அத்தியாயம் – 12
பரிபூரண சமுதாயம் :
நான்கு ஆன்மீகப் பிரிவுகள்
பதம் 7.12.1
ஸ்ரீ-நாரத உவாச
ப்ரஹ்மசாரி குரு-குலே வஸன் தாந்தோ குரோர் ஹிதம்
ஆசரன் தாஸவன் நீசோ குரௌ ஸுத்ருட-ஸௌஹ்ருத:

ஸ்ரீ-நாரத: உவாச—ஸ்ரீ நாரத முனி கூறினார்; ப்ரஹ்மசாரீ—ஒரு பிரம்மச்சாரி (குருகுலத்தில் வாழ்பவன்); குரு-குலே—குருகுலத்தில்; வஸன்—வாழ்ந்து கொண்டு; தாந்த:—தொடர்ந்து புலனடக்கத்தைப் பயின்று; குரோ: ஹிதம்—குருவின் நன்மைக்காக மட்டுமே (சொந்த நன்மைக்காக அல்ல); ஆசரன்—பயின்று கொண்டு; தாஸ-வத்—மிகவும் அடக்கத்துடன் ஓர் அடிமைப்போல்; நீச:—கீழ்ப்படிந்தவனாய்; குரௌ—குருவிடம்; ஸு-த்ருட—திடமாக; ஸௌஹ்ருத:—நண்பனாக அல்லது நலம் விரும்பியாக.

நாரதமுனி கூறினார்: ஒரு மாணவன் தன் புலன்களை முழுமையாக அடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவன் ஆன்மீக குருவிடம் அடக்கமாகவும் உறுதியான நட்புக் கொண்ட ஒரு மனோபாவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். பிரம்மச்சாரி சிறந்த விரதம் பூண்டு தன் குருவின் நன்மைக்காகவே குருகுலத்தில் வாழ வேண்டும்.

பதம் 7.12.2
ஸாயம் ப்ராதர் உபாஸீத குரு-அக்னி-அர்க-ஸுரோத்தமான்
ஸந்யே உபே ச யத-வாக் ஜபன் ப்ரஹ்ம ஸமாஹித:

ஸாயம்—மாலையில்; ப்ராத:—காலையில்; உபாஸீத—வழிபட வேண்டும்; குரு—ஆன்மீக குரு; அக்னி—அக்னி (யாகத்தினால்); அர்க—சூரியன்; ஸுர-உத்தமான்—மற்றும் புருஷோத்தமரான பகவான் விஷ்ணு; ஸந்யே—காலையிலும், மாலையிலும்; உபே—இரு வேளையிலும்; ச—மேலும்; யத-வாக்—பேசாமல் மௌனமாக; ஜபன்—உச்சரித்து; ப்ரஹ்ம—காயத்திரி மந்திரத்தை; ஸமாஹித:—முழுமையாக ஆழ்ந்து.

இரவு பகல் ஆகிய இரு சந்தி வேளைகளிலும், அதாவது காலையிலும் மாலையிலும் அவன் ஆன்மீக குரு, அக்னி, சூரிய தேவன், மற்றும் பகவான் விஷ்ணு ஆகியோரின் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்து, காயத்திரி மந்திரத்தை உச்சரித்து அவர்களை வழிபட வேண்டும்.

பதம் 7.12.3
சந்தாம்ஸி அதீயீத குரோர் ஆஹூதஸ் சேத் ஸுயந்த்ரித:
உபக்ரமே ‘வஸானே ச சரணெள சிரஸா நமேத்

சந்தாம்ஸி—ஹரே க்ருஷ்ண மகா மந்திரம், காயத்திரி மந்திரம் போன்ற வேத மந்திரங்களை; அதீயீத—ஒழுங்காக ஜபிக்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்; குரோ:—குருவிடமிருந்து; ஆஹூத:—அவரால் அழைக்கப்பட்டவனாய்; சேத்—இருந்தால்; ஸு-யந்த்ரித:—விசுவாசத்துடனும், நன்நடத்தையுடனும்; உபக்ரமே—ஆரம்பத்தில்; அவஸானே—(வேத மந்திரபாராயணத்தின்) முடிவில்; ச—மேலும்; சரணௌ—தாமரைப் பாதங்களில்; சிரஸா—தலையால்; நமேத்—வணக்கம் செலுத்த வேண்டும்.

மாணவன் ஆன்மீக குருவால் அழைக்கப்பட்டவனாய் வேத மந்திரங்களை ஒழுங்காகக் கற்றறிய வேண்டும். தினமும் தன் கல்வியைத் துவங்கும் முன்பாகவும், அதன் முடிவிலும் சீடன் மரியாதையுடன் தனது ஆன்மீக குருவிற்கு வணக்கம் செலுத்த வேண்டும்.

பதம் 7.12.4
மேகலாஜின-வாஸாம்ஸி ஜடா-தண்ட-கமண்டலூன்
பிப்ருயாத் உபவீதம் ச தர்ப-பாணிர் யதோதிதம்

மேகலா—புல்லாலான அரைக்கச்சையை; அஜின-வாஸாம்ஸி—மான்தோலாலான ஆடைகளை; ஜடா—ஜடாமுடி தரித்து; தண்ட—தண்டம்; கமண்டலூன்—மற்றும் கமண்டலம்; பிப்ருயாத்—அவன் (பிரம்மச்சாரி) எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் அல்லது அணிந்திருக்க வேண்டும்; உபவீதம் ச—மற்றும் ஒரு பூணூல்; தர்ப-பாணி:—புனிதப்படுத்தப்பட்ட தர்ப்பைப் புல்லைக் கையில் ஏந்தி; யதா உதிதம்—சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள போல்.

பிரம்மச்சாரி தர்ப்பைப் புல்லைக் கையில் ஏந்தி, மான் தோலை ஆடையாக அணிந்து, புல்லாலான அரைக் கச்சையை தினமும் அணிந்திருக்க வேண்டும். அவன் ஜடாமுடி தரித்து, தண்டமும், கமண்டலமும் ஏந்தியவனாய், சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது போல் ஒரு பூணூலையும் அணிந்திருக்க வேண்டும்.

பதம் 7.12.5
ஸாயம் ப்ராதஸ் சரேத் பைக்ஷ்யம் குரவே தன் நிவேதயேத்
புஞ்ஜீத யதி அனுக்ஞாதோ நோ சேத் உபவஸேத் க்வசித்

ஸாயம்—மலையில்; ப்ராத:—காலையில்; சரேத்—வெளியே செல்ல வேண்டும்; பைக்ஷ்யம்—பிச்சை எடுக்க; குரவே—குருவிற்கு; தத்—தான் சேகரித்ததை எல்லாம்; நிவேதயேத்—அர்ப்பணிக்க வேண்டும்; புஞ்ஜீத—அவன் உட்கொள்ள வேண்டும்; யதி—இருந்தால்; அனுக்ஞாத:—(குருவால்) உத்தரவிடப்பட்டு; நோ—இல்லை; சேத்—என்றால்; உபவஸேத்—உபவாசம் இருக்க வேண்டும்; க்வசித்—சிலசமயங்களில்.

அந்த பிரம்மச்சாரி காலையிலும் மாலையிலும் வெளியே சென்று யாசித்து, கிடைத்ததை எல்லாம் தனது ஆன்மீக குருவிடம் ஒப்படைத்து விட வேண்டும். உணவருந்தும்படி ஆன்மீக குருவால் உத்தரவிடப்பட்டால் மட்டுமே அவன் உணவை உட்கொள்ள வேண்டும்; ஆன்மீக குரு அவ்வாறு உத்தரவு இடவில்லையென்றால் சிலசமயம் அவன் உபவாசம் இருக்க வேண்டியிருக்கும்.

பதம் 7.12.6
ஸுசீலோ மித-புக் தக்ஷ: ஸ்ரத்தானோ ஜிதேந்ரிய:
யாவத்-அர்த்தம் வ்யவஹரேத் ஸ்த்ரீஷு ஸ்த்ரீ-நிர்ஜிதேஷு ச

ஸுசீல:—அடக்கத்துடனும், நன்னடத்தையுடனும்; மித-புக்—அதிகமாகவோ, குறைவாகவோ உண்ணாமல், தேவையானதை மட்டுமே உண்பவனாகவும்; தக்ஷ:—திறமைசாலியாகவும் அல்லது சோம்பேறித்தனமின்றி எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும்; ஸ்ரத்ததான:—சாஸ்திரம் மற்றும் ஆன்மீக குருவின் உபதேசங்களில் முழுநம்பிக்கை உள்ளவனாகவும்; ஜித-இந்ரிய:—புலன்களை முற்றிலும் அடக்கியவனாகவும்; யாவத்-அர்தம்—தேவையான அளவே; வ்யவஹரேத்—வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும்; ஸ்த்ரீஷு—பெண்களிடம்; ஸ்த்ரீ-நிர்ஜி தேஷு—பெண் வழிச்சென்று, பெண்களால் அடக்கியாளப்படுகின்ற; ச—மேலும்.

பிரம்மச்சாரியானவன் நன்நடத்தை உள்ளவனாகவும், அடக்கமாகவும், தேவைக்கு அதிகமாக சாப்பிடாதவனாகவும், சேகரித்தவனாகவும் இருக்க வேண்டும். அவன் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், சாமர்த்தியசாலியாகவும், குரு மற்றும் சாஸ்திரங்களின் உபதேசங்களில் முழு நம்பிக்கைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். இவ்வாறாக அவன் தன் புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தி, பெண்களுடனும், பெண்களால் அடக்கி ஆளப்படுபவர்களுடனும் தேவையான அளவுக்கு மட்டுமே சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பதம் 7.12.7
வர்ஜயேத் ப்ரமதா-காதாம் அக்ருஹஸ்தோ ப்ருஹத்-வ்ரத:
இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி அபி யதேர் மன:

வர்ஜயேத்—விட்டுவிட வேண்டும்; ப்ரமதா-காதாம்—பெண்களுடன் பேசுவதை; அக்ருஹஸ்த:—கிருஹஸ்த ஆசிரமத்தை ஏற்காதவன் (ஒரு பிரம்மச்சாரி அல்லது சந்நியாசி); ப்ருஹத்-வ்ரத:—மாறாத பிரம்மச்சரிய விரதத்தை ஏற்று; இந்த்ரியாணி—புலன்களை; ப்ரமாதீனி—கிட்டத்தட்ட எப்பொழுதும் அடக்க முடியாத; ஹரந்தி—அபகரித்து விடுகின்றன; அபி—கூட; யதே:—சந்நியாசியின்; மன:—மனதை.

பிரம்மச்சாரி ஒருவன், அல்லது கிருஹஸ்த ஆசிரமத்தை (இல்லற வாழ்வை) ஏற்றுக் கொள்ளாத ஒருவன், பெண்களுடன் பேசுவதையோ அல்லது பெண்களைப் பற்றி பேசுவதையோ கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும். புலன்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதால், துறவு வாழ்வை மேற்கொண்ட ஒரு சந்நியாசியின் மனதைக்கூட பெண்களால் சஞ்சலப்படுத்திவிட இயலும்.

பதம் 7.12.8
கேச-ப்ரஸாதனோன்மர்த-ஸ்னபனாப்யஞ்ஜனாதிகம்
குரு-ஸ்த்ரீபிர் யுவதிபி: காரயேன் நாம்தமனோ யுவா

கேச-ப்ரஸாதன—கேசத்தைச் சீவி விடுதல்; உன்மர்த—உடலை உருவிவிடுதல்; ஸ்னபன—நீராட்டுதல்; அப்யஞ்ஜன-ஆதிகம்—எண்ணெய் போன்றவற்றைத் தடவி உடலைத் தேய்த்து விடுதல்; குரு-ஸ்த்ரீபி:—ஆன்மீக குருவின் மனைவியால்; யுவதிபி:—மிகவும் இளமையான; காரயேத்—செய்ய அனுமதிக்க; ந—ஒருபோதும் கூடாது; ஆத்மன—தன் சொந்த பணிவிடைக்கு; யுவா—மாணவன் வாலிபனாக இருந்தால்.

ஆன்மீக குருவின் மனைவி இளமையானவளாக இருந்தால், அவள் பாசமுள்ள ஒரு தாய்போல் தன் கேசத்தைச் சீவிவிடுவதற்கும், எண்ணெய் தேய்த்துத் தன் உடலை உருவிவிடுவதற்கும், தன்னை நீராட்டுவதற்கும் இளமையான ஒரு பிரம்மச்சாரி அனுமதிக்கக் கூடாது.

பதம் 7.12.9
நனு அக்னி: ப்ரமதா நாம க்ருத-கும்ப-ஸம: புமான்
ஸுதாம் அபி ரஹோ ஜஹ்யாத் அன்யதா யாவத்-அர்த்த -க்ருத்

நனு—நிச்சயமாக; அக்னி:—நெருப்பு; ப்ரமதா—(ஆணின் மனதை சஞ்சலமடையச் செய்யும்) பெண்; நாம—பெயரே; க்ருத-கும்ப—வெண்ணெய்ப் பாத்திரம்; ஸம:—போல்; புமான்—ஓர் ஆண்; ஸுதாம் அபி—தன் மகளுடன் கூட; ரஹ:—தனிமையான ஓரிடத்தில்; ஜஹ்யாத்—சகவாசம் கொள்ளக் கூடாது; அன்யதா—மற்ற பெண்களுடன் கூட; யாவத்—முடிந்தவரை; அர்த-க்ருத்—தேவையானதே.

பெண் நெருப்புக்கு ஒப்பிடப்படுகிறாள். ஆண் வெண்ணெய் பாத்திரத்திற்கு ஒப்பிடப்படுகிறான். ஆகவே ஓர் தனிமையான ஓரிடத்தில் தன் சொந்த மகளுடன் சகவாசம் கொள்வதைக் கூட தவிர்க்க வேண்டும். அவ்வாறே, பிற பெண்களுடனான சகவாசத்தையும் அவன் தவிர்க்க வேண்டும். ஒருவன் முக்கியமான காரணத்திற்காக மட்டுமே பெண்களுடன் சகவாசம் கொள்ள வேண்டும். இல்லாவிடில் கூடாது.

பதம் 7.12.10
கல்பயித்வாத்மனா யாவத் ஆபாஸம் இதம் ஈஸ்வர:
த்வைதம் தாவன் ந விரமேத் ததோ ஹி அஸ்ய விபர்யய:

கல்பயித்வா—உறுதி செய்து கொண்டு; ஆத்மனா—தன்னுணர்வினால்; யாவத்—எதுவரை; ஆபாஸம்—(மூல உடலின் மற்றும் புலன்களின்) பிரதிபலிப்பை; இதம்—இந்த (உடலும், புலன்களும்); ஈஸ்வர:—மாயையிலிருந்து முற்றிலும் விடுபட்டு; த்வைதம்—இருமை; தாவத்—அதுவரை; ந—இல்லை; விரமேத்—பார்த்து; தத:—இத்தகைய இருமையால்; ஹி—உண்மையில்; அஸ்ய—அவனுடைய; விபர்ய:—எதிரிடையான செயல்.

ஒரு ஜீவராசி முழுமையான தன்னுணர்வைப் பெறாதவரை, மூல உடலின் மற்றும் புலன்களின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமேயான தன்னுடைய உடலே தான் என்ற தவறான அபிப்பிராயத்திலிருந்து அவன் விடுபடாதவரை, இருமை என்ற எண்ணத்திலிந்து அவனால் விடுபட முடியாது. இவ்வாறாக அவனது புத்தி தடுமாற்றத்தின் காரணத்தால் அவனது வீழ்ச்சிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

பதம் 7.12.11
ஏதத் ஸர்வம் க்ருஹஸ்தஸ்ய ஸமாம்னாதம் யதேர் அபி
குரு-வ்ருத்திர் விகல்பேன க்ருஹஸ்தஸ்யர்து-காமின:

ஏதத்—இது; ஸர்வம்—எல்லாம்; க்ருஹஸ்தஸ்ய—ஒரு குடும்பஸ்தனுக்கு; ஸமாம்னாதம்—விவரிக்கப்பட்டுள்ளது; யதே: அபி—துறவு நிலையில் உள்ளவருக்குக் கூட; குரு-வ்ருத்தி விகல்பேன—ஆன்மீக குருவின் கட்டளைகளைப் பின்பற்றுவதற்கு; க்ருஹஸ்தஸ்ய—குடும்பஸ்தனின்; ருது-காமின:—சந்ததிவிருத்திக்குச் சாதகமான காலத்தில் மட்டுமே உடலுறவை ஏற்றுக் கொள்ளுதல்.

சட்டதிட்டங்கள் அனைத்துமே குடும்பஸ்தர்களுக்கும், துறவிகளான சந்நியாசிகளுக்கும் சமமாகப் பொருந்துகின்றன. ஆனால் ஒரு கிருஹஸ்தனுக்கு, சந்ததியை விருத்தி செய்வதற்கு அனுகூலமான காலத்தில், உடலுறவில் ஈடுபடுவதற்கு ஆன்மீக குருவால் அனுமதி அளிக்கப்படுகிறது.

பதம் 7.12.12
அஞ்ஜனாப்யஞ்ஜனோன்மர்த-ஸ்த்ரி-அவலேகாமிஷம் மது
ஸ்ரக்-கந்த-லேபாலங்காராம்ஸ் த்யஜேயுர் யே ப்ருஹத்-வ்ரதா:

அஞ்ஜன—கண்களை அலங்கரிப்பதற்குரிய மை அல்லது பவுடர்; அப்யஞ்ஜன—தலையை உருவி விடுதல்; உன்மர்த—உடலை உருவி விடுதல்; ஸ்த்ரீ-அவலேக—ஒரு பெண்னைப் பார்வையிடுதல் அல்லது ஒரு பெண்ணின் படத்தை வரைதல்; ஆமிஷம்—மாமிசம் உண்ணுதல்; மது—மது அல்லது தேன் அருந்துதல்; ஸ்ரக்—மலர் மாலைகளால் உடலை அலங்கரித்தல்; கந்த-லேப—வாசனைத் தைலங்களை உடலில் தடவிக் கொள்ளுதல்; அலங்காரான்—ஆபரணங்களால் உடலை அலங்கரித்தல்; த்யஜேயு:—விட்டுவிட வேண்டும்; யே—அவர்கள்; ப்ருஹத்-வ்ரதா:—பிரம்மச்சரிய விரதத்தை ஏற்றுள்ள.

பிரம்மச்சரிய விரதம் பூண்டுள்ள பிரம்மச்சாரிகளோ அல்லது கிருஹஸ்தர்களோ கீழ்க்கண்ட செயல்களில் ஈடுபடக் கூடாது: முகத்திற்குப் பவுடரோ அல்லது கண்களுக்கு மையோ இட்டுக் கொள்ளக் கூடாது. எண்ணெய்யால் தலையையோ, உடலையோ கைகளால் உருவிவிடக்கூடாது. ஒரு பெண்ணைப் பார்க்கவோ, பெண்ணின் படத்தை வரையவோ, மாமிசம் உண்ணவோ, மது அருந்தவோ கூடாது. மேலும் மலர் மாலைகளால் உடலை அலங்கரித்தல், உடலில் வாசனைத் தைலங்களைப் பூசிக் கொள்ளுதல், ஆபரணங்களால் உடலை அலங்கரித்துக் கொள்ளுதல் முதலியவைகளைக் கூட அவர்கள் விட்டு விட வேண்டும்.

பதங்கள் 7.12.13 – 7.12.14
உக்ஷித்வைவம் குரு-குலே த்விஜோ ‘தீத்யாவபுத்ய ச
த்ரயீம் ஸாங்கோபனிஷேதம் யாவத்-அர்தம் யதா-பலம்

தத்வா வரம் அனுக்ஞாதோ குரோ: காமம் யதீஸ்வர:
க்ருஹம் வனம் வா ப்ரவிசேத் ப்ரவ்ரஜேத் தத்ர வா வஸேத்

உஷித்வா—வசித்துக் கொண்டு; ஏவம்—இவ்வாறு; குரு-குலே—ஆன்மீக குருவின் கண்காணிப்பில்; த்வி-ஜ:—இருப்பிறப்பெய்தியவர்கள் (பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள்); அதீத்ய—வேத இலக்கியத்தைக் கற்று; அவபுத்ய—அதை நன்கு புரிந்து கொண்டு; ச—மேலும்; த்ரயீம்—வேத இலக்கியங்களை; ஸ-அங்க—பிற்சேர்க்கைகளுடன்; உபநிஷதம்—உபநிஷதங்களையும்; யாவத்-அர்த்தம்—முடிந்தவரை; யதா-பலம்—ஒருவனது திறமைக்கேற்ப அவனால் முடிந்தவரை; தத்வா—கொடுத்து; வரம்—தட்சிணையை; அனுக்ஞாத:—கேட்கப்பட்டு; குரோ:—ஆன்மீக குருவின்; காமம்—விருப்பங்களை; யதி—முடிந்தால்; ஈஸ்வர:—சாமர்த்தியமுள்ள; க்ருஹம்—இல்லற வாழ்வை; வனம்—வானப்பிரஸ்த வாழ்வை; வா—அல்லது; ப்ரவிசேத்—ஒருவன் ஏற்க வேண்டும்; ப்ரவ்ரஜேத்—அல்லது வெளியேற வேண்டும்; தத்ர—அங்கு; வா—அல்லது; வஸேத்—வசிக்க வேண்டும்.

இருபிறப்பெய்திய பிராமணன், க்ஷத்திரியன் அல்லது வைசியனொருவன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கேற்ப, ஆன்மீக குருவின் பராமரிப்பின் கீழ் குருகுலத்தில் வசிக்க வேண்டும். பிறகு அவன் தனது கல்வித் திறனுக்கேற்ப, எல்லா வேத இலக்கியங்களையும், அவற்றுடன் புராணங்களையும், உபநிஷதங்களையும் கற்றறிய வேண்டும். மாணவன் அல்லது சீடனொருவன் சாத்தியமானால் தன் குருவால் கேட்கப்படும் குரு தட்சிணையைக் கொடுக்க வேண்டும். பிறகு அந்த சீடன் குருவின் உத்தரவைப் பின்பற்றி, குருகுலத்திலிருந்து வெளியேறி, மற்ற ஆசிரமங்களுள் ஒன்றை, அதாவது கிருஹஸ்த ஆசிரமம், வானப்பிரஸ்த ஆசிரமம் அல்லது சந்நியாச ஆசிரமம் ஆகியவற்றுள் தான் விரும்பிய ஓர் ஆசிரமத்தை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பதம் 7.12.15
அக்னௌ குராவ் ஆத்மனி ச ஸர்வ-பூதேஷு அதோக்ஷஜம்
பூதை: ஸ்வ-தாமபி: பஸ்யேத் அப்ரவிஷ்டம் ப்ரவிஷ்டவத்

அக்னௌ—நெருப்பில்; குரெள—ஆன்மீக குருவில்; ஆத்மனி—தன்னில்; ச—மற்றும்; ஸர்வ-பூதேஷு—எல்லா ஜீவராசிகளில்; அதோக்ஷஜம்—பெளதிக புலன்களாலோ அல்லது பௌதிக கண்களாலோ காணப்பட அல்லது உணரப்பட முடியாதவரான பரமபுருஷர்; பூதை:—அனைத்து ஜீவராசிகளுடன்; ஸ்வ-தாமபி:—பகவானுடைய பரிவாரங்களுடன்; பஸ்யேத்—ஒருவன் பார்க்க வேண்டும்; அப்ரவிஷ்டம்—புகாதவராயும்; ப்ரவிஷ்ட-வத்—புகுந்தவராயும்.

நெருப்பிலும், ஆன்மீக குருவிலும், தன்னிலும், அனைத்து ஜீவராசிகளிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் பரமபுருஷராகிய பகவான் விஷ்ணு ஒரே சமயத்தில் புகுந்தும் புகாமலும் இருக்கிறார் என்பதை ஒருவன் உணர வேண்டும். அவர் அனைத்தையும் முழுமையாக ஆள்பவராக உள்ளும் புறமும் இருக்கிறார்.

பதம் 7.12.16
ஏவம் விதோ ப்ரஹ்மசாரீ வானப்ரஸ்தோ யதிர் க்ருஹீ
சரன் விதித-விக்ஞான: பரம் ப்ரஹ்மாதிகச்சதி

ஏவம் வித:—இவ்விதமாக; ப்ரஹ்மசாரீ—ஒருவன் ஒரு பிரம்மச்சாரியாகவோ; வானப்ரஸ்த:—அல்லது வானப்பிரஸ்த ஆசிரமத்திலோ; யதி:—அல்லது சந்நியாச ஆசிரமத்திலோ; க்ருஹீ—அல்லது கிருஹஸ்த ஆசிரமத்திலோ இருந்தாலும்; சரண்—தன்னுணர்வுப் பயிற்சியினாலும், பூரண உண்மையைப் புரிந்து கொள்ளும் பயிற்சியினாலும்; விதித-விக்ஞான:—பூரண உண்மையைப் பற்றிய விஞ்ஞானத்தில் பூரண தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; பரம்-பரமனை; ப்ரஹ்ம—பூரண உண்மையை; அதிகச்சதி—ஒருவனால் புரிந்து கொள்ள முடியும்.

ஒருவன் பிரம்மச்சாரியாகவோ, கிருஹஸ்தனாகவோ, வானப்பிரஸ்தனாகவோ அல்லது சந்நியாசியாகவோ இருந்தாலும், இவ்வாறு பயிற்சி செய்வதன்மூலம், பரமபுருஷரின் எங்கும் நிறைந்துள்ள தன்மையை எப்பொழுதும் அவன் உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த முறையினால் பூரண உண்மையைப் புரிந்து கொள்வது சாத்தியமாகும்.

பதம் 7.12.17
வானப்ரஸ்தஸ்ய வக்ஷ்யாமி நியமான் முனி-ஸம்மதான்
யான் ஆஸ்தாய முனிர் கச்சேத் ரிஷி-லோகம் உஹஞ்ஜஸா

வானப்ரஸ்தஸ்ய—வானப்பிரஸ்த ஆசிரமத்தில் உள்ளவனின்; வக்ஷ்யாமி—இப்பொழுது நான் விளக்குகிறேன்; நியமான்—விதிமுறைகளை; முனி-ஸம்மதான்—சிறந்த முனிவர்களாலும், தத்துவவாதிகளாலும், சாதுக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட; யான்—எவற்றை; ஆஸ்தாய—இருப்பதால், அல்லது பயிற்சி செய்வதால்; முனி:—ஒரு சாது; கச்சேத்—உயர்த்தப்படுகிறார்; ரிஷி-லோகம்—தத்துவதரிசிகளும் முனிவர்களும் செல்லும் உயர்கிரக அமைப்பிற்கு (மஹர்லோகத்திற்கு); உஹ—அரசே; அஞ்ஜஸா—சுலபமாக.

அரசே, குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற ஒரு வானப்பிரஸ்தனின் தகுதிமுறைகளை இப்பொழுது நான் விவரிக்கிறேன். வானப்பிரஸ்த வாழ்வுக்குரிய விதிமுறைகளை உறுதியாகப் பின்பற்றுவதன் மூலம், ஒருவனால் சுலபமாக மஹர்லோகம் என்ற உயர்கிரக அமைப்பிற்கு ஏற்றம் பெற முடியும்.

பதம் 7.12.18
ந க்ருஷ்ட-பச்யம் அஸ்னீயாத் அக்ருஷ்டம் சாபி அகாலத:
அக்னி-பக்வம் அதாமம் வா அர்க-பக்வம் உதாஹரேத்

ந—இல்லை; க்ருஷ்ட-பச்யம்—நிலத்தை உழுது அதில் விளைந்துள்ள தானியங்களை; அஸ்னீயாத்—உண்ண வேண்டும்; அக்ருஷ்டம்—நிலத்தை உழாமலே விளைந்துள்ள தானியங்களை; ச—மேலும்; அபி—கூட; அகாலத:—காலந்தவறி பழுத்த; அக்னி-பக்வம்—நெருப்பில் சமைத்து தயாரிக்கப்பட்ட தானியங்களையும்; அத—கூட; ஆமம்—மாம்பழம்; வா—அல்லது; அர்க-பக்வம்—இயற்கையாகவே சூரிய ஒளியால் பழுத்த உணவை; உத—என்று கட்டளையிடப்பட்டுள்ளது; ஆஹரேத்—வானப்பிரஸ்தன் உண்ண வேண்டும்.

வானப்பிரஸ்த வாழ்விலுள்ள ஒருவன் நிலத்தை உழுது அதில் உற்பத்தியாகும், தானியங்களை உண்ணக் கூடாது. நிலத்தை உழாமலேயே விளைந்துள்ள தானியங்களை அவன் உண்ணலாம். ஆனால் அத்தகைய தானியங்கள் முற்றிலும் பழுத்தவையாக இருக்க வேண்டும். மேலும் நெருப்பில் சமைத்த தானியங்களையும் அவன் உண்ணக்கூடாது. உண்மையில், சூரிய ஒளியால் பழுத்துள்ள பழங்களை மட்டுமே அவன் உண்ண வேண்டும்.

பதம் 7.12.19
வன்யைஸ் சரு-புரோடாசான் நிர்வபேத் கால-சோதிதான்
லப்தே நவே நவே ‘ன்னாத்யே புராணம் ச பரித்யஜேத்

வன்யை:—பயிர்ச் செய்யாமல் வனத்தில் உற்பத்தியான பழங்களாலும், தானியங்களாலும்; சரு—யாகத்தில் நிவேதனம் செய்யப்பட வேண்டிய தானியங்களை; புரோடாசான்—”சருவிலிருந்து” தயாரிக்கப்பட்ட பலகாரங்களை; நிர்வபேத்—ஒருவன் செய்ய வேண்டும்; கால-சோதிதான்—இயற்கையாக விளைந்த; லப்தே—அடையும் பொழுது; நவே—புதிய; நவே-அன்ன-ஆத்யே—புதிதாக விளைந்த உணவுத் தானியங்களை; புராணம்—பழைய தானிய இருப்பை; ச—மேலும்; பரித்யஜேத்—ஒருவன் விலக்கி விட வேண்டும்.

ஒரு வானப்பிரஸ்தன் வனத்தில் இயற்கையாக விளைந்த தானியங்களையும், பழங்களையும் கொண்டு பலகாரங்கள் செய்து அதை யாகத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அவன் புதிய தானியங்களைப் பெறும் சமயத்தில், பழைய தானியங்களின் இருப்பை அகற்றிவிட வேண்டும்.

பதம் 7.12.20
அக்னி-அர்த்தம் ஏவ சரணம் உடஜம் வாத்ரி-கந்தரம்
ஸ்ரயேத ஹிம-வாயு-அக்னி-வர்ஷார்காதப-ஷாட் ஸ்வயம்

அக்னி—நெருப்பை; அர்த்தம்—வைத்துக் கொள்ள; ஏவ—மட்டுமே; சரணம்—ஒரு குடிசையை; உட-ஜம்—புல்லாலான; வா—அல்லது; அத்ரி-கந்தரம்—ஒரு மலைக்குகையை; ஸ்ரயேத—வானப்பிரஸ்தன் தஞ்சமடைய வேண்டும்; ஹிம—பனி; வாயு—காற்று; அக்னி—நெருப்பு; வர்ஷ—மழை; அர்க—சூரியனின்; ஆபத—ஒளி; ஷாட்—சகித்துக் கொண்டு; ஸ்வயம்—தானாகவே.

ஒரு வானப்பிரஸ்தன், வேள்வித் தீயை பாதுகாப்பதற்காக மட்டுமே கூரைவேய்ந்த ஒரு குடிசையை அமைத்துக் கொள்ளவோ அல்லது ஒரு மலைக் குகைக்குள் புகலிடம் கொள்ளவோ, அனுமதிக்கப்படுகிறான். ஆனால் அவன் நீடித்த பனியிலும், காற்றிலும், நெருப்பிலும், மழையிலும், சூரிய ஒளியிலும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

பதம் 7.12.21
கேச-ரோம-நக-ஸ்மஸ்ரு-மலானி-ஜடிலோ ததத்
கமண்டலு-அஜினே தண்ட- வல்கலாக்னி-பரிச்சதான்

கேச—தலைமயிர்; ரோம—உடலிலுள்ள ரோமம்; நக—நகங்கள்; ஸ்மஸ்ரு—மீசை; மலானி—மற்றும் உடலிலுள்ள அழுக்கு; ஜடில:—ஜடாமுடியுடன்; ததத்—ஒருவன் வைத்திருக்க வேண்டும்; கமண்டலு—ஒரு கமண்டலத்தையும்; அஜினே—மற்றும் ஒரு மான் தோலையும்; தண்ட—தண்டம்; வல்கல—மரவுரி; அக்னி—நெருப்பு; பரிச்சதான்—ஆடைகள்.

வானப்பிரஸ்தன் ஜடாமுடி தரித்து, அவனது உடலிலுள்ள முடி, நகங்கள், மீசை, ஆகியவற்றை வளரவிட வேண்டும். தன் உடலிலுள்ள அழுக்கை அவன் சுத்தம் செய்யக் கூடாது. அவன் மரவுரி தரித்து கமண்டலமும், மான் தோலும், தண்டமும் வைத்துக் கொண்டு, நெருப்பைப் போன்ற வர்ணமுடைய ஆடைகளை உபயோகிக்க வேண்டும்.

பதம் 7.12.22
சரேத் வனே த்வாதசாப்தான் அஷ்டௌ வா சதுரோ முனி:
த்வாவ் ஏகம் வா யதா புத்திர் ந விபத்யேத க்ருச்ரத

சரேத்—இருக்க வேண்டும்; வனே—காட்டில்; த்வாதச-ப்தான்—பன்னிரண்டு ஆண்டுகள்; அஷ்டெள—எட்டு ஆண்டுகள்; வா—அல்லது; சதுர:—நான்கு ஆண்டுகள்; முனி:—ஒரு சாது; த்வெள—இரண்டு; ஏகம்—ஒரு; வா—அல்லது; யதா—எப்படி; புத்தி:—புத்தி; ந—இல்லை; விபத்யேத—கலக்கமடைய; க்ருச்ரத:—கடுந்தவங்களின் காரணத்தால்.

ஆழ்ந்த சிந்தனையுடன் ஒரு வானப்பிரஸ்தன் காட்டில் பன்னிரண்டு வருடங்களோ, எட்டு வருடங்களோ, நான்கு வருடங்களோ, இரண்டு வருடங்களோ அல்லது குறைந்த பட்சம் ஒரு வருடமேயாவது வாழவேண்டும். தான் அளவுக்கதிகமான தவத்தினால் தொல்லைக்கோ, துன்பத்திற்கோ ஆளாகதபடி அவன் நடந்து கொள்ள வேண்டும்.

பதம் 7.12.23
யதாகல்ப: ஸ்வ-க்ரியாயாம் வ்யாதிபிர் ஜரயாதவா
ஆன்வீக்ஷிக்யாம் வா வித்யாயாம் குர்யாத் அனசனாதிகம்

யதா—எப்பொழுது; அகல்ப:—செயற்பட முடியவில்லையோ; ஸ்வக்ரியாயாம்—தனக்கென விதிக்கப்பட்ட தன் கடமைகளில்; வ்யாதிபி:—நோயின் காரணத்தால்; ஜரயா—அல்லது மூப்பின் காரணத்தால்; அதவா—அல்லது; ஆன்வீக்ஷிக்யாம்—ஆன்மீக முன்னேற்றத்தில்; வா—அல்லது; வித்யாயாம்—அறிவு முன்னேற்றத்தில்; குர்யாத்—ஒருவன் செய்ய வேண்டும்; அனசன-ஆதிகம்—போதிய உணவு உட்கொள்ளாதிருத்தலை.

நோய் அல்லது முதுமையின் காரணத்தால், ஆன்மீக உணர்வில் முன்னேறுவதற்குரிய அல்லது வேதங்களைக் கற்பதற்குரிய தன் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையிலுள்ள ஒருவன், எந்த உணவையும் உட்கொள்ளாமல் உபவாசம் இருக்கப் பழக வேண்டும்.

பதம் 7.12.24
ஆத்மனி அக்னீன் ஸமாரோப்ய ஸன்யஸ்யாஹம் மமாத்மதாம்
காரணேஷு ன்யஸேத் ஸம்யக் ஸங்காதம் து யதார்ஹத

ஆத்மனி—தன்னில்; அக்னீன்—உடலுக்குள் உள்ள நெருப்பை; ஸமாரோப்ய—சரியாக வைத்து; ஸன்யஸ்ய—விட்டுவிட்டு; அஹம்—பொய்யான அடையாளத்தை; மம—பொய்யான எண்ணத்தை; ஆத்ம தாம்—உடலே தான் அல்லது உடல் தன்னுடையது என்ற; காரணேஷு—ஜட உடலுக்குக் காரணமான பஞ்ச பூதங்களில்; ன்யஸேத்—ஒருவன் கலக்கச் செய்துவிட வேண்டும்; ஸம்யக்—முற்றிலுமாக; ஸங்காதம்—சேர்க்கையை; து—ஆனால்; யதா-அர்ஹத:—தகுந்த முறையில்.

அவன் மூலப் பொருளான நெருப்பைத் தன்னில் சரியாக நிலைக்கச் செய்து, உடலே தான் அல்லது உடல் தன்னுடையது என்ற தேகாபிமானத்தை விட்டுவிட வேண்டும். பிறகு ஜட உடலை அவன் படிப்படியாக பஞ்ச பூதங்களுடன் (மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) கலக்கச் செய்து விட வேண்டும்.

பதம் 7.12.25
கே கானி வாயௌ நிஸ்வாஸாம்ஸ்
தேஜஹ்ஸூஷ்மாணம் ஆத்மவான்
அப்ஸு அஸ்ருக்-ஸ்லேஷ்ம-பூயானி
க்ஷிதெள சேஷம் யதோத்பவம்

கே—ஆகாயத்தில்; கானி—உடலின் எல்லாத் துவாரங்களையும்; வாயௌ—காற்றில்; நிஸ்வாஸான்—உடலில் சஞ்சரிக்கும் எல்லா வகையான காற்றுகளையும் (ப்ராண, அபான, முதலானவை); தேஜஹ்ஸூ—நெருப்பில்; உஷ்மாணம்—உடலின் வெப்பத்தை; ஆத்ம-வான்—தன்னை அறிந்த ஒருவன்; அபஸு—நீரில்; அஸ்ருக்—இரத்தத்தையும்; ஸ்லேஷ்ம—சளியையும்; பூயானி—மூத்திரத்தையும்; க்ஷிதௌ—மண்ணில்; சேஷம்—எஞ்சியவைகளை (தோல், எலும்புகள் மற்றும் உடலிலுள்ள பிற கடினமான பொருட்களை); யதா-உத்பவம்—எங்கிருந்து இவையெல்லாம் வளர்ந்தனவோ.

நிதான புத்தியும், முழு அறிவும் உள்ள தன்னுணர்வு பெற்ற ஒருவன், உடலின் வெவ்வேறு பகுதிகளை அவற்றின் மூல பிறப்பிடங்களுடன் கலக்கச் செய்துவிட வேண்டும். உடலிலுள்ள துவாரங்கள் ஆகாயத்தினால் விளைவிக்கப்படுகின்றன. சுவாசமானது காற்றினால் விளைவிக்கப்படுகிறது. உடலின் வெப்பமானது நெருப்பினால் விளைவிக்கப்படுகிறது. மேலும் விந்து, இரத்தம், சளி ஆகியவை நீரினால் விளைவிக்கப்படுகின்றன. தோல், தசை, எலும்பு போன்ற கெட்டியான பொருட்கள் மண்ணினால் விளைவிக்கப்படுகின்றன. இவ்வாறாக உடலின் எல்லாப் பகுதிகளும் வெவ்வேறு மூலப்பொருட்களால் விளைவிக்கப்படுகின்றன. அவற்றை மீண்டும் அந்தந்த மூலப் பொருட்களுடனேயே கலந்து விடச் செய்ய வேண்டும்.

பதங்கள் 7.12.26 -7.12.28
வாசம் அக்னெள ஸவக்தவ்யாம் இந்ரே சில்பம் கராவ் அபி
பதானி கத்யா வயஸி ரத்யோபஸ்தம் ப்ரஜாபதௌ

ம்ருத்யௌ பாயும் விஸர்கம் ச யதா-ஸ்தானம் வினிர்திசேத்
திக்ஷு ஸ்ரோத்ரம் ஸ-நாதேன ஸ்பர்சேனாத்யாத்மனி த்வசம்

ரூபாணி சக்ஷுஷா ராஜன் ஜ்யோதிஷி அபினிவேசயேத்
அப்ஸு ப்ரசேதஸா ஜிஹ்வாம் க்ரேயைர் கராணம் க்ஷிதௌன்யஸேத்

வாசம்—பேச்சை; அக்னௌ—அக்னி தேவனில்; ஸ-வக்த்வ்யாம்—பேசும் விஷயங்களுடன்; இந்ரே—இந்திரனிடம்; சில்பம்—சிற்பக் கலையையும் அல்லது கைகளால் வேலை செய்யும் திறமையையும்; கரௌ—கைகளையும்; அபி—உண்மையில்; பதானி—கால்களை; கத்யா—அவற்றின் நடமாடும் சக்தியுடன்; வயஸி—பகவான் விஷ்ணுவிடம்; ரத்யா—பாலுறவு இச்சையை; உபஸ்தம்—பாலுறுப்புகளுடன்; ப்ரஜாபதௌ—பிரஜாபதியிடம்; ம்ருத்யௌ—ம்ருத்யு என்ற தேவரிடம்; பாயும்—மலக்குடலை; விஸர்கம்—(மலத்தை) வெளியேற்றும் அதன் செயலுடன்; ச—மேலும்; யதா-ஸ்தானம்—சரியான இடத்தில்; வினிர்திசேத்—ஒருவன் தெரிவிக்க வேண்டும்; திக்ஷு—வெவ்வேறு திசைகளிடம்; ஸ்ரோத்ரம்—கேட்கும் புலனை; ஸ-நாதேன—ஒலி அதிர்வுடன்; ஸபர்சேன—ஸ்பரிசத்துடன்; அத்யாத்மனி—வாயு தேவனிடம்; த்வசம்—ஸ்பரிச புலனை; ரூபாணி—உருவத்தை; சக்ஷுஷா—பார்வையுடன்; ராஜன்—அரசே; ஜ்யோதிஷி—சூரியனில்; அபினிவேசயேத்—ஒருவன் கொடுக்க வேண்டும்; அப்ஸு—நீரிடம்; ப்ரசேதஸா—வருண தேவனுடன்; ஜிஹ்வாம்—நாக்கை; க்ரேயை:—முகரும் பொருளுடன்; க்ராணம்—முகரும் சக்தியை; க்ஷிதெள—மண்ணில்; ன்யஸேத்—ஒருவன் கொடுக்க வேண்டும்.

அதன்பிறகு, பேச்சுப் பொருளையும், பேசும் புலனையும் (நாக்கு) நெருப்பிடமும்; தொழில் திறமையையும், இரு கைகளையும் தேவேந்திரனிடமும்; அசையும் சக்தியையும், கால்களையும் பகவான் விஷ்ணுவிடமும்; புலன் சுகத்தையும், பாலுறுப்புகளையும் பிரஜாபதிகளிடமும் ஒப்படைத்துவிட வேண்டும். மலக்குடலையும், மலத்தை வெளியேற்றும் குடலையும் அவற்றின் சரியான இருப்பிடமாகிய ம்ருத்யுவிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கேட்கும் கருவியை அதன் ஒலி அதிர்வுடன் திக்தேவதைகளிடம் அர்ப்பணித்துவிட வேண்டும். ஸ்பரிச கருவியை அதன் ஸ்பரிச பொருட்களோடு வாயுவிடம் அர்ப்பணித்துவிட வேண்டும். உருவத்தை, உருவத்தைப் பார்க்கும் சக்தியுடன் சூரியனிடம் அர்ப்பணித்துவிட வேண்டும். நாக்கை வருண தேவருடன் நீரிடமும்; முகம் சக்தியை இரு அஸ்வினி குமார தேவர்களுடன் மண்ணிடமும் அர்ப்பணித்துவிட வேண்டும்.

பதங்கள் 7.12.29 – 7.12.30
மனோ மனோரதைஸ் சந்ரே புத்திம் போத்யை: கவெள பரே
கர்மானி அத்யாத்மனா ருத்ரே யத்-அஹம் மமதா-க்ரியா
ஸத்வேன சித்தம் க்ஷேத்ர-க்ஞே குணைர் வைகாரிகம் பரே

அப்ஸு க்ஷிதிம் அபோ ஜ்யோதிஷி அதோ வாயௌ நபஸி அமும்
கூடஸ்தே தச் ச மஹதி தத் அவ்யக்தே ‘க்ஷரே ச தத்

மன:—மனதை; மனோரதை:—பெளதிக ஆசைகளுடன்; சந்ரே—சந்திர தேவனிடம்; புத்திம்—புத்தியை; போத்யை:—புத்தியைப் பற்றிய விஷயங்களுடன்; கவெள பரே—நன்கு கற்றறிந்த பிரம்ம தேவரிடம்; கர்மாணி—பௌதிக செயல்களை; அத்யாத்மனா—பொய் அகங்காரத்துடன்; ருத்ரே—சிவபெருமானிடம்; யத்—எங்கே; அஹம்—நான் இந்த ஜட உடல்; மமதா—ஜட உடலுக்குச் சம்பந்தப்பட்ட அனைத்தும் என்னுடையவை; க்ரியா—இத்தகைய செயல்களை; ஸத்வேன—இருக்கிறது என்ற எண்ணத்துடன்; சித்தம்—உணர்வை; க்ஷேத்ரக்ஞே—தனிப்பட்ட ஆத்மாவிடம்; குணை:—பௌதிக குணங்களால் நடத்தப்படும் பெளதிக செயல்களுடன்; வைகாரிகம்—பெளதிக குணங்களின் ஆதிக்கத்திலுள்ள ஜீவராசிகளை; பரே—பரமனில்; அப்ஸு—நீரில்; க்ஷிதிம்—மண்; அப:—நீர்; ஜ்யோதிஷி—ஒளிரும் பொருட்களில், குறிப்பாக சூரியனில்; அத:—பிரகாசத்தை; வாயெள—காற்றில்; நபஸி—ஆகாயத்தில்; அமும்—அந்த; கூடஸ்தே—வாழ்வின் பௌதிக கண்ணோட்டத்தில்; தத்—அதை; ச—மேலும்; மஹதி—மொத்த பெளதிக சக்தியான; மஹத்தத்துவத்தில்; தத்—அதை; அவ்யக்தே—தோற்றத்திற்கு வராத பொருளில்; அக்ஷரே—பரமாத்மாவில்; ச—மேலும்; தத்—அதை.

மனதை எல்லா பெளதிக ஆசைகளுடன் சந்திரதேவனில் மூழ்கடித்துவிட வேண்டும். புத்தியை புத்தியால் அறியப்படும் விஷயங்களுடன் பிரம்மதேவரில் அமிழ்த்திவிட வேண்டும். ஜட இயற்கைக் குணங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதும், “நான் இந்த உடல். இந்த உடலோடு சம்பந்தப்பட்டுள்ள அனைத்தும் என்னுடையவை” என்று நினைக்கத் தூண்டுவதுமான பொய் அகங்காரத்தை, பௌதிக செயல்களுடன், பொய் அகங்காரத்தின் அதிதேவதையான ருத்திரனில் இரண்டறக் கலந்துவிட வேண்டும். பெளதிக உணர்வைச் சிந்தனையின் நோக்கத்துடன் தனிப்பட்ட ஜீவராசியில் கலந்துவிட வேண்டும். ஜட இயற்கைக் குணங்களின் கீழ் செயற்படும் தேவர்களை நெறிகெட்ட ஜீவராசியுடன் பரமபுருஷரில் ஐக்கியப்படுத்திவிட வேண்டும். பூமியை நீரிலும், நீரைச் சூரியனின் பிரகாசத்திலும், இப்பிரகாசத்தைக் காற்றிலும், காற்றை ஆகாயத்திலும், ஆகாயத்தைப் பொய் அகங்காரத்திலும், பொய் அகங்காரத்தை மொத்த பெளதிக சக்தியிலும், மொத்த பௌதிக சக்தியை தோற்றத்திற்கு வராத பகுதிப் பொருளிலும் (பௌதிக சக்தியின் ப்ரதான அம்சம்), இறுதியாக பெளதிக தோற்றத்தின் பகுதிப் பொருள் அம்சத்தைப் பரமாத்மாவிலும் ஐக்கியப்படுத்திவிட வேண்டும்.

பதம் 7.12.31
இதி அக்ஷரதயாத்மானம் சின்-மாத்ரம் அவசேஷிதம்
ஞாத்வாத்வயோ ‘த விரமேத் தக்த-யோனிர் இவானல:

இதி—இவ்வாறு; அக்ஷரதயா—ஆன்மீகமானதாக இருப்பதால்; ஆத்மானம்—தான் (தனிப்பட்ட ஆத்மா); சித்-மாத்ரம்—முற்றிலும் ஆன்மீகமான; அவசேஷிதம்—(பெளதிக மூலப்பொருட்கள் ஒவ்வொன்றாக மூலபரமாத்மாவில் கலந்து விட்ட பிறகு) எஞ்சியிருப்பது; ஞாத்வா—அறிந்து கொண்டு; அத்வய:—வேறுபாடு இல்லாத, அல்லது குணத்தில் பரமாத்மாவைப் போன்ற; அத—இவ்வாறு; விரமேத்—ஒருவன் பௌதிக வாழ்வையே நிறுத்திவிட வேண்டும்; தக்த-யோனி:—எதன் பிறப்பிடம் (விறகு) எரிக்கப்பட்டு விட்டதோ; இவ—போன்று; அனல:—தீச்சுடர்கள்.

இவ்வாறு எல்லா பௌதிக பொருட்களும் அவற்றிற்குரிய பௌதிக மூலப்பொருட்களில் இரண்டறக் கலந்ததும், முற்றிலும் ஆன்மீகமயமான ஜீவராசிகள் குணத்தில் பரமனுடன் ஒன்றுபட்டவையாக இருப்பதால், விறகு எரிந்து சாம்பலானதும் அதை எரித்த நெருப்பு ஓய்ந்து விடுவது போல், பௌதிக வாழ்விலிருந்து அந்த ஜீவராசிகள் ஓய்ந்து விட வேண்டும். பௌதிக உடலானது அதன் பல்வேறு பௌதிக மூலப் பொருட்களுடன் கலக்கப்பட்டதும், ஆன்மீக ஆத்மா மட்டுமே எஞ்சியிருக்கிறது. இந்த ஆன்மீக ஆத்மா பிரம்மனாகும். இது குணத்தில் பரப்பிரம்மனுக்குச் சமமானதாகும்.


ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின் “பரிபூரண சமுதாயம்: நான்கு ஆன்மீகப் பிரிவுகள்” எனும் தலைப்பை கொண்ட பன்னிரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare