அத்தியாயம் – 2
கஜேந்திரனின் ஆபத்தான நிலை
பதம் 8.2.1
ஸ்ரீ-சுக உவாச
ஆஸீத் கிரிவரோ ராஜம்ஸ் த்ரிகூட இதி விஸ்ருத:
க்ஷீரோதேனாவ்ருத: ஸ்ரீமான் யோஜனாயுதம் உச்ரித:

ஸ்ரீ-சுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஆஸீத்—அங்கு இருந்தது; கிரிவர:—மிகப் பெரிய மலை ஒன்று; ராஜன்—ராஜனே; த்ரி கூட:—திரிகூடம்; இதி—இவ்வாறாக; விஸ்ருத:—புகழ்பெற்ற; க்ஷீர-உதேன—பாற்கடலால்; ஆவ்ருத:—சூழப்பட்ட; ஸ்ரீமான்—மிகவும் அழகிய; யோஜன—எட்டு மைல்கள் கொண்ட ஓர் அளவு; ஆயுதம்—பத்தாயிரம்; உச்ரித:—மிகவும் உயரமான.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: எனக்குப் பிரியமான ராஜனே, திரிகூடம் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய மலை ஒன்றுள்ளது. அது பத்தாயிரம் யோஜனங்கள் (எண்பதாயிரம் மைல்கள்) உயரம் கொண்டதாகும். பாற்கடலால் சூழப்பட்டு இருந்ததால், அது மிகவும் அழகாக அமைந்திருந்தது.

பதங்கள் 8.2.2 – 8.2.3
தாவதா விஸ்த்ருத: பர்யக் த்ரிபி: ஸ்ருங்கை: பயோ-நிதிம்
திச: கம் ரோசயன் ஆஸ்தே ரௌப்யாயஸ்-ஹிரண்மயை:

அன்யைஸ் ச ககுப: ஸர்வா ரத்ன-தாது-விசித்ரிதை:
நானா-த்ரும-லதா-குல்மைர் நிர்கோஷைர் நிர்ஜராம்பஸாம்

தாவதா—இவ்வாறாக; விஸ்த்ருத:—நீளமும், அகலமும் (எண்பதாயிரம் மைல்கள்); பர்யக்—சுற்றிலும்; த்ரிபி:—மூன்றுடன்; ஸ்ருங்கை:—சிகரங்கள்; பய:-நிதிம்—பாற்கடலிலுள்ள ஒரு மலைமீது அமைந்துள்ளது; திச:— எல்லாத் திசைகளும்; கம்—ஆகாயம்; ரோசயன்—இன்பமூட்டும்; ஆஸ்தே—நிற்கின்ற; ரௌப்ய—வெள்ளியாலான; அயஸ—இரும்பு: ஹிரண்மயை:—மற்றும் தங்கம்; அன்யை:—மற்ற சிகரங்களுடன்; ச—மேலும்; ககுப:—திசைகள்; ஸர்வா—எல்லா; ரத்ன—இரத்தினங்களுடன்; தாது—மற்றும் உலோகங்களும்; விசித்ரிதை:—மிகவும் நன்றாக அலங்கரிக்கப்பட்ட; நானா—விதமான; த்ரும லதா—மரங்களும், செடிகளும்; குல்மை:—மற்றும் புதர்ச் செடிகளும்; நிர்கோஷை:—ஆகிய ஓசைகளுடன்; நிர்ஜர—நீர்வீழ்ச்சிகள்; அம்பஸாம்—நீரின்.

மலையின் நீளமும், அகலமும் ஒரே அளவு கொண்டவையாகும் (எண்பதாயிரம் மைல்கள்). இரும்பு, வெள்ளி மற்றும் தங்கம் ஆகியவற்றாலான அவற்றின் மூன்று முக்கியமான சிகரங்கள் எல்லாத் திசைகளையும், ஆகாயத்தையும் அழகுபடுத்தின. மலையில் மற்ற சிகரங்களும் உள்ளன. அவை இரத்தினங்களாலும், உலோகங்களாலும் நிரப்பப்பட்டு இருப்பதுடன், அழகிய மரங்களாலும், கொடிகளாலும் மற்றும் புதர்ச் செடிகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. மலைமீதுள்ள நீர்வீழ்ச்சிகள் இன்பமூட்டும் ஓசைகளை எழுப்புகின்றன. இவ்வாறாக அந்த மலை, அனைத்து திசைகளின் அழகையும் அதிகரிக்கின்றது.

பதம் 8.2.4
ஸ சாவநிஜ்யமானாங்ரி: ஸமந்தாத் பய-ஊர்மிபி:
கரோதி ஸ்யாமலாம் பூமிம் ஹரின்-மரகதாஸ்மபி:

ஸ:—அம்மலை; ச—மேலும்; அவநிஜ்யமான-அங்ரி:—அதன் அடிவாரம் எப்பொழுதும் கழுவப்படுகிறது; ஸமந்தாத்—சுற்றிலும்; பய:-ஊர்மிபி:—பாலலைகளால்; கரோதி—செய்கிறது; ஸ்யாமலாம்—கரும்பச்சை; பூமிம்—பூமி; ஹரித்—பச்சை; மரகத—மரகதங்களுடன் (பச்சைக்கல்); அஸ்மபி:—கற்கள்.

மலை அடிவாரத்திலுள்ள பூமி பாலலைகளால் எப்பொழுதும் கழுவப்படுகிறது. இது எட்டு திசைகளிலும் (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் அவற்றிற்கு இடையிலுள்ள திசைகள்) மலையைச் சுற்றிலும் மரகதக் கற்களை உற்பத்தி செய்கிறது.

பதம் 8.2.5
ஸித்த-சாரண-கந்தர்வைர் வித்யாதர-மஹோரகை:
கின்னரைர் அப்ஸராபிஸ் ச க்ரீடத்பிர் ஜுஷ்ட-கந்தர:

ஸித்த—சித்தலோக வாசிகளால்; சாரண—சாரணலோக வாசிகள்; கந்தர்வை:—கந்தர்வலோக வாசிகள்; வித்யாதர—வித்யாதரலோக வாசிகள்; மஹா-உரகை:—சர்ப்பலோக வாசிகள்; கின்னரை:—கின்னரர்கள்; அப்ஸரோபி:—அப்ஸரர்கள்; ச—மேலும்; க்ரீடத்பி:—கேளிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்; ஜுஷ்ட—அனுபவித்தனர்; சுந்தர:—குகைகள்.

உயர் கிரகங்களின் வாசிகளான சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சர்ப்பங்கள், கின்னரர்கள் மற்றும் அப்ஸரர்கள் கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக அம்மலைக்குச் செல்கின்றனர். இவ்வாறாக மலைக் குகைகள் அனைத்தும் சுவர்க்கலோக வாசிகளால் நிரப்பப்பட்டுள்ளன.

பதம் 8.2.6
யத்ர ஸங்கீத-ஸன்னாதைர் நதத்-குஹம் அமர்ஷயா
அபிகர்ஜந்தி ஹரய: ஸ்லாகின: பர-சங்கயா

யத்ர—அம்மலையில் (திரிகூடம்); ஸங்கீத—சங்கீதத்தின்; ஸன்னாதை:—வாத்தியங்களுடன்; நதத்—எதிரொலிக்கும்; குஹம்—குகைகள்; அமர்ஷயா—சகிக்க முடியாத கோபத்தால் அல்லது பகையால்; அபிகர்ஜந்தி—கர்ஜனை செய்கின்றன; ஹரய:—சிங்கங்கள்; ஸ்லாகின:—தங்களது பலத்தில் மிகவும் கர்வம் கொண்டு; பர-சங்கயா—மற்றொரு சிங்கமோவென்று சந்தேகித்து.

குகைகளில் பாடிக்கொண்டிருக்கும் சுவர்க்க வாசிகளின் எதிரொலிக்கும் வாத்தியங்களால், அங்குள்ள சிங்கங்கள், மற்றொரு சிங்கம் தான் அவ்வாறு கர்ஜிக்கிறது என்றெண்ணின. தங்களுடைய பலத்தில் மிகவும் கர்வம் கொண்டிருந்ததால், அவை சகிக்க முடியாத பகையுடன் கர்ஜனை செய்தன.

பதம் 8.2.7
நானாரண்ய-பசு-வ்ராத-ஸங்குல-த்ரோணி-அலங்க்ருத:
சித்ர-த்ரும-ஸுரோத்யான-கலகண்ட-விஹங்கம:

நானா—பல வகைகளுடன்; அரண்ய-பசு—காட்டு மிருகங்கள்; வ்ராத—அதிக எண்ணிக்கைக் கொண்ட; ஸங்குல—நிரப்பப்பட்டு; த்ரோணி—பள்ளத்தாக்குகளுடன்; அலங்க்ருத:—மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட; சித்ர—பல வகையான; த்ரும—மரங்கள்; ஸுர-உத்யான—தேவர்களால் பராமரிக்கப்படும் தோட்டங்களில்; கலகண்ட—இனிமையாகக் கீச்சிடும்; விஹங்கம:—பறவைகள்.

திரிகூட மலை அடிவாரத்திலுள்ள பள்ளத்தாக்குகள் பலவகைப்பட்ட வனவிலங்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன மேலும் தேவர்களால் பராமரிக்கப்படும் தோட்டங்களில் உள்ள மரங்களில் பலவகையான பறவைகள் இனிய குரல்களுடன் கீச்சிடுகின்றன.

பதம் 8.2.8
ஸரித்-ஸரோபிர் அச்சோதை: புலினைர் மணி-வாலுகை:
தேவ-ஸ்த்ரீ-மஜ்ஜனாமோத சௌரபாம்பு-அனிலைர் யுத:

ஸரித்—நதிகளுடன்; ஸரோபி:—மற்றும் ஏரிகள்; அச்சோதை:—பளிங்கு போன்ற தெளிந்த நீரால் நிரப்பப்பட்டுள்ள; புலினை:—ஏரிக்கரைகள்; மணி—சிறிய இரத்தினங்களுடன்; வாலுகை:—நுண் மணல்களை ஒத்திருக்கும்; தேவ-ஸத்ரீ—தேவ மங்கையர்களின்; மஜ்ஜன—குளிப்பதன் மூலமாய் (அந்த நீரில்); ஆமோத—உடலின் நறுமணம்; சௌரப—மிகவும் வாசனையான; அம்பு—நீரால்; அனிலை:—மற்றும் காற்றால்; யுத:—அழகுபடுத்தப்பட்ட (திரிகூட மலையின் சுற்றுப்புறம்).

திரிகூட மலையில் பல ஏரிகளும், நதிகளும் உள்ளன. இவற்றின் கரைகள் நுண்மணல்களை ஒத்த சிறு இரத்தினங்களால் மூடப்பட்டு உள்ளன. அவை பளிங்கு போன்ற தெளிந்த நீர் கொண்டவையாகும். மேலும் தேவ மங்கைகள் அதில் நீராடும்பொழுது, அவர்களுடைய உடல்களின் நறுமணம் நீரையும், தென்றல்காற்றையும் வாசனைப்படுத்துகின்றது. இவ்வாறாக சுற்றுப்புறம் அழகுபடுத்தப்படுகின்றது.

பதங்கள் 8.2.9 – 8.2.13
தஸ்ய த்ரோண்யாம் பகவதோ வருணஸ்ய மஹாத்மன:
உத்யானம் ருதுமன் நாம ஆக்ரீடம் ஸுர-யோஷிதாம்

ஸர்வதோ ‘லங்க்ருதம் திவ்யைர்-நித்ய-புஷ்ப-ஃபல-த்ருமை:
மந்தாரை: பாரிஜாதைஸ் ச பாடலா-சோக-சம்பகை:

சூதை: பியாலை: பனஸைர் ஆம்ரைர் ஆம்ராதகைர் அபி
க்ரமுகைர் நாரிகேலைஸ் ச கர்ஜூரைர் பீஜபூரகை:

மதுகை: சால-தலைஸ் ச தாமலைர் அஸனார்ஜுநை:
அரிஷ்டோடும்பர ப்லக்ஷைர் வடை: கிம்சுக-சந்தநை:

பிசுமர்தை: கோவிதாரை: ஸரலை: ஸுர-தாருபி:
த்ராக்ஷே க்ஷு ரம்பா-ஜம்புபிர் பதரி-அக்ஷாபயாமலை:

தஸ்ய—அம்மலையின் (திரிகூடம்); த்ரோண்யாம்—ஒரு பள்ளத்தாக்கில்; பகவத:—மகா புருஷரின்; வருணஸ்ய—வருண தேவன்; மஹா-ஆத்மன:—பகவானின் மிகச்சிறந்த பக்தரான; உத்யானம்—ஒரு தோட்டம்; ருதுமத்—ருதுமத்; நாம—எனும் பெயருடைய; ஆக்ரீடம்—உல்லாசமான பொழுதுபோக்குகளுக்குரிய ஓரிடம்; ஸுர-யோஷிதாம்—தேவ மங்கையர்களின்; ஸர்வத—எல்லா இடங்களிலும்; அலங்க்ருதம்—அழகாக அலங்கரிக்கப்பட்ட; திவ்யை:—தேவர்கள் சம்பந்தமான; நித்ய—எப்பொழுதும்; புஷ்ப—புஷ்பங்களின்; பல—மற்றும் பழங்கள்; த்ருமை:—மரங்களால்; மந்தாரைச:—மந்தார; பாரிஜாதை:—பாரிஜாத; ச—மேலும்; பாடல—பாடல; அசோக—அசோக; சம்பகை:—சம்பக; சூதை:—சூத பழங்கள்; பியாலை:—பியால பழங்கள்; பனஸை:—பனஸ பழங்கள்; ஆம்ரை:—மாம்பழங்கள்; ஆம்ராதகை:—ஆத்ராதக எனப்படும் புளிப்பான பழங்கள்; அபி—தவிரவும்; க்ரமுகை—க்ரமுக பழங்கள்; நாரிகேலை:—தென்னை மரங்கள்; ச—மேலும்; கர்ஜூரை:—ஈச்ச மரங்கள்; பீஜபூரகை:—மாதுளம் பழங்கள்; மதுகை:—மதுக பழங்கள்; சால-தாலை:—பனை மரங்களின் பழங்கள்; ச—மேலும்; தமாலை:—தமால மரங்கள்; அஸன—அஸன மரங்கள்; அர்ஜுனை:—அர்ஜுன மரங்கள்; அரிஷ்ட—அரிஷ்ட பழங்கள்; உடும்பர—பெரிய உடும்பர மரங்கள்; ப்லக்ஷை:—பிலக்ஷ மரங்கள்; வடை:—ஆலமரங்கள்; கிம்சுக—வாசனையற்ற சிகப்பு மலர்கள்; சந்தனை:—சந்தன மரங்கள்; பிசுமர்தை:—பிசுமர்த மலர்கள்; கோவிதாரை:—கோவிதார பழங்கள்; ஸரலை:—ஸரல மரங்கள்; ஸுர-தாருபி:—ஸுர-தாரு மரங்கள்; த்ராக்ஷா—திராட்சைப் பழங்கள்; இக்ஷு:—கரும்பு; ரம்பா—வாழைப் பழங்கள்: ஜம்புபி:—நாவல்பழங்கள்; பதரீ—பதரீ பழங்கள்; அக்ஷ—அக்ஷ பழங்கள்; அபய—அபய பழங்கள்; ஆமலை:—ஆமலகீ எனும் ஒருவகை புளிப்பு பழம்.

திரிகூட மலையின் ஒரு பள்ளத்தாக்கில் ருதுமத் என்று அழைக்கப்படும் ஒரு தோட்டம் இருந்தது. அத்தோட்டம் மிகச்சிறந்த பக்தரான வருணனுக்குச் சொந்தமானதாகவும், தேவ மங்கையர்களின் உல்லாசமான பொழுது போக்குக்குரிய ஓரிடமாகவும் இருந்தது. மலர்களும், பழங்களும் எல்லாப் பருவ காலங்களிலும் அங்கு விளைந்தன. அவற்றுக்கிடையில் மந்தாரங்கள், பாரிஜாதங்கள், பாடலங்கள், அசோகங்கள், சம்பகங்கள், சூதங்கள், பியாலங்கள், பனசங்கள், மாம்பழங்கள், ஆம்ராதகம், கிரமுகம், தென்னை, பேரீச்சம் மற்றும் மாதுளம் ஆகிய மரங்களும் இருந்தன. மேலும் பனை மதுக, பனை தமால, அஸன, அர்ஜுன, அரிஷ்ட, உடும்பர, பலக்ஷ, ஆல, கிம்சுக மற்றும் சந்தன மரங்களும் இருந்தன. மேலும் பிசுமர்தங்களும், கோவிதாரங்களும், ஸரலங்களும், மற்றும் ஸுர-தாருகள், திராட்சைகள், கரும்பு, வாழைப்பழங்கள், நாவல், பதரீக்கள், அக்ஷங்கள், அபயங்கள் மற்றும் ஆமலகீகளும் கூட அங்கு இருந்தன.

பதங்கள் 8.2.14 – 8.2.19
பில்வை: கபித்தைர் ஜம்பீரைர் வ்ருதோ பல்லாதகாதிபி:
தஸ்மின் ஸர: ஸு விபுலம்-லஸத்-காஞ்சன-பங்கஜம்

குமுதோத்பல-கஹ்லார-சதபத்ர-ஸ்ரியோர்ஜிதம்
மத்த-ஷட்-பத-நிர்குஷ்டம் சகுந்தைஸ் ச கல-ஸ்வனை:

ஹம்ஸ-காரண்டவாகீர்ணம் சக்ராஹ்வை: ஸாரஸைர் அபி
ஜலகுக்குட-கோயஷ்டி-தாத்யூஹ-குல-கூஜிதம்

மத்ஸ்ய-கச்சப-ஸஞ்சார-சலத்-பத்ம-ரஜ:-பய:
கதம்ப-வேதஸ-நல-நீப-வஞ்சுலகைர் வ்ருதம்

குண்டை: குருபகாசோகை: சிரீஷை: கூடஜேங்குடை:
குப்ஜகை: ஸ்வர்ண-யூதீபிர் நாக-புன்னாக-ஜாதிபி:

மல்லிகா-சதபத்ரைஸ் ச மாதவீ-ஜலகாதிபி:
சோபிதம் தீர-ஜைஸ் சான்யைர் நித்யர்துபிர் அலம் த்ருமை:

பில்வை:—பில்வ மரங்கள்; கபித்தை:—கபித்த மரங்கள்; ஜம்பீரை:—ஜம்பீர மரங்கள்; வ்ருத:—சூழப்பட்டு; பல்லாதக—பல்லாதக மரங்களும் பிற மரங்களும்; தஸ்மின்—அத்தோட்டத்தில்; ஸர:—ஓர் ஏரி; ஸு-விபுலம்—மிகவும் பெரியதாக இருந்த; லஸத்—பிரகாசிக்கும்; காஞ்சன—பொன்னிறமான; பங்கஜம்—தாமரை மலர்களால் நிரப்பப்பட்ட; குமுத—குமுத மலர்களின்; உத்பல—உத்பல மலர்கள்; கஹ்லார—கஹ்லார மலர்கள்; சதபத்ர—மற்றும் சதபத்ர மலர்களும்; ஸ்ரியா—அழகுடன்; ஊர்ஜிதம்—தலைசிறந்த; மத்த—மதிமயக்கமடைந்த; ஷட்பத—தேனீக்கள், நிர்குஷ்டம்—ரீங்காரம் செய்தன; சகுந்தை:—பறவைகளின் கீச்சிடும் சப்தத்துடன்; ச—மேலும்; கல-ஸ்வனை:—அவற்றின் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இருந்தன; ஹம்ஸ—அன்னப்பறவைகள்; காரண்டவ:—காரண்டவங்கள்; ஆகீர்ணம்—கூட்டத்தால்; சக்ராஹ்வை:—சக்ராவகம்; ஸாரஸை:—கொக்குகள்; அபி—தவிரவும்; ஜல-குக்குட—நீர்க்கோழிகள்; கோயஷ்டி—கோயஷ்டிகள்; தாத்யூஹ—தாத்யுஹங்கள்; குல—பறவைக் கூட்டம்; கூஜிதம்—முணுமுணுத்தன; மத்ஸ்ய—மீனின்; கச்சப—மற்றும் ஆமைகளும்; ஸஞ்சார—அசைவுகளினால்; சலத்—சலனமடைச் செய்யும்; பத்ம—தாமரை மலர்களின்; ரஜ:—மகரந்தத் தூள்களால்; பய:—நீர் (அலங்கரிக்கப்பட்டு இருந்தது); கதம்ப—கதம்பங்கள்; வேதஸ—வேதஸங்கள்; நல—நலங்கள்; நீப—நீபங்கள்; வஞ்சுலகை:—வஞ்சுலகங்கள்; வ்ருதம்—அவற்றால் சூழப்பட்டு; குந்தை:—குந்தங்கள்; குருபக—குருபகங்கள்; அசோகை:—அசோகங்கள்; சிரீஷை:—சிரீஷங்கள்; கூடஜ—கூடஜங்கள்; இங்குதை—இங்குதங்கள்; குப்ஜகை:—குப்ஜகங்கள்; ஸ்வர்ண-யூதபி:—ஸர்வண யூதீக்கள்; நாக—நாகங்கள்; புன்னாக—புன்னாகங்கள்; ஜாதிபி:—ஜாதீக்கள்; மல்லிகா—மல்லிகைகள்; சதபத்ரை—சதபத்ரங்கள்; ச—தவிரவும்; மாதவீ—மாதவீக்கள்; ஜால-காதிபி:—ஜாலகங்கள்; சோபிதம்—அலங்கரிக்கப்பட்ட; தீரஜை:—கரைகளில் வளரும்; ச—மேலும்; அன்யை:—மற்றவை; நித்ய-ருதுபி:—எல்லாப் பருவ காலங்களிலும்; அலம்—ஏராளமாக; த்ருமை:—(பூக்களையும், பழங்களையும் ஈனும்) மரங்களுடன்.

அத்தோட்டத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்தது. அது பிரகாசிக்கும் பொன்னிறமான தாமரை மலர்களாலும், மேலும் குமுதம், கஹ்லார, உத்பலம் மற்றும் சதபத்ரம் ஆகிய மலர்களாலும் நிரப்பப்பட்டதாக இருந்தது. இவையனைத்தும் மலைக்கு பெரும் அழகைச் சேர்த்தன. அங்கு பில்வ, கபித்த, ஜம்பீர மற்றும் பல்லாதக மரங்களும்கூட இருந்தன. மதிமயங்கிக் கிடந்த தேனீக்கள் தேனை அருந்தி ரீங்காரம் செய்தன. இவற்றுடன் சேர்ந்து பறவைகளும் கீச்சிட்டன. இப்பறவைகளின் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தன. அந்த ஏரி அன்னப்பறவைகள், காரண்டவ கொக்கு, சக்ராவாக பறவைகள், மேலும் நீர்க் கோழிகள், தாத்யூஹங்கள், கோயஷ்டிகள் மற்றும் பிற முணுமுணுக்கும் பறவைக் கூட்டங்களாலும் நிரப்பப்பட்டு இருந்தது. மீன்கள் மற்றும் ஆமைகளின் கிளர்ச்சியடையச் செய்யும் அசைவுகளால், நீர் தாமரை மலர்களிலிருந்து உதிர்ந்த மகரந்தத் தூள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏரி கதம்ப மலர்கள், வேதஸ மலர்கள், மற்றும் நல, நீப, வஞ்சுலக, குந்த, குருபக, அசோக, சிரீஷ, கூடஜ, இங்குத, குப்ஜக, ஸ்வர்ண-யூதீ, நாக, புன்னாக, ஜாதீ, மல்லிகை, சதபத்ரம், ஜாலகா, மாதவீ-லதா ஆகிய மலர்களால் சூழப்பட்டு இருந்தது. ஏரிக்கரைகளும் கூட எல்லாப் பருவகாலங்களிலும் மலர்களையும், பழங்களையும் ஈனும் பலவகையான மரங்களால் மிகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறாக அந்த மலை முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

பதம் 8.2.20
தத்ரைகதா தத்-கிரி-கானனாஸ்ரய:
கரேணுபிர் வாரண-யூத-பஸ் சரன்
ஸகண்டகம் கீசக-வேணு-வேத்ரவத்
விசால-குல்மம் ப்ரருஜன் வனஸ்பதீன்

தத்ர—அவ்விடத்தில்; ஏகதா—முன்னொரு காலத்தில்; தத்-கிரி—அந்த மலையின் (திரிகூடம்); கானன-ஆஸ்ரய:—காட்டில் வசித்து வந்த; கரேணுபி:—பெண் யானைகளால் சூழப்பட்டவாறு; வாரண-யுத-ப:—யானைகளின் தலைவன்; சரன்—திரிந்து கொண்டிருக்கும் பொழுது (ஏரியை நோக்கியவாறு); ஸ-கண்டகம்—முட்கள் நிறைந்த ஓரிடம்; கிசக-வேணு-வேத்ர-வத்—வெவ்வேறு பெயர்களைக் கொண்ட தாவரங்களுடனும், கொடிகளுடனும்; விசாலகுல்மம்—பல புதர்கள்; ப்ரருஜன்—உடைத்தவாறு; வன:-பதீன்—மரங்களும், செடிகளும்.

திரிகூட மலையின் காடுகளில் வசித்து வந்த யானைகளின் தலைவன், அதன் பெண் யானைகளுடன் ஒருமுறை அந்த ஏரியை நோக்கியவாறு அலைந்து திரிந்தது. அது பல மரம், செடி, கொடிகள் மற்றும் புதர்கள் ஆகியவற்றின் முட்களையும் பொருட்படுத்தாமல் அவற்றை உடைத்தெறிந்தது.

பதம் 8.2.21
யத்-கந்த-மாத்ராத் தரயோ கஜேந்தரா
வ்யாக்ராதயோ வ்யால-ம்ருகா: ஸகட்கா:
மஹோரகாஸ் சாபி பயாத் த்ரவந்தி
ஸகௌர-க்ருஷ்ணா: ஸரபாஸ் சமர்ய:

யத்-கந்த-மாத்ராத்—அந்த யானையின் மோப்பத்தினாலேயே; ஹரய:—சிங்கங்கள்; கஜ இந்ரா:—மற்ற யானைகள்; வ்யாக்ர-ஆதய:—புலிகளைப் போன்ற கொடிய மிருகங்கள்; வ்யால-ம்ருகா:—மற்ற கொடிய மிருகங்கள்; ஸ-கட்கா:—காண்டாமிருகங்கள்; மஹா-உருகா:—பெரிய, பெரிய பாம்புகள்; ச—தவிரவும்; அபி—உண்மையில்; பயாத்—பயத்தினால்; த்ரவந்தி—விலகி ஓட்டம் பிடித்தன; ஸ—உடன்; கௌர-க்ருஷ்ணா:—அவற்றில் சில வெள்ளை நிறமும், சில கருப்பு நிறமும் கொண்டவையாகும்; ஸரபா:—ஸர்பங்கள்; சமர்ய:—மேலும் சமரீகளும்.

அந்த யானையின் மோப்பத்தை உணர்ந்ததாலேயே, மற்றெல்லா யானைகளும், புலிகளும் மற்றும் பிற கொடிய மிருகங்களான சிங்கம், காண்டாமிருகம், மிகப் பெரிய பாம்புகள் ஆகியவையும், கருப்பு, வெள்ளை நிறங்களைக் கொண்ட ஸர்பங்களும் பயத்தால் ஓட்டம் பிடித்தன. சமரீ மானும் கூட ஓட்டம் பிடித்தது.

பதம் 8.2.22
வ்ருகா வராஹா மஹிஷர்க்ஷ-சல்யா
கோபுச்ச-சாலாவ்ருக-மர்கடாஸ் ச
அன்யத்ர க்ஷுத்ரா ஹரிணா: சசாதயஸ்
சரந்தி அபீதா யத்-அனுக்ரஹேண

வ்ருகா:—நரிகள்; வராஹா:—பன்றிகள்; மஹிஷ—எருமைகள்; ருக்ஷ:—கரடிகள்; சல்யா—முள்ளம் பன்றிகள்; கோபுச்ச—ஒரு வகை மான்; சாலாவ்ருக—ஓநாய்கள்; மர்கடா:—குரங்குகள்; ச—மேலும்; அன்யத்ர—வேறு இடத்தில்; க்ஷுத்ரா:—சிறிய விலங்குகள்; ஹரினா:—மான்; சச-ஆதய:—முயல்களும், மற்றவையும்; சரந்தி—(காட்டில்) சுற்றித் திரியும்; அபீதா:—பயமின்றி; யத்-அனுக்ரஹேண—அந்த யானையின் தயவால்.

இந்த யானையின் தயவால், நரிகள், ஓநாய்கள், எருமைகள், கரடிகள், பன்றிகள், கோபுச்சங்கள், முள்ளம் பன்றிகள், குரங்குகள், முயல்கள், மற்ற மான்கள் போன்ற மிருகங்களும், பல்வேறு சிறிய மிருகங்களும் காட்டின் வேறொரு இடத்தில் சுற்றித்திரிந்தன. அதனிடம் அவை அச்சம் கொண்டிருக்கவில்லை.

பதங்கள் 8.2.23 – 8.2.24
ஸ கர்ம-தப்த: கரிபி: கரேணுபிர்
வ்ருதோ மதச்யுத்-கரபைர் அனுத்ருத:
கிரிம் கரிம்ணா பரித: ப்ரகம்பயன்
நிஷேவ்யமாணோ ‘லிகுலைர் மதாசனை:

ஸரோ ‘நிலம்பங்கஜ-ரேணு-ரூஷிதம்
ஜிக்ரன் விதூரான் மத-விஹ்வலேக்ஷண:
வ்ருத: ஸ்வ-யூதேன த்ருஷார்திதேன தத்
ஸரோவராப்யாஸம் அதாகமத் த்ருதம்

ஸ:—அது (யானைகளின் தலைவன்); கர்ம-தப்த:—வியர்வை சிந்தும்; கரிபி:—மற்ற யானைகளால்; கரேணுபி:—மேலும் பெண் யானைகளாலும் கூட; வ்ருத:—சூழப்பட்டு; மத்-ச்யுத்—அதன் வாயிலிருந்து திரவம் சொட்டச் சொட்ட; கரபை:—சிறிய யானைகளால்; அனுத்ருத:—பின்தொடரப்பட்டது; கிரிம்—அந்த மலை; கரிம்ணா—உடலின் பளுவால்; பரித:—எல்லாப் புறங்களிலும்; ப்ரகம்பயன்—நடுங்கச் செய்து; நிஷேவ்யமாண:—சேவை செய்யப்படும்; அலி-குலை:—தேனீக்களால்; மத-அசனை:—தேனருந்திய; ஸர:—ஏரியிலிருந்து; அனிலம்—தென்றல் காற்று; பங்கஜ-ரேணு-ரூஷிதம்—தாமரைப் பூக்களிலிருந்து துகள்களை ஏந்தி வரும்; ஜிக்ரன்—முகர்ந்து; விதூராத்—தூரத்திலிருந்து; மத-விஹ்வல—மதி மயக்கம் அடைந்திருந்ததால்; ஈக்ஷண:—பார்வை; வ்ருத:—சூழப்பட்டு; ஸ்வ-யூதேன—அதன் சொந்த சகாக்களால்; த்ரிஷா-அர்திதேன—தாகத்தால் பெருந்துன்பத்திற்கு ஆளான; தத்—அந்த; ஸரோவர-அப்யாஸம்—அந்த ஏரிக்கரைக்கு; அத—இவ்வாறாக; அகமத்—சென்றது; த்ருதம்—மிக விரைவில்.

பெண் யானைகள் உட்பட, மந்தையின் மற்ற யானைகளால் சூழப்பட்டவாறும், கன்றுகளால் பின்தொடரப்பட்டவாறும், யானைகளின் தலைவனான கஜபதி, அதன் உடலின் பளுவால் திரிகூட மலையையே நடுங்கச் செய்தது. அதன் உடல் வியர்த்துப் போய், அதன் வாயிலிருந்து திரவம் சொட்டியது. மேலும் அதன் பார்வை போதையின் மயக்கத்திற்கு உட்பட்டிருந்தது, தேனை அருந்திய தேனீக்களால் அது சேவிக்கப்பட்டது. மேலும் ஏரியிலிருந்து தென்றல் காற்றால் ஏந்திவரப்பட்ட தாமரைப் பூக்களின் மகரந்தப் பொடிகளை தூரத்திலிருந்தே அதனால் முகர முடிந்தது. இவ்வாறாக தாகத்தால் பெருந்துன்பத்திற்கு ஆளான அதன் சகாக்களால் சூழப்பட்டவாறு விரைவில் ஏரிக் கரையை அது அடைந்தது.

பதம் 8.2.25
விகாஹ்ய தஸ்மின் அம்ருதாம்பு நிர்மலம்
ஹேமாரவிந்தோத்பல-ரேணு-ரூஷிதம்
பபௌ நிகாமம் நிஜ-புஷ்கரோத்ருதம்
ஆத்மானம் அத்பி: ஸனபயன் கத-க்லம:

விகாஹ்ய—நுழைந்து; தஸ்மின்—ஏரியினுள்; அம்ருத-அம்பு—அமிர்தம் போன்ற தூய நீர்; நிர்மலம்—பளிங்குபோல் தெளிவான; ஹேம—மிகவும் குளிர்ந்த; அரவிந்த-உத்பல—அல்லி மற்றும் தாமரை மலர்களிலிருந்து; ரேணு—தூள்களால்; ரூஷிதம்—கலக்கப்பட்டிருந்த; பபௌ—அது குடித்தது; நிகாமம்—பூரண திருப்தி அடையும்வரை; நிஜ—சொந்த; புஷ்கர-உத்ருதம்—அதன் தும்பிக்கையால் உறிஞ்சி; ஆத்மானம்—அதாகவே; அத்பி:—நீரால்; ஸனபயன்—நன்கு குளித்து; கத-க்லம:—சோர்விலிருந்து முற்றிலும் விடுபட்டது.

யானைகளின் அரசன் ஏரியினுள் இறங்கி, நன்றாகக் குளித்து, அதன் சோர்விலிருந்து விடுபட்டது. பிறகு, அதனுடைய தும்பிக்கையின் உதவியுடன், தாமரை மற்றும் அல்லி மலர்களின் தூள்களால் கலக்கப்பட்டிருந்த குளிர்ந்த, தெளிந்த, அமிர்தம் போன்ற நீரை பூரண திருப்தி அடையும்வரை அது குடித்தது.

பதம் 8.2.26
ஸ புஷ்கரேணோத்ருத சீகராம்புபிர்
நிபாயயன் ஸம்ஸ்னபயன் யதா க்ருஹீ
க்ருணீ கரேணு: கரபாம்ஸ் ச துர்மதோ
நாசஷ்ட க்ருச்ரம் க்ருபணோ ‘ஜ மாயயா

ஸ:—அது (யானைகளின் தலைவன்); புஷ்கரேண—அதன் தும்பிக்கையால்; உத்ருத—உறிஞ்சி; சீகர-அம்புபி:—நீரைத் தெளித்தும்; நிபாயயன்—அவற்றை குடிக்கச் செய்தும்; ஸம்ஸ்னபயன்—அவற்றைக் குளிப்பாட்டியும்; யதா—போன்று; க்ரஹீ—ஒரு குடும்பஸ்தன்; க்ருணீ—(தனது குடும்ப அங்கத்தினருடன்) எப்பொழுதும் அன்பு கொண்டிருக்கும்; கரேணு:—அதன் மனைவியான, பெண் யானைகளிடம்; கரபான்—கன்றுகளிடம்; ச—தவிரவும்; துர்மத:—தனது குடும்ப அங்கத்தினரிடம் அதிக பற்றுக் கொண்டுள்ள; ந—இல்லை; ஆசஷ்ட—கருதியது; க்ருச்ரம்—பெருங்கஷ்டத்தை; க்ருபண:—ஆன்மீக அறிவு இல்லாததால்; அஜ-மாயயா—பரமபுருஷ பகவானுடைய பகிரங்கமான மாயா சக்தியின் வசியத்தினால்.

ஆன்மீக அறிவு இல்லாதவனும், தனது குடும்ப அங்கத்தினரிடம் அதிக பற்றுடையவனுமான ஒரு மனிதனைப் போலவே, கிருஷ்ணரின் மாயா சக்தியால் வசீகரிக்கப்பட்ட அந்த யானை, அதன் மனைவிகளையும், கன்றுகளையும் குளிப்பாட்டி, நீரை அருந்தச் செய்தது. அது தனது தும்பிக்கையால் ஏரியிலிருந்து நீரை உறிஞ்சி அவற்றின் மீது தெளித்தது. இம்முயற்சியில் சம்பந்தப்பட்டுள்ள கடினமான உழைப்பை அது பொருட்படுத்தவில்லை.

பதம் 8.2.27
தம் தத்ர கஸ்சின் ந்ருப தைவ சோதிதோ
க்ராஹோ பலீயாம்ஸ் சரணே ருஷாக்ரஹீத்
யத்ருச்சயைவம் வ்யஸனம் கதோ கஜோ
யதா-பலம் ஸோ ‘திபலோ விசக்ரமே

தம்—அதை (கஜேந்திரனை); தத்ர—அங்கு (நீரில்); கஸ்சித்—யாரோ ஒருவர்; ந்ருப—ராஜனே; தைவ-சோதித:—விதியால் தூண்டப்பட்டு; க்ராஹ:—முதலை; பலீயான்—மிகவும் பலம் வாய்ந்த; சரணே—அதன் காலை; ருஷா—கோபத்துடன்; அக்ரஹீத்—கெளவிக் கொண்டது; யத்ருச்சயா—விதிப்பயனாய் விளையும்; ஏவம்—இத்தகைய; வ்யஸனம்—ஓர் ஆபத்தான நிலையை; கத:—அடையப்பெற்று; கஜ:—அந்த யானை; யதா-பலம்—அதன் பலத்திற்கிணங்க; ஸ:—அது; அதி-பல:—பெரு முயற்சியுடன்; விசக்ரமே—வெளியே முயன்றது.

ராஜனே, விதியின் ஏற்பாட்டால், பலம் வாய்ந்த முதலையொன்று யானைமீது கோபம் கொண்டு நீருக்குள் யானையின் காலைக் கவ்விக் கொண்டது. சந்தேகமின்றி யானை பலசாலிதான். விதியால் அனுப்பப்பட்ட இந்த அபாயத்திலிருந்து விடுபட அது தன்னால் இயன்றவரை முயன்றது.

பதம் 8.2.28
ததாதுரம் யூத-பதிம் கரேணவோ
விக்ருஷ்யமாணம் தரஸா பலீயஸா
விசுக்ருசுர் தீன-தியோ ‘பரோ கஜா:
பார்ஷ்ணி-க்ரஹாஸ் தாரயிதும் ந சாசகன்

ததா—பிறகு; ஆதுரம்—அக்கடுமையான சூழ்நிலையில்; யூத-பதிம்—யானைகளின் தலைவனை; கரேணவ:—அதன் மனைவிகள்; விக்ருஷ்யமாணம்—தாக்கப்பட்டு; தரஸா—பலத்தினால்; பலீயஸா—(முதலையின்) பலத்தால்; விசுக்ருசு:—பிளிறத் துவங்கின; தீன-திய:—புத்தியில் தாழ்ந்தவையாக இருந்த; அபரே—மற்ற; கஜா:—யானைகள்; பார்ஷ்ணி-க்ரஹா:—பின்னாலிருந்து அதைப் பற்றி; தாரயிதும்—விடுவிக்க; ந—இல்லை; ச—தவிரவும்; அசகன்—முடிந்து.

அதன்பிறகு, கஜேந்திரனின் அந்த ஆபத்து சூழ்நிலையைக் கண்ட அதன் மனைவிகள், மிகமிக வருத்தமடைந்து பிளிறத் துவங்கின. மற்ற யானைகள் கஜேந்திரனுக்கு உதவ விரும்பின. ஆனால் முதலையின் பெரும் பலத்தின் காரணத்தால், பின்புறத்திலிருந்து பற்றி இழுப்பதன் மூலம் அதை அவைகளால் காப்பாற்ற முடியவில்லை.

பதம் 8.2.29
நியுத்யதோர் ஏவம் இபேந்ர நக்ரயோர்
விகர்ஷதோர் அந்தரதோ பஹிர் மித:
ஸமா: ஸஹஸ்ரம் வ்யகமம் மஹீ பதே
ஸப்ராண யோஸ் சித்ரம் அமம்ஸதாமரா:

நியுத்யதோ:—சண்டை செய்து; ஏவம்—இவ்விதமாக; இப-இந்ர—யானையின்; நக்ரயோ:—மற்றும் முதலையும்; விகர்ஷதோ:—இழுத்தவாறு; அந்தரத:—நீரினுள்; பஹி:—நீருக்கு வெளியில்; மித:—ஒன்றையொன்று; ஸமா:—ஆண்டுகள்; ஸஹஸ்ரம்—ஆயிரம்; வ்யகமம்—கழிந்தன; மஹீ-பதே—ராஜனே; ஸ-ப்ராணயோ:—இரண்டும் உயிரோடு; சித்ரம்—அற்புதம்; அமம்ஸத—கருதினர்; அமரா:—தேவர்கள்.

ராஜனே, இவ்விதமாக யானையும், முதலையும் ஆயிரம் ஆண்டுகளாக நீருக்குள்ளேயும், நீருக்கு வெளியேயும் ஒன்றையொன்று இழுத்தவாறு சண்டை செய்தன, சண்டையைக் கண்ணுற்ற தேவர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர்.

பதம் 8.2.30
ததோ கஜேந்ரஸ்ய-மனோ-பலௌஜஸாம்
காலேன தீர்கேண மஹான் அபூத் வ்யய:
விக்ருஷ்யமாணஸ்ய ஜலே ‘வஸீததோ
விபர்யயோ ‘பூத்த ஸகலம் ஜலௌகஸ:

தத:—அதன்பிறகு; கஜ-இந்ரஸ்ய—யானைகளின் அரசனுடைய; மன:—உற்சாக பலம்; பல—உடல் பலம்; ஓஜஸாம்—மேலும் புலன்களின் பலமும்; காலேன—ஆண்டுகளாக சண்டை செய்ததன் காரணத்தால்; தீர்கேண—நீடித்த; மஹான்—பெரும்; அபுத்—ஆனது; வ்யய:—செலவு; விக்ருஷ்யமாணஸ்ய—(முதலையால்) இழுக்கப்பட்ட; ஜலே—(அந்நிய இடமான) நீரினுள்; அவஸீதத:—(மனோ, உடல் மற்றும் புலன் பலங்கள்) குறைந்தன; விபர்யய:—எதிராக; அபூத்—ஆனது; ஸகலம்—அவை அனைத்தும்; ஜல-ஓகஸ:—நீரையே தனது வசிப்பிடமாகக் கொண்டுள்ள முதலை.

அதன்பிறகு, பல நீண்ட ஆண்டுகளாக நீரினுள் இழுக்கப்பட்டு சண்டை செய்ததால், யானையின் மனோ, உடல் மற்றும் புலன் பலங்கள் குறைந்தன. மாறாக நீர்வாழ் பிராணியான முதலையின் உற்சாகம், உடல்பலம் மற்றும் இந்திரியபலம் ஆகியவை அதிகரித்தன.

பதம் 8.2.31
இத்தம் கஜேந்ர: ஸ யதாப ஸங்கடம்
ப்ராணஸ்ய தேஹீ விவசோ யத்ருச்சயா
அபாரயன் ஆத்ம-விமோக்ஷணே சிரம்
தத்யாவ் இமாம் புத்திம் அதாப்யபத்யத

இத்தம்—இவ்விதமாக; கஜ-இந்ர:—யானைகளின் அரசன்; ஸ:—அது; யதா—அப்போது; ஆப—அடைந்தது; ஸங்கடம்—அத்தகைய ஆபத்தான ஒரு நிலை; ப்ராணஸ்ய—வாழ்வின்; தேஹீ—உடல் பெற்றுள்ள; விவச:—சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆதரவற்ற நிலையிலுள்ள; யத்ருச்சயா—விதிப்பயனால்; அபாரயன்—இயலாததால்; ஆத்ம-விமோக்ஷணே—தன்னை காப்பாற்றிக் கொள்ள; சிரம்—நீண்ட காலமாக; தத்யௌ—மனத்தில் உறுதியுடன் சிந்திக்க ஆரம்பித்து; இமாம்—இந்த; புத்திம்—முடிவை; அத—அதன்பிறகு; அப்யபத்யத—அடைந்தது.

விதிப்பயனாய் தான் முதலையின் பிடிக்குள் அகப்பட்டுக் கிடப்பதைக் கண்ட யானைகளின் அரசன், தான் உடலைப் பெற்றிருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் நிராதரவாக இருந்தாலும், தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாததாலும், கொல்லப்படுவோமோ என்ற பெரும் பயத்திற்கு அது ஆளானது. இதன் விளைவாக, நீண்ட காலமாக சிந்தனையில் ஆழ்ந்து, இறுதியில் பின்வரும் முடிவுக்கு வந்தது.

பதம் 8.2.32
ந மாம் இமே ஞாதய ஆதுரம் கஜா:
குத: கரிண்ய: ப்ரபவந்தி மோசிதும்
க்ராஹேண பாசேன விதாதுர் ஆவ்ருதோ
‘பி அஹம் ச தம் யாமி பரம் பராயணம்

ந—இல்லை; மாம்—நான்; இமே—இவ்வெல்லா; ஞாதய:—நண்பர்களும், உறவினர்களும் (மற்ற யானைகள்); ஆதுரம்—என் துன்பத்தில்; கஜா:—அந்த யானை; குத:—எப்படி; கரிண்ய:—எனது மனைவிகள்; ப்ரபவந்தி—முடியும்; மோசிதும்—காப்பாற்ற (இந்த ஆபத்தான நிலையில் இருந்து); க்ராஹேண:—முதலையால்; பாசேன—பாசக் கயிற்றினால்; விதாது:—விதியின்; ஆவ்ருத:—கைப்பற்றப்பட்டு; அபி—(நான் இத்தகைய ஒரு நிலையில்) இருப்பினும்; அஹம்—நான்; ச—கூட; தம்—அந்த (பரமபுருஷ பகவான்); யாமி—அவரிடம் புகலிடம் கொண்டு; பரம்—உன்னதமான; பராயணம்—மேலும் பிரம்மா மற்றும் சிவனைப் போன்ற சிறந்த தேவர்களுக்கும் கூட புகலிடம் அளிப்பவரான.

என்னுடைய நண்பர்களும், உறவினர்களுமான மற்ற யானைகளால் என்னை இந்த அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை. பின் என் மனைவிகளைப் பற்றி என்ன சொல்வது? அவைகளால் எதுவும் செய்ய முடியாது. விதிப்பயனால்தான் நான் இந்த முதலையின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன். ஆகவே மகாபுருஷர்கள் உட்பட அனைவருக்கும் புகலிடம் அளிப்பவரான முழுமுதற் கடவுளிடம் நான் புகலிடம் கொள்வேனாக.

பதம் 8.2.33
ய: கஸ்சனேசோ பலினோ ‘ந்தகோரகாத்
ப்ரசண்ட-வேகாத் அபிதாவதோ ப்ருசம்
பீதம் ப்ரபன்னம் பரிபாதி யத்-பயான்
ம்ருத்யு: ப்ரதாவதி அரணம் தம் ஈமஹி

ய:—யாரொருவர் (முழுமுதற் கடவுள்); கஸ்சன—எவரேனும் ஒருவர்; ஈச:—பரம ஆளுனர்; பலின:—மிகவும் சக்திவாய்ந்த; அந்தக-உரகாத்—மரணத்தை விளைவிக்கும், காலம் எனப்படும் பெரும் சர்ப்பத்திலிருந்த; ப்ரசண்ட-வேகாத்—பயத்தை ஏற்படுத்தும் அதன் சக்தி; அபிதாவத:—விரட்டுவது; ப்ருசம்—(ஒவ்வொரு மணிக்கும், ஒவ்வொரு வினாடிக்கும்) முடிவில்லாதவாறு; பீதம்—மரணத்தைக் கண்டு அஞ்சுபவன்; ப்ரபன்னம்—(முழுமுதற் கடவுளிடம்) சரணம் அடைந்துள்ள; பரிபாதி—அவர் காப்பாற்றுகிறார்; யத்-பயாத்—பகவானிடமுள்ள பயத்தினால்; ம்ருத்யு:—மரணமே; ப்ரதாவதி—ஓட்டம் பிடிக்கிறது; அரணம்—அனைவருக்கும் நிஜமான பாதுகாப்பு; தம்—அவரிடம்; ஈமஹி—நான் சரணடைகிறேன் அல்லது புகலிடம் கொள்கிறேன்.

முழுமுதற் கடவுள் நிச்சயமாக அனைவராலும் அறிந்து கொள்ளப்பட்டுள்ளவர் அல்ல. ஆனால் அவர் மிகவும் சக்தி வாய்ந்தவரும், செல்வாக்கு உடையவருமாவார். நித்திய காலமெனும் சர்ப்பம் பயத்தை விளைவிக்கும் சக்தி கொண்டதும், முடிவின்றி அனைவரையும் துரத்திக் கொண்டு வருவதும், அனைவரையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பதுவுமாகும். ஆகவே, இச்சர்ப்பத்தைக் கண்டு அஞ்சுபவன் பகவானிடம் புகலிடம் கொள்வானாயின், பகவான் அவனுக்கு அபயம் அளிக்கிறார். ஏனெனில், மரணம் கூட பகவானைக் கண்டு அஞ்சி ஓட்டம் பிடிக்கிறது. ஆகவே மிகவும் சக்திவாய்ந்த பரம அதிகாரியும், அனைவருக்கும் உண்மையான புகலிடம் அளிப்பவருமான அவரிடம் நான் சரணாகதி அடைகிறேன்.


ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “கஜேந்திரனின் ஆபத்தான நிலை” எனும் தலைப்பை கொண்ட இரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare