அத்தியாயம் – 14
சித்ரகேது மகாராஜனின் மனக்கவலை
பதம் 6.14.1 : பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: கற்றறிந்த பிராமணரே, ரஜோ மற்றும் தமோ குணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அசுரர்கள் பொதுவான பாவிகளாகத்தான் இருப்பார்கள். அவ்வாறிருக்க விருத்ராசுரன் எவ்வாறு பரமபுருஷராகிய பகவான் நாராயணரிடத்தில் இத்தகைய உயர்ந்த அன்பைப் பெற்றான்?

பதம் 6.14.2 : சத்வ குணத்தில் நிலைபெற்றுள்ள தேவர்களும், பௌதிக சுகத்தின் அழுக்கிலிருந்து தூய்மையடைந்துள்ள சிறந்த முனிவர்களும் கூட மிகவும் அரிதாகவே பகவான் முகுந்தனின் தாமரைப் பாதங்களில் தூய பக்தித் தொண்டை ஆற்றுகின்றனர். (ஆகையால் விருத்ராசுரனால் எவ்வாறு இத்தகைய ஒரு சிறந்த பக்தனாக முடிந்தது?)

பதம் 6.14.3 : இந்த ஜட உலகில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ, அத்தனை ஜீவராசிகள் உள்ளன. அவற்றில் மிகச் சிலவே மனிதர்கள். மேலும் அவர்களுள் சிலரே மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

பதம் 6.14.4 : பிராமணர்களுள் சிறந்தவரான சுகதேவ கோஸ்வாமியே, மதக்கோட்பாடுகளைப் பின்பற்றும் பலரில் வெகு சிலரே ஜடஉலகிலிருந்து முக்திபெற விரும்புகின்றனர். முக்தியடைய விரும்பும் பல ஆயிரக்கணக்கானவர்களுள், ஒருவரே சமூகம், நட்பு, அன்பு, தேசம், வீடு, மனைவி, மற்றும் குழந்தைகளிடம் உள்ள பெளதிக பற்றைத் துறந்து உண்மையில் முக்தியடையக்கூடும். இவ்வாறு முக்தி பெற்ற பல ஆயிரக்கணக்கானவர்களுள், முக்தியின் உண்மையான பொருளை அறிந்தவர் மிகவும் அரிது

பதம் 6.14.5 : சிறந்த முனிவரே, முக்தியடைந்தவர்களும், முக்தியைப் பற்றிய பூரண ஞானம் உள்ளவர்களுமான பல கோடிக்கணக்கானவர்களுள், ஒருவனே பகவான் நாராயணரின், அல்லது கிருஷ்ணரின் பக்தனாக இருக்கக்கூடும். சாந்த சொரூபமாக விளங்கும் இத்தகைய பக்தர்கள் மிக மிக அரிது.

பதம் 6.14.6 : பாவம்மிக்க அசுரனும், புகழற்றவனும் யுத்தமென்ற நெருப்பினால் துன்பத்தையும், கவலைகளையும் கொடுப்பவனுமான விருத்ராசுரனைப் போன்ற ஓர் அசுரனால் எவ்வாறு சிறந்த கிருஷ்ண உணர்வு மிக்கவனாக மாற இயலும்?

பதம் 6.14.7 : பிரபுவே, சுகதேவ கோஸ்வாமி, விருத்ராசுரன் ஒரு பாவம்மிக்க அசுரனாக இருந்தாலும், யுத்தத்தில் மிகச்சிறந்த ஒரு க்ஷத்திரியரின் வீரத்தைக் காட்டி தேவேந்திரனை சந்தோஷப்படுத்தினான். இத்தகைய ஓர் அசுரனால் எப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தனாக இருக்க இயலும்? இந்த முரண்பாடுகள் எனக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகவே இதைப்பற்றி உங்களிடமிருந்து கேட்க ஆவலாக இருக்கிறேன்.

பதம் 6.14.8 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனின் மிகவும் புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்ட பிறகு, மிகவும் சக்திவாய்ந்த முனிவரான சுகதேவ கோஸ்வாமி, தமது சீடருக்கு மிகவும் அன்புடன் பதில் கூறத் துவங்கினார்.

பதம் 6.14.9 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, வியாசதேவர், நாரதர், தேவலர் ஆகியோரின் வாய்களிலிருந்து நான் கேட்ட அதே வரலாற்றை உமக்குக் கூறுகிறேன் கவனமுடன் கேளும்.

பதம் 6.14.10 : பரீட்சித்து மகாராஜனே, சூரசேன தேசத்தில் இந்த பூமி முழுவதையும் ஆண்டுவந்த சித்ரகேது என்ற ஓர் அரசர் இருந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் பூமியானது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்தது.

பதம் 6.14.11 : இந்த சித்ரகேதுவிற்கு ஒரு கோடி மனைவிகள் இருந்தனர். அவர் குழந்தை பெறும் தகுதியுடையவராக இருந்தும், எந்த மனைவியிடமிருந்தும் ஒரு குழந்தையைக் கூட அவர் பெறவில்லை. துரதிர்ஷ்டவசமாக எல்லா மனைவிகளும் மலடிகளாக இருந்தனர்.

பதம் 6.14.12 : இத்தகைய இலட்சக்கணக்கான மனைவிகளின் கணவரான சித்ரகேது அழகிய உருவமுடையவராகவும், பெருந்தன்மை உடையவராகவும், இளமை உடையவராகவும் இருந்தார். உயர் குடியில் பிறந்த அவர், பூரண கல்வியும், செல்வமும், ஐசுவரியமும் உடையவராக இருந்தார். எனினும், இவ்வெல்லாச் சொத்துக்களையும் பெற்றிருந்தும், ஒரு மகனில்லாத காரணத்தால் கவலை மிக்கவராகவே இருந்தார்.

பதம் 6.14.13 : அவரது ராணிகள் அனைவரும் அழகிய முகங்களையும், கவர்ச்சியான கண்களையும் பெற்றிருந்தனர். இருப்பினும், அவரது ஐசுவரியங்களோ, அவரது இலட்சக்கணக்கான மனைவிகளோ, அல்லது அவரது ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலங்களோ அவருடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக அமையவில்லை.

பதம் 6.14.14 : ஒரு சமயம், ஒரு ஈடுபாடும் இல்லாமல் பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்த அங்கிரர் என்ற சக்திவாய்ந்த முனிவர், தன்னிச்சையாக சித்ரகேது மகாராஜனின் அரண்மனைக்கு வந்தார்.

பதம் 6.14.15 : சித்ரகேது உடனே தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து அவருக்கு வணக்கம் செலுத்தினார். அவருக்குக் குடிப்பதற்கு நீரும், உணவு வகைகளையும் கொடுத்த அரசர், இவ்விதமாக ஒரு மேன்மைக்குரிய விருந்தினரை உபசரிக்கும் முறையில் தன் கடமையைச் செய்தார். முனிவர் ஆசனத்தில் சுகமாக அமர்ந்தபின், அரசர் தன் மனதையும், புலன்களையும் அடக்கியவராய், அந்த முனிவரின் பாதங்களுக்கருகில் தரையில் அமர்ந்தார்.

பதம் 6.14.16 : பரீட்சித்து மகாராஜனே, சித்ரகேது அடக்கத்துடன் வணங்கி அச்சிறந்த முனிவரின் பாத கமலங்களில் அமர்ந்ததும், அரசரின் அடக்கத்திற்காகவும், விருந்தோம்பும் பண்பிற்காகவும் அவரை வாழ்த்திய அம்முனிவர், அவரிடம் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்.

பதம் 6.14.17 : மாமுனிவரான அங்கிரர் கூறினார்: அரசே, உமது உடலும், மனமும், உமது அரச குடும்பமும், பரிவாரமும் நலமென்று நம்புகிறேன். ஜட இயற்கையின் ஏழு குணாதியசங்கள் (மொத்த பெளதிக சக்தி, அகங்காரம் மற்றும் ஐந்து புலன் பொருட்கள்) சரியான நிலையில் இருக்கும்பொழுது, பெளதிக மூலப்பொருட்களினுள் உள்ள ஜீவராசி மகிழ்ச்சியாக இருக்கிறான். இந்த ஏழு மூலப்பொருட்களும் இல்லாமல் ஒருவனால் வாழமுடியாது. அது போலவே, அரசனோருவன், தனக்கு உபதேசிப்பவர் (சுவாமி அல்லது குரு), தன் மந்திரிகள் தன் இராஜ்யம், தன் கோட்டை, பொக்கிஷம், அரச குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆகிய ஏழு விஷயங்களால் எப்பொழுதும் பாதுகாக்கப்படுகிறார்.

பதம் 6.14.18 : அரசே, மனிதகுலத் தலைவரே, ஓர் அரசன் நேரடியாக அவனது சகாக்களைச் சார்ந்திருந்து அவர்களுடைய அறிவுரைகளைப் பின்பற்றும் பொழுது, அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அவ்வாறே, அவனது சகாக்கள் அவர்களுடைய காணிக்கைகளையும், செயல்களையும் அரசனுக்கு அளித்து அவரது உத்தரவுகளைப் பின்பற்றும் பொழுது, அவர்களும் மகிழ்ச்சியடைகின்றனர்.

பதம் 6.14.19 : அரசே, உமது மனைவிகள், காரியதரிசிகள், சேவகர்கள், மற்றும் வாசனைத் திரவியங்கள், எண்ணெய் இவைகளை விற்கும் வணிகர்கள் ஆகியோர் உமக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றனரா? மந்திரிகள், அரண்மனைவாசிகள், மாகாண அதிகாரிகள், உமது மகன்கள் மற்றும் உம்மைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடம் உமக்கும் முழு ஆதிக்கம் உள்ளதா?

பதம் 6.14.20 : அரசரின் மனம் அவரது முழு கட்டுப்பாட்டில் இருக்குமானால், அவரது குடும்ப அங்கத்தினர், அரசாங்க அதிகாரிகள் ஆகிய அனைவரும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். மாகாண ஆளுனர்கள் உரிய காலத்தில் வரிப்பணத்தை எதிர்ப்பின்றி செலுத்துவார்கள். கீழான சேவகர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

பதம் 6.14.21 : சித்ரகேது மகாராஜனே, உமது மனம் மகிழ்ச்சியாக இல்லாததை நான் காண்கிறேன். நீர் விரும்பிய இலட்சியத்தை அடையாதவர் போல் காணப்படுகிறீர். நீரே இதற்குக் காரணமா அல்லது மற்றவர்களா? உமது வெளுத்த முகம் உம்முடைய ஆழ்ந்த கவலையைப் பிரதிபலிக்கிறது.

பதம் 6.14.22 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, மாமுனிவரான அங்கிரர் அனைத்தையும் அறிந்திருந்தார் என்ற போதிலும், அவர் அரசரிடம் இவ்வாறு வினவினார். இவ்வாறாக ஒரு மகனைப் பெற விரும்பிய சித்ரகேது மகாராஜன், அந்த மாமுனிவரை மிகவும் அடக்கத்துடன் வணங்கி, பின்வருமாறு கூறலானார்.

பதம் 6.14.23 : சித்ரகேது மகாராஜன் கூறினார்: மிகவும் சக்திவாய்ந்த அங்கிர முனிவரே, தவம், ஞானம், உன்னத சமாதி ஆகியவற்றின் காரணத்தால் தாங்கள் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டுள்ளீர்கள். எனவே, பரிபூரண யோகி என்ற முறையில், எங்களைப் போன்ற உடல்பெற்ற, பந்தப்பட்ட ஆத்மாக்களின் அகம், புறம் இரண்டையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

பதம் 6.14.24 : சிறந்த ஆத்மாவே, தாங்கள் எல்லாம் அறிந்தவர். இருந்தும், நான் கவலை நிரம்பியவனாக இருப்பதன் காரணத்தைக் கேட்கிறீர்கள். ஆகவே, தங்களுடைய உத்தரவுப்படி நான் காரணத்தை வெளிப்படுத்துகிறேன்.

பதம் 6.14.25 : எப்படி பசியாலும், தாகத்தாலும் துன்புற்றவன், புற நுகர்வுகளாக மலர் மாலைகளாலோ, சந்தனக் குழம்பினாலோ மகிழ்ச்சியடைவதில்லையோ அப்படியே, எனக்கு மகனில்லாத காரணத்தால், சிறந்த தேவர்களாலும் விரும்பப்படும் எனது சாம்ராஜ்யத்தினாலும், ஐசுவரியத்தாலும் அல்லது உடைமைகளாலும் நான் திருப்தியடையவில்லை.

பதம் 6.14.26 : ஆகவே, மாமுனிவரே, சந்ததி இல்லாத காரணத்தால், இருளடர்ந்த நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் என்னையும், என் முன்னோர்களையும் தயவு செய்து காப்பாற்றுங்கள். எங்களை நரகச் சூழ்நிலைகளிலிருந்து விடுவிக்க எனக்கு ஒரு மகன் வேண்டும். அன்புடன் ஏதாவது செய்யுங்கள்.

பதம் 6.14.27 : சித்ரகேது மகாராஜனின் வேண்டுகோளுக்கிணங்க, பிரம்மாவின் மானசீக புத்திரரான அங்கிர முனிவர் அவரிடம் மிகுந்த கருணை கொண்டார். அம்முனிவர் மிகவும் சக்திவாய்ந்தவர் என்பதால், அவர் ஒரு யாகத்தைச் செய்து, அதில் துவஷ்டா என்ற தேவருக்கு சர்க்கரைப் பொங்கலை நிவேதனம் செய்தார்.

பதம் 6.14.28 : பரத வம்சத்தில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே, யாகத்தில் ஹோமம் செய்த எஞ்சிய உணவை, மாமுனிவரான அங்கிரர். சித்ரகேதுவின் இலட்சக்கணக்கான ராணிகளுள் மூத்தவளும், மிகச் சிறந்தவருமான கிருதத்யுதி என்பவளுக்குக் கொடுத்தார்.

பதம் 6.14.29 : அதன்பிறகு, அந்த மகாமுனிவர் அரசரிடம், “சிறந்த அரசே, உமது மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் காரணமாக இருக்கப் போகும் ஒரு மகனை இப்பொழுது நீர் பெறுவீர்” என்று கூறிவிட்டு, சித்ரகேதுவின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பதம் 6.14.30 : அக்னியிடமிருந்து சிவ பெருமானின் விந்துவைப் பெற்றபிறகு ஸ்கந்தன் (கார்த்திகேயன்) என்ற குழந்தையை கிருத்திகாதேவி பெற்றாள். அவ்வாறே, சித்ரகேதுவிடமிருந்து விந்துவைப் பெற்ற கிருதத்யுதியும், அங்கிரரால் செய்யப்பட்ட யாகத்தில் மிஞ்சிய உணவை உண்டபிறகு கர்பவதியானாள்.

பதம் 6.14.31 : சூரசேன அரசரான சித்ரகேது மகாராஜனிடமிருந்து விந்துவைப் பெற்ற ராணி கிருதத்யுதியின் கர்பம், வளர்பிறை போல் படிப்படியாக வளர்ந்தது.

பதம் 6.14.32 : அதன்பிறகு, காலப்போக்கில் அரசருக்கு ஒரு மகன் பிறந்தான். இச்செய்தியைக் கேட்ட சூரசேன தேசத்து மக்களனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

பதம் 6.14.33 : முக்கியமாக சித்ரகேது மகாராஜன் மிகவும் மகிழ்ந்தார். நீராடி தன்னை தூய்மைப்படுத்திக் கொண்ட அவர், ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டபின், குழந்தைக்கு ஆசிகளை வழங்குவதிலும், பிறப்புச் சடங்கைச் செய்வதிலும் கற்றறிந்த பிராமணர்களை அவர் ஈடுபடுத்தினார்.

பதம் 6.14.34 : அந்த வேதச் சடங்கில் பங்கேற்ற பிராமணர்களுக்கு அரசர் தங்கம், வெள்ளி, ஆடைகள், ஆபரணங்கள், கிராமங்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுடன் 60 கோடி பசுக்களையும் தானமாகக் கொடுத்தார்.

பதம் 6.14.35 : மேகமானது பூமியில் பாகுபாடியின்றி மழை பொழிவதுபோல், தாராள மனமுடைய சித்ரகேது மகாராஜன் தன் மகனின் புகழ், செல்வச் செழிப்பு, ஆயுள் ஆகியவற்றை அதிகரிக்க, எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையெல்லாம் மேகம் மழையைப் பொழிவதுபோல் வழங்கினார்.

பதம் 6.14.36 : ஒரு ஏழை மனிதன் மிகுந்த கஷ்டத்திற்குப் பிறகு கொஞ்சம் செல்வத்தை அடையும் போது, அந்த செல்வத்தின் மேல் அவனுக்கு அனுதினமும் அன்பு (ஆசை) அதிகரிக்கிறது. அதுபோலவே, மிகுந்த கஷ்டத்திற்குப் பிறகு ஒரு மகனைப் பெற்ற சித்ரகேதுவிற்குத் தன் மகனிடமுள்ள அன்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்தது.

பதம் 6.14.37 : தந்தைக்குக் குழந்தையிடம் இருந்தது போலவே, தாய்க்கும் தன் மகனிடமுள்ள கவர்ச்சியும், கவனமும் பெருகிக் கொண்டே போனது. மற்ற மனைவிகள், கிருதத்யுதியின் மகனைப் பார்த்து, மகன்களைப் பெறும் ஆசையால், காய்ச்சல் கண்டவர்கள் போல் மிகவும் மனக்கிளர்ச்சி அடைந்தனர்.

பதம் 6.14.38 : தன் மகனைப் பேணி வளர்த்த சித்ரகேது மகாராஜனுக்கு, தன் பட்டமகிஷியான கிருதத்யுதியிடமுள்ள அன்பு அதிகரித்தது. ஆனால் மகன்களற்ற பிற மனைவிகளிடமுள்ள அன்பை அவர் படிப்படியாக இழந்துவிட்டார்.

பதம் 6.14.39 : மற்ற ராணிகள், தங்களுக்குப் பிள்ளையில்லாத காரணத்தால் மிகவும் வருத்தமடைந்தனர். அவர்களை அரசர் உதாசீனப்படுத்தியதால், அவர்கள் தங்களையே நொந்து கொண்டு, பொறாமையால் புலம்பினார்கள்.

பதம் 6.14.40 : மகன்களில்லாத ஒரு மனைவி வீட்டில் தன் கணவனால் உதாசீனப்படுத்தப்படுகிறாள், சக மனைவிகளால் ஒரு வேலைக்காரியைப்போல் அவமதிக்கப்படுகிறாள். இத்தகைய ஒரு பெண் அவளுடைய பாவச் செயல்களின் காரணத்தால் எல்லா விதத்திலும் நிந்திக்கப்படுகிறாள்.

பதம் 6.14.41 : கணவனுக்கு நிலையான பணிவிடை செய்யும் வேலைக்காரிகள் கூட கணவனால் மதிக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. ஆனால் அந்த வேலைக்காரிகளுக்கும் வேலைக்காரிகளாக இருப்பதுதான் நம்முடைய நிலை. எனவே நாம் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாவோம்.

பதம் 6.14.42 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தங்கள் கணவனால் ஒதுக்கப்பட்டும், கிருதத்யுதி ஒரு பிள்ளைச் செல்வத்தைப் பெற்றிருப்பதைக் கண்டும், பொறாமையால் வெந்து கொண்டிருந்த கிருதத்யுதியின் சக மனைவிகளின் பொறாமை தீவிரமடைந்தது.

பதம் 6.14.43 : பொறாமை அதிகரித்ததால் அவர்கள் மதியிழந்தவர்களாயினர். கல்நெஞ்சம் உடையவர்களான அவர்கள், அரசரின் புறக்கணிப்பைப் பொறுக்க முடியாமல் இறுதியில் அக்குழந்தைக்கு விஷம் கொடுத்தனர்.

பதம் 6.14.44 : தன் சக மனைவிகளால் விஷம் கொடுக்கப்பட்டதை அறியாத ராணி கிருதத்யுதி, தன் மகன் ஆழ்ந்து உறங்குகிறான் என்றெண்ணி, வீட்டினுள் நடந்து கொண்டிருந்தாள். அவன் இறந்துவிட்டதை அவள் அறியவில்லை.

பதம் 6.14.45 : தன் குழந்தை நீண்ட நேரம் உறங்குவதாக எண்ணிய, மிகவும் புத்திசாலியான ராணி கிருதத்யுதி, தன் தாதியிடம், “அருமைத் தோழியே, என் மகனை இங்கு கொண்டுவா” என்று உத்தரவிட்டாள்.

பதம் 6.14.46 : அந்த தாதி படுத்திருந்த குழந்தையை அணுகிய பொழுது, அக்குழந்தையின் கண்கள் மேலேயே நிலைத்திருந்ததையும், உயிருக்கான அறிகுறிகள் இல்லாததையும் கண்டாள். அவனுடைய எல்லாப் புலன்களும் செயலற்றுக் கிடந்தன. குழந்தை இறந்து விட்டதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. இதைக் கண்டதும் உடனே, “இப்பொழுது நான் அழிந்தேன்” என்று கதறியபடி தரையில் விழுந்தாள்.

பதம் 6.14.47 : பெரும் கலக்கத்துடன் அந்த தாதி, தன் மார்பில் இரு கைகளாலும் அடித்துக் கொண்டு, துக்கம் நிறைந்த வார்த்தைகளில் உரக்கக் கதறி அழுதாள். அவளுடைய உரத்த குரலைக் கேட்டு, உடனே அங்கு வந்த ராணி, தன் மகனை அணுகியபொழுது, திடீரென்று அவன் இறந்து கிடப்பதைக் கண்டாள்.

பதம் 6.14.48 : பெருந்துக்கத்தினால், அவளுடைய தலைமுடியும், உடையும் அலங்கோலமாகி, ராணி மூர்ச்சையடைந்து தரையில் விழுந்தாள்.

பதம் 6.14.49 : பரீட்சித்து மகாராஜனே, உரத்த அழுகுரலைக் கேட்ட அரண்மனைவாசிகளான ஆண், பெண் இருபாலரும் அங்கு வந்தனர். அவர்களும் அவ்வாறே துக்கமடைந்து அழத்துவங்கினர். தங்கள் குற்றத்தை நன்கு அறிந்திருந்த, விஷம் கொடுத்த ராணிகளும் பாசாங்குடன் அழுதனர்.

பதங்கள் 6.14.50 – 6.14.51 : யாரும் அறியாத ஒரு காரணத்தினால் தன் மகன் இறந்து விட்டான் என்பதைக் கேட்ட சித்ரகேது மகாராஜன், கிட்டத்தட்ட குருடராகவே ஆகிவிட்டார். தன் மகனிடம் கொண்டிருந்த அதிக பாசத்தினால், அவரது துக்கம் கொழுந்துவிட்டெரியும் தீபோல் பெருகிக்கொண்டே போனது. மரணமடைந்த குழந்தையை அவர் காணச் சென்றபொழுது, வழியில் பலமுறை காலிடறி தரையில் விழுந்தார். தன் மந்திரிகளாலும், பிற அதிகாரிகளாலும் சூழப்பட்டபடி, கற்றறிந்த பிராமணர்கள் உடனிருக்க, அக்குழந்தையை அணுகிய அரசர், ஆடை கலைந்து தலைவிரி கோலமாக அதன் காலடியில் மயங்கி விழுந்தார். பிறகு பெருமூச்சுடன் உணர்வு பெற்றெழுந்த அரசரின் கண்களில் கண்ணீர் பெருக அவரது தொண்டை அடைத்துக் கொண்டதால், அவரால் பேச முடியவில்லை.

பதம் 6.14.52 : தன் கணவரான சித்ரகேது மகாராஜனைக் கண்ட ராணி, பெருந்துயரத்தில் மூழ்கியவளாய், குடும்பத்தில் ஒரே சந்ததியான இறந்த குழந்தையைப் பார்த்து பலவிதமாக அழுது புலம்பினாள். அரண்மனைவாசிகள், மந்திரிகள், அனைத்து பிராமணர்கள் ஆகிய அனைவருடைய இதயங்களிலும் இது வலியை அதிகரித்தது.

பதம் 6.14.53 : ராணியின் தலையை அலங்கரித்த பூமாலை கீழே விழுந்தது. அவளது கேசமும் கலைந்தது. கண்ணீர் கண்மையைக் கரைத்துக் கொண்டு, குங்குமத்தால் மூடப்பட்ட அவளது மார்பகத்தை நனைத்தது. மகனை இழந்து அவள் அழுதபோது அவளது உரத்த அழுகுரல் குரரீ பறவையின் இனிய ஓசைபோல் இருந்தது.

பதம் 6.14.54 : ஜயோ, கடவுளே, சிருஷ்டிகர்த்தாவே, படைப்பில் நீங்கள் நிச்சயமாக அனுபவமில்லாதவர். தந்தை உயிருடன் இருக்கும்போதே அவருடைய மகனுக்கு நீங்கள் மரணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இவ்விதமாக நீங்கள் உங்களுடைய சிருஷ்டி விதிகளுக்கு முரணாக செயற்படுகிறீர்கள். ஒருவேளை இச்சட்டங்களுக்கு முரணாக நடந்து கொள்ள நீங்கள் தீர்மானித்திருந்தால், நிச்சயமாக நீங்கள் ஜீவராசிகளுக்கு எதிரியும், இரக்கமற்றவருமாவீர்.

பதம் 6.14.55 : பகவானே, ஒரு தந்தை தன் மகனின் ஆயுட்காலத்தில் மரணமடைய வேண்டும் என்றும், மகன் தன் தந்தையின் ஆயுட்காலத்தில் பிறக்க வேண்டும் என்றும் நீங்கள் கூறக்கூடும். ஏனெனில் அனைவரும் அவரவர் கருமங்களுக்கேற்பவே வாழ்ந்து மடிகின்றனர். ஆனால் பிறப்பும், மரணமும் கருமங்களைச் சார்ந்துள்ள அளவிற்கு கருமம் அவ்வளவு பலம் மிக்கதாக இருக்குமானால், ஆண்டவனுக்கு அல்லது கடவுளுக்கு அவசியமேயில்லை. மேலும், ஜட சக்திக்குச் சுயமாக செயற்படும் திறனில்லாததால், அதை ஆள்பவர் (ஆண்டவன்) தேவைப்படுகிறார் என்று நீங்கள் கூறக்கூடும். இதற்கு பதில் பின்வருமாறு நீங்கள் ஏற்படுத்தியுள்ள பாசப் பிணைப்புக்கு கருமங்களால் இடையூறு ஏற்படுமானால், எவரும் தங்கள் குழந்தைகளைப் பாசத்துடன் வளர்க்கமாட்டார்கள்; அதற்குப் பதிலாக, அனைவரும் இரக்கமின்றி தங்கள் குழந்தைகளைப் புறக்கணிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வளர்க்கும்படி கட்டாயப்படுத்தும் பாசப் பிணைப்புகளை நீங்கள் துண்டித்துவிடுவதால், நீங்கள் அனுபவமற்றவராகவும், அறிவற்றவராகவும் காணப்படுகிறீர்.

பதம் 6.14.56 : அருமை மகனே, நான் ஆதரவற்றவளாகவும், மிகவும் துக்கமுள்ளவளாகவும் இருக்கிறேன். என் துணையை நீ விட்டுவிடக் கூடாது. அழுது புலம்பும் உன் தந்தையைப் பார். எங்களுக்கு ஆதரவில்லை. ஏனெனில், ஒரு மகனில்லாத நாங்கள் நரகத்தின் இருண்ட பிரதேசத்திற்குச் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். நாங்கள் இந்த இருண்ட பிரசேதங்களிலிருந்து வெளியேறுவதற்கு நீ ஒருவன் தான் எங்களுக்கு உதவ முடியும். ஆகவே இரக்கமற்ற யமராஜனுடன் தொடர்ந்து செல்ல வேண்டாமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பதம் 6.14.57 : அன்பு மகனே, நீ நீண்ட நேரம் உறங்கிவிட்டாய். இப்பொழுது விழித்தெழு. உன் தோழர்கள் உன்னை விளையாட அழைக்கிறார்கள். நீ மிகவும் பசியுடன் இருப்பாய் எழுந்து என் முலைப்பாலைக் குடித்து, எங்களுடைய புலம்பலை அகற்று.

பதம் 6.14.58 : அன்பு மகனே, உன்னுடைய கனிவான புன்னகையை இனிமேல் என்னால் காண முடியாது என்பதால், நான் உண்மையாகவே மிகவும் துரதிர்ஷ்டசாலியாவேன். நீ உன் கண்களை நிரந்தரமாக மூடிக் கொண்டுவிட்டாய். ஆகவே, எங்கிருந்து உன்னால் திரும்பி வர முடியாதோ, அந்த உலகிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டாய். அன்பு மகனே, உனது இனிய குரலை இனிமேல் என்னால் கேட்கமுடியாது.

பதம் 6.14.59 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இறந்து போன தன் மகனுக்காக இவ்வாறு அழுது புலம்பிய தன் மனைவியுடன், சித்ரகேது மகாராஜனும் பெருந்துக்கத்தினால், திறந்த வாயுடன் உரக்க அழத்துவங்கினார்.

பதம் 6.14.60 : அந்த அரசனும், அரசியும் அழுத பொழுது, அவர்களுடைய பிரஜைகளான ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவரும் அவர்களுடன் சேர்ந்து அழுதனர். திடீர் விபத்தினால் நாட்டு மக்களனைவரும் கிட்டத்தட்ட நினைவிழந்தவர்கள் போல் ஆயினர்.

பதம் 6.14.61 : அந்த அரசர் துக்கக் கடலில் மூழ்கி கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலையில் இருப்பதைப் புரிந்து கொண்ட மாமுனிவரான அங்கிரர், நாரத முனிவருடன் அங்கு சென்றார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare