அத்தியாயம் – 7
கர்பத்தில் பிரகலாதர் கற்றது
பதம் 7.7.1
ஸ்ரீ-நாரத உவாச
ஏவம் – தைத்ய-ஸுதை: ப்ருஷ்டோ மஹா-பாகவதோ ‘ஸுர:
உவாச தான் ஸ்மயமான: ஸ்மரன் மத்-அனுபாஷிதம்

ஸ்ரீ-நாரத: உவாச-மாமுனிவரான நாரதர் கூறினார்; ஏவம்- இவ்வாறாக ; தைத்ய ஸுதை:—அசுர புத்திரர்களால்; ப்ருஷ்ட:-கேள்வி கேட்கப்பட்டு; மஹா-பாகவத:- பகவானின் அந்த மிகச் சிறந்த பக்தர் (மகா-பாகவதர்); அஸுர:—அசுர குடும்பத்தில் பிறந்தவரான; உவாச- கூறினார்; தான்—அவர்களிடம் (அசுர புத்திரர்களிடம்); ஸ்மயமான:- புன்சிரிப்புடன்; ஸ்மரன்-நினைந்து; மத்—அனு- பாஷிதம்—என்னால் பேசப்பட்டதை.

நாரத முனிவர் கூறினார்: பிரகலாத மகாராஜன் அசுர குடும்பத்தில் பிறந்தவராக இருந்தும், மிகச் சிறந்த ஒரு பக்தராக விளங்கினார். தமது பள்ளித் தோழர்களாகிய அசுர புத்திரர்களால் இவ்வாறு கேள்வி கேட்கப்பட்ட அவர், என்னால் பேசப்பட்ட வார்த்தைகளை நினைத்து, பின்வருமாறு அவர்களிடம் கூறலானார்.

பதம் 7.7.2
ஸ்ரீ-ப்ரஹ்ராத உவாச
பிதரி ப்ரஸ்திதே ‘ஸ்மாகம் தபஸே மந்தராசலம்
யுத்தோத்யமம் பரம் சக்ருர் விபுதா தானவான் ப்ரதி

ஸ்ரீ—ப்ரஹ்ராத:உவாச-பிரகலாத மகாராஜன் கூறினார்; பிதரி—அசுர தந்தையான இரண்யகசிபு : ப்ரஸ்திதே-சென்றபொழுது; அஸ்மாகம்— நமது ; தபஸே- தவம் செய்ய;மந்தர-அசலம்— மந்தராச்சலம் என்ற மலைக்கு; யுத்த – யுத்த முயற்சியை; பரம்-கடும்; சக்ரு:- மேற்கொண்டனர்; விபுதா:-இந்திரன் முதலான தேவர்கள்;தானவான்— அசுரர்களை; ப்ரதி-நோக்கி.

பிரகலாத மகாராஜன் கூறினார்: எனது தந்தையான இரண்யகசிபு கடுந்தவங்களைப் புரிய மந்தராச்சல மலைக்குச் சென்ற பொழுது, அவரில்லாத அச்சமயத்தில் இந்திரன் முதலான தேவர்கள் எல்லா அசுரர்களையும் போரில் வென்றுவிட கடும் முயற்சியை மேற்கொண்டனர்.

பதம் 7.7.3
பிபீலிகைர் அஹிர் இவ திஷ்ட்யா லோகோபதாபன:
பாபேன பாபோ ‘பக்ஷீதி வதந்தோ வாஸவாதய:

பிபீலிகை:-சிற்றெறும்புகளால்; அஹி:-ஒரு பாம்பு; இவ-போல்; திஷ்ட்யா- தெய்வாதீனமாக; லோக-உபதாபன:-எல்லோரையும் எப்பொழும் கொடுமைப்படுத்தி; பாபேன—அவனது சொந்த பாவச் செயல்களால்; பாப:-பாவியான இரண்யகசிபு; அபக்ஷி—இப்பொழுது திண்ணப்பட்டான்; இதி – இவ்வாறு; வதந்த:- கூறி; வாஸவ – ஆதய:- இந்திரன் முதலான தேவர்கள்.

அந்தோ, எப்படி ஒரு பாம்பு சிற்றெறும்புகளுக்கு இரையாகிறதோ, அப்படியே எல்லா விதமான மக்களையும் எப்பொழுதும் கொடுமைப்படுத்தி தொல்லைகளைக் கொடுத்து வந்த இரண்யகசிபு இப்பொழுது தன் சொந்த பாவ விளைவுகளினால் தோற்கடிக்கப்பட்டான்” என்று கூறிய இந்திரன் முதலான தேவர்கள், அசுரர்களுடன் யுத்தம் செய்ய ஆயத்தம் ஆனார்கள்.

பதங்கள் 7.7.4 – 7.7.5
தேஷாம் அதிபலோத்யோகம் நிசம்யாஸுர-யூதபா:
வத்யமானா: ஸுரைர் பீதா துத்ருவு: ஸர்வதோ திசம்

கலத்ர-புத்ர-வித்தாப்தான் க்ருஹான் பசு-பரிச்சதான்
நாவேக்ஷ்யமாணாஸ் த்வரிதா: ஸர்வே ப்ராண-பரீப்ஸவ:

தேஷாம்-இந்திரன் முதலான தேவர்களின்; அதிபல-உத்யோகம்- பெரு முயற்சியையும், பலத்தையும்; நிசம்ய-கேள்விப்பட்டு; அஸுர— யூதபா:-அசுரர்களின் பெருந்தலைவர்கள்; வதாயமானா: -ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவதை; ஸுரை:-தேவர்களால்; பீதா:- அஞ்சி; துத்ருவு:—ஓட்டம் பிடித்தனர்; ஸர்வத:-எல்லா; திசம்—திசைகளிலும்; கலத்ர— மனைவிகள்; புத்ர-வித்த- குழந்தைகளை மற்றும் செல்வம்; ஆப்தான்—உறவினர்கள்; க்ருஹான்-வீடுகள்; பசு-பரீச்சதான்- குடும்ப வாழ்வின் பொருட்கள் மற்றும் மிருகங்கள்; ந- இல்லை: அவேக்ஷ்யமாணா:-பார்த்து; த்வரிதா:-வேகமாக; ஸர்வே- எல்லோரும்; ப்ராண – பரீப்ஸவ:- வாழ மிகவும் விரும்பியவர்களாக.

அசுரர்களின் பெருந் தலைவர்கள் ஒருவர்பின் ஒருவராக கொல்லப்பட்டு, தேவர்கள் என்றுமில்லாத பெருமுயற்சியை போரில் காட்டுவதைக் கண்ட அசுரர்கள் எல்லாத் திசைகளிலும் சிதறியோட ஆரம்பித்தனர். தங்களுடைய உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அசுரர்கள் தங்கள் வீடுகள், மனைவிகள், குழந்தைகள், மிருகங்கள், வீட்டுக்குரிய பொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, இவை எதையுமே கவனிக்காமல், தப்பினால் போதுமென்று ஓட்டம் பிடித்தனர்.

பதம் 7.7.6
வ்யலும்பன் ராஜ-சிபிரம் அமரா ஜய- காங்க்ஷிண:
இந்ரஸ் து ராஜ-மஹிஷீம் மாதரம் மம சாக்ரஹீத

வ்யலும்பன்-சூறையாடினர்; ராஜ-சிபிரம்-என் தந்தையின் அரண்மனையை: அமரா:- தேவர்கள்; ஜய-காங்க்ஷிண:-வெற்றிபெற விரும்பி; இந்ர:-தேவராஜான இந்திரன்; து—ஆனால் ; ராஜ-மஹிஷிம்- பட்ட மகிஷியை; மாதரம்-தாயான; மம-எனது; ச -கூட; அக்ரஹித்- கைப்பற்றினர்.:

வெற்றி பெற்ற தேவர்கள், அசுர வேந்தனான இரண்யகசிபுவின் அரண்மனையைச் சூரையாடி, அதிலிருந்த அனைத்தையும் அழித்தனர். பிறகு சுவர்க்க ராஜனான இந்திரன், அரசியான என் தாயைச் சிறைப்பிடித்தார்.

பதம் 7.7.7
நீயமானாம் பயோத்விக்னாம் ருததீம் குரரீம் இவ
யத்ருச்சயாகதஸ் தத்ர தேவர்ஷிர் தத்ருசே பதி

நீயமானாம் – எடுத்துச் செல்லப்பட்ட பொழுது; பய-உத்விக்னாம்- பயத்தினாலும், கலக்கத்தினாலும்; ருததீம்—அழுது கொண்டு; குரரீம் இவ – ஒரு குரரீ போல்; யத்ருச்சயா-தற்செயலாக; ஆகத:- வந்த; தத்ர -அங்கு; தேவ-ரிஷி:-மாமுனிவரான நாரதர்; தத்ருசே- கண்டார்; பதி-வழியில்.

அவன் அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட பொழுது, பயத்தினால் அவள், கழுகிடம் சிக்கிய ஒரு குரரிப் பறவைபோல் கதறினாள். அப்பொழுது எதிர்பாராமல் அங்கு வர நேர்ந்த சிறந்த முனிவரான நாரதர் அவளுடைய அந்த நிலையைக் கண்டார்.

பதம் 7.7.8
ப்ராஹ நைனாம் ஸுர பதே நேதும் அர்ஹஸி அனாகஸம்
முஞ்ச முஞ்ச மஹா-பாக ஸதீம் பர-பரிக்ரஹம்

ப்ராஹ—அவர் கூறினார்; ந-இல்லை; ஏனாம் -இவளை; பதே-தேவராஜனே; நேதும்-இழுத்துச் செல்ல: அர்ஹஸி தகுதியுடையவன்; அனாகஸம் -சிறிதும் பாவமற்றவள்; முஞ்ச முஞ்ச- விட்டுவிடு, விட்டுவிடு; மஹா-பாக-மகா பாக்கியசாலியே; ஸதீம்- கற்புடைய; பர-பரிக்ரஹம்- மாற்றான் மனைவியுமான.

நாரதமுனி கூறினார்: தேவராஜனே, இந்திரா, இவள் குற்றமற்றவள் இவளை இரக்கமின்றி இவ்வாறு நீ கவர்ந்து செல்வது தகுதியன்று, பெருமை படைத்தவனே, பதிவிரதையான இவள் வேறொருவனின் மனைவியாவாள். உடனே இவளை நீ விட்டுவிட வேண்டும்.

பதம் 7.7.9
ஸ்ரீ-இந்ர உவாச
ஆஸ்தே ‘ஸ்ய ஜடரே வீர்யம் அவிஷஹ்யம் ஸுர-த்விஷ:
ஆஸ்யதாம் யாவத் ப்ரவஸம் மோக்ஷ்யே ‘ர்த-பதவீம் கத:

ஸ்ரீ – இந்ர: உவாச-இந்திரன் கூறினார்; ஆஸ்தே- இருக்கிறது; அஸ்யா:- இவளுடைய; ஜடரே—கர்பத்தில்; வீர்யம்- வீரியம்; அவிஷஹ்யம் — பொறுக்க முடியாத; ஸுர-த்விஷ:-தேவர்களுடைய எதிரியின்; ஆஸ்யதாம்—(எங்களுடைய சிறையில்) இவள் இருக்கட்டும்; யாவத்-வரை; ப்ரஸவம்- பிரசவிக்கும்; மோக்ஷ்யே- நான் விட்டுவிடுவேன்; அர்த-பதவீம்-என் நோக்கத்தை; கத:- அடையும்வரை.

இந்திரன் கூறினார்: இரண்யகசிபுவின் மனைவியான இவளுடைய கர்பத்தில் அப்பெரும் அசுரனின் வீரியம் இருக்கிறது. ஆகவே இவள் பிரசவிக்கும் வரை என் பாதுகாப்பிலேயே இருக்கட்டும். அதன்பிறகு இவளை நாங்கள் விட்டு விடுகிறோம்.

பதம் 7.7.10
ஸ்ரீ-நாரத உவாச
அயம் நிஷ்கில்பிஷ: ஸாக்ஷான் மஹா-பாகவதோ மஹான்
த்வயா ந ப்ராப்ஸ்யதே ஸம்ஸ்தாம் அனந்தானுசரோ பலீ

ஸ்ரீ – நாரத: உவாச-மாமுனிவர் நாரதர் கூறினார்; அயம் — இது (கருவிலுள்ள குழந்தை); நிஷ்கில்பிஷ:-அறவே பாவமற்றது; ஸாக்ஷாத் – நேரடியாக; மஹா—பாகவத:-பரம பக்தன்; மஹான்- மிகச் சிறந்த: த்வயா -உன்னால்; ந-இல்லை; ப்ராப்ஸ்யதே-அடைவாய்; ஸம்ஸ்தாம்-இவனது மரணம்; அனந்த-பரமபுருஷரின்; அனுசர:- சேவகன்; பலீ-சக்திமிக்க.

நாரத முனி பதிலளித்தார்: இப்பெண்ணின் கருவில் வளரும் குழந்தை குற்றமோ, பாவமோ இல்லாதது. உண்மையில், இவன் ஒரு பரம பக்தனும், பரமபுருஷரின் சக்திமிக்க சேவகனுமாவான். ஆகவே இவனை உன்னால் கொல்ல முடியாது.

பதம் 7.7.11
இதி உக்தஸ் தாம் விஹாயேந்ரோ தேவர்ஷேர் மானயன் வச:
அனந்த-ப்ரிய-பக்தயைனாம் பரிக்ரம்ய திவம் யயௌ

இதி – இவ்வாறு; உக்த:-கூறியதும்; தாம்-அவளை; விஹாய- விட்டுவிட்டு: இந்ர:-இந்திரன்; தேவ -ரிஷே:- தேவரிஷியான நார தரின்; மானயன்-மதிப்பளித்து; வச: வார்த்தைகளுக்கு; அனந்த- ப்ரிய – -பரமபுருஷருக்கு மிகப் பிரியமான ஒருவருக்கு; பக்த்யா- பக்தியால்; ஏனாம்—இந்த (பெண்ணை); பரிக்ரம்ய—வலம் வந்து திவம்-சுவர்க்க லோகங்களுக்கு; யயௌ-திரும்பிச் சென்றார்.

சிறந்த முனீவரான நாரதர் இவ்வாறு கூறியதும், இந்திரன் நாரதரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து உடனே என் தாயை விட்டுவிட்டார். நான் பகவானுடைய பக்தன் என்ற காரணத்தினால், எல்லா தேவர்களும் அவளை வலம் வந்தபின் அவர்களுடைய சுவர்க்க லோகங்களுக்கு திரும்பிச் சென்றனர்.

பதம் 7.7.12
ததோ மே மாதரம் ரிஷி: ஸமானீய நிஜாஸ்ரமே
ஆவூாஸ்யேஹோஷ்யதாம் வத்ஸே யாவத் தே பர்துர் ஆகம:

தத:-பிறகு; மே- என்னுடைய; மாதரம்-தாயாரை: ரிஷி:-நாரத் முனிவர்; ஸமானீய—அழைந்துவந்து; நிஜ-ஆஸ்ரமே-அவரது ஆசிரமத்திற்கு; ஆஸ்வாஸ்ய-தேருதல் அளித்து; இஹ-இங்கேயே; உஷ்யதாம்—இருக்கலாம்; வத்ஸே-குழந்தாய்; யாவத் -வரையில்; தே- உன்னுடைய; பர்து:-கணவனின்; ஆகம:-வருகை.

பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: பிறகு சிறந்த முனிவரான நாரதர் என் தாயாரைத் தமது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்குத் தேறுதல் அளித்து, “குழந்தாய், உன் கணவன் வரும்வரை நீ இங்கேயே இருக்கலாம்” என்று கூறினார்.

பதம் 7.7.13
ததேதி அவாத்ஸீத் தேவர்ஷேர் அந்திகே ஸாகுதோ-பயா
யாவத் தைத்ய-பதிர் கோராத் தபஸோ ந ன்யவர்தத

ததா-அப்படியே ; இதி- இவ்வாறு ; அவாத்ஸீத்-வாழ்ந்து வந்தாள்; தேவ-ரிஷே:-தேவரிஷி நாரதர் ; அந்திகே- அருகில்; ஸா – அவள் (என் தாய்); அகுதோ-பயா—எத்திசையிலும் பயமின்றி; யாவத் – அதுவரை; தைத்ய-பதி:- அசுர வேந்தனான இரண்யகசிபு;கோராத்-கடுமையான; தபஸ: -தவத்திலிருந்து; ந -இல்லை; ன்யவர்தத – முடித்துக் கொள்ளும்.

தேவரிஷி நாரதரின் உபதேசங்களை ஏற்றுக் கொண்ட என் தாய், தைத்ய ராஜனான என் தந்தை தனது கடுந்தவங்களை முடித்துக் கொண்டு திரும்பி வரும்வரையில், எந்த திசையிலிருந்து வரும் பயத்திற்கும் அஞ்சாமல் அவரது பாதுகாப்பிலேயே தங்கியிருந்தாள்.

பதம் 7.7.14
ரிஷிம் பர்யசரத் தத்ர பக்த்யா பரமயா ஸதீ
அந்தர்வத்னீ ஸ்வ-கர்பஸ்ய க்ஷேமாயேச்சா-ப்ரஸுதயே

ரிஷிம் – நாரத முனிவருக்கும்; பர்யசரத் – பணிவிடை செய்தாள்; தத்ர—அங்கு (நாரதரின் ஆசிரமத்தில்); பக்த்யா—பக்தியுடனும், நம்பிக்கையுடனும் ; பரமயா-மிகுந்த; ஸதீ-விசுவாசமுள்ள அவள்: அந்தர்வத்னீ- கருவுற்ற: ஸ்வ— கர்பஸ்ய—அவளது கர்பத்தின், சிசுவின்; க்ஷேமாய-நன்மைக்காக; இச்சா—ஆசைக்கேற்ப; ப்ரஸூதயே-குழந்தையை பிரசவிப்பதற்காக.

கருவுற்றிருந்த என் தாய், கருவிலுள்ள சிசுவின் பாதுகாப்பை விரும்பியதுடன், தன் கணவன் வந்த பிறகு பிரசவிக்கவேண்டும் என்றும் விரும்பினாள். இவ்வாறாக அவள் நாரத முனிவரின் ஆசிரமத்தில் தங்கி, அவருக்கு மிகுந்த பக்தியுடன் பணிவிடை செய்து வந்தாள்.

பதம் 7.7.15
ரிஷி: காருணிகஸ் தஸ்யா ப்ராதாத் உபயம் ஈஸ்வர:
தர்மஸ்ய தத்வம் ஞானம் ச மாம் அபி உத்திஸ்ய நிர்மலம்

ரிஷி:- தேவரிஷி நாரதர்; காருணிக:-இயல்பாகவே இழிவடைந்த ஆத்மாக்களிடம் மிகவும் கருணை கொண்ட; தஸ்யா;-அவளுக்கு; ப்ராதாத்-உபதேசங்கள் வழங்கினார்; உபயம்-இருவருக்கும்; ஈஸ்வர: —எதையும் செய்யும் வல்லமை படைத்தவர் (நாரதர்); தர்மஸ்ய – தர்மத்தின்; தத்வம்-உண்மையை; ஞானம்- அறிவை; ச-மற்றும்; மாம்—என்னை; அபி–குறிப்பாக; உத்திஸ்ய-குறிப்பிட்டு: நிர்மலம்- மாசற்ற.

நாரத முனிவர் கர்பத்திலிருந்த எனக்கும், அவருக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருந்த என் தாய்க்கும் உபதேசம் செய்தார். உன்னத நிலையிலுள்ள அவர் வீழ்ந்த ஆத்மாக்களிடம் இயல்பாவே மிகவும் கருணையுடையவர் என்பதால், அவர் சமயத்தைப் பற்றியும், உன்னத அறிவைப் பற்றியும் உபதேசம் செய்தார். அவ்வுபதேசங்கள் எல்லா பௌதிக களங்கத்திலிருந்து விடுப்பட்டவையாகும்.

பதம் 7.7.16
தத்து காலஸ்ய தீர்கத்வாத் ஸ்த்ரீத்வான் மாதுஸ் திரோததே
ரிஷிணானுக்ருஹீதம் மாம் நாதுனாபி அஜஹாத் ஸ்ம்ருதி:

தத் -அதை (மதத்தையும், அறிவையும் பற்றிய உபதேசத்தை); து— உண்மையில்; காலஸ்ய—காலத்தின்; தீர்கத்வாத் -நீட்டிப்பினால்; ஸ்த்ரீத்வாத்—பெண்ணாக இருப்பதால்; மாது:—என் தாயின்; திரோததே -மறைந்து போயிற்று; ரிஷிணா-அந்த முனிவரால்; அனுக்குஹீதம்- அனுக்கிரகிக்கப் பட்டதால்; மாம்-எனக்கு; ந-இல்லை; அதுனா- இன்று: அபி-கூட; அஜஹாத்-அகன்றது; ஸ்ம்குதி:-(நாரதரின் உயதேசங்களைப் பற்றிய) நினைவு.

நீண்ட காலம் கடந்து விட்ட காரணத்தாலும், என் தாய் பெண் என்ற முறையில் குறைந்த அறிவுடையவள் என்பதாலும், அவ்வுபதேசங்களை எல்லாம் மறந்து போனாள். ஆனால் மாமுனிவரான நாரதர் என்னை ஆசிர்வதித்ததால் அவற்றை என்னால் மறக்க இயலவில்லை.

பதம் 7.7.17
பவதாம் அபி யூயான் மே யதி ஸ்ரத்தததே வச:
வைசாரதீ தீ: ஸ்ரத்தாத: ஸ்தரீ-பாலானாம் ச மே யதா

பவதாம்- உங்களுடைய; அபி-கூட; பூயாத்-இருக்கட்டும்; மே – என்னுடைய; யதி—என்றால்; ஸ்ரத்தததே-நம்பிக்கைக் கொள்வீர்கள்; வச:-வார்த்தைகளில்; வைசாரதீ-சிறந்த நிபுணரின், அல்லது பரம புருஷருடனான உறவில்; தீ:- புத்தி; ஸ்ரத்தாத:-திட நம்பிக்கையினால்; ஸ்த்ரீ—பெண்களின்; பாலானாம்—சிறுவர்களின்; ச – கூட; மே-என்னை; யதா—போலவே.

பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: அன்புத் தோழர்களே, என் வார்த்தைகளில் நீங்கள் நம்பிக்கை வைப்பீர்களானால், சிறுவர்களாகிய உங்களாலும் என்னைப் போல் உன்னத அறிவைப் புரிந்து கொண்டு, ஜடம் என்றால் என்ன, ஆன்மீகம் என்றால் என்ன என்பதை அறிய முடியும்.

பதம் 7.7.18
ஜன்மாத்யா: ஷட் இமே பாவா த்ருஷ்டா தேஹஸ்ய நாத்மன:
ஃபலானாம் இவ வ்ருக்ஷஸ்ய காலேனேஸ்வர-மூர்த்தினா

ஜன்ம-ஆத்யா:- பிறப்பு முதல்; ஷட்-ஆறும் (பிறப்பு, இறப்பு, வளர்ச்சி உருமாற்றம், நலிவு மற்றும் மரணம்); இமே- இவையெல்லாம்; பாவா:- தேகத்தின் வெவ்வேறு நிலைகள்; த்ருஷ்டா:-காணப்படுகின்றன; தேஹஸ்ய-உடலின்; ந-இல்லை; ஆத்மன:-ஆத்மாவின்; ஃபலானாம்—பலன்களின்; இவ-போல; வ்ருக்ஷஸ்ய-ஒரு மரத்தின்; காலேன-காலப்போக்கில்; ஈஸ்வர- மூர்த்தினா-யாருடைய ரூபம் மற்றும் திறனுடையதோ அல்லது உடலின் செயல்களைக் கட்டுப்படுத்தும் திறனுடையதோ.

ஒரு மரத்திலுள்ள பழங்களும், மலர்களும் காலப்போக்கில் தோற்றம், இருப்பு, வளர்ச்சி, உருமாற்றம், நலிவு மற்றும் அழிவு ஆகிய ஆறுவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன. அதுபோலவே வெவ்வேறு சூழ்நிலைகளின் கீழ் ஜீவாத்மாவினால் அடையப்படும் பௌதிக உடலும் அதே போன்ற மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆனால் ஜீவாத்மாவிற்கு இத்தகைய மாற்றங்கள் இல்லை.

பதங்கள் 7.7.19 – 7.7.20
ஆத்மா நித்யோ ‘வ்யய: சுத்த ஏக: க்ஷேத்ர-க்ஞ ஆஸ்ரய:
அவிக்ரிய: ஸ்வ-த்ருக் ஹேதுர் வ்யாபகோ ‘ஸங்கி அனாவ்ருத:
ஏதைர் த்வாதசபிர் வித்வான் ஆத்மனோ லக்ஷணை: பரை:
அஹம் மமேதி அஸத்-பாவம் தேஹாதௌ மோஹஜம் த்யஜேத்

ஆத்மா- பரமபுருஷரின் பின்னப் பகுதியான ஜீவாத்மா; நித்ய:- பிறப்போ, இறப்போ இல்லாதது; அவ்யய:-நலிவற்றது; சுத்த:- பௌதிக மாசுகளான விரும்பும், வெறுப்பும் இல்லாதது: ஏக:-தனி ஜீவன்; க்ஷேத்ர – க்ஞ:-அறிபவன் என்பதால் ஜட உடலிலிருந்து வேறுபட்டவன்; ஆஸ்ரய:-மூல பிறப்பிடம்: 1 அவிக்ரிய:-உடலைப் போல் மாறுதல்களை அடையாதது; 2 ஸ்வ-த்ருக்—சுயப் பிரகாசம் உடையது; 3 ஹேது:- எல்லாக் காரணங்களுக்கும் காரணமானது; வ்யாபக:-உணர்வின் வடிவில் உடல் முழுவதிலும் பரவியிருப்பது: அஸங்கீ-உடலைச் சாராதது (சுதந்திரமாகக் கூடுவிட்டு மாறக்கூடியது); அனாவ்ருத:-பௌதிக மாசுகளால் மூடப்படாதது; கூடு ஏதை:- இவைகளால்; த்வாதசபி:-பன்னிரண்டு; வித்வான்- மூடனாய் இல்லாமல், விஷயங்களை உள்ளபடி நன்கு அறித்தவன்; ஆத்மன:- ஜீவாத்மாவின்; லக்ஷணை:-இலட்சணங்கள்; பரை: உன்னதமான; அஹம் — நான் (“நான் இவ்வுடல்”); மம-என்னுடையது (இவ்வுடலுடன் சம்பந்தப்பட்ட அனைத்தும்); இதி-என்று; அஸத்- பாவம்-வாழ்வைப் பற்றிய தவறான கருத்தை; தேஹ-ஆதௌ-ஒருவன் தன்னை ஜட உடலுடனும், பிறகு தன் மனைவி, மக்கள், குடும்பம், சமூகம், நாடு போன்றவைகளுடனும் அடையாளப்படுத்திக் கொள்வதை; மோஹ-ஐம்-மாயையான அறிவிலிருந்து உண்டான; த்யஜேத்- விட்டுவிட வேண்டும்.

“ஆத்மா” என்பது பரமபுருஷரை அல்லது ஜீவராசிகளைக் குறிப்பிடுகிறது. அவ்விரண்டுமே பிறப்பு, இறப்பிலிருந்தும், அழிவிலிருந்தும், பெளதிக களங்கத்திலிருந்தும் விடுப்பட்டவையும், ஆன்மீகமானவையும் ஆகும். அவை தனித்தன்மை உடையவையும், புற உடலை அறிந்தவையும், அனைத்திற்கும் ஆதாரமும் அல்லது புகலிடமும் ஆகும். அவை பெளதிக மாற்றத்திற்கு உட்படாதவை, சுயப்பிரகாசம் உடையவை, எல்லாக் காரணங்களுக்கும் காரணமானவை, எங்கும் நிறைந்திருப்பவை. அவற்றிற்கு ஜட உடலுடன் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே அவை எப்பொழுதும் மூடப்படாமல் இருக்கின்றன. இந்த தெய்வீக குணங்களைப் பெற்றுள்ள ஒருவன் உண்மையில் கற்றறிந்தவனாக இருப்பானாயின், “நான் இந்த ஜட உடல், இந்த உடலுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்தும் என்னுடையவை” என்று மாயையான தேகாபிமானத்தை அவன் விட்டுவிட வேண்டும்.

பதம் 7.7.21
ஸ்வர்ணம் யதா க்ராவஸு ஹேம-கார:
க்ஷேத்ரேஷு யோகைஸ் தத்-அபிக்ஞ ஆப்னுயாத்
க்ஷேத்தேரஷு தேஹேஷு ததாத்ம-யோகைர்
அத்யாத்ம-வித் ப்ரஹ்ம-கதிம் லபேத

ஸ்வர்ணம்-தங்கம்; யதா—எப்படி; க்ராவஸு-உலோகக் கற்களில்; ஹேம-கார: தங்க நிபுணர்கள்; க்ஷேத்ரேஷு—தங்கச் சுரங்கங்களில்;யோகை:- பல்வேறு முறைகளால்; தத்-அபிக்ஞ:-தங்கம் இருக்கும் இடத்தை ஆய்ந்தறியக்கூடிய ஒரு நிபுணர்; ஆப்னுயாத்-மிகச் சுலபமாக அடைகிறார்; க்ஷேத்ரேஷு—பொருள் வளமுள்ள நிலத்தில்; தேஹேஷு- மனித உடல்களும், இதர 84,00,000 வகையான வெவ்வேறு ரூபங்களும்;ததா—அவ்வாறே; ஆத்ம-யோகை:- ஆன்மீக முறைகளினால்; அத்யாத்ம – வித்-ஜடத்திற்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்தறிவதில் நிபுணர்கள்; ப்ரஹ்ம-கதிம்-ஆன்மீக வாழ்வில் பூரணத்துவத்தை; லபேத-அடைய முடிகிறது.

திறமையுள்ள ஒரு பூகோள சாஸ்திரியால் தங்கம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, வெவ்வேறு முறைகளினால் தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை எடுக்க முடிகிறது. அதுபோலவே, எப்படி உடலுக்குள் ஆன்மீக பொறி இருக்கிறது என்பதை ஆன்மீகத்தில் முன்னேறிய ஒருவனால் அறிய முடிகிறது. இவ்வாறாக ஆத்ம ஞானத்தை விருத்தி செய்வதன் மூலம் ஆன்மீக வாழ்வின் பூரணத்துவத்தை அவனால் அடைய முடிகிறது. ஆனால் எப்படி திறமையற்ற ஒருவனால் தங்கம் இருக்கும் இடத்தை அறிய முடியாதோ, அப்படியே ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொள்ளாத ஒரு மூடனால், எப்படி ஆன்மீக ஆத்மாவானது உடலுக்குள் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.

பதம் 7.7.22
அஷ்டௌ ப்ரக்ருதய: ப்ரோக்தாஸ் த்ரய ஏவ ஹி தத்-குணா:
விகாரா: ஷோடசாசார்யை: புமான் ஏக: ஸமன்வாயத்

அஷ்டௌ-எட்டு; ப்ரக்குத்ய:-பௌதிக சக்திகள்; ப்ரோக்தா:- என்று கூறப்படுகிறது; த்ரய:-மூன்று; ஏவ—நிச்சயமாக; ஹி- உண்மையில்; தத்-குணா:-ஜட சக்தியின் குணங்கள்; விகாரா— மாற்றங்கள்; ஷோடச-பதினாறு; ஆசார்யை:-ஆச்சாரியர்களால்; புமான்-ஜீவராசி; ஏக:-ஒரு; ஸமன்வயாத்-சேர்க்கையினால்.

பகவானுடைய எட்டு பௌதிக சக்திகள், ஜட இயற்கையின் முக்குணங்கள், பதினாறு மாற்றங்கள் (பதினொரு புலன்கள் மற்றும் மண், நீர் போன்ற பஞ்ச பூதங்கள்) ஆகிய இவை அனைத்திற்குள்ளும் ஒரே ஆத்மா சாட்சியாக விளங்குகிறான். எனவேதான் தனிப்பட்ட ஆத்மா இந்த பௌதிக மூலப்பொருட்களினால் பந்தப்படுத்தப்படுகிறான் என்று சிறந்த ஆச்சாரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

பதம் 7.7.23
தேஹஸ் து ஸர்வ ஸங்காதோ ஜகத் தஸ்துர் இதி த்விதா
அத்ரைவ ம்ருகய: புருஷோ நேதி நேதீதி அதத் த்யஜன்

தேஹ:-உடல்; து—ஆனால்; ஸர்வ-ஸங்காத-இருபத்து நான்கு மூலப்பொருட்களின் சேர்க்கையாகும்; ஜகத்-அசைவதாகக் காணப்படும்; தஸ்து:-ஓரிடத்தில் நிற்கும்; இதி-இவ்வாறு; த்விதர- இருவகைகள்; அத்ர ஏவ -இவ்விஷயத்தில்; ம்ருக்ய:-தேடப்பட வேண்டிய: புருஷ:-ஜீவாத்மா; ந-இல்லை: இதி-இவ்வாறு; இதி-இவ்வழியில்; அதத்—ஆன்மீகம் அல்லாததை; த்யஜ- விட்டு விடவேண்டும்.

ஒவ்வொரு தனிப்பட்ட ஆத்மாவிற்கும் இருவகையான உடல்கள் உள்ளன. ஒன்று, பஞ்ச பூதங்களாலான ஸ்தூல உடல், மற்றது மூன்று சூட்சும மூலப் பொருட்களாலான சூட்சும உடல், இவ்வுடல்களுக்குள் ஆன்மீக ஆத்மா இருக்கிறது. “இது இல்லை, இது இல்லை” என்ற ஆய்வின் மூலம் ஒருவன் ஆத்மாவைக் கண்டறிய வேண்டும். இவ்விதமாக ஒருவன் ஆன்மிகத்தை ஜடத்திலிருந்து பிரித்தறிய வேண்டும்.

பதம் 7.7.24
அன்வய-வ்யதிரேகேண விவேகேனோசதாத்மனா
ஸ்வர்க-ஸ்தான-ஸமாம்னாயைர் விம்ருசத்பிர் அஸத்வரை:

அன்வய-நேரடியாகவும்; வ்யதிரேகேண- மறைமுகமாகவும்: விவேகேன-விவேகத்தினால்; உசதா-தூய்மையடைந்த; ஆத்மனா -மனங்களுடன்; ஸ்வர்க-படைத்தல்; ஸ்தான—காத்தல்; ஸமாம்னாயை:-மற்றும் அழித்தலால்; விம்ருசத்பி:-தீவிர ஆராய்ச்சி செய்பவர்களால்; அஸத்-வரை:-மிகவும் நிதானமுள்ள.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுடன் ஆத்மாவிற்கு உள்ள சம்பந்தத்தையும், படைத்தல், காத்தல், அழித்தலுக்கு உட்பட்டுள்ள அனைத்திலிருந்தும் ஆத்மா எப்படி வேறுபட்டுள்ளது என்பதையும் ஆராய்ந்து அறிவதன் மூலமாகத் தூய்மையடைந்த மனங்களுடன், நிபுணர்களும், நிதான புத்தியுள்ளவர்களுமான மனிதர்கள் ஆன்மீக ஆத்மாவைத் தேட வேண்டும்.

பதம் 7.7.25
புத்தேர் ஜாகரணம் ஸ்வப்ன: ஸுஷுப்திர் இதி வ்ருத்தய:
தா யேனைவானுபூயந்தே ஸோ ‘த்யக்ஷ: புருஷ: பர:

புத்தே:-புத்தியின்; ஜாகரணம் -விழிப்பு நிலை அல்லது ஸ்தூல புலன்களின் செயல் நிலை; ஸ்வப்ன:-கனவு நிலை (ஸ்தூல உடலின் உதவியின்றி நடக்கும் புலன்களின் செயல்கள்); ஸுஷுப்தி:-ஆழ்ந்த உறக்க நிலை அல்லது (ஜீவாத்மா காண்பவனாக இருந்த போதிலும்) எல்லாச் செயல்களும் நின்றுவிட்ட நிலை; இதி—இவ்வாறு; வ்ருத்தய:- பல்வேறு செயல்கள்; தா:-அவை; யேன—எவரால்; ஏவ-நிச்சயமாக; அனுபூயந்தே—உணரப்படுகின்றன; ஸ:-அந்த; அத்யக்ஷ:-(செயல்களிலிருந்து வேறுபட்டவரான) மேற்பார்வையாளர்; புருஷ:-அனுபவிப்பாளர்; பர:-உன்னதமானவர்.

விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகிய மூன்று நிலைகளில் புத்தியானது உணரப்படுகிறது. இம்மூன்றையும் உணர்பவர் ஆதிபுருஷரென்றும், ஆண்டவனென்றும், பரமபுருஷரென்றும் கருதப்பட வேண்டும்.

பதம் 7.7.26
ஏபிஸ் த்ரி-வர்ணை: பர்யஸ்தைர் புத்தி-பேதை: க்ரியோத்பவை:
ஸ்வரூபம் ஆத்மனோ புத்யேத் கந்தைர் வாயும் இவான்வயாத்

ஏபி:- இவற்றினால்; த்ரி—வர்ணை: இயற்கையின் முக்குணங்களாலான; பர்யஸ்தை:-(உயிர்ச் சக்தியைத் தொடாத காரணத்தினால்) முற்றிலும் ஒதுக்கப்பட்ட; புத்தி-புத்தியின்;பேதை:- வேறுபாடுகள்; க்ரியா—உத்பவை:-வெவ்வேறு செயல்களிலிருந்து உண்டான; ஸ்வரூபம்- சொரூபத்தை, அல்லது மூலாதார நிலையை; ஆத்மன:- ஆத்மாவின்; புத்யேத்- ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும்; கந்தை: – நறுமணங்களால்; வாயும் – காற்றை: இவ-அதுபோலவே : அன்வயாத்- நெருங்கிய தொடர்பிலிருந்து.

காற்றினால் சுமந்து செல்லப்படும் வாசனைகளின் மூலமாக காற்றின் இருப்பை ஒருவனால் புரிந்து கொள்ள முடியும். அதுபோலவே, பரம புருஷருடைய வழிகாட்டலின் கீழ், புத்தியின் இந்த மூன்று பிரிவுகளின் மூலம் ஒருவனால் ஜீவாத்மாவைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இம்மூன்று பிரிவுகளே ஆத்மா அல்ல; அவை முக்குணங்களால் ஆனவையும், செயல்களிலிருந்து பிறந்தவையுமாகும்.

பதம் 7.7.27
ஏதத் த்வாரோ ஹி ஸம்ஸாரோ குண-கர்ம-நிபந்தன:
அஞ்ஞான-மூலோ ‘பார்த்தோ ‘பி பும்ஸ: ஸ்வப்ன இவார்ப்யதே

ஏதத்—இது; த்வார:-வாயில்; ஹி-உண்மையில்; ஸம்ஸார:- ஒருவன் மூவகைத் துன்பங்களை அனுபவிக்கும் பௌதிக வாழ்வான; குண- கர்ம- நிபந்தன:—ஜட இயற்கையின் முக்குணங்களால் உண்டான பந்தம்;அக்ஞான- மூல-அறியாமையை வேராகக் கொண்டு ; அபார்த:- உண்மையான அர்த்தமின்றி; அபி—கூட; பும்ஸ:- ஜீவராசியின்; ஸ்வப்ன:—கனவு; இவ-போல்; அர்ப்யதே -வைக்கப்படுகிறது..

மாசுடைய புத்தியின் மூலமாக ஒருவன் பௌதிக குணங்களுக்கு அடிமைப்பட்டவனாகி பௌதிக வாழ்வினால் அவன் பந்தப்படுத்தப்படுகிறான். ஒருவன் பொய்யாகத் துன்புறும் கனவு நிலையைப் போல், அறியாமையால் விளைந்த பௌதிக வாழ்வைத் தேவையற்றதாகவும், நிலையற்றதாகவும் கருத வேண்டும்.

பதம் 7.7.28
தஸ்மாத் பவத்பி: கர்தவ்யம் கர்மணாம் த்ரி-குணாத்மனாம்
பீஜ-நிர்ஹரணம் யோக: ப்ரவாஹோபரமோ திய:

தஸ்மாத்-ஆகவே; பவத்பி:-நல்லாத்மாக்களான உங்களால்; கர்தவ்யம்- செய்யப்பட வேண்டியது; கர்மணாம்—எல்லா பௌதிக செயல்களின்; த்ரி- குண-ஆத்மனாம்- ஜட இயற்கையின் முக்குணங்களால் பந்தப்படுத்தப்பட்ட; பீஜ-நிர்ஹரணம்—விதை எரிக்கப்படுகிறது; யோக:-பரமனுடன் இணைவதற்கான வழிமுறை; ப்ரவாஹ- விழிப்பு நிலை, கனவு:நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவற்றின் உருவிலுள்ள தொடர்ந்த ஓட்டத்தின்; உபரம:-நிறுத்தம்; திய:-புத்தியின்.

ஆகவே என் அன்புத் தோழர்களே, அசுர குமாரர்களே, கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்வதே உங்களுடைய கடமையாகும். ஜட இயற்கைக் குணங்களால் செயற்கையாக உண்டாக்கப்பட்ட கருமங்களின் விதையை கிருஷ்ண உணர்வினால் எரித்து விட முடியும். மேலும் அதனால் விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளிலுள்ள அறிவின் ஓட்டத்தையும் தடுத்துவிட முடியும். அதாவது, கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ளும் பொழுது, ஒருவனது அறியாமை உடனே மறைந்து விடுகிறது.

பதம் 7.7.29
தத்ரோபாய-ஸஹஸ்ராணாம் அயம் பகவதோதிது
யத் ஈஸ்வரே பகவதி யதா யைர் அஞ்ஜஸா ரதி:

தத்ர—இது தொடர்பாக (பௌதிக பந்தமெனும் சிக்கலிலிருந்து வெளியேறுவது தொடர்பாக); உபாய- வழிமுறைகளின்; ஸஹஸ்ராணாம் -பல்லாயிரக்கணக்கான; அயம்-இது; பகவதா உதித:- பரமபுருஷரால் கொடுக்கப்பட்ட; யத்—எது; ஈஸ்வரே-பகவானுக்கு; பகவதி-பரமபுருஷராகிய; யதா— எப்படி; யை:-எவைகளால்; அஞ்ஜஸா-விரைவாக; ரதி:-அன்புடனும் பாசத்துடனும் கூடிய பற்றுதல்.

பௌதிக வாழ்விலிருந்து விடுபடுவதற்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ள வெவ்வேறு முறைகளில், பரமபுருஷரால் நேரடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விவரிக்கப்பட்ட முறை மிகச் சிறந்ததாக கருதப்பட வேண்டும். கடமைகளை சரிவரச் செய்வதே அந்த முறையாகும். அதனால் பரமபுருஷரிடம் உள்ள அன்பு விருத்தியடைகிறது,

பதங்கள் 7.7.30 – 7.7.31
குரு-சுஸ்ரூஷயா பக்த்யா ஸர்வ-லப்தார்பணேன ச
ஸங்கேன ஸாது-பக்தானாம் ஈஸ்வராராதனேன ச
ஸ்ரத்தயா-தத்-கதாயாம் ச கீர்த்தனைர் குண-கர்மணாம்
தத்-பாதாம்புருஹ-த்யானாத் தல்-லிங்கேக்ஷார்ஹணாதிபி:

குரு-கஸ்ருஷயா-உண்மையான ஆன்மீக குருவிற்கு சேவை செய்வதன் மூலம்; பக்த்யா- நம்புக்கையுடனும், பக்தியுடனும்; ஸர்வ- எல்லா; லப்த-உலகியல் இலாபங்களை; அர்ப்பணேன-(குருவிற்கு அல்லது குருவின் மூலமாக கிருஷ்ணருக்கு) அர்ப்பணிப்பதன் மூலமாக; ச-மேலும்; ஸங்கேன— சகவாசத்தினால்; ஸாது—பக்தானாம்— சாதுக்கள் மற்றும் பக்தர்களின்; ஈஸ்வர-பரமபுருஷரின்; ஆராதனேன— வழிபாட்டினால்; ச-மேலும்; ஸ்ரத்தயா-பெரும் நம்பிக்கையுடன்; தத்—கதாயாம்—பகவானைப் பற்றிய பேச்சுக்களில்; ச-மேலும்; கீர்த்தனை:-துதி பாடுவதால்; குண—கர்மணாம்-பகவானுடைய உள்னத குணங்களையும், செயல்களையும்; தத்-அவருடைய; பாத- அம்புருஹ–தாமரைப் பாதங்களின் மீதான; த்யானாத்—தியானத்தால்; தத்—அவருடைய; லிங்க—ரூபங்களை (விக்கிரகங்களை); ஈக்ஷ—தரிசிப்பதாலும்; அர்ஹண-ஆதிபி:-வழிபடுவதாலும்.

ஒருவன் உண்மையான ஆன்மீக குருவை ஏற்றுக் கொண்டு மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் அவருக்குத் தொண்டு புரிய வேண்டும். தன்னிடமுள்ள உடைமைகள் அனைத்தையும் ஆன்மீக குருவிற்கு அர்பணித்து விட வேண்டும். பிறகு பக்தர்கள் மற்றும் சாதுக்களின் சகவாசத்தில் ஒருவன் சிரத்தையுடன் பகவானின் மகிமைகளைக் கேட்கும், அவரது உன்னத குணங்களையும், செயல்களையும் துதித்துப் போற்றியும், எப்பொழுதும் பகவானின் தாமரைப் பாதங்களை தியானித்தும் அவரைப் பூஜிக்க வேண்டும். மேலும் சாஸ்திரம் மற்றும் குருவின் கட்டளைகளுக்கேற்ப, பகவானின் விக்கிரத்தையும் ஒருவன் வழிபட வேண்டும்.

பதம் 7.7.32
ஹரி: ஸர்வேஷு பூதேஷு பகவான் ஆஸ்த ஈஸ்வர:
இதி பூதானி மனஸா காமைஸ் தை: ஸாது மானயேத்

ஹரி:- பரமபுருஷர்; ஸர்வஷே—எல்லா; பூதேஷு – ஜீவராசிகளிலும்; பகவான்- முழுமுதற் கடவுளாகிய; ஆஸ்தே -இருக்கிறார்; ஈஸ்வர:-பரம ஆளுனராகிய; இதி-இவ்வாறு: பூதானி-அனைத்து ஜீவராசிகளும்; மனஸா—இத்தகைய அறிவினால்; காமை:-ஆசைகளினால்; தை :-அந்த; ஸாது மானயேத்—உயர்வாக மதிக்க வேண்டும்.

ஒருவன் பரமபுருஷரை, ஒவ்வொருவருடைய இதயத்திலும் குடியிருக்கும் பரமாத்மாவாக எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு ஜீவராசியின் நிலைக்கும் அல்லது தோற்றத்திற்கும் ஏற்ப, ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒருவன் மரியாதை செலுத்த வேண்டும்.

பதம் 7.7.33
ஏவம் நிர்ஜித -ஷட்-வர்கை: க்ரியதே பக்திர் ஈஸ்வரே
வாஸுதேவே பகவதி யயா ஸம்லப்யதே ரதி:

ஏவம்-இவ்வாறு; நிர்ஜித—அடக்கி; ஷட்—வர்கை:-புலன்களின் ஆறு அறிகுறிகளால் (காமம், கோபம், பேராசை, மாயை, வெறி, பொறாமை); க்ரியதே-செய்யப்படுகிறது; பக்தி:-பக்தித் தொண்டு; ஈஸ்வரே-பரம ஆளுனருக்கு; வாஸுதேவே-பகவான் வாசுதேவருக்கு; பகவதி-பரமபுருஷராகிய; பயா—எதனால்; ஸம்லப்யதே -அடையப்படுகிறது; ரதி:- பற்றுதல்.

(மேலே குறிப்பிட்டது போல்) இச்செயல்களின் மூலம், காமம், கோபம், பேராசை, மாயை, வெறி, பொறாமை முதலான எதிரிகளின் ஆதிக்கத்தை வேரறுத்த நிலையில் பகவானுக்கு ஒருவனால் சேவை செய்ய முடியும். இவ்விதமாக பரமபுருஷருக்குச் செய்யும் அன்புத் தொண்டடெனும் படித்தரத்தை நிச்சயமாக ஒருவன் அடைகிறான்.

பதம் 7.7.34
நிசம்ய கர்மாணி குணான் அதுல்யான்
வீர்யாணி லீல-தனுபி: க்ருதானி
யதாதிஹர்ஷோத்புலகாஸ்ரு- கத்கதம்
ப்ரோத்கண்ட உத்காயதி ரெளதி ந்ருத்யதி

நிசம்ய-கேட்டு; கர்மாணி- உன்னதமான செயல்களை; குணான்- ஆன்மீக குணங்களை; அதுல்யான்- அசாதாரணமான (பொதுவாகச் சாதாரண மனிதனில் காணப்படாத); வீர்யாணி-மிகவும் சக்தி வாய்ந்த; லீலா- தனுபி:- வெவ்வேறு அவதார லீலைகளால்; க்ருதானி- செய்யப் பட்ட; யதா—எப்பொழுதும்; அதிஹர்ஷ-பரமானந்தத்தினால்; உத்புலக-மெய்சிலிர்த்து: அஸ்ரு-கண்களில் நீர் பெருக; கத்கதம்- தழுதழுத்த குரலில்; ப்ரோத்கண்ட:-திறந்த குரலுடன்; உத்காயதி—உரக்கப் பாடுகிறார்; ரௌதி—அழுகிறார்; ந்ருத்யந்தி— ஆடுகிறார்.

பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள ஒருவன் நிச்சயமாக தன் புலன்களை அடக்கியவனாகி, முக்தி பெற்றவனாகிறான். இத்தகைய முக்தி பெற்ற தூய பக்தரொருவர், பகவானுடைய உன்னதமான அவதார லீலைகளை பற்ற கேட்கும்பொழுது, மெய்சிலிர்த்து, கண்களில் நீர் பெருக, ஆத்மானு பூதியினால் சிலசமயம் வெளிப்படையாக ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் அழுகிறார். இவ்விதமாக உன்னதமான ஆனந்தப் பரவச நிலையை அவர் வெளிப்படுத்துகின்றார்.

பதம் 7.7.35
யதா க்ரஹ-க்ரஸ்த இவ க்வசித் தஸதி
ஆக்ரந்ததே த்யாயதி வந்ததே ஜனம்
முஹு: ஸ்வஸன் வக்தி ஹரே ஜகத்-பதே
நாராயணேதி ஆத்ம-மதிர் கத-த்ரப:

யதா-எப்பொழுதும்; க்ரஹ-க்ரஸ்த:-பேய் பிடித்தது; இவ- போல் க்வசித்-சிலசமயம்; ஹஸதி-சிரிக்கிறான்; ஆக்ரந்ததே- (பகவானின் உன்னத குணங்களை நினைந்து) உரக்க அழுகிறான்;-த்யாயதி- தியானிக்கிறான்; வந்ததே-மரியாதை செலுத்துகிறாள்; ஜனம்- எல்லா ஜீவரசிகளுக்கும் (அவர்களனைவரும் பகவத் தொண்டில் ஈடுபட்டிருப்பதாக எண்ணி); முஹு;- எப்பொழுதம் ஸ்வஸன் – பெருமூச்சு விட்டபடி வக்தி-பேகிறான், ஹரே – எம் பெருமானே! ஜகத்-பதே-லோக நாயகரே; நாராயண – பகவான் நாராயணரே; இதி – என்று; ஆத்ம- மதி:- பரமபுருஷன் சிந்தனையில் முழமையாக ஆழ்ந்து; கத-தர- வெட்கப்படாதவனாய்.

ஒரு பக்தன் பேய் பிடித்ததுபோல் ஆகும்பொழுது, பகவான் குணங்களைப் பற்றி உரக்க பாடிக்கொண்டு சிரிக்கிறான். சிலசமயம், தியானம் செய்ய அமர்கிறான். அப்பொழுது ஒவ்வொரு ஜீவராசியையும் பகவானின் ஒரு பக்தனாகக் கருதி, ஒவ்வொரு ஜீவராசிக்கும் மரியாதை செலுத்துகிறான். இவ்வாறாக அவன் எப்பொழுதும் பெருமூச்சு விட்டபடி, சமூக மரியாதையைப் பொருட்படுத்தால் ஒரு பித்தனைப் போல், “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என்றும், ‘ எம்பெருமானே’ என்றும், “லோக நாயகரே என்றும் உரக்கப் பாடுகிறான்.

பதம் 7.7.36
ததா புமான் முக்த-ஸமஸ்த-பந்தனஸ்
தத்-பாவ பாவானுக்ருதாசயாக்ருதி:
நிர்தக்த-பீஜானுசயோ மஹீயஸா
பக்தி-ப்ரயோகேண ஸமேதி அதோக்ஷஜம்

ததா—அப்பொழுது; புமான்—ஜீவராசி; முக்த -விடுபட்டவனாகிறான்; ஸமஸ்த-பந்தன:-பக்தித்தொண்டு வழியிலுள்ள எல்லாத் தடைகளிலிருந்தும்; தத்-பாவ – பரமபுருஷருடைய செயல்களின் தன்மையைப் பற்றி; பாவ-நினைப்பதால்; அனுக்ருத—அதுபோல் செய்யப்பட்டது; ஆசய-ஆக்ருதி:-யாருடைய மனமும், உடலும்; நிர்தக்த-முற்றிலும் எரிக்கப்பட்டு; பீஜ-வித்தானது அல்லது பௌதிக இருப்பின் மூல காரணமானது; அனுசய:-விருப்பம்; மஹீயஸா— மிகவும் சக்திவாய்ந்த; பக்தி-பக்தித்தொண்டின்; ப்ரயோகேண – பிரயோகத்தினால்; ஸமேதி – அடைகிறான்; அதோக்ஷஜம்—பௌதிக மனதாலும், உடலாலும் அடையப்பட முடியாதவரான பரமபுருஷரை.

அந்த பக்தன் பகவானுடைய லீலைகளைப் பற்றியே சதா நினைத்துக் கொண்டிருப்பதாலும், அவனுடைய மனமும் உடலும் ஆன்மீகமாக மாற்றப்பட்டதாலும், அவன் எல்லா பௌதிக மாசுகளிலிருந்தும் விடுபட்டவனாகிறான். அவனுடைய ஆழ்ந்த பக்தித் தொண்டின் காரணத்தால், அவனது அறியாமையும், பௌதிக உணர்வும், எல்லா வகையான பௌதிக ஆசைகளும் பூரணமாக எரிந்து சாம்பலாகி விடுகின்றன. இந்த நிலையில்தான் பகவானுடைய தாமரைப் பாதங்களின் புகலிடத்தை ஒருவனால் அடைய முடிகிறது.

பதம் 7.7.37
அதோக்ஷஜாலம்பம் இஹாகபாத்மன:
சரீரண: லம்ஸ்ருதி-சக்ர-சாதனம்
தத் ப்ரஹ்ம-நிர்வாண ஸுகம் விதுர் புதாஸ்
ததோ பஜத்வம் ஹ்ருதயே ஹ்ருத்-ரஸ்வரம்

அதோக்ஷஜ-பௌதிக மனதிற்கு அல்லது அனுபவ அறிவிற்கு எட்டாதவரான பரமபுருஷருடன்; ஆலம்பம்—எப்பொழுதும் தொடர்பு கொண்டிருப்பதால்; இஹ-இந்த ஜட உலகில்; அகப-ஆத்மன:பௌதிக மாசுடைய யாருடைய மனம்; சரீரிண:-ஜட உடலை ஏற்ற ஜீவராசியின்; ஸம்ஸ்ருதி- பெளதிக வாழ்வின்; சக்ர- சக்கரத்தை; சாதனம் – முற்றிலும் நிறுத்தி; தத் -அது; ப்ரஹ்ம-நிர்வாண- பரப்பிரம்மனான பரமபுருஷருடன் தொடர்பு கொண்டு ; ஸுகம் – உன்னத ஆனந்தத்தை; விது:-அறிகின்றனர்; புதா:-ஆன்மீகத்தில் முன்னேறியபவர்கள்; தத:-ஆகவே; பஜத்வம்-பக்தித் தொண்டில்; யே- ஈடுபடுங்கள்; ஹ்ருதயே – இதயத்தில்; ஹ்ருத்–ஈஸ்வரம்- பரமபுருஷரிடம், இதயத்திலுள்ள பரமாத்மாவிடம்.

பிறப்பு, இறப்பின் தொடர்ச்சியே வாழ்வின் உண்மையான பிரச்சினை. அது, மேலும் கீழும் தொடர்ந்து உருளும் ஒரு சக்கரத்தைப் போன்றதாகும். ஆனால் பரமபுருஷருடன் ஒருவன் தொடர்பு கொள்ளும்பொழுது, இச்சக்கரம் முற்றிலும் நின்றுவிடுகிறது. அதாவது, பக்தித் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவதால் உணரப்படும் உன்னத ஆனந்தத்தினால், ஒருவன் பௌதிக வாழ்விலிருந்து முற்றிலும் விடுபடுகிறான். கற்றோர் இதை அறிவர். ஆகவே எனதருமைத் தோழர்களே, அசுர குமாரர்களே, எல்வோருடைய இதயங்களிலும் இருக்கும் பரமாத்மாவை தியானிப்பதையும், வழிபடுவதையும் உடனே துவங்குங்கள்.

பதம் 7.7.38
கோ ‘தி-ப்ரயாஸோ ‘ஸுர-பாலகா ஹரேர்
உபாஸனே ஸ்வே ஹ்ருதி சித்ரவத் ஸத:
ஸ்வஸ்யாத்மன: ஸக்யுர் அசேஷ-தேஹினாம்
ஸாமான்யத: கிம் விஷயோபபாதனை:

க:- என்ன; அதி—ப்ரயாஸ:-கடினமான முயற்சி; அஸுர-பாலகா:-அசுர குமாரர்களே; ஹரே:-பரமபுருஷரின்: உபாஸனே- பக்தித் தொண்டை நிறைவேற்றுவதில்; ஸ்வே -தன்னுடைய சொந்த; ஹ்ருதி- இதயத்தில்; சித்ர-வத்- இடம் போல்; ஸத:-எப்பொழுதும் இருப்பவர்; ஸ்வஸ்ய-தன்னுடைய அல்லது ஜீவராசியினுடைய; ஆத்மன:- பரமாத்மாலின்; ஸக்ய:-நலம் விரும்பும் நண்பரின்; அசேஷ— எண்ணற்ற; தேஹினாம்-உடல்பெற்ற ஆத்மாக்களின்; ஸா மான்யத:- பொதுவாக: கிம்—தேவை என்ன; விஷய-உபபாதனை:-புலன் நுகர்விற்குரிய புலன் பொருட்களை அளிக்கும் செயல்களுக்கு.

நண்பர்களே, அகரகுமாரர்களே, பரமபுருஷர் அவரது பரமாத்மா அம்சத்தில் அனைத்து ஜீவராசிகளின் இதயங்களிலும் எப்பொழுதும் வாசம் செய்கிறார். உண்மையில், அவர் அனைத்து ஜீவன்களுக்கும் நண்பரும், அவர்களது நலம் விரும்பியுமாவார். மேலும் பகவானை வழிபடுவதில் எந்த சிரமமும் இல்லை. அப்படியானால் மக்கள் ஏன் அவரது பக்தித் தொண்டில் ஈடுபடாமல் இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் புலன் நுகர்விற்குரிய செயற்கையான பொருள்களைத் தேவையின்றி உற்பத்தி செய்வதில் அதிக விருப்பம் கொண்டுள்ளனர்?

பதம் 7.7.39
ராய : கலத்ரம் பசவ: ஸுதாதயோ
க்ருஹா மாஹீ குஞ்ஜர-கோச-பூதய:
ஸர்வே ‘ர்த-காமா: க்ஷண-பங்குராயுஷ:
குர்வந்தி மர்த்யஸ்ய கியத் ப்ரியம் சலா:

ராய:- செல்வம்; கலத்ரம்-ஒருவனது மனைவியும், பெண் நண்பர்களும்; பசவ:-பசு, குதிரை, கழுதை, பூனை, நாய் போன்ற வீட்டு மிருகங்கள்; ஹுத-ஆதய:-குழந்தைகள் முதலிய; க்ருஹா:-பெரிய கட்டிடங்கள் மற்றும் வீடுகள்; மஹீ-நிலம்; குஞ்ஜர:-யானைகள்; கோச-பொக்கிஷம்: பூதய:-புலன் நுகர்விற்கும், பௌதிக சுகபோக்கத்திற்கும் உரிய பிற போகப் பொருட்கள்; ஸர்வே—அனைத்தும்; அர்த்த—பொருளாதார முன்னேற்றம்; காமா:-மற்றும் புலன் நுகர்வு: க்ஷண- பங்குர-நொடியில் அழியக்கூடிய; ஆயுஷ-ஆயுளை உடையவனின்; குர்வந்தி—உண்டாக்கும் அல்லது கொண்டு வரும்; மர்த்யஸ்ய- மரணத்திற்குட்பட்ட ஒருவனின்; கியத்—எவ்வளவு: ப்ரியம்-இன்பம்; சலா:—நிலையற்ற, தற்காலிகமான.

ஒருவனுடைய செல்வம், அழகிய மனைவி, பெண் நண்பர்கள், மகன்கள், புதல்விகள், வீடு, வீட்டு மிருகங்களான பசுக்கள், யானைகள், குதிரைகள் போன்றவை, பொக்கிஷம், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு ஆகியவையும், இந்த பௌதிக ஐசுவரியங்களை எல்லாம் அனுபவிக்கக் கூடிய ஒருவனது வாழ்நாளும் கூட நிச்சயமாக தற்காலிகமானதும், நிலையற்றதுமாகும். மனித வாழ்வு நிலையற்றது என்பதால், தான் நித்தியமானவன் என்பதைப் புரிந்து கொண்ட புத்தியுள்ள மனிதனுக்கு, இந்த பௌதிக ஐசுவரிங்களால் என்ன நன்மையை அளிக்க முடியும்?

பதம் 7.7.40
ஏவம் ஹி லோகா: க்ரதுபி: க்ருதா அமீ
க்ஷயிக்ஷணவ: ஸாதிசயா ந நிர்மலா:
தஸ்மாத் அத்ருஷ்ட- ஸ்ருத- தூஷணம் பரம்
பக்த்யோக்தயேசம் பஜதாத்ம- லப்தயே

ஏவம்—(மண்ணுலக செல்வமும், உடைமைகளும் நிலையற்றவை) என்பது போல்; ஹி-நிச்சயமாக: லோகாலி:-சூரியன், சந்திரன், சுவர்க்கலோகம், பிரம்மலோகம் போன்ற மேலுலகங்கள்; க்ரதுபி:- பெரும் யாகங்களைச் செய்வதால்; க்ருதா:- அடையப்படும்; அமீ- அனைத்தும்; க்ஷயிக்ஷணவ-அழியக்கூடியவை, நிலையற்றவை; ஸாதிசயா:- அதிக சௌகரியத்தையும், இன்பத்தையும் அளிப்பவை என்ற போதிலும்; ந-இல்லை; நிர்மலா:-பரிசுத்தமானவை (தொல்லைகளிலிருந்து விடுபட்டவை); தஸ்மாத்-ஆகவே; அத்ருஷ்ட-ஸ்ருத- கண்டிராதது அல்லது கேட்டிராதது; தூஷணம்-யாருடைய குற்றம்; பரம் பரமனை; பரகத்யா—சிறந்த பக்தித் தொண்டால்; உக்தயா- வேத இலக்கியத்தில் விவரிக்கப்படுவதுபோல் (ஞானம் அல்லது கர்மத்துடன் கலக்காத); ஈசம்-பரமபுருஷரை; பஜத-வழிபடுங்கள்; ஆத்ம- லப்தயே-தன்னை அறிவதற்கு.

சிறந்த வேள்விகளைச் செய்யும் ஒருவனால் தன்னை சுவர்க்க லோகங்களுக்கு உயர்த்திக் கொள்ளமுடியும் என்பது வேத இலக்கியத்திலிருந்து அறியப்படுகிறது. ஆனால் சுவர்க்கலோக வாழ்வானது மண்ணுலக வாழ்வை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிக வசதியுடையது என்றாலும், சுவர்க்கலோகங்கள் புனிதமானவையல்ல (நிர்மலம்), அல்லது பௌதிக வாழ்வின் வாசனையிலிருந்து விடுபட்டவையல்ல. சுவர்க்கலோகங்களும் தற்காலிகமானவையே என்பதால் அவை வாழ்வின் இலட்சியமல்ல, ஆனால் பரமபுருஷரை மாசுடையவராகக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இதனால் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது போல், உங்களுடைய சொந்த நன்மைக்காகவும், தன்னுணர்வுக்காகவும் நீங்கள் மிகுந்த பக்தியுடன் பகவானை வழிபட வேண்டும்.

பதம் 7.7.41
யத்-அர்த்த இஹ கர்மாணி வித்வன்-மானி அஸக்குன் நர:
கரோதி அதோ விபர்யாஸம் அமோகம் விந்ததே ஃபலம்

யத்—எதனுடைய; அர்த்தே-நோக்கத்திற்காக; இஹ-இந்த ஜட உலகில்; கர்மாணி—(தொழிற்சாலைகள் முதலியவைகளில்) பல செயல்களை; வித்வத்-சிறந்த அறிவாளி; மானீ-என்று தன்னை எண்ணிக் கொண்டு; அஸக்குத்—மீண்டும். மீண்டும்; நர:-ஒருவன்; கரோதி—செய்கிறான்; அத:-இதிலிருந்து;விபர்யாஸம்- எதிரான; அமோகம்—தவறாமல்; விந்ததே—அடைகிறான்; ஃபலம்- பலனையே.

தன்னைச் சிறந்த அறிவாளியென்று நினைத்துக் கொண்டிருக்கும் பௌதிகவாதி, தன் பொருளதார முன்னேற்றத்திற்காகவே தொடர்ந்து செயற்படுகிறான். ஆனால் வேதங்களில் கூறப்பட்டுள்ள போல், இப்பிறவியிலும், அடுத்ததிலும் மீண்டும் மீண்டும் பௌதிக செயல்களினால் அவன் ஏமாற்றமடைகிறான். உண்மையில், தன் விருப்பத்திற்கெதிரான பலன்களையே அவன் அடைகிறான்.

பதம் 7.7.42
ஸுகாய துஹ்க-மோக்ஷாய ஸங்கல்ப இஹ கர்மிண:
ஸதாப்னோதீஹயா துஹ்கம் அனீஹாயா: ஸுகாவ்ருத:

ஸுகாய—பெயரளவேயான உயர்ந்த வாழ்க்கைத் தரத்தினால் மகிழ்ச்சியடைவதற்கு; துஹ்க-மோக்ஷாய— துன்பத்திலிருந்து விடுபட; ஸங்கல்ப:-திடமான நோக்கம்; இஹ -இவ்வுலகில்; கர்மிண— பொருளாதார முன்னேற்றத்திற்குப் பாடுபடும் ஜீவராசியின்; ஸதா-எப்பொழுதும்; ஆப்னோதி—அடைகிறான்;ஈஹயா-செயலாலோ அல்லது அதிக ஆசையாலோ; துஹ்கம்- துக்கத்தை மட்டுமே; அனீஹாயா:- பொருளாதார முன்னேற்றத்தை விரும்பாதிருப்பதிலிருந்து; ஸுக—மகிழ்ச்சியால்; ஆவ்ருத:-மூடப்படுகிறார்கள்.

இந்த ஜட உலகிலுள்ள ஒவ்வொரு பௌதிவாதியும் மகிழ்ச்சியடையவும், தன் துன்பத்தைக் குறைத்துக் கொள்ளவும் விரும்பி அதற்கேற்ப செயற்படுகிறான். உண்மையில், மகிழ்ச்சியடைய முயற்சி செய்யாதவரை ஒருவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். ஆனால் அந்த முயற்சியைத் துவங்கியவுடனேயே, அவனது துன்பச் சூழ்நிலை துவங்குகிறது.

பதம் 7.7.43
காமான் காமயதே காம்யைர் யத்-அர்தம் இஹ பூருஷ:
ஸ வை தேஹஸ் து பாரக்யோ பங்குரோ யாதி உபைதி ச

காமான்-புலன் நுகர்வுக்குரிய பொருட்களை; காமயதே-ஒருவன் விரும்புகிறான்; காம்யை:- விரும்பத்தகுந்த வெவ்வேறு செயல்களால்; யத்-எதன்; அர்த்தம்-காரணத்திற்காக; இஹ- இந்த ஜட உலகில்; பூருஷ:-ஜீவராசி; ஸ:-அந்த; வை-உண்மையில்; தேஹ:-உடல்; து—ஆனால்; பாரக்ய:-(நாய், கழுகு போன்ற) பிற ஜீவன்களுக்குச் சொந்தமான; பங்குர:-அழியக்கூடிய; யாதி—போய்விடுகிறது; உபைதி -ஆத்மாவைத் தழுவிக் கொள்கிறது; ச-மேலும்.

ஒரு ஜீவராசி தன் உடலின் சௌகரியத்தை விரும்பிப் பல திட்டங்களைத் தீட்டுகிறான். ஆனால் உண்மையில் உடலானது பிறருடைய சொத்தாகும். அழியக்கூடிய உடலானது ஜீவராசியைத் தழுவிக் கொண்டு, பிறகு அவனை உதாசீனப்படுத்தி விடுகிறது என்பதுவே உண்மை.

பதம் 7.7.44
கிம் உ வ்யவஹிதாபத்ய- தாராகார- தனாதய:
ராஜ்ய-கோச-கஜாமாத்ய- ப்ருதியாப்தா மமதாஸ்பதா:

கிம் உ -கூற என்ன இருக்கிறது; வ்யவஹித-பிரிந்து செல்லும்; அபத்ய-குழந்தைகள்; தார-மனைவிகள்; அகார-வீடுகள்; தன- செல்வம்: ஆதய:-முதலியவை; ராஜ்ய- இராஜ்யங்கள்; கோச- பொக்கிஷங்கள்; கஜ—பெரிய யானைகள் மற்றும் குதிரைகள்; அமாத்ய -மந்திரிகள்; ப்ருத்ய -சேவகர்கள்; ஆப்தா:-உறவினர்கள்; மமதா- ஆஸ்பதா:- நெருங்கிய உறவெனும் பொய்யான இருப்பிடங்கள்.

உடல் இறுதியில் மலமாக அல்லது மண்ணாக மாறப்போகிறது என்பதால், அந்த உடலுடன் சம்பந்தப்பட்டுள்ள மனைவி, மக்கள், வசிப்பிடம், செல்வம், உறவினர்கள், சேவகர்கள், நண்பர்கள், இராஜ்யங்கள், பொக்கிஷங்கள், மிருகங்கள், மந்திரிகள் போன்றவைகளில் என்ன அர்த்தம் உள்ளது? இவையும் தற்காலிகமானவையே. இதைப்பற்றி மேலும் கூறுவதற்கு என்ன உள்ளது?

பதம் 7.7.45
கிம் ஏதைர் ஆத்மனஸ் துச்சை: ஸஹ தேஹேன நஸ்வரை:
அனர்தைர் அர்த்த-ஸங்காசைர் நித்யானந்த-ரஸோததே:

கிம்- என்ன பயன்; ஏதை:-இவை அனைத்தினாலும்; ஆத்மன:- ஆத்மாவிற்கு; துச்சை:- மிகவும் அற்பமானைவையான; ஸஹ—உடன்; தேஹேன – உடல்; நஸ்வரை:-அழியக்கூடிய; அனர்த்தை:-தேவையற்ற; அர்த்த—ஸங்காசை:- தேவைப்படுவதுபோல் காணப்படும்; நித்ய-ஆனந்த—நித்திய ஆனந்தத்தின்;ரஸ—அமிர்த்தத்தின்; உததே:- கடலுக்கு.

உடல் இருக்கும்வரை இப்பொருட்களெல்லாம் மிகவும் பிரியமாகவும், நெருக்கமாகவும் இருக்கின்றன. ஆனால் உடல் அழிக்கப்பட்டவுடனேயே, உடலோடு சம்பந்தப்பட்ட அனைத்தும் முடிந்து விடுகின்றன. ஆகவே உண்மையில், அவற்றுடன் ஒருவனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அறியாமையால் தான் அவற்றை மதிப்புடையவையாக ஒருவன் ஏற்றுக் கொள்கிறான். நித்திய ஆனந்தம் என்ற கடலுடன் ஒப்பிடும்பொழுது, அவை மிகவும் அற்பமானவையாகும். நித்திய ஜீவனுக்கு இத்தகைய அற்பமான உறவுகளால் என்ன பயன்?

பதம் 7.7.46
நிரூப்யதாம் இஹ ஸ்வார்த: கியான் தேஹ-ப்ருதோ ‘ஸுரா:
நிஷேகாதிஷு அவஸ்தாஸு கலிஸ்யமானஸ்ய கர்மபி:

நிரூப்யதாம் – முடிவு செய்யப்படட்டும்; இஹ—இவ்வுலகில்; ஸ்வ -அர்த்த:-சொந்த நன்மை; கியான்—எவ்வளவு; தேஹ-ப்ருத:-ஜட உடலுடைய ஒரு ஜீவராசியின்; அஹுரா:—அசுர குமாரர்களே; நிஷேக- ஆதிஷு- பாலுறவிலிருந்து பெறப்படும் மகிழ்ச்சியிலிருந்து துவங்கி: அவஸ்தாஸு-தற்காலிக சூழ்நிலைகளில்; க்லிஸ்ய மானஸ்ய-பெருங்கஷ்டத்தில் துன்புறுபவனின்; கர்மபி:- அவனது முந்திய பௌதிக செயல்களால்,

அன்புத் தோழர்களே, அசுர குமாரர்களே, ஜீவராசியானவன் தனது முந்திய கருமங்களுக்கேற்ப வெவ்வேறு வகையான உடல்களைப் பெறுகிறான். இவ்விதமாக அவன் கருவில் புகுத்தப்பட்டது முதற்கொண்டு, வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் துன்பத்தையே அனுபவிப்பதை நாம் காண்கிறோம். ஆகவே கடின உழைப்பிலும், துன்பத்திலும் முடிவுறும் கருமங்களால் ஜீவராசிக்குக் கிடைக்கும் உண்மையான நன்மையென்ன என்பதை நன்கு ஆலோசித்தபின் எனக்குக் கூறுங்கள்.

பதம் 7.7.47
கர்மாணி ஆரபதே தேஹீ தேஹேனாத்மானுவர்தினா
கர்மபிஸ் தனுதே தேஹம் உபயம் து அவிவேகத:

கர்மாணி-பௌதிக செயல்கள்; ஆரபதே-துவங்குகிறது; தேஹீ- ஒரு குறிப்பிட்ட வகையான உடலை ஏற்றுள்ள ஒரு ஜீவராசி; தேஹேன- அவ்வுடலால்; ஆத்—அனுவர்தினா-அவனது ஆசைக்கும், கருமங்களுக்கும் ஏற்ப பெறப்பட்ட; கர்மபி:-இத்தகைய கருமங்களால்; தனுதே-அவன் விரிவடையச் செய்கிறான்; தேஹம்-மற்றொரு உடலை; உபயம்—அவ்விரண்டையும்; து-உண்மையில்; அவிவேகத:-அறியாமையின் காரணத்தாலேயே.

முந்திய கருமங்களின் பலனாக தற்போதைய உடலைப் பெற்றுள்ள ஜீவராசியால், இப்பிறவியிலேயே தன் செயல்களின் விளைவுகளையெல்லாம் முடித்துக் கொள்ள முடியும். இதனால் பௌதிக உடல்களின் பந்தத்திலிருந்த அவன் விடுபட்டு விடுவான் என்பது இதன் பொருளல்ல. ஜீவராசியானவன் ஒருவகையான உடலைப் பெறுகிறான். அவ்வுடலைக் கொண்டு செயலாற்றுவதன் மூலம் மற்றொரு உடலை அவன் உற்பத்தி செய்கிறான். இவ்வாறாக அறியாமையின் காரணத்தால், தொடர்ந்து பிறவிச் சக்கரத்தின் மூலமாக, அவன் ஒருடலிலிருந்து மற்றொரு உடலுக்காக மாறிக் கொண்டே போகிறான்.

பதம் 7.7.48
தஸ்மாத் அர்த்தாஸ் ச காமாஸ் ச தர்மாஸ் ச யத்-அபாஸ்ரயா: பஜதானீஹயாத்மானம் அனீஹம் ஹரிம் ஈஸ்வரம்

தஸ்மாத் – ஆகவே; அர்த்தா:-பொருளாதார முன்னேற்றத்திற்கான ஆசைகள்: ச-மேலும்; காமா:-புலன்திருப்திக்கான ஆசைகள்; ச- கூட; தர்மா:-சமயக் கடமைகள்; ச-மேலும்; யத்- எதை; அபாஸ்ரயா:- சார்ந்திருக்கும்; பஜத- வழிபடுங்கள்; அனீஹயா—அவற்றின் மீது ஆசையின்றி; ஆத்மானம் -பரமாத்மாவை; அனீஹம்-நடு நிலைமையான; ஹரிம் – பரமபுருஷரான; ஈஸ்வரம்-பகவானை.

ஆன்மீக வாழ்வின் முன்னேற்றக் கொள்கையான தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்கும் பரமபுருஷரின் விருப்பத்தையே சார்ந்துள்ளன. ஆகவே, அன்புத் தோழர்களே, பக்தர்களின் அடிச் சுவடுகளைப் பின்பற்றுங்கள். ஆசையின்றி பரமபுருஷரின் ஏற்பாட்டையே முழுமையாக நம்பி, பக்தித் தொண்டினால் பரமாத்மாவாகிய அவரை வழிபடுங்கள்.

பதம் 7.7.49
ஸர்வேஷாம் அபி பூதானாம் ஹரிர் ஆத்மேஸ்வர: ப்ரிய:
பூதைர் மஹாத்பி: ஸ்வ-க்ருதை: க்ருதானாம் ஜீவ-ஸம்க்ஞித:

ஸர்வேஷாம்- அனைத்திலும்; அபி- நிச்சயமாக; பூதானாம் -ஜீவராசிகள் : ஹரி:- ஜீவராசிகளின் துன்பங்களையெல்லாம் போக்குபவரான பகவான்; ஆத்மா—உயிரின் மூல காரணமானவர்; ஈஸ்வர:- பூரண-ஆளுனர்; ப்ரிய:-பிரியமானவர்; பூதை:-பிரிந்த சக்திகளான பஞ்சபூதங்களால்; மஹத்பி:-மொத்த பௌதிக சக்தியான மஹத்- தத்துவத்திலிருந்து வெளிப்படும்; ஸ்வ- க்ருதை:-அவராலேயே தோற்றுவிக்கப்படும்; க்ருதானாம்-படைக்கப்பட்ட; ஜீவ-ஸம்க்ஞித: —ஜீவராசிகள் அவரது நடுத்தர சக்தியின் விரிவாக்கங்கள் என்பதால்,அவரும் ஜீவராசி என்று அறியப்படுகிறார்.

பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ ஹரியே அனைத்து ஜீவராசிகளின் ஆத்மாவும், பரமாத்மாவும் ஆவார், ஆத்மாவையும், ஜட உடலையும் பொறுத்தவரை ஒவ்வொரு ஜீவராசியும் பகவானுடைய சக்தியின் ஒரு தோற்றமேயாகும். எனவே பகவான் நமக்கு மிகப் பிரியமானவரும், பரம ஆளுனருமாவார்.

பதம் 7.7.50
தேவோ ‘ஸுர மனுஷ்யோ வா யகே்’ஷா கந்தர்வ ஏவ வா
பஜன் முகுந்த-சரணம் ஸ்வஸ்திமான் ஸ்யாத் யதா வயம்

தேவ:- தேவரோ; அஸுர:-அசுரரோ; மனுஷ்ய:-மனிதரோ; வா- அல்லது; ய:-யக்ஷரோ (ஓர் அசுர இனம்); கந்தர்வ:-கந்தர்வரோ ; ஏவ-உண்மையில்; வா—அல்லது; பஜன்-சேவை செய்து; முகுந்த— சரணம்-முக்தியளிப்பவரான முகுந்தனின் (கிருஷ்ணரின்) தாமரைப் பாதங்களுக்கு; ஸ்வஸ்தி-மான்-பூரண மங்களகரமானவன்; ஸ்யாத் -ஆகிறான்; யதா-போலவே: வயம்—எங்களை (பிரகலாதர் முதலானோர்).

தேவரோ, அசுரரோ, மனிதரோ, யக்ஷரோ, கந்தர்வரோ அல்லது இப்பிரபஞ்சத்திலுள்ள வேறெவரோ, முக்தியளிப்பவரான முகுந்தனின் தாமரைப் பாதங்களுக்குச் சேவை செய்வாரானால், உண்மையில் அவர் எங்களைப் போலவே (பிரகலாதர் முதலான மகாஜனங்கள்), மிகவும் மங்களகரமான வாழ்வு நிலையில் இருப்பவராகிறார்.

பதங்கள் 7.7.51 – 7.7.52
நாயம் த்விஜத்வம் தேவத்வம் ரிஷித்வம் வாஸுராத்மஜா’
ப்ரீணனாய முகுந்தஸ்ய ந வ்ருத்தம் ந பஹு-ஞாதா

ந தானம் ந தபோ நேஜ்யா ந சௌசம் ந வ்ரதானி ச
ப்ரீயதே ‘மலயா பக்த்யா ஹரிர் அன்யத் விடம்பனம்

ந—இல்லை; அலம்-போதும்; த்விஜத்வம்-உயர்ந்த தகுதியுடைய பக்குவமடைந்த பிராமணராகவோ; தேவத்வம்-ஒரு தேவராகவோ; ரிஷித்வம்-முனிவராகவோ; வா—அல்லது; அஸுர—ஆத்ம-ஜா:- அசுரர்களின் சந்ததியினரே; ப்ரீணனாய-திருப்திப்படுத்த; முகுந்தஸ்ய- பரமபுருஷராகிய முகுந்தனின்; ந வ்ருத்தம் -நன்னடத்தையல்ல; ந-இல்லை; பஹு-ஞதா-பரந்த கல்வியோ; ந—அல்லது; தானம்- தானமோ; ந தப:-தவமில்லை; ந—அல்லது; இஜ்யா-வழிபாடு; ந-அல்லது; சௌசம்- சுத்தம்; ந வ்ரதானி-விரத அனுஷ்டானமும் இல்லை; ச-மேலும்; ப்ரீயதே-மகிழ்ச்சியடைகிறார்; அமலயா- மாசற்ற; பக்த்யா—பக்தித்தொண்டினால்; ஹரி:-பரமபுருஷர்; அன்யத்- மற்றவை; விடம்பனம்- போலி நாடகமேயாகும்.

என்னருமைத் தோழர்களே, அசுர குமாரர்களே, நீங்கள் சிறந்த பிராமணர்களாகவோ, தேவர்களாகவோ, சிறந்த முனிவர்களாகவோ அல்லது நன்னடத்தையிலும், பரந்த கல்வியிலும் சிறந்தவராகவோ ஆவதன் மூலம் பரமபுருஷரை மகிழ்விக்க முடியாது. மேலே கூறிய எந்த தகுதியினாலும் பகவானின் மகிழ்ச்சியைத் தூண்ட முடியாது. அல்லது தான தர்மங்களாலும், தவத்தினாலும், யாகத்தினாலும், தூய்மையினாலும் அல்லது விரதங்களாலும் கூட பகவானை மகிழ்விக்க முடியாது. பகவானிடம் ஒருவன் உறுதியான தூய பக்தி கொண்டிருந்தால் மட்டுமே அவர் மகிழ்ச்சியடைகிறார். இதய பூர்வமான பக்தித் தொண்டில்லாத அனைத்தும் வெறும் போலி நாடகமேயாகும்.

பதம் 7.7.53
த்தோ ஹரௌ பகவதி பக்திம் குருத தானவா:
ஆத்மௌபம்யேன ஸர்வத்ர ஸர்வ-பூதாத்மனீஸ்வரே

தத:-ஆகவே; ஹரௌ-பகவான் ஸ்ரீ ஹரிக்கு; பகவதி-பரம புருஷராகிய; பக்திம் – பக்தித்தொண்டு; குருத-செய்யுங்கள்; தானவா: அருமைத் தோழர்களே, அசுர குமாரர்களே; ஆத்ம- ஔபம்யேன- தன்னைப் போலவே; ஸர்வத்ர-எல்லா இடங்களிலும்; ஸர்வ-பூத-ஆத்மனி—அனைத்து ஜீவராசிகளின் ஆத்மாவாகவும், பரமாத்மாவாகவும் இருப்பவரும்; ஈஸ்வரே-அனைத்தையும் ஆள்பவருமாகிய பரம புருஷருக்கு.

எனதருமைத் தோழர்களே, அசுர குமாரர்களே, ஆகையால் தன்னுயிரைப் போலவே பிற உயிரைக் கருதி, அனைத்து ஜீவராசிகளின் பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் பரமபுருஷரை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு, நீங்கள் பக்தித்தொண்டை மேற்கொள்ள வேண்டும்.

பதம் 7.7.54
தைதேயா யக்ஷ-ரக்ஷாம்ஸி ஸ்த்ரிய: சூத்ரா வ்ரஜௌகஸ:
ககா ம்ருகா: பாப-ஜீவா: ஸந்தி ஹி அச்யுததாம் கதா:

தைதேயா:-அசுரர்களே; யக்ஷ— ரக்ஷாம்ஸி-யக்ஷர்களும் இராட்சஸர்களுமாகிய ஜீவராசிகள்; ஸ்த்ரிய:-பெண்கள்;சூத்ரா:- தொழிலாளிகள்;வ்ரஜ—ஓகஸ:- கிராமத்து இடையர்கள்; ககா:-பறவைகள்; ம்ருகா:– மிருகங்கள்; பாப-ஜீவா:-பாவமுள்ள ஜீவன்கள்; ஸந்தி-ஆக முடியும்; ஹி- நிச்சயமாக; அர்யுததாம்- பரமபுருஷராகிய அச்சுதரின் குணங்களை; கதா:- அடைந்தவர்களாக.

அருமைத் தோழர்களே, அசுர குமாரர்களே, நீங்களும் (யக்ஷர்கள், இராட்சஸர்கள்) அறிவற்ற பெண்கள், சூத்திரர்கள், இடையர்கள், பறவைகள், கீழான மிருகங்கள், பாவமுள்ள ஜீவராசிகள் உட்பட அனைவரும் உங்களுடைய ஆதியான நித்திய ஆன்மீக வாழ்வை உயிர்ப்பித்துக் கொண்டு, பக்தியோகக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாலேயே நித்தியமாக வாழ முடியும்.

பதம் 7.7.55
ஏதாவான் ஏவ லோகே ‘ஸ்மின் பும்ஸ: ஸ்வர்த்த: பர: ஸ்ம்ருத:
ஏகாந்த-பக்திர் கோவிந்தே யத் ஸர்வத்ர தத்-ஈக்ஷணம்

ஏதாவான்-இவ்வளவு: ஏவ-மட்டுமே; லோகே அஸ்மின்-இந்த ஜட உலகில்; பும்ஸ:-ஜீவராசியின்; ஸ்வ—அர்த்த: உண்மையான -தன்னலம்; பர:-உன்னதமான; ஸ்மிருத:-கருதப்பட்டது; ஏகாந்த- பக்தி:-மாசற்ற பக்தித்தொண்டு; கோவிந்தே-கோவிந்தனுக்கு; யத்— எது; ஸர்வத்ர—எல்லா இடங்களிலும்; தத்-ஈக்ஷணம்-கோவிந்தனான ஸ்ரீ கிருஷ்ணருடனான உறவைக் காண்பது.

எல்லாக் காரணங்களுக்கும் காரணமான கோவிந்தனின் தாமரைப் பாதங்களுக்குத் தொண்டு செய்வதும், எங்கும் அவரையே காண்பதுவுமே, இவ்வுலகில் வாழ்வின் ஒரே இலட்சியமாகும். எல்லா வேத நூல்களிலும் விவரிக்கப்படுவதுபோல், இது ஒன்றே மனித வாழ்வின் இறுதி இலக்காகும்.


ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின், “கர்பத்தில் பிரகலாதர் கற்றது” எனும் தலைப்பைக் கொண்ட ஏழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare