அத்தியாயம் – 15
நாகரீக மனிதருக்குரிய உபதேசங்கள்
பதம் 7.15.1 : நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: அரசே, சில பிராமணர்கள் பலன்நோக்குக் கருமங்களில் மிகவும் பற்றுக் கொண்டுள்ளனர். சிலர் தவ விரதங்களில் பற்றுக் கொண்டுள்ளனர். சிலர் வேத இலக்கியங்களைக் கற்றறிகின்றனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையுடைய மற்றும் சிலரே, அது அறிவைப் பயன்படுத்தி வெவ்வேறு யோகங்களை, குறிப்பாக பக்தியோகத்தைப் பயில்கின்றனர்.
பதம் 7.15.2 : தன் முன்னோர்களோ அல்லது தானோ முக்தியடைய வேண்டும் என்று விரும்புபவன், அருவவாத அத்வைதத்தைப் (ஞான-நிஷ்டா) பின்பற்றும் ஒரு பிராமணருக்குத் தானம் செய்ய வேண்டும். முன்னேற்றமடைந்த இத்தகைய ஒரு பிராமணர் இல்லாத சமயத்தில், பலன் கருதும் செயல்களில் (கர்ம-காண்டத்தில்) பற்றுக் கொண்டுள்ள ஒரு பிராமணருக்குத் தானம் செய்யலாம்.
பதம் 7.15.3 : தேவர்களுக்கு நிவேதனம் செய்யும் காலத்தில் இரு பிராமணர்களை மட்டுமே ஒருவன் அழைக்க வேண்டும். முன்னோர்களுக்கு நிவேதனம் செய்யும் பொழுது மூன்று பிராமணர்களை ஒருவன் அழைக்கலாம். அல்லது, இவ்விரு சந்தர்ப்பத்திலும் ஒரு பிராமணரை அழைப்பதே போதுமானது. ஒருவன் பெரும் செல்வந்தனாக இருப்பினும், அவன் அதிக பிராமணர்களை அழைக்கவோ அல்லது பலவிதமான ஊதாரித்தனமான ஏற்பாடுகளை இச்சந்தர்ப்பங்களில் செய்யவோ அதிக முயற்சி எடுத்துக் கொள்ளக் கூடாது.
பதம் 7.15.4 : இந்த சிரார்த்தச் சடங்கின்போது பல பிராமணர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு உணவளிப்பதற்கான ஏற்பாடுகளை ஒருவன் செய்தால், காலம், இடம், மரியாதை செய்தல் மற்றும் தேவையான பொருள்கள் ஆகியவற்றிலும், பூஜிக்கப்பட வேண்டியவர், மற்றும் பூஜிக்கும் முறை ஆகியவற்றிலும் முரண்பாடுகள் உண்டாகும்.
பதம் 7.15.5 : தகுந்த மங்களகரமான நேரமும், இடமும் அமையும் பொழுது, ஒருவன் நெய்யால் சமைத்த உணவை பரமபுருஷரின் விக்கிரகத்திற்கு அன்புடன் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த பிரசாதத்தைத் தகுதியுள்ள நபராகிய ஒரு வைஷ்ணவருக்கோ அல்லது பிராமணருக்கோ அளிக்க வேண்டும். இதுவே நிலையான செழிப்புக்கு உபாயமாகும்.
பதம் 7.15.6 : தேவர்கள், சாதுக்கள், முன்னோர்கள், பொது ஜனங்கள், குடும்ப அங்கத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகிய அனைவரையும் ஒருவன் பரமபுருஷரின் பக்தர்களாகவே பார்த்து அவர்களுக்கும் பிரசாதத்தை அளிக்க வேண்டும்.
பதம் 7.15.7 : சமயக் கோட்பாடுகளை நன்கு அறிந்துள்ள ஒருவன், சிரார்த்தச் சடங்கில் மாமிசம், முட்டை, மீன் போன்ற எதையுமே நிவேதனம் செய்யக்கூடாது. க்ஷத்திரியனாக இருப்பவன்கூட இத்தகைய பொருட்களை உண்ணக்கூடாது. நெய்யால் சமைக்கப்பட்ட ஏற்ற உணவு சாதுக்களுக்கு அளிக்கப்படும்பொழுது, அந்நிகழ்ச்சி முன்னோர்களையும், பரமபுருஷரையும் திருப்திப்படுத்துகிறது. யாகம் என்ற பெயரில் மிருகங்கள் கொல்லப்படுவதில் அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
பதம் 7.15.8 : உயர்ந்த சமய மார்க்கத்தில் முன்னேற விரும்புபவர்கள் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றினால் பிற ஜீவராசிகளிடம் ஏற்படும் பொறாமையை அறவே விட்டுவிட வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகின்றனர். இதைக் காட்டிலும் உயர்வான சமயம் வேறில்லை.
பதம் 7.15.9 : யக்ஞங்களின் நோக்கத்தையும், சமயக் கோட்பாடுகளையும் உண்மையாக அறிந்துள்ளவர்களும் பெளதிக ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களுமான ஆன்மீகிகள், ஆத்ம ஞானத்தின் விழிப்புணர்வின் காரணத்தால், ஆத்ம ஞானம் அல்லது பரப்பிரம்ம ஞானம் என்ற ஞானாக்கினியில் ஆத்மாவைக் கட்டுப்படுத்துகின்றனர். இவர்கள் இந்த வேதக்கிரியைகளின் வழிமுறையை விட்டுவிடலாம்.
பதம் 7.15.10 : மிருக பலியினால் யக்ஞம் செய்பவர்களைக் கண்டு, யக்ஞத்தில் பலியிடுவதற்காக வைக்கப்பட்டுள்ள மிருகங்கள், “யக்ஞங்களைச் செய்யும் கருணையற்ற இவன் யக்ஞத்தின் நோக்கத்தை அறியாத காரணத்தினாலும், பிறரைக் கொல்வதில் மிகவும் திருப்தியடையும் காரணத்தினாலும் நிச்சயமாக நம்மைக் கொன்று விடப்போகிறான்” என்றெண்ணி மிகவும் அஞ்சுகின்றன.
பதம் 7.15.11 : ஆகவே, சமயக் கோட்பாடுகளை நன்கு அறிந்தவனும், நிராதரவான மிருகங்களிடம் மிகவும் கொடுமையான பகைமை பாராட்டுபவனுமான ஒருவன், பகவானின் கிருபையால் சுலபமாக கிடைக்கக்கூடிய உணவைக் கொண்டு நாள்தோறும் தனது அன்றாட யக்ஞங்களை மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற வேண்டும்.
பதம் 7.15.12 : அதர்மத்தில் ஐந்து கிளைகள் உள்ளன. அவை சமயப் பற்றின்மை (விதர்மம்) என்றும், தன் தகுதிக்கு மேலான சமயக் கோட்பாடுகள் (பர-தர்மம்) என்றும், போலியான தர்மம் (ஆபாஸம்) என்றும், ஒத்த தன்மையைக் காட்டுகிற சமயம் (உபதர்மம்) என்றும், ஏமாற்றுதர்மம் (சல-தர்மம்) என்றும் அறியப்படுகின்றன. உண்மையான சமய வாழ்வை அறிந்துள்ள ஒருவன் இவ்வைந்தையும் அதர்மமாகக் கருதி விலக்கிவிட வேண்டும்.
பதம் 7.15.13 : ஒருவன் தனது சொந்த சமயத்தைப் பின்பற்றுவதற்குத் தடையாக உள்ள சமயக் கோட்பாடுகள் விதர்மம் என்று அழைக்கப்படுகின்றன. மற்றவர்களால் அறிமுகப்படுத்தபடும் சமயக் கோட்பாடுகள் பர-தர்மம் எனப்படுகின்றன. பொய்யான கர்வம் கொண்டவனும், வேதக் கோட்பாடுகளை எதிர்ப்பவனுமான ஒருவனால் உண்டாக்கப்பட்ட ஒரு புதுவிதமான சமயம் உபதர்மம் எனப்படுகிறது. ஒருவனது வார்த்தை ஜாலங்களால் உண்டான கருத்து சல-தர்மம் என்று அழைக்கப் படுகிறது.
பதம் 7.15.14 : தன்னுடைய வர்ணாஸ்ரம் கடமைகளை வேண்டுமென்றே அலட்சியம் செய்பவனால் உண்டாக்கப்படும் போலியான சமயமுறை ஆபாஸம் (தெளிவற்றது அல்லது பொய்யானது) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ஒருவனது குறிப்பிட்ட ஆசிரமத்திற்கு அல்லது வர்ணத்திற்கு விதிக்கப்பட்ட கடமைகளை, ஒருவன் செய்வானாயின், அவை ஏன் அவனுடைய எல்லா பெளதிக துன்பங்களையும் போக்குவதற்குப் போதுமானவையாக இருப்பதில்லை?
பதம் 7.15.15 : ஒருவன் ஏழையாக இருப்பினும், அவன் தன் உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்காக அல்லது புகழ் பெற்ற ஒரு சமயவாதி ஆவதற்காக தனது பொருளாதார நிலையை முன்னேற்றிக் கொள்ள அதிக முயற்சி செய்யக்கூடாது. எப்படி ஒரு பெரிய மலைப்பாம்பு ஒரே இடத்தில் படுத்துக் கொண்டிருந்த போதிலும், தனது ஜீவனத்திற்கு எந்த முயற்சியும் செய்யாமலேயே உடலையும், ஆத்மாவையும் பராமரிப்பதற்குத் தேவையான உணவைப் பெறுகிறதோ, அப்படியே விருப்பற்றவனும் முயற்சியின்றி தனது ஜீவனோபாயத்தைப் பெறுகிறான்.
பதம் 7.15.16 : போதுமென்ற மனநிலையுடன் திருப்தியடைந்தவனும், எல்லோருடைய இதயங்களிலும் வாழும் பரமபுருஷருடன் தன் செயல்களை இணைத்துக் கொள்பவனுமான ஒருவன், தன் ஜீவனத்திற்குரிய முயற்சி இல்லாமலேயே உன்னத ஆனந்தத்தை அனுபவிக்கிறான். காமத்தினாலும், பேராசையினாலும் உந்தப்பட்டவனாக, பொருள் சேர்க்கும் ஆசையுடன் எல்லாத் திசைகளிலும் சுற்றித்திரியும் ஒரு பௌதிகவாதிக்கு இத்தகைய ஆனந்தம் கிடைப்பதேது?
பதம் 7.15.17 : காலில் பொருத்தமான செருப்பை அணிந்தவனுக்கு, கல்லிலும் முள்ளிலும் நடக்கும் பொழுதுகூட எந்த ஆபத்தும் இல்லாமல் எல்லாம் சுபமாகவே நடைபெறுகிறது. அவ்வாறே, எப்பொழுதும் சுயதிருப்தி உடையவனுக்குத் துன்பம் என்பதே இல்லை; உண்மையில் எல்லா இடங்களும் அவனுக்கு இன்பமயமாகவே இருக்கின்றன.
பதம் 7.15.18 : அரசே, போதுமென்ற மனமுடையவன் வெறும் நீரைப் பருகுவதாலேயே மகிழ்ச்சியடைகிறான். ஆனால் புலன்களால் குறிப்பாக நாக்கினாலும், பாலுறுப்புகளாலும் தூண்டப்படுபவன், தன் புலன்களைத் திருப்திப்படுத்துவதற்கு வீட்டில் வளர்க்கும் நாயின் நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பதம் 7.15.19 : புலன்களின் பொருட்டு உண்டாகும் பேராசையின் காரணத்தால் போதுமென்ற மனமில்லாத ஒரு பக்தனின் அல்லது பிராமணனின் ஆன்மீக பலம், கல்வி, தவம், கீர்த்தி ஆகியவை நலிவடைந்து, அவனுடைய அறிவு படிப்படியாக மறைந்து விடுகிறது.
பதம் 7.15.20 : பசியாலும், தாகத்தினாலும் பீடிக்கப்பட்டவனுடைய உடலின் தீவிரமான ஆசைகளும், தேவைகளும் உணவு உண்பதால் நிச்சயமாக திருப்தியடைகின்றன. அவ்வாறே, ஒருவன் கடுங்கோபம் கொள்வானாயின், அக்கோபம் தண்டிப்பதாலும், அதன் பிரதிபலனாலும் திருப்திப்படுத்தப்படுகிறது. ஆனால் பேராசை கொண்ட ஒருவன் திசைகளையெல்லாம் வென்றும், உலகிலுள்ள அனைத்தையும் ஆண்டனுபவித்தும் திருப்தியடைவதேயில்லை.
பதம் 7.15.21 : யுதிஷ்டிர மகாராஜனே, பலவித அனுபவங்களைக் கொண்ட பல பேர்கள், பல சட்ட ஆலோசகர்கள், பல கற்றறிந்த மேதைகள், கற்றறிந்த சபைகளுக்குத் தலைமை தாங்கும் தகுதி படைத்தவர்கள் ஆகியோர் தங்களுடைய நிலைகளில் திருப்தியடையாத காரணத்தால் நரக வாழ்வில் தள்ளப்படுகின்றனர்.
பதம் 7.15.22 : ஒருவன் உறுதியான திட்டங்களைத் தீட்டுவதன் மூலம், புலன் நுகர்வுக்கான தீவிர ஆசைகளை விட்டுவிட வேண்டும். அவ்வாறே, பொறாமையை விடுவதன் மூலம் கோபத்தை ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும். பொருள் சேர்ப்பதில் உள்ள தீமைகளைப் பற்றி ஆலோசிப்பதன் மூலம் பேராசையை விட்டுவிட வேண்டும். மேலும் உண்மைப் பற்றி விவாதிப்பதன் மூலம் பயத்தையும் விட்டுவிட வேண்டும்.
பதம் 7.15.23 : ஆத்ம ஞானத்தைப் பற்றி விவாதிப்பதன் மூலம் ஒருவனால் சோகத்தையும், மோகத்தையும் வெல்ல முடியும். ஒரு சிறந்த பக்தருக்குச் சேவை செய்வதன் மூலம் அகங்காரத்தை விட்டொழிக்க முடியும். மௌனம் சாதிப்பதன் மூலம் அஷ்டாங்கயோக மார்க்கத்தின் இடையூறுகளைத் தவிர்க்க முடியும். மேலும் புலன்நுகர்வை நிறுத்திக் கொள்வதாலேயே பொறாமையை வென்று விடமுடியும்.
பதம் 7.15.24 : நன்நடத்தையாலும், பொறாமையிலிருந்து விடுபடுவதாலும் (கருணையாலும்) பிற ஜீவராசிகளினால் விளையும் துன்பங்களை ஒருவன் செயலிழக்கச் செய்ய வேண்டும். தியான சமாதியின் மூலம் விதிவசத்தால் விளையும் துன்பங்களை ஒருவன் செயலிழக்கச் செய்ய வேண்டும். ஹட-யோகம், பிராணாயாமம் முதலான பயிற்சிகளால், உடலாலும் மனதாலும் ஏற்படும் துன்பங்களை ஒருவன் செயலிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறே, குறிப்பாக உண்ணும் விஷயத்தில் சத்வகுணத்தை விருத்தி செய்வதன் மூலம் உறக்கத்தை ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும்.
பதம் 7.15.25 : சத்வ குணத்தை விருத்தி செய்வதன் மூலம், ரஜோ மற்றும் தமோ குணங்களை ஒருவன் வெற்றிக் கொள்ள வேண்டும். பிறகு சுத்த-ஸத்வ நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்வதன்மூலம், ஒருவன் நற்குணத்தில் பற்றற்றவன் ஆக வேண்டும். ஒருவன் பக்தி சிரத்தையுடன் ஆன்மீக குருவின் சேவையில் ஈடுபடும் பொழுது இவையெல்லாம். தானாகவே சாத்தியமாகின்றன. இவ்விதமாக ஒருவனால் இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்தை வெற்றி கொள்ள முடியும்.
பதம் 7.15.26 : ஆன்மீக குரு ஆத்ம போதித்தற்குரிய உன்னத அறிவைக் கொடுப்பதால், அவரை நேரடியாகப் பரமபுருஷராகவே கருத வேண்டும். ஆகையால், ஆன்மீக குருவானவர் ஒரு சாதாரண மனிதர் என்ற பௌதிக எண்ணம் கொண்டுள்ளவன் அனைத்திலும் ஏமாற்றம் அடைகிறான். அவனுடைய ஆத்ம போதமும், வேதக் கல்விகளும், அறிவும் ஒரு யானையின் குளியலைப் போன்றவையே.
பதம் 7.15.27 : பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அனைத்து ஜீவராசிகளுக்கும், ஜட இயற்கைக்கும் தலைவராவார். அவருடைய தாமரைப் பாதங்கள் வியாசரைப் போன்ற மாமுனிவர்களாலும் நாடி பூஜிக்கப்படுகின்றன. அப்படியிருந்தும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு சாதாரண மனிதராகக் கருதும் முட்டாள்களும் இருக்கவே செய்கின்றனர்.
பதம் 7.15.28 : வேதக் கிரியைகள், கட்டுப்பாட்டு விதிகள், தவங்கள், யோகப் பயிற்சி ஆகிய அனைத்தும் புலன்களையும், மனதையும் அடக்குவதற்காகவே உள்ளன. ஆனால் புலன்களையும், மனதையும் ஒருவனால் அடக்க முடிந்த பிறகும், அவன் பரமபுருஷரைத் தியானிக்கும் நிலைக்கு வரவில்லை என்றால், இத்தகைய செயல்கள் எல்லாம் ஏமாற்றத்தில் முடிவுறும் வீணான உழைப்பு மட்டுமேயாகும்.
பதம் 7.15.29 : எப்படி வருவாய்க்கான செயல்கள் அல்லது வர்த்தகத்தில் கிடைக்கும் இலாபங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவ முடியாமல் பெளதிக பந்தத்திற்குக் காரணமாக இருக்கின்றனவோ, அப்படியே பகவானின் பக்தனல்லாத ஒருவனுக்கு வேதக் கிரியைகளால் உதவ முடியாது.
பதம் 7.15.30 : மனதை வெற்றி கொள்ள விரும்பும் ஒருவன் தன் குடும்பத்தினரின் சேர்க்கையை விட்டுவிட்டு, மாசுபட்ட சேர்க்கையிலிருந்து விடுபட்டவனாய்த் தனிமையான ஓரிடத்தில் வாழ வேண்டும். உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்கும், வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கும் தேவையான அளவு மட்டுமே அவன் யாசித்துப் பெற வேண்டும்.
பதம் 7.15.31 : அரசே, புனிதமான ஒரு தீர்த்த யாத்திரை ஸ்தலத்தின் யோகம் செய்வதற்குரிய ஓரிடத்தை ஒருவன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இடம் உயரமாகவோ, தாழ்வாகவோ இல்லாமல் சமதரையாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் ஒருவன் மிகவும் செளகரியமாகவும், உறுதியாகவும், சமமான மனநிலையுடனும், உடலை நிமிர்த்தியும் உட்கார்ந்து கொண்டு, வேதப் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கத் துவங்க வேண்டும்.
பதங்கள் 7.15.32 – 7.15.33 : கற்றறிந்த ஒரு யோகி தொடர்ந்து மூக்கின் நுனியையே பார்த்துக் கொண்டு, சுவாசப்பயிற்சிகளைச் செய்கிறான். இப்பயிற்சிகள் உள்மூச்சையும், வெளிமூச்சையும் கட்டுப்படுத்தி, பிறகு அவ்விரண்டையும் நிறுத்திவிடுவதைப் பற்றியதாகும். இவை பூரகம், கும்பகம் மற்றும் ரேசகம் என்று அறியப்படுகின்றன. இவ்விதமாக யோகியானவன் பெளதிக பற்றுகளிலிருந்து தன் மனதைக் கட்டுப்படுத்தி, மனதின் ஆசைகளையெல்லாம் விட்டு விடுகிறான். மனது காம இச்சைகளுக்கு அடிமைப்பட்டவுடனேயே அது புலன்நுகர்வு சுகத்தை நோக்கி அலையத் துவங்குகிறது. யோகியானவன் அவ்வாறு அலையும் மனதை உடனே தன் பக்கம் இழுத்து, ஆழ்மனதில் அதைப் பூட்டி வைக்க வேண்டும்.
பதம் 7.15.34 : ஒரு யோகி ஒழுங்காக இவ்வாறு யோகப் பயிற்சியை மேற்கொள்வதால், குறுகிய காலத்திலேயே, ஜுவாலையும், புகையும் இல்லாத ஒரு நெருப்பு போல், அவனுடைய மனம் ஒருமுகப்பட்டு தொல்லைகளிலிருந்து விடுபடுகிறது.
பதம் 7.15.35 : ஒருவனுடைய உணர்வு தீவிரமான பெளதிக ஆசைகளால் களங்கமடையாமல் இருக்கும் பொழுது, அது எல்லாச் செயல்களிலும் சலனமற்றதாயும், அமைதியுடையதாயும் ஆகிறது. ஏனெனில் அந்நிலையில் ஒருவன் நித்தியமான ஆனந்த வாழ்வில் நிலைபெற்றவனாகிறான். ஒருமுறை அந்த படித்தரத்தில் நிலைபெற்ற ஒருவன் பெளதிக செயல்களுக்குத் திரும்புவதேயில்லை.
பதம் 7.15.36 : துறவு வாழ்வை ஏற்றுக் கொள்பவன் தர்மம், அர்த்தம், காமம் என்ற பெளதிக வாழ்வின் மூன்று கொள்கைகளை விட்டு விடுகிறான். முதலில் சந்நியாச வாழ்வை ஏற்றுக் கொண்டு, பிறகு மீண்டும் இத்தகைய பௌதிக செயல்களுக்கே திரும்பி வருபவன் தன் சொந்த வாந்தியை உண்பவன் (வாந்தாசீ) என்று அழைக்கப்பட வேண்டியவனாவான். உண்மையில் இந்தகைய ஒருவன் வெட்கமற்றவனாவான்.
பதம் 7.15.37 : உடலானது மரணத்திற்கு உட்பட்டது என்றும், பிறகு அது மலமாகவோ, கிருமிகளாகவோ அல்லது சாம்பலாகவோ மாறுகிறது என்றும் முதலில் கருதி, பிறகு மீண்டும் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதையே ஆத்மா என்று போற்றும் இத்தகைய சந்நியாசிகளை மிகப் பெரிய அயோக்கியர்களாகக் கருத வேண்டும்.
பதங்கள் 7.15.38 – 7.15.39 : கிருஹஸ்த ஆசிரமத்தில் வாழ்பவன் கட்டுப்பாட்டு விதிகளைக்கைவிடுவதும், ஒரு பிரம்மச்சாரி குருவின் பராமரிப்பில் வாழும் பொழுது பிரம்மச்சரிய விரதங்களைப் பின்பற்றாதிருப்பதும், வானப்பிரஸ்தன் கிராமத்தில் வாழ்ந்து கொண்டு பெயரளவேயான சமூகச் செயல்களில் ஈடுபட்டிருப்பதும், ஒரு சந்நியாசி புலன் நுகர்வில் பற்றுக் கொண்டிருப்பதும் கேவலமான விஷயங்களாகும். இவ்வாறு செயற்படுபவனை மிகவும் கடைப்பட்ட மதத் துரோகியாகக் கருத வேண்டும். இத்தகைய ஒரு வேஷதாரி பரமபுருஷரின் புறச்சக்தியால் குழப்பமடைந்தவனாவான். இத்தகைய ஒருவனை எல்லா அந்தஸ்துகளிலிருந்தும் விலக்கிவிட வேண்டும். அல்லது அவனிடம் இரக்கம் கொண்டு, சாத்தியமானால் அவன் தன் பழைய நிலையை அடைவதற்குத் தேவையானதை அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பதம் 7.15.40 : மனித ரூபத்திலுள்ள உடலானது, உன்னத நிலையிலுள்ள ஆத்மாவையும், பரமபுருஷராகிய பரமாத்மாவையும் புரிந்து கொள்வதற்காகவே உள்ளது. முன்னேற்றமான அறிவினால் தூய்மையடையும் பொழுது இவ்விருவரையும் ஒருவனால் புரிந்து கொள்ள முடியும். அப்படியிருக்க, எதற்காக, யாருக்காக பேராசை கொண்ட ஒரு மூடன் புலன் சுகத்திற்காக உடலைப் பேணி வளர்க்கிறான்?
பதம் 7.15.41 : அறிவில் முன்னேறியுள்ள ஆன்மீகிகள், பரமபுருஷரின் ஆணைப்படி செய்யப்பட்டுள்ள உடலை ஒரு தேருடன் ஒப்பிடுகின்றனர். புலன்கள் குதிரைகளுக்கு ஒப்பாகும். புலன்களின் எஜமானரான மனம் கடிவாளங்களுக்கு ஒப்பாகும். அடைய வேண்டிய இலக்குகள் புலன் பொருட்களாகும்; புத்தி தேரோட்டியாகும்; மற்றும் உடல் முழுவதிலும் பரவியுள்ள உணர்வானது இந்த ஜடஉலக பந்தத்திற்குக் காரணமாகும்
பதம் 7.15.42 : உடலுக்குள் சுழலும் பத்துவிதமான காற்றுகள், தேர்ச்சக்கரங்களின் ஆரக்கால்களுக்கு ஒப்பிடப்படுகின்றன. சக்கரத்தின் மேற்பாகமும், கீழ்ப்பாகமும் தர்மம் என்றும் அதர்மம் என்றும் அழைக்கப்படுகின்றன. தேகாபிமானத்திலுள்ள ஜீவராசி தேரின் உரிமையாளனாவான். வேத மந்திரமான பிரணவம் வில்லாகும். தூய ஜீவராசி அம்பாவான். பரமபுருஷர் இலக்காவார்.
பதங்கள் 7.15.43 – 7.15.44 : பந்தப்பட்ட நிலையில், ஒருவனுடைய எண்ணங்கள் சிலசமயம் ரஜோ மற்றும் தமோ குணங்களால் களங்கமடைகின்றன. இக்குணங்கள் பற்று, பகை, பேராசை, வருத்தம், மோகம், பயம், மதம், பொய்க் கெளரவம், அவமரியாதை, குற்றங்கள் கண்டுபிடித்தல், வஞ்சகம், பொறாமை, பொறுமையின்மை, தீவிர உணர்ச்சி, குழப்பம், பசி மற்றும் உறக்கம் ஆகியவற்றினால் வெளிப்படுத்தப்படுகின்றன. இவையனைத்தும் எதிரிகளாகும். சிலசமயம் ஒருவனுடைய எண்ணங்கள் சத்வ குணத்தினாலும் மாசுபடுத்தப்படுகின்றன.
பதம் 7.15.45 : ஒருவன் தனது முழு கட்டுப்பாட்டில் இல்லாத வெவ்வேறு பகுதிகளுடனும், அவற்றிற்குரிய பொருட்களுடனும் கூடிய ஒரு ஜட உடலை ஏற்றுக் கொண்டுள்ள வரை, அவன் தனக்கும் மேலானவரான தனது ஆன்மீக குரு மற்றும் அவருக்கு முன்னிருந்தவர்களின் தாமரைப் பாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுடைய கருணையால் அறிவாகிய கத்தியை ஒருவனால் கூர்மையாக்கிக் கொள்ள முடியும். பிறகு பரமபுருஷரின் கருணையாகிய சக்தியினால் மேற்கூறிய எதிரிகளை ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும். இவ்விதமாக பக்தனானவன் தன் சொந்த உன்னத ஆனந்தத்தில் கலந்துவிட வேண்டும். அதன்பிறகு அவனால் தன் உடலை விட்டுவிட்டு, தனது ஆன்மீக சொரூபத்தை திரும்பப் பெறமுடியும்.
பதம் 7.15.46 : ஒருவன் அச்யுதரிடமும், பலதேவரிடமும் சரணடைய வேண்டும். இல்லையெனில், பெளதிக களங்கத்திற்கு உட்படக் கூடியவையும், முறையே குதிரைகளாகவும், சாரதியாகவும் செயற்படுபவையுமான புலன்களும், புத்தியும், கவனக்குறைவினால், தேர்போல் செயற்படும் உடலை, புலன்நுகர்வு என்ற வழிக்குக் கொண்டு வந்துவிடுகின்றன. இவ்வாறாக விஷயம் (உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல்) என்ற அயோக்கியர்களால் மீண்டும் கவரப்படும் பொழுது, குதிரைகளும், சாரதியும் பௌதிக வாழ்வெனும் இருண்ட கிணற்றுக்குள் தள்ளப்பட்டு, ஆபத்தானதும், மிகவும் பயங்கரமானதுமான பிறவிச் சக்கரத்தில் மீண்டும் ஒருவன் புகுத்தப்படுகிறான்.
பதம் 7.15.47 : வேதங்களின்படி, ப்ரவ்ருத்தி மற்றும் நிவ்ருத்தி என்ற இருவகையான செயல்கள் உள்ளன. தாழ்ந்த பெளதிக நிலையிலிருந்து உயர்ந்த பெளதிக நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்வது ப்ரவ்ருத்தி செயலாகும். ஆனால் பெளதிக ஆசைகளை நிறுத்திவிடுவது நிவ்ருத்தி எனப்படுகிறது. ப்ரவ்ருத்தி செயல்களின் மூலமாக பெளதிக பந்தத்தினால் ஏற்படும் துன்பங்களை ஒருவன் அனுபவிக்கிறான். ஆனால் நிவ்ருத்தி செயல்களினால் ஒருவன் புனிதமடைந்து, நித்தியமான ஆனந்த வாழ்வை அனுபவிக்கத் தகுதியுடையவன் ஆகிறான்.
பதங்கள் 7.15.48 – 7.15.49 : அக்னி-ஹோத்ர-யக்ஞம், தர்ச-யக்ஞம், பூர்ணமாஸ-யக்ஞம், சாதுர்மாஸ்ய-யக்ஞம், பசு-யக்ஞம் மற்றும் ஸோம-யக்ஞம் எனப்படும் எல்லாச் சடங்குகளும், யக்ஞங்களும் பெளதிக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செய்யப்படுகின்றன. இத்தகைய யக்ஞங்களில் குறிப்பாக உணவுத் தானியங்களைப் போன்ற பல விலையுயர்ந்த பொருட்கள் அக்னிக்கு இரையாக்கப்படுவதுடன், மிருகங்களும் பலி கொடுக்கப்படுகின்றன. இத்தகைய யக்ஞங்களைச் செய்தல், விஸ்வதேவரை வழிபடுதல், பலிஹரண சடங்கைச் செய்தல் ஆகிய இவையே வாழ்வின் இலட்சியம் என்று நம்பப்படுகின்றன. மேலும் தேவர்களின் ஆலயங்களை நிர்மாணித்தல், சத்திரங்களையும், தோட்டங்களையும் நிர்மாணித்தல், தண்ணீர் விநியோகத்திற்குக் கிணறு வெட்டுதல், உணவு விநியோகித்திற்கு விடுதிகள் அமைத்தல், மற்றும் சமூக நலனுக்குரிய செயல்களைச் செய்தல் ஆகிய இவையெல்லாம் பெளதிக ஆசைகளில் பற்றுக்கொண்டுள்ளதன் அறிகுறிகளாகும்.
பதங்கள் 7.15.50 – 7.15.51 : யுதிஷ்டிர மகாராஜனே, வால் கோதுமை (பார்லி), எள் போன்ற உணவுத் தானியங்களும், நெய்யும் வேள்வித் தீயில் நிவேதனம் செய்யப்படும் பொழுது, அவை விண்ணுலக புகையாக மாறுகின்றன. அப்புகை ஒருவனை துமா, ராத்ரி, கிருஷ்ணபக்ஷம், தக்ஷிணம் மற்றும் இறுதியாக சந்திரன் போன்ற உயர்கிரக அமைப்புகளுக்கு படிப்படியாக உயர்த்துகின்றது. ஆனால் இத்தகைய யாகங்களைச் செய்தவர்கள் பிறகு பூமிக்கே திரும்பி வந்து மூலிகைகளாகவும், கொடிகளாகவும், காய்கறிகளாகவும், உணவுத் தானியங்களாகவும், மாறுகின்றனர். இவை வெவ்வேறு ஜீவராசிகளால் உண்ணப்பட்டு, விந்துவாக மாற்றப்பட்டு, பெண்ணின் உடல்களுக்குள் புகுத்தப்படுகின்றன. இவ்வாறாக ஒருவன் திரும்பத் திரும்ப பிறவிகளை எடுக்கிறான்.
பதம் 7.15.52 : இருப்பிறப்பெய்திய பிராமணன் ஒருவன் (த்விஜ) தன் பெற்றோர்களின் கருணையால், கார்பாதானம் என்ற புனிதச் சடங்கின் மூலமாக தன்னுடைய வாழ்வைப் பெறுகிறான். அந்திம கிரியை (அந்த்யேஷ்டி-க்ரியா) எனப்படும் வாழ்வின் கடைசி கட்டம் வரை செய்யப்படவேண்டிய மற்ற புனிதப்படுத்தும் முறைகளும் உள்ளன. இவ்வாறாக தகுதியுள்ள ஒரு பிராமணன் காலப்போக்கில் பெளதிக செயல்களிலும், யக்ஞங்களிலும் விருப்பற்றவன் ஆகிறான். மாறாக, அவன் முழு அறிவுடன், ஞானத் தீயினால் பிரகாசிக்கச் செய்யப்படும் செயற்புலன்களில் தனது இந்திரிய சுகங்களை அர்ப்பணித்து விடுகிறான்.
பதம் 7.15.53 : ஏற்றுக் கொள்வதா அல்லது விலக்கி விடுவதா என்ற எண்ண அலைகளால் மனம் எப்பொழுதும் சஞ்சலமடைகிறது. எனவே புலன்களின் எல்லாச் செயல்களையும் மனதிலும், மனதைத் தன் வார்த்தைகளிலும் ஒருவன் அர்ப்பணித்துவிட வேண்டும். பிறகு வார்த்தைகளை ஒருவன் எழுத்துக்களின் மொத்தத்திலும், எழுத்துக்களின் மொத்தத்தை சுருக்கமான ஓம்கார ரூபத்திலும் அர்ப்பணித்துவிட வேண்டும். ஓம்காரத்தைப் புள்ளி வடிவுலுள்ள பிந்துவிலும், பிந்துவை ஒலி அதிர்விலும், அந்த ஒலி அதிர்வைப் பிராணவாயுவிலும் அர்ப்பணித்துவிட வேண்டும். பிறகு எஞ்சியுள்ள ஜீவராசியைப் பரமனான பிரம்மனில் அர்ப்பணித்துவிட வேண்டும். இதுவே அர்ப்பணம் செய்யும் முறையாகும்.
பதம் 7.15.54 : முன்னேறிச் செல்லும் ஜீவராசி மேலே செல்லும் வழியில் நெருப்பு, சூரியன், பகல், பகலின் முடிவு, சுக்ல பட்சம், பெளர்ணமி, மற்றும் சூரியன் வடதிசையைக் கடத்தல், அவற்றின் அதிதேவதைகள் ஆகியவற்றினுள் புகுந்து செல்கிறான். பிறகு அவன் பிரம்மலோகத்தில் நுழைந்து, பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு வாழ்வை அனுபவிக்கிறான். கடைசியாக அவனுடைய பௌதிக பதவி ஒரு முடிவுக்கு வருகிறது. பிறகு அவன் ஒரு சூட்சும பதவிக்கு வருகிறான். அதிலிருந்து அவன் காரண பதவியை அடைந்து, கடந்த நிலைகளுக்கெல்லாம் சாட்சியமாக விளங்குகிறான். இந்த காரண நிலை அழிந்ததும் அவன் தனது தூய நிலையை அடைகிறான். அந்நிலையில் அவன் தன்னைப் பரமாத்மாவுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறான். இவ்விதமாக அந்த ஜீவராசி உன்னதமானவன் ஆகிறான்.
பதம் 7.15.55 : தன்னுணர்வு பெறுவதற்குப் படிப்படியாக உயரும் இந்தமுறை, பூரண உண்மையை உண்மையாக அறிந்தவர்களுக்குரிய முறையாகும். தேவ-யானம் எனப்படும் இவ்வழியில் தொடர்ந்து பிறவிகளை எடுத்தபின், ஒருவன் ஒன்றன்பின் ஒன்றாக இந்நிலைகளை அடைகிறான். எல்லா பெளதிக ஆசைகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்ட ஒருவன், தன்னில் (ஆத்மாவில்) நிலைபெற்றிருப்பதால், அவன் தொடர்ச்சியான பிறப்பையும், இறப்பையும் சந்திக்கும் இவ்வழியைக் கடக்க வேண்டிய அவசியமில்லை.
பதம் 7.15.56 : ஒரு ஜட உடலில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும், பித்ரு-யானம், மற்றும் தேவ-யானம் எனப்படும் மார்கங்களை முழுமையாக அறிந்திருப்பதால், வேதக் கல்வியினால் ஞானக் கண்களைப் பெற்றுள்ள ஒருவன் இந்த ஜட உலகில் குழப்பம் அடைவதேயில்லை.
பதம் 7.15.57 : எவர் உள்ளும், புறமுமாகவும், அனைத்து ஜீவராசிகளுக்கும், அனைத்திற்கும் ஆரம்பமும் முடிவுமாகவும், அனுபவிக்கப்படுவதாயும், உயர்ந்தது தாழ்ந்தது ஆகிய அனைத்தையும் அனுபவிப்பவராகவும் இருக்கிறரோ, அவரே பூரண உண்மையாவார். அவர் எப்பொழுதும் அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும், சித்தரிப்பாகவும், சித்தரிக்கப்படும் பொருளாகவும், இருளாகவும், ஒளியாகவும் இருக்கிறார். இவ்வாறாக பரமபுருஷராகிய அவரே அனைத்துமாவார்.
பதம் 7.15.58 : கண்ணாடியில் பிரதிபலிக்கும் சூரியனின் பிரதிபலிப்பைப் பொய்யென்று ஒருவன் கருதக்கூடும் என்றாலும், அதற்கு அதன் உண்மையான இருப்பு இருக்கிறது. அதற்கிணங்க, கற்பனா ஞானத்தினால் உண்மை நிலை இல்லை என்று நிரூபிப்பது மிகவும் கடினம்.
பதம் 7.15.59 : இவ்வுலகில் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் இருக்கின்றன. ஆனால் உடலானது இவற்றின் ஒரு பிரதிபலிப்போ, சேர்க்கையோ அல்லது உருமாற்றமோ அல்ல. உடலும் அதன் கூட்டுப்பொருட்களும் வேறுபட்டவையல்ல, ஒன்றானவையுமல்ல. இத்தகைய கொள்கைகள் எல்லாம் உண்மையல்லாதவை.
பதம் 7.15.60 : உடல் பஞ்ச பூதங்களாலானாது என்பதால், சூட்சுமமான புலன் பொருட்களின்றி அதனால் இருக்க முடியாது. ஆகவே உடல் பொய்யானது என்பதால், புலன் பொருட்களும் பொய்யானவை அல்லது தற்காலிகமானவையே.
பதம் 7.15.61 : ஒரு பொருளிலிருந்து அதன் பாகங்களைப் பிரித்த பிறகு, பிரிக்கப்பட்ட இவற்றிற்கிடையில் ஒற்றுமை இருக்கிறது என்று ஏற்றுக் கொள்வதானது மாயை என்று அழைக்கப்படுகிறது. கனவு காணும் பொழுது, விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் இடையில் ஒருவன் ஒரு பிரிவை ஏற்படுத்துகிறான். இத்தகைய ஒரு மனநிலையில் தான் ஏற்கப்பட வேண்டிய விஷயங்களையும், விலக்கப்பட வேண்டிய விஷயங்களையும் கொண்ட சாஸ்திர விதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
பதம் 7.15.62 : வாழ்விலும், செயலிலும், பொருளிலும் உள்ள ஒருமையையும், ஆத்மாவானது எல்லாச் செயல் விளைவுகளிலிருந்தும் வேறுபட்டது என்பதையும் உணர்ந்த பிறகு, மனக்கற்பனையாளன் (முனிவன்) தான் பெற்ற தன்னுணர்வுக்கேற்ப, விழிப்பு, கனவு மற்றும் உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் விட்டுவிடுகிறான்.
பதம் 7.15.63 : ஒரு துணியிலுள்ள நூல் அத்துணியிலிருந்து வேறுபட்டதாகும். அது போலவே, காரணமும் விளைவும் ஒன்றே என்பதையும், இருமை (வேற்றுமை), பொய்யானது என்பதையும் புரிந்து கொள்ளும் பொழுது, ஒருவன் பாவாத்வைதம் எனப்படும் ஒருமை உணர்வை அடைகிறான்.
பதம் 7.15.64 : யுதிஷ்டிரரே (பார்த்த), மனம், வாக்கு, காயம் ஆகியவற்றினால் செய்யப்படும் எல்லாச் செயல்களையும் ஒருவன் நேரடியாக பரமபுருஷரின் சேவைக்காக அர்ப்பணித்துவிடும் பொழுது, அவன் க்ரியாத்வைதம் எனப்படும் செயல்களின் ஒருமையை அடைகிறான்.
பதம் 7.15.65 : ஒருவனுடைய இறுதி இலட்சியமும் விருப்பமும், அவனுடைய மனைவி, மக்கள், உறவினர்கள், மற்றெல்லா ஜீவராசிகள் ஆகியோரின் இறுதி இலட்சியமும் விருப்பமும் ஒன்றாக இருக்கும் பொழுது, அது த்ராவ்யாத்வைதம், அல்லது விருப்பத்தின் ஒற்றுமை எனப்படுகிறது.
பதம் 7.15.66 : யுதிஷ்டிர மகாராஜனே, ஆபத்தில்லாத வழக்கமான சூழ்நிலைகளில், ஒரு மனிதன் தனது சமூக நிலைக்கேற்ப, தனக்குத் தடைவிதிக்கப்படாத தேவையான பொருட்கள், முயற்சிகள், முறைகள், வசிப்பிடம் ஆகியவற்றைக் கொண்டு, தனக்கென விதிக்கப்பட்ட செயல்களைச் செய்ய வேண்டும், வேறெந்த வழியிலும் அல்ல.
பதம் 7.15.67 : அரசே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு பக்தனாக நிலைத்திருப்பதற்காகவாவது, இந்த உபதேசங்களுக்கும், வேத இலக்கியத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிற உபதேசங்களுக்கும் ஏற்ப, தனக்கென விதிக்கப்பட்ட வர்ணாஸ்ரம கடமைகளை ஒருவன் செய்ய வேண்டும். இவ்வாறாக இல்லறத்தில் இருக்கும் பொழுதுகூட ஒருவனால் பகவானுடைய கதியை அடைய முடியும்.
பதம் 7.15.68 : யுதிஷ்டிர மகாராஜனே, பரமபுருஷருக்கு நீங்கள் ஆற்றிய சேவையின் காரணத்தால், பாண்டவர்களாகிய நீங்கள் எண்ணற்ற அரசர்களாலும், தேவர்களாலும் விளைவிக்கப்பட்ட பேராபத்துகளை வென்றீர்கள் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களைச் சேவிப்பதன் மூலம், யானைகளைப் போன்ற சக்திவாய்ந்த எதிரிகளை வென்று யாகப் பொருட்களை நீங்கள் சேகரீத்தீர்கள். அவருடைய அருளால் நீங்கள் பௌதிக ஈடுபாடுகளிலிருந்து விடுதலை அடைவீர்களாக.
பதம் 7.15.69 : மிக நீண்ட காலத்திற்கு முன்பு, வேறொரு மஹா-கல்பத்தில் (பிரம்மாவின் யுகத்தில்), நான் உபபர்ஹணன் என்ற கந்தர்வனாக இருந்தேன். மற்ற கந்தர்வகளால் நான் மிகவும் மதிக்கப்பட்டேன்.
பதம் 7.15.70 : எனக்கு அழகிய முகமும், இனிமையும், கவர்ச்சியும் நிறைந்த தேகஅம்சங்களும் இருந்தன. மலர் மாலைகளாலும், சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த நான் என்னுடைய நகரத்து பெண்களுக்கு மிகவும் பிரியமானவனாக இருந்தேன். இவ்விதமாக நான் எப்பொழுதும் காம இச்சைகளால் பீடிக்கப்பட்டு, சஞ்சலம் அடைந்தவனாக இருந்தேன்.
பதம் 7.15.71 : ஒருசமயம் தேவர்களின் சபையில், பரமபுருஷரை துதித்துப் போற்றுவதற்கு ஒரு சங்கீர்த்தன விழா நடைபெற்றது. அதில் பங்கேற்க கந்தவர்களும், அப்ஸரஸ்களும் பிரஜாபதிகளால் அழைக்கப்பட்டனர்.
பதம் 7.15.72 : நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார்: அவ்விழாவிற்கு அழைக்கப்பட்டதால் நானும் அதில் கலந்து கொண்டேன். நான் பெண்களால் சூழப்பட்டபடி தேவர்களின் பெருமைகளை வாத்தியத்துடன் பாட ஆரம்பித்தேன். இதனால் பிரபஞ்ச விவகாரங்களின் பொறுப்பாளிகளான பிரஜபாதிகள் (சக்தி வாய்ந்த தேவர்கள்), “நீ இக்குற்றத்தைப் புரிந்ததனால், அழகை இழந்து உடனே ஒரு சூத்திரனாக ஆகக் கடவாய்” என்ற சொற்களால் என்னைச் சபித்தனர்.
பதம் 7.15.73 : நான் ஒரு வேலைக்காரியின் கர்பத்தில் ஒரு சூத்திரனாகப் பிறவி எடுத்த போதிலும், வேத ஞானத்தில் தேர்ச்சி பெற்ற வைஷ்ணர்களின் சேவையில் நான் ஈடுபட்டிருந்தேன். அதன் பலனாக, நான் இப்பிறவியில் பிரம்மதேவரின் மகனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
பதம் 7.15.74 : பகவானின் புனித நாமத்தைப் பாடும் இந்த முறை மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், இதைக் கொண்டு குடும்பஸ்தர்களால்கூட துறவிகளால் அடையப்படும் முடிவான பலனை மிகவும் எளிதாக அடைந்துவிட முடியும். யுதிஷ்டிர மகாராஜனே, அந்த சமயமுறையை இப்பொழுது உமக்கு நான் விவரித்தேன்.
பதம் 7.15.75 : யுதிஷ்டிர மகாராஜனே, பாண்டவர்களாகிய நீங்கள் இவ்வுலகிலேயே பெரும் பாக்கியசாலிகள். ஏனெனில் பிரப்ஞசத்தின் எல்லாக் கிரகங்களையும் புனிதப்படுத்தக் கூடிய பற்பல சிறந்த முனிவர்கள் கூட சாதாரண மனிதர்கள் போல் உங்கள் வீட்டிற்கு வருகின்றனர். மேலும் பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் உங்களுடைய சகோதரர் போலவே உங்களுடைய வீட்டில் உங்களுடன் இரகசியமாக வாழ்கிறார்.
பதம் 7.15.76 : முக்தியையும், உன்னத ஆனந்தத்தையும் அடைவதற்காக மிகச் சிறந்த முனிவர்களாலும் நாடிச் செல்லப்படும் பரப்பிரம்மனாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உங்களுடைய நலம் விரும்பியாகவும், நண்பராகவும் ஒன்றுவிட்ட சகோதரராகவும், ஆத்மாவும் உயிருமாகவும் வழிபாட்டுக்குரிய வழிகாட்டியாகவும், மற்றும் ஆன்மீக குருவாகவும் செயற்படுவது மிகவும் அற்புதமாக இருக்கிறது.
பதம் 7.15.77 : எவருடைய நிஜ ரூபத்தை, பெருமதிப்பிற்குரிய பிரம்மதேவர் மற்றும் சிவபெருமான் போன்றவர்களால்கூட புரிந்து கொள்ள முடியாதோ, அதே பரமபுருஷர் இப்பொழுது இங்கு எழுந்தருளியுள்ளார். பக்தர்களின் உறுதியான சரணாகதியின் காரணத்தால் அவர்களால் அவர் உணரப்படுகிறார். தமது பக்தர்களைக் காப்பவரும், மௌனவிரதம், பக்தித் தொண்டு, பெளதிக செயல்களின் நிறுத்தம் ஆகியவற்றினால் பூஜிக்கப்படுபவருமான அதே பரமபுருஷர் நம்மிடம் திருப்தியடைவராக.
பதம் 7.15.78 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக பரத வம்சத்தில் சிறந்த யுதிஷ்டிர மகாராஜன், நாரத முனிவரின் வர்ணனைகளிலிருந்து அனைத்தையும் கற்றறிந்தார். இவ்வுபதேசங்களைக் கேட்ட பிறகு, அவர் தன் இதயத்தில் பேரானந்தத்தை உணர்ந்தார். பிறகு மிகவும் பரவசத்துடனும், அன்புடனும், பாசத்துடனும் அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டார்.
பதம் 7.15.79 : கிருஷ்ணராலும், யுதிஷ்டிர மகாராஜனாலும் பூஜிக்கப்பெற்ற நாரதமுனிவர் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். தனது ஒன்றுவிட்ட சகோதரராகிய ஸ்ரீ கிருஷ்ணர், பரமபுருஷர் என்பதைக் கேட்டு யுதிஷ்டிர மகாராஜன் மிகவும் ஆச்சரியமடைந்தார்.
பதம் 7.15.80 : தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் உட்பட; இப்பிரபஞ்சத்தின் அனைத்து லோகங்களிலும் உள்ள அசைவன, அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளும் தட்ச புத்திரிகளிலிருந்தே உற்பத்தி செய்யப்ewrq7பட்டனர். அவர்களையும், அவர்களது வெவ்வேறு வம்சங்களையும் இப்பொழுது நான் விவரித்தேன்.