அத்தியாயம் – 6
அசுரத் தோழர்களுக்கு பிரகலாதரின்
உபதேசம்
பதம் 7.6.1 : பிரகலாத மகாராஜன் கூறினார்: போதுமான அறிவுள்ள ஒருவன், வாழ்வின் துவக்கத்திலிருந்தே, அதாவது இளம் வயதான குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த மனித உடலை பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுத்த வேண்டும். மற்றெல்லா ஈடுபாடுகளையும் அவன் விட்டுவிட வேண்டும். கிடைத்தற்கரியதான இந்த மனித உடல் மற்ற உடல்களைப் போலவே நிலையற்றது என்றாலும், அர்த்தமுள்ளதாகும். ஏனெனில், மனித வாழ்வில் ஒருவனால் பக்தித் தொண்டைச் செய்ய முடியும். மனப்பூர்வமாக செய்யப்படும் சிறிதளவு பக்தித் தொண்டு கூட ஒருவருக்கு முழு பூரணத்துவத்தை அளிக்க வல்லதாகும்.

பதம் 7.6.2 : மனிதப் பிறப்பானது ஆன்மீக உலகிற்கு திரும்பிச் செல்லும் வாய்ப்பை அளிக்கிறது. ஆகவே ஒவ்வொரு ஜீவராசியும், குறிப்பாக மனித உருவைப் பெற்றவர்கள், பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் பக்தித் தொண்டாற்ற வேண்டும். பரமபுருஷராகிய பகவான் விஷ்ணு அனைத்து ஜீவராசிகளுக்கும் மிகப் பிரியமானவரும், உயிருக்குயிரான பரமாத்மாவும், உற்ற நண்பருமாவார். ஆகவே இந்த பக்தித் தொண்டு இயற்கையானதாகும்.

பதம் 7.6.3 : பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: அசுர குடும்பங்களில் பிறந்த என் தோழர்களே, புலன் பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் இந்த உடலால் உணரப்படும் இன்பத்தை, ஒருவனது முந்திய கர்ம பலன்களுக்கேற்ப எந்த உயிரினத்திலும் அடைய முடியும். எவ்வாறு துன்பம் தானாகவே அடையப்படுகிறதோ, அவ்வாறே இன்பமும் அடையப்படுகிறது.

பதம் 7.6.4 : வெறும் புலன் நுகர்வுக்காக அல்லது பௌதிக சுகத்திற்காக பொருளாதார முன்னேற்றத்தை அடைய முயற்சிப்பதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் அது நேரத்தையும், சக்தியையும் மட்டுமே விரயமாக்குகிறது. அதனால் உண்மையான நன்மை இல்லை, ஒருவரது முயற்சிகள் கிருஷ்ண உணர்வை நோக்கி செலுத்தப்படுமானால், அவர் தன்னுணர்வு நிலையான ஆன்மீக படித்தரத்தை அடைவது நிச்சயம். பொருளாதார முன்னேற்றத்தில் தன்னை ஈடுபடுத்துவதால் இத்தகைய நன்மையை அடைய முடியாது.

பதம் 7.6.5 : ஆகவே, பௌதிக வாழ்வில் இருக்கும்பொழுதே (பவம் ஆஸ்ரித:), நல்லதையும், கெட்டதையும் பகுத்தறியும் சாமர்த்தியமுள்ள ஒருவன், உடல் நலிந்துவிடாமல் மன உறுதியுடனும், பலத்துடன் இருக்கும் பொழுதே வாழ்வின் மிகவுயர்ந்த இலக்கை அடையப் பாடுபடவேண்டும்.

பதம் 7.6.6 : ஒவ்வொரு மனிதனுக்கும் அதிகபட்சம் நூறாண்டு கால ஆயுள் உள்ளது. ஆனால் தன் புலன்களை அடக்க முடியாதவனுக்கு அதில் பாதி ஆயுள் வீணாகக் கழிந்து விடுகிறது. ஏனெனில் அவன் அறியாமையால் மூடப்பட்டு இரவில் பன்னிரண்டு மணி நேரம் உறங்குகிறான். ஆகவே அத்தகைய மனிதனின் ஆயுள் ஐம்பது ஆண்டுகளே ஆகும்.

பதம் 7.6.7 : எல்லோரும் குழப்பமடைந்த நிலையிலுள்ள குழந்தைப் பருவமான பால்ய வயதில், பத்து ஆண்டுகளைக் கழித்து விடுகின்றனர். அது போலவே, பிள்ளைப் பிராயத்தில் விளையாட்டிலேயே மேலும் பத்து ஆண்டுகள் கழிகிறது. இவ்விதமாக இருபது ஆண்டுகள் வீணாக்கப்படுகின்றன. அதுபோலவே, முதுமையின் இயலாமை நிலையில், பௌதிக செயல்களைக் கூட செய்ய முடியாமல் மேலும் இருபது ஆண்டுகளை ஒருவன் வீணாகக் கழிக்கிறான்.

பதம் 7.6.8 : மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்த முடியாதவன், தணியாத காம இச்சைகள் மற்றும் மிகுந்த அறியாமை ஆகியவற்றின் காரணத்தால், குடும்ப வாழ்வில் மேலும் அதிக பற்றுக் கொண்டவனாகிறான். இத்தகைய அறிவிழந்த ஒருவனின் வாழ்வில், எஞ்சியுள்ள ஆண்டுகளும் வீணடிக்கப்படுகின்றன. ஏனெனில் அந்த காலகட்டத்தில் கூட அவனால் தன்னை பக்தித் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

பதம் 7.6.9 : பௌதிக வாழ்வில் அதிக பற்றுக் கொண்டு தன் புலன்களை அடக்க முடியாமல் இருக்கும் எவனால் தன்னை பௌதிக பந்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும்? அதிக பற்றுக் கொண்டுள்ள குடும்பஸ்தன் தன் குடும்பத்திடமுள்ள (மனைவி, மக்கள், மற்ற உறவினர்கள்) பாசக் கயிற்றினால் மிகவும் உறுதியாக பிணைக்கப்படுகிறான்.

பதம் 7.6.10 : செல்வம் மிகவும் அருமையானதாக இருப்பதால், அதைத் தேனைக் காட்டிலும் இனிமையானதாக ஒருவன் கருதுகிறான். ஆகவே எவரால், குறிப்பாக இல்லற வாழ்விலுள்ள எவரால் பொருள் சேர்க்கும் ஆசையை விட முடியும்? திருடர்களும், போர் வீரர்களும், வணிகர்களும் தங்கள் உயிரைக் கூட பணயம் வைத்து பொருள் சேர்க்க முயலுகின்றனர்.

பதங்கள் 7.6.11 – 7.6.13 : தன் குடும்பத்தினரிடம் அதிக பாசம் கொண்டுள்ளவனும், எப்பொழுது அவர்களுடைய சகவாசத்தை விட முடியும்? குறிப்பாக, மனைவியானவள் எப்பொழுதும் அன்பும், பரிவும் உள்ளவளாகவும், தனிமையில் கணவனை மகிழ்விப்பவளாகவும் இருக்கிறாள். இத்தகைய பிரியமும், பாசமும் உள்ள ஒரு மனைவியின் சகவாசத்தை யாரால் விட முடியும்? செவிக்கினிய மழலைப் பேச்சுகளைப் பேசும் சிறு குழந்தைகளிடம் பாசம் கொண்டுள்ள ஒரு தந்தை, எப்பொழுதும் அவர்களுடைய இனிய பேச்சுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான். அவர்களுடைய சகவாசத்தை அவனால் எப்படி விட முடியும்? வயதாக பெற்றோர்களும், பெண்களும் கூட மிகவும் பிரியமானவர்களே. குறிப்பாக ஒரு பெண் அவளுடைய தந்தைக்குப் பிரியமானவளாவாள். அவள் கணவன் வீட்டில் வாழும் பொழுது கூட தந்தையின் நினைவில் நிறைந்திருக்கிறாள். அந்த சகவாசத்தை யாரால் விட முடியும்? இவைகளைத் தவிர, குடும்ப வாழ்வில் பல்வேறு தட்டுமுட்டு சாமான்களும், மிருகங்களும், வேலைக்காரர்களும் கூட உள்ளனர். இத்தகைய வசதிகளை யாரால் விட முடியும்? குடும்பத்தில் பற்றுக் கொண்டுள்ளவன் ஒரு பட்டுப்பூச்சிக்கு ஒப்பாவான். பட்டுப் பூச்சியானது தன்னைச் சுற்றி ஒரு கூட்டை நெய்து வெளியே வர முடியாதபடி சிக்கிக் கொள்கிறது. இரு முக்கிய புலன்களான பாலுருப்புகள் மற்றும் நாக்கு ஆகியவற்றின் திருப்திக்காக ஒருவன் பௌதிக சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறான். அதிலிருந்து எப்படி தப்ப முடியும்?

பதம் 7.6.14 : குடும்ப வாழ்வில் அதிக பற்றுடைய ஒருவன், தன் குடும்பத்தைப் பராமரிப்பதில் விலைமதிப்பற்ற தன் வாழ்வை வீணடிப்பதைப் புரிந்து கொள்வதில்லை. பரமபுருஷரை உணர்வதற்குப் பொருத்தமான இந்த மனித வாழ்வு தனக்குத் தெரியாமலேயே வீணாவதையும் அவன் அறியத் தவறி விடுகிறான். ஆயினும், தன் கவனக்குறைவினால் ஒரு செப்புக் காசைக்கூட இழந்துவிடாமல் இருப்பதில் மிகவும் சாதுரியமாகவும் கவனமாகவும் இருக்கிறான். இவ்வாறாக, பௌதிக வாழ்வில் பற்றுக் கொண்டுள்ள ஒருவன் எப்பொழுதும் மூன்று விதமான துன்பங்களை அனுபவிக்கிறான். இருப்பினும் பௌதிக வாழ்வு முறையில் பற்றின்மையை அவன் வளர்த்துக் கொள்வதில்லை.

பதம் 7.6.15 : ஒருவன் தன் புலன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் குடும்பத்தைப் பராமரிப்பதிலேயே அதிக பற்றுக் கொண்டிருப்பானாயின், அவனுடைய மனது பொருள் சேர்ப்பதெப்படி என்பதிலேயே மூழ்கிவிடுகிறது. பிறருடைய செல்வத்தை அபகரிப்பவன் அரசாங்க சட்டத்தினாலும், இறந்த பிறகு யமராஜனின் சட்டங்களாலும் தண்டிக்கப்படுவான் என்பதை அறிந்தும், அவன் தொடர்ந்து பிறரை ஏமாற்றிப் பொருள் சேர்க்கிறான்.

பதம் 7.6.16 : எனது பிரிய நண்பர்களே, அசுர புத்திரர்களே! இந்த ஜட உலகில் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களைப் போல் காணப்படுபவர்கள்கூட, “இது என்னுடையது, அது பிறருக்குரியது” என்று கருதும் சுபாவத்தைக் கொண்டுள்ளனர். இவ்விதமாக அவர்கள் கல்வியறிவற்ற நாய் பூனைகளைப் போல், குடும்ப வாழ்வெனும் குறுகிய கண்ணோட்டத்துடன், தங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ளனர். அறியாமையின் ஆதிக்கத்தினால் குழப்பமடைந்துள்ள அவர்கள் ஆன்மீக அறிவைப் பெற முடியாதவர்களாக இருக்கின்றனர்.

பதங்கள் 7.6.17 – 7.6.18 : அன்புத் தோழர்களே, அசுரப் புத்திரர்களே, பரமபுருஷரைப் பற்றிய அறிவு இல்லாத எவரும், எப்பொழுதும், எந்த நாட்டிலும் தங்களை பௌதிக பந்தத்தின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டதேயில்லை என்பது நிச்சயம். மாறாக, பகவானைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள், பௌதிக சட்டங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். உண்மையில் புலன் நுகர்வுக்கு அடிமைப்பட்டுள்ள அவர்கள் பெண்ணாசையையே இலக்காகக் கொண்டு, கவர்ச்சியான பெண்களின் கைப்பாவைகளாக உள்ளனர். இத்தகைய ஒரு வாழ்வு முறைக்கு பலியாகும் இவர்கள், குழந்தைகளாலும், பேரக்குழந்தைகளாலும், கொள்ளுப் பேரன்களாலும் சூழப்பட்டவர்களாகி பௌதிக பந்தத்துடன் இறுக்கமாக பிணைக்கப்படுகின்றனர். இத்தகைய வாழ்வு முறைக்கு அடிமையானவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆகவே, நீங்கள் அசுர புத்திரர்கள் என்ற போதிலும், இத்தகைய நபர்களிடமிருந்து விலகி, பரமபுருஷரும், அனைத்து தேவர்களுக்கும் ஆதி மூலமுமாகிய நாராயணரைத் தஞ்சமடையுங்கள். ஏனெனில், நாராயண பக்தர்களின் முடிவான இலக்கு பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவதாகும்.

பதம் 7.6.19 : அசுர புத்திரர்களே, பரமபுருஷராகிய நாராயணர் ஆதியான பரமாத்மாவும், எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையுமாவார். அதனால் ஒருவன் ஒரு குழந்தையாகவோ அல்லது முதியவனாகவோ இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் அவரைத் திருப்திப்படுத்துவதற்கோ அல்லது அவரை வழிபடுவதற்கோ எந்த இடையூறும் இருக்காது. ஜீவராசிகளுக்கும், பரமபுருஷருக்கும் இடையிலுள்ள உறவு மாறாத உண்மையென்பதால், பகவானை திருப்திப்படுத்துவதில் எந்த சிரமமும் இல்லை.

பதங்கள் 7.6.20 – 7.6.23 : பரம் ஆளுனரும், அழிவற்றவரும், சளைக்காதவருமான பரம புருஷர், தாவரங்களைப் போன்ற அசையாத ஜீவராசிகளிலிருந்து, முதன்முதலாகப் படைக்கப்பட்ட ஜீவராசியான பிரம்மா வரையுள்ள வெவ்வேறு உயிரினங்களுக்குள் இருக்கிறார். அவர் பலதரப்பட்ட பௌதிக சிருஷ்டிகளிலும், பஞ்சபூதங்களிலும், மொத்த பௌதிக சக்தியிலும், ஜட இயற்கைக் குணங்களிலும் (சத்வம், ரஜஸ், தமஸ்) தோற்றத்திற்கு வராத ஜட இயற்கையிலும், பொய் அகங்காரத்திலும் கூட இருக்கிறார். அவர் ஒருவரே என்றாலும், எங்கும் வியாபித்திருக்கிறார். மேலும் அவர் எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமும், அனைத்து ஜீவராசிகளின் இதயங்களிலும் சாட்சியாக உள்ள உன்னத பரமாத்மாவாகவும் இருக்கிறார். அவர் எங்கும் நிறைந்தவர் என்றும், சர்வ வியாபகமுள்ள பரமாத்மா என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார் என்றாலும், உண்மையில் அவர் சுட்டிக்காட்ட முடியாதவராவார். அவர் மற்றவர்களால் தனியே பிரித்து சுட்டிக்காட்ட முடியாதவராக இருப்பினும், அனைத்திலும் அவர் பிரிக்கப்பட முடியாதவராகக் கலந்திருக்கிறார். அவர் பரம சச்-சித்-ஆனந்தமாக உணரப்படுகிறார். பௌதிக சக்தி எனும் திரையினால் மறைக்கப்பட்டிருப்பதால், நாஸ்திகர்களுக்கு அவர் இல்லாதவராகக் காணப்படுகிறார்.

பதம் 7.6.24 : ஆகவே, அசுர புத்திரர்களான எனது இளம் நண்பர்களே, தயவு செய்து பெளதிக அறிவிற்கு எட்டாதவரான பரமபுருஷர் திருப்தியடையும் வகையில் செயற்படுங்கள். உங்களுடைய அசுர சுபாவத்தை விட்டுவிட்டு, பகைமையும், இருமையும் இன்றி செயற்படுங்கள். பக்தித் தொண்டைப் புகட்டுவதன் மூலம் அனைத்து ஜீவராசிகளிடமும் கருணை காட்டி, அவர்களுடைய நண்பர்களாகுங்கள்.

பதம் 7.6.25 : எல்லாக் காரணங்களுக்கும் காரணமும், அனைத்திற்கும் ஆதி மூலமுமாகிய பரமபுருஷரை திருப்திப்படுத்திய பக்தர்களுக்கு அடைய முடியாதது எதுவுமில்லை. பகவான் எண்ணற்ற ஆன்மீக குணங்களுக்கு இருப்பிடமாவார். ஆகவே, ஜட இயற்கைக் குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலுள்ள பக்தர்களுக்கு, இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் தானாகவே அடையப்படும் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய கொள்கைகளைப் பின்பற்றுவதால் என்ன பயன்? பக்தர்களாகிய நாங்கள் எப்பொழுதும் பகவானுடைய தாமரைப் பாதங்களை துதித்துப் போற்றுகிறோம். எனவே தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றிற்காக நாங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பதம் 7.6.26 : மதம், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு ஆகிய இம்மூன்றும் வேதங்களில் த்ரி-வர்க என்று, அதாவது, முக்திக்கான மூன்று வழிகள் என்று விவரிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று பிரிவுகளுக்குள், கல்வி மற்றும் தன்னுணர்வு; வேதக் கிரியைகள்; தர்க்க சாஸ்திரம்; சட்ட ஒழுங்கு விஞ்ஞானம்; ஜீவனோபாயத்திற்கான பல்வேறு வழிமுறைகள் ஆகியவையும் அடங்கும். இவை வேதங்களில் கூறப்படும் புற விஷயங்களாகும். எனவே இவற்றை நான் பௌதிகமானவையாகக் கருதுகிறேன். ஆனால், பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் சரணடைவதை நான் திவ்யமானதாகக் கருதுகிறேன்.

பதம் 7.6.27 : அனைத்து ஜீவராசிகளுக்கும் நண்பரும், அவர்களது நலம் விரும்பியும், பரம புருஷருமாகிய நாராயணர், முன்பு இந்த உன்னத ஞானத்தை மாமுனிவரான நாரதருக்கு எடுத்துரைத்தார். நாரதரைப் போன்ற ஒரு சாதுவின் கருணையின்றி இத்தகைய ஞானத்தைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். ஆனால் நாரதரின் சீடப்பரம்பரையைத் தஞ்சமடைந்துள்ள அனைவராலும் இரகசியமான இந்த அறிவைப் புரிந்து கொள்ள முடியும்.

பதம் 7.6.28 : பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: எப்பொழுதும் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள நாரத முனிவரிடமிருந்து இந்த அறிவை நான் பெற்றேன். பாகவத-தர்மம் எனப்படும் இந்த அறிவு முற்றிலும் விஞ்ஞானப் பூர்வமானதாகும். இது நியாயத்தையும், தத்துவத்தையும் ஆதாரமாகக் கொண்டதும், பௌதிக களங்கத்திலிருந்து விடுபட்டதுமாகும்.

பதங்கள் 7.6.29 – 7.6.30 : அசுர புத்திரர்கள் பதிலளித்தனர்: அன்புள்ள பிரகலாதா, நீயோ, நாங்களோ, சுக்ராசாரியரின் புத்திரர்களான சண்டனையும், அமர்க்கனையும் தவிர வேறெந்த ஆசானையோ அல்லது ஆன்மீக குருவையோ அறியோம். நாம் குழந்தைகள். அவர்களோ நம்மை அடக்கி ஆள்பவர்கள். குறிப்பாக, எப்பொழுதும் அரண்மனைக்குள்ளேயே இருக்கும் உனக்கு, ஒரு மகானுடன் சகவாசம் கொள்வது மிகவும் கடினமாயிற்றே! சாந்த சொரூபியமான பிரிய நண்பனே, நாரதரிடமிருந்து கேட்கும் வாய்ப்பை நீ எப்படி பெற்றாய் என்பதை விவரிக்க வேண்டுகிறோம். இவ்விஷயத்தில் எங்களுடைய சந்தேகங்களை அன்புடன் அகற்ற வேண்டும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare