அத்தியாயம் – 2
அசுரராஜன் இரண்யகசிபு
பதம் 7.2.1 : ஸ்ரீ நாரத முனிவர் கூறினார்: யுதிஷ்டிர மகாராஜனே, பகவான் விஷ்ணு வராக மூர்த்தியின் ரூபத்தில் இரண்யாக்ஷனைக் கொன்ற பொழுது இரண்யாக்ஷனின் சகோதரனான இரண்யகசிபு கடுங்கோபமடைந்து வருந்தத் துவங்கினான்.

பதம் 7.2.2 : இரண்யகசிபு கடுங்கோபத்துடன் தன் உதடுகளை கடித்துக் கொண்டு கோபக்கனல் பறக்கும் கண்களுடன் ஆகாயத்தை வெறித்து நோக்கி அதைப் புகையால் மூடச் செய்தான். பின்னர் அவன் பின்வருமாறு பேசலானான்.

பதம் 7.2.3 : அவனுடைய கோரமான பற்களைக் காட்டிக் கொண்டு கொடூரமான பார்வையுடனும், நெறித்த புருவங்களுடனும், பார்ப்பதற்கு பயங்கரத் தோற்றமுடையவனாய், அவன் தனது ஆயுதமான சூலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அங்கு கூடியிருந்த தனது சகாக்களான அசுரர்களிடம் பின்வருமாறு பேசத் துவங்கினான்.

பதங்கள் 7.2.4-7.2.5 : ஓ தானவர்களே, தைத்தியர்களே! ஓ துவிமூர்மன், திரியக்ஷன், சம்பரன், சதபாஹு! ஓ ஹயகிரீவன், நமுச்சி, பாக, இவ்வலன்! ஓ விப்ரசித்தி, புலோமன், சகுணன் முதலான அசுரர்களே! நீங்கலெல்லோரும் அன்புடன் என் வார்த்தையை கவனமாகக் கேட்டு அதற்கேற்ப தாமதமின்றி செயற்பட வேண்டும்.

பதம் 7.2.6 : எனது துச்சமான எதிரிகளாகிய தேவர்கள் ஒன்று சேர்ந்து எனது அன்புமிக்க, எனது நலனின் அக்கறை கொண்டு எனக்குக் கீழ்படிந்து நடந்த என் சகோதரனான இரண்யாக்ஷனைக் கொன்றுவிட்டனர். பரமபுருஷனான விஷ்ணு, தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய நம் இரு சாராருக்கும் எப்பொழுதும் சமமானவன் என்றாலும், இம்முறை தேவர்களால் பக்தியுடன் பூஜிக்கப்பட்ட அவன் அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டு, இரண்யாக்ஷனைக் கொல்வதில் அவர்களுக்கு உதவியுள்ளான்.


பதங்கள் 7.2.7-7.2.8 : பரமபுருஷன் தேவர்களிடமும், அசுரர்களிடமும் உள்ள தனது இயல்பான சமத்துவத்தை விட்டுவிட்டான். அவன் பரம புருஷனாக இருந்தும், இப்பொழுது மாயையால் கவரப்பட்டு, அவனது பக்தர்களான தேவர்களை மகிழ்விப்பதற்காக ஒரு காட்டுப் பன்றியின் ரூபத்தை ஏற்றுக் கொண்டுள்ளான். இது சஞ்சலமுள்ள ஒரு குழந்தை வேறொருவரை நோக்கி தாவுவதைப் போலாகும். எனவே நான் எனது சூலத்தினால் பகவான் விஷ்ணுவின் தலையை துண்டித்துவிடப் போகிறேன். அவனது உடலிலிருந்து பெருகி வரும் ரத்தத்தால், ரத்தத்தை உறிஞ்சுவதை மிகவும் விரும்பிய என் சகோதரன் இரண்யாக்ஷனை நான் திருப்திப் படுத்துவேன். இவ்வாறு தானும் நிம்மதியடைவேன்.

பதம் 7.2.9 : வேர் துண்டிக்கப்பட்டு ஒரு மரம் கீழே விழுந்தவுடனேயே அதன் கிளைகளும், இலைகளும் தானாகவே உலர்ந்து போய்விடுகின்றன. அதுபோலவே, தேவர்களின் உயிரும், ஆத்மாவுமாக உள்ள தந்திரக்காரனான இந்த விஷ்ணுவை நான் கொன்றுவிட்டால், தேவர்கள் தங்களுடைய உயிரின் மூலத்தை இழந்து உலர்ந்து போய் விடுவார்கள்.

பதம் 7.2.10 : நான் பகவான் விஷ்ணுவைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கும் பொழுது, பிராமண பண்பாட்டினாலும் க்ஷத்திரிய அரசாட்சியாலும் செழிப்புற்று விளங்கும் மண்ணுலகிற்கு நீங்கள் செல்ல வேண்டும். மண்ணுலகில் தவத்திலும், வேள்வியிலும், வேதக் கல்வியிலும், விரதங்களிலும், தான தர்மங்களிலும் ஈடுபட்டுள்ள மக்களையெல்லாம் நீங்கள் அழித்துவிடவேண்டும்.

பதம் 7.2.11 : யக்ஞம் மற்றும் கிரியா சொரூபமாக விளங்கும் பகவான் விஷ்ணுவை திருப்திப்படுத்துவதே பிராமணப் பண்பாட்டின் அடிப்படைக் கொள்கையாகும். பகவான் விஷ்ணு எல்லாச் சமய கொள்கைகளுக்கும் பிறப்பிடமாவார். அவரே அனைத்து தேவர்களுக்கும் சிறந்த பிதாக்களுக்கும், பொது ஜனங்களுக்கும் புகலிடமாவார். பிராமணர்கள் கொல்லப்பட்டுவிட்டால் யக்ஞங்கள் செய்யும்படி க்ஷத்திரியர்களை உற்சாகப்படுத்துவதற்கு எவருமே இருக்கமாட்டார்கள். இவ்வாறாக தேவர்களும் யக்ஞத்தில் வரும் ஹவிர்பாகம் இன்றி வருந்தித் தானாகவே இறந்துவிடுவர்.

பதம் 7.2.12 : எங்கெல்லாம், பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் நல்ல பாதுகாப்பு உள்ளதோ, எங்கெல்லாம் வர்ணாஸ்ரம கொள்கைகளுக்கேற்ப வேதங்கள் கற்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் உடனடியாகச் செல்லுங்கள். அந்த இடங்களுக்குத் தீவைத்து, வாழ்வின் ஆதாரமாக விளங்கும் அங்குள்ள மரங்களை வெட்டித் தள்ளுங்கள்.

பதம் 7.2.13 : இவ்வாறாக அழிவுச் செயல்களில் அதிக விருப்பம் கொண்ட அசுரர்கள், இரண்யகசிபுவின் உபதேசங்களை சிரமேற்கொண்டு மிகவும் மரியாதையுடன் அவனுக்கு வணக்கம் செலுத்தினர். அவனது உத்தரவுப்படி அனைத்து ஜீவராசிகளுக்கும் எதிரான துஷ்டச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர்.

பதம் 7.2.14 : அந்த அசுரர்கள் நரகங்களுக்கும், கிராமங்களுக்கும், மேய்ச்சல் நிலங்களுக்கும், இடையர் கிராமங்களுக்கும், தோட்டங்களுக்கும் வயல்களுக்கும் மற்றும் இயற்கையான காடுகளுக்கும் தீமூட்டினர். அவர்கள் சாதுக்களின் ஆசிரமங்களையும், விலையுயர்ந்த உலோகங்களை வழங்கும் முக்கியச் சுரங்கங்களையும், விவசாயிகளின் குடியிருப்புகளையும், மலைக் கிராமங்களையும், பசுக்களைப் பாதுகாப்பவர்களான இடையர்களின் கிராமங்களையும் தீக்கிரையாக்கினர். அரசாங்கத் தலைநகரங்களையும் அவர்கள் கொளுத்தினர்.

பதம் 7.2.15 : அசுரர்களில் சிலர் கடப்பாறைகளை எடுத்து நகரங்களில் பாலங்களையும், அரண்களையும், (கோபுர) வாசல்களையும் உடைத்தனர். சிலர் கோடரிகளை எடுத்து மாம்பழங்களையும், பலாப்பழங்களையும், மற்ற உணவு வகைகளையும் அளித்த முக்கியமான மரங்களை வெட்டத் துவங்கினர். சில அசுரர்கள் தீப்பந்தங்களை எடுத்து பிரஜைகளின் குடியிருப்புகளுக்குத் தீ வைத்தனர்.

பதம் 7.2.16 : இவ்வாறு இரண்யகசிபுவின் ஆட்களால் விளைவிக்கப்பட்ட இயற்கைக்கு விரோதமான செயல்களால் திரும்பத்திரும்ப தொல்லைக்குள்ளான மக்கலெல்லோரும் வேத பண்பாட்டுச் செயல்களை விட்டுவிட வேண்டியிருந்தது. யாகப் பலன்களைப் பெறாததால் தேவர்களும் தொல்லைக்குள்ளாகினர். அவர்கள் சுவர்கலோகங்களிலுள்ள தங்களுடைய குடியிருப்புகளை விட்டுவிட்டு அசுரர்களுக்குத் தெரியாமல் நாசகரமான சம்பவங்களைக் காணும் பொருட்டு மண்ணுலகில் சஞ்சரிக்கத் துவங்கினர்.

பதம் 7.2.17 : இரண்யகசிபு தன் சகோதரனின் மரணத்திற்குரிய ஈமக்கிரியைகளைச் செய்துமுடித்தபின் மிகவும் வருத்தத்துடன் தன் மருமகன்களை சமாதானப்படுத்த முயன்றான்.

பதங்கள் 7.2.18-7.2.19 : அரசே, இரண்யகசிபு கடுங்கோபமடைந்தான். ஆனால் அவனொரு பெரிய அரசியல்வாதி என்பதால், காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப எப்படி செயல்படுவது என்பதை அறிந்திருந்தான். அவன் இனிய வார்த்தைகளால் தன் மருமகன்களான சகுனி, சம்பரன், திருஷ்டி, பூத்தசந்தாபணன், விருகன், காலநாபன், மஹாநாபன், ஹரிஸ் மஸ்ரு மற்றும் உத்சகன் ஆகியோரை சமாதானப்படுத்தத் துவங்கினான். மேலும் அவன் அவர்களது தாயையும், தன் சகோதரன் மனைவியான ருஷாபானுவையும் தன் சொந்த தாயான திதியையும் கூட தேற்றினான். அவன் அவர்களிடம் பின்வருமாறு பேசலானான்.

பதம் 7.2.20 : இரண்யகசிபு கூறினான்: அன்புள்ள தாயே, சகோதரன் மனைவியே மற்றும் மருமகன்களே, ஒரு சிறந்த வீரனின் மரணத்திற்காக நீங்கள் வருந்தக் கூடாது. ஏனெனில் எதிரியின் முன் உயிரை விடுவது ஒரு வீரனுக்கு பெருமை தரக் கூடியதும், விரும்பத்தக்கதும் ஆகும்.

பதம் 7.2.21 : என் அருமைத் தாயே, ஓர் உணவு விடுதியில் அல்லது தண்ணீர்ப் பந்தலில் பல பயணிகள் கூடுகின்றனர். பிறகு நீர் பருகிய பின் அவர்கள் தாங்கள் போக வேண்டிய இடங்களுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றனர். அதுபோலவே ஜீவராசிகள் ஒரு குடும்பத்தில் ஒன்றாகக் கூடுகின்றனர். அதன்பிறகு அவர்களுடைய சொந்த செயல்களின் பலனாக தங்களுடைய வெவ்வேறு திசைகளுக்கு பிரித்து அனுப்பப்படுகின்றனர்.

பதம் 7.2.22 : ஆன்மீக ஆத்மாவான ஜீவராசி நித்தியமானவனும் முடிவற்றவனும் ஆவான் என்பதால் அவனுக்கு மரணமில்லை. அவன் பௌதிக களங்கத்திலிருந்து விடுபட்டிருப்பதால் அவனால் பௌதிக அல்லது ஆன்மீக உலகங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அவன் அறிவுமயமானவன், ஜட உடலிலிருந்து முற்றிலும் வேறானவன். ஆனால் தன்னுடைய சிறிய சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து தவறாக வழிநடத்திச் செல்லப்படுவதன் காரணத்தால், அவன் ஜட இயற்கையால் உருவாக்கப்படும் ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். இவ்வாறாக அவன் பெயரளவிளான பௌதிக இன்ப துன்பங்களுக்கு ஆளாகிறான். எனவே உடலிலிருந்து ஆத்மா பிரிவதைக் குறித்து ஒருவரும் துக்கப்படக் கூடாது.

பதம் 7.2.23 : நீரில் ஏற்படும் அசைவுகளின் காரணத்தால் அந்த நீரில் பிரதிபலிக்கும் நதிக்கரையிலுள்ள மரங்கள் அசைவது போல் காணப்படுகின்றன. அது போலவே மனக்கோளாறினால் கண்கள் அசையும் பொழுது நிலமும் அசைவது போல் காணப்படுகிறது.

பதம் 7.2.24 : அதுபோலவே, எனதருமைத்தாயே, ஜட இயற்கைக் குணங்களின் அசைவினால் மனம் அலைக்கழிக்கப்படும் பொழுது, ஜீவராசியானவன் ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களின் வெவ்வேறு நிலைகளிலிருந்து விடுபட்டுள்ள போதிலும், தான் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறிவிட்டதாக எண்ணுகிறான்.

பதம் 7.2.25- 7.2.26 : உடலையும் மனதையும் ஆத்மாவாக ஏற்றுக் கொள்ளும் குழப்பமடைந்த நிலையிலும் ஜீவராசி, சிலரைத் தனது உறவினர்கள் என்றும், மற்றவர்களை வெளியாட்கள் என்றும் கருதுகிறான். இந்த தப்பபிப்பிராயத்தின் காரணத்தால் அவன் துன்புறுகிறான். உண்மையில், கற்பனையான இத்தகைய பௌதிக எண்ணங்களின் சேகரிப்புத்தான், ஜட உலகிலுள்ள பெயரளவேயான இன்ப துன்பங்களுக்குக் காரணமாகும். இந்நிலையிலுள்ள பந்தப்பட்ட ஆத்மா வெவ்வேறு உயிரினங்களில் பிறவி எடுத்து பல்வேறு வகையான உணர்வு நிலைகளில் செயலாற்ற வேண்டியுள்ளது. இவ்விதமாக புதுப்புது உடல்களை அவன் உற்பத்தி செய்து கொண்டே போகிறான். தொடர்ச்சியான இந்த பௌதிக வாழ்வுதான் ஸம்ஸாரம் என்று அழைக்கப்படுகிறது. பிறப்பு, இறப்பு. துக்கம், முட்டாள்தனம், தவறு ஆகியவற்றிற்கு இத்தகைய பௌதிக சூழ்நிலைகள்தான் காரணம். இவ்வாறாக நாம் சில சமயங்களில் சரியான புரிதல் சரியான உணர்வுக்கு வருகிறோம். சில சமயங்களில் தவறான புரிதல் தவறான உணர்வுக்கு பலியாகிவிடுகிறோம்.

பதம் 7.2.27 : இது தொடர்பாக பழைய சரித்திரத்திலிருந்து ஓர் உதாரணம் கொடுக்கப்படுகிறது. இது யமராஜனுக்கும், மரணமடைந்த ஒருவனின் நண்பர்களுக்கும் இடையிலான ஒரு சம்பாஷனையாகும். இதை கவனமாகச் கேளுங்கள்.

பதம் 7.2.28 : உசீனரம் என்ற தேசத்தில் சுயக்ஞன் என்ற பெயருடைய புகழ் பெற்ற ஓர் அரசன் இருந்தான். அவன் யுத்தத்தில் பகைவர்களால் கொல்லப்பட்ட பொழுது, அவனது உறவினர்கள் அவனது உயிரற்ற உடலைச் சுற்ற அமர்ந்து, தங்களுடைய நண்பனின் மரணத்தை எண்ணி அழுது புலம்ப துவங்கினர்.

பதங்கள் 7.2.29-7.2.31 : அவனது தங்கத்தாலான வைரம் இழைத்த கவசம் தகர்க்கப்பட்டு, அவனது ஆபரணங்களும், மாலைகளும் அறுந்து விழுந்து. அவனது கேசம் சிதறிக்கிடக்க, அவனது விழிகள் ஒளியிழந்து மங்கியபடி அந்த அரசன் கொல்லப்பட்டு யுத்தகளத்தில் விழுந்து கிடந்தான். அவனது முழு உடலும் இரத்தத்தால் நனைந்திருந்தது. அவனது இதயம் எதிரியின் அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தது. சாகும் தறுவாயில் தன் வீரத்தைக் காட்ட விரும்பிய அவன் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டதால், அவனது பற்கள் அந்த நிலையிலேயே இருந்தன. தாமரை போன்ற அவனது அழகிய முகம் இப்பொழுது கருமையடைந்து யுத்தகளத்தின் புழுதியால் மூடப்பட்டிருந்தது. வாளுடனும், மற்ற ஆயுதங்களுடனும் கூடிய அவனது கரங்கள் வெட்டப்பட்டு கிடந்தன. உசீனர மன்னனின் ராணிகள் தங்கள் கணவரின் நிலையைக் கண்டு பின்வருமாறு அழுது புலம்பத் துவங்கினர். “ஓ பிரபு, இப்பொழுது நீங்கள் கொல்லப்பட்டு விட்டதால், நாங்களும் கொல்லப்பட்டவர்களாவோம்.” இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறிப் புலம்பிய அவர்கள், மார்பில் அடித்துக் கொண்டு மரண மடைந்த அரசனின் பாதங்களில் விழுந்தனர்.

பதம் 7.2.32 : அந்த ராணிகள் உரக்கக் கதறியழுத பொழுது அவர்களது கண்ணீர் அவர்களது மார்பில் விழுந்தோடி அங்குள்ள குங்குமத்துடன் கலந்து, சிவந்து போய் அவர்களது அருமைக் கணவனின் பாதங்களில் விழுந்தன. அவர்களது கேசம் கலைந்து சிதறிக் கிடந்தது. ஆபரணங்கள் சிதறிக் கிடந்தன. இவ்வாறாக கேட்போர் இதயத்தை உருக்கும் வண்ணம் தங்கள் கணவனின் மரணத்தைக் குறித்து அந்த ராணிகள் அழுது புலம்பத் துவங்கினர்.

பதம் 7.2.33 : பிரபுவே, இரக்கமற்ற விதியினால் இப்பொழுது நீங்கள் எங்களுடைய பார்வைக்கு எட்டாத இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுவீட்டீர்கள். நீங்கள் முன்பு உசீனர நாட்டு மக்களுக்குப் படியளந்து அவர்களைப் பராமரித்து வந்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் இப்பொழுதுள்ள உங்களுடைய நிலை அவர்களுடைய துக்கத்திற்குக் காரணமாகிவிட்டது.

பதம் 7.2.34 : அரசே, ஓ வீரரே, நீங்கள் எங்களனைவரிடமும் மிகவும் நன்றியுள்ள ஒரு கணவராகவும், உண்மை நண்பராகவும், இருந்தீர்கள். நீங்களில்லாமல் நாங்கள் எவ்வாறு உயிர் வாழ்வது? வீரரே, தாங்கள் எங்கு செல்லப் போகிறீர்கள் என்பதை எங்களுக்கும் தயவு செய்து சொல்லுங்கள். அதனால் நாங்களும் உங்கள் அடிச்சுவடிகளைப் பின்பற்றி வந்து மீண்டும் உங்களுடைய சேவையில் ஈடுபடுவோம். நாங்களும் உங்களுடன் வந்து விடுகிறோம்!

பதம் 7.2.35 : உடலை எரிப்பதற்குரிய நேரம் வந்தது. ஆனால் அவ்வுடல் எடுத்துச் செல்லப்படுவதை அனுமதிக்காத அந்த ராணிகள் தங்கள் மடிகளில் கிடத்தியிருந்த உயிரற்ற அவ்வுடலைக் குறித்து தொடர்ந்து அழுது புலம்பிக் கொண்டே இருந்தனர். இதற்கிடையில் சூரியனும் மேற்குத் திசையில் மறையலாயிற்று.

பதம் 7.2.36 : அந்த ராணிகள் அரசனின் உயிரற்ற அந்த உடலுக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பொழுது அவர்களுடைய உரத்த அழுகுரல்கள் யமலோகத்திற்குக் கூட கேட்டது. யமராஜனும் ஒரு சிறுவனின் உருவில் இறந்துபோன அரசனின் உறவினர்களை அணுகி பின்வருமாறு அவர்களுக்கு அறிவுரை கூறினார்.

பதம் 7.2.37 : ஸ்ரீ யமராஜர் கூறினார்: அந்தோ! இது எவ்வளவு ஆச்சரியமானது. என்னைவிட மூத்தவர்களான இவர்களுக்கு, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஜீவராசிகள் பிறவியெடுத்து மடிந்திருப்பதில் முழு அனுபவம் உள்ளது. இவ்வாறாக தாங்களும் மடிய வேண்டியவர்கள் தான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்படியிருந்தும் அவர்கள் குழப்பமடைந்துள்ளனர். பந்தப்பட்ட ஆத்மா யாருக்கும் தெரியாத ஓரிடத்திலிருந்து வருகிறான். மரணத்திற்குப் பிறகு யாருக்கும் தெரியாத அதே இடத்திற்கு திரும்பிச் செல்கிறான். ஜட இயற்கையில் நடத்தப்படும் இச்சட்டத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல. இதையறிந்தும் அவர்கள் ஏன் வீணாகப் புலம்புகிறார்கள்?

பதம் 7.2.38 : வயதான இப்பெண்களுக்கு, எம்மை விட, வாழ்வைப் பற்றிய உயர்ந்த அறிவு இல்லாதது ஆச்சர்யமாக உள்ளது; உண்மையில் யாம் மிகவும் பாக்கியசாலியாவோம். ஏனெனில், யார் குழந்தையாக நாம் இருப்பினும், தாய் தந்தையரால் பாதுகாக்கப்படாமல் கைவிடப்பட்டு, தனியாக இவ்வுலகில் போராட நேர்ந்தபோதிலும், பலவீனமானவனாக இருந்த போதிலும், யாம் அழிக்கப்பட்டுவிடவோ அல்லது கொடிய மிருகங்களுக்கு இரையாகவோ இல்லை. இவ்வாறாக தாயின் கர்ப்பத்திலேயே எமக்குப் பாதுகாப்பு அளித்துள்ள பரமபுருஷர் எல்லா இடங்களிலும் எம்மை பாதுகாப்பர் என்று நாம் திடமாக நம்புகிறோம்.

பதம் 7.2.39 : அந்த சிறுவன் அப்பெண்களை நோக்கி கூறினான்: அபலைப் பெண்களே, ஒருபோதும் குறைவற்றவரான பரமபுருஷரின் விருப்பத்தினாலேயே பிரபஞ்சம் படைத்து, காத்து மீண்டும் அழிக்கப்படுகிறது. இதுவே வேத ஞானத்தின் தீர்ப்பாகும். அசைவன, அசையாதன ஆகிய ஜீவன்களைக் கொண்டுள்ள இந்த ஜட சிருஷ்டி பகவானின் விளையாட்டுப் பொருளைப் போன்றதாகும். அவர் பரமபுருஷர் என்பதால், அதை அழிக்கவும், காக்கவும் பூரண தகுதியுடையவராவார்.

பதம் 7.2.40 : சிலசமயங்களில் எல்லோராலும் பார்க்கும்படியான பொதுவீதியில் ஒருவன் தன் பணத்தை தொலைத்துவிடுகிறான். இருப்பினும் மற்றவர்களால் காணமுடியாதபடி அவனுடைய பணம் விதியினால் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறாக அதை இழந்தவனே மீண்டும் அதைப் பெறுகிறான். மற்றொரு புறம், பகவான் பாதுகாப்பு அளிக்காவிடில், வீட்டில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள பணம் கூட காணாமற்போய் விடுகிறது. பரமபுருஷர் ஒருவனுக்குப் பாதுகாப்பு அளிப்பாரேயானால், அவன் பாதுகாப்பவர் இல்லாமல் காட்டில் இருந்தாலும் உயிரோடிருக்கிறான். ஆனால் வீட்டில் உறவினர்களாலும், மற்றவர்களாலும் நன்கு பாதுகாக்கப்படும் ஒருவன் சிலசமயங்களில் ஒருவராலும் காப்பாற்றமுடியாமல் மரணமடைகிறான்.

பதம் 7.2.41 : ஒவ்வொரு பந்தப்பட்ட ஆத்மாவும் அவனது செயலுக்கேற்ப வெவ்வேறு வகையான உடலைப் பெறுகிறான். அவனுடைய வேலை முடிந்ததும் உடலும் முடிந்துவிடுகிறது. ஆத்மாவானது வெவ்வேறு உயிரினங்களில், ஸ்தூல மற்றும் சூட்சும ஜட உடல்களில் இருந்த போதிலும், அவற்றினால் அவன் பந்திக்கப்படுவதில்லை. ஏனெனில், தோன்றியுள்ள உடலிலிருந்து அவன் முற்றிலும் வேறுபட்டவனாவான்.

பதம் 7.2.42 : ஓர் இல்லறவாசி அவனது இல்லத்திலிருந்து வேறுபட்டவன் என்றபோதிலும், தான் தனது இல்லத்துடன் ஒன்றுபட்டவன் என்று நினைக்கிறான். அதுபோலவே, பந்தப்பட்ட ஆத்மா அறியாமையின் காரணத்தால், உடலானது உண்மையில் ஆத்மாவிலிருந்து வேறுபட்டது என்றபோதிலும், உடலையே தான் என்று ஏற்றுக் கொள்கிறான். இவ்வுடலானது மண், நீர், நெருப்பு ஆகியவற்றின் ஒரு சேர்க்கையின் மூலமாக அடையப்படுகிறது. இந்த மண், நீர், நெருப்பு ஆகியவை காலப்போக்கில் உருமாற்றமடையும் பொழுது உடல் அழிந்துபோகிறது. உடலின் இந்த சிருஷ்டி மற்றும் அழிவு ஆகியவற்றுடன் ஆத்மாவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை.

பதம் 7.2.43 : எப்படி நெருப்பு விறகில் ஊடுருவி இருப்பினும் விறகிலிருந்து வேறுபட்டதாகக் காணப்படுகிறதோ, எப்படி காற்றானது வாய்க்குள்ளும், நாசித்துவாரங்களுக்குள்ளும் இருப்பினும் அது பிரிந்திருப்பதாகக் காணப்படுகிறதோ, எப்படி ஆகாயமானது எங்கும் நிறைந்திருப்பினும் எதனுடனும் கலப்பதில்லையோ அப்படியே, ஜட உடலுக்கு ஆதாரமான ஜீவராசி இப்பொழுது அதற்குள் சிறைப்பட்டுள்ள போதிலும், அதிலிருந்து வேறுபட்டதாகவே உள்ளது.

பதம் 7.2.44 : யமராஜர் தொடர்ந்து கூறினார்: துக்கப்படுபவர்களே, நீங்களெல்லோரும் மூடர்களாவீர்! யாருக்காக நீங்கள் துக்கப்படுகிறீர்களோ அந்த சுயக்ஞன் எங்கும் சென்றுவிடவில்லை, இன்னும் உங்கள் முன்தான் படுத்திருக்கிறார். அப்படியிருக்க உங்களுடைய துக்கத்திற்குக் காரணமென்ன? முன்பு அவர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு பதில் கூறினார். ஆனால் இப்பொழுது அவரைக் காணாது நீங்கள் துக்கப்படுகிறீர்கள். இது முரணான நடத்தையாகும். ஏனெனில், உண்மையில் நீங்கள், உடலுக்குள் இருந்து கொண்டு நீங்கள் கூறியதைக் கேட்டு அதற்கு பதிலளித்த அவரை ஒரு போதும் கண்டதில்லை. நீங்கள் அன்றாடம் பார்த்து வந்த உடல் இங்கே அப்படியே கிடக்கிறது என்பதால், நீங்கள் துக்கப்படுவதற்கு அவசியமே இல்லை.

பதம் 7.2.45 : உடலில் மிகவும் முக்கிய பொருளாக விளங்குவது பிராணவாயுவாகும். ஆனால் அந்த பிராணவாயு கூட கேட்பவனோ அல்லது பேசுபவனோ அல்ல. அந்த பிராணவாயுக்கும் அப்பாலுள்ள ஆத்மாவின் ஒத்துழைப்புடன் பரமாத்மாதான் உண்மையில் உத்தரவிடுபவராவார். உடலின் செயல்களை நடத்தும் பரமாத்மா, உடல் மற்றும் உயிர்ச் சக்தி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டவராவார்.

பதம் 7.2.46 : பஞ்ச பூதங்கள், ஐந்து புலன்கள், மனம் ஆகியவை சேர்ந்து, ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களின் வெவ்வேறு பாகங்களாகின்றன. ஜீவராசி, உயர்ந்ததாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ உள்ள ஜட உடல்களுடன் தொடர்பு கொண்டு, பிறகு தனது சொந்த அறிவு முதிர்ச்சியினால் அவற்றைக் கைவிடுகிறான். வெவ்வேறு வகையான உடல்களைப் பெறுவதில் ஜீவராசிக்குள்ள சொந்த சக்தியில் இந்த பலத்தைக் காண முடியும்.

பதம் 7.2.47 : ஆத்மாவானவன் மனம், புத்தி, பொய், அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் மூடப்பட்டிருக்கும் வரை, அவனது கர்ம பலன்களால் அவன் பந்திக்கப்படுகிறான். இந்த மறைப்பின் காரணத்தால் ஆத்மா ஜட சக்தியுடன் சம்பத்தப்படுவதால், அதற்கேற்ப அவன் தொடர்ந்து பிறவிக்குப்பின் பிறவியாக பௌதிக சூழ்நிலைகளையும் எதிரிடையான சூழ்நிலைகளையும் அனுபவிக்க வேண்டும்.

பதம் 7.2.48 : ஜட இயற்கைக் குணங்களும், அவற்றின் பலன்களாகிய பெயரளவேயான இன்ப துன்பங்களும் உண்மையானவை என்பது போல் அவற்றைப் பார்ப்பதும், அவைகளைப் பற்றி பேசுவதும், பயனற்ற செயலாகும். பகலில் மனம் இங்குமங்கும் சஞ்சரிக்கும் பொழுது, ஒருவன் தன்னை மிகவும் முக்கியமானவன் என்று நினைக்கத் துவங்குகிறான். அல்லது இரவில் அவன் கனவு கண்டு, ஓரழகிய பெண்ணுடன் தான் சுகம் அனுபவிப்பதாக காண்கிறான். இவையெல்லாம் வெறும் பொய்க்கனவுகளே ஆகும். அதுபோலவே பௌதிக புலன்களால் விளைவிக்கப்படும் இன்ப துன்பங்களும் அர்த்தமற்றவையே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பதம் 7.2.49 : தன்னுணர்வு பற்றிய முழு அறிவு உள்ளவர்களும், ஆத்மா நித்தியமானது ஆனால் உடல் அழியக் கூடியது என்பதை அறிந்திருப்பவர்களும் துக்கத்தால் நசுக்கப்படுவதில்லை. ஆனால் தன்னுணர்வு பற்றிய அறிவில்லாதவர்கள் துக்கப்படுவது நிச்சயம். ஆகவே மாயையில் உள்ள ஒருவனுக்குக் கல்வி புகட்டுவது மிகவும் கடினமாகும்.

பதம் 7.2.50 : முன்பொரு சமயம் வேடனொருவன் உணவால் பறவைகளை வசீகரித்து ஏமாற்றி, அவைகளை வலைவிரித்து பிடித்து வந்தான். அவன் மரண தேவனால் நியமிக்கப்பட்டவன் போல், பறவைகளைக் கொன்று குவித்து வந்தான்.

பதம் 7.2.51 : வனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வேடன் ஒரு ஜோடி குலிங்க பறவைகளைக் கண்டான். அவ்விரு பறவைகளில் பெண் பறவை வேடனின் வேட்டைக் கவர்ச்சி இசையால் வசீகரிக்கப்பட்டது.

பதம் 7.2.52 : சுயக்ஞனின் ராணிகளே, தன் மனைவி பெரும் ஆபத்தில் வைக்கப்பட்டு விதியின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆண் குலிங்கப் பறவை மிகவும் வருத்தமடைந்தது. அன்பின் காரணத்தால் பரிதாபமான அப்பறவை தன் மனைவியை விடுவிக்க இயலாது வருந்தத் துவங்கியது.

பதம் 7.2.53 : ஐயோ! விதி எவ்வளவு இரக்கமற்றதாக உள்ளது! என் மனைவி யாராலும் காப்பாற்ற முடியாத பரிதாபமான நிலையில் எனக்காக வருந்துகிறாள். பரிதாபமான இப்பறவையை எடுத்துக் கொள்வதால் தெய்வத்திற்கு என்ன கிடைக்கும்? இதனால் என்ன லாபம்?

பதம் 7.2.54 : என்னுடைய உடலின் சரி பாதியான என் மனைவியை இரக்கமற்ற தெய்வம் பறித்துக் கொள்ளுமானால், என்னையும் ஏன் அவர் எடுத்துக் கொள்ளக் கூடாது? நான் என் மனைவியை இழந்த வருத்தத்தால் என்னுடைய பாதி உடலுடன் உயிர் வாழ்வதால் என்ன பயன்? இவ்வாறு நான் அடையப் போவதுதான் என்ன?

பதம் 7.2.55 : துரதிஷ்டசாலியான குழந்தைகள், தாயை இழந்து, தாய் வந்து உணவளிப்பதற்காக கூட்டில் காத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு இன்னும் இறக்கைகள் கூட முளைக்கவில்லை. நான் எப்படி அவைகளைக் காப்பாற்றப் போகிறேன்?

பதம் 7.2.56 : தன் மனைவியை இழந்த காரணத்தால் குலிங்கப் பறவை தன் கண்களில் கண்ணீருடன் புலம்பிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் தூரத்தில் மிகவும் கவனமாக மறைந்திருக்கும் வேடன் தக்க தருணம் வந்ததும் தன் அம்பை விட்டான். அது அந்த குலிங்கப் பறவையின் உடலைத் துளைத்து, அதைக் கொன்று விட்டது.

பதம் 7.2.57 : இவ்வாறாக ஒரு சிறுவனின் வேடத்திலிருந்து யமராஜன், அந்த ராணிகளிடம் பின்வருமாறு கூறினார்: பெரும் முட்டாள்களான நீங்கள் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய சொந்த மரணத்தை நீங்கள் பார்க்கவில்லை. அறிவு பற்றாக்குறையினால் பீடிக்கப்பட்டுள்ள நீங்கள் இறந்துபோன உங்கள் கணவனுக்காக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அழுது புலம்பினாலும், ஒரு போதும் அவரை நீங்கள் உயிருடன் திரும்பிப் பெற இயலாது. இதற்கிடையில் உங்களுடைய வாழ்வும் முடிந்து விடும்.

பதம் 7.2.58 : இரண்யகசிபு கூறினான்: ஒரு சிறுவனின் ரூபத்திலிருந்த யமராஜன், சுயக்ஞனின் சவத்தைச் சூழ்ந்து கொண்டிருந்த அவனது உறவினர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது, தத்துவார்த்தமான அவரது வார்த்தைகளைக் கேட்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பௌதிகமான அனைத்தும் தற்காலிகமானவையே என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

பதம் 7.2.59 : ஒரு சிறுவனின் ரூபத்திலிருந்து யமராஜன், சுயக்ஞனின் முட்டாள் உறவினருக்கு உபதேசித்தபின், அவர்களுடைய பார்வையிலிருந்து அவர் மறைந்து போனார். அதன்பிறகு சுயக்ஞனின் உறவினர்கள் அவனது அந்திம கிரிகைகளைச் செய்தனர்.

பதம் 7.2.60 : எனவே, உங்களுடைய சொந்த உடலின் மறைவுக்காகவோ அல்லது மற்றவர்களுடைய உடலின் மறைவுக்காகவே உங்களில் எவரும் வருந்தக் கூடாது. ஒருவன் அறியாமையில் இருக்கும் பொழுது தான், “நான் யார்? மற்றவர்கள் யார்? எனக்குச் சொந்தமானது எது? மற்றவர்களுக்குச் சொந்தமானது எது?” என்றெண்ணி, தேக வேறுபாடுகளைக் காண்கிறான்.

பதம் 7.2.61 : ஸ்ரீ நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார்: இரண்யகசிபு மற்றும் இரண்யாக்ஷனின் தாயாரான திதி, தன் மருமகளும், இரண்யாக்ஷனின் மனைவியுமான ருஷாபனுவுடன் இரண்யகசிபுவின் உபதேசங்களைக் கேட்டாள். பிறகு அவள் தன் மகனின் மரணத்தைக் குறித்த வருத்தத்தை மறந்து, வாழ்வின் உண்மையான தத்துவத்தைப் புரிந்து கொள்வதில் தன் மனதையும், கவனத்தையும் ஈடுபடுத்தினாள்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare