலன் நோக்குக் கருமங்களின் விளைவுகளிலிருந்து பூரணமான தூய்மையையும், விடுதலையையும் பெறும் பொழுது, பக்குவமடைந்த யோகிகளால் இதய மத்தியில் காணப்படுபவருமான அந்த பரமனுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன்.

பதம் 8.3.28
நமோ நமஸ் துப்யம் அஸஹ்ய-வேக
சக்தி-த்ரயாயாகில-தீ-குணாய
ப்ரபன்ன-பாலாய துரந்த-சக்தயே
கத்-இந்ரியாணாம் அனவாப்ய-வர்த்மனே

நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; நம:—மீண்டும் எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; துப்யம்—தங்களுக்கு; அஸஹ்ய—எதிர்க்க முடியாத; வேக—சக்திகள்; சக்தி-த்ரயாய—மூன்றுவித சக்திகளைக் கொண்டவரான பரமபுருஷருக்கு; அகில—பிரபஞ்சத்தின்; தீ—புத்திக்கு; குணாய—புலனின்பப் பொருட்களாகத் தோன்றும்; ப்ரபன்ன-பாலாய—தஞ்சம் அடைந்தவர்களுக்குப் புகலிடம் அளிப்பவரான பரமனிடம்; துரந்த-சக்தயே—வெல்லுதற்கரிய சக்திகளைக் கொண்டிருப்பவரான; கத்-இந்ரியாணாம்—தங்களது புலன்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களால்; அனவாப்ய—அடையப்பட முடியாத; வர்த்மனே—வழியில்.

எம்பெருமானே, நீரே மூவகைச் சக்திகளிலுள்ள எதிர்க்கப்பட முடியாத வலிமையின் ஆளுனராக இருக்கிறீர். எல்லாப் புலன் இன்பத்திற்கும் நீரே ஊற்றாகக் காணப்படுகிறீர். தஞ்சமடைந்த ஆத்மாக்களைக் காப்பவரும் நீரே. நீர் எல்லையற்ற சக்தியைப் பெற்றிருக்கிறீர். ஆனால் தங்களுடைய புலன்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களால் நீர் அணுகப்பட முடியாதவராக இருக்கிறீர். மேன்மேலும் எனது பணிவான வணக்கங்களை நான் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.3.29
நாயம் வேத ஸ்வம் ஆத்மானம் யச்-சக்த்யாஹம்-தியா ஹதம்
தம் துரத்யய-மாஹாத்மியம் பகவந்தம் இதோ ‘ஸ்மி அஹம்

ந—இல்லை; அயம்—பொதுவாக மக்கள்; வேத—அறிகின்றனர்; ஸ்வம்—சுய; ஆத்மானம்—அடையாளத்தை; யத்-சக்த்யா—யாருடைய ஆதிக்கத்தால்; அஹம்—நான் சுதந்திரமானவன்; தியா—இந்த அறிவால்; ஹதம்—தோற்கடிக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட; தம்—அவருக்கு; துரத்யய—அறிவது கடினமோ; மஹாத்மியம்—யாருடைய பெருமைகள்; பகவந்தம்—முழுமுதற் கடவுளின்; இத:—புகலிடம் கொள்ளும்; அஸ்மி அஹம்—நான் இருக்கிறேன்.

யாருடைய மாயா சக்தியால், பகவானின் பின்னப்பகுதியான ஜீவன், தேகாபிமானத்தின் வசப்பட்டு தனது உண்மையான அடையாளத்தை மறந்துவிடுகின்றானோ, அந்த முழுமுதற் கடவுளுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். யாருடைய பெருமைகளைப் புரிந்து கொள்வது கடினமானதோ, அந்த முழுமுதற் கடவுளிடம் நான் தஞ்சமடைகிறேன்.

பதம் 8.3.30
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் கஜேந்ரம் உபவர்ணித-நிர்விசேஷம்
ப்ரஹ்மாதயோ விவித-லிங்க பிதாபிமானா:
நைதே யதோபஸஸ்ருபுர் நிகிலாத்மகத்வாத்
தத்ராகிலாமர-மயோ ஹரிர் ஆவிராஸீத்

ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்விதமாக; கஜேந்ரம்—யானைகளின் அரசனான கஜேந்திரனுக்கு; உபவர்ணித—யாருடைய வர்ணனை; நிர்விசேஷம்—எந்த ஒரு குறிப்பிட்ட நபரிடமும் பிரார்த்திக்கவில்லை (ஆனால் பரமன் யாரென்பதை அது அறியவில்லை என்றாலும், அவரிடமே அது பிரார்த்தனை செய்தது); ப்ரஹ்மா-ஆதய:—பிரம்மா, சிவன், இந்திரன், சந்திரன் முதலான தேவர்கள்; விவித—பல வகைப்பட்ட; லிங்க-பிதா—தனிப்பட்ட ரூபங்களுடன்; அபிமானா:—தங்களை தனிப்பட்ட அதிகாரிகளாகக் கருதி; ந—இல்லை; ஏதே—அவர்களனைவரும்; யதா—அச்சமயம்; உபஸஸ்ருபு:—அணுகினர்; நிகில-ஆத்மகத்வாத்—முழுமுதற் கடவுள் எல்லோரும் பரமாத்மாவாக இருப்பதால்; தத்ர—அங்கு; அகில—பிரபஞ்சத்தின்; அமர-மய:—(உடலின் புறஉறுப்புக்களாக மட்டுமே இருப்பவர்களான) தேவர்களை உள்ளடக்கிய; ஹரி:—அனைத்தையும் பறித்துக் கொள்ளக் கூடியவரான முழுமுதற் கடவுளை; ஆவிராஸீத்—(யானையின் முன்) தோன்றினார்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: யானையின் அரசன் பரம அதிகாரியை விவரிக்கும்போது, எந்தவொரு தனிப்பட்ட நபரையோ அல்லது பிரம்மதேவர், சிவபெருமான், இந்திரன், சந்திரன் முதலான தேவர்களையோ உதவிக்கு அழைக்கவில்லை. இவ்வாறாக அவர்களில் ஒருவரும் உதவிக்கு வரவில்லை. இருந்தாலும், பகவான் ஸ்ரீ ஹரி பரமாத்மாவாகவும், முழுமுதற் கடவுளாகிய புருஷோத்தமராகவும் இருப்பதால், அவரே கஜேந்திரனின் முன் தோன்றினார்.

பதம் 8.3.31
தம் தத்வத் ஆர்த்தம் உபலப்ய ஜகன்-நிவாஸ:
ஸ்தோத்ரம் நிசம்ய திவிஜை: ஸஹ ஸம்ஸதுவத்பி:
சந்தோமயேன கருடேண ஸமுஹ்யமானஸ்
சக்ராயுதோ ‘ப்யகமத் ஆக யதோ கஜேந்ர:

தம்—அதனிடம் (கஜேந்திரன்); தத்வத்—அவ்வாறு; ஆர்தம்—(முதலையால் தாக்கப்பட்டு) மிகவும் பலவீனம் அடைந்திருந்த; உபலப்ய—புரிந்து கொண்டு; ஜகத்-நிவாஸ:—எங்கும் பரவியுள்ள பகவான்; ஸ்தோத்ரம்—பிரார்த்தனையை; நிசம்ய—கேட்டு; திவிஜை:—சுவர்க்கலோகவாசிகள்; ஸஹ—உடன்; ஸம்ஸ்துவத்பி:—தங்களது பிரார்த்தனைகளைச் செய்து கொண்டிருந்த அவர்களும்; சந்தோமயேன—அவர் விரும்பிய வேகத்துடன்; கருடேன—கருடனால்; ஸமுஹ்யமான:—தூக்கிச் செல்லப்பட்டு; சக்ர—அவரது சக்கரத்தை ஏந்தியவாறு; ஆயுத:—மற்றும் கதையைப் போன்ற மற்ற ஆயுதங்களையும்; அப்யகமத்—வந்து சேர்ந்தார்; ஆக—உடனடியாக; யத:—எங்கு; கஜேந்ர:—யானைகளின் அரசனான கஜேந்திரன் இருந்ததோ அங்கு.

இவ்வாறு பிரார்த்தனை செய்த கஜேந்திரனின் நிராதரவான நிலையை அறிந்ததும், எங்கும் இருப்பவராகிய ஹரி, அல்லது முழுமுதற் கடவுள், தம்மைத் துதி செய்து கொண்டிருந்த தேவர்களுடன் அங்கு தோன்றினார். சக்கரத்தையும், பிற ஆயுதங்களையும் ஏந்தியவராய், தமது கருட வாகனத்தின் மேலமர்ந்து, அவரது விருப்பத்திற்கிணங்க வெகுவிரைவாக கஜேந்திரனின் முன் அவர் தோன்றினார்.

பதம் 8.3.32
ஸோ ‘ன்த-ஸரஸி உருபலேன க்ருஹீத ஆர்த்தோ
த்ருஷ்ட்வா கருத்மதி ஹரிம் க உபாத்த-சக்ரம்
உத்க்ஷிப்ய ஸாம்புஜ-கரம் கிரம் ஆஹ க்ருச்ரான்
நாராயணாகில-குரோ பகவன் நமஸ் தே

ஸ:—அது (கஜேந்திரன்); அந்த: ஸரஸி—நீரில்; உரு-பலேன—பெரும் பலத்துடன்; க்ருஹீத:—முதலையால் கெளவிக் கொள்ளப்பட்டிருந்த; ஆர்த:—மேலும் மிகவும் துன்புற்ற; த்ருஷ்ட்வா—கண்டதும்; கருத்மதி—கருடனின் மீது; ஹரிம்—பகவான்; கே—ஆகாயத்தில்; உபாத்த-சக்ரம்—அவரது சக்கரத்தைச் செலுத்தினார்; உத்க்ஷிப்ய—உயர்த்தி; ஸ-அம்புஜ-கரம்—தாமரைப் பூவுடன் கூடிய அதன் தும்பிக்கையை; கிரம் ஆஹ—வார்த்தைகளை உச்சரித்து; க்ருச்ராத்—(அதன் ஆபத்தான நிலையின் காரணத்தால்) மிகுந்த சிரமத்துடன்; நாராயண—எம்பெருமானே, நாராயணா; அகில-குரோ—அகிலத்தின் இறைவனே; பகவன்—பரமபுருஷ பகவானே; நம: தே—எனது பணிவான வணக்கங்களை நான் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கஜேந்திரன் முதலையால் நீரினுள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டு, கடும் வேதனையடைந்தது. ஆனால் தமது சக்கரத்தை ஏந்தியவாறு, நாராயணர் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும், உடனே அது ஒரு தாமரைப் பூவைத் தனது தும்பிக்கையால் பற்றியெடுத்து, வேதனையான சூழ்நிலையின் காரணத்தால் பெருங் கஷ்டத்துடன், பின்வரும் வார்த்தைகளை அது உச்சரித்தது: “எம்பெருமானே, நாராயணா, அகிலத்தின் எஜமானரே, பரமபுருஷ பகவானே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.”

பதம் 8.3.33
தம் வீக்ஷ்ய பீடிதம் அஜ: ஸஹஸாவதீர்ய
ஸ-க்ராஹம் ஆசு ஸரஸ: க்ருபயோஜ்ஜஹார
க்ராஹாத் விபாடித முகாத் அரிணா கஜேந்ரம்
ஸம்பஸ்யதாம் ஹரிர் அமூம் உசத் உச்ரியாணாம்

தம்—அதை (கஜேந்திரனை); வீக்ஷ்ய—(அந்நிலையில்) கண்டபின்; பீடிதம்—பெருந்துன்பத்திற்கு ஆளான; அஜ:—பிறப்பற்றவரான, முழுமுதற் கடவுள்; ஸஹஸா—திடீரென்று; அவதீர்ய—(கருடனின் மேலிருந்து) கீழே இறங்கி; ஸ-க்ராஹம்—முதலையுடன்; ஆசு—உடனடியாக; ஸரஸ:—நீரிலிருந்து; க்ருபயா—தனிப்பெருங் கருணையால்; உஜ்ஜஹார—வெளியேற்றினர்; க்ராஹாத்—முதலையிடமிருந்து; விபாடித—துண்டித்தார்; முகாத்—வாயிலிருந்து; அரிணா—சக்கரத்தால்; கஜேந்ரம்—கஜேந்திரனை; ஸம்பஸ்யதாம்—பார்த்துக் கொண்டிருந்த; ஹரி:—முழுமுதற் கடவுள்; அமூம்—அதை (கஜேந்திரனை); உசத்—காப்பாற்றினார்; உச்ரியாணாம்—அனைத்து தேவர்களுக்கும் முன்பாக.

அதன்பிறகு, அத்தகைய ஒரு துன்பமான நிலையில் கஜேந்திரனைக் கண்டு, பிறப்பற்றவரும், முழுமுதற் கடவுளுமாகிய ஸ்ரீ ஹரி, அவரது தனிப்பெருங் கருணையால் உடனடியாக கருடனின் மேலிருந்து கீழே இறங்கினார். பிறகு யானைகளின் அரசனை முதலையுடன் சேர்த்து நீரிலிருந்து வெளியே இழுத்தார். அதன்பிறகு, அக்காட்சியைக் கண்டு கொண்டிருந்த தேவர்களின் முன்னிலையில், அவர் தமது சக்கரத்தால் முதலையின் வாயை அதன் உடலிலிருந்து துண்டித்து யானைகளின் அரசனான கஜேந்திரனைக் காப்பாற்றினார்.


ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “கஜேந்திரனின் சரணாகதி பிரார்த்தனை” எனும் தலைப்பை கொண்ட மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare